களிற்றியானை நிரை - 17

பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 8

ராஜசூயத்திற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படுவதற்கு முன்னரே கூட்டம் பல மடங்கு பெருகத்தொடங்கியது. பாதைகள் கரைதொட்டு நிரம்பின. அவர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பகுப்பது கைவிடப்பட்டது. வந்துகொண்டிருப்பவர்கள் அனைவரும் அஸ்தினபுரிக்குள் தங்குவதும் இயலாதாயிற்று. முதலில் வந்தவர்கள் தங்கள் குல அடையாளங்களுக்கேற்ப ஒழிந்து கிடந்த தெருக்களில் இருந்த இல்லங்களில் குடியேற்றப்பட்டார்கள். ஆயர் தெருக்கள் முதலில் நிறைந்தன. வேளாண் தெருக்கள் இறுதியாக பெருகின. சூதர் தெருக்களிலும் மறவர் தெருக்களிலும் மீண்டும் தலைகள் செறிந்தன.

மேலும் மேலும் கூட்டம் பெருகியபோது சுரேசர் அவர்களை வடக்கே காந்தாரக் குடியிருப்புகளுக்குள்ளும், மேலும் அப்பால் புராணகங்கைக்குள்ளும், மேற்கு குறுங்காட்டுக்குள்ளும் பரவி குடிலமைக்க ஆணையிட்டார். கூட்டம் மேலும் வலுக்க அவர்களை அருகிருந்த சிற்றூர்களுக்கு அனுப்பினார். கிழக்குக் கோட்டையினூடாக உள்ளே வந்து நகரில் பரவி இருந்த மக்கள் மேற்கு வாயில் முகப்பை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்டார்கள். அங்கே பதினெட்டு மேடைகளிலாக அமைச்சர்கள் அமர்ந்து அவர்களின் குலம் குடி அடையாளங்களையும் பெயர்களையும் பொறித்துக்கொண்டு பொற்காசுகளை கொடையளித்து மேற்குவாயிலினூடாக வெளியேற்றினர். கிழக்கு வாயிலினூடாக உள்ளே வந்த பெருக்குக்கு இணையாகவே மேற்கு வாயிலினூடாக வெளியே சென்று கொண்டும் இருந்தது.

அவர்களை தொலைதூர நிலங்களுக்கு கொண்டு சென்று குடியேற்றும் பொருட்டு காவலர் உடன் சென்றனர். அஸ்தினபுரியால் கைப்பற்றப்பட்ட புதிய நிலங்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அந்த ஒவ்வொரு நிலத்திலும் அங்கு வந்து சேர்பவர்களுக்கு தெருக்களையும் நிலங்களையும் பகிர்ந்துகொடுக்கும்பொருட்டு ஆணைத்தலைவர்கள் நிறுத்தப்பட்டனர். ஏதேனும் தனித்திறன்கொண்டவர்கள் மட்டும் நகரில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு பித்தளையில் அரசமுத்திரை பொறித்த வில்லைகள் அடையாளமாக அளிக்கப்பட்டன. நூல்தேர்ந்தோர், வில்லாளர், அடுமனையாளர், கைவினைஞர், பரிக்கலையும் கரிக்கலையும் கற்றோர், தச்சர், சிற்பிகள், ஏவற்பணி அறிந்தோர் என நகருக்குள் திறனாளர் பெருகி அவர்களுக்குரிய தெருக்களை நிறைத்தனர்.

“இன்று அஸ்தினபுரியின் நாடு நிறைந்துகொண்டிருக்கிறது. நல்லாட்சி ஒன்று நிகழக்கூடும் என்ற எண்ணம் மட்டுமே இத்தனை பேரையும் உள்ளே கொண்டு வருகிறது” என்று சுரேசர் சொன்னார். பின்னர் சம்வகையிடம் குனிந்து “உண்மையில் இதிலொரு தீயது உள்ளது. மானுட இயல்பான தீமை அது. யுதிஷ்டிரன் பிற அரசர்களை வென்று நிகரற்ற வீரர் என இங்கு நிறுவப்பட்டுவிட்டார் என்று இவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவ்வாறு நிறுவப்பட்டவர் வேலொடு நின்று வழிவணிகரை கொள்ளையிடுவதுபோலத்தான் இங்குள்ள அனைத்து அரசர்களிடமிருந்தும் அவர் கப்பம் பெறுவார். அச்செல்வத்தில் தங்களுக்கு பங்கு கிடைக்கும் என்றே இத்தனை பேர் வருகிறார்கள்” என்றார்.

“ஆனால் அது பழி அல்ல. பொருள்விழைவென்பது உலகியல் பேறுக்கான அடிப்படை. மேலும் மேலும் பொருள் விழையும் மக்களால் அஸ்தினபுரி நிறையப்போகிறது. அவர்கள் கொடியின் சுருள்முனை போன்று உயிர்த்துடிப்பு தேடலாக வெளிப்படுபவர்கள். புதுக் கன்றுபோல நிலைகொள்ளாதவர்கள். கனவு காண்பவர்கள். பல நூறு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்தவர்கள் தங்கள் முன்னோர் வாழ்ந்து வாழ்ந்து உருவாக்கிய தடத்தில் அறியாது ஒழுகுபவர்களாக மாறிவிட்டிருந்தார்கள். நிலைகொண்ட பதிகளில் நெறிகள் மாறாதவையாக இருக்கும். மாறா நெறிகள் இருக்கும் இடத்தில் மானுட வாழ்க்கை முன்னகர்வதில்லை” என்றார் சுரேசர். அவர் கோட்டைமேல் நின்று கீழே நோக்கிக்கொண்டிருந்தார். புலரிவெளிச்சம் எழுந்துகொண்டிருந்தது. இரவில் மூடப்பட்டிருந்த கோட்டைக்கதவங்கள் திறக்க மதகிலறையும் ஏரிப்பெருக்கு என வெளிப்புற மக்கள் கோட்டைவாயிலை மோதினர். உள்ளே பீறிட்டு வந்து பிரிந்து ஒழுகினர்.

“இனி இந்நகரத்தில் பழைய நெறிகளுக்கு இடமில்லை. புதிய நெறிகள் உருவாகும் வரை இங்கு கொந்தளிப்பும் பூசலும் நிகழும். உருவாகும் புதுநெறி பழைய நெறிகளிலிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடந்ததாக இருக்கும். முற்றிலும் புதிய ஒரு வாழ்வு இங்கு உருவாகும். இன்னும் சில நூறு ஆண்டுகாலம் அஸ்தினபுரியை எவராலும் வெல்ல இயலாது. பொருள் விழைவும் வெற்றி வேட்கையும் பழைய நெறிகளைக் கடந்த விடுதலையும் கொண்ட மக்கள் இங்கு குடியேறவிருக்கிறார்கள். அவர்கள் அஸ்தினபுரியை தங்கள் படைக்கலமாகக் கொள்வார்கள். அவர்கள் உருவாக்கும் அஸ்தினபுரி நேற்றுவரை இருந்த அஸ்தினபுரிக்கு சிறகு முளைத்ததுபோல. அது மேலும் நச்சுக்கொடுக்குகள் கொண்டது. பற்களும் நகங்களும் கொண்டது.”

“அறிக, மகதம் முன்பு பிருகத்ஷத்ரன் நடத்திய ராஜசூயத்திற்குப் பிறகுதான் பெருகி எழுந்து மாநகராகியது! ராஜசூயத்திற்கான அறிவிப்பு எழும்போது பாரதவர்ஷத்திலுள்ள நூலறிந்தோர் அனைவரும் ஒன்றை உணர்வார்கள். அது மலைவிளிம்பில் வந்து நின்று நிலத்தை ஓங்கி அறைந்து பிளிறும் சிங்கத்தின் ஓசை. அதற்கு பசியெழுந்திருக்கிறதென்று பொருள். அக்காடனைத்தும் அதற்கு இரையே என்று பொருள். எதிர்ப்பவர் எவரும் எதிர்நிற்கலாகாதென்று பொருள். அஸ்தினபுரி அறைகூவுகிறது!” என்றார் சுரேசர். அவர் முகத்திலிருந்த கனவின் பித்து சம்வகைக்கு வியப்பை அளித்தது. அவரிடமிருந்து விழிகளை விலக்கவே இயலவில்லை.

கோட்டை விளிம்பில் நின்றபடி சம்வகை முழங்கிக்கொண்டிருந்த அஸ்தினபுரியை பார்த்தாள். கண்ணுக்குத் தெரியாத கழிகளால் மீட்டப்படும் பெருமுரசு போலிருந்தது அது. அலையலையென எழுந்த முழக்கம். அதன் மேல் இருந்த காற்றின் அலைகளை கண்ணாலேயே பார்த்துவிட முடியும் போலிருந்தது. பாரதவர்ஷத்தை நோக்கி அது முழங்கிக்கொண்டிருக்கிறது என்று எண்ணியபோது அவள் மெய்ப்பு கொண்டாள்.

சம்வகை கீழிறங்கி வந்தபோது கோட்டைமுகப்பிலிருந்த காவலனிடம் தன் வருகையொப்பை அளித்த பின்னர் உள்ளே வந்த இளைஞனை பார்த்தாள். அவன் தோற்றம் தன் விழிகளை கவர அவனை அருகே அனுப்பும்படி காவலனுக்கு கைகாட்டினாள். காவலன் அவனிடம் கோட்டை தலைவி அழைப்பதாகக் கூறினான். அவன் அவளை ஏறிட்டு நோக்கி அவள் பெண் என்பதைக் கண்டு விழிகள் சற்றே விரிய அருகே வந்தான். சம்வகை அவனிடம் “நீங்கள் எந்த ஊர்?” என்றாள். அவள் புதுமொழியில் கேட்க தானும் அம்மொழியிலேயே பேசுவதை தானே உணராமல் அவன் “முக்கடல்” என்றான்.

“தென்குமரியா?” என்று அவள் வியப்புடன் கேட்டாள். “அத்தனை தொலைவிலிருந்தா?” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். “அங்கு வரை இந்நகரின் செய்தி சென்றடைந்துவிட்டதா?” என்று அவள் கேட்டாள். அவள் கொண்ட திகைப்பில் இருந்தே அவள் எண்ணுவதென்ன என்று அவனுக்கு புரிந்தது. புன்னகையுடன் “எங்களூரும் பாரதமே” என்றான். “இல்லை, நான் கேட்பது பிறிதொன்று. தங்கள் ஊர் வரை அஸ்தினபுரியில் ராஜசூயம் நிகழவிருக்கும் செய்தி வந்துவிட்டதா?” என்றாள். “இல்லை, நான் கிளம்பும்போது இங்கு போர்நிகழும் செய்தி கூட எனக்குத் தெரியாது” என்றான். “பிறகெப்படி கிளம்பினீர்? ஒருவேளை வேறெங்காவது செல்லும் வழியில் செய்தி அறிந்து இங்கு வந்திருக்கிறீர் போலும்” என்றாள். “இல்லை, இந்நகருக்காகவே நான் கிளம்பினேன்” என்று அவன் சொன்னான்.

அவள் குழப்பத்துடன் அவனை பார்த்தாள். ”எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அது எவ்வண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது என்று எனக்குத் தெரியவில்லை. கிளம்பி இந்நகருக்கு வரும் வரை இந்நகரின் பெயர் மட்டுமே என்னிடம் இருந்தது” என்றான். “அது இளமையிலேயே கதைகளினூடாக நான் அறிந்த பெயர். விந்தையானதொரு கனவுநகரத்தை அச்சொல்லிலிருந்து நான் உருவாக்கிக்கொண்டிருந்தேன். அதை நோக்கி கிளம்புக என்னும் ஆணை எனக்கு கிடைத்தது. கிளம்பி நெடுநாட்களுக்குப் பின்னரே இங்கு முடிப்பூசல் நிகழ்வதை அறிந்தேன். அதன் பின்னரே இப்போர் பற்றி அறிந்தேன். விந்திய மலையைக் கடந்த பின்னரே இங்கு வேள்வி நடக்கும் செய்தி எனக்கு கிடைத்தது.”

“எவ்வாறு வந்தது அந்த அழைப்பு?” என்று அவள் கேட்டாள். “அறியேன், அது என்னுள்ளிருந்து எழுந்தது” என்று அவன் சொன்னான். அவள் சிறிது நேரம் நோக்கிவிட்டு “தங்கள் பெயர் என்ன?” என்றாள். “ஆதன்” என்று அவன் சொன்னான். “தலைவன் என்றும் தந்தை என்றும் பொருள். எங்கள் நிலத்தில் கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் தென்றிசைமுதல்வனுக்கும் இப்பெயர் உண்டு.” அவள் “வாழ்க, நகரில் நீங்கள் நலமுறுக!” என தலைவணங்கினாள். அவன் புன்னகையுடன் “நகரின் காவல் என பெண்கள் அமைந்திருப்பதே அமைதியை அளிக்கிறது” என்றான். அவள் வாய்விட்டு நகைத்து “செல்க, இந்நகர் உங்கள் கனவிலிருக்கும் நகரென்றே ஆகுக!” என்றாள்.

அவன் தலைவணங்கி மீண்டு தோழர்களுடன் சென்று சேர்ந்துகொண்டான். அவளால் அவ்வியப்பை கடக்க இயலவில்லை. அறியா உள்ளழைப்பு ஒன்று மானுடரை இங்கு கொண்டுவந்து சேர்க்கிறதென்றால் என்ன பொருள்? அவள் சூழ நோக்கி, உள்ளே ஏட்டுச் சுவடியில் திரள் குறித்த செய்திகளை எழுதிக்கொண்டிருந்த சபரன் என்னும் அந்தணரை அருகே அழைத்தாள். அவர் வந்து “கூறுக, தலைவி!” என்றதும் அவள் “இங்கு வரும் திரளில் மிக நெடுந்தொலைவில் இருந்து எவர் வந்திருக்கக் கூடுமோ அவர்களை சுட்டிக்காட்டி அருகழையுங்கள்” என்றாள். அவர் தலையசைத்தபின் கூட்டத்தில் விழியோட்டி பீதன் என தோன்றிய ஒருவனைச் சுட்டி “இவன் அப்பால் மணிபூரக நாட்டிலிருந்து வந்திருக்கக்கூடும். அல்லது அதற்கும் அப்பால் மாமேருவின் நாட்டிலிருந்து” என்றார்.

சம்வகை அவனை அருகே அழைத்தாள். அவன் வந்து வணங்கி தன் பெயரையும் நாட்டையும் சொன்னான். அவன் காமரூபத்துக்கும் அப்பால் உள்ள மலைநாட்டைச் சேர்ந்தவன். அவன் பெயர் வெறும் ஒலியாகவே அவளுக்குக் கேட்டது. “உங்களால் மையநிலத்து மொழி எதையாவது பேச முடியுமா?” என்றாள். “நான் காமரூப மொழியை பேசுவேன்” என்றான். “காமரூப மொழி எனக்குத் தெரியும்” என்றாள் சம்வகை. “கூறுக, தாங்கள் எதன் பொருட்டு இந்நகருக்கு வருகிறீர்? இந்நகரின் அழைப்பு அங்கு வரை வந்து சேர்ந்ததா? ராஜசூயம் பற்றிய செய்தியை அறிந்தீரா?” என்றாள்.

“இல்லை, அரசி” என்று அவன் சொன்னான். “நான் வங்கநாடு வந்தபோது தான் இங்கு ராஜசூயம் நிகழும் செய்தி வந்தது. காமரூபத்திற்குள் நுழையும்போதுதான் இங்கு போர் நிகழும் செய்தியை அறிந்தேன். எங்கள் ஊரில் இந்நகர் வெறும் ஒரு பெயர் மட்டும்தான்.” அவள் “உங்கள் ஊரிலிருந்து இந்நகருக்கு உங்களைப்போல் பலர் கிளம்பி வருவதுண்டா?” என்றாள். “இல்லை, அரிதாக எவரேனும் வந்திருக்கக் கூடும். அதை நான் அறியவில்லை. நான் கிளம்பியது என்னுள்ளிருந்து எனக்கெழுந்த ஆணையொன்றால்” என்றான். அவள் அவனை சொல்க என்னும் பாவனையில் நோக்கினாள்.

“நான் ஊழ்கம் பயின்றுகொண்டிருந்தேன். ஏனோ இச்சொல்லே திரும்பத் திரும்ப என் நாவில் எழுந்தது. என்றோ கதைகளில் கேட்டிருந்த ஒரு பெயர். என் ஆசிரியரிடம் இதைப்பற்றி கேட்டேன். ஒரு சொல் அவ்வாறு உன்னில் திரும்பத் திரும்ப திகழ்கிறது எனில் அது உன்னை அழைக்கிறதென்று பொருள். கிளம்பி அஸ்தினபுரிக்கு செல்க என்றார். அன்றே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.” அவள் தலைவணங்கி அவன் செல்லலாம் என்று சொன்னாள். அவன் செல்வதை நோக்கி நின்றபோது வியப்புகொண்டிருந்தாள். சபரனிடம் “மீண்டும் ஒரு எல்லைக் குடிமகனை சுட்டுக! இம்முறையும் இம்மறுமொழியே வருமெனில் நான் எண்ணியதை உறுதி செய்துகொள்வேன்” என்றாள்.

அவர் வெண்பளிங்குபோல் வெளிறி சிவந்த புள்ளிகள் கொண்ட தோலும், நீலக்கண்களும், குருதி வெட்டுபோல் வாயும், ஒடுங்கிய நீள்மூக்கும் கொண்ட ஒருவனைச் சுட்டி “அவனை அழையுங்கள், அவன் மேற்குநிலத்து சோனகனோ யவனனோ” என்றார். அருகணைந்த அவன் பெரும்பாலைநாட்டுக்கு அப்பால் விரிந்துள்ள யவன நிலத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னான். காந்தார மொழியை அவனால் பேச முடிந்தது. அவனும் அதையே சொன்னான். உள்ளிருந்தெழும் ஓர் ஆணை அஸ்தினபுரியை நோக்கி தன்னை செலுத்தியது என்று. “நான் கிளம்பி ஏழாண்டுகளாகின்றன” என்று அவன் சொன்னபோது அவள் திகைப்புடன் அவனை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தாள்.

அவனை அனுப்பியபின் சம்வகை அவ்வெண்ணத்தின் எடை தாளாதவள்போல் சென்று கோட்டை படிக்கட்டில் அமர்ந்தாள். சபரன் “இதில் விந்தையென ஏதுமில்லை, தலைவி. எப்போதும் பாரதவர்ஷத்திலிருந்து இந்நகர் நோக்கி வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார். சம்வகை அவருக்கு மறுமொழி கூறாமல் சென்று புரவிமேல் ஏறிக்கொண்டாள். நகரின் நெரிசலினூடாக அரண்மனை நோக்கிச் செல்வதற்கு தனிப் பாதை ஒன்றை அவள் வகுத்திருந்தாள். மையச்சாலையை ஒட்டியிருந்த ஊடுபாதை ஒன்றை புரவிகள் செல்வதற்கும் வருவதற்கும் மட்டுமே வைத்து அதற்கு காவலிட்டிருந்தாள். அதனூடாக குளம்படிகள் எதிரொலிக்க சென்றுகொண்டிருந்தபோது அவள் எண்ணி வியந்துகொண்டிருந்தாள். இவர்கள் அனைவரையும் அஸ்தினபுரியை நோக்கி செலுத்தும் அந்த விசை எண்ணுவதென்ன? ஒருவேளை மீண்டும் ஒரு போரா? அதை எவராலும் தடுக்க முடியுமா என்ன?

அவள் புரவியை சுரேசரின் அறைவாயிலில் நிறுத்தி உள்ளே சென்றாள். தன் அறைக்குள் சுரேசர் பதற்றத்தில் இருந்தார். பதினாறு கைகள் கொண்டவர்போல், எட்டு முகங்கள் கொண்டவர்போல் அறையை நிரப்பியிருந்தார். ஒரே பொழுதில் நான்கு ஆணைகளை பிறப்பித்தார். பதினாறு செயல்களை செய்தார். அறைக்குள் நுழைந்து சம்வகை ஓரமாக ஒதுங்கி நின்றாள். ஒற்றர்கள் ஒவ்வொருவருக்கும் ஆணைகளை பிறப்பித்து அனுப்பி, நடுவே கற்றுச்சொல்லிகளுக்கு ஆணை ஓலைகளைக் கூறி, கைகளால் சிறு ஓலைகளில் முத்திரை இட்டு ஏவலரிடம் அளித்து, மெல்ல ஓய்ந்து திரும்பி சம்வகையிடம் “யார்? என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அவள் தலைவணங்கிய பின்னர்தான் புரிந்துகொண்டு “நீயா?” என்று கேட்டார். பிறர் செல்லலாம் என்று கைகாட்டினார். அவர்கள் தலைவணங்கி விலக பீடத்தில் இயல்பாக அமர்ந்து உடலை எளிதாக்கிக்கொண்டார். சம்வகை புன்னகைத்தாள். “என்ன சிரிப்பு?” என்று அவர் கேட்டார். “பேருடல் சுருக்கி சிறிதானபின் பேசத்தொடங்குகிறீர்” என்றாள். “மெய்யாகவே செயலாற்றுகையில் பேருருவனாகிறேன். அதன் பொருட்டே இத்தனை செயல்களையும் நானே இழுத்துப் போட்டுக்கொள்கிறேன். இத்தனை செயல்களையும் ஆற்றாமல் இருந்தால் உடல் திறந்து இறந்துவிடுவேன் என்று தோன்றுகிறது” என்றார் சுரேசர். ”சொல்க, என்ன செய்தி?”

சம்வகை “ராஜசூய அறிவிப்பு இன்னும் வரவில்லை. அதற்குள் நகர் நிறைந்துவிட்டது. இன்னமும்கூட வந்துகொண்டிருக்கிறார்கள். இன்று ஒருவரை பார்த்தேன். தெற்கே முக்கடல் முனம்பிலிருந்து வந்திருக்கிறார். இங்கு போர் நிகழ்ந்த செய்திகூட அவர் சிற்றூருக்குச் சென்று சேரவில்லை. ஆனால் இந்நகர் நோக்கி அவரை எழுப்பும் ஓர் அழைப்பு சென்றிருக்கிறது. தன்னுளிருந்து ஒரு குரல் அஸ்தினபுரிக்கு என்று சொன்னதாக அவர் சொன்னார். அது மீண்டும் நிகழ்ந்திருக்கிறதா என்று இருமுறை நோக்கினேன். கிழக்கிலும் மேற்கிலும் இரு எல்லையிலிருந்து கிளம்பி வந்திருக்கிறார்கள். அவர்களையும் அறியாச் சொல்லொன்று அஸ்தினபுரி நோக்கி அழைத்து வந்திருக்கிறது” என்றாள்.

எதையும் பகுத்தெண்ணும் சுரேசர் சற்று மலைத்தவர் போலிருந்தார். பின்னர் “இதை நானும் எண்ணினேன்” என்றார். “உண்மையில் இதை சில முறை கணித்து நோக்க வேண்டுமென்று நேற்றிரவு எண்ணியதேகூட நினைவிருக்கிறது. நேற்று உச்சிப்பொழுதில் நான் ஒருவரை பார்த்தேன். வடக்கே கின்னர நாட்டிலிருந்து வந்தவர். அஸ்தினபுரிக்குள் நுழைவது வரை இங்கு ஓர் போர் நிகழ்ந்த செய்தியே அவரிடம் சென்று சேரவில்லை. அஸ்தினபுரிக்குச் செல் எனும் ஆணையை தன் குலதெய்வங்கள் பூசகர் உடம்பில் வந்து கூறியதாகவும் அந்த ஆணையை ஏற்று இங்கு வந்ததாகவும் சொன்னார். நிலமெங்கும் தெய்வங்கள் அவ்வாணையை அளித்திருக்கின்றன” என்றார்.

நிலைகொள்ளாமல் எழுந்து அறையைச் சுற்றிவந்து “இந்நிலம் அவ்வாறு பொலியவேண்டும் என்பது தெய்வங்களின் ஆணையெனில் அவ்வாறே நிகழ்க!” என்றார். சம்வகை “தெய்வங்களை எவ்வாறு நம்புவது? இதுவரை அவை அஸ்தினபுரிக்கு நன்மை எதுவும் செய்யவில்லை” என்றாள். சுரேசர் சற்று திடுக்கிட்டதுபோல் அவளைப் பார்த்து “நன்றோ தீதோ, நாம் நம்பியே ஆகவேண்டும். தெய்வங்களுக்கு முன் நம் கணிப்புகளுக்கு எப்பொருளுமில்லை. நாம் காலத்தில், இடத்தில் கட்டுப்பட்டவர்கள். தெய்வங்களின் முழுமைநோக்கு நமக்கு அமைவதில்லை. முற்றளிப்பதன்றி நமக்கு வேறு வழியில்லை. இதோ மண்ணில் உலாவிக்கொண்டிருக்கின்றன பல்லாயிரம் எறும்புகள். மானுடரின் கால்களின் திசையையும் அசைவையும் கணித்து அவை அங்கு வாழ முடியுமா என்ன?” என்றார்.

சம்வகை “அறியேன், நான் கண்டதை உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று தோன்றியது” என்றாள். “நன்று. ஆனால் இத்தகைய உளக்குழப்பங்களுக்கு ஆளாவது காவல்தலைவிக்கு நன்றல்ல. கண்ணுக்கும் கருத்துக்கும் சிக்குவனவற்றை மட்டுமே பொருட்படுத்தினால் போதும். அதற்கப்பால் உள்ளவற்றை நிமித்திகர்களிடம் விட்டுவிடுவோம்” என்று சுரேசர் சொன்னார். அதிலிருந்த மெல்லிய அறிவுறுத்தலை புரிந்துகொண்டு அவள் தலைவணங்கினாள். சுரேசர் அவளிடம் “மிக விரைவாக நீ காவலர்தலைவி அல்லாமலாகி வருகிறாய்” என்றார். அவள் திகைத்து திரும்ப “அரசுசூழ்தலில் ஈடுபடுகிறாய். ஊழ் கணிக்கிறாய். உன் பொழுதுகள் பெரும்பாலும் அமைச்சர்களுடன் கழிகின்றன” என்றார். அவள் குழப்பத்துடன் நோக்க “அஸ்தினபுரிக்கு ஏதோ எண்ணமிருக்கிறது” என்றார்.

அவள் அவ்வறையிலிருந்து வெளியே வரும்போது எதிரே யுயுத்ஸு விரைந்த காலடிகளுடன் வருவதை கண்டாள். தலைவணங்கி சுவர் ஓரமாக ஒதுங்கி நின்றாள். யுயுத்ஸு தொலைவிலேயே அவளை பார்த்துவிட்டிருந்தான். அவள் அருகே வந்து “உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்நகருக்குள் வந்த மொத்த மக்களின் எண்ணிக்கை என்ன என்பதை கூற முடியுமா?” என்றான். “ஒவ்வொரு நாளும் அந்தியில்தான் அக்கணக்கு முடிக்கப்படுகிறது. தொகுத்து ஒற்றை எண்ணாக ஆக்குவதற்கு மறுநாள் உச்சிப்பொழுதாகும். நேற்று அந்தி வரை வந்தவர்களின் கணக்கை இன்னும் ஒரு நாழிகைக்குள் அளிக்கமுடியும்.”

“நகருக்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது வெறும் எண்ணிக்கை” என்று யுயுத்ஸு சொன்னான். “எத்தகையவர்கள் இருக்கிறார்கள், அவர்களின் இயல்பென்ன என்று ஏதேனும் கணிப்பிருக்கிறதா?” என்றான். “இயல்பென்ன என்றால்?” என்று அவள் கேட்டாள். யுயுத்ஸு “அவர்கள் எந்த உளநிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி” என்றான். மேலும் புரியாமல் அவள் வெறுமனே நோக்கி நின்றாள். “எதற்கென்றால்…” என்று யுயுத்ஸு தயங்கினான். “இன்று காலை அரசரை பார்த்தேன். அவர் நேற்றிரவு கண்ட கனவுகளால் உளம் நைந்திருக்கிறார்.” அவள் “என்ன?” என்றாள்.

“நான் இந்நகரம் அயல்குடிகளால் நிரம்பியிருப்பதை சொன்னேன். குடிகள் என்று கூறவேண்டியதில்லை, மானுடர் என்று கூறுக என்றார். குடிகள் என்பவர் இந்நகரின் மக்களாக தங்களை நினைத்துக்கொள்பவர்கள். இதன் அரசரை தங்கள் அரசராக எண்ணுபவர்கள். இக்கொடியின், இவ்வடையாளத்தின் முன் உளம் திரண்டவர்கள். நகரை நிறைத்திருக்கும் பெருந்திரளை என்னால் அவ்வாறு எண்ண இயலவில்லை. உப்பரிகையில் நின்று நகரை நோக்கியபோது விந்தையானதோர் பெருவெள்ளம் வந்து நகர் நிறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது என்றார்” என்றான் யுயுத்ஸு. “அறியா மொழி பேசும் இத்திரளுக்கு முன் தான் முற்றிலும் அயலானவன் என அவர் உணர்கிறார். புரியாத மொழியில் கூவியபடி அவர்கள் அரண்மனையைச் சூழ்வதுபோல் கனவுகண்டிருக்கிறார்.”

“அவர்கள் அனைவருமே அஸ்தினபுரி எனும் பெருங்கனவுடன் இங்கு வந்தவர்கள்” என்று சம்வகை சொன்னாள். “ஆம், அதைத்தான் சுரேசர் சொன்னார். ஆனால் அவர்கள் அந்த அஸ்தினபுரியின் அரசராக ஏற்பவர் யார்? அவர் யுதிஷ்டிரன்தானா? அரசர் கேட்பது அந்தக் கேள்வியைத்தான்.” சம்வகை “அவர் நகர்நுழைந்தபோது நிகழ்ந்தனவற்றை இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்” என்றாள். யுயுத்ஸு முகம் மாறி “அதை எளிதில் மறக்க இயலாதுதான். எந்த அரசருக்கும் அதைப்போல் ஒரு சிறுமதிப்பு நிகழல் கூடாது” என்றான். “நிமிர்ந்தோர் ஒவ்வொரு சிறுமையிலும் உயிர்துறக்கிறார்கள், மீண்டும் பிறந்தெழுகிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. குறை உயிருடனேயே அரசர் அரண்மனையில் வாழ்கிறார்.”

“அந்நிகழ்வுக்குப்பின் தன் அரண்மனையிலிருந்து அவர் பல நாட்கள் வெளி வரவில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “அஸ்வமேதமும் ராஜசூயமும் இயற்றுவது நன்றென்று அவரிடம் சொன்னபோதுகூட அவர் நம்பிக்கை கொள்ளவில்லை. இளைய யாதவர் அவ்வாறு இயற்றலாம் என்று கூறி செய்தி அனுப்பியமையால்தான் ஒப்புதல் அளித்தார்.” சம்வகை “இவர்களின் உள்ளத்தை நாம் அறிவதற்கு வழியொன்றுமில்லை” என்று தணிந்த குரலில் சொன்னாள். “அதற்குரிய வழிகளை ஒருவேளை சுரேசர் கூறக்கூடும்.” யுயுத்ஸு திரும்பி நோக்கிய பின் “அவரிடம் எனக்கு பேசவே பொழுதில்லை” என்றான்.

சுரேசர் அவர்களின் பேச்சுக்குரல் கேட்டு தன் அறையில் இருந்து வெளிவந்தார். யுயுத்ஸு “இம்மக்களின் உளநிலை என்னவாக இருக்கிறதென்று அரசர் அறிய விரும்புகிறார்” என்றான். “இன்று அவர்கள் ஒற்றை உணர்வென திரளவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு உளநிலையிலிருப்பார்கள். ஒவ்வொருவரின் உள்ளிருக்கும் அஸ்தினபுரி ஒவ்வொன்று. அவர்களை ஒன்றாக்குவது உடனே இயல்வதல்ல” என்றார். “அவர்களை ஒன்றாக்க வேண்டியதில்லை. அஸ்தினபுரியின் பேரரசரென அவர்கள் யுதிஷ்டிரனை ஏற்றுக்கொள்கிறார்களா என்று மட்டும் அரசர் அறிய விரும்புகிறார்” என்றான் யுயுத்ஸு. “அவர்களை திரட்டலாம். அதன் பின்னர் நாம் விரும்பும் உணர்வுகளை அவர்களிடம் உருவாக்கலாம். அதற்குரிய வழி விழவுகளே அஸ்வமேதமும் ராஜசூயமும்” என்றார் சுரேசர்.

யுயுத்ஸு “ஆம், அதுதான் அவரிடம் மீளமீளச் சொல்லப்படுகிறது” என்றான். சுரேசர் “அவ்விழவுகள் இங்கே நிகழும்போது அக்கொண்டாட்டம் அவர்கள் அனைவரையும் ஒன்றாக்கும். நாம் விரும்பும் விளைவை அவர்களிடம் உருவாக்கும்” என்றார். யுயுத்ஸு “தாங்கள் எண்ணுவதென்ன?” என்றான். சுரேசர் “அரசர்கள் எங்குமே தகுதியால் ஏற்கப்படுவதில்லை. ஊழே அவர்களை அங்கே அமர்த்துகிறது. அதை நான் நம்புகிறேன்” என்றபின் திரும்பிச் சென்றார். யுயுத்ஸு சம்வகையை திகைப்புடன் நோக்க அவள் தலைவணங்கி விடைகொண்டாள்.