களிற்றியானை நிரை - 18

பகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 1

யுயுத்ஸு இடைநாழியினூடாக பதற்றமாக நடந்தான். அவனைத் தொடர்ந்து சாரிகர் விரைவு நடையாக சென்றார். செல்லும்போதே யுயுத்ஸு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருக்க ஏவலர் அவன் அருகே வந்து ஆணைகளை பெற்றுக்கொண்டு விலகினர். யுயுத்ஸு “நகரம் முழுக்க காவல் எவ்வாறு உள்ளது என்னும் செய்தி எனக்கு உடனே வந்தாகவேண்டும். இப்போது நமது பொறுப்பு மிகமிகக் கூடியிருக்கிறது” என்றான். காவலர்தலைவன் தலைவணங்கினான். “இந்நகரில் இதுவரை இருந்த பெருந்திரள் உரிய காவல் இல்லாமலேயே இருந்திருக்கிறது. அனைவரும் அயலவர். வெறுங்கையுடன் உள்ளே வந்தவர். காட்டுக்கு ஏன் வேலி என்று அப்போது தோன்றியது. இப்போது நாடெங்கிலுமிருந்து உயர்குடியினர், கற்றோர், அந்தணர், முனிவர் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு சிறு தீங்கு ஏற்பட்டால்கூட அஸ்தினபுரிக்கு பெருங்களங்கமாக அது ஆகிவிடும்.”

யுயுத்ஸுவின் உடலே பதற்றப்படுவதற்குரியதாக மாறிவிட்டிருந்தது. சற்றே கூன் விழுந்த தோள்களும், காற்றில் துழாவுவதுபோல் முன் நீண்டு அசைந்த கைகளும், முன் நோக்கி விழுந்துகொண்டே இருப்பது போலவோ காற்றில் சுழற்றி அடித்துச் சென்று கொண்டிருப்பது போலவோ விரைந்த நடையும், அவ்வப்போது நின்று பெருமூச்சுவிட்டு சூழ நோக்கி ஏதோ சொல்ல நாவெடுத்து மீண்டும் விரையும் இயல்புமாக அவன் நோக்குபவர்களிடமும் பதற்றத்தை உருவாக்குபவனாகத் தோன்றினான். அரிய செய்தி ஒன்றை சொல்லச் செல்பவன் போலவோ, மறந்துவிட்ட ஒன்றை தேடி எடுக்கச் செல்பவன் போலவோ, தண்டனை பெற்றுக்கொள்ள தயங்கி நிற்பவன் போலவோ அவன் முகம் தோன்றியது.

சாரிகர் யுயுத்ஸுவையே கூர்ந்து நோக்கிக்கொண்டு உடன்சென்றார். யுயுத்ஸு பெரும்பாலான தருணங்களில் அத்தருணத்திற்குரிய பொது முடிவொன்றை சென்று எட்டுவதையே அவர் அறிந்திருந்தார். முதற்கணம் தோன்றும்போதே எவருக்கும் உள்ளத்தில் எழும் முடிவு அது. ஆனால் அதை யுயுத்ஸு நூறு வழிகளில் உலவி, ஆயிரம் முறை உசாவி, பல்லாயிரம் முறை ஐயுற்று அதன் பின்னரே சென்றடைந்தான். அதன் பின் அதை ஒவ்வொருவரிடமும் உசாவி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டான். ஆனால் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் சிறு குழந்தைகள் அன்னையை கவ்விப் பற்றிக்கொண்டிருப்பதுபோல அம்முடிவில் உறுதியாக இருந்தான். அதன் பொருட்டு சினந்தான், சொல்லாடினான், ஒரு தருணத்திலும் அதை மாற்றிக்கொள்ள மறுத்தான்.

முதலில் அவ்வியல்பு சாரிகருக்கு சிறு ஒவ்வாமையை அளித்தது. அந்த அகவையில் விந்தையான முடிவுகளும் குறுக்கு வழிகளுமே சாரிகர் உள்ளத்தை மின்னச்செய்தன. ஒரு தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத திசையை திறப்பவர்கள், விண்ணிலிருந்து பறந்திறங்குவதுபோல சூழலின் மையத்தை சென்றடைபவர்கள், ஒரு இழுப்பில் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்ப்பவர்களே அறிவாளிகள் என்று அவருக்குத் தோன்றியது. தன்னை ஓர் அமைச்சனாக, கூரறிவோனாக எண்ணிக்கொண்டார். அவைகளில் அறியப்படாதவனாக பின்னிரை தேர்வதே அவர் வழக்கம். குரல்கள் ஒலிக்கையில் அதில் மறைந்துகொள்வார். ஆனால் அவருள் ஆணவம் எழுந்து ஓங்கி நின்றிருக்கும். ஒவ்வொருவரையாக அவர் மாறிமாறி நோக்கிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு கூற்றையும் மறுப்பார், ஒவ்வொரு எண்ணத்தையும் ஏளனத்துடன் ஒதுக்குவார்.

காமம்சார்ந்த பகற்கனவுகள் அவரை அலைக்கழித்தன. ஆனால் அதைவிடப் பலமடங்கு தன்முனைப்பு சார்ந்த பகற்கனவுகள் அவருள் நுரைத்தன. அவற்றில் ஒரு துளியை எவரேனும் உணர்ந்தால் அவரை கீழ்மகனிலும் கீழ் என்றே எண்ணுவார்கள் என ஒருமுறை அவர் எண்ணிக்கொண்டார். “நான் அறிவன், நான் அமைச்சன், என்னை நீங்கள் நாளை அறிவீர்கள், வரலாறு என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது, இங்கேதான் முளைத்து எழுந்துகொண்டிருக்கிறேன்.” தன்னைச் சூழ்ந்து பேசப்படும் எல்லா சிக்கல்களுக்கும் அவர் தனக்குரிய விடைகளை வைத்திருந்தார். பெரும்பாலான தருணங்களில் அவற்றை அவர் சொல்வதில்லை. சொல்லும்போது அவரை அறியாமலேயே அவர் குரல் தழைந்து முகம் சிவந்து கண்களில் நீர்மல்கியது.

தன் எண்ணங்களைச் சொன்னதுமே அவர் அவற்றை சொல்லியிருக்கலாகாதோ என நாவை கடித்துக்கொண்டார். எவரேனும் அவர் எண்ணங்களை எதிர்த்துப் பேசினால் சுருங்கி உள்ளொடுங்கிக்கொண்டார். ஆனால் உள்ளே அவர் அவர்கள்மேல் ஆலகாலம் என எழும் கடும்வெறுப்பை வளர்த்துக்கொண்டார். அவர்களிடம் மீண்டும் விழிகொடுத்துப் பேச அவரால் இயல்வதில்லை. அதை உணர்ந்து அவர்கள் அவரிடம் தோளில் கைபோட்டு அன்புடன் பேசுகையில் அழுகை வர தலைகுனிந்து உதடுகளை கடித்துக்கொண்டார். தன் எண்ணங்களை பொருட்படுத்தாதவர்களை அவர் உள்ளூர கேலிப்பாவைகளாக மாற்றிக்கொண்டார்.

பிற இடர்கள் செவிகளில் படாதபோது அவரே விந்தையான சிக்கல்களை கற்பனை செய்து அவற்றை ஒரே கணத்தில் சீரமைத்தார். தானே முட்டிநின்றுகொள்ளும் சிக்கல்களை கண்டடைந்து திகைத்து அவற்றுக்கு எளிய விடைகளைக் கண்டடைந்து அவற்றை முன்வைக்கும் ஒரு நாடகத் தருணத்தை கற்பனை செய்து அதில் நடித்து தருக்கி எழுந்து நிற்கையில் அவர் யுயுத்ஸுவை குனிந்து நோக்கினார். தனக்கென அறிவும் தனித்த நோக்கும் இல்லாதவன் யுயுத்ஸு. எளியவனாகப் பிறந்தவன், குருதியுறவால் அரண்மனைச் சூழலில் எழுந்தவன். தருணங்களினூடாக வடிவெடுத்தவன். தன் வாழ்க்கை முழுக்க அவன் எதிர்கொண்டது அந்தந்த தருணங்களுடன் சரியாகப் பொருத்திக்கொள்ளும் அறைகூவலை மட்டுமே. அவன் அடைந்த வெற்றிகள் எல்லாம் கடந்துசெல்லுதல் மட்டுமே.

ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அரசனுடைய இயல்பென்பது அனைவருக்குமான பொது முடிவுகளுக்கு சென்று சேர்வதே என்று அவர் உணர்ந்துகொண்டார். யுயுத்ஸு சொல்சூழ்ந்து பதறி நிலைதடுமாறி “இதைச் செய்யலாம், இதுவே உகந்தது” என ஒரு முடிவைச் சென்றடைந்தபோது அவர் நிறைவடைந்தார். யுயுத்ஸு அம்முடிவிலேயே உறுதியாக நிலைகொள்வான் என அறிந்திருந்தமையால் அந்த ஆறுதல் வலிமைபெற்றது. அப்போது அவர் உணர்ந்தார், அதுவே அரசன் ஆற்றவேண்டிய பணி என. அரசன் என்பவன் வழிகாட்டியோ மெய்யறிதல் கொண்டவனோ அல்ல. அவன் பல்லாயிரம் துலாக்கோல்கள் நடுவே நின்றிருக்கும் முள். அவனது பணி நிலை நிறுத்துவது மட்டுமே. நெடுங்காலமாக இருந்து வந்தவற்றின் தொடர்ச்சி அவன். புதியனவற்றை கண்டு தயங்குதலே ஓர் அரசனுக்குரிய முதன்மை இயல்பு.

“அனைத்திற்கும் ஆயிரம் தரப்புண்டென்றும் ஒவ்வொரு உண்மைக்கும் மறுஉண்மை உண்டென்றும் உணர்ந்தவனே அரசன்” என்று அவர் ஒருமுறை சொன்னார். சுரேசர் நகைத்தபடி “அவன் அரசன் அல்ல, அமைச்சன்கூட அல்ல. வைசியகுலத்தில் எழுந்த சூதன்” என்றார். அவர் திகைத்தார். ஏன் தனக்கு அவ்வாறு தோன்றியது? உடனே உளம் உறுதிகொள்ள “ஆம், ஆனால் அவருடையது அரசர்களின் இயல்பு” என்றார். “எது அரசர்களின் இயல்பு?” என்று சுரேசர் கேட்டார். “ஓர் இறுதி முடிவெடுத்தபின் அவர் அதை எதன்பொருட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. அதற்காக நிலைகொள்கிறார். எவர் முன்பும் எந்நிலையிலும்” என்று அவர் சொன்னார். “அமைச்சர்கள் தங்கள் தரப்பை ஒரு கூற்றாகவே முன்வைக்கிறார்கள், நிலைபாடாக அல்ல. நிலைகொள்ளும் ஆற்றலே அரசனுக்குரியது.”

சுரேசர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் உள்ளத்தில் அவர் சொல் தைத்தது என அவர் உணர்ந்தார். சுரேசருக்கும் பிற சிற்றமைச்சர்களுக்கும் யுயுத்ஸுவின்மேல் பெருமதிப்பு ஏதும் இருக்கவில்லை. அவனுடைய குலம் அளிக்கும் மதிப்பின்மை ஒருபக்கம் எனினும் அதற்கப்பால் அவனுடைய மிகைப்பதற்றமும் அதை இயல்பாக வெளிப்படுத்துகையில் தோற்றம் தரும் ஆற்றலின்மையும் அதற்கு மேலும் வழி வகுத்தன. சுரேசர் எப்போதும் அனைத்து புது வழிகளிலும் துணிந்து சென்று எண்ணிப் பார்ப்பார். புது வழிகள் எதுவும் அமையவில்லை எனில் “ஆம், யுயுத்ஸு சொன்னதையே செய்வோம்” என்றார். ஒருமுறை அவர் “கிளிக்குறி உரைப்பவனின் கூண்டிலிருந்து வெளிவரும் கிளி போன்றவர் யுயுத்ஸு” என்றார். “அக்கிளி எப்போதும் ஒரே ஓலைச்சுருளையே எடுக்கிறது. ஓலைகளை மாற்றி மாற்றி வைத்து ஒவ்வொரு முறையும் அது வெவ்வேறு தெரிவுகளை செய்வதுபோல் காட்டுவது அந்தக் குறியுரைப்போனின் திறன்.”

அறையில் அப்போது அவரைச் சுற்றி கூடி நின்றவர்கள் புன்னகைத்தனர். “எப்போதும் ஒத்திப்போடுவதைப் பற்றியே யுயுத்ஸு எண்ணுகிறார். ஒத்திப்போடும் பொருட்டே கணக்கிடுவோம், முழுமைச் செய்திக்காக காத்திருப்போம், தனிப்பட்ட முறையில் இன்னொரு முறை எண்ணுவோம் என்கிறார். ஆனால் உண்மையில் பெரும்பாலான அரசியல் சிக்கல்களுக்கு ஒத்திப்போடுவதே உகந்த தீர்வு” என்றார் சுரேசர். “ஆனால் ஆயிரத்தில் ஒன்று ஒத்திப்போடப்படுவதனாலேயே பெரிதாகும். அணையை உடைத்துவிட்டு நீரை நிறுத்த முயல்வதுபோல அதன் பின் பதறுவோம். ஊழின்மேல், தெய்வங்களின்மேல் பழிபோடுவோம்.”

யுயுத்ஸு அப்போது அஸ்தினபுரியில் உள்ளே வந்துகொண்டிருக்கும் பெருந்திரளை எப்படி கையாள்வது என்பதை சொல்லிவிட்டுச் சென்றிருந்தான். “இங்கே அனைத்து இடங்களிலும் போட்டிகள் நிகழட்டும். விற்போரும் வாட்போரும் சொல்லாடலும் களமாடலும் ஒருங்கமையட்டும். வெல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படட்டும். நகரத்தில் இருக்கும் இல்லங்களும் அவற்றுடன் இணைந்த நிலங்களும் பிறவும் பரிசாக அளிக்கப்படவேண்டும். ஏதேனும் ஒரு போட்டியில் வென்றவர்களுக்கு மட்டுமே நகரத்துக்குள் இடம் அளிக்கப்படவேண்டும்” என்று அவன் சொன்னான். சுரேசர் சலிப்பை அடக்கிக்கொண்டபடி “ஆம், அம்முடிவை முன்னரே எடுத்துவிட்டோம். இதை தங்களின் ஆணையெனக் கொள்கிறோம்” என்றார்.

அவன் சென்ற பின் “அது ஒரு பொதுவான ஆணை. ஆனால் அறுதியான நெறியாக அதை கொள்வோம் என்றால் பேரிழப்பே எஞ்சும்” என்றார். “ஏனென்றால் எப்போட்டியிலும் கலந்துகொள்ளாதவர்கள் இருப்பார்கள். போட்டியை ஒரு அளவீடாகக்கொண்டால் நாம் எப்போதும் இரண்டாம் நிலையினரையே தேர்வு செய்வோம். போட்டிகளை சற்றே விலகி நின்று பார்ப்பவர்கள், போட்டிகளை இவ்வுலகு சார்ந்தது என்று எண்ணுபவர்கள், தங்கள் திறனை மதிப்பிட்டு தங்களுக்கோ பிறருக்கோ நிறுவிக்கொள்ள விழையாதவர்களே முதல் நிலையினர். ஒரு மெய்யறிந்த நூல்வலன், தன் கையறிந்த சிற்பி, புரவியுள்ளம் அறிந்த சூதன் போட்டிக்கு எழுவதில்லை” என்றார். “எந்நகரிலும் அவர்களே தலைநிற்கவேண்டும். திறனுடையோர் இன்றுக்கு உதவுவோர். கனவுள்ளோரே நாளையை சமைப்போர். அவர்கள் இன்றைய போட்டிகளில், வெற்றிகளில், உவகைகளில் ஆர்வம்கொண்டிருப்பதில்லை.”

“அவர்களை எப்படி கண்டுபிடிப்பது?” என்று சாரிகர் கேட்டார். “அவர்களை நாம் கண்டடையவேண்டும். அவர்கள் நம் அவைக்கு வரும்படி எதையேனும் ஒருக்கவேண்டும். அங்கே அவர்களது திறனை அகன்று நின்று நாம் கணிக்கவேண்டும்” என்றார் சுரேசர். “அதை எவ்வாறு கணிப்பது?” என்று சாரிகர் மீண்டும் கேட்டார். “எண்ணுக, ஒரு திறனுடையாளன் மட்டுமே பிறிதொரு திறனுடையாளனை கணிக்க முடியும்! ஆனால் நிகர் திறனுடையவனை கணிப்பதில் அவர்களின் பொறாமை ஊடே புகும். எனினும் அவர்களால் எதிர்நிகர் கொண்டவரை மறுக்கமுடியாது. மிகுதிறன் கொண்டவர்கள் பிறரை அஞ்சாதவர்கள். அவர்களே திறனுடையோரை கண்டறியும் ஆற்றல்கொண்டவர்கள். இங்கு புரவித்திறனாளர்களை கணிக்கும் ஆற்றல் இளையவர் நகுலனுக்கு உண்டு. நிமித்த திறன் கொண்டவரை சகதேவன் கணிக்க முடியும். அடுமனையாளர்களை, தோள்வலரை பீமசேனன் கணிக்க முடியும். வில்லவரை கணிப்பதற்கு அர்ஜுனனை விட்டால் எவர்?”

“ஆம், நூலோரை யுதிஷ்டிரன் கணிக்க முடியும்” என்று இளம் அமைச்சராகிய சுப்ரதன் சொன்னார். சுரேசர் அவரை நோக்கி திரும்பி புன்னகைத்து “அல்ல, நூல்வலரை மட்டும் பிறிதொரு நூல்வலர் கணிக்க இயலாது. ஏனென்றால் நூல்வலர் கருத்துக்களால் ஆனவர்கள். அவருக்கு நிகரான பிறிதொரு நூல்வலர் அவரது கருத்தை மறுப்பவராக இருப்பார். தன்னை மறுப்பவரை சற்றே குறைத்து எடைபோடுவது நூல்வலரின் இயல்பு. நூல்திறன் என்பது பொதுமேடையில் ஐயமற நிறுவுதற்குரியதும் அல்ல” என்றார். “நூல்வலரை கணிப்பதற்கு அவரிடம் இருந்து எதையேனும் கற்றுக்கொள்ளும் இளையோரே முற்றிலும் தகுதி கொண்டவர்கள். ஆகவே நீங்கள் கணிக்க முடியும். நூல்வலரை யுயுத்ஸுவோ மன்னர் யுதிஷ்டிரனோ கணிக்க இயலாது.”

“போட்டிகள் இல்லையெனில் என்ன செய்வது?” என்று சாரிகர் மீண்டும் கேட்டார். “பேரவைகளை கூட்டுவோம். திறனும் அறிவும் மெய்நாடலும் திகழும் அவைகள். அந்த அவைகளுக்கு முதல்நிலையோர் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அறிதலுக்கான ஆவலே செலுத்தும். ஆகவே அறிதலுக்குரிய அவைகளை அவர்களால் தவிர்க்கவே முடியாது” என்றார் சுரேசர். சாரிகர் “ஆனால் இளைய பாண்டவர் அர்ஜுனன் நகர்நுழைவதில்லை என்று உறுதி கொண்டிருக்கிறார். அங்கே துரோணரின் குருகுலத்தில் இருக்கிறார்” என்றார். “அதுவும் நன்றே. அங்கே வில்லவர்கள் தேடி செல்லட்டும். அவர்களிலிருந்து முதல்நிலையாளரை நாம் தெரிவு செய்வோம்” என்றார்.

“இந்த அவைகளை கூட்டுவதற்கு உரிய நோக்கங்கள் இருந்தாகவேண்டும். இப்போது அஸ்தினபுரி நிறைந்துள்ளது. கள்கலம்போல் இது கொப்பளித்து வழிந்துகொண்டிருக்கிறது. அஸ்தினபுரியில் ராஜசூயம் தொடங்குவதற்கு முன் இங்குள்ள அனைத்து தெய்வங்களையும் நிறைவு செய்யவேண்டும் என்று நெறி உள்ளது” என்றபின் புன்னகைத்து “அல்லது அவ்வாறு ஒரு நெறியை உருவாக்கிக்கொள்வோம். ஒவ்வொரு தெய்வத்தையும் நிறைவு செய்யும் பூசனைகளை ஒட்டி இந்த அவைகள் அமையட்டும். மின்வில்கொண்ட இந்திரனில் இருந்து நுரைவில் ஏந்தும் வருணன் வரை விற்திறனுக்குரிய பதினெட்டு தெய்வங்கள் இங்குள்ளன. புரவிகளுக்குரிய ஒன்பது தெய்வங்கள் உள்ளன. இங்குள்ளன ஹயக்ரீவனிலிருந்து அஸ்வினிதேவர்கள் வரை. நிமித்திகர்களுக்கான தெய்வங்கள் பிரம்மதேவனிலிருந்து ஹிரண்யாக்ஷர் வரை இங்குள்ளன” என்றார்.

“அவர்களுக்கான பூசனைகள் நிகழட்டும். அவற்றை ஒட்டி பேரரங்குகள் கூடட்டும். அவற்றில் பங்குகொள்ள அறிஞர்கள் வருவார்கள். நாம் அவர்களை தொட்டு எடுத்துக்கொள்வோம்” என்றார் சுரேசர். “அஸ்வமேத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சகதேவன் சதகர்ணிகளின் நாடு வரைக்கும் புரவிகொண்டு சென்றிருக்கிறார். நாற்பத்துஇரண்டு மன்னர்கள் பணிந்து கப்பம் செலுத்தியிருக்கிறார்கள். அச்செல்வம் திரட்டப்பட்டு அஸ்தினபுரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வடபுலம் ஏகிய பீமசேனர் இன்னும் சில நாட்களில் கின்னர நாட்டை சென்றடைவார். கிழக்கு நோக்கி சென்ற அர்ஜுனன் இப்போது வங்கத்தில் இருக்கிறார். ஐந்து நாட்களில் அவர் காமரூபத்தை சென்றடைவார். மேற்கு நோக்கி சென்ற நகுலன் சிபி நாட்டிலிருக்கிறார். காந்தாரம் ஏற்கெனவே நமக்கு பணிந்துவிட்ட நாடு. தெற்கே சகதேவன் விஜயபுரியை அணுகிவிட்டார். இது எல்லா விழவுகளுக்கும் உரிய பொழுது.”

“நகரமெங்கும் ஓயாது வெற்றிமுரசு கொட்டச் செய்வோம். களியாட்டுக்கும் உண்டாட்டுக்கும் ஒருங்கு செய்வோம். அக்கொண்டாட்டத்தில் இம்மக்கள் பங்கெடுப்பார்கள். இன்று அவர்களுக்கிருக்கும் உளநிலை என்பது எதையேனும் கொண்டாடுவது. இந்நகரை கண்களால் காண்பது வரை தங்கள் கற்பனைகளில் திளைத்திருத்தார்கள். கண்களால் கண்டதும் சோர்வுற்று அச்சோர்விலிருந்து எங்ஙனமேனும் மீள வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். விழா அறிவிப்புகள் அவர்களை மகிழ்வுறச் செய்யும். மீண்டும் அவர்கள் கனவுகள் நுரைத்தெழ அது ஒரு சிறந்த வாய்ப்பு” என்று சுரேசர் சொன்னார்.

யுயுத்ஸுவிடம் அவ்வெண்ணம் சொல்லப்பட்டதும் “விழவுகளா?” என்று திகைத்தான். “இங்கே இன்னமும் இளவரசர்கள் களம்பட்டு ஓராண்டு ஆகவில்லை. கொண்டாட்டங்கள் நிகழ நூலொப்புகை உண்டா?” சுரேசர் “எதற்கும் எங்கேனும் நூலொப்புதல் இருக்கும்” என்றார். யுயுத்ஸு பதற்றத்துடன் “என்னால் அதை எண்ணவே முடியவில்லை. ஏற்கெனவே இங்கே ஒரு கொண்டாட்ட நிலை உள்ளது. அது முறையா என்றே ஐயுறுகிறேன். ஏனென்றால் இங்கே கொண்டாடிக்கொண்டிருப்பவர்கள் எவருக்கும் அஸ்தினபுரியுடன் எந்த உறவும் இல்லை. இவர்கள் இப்போது வந்தவர்கள். எந்த இழப்பும் அற்றவர்கள். அஸ்தினபுரியிலிருந்து அதன் குடிகள் ஒழிந்துபோக எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் வந்து களியாடுகிறார்கள். அனலுக்குமேல் மணலைக்கொட்டி மூடியதுபோல உள்ளது” என்றான்.

“அனல் அல்ல, குருதி. அதன்மேல் புது மணலை கொண்டுவந்து விரிப்பது காற்றும் மழையும்தான். அதை நம்மால் தடுக்கமுடியாது” என்று சுரேசர் சொன்னார். “காட்டில் அத்தனை செத்த உடல்களுக்கு மேலும் சிறுமலர்ச்செடிகள் எழுகின்றன.” யுயுத்ஸு நிலையழிவுடன் கைகளை பிசைந்தான். “அரசரிடம் பேசவேண்டும். அவர் என்ன எண்ணுகிறார் என்று பார்க்கவேண்டும்” என்றான். “நாம் கூறவேண்டிய வகையில் கூறினால் அவர் ஏற்பார், ஏற்றாகவேண்டும்” என்றார் சுரேசர். “நான் கூறுகிறேன். எதற்கும் இவ்வெண்ணம் இப்படியே இருக்கட்டும். இதன் எல்லா பக்கங்களையும் எண்ணுவோம். இது முறையென்றால் இயற்றுவோம்” என்று யுயுத்ஸு சொன்னான். சுரேசர் புன்னகையுடன் “அவ்வண்ணமே” என்றார்.

அவர் எதிர்பார்த்ததுபோலவே இரண்டு நாட்களுக்குப் பின் யுயுத்ஸு தெளிவடைந்துவிட்டிருந்தான். “அரசரிடம் பேசினேன். அவருக்கு ஐயமிருந்தது. ஆனால் பேசியபோது தெளிந்தது. இங்கே திறவோர் அவையும் சான்றோர் அவையும் கற்றோர் அவையும் அந்தணர் அவையும் கூடட்டும் என அவர் ஆணையிட்டிருக்கிறார்.” அவன் அவ்வெண்ணம் தன்னில் தோன்றியதுபோல முகம் மலர்ந்து “ஒவ்வொரு நாளும் இங்கு வெற்றிச்செய்திகள் அறிவிக்கப்படட்டும். அஸ்தினபுரி பேருருவம் கொள்ளப்போகிறதென்னும் நம்பிகை இங்கு பெருகட்டும். இங்கு வந்திருக்கும் அனைவரையும் இணைப்பது அந்நம்பிக்கைதான். அவர்கள் இறந்தகாலங்களை முற்றாக உதறவேண்டும். தங்கள் குல அடையளங்கள், குடிப்பெருமைகள், இழந்த ஊர்கள், விட்டுவந்த அனைத்தையும் மறக்கவேண்டும். நாளை எனும் கனவில் அவர்கள் ஒன்றாக வேண்டும். அதற்கு தொடர் வெற்றிவிழா அன்றி வேறு வழியில்லை” என்றான்.

முற்றத்தில் இறங்கி தேரிலேறிக்கொண்டதும் யுயுத்ஸு சற்று அமைதியடைந்தான். இருபுறமும் மாறிமாறி நோக்கியபடி “அஸ்தினபுரி இத்தனை நெரிசலுடன் கொந்தளித்து முன்னர் கண்டதில்லை. முன்பு நிகழ்ந்த இந்திரவிழாவும் கொற்றவையூட்டும் எல்லாம் இதன் முன் சிறுகூட்டங்களே” என்றான். “இத்தனை பெருங்கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் படைத்திரள் நம்மிடம் உள்ளதா?” சாரிகர் அது அவன் தனக்குத்தானே கேட்டுக்கொள்வது என உணர்ந்து மறுமொழி சொல்லவில்லை. “இவ்வாறு வருபவர்களிடமிருந்தே படைகளை திரட்டிக்கொண்டிருக்கிறோம். அனைவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்து சேர்பவர்கள். ஒரு படையெனத் திரளக் கற்காதவர்கள். நிலைகொண்ட படைகளின் ஒழுங்கு அவர்களிடம் இருப்பதில்லை.”

சாலையின் இருபக்கமும் நெரித்த கூட்டத்தை பார்த்தபடி “ஆனால் இதற்குள் இங்கே ஒரு பொதுமொழி உருவாகிவிட்டிருக்கிறது. விந்தையானது, ஆனால் மிக எளியது. நாமறிந்த மொழிகளிலுள்ள சொற்கள்தான். அவை மிகமிக எளிய ஓர் இலக்கணத்துடன் இணைந்து மொழிவடிவு கொண்டிருக்கின்றன. அந்த மொழி இக்கூட்டத்தை இணைப்பதை எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்தேன். நிலைபெற்ற தொல்மொழிகளுக்கு இணையான அதே இணைப்பாற்றலை இந்தப் புது மொழியும் கொண்டிருக்கிறது” என்றான். சாரிகர் “அது இயல்பே. இந்தப் புதுமொழி இப்போது அனைவருக்கும் பொதுவானது. இதில் இன்னமும் மேல்கோன்மை உருவாகவில்லை” என்றார். “ஆகவே அவர்கள் இம்மொழியை இன்னமும் அஞ்சத்தொடங்கவில்லை.”

யுயுத்ஸு திரும்பிப்பார்த்தான். “எங்கும் மேல்கோன்மை பிளவுகளை உருவாக்குகிறது. மேல் கீழ் என அடுக்குகிறது. ஒரு பகுதியைக் காத்து பிற பகுதியை எல்லைகட்டி விலக்குகிறது. மொழிக்குள் எழும் மேல்கோன்மை அதற்குரிய தனிமொழியை உருவாக்கிக் கொள்கிறது. அது தன் இலக்கணத்தை மேலும் மேலும் சிக்கலாக்கிக்கொண்டே செல்லும். பொருட்செறிவை கூட்டிக்கொண்டே இருக்கும். மொழியிலேயே அரண்மனைகளும் குடிசைகளும் உண்டு. நிலவறைகளும் கரவுப்பாதைகளும் இருண்ட பிலங்களும் உண்டு” என்றார் சாரிகர். “அதை மக்கள் அஞ்சத்தொடங்குகிறார்கள். மேல்மொழிக்கு முன் தங்கள் மொழியுடன் நிற்க கூசுகிறார்கள். அதற்கு எதிராக தங்கள் மொழியை சிதைத்து விளையாடிக்கொள்கிறார்கள். மொழி சிதைந்து சிதைந்து பொருளுறுத்தாமல் ஆகிவிடுகிறது.” யுயுத்ஸு “ஆம்” என்றான். “இன்னும் சிலகாலம் இந்த மொழி அழகுடனும் இனிமையுடனும் நீடிக்கும். இதில் நட்பும் அன்பும் இயலும்” என்றார் சாரிகர்.

கோட்டைமுகப்பை அவர்கள் அடைந்தபோது சம்வகை இறங்கி வந்து அவர்களை எதிர்கொண்டாள். “காவல் எங்ஙனம் உள்ளது?” என்று யுயுத்ஸு கோட்டைமேல் நோக்கியபடி கேட்டான். “காவலர்படை பன்னிரு மடங்கு பெரிதாகிவிட்டிருக்கிறது. நாளையும் மறுநாளும் மேலும் புதியவர்களை எடுக்கவிருக்கிறோம்.” யுயுத்ஸு “தகுதியானவர்கள் கிடைக்கிறார்களா?” என்றான். “ஆம், சற்று பயிற்சி அளிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் காவல் என்பதில் பணியே பயிற்சியுமாகும்.” யுயுத்ஸு திரும்பி சம்வகையைப் பார்த்து “முற்றிலும் புதியவர்களிடம் கோட்டையை ஒப்படைக்கிறோமா?” என்றான். “இல்லை, அவர்கள் இந்நகரை தங்களுடையது என உணரத்தொடங்கிவிட்டிருக்கின்றனர். முன்பு இங்கு ஒவ்வொரு படிநிலையில் இருப்பவரும் தங்களுக்கு மேலான நிலை ஒன்றுக்கான தகுதி இருக்கிறது என எண்ணிக்கொள்வார்கள். இப்போது இங்கே பொருந்திக்கொள்ள அளிக்கப்படும் எந்த இடமும் நன்றே என எண்ணுபவர்களே இங்கிருக்கிறார்கள்” என்று சம்வகை சொன்னாள்.

“சில நாட்களுக்கு முன்பு தெற்கே முக்கடல் முனையிலிருந்து ஒருவர் வந்தார். மெய்யறிவின் அழைப்புக்கு ஏற்ப நிலம்துறந்தவர். நேற்று அவரை அடுமனையில் கண்டேன். பெருங்கலங்களை துலக்கிக்கொண்டிருந்தார். மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டிருந்தார்” என்று சம்வகை தொடர்ந்தாள். “ஆம், அவர் கிளம்பிச்செல்லக்கூடும். ஆனால் அவரால் இயல்பாக இங்கே அவருக்கான இடத்தில் பொருந்திக்கொள்ளமுடிகிறது. ஆகவே இந்நகரில் இப்போது எந்த முரண்பாடும் நிகழ வாய்ப்பில்லை.” யுயுத்ஸு அதை நிறைவின்மையுடன் கேட்டு தலையை அசைத்தான். “ஆனால் இங்கே போட்டிகள் தொடங்கிவிட்டால் என்ன நிகழுமென சொல்லமுடியாது. மனிதனை மனிதனுக்கு எதிரியாக்குவது போட்டிதான்” என்றாள் சம்வகை.

யுயுத்ஸு “ஆம், ஆனால் நம்மால் அதை தவிர்க்கமுடியாது” என்றான். “போட்டிகளில் பூசல் எழாமல் நோக்கவேண்டும்” என்றபின் மீண்டும் கோட்டையை பார்த்தான். கவலைகொள்ள புதிய தளம் கிடைத்துவிட்டது என எண்ணி புன்னகை செய்தான். அதைக் கண்டு சம்வகையும் புன்னகை செய்தாள். யுயுத்ஸு “போட்டிகளை சிறப்பாக நடத்த உரிய காவல்படை ஒன்றை உருவாக்கவேண்டும். போட்டிகள் நகர் முழுக்க நடைபெறவிருக்கின்றன. இப்போதே போட்டிகள் பல தொடங்கிவிட்டன. முழு நகரத்தையும் ஆட்சிசெய்யும் ஓர் அமைப்பும் தலைமையும் தேவை” என்றான். சம்வகை “ஆம்” என்றாள். “அதை நீயே செய்யலாம். இந்நகரை நன்கறிந்தவள் நீ” என்றான் யுயுத்ஸு. “என் கடமை” என்றாள் சம்வகை.