களிற்றியானை நிரை - 45

பகுதி ஐந்து : விரிசிறகு – 9

சம்வகை நகரைச் சூழ்ந்திருக்கும் சிறுநகர்களை ஆளும் தலைவர்களை நகருக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த சிற்றவை ஒன்றில் கூட்டி அவர்களின் பணிப்பொறுப்புகளை மீண்டும் உணர்த்தி, பிழைகளைக் கண்டறிந்து கடிந்து அறிவுறுத்திவிட்டு அஸ்தினபுரிக்கு மீண்டாள். அஸ்தினபுரியில் உருவாகி வந்த கலவைமொழியில் அவ்வுரையாடலை நிகழ்த்தி முடிக்கையில் அவளுக்குள் சொற்கள் ஒழிந்த சலிப்பு நிறைந்தது.

குடித்தலைவர்களுக்கு தங்கள் இடமென்ன என்பதில் இடறல் இருந்தது. சிலர் தங்களுக்கான கோன்மையை அரசு தொடர்ந்து உருவாக்கித் தரவேண்டுமென எதிர்பார்த்தார்கள். அவள் நேரடியாகச் சொல்லாமல் ஒன்றை சொன்னாள். அவர்களுக்கான கோன்மைக்கு அடிப்படை அஸ்தினபுரியின் ஆட்சியே. ஆனால் அஸ்தினபுரியின் படைவல்லமை அதை நேரடியாக வந்து நிலைநாட்டக்கூடாது. அது குடிகள்மேல் அரசின் கொடுங்கோன்மையாக ஆகிவிடும். அரசு குறித்த அச்சமே அரசைவிட பெருவல்லமை கொண்டது. அந்த அச்சத்தை உருவாக்கி அதைக்கொண்டு தன் கோன்மையை நிலைநிறுத்தும் தலைவர்களே அவளுக்குத் தேவை.

அதை சிலர் உடனே புரிந்துகொண்டனர். ஒரு மூத்த தலைவர் “தண்டனைகள் அரிதாக நிகழ்கையிலேயே அரசு ஆளப்படுகிறது” என்றார். அவரை நோக்கி சம்வகை புன்னகை செய்தாள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்பதில் தொடர்ச்சியாக குழப்பம் இருந்தது. அவர்களின் கோன்மை தொன்மை கொண்டதல்ல, எனவே ஐயமற ஏற்கப்பட்டதும் அல்ல. ஆனால் எவர் மூத்த தலைவரின் சொற்களை கேட்கச் செவிகொள்கிறார்கள் என அவள் நோக்கினாள். அவர்களையும் நீட்டித்தாள். மேலும் மேலும் தன் குடிகள்மேல் உளக்குறை சொல்லி அவர்களை அரசு வந்து தண்டிக்கவேண்டும் என கோரிய சிலரை குறித்துக்கொண்டாள். கிளம்பும்போது ஒற்றை ஆணையில் அவர்களை நிலைநீக்கம் செய்து அடையாளம் கண்ட பிறரை அக்குடியின் கோலை கொள்ளச் செய்தாள். “அரசுக்கு ஐந்துவிரல்களால் அளித்து ஒற்றைவிரலால் பெற்றுக்கொள்பவரே சிறந்த குடித்தலைவர்” என்று அவள் சொன்னபோது சிலருடைய விழிகள் மின்னின. அவர்கள் புரிந்துகொண்டுவிட்டனர் என அவள் உணர்ந்தாள்.

முதல் குடித்தலைவர் ”இங்கே முன்பு ஆட்சிசெய்த பேரரசர் துரியோதனன் பெருங்குடிகளை தண்டித்ததே இல்லை என்கிறார்கள். அவர்முன் வழக்குகள் சென்றதே இல்லை என்றும் சென்றால் தந்தையென கைவிரித்து அணைத்தும் தாதன் என தலைதொட்டு வாழ்த்தியும் அனைவரையும் பொறுத்துக்கொண்டார் என்றும் சூதர்கள் பாடினர்” என்றார். அவர் அதை வாய்தவறி சொல்லிவிட்டார். அதை உணர்ந்து நாக்கை அழுத்தி அமைதியடைந்தார். குடித்தலைவர்களின் முகங்கள் அச்சத்தைக் காட்டின. சம்வகை “ஆம், அவர் மாமன்னர் குருவின் வழிவந்தவர். அஸ்தினபுரியின் அரசர்கள் அனைவருமே அவ்வண்ணம் கோல்கொண்டிருந்தனர். அவருடைய அந்தக் கனிந்த செங்கோல் இன்னும் இங்கே திகழும்” என்றாள். அவர்கள் முகம் மலர்ந்தனர்.

அஸ்தினபுரிக்கு மீண்டபோது அவள் மிகவும் களைத்திருந்தாள். அரண்மனைக்குள் தன் அறைக்குச் சென்றபோது அவளுக்காக ஏவலரும் ஒற்றர்களும் காத்திருந்தனர். செய்திச்சுருக்கங்களைக் கேட்டு ஆணைகளை இட்டபின் பீடத்தில் அமர்ந்துகொண்டாள். இயல்படையும்பொருட்டு கால்களை நீட்டி எதிர்ச்சுவரில் இருந்த சிறிய கறையை பார்க்கலானாள். ஆட்சிப்பணியில் மூழ்கியவர்கள் அனைவரும் அவ்வாறு தங்களை இயல்படையச் செய்யும் வழிமுறை ஒன்றை பயின்றிருக்கிறார்கள் என அவள் கண்டிருந்தாள். சுரேசர் ஏதேனும் ஓலையை எடுத்து விந்தையாக சுருட்டி மடித்து நீட்டிக்கொண்டு தலைகவிழ்ந்து அமர்ந்திருப்பார். அல்லது நன்றாக மல்லாந்து மேலே அடுக்கப்பட்டவைபோல் தெரியும் உத்தரங்களை பார்த்துக்கொண்டிருப்பார். அவள் கண்கள் நோக்கின் கூர்மையாலேயே மங்கலடைந்தன. உள்ளம் மெல்ல அமைதிகொண்டது.

அவள் விந்தையானதோர் தனிமையை உணர்ந்தாள். அதுவரை அவ்வாறொன்றை அவள் உணர்ந்ததே இல்லை. எப்போதும் தன்னை நோக்கும் விழிகள், தன் குரலுக்கு கூரும் செவிகள், தன் ஆணைக்குக் காத்திருக்கும் திரள் சூழ்ந்திருப்பதாகவே அவள் எண்ணியிருந்தாள். இல்லத்தில் இருக்கையில் எப்போதும் அன்னையும் தந்தையும் தோழியரும் உடனிருந்தனர். என்றும் அவள் தானென எண்ண நேர்ந்ததே இல்லை. படைத்தலைவியென ஆனபின் பணிகள் பலமடங்கு பெருகிவிட்டிருந்தன. தனிச் சிற்றறைக்குள் அவள் அமர்ந்திருக்கையில்கூட அவளுடைய ஒவ்வொரு சொல்லுக்காகவும் வெளியே பல்லாயிரம்பேர் காத்திருந்தனர். காலையில் துயிலெழுகையில் அவள் மஞ்சத்தறைக்கு வெளியே ஒற்றர்களும் ஏவலர்களும் சொல்காத்து நின்றனர். அவர்களின் சொல்லுக்காக நகரமே காத்திருந்தது. நாளெல்லாம் அவளுக்கு சற்று பின்னால் எந்நேரமும் அவள் ஆணைக்காக ஏவலரும் ஒற்றரும் படைத்தலைவரும் வந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு பணியின் இடைவெளியிலும் அவர்களை நினைவுகூர்ந்து நிறுத்தி ஆணைகளை இட்டு செய்திகளை செவிகூர்ந்து மீண்டும் உளச்செயல்பாட்டை தொடங்கினாள். அவள் விழித்திருக்கும் கணமெல்லாம் பணியாற்றிக்கொண்டிருந்தாள்.

இரவில் துயில்வதற்கு முன்பு வரை இறுதி ஆணைகளையும் அளித்துவிட்டு, ஆடைகளைக் கழற்றி, மஞ்சத்தில் படுத்து விழிகளுக்குமேல் தடித்த மரவுரியை போட்டுக்கொண்டு துயில்கொண்டாள். ஒவ்வொரு நாளும் தன் உள்ளத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்வாக அகற்றி, ஒவ்வொரு சொல்லாகக் கரைத்து, மெல்லமெல்ல வெறுமை கொண்டு, உளமழிந்து கண்துயில்வதற்கு நெடும்பொழுதாகியது. கனவுகளுக்குள் அவள் பகல் முழுக்க ஆற்றியவற்றையே வேறெங்கோ வேறெவரோ ஆக இருந்து ஆற்றினாள். விந்தையான எதிரிகளை கண்டாள். அசுரர்கள், தேவர்கள், மண்மறைந்தோர். ஏதேதோ களங்களில் வாளெடுத்து போரிட்டாள். புரவிகளில் எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தாள். துரத்தினாள், துரத்தப்பட்டாள். மலை உச்சிகளில் இருந்து தொற்றி அடியாழங்களுக்கு இறங்கினாள். தொற்றி விளிம்புகளில் கைபற்றி முடிவிலாது ஏறிச்சென்றுகொண்டே இருந்தாள். விழிப்புகொண்டு இருளை உணர்ந்து மூச்செறிந்து நீர் அருந்தி மீண்டும் படுத்துக்கொண்டாள். விடியவில்லை என ஓசைகளில் இருந்து உணர்கையில், துயிலுக்கு இன்னும் பொழுதிருக்கிறது என அறிகையில் உள்ளம் தித்தித்தது.

ஒவ்வொரு நாளும் விழித்தெழுகையில் எஞ்சும் துயில் எடைகொண்டு அவள் மேல் அழுந்தியது. கைகால்கள் இரும்பாலானவையென மஞ்சத்தோடு அழுந்திப் படுத்திருந்தன. உள்ளம் விழிப்பு கொண்டபின் சற்று கழித்தே உடல் விழிப்பை அடைந்தது. உள்ளத்தால் உடலை உந்தி எழுப்ப வேண்டியிருந்தது. எழுந்தமர்ந்து தன்னிரு கைகளையும் பார்த்தபடி அமர்ந்திருக்கையில் முந்தைய நாள் துயில்வதற்கு முன் இறுதியாக எஞ்சிய சொல் வளர்ப்பு நாய் என காத்து நிற்பதை அவள் கண்டாள். அதிலிருந்து தொடங்கி அன்று முழுக்க மீண்டும் சொற்களின் துரத்தல்கள். அவள் அப்பணியை சலிப்பில்லாமலேயே இயற்றினாள். ஏனென்றால் அப்பணியினூடாகவே அவள் நிகழ்ந்தாள். அவை இல்லையென்றால் அவளும் இல்லையென்று ஆகிவிடுவாள். அப்பணிகள் அகன்றபின் அவளிடம் எஞ்சும் வெறுமையை அவள் அறிந்திருந்தாள். பணியில்லாமல் ஆன கணமே அது வந்து அமர்ந்துவிடுமென அஞ்சினாள். ஆகவே பணிகளே அவளெனத் திகழ்ந்தாள்.

ஒருகணமும் ஓயாத அந்தப் பணியின் அலைகளில் இருந்து இத்தகைய தனிமை எவ்வாறு திரண்டெழ முடியும் என்று அவள் அப்போது வியந்தாள். ஆனால் இது தனக்கு மட்டும் அல்ல என்றும் தோன்றியது. சுரேசரோ யுதிஷ்டிரனோ இத்தனிமையை அடையாமல் இருக்க இயலாது. கருவறையில் இருக்கும் தெய்வங்கள் முற்றாக தனிமையில் அமர்ந்திருக்கின்றன. அத்தனிமையை தன்னுள் எடைமிக்க இரும்பு உருளையென உணர்ந்தாள். அனைத்து அசைவுகளையும் அதை சுமந்துகொண்டு நிகழ்த்த வேண்டியிருந்தது. அது நிலம் படிய அழுந்த அந்தியில் துயில வேண்டியிருந்தது. ஒவ்வொரு சொல்லிலும் அதன் எடை ஏறி அமர்ந்தது. எடையைக் கையாள உகந்த வழி அதை வீசிவீசி கைமாற்றிக்கொண்டே இருப்பது. அதையே பணி என்று சொல்கிறேன் போலும்.

பொறுப்புகளுக்கேற்ப தன் மொழியும் உடல் அசைவுகளும் மாறிக்கொண்டிருந்ததை உணர்ந்தாள். ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி நிறுத்தி தாழ்ந்த குரலில் அவள் சொல்லலானாள். உடலசைவுகள் மேலும் மேலும் விசையழிந்தன. சொல்லுக்கு மிக முன்னால் சென்று சொல் வந்து அணைவதற்காக உள்ளம் காத்து நின்றது. சொல் திகழும் போது மிக மேலே நின்று அனைத்தையும் ஆழத்தில் நோக்கிக்கொண்டிருந்தது. அனைத்துக்கும் அப்பால் மாறாதிருந்த ஒரு சலிப்பு அத்தனிமையிலிருந்து எழுந்தது. செயல்களை ஆற்றும் போது ஒவ்வொரு செயலும் அளித்த உளமகிழ்வை முற்றாக இழந்துவிட்டிருந்தாள். சுட்டுவிரல்களை அசைத்து பேரலைகளை எழுப்பும் இடத்தில் இருக்கையில் பேரலை என்று உணர்வதெல்லாம் இவ்வாழியின் சிறு குமிழிகளே என்று உணர்வது அது. நிகழ்வன அனைத்தும் நிகழாமைக்கு நிகர் என்று உணர்வது. இவை என்றும் இவ்வண்ணமே இருக்கும் என்றும், வந்து செல்பவர்களால் இவை எவ்வகையிலும் மாற்றப்படுவதில்லை என்றும் உணர்வது. இருத்தலும் இன்மையும் நிகரே என்று உணர்வது. அதை உணராது ஆட்சியாளர்கள் எவரும் இருக்க முடியுமா என்ன?

பிறகு ஏன் இதில் மகிழ்கிறார்கள்? இதை நோக்கி வரும்பொருட்டு ஏன் அனைத்தையும் இழக்கிறார்கள்? ஏன் இதில் அமர்ந்து தான் நான் என்று தருக்குகிறார்கள்? இன்னும் இன்னும் என்று ஏன் எழுகிறார்கள். இறைவடிவு நானே என்று எவ்வண்ணம் மயங்குகிறார்கள்? இச்சலிப்பிற்கும் தனிமைக்கும் அப்பால் பிறிதொன்று உள்ளது. இக்கணத்திலேனும் நானே தெய்வம் என்று நினைக்கும் அத்தருணம். ஒவ்வொரு மானுடரும் தாங்கள் தெய்வம் என்று ஆக விரும்புகிறார்கள். தெய்வமாகும் விழைவை உள்ளே பொறித்தே மானுடனைப் படைத்து மண்ணுக்கு அனுப்பியிருக்கின்றன விண்வல்லமைகள். இசைபாடும் சூதன், நடனமாடும் ஆட்டன், சொல்தேரும் கவிஞன், படை கொண்டெழும் வீரன், முடிசூடி அமரும் அரசன், வேதம் பயிலும் அந்தணன், தவம் செய்யும் முனிவன் என ஒவ்வொருவருக்கும் இங்கு தெய்வமாகும் விழைவுதான் உள்ளது.

ஏனென்றால் தெய்வம் என்பது ஆதலின் உச்சம். இருத்தலின் நிறைவு. இங்கு மானுடன் ஆற்றும் அத்தனை செயல்களும் கூர்ந்து குவிந்து சென்றடைவது தெய்வமென்னும் நிலையையே. தவத்தினூடாக முனிவன் அடைவது, அபூர்வத்தினூடாக வேதியன் ஈட்டுவது, ஆற்றலினூடாக அரசன் எய்துவது, சொல்லினூடாக கவிஞன் பெறுவது, கலையினூடாக சூதன் உணர்வது அனைத்தும் அது ஒன்றே போலும். தெய்வநிலை. ஆனால் தெய்வங்கள் நிலைகொள்பவை அல்ல. அவை விண்ணில் அலையலையெனத் திகழ்பவை. முட்டி மோதிக்கொள்பவை. முயங்கிப் பிரிந்தாடுபவை. தெய்வங்கள் விண்ணில் இடியிடியென குமுறிக்கொண்டிருக்கின்றன. தொலைவுகளை மின்னி மின்னித் தொடுகின்றன. ஒளிர்ந்து அணைந்து எரிந்தெழுகின்றன. மின்னி மின்னி கடுவெளியின் இறுதிவரை பெருகியிருக்கின்றன. அவை இங்கே ஆலய இருளில் மட்டுமே கல்லில் நிலைகொள்கின்றன. பனித்துளியென அமைந்த முகில்கணம்போல.

அந்த எண்ணப்பெருக்கிலிருந்து மீண்டபோது அவ்வெண்ணங்கள் தனக்குள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று அவள் வியந்துகொண்டாள். முன்பு ஒருபோதும் இத்தகைய எண்ணங்கள் என்னுள் எழுந்ததில்லை. இவ்வாறு சொல்கூட்ட கற்றுக்கொண்டதும் இல்லை. அவள் எப்போதும் கூர்ந்து நோக்குவது சுரேசரின் சொற்களை. ஒரு நிகழ்விலிருந்து அவர் சொற்களினூடாகச் சென்றடையும் தொலைவை. அத்தொலைவினூடாக மீண்டும் தன் சொற்களை அவள் வந்தடைவாள். தன்னிடம் அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் நினைவிலிருப்பதை அவள் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறாள். அவருடைய மாணவர்களிடமிருந்து மீண்டும் மீண்டும் அதை கேட்டுக்கொண்டிருந்தாள். இந்நகரை சுரேசர் தன் சொற்களினூடாக இணைத்துக்கொண்டிருக்கிறார். இங்கிருக்கும் பெருந்திரள் அனைத்தையும் தொட்டு தனக்குத்தானே பின்னி ஒரு மாபெரும் வலையென இந்நகரத்தை மூடியிருக்கின்றன சுரேசரின் சொற்கள்.

இச்சிலந்தி தன் வலையில் தானே சிக்கிக்கொள்வதில்லை. என்றேனும் ஒருநாள் இதை இவ்வண்ணமே விட்டு விலகிச்செல்லவும் கூடும். அச்சொற்களை அள்ளிச் சுருக்கி ஒரு நெறிநூலென்றாக்கி இங்கு எஞ்சவிட்டுப் போகக்கூடும். எத்தனை நூல்கள்! அத்தனை பணிச்சுமைக்குள்ளும் அவள் நூல் பயின்றுகொண்டிருந்தாள். அரசுப்பணி நூல்கள், நெறிநூல்கள், அரிதாக அறநூல்கள். நூல் பயில்தல் அவளுக்கு ஒரு செவி நிகழ்வாக இருந்தது. புலரியில் எழுந்து நீராட்டறைக்குச்சென்று ஆடை அணிந்து வெளியேறுவது வரை புலவர் ஒருவர் அவள் அருகே நின்று அன்றைய நூலை அவளுக்கு படித்துக்காட்டுவார். பின்னர் நாள்முழுக்க அந்நூலின் சொற்கள் அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அன்று நாள் அமைகையில் அச்சொற்களினூடாக அவள் நெடுந்தொலைவு வந்து சேர்ந்திருப்பாள். மறுநாள் அந்நூலின் தொடர்ச்சியை அவர் உரைக்கையில் முற்றிலும் புதிய ஒன்றாக அதை கண்டடைவாள். அரிதாக அந்நூலாசிரியனைவிட நெடுந்தொலைவுக்கு அவள் சென்றுவிட்டிருப்பாள்.

இத்தனிமை ஒரு கூரிய படைக்கலம். இதுவே இவை அனைத்திலிருந்தும் என்னை விலக்குகிறது. விலக்கமே செயலாற்றுவதன் சிறந்த வழி. அகன்று நிற்கையிலேயே அனைத்தையும் பார்க்க இயல்கிறது. முழுமையாகப் பார்க்கையிலேயே மதிப்பிட இயல்கிறது. மதிப்பீடே செயலென்று மாறுகிறது. இவ்விலக்கம் என்னை துயரற்றதாக்கும். இச்சலிப்பு எதிர்ப்பார்ப்பும் ஏமாற்றமும் ஆணவமும் குற்றஉணர்வும் என அடைந்து கொண்டிருக்கும் அலைக்கழிவுக்கு அப்பால் மாறா வடமீன் நோக்கென்று நின்றிருப்பது நன்று. அவள் பெருமூச்சுடன் விழித்துக்கொண்டாள். அப்போது உள்ளம் தெளிந்திருந்தது. அன்று நிகழ்ந்த அனைத்தையும் காலத்தில் நெடுந்தொலைவுக்குச் சென்று அங்கிருந்து நோக்கிவிட்டிருந்தாள். நிகழவிருப்பனவும்கூட அவளுக்கு நிகழ்ந்தனவாக ஆகிவிட்டிருந்தன.

சம்வகை ஏவலனிடம் அவள் சிந்துநாட்டு அரசியை சந்திக்க விழைவதாக சொல்லியனுப்பிவிட்டு ஓர் ஓலையை எடுத்து வெறுமனே எழுத்தாணியால் கீறிக்கொண்டிருந்தாள். அதில் ஒரு சிறு சுழிப்பை போட்டாள். அதை கோடு ஒன்றால் நீட்டிச்சென்று வளைத்து இன்னொரு சுழியை போட்டாள். மூன்றாவது சுழியை இணைத்தபின் அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் ஓலையைக் கிழித்து அப்பால் பெட்டிக்குள் போட்டுவிட்டு கைகளை கட்டிக்கொண்டாள்.

ஏவலன் வந்து வணங்கி சிந்துநாட்டு அரசி சந்திப்புக்கு ஒப்புக்கொண்டிருப்பதாக சொன்னான். “அவர் இன்று புலர்காலை கிளம்பி மேற்குக் காட்டுக்குச் சென்று அங்கிருக்கும் கலிதேவனின் ஆலயத்தில் பலியும் கொடையும் முடித்து திரும்பியிருக்கிறார்” என்று அவன் சொன்னான். “நிமித்திகர் சம்புகரின் கூற்று அது. இங்கே இன்னும்கூட மூத்த கௌரவர் துரியோதனனின் இருப்பு எஞ்சியிருக்கிறது என்றார். அவருக்கு அடங்கல்கொடை அளித்து நிறைவளிக்கவேண்டும். அவர் உறையுமிடம் அக்கலிதேவனின் ஆலயம், அங்கே ஒவ்வொருநாளும் விளக்கேற்றப்படவேண்டும் என்றார். முதல் விளக்கை ஏற்றி வழிபடும்பொருட்டு அரசி சென்று மீண்டிருக்கிறார்.”

“உடன்சென்றவர் எவர்?” என்றாள் சம்வகை. “எவருமில்லை. புதிய சேடிகளுடன் சென்றிருக்கிறார்.” சம்வகை “மைந்தர்கள்?” என்றாள். “அவர்களுக்கு அவர் சென்ற செய்தியே தெரியாது. களரியில் படைக்கலம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.” அவள் தலையசைக்க “அங்கே நாள்தோறும் சென்று நெய்விளக்கேற்ற ஒருவரை அமர்த்தி அவருக்குரிய ஊதியத்தையும் சிந்துநாட்டு அரசி வகுத்திருக்கிறார். அவர் தென்னிலத்தைச் சேர்ந்தவர். ஆதன் என்று பெயர் சொன்னார்” என்றான். அவள் தலையசைத்து அவனை அனுப்பினாள்.

அவள் அரண்மனையினூடாக துச்சளையின் அறை நோக்கி செல்கையில் எதிரில் சுஷமையை கண்டாள். தலைவணங்கி அவள் அருகே நிற்க அவளை ஒருகணம் நோக்கி பார்வை விலக்கி, சலிப்புற்ற குரலில் “அரசி எவ்வண்ணம் இருக்கிறார்?” என்றாள் சம்வகை. “இயல்பாக இருக்கிறார் என்றே தோன்றுகிறது, தலைவி” என்றாள் சுஷமை. “இங்கு அவர் செய்துகொண்டிருக்கும் செயல்களை கூறுக!” என்றாள் சம்வகை. “அரசி துச்சளை புலரி முதல் அந்தி வரை அரண்மனையையே சார்ந்து இருக்கிறார். இங்கு அரசியென அவர்கள் வந்த பின்னரே இவ்வரண்மனையில் குறைவதென்ன என்று தெரிகிறது. இல்லாள் இல்லாதிருந்த இல்லம் போலிருந்தது இது. இங்கு எந்தெந்த அறைகள் தூய்மைப்படுத்தப்படாமல் விடுபட்டிருக்கின்றன என்று அவர்தான் சொன்னார். அரண்மனை வாழ்க்கையின் ஒழுங்குகளை மாற்றி அமைத்தார்.”

“உம்” என்றாள் சம்வகை. “அறைகளுக்கு உணவு கொண்டு போவதற்கு முதன்மை இடைநாழியை பயன்படுத்தலாகாது என்று அவர் வந்து சொல்லும் வரை நாங்கள் அறிந்திருக்கவில்லை. எவ்வண்ணம் உணவு கொண்டு சென்றாலும் சற்றேனும் உணவின் மணம் இடைநாழியில் எஞ்சாமல் இருப்பதில்லை. உணவின் மணம் பசியில்லாதபோது கெடுமணமே என அவர் சொல்கையிலேயே உணர்ந்தோம். இடைநாழிக்குள் நுழைவோர் வெறுக்கும் உணவின் மணம் வருவது உகந்ததல்ல என்றார். மேலும் ஏதேனும் எதிர்பாரா நிகழ்வில் இடைநாழியினூடாக எவரேனும் விரைந்து வந்தால் உணவு கொண்டு வருபவர்கள் அவர்களுக்கு மிகப் பெரிய தடையாக ஆகக்கூடும் என்றார். அதுவரை காவலர்தலைவியாக நான் அதை எண்ணிப்பார்க்கவே இல்லை. ஒன்றையொன்று தொட்டு திறந்திருக்கும் பக்கவாட்டு அறைகளினூடாகவே உணவு செல்ல வேண்டும் என்பது எங்களுக்கு தோன்றவே இல்லை.”

சம்வகை தலையசைத்தாள். “ஒவ்வொரு அறையிலிருந்தும் வெளித்தோட்டத்திற்கு திறக்கும் ஒரு கதவு இந்த அரண்மனையில் இருக்கிறது. அக்கதவைத் திறந்து ஒவ்வொரு நாளும் அப்பால் சருகும் தூசும் குவியாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசி ஆணையிட்டார்” என சுஷமை தொடர்ந்தாள். “மிக அரிதாகவே தோட்டத்திற்குத் திறக்கும் கதவுகளை இங்குள்ளவர்கள் திறக்கிறார்கள். ஆனால் எப்போதேனும் திறக்கும்போது அப்பால் சருகுகள் குவிந்திருக்கும் எனில் அக்காட்சியால் உளச்சோர்வு அடையக்கூடும். அச்சிறு தோட்டத்தின் பயனே இல்லாமல் ஆகிவிடக்கூடும். ஏனென்றால் அக்கதவை அவர்கள் அறையின் அடைவு அளிக்கும் திணறலை தவிர்க்கும்பொருட்டே திறக்கிறார்கள். அவர் வந்த ஒருநாளைக்குள் இவ்வரண்மனை முற்றாக மாறிவிட்டிருக்கிறது.”

“நன்று” என்று சொல்லி சம்வகை மேலும் நோக்கி நின்றாள். தான் தொகுத்துச்சொல்லும்படி கோரப்படுவதை உணர்ந்த சுஷமை “அவர் இதை தன் அரண்மனை என்று நினைக்கிறார். இதன்மேல் தன் ஆட்சியை நிலைநாட்டிவிட்டார். எனவே இங்கு அவர் மகிழ்ந்திருக்கிறார் என்றே கொள்ளவேண்டும்” என்றாள். சம்வகை “அரசர் என்ன செய்கிறார்?” என்றாள். சுஷமை முகம் மலர்ந்து “பேரரசி நகரெழப்போவதை எண்ணி உவகையில் இருக்கிறார். அரசிக்கென ஒவ்வொரு ஒருக்கமும் அவர் பார்வையிலேயே நிகழவேண்டுமென எண்ணுகிறார். அதற்கான ஆணைகளை அவரே பிறப்பித்துக்கொண்டிருக்கிறார். இன்று மட்டும் எட்டு முறை சுரேசரை தன் அறைக்கு வரச்சொல்லி பேசியிருக்கிறார். பேரரசி நகர்நுழைகையில் ஒவ்வொரு முறைமையும் முழுதமையவேண்டும் என என்னிடமே பலமுறை சொல்லிவிட்டார்” என்றாள்.

யுதிஷ்டிரன் நிலைகொள்ளாமல் இருப்பதை சம்வகை முன்னரே அறிந்திருந்தாள். “அவர் சிந்துநாட்டு அரசியை இதுவரை சந்திக்கவில்லை. அதைப்பற்றி ஏதேனும் சொல்லப்பட்டதா?” என்றாள். “இருமுறை சந்திப்பதைப்பற்றி பேசப்பட்டது. ஆனால் அவ்வாறு சந்திப்பது முறையல்ல என்றனர் நிமித்திகர். அரசி கைம்மை நோன்பில் இருக்கிறார், எனவே ஓராண்டு பிற ஆடவரை சந்திக்க ஷத்ரிய நெறி ஒப்பாது என்றார்கள். அவர் அவையமரலாகாது, பெண்களுக்குரிய அரண்மனையின் முற்றத்தில் நின்று பேரரசியை எதிர்கொள்வதற்கு மட்டுமே நெறியொப்புதல் உள்ளது. அது சார்ந்த குழப்பம் நீடிக்கிறது. அறுதியாக எதையும் அமைச்சர் இன்னமும் சொல்லவில்லை” என்று சுஷமை சொன்னாள். “இங்கே கைம்பெண்நெறி பேணப்படவில்லை என்றே தங்கள் சொல்லில் இருந்து நான் உணர்ந்தேன். அது அரசரிடம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.” சம்வகை “அதை நானே சொல்கிறேன். இப்போதல்ல, பேரரசி வந்தபின்” என்றாள்.

“சிந்துநாட்டு இளவரசர்களை அரசர் சந்திக்க விழைந்தார். ஆனால் அரசமுறையாக அவையில் இரு மைந்தரும் வரவழைக்கப்பட்டு உரிய முறைமைகள் செய்யபட்டு சந்திப்பதே முறை என அவரிடம் சொன்னோம். பேரரசி வரும்போது குடியவை கூடும். அக்குடியவையில் இரு மைந்தரும் அவையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றாள் சுஷமை. சம்வகை முதல்முறையாக அந்த நிலைகொள்ளாமையை உணர்ந்தாள். அது உடலில் எழாமலிருக்க உடலை இறுக்கியபடி நின்று “மைந்தர் எங்கே?” என்றாள். “அவர்கள் இதற்குள் இந்நகரில் இயல்பாகிவிட்டிருக்கிறார்கள். அரண்மனை எங்கும் சுற்றி நோக்கினர். ஆடுகளம் சென்று விளையாடினர். களரிக்குச் சென்று படைக்கலமாடினர். இங்கே அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்.”

“அவர்கள் எங்கே?” என்று சம்வகை கேட்டாள். “சற்றுமுன் கீழே உள்விளையாட்டுக் கூடத்திற்கு சென்றார்கள். அதை திறந்தே நெடுநாட்களாகின்றன. அங்கு பழைய நாற்களத்தின் பலகைகளும் காய்களும் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அதிலொன்றை எடுத்து வைத்துக்கொண்டார்கள். நான் உடன் சென்றேன். என்னிடம் நாற்களம் ஆடத்தெரியுமா என்றார்கள். தெரியாது என்றேன். இங்கு நாற்களம் ஆடுவதற்கான ஒப்புதல் சூதர்களுக்கு இல்லை என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்றேன். மூத்தவர் சற்று எரிச்சலுடன் எங்களுக்கு நாற்களமாடலைக் கற்பிக்க ஒருவரை அனுப்புக என்றார்” என்றாள் சுஷமை. “நான் வெளியே சென்று ஷத்ரிய முதியவர்கள் எவரேனும் இங்கிருக்கிறார்களா என்று வினவினேன். கோட்டையின் தெற்கு வாயிலருகே இருந்த காவலர்தலைவனாகிய சிம்ஹபாகுவை வரவழைத்தேன். அவர் அவர்களுக்கு நாற்களமாட கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.”

சம்வகை “ஆகுக, நான் அரசரை பார்க்கிறேன்! அதன்பிறகு அரசியை பார்ப்பதே நன்று” என்றாள். “தாங்கள் வருகிறீர்கள் என்று அரசியிடம் அறிவித்துவிட்டேன்” என்றாள் சுஷமை. “அவரிடம் கூறுக, இடர் ஒன்று எதிர்பட்டதனால் அரசரை உடனடியாக சந்திக்கும்படியாக ஆகிவிட்டது!” என்று சொல்லி சம்வகை யுதிஷ்டிரனின் அறை நோக்கி சென்றாள்.