களிற்றியானை நிரை - 46
பகுதி ஐந்து : விரிசிறகு – 10
சம்வகை யுதிஷ்டிரனின் அறைவாயிலை அடைந்து நின்றாள். ஏவலன் தலைவணங்கி அவள் வருகையை அறிவிக்க யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று மீள்வதற்குள் அவள் அங்கே ஆற்ற வேண்டியதென்ன என்பதை முடிவு செய்துவிட்டிருந்தாள். யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று தலைவணங்கும்போது அவள் சற்றே சலிப்புற்ற உடல்பாவனையை அடைந்திருந்தாள். நூல் நோக்கிக்கொண்டிருந்த யுதிஷ்டிரன் “கூறுக!” என்றார். அவருக்கு தன்மேல் மெல்லிய ஆர்வமும் உள்ளார்ந்த விலக்கமும் உண்டு என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அல்லது அதற்கும் அடியில் ஓர் அணுக்கம் இருக்கலாம். அவ்வாறு ஆழத்தில் ஓர் அணுக்கம் இன்றி எவரிடமும் ஆர்வம் கொள்ள இயலாது.
“பேரரசி நகர்நுழைகிறார். அதற்கான அனைத்தும் இங்கு ஒருக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சிறு எண்ணம் இன்று எழுந்தது” என்றாள். அவ்விரு சொற்றொடர்களிடையே இருந்த இடைவெளி அவரை விழிகூரச் செய்தது. “இந்திரப்பிரஸ்தத்தில் பேரரசியின் அணிகள் உள்ளனவா? அங்கு அணிகள் இருந்தாலும் அவற்றை அவர் அணிந்து இங்கு வருவாரா? ஒற்றர் செய்திகளின்படி அவர் அங்கு ஒரு அணியைக்கூட உடலில் அணியாமல்தான் அங்கிருக்கிறார். அவ்வண்ணமே இங்கு எழுந்தருளவே வாய்ப்பு மிகுதி.” யுதிஷ்டிரனின் விழிகள் மாறின. “ஆம், என்னிடமும் அவ்வாறு சொல்லப்பட்டது” என்றார். “அவள் அணிகளேதுமின்றித்தான் வருகிறாள்.”
“அணிகளேதுமின்றி அரசி நகர்புகுவார் என்றால் அது இங்குள்ளோருக்கு விந்தையாகத் தெரியலாம். இன்று இங்கிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் முன்னரே அரசியை பார்த்திராதவர்கள். அவர்களுக்கு மும்முடி சூடி இந்திரப்பிரஸ்தத்தின் அரியணை அமர்ந்த பேரரசி திரௌபதியைத்தான் தெரியும். அவர்கள் அவரைத்தான் எதிர்பார்ப்பார்கள். பேரரசி இன்றிருக்கும் நிலையில் இவ்வண்ணம் தேரில் நகர்புகுவார் என்றால் அது பிறிதொன்றாக பொருள்கொள்ளப்படலாம்” என்றாள். யுதிஷ்டிரன் அவளை கூர்ந்து நோக்க “இன்று அரசியிடமிருந்தும் அரசரிடமிருந்தும் ஒவ்வாத ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் சூதர்கள். அவர்களின் கதைகள் அதை அவ்வண்ணம் முடித்துவைக்க விழைகின்றன” என்றாள்.
“ஆம், அதை நான் எண்ணவில்லை” என்றார் யுதிஷ்டிரன். சம்வகை “ஒன்று இயற்றலாம், பேரரசிக்குரிய அணிகளெல்லாம் இங்கு அஸ்தினபுரியிலேயே உள்ளன. அவற்றை தெரிவுசெய்து நாம் அரசிக்கு அனுப்பலாம். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அவர் கங்கைக்கரை மாளிகைக்கு வந்ததுமே அங்கு சென்று அந்நகைகளைக் கொடுத்து அணிந்து வரும்படி தங்கள் ஆணையை தெரிவிக்கலாம்” என்றாள். “ஆனால் அவள் அதை விரும்பவில்லை என்றால் என்னால் எதையும் சொல்ல முடியாது” என்றார் யுதிஷ்டிரன். “அதைத்தான் நான் தங்களிடம் தனியாக கூற வந்தேன். அணிகளை தெரிவுசெய்து அங்கே அனுப்புவதை நானே செய்ய முடியும். ஏன் அணிகளுடன் நகர்புகவேண்டுமென்பதை நானோ அமைச்சர் சுரேசரோ சென்று உரைக்கவும் கூடும். ஆனால் தாங்கள் கருவூலத்திலிருந்து தங்கள் கைகளால் அவ்வணிகளை தெரிவுசெய்து தங்கள் அன்பின் பொருட்டு அனுப்பினால் அதை அவரால் தவிர்க்க இயலாது” என்றாள் சம்வகை.
“மேலும் அது ஒரு அழகிய தருணமாகவும் ஆகும். அரசர் தன் கையாலேயே தெரிவுசெய்த அணிகளை அரசிக்கு கொண்டுசெல்வதையே ஒரு சிறுநிகழ்வென ஆக்கலாம். பசித்த ஓநாய் போன்றது சூதரின் நாக்கு. அவற்றுக்கு இனிய தேனை அளித்தால் ஊன்வெறியை தணிக்கமுடியும்.” யுதிஷ்டிரன் புன்னகைத்தார். “நன்று, அதை செய்க!” என்றார். “ஆனால் நம் கருவூலத்தில் பேரரசி திரௌபதியின் நகைகள் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று கருவூலத்தை அறிந்தவர்களும் இல்லை. தாங்கள் வந்தால் அவற்றை எளிதில் தொட்டு எடுத்துவிட முடியும்” என்றாள் சம்வகை.
“இப்போதே வருகிறேன்… உடனே” என்றபடி யுதிஷ்டிரன் தன் மேலாடையை எடுத்து தோளில் இட்டார். “இந்நாளின் இனிய பணி அதுவென்றே ஆகுக!” சம்வகை “தங்கள் அலுவல்கள் சற்று முடிந்து… ” என இழுக்க “இல்லையில்லை. அலுவல்கள் அனைத்தையும் திரும்ப வந்து செய்யக்கூடும். இதை முதலில் முடிக்கலாம்” என்றபடி யுதிஷ்டிரன் நடந்தார். விரைந்த காலடிகளுடன் இடைநாழியில் சென்றபடி “இது மிக முதன்மையான செயல். ஆனால் எனக்கு தோன்றவில்லை. எண்ணி எண்ணி ஒவ்வொன்றையும் இங்கு சீரமைத்துக்கொண்டிருந்தேன். எப்படி இதை நோக்க மறந்தேன்?” என்றார். சம்வகை “இது பெண்களுக்குத் தோன்றுவது” என்றாள். “மெய் மெய், இது பெண்களுக்கு மட்டுமே தோன்றுவது” என்றபின் “நாளை பேரரசி நகர்புகுகையில் சிந்துநாட்டரசி இங்கு இல்லமகள் என்று முற்றத்திற்குச் சென்று நின்று அணிமங்கலம் காட்டி வரவேற்பதற்கு வாய்ப்பிருக்கிறதா?” என்றார்.
“அது அவரிடம் கூறப்பட்டுவிட்டது” என்றாள் சம்வகை. யுதிஷ்டிரன் “நீ நேரில் கூறினாயா?” என்றார். “நேரில் ஒருமுறை உரைக்கவேண்டியுள்ளது. ஆனால் ஏற்கெனவே இவ்வரண்மனையின் பொறுப்பை இல்லமகளென சிந்துநாட்டரசி ஏற்றுக்கொண்டிருப்பதனால் இதை மறுக்க வாய்ப்பில்லை” என்றாள். “என் ஆணையெனச் சொன்னால் அவள் மறுக்கப்போவதில்லை. ஆனால் ஆணையென உரைப்பதில் எனக்கு தயக்கம் இருக்கிறது” என்று யுதிஷ்டிரன் கூறினார். “தங்கள் தங்கை அவர்” என்றாள் சம்வகை. “ஆம், ஆனால் இது அவள் தந்தை வாழ்ந்த அரண்மனை. அவள் தமையன் கோலூன்றி அமர்ந்திருந்த அரியணை. நான் அவளுக்கு மூத்தோன் எனினும் அந்நிலையில்தான் அவள் உள்ளத்தில் இருக்கிறேனா என எனக்குத் தெரியவில்லை.”
குரல் மாறுபட “ஒருமுறை என்னை நேரில் கண்டால், என் விழிகளை அவள் நேருக்கு நேர் உணர்ந்தால் என் நெஞ்சில் அவள் பொருட்டு எழும் அன்பை அவளால் புரிந்துகொள்ள முடியும். ஆனால்…” என்றபின் கைவீசி “அதைப் பேசி பயனில்லை. ஒவ்வொன்றும் விந்தையாக குலைந்து சிக்கலாகிக் கிடக்கிறது இன்று” என்று யுதிஷ்டிரன் கூறினார். சம்வகை அவரை இடைநாழியிலிருந்து படிகளினூடாக அழைத்துச் சென்றாள். கீழ்த்தளத்தின் இடைநாழிகளினூடாக நடந்து சிறுகூடத்திற்குள் நுழையும்போது “கருவூலத்திற்கு இவ்வழியாக ஏன் செல்கிறோம்?” என்று அவர் கேட்டார். “மைய அறையினூடாகச் செல்கையில் தாங்கள் அங்கு செல்வது காவலருக்கு தெரியவரக் கூடும். இவ்வேளையில் தாங்கள் கருவூலத்திற்குச் செல்வது அனைவரும் அறிந்ததாக ஆகவேண்டியதில்லை. அரண்மனையின் காவலர்களைக் குறித்தே நமக்கு முழு அறிதல் இன்றில்லை. பெரும்பாலானவர்கள் சென்ற ஒருமாத காலத்திற்குள் இந்த நகருக்குள் புகுந்தவர்கள்” என்று சம்வகை சொன்னாள்.
யுதிஷ்டிரன் களியறைக்கு முன் நின்று “அவ்வறைக்குள் யார்?” என்றார். “சிந்துநாட்டின் இளவரசர்கள் உள்ளே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் சம்வகை. “விளையாடும் பொழுதா இது? இங்கென்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்?” என்றார் யுதிஷ்டிரன். “அரசர்களுக்குரிய விளையாட்டு படைக்கலக் களத்தில் அல்லவா?” என்றபடி யுதிஷ்டிரன் அவ்வறை நோக்கி சென்றார். “அவர்கள் அங்கு நாற்களமாடி பயில்கிறார்கள்” என்றபடி சம்வகை பின்னால் சென்றாள். “நாற்களமா? இந்த அகவையிலா?” என்றபடி கதவை உந்தி உள்ளே சென்ற யுதிஷ்டிரன் “என்ன செய்கிறீர்கள் இங்கு?” என்று உரக்க கூவினார். “என்ன செய்கிறாய்? யார் நீ?”
சுரதனும் சுகதனும் திகைத்து எழுந்து நிற்க அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த வஜ்ரன் எழுந்து கைகூப்பி “நான் நூற்றுவர்தலைவன் வஜ்ரன். நாற்களம் பயிற்றுவிக்கும்படி ஆணை” என்றான். “யாருடைய ஆணை? யாருடைய ஆணை?” என்று கூவினார் யுதிஷ்டிரன். “என்ன செய்கிறீர்கள்? அறிவிலிகளே, என்ன செய்கிறீர்கள் இங்கே?” சுகதன் “இங்கு நாற்களமாடுதல்…” என்று சொல்ல சினத்துடன் திரும்பி சுரதனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் யுதிஷ்டிரன். “அறிவிலி! உன் இளையோனையும் இதற்கா இழுத்து வந்தாய்?” அடிவாங்கிய கன்னத்தைப் பொத்தியபடி அவன் தலைகுனிந்து நின்றான். “இது என் ஆணை! இனி ஒருபோதும் உன் கைகள் இந்த நாற்களக் கருக்களை தொடக்கூடாது. இனி ஒருமுறை நீ இவ்வறைக்குள் வந்தால், இனி எங்கேனும் நீ நாற்களத்தை தொட்டாய் என்று அறிந்தால்….” என அவர் நடுங்கினார்.
பின்னர் மெல்ல தளர்ந்து, தாழ்ந்த குரலில் “நான் இதை தொட்டேன். இதிலாடினேன். இது எனக்களித்ததென்ன என்று உனக்குத் தெரியாது. இன்று இங்கு இதோ நின்றிருக்கிறேன். எங்கோ எவ்வண்ணமோ சென்று அடையவேண்டிய இடம் அனைத்தையும் இழந்து வந்து நின்றிருக்கிறேன். இனி என் குடியில் எந்த மைந்தனும் இதை தொடமாட்டான். இனி என் நகரில் எவரும் இந்த நாற்களத்தை தொடப்போவதில்லை” என்றார். மைந்தர்கள் கண்ணீருடன் தலைகுனிந்து நிற்க சம்வகை மெல்ல பின்னால் வந்து “மிக இளையோர். நாம் சுரேசரிடம் உரிய முறையில் இவர்களிடம் பேசச் சொல்லலாம்” என்றாள். “பேசச் சொல்… அவரிடம் இனி ஒருமுறை இதை பொறுக்கமாட்டேன் என்று சொல். குருவின் குலத்தில் இனி எந்த அரசனும் நாற்களத்தை தொடமாட்டான்” என்றபின் யுதிஷ்டிரன் வெளியே சென்றார்.
செல்லும் வழியெல்லாம் யுதிஷ்டிரன் புலம்பிக்கொண்டே இருந்தார். ஒரே நாளில் அவர் மீண்டும் முதுமையடைந்துவிட்டதுபோல் தோன்றியது. அஸ்தினபுரி மீண்டெழுந்தோறும் அவரில் தோன்றிய உயிர்த்துடிப்பு அடங்கிவிட்டிருந்தது. முதியவர்களுக்கே உரிய பிறர் கேட்கிறார்களா என்று நோக்காத தற்பேச்சு சிந்திக்கொண்டே சென்றது. “இது ஒரு தீய தெய்வம். இதில் நம் ஆற்றலை வெளிப்படுத்துகிறோம் என்று எண்ணிக்கொள்கிறோம். ஆம், நம் ஆற்றலை வெளிப்படுத்துகிறோம் என்பது உண்மைதான். ஆனால் அது எதிரிலிருக்கும் இன்னொரு மனிதரிடம் வெளிப்படுத்தப்படுவதல்ல. ஊழென்று மாற்றுருவம் கொண்டு எதிர் நின்றிருக்கும் தீயதெய்வம் ஒன்றிடம் வெளிப்படுத்துவது. சூதின் தெய்வம்…”
“சூதின் தெய்வம் கலி என்கிறார்கள். அல்ல, கலி சூது உருவாக்கும் விளைவுகளின் மேல் ஆட்சிகொண்டவர் மட்டுமே. கலியின் தேவியாகிய தியூதையே சூதின் தெய்வம். அவளை நான் கண்டுள்ளேன். வேசரநாட்டில் ஒரு சிறுகுகையில். அங்கே அவள் மழுங்கலான கற்செதுக்கு வடிவில் எழுந்திருந்தாள். கல்லாலான திரையிட்டு மூடிய உருவென. தொன்மையான சிலை. நான்கு கைகளில் கீழ்வலக்கையில் பகடை. கீழ்இடக்கை ஆட வரும்படி அழைக்கும் சுட்டு. அச்சுட்டுவிரலில் சுற்றிய நாகம். மேல்வலக்கையில் அமுதகலம். மேல் இடக்கையில் பாசம். அகலே நின்று நோக்கினால் அவள் விழிகளில் காமமெழுந்த அழைப்பு. அருகணைந்தால் வஞ்சவெறிப்பு. அவளுக்கு பின்புறமும் முகம் உண்டு என்கின்றன நூல்கள். முன்முகம் சிரிக்கையில் பின்முகம் சீறும். முன்முகம் சீற பின்முகம் நகைக்கும். அவள் கைகளின் நிழல்களும் கைகளே. எண்ண எண்ண கைபெருகுபவள். அறியாக் கைகளாலும் ஆடுபவள்.”
“அவளை நோக்கி அங்கே நான் நின்றிருந்தேன். அச்சமூட்டும் இடம் அது. என் உடன்பிறந்தார் அகன்றனர். அவர்கள் அவளுடைய வஞ்சச் சிரிப்பைக் கண்டு நடுக்கு கொண்டனர். நான் அவளை நோக்கியபோது அவள் கனிந்த அன்னையென்றே தெரிந்தாள். அந்தக் குகை காபாலிகர்களுக்குரியது. அவர்கள் தங்களுக்குள் சூதாடுவதுண்டு. தோற்றவன் அக்கணமே எழுந்து தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளவேண்டும். அவ்வண்ணம் பலநூறுபேர் விழுந்த குகை. அவர்களின் மண்டையோடுகள் பதிக்கப்பட்ட சுவராலானது. ஆனால் அங்கு நின்று நான் மெய்ப்பு கொண்டேன். அத்தலைகளுக்குமேல் நின்றிருப்பதாக எண்ணினேன். சுவரிலிருந்து என்னை நோக்கி நகைகொண்டிருந்தாள் அன்னை.”
“எவராலும் வெல்லப்படாத தெய்வம் அது. பிற தெய்வங்களே கண்டு அஞ்சும் தெய்வம் அது. அது தன்னுடன் ஆட வரும்படி ஒவ்வொருவரையும் அழைக்கிறது. இளிப்புடன் அங்கே அமர்ந்திருக்கிறது. சிறு வெற்றிகளை அளிக்கிறது. நீ வல்லவன் அல்லவா, நீ பல்லாயிரத்தில் ஒருவன் அல்லவா என கொஞ்சுகிறது. நம் ஆணவமே அதன் படைக்கலன். கொடிய ஆடல். போரைவிடக் கொடிது. பழிகள் அனைத்தையும்விட இழிந்தது. ஆனால் இந்த ஆடல் ஒருபோதும் எவரையும் வெளியே விடுவதில்லை. எத்தனை இழப்பிற்குப் பிறகும் மனிதர்கள் இதில் கிடக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் நானும் இதை விட்டு விலகுவேன் என்று சொல்ல முடியவில்லை. ஆம், நேற்றுகூட நான் விளையாடினேன். இன்றும் விளையாடுவேன். என்னால் இதிலிருந்து மீளவே முடியாது.”
“இதை ஒருபோதும் தொடலாகாது என்று எனக்கு நானே ஆயிரம் முறை ஆணையிட்டுக்கொண்டேன். என்னால் இயல்வதில்லை. இதில் அமர்கையில் இவ்வுலகை ஆள்பவனாக, ஊழுடன் நிகர்நின்று போராடுபவனாக நான் உணர்கிறேன். அந்த தெய்வத்தைப்போல என் ஆழத்தை அறிந்தது பிறிதொன்றில்லை. அது என் ஆணவத்தை சீண்டுவதற்காக தோற்றுக்கொடுக்கிறது. நான் அகலும்போது அள்ளிக்கொடுத்து மீண்டும் உள்ளே இழுக்கிறது. அனைத்தையும் அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டு நம்மை வெறுமையில் தள்ளுகிறது. உடைந்து அமர்கையில் தோள்தொட்டு மேலும் ஒரு சிறுவாய்ப்பு உள்ளது என்கிறது. இத்தனை தோல்வியும் அறுதி வெற்றிக்கே என்கிறது. அது மானுடரை சிறுமைசெய்து மகிழும் தெய்வம். மண்ணோடு மண்ணாக மானுடரை மிதித்துத் தேய்த்து புழுவென்று அருவருத்து காறி உமிழ்ந்த பின் கடந்துசெல்வது. அதைப்போல மானுடரை வெறுக்கும் பிறிதொன்று இல்லை.”
“இருந்தும் ஏன் அதை தழுவிக்கொண்டிருக்கிறேன்? ஏனென்றால் அது இல்லாத வெற்றிடம் வேறெதைக் கொண்டும் நிறைக்கக்கூடியதல்ல. கானகங்களில் பயணம் செய்திருக்கிறேன். ஏதும் எஞ்சாப் பெரும்போரையும் கண்டாயிற்று. வெற்றியையும் தோல்வியையும் பேருருவில் அறிந்தாயிற்று. அதற்கப்பாலும் என் அகம் அதைக்கொண்டே நிறைக்கக் கூடியதாக இருக்கிறது. சூதாடியைப்போல் சூதாடப்படுபவன் வேறில்லை. இப்புவியில் சூதாடியைப்போல் தீச்சொல் பெற்றவனும் வேறில்லை” என்றார் யுதிஷ்டிரன். சலிப்புடன் தலையாட்டியபடி நின்று அவளை திரும்பி நோக்கினார். “எப்படி இவ்விளையோருக்கு இதில் ஆர்வம் வந்தது?” என்றார்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. “நான் அறிவேன், கதைகளாக சொல்லிச் சென்று அடையவைத்திருக்கிறார்கள் வீணர்களாகிய சூதர்கள். அக்கதைகளில் எல்லாமே சூதின் சூழ்ச்சியும் சூதாடியின் சரிவும்தான் உள்ளது. ஆனால் கேட்பவர்களுக்கு அது ஈர்ப்பை அளிக்கிறது. கூரிய வாளும் தீயும் நாகமும் அளிக்கும் கவர்ச்சி. பாம்பு படமெடுத்தாடுகையில் உள்ளத்தாலெனினும் அதன் முன் கைநீட்டிப் பார்க்காத எவருமுண்டா? தீயைத் தொட்டு விளையாடாத குழந்தை உண்டா? சூது விளையாடத் தொடங்கிய எவரும் அதிலிருந்து விலக இயலாது” என்றார் யுதிஷ்டிரன்.
“அனைத்தையும் மறக்கவேண்டுமென எண்ணினேன். இந்தப் போர்வெற்றிக்குப் பிறகு, இங்கே மும்முடி சூடி அமர்ந்த பிறகு, பேரறத்தான் என்று பேர் வாங்கி இங்கிருந்து விண் புகுந்த பிறகும் கூட குலமகளை வைத்தாடிய கீழ்மகனென்ற பழி என்னிலிருந்து போகாது. இப்புவியில் நான் இனி அதன் பொருட்டே எண்ணப்படுவேன். இப்புவியில் நாற்களம் குறித்த எப்பேச்சிலும் என் கீழ்மை ஒரு சொல்லென என் நினைவில் கடந்து வரும்.” யுதிஷ்டிரன் நின்று சீற்றத்துடன் “என் அறைக்கு திரும்புகிறேன். என்னால் இன்று இவ்வணிகளை தெரிவுசெய்ய இயலாது. என் உள்ளம் கலங்கியிருக்கிறது” என்றார்.
சம்வகை “தாங்கள் இவ்வுணர்விலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி இந்நகைகளை பார்ப்பதுதான்” என்றாள். “என் நினைவுகள் கொந்தளித்தெழுகின்றன. குலமகளை அவை முன் நிறுத்திய கீழ்மகன் நான். அவளுக்காக அணி தேர்வதிலிருக்கும் சிறுமை என்னை கூச வைக்கிறது” என்றார். “அணிகள் தங்களை உளம் மாறச் செய்யும்” என்று அவள் மீண்டும் சொன்னாள். “இல்லை, என்னால் இயலாது. நீயே தெரிவுசெய்” என்றார் யுதிஷ்டிரன். அவள் “அணிகளை அவ்வாறு தெரிவுசெய்ய இயலாது என்பதனால்தான் தங்களிடம் கூறினேன்” என்றாள். “ஏனென்றால் அதில் ஒரு அணி வேறெவருடையதாக இருந்தால்கூட அது மங்கலக் குறை. அரசியின் விழிகளில் அதுதான் முதலில் படும். தாங்களே தெரிவுசெய்யாத ஓர் அணியை தாங்கள் தெரிவுசெய்தது என்று சொல்லி அவர்களிடம் அளிக்கவே இயலாது. ஒவ்வொரு அணியுடனும் நினைவுகள் கலந்திருக்கின்றன” என்றாள். அவளை சற்றுநேரம் நோக்கி நின்றபின் “ஆம், மெய்தான்” என்றபின் பெருமூச்சுடன் யுதிஷ்டிரன் நடந்தார்.
அவர்களின் காலடிகள் பலகைப்பரப்பில் ஓசையிட்டன. யானை விலாவெனப் பருத்து வளைந்த பெருஞ்சுவர்கள் அவற்றை எதிரொலித்தன. மேலும் மேலுமென அவர்கள் இறங்கிச் சென்றனர். அஸ்தினபுரியின் ஆழம் என அவள் எண்ணிக்கொண்டாள். அங்கே செல்கையில் யுதிஷ்டிரன் தன் மூதாதையரை எண்ணி துயர்கொள்வது இயல்பென்றே தோன்றியது. அங்கே அவர்களின் மூச்சு எஞ்சியிருக்கும். வென்று வென்று அவர்கள் அடைந்தவை அங்கே எஞ்சியிருக்கின்றன. விண்புகுந்தாலும் அவர்களின் ஒரு சிறு துளி அங்கே இல்லாமல் இருக்காது. அங்கே யயாதியை பார்க்கமுடியும். குருவை, ஹஸ்தியை, பிரதீபரை பார்க்கமுடியும். அவர்களின் பெருவிழைவுகளே நாகங்கள் என்றாகி அங்கே புதையல் காக்கின்றன என அவள் இளமையில் கதைகேட்டிருந்தாள்.
அவர்கள் கருவூலத்தை அடைந்தபோது சுந்தரர் எழுந்து வணங்கி நின்றார். “அரசியின் அணிகளை அரசர் பார்க்க விரும்புகிறார்” என்று சம்வகை சொன்னாள். சுந்தரர் அதை முன்னரே அறிந்திருந்தார். ”ஆணை” என்றபின் ஏவலனை அழைத்து கருவூலக் கதவை திறந்தார். அவனும் தாழ்க்கோல்களுடன் ஒருங்கி நின்றிருந்தான். சுந்தரர் அரசரை அவ்வாறு அருகிருந்து நோக்கியவரல்ல என்பதனால் படபடப்புடன் இருந்தார். கையளவுத் தடிப்பு கொண்ட மூன்று இரும்புக் கதவுகளுக்கு அப்பால் அணிகளின் கருவூலம் இருந்தது. ஒவ்வொரு கதவும் ஓலமிட்டபடி திறந்தது. உள்ளிருந்து சிறைப்பட்ட காற்று அவிந்த வாடையுடன் வெளியேறியது. அவர்கள் பேசிய ஒற்றைச் சொற்களை உள்ளே எவரோ முணுமுணுத்தனர்.
யுதிஷ்டிரன் உள்ளே சென்று பெருமூச்சுவிட்டார். “இங்கு வெளிக்காற்று வருவதே இல்லையா?” என்றார். அது மறுமொழிக்கான சொல் அல்ல என அவர்கள் அறிந்திருந்தனர். “புழுதியின் மணம். செல்வம் குவியுமிடத்தில் எல்லாம் இவை வந்துவிடுகின்றன. மூத்தவளின் மணம்… இருட்டு, புழுதி, பூசணம், சிற்றுயிர்கள்” என்றார். சம்வகை அவருடைய உள்ளம் நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தாள். “மூத்தவள் இல்லாத இல்லம் இல்லை என்று இதனால்தான் சொல்கிறார்கள் போலும். களஞ்சியத்திலும் கருவூலத்திலும் காவலென மூத்தாளே அமையமுடியும். ஒட்டடை, சிலந்திகள், பல்லிகள்… இருள் வடிவ தெய்வங்கள் அவை. திருமகளுக்குக் காவலென சூழ அமர்ந்திருக்கும் பூதகணங்கள் இவை. உலகியலோர் செல்வத்தை விழைகிறார்கள். அதன்பொருட்டு மூத்தவளை வரவேற்று குடியமர்த்துகிறார்கள்.”
அந்த மறுப்பினூடாக அவர் அதை அகத்தே மெல்லமெல்ல ஏற்றுக்கொள்கிறார் என அவள் உணர்ந்தாள். “செல்வத்துடன் ஒரு கெடுமணம் அமையுமென்றால் அது செல்வத்தின் மணமென்றே ஆகிவிடுகிறது” என்றார். சூழ நோக்கியபின் அவளை நோக்கி புன்னகைத்து “மானுடனுக்கு இனியவை அனைத்தும் ஏதேனுமொரு கெடுமணம் கொண்டவை என்கின்றது காமநூல்” என்றார். சுந்தரர் வந்து நிற்க அவர் பேழைகளைத் திறந்து காட்டும்படி கையசைத்தார். ஏவலர் ஒவ்வொரு பெட்டியாக திறந்து காட்டினார்கள். பேழைகள் பூதங்கள் என வாய்திறந்தன. அவற்றுக்குள் இருந்த சிறிய அறைகளுக்குள் நாகங்கள் சுருண்டு வளைந்து செறிந்திருப்பவைபோல் அணிகள் அமைந்திருந்தன. அவை இருளில் ஆழ்துயிலில் அமைந்திருந்தன. ஒளிகொண்டு விழிகூசி நெளிந்தன. சீறி தலைதூக்கின. அவள் விழிகளை விலக்கிக்கொண்டாள்.
யுதிஷ்டிரன் ஒரு பேழையிலிருந்து ஒரு நகையை எடுத்தபின் திரும்ப வைத்தார். “நெடுநாட்களுக்குப் பின் இதை பார்க்கிறேன். இங்கு நாங்கள் இருந்தபோது ஒரு கொற்றவை விழவின்போது அவள் அணிந்தது அது. அன்று சுடரெனப் பற்றி தழலாடி எழுந்துவிடுவாளென எனக்குத் தோன்றியது” என்றார். பிறிதொரு பெட்டியைத் திறந்து நோக்கி “முற்றிலும் வெண்ணிற அருமணிகள் இவை. பாண்டியநாட்டு வெண்முத்துக்கள். இவற்றை பகலில் அணிந்தால் நீர் விழுந்த சுனைபோல் தோன்றும் அவள் உடல்” என்றார். அவர் முகம் மாறத் தொடங்கியிருப்பதை அவள் கண்டாள். இறுகியிருந்த முகத்தசைகள் நெகிழ்ந்தன. உடலிலிருந்த மெல்லிய நடுக்கு ஓயத்தொடங்கியது. ஒவ்வொரு அருமணியாக எடுத்து நோக்கி தனக்குள் ஆழ்ந்து தனக்குள் முணுமுணுத்து மீள வைத்து மீண்டும் ஒன்றைத் திறந்து அவர் சென்று கொண்டே இருந்தார்.
உடன் செல்லலாகாது என்பதுபோல் சம்வகை தயங்கி நின்றாள். ஒவ்வொரு நகையிலும் ஒருபொழுது நின்று பின் சென்றார். ஒவ்வொரு பொருளிலும் ஒரு நினைவு. வாழ்வின் விரைவென்பது தன்னை இவ்வண்ணம் ஆங்காங்கே உதிர்த்து முன்னெழல். மீளச் சென்று மீண்டும் ஒருகணம் கற்பனையில் வாழ்தல் ஒன்றே முதுமையில் எஞ்சியிருக்கும் இன்பம் போலும். அவள் அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். யுதிஷ்டிரன் இளமை கொண்டபடியே செல்வது போலிருந்தது. அவர் உடலில் அசைவுகளில் விசை எழுந்தது. சிறு துள்ளலே கூட நிகழ்ந்தது. திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தபோது இளைஞன் போலிருந்தார். “இவை மொத்தமாக ஒன்றே. இந்நகைத் தொகுதியை அனற்குவை என்பார்கள். இவை அவளுக்கு தந்தையால் அளிக்கப்பட்டவை. பொருளெண்ணிச் சொல்லமுடியா மதிப்புகொண்டவை.”
“நீ அறிந்திருப்பாய், அவளை அனல் மகள் என்பார்கள். கன்னியென்றே அனலில் எழுந்தவள் அவள் என்று சூதர் கதைகள் சொல்கின்றன. இவையனைத்துமே செந்நிற வைரங்கள், செம்பவளங்கள். இச்செம்மணிகள் பதிந்திருக்கும் பொன் ஆடகம். செம்பு கலந்து அனலுக்கு அணுக்கமென வண்ணம் கொள்ளச்செய்யப்பட்ட பொன். செம்பட்டாடையும் செம்மலர்களும் அணிந்து அவள் இவற்றை உடலெங்கும் அணிந்து வருகையில் தழலே எழுந்து அணுகுவது போலிருப்பாள்.” அவர் விழிகளில் பித்து எழுந்தது. “தழல் என்று அவள் இந்நகருக்குள் நுழையட்டும். தழலென்றுதான் அவளை இந்நகர் மக்கள் அறிந்திருப்பார்கள். அவ்வண்ணமே காணட்டும்” என்றார். அவள் “ஆணை” என்றாள்.