களிற்றியானை நிரை - 35
பகுதி நான்கு : அன்னையெழுகை – 7
இந்திரப்பிரஸ்தத்தில் தன் அரண்மனை அறையில் யுயுத்ஸு ஆடியின் முன் நின்று ஆடைகளை சீர்படுத்திக்கொண்டான். அவனே தன் ஆடைகளை அணிந்திருந்தான். பிறர் உதவியின்றி அணியாடைகளை அணிவது அவனுக்கு பழகியிருக்கவில்லை. அஸ்தினபுரியில் அதற்கென்றே அணிஏவலர்கள் குடிமரபாக பயின்றுவந்திருந்தார்கள். அவர்களின் கலை நூலாக யாக்கப்பட்டு மரபாக கற்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் அதற்கான நெறிகள் இருந்தன. நாகபட கணையாழியை நீள்விரலில் அணிவித்தமைக்காகவே ஓர் அணியேவலர் சிறைப்படுத்தப்பட்டார் என்னும் செய்தியை அவன் இளமையில் கேட்டிருந்தான்.
குடித்தலைவர்களுக்கும் வணிகர்களுக்கும் அணியேவலர் இருந்தனர். அரசகுடியினருக்கு அணியேவல் செய்வது அவற்றில் முதிர்நிலை. அணியேவலர்களிலேயே ஐந்து பிரிவினர் இருந்தனர். ஆடைகளையும் அணிகளையும் தேர்ந்து அணிவிப்பவர்கள் அவர்களில் கடைநிலையினர். நீராட்டறை அணியேவலர் மேலும் உயர்ந்தவர்கள். ஒப்பனையாளர்கள் மேலும் தேர்ச்சி தேவையானவர்கள். அவைக்கும் விழவுகளுக்கும் நகர்வலத்திற்கும் உரிய அணிகளை அணிவிப்பவர்கள் பன்னிரு ஆண்டுகள் பயின்று பன்னிரு ஆண்டுகள் பணியாற்றி தேர்ச்சி பெற்றவர்கள். அருமணிகள் தேர்பவர்களே அவர்களின் முதன்மையானவர்கள். ஆடை தைப்பவர்கள், பொற்கொல்லர்கள், நறுஞ்சுண்ணமும் சந்தனமும் இடிப்பவர்கள், தூபக்காவலர்கள் முற்றிலும் வேறு வகுப்பினர். அவர்களை அணியேவலர் தங்களவர் என்பதில்லை. அணிமருத்துவம் செய்பவர்கள் மருத்துவர்களில் ஒரு துணைப்பிரிவினர்.
அவர்களுக்கிடையேயான உறவு சிக்கலானது. எப்போதும் இணைந்தே பணியாற்றவேண்டியவர்கள் எப்போதும் போட்டியிலேயே இருப்பார்கள். அந்தப் போட்டியே அவர்களின் திறனையும் தனித்தன்மையையும் நிலைநிறுத்தி தொடர்ந்து மேம்படுத்துகிறது என்று அவனுக்கு சொல்லப்பட்டதுண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை வேறுபடுத்திக்காட்ட அடையாளங்களை அணிந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக அவர்கள் அனைவரும் ஒன்றே என்று காட்டும் அடையாளங்களை கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரிலுமே சற்று பெண்மையின் சாயல் இருந்தது.
அவன் அப்பெண்மையின் சாயல் எங்கிருந்து வருவது என்று எண்ணிக்கொண்டான். அணிகளே பெண்மை கொண்டவை போலும். நெளிபவை, குழைபவை, சிரிப்பவை, ஒளிர்பவை. எல்லா நகையிலும் சற்றே நாணம் கலந்திருக்கிறது. எல்லா ஆடைகளிலும் சற்றே சஞ்சலம் அமைந்திருக்கிறது. அணிகொள்கையில் ஆண்கள் தங்கள் கடுமையை, திமிர்ப்பை, மிதப்பை இழந்து மென்மைகொள்கிறார்கள். அணிகொண்ட யானை ஓர் அருநகை என ஆகிவிடுகிறது. அணிகொண்டு அரியணை அமரும் அரசன் மேலும் அணுக்கமானவனாக, கனிந்தவனாக தோன்றுகிறான். அணிநிறைந்த பெண் அன்னையென்றே தோன்றுகிறாள். முழுதணிக்கோலத்தில் எவரும் கூச்சலிடுவதில்லை. அப்போது எழும் ஆணைகள்கூட முழங்குவதில்லை.
ஆடி முன் அமர்ந்து அவன் தன்னை நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொன்றும் முறையாக அமைந்திருக்கிறதா என்பதை திரும்பத் திரும்ப பார்த்தான். கணையாழிகள் இடம் மாறி இருக்கின்றனவா? ஆரங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றென அமைந்துள்ளனவா? காதில் ஒரு குழை சற்று பெரிதாக இருக்கிறதா? இடம் மாறிவிட்டால் கணையாழிகள் கழன்றுவரும். விரல்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளும். அடுக்கமையா ஆரங்கள் பின்னிக்கொண்டு உடலை உறுத்தும். ஒருமுறை புரண்டுவிட்டால் அவை புரண்டபடியே இருக்கும். அடுக்கு குலைந்த ஆரங்கள் அழகை இழந்துவிடுகின்றன. வெறும் மஞ்சள் கொத்தென மணித்தொகையென ஆகிவிடுகின்றன. அவற்றில் ஒவ்வொன்றிலும் இருக்கும் செதுக்கும் நுணுக்கமும் பொருளிழந்து ஒத்திசையாத குவியல்களாக தோன்றுகின்றன.
அவனுக்காக அறைவாயிலில் ஏவற்பெண்டு காத்து நின்றிருந்தாள். அவள் எளிய சேடியாக இருந்து காவலுக்கு வந்தவள். கண்முன் அவ்வண்ணம் வந்து காத்திருக்கக்கூடாது என அறியாதவள். அவன் ஆடியிலே அவள் நிற்பதை பார்த்தபின் எழுந்துகொண்டு “செல்வோம்” என்றான். தலைவணங்கி அவள் திரும்பிய பின்னர் மீண்டும் ஆடியைப் பார்த்து மேலாடையின் மடிப்புகளை சீரமைத்தான். அவள் மீண்டும் நின்று திரும்பிப்பார்க்க “செல்க!” என்று கையசைத்தபின் குறடுகள் ஒலிக்க அவளுக்குப் பின்னால் நடந்தான். அவனுடைய உருவம் இடைநாழியிலிருந்த மென்பரப்புகளில் தோன்றி மறைந்தது. கிடையான எல்லா பரப்புகளிலும் அவன் தூசுப்படலத்தை பார்த்தான். சில திரைச்சீலைகள் கதவில் சிக்கி படபடத்தன. சில கிழிந்திருந்தன.
அஸ்தினபுரியின் அரண்மனையைவிட பலமடங்கு அகன்றும் உயரமாகவும் இருந்த இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனை வெட்டவெளியில் நிற்கும் உணர்வை அளித்தபடியே இருந்தது. அதன் சுவர்களும் தூண்களும் அவற்றின் பேரளவினாலேயே அங்கிலாதவைபோல் விழிகளிலிருந்து அகன்றுவிட்டிருந்தன. வந்தது முதல் அத்தனை பெரிய அரண்மனையின் அறைகளில் தடுமாறி சுவர்களிலும் தூண்களிலும் அவன் முட்டிக்கொண்டிருந்தான். சாளரக்கதவுகளை இழுத்து மூடும்பொருட்டு அமைக்கப்பட்ட பித்தளை கைப்பிடிகளை அவனால் சுழற்ற முடியவில்லை. அவை நெடுங்காலமாக இறுகியிருந்தன. ஆகவே அறைக்குள் யமுனையிலிருந்து வந்த காற்று பொங்கிப் பெருகி சுழன்று அனைத்து திரைச்சீலைகளையும் அலைகொள்ள வைத்தது. அவன் அரைத்துயிலில் பாய்கள் புடைத்து விம்மும் படகொன்றில் படுத்திருப்பதாக உணர்ந்தான்.
அவனுடைய அறை அவன் வந்து தங்கும் பொருட்டு விரைவாக தூய்மை செய்யப்பட்டிருந்தது. ஆயினும் அதன் சுவர் மடிப்புகளிலும் பொருட்களுக்கு அடியிலும் புழுதிப் படிவுகள் இருந்தன. அதை தூய்மை செய்தவர்கள் முதியவர்களாக இருக்கலாம். முதியவர்கள் எங்கும் முட்டிக்கொள்ளாமலிருக்க எப்போதும் நடுவிலேயே நடமாடுகிறார்கள். மெல்லமெல்ல மூலைகள் அவர்களின் நோக்கிலிருந்தே மறைந்துவிடுகின்றன. அவன் அறையின் ஒரு மூலையில் அவ்வறையை தூய்மை செய்ய பயன்படுத்தப்பட்ட துணிச்சுருள் கிடந்தது. அவன் அறையிலிருந்த பெரிய ஆடி துடைக்கப்பட்டிருந்தாலும் அதன் மேல் பகுதியில் புழுதி ஈரத்துடன் அலையாக படிந்திருந்தது. மஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த மரவுரிகளும் போர்வைகளும் தலையணைகள் அனைத்துமே புதியவை. ஆனால் அனைத்திலும் புழுதி மணம் இருந்தது. முதியவர்களின் கைகளில் நடுக்கை அத்தனை பணிகளின் பதிவுகளிலும் காணமுடிந்தது.
முந்தைய நாள் இரவு அங்கு வந்து சேர்ந்தபோது அந்த அரண்மனையின் அகன்ற தோற்றம் அச்சத்தைதான் அளித்தது. மீண்டும் அவன் கதைகளில் படித்திருந்த அசுரப்பெரு நகரங்கள் நினைவில் எழுந்தன. அச்சமே கோட்டைகளாகின்றன, ஆணவமே அரண்மனைகள். அசுரர்கள் தங்கள் கோட்டைகளையும் அரண்மனைகளையும் மேலும் மேலுமென எழுப்புபவர்கள். மலைகளைப்போல, முகில் நகரங்களைப்போல. முந்தையோர் அவ்வண்ணம் பேருருவங்களை எழுப்பவில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உரிய அளவில்தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டுமென்று அவர்கள் நம்பினர். ஆமைக்கு ஓடென அமைக கோட்டைகள். நத்தைக்கு கூடென அமைக இல்லங்கள் என்பது பாரத்வாஜ நீதி. அஸ்தினபுரி அவ்வுணர்வால் கட்டப்பட்டது. அதைவிட தொல்நகரங்கள் அதைவிடவும் சிறியவை.
அச்சமோ ஆணவமோ மிகையாகி அதன் பொருட்டு கட்டப்பட்ட எந்த மாளிகையையும் தெய்வங்கள் வாழ விடுவதில்லை என்று அவன் கேட்டிருந்தான். தேவையான அளவிற்கு மேல் கட்டப்படுமென்றால் தங்களுக்குரியவை அவை என தெய்வங்கள் எண்ணும். அவை அங்கே குடியேறத் தொடங்கும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் உரியவை, ஒவ்வொரு வடிவத்திற்கும் உரியவை. தெய்வங்கள் வாழுமிடத்தில் மானுடர் இயல்பாக வாழமுடியாது. ஒளிரும் நீர்ப்பரப்புகளில், மலர்சூழ் காடுகளில், மலையுச்சிகளில், விளைநிலங்களில் தெய்வங்கள் உறைகின்றன. குடிமானுடர் அங்கே சென்று மீளலாம். அங்கே குடியிருக்க முடியாது. அங்கே தெய்வங்களுக்குரிய உணர்வுகளே எழமுடியும். விழைவுசினம்பகை என உள்ளம் பெருக முடியாது. அவ்வுணர்வுகள் இல்லாமல் உலகியலில் அமைய முடியாது. அவை தெய்வங்களுக்குரிய இடங்கள். காமமும், சினமும், பகையும் நுரைக்கும் இல்லங்களே மானுடர்க்குரியவை.
ஆகவே மானுடர் வாழுமிடத்தில் இயல்பாக உறைபவை இருள்தெய்வங்களே. மூத்தவளே மானுடருக்கு உறுத்தாத தோழி. இல்லம் எத்தனை தூய்மைப்படுத்தப்பட்டாலும் எத்தனை மங்கலம் கொண்டாலும் துளியாகவேனும் அவள் இருப்பாள். மானுடரின் உடலில் நகமாக, முடியாக, எச்சிலாக திகழ்பவள். வசைச்சொல்லாக துயரமுனகலாக வெளிப்படுபவள். பகலில் நிழலாக, இரவில் இருளாக நிறைபவள். காற்றில் தூசியாக எழுந்து பரவிக்கொண்டே இருப்பவள். இல்லங்களில் மூத்தவள் சற்றேனும் இருப்பதே நன்று. மூத்தவள் இருக்கும் இடத்தில் இளையவளும் குடிகொள்வாள். அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைப்பவர்கள். மூத்தவள் சற்றுமில்லாத இடத்தில் இளையவள் நீங்குவாள். அங்கே தெய்வங்கள் குடியேறிவிடுகின்றன. தெய்வங்கள் நிறைவடிவுகள். நாழிக்குள் நாழி நுழைவதில்லை, முழுமை முழுமையை உட்கொள்வதில்லை. எனவே அவர்களுக்கிடையே பூசல் உருவாகத் தொடங்கும். அதன் பின் அங்கு மனிதர்கள் வாழ இயலாது.
இந்திரப்பிரஸ்தம் அதன் முழுமைத்தருணத்தில் இருளற்றதாக இருந்திருக்கும் என அவன் எண்ணிக்கொண்டான். ஒரு சிறு கலைக்குறைபாடுகூட இல்லாதது. ஒரு மூலையில்கூட இருள்தெய்வங்கள் குடிகொள்ளாதது. ஆகவே தன் முழுமையை அடைந்த கணம் முதல் அது மெல்ல சரியத்தொடங்கியது. பேருருவங்கள் சரிவதை நாம் அறியமுடியாது, அவை நம் கண்களுக்கு அப்பாற்பட்டவை. உருள்பொட்டல் நிகழ்வது வரை மலை நிலையாக இருக்கிறதென்றே நம்புவோம். இந்நகரம் இதில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அயன்மையையே அளித்திருக்கும். இதற்குள் அவர்கள் தங்கள் சிறுவளைகளை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்திருப்பார்கள். இதை எவரும் தங்களுடையதென எண்ணவில்லை. ஒவ்வொருவரும் இதிலிருந்து தப்பியோடவே எண்ணினார்கள்.
ஒருபோதும் இந்த அரண்மனை இந்தப் புதைவிலிருந்து மீளப்போவதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. இது ஒரு மாய நகரம். விந்தையான ஆற்றல் ஒன்றை பெற்ற ஒருவர் தன் கனவிலிருக்கும் ஒன்றை நனவாக மாற்றிக்கொண்டது. ஆகவே குறுகிய காலம் மட்டுமே இப்புவியில் இது இருக்கும். இச்சுவர்கள் ஒளிப்படலமென மறையும். இத்தூண்கள் நோக்கியிருக்கவே இல்லாமலாகும். இந்நகரம் நுரைக்குமிழிகள் வெடித்து மறைவதுபோல் விழியிலிருந்து அகலும். இங்கு எஞ்சியிருக்கப்போவது இந்நகரின் உச்சியிலிருக்கும் இந்திரனின் ஆலயம் மட்டுமே. ஏனெனில் ஆலயத்தை தெய்வங்கள் கைவிடுவதில்லை.
அந்நகரை எழுப்புவதற்கான பெரும் உழைப்பை, அதை அமைத்த சிற்பிகளின் தவத்தை அவன் எண்ணிக்கொண்டான். அது ஒரு பெரும்பழியின் கல்வடிவத் தோற்றமா என்ன? அவள் கனவில் முதிரா இளமையில் அது முளைத்தது. இளையோர் கனவில்தான் அத்தகைய பேருருக்கள் எழுகின்றன. மதலைகள் தெய்வங்கள், சிறுவர்களாகும்போது அவர்கள் அசுரர்கள் என்பது தொல்லுரை. இந்திரப்பிரஸ்தம் எழுப்பப்பட்டிருக்கவில்லையெனில் ஒருவேளை குருக்ஷேத்ரப் போர் நிகழாமலிருந்திருக்கக்கூடும். அந்நகரம் ஒவ்வொருவர் நோக்கையும் கவர்ந்தது. அமைதியிழக்கச் செய்தது. அறைகூவும்பொருட்டு சுருட்டித் தூக்கப்பட்ட கைச்சுருள் என அது பாரதவர்ஷத்தில் எழுந்தது. ஒவ்வொரு அரசரும் அதை தங்களுக்கு எதிரான போர்விளி என எடுத்துக்கொண்டனர்.
இந்திரப்பிரஸ்தமே அத்தனை ஷத்ரியர்களும் துரியோதனனைச் சென்றுசேரச் செய்தது. அவர்கள் சூழ்ந்தமையால் அவன் ஆணவமும் நம்பிக்கையும் கொண்டான். தெய்வமென எழுந்துவந்த இளைய யாதவரின் பேருருவைக் காணும் கண்ணில்லாதவனானான். இந்நகரை உருவாக்கும் எண்ணம் எப்போது அவளில் எழுந்ததோ அப்போதே தெய்வங்கள் முடிவெடுத்துவிட்டன இம்மண்ணில் ஒரு மாபெரும் போர் நிகழவேண்டும் என்று. அவளோ இந்நகரை தன் கருவறை வாழ்விலேயே கனவுகண்டுவிட்டாள். அதன்பொருட்டே அவள் மண்ணில் பிறந்தாள். அவன் எந்தத் தொடர்பும் இல்லாமல் துவாரகையை எண்ணிக்கொண்டான். அந்நகர் பற்றி வரும் செய்திகளும் உகந்தவை அல்ல. அங்கும் பெருமாளிகைகள் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன. மலையுச்சிகளில் அசுரர்கள் முன்பு குடியிருந்து கைவிட்டுச்சென்ற குகைகள்போல இருண்டு கிடக்கின்றன அவை என்றது ஓர் ஒற்றுச்செய்தி.
இடைநாழியினூடாக நடக்கையில் பெரும்தூண்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி மத்தகம் எழுந்து செவிவீசி அணுகி வந்து அவனை கடந்து சென்றன. அவன் குறடுகளின் ஒலி ஒழிந்த இடைநாழியின் மடிப்புகளில் விம்மல்கள்போல எதிரொலித்தது. ஒவ்வொரு தூணுக்கு இடையிலும் புழுதி சேர்ந்திருந்தது. உச்சி வளைவுகளில் ஒட்டடைகள் தோரணம்போல் படிந்திருந்தன. நுரையென சுவர் மடிப்புகளில் செறிந்திருந்தன. சில இடங்களில் தூண்களுக்கு மேல் தாமரை மலர்வுகளில் புறாக்கள் அமர்ந்திருந்தன. அவற்றின் குறுகலோசை அத்தூண்களின் விந்தையான உறுமல்போல் ஒலித்தது. அம்மாளிகை மூங்கில்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டு உரசல் ஓசை எழுப்புவதுபோல ஒருகணம் உளம் மயங்கச் செய்தது. அல்லது கற்பாளை விரிசலிட்டுப் பிளக்கிறது. அவன் உடல் எச்சரிக்கையுணர்வு கொண்டு சிலிர்த்தது.
இல்லை, இந்நகர் அல்ல. இதுவல்ல அந்த முதல் குருதிப்புண். இதற்கு முன்னரே எழுந்துவிட்டது துவாரகை. அங்கிருந்து தொடங்குகிறது போர். அந்நகரின் அறைகூவலே இந்நகரை உருவாக்கியது. இது அதன் பேருருவப் போலி. அந்நகரை உருவாக்கியவன் உண்மையிலேயே பாரதவர்ஷத்தின் மேல் ஓர் அறைகூவலை விடுத்தான். மாகேந்திர மாயக்காரனைப்போல தன் இரு கைகளையும் விரித்து வெட்டவெளியில் ஒரு மாயப் பெருநகரை உருவாக்கிக்காட்டினான். எதன் பொருட்டெல்லாம் ஷத்ரியர் இங்கு பெருமை கொள்கிறார்களோ அவையனைத்தும் வெறும் கண்மாயங்களே என்பதை நிறுவியவன் அவன். அவன் தங்கள் அடித்தளங்களை நுரையென ஆக்குவதை அவர்கள் கண்டனர். மேலே மண் அகற்றப்படும்போது வளைகளுக்குள் பாம்புகள் அடையும் திகைப்பை அடைந்தனர். நீரூற்றப்பட்ட சிதல்புற்று எனப் பதறின அவர்களின் நகரங்கள். அவனிடமிருந்து தொடங்குகிறது இந்நகரும்.
அவன் இடைநாழிகளினூடாக திரும்பித் திரும்பி நடந்து மகளிர்க்கோட்டத்தை அடைந்தான். பிற அரண்மனைகளில் மகளிர்க்கோட்டங்கள் மைய அரண்மனையிலிருந்து தனியாகப் பிரிந்து அகன்று அமைந்திருக்கும். அங்கே செல்லும் நீண்ட இடைநாழியால் இணைக்கப்பட்டிருக்கும். பறக்கும் மாளிகை ஒன்றுக்கு படிக்கட்டில் செல்வது போலிருக்கும். அல்லது புதைந்த சிறைக்கு இறங்கி நுழைவதுபோல. எப்போதுமே அவை மைய அரண்மனையைவிட சற்று சிறிதாக, சிற்பங்களும் அணிகளும் குறைவானதாகவே இருக்கும். அஸ்தினபுரியின் மகளிர்க்கோட்டங்கள் அரண்மனையால் தூக்கி தோளில் சுமக்கப்படும் பேழைகள்போல் தோன்றுபவை. ஆனால் இந்திரப்பிரஸ்தத்தின் மகளிர்க்கோட்டம் அரண்மனைக்கு மேல் சூட்டப்பட்ட மகுடம்போல் இருந்தது. அதை நோக்கிச் செல்லும் பாதை பளிங்குப்படிகளாலான அரசப்பெருவீதி போலிருந்தது.
இருபுறமும் அணிவகுத்த வெண்பளிங்குத் தூண்களுக்கு மேல் பித்தளையாலான கவசமிடப்பட்ட தாமரைகள் கூரையை தாங்கியிருந்தன. சுதைச்சுவர் பரப்புகளில் மாபெரும் ஓவியங்கள் அந்தி வண்ணப் பெருக்கென, மலர்க்காடென பரவியிருந்தன. அவை அனைத்துமே போர்க்களக் காட்சிகள் என்பதை அவன் கண்டான். விருத்திரனை வெல்லும் இந்திரன் வெண்யானை மேல் தோன்றி கீழே சிதல்புற்றென எழுந்த நகர் மீது தன் வெள்ளிமின் படைக்கலத்தை வீசினான். முகில்கள் சுருள் சுருளென எழுந்து செறிந்த வானம் எங்கும் பல நூறு மின்னல்கள் வெடித்து துடித்துக்கொண்டிருந்தன. சிதல்புற்றுகளுக்கு மேல் ஒளிரும் வாள்களென மின்னல்கள் வளைந்து விழுந்தன. மழை அறைந்து சிதல்மாளிகைகள் சிதல்கோபுரங்கள் சிதல்கோட்டைகள் கரைந்துகொண்டிருக்க அலைபோல் பெருகும் கைகளுடன் அனைத்திலும் பல்வேறு படைக்கலங்களுடன் அறைகூவும் விழிகளும் நகைக்கும் வாயுமாக விருத்திரன் அண்ணாந்திருந்தான்.
பிறிதொன்றில் இந்திரனுக்கும் வருணனுக்குமான போர். கடல் அலைகள் கொந்தளித்தெழ அவற்றுக்கு மேல் இந்திரன் முகில் ஊர்திகளில் தன் படைகள் செறிந்திருக்க மின்னல்கள் வெட்டி அதிர்ந்து சூழ நின்றிருந்தான். வருணனின் கையில் அலைநுரையே வாள் என அமைந்திருந்தது. அவனுக்குப் பின் வெண்ணிறப் பிடரி மயிர்க் கற்றைகள் பறக்கும் நீலப் புரவிகளின் நிரை அலையலையென எழுந்து சுவரை நிறைத்திருந்தது. வருணனின் கையில் இருந்த வெண்சங்கும் இந்திரனின் கையில் இருந்த படையாழியும் மங்கியும் மங்காமலும் இருவருக்கு நடுவே எழுந்த பிறிதொருவனின் இரு கைகளிலும் படைக்கலங்களாக அமைந்திருப்பதுபோல் தெரிந்தன.
திரௌபதியின் அறைமுன் சென்றதும் அவன் கனவிலிருந்து உலுக்கப்பட்டவன்போல் விழித்தெழுந்தான். அவன் விழிகளுக்குள் அவ்வண்ணப்பெருக்கு நிறைந்திருப்பதாகத் தோன்ற விழிகளை கொட்டி தலையை உலுக்கிக்கொண்டான். அவனை அழைத்துச்சென்ற சேடி அவன் வருகையை அங்கிருந்த முதிய சேடியிடம் சொல்ல அவள் தலைவணங்கி உள்ளே சென்றாள். அவன் மீண்டும் தன்னை தொகுத்துக்கொள்ள முயன்றான். ஆனால் சொற்கள் எவையும் நினைவிலெழவில்லை. எதன் பொருட்டு இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தோம் என்பதையே அவன் உள்ளம் மறந்துவிட்டிருந்தது. அறைக்கதவு திறந்து அவன் உள்ளே செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டதும் அவன் அறுந்து விழுவதுபோல காலடி வைத்து முன்னால் சென்றான்.
திரௌபதியின் அறை விரிந்தகன்று ஓர் அவைக்கூடம் அளவுக்கு பெரிதாக இருந்தது. அவன் முதலில் அதையும் ஒழிந்த அறை என்றே எண்ணினான். அதனுள்ளும் காற்று சுழன்றுகொண்டிருந்தது. அதன் பின்னரே அவள் அங்கிருப்பதை கண்டான். முதலில் அங்கில்லை என எப்படி தன் புலன் உணர்ந்தது என வியந்தான். அவள் தன் மணிமுடியுடன் அங்கிருந்த நாட்களில் அவ்வறையை அவள் நிறைத்திருப்பாள். கதவை சற்று திறந்ததுமே அவள் இருப்பு வெளியே கசிந்திருக்கும். இந்த மாபெரும் சுவர்களில் அது முட்டி மீளலை கொண்டிருக்கும். முழக்கமிட்டு வானை நிறைத்திருக்கும். அவ்வறையின் மறு எல்லையில் விரிந்த சாளரத்தினருகே அவள் அரியணை போன்ற பெரிய பீடத்தில் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு அசைவில்லாமல் அமர்ந்திருந்தாள். அவனை அவள் நோக்கவே இல்லை. ஆகவே அவன் உடலும் அவளை உணரவில்லை.
அறைச்சுவரில் நிறைந்திருந்த மாபெரும் ஓவியங்களில் கந்தர்வர்களும் கின்னரர்களும் யட்சர்களும் களியாட்டமிட்டுக் கொண்டிருந்தனர். பூக்களும் தளிர்களும் நிறைந்த காடுகளும் நீர் ஒளிரும் சுனைகளும் கதிர் பரவிய முகில்நிரைகளும் என அவ்வோவியங்கள் வண்ணச் சுடர் கொண்டிருந்தன. ஓவியத்திற்குள் இருந்து எப்படி ஒளி எழுந்து கண்கூசவைக்க முடியும் என அவன் வியந்தான். ஓவியங்கள் அவனை அள்ளி உள்ளே இழுத்தன. அவை உருவாக்கிய பிறிதொரு உலகில் வாழச்செய்தன. பெருவிழவின்போது ஏற்படும் கள்மயக்குபோல, நெடும்பொழுது இசை கேட்ட பின் எழும் சொல்லின்மைபோல, அவன் உள்ளம் வெறுமையும் ததும்பலுமாக இருந்தது. அவ்வறையின் ஓவிய மலர்வெளியில் அவன் சிறகு முளைத்த சிறுவண்டென பறந்தலைந்தான். மலர்கள் இதழ்கள் விரித்து பூம்பொடி நிறைத்து காத்திருந்தன. அவற்றில் சிறகு முளைத்த கந்தர்வர்கள் தேன்தேர் தும்பிகள் என பறந்தலைந்தனர். அவர்களின் விழிகளில் இருந்தது அந்தக் கள்மயக்கம்.
வாடாத, இதழ்குவியாத, ஒளி மறையாத மலர்கள். மலர்வு நிலை மாறாதமைந்தவை. காலத்தில் நிலைகொண்டவை. ஓவிய மலர்களே தெய்வங்களுக்குரியவை. அவை மலர்களின் அக்கணத் தன்மையை கடந்துவிட்டவை. மலர்களில் அவை தெய்வங்கள். அவற்றிலேயே கந்தர்வர்கள் எழக்கூடும். ஆனால் நிலையிலா மலர்கள் மானுடரின் காலத்தில் அவ்வண்ணம் தங்களை காட்டுகின்றன. தேவர்களின் காலத்தில் அவை நிலையானவை. அங்கே கணமும் யுகமும் ஒன்றே. மலர்களை மானுடர் வரைந்துகொண்டே இருக்கிறார்கள். அவை மறைந்துவிடும் என அஞ்சியவர்களாக. அவர்கள் வரைய எண்ணுவது மலர்களில் தேவர்கள் காணும் காலத்தை. அவர்கள் தேவர்களின் கண்பெற்று வரைகிறார்கள். தேவர்களின் விழிகளை அம்மலர்கள் நோக்குபவர்களுக்கு அளிக்கின்றன.
அவன் நெடுநேரம் கழித்தே திரௌபதியை கண்டான். முதற்கணம் திடுக்கிட்டு பின்னடைந்தான். அங்கு அவள் ஒரு தொன்மையான தெய்வச்சிலையென அமைந்திருந்தாள். கைவிடப்பட்ட காட்டு ஆலயத்திற்குள் கண்கள் மின்ன அமர்ந்திருக்கும் கொற்றவை சிலை. அவள் அத்தனை முதுமை அடைந்துவிட்டிருப்பதை அவன் அப்போதுதான் பார்த்தான். ஒருபோதும் அவள் உருவம் தன் உள்ளத்தில் முதியவளாக எழுந்ததில்லை என்று தோன்றியது. அவள் உடல் மிக மெலிந்திருந்தது. ஆகவே மேலும் உயரமானவளாகவும் உறுதியான எலும்புகளால் ஆன விரிந்த தோள்கள் கொண்டவளாகவும் தோன்றினாள். முகம் கன்னங்கள் ஒட்டி, கண்கள் குழிந்து, வாயைச் சுற்றி சுருக்கங்களுடன் உதடுகள் அழுந்த மூடியிருக்க அவ்வுலகு கடந்து அமைந்ததுபோல் தோன்றியது.
முதுமை கொண்ட கொற்றவை. அல்லது சாமுண்டி. ஆம், சாமுண்டி. மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருக்கிறாளா? வெட்டப்பட்ட தலைகளை குண்டலமாக அணிந்துள்ளாளா? கால் கழலில் அனல் சுழல்கிறதா? நாகங்கள் அணிகளென உடலெங்கும் வளைந்துள்ளனவா? குழலென எழுந்து பரந்து நின்றிருப்பது அழலா? அவ்வழலில் எரிந்துருகி வழிந்தகன்ற தசைக்கு அடியிலிருந்து புடைத்தெழுந்த மண்டை முகமா? எலும்புருக்கொண்ட உடலா? இங்கே புதுக்கள் வெறியுடன் பிணக்கூத்திடும் பேய்கள் நிறைந்துள்ளனவா? அணிகொண்ட சாமுண்டி. எழுந்தெரியும் அழலுடுத்த அன்னை.
அவள் அணிகளேதும் அணிந்திருக்கவில்லை. காலில் சிலம்போ தலையில் சுடுமலரோ இல்லை. ஆரங்கள் குண்டலங்கள் ஏதுமில்லை. அணியே இல்லாத உடலே அவளை தெய்வமாக்கியது என எண்ணிக்கொண்டான். அவள் விழிகளை அணியெனச் சூடியிருந்தாள். அவை நோக்கிழந்தவைபோல், இரு கரிய வைரங்கள் என மின்னிக்கொண்டிருந்தன. என்றும் அவளில் ஆண் என ஒரு நிமிர்வு உண்டு. பெண் என ஒரு கனிவும் உடனமைந்ததுண்டு. அன்று ஆணென்றும் பெண்ணென்றும் இன்றி கடந்து வெறும் தெய்வமென்று அமர்ந்திருந்தாள். அவள் தன்னை நோக்குகிறாளா என அவன் வியந்தான். அவளை நோக்கியபடி திகைத்து நின்றான். பின்னர் தன்னுணர்வடைந்து அருகணைந்து கைகூப்பினான்.