களிற்றியானை நிரை - 44
பகுதி ஐந்து : விரிசிறகு – 8
சம்வகை தன் மாளிகை நோக்கி செல்கையில் களைத்திருந்தாள். அவளுடைய நடையில் அது தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் நிறைந்திருந்த சொற்கள் ஒவ்வொரு காலடியையும் அழுத்தம் கொள்ளச்செய்தன. அவள் அறைக்கு வெளியே ஒற்றர்கள் காத்து நின்றிருந்தனர். அவள் உள்ளே சென்று அமர்ந்து கவசங்களை கழற்றிக்கொண்டாள். முழுமையாக எல்லா கவசங்களையும் அவள் கழற்றுவதில்லை. இயல்பாக அமர்வதற்குரிய அளவிலேயே அவள் கவசங்களை கழற்றுவது வழக்கம். பீடத்தில் அமர்ந்து ஒவ்வொரு ஒற்றனையாக உள்ளே அழைத்தாள். அவர்கள் கூறுவனவற்றை அரைவிழி மூடி கேட்டுக்கொண்டிருந்தாள்.
திரௌபதியின் கலம் அணுகிக்கொண்டிருப்பதை ஒற்றன் சொன்னான். மாலையிலேயே அவள் கங்கைக்கரைக்கு வந்துவிடுவாள். அங்கே ஓய்வெடுத்த பின் முற்புலரியில் கிளம்பி பொழுதெழுவதற்குள் அஸ்தினபுரிக்கு வருவாள். வரவேற்பு ஏற்பாடுகளைப் பற்றிய செய்திகள். காவல் ஏற்பாடுகளைப் பற்றிய செய்திகள். ஒரு செய்தி அவளுக்கு சற்றே நெருடல் ஏற்படுத்த விழிதிறந்து புருவம் சுளித்தாள். ஒற்றன் “ஆம் தலைவி, நேற்று மாலையே ஏழு சார்வாகர்கள் எல்லைக்குள் நுழைந்திருக்கிறார்கள்” என்றான். “நகரில் அவர்கள் நுழைவதற்கு ஒப்புதல் இல்லை. அவர்கள் விழவுக்காலங்களில் மட்டுமே நகர்புக முடியும்.” அவள் சார்வாகர்களைப்பற்றி தனக்குத் தெரிந்த செய்திகளை நினைவிலிருந்து கோத்துக்கொள்ள முனைந்தாள்.
“அவர்கள் கடுநோன்பு கொண்டவர்கள். முழு விலக்க நெறி பேணுபவர்கள். பொதுவாக நகர்களுக்குள் நுழைவதில்லை” என்றான் ஒற்றன். “நாம் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும்? அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன?” என்றாள் சம்வகை. “ஏதுமில்லை. அவர்கள் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. உணவைக்கூட இரப்பதில்லை. அவர்களுக்கு நாம் செய்யக்கூடுவன ஏதுமில்லை.” அவள் சில கணங்கள் எண்ணம்சூழ்ந்துவிட்டு “அவர்கள் மாற்றுருக் கொண்ட ஒற்றர்களாக இருக்கக்கூடுமா?” என்றாள். “தலைவி அவர்களை நேரில் பார்த்திருக்கவில்லை என நினைக்கிறேன். பார்த்தவர்கள் அறிவார், அவர்களின் விழிகளை பிறர் நடிக்கவியலாது” என்றான் ஒற்றன்.
“அவர்களை நோக்கிலேயே வைத்திருங்கள். அவர்கள் இருக்குமிடம் எப்போதும் நமக்கு தெரிந்திருக்கவேண்டும். அரசி நகர்புகுவதற்கும் அவர்கள் வந்திருப்பதற்கும் ஏதோ உறவுள்ளது” என்றாள் சம்வகை. “ஆம், தலைவி. முன்னரும் சிலமுறை அரசி நகர்புகும் தருணங்களில் அவர்களும் நகருக்குள் வந்திருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “அவர்களை உள்ளே விடவேண்டியதில்லை” என்றாள். “அது நம்மால் இயலாது. நகருக்குள் அவர்களுக்குரிய கரவுப்பாதைகள் பலநூறு. நாகர்களுக்கும் அவர்களுக்குமான உறவே நாமறியாதது. அவர்கள் விரும்பிய இடத்தில் விரும்பும் வண்ணம் தோன்றுபவர்கள். இதோ இங்கே இக்கணம் நிலம்பிளந்து எழ விரும்பினால் அதையும் அவர்களால் இயற்றமுடியும்.” சம்வகை புன்னகைத்து “அதை எதிர்பார்ப்போம்” என்றபின் கைவீசி அவனை அனுப்பினாள்.
ஓலைகளாக வந்த ஒற்றர்களின் செய்திகளை அவள் படித்துகொண்டிருந்தபோது ஏவலன் வந்து தலைவணங்கி சுரேசர் அவளை பார்க்க வந்திருப்பதாக சொன்னான். பதறி எழுந்து “இங்கேயா?” என்றபடி சென்று கதவை திறந்தாள். சுரேசர் அவளை நோக்கி புன்னகைத்து “சில செய்திகள் சொல்ல வேண்டியுள்ளது” என்றார். சம்வகை “தாங்கள் ஆளனுப்பியிருக்கலாமே? நான் தங்களை வந்து சந்தித்திருக்க வேண்டும்… அதுவே முறை” என்றாள். சுரேசர் புன்னகைத்து “உள்ளே செல்வோம்” என்றார். “வருக!” என்று அவள் அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். “அமர்ந்தருள்க!” என்று அவள் சொல்ல சுரேசர் அமர்ந்தார்.
சம்வகை பதற்றத்துடன் “தாங்கள் இவ்வண்ணம் தேடி வருவது நிலைகுலைவை உருவாக்குகிறது. தங்களை வந்து சந்திக்க வேண்டியவள் நான்” என்றாள். “இல்லை. இப்போது நீங்கள் அஸ்தினபுரியின் தலைமைப் படைப்பொறுப்பில் இருக்கிறீர்கள். அரசருக்கு அடுத்த நிலை இங்கு அதுதான். முன்பு அரசக் குருதியுடையவர்கள் மட்டுமே அமைந்த இடம். அந்தணர்கள் எந்நிலையிலும் படைத்தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். நான் அரசருக்கு மதிப்பளிக்கவேண்டும். உங்களுக்கும் அந்த மதிப்பை அளித்தே ஆகவேண்டும்” என்றார்.
“இந்த இடம் தங்களால் அமைந்தது” என்று சம்வகை சொன்னாள். “அது அரசருக்கு நலம்பயப்பது. அவருக்கு எது உகந்ததோ அதை கூறுவது என் பொறுப்பு என்பதனால் அமைந்தது. அப்பொறுப்பை நான் ஏற்பேன், ஆனால் அதன் பொருட்டு தருக்க வேண்டியதில்லை என்றும் சொல்லிக்கொள்வேன்” என்று புன்னகைத்து “அமர்க, அந்தணர்கள் எப்பொழுதும் குமுகத்திலும் அரசிலும் அமைந்த இடங்களையும் நெறிகளையும் முற்றேற்பவர்கள். நாங்கள் இந்த அமைப்பை அமைத்துக் காப்பவரகள். இந்த அமைப்பின் ஒவ்வொன்றும் அதற்குரிய மதிப்புகளால், சடங்குகளால், நம்பிக்கைகளால் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தவர்கள். ஆகவே நாங்கள் அவற்றில் எந்த மாறுதலையும் உருவாக்குவதில்லை” என்றார்.
“அமைச்சனாகிய நான் அஸ்தினபுரியின் ஏழு முதன்மைக் குடிகளுக்கும் அமைச்சன் என்றே நின்றிருக்க வேண்டியவன். ஒருபோதும் அந்நிலையை கடப்பதில்லை. ஆனால் அந்தணன் என்ற நிலையில் வேதச்சொல் புரப்பவன் என்னும் பொறுப்பே என்னுடையது. அந்நிலையில் இங்கிருக்கும் பிற அனைவருக்கும் மேலான இடம் எனக்கு உண்டு. அந்த இடத்தை அஞ்சியோ தன்னலம் கருதியோ துறப்பதுமில்லை” என்றார் சுரேசர். சம்வகை “நான் இன்னும் இந்த நிலைக்குள் பொருந்தவில்லை, அமைச்சரே” என்றாள். சுரேசர் “அது மிக எளிது. பிறர் விழிகளில் இருந்து அது உங்களுக்கு வந்து சேரும். பின்னர் உங்கள் உடல்மொழியிலிருந்து பிற விழிகளை சென்றடையும்” என்றார்.
“ஒவ்வொருவரும் தாங்கள் தலைக்கொள்ளும் பொறுப்புகளை அது அளிக்கும் இன்பத்தால் உணர்வதில்லை, துன்பத்தால்தான் உணர்கிறார்கள். இன்பத்தை துறக்கலாம், துன்பத்தை எவரும் துறக்க இயலாது. இன்பத்தைவிட பலமடங்கு கூரியது துன்பம். இன்பம் நம்மை மாற்றுவதைவிட துன்பம் மிக எளிதில் மாற்றிவிடுகிறது. இன்னும் ஓரிரு நாட்களிலேயே அஸ்தினபுரியின் காவலர்தலைவியாக நீங்கள் இருந்ததை மறந்துவிடுவீர்கள். காவலர்தலைவியானதும் இங்கே ஒரு காவலராகவும் அதற்கு முன் எளிய குடிப்பெண்ணாகவும் இருந்ததை முற்றாக மறந்துவிட்டதைப்போல” என்றார் சுரேசர்.
சம்வகை படபடப்பு நீங்காதவளாக புன்னகைத்தாள். சுரேசர் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி நாளை புலரியில் நகர்புகவிருக்கிறார். இன்று இங்கு அரசகுடிப் பெண்மணி என்று இருப்பவர் துச்சளை மட்டுமே. துச்சளை குடியின் மகள் என பேரரசி திரௌபதியை அரண்மனைமுற்றத்தில் நின்று எதிரேற்க முடியுமா என்று அவரிடம் உசாவ வேண்டும். அதை நானே செய்வதே முறை. ஆனால் அவர்கள் உங்களுக்கு அணுக்கமானவர்கள் என்ற முறையிலும் பெண்ணுக்குப் பெண் என்ற முறையிலும் நீங்கள் அதை உசாவிச் சொன்னால் நன்றென்று தோன்றுகிறது” என்றார்.
சம்வகை “அதை நான் உசாவுகிறேன். ஆனால்…” என்றாள். சுரேசர் “கூறுக!” என்றார். “தன் உடன்பிறந்தாரின் குருதி சூடிய குழல் கண்டு சிந்துநாட்டு அரசி என்ன எண்ணுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று சம்வகை சொன்னாள். சுரேசர் “ஆனால் அவருக்கு ஒரு கோரிக்கை இருக்கிறதல்லவா?” என்று கேட்டார். “ஆம்” என்றாள் சம்வகை. “அதை நான் உணர்ந்துவிட்டேன். ஆனால் இன்னமும் அரசரிடம் உரைக்கவில்லை. அதை உரைப்பதற்கான தருணம் வருமென்று எதிர்பார்த்திருக்கிறேன்.” சம்வகை “ஆனால், அதற்குமுன் நாம் எண்ணவேண்டிய சில உள்ளன” என்றாள்.
சற்றே விழிமாற சுரேசர் “அதை நாம் பேசுவோம். ஆனால் சிந்துநாட்டு அரசி அஸ்தினபுரியின் பேரரசியை அரண்மனை முற்றத்தில் எதிர்கொண்ட பிறகே அத்தருணம் வருமென்று எண்ணுகிறேன்” என்றார். அக்கூர்மை சம்வகையை அஞ்ச வைத்தது. “ஆம், அதையும் நான் உணர்த்திவிடுகிறேன்” என்று முனகினாள். “இன்று நகர் முற்றொருங்கிவிட்டது. கோட்டைமுகப்பின் நூற்றெட்டு அன்னையர் ஆலயங்களில் நேற்று மாலையே அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. நாளை புலரிக்கு முன் அவை அனைத்திலும் முதன்மைப் பூசனை நடந்து தெய்வங்கள் விழியேற வேண்டும். பேரரசி திரௌபதி நகர்புகும்போது நூற்றெட்டு அன்னையரும் கூடி அவர்களை எதிரேற்க வேண்டும்” என்றார் சுரேசர்.
“நகர் முகப்பில் படைத்தலைவரான நீங்கள் சென்று அரசியை எதிர்கொள்ளலாம். அரண்மனைமுகப்பில் துச்சளையும் நானும் வரவேற்போம். அன்று முழுதும் அவையில் அரசி அமரவேண்டும். தேவயானியின் மணிமுடி இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து வருகிறது. அரசி அதை அணிந்து அரியணையமரவேண்டும். இங்கே அரசியின் கோல் நிலைகொள்ளவேண்டுமென்றால் அது இன்றியமையாதது” என்றார் சுரேசர். “அத்துடன் இங்கே குடியவை என ஒன்று மீண்டும் வகுக்கப்படவேண்டும்” என்று சுரேசர் தொடர்ந்தார்.
“உண்மையில் குடியவைக்கு முடியரசில் பெரிய இடமென ஏதும் இல்லை. அத்துடன் இக்குடிகள் தொல்வேர் கொண்டவர்கள் அல்ல என்பதனால் இவர்களால் ஆகக்கூடுவன ஏதுமில்லை. ஆனாலும் குடியவை தேவை. அரசு எடுக்கும் முடிவுகளை குடிகள் தாங்களே எடுத்துக்கொண்ட முடிவுகள் என எண்ணவேண்டும் என்றால் அவை குடியவை ஒப்புதலை பெற்றாகவேண்டும். குடிகளுக்கு எவ்வகையிலேனும் ஒவ்வாமை இருக்குமென்றால் குடியவைத் தலைவர்கள் அதை தங்கள் முடிவே என எண்ணி சொல்லிப் புரியவைப்பார்கள். அடக்கி ஏற்கவும் செய்வார்கள்.”
“குடியவைக்குரிய நெறிகளை சற்றுமுன்னர்தான் அறுதி செய்து எழுதி அரசருக்கு அறிவித்திருக்கிறேன். இன்றே ஆணையாகிவிடும்” என்று சுரேசர் சொன்னார். “இங்கு குடியேறிய குடிகளை அவர்களின் பொதுஇயல்புகளைக் கொண்டு பதினெட்டு குலங்களாக தொகுத்திருக்கிறோம். பூசகர், மறவர், வணிகர், கைவினைஞர், உழவர், காவலர், ஆயர், பாணர் என எட்டு பெரும் பிரிவுகள். அவர்களால் ஆனது எண்பேராயம். இங்கு குடியேறியிருக்கும் அசுரர்கள், அரக்கர்கள், நிஷாதர்கள், கிராதர்கள், தொழும்பர் ஆகியோரை ஐந்து தனி குடிகளாக ஆக்கியிருக்கிறோம். குகர்கள், மீனவர்கள், நாடோடிக்குடியினர், சுடலைகாப்போர், குறிசொல்லும் நாகர்கள் என புறம்பியக் குடியினர் ஐவர். இந்தப் பதினெண் குடிகளுக்கும் தலைமைகள் உருவாக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடிகளுக்குரிய குடியடையாளங்களும் கோல்முத்திரைகளும் அளிக்கப்பட்டுவிட்டன.”
“அத்தனை விரைவாகவா?” என்று சம்வகை கேட்டாள். “அது மிக எளிது. ஏற்கெனவே அவர்கள் எவ்வண்ணம் தங்களை பிரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதை ஏற்றுக்கொள்வதையே நாம் செய்யமுடியும். புதிய பிரிவினைகளை உருவாக்க முடியாது, அவை நிலைகொள்வதில்லை. ஆகவே எதையும் எண்ணி ஆராய்ந்து செய்யவேண்டியதில்லை” என்றார் சுரேசர். “அஸ்தினபுரியின் வடக்குக் கோட்டை மேல் ஏறி நின்று கீழுள்ள திரளை பார்த்தேன். இப்பார்வையுடன் நோக்கியபோது கண்ணுக்குத் தென்படும் மக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிந்திருப்பதையே கண்டேன். தனிமானுடரில் உள்ளம் நேரடியாக வெளிப்படுவதில்லை. ஆனால் திரள் அப்படியே அதன் அகத்தின் விழிகாண் தோற்றம்.”
“அப்படி எத்தனை குழுக்கள் இருக்கின்றன என்று ஒற்றர்களிடம் எண்ணி எடுக்கச் சொன்னேன். நூற்றறுபத்தாறு குழுக்கள். அக்குழுக்களைத் தொகுத்து இப்பதினெண்குழுக்களை அமைத்தேன். ஏற்கெனவே அவர்களுக்கு கொடிக்குறிகளும் குடிமுத்திரைகளும் இருக்கின்றன. அவற்றையே அவர்களின் அரச அடையாளமாக கொண்டேன். ஒவ்வொரு குடியிலும் எவர் பொதுவாக சொல்நிலைகொள்ளும் முதியவராக இருக்கிறாரோ அவரையே குடித்தலைவராக அமைத்தேன்” என சுரேசர் புன்னகைத்தார். “சில குடிகளில் பெண்டிர் குடித்தலைவராக இருக்கக்கூடுமே?” என்று சம்வகை கேட்டாள். “இல்லை, இங்கு வந்தவர்கள் அனைவருமே தந்தை வழியினர். தாய்வழியினர் இந்திரப்பிரஸ்தத்திற்கே சென்றுள்ளனர்” என்றார் சுரேசர்.
“அதாவது பாரதவர்ஷத்தின் இந்தக் குல அடுக்குமுறைகளை அந்தணர்களாகிய நாங்களே உருவாக்கி நிலைநிறுத்துகிறோம். ஆனால் அவற்றை வெறுமையிலிருந்து உருவாக்குவதில்லை. அவை ஏற்கெனவே உருவாகி கண்ணுக்குத் தெரியும்படி நிலைகொள்கின்றன. நாங்கள் செய்வது தொகுப்பதும் வகுப்பதும் பெயரிடுவதும்தான். எங்கள் பகுப்பு அவர்களுக்கு உகந்ததாக இருப்பதனால்தான் அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். மேல் கீழ் என அடுக்கு முறை உருவாகாமல் அரசு உருவாவதில்லை. அரசனின் கோல் செல்லுபடியாவதும் இல்லை” என்றார் சுரேசர். “ஓர் அடுக்கமைப்பை அக்குடிகளே ஏற்கவேண்டும். அது என்றுமுள்ளது என்று நம்பவேண்டும். அது மாறுமென்றால் அழிவு வரும் என கருதவேண்டும். அதுவே அரசுகளின் அடித்தளம்.”
“நாளை மாலை இங்கு குடியவை கூடி அதில் அரசியும் அரசரும் முடி சூடி அமர்ந்துவிட்டார்கள் எனில் இந்நகரில் அரசு ஒன்று உருவாகிவிட்டதை பார்க்கலாம். நாளைமறுநாள் வெறும் முரசொலியினூடாகவே இக்குடிகள் அனைவரையும் ஆளலாம். இவர்களை சதுரங்கக் காய்களென இங்கு அரண்மனையிலிருந்தே நகர்த்திவைத்து விளையாடலாம்” என்று சுரேசர் சொன்னார். “இவை இங்கே நிகழ்வதை நான் அறியவே இல்லை” என்று சம்வகை சொன்னாள். “இவை படைத்தலைமைக்கு தெரியவேண்டியவை அல்ல. அமைச்சு சார்ந்தவை. இம்முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் எக்குலம் எங்கு எவ்வண்ணம் இருக்கிறது என்ற செய்தியை மட்டும் படைத்தலைமை அறிந்தால் போதும்” என்று புன்னகைத்தபடி சுரேசர் எழுந்தார்.
விடைகொள்ளும் முகமாக சற்றே தலைதாழ்த்தியபின் “துச்சளையிடம் இன்றே இதைப்பற்றி பேசிவிடுங்கள்” என்றார். “ஆணை” என்றாள் சம்வகை. “ஆணை என அல்ல, அவ்வண்ணமே என்று கூற வேண்டும். நீங்கள் இப்போது படைத்தலைவி” என்று சொல்லி புன்னகைத்து சுரேசர் வெளியே சென்றார். சம்வகை எழுந்து உடன் சென்றபடி “ஆனால் அம்மைந்தர்களைப்பற்றி நான் சில சொல்லவேண்டும்” என்றாள். “அதை சிந்துநாட்டு அரசி குடியின்மகள் என நின்று பேரரசியை வரவேற்றபின் நாம் பேசுவோம்” என்றபடி சுரேசர் நடந்தார்.
சுரேசர் சென்ற பின்னர் சம்வகை திரும்பிவந்து அமர்ந்து சற்றுநேரம் எண்ணம்சூழ்ந்தாள். ஒன்று தொட்டு ஒன்று என கருதிக்கருதிச் சென்று பின் முடிவெடுத்தாள். ஏவலரை அழைத்து அரண்மனை காவல் பொறுப்பிலிருந்த சுஷமை எனும் காவலர்தலைவியை வரச்சொன்னாள். அவள் வட்டமான கரிய முகமும் சிறிய உதடுகளும் மின்னும் சிறு விழிகளும் உருண்ட பேருடலும் கொண்ட இளம்பெண். காவலர்தலைவியாக அவளை பணிக்கு அமர்த்தியது சம்வகைதான்.
அஸ்தினபுரியின் அரண்மனை முதிய காவற்பெண்டான பிரத்யூஷையின் கையில் இருந்தது. அவள் அரண்மனையை ஆட்சி செய்யும்போதுகூட அது ஒரு மூத்த சேடிப்பெண்ணின் ஆட்சியாகவே இருந்தது. ஒவ்வொரு முறை அரண்மனைக்குள் வரும்போதும் அங்கு ஓர் ஒவ்வாமையை சம்வகை உணர்ந்தாள். அது ஏன் என்பது அவளுக்கு நெடுநேரம் கழித்தே புரிந்தது. பிரத்யூஷை ஒவ்வொரு கணமும் ஓயாது ஓசையிட்டுக்கொண்டிருந்தாள். ஆணைகளை பிறப்பித்துக்கொண்டும், அவ்வாணையை மீறுபவர்களை வசைபாடிக்கொண்டும், அவ்வாணையை கண்காணிக்கும்பொருட்டு பிறரை ஏவிக்கொண்டும் இருந்தாள். ஆனால் அரண்மனையின் ஒவ்வொரு இடத்திலும் எதுவோ ஒன்று பிழையாகவும் இருந்தது.
பின்னர் தன் காவல்மேடையில் மூத்த காவல்பெண்டான காளியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவள் குதிரைக்கொட்டிலில் ஏவற்பெண்டாக பணியாற்றிய நாட்களைப் பற்றி சொன்னாள். எந்நேரமும் தலைமைக் காவல்பெண்டு தன்னை வசைபாடிக்கொண்டிருப்பாள் என்றும், அதை அவள் பொருட்படுத்தியதே இல்லை என்றும் கூறினாள். ஏன் என்று சம்வகை கேட்டாள். “ஏனெனில் அச்சொற்கள் காதில் விழுந்துகொண்டே இருந்தன. அது செவிக்குள் விழும் ஓசையென எளிதில் பழகிவிடுகிறது” என்று அவள் சொன்னாள். “வசைபாடுவதற்கு அப்பால் தலைமைக் காவற்பெண்டு உங்களை தண்டிப்பதில்லையா?” என்றாள் சம்வகை. “வசைபாடுபவர்கள் எவரையும் தண்டிக்க முடியாது. வசைபாடுவதை ஒரு தண்டனையாகவே அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்” என்று காளி சொன்னாள்.
அக்கணம் சம்வகையின் உள்ளத்தில் ஒன்று மின்னியது. வசைபாடுபவர்கள் சிறு பிழைகளை விரும்புகிறார்கள். அப்பிழைகளை சுட்டிக்காட்டுவதனூடாக தன்னை மேலே நிறுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். அப்பிழைகளை சுட்டி கீழுள்ளோரை வசைபாடுவதனூடாக தன் கோன்மை நிலைநிறுத்தப்படுவதாக எண்ணுகிறார்கள். ஆகவே பிழைபட்ட ஒரு நிர்வாக அமைப்பையே அவர்களால் உருவாக்க முடியும். ஏனென்றால் அப்பிழைகளினூடாகவே அவர்கள் ஆதிக்கம் பெறுகிறார்கள். பிழைகள் பெருகுந்தோறும் மேலும் ஆற்றல் கொள்கிறார்கள்.
அதன்பின் அரண்மனைக்கு வந்தபோது அவள் அங்கு நிகழ்வனவற்றை ஒருகணத்தில் புரிந்துகொண்டாள். தலைமைப் பொறுப்பு வகிப்பவள் பிற அனைவருக்கும் மேலான ஆற்றல் கொண்டவளாக இருக்கவேண்டும். அல்லது அனைவரும் ஏற்கும் குலப்பெருமை கொண்டவளாக. குலப்பெருமையோ தனித்திறனோ இல்லாத ஒருத்தி அவள் முதியவள் என்பதனால் மட்டும் தலைமை தாங்குவாள் எனில் உருவாகும் இடர் அது. அவள் மேல் எவருக்கும் உண்மையான மதிப்போ அச்சமோ இல்லை. முதுமை என்பது ஒரு பொய்யான ஏற்பையே உருவாக்குகிறது. முதுமை தன்னை பிறர் கேலி செய்ய இடம் கொடுக்கிறது. ஏளனம் செய்யப்படும் ஒன்று மெய்யாக அஞ்சப்படுவதில்லை. மதிக்கப்படுவதுமில்லை. கொள்ளப்படும் அச்சமும் மதிப்புமே ஆதிக்கமாக ஆகின்றன.
ஒருநாள் இரவு சம்வகை அரண்மனைக்கு வரும்போது இரவு காவல் இருந்தவள் சுஷமை. அவளைச் சுற்றி அறுபது காவல் பெண்டுகள் இருந்தனர். சம்வகை தன் புரவியை முற்றத்தில் செலுத்தியபோது சாளரத்தில் தோன்றிய சுஷமை சுட்டுவிரலை மட்டும் காட்டி கீழே நின்றிருந்த காவற்பெண்டுக்கு ஆணையிட்டாள். அக்காவல்பெண்டு பாய்ந்து வந்து சம்வகையின் புரவிக் கடிவாளத்தை பற்றிக்கொண்டு “தாங்கள் முகக்கவசத்தை கழற்றவேண்டும், காவலர்தலைவி” என்றாள். “நான் காவலர்தலைவி என்று தெரிகிறதே, பிறகென்ன?” என்று சம்வகை கேட்டாள்.
“தொலைவில் தங்கள் புரவி வரும்போதே ஓசை அது யாரென்று காட்டிவிட்டது. தாங்கள் கவசஉடை அணிந்திருந்தாலும் உடலசைவுகளில் தாங்கள் இருக்கிறீர்கள். ஆயினும் இது இரவு. அரண்மனைக்குள் நுழையும் எவரும் தங்கள் முகத்தை காட்டியே ஆகவேண்டும் என்பது எங்கள் தலைவியின் ஆணை” என்று காவற்பெண்டு சொன்னாள். “உங்கள் தலைவி யார்?” என்று அவள் கேட்டாள். “சற்று முன் மேலே நின்று கைகாட்டியவர். இரவுப்பொழுதில் அவரே அரண்மனைக் காவலுக்குப் பொறுப்பு” என்றாள் காவற்பெண்டு.
“இவ்வாணையை அவள் கைகாட்டாமல் நிறைவேற்றமாட்டாயா?” என்றாள். “கைகாட்டாமலும் இவ்வாறே இதை நிறைவேற்றுவோம். ஆனால் இப்போது தங்களை நிறுத்தி கவசத்தைக் கழற்றும்படி நான் ஆணையிடவேண்டும். நீங்கள் சினமுறலாம். ஆகவே அச்செயலின் பொறுப்பை ஏற்க நான் சற்று தயங்கக் கூடும். ஆகவே அப்பொறுப்பை தானே ஏற்பதாகவே நீங்கள் பார்க்கும்படி கையை அங்கிருந்து காட்டினார் காவலர்தலைவி. அதை நீங்களும் பார்த்துவிட்டீர்கள். ஆகவே நான் துணிந்து இதை செய்யலாம். நீங்கள் என் மேல் சினம் கொள்ளமாட்டீர்கள். அச்சினத்தை காவலர்தலைவி தன் மேல் வாங்கிக்கொள்கிறார்” என்றாள் காவற்பெண்டு.
சம்வகை புன்னகைத்து “அத்தலைவியின் பெயர் என்ன?” என்றாள். “அவர் இளம்பெண்தான். உண்மையில் என்னைவிட ஏழு அகவை குறைந்தவர். அவர் பெயர் சுஷமை” என்றாள். “நல்ல பெயர். காவலருக்குத் தேவையானது அந்தப் பொறுமை” என்று சொல்லி சம்வகை அரண்மனைக்குள் சென்றாள். அங்கு துச்சளை வருவதற்கு உரிய அறை நன்கு ஒருக்கப்பட்டுள்ளதா என்பதை தானே நேரில் பார்த்தாள். திரும்பி வருகையில் சுஷமை வந்து தலைவணங்கினாள். “நீங்கள்தானா இங்கே காவல்தலைவி?” என்று அவள் கேட்டாள். “ஆம், இரவில் இவ்வரண்மனை என் பொறுப்பில் இருக்கிறது” என்று அவள் சொன்னாள்.
சம்வகை “எல்லா இரவுகளுமா?” என்றாள். “ஆம், தலைவி. எல்லா இரவுகளிலும்” என்றாள். “ஏன்?” என்று அவள் கேட்டாள். அவள் சற்று தயங்கி “பகலில் முதுதலைவி இங்கு இருப்பார். இரவுகளில் அவர் இங்கு இருக்கமாட்டார். ஓய்வெடுக்க விழைவார். இரவுகளில் இளையோர் காவல் காக்கலாம் என்று நான்தான் சொன்னேன். அவ்வண்ணமே என் பொறுப்பில் இதை ஒப்படைத்திருக்கிறார்” என்றாள். “விழிப்புடன் இருக்கிறீர்கள். நன்று” என்று சொல்லி அவள் விடைபெற்றாள்.
சம்வகை அஸ்தினபுரியின் ஒன்பது படைகளின் தலைவியாக அமர்த்தப்பட்டபோது முதல் ஆணையாக சுஷமையை அரண்மனைக் காவல் பொறுப்புக்கு கொண்டுவந்தாள். சுதமை கோட்டைக் காவல் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டாள். அவர்களைவிட முதியவர்கள் முன் அப்பதவியேற்பை அவளே நிறைவேற்றி வைத்தாள். அரண்மனையின் பழைய கோட்டைத்தலைவி உரிய மதிப்புடன் ஓய்வுச்செல்வம் அளிக்கப்பட்டு விலக்கப்பட்டாள். அந்த விலக்கல் மதிப்புடன் இருந்தபோதும் அதிலிருந்த கூர்மை அனைவரையும் சென்றடைந்தது.
மறுநாள் காலை அரண்மனைக்குச் செல்லும்போது ஒவ்வொன்றும் மாறியிருப்பதை சம்வகை கண்டாள். முன்பு என்னென்ன பிழைகள் இருந்தன என்று அந்த மாற்றம் வழியாகவே தெரிந்தது. அரண்மனை முகப்பில் நின்றவர்கள் அனைவருமே கையில் நீண்ட வேல்களை வைத்திருந்தார்கள். அரண்மனை முகப்பிலிருந்த சாளரங்கள் அனைத்திலும் வில்லேந்தியவர்கள் நின்றிருந்தார்கள். அரண்மனையிலிருந்து வாயில்கள் வழியாக வெளிவரும் வழிகளை மறித்து முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேர்களும் பல்லக்குகளும் விலக்கப்பட்டு அனைத்து வாயில்களிலிருந்தும் படைவீரர்கள் மிக விரைவில் வெளிவரவும் நுழையவும் வழியமைக்கப்பட்டிருந்தது.
அப்போதுதான் அதற்கு முந்தைய நிலையில் அரண்மனையை ஐம்பது பேர் கொண்ட படை எளிதில் வந்து கைப்பற்றிவிட்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. எத்தனை நொய்மையான ஒரு அமைப்புடன் அதுவரைம் அஸ்தினபுரி இருந்திருக்கிறது என்பதை அவள் புரிந்துகொண்டாள். எவரென்று அறியாத பெருந்திரள் அஸ்தினபுரிக்குள் நுரைத்து ததும்பிக்கொண்டிருக்கிறது. எந்த நாட்டு ஒற்றர்களும் கரவுப்படையினரும் அதற்குள் வந்திருக்கக் கூடும். அவர்களில் நூறுபேர் படைக்கலங்களுடன் ஒருங்கிணைந்து வந்தால் யுதிஷ்டிரனின் அரண்மனையைக் கைப்பற்றி யுதிஷ்டிரனை சிறைகொண்டு அந்நகரை தங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்திருக்க முடியும்.
கோட்டைக் காவலைப்பற்றி எண்ணியபோது அரண்மனைக் காவலை பொருட்படுத்தாமலிருந்தது தன் பிழை என்று சம்வகை உணர்ந்தாள். ஒன்பது காவல்படைகளையும் தன் பொறுப்பிலேயே மீண்டும் ஒருங்கிணைக்கலானாள். ஒன்பதில் ஏழு காவல் பொறுப்புகளுக்கு அவள் பெண்களையே நிறுத்தினாள். இரு காவல் பொறுப்புகள் ஆண்களுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் தென்னகத்திலிருந்தோ கிழக்கிலிருந்தோ வந்தவர்களாக அமைந்தனர். ஆரியவர்த்தத்தின் மையநிலத்திலிருந்து வந்த எவருக்கும் படைத்தலைமை பொறுப்பு அளிக்கப்படலாகாது என்றும், ஆனால் அவ்வாறு அளிக்கப்படவில்லை என்பது படைவீரருக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் என்றும் அவள் உளம் இருத்தினாள்.
சுஷமை வந்து நின்றபோது அவள் முடிவு செய்துவிட்டிருந்தாள். அவளை அமரும்படி சொல்லிவிட்டு மேலும் சற்றுநேரம் எண்ணத்தில் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள். விழிகளைத் தூக்கி சுருக்கமாக “சிந்துநாட்டு இளவரசர்களை நோக்கில் நிறுத்துக! அவர்கள் அரண்மனையைவிட்டு வெளியே செல்கையில் துணை இருக்கவேண்டும். எந்நிலையிலும் அவர்கள் அரசர் யுதிஷ்டிரனை அணுகக்கூடாது” என்றாள். சுஷமை எந்த வியப்பையும் வினாவையும் எழுப்பாமல் “ஆணை!” என்றாள்.