களிற்றியானை நிரை - 52
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 2
மைந்தன் சென்றபின் போத்யர் தன் இல்லத்தின் சிறிய திண்ணையிலேயே நாளின் பெரும்பகுதியை கழித்தார். ஒவ்வொரு நாளும் அவர் இளையோன் இல்லத்திலிருந்து எவரேனும் அவருக்கு இரு வேளை அன்னம் கொண்டுவந்து படைத்தனர். முதலில் அவர் தயக்கமும் அச்சமும் கொண்டிருந்தார். முதல் நாள் அவரிடம் வந்து “மூத்தவரே, தாங்கள் விழைந்தால் நான் சமைக்காத அரிசியை கொண்டுவந்து படைக்கிறேன். அதில் தீட்டு இல்லை. தாங்கள் வேண்டுமெனில் தங்கள் அன்னக்கலத்தை திண்ணையில் வைக்கலாம். எவரென்றே அறியாமல் அதில் நான் பிச்சையிட்டுச் செல்கிறேன். சூதர் பிச்சை பெறலாம் என்று நெறியுள்ளது. அப்பிச்சை அன்னமென்றால் அதை எவரளித்தார் என்பது பொருட்டல்ல என்பதும் அதன் பொருட்டு அவருக்கு பழி சேராது என்பதும் நமது நூல் கூற்று” என்றார்.
போத்யர் அவரை நேர்நோக்கி “சமைத்த அன்னமே கொண்டுவருக! உன் இல்லத்தில் இல்லாள் உலையில் அரிசி இடுகையில் முதல் கைப்பிடியை வழக்கம்போல நீத்தோர் வடிவிலெழும் காகங்களுக்கு என இடுக! இரண்டாம் கைப்பிடியை எனக்கென எண்ணி இடுக!” என்று கூறினார். முல்கலர் விழிகளில் தத்தளிப்பு தெரிந்தது. “மூத்தவரே, நான் இன்றும்கூட சூதுக்களத்தில் பாடியே பொருளீட்டுகிறேன்” என்றார். “ஆகுக!” என்றார் போத்யர். “பழி சேர்த்த அன்னம் அது. தாங்கள் இதுகாறும் வாழ்ந்து ஈட்டிய அனைத்தையும் அதனூடாக இழக்கிறீர்கள் என உணர்க!” என்று அவர் சொன்னார்.
“ஈட்டிய அனைத்தையும் இழந்தாகவேண்டும் நான்” என்று போத்யர் சொன்னார். “நான் எந்நெறியையும் பேணுவதில்லை. குலநெறியை, குடிநெறியை. மானுடநெறியையும்கூட” என்று முல்கலர் சொன்னார். “ஆகுக!” என்று மீண்டும் போத்யர் சொன்னார் “தங்கள் குடிமூத்தார் ஈட்டியவையும் இவ்வண்ணம் பழி கொள்கின்றன” என்று அவர் மீண்டும் சொல்ல “ஆகுக!” என்று அவர் மூன்றாம் முறையும் மறுமொழி சொன்னார். முல்கலர் அவரை நோக்கி நின்றார். அவரால் மூத்தவரின் உள்ளத்தில் ஓடுவதென்ன என்று உணர முடியவில்லை. அந்தத் தெளிவின்மை அச்சத்தை அளித்தது. அவர் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
முல்கலரின் இல்லத்திலிருந்து அவர் இல்லாள் சமைத்த அன்னம் அவருக்கு வந்தது. அவர் அதை அத்திண்ணையில் வைத்து உண்டார். ஒவ்வொரு முறையும் அன்னத்தை மூன்றாகப் பகுத்து ஒரு பகுதியை மூத்தோருக்கென காகங்களுக்கும், ஒரு பகுதியை இரவலருக்கும் வைத்துவிட்டு, ஒரு பகுதியை தான் உண்பது அவர் வழக்கம். அவ்வன்னத்தையும் அவ்வாறே பகிர்ந்தார், அவ்வன்னத்தை உண்ண காகங்கள் வந்தன. ஒவ்வொரு நாளும் அவர் இடும் அன்னத்தை எதிர்நோக்கி இரவலன் ஒருவன் திண்ணையருகே காத்து நின்றிருந்தான். காகத்திற்கு உணவளிக்கையில் அவர் விழிகள் வெறிப்புகொண்டிருந்தன. இரவலருக்கு அளிக்கையில் அவர் விழிகள் கனிந்திருந்தன. உண்டு முடித்து கைகளையும் வாயையும் கலத்தையும் கழுவி அமர்ந்து வெயில் விரித்த சாலையை பொருளின்றி வெறித்துக்கொண்டிருந்தார்.
அவர் விழிகளின் முன்பாக நகரம் உருமாறிக்கொண்டிருந்தது. போர் நிலைத்தபின் நகர் முற்றொழிந்தது. ஓசையவிந்து இடுகாடென்றாகியது. காற்று வெறுமையில் துழாவி அலைந்தது. பின்னர் புது மக்கள் நகருக்குள் குடிவரத் தொடங்கியதும் மீண்டும் அங்கே பொருள் செறியலாயிற்று. சந்தைகள் முளைத்தெழுந்தன. அங்கு மானுடரின் குரல் எழுந்தது. நுரை நுரையென ஓசைகள் எழுந்து நகர் நிறைந்தது. முல்கலர் முதலில் தயங்கிக்கொண்டிருந்தார். “மூத்தவருக்கு உணவளிக்கிறோம். நாம் இன்றேனும் இதை ஒழியலாம்” என்று அவர் சொன்னார். அவர் மனையாட்டி “வேறென்ன செய்வதாக எண்ணம்? நம் களஞ்சியம் ஊற்று அல்ல” என்றாள். அவர் அவளை சில கணங்கள் நோக்கியபின் பெருமூச்சுவிட்டார். “ஆம், நான் வேறெங்கும் செல்ல இயலாது” என்றார்.
கேளிக்கைநிலைகள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. நின்றிருக்க இடமில்லாமல் செறிந்து அவை பக்கவாட்டில் பெருத்தன. முல்கலர் பொருள் மிகுந்தவர் ஆனார். பட்டு அணிந்து, அணிகள் சூடி, பல்லக்கில் ஏறி அவர் நகரத்திற்குள் சென்றார். ஒவ்வொரு நாளும் மது அருந்தி நிலையழிந்து மடி நிறைய பொன்னுடன் பல்லக்கில் படுத்து திரும்பி வந்தார். முதல் சில நாட்களில் அவரிடமிருந்த பணிவு மெல்ல மெல்ல அகன்றது. அவருக்கு அன்னமிடுபவர் தானே என்ற எண்ணம் முதலில் ஓர் கூடாக் கருத்தென எழப்பெற்று நடுங்கி திகைத்து அதை ஒதுக்கினார். பின்னர் தன் ஆழத்திலிருந்து அச்சமும் பதற்றமுமாக அதை எடுத்து எடுத்து நோக்கினார். பின்னர் அதை உடன் வைத்துக்கொண்டார் அதை ஒரு மந்தணப் படைக்கலமெனப் பயின்றார். அது தனக்கு காவலும் துணையுமாவதை பின் உணர்ந்தார். அதில் மகிழலானார்.
பின்பு தன் இல்லாளிடம் அதை சொல்லத் தொடங்கினார். தன் மைந்தரிடம் சொன்னார். ஒவ்வொரு முறையும் அவருக்கு உணவு அனுப்பும்போது அதை கூறினார். பின்னர் ஒருநாள் மெல்லிய மதுக்களியில் அவர் முன் வந்துநின்று அதை உரைத்தார். “அன்னம் வந்துகொண்டிருக்கிறது அல்லவா? அன்னம் நிறைவு அளிக்கிறதா? உண்க, உண்க… அது நான் ஈட்டிய அன்னம்” என்றார். “ஆனால் தங்களுக்கு அன்னமிடுவதென்பது எவ்வகையிலும் என் கடமை அல்ல. ஏனெனில் நெடுநாட்களுக்கு முன்னரே நான் குலமொழிவு செய்யப்பட்டவன். எனக்கு குலமில்லை. மூதாதையரின் வாழ்த்துகள் எனக்கில்லை என்று அறிவேன். எனில் மூதாதையர் எனக்கு அளித்த எக்கடமையையும் நான் செய்யவேண்டியதில்லை. எனக்கு மானுட அறம்கூட பொறுப்பென இல்லை.”
“எனினும் இவ்வன்னம் ஏன் இங்கு வருகிறதென்றால் அது எனது பெருந்தன்மையால். அல்லது நான் ஊழுடன் கொண்ட ஆடலால். அல்லது என் ஆணவத்தால். தங்கள் மேல் கொண்ட அளியால் அல்ல. உடன்குருதியினர் பசித்திருக்க உண்ணமுடியாத எனது நேர்மையாலும் அல்ல. இதை உண்கையில் என்னை பழித்தபடி என் வாழ்வை இகழ்ந்தபடி உண்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் பழி சேர்வது எனக்கல்ல, உங்களுக்குத்தான்” என்றார். போத்யர் புன்னகையுடன் அவரை நோக்கியிருந்தார். “புன்னகையுடன் இதை நீங்கள் கடக்க முடியாது. ஏனென்றால் இது குருதிச்சோறு. நிணச்சோறு. சீழ்ச்சோறு. பழிசேர்ந்த கீழ்ச்சோறு. அன்றாடம் நான் உண்பதன் மிச்சில்” என்றார்.
அன்று தன் அறைக்குத் திரும்புகையில் அவர் உடல் பலமடங்கு வீங்கிவிட்டிருப்பதைப்போல் உணர்ந்தார். நிலைகொள்ளாமல் பல இடங்களில் முட்டிக்கொண்டார். மனைவியிடம் “நான் இன்று தெய்வங்களுக்கு மறுமொழி சொன்னேன். என்னைப் பழித்த அத்தனை தெய்வங்களும் தலைகுனிந்து நிற்கக் கண்டேன்” என்று நகைத்தார். “இனி நான் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. எந்தத் தெய்வமும் என் முன் வந்து நின்றிருக்க அஞ்சும்” என்றார். ஆனால் அன்று இரவு களிமயக்கு உடல்நீங்கியதும் விழிப்புகொண்டு திகைப்புடன் இருளை நோக்கிக்கொண்டிருந்தார். உளமுருகி இருளுக்குள் தனிமையில் அழுதார். “தந்தையே, தந்தையே” என்று விசும்பினார். அவர் மனைவி அவ்வழுகையை முன்பும் கண்டவள். அவள் அதை பொருட்படுத்தவில்லை. நெடும்பொழுதுக்குப் பின் அவர் தன் அன்னையை நினைவுகூர்ந்தார். பின் அமைந்து துயில்கொண்டார்.
ஆனால் இரு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அவரிடம் வந்து “இன்று நான் உணவு உண்ணும்போது உணர்ந்தேன் என் உணவு இத்தனை சுவையாக இருப்பது ஏன் என்று”
என்றார். எக்களிப்பும் விக்கலுமாக “அது வெற்றியின் சுவை! ஆம் வெற்றி!” என்று கூவினார். நடுத்தெருவில் நின்று “கேளுங்கள் சூதர்களே, இழிமக்களே, கேளுங்கள். இதோ நான் வென்றிருக்கிறேன். இதோ, நீங்கள் துறந்துசென்ற இத்தெருவில் அரசன் என நின்றிருக்கிறேன். இந்தத் தெருவையே விலைக்கு வாங்கும் பொருள்கொண்டவன் நான். என்னை அடிபணிந்தவர் அனைவருக்கும் அன்னமிடும் ஆற்றல் கொண்டவன்” என்று கூவினார்.
தன் வீட்டுக்குள் புகுந்து கை நிறைய வெள்ளி நாணயங்களை அள்ளிக்கொண்டு வந்தார். அவர் மனைவி பின்னால் ஓடிவந்தாள். “என்ன செய்கிறீர்கள்? நில்லுங்கள்… என்ன செய்கிறீர்கள்?” என்று கூச்சலிட்டாள். அவர் நாணயங்களை தெருவில் அள்ளி வீசினார். “பொறுக்கிக்கொள்ளுங்கள்… நாய்களே, வந்து பொறுக்கிக் கொள்ளுங்கள்” என்று கூவினார். நான்கு பக்கமிருந்தும் வறிய சூதர்கள் பஞ்சை உடல்களுடன் பாய்ந்து வந்து புழுதியில் விழுந்து புரண்டு ஒருவரோடொருவர் போரிட்டு அவற்றை பொறுக்கினர். ஒருவரை ஒருவர் கடித்துக் கீறி கூச்சலிட்டனர். அவர் அவர்களை நோக்கி நின்றார். ஒரு விழியிலிருந்து நீர் வழிந்தது.
அவர் திரும்பி நோக்கியபோது போத்யர் அவ்வண்ணமே அமர்ந்திருப்பதை கண்டார். அவர் எதையுமே பார்க்கவில்லை என்று தோன்றியது. முல்கலர் சென்று தன் இல்லத்திண்ணையில் அமர்ந்தார். அங்கிருந்து போத்யரை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கேயே சுருண்டு படுத்துக்கொண்டார். அவர் மனைவி திகைத்து சொல்லற்று நோக்கி நின்றாள். பின்னர் வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள். அவர் மேலும் நாணயங்களை வீசக்கூடும் என இரவலர் காத்து நின்றனர். பின்னர் மெல்ல மெல்ல அகன்றனர்.
முல்கலர் விழித்துக்கொண்டபோது இருள் பரவியிருந்தது. தெரு வானொளியில் மின்னியது. எதிர்த்திண்ணையில் போத்யரின் விழிகளை அவர் கண்டார். நெடுநேரம் அவற்றை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் எழுந்து அவர் அருகே சென்று அமர்ந்தார். “மூத்தவரே, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றார். போத்யர் மறுமொழி சொல்லவில்லை. “கூறுக, என்னைப் பற்றி நீங்கள் எண்ணுவதென்ன?” என்றார் முல்கலர். போத்யர் மறுமொழி சொல்லமாட்டார் என உணர்ந்ததும் சிலம்பிய குரலில் “ஆம், நான் இழிமகன்தான். கீழோன்தான். என்றுமே அதை மறுக்கமாட்டேன்” என்றார்.
“ஆனால் நான் என்ன செய்யக்கூடும்? சொல்க, எனக்கு என்ன வழி இருந்தது?” அச்சொற்களுடன் அவர் உள்ளம் திறந்துகொண்டது. பலநூறுமுறை அவ்வாறு அவ்வண்ணம் அவரிடம் அவற்றை சொல்லிக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தார். “நான் எவரிடமும் சொல்லவேண்டியதில்லை. எவரிடமும் எனக்கு கணக்குகள் இல்லை. உங்களிடம் சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என தெரியவில்லை. மூத்தவரே, இளமையில் நான் மன்றுபாடல் பயிலும்பொருட்டு சூதர்களத்திற்குச் செல்லும்போதெல்லாம் என்னை ஒரு பெரும் தோல்வியென்றே எண்ணினேன். என்னால் பாடல் கூற முடியவில்லை. குலமுறைகளை பிழையின்றி சொல்ல இயலவில்லை. என் குரல் பிறழ்ந்து இசையொழிந்தது. அனைத்து அவைகளிலும் தோற்கடிக்கப்பட்டேன். உடன் வந்த சூதர்களால் இளிவரல் செய்யப்பட்டேன். வாழும் பொருட்டு அவர்களின் இழிந்த சொற்களை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.
மூத்தவரே, சிறுமைகொண்டு வாழ்வதென்றால் என்ன என்று தெரியுமா?. அச்சிறுமையை ஒவ்வொருநாளும் அன்னமென உண்டு மூச்சென உயிர்த்து வாழ்வதன் துயரை உங்களால் உணரமுடியுமா? உடலே ஒரு விழுப்புப்பொதியாக ஆகிவிடுகிறது. நாறும் கூண்டு. விடுதலைக்காக உள்ளிருந்து ஏங்குகிறது ஆத்மா. உடலை ஒழிக்கவேண்டும். உடைத்து திறக்கவேண்டும். எத்தனை நாள் கோட்டைமேலிருந்து குதிப்பதைப் பற்றிய கனவுடன் மேலேறிச் சென்றிருக்கிறேன் என அறிவீர்களா? ஒருநாள் துணிந்து மதுக்கடைக்கு சென்றேன். கோட்டையிலிருந்து இறங்கி நேராக அங்கே சென்றேன். மது என்ன செய்யும் என அறிவேன். ஆனால் மதுக்கடையில் குடிப்பதன் பொருளென்ன என்று தெரிந்திருக்கவில்லை.
அது ஒரு குப்பைமேடு போலிருந்தது. மானுடக் குப்பைமேடு. எச்சில்கள், உமட்டல்கள், ஏப்பங்கள், உடல்நாற்றங்கள். சொற்கள் சிதைந்து நாறின. சிரிப்பு அதைவிட உடைந்து கிடந்தது. அங்கு ஓரமாக அமர்ந்துகொண்டிருந்தபோது ஒருவன் என்னைக் கண்டு நீ சூதனா என்றான். ஆம் என்றேன். நீ அரசச்சூதன் அல்லவா என்றான். அக்கணம் என் உள்ளம் பெருமிதம் கொண்ட விந்தைதான் என்ன! நான் ஆம் என்றேன். ஆ, இங்கே ஒரு அரசச்சூதன் வந்துள்ளான். அரசர்களே, நம்மை அவன் பாட விழைகிறான். பாடுக, சூதா. பொன் கொள்க என்று அவன் கூவினான். களிமகன்கள் கூச்சலிட்டனர். ஆயிரம் அரசர்கள் இங்கே என்று கூவினர்.
அங்கே பாடுவதா என்று என் உள்ளம் திகைத்தது. ஆனால் பாடாமலிருக்க என்னால் இயலாது என்று அப்போது அறிந்தேன். ஏனெனில் எனக்கு மீண்டும் மது தேவையாக இருந்தது. என்னிடம் ஒரு செம்புநாணயம்கூட எஞ்சியிருக்கவில்லை. ஆகவே நான் அறிந்தவற்றிலேயே கீழ்மை மிகுந்த காம கேலிப்பாடல் ஒன்றை பாடினேன். அங்கிருந்தோர் கைதட்டி என்னை ஊக்கினர். களிவெறியில் சிரித்து கூச்சலிட்டனர். என்னை இருவர் தூக்கி வைத்து நடனமாடினர். என்னை மாறி மாறி முத்தமிட்டனர். வாழ்வில் முதல் முறையாக பாராட்டை அடைந்தேன். கொண்டாடப்பட்டேன். அன்று திரும்புகையில் பை நிறைய வெள்ளிக்காசும் இருந்தது.
மறுநாள் விழித்தெழுந்து என் அறையில் அமர்ந்து வெதும்பி அழுதேன். வீழ்ந்தேன் என்று, இழிவடைந்தேன் என்று, எஞ்சாதொழிந்தேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இங்கிருந்து கிளம்பிச்சென்றபோது இருந்தவனல்ல திரும்பிவந்தவன் என்று, என் உடல் மாசடைந்துவிட்டது என்று, இனி மூதாதையர் குடிகொள்ளும் எந்த இடத்திற்கும் என்னால் சென்று நின்றிருக்க இயலாதென்று சொல்லிக்கொண்டேன். இனி இல்லை இனி இல்லை என்று எனக்கு நானே வஞ்சம் கூறிக்கொண்டேன். அன்றே இறுதி என்று உறுதி பூண்டேன்.
ஆனால் இரு நாட்களுக்குக் கூட அவ்வுறுதி நீடிக்கவில்லை. அவ்வெள்ளி நாணயங்கள் என்னை ஈர்த்தன. அவற்றை கையிலிட்டு திருப்பித் திருப்பிப் பார்த்தபோது அவற்றின் மென்மையும் தண்மையும் என்னை மெய்ப்பு கொள்ளச் செய்தன. நானே ஈட்டிய வெள்ளி. ஆணென நிமிர்ந்து நின்ற களம். அதை ஒழிய என்னால் இயலாது. மீண்டும் அங்கே சென்றேன். மதுக்களத்தில் பலர் ஓடி வந்து என்னை எதிர்கொண்டனர். அள்ளித் தூக்கி உள்ளே கொண்டுசென்றனர். சூதுக்களத்தில் அமர்ந்து அன்று பாடினேன். அன்று தயக்கங்களை களைந்துவிட்டிருந்தேன். வஞ்சத்துடன் எவருக்கோ விடுத்த அறைகூவலென அன்று பாடினேன்.
“இதோ என்னை கீழிறக்கிக்கொள்கிறேன். இன்னும் கீழிறங்குவேன் பார் என்று எவருக்கோ அறைகூவிக்கொண்டேன்” என்றார் முல்கலர். கள்மயக்கில் உதடுகள் கோண நகைத்துக்கொண்டு “சூதுக்களத்தில் பாடுவதன் கலைகளை நான் முனைந்து கற்றுக்கொண்டேன். அது அத்தனை எளிதல்ல. நீங்கள் அரச அவைகளில் அரச உள்ளங்களை அக்கணம் கணித்து கணித்து பாடுவதற்கு ஒரு படி மேல் என்பேன். சூதில் வென்றவனை பாடவேண்டும், தோற்றவனை மேலும் வீறுகொண்டு எழச் செய்யவேண்டும். சூதுக்களத்தில் வென்று கொக்கரிப்பது ஆணவம். தோற்றுச் சீறுவதும் ஆணவம்” என்றார்.
சூதுக்களத்தில் நின்றிருக்கின்றன தெய்வங்கள். அடுத்த கணத்தை முடிவு எடுக்கும் ஆற்றல் கொண்டவை. முந்தைய கணத்தை திரட்டி ஒவ்வொருவருக்கும் ஊழ்ப்பயனென அளிப்பவை. மனிதனின் பெருவிழைவை, ஆணவத்தை ஆள்பவை. அனைத்துக் கீழ்மைகளுக்கும் மேல் தங்கள் சொல்லாற்றல் கொண்டவை. அத்தெய்வங்கள் அனைத்தையும் சொற்கள் அங்கு எழுப்பி நிறுத்தும். என் சொற்களுக்காக அவை ஆடும். என் சொற்கள் அவற்றுக்கு ஆணையிடும். நான் அத்தெய்வங்களின் பூசகன்.
என் சொற்கள் திகழும் சூதுக்களம் புகழ்பெறலாயிற்று. பெருவணிகர் அங்கு தேடிவந்தனர். என் புகழ் சூதுக்களங்கள் அனைத்திலும் பரவியிருந்தது. மேலும் மேலும் பொருள் கொடுத்து என்னை சூதுக்களங்களுக்கு அழைத்தனர். என் சொற்களால் சூதுக்களத்தை ஆளும் தெய்வங்களை ஆட்டுவிக்க முடியுமென்றும், வெறும் சொல்லால் பகடைகளை பன்னிரண்டாக்க இயலுமென்றும் புகழ் பரவியது. அப்புகழில் நான் திளைத்தேன். என் மடி பொன்னொழிந்ததே இல்லை. என் இல்லத்தில் களஞ்சியம் ஒருபோதும் வறண்டதில்லை. என் மைந்தர் பட்டன்றி உடுத்ததில்லை, பல்லக்கிலன்றி பயணம் செய்ததில்லை.
என் மனையாட்டி முதலில் என்னை இகழ்ந்ததுண்டு, இத்தொழில் வேண்டாமென்று. அவளை குலத்தார் பழித்தனர். பிறந்தகமே எதிரியாயிற்று. பிறிதொன்று தேரும்படியும் விழிநீருடன் மன்றாடியதுண்டு. இந்நகர்விட்டுச் செல்வோம் என்றும் பலமுறை அழைத்ததுண்டு. எனக்கு வேறுவழியில்லை என்பேன். பொன் எவரையும் மாற்றும். பசியின்மைக்குப் பழகிய பின்னர் பசி மீதான அச்சம் பெருகுகிறது. வேறுவழியின்றி அமைந்த இடத்தை மானுடர் மெல்ல மெல்ல சொல்லி நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். அவ்வண்ணம் நான் இதில் அமைந்தேன். என்னைவிட உறுதியாக என் மனையாட்டி அமைந்தாள். இன்று அவள் அதன்மேல் அரியணையிலென அமர்ந்திருக்கிறாள். அறத்தின் மேலும் ஒழுக்கத்தின் மேலும் பெண்டிருக்கும் பற்று உறுதி மிக்கது. ஆகவே அறத்தையும் ஒழுக்கத்தையும் துறந்தபின் அவர்கள் அடையும் விடுதலையும் பெரியது.
இழந்ததொன்றுமில்லை என்று நானே எண்ணிக்கொண்டேன். அல்ல என்று என் இல்லத்திற்கு முன் அமைந்த உங்கள் சிறுகுடில் ஒவ்வொருநாளும் எனக்குக் காட்டியது. மூன்றடுக்கு மரவீட்டை கட்டிக்கொண்டபோது எவ்வண்ணமேனும் உங்களை என் முன்னிருந்து அகற்றவேண்டும் என்று பலமுறை முயன்றேன். உங்கள் மைந்தன் ஒப்புக்கொள்ளவில்லை. பொன் கொடுத்து நோக்கினேன். அச்சுறுத்தியும் பார்த்தேன். உங்கள் மூதாதையர் வாழ்ந்த வீட்டிலேயே நீங்கள் வாழ்ந்து இறக்கப்போவதாக கூறினார்கள். நான் இடம்பெயரலாமென்று எண்ணினேன். ஆனால் சூதர்தெருவை விட்டு நீங்கினால் நான் இழிசினர் தெருவுக்கே செல்லவேண்டியிருக்கும். இங்கே இவ்வண்ணம் அரண்மனை என இல்லம் எழுப்பி நான் தங்கியிருப்பது ஓர் அறைகூவல். ஒரு பழிவாங்கல்.
அத்துடன் என்றேனும் நான் மறைந்து பழியும் மறக்கப்பட்ட பின் என் மைந்தர் மீண்டும் குடியில் இணையவும் இந்த இல்லமே வழிவகுக்கும். ஆகவே வேறுவழியில்லை. ஒவ்வொரு நாளும் உங்களைப் பார்த்த பின்னரே என் இல்லம் விட்டு வெளியே வரவேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. மூத்தவரே, உங்கள் விழி ஒவ்வொரு நாளும் என்னை சுட்டியது, உங்கள் கண்ணுக்குப் படாமல் இல்லம் விட்டு வெளியேறவேண்டும் என்று எண்ணுவேன். உங்களை எண்ணாமல் ஒரு நாளை கடந்து செல்ல வேண்டும் என்று திட்டமிடுவேன். ஒருநாளும் இயன்றதில்லை.
என்னைக் காண்பவர் அனைவரும் உங்களைப் பற்றி எண்ணினார்கள். வஞ்சச் சூது ஆடும் இழிசினர் கூட. பிறிதொருவரை நினைவுறுத்துகிறீர்கள் சூதரே, நீங்கள் யார் அரண்மனை முதன்மைச் சூதரின் மைந்தரா இளையவரா என்றார்கள். நான் அச்சொற்களை கேட்காததாக நடிப்பதுண்டு. வேறெவராவது அச்சொற்களை ஏற்று “ஆம், இவர் அவருடைய இளையவரேதான்” என்பார்கள். உயர்ந்தோன் ஒருவன் இழிந்து இங்கு வந்தது அத்தனை உவகையை அவர்களுக்கு அளிக்கிறதா என்று எண்ணிக்கொள்வேன். அவர்கள் இழிந்து வந்த பாதையைவிட மேலும் இழிந்த ஒரு பாதையைக் காண்பது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறதா?
ஆம், அதுவே உண்மை. அதை நான் கண்டிருக்கிறேன். பெருவணிகர் ஒருவர் வந்தால் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். அவன் பொருள் இழந்து வறியவனாகி இரந்து பிழைக்கும் தெருவாழ்பவனாகி அங்கு வந்து நின்றால் அதைவிட கூச்சலிட்டு நகைக்கிறார்கள். அவன் மீண்டும் மீண்டும் அங்கு வரும்பொருட்டு அவனுக்கு சிறு செம்பு நாணயங்களை வீசுகிறார்கள். அன்னமளிக்கிறார்கள். அவன் வேண்டும் அளவுக்கு மது அளிக்கிறார்கள். அவன் களிகொண்டு கீழ்மையில் திளைக்கும்போது கொண்டாடுகிறார்கள். அவர்களால் கொண்டாடப்படும் பொருட்டு அவன் தன்னை மேலும் கீழ்மை நோக்கி செலுத்திக்கொள்கிறான். அவனை இளிவரல் உயிரெனப் பேணுகிறார்கள்.
மூத்தவரே, என் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு கணமும் உணர்ந்து வந்த வலி நீங்கள். என் வெற்றி வெற்றி அல்ல என்று உள்ளிருந்து முணுமுணுக்கும் ஒரு குரல். இதோ முழு வெற்றி அடைந்துவிட்டிருக்கிறேன். இனி இப்புவியில் நான் அடைவதற்கொன்றுமில்லை. அவ்வெற்றியை தங்கள் தோல்வியினூடாகத்தான் ஈட்ட முடியும் என்பதனால்தான் இந்தச் சிறு அமைதியின்மை. இந்த வெற்றி எனக்கு பிடித்திருந்தது, ஆனால் உங்கள் குருதி மேல் அது நிகழ்வதை நான் விரும்பவில்லை என்று உணர்கிறேன். ஆயினும் அதுவே ஊழின் வழி என இன்று அறிகிறேன்.
நீங்கள் அறியாதது உலகியல் மெய்மை. நூல்களால் அவை சொல்லும் பொய்யறங்களால் மறைக்கப்பட்டது அது. அறிக, இப்புடவி அமைந்துள்ளது பொருட்களால். பொருட்களை இணைக்கும் பொருண்மை நெறிகளால். ஒவ்வொரு பொருளுக்கும் இன்னொன்றுடன் ஒப்பிட மதிப்பு உருவாகிறது. அனைத்துப் பொருளையும் ஒப்பிடும் ஒரு பொருள் பொன்னே. பொன்னில் அளவிடப்படுகின்றன அனைத்துப் பொருள்மதிப்புகளும். பொன்னென்பது இப்புவியே. இப்புவியிலுள்ள அனைத்தும் ஆகும் ஆற்றல் கொண்ட பொருள் அது. எனவே பொன்னன்றி இப்புவியில் வேறு விழுப்பொருள் இல்லை.
பொன்னுக்கு அப்பால் பிறிதொன்றை வைத்த பிழையே நீங்கள் செய்தது. தன்னை மதிக்காது பிறிதொன்றைச் சூடிய ஒவ்வொருவரையும் பொன் தண்டிக்கும். வஞ்சம் கொண்டு பின்னால் வரும். விழிநீர் சிந்தி தன் முன்னால் பணிய வைக்கும். அவர்கள் தலைமேல் கால் வைத்து அழுத்தி மண்ணோடு மண்ணாக்கும். பொன் தன்னை வழிபடுபவரை வாழ்த்துவது. அறியாதோரை விழைவு காட்டி இழுப்பது. அறிந்து புறக்கணிப்போரை அழித்து மகிழ்வது. இவ்வெற்றி என்னுடையதல்ல, பொன்னின் வெற்றி. நான் பொன்னின் எளிய பூசகன். அடிபணிந்து வாழும் அடியோன்.
பொன்னே திருமகள். அவளை கனகை என்கின்றனர் கவிஞர். புவியளந்து, விண்ணளந்து, திசை விரிந்து படுத்திருப்போனின் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஒளி. மங்கலங்களில் முதன்மையானது. அழகுகளில் தலையாயது. திருமகள் பொன்வடிவிலேயே உறைகிறாள். என் இல்லத்தில் திகழ்கிறாள். என் நாவில் சொல்லெனவும் என் மைந்தர் விழிகளில் ஒளியெனவும் அவள் வாழ்கிறாள். என் குடி இங்கு பெருக வழிவகுப்பாள். இங்கு அமர்ந்து இன்று எண்ணம்கூர்க! எங்கு பிழைசெய்தோம் என்று உணர்க! அன்னம் அன்னம் என இரந்து அமர்ந்திருக்கையில் ஒருகணத்திலேனும் உங்கள் ஆணவத்தை அழித்து பொன்னுக்கு உங்களை அளியுங்கள். கனகை முன் பணியுங்கள். அவளிடம் உங்களை பொறுத்தருளும்படி கோருங்கள்.
அவர் போத்யரை கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் புன்னகைத்து “பொன்மகளுக்குத் தடையாக இருப்பவள் சொல்மகள் என்பார்கள். சொல்மகளே பொன்மகளை பெற்றுதான் வாழ்கிறாள் என்று உணருங்கள். ஒருமுறையேனும் உங்கள் சொல்லுடன் எங்காவது அமர்ந்து நீங்கள் பொன் பெறாது எழுந்துவந்தது உண்டா? உங்கள் சொல்லுக்கு பொன் மதிப்பே இல்லையென்றால் அதை எவரேனும் மதிப்பார்களா? சொல்மகள் பொருள்மகளின் கொழுநனின் உந்திச்சுழியில் உதித்தவனின் மனைவி. எங்கு இருக்கவேண்டுமோ அங்குதான் அவள் இருக்கவேண்டும்” என்றார்.
போத்யரின் பழுத்த விழிகள் அவரை நோக்கிக்கொண்டிருந்தன. அவர் உரக்க நகைத்து “சொல் நன்று. பொன் எழுத்தாணியால் பொறிக்கப்படுமெனில் மேலும் நன்று” என்றபின் திரும்பிச்சென்றார்.