களிற்றியானை நிரை - 33
பகுதி நான்கு : அன்னையெழுகை – 5
இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படித்துறையில் நீர் தெரியாமல் படகுகள் செறிந்து நின்றிருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு கண்டான். காற்றில் பறந்த மேலாடையை உடலில் சுற்றிக்கொண்டு படகின் வடத்தைப் பிடித்து சற்றே குனிந்து கூர்ந்து நோக்கினான். அவை வணிகப்படகுகள் போலவும் தோன்றவில்லை. சிறிய பயணப்படகுகள், ஓரிரு பாய்கள் மட்டுமே கொண்டவை. அவற்றில் பொருட்களும் பெரிதாக இருக்கவில்லை. படகுத்துறையை நோக்கி சென்றுகொண்டிருந்த படகுகளில் மக்கள் அள்ளித் திணித்ததுபோல் செறிந்திருந்தார்கள். பலர் தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் சுழற்றி காற்றில் வீசி பிற படகுகளில் இருந்தவர்களை நோக்கி கூச்சலிட்டார்கள். அவர்களின் எடையால் படகுகள் அலைகளில் என ததும்பின.
மேலும் அணுகியபோது பல படகுகளில் வீட்டுப் பொருட்களும் வளர்ப்பு விலங்குகளும் இருப்பதை அவன் கண்டான். அவன் அருகே வந்த குகன் “இன்னும் ஒரு நாழிகையில் நாம் கரையணைய முடியும். சற்று பொறுத்திருக்கத்தான் வேண்டும்” என்றான். யுயுத்ஸு “வந்திருப்பது அரசப்படகு என்று செய்தி அனுப்பினீரா?” என்றான். குகன் “ஆம், அச்செய்தியை பல முறை அனுப்பிவிட்டேன். அங்கு இருக்கும் துறைத்தலைவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தோன்றுகிறது. இவர்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு புதிதாக வருபவர்கள். இங்குள்ள செய்தி முறைகளையும் ஒழுங்குகளையும் பற்றி எந்த அறிதலும் இல்லாதவர்கள். முற்றிலும் புதிய கூட்டத்தினருக்கு ஆணைகளை பிறப்பிக்க இயலாது. வன்முறையை கையிலெடுக்கும் ஆற்றலும் இப்போது படகுத்துறை தலைவரிடம் இருக்காது” என்றான்.
“அணைவது அஸ்தினபுரியின் அரசப்படகு என்ற செய்தியை மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டே இருங்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆணை” என்று தலைவணங்கி குகன் திரும்பிச் சென்றான். யுயுத்ஸு அத்தனை மக்கள்பெருக்கு இந்திரப்பிரஸ்தத்துக்குள் எப்படி வருகிறது என்று எண்ணியபடி நின்றான். அஸ்தினபுரிக்குள் வந்துசேர்பவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் அந்நகருக்கு அத்திரள் விந்தையானதுதான். காவலன் அருகணைந்தபோது “இவர்கள் எப்போதிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்?” என்றான். “இளவரசே, போர் முடிந்து அரசி இங்கு வந்த செய்தி பரவத் தொடங்கியது முதல் இவ்வாறு பெருகி வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். “இனிமேல் அரசி இங்கே தனிமுடி சூடி அமரவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.”
யுயுத்ஸு வெறுமனே தலையசைத்தான். காவலன் “பாரதவர்ஷத்தின் பெரும்பாலான நகரங்களுக்கு இதுபோல வெளியிலிருந்து மக்கள் உள்ளே வருகிறார்கள். உள்ளிருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துவிட எஞ்சிய பெண்களும் முதியவர்களும் நகர்நீங்கி உருவான இடத்தை அவர்கள் நிரப்புகிறார்கள். ஆனால் அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் மட்டுமே இத்தனை பெரிய நெரிசல் இருக்கிறது. ஏனெனில் இவ்விரு நகரங்களும் பேருருவம் கொண்டெழவுள்ளன என்று சூதர்கள் பாடுகிறார்கள். இங்கே வளமும் வெற்றியும் திகழும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள்” என்றான். யுயுத்ஸு மீண்டும் வெறுமனே தலையசைத்தான்.
அங்கிருந்த மக்களை பார்க்கையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் கலிங்கத்திலிருந்தும் வங்கத்திலிருந்தும் பிரக்ஜ்யோதிஷத்திலிருந்தும் கங்கையினூடாக படகுகளில் வந்து யமுனைக்குள் புகுந்து இந்திரப்பிரஸ்தத்தை அணுகுபவர்கள் என்று தெரிந்தது. அவர்கள் படகுகளுக்கு பழகியவர்கள் அல்ல என்பதும், அந்தப் பயணத்தின் பொருட்டே படகுகளில் ஏறியிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் படகுகளின் ஆட்டத்தில் நிலைகுலைந்து கயிறுகளை பற்றிக்கொண்டு விழப்போவதை பார்த்தபோது தெரிந்தது. “அவர்கள் கீழைநிலத்தவரா?” என்று அவன் கேட்டான். “ஆம், கீழைநிலம் அன்னையரை முதன்மையாக வழிபடுபவது. அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தை நாடுவது இங்கே பெண்ணரசு எழவிருக்கிறது என்று எண்ணியே.”
அவன் சென்றபின் யுயுத்ஸு அங்கே நின்று நோக்கிக்கொண்டிருந்தான். கூட்டம் மேலெழுவதுபோலத் தெரியவில்லை. ஆனால் படகுகள் வந்தபடியே இருந்தன. அவை எந்த ஒழுங்கையும் கடைப்பிடிக்கவுமில்லை. அவன் சென்று அறைக்குள் சற்று நேரம் அமர்ந்தான். பின்னர் எழுந்து வந்து நோக்கினான். எந்த மாறுதலும் தென்படவில்லை. அவன் பொறுமை இழந்து “என்ன நடக்கிறது?” என்றான். “அங்கிருந்து பொறுத்திருக்கும்படி செய்தி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்” என்று காவலன் சொன்னான். யுயுத்ஸு படகின் விளிம்பிற்கு நடந்தான். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கூட்டம் கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்ட சிறிய படகுகள் அவனுடைய படகை கடந்து சென்று இந்திரப்பிரஸ்தத்தின் துறையை மொய்த்தன. அவற்றிலிருந்தவர்கள் உளம்கிளர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.
படகுகளை மீன் கூட்டங்கள் என்றெண்ணி அவன் பழகியிருந்தான். அவை ஈக்கள்போல என்று அப்போது தோன்றியது. பெரும்பாலானவை மீன்பிடிப் படகுகள். அவற்றுக்கு முறையான பாய்மரம் இருக்கவில்லை. மூங்கில்கள் நடப்பட்டிருந்தன. கையால் முடையப்பட்ட மரவுரிப்பாய்கள் காற்றின் திசையில் பல இடங்களில் கிழிந்து துளை விழுந்து சீறி அதிர்ந்துகொண்டிருந்தன. பாய்மரங்கள் வில் என வளைந்து காற்று நின்றதும் விம்மி நிமிர்ந்தன. துளை விழுந்த பாய்களின் துடிப்பால் அப்படகுகளும் அடங்கா புரவிகளென துள்ளித் திமிறின. அதிலிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு உலைந்தாடி கூச்சலிட்டனர்.
படகுகளில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் நிறைந்திருப்பதை அவன் கண்டான். மிக எளிய வீட்டுப்பொருட்கள். மண்பாண்டங்கள், மரப்பெட்டிகள், தோல் குடுவைகள், வெவ்வேறு வடிவிலான மரக்குடுக்கைகள். அவர்கள் தங்கள் இறுதி உடைமைகளை எடுத்துக்கொண்டு வந்திருப்பது தெரிந்தது. அவன் படகுக்காவலனை அழைத்து “நாம் கரையிறங்க இயலுமா இயலாதா?” என்றான். “இந்தத் துறையில் கரை இறங்குவதற்கு ஏதேனும் படை உதவி தேவைப்படும். படகில் எவரேனும் வந்து இந்தப் படகுப் பெருக்கை பிளந்து வழி அமைத்தாலன்றி நமது படகு கரையணைவது இயலாதென்றே தோன்றுகிறது” என்றான் காவலன்.
யுயுத்ஸு “எனில் ஒரு சிறு படகை ஒருக்குக! அதிலேறி யமுனையின் கரைகளில் எங்காவது நான் ஒதுங்கி அங்கிருந்து புரவியில் நகரை அடைகிறேன்” என்றான். “ஆனால் தாங்கள்…” என்று அவன் தயங்க “படகிலிருந்து பொருட்களை சிறிது சிறிதாக அவ்வண்ணமே கரை சேருங்கள். படகு இங்கேயே நிற்கட்டும்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆணை” என்று தலைவணங்கி காவலன் சென்றான். படகிலிருந்து மென்மரத்தில் குடையப்பட்ட சிறு படகை நீரில் கயிற்றினூடாக இறக்கினார்கள். அது படகின் விலாவில் அறைந்து துள்ளிய அலைகளின் மேல் நெற்று என எகிறி அலைபாய்ந்து நின்றது. யுயுத்ஸு அரக்கு பூசப்பட்ட வடத்தைப் பற்றிச் சறுக்கி கீழிறங்கி அப்படகில் அமர்ந்தான். குகனும் இறங்கி அமரத்தில் அமர்ந்தான்.
யுயுத்ஸு பக்கவாட்டுக் கயிற்றை தன் கால் மேல் இழுத்துக் கட்டி உடலைக் குறுக்கி அமர்ந்துகொண்டான். படகோட்டி துடுப்பை இரு கொக்கிகளிலும் செலுத்தி தோல்சுற்றப்பட்ட பிடிக்கொடுவைப் பற்றி நிலைகொண்டபின் கயிற்று முடிச்சுகளை அவிழ்த்து காலால் உந்தி படகை பெரும்படகிலிருந்து விலக்கினான். இருமுறை துடுப்புகள் சுழன்றமைந்தபோது துள்ளும் மீன்போல மென்மரப் படகு எழுந்து அலைகளில் தாவி அப்பால் சென்றது. அவன் கைகளின் சுழற்சியில் துடுப்புகள் இருபெரும் சகடங்கள்போல வட்டமிட படகு அலைகளில் ஏறி இறங்கி கரை நோக்கி சென்றது.
யமுனையின் கரைகளிலிருந்த குறுங்காடுகளிலும் நூற்றுக்கணக்கான சிறு படகுகள் அணைந்திருப்பதை அவன் கண்டான். பரிசல்களும் ஏராளமாகத் தெரிந்தன. “இப்பரிசல்கள் எங்கிருந்து வருகின்றன?” என்று அவன் கேட்டான். “இவையும் நெடுந்தொலைவிலிருந்து வருகின்றன என தோன்றுகிறது. அவர்கள் பேசும் மொழி வங்கக்கரைகளில் எழுந்தது” என்றான் குகன். “பரிசல்களில் அத்தனை தொலைவிலிருந்து வருகிறார்களா?” என்றான் யுயுத்ஸு. “ஆம் இளவரசே, இவர்கள் கிளம்பிய இடத்திலிருந்து வழிதோறும் தங்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கொற்றவையை வழிபடுகிறார்கள். சிலர் நாக அன்னையரை வழிபடுகிறார்கள். இங்கு இனி அரசியின் ஆட்சி என்று அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அன்னை எழுந்துவிட்டாள் என்ற செய்தி குலப்பாடகர்களினூடாகவும் சூதர்களினூடாகவும் இவர்களின் சிற்றூர்களில் பரவிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்” என்று படகோட்டி சொன்னான்.
யுயுத்ஸு “இங்கிருந்து ஏதேனும் அறிவிப்பு எழுந்ததா? அல்லது குறிப்புணர்த்தப்பட்டதா?” என்றான். “இல்லை, இந்திரப்பிரஸ்தம் கல்போல் ஓசையற்றிருக்கிறது. ஆனால் அரசி இங்கு முடிசூடப்போகிறார் என்று அவர்கள் அனைவருமே உறுதிபடக் கூறுகிறார்கள்” என்றான். யுயுத்ஸு “குருநாட்டின் தலைநகரம் அஸ்தினபுரி. அரசி அங்குதான் மும்முடி சூடி அமரவிருக்கிறார், பாரதவர்ஷத்தை அங்கிருந்து முழுதாளவிருக்கிறார்” என்றான். “ஆம், அதை நான் அறிவேன். ஆனால் இவர்கள் ஒன்றை நம்பி இத்தனை தொலைவு வந்துவிட்டார்கள். இனி இவர்களிடம் அந்நம்பிக்கையை மாற்றும்படி எவராலும் சொல்ல இயலாது” என்று படகோட்டி சொன்னான்.
படகு மரங்கள் சரிந்து நீரில் படிந்து இலைகளை அலசிக்கொண்டிருந்த கரையை அணைந்தது. அங்கும் ஒன்றுடன் ஒன்று முட்டி பல அடுக்குகளாக கரையை நிறைத்திருந்த சிறு படகுகளுக்கு நடுவே சென்று தயங்கியது. படகோட்டி தன் காலாலும் துடுப்பாலும் பிற படகுகளைத் தள்ளி இடைவெளியை உருவாக்கி அதனூடாக யுயுத்ஸுவின் படகை கரையணையச் செய்தான். கரையிலிருந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே நூற்றுக்கணக்கான சிறு குடும்பங்கள் அமர்ந்து சமைத்துக்கொண்டும், உணவுண்டபடியும், ஓய்வெடுத்தபடியும், தாயமும் நாற்களமும் ஆடிக்கொண்டும், கூவிப் பேசி நகைத்தபடியும் நிறைந்திருந்தன.
அவர்கள் எவரும் யுயுத்ஸுவையோ அஸ்தினபுரியின் அடையாளங்களையோகூட அறிந்திருக்கவில்லை. படகோட்டி கரையிலிறங்கி “வழி விடுங்கள்! இளவரசருக்கு வழி விடுங்கள்!” என்று கூவியபோதுகூட எவரும் பொருட்படுத்தி திரும்பிப் பார்க்கவில்லை. யுயுத்ஸு அணிந்திருந்த மணிமாலைகளை பெண்கள் வியப்புடன் பார்த்தனர். ஒரு பெண் கைசுட்டி ஏதோ சொல்ல பிற பெண்கள் வாய் பொத்தி உரக்க நகைத்தனர். யுயுத்ஸு அவர்களை விழிசுழற்றி நோக்கியபடி சென்றான். அவர்கள் அங்கேயே செடிகளென முளைத்தெழுந்து வண்ணங்களெனப் பூத்தவர்கள்போலத் தோன்றினர்.
பெரும்பாலானவர்கள் கரிய நிறமும், மின்னும் வெண்விழிகளும் கொண்ட உயரம் குறைவான மக்கள். அவர்கள் செந்நிற விதைகளாலும், தேய்த்துருட்டிய வெண்ணிறக் கற்களாலுமான மாலைகளையும் இரும்பாலான வளையல்களையும் அணிந்திருந்தனர். செந்நிறமும் நீல நிறமும் கொண்ட தடித்த பின்னலாடைகள். அவற்றில் கற்களை வைத்து அணி செய்திருந்தார்கள். தலையில் உருட்டிய வண்ணக் கற்களைக் கோத்து செய்யப்பட்ட சரங்களைச் சூடியிருந்த பெண்கள் தொன்மையான ஓவியங்களிலிருந்து எழுந்து வந்தவர்கள்போல் தோன்றினார்கள். கைகளில் சங்கு போழ்ந்த வெண்வளையல்கள். சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட காப்புகள். கால்களில் வெண்கலச் சிலம்புகள்.
யுயுத்ஸு “இந்திரப்பிரஸ்தம் முற்றிலும் புதிய குடிகளை பெறப்போகிறது. இனி அந்நகரின் நெறிகளையும் ஒழுங்குகளையும் இவர்கள் முடிவெடுப்பார்கள். அரசர் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். “நம்பிக்கையுடன் வந்திருக்கிறார்கள். கடுமையாக உழைக்கவும் ஒருக்கமாக இருக்கிறார்கள். அதுவே நன்று” என்று படகோட்டி சொன்னான். கைகளை விரித்து “வழி விடுங்கள்! வழி விடுங்கள்!” என்று கூவி பாதையெங்கும் செறிந்து நின்றிருந்தவர்களை உந்தி விலக்கி யுயுத்ஸுவை யமுனையின் ஓரமாக அமைந்த சாலையை நோக்கி கொண்டுசென்றான்.
அஸ்தினபுரியை நெருங்கும் மையச்சாலை அளவுக்கே அங்கும் மக்கள் பெருக்கு இருந்தது. ஆனால் அஸ்தினபுரியில் காவல்மேடைகளில் வீரர்கள் இருந்தனர். சாலையில் எப்படியாயினும் ஒரு புரவிவீரன் வேலுடன் தென்பட்டுக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் விழி தொடும் தொலைவு வரை எங்கும் காவலர்களோ இந்திரப்பிரஸ்தத்தின் கொடி அடையாளங்களோ தென்படவில்லை. “இந்நகரம் இன்று வெறும் மக்கள் திரளாக மாறிவிட்டிருக்கிறது. இங்கே எவ்வகையிலேனும் அரசாள்கை ஒன்று நிகழ்கிறதா என்று ஐயமாக இருக்கிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “மெய்யாகவே அரசாளுகை ஏதுமில்லை. இங்கிருந்த எஞ்சிய காவலர்களையும் அஸ்தினபுரிக்கு அழைத்துக்கொண்டுவிட்டார்கள். இந்நகர் முழுக்க நூறு காவலர்கூட இல்லை. அரண்மனையைக் காக்கவே இருபது பேர் மட்டுமே இருக்கிறார்கள். நம்மால் அறிய முடியாத இறையாணை ஒன்றால் அனைத்தும் எவ்வகையிலோ செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன” என்று படகோட்டி சொன்னான்.
“பெருந்திரளுக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கும் சித்தம் உள்ளது என்பார்கள். ஒவ்வொருவரும் தங்களை அறியாமலேயே அதன் ஆணைகளுக்கு கீழ்ப்படிவார்கள். துளித் துளியாக நோக்குகையில் எவ்வொழுங்கும் இன்றி அலைமோதிக்கொண்டிருக்கும் திரள் என்றுதான் அவர்கள் தோன்றுவார்கள். ஆனால் ஒரு குன்றின் மேலிருந்து பார்த்தால் நதி தன் பாதையையும் ஒழுங்குகளையும் வகுத்துக்கொள்வதுபோல இத்திரள் செயல்படுவதை காணமுடியும்” என்று யுயுத்ஸு சொன்னான். ஆனால் அது ஒரு உளமயக்குதானா என்று அவனுக்குத் தோன்றியது. எந்தப் பெருக்கிலும் சிதறலிலும் வடிவங்களைக் காண உள்ளம் முயல்கிறது. வடிவின்மையை மானுட உள்ளத்தால் நினைவில் நிறுத்திக்கொள்ள முடியாது.
தொலைவில் ஒரு புரவி செல்வதை படகோட்டி பார்த்தான். “புரவி!” என்று அவன் சுட்டினான். “அப்புரவியை கேட்டுப் பார்” என்று யுயுத்ஸு சொன்னான். “அது மகதத்திலிருந்து வருகிறது என்று தோன்றுகிறது. அதற்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் தொடர்பில்லை” என்றான் பட்கோட்டி. “ஆம்” என்றபின் யுயுத்ஸு ”அதை விலைக்கு கேட்டுப் பார்” என்றான். படகோட்டி பலரை உந்தி வழியேற்படுத்தி அப்புரவியை அணுகினான். அதை விலைபேசி முடித்து வாங்கி கடிவாளத்தை பற்றிக்கொண்டு அருகே வந்தான். “ஏறிக்கொள்ளுங்கள், இளவரசே” என்றான். யுயுத்ஸு அதன் மேல் ஏறி அமர்ந்து கடிவாளத்தைப் பிடித்து “நான் செல்கிறேன். நீ மீண்டும் படகிற்குச் சென்று அங்குள்ள பொருட்களை எவ்வண்ணமேனும் இந்திரப்பிரஸ்தத்துக்குள் அனுப்பி வை” என்று ஆணையிட்டபின் கூட்டத்தை ஊடுருவி முன்னால் சென்றான்.
இந்திரப்பிரஸ்தத்தை விரைந்து அணுக முடியாதென்று செல்லுந்தோறும் யுயுத்ஸுவுக்கு தெரிந்தது. சாலை நிறைத்து ஒழுகிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடந்துதான் சென்றார்கள். அவர்களும் இடையிலும் தோளிலும் மூட்டைகளையும் குழந்தைகளையும் வைத்திருந்தார்கள். மனிதர்கள் கையால் இழுக்கும் சிறு சகடங்களில் இல்லப் பயன்பாட்டுப் பொருட்களும், குழவியரும், முதியவர்களும் இருந்தனர். அத்திரிகளும் காளைகளும் கழுதைகளும் உடலெங்கும் பொதிகளையும் பொருள் மூட்டைகளையும் சுமந்தபடி ஒன்றுடன் ஒன்று முட்டி வழி விடும்படி ஓசையிட்டு, ஒன்றையொன்று முகர்ந்து தும்மலோசை எழுப்பி, செவி மடித்து அடித்து, வால் சுழற்றித் தயங்கி, கிடைத்த வழிகளூடாக புகுந்து சென்றன.
புரவிகள் மிகக் குறைவாகவே இருந்தன. பெரிய வண்டிகளும் அரிதாகவே தென்பட்டன. தேர்கள் அங்கு செல்லவே இயலாதென்று தோன்றியது. அவனுடைய புரவி மிக விரைவிலேயே அத்திரளுக்குள் செல்வதற்கான வழியை கண்டுகொண்டது. பிற உயிரினங்களைவிட புரவிகள் மிக எளிதாக திரளை புரிந்துகொள்கின்றன. காட்டில் அவை ஒட்டிப் பெருகிய ஒற்றைத் திரளென்றே இருக்கும் போலும். அவனுடைய புரவி சிறு இடைவெளிகளில் புகுந்து, கழுத்தை உலைத்து வழியுருவாக்கி ஊடுருவி முன் சென்றது. மரவுரிக்குள் நுழைந்து செல்லும் ஊசிபோல அது ஊடுருவுவதாக அவன் எண்ணினான்.
அவ்வப்போது முழுக் கூட்டமுமே முட்டித் தேங்கி நின்றது. சில தருணங்களில் சுழித்து எதிர் திசைக்கு திரும்பியது. சாலையில் யமுனையின் விளிம்புகளிலிருந்து மேலும் மேலும் மக்கள் எழுந்து வந்து சேர்ந்துகொண்டிருந்தார்கள். அவன் ஒவ்வொரு முகமாக பார்த்துக்கொண்டிருந்தான். உரக்க நகைத்துக்கொண்டும் கூவிப் பேசிக்கொண்டும் கைகளைத் தட்டி பாடிக்கொண்டும் அவர்கள் சென்றனர். அவர்களில் எவரேனும் ஒருவருக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கலாம். ஒரு சிலருக்கு உவகை எழுந்திருக்கலாம். அதன் ஆற்றல் அவர்கள் அனைவரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. அத்தனை பெருங்கூட்டம் ஒற்றை உணர்வையே கொண்டிருக்க இயலும். அப்போது அவர்களில் மிஞ்சிப்போனால் நூறு சொற்களுக்குள் மட்டுமே உளம் திகழ முடியும்.
அவனுக்கு அப்போது தன்னால் ஒரு காலகட்டத்தையே விழிகளால் பார்க்க முடியும் என்று தோன்றியது. இந்தப் பெருந்திரள் ஓரிரு மாதங்களுக்கு முன் இங்கு நிகழ்ந்த பெரும் போரைப்பற்றி அறிந்திருக்கும். அப்போது இவர்களில் பலர் பதைப்பு கொண்டிருக்கக் கூடும். பலர் நேரடி இழப்புகளையும் அடைந்திருக்கலாம். அப்போர் குறித்த எப்புரிதலும் இல்லாதவர்களும் இங்கிருக்கலாம். ஆனால் இன்று அதுவே ஒரு களியாட்டாக மாறியிருக்கிறது. அவன் அவர்கள் பாடிச்சென்ற சொற்களை செவிகொண்டான். பெரும்பாலானவற்றில் குருக்ஷேத்ரப் போரே குறிப்பிடப்பட்டது. ஒன்று களத்தில் அபிமன்யு பிருஹத்பலனை சந்தித்ததைப் பற்றிய பாடல் என்று புரிந்துகொண்டான். பிறிதொன்றில் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்குமான போர். கதிரவன் மகனும் இடிமின்னலின் மைந்தனும் விண்ணில் சந்தித்துக்கொள்கிறார்கள். மண்ணில் மழையும் வெயிலும் மாறி மாறி பொழிகிறது.
ஒரு போர் அதன் அனைத்துத் துயரங்களுடனும், அழிவுகளுடனும் இனிய நினைவாக, களியாட்டாக மாறிவிட்டிருக்கிறது. அப்போர் இங்கு நிறைந்திருந்த பெருமரங்கள் அனைத்தையும் வீழ்த்தி இப்புது முளைகள் எழுவதற்கு வழி வகுக்கிறது. படைசூழ்கை குறித்து எழுதப்படும் அனைத்து நூல்களிலும் போரில்லாத நாடுகள் விரைவிலேயே ஆற்றல் இழந்து அழியும் என்று கூறப்பட்டுள்ளது என அவன் படித்திருந்தான். அவனுக்கு அந்நூலை கற்பித்த கிருபர் “போரில்லாத நாடுகளில் படைவீரர்கள் களம் காணாது முதிர்வடைவார்கள். அவர்களின் படைக்கலப் பயிற்சி நேரடியாக களத்தில் பயன்படாதபோது மெல்ல மெல்ல வெறும் சொற்களாக மாறும். அச்சொற்களே மேலும் சொற்களை பெருக்கும். அடுத்த தலைமுறையினரை படைக்கலங்களுக்கு மாறாக அச்சொற்களே சென்று அடையும்” என்றார்.
“சொற்களைக் கொண்டு எவரும் போரிட இயலாது” என்றார் கிருபர். “அவை பயனற்றவை. இலையுதிர்கால சருகுக்குவை போன்றவை.” அவன் “அவர்கள் தொடர்ந்து களரிகளில் பயின்றுகொண்டுதானே இருக்கிறார்கள்?” என்றான். “களரிகளில் பயில்வது போரல்ல. போருக்குரிய மெய்யான உளநிலைகள் களரியில் இல்லை. அங்கு எவரும் கைபிழைத்தால் இறப்பதில்லை. கொல்லும் வெறிகொண்டிருப்பதும் இல்லை. அது ஒரு நடிப்பு. நடிப்பென அனைவருக்கும் தெரியும்.” புன்னகைத்து கிருபர் சொன்னார் “எண்ணுக, இங்கே காமமே நிகழவில்லை, காதல் நாடகங்களும் நடனங்களும் மட்டுமே நிகழ்கின்றன எனில் அடுத்த தலைமுறை எவ்வாறு உருவாகும்?”
மாணவர்களிடமிருந்து சிரிப்பொலி எழுந்தது. “களரியில் நிகழும் போர் மெய்யான போரை கண்டு நடிக்கப்படுவது. மிஞ்சிப்போனால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையேனும் மெய்யான போர் நிகழவேண்டும். அப்போது மட்டுமே அக்கற்பனை உண்மைக்கு அணுக்கமானதாக இருக்கும். பயனுள்ளதாக இருக்கும். இல்லையேல் அக்கற்பனை பெருகி உண்மைகளை தாண்டிச் செல்லும். அதன் பிறகு அப்பயிற்சியே கற்பனையை பெருக்கும். களம் நின்று போரிடுவதற்கு முதல் எதிரி வெற்றுக்கற்பனைதான். வாளேந்துபவனின் முதற்பெரும் அறைகூவல் என்பது வாள் குறித்து அவன் உள்ளம் கொண்டிருக்கும் பாவனைகளை அகற்றிக்கொள்வதே.”
“எந்தப் பெருவீரனையும் எக்கணத்திலும் ஓர் வாள் வெட்டக்கூடும், ஓர் அம்பு வீழ்த்தக்கூடும். அது வேறுபாடு அறியாது. அதிலுறையும் தெய்வங்களுக்கு தங்களுக்கான தனி வழிகள் உள்ளன. களத்தில் எந்த முறைமையும் இன்றி முதுகில் படைக்கலம் பாய்ந்து உயிர்விட்ட மாவீரர்கள் உண்டென்பதை ஒருமுறையேனும் போருக்குச் சென்றவரால் மட்டுமே உய்த்துணர இயலும்” என்றார் கிருபர். “மெய்யான போர் மெய்யான அறைகூவலை மெய்யான வீரத்தை நிலைநிறுத்திக்கொண்டே இருக்கிறது. போர் என்பது ஆண்டுக்கொருமுறை வயலை உழுவதுபோல. உழப்படாத நிலம் களைகளுக்குரியது.”
அவன் அக்கூட்டத்தை பார்த்தான். அவர்கள் அனைவருமே சிறிதும் பெரிதுமான போர்களை பார்த்தவர்களாகவே இருப்பார்கள். போரென்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். அன்று கிருபர் சொன்னார் “நகரில் மூத்த படைவீரர்கள் போரில் கொல்லப்பட வேண்டும். ஒரு படையின் பொதுவான வாழ்நாள் நாற்பது அகவைக்கு மேல் செல்லக்கூடாது. படையிலிருக்கும் இளம்வீரர்கள் போரின்றியே முதுமை கொண்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் முதியவர்களை அடிக்கடி காண வாய்க்கலாகாது. அவர்களுடன் சொல்லாடுவதற்கான தருணங்கள் அமையவே கூடாது. போரிலாது மூத்த முதியவர்கள் தாங்கள் அவ்வண்ணம் போரிலாது அகவை முதிர்ந்ததையே தங்கள் வாழ்நாள் வெற்றியாக சொல்வார்கள். அந்த இலக்கை இளையோரும் கொண்டால் அது படையல்ல, களிமகன்களின் திரள்.”
“போருக்குச் செல்லாதவர்களே போரை மிகைப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அவர்கள் போரை மிகைப்படுத்திக் கூறுகையிலேயே போரிலாது கடந்து வருவதே சிறந்தது என்ற செய்தியையும் இளைஞர்களிடம் கூறிவிடுவார்கள். அவ்வீரர்கள் போருக்குச் சென்றாலும் அவர்களிடம் மெய்யான போர் பற்றிய அறிதலின்மையால் ஏமாற்றத்தையும் அச்சத்தையுமே அடைவார்கள். பெரும்போர் ஒன்றில் உயிர்கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் படைவீரர்களாலான படை களத்தில் முதற்கணத்திலேயே சோர்வடைகிறது. ஏனென்றால் போர் என்பது கனவு அல்ல, வாள்முனைபோன்ற மெய்மை அது.”
“போருக்காக வீரன் ஒருங்கிக்கொண்டே இருக்கவேண்டும். அவனறியாமல் உடல்வளர்வதுபோல உள்ளம் அவ்வாறு உருவாகவேண்டும். போருக்கெழுகையில் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே எவ்வீரனுக்கும் இருக்கலாகாது. போரென்பது ஆண்டுதோறும் கோடையில் எழும் காட்டெரி போன்றது. முதுபெரும் மரங்கள் அதை கடந்து செல்லும். உயிரற்ற பழைய மரங்கள் எரிந்தழியும். பயனற்ற புதர்கள் சாம்பலாகி எருவாகி முளைக்கும் விதைகளுக்கு உணவாகும்” என்றார் கிருபர். பின்னர் அச்சொற்களை வெவ்வேறு குரல்களில் வெவ்வேறு தருணங்களில் அவன் கேட்க நேர்ந்தது.
அவன் அந்தத் திரளை நோக்கி எண்ணிக்கொண்டான். இவர்கள்தான் முளைக்கும் விதைகள் எனில் இதைப்போல பொருளற்ற விந்தை பிறிதில்லை. நெறி நின்றவர்கள், குடிப்பெருமை கொண்டவர்கள், பெருவீரர்கள் மண்மறைந்து ஏதுமறியா கட்டற்ற பெருந்திரள் அவ்விடத்தை நிரப்புகிறது. இத்திரள் மாண்புகள் ஏதும் அற்றது. நெறிகளை கொண்டிராதது. கட்டற்றது. அழகற்றது. பெருமிதமும் தன்னுணர்வும் இல்லாதது. இது ஒரு பண்படாத காட்டுவிலங்கு. இவர்களுக்காகவே அந்தத் திறனோரை, துணிந்தோரை காலம் அழித்திருக்கிறதென்றால் அது மானுடருடன் ஒரு இளிவரல் கூத்தையே நிகழ்த்த எண்ணியிருக்கிறது.
ஒருவேளை அது இதை எண்ணியிருக்க வாய்ப்பில்லை. அந்த முன்னோடிகளின் திரள் மூத்துவிட்டது. தன் நெறியில், தன் அழகில் அது முழுமை அடைந்துவிட்டது. அது மேலும் வளர்வதற்கு எல்லையில்லை. வளர்வதற்கு இடமில்லாதவை அழிய வேண்டுமென்பது இயற்கையின் நெறி. ஆகவே அவை அழிக்கப்படுகின்றன. நன்மையே ஆயினும் அழகே ஆயினும் மாண்பே ஆயினும் முழுமை அடைந்துவிட்டால் அழிந்தாகவேண்டும். சிறுமையே ஆயினும் தீமையேயாயினும் வளர்வதற்கு இடமிருக்கும்போது தன் வழியை அது கண்டுகொள்கிறது.
சென்ற காலங்களில் சிறப்பு மிக்க அனைத்தும் குருக்ஷேத்ரத்தில் அழிந்தன. நெடுங்காலமாக நெறிகளை பேணியவர்கள், தங்கள் அறங்களை சொல்லிச் சொல்லி நிலை நிறுத்தியவர்கள், அந்நெறிகளுக்கும் அறங்களுக்கும் அறுதி எல்லை என்ன என்பதை கண்டறிந்து திகைத்து களத்தில் உயிர்விட்டார்கள். வென்றவர்களும் தோற்றவர்களும் எழும் இப்புத்துலகிலிருந்து முற்றிலும் அயலாகிவிட்டார்கள். இப்புத்துலகு முற்றிலும் பிறிதொன்று. அறியா விசைகளால் இயக்கப்படுவது.
இது புது வெள்ளம். சருகும் சேறும் அடித்துச் சுருட்டி வந்து எல்லைகளை மீறி வயல்களுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் புகுந்து அனைத்தையும் நிரப்பி கொப்பளிக்கும் செம்பெருக்கு. நைந்தவற்றை வீழ்த்துகிறது. புது வழிகளை கண்டடைகிறது. மிகப் பெருவெள்ளம் வந்தபின் கங்கையே முற்றிலும் புது வழி தேர்கிறதென்பார்கள். யுயுத்ஸு திகைத்த விழிகளுடன் அப்பெரும்பெருக்கை நோக்கியபடி சென்றுகொண்டிருந்தான்.