களிற்றியானை நிரை - 42
பகுதி ஐந்து : விரிசிறகு – 6
துச்சளை தன் இடர்நிலையை ஒருங்கிணைவுடன் சொல்லி முடித்தவுடனேயே அதைப்பற்றி அனைத்துத் தெளிவுகளையும் அடைந்துவிட்டதுபோல் சம்வகைக்கு தோன்றியது. ஒன்றை தொகுத்துச் சொல்வதன் வழியாகவே அதை முழுமையாகவே நோக்கவும் புரிந்துகொள்ளவும் முயல்கிறது, சொன்னதுமே அதை கடக்கும் வழியை உள்ளம் அடைந்தும்விடுகிறது. துச்சளை அந்நிகழ்வுகளை அவ்வாறு எவரிடமும் தொகுத்துச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அந்நகருக்குள் அந்நிலத்திற்குள் நின்று அதை அவ்வாறு சொல்லவும் இயலாது. அங்கே அவள் அயலவள். அத்தனை தொலைவு விலகி வந்தவுடனேயே உள்ளமும் அகன்றுவிடுகிறது. உயரத்திலிருந்து குனிந்து பார்ப்பதுபோல் மொத்த வரலாற்றையும் மனிதர்களையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கமுடிகிறது.
பேசியபின் தெளிவு முகத்திலும் உடலிலும் எழ துச்சளை எழுந்து அமர்ந்து விரல்களைக் கோத்து மடியில் வைத்துக்கொண்டாள். தலையை சற்றே திருப்பி சுழற்றியபோது ஒருகணம் அவளில் எழுந்து மறைந்த திருதராஷ்டிரர் சம்வகையை அகம் திடுக்கிடச் செய்தார். அவள் விழியின்மைகொண்டு மீண்டதுபோல் தோன்ற அவள் நோக்கை விலக்கிக்கொண்டாள். “நான் இங்கு வருவதைப்பற்றி ஒருபோதும் எண்ணியவளல்ல. இது என் நகரல்ல என்றுதான் எண்ணியிருந்தேன். என் உடன்பிறந்தார் கொல்லப்பட்ட பின்னர் இந்நகருடன் எனக்கு தொடர்பு ஏதும் இருக்கலாகாதென்பதே முறை. ஆகவேதான் எந்தை இந்நகரை விட்டு அகன்றிருக்கிறார்.”
“அத்துடன் இங்கு வருவதென்பது என் கொழுநரை நானே சிறுமை செய்வதற்கு நிகர். என் மைந்தர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இன்று அவர்கள் எதையும் உணரவில்லை எனினும் பின்னர் ஒரு நாள் அவர்கள் இதன் பொருட்டு என்னை வெறுக்கக்கூடும். ஆகவே அங்கிருந்து இங்கு அனுப்பப்பட்டபோது அது ஒரு சாவென்றே எனக்கு தோன்றியது. அப்படியே வேறெங்கும் சென்றுவிடலாமா என்றுகூட எண்ணினேன்” என்று துச்சளை சொன்னாள். “எளிய பெண்ணாக எங்கோ அறியா நிலத்தில் வாழ்வதைப்பற்றி நான் கற்பனைசெய்துகொண்டேன்… ஆனால்…”
ஒருகணம் மூச்செடுப்பதுபோல் தயங்கி அவள் தொடர்ந்தாள். “ஆனால் நான் கிளம்ப எண்ணியபோது எனக்கு தூதுகள் வரத்தொடங்கின. வெவ்வேறு சிறு அரசர்கள் என்னை மீண்டும் மணந்துகொள்ள விரும்பினார்கள். ஒரு பேரரசின் முன்னாள் அரசியை மணந்து கொள்வதென்பது அவர்களுக்கு ஒருவகை குலத்தகுதியை உருவாக்குகிறது. மாளவத்தின் எல்லைப்பகுதியில் உபமாளவம் எனப்படும் ஜெயத்துங்கநாட்டை ஆளும் உக்ரசிம்மன், அவந்திக்கும் விதர்பத்துக்கும் நடுவே சார்த்தூலசிருங்கம் என்னும் நிலப்பகுதியின் அரசராகிய குமுதகன், சௌவீரத் தொல்குடி அரசுகளில் ஒன்றாகிய உத்தரகர்த்தத்தை ஆளும் ஜம்புநாதன் என ஒருநாளில் மூன்று அல்லது நான்கு பேர் அவர்கள் நாட்டுக்கு என்னை அழைத்து ஓலையும் பரிசுகளும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஓலையை பெறும்போதும் ஒருகணம் நான் அவ்வாழ்க்கையை அறியாமலேயே வாழ்ந்துவிடுகிறேன். அந்த ஒவ்வொரு எண்ணமும் என்னை ஒரு வகையில் துகள்துகளாகச் செய்தது.”
ஏன் என நானே என்னிடம் உசாவிக்கொண்டேன். உண்மையில் மறைந்த என் கணவரை நான் விரும்பியதில்லை என்றே எண்ணியிருந்தேன். அஸ்தினபுரியில் நடந்த ஆடைகவர்தலுக்கும் அதன் பிறகு நடந்த சிறுமைகளுக்கும் எதிர்விளைவாக அவரை நான் ஆழ்ந்து வெறுத்தேன். விருஷதர்புரிக்கு மீண்ட அவரிடம் கடுஞ்சொற்களை உரைத்தேன். அவையிலேயே அவரை சிறுமைசெய்தேன். ஒருமுறைகூட என் அறைக்குள் அவரை விட்டதில்லை. சடங்குகளுக்கு மட்டுமே அவருடன் அவையில் இணையாக அமர்ந்தேன். நான் காட்டிய வெறுப்பினாலேயே அவர் மீண்டும் தீமையின் பக்கமாக தனனை செலுத்திக்கொண்டார். திரௌபதியை சிறைப்பிடிக்கும் பொருட்டு அவர் கானேகியதுகூட அதனால்தான்.
திரௌபதியை கைப்பற்றிக் கொண்டுவந்து சிந்துநாட்டின் அரசியாக்கிவிடலாம் என்று அவர் எண்ணினார். அதனூடாக பாண்டவர்களை முற்றாக தோற்கடிக்க முடியுமென்றும், அதற்கு என் தமையனின் ஒப்புதல் இருக்குமென்றும், அது என் மீதான அறுதி வெற்றியாக அமையுமென்றும் அவர் நினைத்தார். அவ்வாறு ஓர் எண்ணம் அவருக்குள் ஓடுவது எனக்கு தெரியாது. அவர் பீமசேனனால் சிறைபிடிக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டு அஸ்தினபுரியிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார். திரும்பிவரத் தயங்கி இங்கேயே சில நாட்கள் இருந்தார். அவர் எண்ணிக் கூசியது என் முகம் நோக்கவே.
ஓராண்டுக்குப் பின்னரே மீண்டு வந்தார். அரண்மனையின் பின்பக்கம் வேட்டைமாளிகையிலேயே பலநாட்கள் தங்கியிருந்தார். அரசவைக்கு வரவே இல்லை. அவர் மீண்டுவந்து பல மாதங்களுக்குப் பின்னரே நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் வேறுவழியில்லாமல் அவை கூட்டி ஆட்சிசெய்யத் தொடங்கினார். ஆனால் நாளின் பெரும்பகுதியை வேட்டையிலும் படைதிரட்டுவதிலும் கழித்தார். அவ்வாண்டு கோடையில் தொன்மையான காற்றன்னைத் தெய்வங்களுக்கான பலிக்கொடை நிகழ்வில் அவருடன் நான் அரியணை அமர நேர்ந்தது.
பகல் முழுக்க அவ்வரியணையில் அமர்ந்திருந்தபோதும்கூட நான் அவரிடம் ஒரு சொல் பேசவில்லை. அந்தியில் மணிமுடிகளை அகற்றி அணியாடைகள் நீக்கி பாலைநிலத்தில் நிகழ்ந்த நிலவாடலுக்கு சென்றோம். அங்கு அருகருகே அமர்ந்திருந்தோம். அந்நாள் முழுக்க அவர் என்னை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தார். நான் ஏதேனும் அவரிடம் பேசுவேன் என்றோ, குறைந்தது விழிதொட்டுப் பார்ப்பேன் என்றோகூட எண்ணியிருக்கலாம். அவரை நான் ஒரு பொருட்டெனவே எண்ணவில்லை என்பதை உணர்ந்து சீற்றம் பெருகிக்கொண்டிருந்தார். நான் அவரை அன்று உண்மையாகவே வெறுத்தேன். அவருடைய உடலின் மெல்லிய வெம்மையே என்னை அருவருப்படையச் செய்தது.
நிலவில் தொலைவில் ஆடலும் பாடலும் நிகழ்ந்து கொண்டிருந்தபோது திரும்பி என்னிடம் “நான் நினைப்பது நடந்திருந்தால் இங்கே என்னருகில் இந்நேரம் அவள் இருந்திருப்பாள். மெய்யாகவே பேரரசி. அனலிடைப்பிறந்தவள். அவளின் ஒரு பார்வையிலேயே இவர்கள் அனைவரும் அவள் துர்க்கை என அடையாளம் கண்டு தலைவணங்கியிருப்பார்கள். உன்னை இவர்கள் அரசி என்று எண்ணவில்லை. ஒரு அன்னையென்று எண்ணுகிறார்கள்” என்றார். “நான் விரும்புவது அந்த நிலையைத்தான்” என்று நான் சொன்னேன். அவர் பற்களைக் கடித்தபடி “அது பெண்ணுக்குப் பெருமை அல்ல. எந்தப் பெண்ணும் அன்னையே. வேறொன்றும் அல்லாதவள் வெறும் அன்னை” என்றார்.
அவர் உள்ளத்தில் என்ன நிகழ்ந்தது என்று அப்போது எனக்குத் தெரிந்தது. திரௌபதியை கவரச்சென்றதே எனக்கு எதிரான ஒரு நிகழ்வு என. அது எனக்கு சீற்றத்தை அளிக்கவில்லை. மாறாக மெல்லிய உவகையைத்தான் அளித்தது. நான் அவரை பொருட்படுத்தவில்லை எனினும் அவர் என்னை பொருட்படுத்துகிறார் என்பதும், அரிய செயல்களை என் பொருட்டு அவர் செய்கிறார் என்பதும் அளித்த நிறைவு அது. அதை பெண்மையின் அறிவின்மை என்று வேண்டுமென்றால் கொள்க! அது கீழ்செயலாயினும் தன் பொருட்டு உயிர் கொடுக்கத் துணிந்து ஒருவன் எதைச் செய்தாலும் பெண்களுக்கு நிறைவளிக்கிறது.
ஆயினும் நான் அவரை பொருட்படுத்தவில்லை. திரௌபதியின் பொருட்டு மேலும் வஞ்சத்தை திரட்டிக்கொண்டேன். அவையில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கீழ்மைக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்கக் கூடாதென்று எண்ணினேன். படை கிளம்பும்போது என்னிடம் விடைபெற்றுக்கொள்ள அவர் வரவில்லை. அவர் கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு வந்தது. என்னைத் தேடி வருகிறாரா என்று நான் எதிர்பார்த்தேன். படைகள் முற்றத்தில் ஒருங்கிக்கொண்டிருந்தபோதுதான் என்னிடம் விடைசொல்லாமலே அவர் கிளம்பிச்செல்கிறார் என்று உணர்ந்தேன். ஆகவே நானே கிளம்பிச்சென்று அவருடைய அறையில் அவரை பார்த்தேன்.
நான் செல்கையில் கவசங்கள் அணிந்து இறுதியாக மது அருந்திக்கொண்டிருந்தார். ஏவலனிடம் என் வருகையை அறிவித்தபோது அவன் திகைப்பினை கண்டேன். அவன் உள்ளே சென்று வந்து நான் உள்ளே செல்லலாம் என்பதை வணங்கி அறிவித்தான். நான் உள்ளே சென்றபோது கையில் மதுக்கோப்பையுடன் உறுத்து விழித்தபடி அசையாது அமர்ந்திருந்தார். “போருக்குச் செல்கிறீர்கள் போலும்?” என்று கேட்டேன். அவர் மறுமொழி சொல்லவில்லை. “என் வாழ்த்தை சொல்வதற்காக வந்தேன்” என்றேன். அப்போதும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவருடன் இருந்த தளபதிகளும் அமைச்சர்களும் வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் நோக்குகிறார்கள் என்பதனாலேயே நான் மேலும் சீற்றம்கொண்டேன். ஒரு வன்முறையை நிகழ்த்துவதற்கு முன் உள்ளம் அடையும் குவிதலை எண்ணுகையில் அச்சமே ஏற்படுகிறது. அவர் முன் கைநீட்டியபடி உரத்த பதறும் குரலில் “சிந்துநாட்டின் அரசி என்ற முறையில் செல்க வெற்றி கொள்க என்று வாழ்த்துகிறேன். ஆனால் அன்னையென்றும் பெண்ணென்றும் இப்போரில் அவள் வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவளுக்கு இழைக்கப்பட்ட நெறியின்மை ஈடு செய்யப்படவேண்டும். அதன் பொருட்டு அக்களத்தில் நீங்கள் நெஞ்சு பிளந்து விழுந்தால் அதுவே தெய்வ ஆணை என்று கருதுவேன். அவ்வாறே ஆகுக!” என்றபின் திரும்பி வந்துவிட்டேன்.
உப்பரிகையில் ஏறும்போது நரம்புகள் தளர்ந்திருந்தேன். வஞ்சத்தின் பொருட்டு ஒன்றை செய்துவிட்டால் நம் உள்ளம் குற்ற உணர்வும் தன்னிரக்கமும் கொண்டு அலைபாய்கிறது. நம் மீதே நாம் சீற்றம் கொள்கிறோம். அச்சீற்றத்தை எவர் மீதேனும் காட்ட விரும்புகிறோம். நான் அகம் எரிந்துகொண்டிருந்தேன். சேடியரை, ஏவலரை வசைபாடினேன். உப்பரிகையிலிருந்து கீழே பாய்ந்துவிடவேண்டும் என்ற உள உந்துதலை முழு விசையாலும் தடுக்கவேண்டியிருந்தது. அவர் உளம் உடைந்துவிட்டிருப்பார் என்று தெரிந்தது. அச்சொற்களை கூறியே ஆகவேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் உரைத்திருக்கலாம். ஆனால் எவ்வாறு உரைத்திருந்தாலும் என்னுடைய அந்த எரிச்சலிலிருந்து என்னால் தப்ப முடியாது. கீழே கொம்பொலியும் முரசொலியும் கேட்டன. உப்பரிகை விளிம்பில் நின்று முற்றத்தில் இருந்து அவர்கள் போர்க்களத்துக்குக் கிளம்புவதை பார்த்தேன். என் நெஞ்சு படபடத்தது.
அவர் எந்நிலையில் இருப்பார்? அவர் உளம்கொதித்துக்கொண்டிருப்பார். அத்துடன் எவ்வண்ணமோ அறிந்திருப்பார், என்னுடையது திரௌபதிக்கான வஞ்சம் மட்டும் அல்ல. அது என் எரிச்சலும்கூட. ஏனென்றறியாத எரிச்சல் அது. அவரை மணந்த நாள் முதல் என்னுடன் இருப்பது. அது ஏன் என என் ஆழத்தில் நான் அறிவேன். ஒருபோதும் அதை நான் சொல்லிக்கொள்ள மாட்டேன். என் அகத்திலிருந்து அதை எடுக்கவே மாட்டேன். அங்கே நான் நின்றிருந்தபோது உள்ளங்கால் வியர்த்து வழுக்கி விழுவேன் எனத் தோன்றியது. கனவில் என நனவில் நின்றிருக்கும் சில தருணங்கள் உண்டு அல்லவா?
உள்ளிருந்து படைத்தலைவர்கள் சூழ அவர் இறங்கி வந்தார். தலைக்கவசத்தை கையில் வைத்திருந்தார். சிரித்துப் பேசி கூச்சலிட்டு கைவீசி வாழ்த்திய பின்னர் தேரில் ஏறிக்கொண்டார். அவரைச் சூழ்ந்து அவருடைய வீரர்கள் சென்றனர். வாழ்த்தொலி எழுப்பி கூச்சலிட்டபடி ஒவ்வொருவரும் களியுவகையில் நிலைமறந்திருந்தனர். போருக்குக் கிளம்புபவர்கள் பெரும் திருவிழாவொன்றுக்காக எழுபவர்கள்போல் தோன்றுகிறார்கள். அவர்கள் காத்திருந்த கணம். புகழும் விண்ணுலகும் அணுகும் தருணம். மட்டுமல்ல, அவர்களின் ஆணவமும் மீறல்களும் தெய்வங்களால் பொறுத்தருளப்படும் பொழுது. ஆயினும் அவருடைய அந்த உவகைக் கொப்பளிப்பு விந்தையாக இருந்தது. அது ஒரு நடிப்பென்று எனக்கு தோன்றியது.
நான் வெறித்து நோக்கியபடி நின்றிருந்தேன். தேர் அகன்று படைகள் கண்ணிலிருந்து மறைந்த பின்னரும் கால் தளர்ந்து அமர்ந்து நெடுநேரம் அங்கு இருந்தேன். பின்னர் எழுந்து அறைக்குச் சென்றபோது என் உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது. ஒன்றை நான் அப்போது உணர்ந்தேன், அவர் நடிக்கவில்லை. மெய்யாகவே உவகையில் இருக்கிறார். தன்னை அழுத்திய ஒன்றிலிருந்து விடுபட்டவர்போல் இருக்கிறார். எனில் அவர் இதுவரை ஆழ்ந்த குற்றஉணர்ச்சி கொண்டிருந்தாரா? அனைத்துத் தீங்குகளையும் அக்குற்றஉணர்ச்சியிலிருந்தே செய்திருக்கிறார் போலும். தனக்கு தண்டனை வேண்டுமென்று அவரது அகம் தவித்துக்கொண்டிருக்கிறது. நான் பழிச்சொற்களை உரைத்ததும் தனக்குரிய தண்டனையை பெற்றுவிட்டதைப்போல, அதனூடாக அதுவரைக்கும் இருந்த அனைத்துக் குற்றவுணர்விலிருந்தும் விடுபட்டவர்போல் ஆகிவிட்டிருக்கிறார். அதையே அவர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.
என் உள்ளம் இரங்கிக்கொண்டே இருந்தது. அவர் உள்ளத்தில் அவ்வாறு ஒரு நல்லியல்பு குடிகொண்டிருந்ததை நான் உணர்ந்திருந்தேனா? அதை அடையாளம் கண்டு எவ்வகையிலேனும் அதை வளர்க்க முயன்றிருக்கிறேனா? என்னை வெல்வதற்கே அவர் எப்போதும் முயன்றிருக்கிறார். நான் அழகி அல்ல. ஆனால் பெருங்காதலனைப்போல காலடியில் கிடந்திருக்கிறார். அவரை நான் ஒரு பொருட்டென எண்ணியதில்லை. என் உள்ளத்தில் நிலைகொண்டிருந்தவர் வேறு ஒருவர். இரு மைந்தரை பெற்றெடுக்கும் வரை கூட என் உள்ளத்தில் அவர் இருந்தார். காமத்திலாடும்போது ஒருகணமேனும் அவர் நினைவு வந்து செல்லாமல் இருந்ததில்லை. என் குழந்தைகளின் முகங்களை கூர்ந்து பார்க்கும்போதுகூட அவர் சாயல் வந்து போவதுபோல் தோன்றும்.
சம்வகை திடுக்கிட்டாள். சுரதனை நிமிர்ந்து பார்த்தாள். சுகதனின் விழிகளை நோக்கியபடி “அரசி” என்றாள். ”ஆம், அவர்கள் அறியட்டும்… நான் அவர்களிடமே இப்போது பேசமுடியும். மண்நீத்தவரிடம் ஒரு சொல்லும் இனி உரைக்க முடியாது” என்று துச்சளை சொன்னாள். “என் உள்ளம் முழுக்க தான் இல்லையென்பதை என் கணவர் அறிந்திருந்தார். அது அவரை எங்கோ உறுத்திக்கொண்டிருந்தது. ஏமாற்றமும் சலிப்பும் அடையச்செய்திருக்கிறது. ஆண்மகன் அதை தெளிவாக உணர முடியும். தான் காதல்கொண்ட பெண்ணிடம் இன்னும் தெளிவாக உணர முடியும். அது ஒரு சாவு அவனுக்கு.”
ஆனால் அதன் பொருட்டு அவர் என்னிடம் வஞ்சம் கொள்ளவில்லை. முற்றிலும் வெல்லவே முயன்றார். அவர் முயலும்தோறும் நான் அவரிடமிருந்து அகன்று அகன்று சென்றேன். அவரை வெறுப்பதற்கான ஏதுக்களை எங்கும் திரட்டிக்கொண்டேன். அவரை வெறுப்பதற்கு என்னை அஸ்தினபுரியின் இளவரசி என்னும் நிலையிலேயே நிறுத்திக்கொண்டேன். இன்று எண்ணுகையில் நான் திருதராஷ்டிரரின் மகளென்றும், துரியோதனனின் தங்கையென்றும், நூற்றுவரின் உடன்பிறந்தாளென்றும் என்னை உணராத ஒருகணமும் இருக்கவில்லை என அறிகிறேன். நாடுகளுக்கும் குடிகளுக்கும் மேலெழுந்த பேரரசி என்றே என்னை கற்பனை செய்துகொண்டிருக்கிறேன்.
அன்னை என அரவணைப்பவள் என என்னைப்பற்றி சொல்கிறார்கள். அவ்விரிவு நான் கொண்ட நிமிர்விலிருந்து எழுந்தது. பேரன்னைகள் பேரளியிலிருந்து பிறக்கமுடியும். பேராணவத்திலிருந்தும் எழமுடியும். அவ்வாறு அன்றி எளிய பெண்ணாக இருந்திருந்தால் என் கணவரின் நல்லியல்பை புரிந்துகொண்டிருப்பேன். அவரை மேலும் அணுகியிருப்பேன். அவரை வென்று எனக்கு இனியவராக ஆக்கிக்கொண்டிருக்கவும் கூடும். என் ஆணவத்தால் அவரை விலக்கி, தீயவராக்கி, அதன்பொருட்டே அவரை வெறுத்து, இறுதியில் தீச்சொல்லிட்டு களத்திற்கு அனுப்பினேன். அதை எண்ணி எண்ணி நாளும் ஏங்கிக்கொண்டிருந்தேன்.
போர்க்களத்தில் அவர் கொல்லப்படுவாரென்பதில் எனக்கு எந்த ஐயமும் இருக்கவில்லை. ஏனெனில் அவர் எதிர்த்து போர்புரியச் செல்வது இளைய யாதவரை. மண்ணிலெழுந்த தெய்வம் அவர் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. நெஞ்சு பிளந்து அவர் களத்தில் விழுவார். அச்செய்திக்காகவே ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன். அதை நூறு முறை உள்ளத்தில் நடித்துவிட்டிருந்தமையால் மெய்யாக அச்செய்தி வந்தபோது எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. முதலில் ஏற்பட்டது ஒரு சொல்லின்மை. பாவைபோல் அமைச்சர்கள் கூறிய அனைத்தையும் செய்தேன். அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின்னர், இனி அவர் முற்றிலும் இல்லை என்றான போதுதான் நானும் எஞ்சா நிலையை உணர்ந்தேன்.
அவ்வெறுமையை துயரென்று எண்ணி என் அறைக்குள் அடைந்துகிடந்தேன். ஓரிரு நாட்களிலேயே முதுமை கொண்டேன். உயிர் வாழும் பொருட்டு என் மைந்தரை பற்றிக்கொண்டேன். போர் முடிந்த பிறகு உருவான அரசியல்சூழ்ச்சிகள் ஒருவகையில் நன்மை செய்தன. இப்புவியில் வாழ்வை பற்றிக்கொள்வதற்கான உளவிசைகளை அவை அளித்தன. என் மைந்தரின் பொருட்டு களமாடி, சொல்லாடி ஒவ்வொரு நாளும் சலித்து, வஞ்சம்கொண்டு, சொல் திரட்டியபடி துயிலச்சென்று, புதிய திட்டங்களுடன் கண் விழித்து, பகலென்றும் இரவென்றும் அதில் அளாவி, அவற்றினூடாக அவர் நினைவைக் கடந்து, நெடுந்தொலைவுக்கு வந்தேன். ஆனால் நகர்விட்டு நீங்குகையில், பிறர் என்னை மணம்கொள்ளக் கோருகையில்தான் ஒன்றை உணர்ந்தேன். நான் சிந்துநாட்டு ஜயத்ரதனின் துணைவி என்னும் பெருமிதத்தையும் கொண்டிருக்கிறேன். அவரை நான் உள்ளூர விரும்பியிருக்கிறேன். அவ்விடத்தில் பிறிதொருவரையும் வைக்கவே என்னால் இயலாது.
ஒருவன் என்னிடம் தன்னை மணங்கொள்ளும்படி கேட்கும்போதே அவன் எப்படி தன்னை ஜயத்ரதனுக்கு நிகராக வைக்கலாம் என்ற பெரும் சீற்றத்தை அடைகிறேன். அருவருப்பில் உடல் உலுக்கிக்கொள்ள அத்தூதை இகழ்ந்து ஒதுக்குகிறேன். அது உருவாக்கும் கசப்பு என்னிலிருந்து விலக நெடும்பொழுதாகிறது. என் பொருட்டு ஜயத்ரதனை தனக்கு இணையானவன் என்று ஒருவன் எண்ணுகிறான் என்பதையே என்னால் தாள இயலவில்லை. எனக்கு வேறு வழியில்லை. வேறெங்கும் என்னால் செல்ல இயலாது. நான் சிறைகொள்ளப்படலாம். எனக்கு இந்நகரே காப்பு. ஆகவேதான் அஸ்தினபுரிக்கு வந்தேன்.
இந்நகரை நெருங்குவது வரை ஒவ்வொரு முன்னடிக்கும் அரைப் பின்னடி வைத்துக்கொண்டிருந்தது என் உள்ளம். நீ எனக்களித்த அரசமுறையான வரவேற்புதான் என்னை முதல் முறையாக உளம் மலரச்செய்தது. என் நிலத்திற்கு வந்துவிட்டேன் எனும் உணர்வை அளித்தது. இந்நகர் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. இதன் சுவர்கள் கருமை அகன்று வெண்மை நிறம் கொண்டிருந்தது எனக்கு முதலில் திகைப்பை அளித்தது. பிறிதொரு நகரத்திற்கு வந்துவிட்டேனா என்று எண்ணினேன். இதன் மாளிகைகள் அனைத்தும் மாறிவிட்டிருந்தன. தெருக்களும் வண்ணங்களும் மாறிவிட்டிருந்தன. இந்த அரண்மனை முற்றிலும் புதிய ஒன்றுபோல் தோன்றியது.
“ஆனால் இம்மாற்றங்கள் எனக்கு உவகையையும் அளித்தன. அந்தப் பழைய நகருக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அந்நகரில் நிறைந்திருந்த பழைய நினைவுகள் என்னை இங்கு சூழாதென்று தோன்றுகிறது. இங்கென் தமையர்கள் இல்லை. தந்தையர் இல்லை. இது எனக்கென எவரோ கட்டியளித்த புது நகரம். பிறந்தவீட்டிற்குத் திரும்ப விரும்பும் எந்தப் பெண்ணும் இளமையின் நினைவுகளில் ஆட விரும்புவாள். இது நான் பிறந்து வளர்ந்த நகர் அல்ல. ஆனால் அதன் சாயல் கொண்டது. என்னிடம் எஞ்சும் நினைவுகளை கொண்டுவந்து இங்கே வைத்து நான் விளையாட முடியும். நான் இங்கு என் இளமையின் நினைவுகளில் ஒரு துளியுமில்லாமல் வாழ விரும்புகிறேன்.”
அவள் அனைத்தையும் சொல்லிவிட்டது போலிருந்தது. ஆனால் சொல்லவேண்டியவை அவை அல்ல என்பதும் தெரிந்தது. உணர்வுகளினூடாக அடித்துச்செல்லப்பட்டு வந்தடைந்த இடம் அது. ஆனால் அவ்வகையில் உணர்வுகளினூடாகச் செல்வதில் பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஓர் உணர்வுநிலை, அது எதுவாக இருந்தாலும், ஒருவகை நடிப்பே. நடிப்பு எதுவானாலும் மிகையே. மிகை எதுவானாலும் கூர்கொண்டதே. உணர்வெழுச்சிகளை அடைபவர்கள் அவற்றை அடையும் தன்னை அவ்வுணர்ச்சிகளுக்கேற்ப புனைந்துகொள்கிறார்கள். அந்த ஆளுமை ஒத்திசைவுடன் திரண்டு நின்றிருக்கையில் அனைத்தையும் அதுவே பார்த்துக்கொள்ளும். அது முதற்சேடன் என பல்லாயிரம் நா கொண்டது.
தன் வாழ்வின் ஒரு முதன்மைத் தருணம் இது என சம்வகை எண்ணிக்கொண்டாள். சூழ்ச்சிக்காரர்களை, அரசநெறியாளர்களை எதிர்கொள்வதைப் போன்றது அல்ல இது. அவர்களின் அலைகளுக்கு அடியில் அசையாப் பாறை உள்ளது. அலை கடந்துசென்று அதைத் தொட்டால் போதும், அவர்களை மதிப்பிட்டுவிடலாம். இவள் கள்ளமற்றவள், ஆகவே அலைகளே ஆளுமையென்றானவள். கணந்தோறும் இயல்பாக நிகழ்பவள். இவளை மதிப்பிடவோ வகுக்கவோ இயலாது. அதற்கு பலநூறு களங்களில் இவளை வகுத்து ஒரு ஊடுபொதுவை கண்டடையவேண்டும். அல்லது இத்தருணத்தில் இவ்வண்ணம் இவளை அடையாளப்படுத்த வேண்டும். ஒற்றைக் கற்சிற்பத்தில் தெய்வத்தை நிலைகொள்ளச் செய்வதைப்போல.
தன்னை புனைந்துகொண்டுவிட்டிருக்கிறாள். முழுமையாக அதை நம்புகிறாள். இனி தன் இலக்கை சென்றடைவாள். அந்த உணர்வின் விசையாலேயே சொற்களை கண்டடைவாள். வழியை சமைப்பாள். அவள் சொல்லவில்லை அதை, அங்கே அத்தருணத்தில் எழுந்த உணர்வுருவான அவளின் பாவை அதை சொல்லப்போகிறது. தன்னுள் இருந்து ஆழத்துளி ஒன்றை வெளியே எடுத்ததுகூட தன் திறந்த தன்மையை, தடையின்மையை தனக்குத்தானே சொல்லிக்கொள்ளத்தான். உள்ளத்தை கீறி வைக்கிறோம் என்னும் பாவனை. உள்ளத்தை கீறி வைக்கவுமில்லை. அந்தப் பெயரை அவள் சொல்லவுமில்லை. மைந்தர் முன் அவளால் அதை சொல்லவும் முடியாது. சம்வகை அகத்தே புன்னகைத்துக்கொண்டாள்.