களிற்றியானை நிரை - 26

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 9

சாரிகர் தன் அறைக்குள் சிறிதுநேரம்தான் ஓய்வெடுத்தார். சுவர்களுக்குள் இருக்க அவரால் முடியவில்லை. வெளியே வந்து புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு ஊருக்குள் புகுந்து தெருக்களினூடாக சுற்றிவந்தார். அது ஊர் போலவே தெரியவில்லை. ஓர் ஓய்விடத்தின் உளநிலையே அங்கிருந்தது. எங்கும் எத்தொழிலும் கண்ணுக்குப்படவில்லை. எவரும் எங்கும் செல்லவோ வரவோ இல்லை. தெருக்களில் மக்கள் அமைதியாக அமர்ந்து தளர்வான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நடந்தவர்கள் மிகமெல்ல காலடிவைத்து, அவ்வப்போது நின்று எதிரே வருபவரிடம் பேசியபடி சென்றனர். பகலில் வெயில் எழுந்துவிட்டிருந்தபோதும்கூட ஊர் அரைத்துயிலிலேயே இருந்தது.

அவர் ஊரின் கணிகையரை நோக்கிக்கொண்டு சென்றார்7. அவர்கள் அனைவருமே நல்லாடை அணிந்து, சிரித்துப்பேசிக்கொண்டு சாலைகளில் சென்றபோதிலும்கூட சோர்வுற்றிருந்ததை கண்டார். அங்கே ஒவ்வொன்றும் மாறிக்கொண்டிருக்கிறது, அந்த மாற்றத்தை அவர்கள் உணர்ந்துவிட்டிருக்கின்றனர், அது விழிக்கு தெரியவில்லை. விரைவிலேயே கோட்டை விளிம்புவரை சென்றுவிட்டார். அதையொட்டியே சுற்றி முகப்பு வரை வந்தார். அக்கோட்டை மேற்கே திரும்பித் திறந்திருக்கும் ஒற்றை வாயில் மட்டுமே கொண்டது. காவல் இருந்தவர்கள் அவருக்கு வணக்கம் கூறினர்.

அவர் கோட்டையினூடாக வெளியே சென்றார். இருபுறமும் புல்வெளி விரிந்து கிடந்தது. செழித்த பசும்புல்வெளி அல்ல. பூசணம் பரவியதுபோல வெண்ணிற நிலப்பரப்பில் புல்பரவியிருந்தது. காலையில் அங்கே அவிழ்த்துவிடப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அவற்றை அடித்தாடையால் கரம்பி தின்றுகொண்டிருந்தன. சற்று அப்பால் ஒரு சுனை இருக்கக்கூடும். அங்கே பசுக்கள் கூட்டமாக கூடி நின்றிருந்தன. முள்மரங்களுக்குக் கீழே சில பசுக்கள் படுத்திருந்தன. அவர் புல்வெளியின் எல்லை வரை சென்றார். அதற்கப்பால் வெண்மணல் விரிந்த பாலைநடுவே பாதை ஒரு வடுவென நீண்டு தொடுவான் நோக்கி சென்றது.

அவர் திரும்ப எண்ணியம்போது தொலைவில் ஒரு சிறு குழு வருவதை பார்த்தார். அவர்கள் எவர் என்று நோக்கி நின்றார். அவர்களின் கொடி குருதிச்செம்மையுடன் இருந்தது. அவர்களில் எண்மர் புரவிகளில் முன்னால் வந்தனர். தொடர்ந்து புரவி இழுத்த சிறிய கூண்டுவண்டி வந்தது. அந்த வண்டி ஒரு பீதர்நாட்டுப்பேழை போலிருந்தது. மென்மரப்பட்டையால் அமைக்கப்பட்டு மேலே செந்நிறமும் நீலநிறமும் கலந்த பட்டு ஒட்டி அணிசெய்யப்பட்டது. அந்த வண்டி அணுகி வந்தபோது அது பீதர்குடி வணிகனுக்குரியது எனத் தெரிதது. துவாரகையின் காவலர் அதை காத்துவந்தனர்.

அவரை அணுகிய முதன்மைக்காவலன் “நாங்கள் அஸ்வபதம் நோக்கி செல்கிறோம். தாங்கள் அங்கே இருப்பவரா?” என்றான். “ஆம்” என்ற சாரிகர் “வருக!” என அழைத்துக்கொண்டு திரும்பினாஎ. “இவர் பீதர்நாட்டு மருத்துவர். பீதர்நாட்டிலிருந்து இப்போதெல்லாம் கப்பல்கள் துவாரகைக்கு வருவதில்லை. நேற்று மாலை ஒரு சிறிய கப்பல் வந்தது. அதில் பொருட்களென ஏதுமிருக்கவில்லை. அக்கப்பல் மாளவத்தின் துறைக்கு சென்றுகொண்டிருந்தது. அதில் ஏதோ பழுது என கரையணைந்தது. அதில் இருந்தவர் இந்த மருத்துவர்” என்றான் வீரன்.

“மிக முதியவர். தன் இரு மாணவர்களுடன் துவாரகைக்குள் வந்தார். இளவரசர் சாம்பரை சந்திக்க அழைத்துச்சென்றோம். ஆனால் அவர் உடனே அஸ்வபதத்திற்கு செல்லவேண்டும் என்றார். எதன்பொருட்டு என அவருக்கே தெரியவில்லை. அவருக்கு ஆணைவந்தது என்றார். என்ன ஆணை என்றால் அங்கு செல்க என்றுமட்டுமே ஆணை என்றார். இளவரசர் சாம்பரின் அவையில் இவர் அதை சொன்னபோது அவர் எரிச்சல்கொண்டார். கொண்டுசெல்க என ஆணையிட்டார்.”

“அவரும் இரு மாணவர்களும் வண்டிக்குள் இருக்கிறார்கள். விந்தையான உடை அணிந்தவர்கள். அந்த ஆடை குருதிச்செம்மை வண்ணத்தில் அமைந்தது. கைகளை விரித்தால் சிறகுவிரிக்கும் பட்டாம்பூச்சியென ஆவது” என்று இன்னொரு காவலன் சொன்னான். “இங்கே ஏன் அவர் வருகிறார் என்பதை வழியெங்கும் நாங்கள் பேசிக்கொண்டோம். இது வேட்டைக்கான ஊர். இப்போது வேட்டை நிகழ்வதில்லை. சாம்பர் சற்று உடல்நலம் குன்றியிருக்கிறார். தாங்கள் யார்?” சாரிகர் “நான் அஸ்தினபுரியின் தூதன். இங்கே தங்கியிருக்கிறேன், அரசியின் விருந்தினன்” என்றார். “அஸ்தினபுரியிலிருந்து இங்கே வருகிறார்களா என்ன? விந்தைதான்!” என்றான் ஒரு காவலன்.

அவ்வீரர்கள் நாவின் மேல் எந்த ஆணையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பேசிக்கொண்டே செல்ல விழைந்தனர். துவாரகை அதன் படையொழுங்கை முற்றாக இழந்துவிட்டது என்றும், மொத்த நகருமே எந்த அலுவலுமின்றி சழக்குபேசி பொழுதுநீக்கிக்கொண்டிருக்கிறது என்றும் சாரிகர் எண்ணிக்கொண்டார். “அஸ்தினபுரியிலிருந்து நீங்கள் இங்கே வந்தது எதற்காக? அங்கே மக்கள் பெருந்திரளாக கூடிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டோமே” என்று ஒருவன் சொன்னான்.

சாரிகர் மறுமொழி சொல்லவில்லை. அவருடைய உளவிலக்கை உணராமல் இன்னொருவன் “யுதிஷ்டிரன் ராஜசூயம் நிகழ்த்தவிருப்பதாக சொன்னார்கள்” என்றான். “அங்கே இளைய யாதவரின் இடம் என்ன? அவர் மாமன்னர் யுதிஷ்டிரனின் அரசவையில் அமர்ந்திருக்கும் அறிஞர் மட்டுமே என்றார்கள். அரசரை புகழ்ந்து பாடி பரிசில் பெறுகிறாரா என்ன?” அவர்கள் நகைத்தனர். “அவர் குழலூதி பரிசில் பெறுவார்” என்றான் ஒருவன். மீண்டும் நகைப்பொலி.

“நீங்கள் விருஷ்ணிகளா?” என்று சாரிகர் கேட்டார். “ஆம், நாங்கள் தொல்குலத்தார். மதுரையில் வாழ்ந்தவர்கள்” என்றான் ஒருவன். “கம்சரின் வழித்தோன்றல்களா?” என்று சாரிகர் கேட்டார். “ஆம், அதனாலென்ன? யாதவகுடியின் மாமன்னர் அவர். அவர் காலத்தில் மகதமே யாதவர்களுக்கு துணைநின்றது. பாரதவர்ஷமே யாதவர்களை அஞ்சியது…” என்று ஒருவன் சொன்னான். “அவருடைய வீழ்ச்சிக்குப் பின்னர்தான் எங்கள் சீரழிவு தொடங்கியது. அவர் மாவீரர், வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டார்” என்றான் இன்னொருவன். சாரிகர் புன்னகைத்துக்கொண்டார்.

“புன்னகைக்கிறீர் அந்தணரே. அறிக, கார்த்தவீரியனுக்குப்பின் எங்கள் குடியில் பிறந்த பெருந்தலைவர் கம்சரே! அவரை நாங்கள் அஞ்சினோம். ஆகவே வெறுத்தோம். ஆனால் குடிகளில் அச்சத்தை உருவாக்குபவரே சிறந்த அரசர் என இப்போது உணர்கிறோம்” என்று முதல்காவலன் சொன்னான். “இங்கே தாசிகளுடன் ஆடிக்கொண்டிருப்பவர்களால் எவரையும் காக்கமுடியாது. அதை உணர எங்களுக்கு ஒரு தலைமுறைக்காலம் ஆகிவிட்டது” என்று காவலர்தலைவன் சொன்னான்.

அவர்கள் கோட்டைவாயிலை அடைந்தனர். அவர்களை ஒருவினாவும் இன்றி உள்ளே அனுப்பினார்கள். சாலைகளில் அவர்கள் சென்றபோது முதல்முறையாக ஊரில் ஓர் ஆர்வம் எழுந்தது. முதியவர்கள் கைகளை கண்மேல் வைத்து நோக்கினர். கணிகையர் சாளரங்களில் குவிந்தனர். ஒருவர் அருகே வந்து சாரிகரிடம் “பீதர்களா? அரசவிருந்தினராக வேட்டைக்கு வந்திருக்கிறார்களா?” என்றார். சாரிகர் “ஆம்” என்றார். “நன்று, மீண்டும் கப்பல்கள் வரத்தொடங்கிவிட்டிருக்கின்றன போலும்” என்று முதியவர் அப்பால் நின்று சொன்னார்.

அவர்கள் அரண்மனையை அடைந்தனர். வண்டிகள் நின்றன. உள்ளிருந்து முதிய பீதர் ஒருவர் வெளியே இறங்கினார். அவருடைய தலைமயிர் மென்மையாக நீண்டு இறகுகள்போல தோளில் கிடந்தது. மீசையும் தாடியும் மெல்லிய வெண்பட்டு நூல்கள் போல தொங்கின. உடல் நன்றாக கூன்விழுந்து குறுகியிருந்தது. அவரைத் தொடர்ந்து இரு இளம்பீதர்கள் இறங்கினர். அவர்கள் ஆண்களா பெண்களா என்றே அவரால் அடையாளம் காணமுடியவில்லை. வெள்ளிநூலால் அணிப்பின்னல் செய்யப்பட்ட குருதிச்செந்நிறப் பட்டாடையை அணிந்து நீலநிறக் கச்சை கட்டியிருந்தனர். இளையோர் கைகளில் ஆமையோட்டு மூடியிடப்பட்ட பேழைகள் இருந்தன.

முதியவர் சாரிகரிடம் “அந்தணரே, இந்த ஊரின் பெயர் அஸ்வபதமா?” என்றார். “ஆம்” என்று அவர் சொன்னார். “என் பெயர் அஸ்வன். உங்களூருக்கான பெயர் இது. முன்பு இளைய யாதவர் துவாரகையை ஆட்சி செய்தபோது பலமுறை அந்நகருக்கு வந்திருக்கிறேன்” என்றார். “நான் ஒரு மருத்துவன். மருத்துவம் குறித்து இளைய யாதவரிடம் நிறைய பேசியிருக்கிறேன். அவர் என் தோழர். என்னுடன் பீதர்நாட்டுக்கு வரும் எண்ணம்கூட அவருக்கு இருந்தது.” சாரிகர் “ஆம், அவர் அறியாதவை குறைவு” என்றார். “அவர் இங்கில்லை என அறிந்தேன். நான் அவருடைய ஆணைப்படி இங்கே வந்தேன்” என்றார் அஸ்வன்.

“அவர் எவ்வண்ணம் அந்த ஆணையை அளித்தார்?” என்று சாரிகர் கேட்டார். “அவர் ஆணையை அளித்தது இப்போதல்ல, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு” என்றார் அஸ்வன் .“அன்று ஒருமுறை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒருநாள் என் உதவி அவருக்கு தேவைப்படும் என்றார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தூதர்கள் தாம்ரலிப்திக்கும் தேவபாலபுரத்திற்கும் வந்து என்னை தேடியிருக்கிறார்கள். எங்கள் கலக்காரர்கள் வழியாக அச்செய்தியை நான் அறிந்துகொண்டேன். ஆகவே கிளம்பி துவாரகைக்கு வந்தேன்.” சாரிகர். “பதினெட்டாண்டுகளுக்கு முன்பா?” என்றார். “ஆம், அப்போது அவருடன் சாந்தீபனி குருநிலையின் முதிய அந்தணர் ஒருவரும் ஏழு நிமித்திகர்களும் இருந்தனர்.”

“நான் அரசியிடம் ஒப்புதல் பெற்று வருகிறேன்” என்று சொல்லி சாரிகர் முன்னால் சென்றார். ஏவலனிடம் செய்தியைச் சொல்லி சத்யபாமையிடம் அனுப்பிவிட்டு திரும்பி வந்தார். “நீங்கள் எதன்பொருட்டு இங்கே வந்தீர்கள் என அறியலாமா?” என்றார் சாரிகர். “மெய்யாகவே அது எனக்குத்தெரியாது. இங்கே நான் இருக்கவேண்டும் என்பது மட்டுமே ஆணை” என்றார் அஸ்வன். “நீங்கள் செய்யும் மருத்துவம் என்ன?” என்று சாரிகர் கேட்டார். “அனைத்து மருத்துவங்களும்… நான் பெரும்பாலும் மரக்கலங்களில் இருப்பவன். ஆகவே உயிர்தக்கவைக்கும் மருத்துவமே என் ஆய்வில் முதன்மையானது. கரை அணுகும்வரை நோயில் இருப்பவர்களை உயிர்நீட்டி கொண்டுசெல்வேன்.”

அவர் மீண்டும் வியந்து சொல்லற்று நின்றார். ஏவலன் வந்து அரசியின் ஆணையை அறிவித்தான். சாரிகர் “வருக, நானே நீங்கள் தங்குவதற்கான இடத்தை ஒருக்குகிறேன்! ஓய்வெடுங்கள்” என்றார். அஸ்வன் “ஓய்வெடுக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த இடம், இங்கே நாங்கள் வந்த நோக்கம் எல்லாமே புரியாத கனவு எனத் தோன்றுகிறது” என்றார்.

அஸ்வனையும் மாணவர்களையும் அரண்மனையை ஒட்டிய அறைகளில் தங்கவைத்துவிட்டு சாரிகர் தன் அறைக்கு வந்தார். சிறிதுநேரம் மஞ்சத்தில் படுத்து கூரையின் பலகைப்பரப்பை நோக்கிக்கொண்டிருந்தார். மெல்ல சிறுதுயில் ஒன்றுக்குள் சென்றார். குருதிமணம் எழுந்தது. அதை உணர்ந்ததும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். உடல் நடுங்கிக்கொண்டிருக்க மஞ்சத்திலேயே அமர்ந்திருந்தார். உச்சிப்பொழுதுக்கான உணவு அருந்தும்பொருட்டு ஏவலன் வந்து அழைத்தபோதுதான் எழுந்தார்.

உணவு பரிமாறப்பட்ட சிறுமேடை முன் அமர்ந்து அவர் அன்னத்தை கையில் எடுத்ததும் மீண்டும் குருதிமணம் எழுந்தது. உடல்குமட்டி அதிர அன்னத்தை அப்படியே வைத்துவிட்டு எழுந்துகொண்டார். கைகழுவிக்கொண்டு தன் அறைநோக்கி செல்கையில் அரண்மனை பரபரப்படைந்துவிட்டிருப்பதை உணர்ந்தார். சேடியிடம் “என்ன? என்ன நிகழ்கிறது?” என்றார். “இளவரசி குருதிபெருக்கிக்கொண்டிருக்கிறார்” என்று அவள் சொன்னாள். அவளைத் தொடர்ந்து வந்த இன்னொரு சேடி “மருத்துவச்சிகளை அழைக்கச் செல்லுங்கள்… இங்கிருப்பவர்கள் தாதிகள்… முதுமகளை கேட்கிறார்கள்” என்றாள்.

அவர் அவள் பின்னால் சென்றார். உத்தரையின் சிற்றறைக்கு முன் சத்யபாமை நின்றிருந்தாள். அவரைப் பார்த்ததும் ஓடிவந்து “இங்கே இருக்கும் மருத்துவச்சிகள் திகைத்திருக்கிறார்கள். குருதி கட்டின்றி பெருகிக்கொண்டிருக்கிறது. முதுமகள் ஒருத்தி இருக்கிறாள் என்கிறார்கள். அவளை அழைக்கச் சென்றிருக்கிறார்கள் சேடியர். எனக்கு நம்பிக்கை இல்லை. முதுமகள்மேல் பழியைப்போடவே அவ்வண்ணம் சொல்கிறார்கள் எனத் தோன்றுகிறது” என்றாள். சாரிகர் “அரசி, இங்கே திறன்மிக்க பீதர்நாட்டு மருத்துவர்குழு ஒன்று இன்று வந்துள்ளது” என்றார். அவள் திகைத்து வாய்திறந்து நின்றாள். பின்னர் “இதற்காகத்தானா?” என்றாள். “ஆம்” என்று அவர் சொன்னார். “அவர்களை அழைத்துவருகிறேன்” என்றபின் மறுமொழிக்குக் காத்திராமல் திரும்பி ஓடினார்.

அவர் சென்றடைவதற்கு முன்னரே அஸ்வரும் மாணவர்களும் கிளம்பிவிட்டிருந்தார்கள். அவனைக் கண்டதும் “என்ன நடக்கிறது என்று கேட்டேன். அனைத்தையும் புரிந்துகொண்டேன்…” என்று அவர் சொன்னார். நடுங்கும் உடலும் சிற்றடிகளுமாக நடந்தாலும் மெல்லிய இறகுபோல பாறிப்பாறி அவர் விரைவாக முன்னால் சென்றார். அவருடைய மாணவர்கள் அவருடன் விரைந்தபடி அவருடைய சொற்களை கேட்டனர். அவர் அவர்களின் மொழியில் பேசிக்கொண்டே சென்றார். உத்தரையின் அறைமுகப்பில் சுபத்ரையும் சத்யபாமையும் நின்றிருந்தனர். சத்யபாமை “இவரா? முதியவராகத் தெரிகிறார்” என்றாள்.

அஸ்வன் முறைப்படி வணக்கம் சொல்லிவிட்டு தன் மாணவர்களுடன் உள்ளே செல்ல முற்பட சுபத்ரை “இங்கே ஆண்கள் உள்ளே செல்ல ஒப்புதல் இல்லை” என்றாள். சத்யபாமை “மருத்துவர்களுக்கு ஒப்புதல் உண்டு. செல்க!” என்றாள். அவர்கள் உள்ளே சென்றார்கள். உள்ளே இருந்த சேடியரும் மருத்துவச்சிகளும் வெளியே வந்தார்கள். மருத்துவச்சி “குருதிப்பெருக்கு…. அந்தச் சிற்றுடலுக்குள் இத்தனை குருதியா என்றே வியப்பெழுந்தது” என்றாள். இன்னொருத்தி “பிரம்மன் வந்தாலொழிய எதையும் செய்ய இயலாது. அஸ்வினிதேவர்களும் கையொழிவார்கள்” என்றாள்.

சாரிகர் பதற்றத்துடன் கால் மாற்றி நின்றார். அங்கே நின்றிருந்த பெண்கள் அனைவருமே போதிய பதற்றம் இன்றி இயல்பாக இருப்பதுபோலத் தோன்றியது. அவர்கள் மெல்லிய குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். சுபத்ரை கைகளை மார்பில் கட்டியபடி அங்குமிங்கும் நடந்தாள். பின்னர் “என்ன நிகழ்கிறது என்று எவரேனும் சென்று நோக்கி வருக!” என்றாள். சத்யபாமை “அவர்கள் அழைக்கட்டும்…” என்றாள். சுபத்ரை சினத்துடன் அவளை நோக்கிவிட்டு அகன்று சென்று அங்கிருந்த சிறிய பீடத்தில் அமர்ந்தாள்.

சாரிகர் அங்கிருந்து கிளம்பி மீண்டும் திறந்த புல்வெளிக்குச் சென்று நிற்க விழைந்தார். அங்கிருந்து செல்ல என்ன வழி என எண்ணினார். ஏதேனும் ஆணை கிடைத்தால் செல்லலாம். அல்லது எதையாவது நினைவுகூரவேண்டும். அல்லது எவராவது அழைக்கவேண்டும். அவர் நிலையிழந்து கைகளை உரசிக்கொண்டார். விரல்களின் நுனிகள் உயிரிழந்தவைபோலிருந்தன. விடாய் கொண்டிருப்பதுபோல தொண்டை பதைத்துக்கொண்டிருந்தது. அவர் எங்காவது அமர விழைந்தார். ஆனால் அரசி நின்றிருக்கையில் அமர்வது மீறல் என்றும் அறிந்திருந்தார்.

கதவு மிகமெல்லிய ஓசையுடன் திறந்தது. பீதர் இளைஞன் வெளியே எட்டிப்பார்த்து “மைந்தன் பிறந்திருக்கிறான்” என்றான். சத்யபாமை “மைந்தனா? இன்னும் மாதம் நிறையவில்லை. குறைபிறப்பா?” என்றாள். “ஆம், மிகச்சிறிய குழவி” என்றான். “உயிர் இருக்கிறதா?” என்று அவள் கேட்டாள். “உயிர் இருக்கிறது, ஆனால் அசைவேதும் இல்லை. மூச்சு மெல்ல ஓடுகிறது. இதயம் அதிர்கிறது” என்றான். சாரிகரிடம் “எங்கள் அறையில் பெரிய பேழை ஒன்று உள்ளது. அதை உடனே கொண்டு வருக… அதை நால்வர் சேர்ந்தே தூக்கமுடியும்” என்றான்.

சாரிகர் இடைநாழிகளினூடாக ஓடி வெளியே சென்று ஏவலரை கைநீட்டி அழைத்தபடி விரைந்தார். பீதர்களின் அறையிலிருந்த காவலனிடம் “அவர்கள் கொண்டுவந்த பேழைகளில் பெரியது எது?” என்று கூவினார். “ஆம், பெரிய பேழை அது. அவர்கள் அதை வண்டியிலிருந்து இறக்கி கொண்டுசென்று அங்கே வைத்தனர். அது மிகுந்த எடைகொண்டது” என்று அவன் சொன்னான். அவன் சுட்டிக்காட்டிய பேழை முழங்கால் அளவு உயரமிருந்தது. வெண்கலத்தால் ஆனது. அதன் மூடியில் நுண்ணிய சிறு துளைகள் இருந்தன. “அவர்கள் அதைத் திறந்து உள்ளே உப்புநீரை ஊற்றினார்கள்” என்றான் காவலன். “அதை தூக்குங்கள்… அதனுள் நீர் இருக்குமென்றால் சிந்தக்கூடாது” என்று சாரிகர் சொன்னார்.

பேழையுடன் மீண்டும் அவர் உத்தரையின் அறைவாயிலை அடைந்தபோது இரு பீதர்கள் அவருக்காகக் காத்து நின்றிருந்தனர். அவர்கள் “விரைந்து…”என்றனர். “உள்ளே கொண்டு செல்க!” என்றான் ஒருவன். சுபத்திரை “என்ன இது? ஈற்றறைக்குள் ஏவலரா?” என்று சீறியபடி எழுந்தாள். சாரிகர் “நான் கொண்டுசெல்கிறேன்…” என்று சொல்லி ஏவலரை விலக்கினார். பீதர்களிடம் “பிடியுங்கள்” என்றார். மூவரும் அதை இழுக்க அதன் எடையால் அது தள்ளாடியது. சுபத்ரை வந்து “விலகுக!” என்றுகூறி அதை தான் மட்டுமே தூக்கி கதவை காலால் உதைத்துத் திறந்து உள்ளே கொண்டுசென்றாள்.

உள்ளே அஸ்வன் நின்றிருந்தார். அவர் திரும்பி நோக்கி “அங்கே வையுங்கள்” என்று ஆணையிட்டார். அவள் அதை கீழே வைத்ததும் பீதர்கள் அதை திறந்தனர். உள்ளே இருந்தபொருள் என்ன என்று அவருக்கு தெரியவில்லை. ஒருமுழத்திற்கும் சற்று குறைவான நீளமும் பாதியளவு அகலமும் கொண்ட மண்ணாலான சிற்பம்போல் இருந்தது. அல்லது பழுப்புநிறமான பாறையா? பேழைக்குள் மணலும் நீரும் பாதியளவு இருக்க அதில் பாதி மூழ்கியபடி அது மணல்மேல் வைக்கப்பட்டிருந்தது.

அவர் மேலும் குனிந்து அதை பார்த்தார். சுபத்ரை “அது என்ன? முத்துச்சிப்பியா?” என்றாள். “அதைக் கொண்டு என்ன செய்யவிருக்கிறீர்கள்? எங்கே அந்தக்குழந்தை?” அஸ்வன் அவளிடம் ஆழ்ந்த மென்குரலில் “நீங்கள் வெளியே செல்லுங்கள்” என்றார். “நான்…” என்று அவள் சொல்லத்தொடங்க அவர் கைசுட்டி “வெளியே…” என்றார். அவள் திகைத்து பின் உறுமியபடி வெளியே செல்ல கதவு அறைபடும் ஓசையுடன் மூடிக்கொண்டது. அஸ்வனும் இரு மாணவர்களும் சேர்ந்து அந்த முத்துச்சிப்பியை மெல்ல தூக்கினர். அத்தனை பெரிய சிப்பியா? அது சிப்பியின் வடிவில் இல்லை. அவர்கள் அதை அருகிருந்த மேடையின்மேல் வைத்தனர்.

சாரிகர் அப்போதுதான் குழந்தையை பார்த்தார். முதலில் அது என்னவென்றே அவருக்கு தெரியவில்லை. உத்தரையின் உடல்மேல் போர்த்தப்பட்டிருந்த மெல்லிய போர்வை இடைக்குக்கீழே குருதியில் ஊறி நிணச்சவ்வுபோல மாறிவிட்டிருந்தது. அவளுடைய விரிந்த தொடைகளுக்கு நடுவே தேங்கிய செங்குழம்பின்மேல் அக்குழவி வைக்கப்பட்டிருந்தது. அது குருதியில் ஊறி தொப்புள்கொடிச்சுருள்களுடன் குவியலெனக் கிடந்தது. குடல்தொகை பிதுங்கி வெளியே வந்துவிட்டதுபோல என்று அவருக்கு தோன்றியது. அவள் உடலில் இருந்து அப்போதும் குருதி சிறு குமிழிகளாக வெடித்து வெளிவந்துகொண்டிருந்தது.

அஸ்வன் தன் கையிலிருந்த கழுகின் உகிர் அளவுக்கே இருந்த சிறிய கூரிய கத்தியால் சிப்பியின் பொருத்தை நெம்பி மெல்ல திறந்தார். அதை கைகளால் அவர் விரித்தபோது முதலை வாய்திறந்ததுபோல உள்ளே செஞ்சதைக் கதுப்பு மெல்லிய அதிர்வுடன், குமிழியிடுவதுபோன்ற அசைவுடன் தெரிந்தது. அவர் திரும்பி குழந்தையை நோக்கினார். தன் கைகளை அருகிலிருந்த குடுவையில் கலக்கப்பட்டிருந்த இளநீலமான நீரில் கழுவிவிட்டு அந்தத் தொப்புள் கொடியை முதலில் நீளமாக வெட்டி அதைக்கொண்டே குழந்தையை மெல்ல தூக்கினார்.

குழவி அவர் கையளவுக்கே இருந்தது. அதன் தலை அவ்வுடம்பில் பாதியளவுக்கு ஒருபெரிய குருதிக்குமிழிபோல தெரிந்தது. இன்னொரு குமிழியென வயிறு. கைகளும் கால்களும் அவருடைய விரலளவுக்கே இருந்தன. செந்நிறமான புழுக்களைப்போல. மிகமிகச் சிறிய விரல்கள். அதன் தொண்டை அதிர்ந்துகொண்டிருந்தது. உடல் அசைவிழந்து அவர் கைகளில் இருந்த தொப்புள்கொடியின் வழவழப்பில் குழைந்தது. அவர் அந்த ஊன்சரட்டைச் சுழற்றி அதன் இரு கால்களிலும் சுற்றி தலைகீழாக ஆக்கி இருமுறை உலுக்கினார். அதன் மூக்கிலிருந்து குருதிநீர் வெளிவந்தது. அதை அப்படியே மெல்ல தூக்கி கொண்டுசென்று அந்தச் சிப்பியின் தசைக்கதுப்பில் வைத்தார்.

அவர் கைநீட்ட இளம்பீதன் குதிரைவால் முடியை அளித்தான். தொப்புள்கொடியை விரற்கடை விட்டு வெட்டி முனையை மடித்து குதிரைவால்முடியால் கட்டினார். அந்தச் சிப்பியை மெல்ல மூடினார். அதை பீதர்கள் இருவர் மெல்ல தூக்கிக்கொண்டுசென்று அப்பால் வைத்தனர். அஸ்வன் திரும்பி உத்தரையை பார்த்தார். அவள் உதடுகள் மெல்ல அசைந்தன. அவர் திரும்பி பீதர்களிடம் கைநீட்ட அவர்கள் சிறு சிமிழில் இன்நீரை அளித்தனர். அவர் அதை அவளுக்கு ஊட்டினார். அவள் உதடுகள் விடாயுடன் அசைந்து அதை வாங்கின. தொண்டை நீரை உறிஞ்சி உண்ணும் அசைவு தெரிந்தது.

“ஆண்மகவு” என்று குனிந்து அவள் காதில் அஸ்வன் சொன்னார். “ஆண்மகவு, பார்க்கிறீர்களா இளவரசி?” அவள் வேண்டாம் என்று தலையை ஆட்டினாள். “உங்கள் மைந்தன்” என்று சாரிகர் சொன்னார். அவள் மீண்டும் மறுப்பாக தலையசைத்தாள். அஸ்வன் “அது உறுதியான முடிவு” என்றார். சாரிகர் பெருமூச்சுவிட்டார். “நீங்கள் வெளியே செல்லலாம் அந்தணரே. நாங்கள் இளவரசியை தூய்மைசெய்யப்போகிறோம்” என்றார் அஸ்வன். சாரிகர் தயங்கி உத்தரையை பார்த்தார். அவர் உள்ளம் மலைப்படைந்திருந்தது. கண்வழியாகப் புகுந்த காட்சிகள் உடலை நிறைத்து பலமடங்கு எடைகொண்டதாக ஆக்கிவிட்டிருந்தன.

“இளவரசி பிழைத்துக்கொள்வார்களா?” என்று கேட்டார். “அவர்கள் விழையவேண்டும்” என்றார் அஸ்வன். அவர் திரும்பி குழவி இருந்த சிப்பியை பார்த்தார். “மைந்தன் உயிர்வாழ்வானா?” என்றான். “அவர் விழையவேண்டும்” என்றார் அஸ்வன். “ஆனால் பிறக்கும் உயிர்கள் அனைத்தும் வாழும் விழைவை கொண்டிருக்கின்றன. அவை அதன்பொருட்டு அனைத்து தெய்வங்களையும் உடனழைத்துக்கொள்கின்றன.” அவர் அச்சிப்பியையே பார்த்துக்கொண்டு நின்றார். அதற்குள் ஒரு குழவி இருக்கிறது என்று எண்ணமுடியவில்லை. தன் விழிகளை கொட்டிக்கொட்டி அந்தக் காட்சிகளை உதிர்த்துவிட முயன்றார்.

கதவைத்திறந்து வெளியே சென்றபோது சத்யபாமை எழுந்து அருகே ஓடிவந்து “என்ன ஆயிற்று?” என்றாள். “இருவருமே இப்போது உயிருடன் இருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். ஓர் அனல் அலை என விடாய் வந்து அவரை தாக்கியது. எங்காவது அமரவேண்டும், உடல்குளிர இன்நீர் அருந்தவேண்டும் என்று தோன்றியது. கண்களில் இருந்து அதுவரை கண்ட அத்தனை காட்சிகளும் மறைய நோக்கு வெளிறி அலைகொண்டது. ஏதோ சொல்ல அவர் நாவெடுத்தார். அதற்குள் பிடித்து தள்ளப்பட்டதுபோல் வலப்பக்கமாக சரிந்து விழுந்தார்.