களிற்றியானை நிரை - 31
பகுதி நான்கு : அன்னையெழுகை – 3
யுயுத்ஸு அஸ்தினபுரியிலிருந்து முற்புலரியிலேயே கிளம்பினான். கருக்கிருள் இருக்கும்போதே அவன் பயணத்திற்கான ஆடைகளை அணிந்து அரசமுற்றத்தில் நின்றிருந்த தேரை நோக்கி வந்தான். அவ்வேளையில் அங்கு அவனுடன் பயணம் செய்யும் சிறிய காவலர்படையும், கொடியேந்தியும், கொம்பூதியும் மட்டுமே இருப்பார்கள் என்று அவன் எண்ணினான். அவர்கள் முன்னரே ஒருங்கி நின்றிருந்தனர். காவலர்தலைவன் வாள்தாழ்த்தி தலைவணங்கினான். படிகளில் இறங்கி தெற்கிலிருந்து வீசிக்கொண்டிருந்த குளிர்க்காற்றில் ஆடை பறக்க நின்று தலை நிமிர்ந்து இருண்ட வானில் தொங்கியவைபோல் நின்று மின்னிக்கொண்டிருந்த விண்மீன்களை பார்த்தான். தேரை கிளப்பலாம் என்று பாகனுக்கு கையசைத்துவிட்டு அவன் அதில் ஏறச் செல்லும்போது உள்ளிருந்து சுரேசர் சால்வையை அள்ளிச் சுற்றியபடி விரைந்த சிற்றடிகளுடன் வந்து படிகளில் இறங்குவதை கண்டான். நின்று அவர் அணுகுவதற்காகக் காத்து தலைவணங்கினான்.
சுரேசர் “தாங்கள் இப்பொழுதில் கிளம்புவீர்கள் என்பது சற்று முன்னர்தான் நினைவுக்கு வந்தது. இப்பொழுதெல்லாம் நான் துயில்வதற்கு நெடும்பொழுதாகிறது. ஆகவே புலரிக் கடன்கள் சற்று பிந்துகின்றன” என்றார். அவருடைய கண்கள் துயில் விழித்தமையின் வீக்கத்துடன் இருந்தன. “ஆம், இன்று நகரம் எட்டுத் திசைகளிலும் கிழிந்து பறப்பதுபோல் தோன்றுகிறது” என்று யுயுத்ஸு சொன்னான். “அது நன்று. இது சில நாட்கள் உயிரற்றுக் கிடந்தது. இப்போது உயிர் பொங்கி நுரைத்து வெளியே கவிகிறது” என்றார் சுரேசர். “தாங்கள் செல்வதற்கு முன் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். தனியாக ஒன்றும் சொல்வதற்கில்லை. வெறுமனே பார்க்கவேண்டும் என்று…”
யுயுத்ஸு திரும்பிப் பார்க்க அவனருகே நின்ற கொம்பூதி அப்பால் விலகினான். சுரேசர் “தாங்கள் அரசியை பார்க்கச் செல்வது அவரை இங்கு அழைத்து வரும்பொருட்டே” என்றார். “ஆம்” என்று அவன் சொன்னான். சுரேசர் “அது தாங்கள் அரசரிடம் பேசியதுபோல அத்தனை எளிய செயல் அல்ல. ஒருவேளை அரசி மறுக்கக்கூடும்” என்றார். யுயுத்ஸு “அவர் துயரிலிருப்பார் என்று அறிவேன்” என்றான். “துயரல்ல, இத்தனை நாட்களில் துயர் சற்று மட்டுப்பட்டிருக்கும். உண்மையில் இழப்பின் துயர் சிறிதுதான். அதை தொடர்ந்து உருவாகும் உளவெறுமையே மிகக் கொடிது. பொருளின்மையென அது வாழ்க்கையை மாற்றிவிடுகிறது” என்றார் சுரேசர்.
“இங்கு வரக்கூடாதென்று அவர் முடிவு செய்திருந்தார் என்றால் உங்கள் பணி எளிது என்பேன். வரக்கூடாதென்பதற்கு அவர் சொல்லும் எல்லா சொற்களையும் உங்களால் மறுத்துவிடமுடியும். அதன் பின் அவர் ஏன் வரவேண்டும் என்பதற்கான சொற்கூட்டுக்களை உரைத்தாலே போதும், வென்றுவிடலாம். வருவதும் வராமலிருப்பதும் நிகரே என்று எண்ணுவார் என்றால் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார் சுரேசர். “அவர் முடிவுகளை உறுதியாக எடுப்பவர். ஆனால் அவை அரசமுடிவுகள். இவை அப்படி அல்ல. ஆகவே நமக்கு வாய்ப்புள்ளது. அவர் வந்தாகவேண்டும். இல்லையேல் குருக்ஷேத்ரத்தின் போர்வெற்றிகூட பயனற்றதாகிவிடும்.”
யுயுத்ஸு “அவர் வருவார் எண்றுதான் தோன்றுகிறது” என்றான். சுரேசர் “அவர் வருவது அவருக்கே சற்று மிகையானது என்று தோன்றலாம். மைந்தரை இழந்த பின் மாமங்கலையாக இங்கு அரசு வீற்றிருப்பது உகந்ததல்ல என்று அவர் எண்ணலாம். அல்லது அவர் பழிச்சொற்களுக்கு அஞ்சலாம். நாப்பழிக்கு அஞ்சாதோர்கூட நூல்பழிக்கு அஞ்சுவர்” என்றார். “இங்கு மும்முடிசூடி அவர் அமர்ந்தார் எனில் நஞ்சுகொண்ட நாவுகள் வம்பில் திளைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சூதர் இளிவரல் உரைப்பார்கள். சூதர் சொற்கள் புல்விதைகளென பெருகுபவை. எவராலும் கட்டுப்படுத்த இயலாதவை. சூத நாவிலெழுவன ஒருநாள் எழுத்தாணியிலும் கூர்கொள்ளும்.”
“அவர் அதை எல்லாம் பொருட்படுத்துவார் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றான் யுயுத்ஸு. “ஒவ்வொருவரும் தாங்கள் சூடிய அடையாளங்கள் அனைத்தையும் இழந்து வெறும் மனிதர்களாக நிற்கும் தருணங்கள் உண்டு” என்று சுரேசர் சொன்னார். “நான் என்ன சொல்லவேண்டும்?” என்று யுயுத்ஸு கேட்டான். “அத்தருணத்தில் அவரின் இயல்பு நோக்கி சொல்லவேண்டியதை நீங்களே முடிவு செய்யலாம். ஆனால் தவறாமல் சொல்லப்பட வேண்டிய ஒன்று உண்டு. இங்கு அவர் மணிமுடி சூடுவதென்பது அவர் இந்த அவையில் இழிவு செய்யப்பட்டதற்கு மறுநிகர் செய்வது. அங்கு தொடங்கிய கதை இங்கு அவர் மும்முடி சூடி அமரும்போது மட்டும்தான் முடிவடைகிறது” என்றார் சுரேசர்.
யுயுத்ஸு “அதை நினைவுபடுத்த வேண்டாம் என்று பார்த்தேன்” என்றான். சுரேசர் “அதை அவர் மறந்திருக்கவே முடியாது. எந்தப் பெண்ணும் மறக்கமாட்டாள். அவரிடம் கூறுக, ஒருகணம் ஒருமுறை அஸ்தினபுரியின் அரியணையில் அவர் மணிமுடி சூடி அமர்ந்துவிட்டால் அக்கணமே அந்த துயர்மிக்கப் பெருங்கதை முடிவுறுகிறது. அதன் பொருட்டு களத்தில் உயிர்விட்டவர்கள், கணவனையும் மைந்தரையும் இழந்த பெண்கள், பாரதவர்ஷம் முழுக்க நிறைந்திருக்கும் பெருந்துயர் அனைத்தும் ஒரு வட்டம் என முழுமை பெறுகின்றன. அவர் இங்கு மணிமுடி சூடவில்லை எனில் அக்கதை இன்னும் தொடரும். இன்னமும் அழிவுகள் எழும். தலைமுறைகள் குருதி சிந்தும். அந்நீள்கதையை இவ்வண்ணம் முடித்து வைப்பது அவரின் கையில்தான் உள்ளது. அதை கூறுக!” என்றார்.
யுயுத்ஸு “அதை எவ்வண்ணம் நான் அவரிடம் கூற இயலும்? எனது தூதை உரைக்கவே நான் செல்கிறேன்” என்றான். “எவ்வண்ணமாயினும் அஸ்தினபுரியின் இழப்புகளை எண்ணிக்கொள்க! இயல்பாகவே அவற்றைப் பற்றி ஒரு சொல் உங்கள் நாவில் எழும். அதை அவர் உணர்கையில் பேச்சு அவ்வண்ணமாக திரும்பும். அவ்வழியே சென்று இச்சொற்களை அவரிடம் கூறுக!” என்றார் சுரேசர். யுயுத்ஸு “ஆம்” என்று கூறி தலைவணங்கினான். பின்னர் “இதில் என்னை உறுத்திக்கொண்டிருப்பது ஒன்றே” என்று சொல்லி விழிகளை விலக்கிக்கொண்டான்.
சுரேசர் காத்திருந்தார். “இது அரசகுடியினரின் குடும்பத்திற்குள் நிகழும் உணர்வாடல். நான் அரசகுடியினன் அல்ல. பாண்டவ குடும்பத்தில் ஒருவனும் அல்ல” என்றான். சுரேசர் புன்னகையுடன் “நீங்கள் அவ்வுணர்வை அடைவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது அரசியின் முன் செல்லும்போது மறையும். அவர் முன் ஒவ்வொருவரும் அடையும் உணர்வு ஒன்றே, பேராற்றல் கொண்ட அன்னை ஒருத்தியின் முன் நிற்பதுபோல பணிவும் முழுதளிப்பும். அன்னை உங்களை நன்கறிவாள். உங்கள் மேல் பேரன்பு கொண்டவள் என்பதையும் உணர்வீர்கள். அவளுக்கு எவரும் அயலவர் அல்ல என்றும் தெளிவீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றுமென வீற்றிருக்கப்போகும் தெய்வம் ஒன்றை அணுக்கத்தில் பார்க்கப்போகிறீர்கள் என்றே இத்தருணத்தில் நான் உணர்கிறேன்” என்றார்.
யுயுத்ஸு உளம் நெகிழ்ந்துவிட்டான். அதை அவரிடம் காட்டாமலிருக்கும் பொருட்டு தன் சால்வையை மீண்டும் ஒருமுறை இழுத்துவிட்டு சொல்லின்றி தலைவணங்கி தேரிலேறிக்கொண்டான்.
யுயுத்ஸு தன் எண்ணங்களில் தானே உழன்றபடி கைவிரல்களைக் கோத்து நெரித்துக்கொண்டிருந்தான். அஸ்தினபுரியின் தெருக்களில் அரசத் தேர்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பலகைப்பாதையின் மீது தேர் சகடஓசையுடன் சென்றது. அந்த முற்புலரியிலும் சாலையின் இருபுறமும் மக்கள் குழுமி தோள்முட்டி உலைந்து தலைதலையென அசைந்துகொண்டிருந்தனர். அயல் வணிகர்களும் சூதர்களும் ஆங்காங்கே கூட்டங்களை கூட்டியிருந்தனர். தெருவிலிருந்து எழுந்த ஓசை சுவர்களில் பட்டு மீண்டும் தெரு மீது எதிரொலியாக பொழிந்தது. அஸ்தினபுரியின் அனைத்து மாளிகைகளும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இரவுப் பணியாளர்கள் நெய்விளக்குகளை மூங்கில்களில் கட்டி தொங்கவிட்டபடி அவ்வெளிச்சத்தில் கூரைகளிலும் சுவர்களிலும் தொற்றி பணியாற்றிக்கொண்டிருந்தனர். நகர் மாடங்கள் அனைத்திலும் மின்மினிகள் செறிந்திருப்பதுபோல் தோன்றியது. நெய்விளக்கின் செவ்வொளி வட்டத்திற்குள் தெரிந்த பணியாட்கள் விண்ணில் மிதக்கும் கந்தர்வர்கள்போல் தோன்றினார்கள். பெரிய செந்நிறக் கொடியொன்று பறக்க அதில் பதிந்த முத்திரைகள்போல் மறுகணம் உளமயக்களித்தனர்.
மாடங்களின் மீது பூசப்பட்டுக்கொண்டிருந்த உருக்கிய அரக்கும் சுண்ணமும் கலந்த கலவையின் இன்மணம் காற்றில் எழுந்தது. அரக்கு சொட்டுமிடங்களில் எவரும் வந்துவிடாதபடி இருக்க கீழே வேலுடன் காவலில் நின்றனர் வீரர். நெரிசலில் உந்தப்பட்டு அங்கே வந்தவர்களை நோக்கி அவர்கள் “விலகுக! விலகுக!” என்று கூவினார்கள். பித்தளைக் குமிழ்களை செய்பவர்கள் சிறிய சாலைச் சந்துகளுக்குள் வெறும் தரையிலேயே தங்கள் மூசைகளை அமைத்திருந்தனர். அங்கே அனல் உலைத்துருத்தியால் ஊதப்பட்டு நாகம்போல் சீறிக்கொண்டிருந்தது. உருகிய பித்தளை அனற்குழம்பென கிடுக்கியால் எடுக்கப்பட்ட மண்குவளைகளிலிருந்து அச்சுகளுக்கும் குழாய்களுக்கும் ஊற்றப்பட்டது. குளிரவைத்து எடுக்கப்பட்ட பித்தளைக்குமிழ்களை இளைய சிற்பிகள் நிரையாக அமர்ந்து மணற்பை இட்ட பட்டுத்துணிகளால் உரசி மெருகேற்றிக்கொண்டிருந்தனர்.
வெண்கலத் தாழ்களையும் பொருத்துகளையும் தட்டிகொண்டிருந்தனர். தச்சர்களின் கொட்டுவடிகளும் உளிகளும் ஓசையிட்டுக்கொண்டிருந்தன. அவர்கள் பணியாற்றுகையில் உளம் கூர் கொள்ளும்பொருட்டு சூதன் ஒருவன் அருகே ஒற்றைக்கம்பி யாழுடன் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தான். குருக்ஷேத்ரப் போர்தான். ஜயத்ரதனின் தலை விண்ணில் நின்றுகொண்டிருந்தது. மரச்சட்டங்களை நெடுக்காகச் சுமந்தபடி அத்திரிகள் வந்தன. அத்திரிகளை ஓட்டியவர்கள் ஒருவரை ஒருவர் கூவியழைத்துக்கொண்ட சொற்கள் தெருவில் நிறைந்திருந்தன. ஓடுகளையும் தரைப்பலகைகளையும் சிறிய சகடம் கொண்ட தாழ்வான மஞ்சச்சகடங்களில் ஏற்றி காளைகள் இழுத்துக்கொண்டு வந்தன. அவற்றின் லாடங்கள் மரத்தரையில் உரசி ஒலியெழுப்பின.
பீதர்நாட்டு வெண்ணிறக் களிமண் ஓடுகள் மாளிகைகளின் முகமுற்றங்களில் குவிக்கப்பட்டிருந்தன. மாளிகையின் மேல் அமர்ந்திருந்த பணியாட்கள் கீழிருந்து வீசப்பட்ட ஓடுகளைப் பற்றி தங்களுக்கு மேலே நின்றவர்களை நோக்கி வீசினர். தவளைபோல் எழுந்து எழுந்து குதித்து மேலே சென்றுகொண்டிருந்தன ஓடுகள். கயிறுகளில் இழுக்கப்பட்ட உத்தரங்கள் நாகங்கள்போல கட்டடங்களில் ஊர்ந்து ஏறின. கீழே சகடங்களில் இணைக்கப்பட்டு தூக்கப்பட்ட சிறு தூக்கிகளினூடாக சுண்ணக்குழம்பும் வெண்களிமண்ணும் மேலே சென்றன. வெண்களிமண்ணுடன் சுண்ணம் இடித்துச்சேர்க்கப்பட்டு அதில் கரும்புக்குழம்பு குழைக்கப்பட்டிருந்தது. சுண்ணமும் இனிப்பும் கலந்த மணம் நாவூறச் செய்தது.
பீதர்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குப் பாளங்கள் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பளிங்குப் பாளத்திற்கு மேலும் கீழும் மரவுரி மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தன. வண்ணமூட்டப்பட்ட அப்பளிங்குப் பாளங்கள் சாளரங்களில் பொருத்தப்படுகையில் வெளியிலிருந்து வரும் ஒளியை வண்ணச்சிதறல்களாக ஆக்கின. சிலவற்றில் வாய்திறந்து அனல் உமிழ, நாபறக்க, வால் வளைந்து சுருண்டெழுந்த சிம்ம நாகம் துறுவிழிகளுடன் உடல்நெளித்து செறிந்து நிறைந்திருந்தது. பீதர்நாட்டு தெய்வங்கள் உடலெங்கும் சுருண்டு நிறைந்த பட்டாடைகளுடனும், உருவிய வாட்களுடனும், விழித்த கண்களுடனும், திறந்த வாயில் கோரைப்பற்களுடனும் பதிக்கப்பட்டிருந்தன.
அந்தப் பளிங்குப் பாளங்கள் அஸ்தினபுரியில் பேரார்வத்தை உருவாக்கின. அவற்றை அதற்குமுன் எவரும் பார்த்திருக்கவில்லை. அவை தடிமனானவை, கல்லென எடை கொண்டவை. அவற்றை மரவுரி மெத்தைகளில் ஒன்றுக்கு மேலாக ஒன்றை அடுக்கி இறுக்கிக்கட்டி கப்பல்களில் கொண்டு வந்தனர். கங்கை முகப்பிலிருந்து அதிர்வுதாங்கும் அடிவில் வைத்த வண்டிகளில் அவற்றை ஏற்றி மிக மெல்ல நீரில் படகென கொண்டுவர வேண்டியிருந்தது. அரண்மனைச் சாளரங்கள் அனைத்திலும் அந்தப் பளிங்குப் பாளங்களை பொருத்த வேண்டும் என்று யுதிஷ்டிரன் ஆணையிட்டார். ஆகவே அரண்மனையைச் சூழ்ந்து அவை இறக்கப்பட்டன. அவற்றை நோக்கி நோக்கி அவர் மேலும் பித்தானார். நகரின் மைய மாளிகைகள் அனைத்திலும் பளிங்குச் சாளரம் அமையட்டும் என்றார்.
அவருடைய அவையில் முதலில் அப்பளிங்குப் பாளத்தின் துண்டு காட்டப்பட்ட போது “என்ன அது பளிங்கா?” என்றபடி எழுந்து வந்து தொட்டுப் பார்த்து “பளிங்கு மேலும் இறுகி கல்லாகிவிட்டிருக்கிறது. ஆனால் முற்றிலும் ஒளி ஊடுருவுகிறது. இல்லையென்றே ஆகிவிடுகிறது… முற்றிலும் தெளிந்த கல்… இதை என்ன சொல்கிறார்கள்?” என்றார். பீதர்நாட்டு வணிகன் “நாங்கள் இதை கல்விழி என்கிறோம். கல்லின் விழி” என்றான். அவர் “நீரை கல்லாக்கியிருக்கிறார்களா? முன்பு இமையமலையில் நீர் உறைந்த பனிக்கட்டியில் இதைப்போல கண்டேன்” என்றார்.
“இது ஒருவகை ஆடி. இதன் ஒருபுறத்தில் வெள்ளி பூசுகிறார்கள். மறுபுறம் தெளிவான பாவை எழுகிறது. இதில் செய்யப்பட்ட ஆடிகள் சுவரில் பதிக்கப்பட்டால் அங்கு ஆடி இருப்பதையே நம்மால் அறிய முடியாது. அதை ஒரு வாயில் என்றே எண்ணுவோம். அதில் நாம் நம் தோற்றத்துடன் முழுமையாக எழும்போது நம் உடல் இரண்டெனப் பிளந்துவிட்டதுபோல் துணுக்குறுவோம். நீர்ப்பரப்பென்றும் வான்கீற்றென்றும் விழி மாயம் காட்டும் இது” என்று பீதன் சொன்னான்.
“எதைக் கொண்டு இதை செய்கிறார்கள்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இதன் செய்முறையை செய்பவர்கள் வெளிப்படுத்துவதில்லை. உள்நாடுகளில் செய்யப்பட்டு கப்பல் நகரங்களுக்கு வருகின்றன இவை. அங்கே கப்பல்களில் ஏற்றப்படுகின்றன. இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது மாலுமிகளுக்கே தெரிவதில்லை. அவர்கள்கூட உள்நிலங்களில் இந்தப் பாறை வெட்டி எடுக்கப்படுகிறதென்றே சொல்கிறார்கள்” என்றான் பீதர்நாட்டு வணிகன். “இதன் செய்முறை என்ன என்பதை பித்தெழுந்துவிட்டிருந்த ஒரு கைவினைஞன் சொல்லி நான் கேள்விப்பட்டேன். அது மெய்யா என்று என்னால் சொல்ல இயலாது. இதை அவர்கள் மிகு வெப்பத்தில் மணலை உருக்கி, அதை ஒளிரும் பாகென ஆக்கி, ஊற்றி உருவாக்குகிறார்கள்.”
யுதிஷ்டிரன் திடுக்கிட்டு ஒருகணம் அவனைப் பார்த்த பின் “அது மெய்யாகத்தான் இருக்கவேண்டும். அது இயல்வதுதான்” என்றார். “என் கையில் சில தருணங்களில் மணற்பருக்களை எடுத்துப் பார்க்கும்போது அவை நீர்த்துளிகள்போல் இருப்பதை கண்டிருக்கிறேன். உருவற்ற வெண்படிகங்கள். அவற்றை உருக்க முடியுமெனில் இந்த நீராடிகளை செய்துவிடமுடியும்” என்றார். அவர் மீண்டும் அதை பார்த்து “கல்தான். ஐயமே இல்லை கல்லை உருக்கியிருக்கிறார்கள்” என்றார். பின் புன்னகைத்து “எதையும் உருக்க முடியும் என்பது எங்கள் நூல்களிலும் உள்ளது. எதுவும் உருகுவதற்கு ஒரு வெப்பநிலை உள்ளது. அதை எவ்வண்ணமோ அடைந்திருக்கிறார்கள்” என்றார்.
“அங்கே மண்ணுக்கு அடியில் மிகு வெப்பம் கொண்ட உறையடுப்புகளை அமைப்பதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவற்றை அமைக்கும் தனிக் குலங்களே அங்குள்ளன” என்று வணிகன் சொன்னான். “அவ்வுலைகளில் எரிப்பதற்கு கல்லாலான கரிகளை கண்டடைந்திருக்கிறார்கள். அவையும் மண்ணிலிருந்தே தோண்டி எடுக்கப்படுகின்றன. கைக்கும் கண்ணுக்கும் அவை கல் என்றே தோன்றும், ஆனால் அவை நின்று கனன்று எரியும். ஒன்றை எரித்தால் போதும், பிற அனைத்தையும் அதுவே எரிக்கும். மரக்கரியை விட பத்து மடங்கு வெப்பத்தை எழுப்பும் என்கிறார்கள். அவற்றைக் கொண்டு மணலை உருக்கி இந்த ஆடிகள் உருவாக்கப்படுகின்றன.”
யுதிஷ்டிரன் “நீர்ப்பளிங்கு…” என்று மீண்டும் அதை பார்த்தார். “இவை உருகும்போது பொன் என வழியும் என்கிறார்கள்” என்றான் வணிகன். “பொன்னாலான விழி… காஞ்சனாக்ஷம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இவை வரட்டும், இந்நகர் முழுக்க அனைத்துச் சாளரங்களிலும் இவை பதிக்கப்படட்டும்” என்றார். “இங்கு பெரும்பாலான இல்லங்களில் சாளரங்கள் சிறியவை. முற்காலங்களில் சாளரங்களை பெரியதாக அமைக்கும் வழக்கம் இல்லை. குறைவான ஒளியையே நமது முன்னோர் அறைகளுக்குள் விழைந்திருக்கிறார்கள். அவர்கள் நெடுங்காலத்திற்கு முன் எப்போதோ சிறு குடில்களிலும் அதற்கு முன் குகைகளிலும் வாழ்ந்த நினைவு கொண்டிருந்திருக்கிறார்கள். குறைந்த ஒளி தண்மையை அளிக்கிறது என்று அவர்களுக்கு தோன்றியிருக்கிறது.”
“சாளரங்களை விரியத் திறந்தால் உள்ளே காற்று பீறிட்டு அனைத்தையும் நிலைகுலையச்செய்வதும் அவர்களுக்கு இடராக இருந்திருக்கிறது. சுடர் எரியவேண்டுமென்றால் கதவுகள் மூடப்பட்டிருக்கவேண்டும். இந்த அரண்மனையிலேயே சாளரங்கள் எத்தனை சிறியவை என்று அவ்வப்போது நான் எண்ணிக்கொள்வதுண்டு. அனைத்துச் சாளரங்களும் இந்த நீராடியால் கதவிடப்படட்டும். அஸ்தினபுரியின் அனைத்து இல்லங்களுக்குள்ளும் கதிரொளி நிறையட்டும்” என்றார். “இது மிகவும் செலவேறிய பொருள். அரண்மனைக்கு மட்டும் எனில் நன்று” என்று வணிகன் சொன்னான்.
யுதிஷ்டிரன் நகைத்து “அஸ்தினபுரி இப்போது செலவைப்பற்றி எண்ணவேண்டியதில்லை. பாரதவர்ஷத்திலிருந்து நான்கு நதிகள்போல அஸ்தினபுரிக்குள் பொன் வந்து பெய்து நிறைந்துகொண்டிருக்கிறது. நீங்கள் அஞ்சவேண்டியதில்லை, கோருவதைப் பெறுவீர்” என்றார். பீதர்நாட்டு வணிகன் தலைவணங்கி “அவ்வண்ணமே” என்றான். “இவற்றை காஞ்சனாக்ஷம் என்றே அழைக்கிறேன். என் நகர் விழிகள் பெறுக” என்றார். அவையில் இருந்தவர்கள் அச்சொல்லை நாவுக்குள் கூறிக்கொள்ளத் தொடங்கினர். அது அப்போதே உருமாறத் தொடங்கியது. காசகம், காஞ்சம், கானாசம் என்று அன்று மாலைக்குள் அஸ்தினபுரி பேசத் தொடங்கியது.
ஆடிகள் நகருக்குள் வந்து அடுக்கப்பட்டபோது அவற்றைப் பார்ப்பதற்காகவே பெருங்கூட்டம் கூடியது. முற்றிலும் ஒளி ஊடுருவும் பெரிய பளிங்குப் பலகையை நால்வர் சேர்ந்து தூக்கியபோது தொலைவில் நின்றவர்கள் அவர்கள் எதை தூக்குகிறார்கள் என்பது தெரியாமல் “என்ன நடிக்கிறார்கள்?” என்று திகைத்தார்கள். “அந்தப் பலகையை மானுடர் விழிகளால் பார்க்க இயலாது. காற்றும் தீயும் மட்டுமே அதை அறியும்” என்றார்கள். “அவர்கள் அதை மெய்யாகவே பிடித்திருக்கிறார்களா, அல்லது நம் விழிகளுக்காக அதை நடிக்கிறார்களா?” என்றார் ஒருவர். “நடிக்கிறார்கள் என்றால் அவர்கள் பெருங்கூத்தர்கள்” என்றார் ஒரு முதியவர். “அது எடைமிக்கது. அவர்களின் தோள்தசைகளை நோக்குக!” என்று இன்னொருவர் கூறினார்.
அவர்கள் அதை சற்றே சரித்து வைத்த போது அதில் வானம் தோன்றி மறைந்தது. மீண்டுமொரு அசைவில் அருகிருந்த மாளிகை நெளிந்தமைந்தது. “நீர்க்குமிழியின் மென்பரப்புபோல” என்று ஒருவன் கூறினான். “அதில் நான் வானத்தை கண்டேன்! மாளிகை ஒன்று உருகி வளைந்து ஆடி மறைந்தது” என்று இன்னொருவன் கூவினான். அவை அஸ்தினபுரியின் மாளிகைகளின் சாளரக்கதவுகளில் பொருத்தப்பட்டபோது சேடியரும் ஏவலரும் அப்பால் நின்று உளக்கிளர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர். எவரும் அருகில் இல்லை என்ற எண்ணம் வந்த பின்னர் மெல்ல அணுகி தொட்டுப் பார்த்தார்கள். அவர்களின் கையே அதனுள் இருந்து உருவாகி வந்து அவர்களின் கையை தொட்டு நோக்கியதைக் கண்டு அஞ்சி கூச்சலிட்டு விலகினார்கள்.
பகலில் இல்லையென்று தன்னைக் காட்டுவது இரவில் வெளியே இருள் சூழும்போது ஆடியென்று மாறி உருக்காட்டுவதை அவர்கள் கண்டனர். கைவிளக்குடன் வந்த சேடியர் அதில் தங்கள் உருவங்களை நோக்கி நோக்கி மகிழ்ந்தனர். “நன்று. இவ்வுலகில் நம்மை இவ்வண்ணம் பெருக்கிக்கொள்ள முடியும் என்பதே இனிது” என்று ஒரு சேடி சொன்னாள். “இங்கு இருக்கும் அத்தனை சாளர ஆடிகளிலும் நான் என்னை பார்த்துவிட்டேன்” என்று இன்னொருத்தி சொன்னாள். “நீ விலகியதும் அவை உன்னை உமிழ்ந்துவிடுகின்றன. நீ எதிலும் இல்லை” என்று முதிய சேடி சொன்னாள். “யார் சொன்னது? நீ துயின்ற பிறகு இவ்வாடிகளிலிருந்து உன் உரு எழுந்து கைவிளக்குடன் அரண்மனை தெருக்களில் உலாவுகிறது” என்றாள் இன்னொருத்தி. இளஞ்சேடி அஞ்சி “மெய்யாகவா?” என்றாள். அவர்கள் உரக்க நகைத்தனர்.
இன்னொரு முதிய சேடி “இச்சாளரங்கள் அனைத்தும் கண்கள். காஞ்சனன் என்னும் அரக்கனின் விழிகள் இவை” என்றாள். அவர்கள் அச்சொல்லால் திடுக்கிட்டு அவளை திரும்பிப் பார்த்தனர். “இவை நம்மை நோக்கிக்கொண்டிருக்கின்றன. எங்கோ எவருக்காகவோ இவை நம்மை வேவு பார்க்கின்றன” என்றாள். ஒருத்தி ஊக்கம் கொண்டு “ஆம், இங்கிருந்து இவை நம்மை பீதர்களுக்கு காட்டுகின்றன. தங்கள் கண்களை பெரிதாக்கி இப்பொருளாக்கி அவர்கள் இங்கு அனுப்பியிருக்கிறார்கள்” என்றாள். அவர்கள் ஆடிகளை அச்சத்துடன் நோக்கினர். அவை அவர்களை உற்றுநோக்கி அமர்ந்திருந்தன.
அதன் பின் அந்த சாளர ஆடிகளிடமிருந்து அவர்கள் அனைவரும் மறைந்துகொள்ள முயன்றனர். அதை கடந்து செல்லும்போது ஓரக்கண்ணால் பார்த்தபடி பதுங்கி பாய்ந்தனர். ஆனால் இளைய சேடியர் சிலர் எவரும் அறியாதபோது அதன் முன் நின்று ஆடை திருத்திக்கொண்டனர். கூந்தலை பின்னி முடைந்து மேலாடையை வெவ்வேறு விதமாக அணிந்தும் மகிழ்ந்தனர். “அவன் பெயர் காஞ்சனன்” என்றாள் ஒருத்தி. “அவன் என்னை பார்க்கிறான்” என்று புன்னகைத்தாள். “இல்லை, உன்னை பார்ப்பவர்கள் பீதர்கள்” என்று இன்னொரு சேடி சொல்ல இளம்சேடி நகைத்து “எங்கேனும் எவரேனும் நம்மை பார்ப்பது நன்று. இவ்வண்ணமேனும் நம்மை பார்க்கும் பெரிய விழிகள் இங்கு அமைந்தது ஒரு கொடையென்றே தோன்றுகிறது” என்றாள்.
நகரின் பல மாளிகைகளில் சாளர ஆடிகள் இருளில் நீர்ப்பரப்பென மின்னிக்கொண்டிருந்தன. அவற்றில் சாலையில் ஒழுகிய அசைவுகள் நெளிந்துகொண்டிருந்தன. யுயுத்ஸு அவற்றை திரும்பி நோக்கிக்கொண்டே சென்றான். அவன் முகம் அவற்றில் தோன்றித் தோன்றி மறைந்தது. அஸ்தினபுரி விழிபெருகி அமைந்திருந்தது. பலவகையான விழிகள். நாகங்கள்போல, குழிமுயல்கள்போல, வண்டுகள்போல, ஈக்கள்போல, புழுக்கள்போல. உருண்டவை, ஒளிர்பவை, கூர்பவை, அறிபவை. அவ்விழிகளுக்கு நடுவே அவன் நகரினூடாகச் சென்றான். ஒவ்வொன்றும் அவனிடம் பேசிக்கொண்டிருந்தன. அவன் அச்சொற்களை கேட்டுக்கொண்டே சென்றான். நன்கறிந்த சொற்கள். அவன் உள்ளம் விழைந்த சொற்கள். என்றும் அங்கு திகழும் சொற்கள். ஆனால் அவை மூதாதையரின் சொற்களாக ஒலிக்கவில்லை. எழவிருக்கும் மைந்தர்களின் சொற்களாகக் கேட்டன.