களிற்றியானை நிரை - 15
பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 6
சுரேசரிடம் பேசிவிட்டு மீண்ட பின்னரே சம்வகை நகருக்குள் வந்துகொண்டிருந்த மக்களை கூர்ந்து நோக்கத்தொடங்கினாள். ஏற்கெனவே பலவகையான மக்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். நகரிலிருந்து மக்கள் விலகிச்செல்கிறார்கள் என்னும் செய்தியே பலரை உள்ளே வரச்செய்ய போதுமானதாக இருந்தது. முன்பு வந்துகொண்டிருந்தவர்கள் இரவலரும் நாடோடிகளுமாக தெரிந்தனர். பின்னர் சிறுவணிகர்களும் கைவலரும் சூதர்களும் வரலாயினர். பின்னர் ஆயரும் உழவுக்குடியினரும்கூட தென்பட்டார்கள். அஸ்தினபுரியில் புதியவர்களுக்கு இடமிருக்கிறது என்னும் செய்தியை அந்நகரைவிட்டுச் சென்றவர்கள் பரப்பினர். அங்கே பழைய குலநெறிகள் அழிந்துவிட்டன என அவர்கள் தூற்றிச் சொன்னது ஒரு புதிய வாய்ப்பு என சிலருக்குத் தென்பட்டது.
மெல்லமெல்ல நிஷாதர்களும் கிராதர்களும் வரத்தொடங்கினர். அசுரகுடியினரும் அரக்கர்களும் தென்படவில்லை. “அவர்கள் தங்கள் குடித்தொன்மை மேலும் நிலப்பிடிப்பு மேலும் பெருமிதம் கொண்டவர்கள். பாரதவர்ஷம் ஒருநாள் தங்கள் மூதாதையரால் மீண்டும் ஆளப்படும் என்று நம்புபவர்கள். ஆகவே பிற நிலங்களை அவர்கள் நாடுவதில்லை” என்றார் சாரிகர். “அவர்கள் பிற நிலங்களை படையெடுத்துச் சென்று கைப்பற்றுவதில்லை. தங்கள் நாட்டை விரிவாக்கிக்கொள்வதுமில்லை. பிறர் படைகொண்டுவந்தாலொழிய போரிடுவதில்லை. எதிரிகளை மட்டுமே கொள்ளையிடுகிறார்கள். தங்கள் நிலத்தில் அயல்வேதம் ஊடுருவினால் மட்டுமே எதிர்த்து எழுகிறார்கள். அவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய நிலங்களுக்கு அப்பால் ஆற்றல்கொண்டவை அல்ல என்று சொல்லப்படுகிறது.”
அவர்கள் காலையில் கோட்டைமேல் நின்றிருந்தார்கள். அரண்மனையிலிருந்து அத்திரளை பார்ப்பதற்காகவே சாரிகர் தன் தோழன் சுதமனுடன் வந்திருந்தார். சாரிகர் சொன்னார் “இனி காடுகளெங்கும் அசுரர்களும் அரக்கர்களும் வலுப்பெறுவார்கள். அவர்களை வெல்லும் ஷத்ரிய குடிகள் அனைத்தும் முற்றழிந்தன. உண்மையில் இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரிய மன்னர்கள் அனைவரும் அவர்கள் தங்களைத் தாக்கலாகாது என்று அஞ்சி ஒடுங்கியிருக்கிறார்கள். இனி அவர்கள் ஆற்றல்கொண்டு படைதிரட்டி எழ பல தலைமுறைகள் ஆகும். ஷத்ரியர்களே இல்லையென்ற நிலை வந்துள்ளது.” சம்வகை கீழே சென்றுகொண்டிருந்த மக்கள் திரளை நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். மக்கள் என்னும் ஒழுக்கு. அவள் நோக்கத் தொடங்கியது முதல் அது ஒழுக்காகவே நிகழ்ந்தது. சுழிப்பாக அல்ல, அலையாக அல்ல.
“முன்பு முதலாம் பரசுராமரின் காலத்தில் அவர் சீற்றம்கொண்டு மழுவேந்தி வந்து ஷத்ரியர்களை முற்றழித்தார் என்கிறார்கள். அவர்களின் குருதியைக் கொண்டு குருக்ஷேத்ரத்தில் ஐந்து வாவிகளை அமைத்தார். அந்த வாவிகள் அங்கே இன்றும் உள்ளன. இன்றும் ஆயிரத்தெட்டு ஷத்ரிய குடிகள் அங்கே தங்கள் முன்னோர்களுக்குரிய நினைவுச்சடங்குகளை செய்கின்றன. அந்நிலத்தில் மீண்டும் ஷத்ரியகுலம் முற்றழியும் என நெடுங்காலமாக நிமித்திகக் கணிப்பு இருந்தது. பாரதவர்ஷமெங்கும் ஷத்ரிய குடிகள் பரவி கிளைநாடுகளாகி வளர்ந்து பெருகிக்கொண்டே இருக்கையில் அங்கே ஐந்து வாவிகளின் கரையில் அமர்ந்து யாரோ ஒரு சூதன் வரப்போகும் அந்த அழிவைப்பற்றி பாடிக்கொண்டே இருந்திருக்கிறான். தலைமுறை தலைமுறையாக.”
“நானும் அப்பாடலை ஒருமுறை கேட்டிருக்கிறேன்” என்று சாரிகர் சொன்னார். “அதைக் கேட்டபோது என் மெய் சிலிர்த்தது. அச்சத்தில் கண்களை மூடிக்கொண்டு நடுங்கினேன். ஆனால் எந்தை என்னை ஆற்றுப்படுத்தினார். அது வெறும்சொல் என்றார். வேதம் காக்கும் ஷத்ரியர்களுக்கு வேதமே காப்பு. வேதம் உள்ளளவும் அவர்கள் அழியப்போவதில்லை என்றார். எனில் ஏன் பரசுராமர் அவர்களை அழித்தார் என்றேன் நான். அவர்கள் வேதம் மறந்தனர். வேதப்புறம்பாக தங்களை நிலைநாட்டிக்கொண்டனர். வாளும் வேலும் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருக்கவேண்டும். அவை தங்கள் வழியை தாங்கள் தேர்கையில் அழிவு தொடங்கிவிடுகிறது என்று எந்தை சொன்னார். ஆகவேதான் ஷத்ரியர்களை பரசுராமர் அழித்தார். சொல் படைக்கலம் ஏந்தினால் அதை எவரும் எதிர்க்கவியலாது என்று காட்டினார். சொல்லில் இருந்து எழுந்தது அனல். அனலே படைக்கலங்களில் முதன்மையானது. மழுவால் நிலைநாட்டப்பட்ட அனற்குலத்து ஷத்ரியர் எழுந்து வந்து வேதக்காவலர்களானார்கள் என்றார்.”
“அன்று அவர் சொன்னதை நான் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் நான் பயிலுந்தோறும் அவ்வுறுதிப்பாட்டையே அடைந்தேன். ஷத்ரிய குடி பெருகிக்கொண்டிருக்கிறது. அவர்களின் ஆற்றல் என வேதம் நிலைகொள்கிறது. அவர்களை எவரும் வெல்லமுடியாது. அதற்கேற்ப மாபெரும் அசுரச்சக்கரவர்த்திகள் அழிந்துகொண்டிருந்தார்கள். பாணாசுரரின் தோல்வியே அதில் இறுதியானது. இனி ஒன்றும் நிகழப்போவதில்லை என்று எண்ணினேன். ஒருமுறை கரைமூடிப் பெருகியோடிய கங்கையின் கரையில் என் சாலைமாணாக்கர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அதை சொன்னேன். அப்போது அங்கே சற்று அப்பால் ஒரு நாடோடி நீராடிக்கொண்டிருந்தார். துறவி அல்ல, ஆனால் துறவியருக்குரிய முகம் கொண்டிருந்தார். அவர் புன்னகைத்தார். அதை நான் கண்டேன்.”
அனைவரும் பிரிந்துசெல்ல நான் அவரைத் தொடர்ந்துசென்றேன். அவரை அணுகி தோளைப்பற்றி நிறுத்தி “சொல்லுங்கள், நீங்கள் நகைத்தது ஏன்?” என்று கேட்டேன். அவர் புன்னகையுடன் “நீங்கள் சொல்வதை கேட்டேன். விரும்புவதை நம்ப மானுடர் கொள்ளும் உறுதியைப் பற்றி எண்ணிக்கொண்டேன்” என்றார். நான் அவரிடம் ”எனில் சொல்லுங்கள், எவ்வண்ணம் ஷத்ரியகுலம் அழியக்கூடும்? அவர்கள் வேதத்தை கைவிடப்போகிறார்களா? அல்லது வேதம் அவர்களை விட்டு அகலப்போகிறதா? அல்லது வேதம் தோற்கடிக்கப்படுமா?” என்று கேட்டேன். அவர் “வெல்லற்கரிய தந்தையை மைந்தன் வெல்வான் என்று தொல்கூற்று உள்ளது. வேதத்தின் கூர் என எழும் ஐந்தாம் வேதத்தால் நால்வேதம் வெல்லப்படும் என்கிறார்கள்” என்றார்.
அச்சொல்லில் இருந்த உண்மை என்னை நாவடங்கச் செய்தது. “வெல்லற்கரியவர்களை வெல்ல தெய்வங்கள் அவர்களையே ஏவுகின்றன என்றும் ஒரு சொல் உண்டு. ஷத்ரியர்களை இம்முறை ஷத்ரியர்களே வெல்வார்கள்” என்றார். நான் அவரை விட்டுவிட்டேன். அவர் செல்வதை வெறுமனே நோக்கிக்கொண்டு நின்றேன். ஒருகணத்தில் பாரதவர்ஷத்தில் நிகழ்வன அனைத்தும் எனக்கு புரிந்தது. நான் என் குருநிலையில் இருந்துகொண்டு இப்பூசலை ஒவ்வொருநாளுமென நோக்கி அறிந்துகொண்டிருந்தேன். இந்த அலைக்கொந்தளிப்பில் எழும் அமுதம் என்ன என்று தேடிக்கொண்டிருந்தேன். அது ஒரு நூல் என்றனர். இளைய யாதவரால் யாக்கப்பட்டது என்றும் இளைய பாண்டவர் அர்ஜுனன் அதை கற்றார் என்றும் சொன்னார்கள்.
நான் அதைத் தேடி சாந்தீபனி குருநிலைக்குச் சென்றேன். அங்கே எவருக்கும் அந்நூல் குறித்து தெரிந்திருக்கவில்லை. அது ஞானநூல் அல்ல, ஊழ்கநூல் என்றனர். விந்து கருப்பைக்கு என ஆசிரியரிடமிருந்து மாணவருக்கு அது செல்லவேண்டும் என்றனர். சாந்தீபனி குருநிலையில் எட்டு மாதம் இருந்தேன். அங்கே அந்த புதிய வேதம் மலர்ந்தெழுந்த மரம் என்ன என்று கற்றேன். அங்கிருந்து குருக்ஷேத்ரப் போர்க்களத்துக்கே கிளம்பிச்சென்றேன். அங்கே பரசுராமர் அமைத்த ஐங்குளத்தின் கரையில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். அப்போது ஒரு நாடோடித் துறவியின் நாவில் எழுந்த ஈரடியை கேட்டேன். அதன் இசையழகும் சொல்லழகும் என்னைக் கவர எழுந்துசென்று அது என்ன என்று அவரிடம் உசாவினேன். அதை ஒரு சூதர் நாவிலிருந்து கற்றதாக அவர் சொன்னார். அது இளைய யாதவர் இயற்றிய புதிய வேதத்தின் சொல் என்றார். இமைக்கணக் காட்டில் அது எழுந்தது என அறிந்தேன். சொல்க, அவ்வரிகளை சொல்க என்று பெருவிடாயுடன் கேட்டேன். இரண்டு வரிகள். எட்டு சொற்கள். நான் அந்த வேதத்தை கண்டுகொண்டேன்.
“அங்கிருந்து நேராக இங்கே வந்தேன். நான் வரும்போதே குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிவிட்டது. அதன் செய்திகள் எதையும் அறிந்துகொள்ள நான் அக்கறை கொள்ளவில்லை. அதில் எவர் வெல்வார், எச்சொல் நிலைபெறும் என்று நன்கு தெளிந்திருந்தேன். புதிய வேதத்தின் பொருட்டு வாழ்வதற்காக நான் அஸ்தினபுரியை நாடினேன்” என்றார் சாரிகர். சம்வகை அவருடைய உணர்ச்சிகளை விந்தையாக நோக்கிக்கொண்டிருந்தாள். “இந்நகர்தான், இந்நிலம்தான் அதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இங்கு அச்சொல் முளைவிட்டு எழும். அதன் களத்தில் நானும் இருப்பேன்” என்றார். சம்வகை “அந்த வரிகள் எவை?” என்றாள். திடுக்கிட்டதுபோல அவளை நோக்கிய சாரிகர் புன்னகைத்து “அதைச் சொல்ல எனக்கு ஒப்புதல் இல்லை” என்றார். சம்வகை “பொறுத்தருள்க, நான் அறியாதவள். அவ்வாறு கேட்டிருக்கலாகாது” என்றாள். சாரிகர் “உன் வரியை நீ கண்டடையக்கூடும்” என்றார்.
அவர்கள் அருகே நின்றிருந்த புதிய சிற்றமைச்சரான சுதமன் “நாங்கள் பாரதவர்ஷத்தின் கிழக்கு விளிம்பில் வாழ்பவர்கள்” என்றார். “பெருநதியான பிரம்மபுத்திரன் தொடங்குமிடத்தில். பசிய மலைகளின் அடிவாரத்தில். எங்களைச் சூழ்ந்து நாகர்களும் கின்னரர்களும் வாழ்கிறார்கள்” என்றான். “நாங்கள் பாரதவர்ஷத்தின் மையநிலத்துக்கு அயலார். எங்கள் நெறிகள் வேறு. அங்கே செய்திகள் மெல்லமெல்லத்தான் வந்துசேரும். ஒருநாள் பெருஞ்சாலையில் நான் சந்தித்த துறவி ஒருவர் சொன்னார். மரம் விதையாகிறது, விதை முளைக்கவிருக்கிறது என. எழும் புதிய வேதத்தின் செய்தியை அவ்வாறு நான் அடைந்தேன். அவர் என்னிடம் மரம் ஒரு விதையில் தன்னை திரட்டிக்கொள்கிறது, தன் தகவுகளையும் கனவுகளையும் என்றார். அச்சொற்களிலிருந்து நெடுந்தொலைவு சென்று நான் அந்த வேதத்தை என் கனவில் கண்டேன்.
நான் கண்ட வேதம் இனிய சிறுகுழவி. நீலப்பீலியை தலையில் சூடி கையில் குழலேந்தியது. கண்மலர்ந்து புன்னகைப்பது. அதைக் கண்டபின் நான் ஐயமற்றவனானேன். எங்கள் நெடுந்தொலைவு நிலத்திற்கு கசிந்து வந்துசேரும் உதிரிச் செய்திகளை தொகுத்து ஒற்றை நிகழ்வாக ஆக்குவது சிலராலேயே இயலும். அவர்களில் ஒருவனாக நான் ஆனேன். என்னைச் சூழ்ந்து என் குலத்தோர் என்ன நிகழ்கிறதென்று கேட்டுக்கொண்டிருப்பார்கள். அஸ்தினபுரியில் ஒருங்குகூடிக்கொண்டிருந்த போரின் செய்திகளை தொகுத்து ஒற்றைக் கதையாக ஆக்கி அவர்களுக்கு விளக்கினேன். நாடோடிப்பாடகர்கள் சொன்ன கதைகள். வணிகர்கள் சொன்ன கதைகள். பெரும்பாலான கதைகள் வாய்செவி என பரவியவை. உயிரிழந்தவை உண்டு. புத்துயிர்கொண்டு வளர்ந்தவையும் உண்டு. நான் அவற்றிலிருந்து மெய்மையின் சரடை எடுப்பவனாகத் திகழ்ந்தேன்.
பின்னும் பலர் வந்து சொல்லத்தொடங்கினர். ஆனால் என் கதையிலிருந்த ஒருமை அவர்களின் கதைகளில் இருக்கவில்லை. ஏனென்றால் நான் அனைத்தையும் புதிய வேதத்தின் எழுகையாகவே விளக்கினேன். அந்தச் செய்தி எங்களை எழுச்சி கொள்ளச்செய்தது. புதிய வேதத்தின் வெற்றிக்காக நாங்கள் ஒவ்வொருநாளும் வேள்விசெய்தோம். இறைவேண்டினோம். ஏனென்றால் எங்கள் நாடு நால்வேதத்தின் மையநிலத்திற்கு அப்பாலிருந்தது. ஐம்பத்தாறு நாடுகளின் பட்டியலில் எங்கள் நாடு இல்லை. எங்கள் அரசர்கள் ஷத்ரியர்களாகக் கொள்ளப்படவில்லை. எங்கள் அந்தணர்கள் எவருக்கும் வேள்வியவைகளில் முன்னிலை இருக்கவில்லை. நாங்கள் பரசுராமர்களால் உருவாக்கப்பட்ட அனல்குலத்து அந்தணர். எங்கள் வேதச்சொல் கூர் கொண்டது. எங்கள் சடங்குகள் பிழையற்றவை. எங்கள் நோன்புகள் முழுமை கூடியவை. ஆயினும் நாங்கள் அவைகளில் பின்னிலை கொண்டோம்.
ஏனென்றால் எங்களுக்கு வேதமுன்னிலை அளிக்கப்படுமென்றால் எங்கள் அரசருக்கும் குலமுன்னிலை அமையும் என அஞ்சினர் ஷத்ரியர். ஆகவே அவர்களால் பேணப்பட்ட அந்தணர் எங்களை அகற்றினர். வேதமெனும் சரடால் கோக்கப்பட்டவர்கள் பரதகண்டத்து அந்தணர். ஆனால் எவர் மையமணியாகவேண்டும் எவர் ஓரத்திலமையவேண்டும் என மாறா நெறிகள் சில அமைந்துவிட்டிருக்கின்றன. இப்போது வேதம் தன்னைத் தானே குலைத்து மறு ஆக்கம் செய்துகொள்கிறதென்றே பொருள்கொண்டோம். இங்கே போர் முடிவதற்கு முன்னரே நாங்கள் கிளம்பிவிட்டோம். நெடுந்தொலைவுகளை நடந்தே கடந்து அஸ்தினபுரியை வந்தடைந்தோம். இங்கு எழும் புதிய வேதம் எங்களை அமரவைக்கும் என உறுதிகொண்டுள்ளோம்.
“நான் அஸ்தினபுரிக்கு வரும்போது இந்நகரைப்பற்றி இவ்வண்ணம் எண்ணியிருக்கவில்லை. கதைகளில் இந்நகரைப்பற்றி அறிந்தவர்கள் நேரிலறிகையில் ஏமாற்றம் கொள்கிறார்கள் என்றார்கள். கதைகளையே அறிந்த எங்களுக்கு இந்நகர் திகைப்பூட்டுமளவுக்கு பெரிதாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் கண்ட நகர்களெல்லாம் மூங்கில்கோட்டையமைந்த சிற்றூர்கள்தான். ஐந்தாறு சிற்றூர்களை இணைத்து ஒருநகரை கற்பனை செய்திருந்தோம்” என்றார் சுதமன். சாரிகர் கீழே நோக்கி “இதோ ஒவ்வொருவர் விழிகளிலும் ஒவ்வொரு அஸ்தினபுரி. பல்லாயிரம் அஸ்தினபுரிகள் உள்ளே நுழைந்துகொண்டிருக்கின்றன” என்றார்.
ராஜசூயம் நிகழ்வதற்கான முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அஸ்வமேதம் தொடங்கிவிட்டிருந்தது. அதுவே ராஜசூயத்திற்கான அறிவிப்பாக ஆகியது. இளையவர் நால்வரின் தலைமையில் புரவிகள் நான்கு திசைகளுக்கும் கிளம்பிச் சென்றன. “ஆரியவர்த்தம் முழுக்க புரவிகள் சென்றாலே அஸ்வமேதம் முழுமையடைகிறது என்று பொருள். ஆரியவர்த்தத்தின் நாடுகள் அனைத்துமே ஏற்கெனவே நம்மிடம் போரில் தோல்வியடைந்தவைதான். அவர்களுக்கு ஓலையை அனுப்பிவிட்டுக் கிளம்பலாம்” என்று சுரேசர் சொன்னார். “அவர்கள் அஞ்சுவார்கள். நம் புரவி செல்வதற்கு முன்னரே அங்கே கப்பம் ஒருங்கியிருக்கும்.”
ஆனால் தௌம்யர் “அஸ்வமேதம் தொடங்குவதற்கு முன்னர் ஏழு சடங்குநிலைகள் உள்ளன. வேதம் விளைந்த காடுகள் அனைத்திற்கும் தூது அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படவேண்டும். வேதம் திகழும் நிலத்திற்கு மட்டுமே புரவியெழுகைக்கு ஒப்புதல் உண்டு. இல்லையேல் அப்புரவியை ஷத்ரிய மன்னர்கள் அனைவரும் சேர்ந்து பிடித்து அமைக்கவேண்டும் என்பது நெறி” என்றார். “அனைத்து வைதிகர்களும் அமரும் வேள்வி ஒன்று இங்கே நிகழவேண்டும். அதில் தேவர்கள் இறங்கி வரவேண்டும். நான்கு திசைகளுக்கும் உரிய தேவர்களின் ஒப்புதல் பெறவேண்டும். ஒவ்வொரு திசைக்கும் அதற்குரிய வண்ணம் கொண்ட புரவி செல்லவேண்டும். ஒவ்வொரு புரவியும் அதற்குரிய முறையில் அந்தணரால் பன்னிரு நாட்கள் வழிபடப்பட்டு வேதவடிவென்றே ஆக்கப்பட்டு கடிவாளம் நீக்கப்படவேண்டும். அதைத் தொடர்ந்து நால்வகைப் படைகளும் கொடிகளுடன் செல்லவேண்டும். அது வேதத்தின் புரவி, அதற்கு எந்த அரசமுத்திரைகளும் இருக்கக்கூடாது. அதன் உடலில் மானுடர் அணிவித்த எந்த அணிகளும் கூடாது. அது வேதம் போலவே தூயதாக இருக்கவேண்டும்.”
அவையில் அதைக் கேட்டு யுதிஷ்டிரன் திகைப்புடன் அமர்ந்திருந்தார். சுரேசர் தணிந்த குரலில் “இது முறையான அஸ்வமேதம் அல்ல” என்றார். “எனில் அது அஸ்வமேதம் அல்ல, அச்சொல்லை பயன்படுத்தலாகாது. அஸ்வமேதத்தில் முன்செல்வது வேதம். படைகொண்டு பின்செல்பவன் வேதக்காவலன். அந்நிலையில் மட்டுமே அவனுக்கு பிறர்மேல் படைமேற்கொள்ளும் உரிமை வாய்க்கிறது” என்றார் தௌம்யர். “இன்று நம்மை அனைத்து வேதியர்களும் ஏற்பார்களா என்பது ஐயத்திற்குரியது. அஸ்தினபுரி ஐந்தாவது வேதத்திற்காக நிலைகொள்கிறது என்று சொல்லப்படுகிறது” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், ஆனால் அது நான்குவேத மெய்மையே ஒழிய வேத மறுப்பு அல்ல” என்றார் தௌம்யர்.
“மெய், ஆனால் அதை இன்னமும் முழு வேதியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்வது எளிதும் அல்ல. தொடர்ச்சியான வேதஅவைகள் வழியாக, சொல்லுசாவி பொருள்தெளிதலினூடாகவே அதை செய்ய முடியும். அதற்கு இந்நகரம் வேரூன்றவேண்டும். இங்கே வேள்விகள் நிகழ்ந்து வேதியர்கள் அனைவரும் நாடிவரும் நிலை உருவாகவேண்டும். அதன்பொருட்டே இதை தொடங்குகிறோம்” என்றார் யுதிஷ்டிரன். அவர் சொல்வதை தௌம்யர் புரிந்துகொள்ளவில்லை. “வேள்விகள் என்றாலே அது வேதியர் அனைவரும் ஒப்புக்கொள்ளும் நிகழ்வுதான். வேதியர் அவை ஏற்காத எவரும் வேள்வி இயற்றலாகாது” என்றார்.
சுரேசர் “ஆம், அந்தணமுதல்வர் சொல்வது உண்மை, நமக்கு வேதியர்களின் ஒப்புதல் தேவை. அவர்களின் ஐயங்களைக் களைந்து அவர்களிடமிருந்து ஏற்பு பெறுவதற்கு தகுதியான மெய்யறிவர் ஒருவர் முன்னெழவேண்டும். கற்றறிந்தவரும் நெறிநிற்பவரும் வேதச்சொல் தேர்ந்தவருமாகிய தௌம்யர் அதை செய்வதே உகந்தது. அவர் அரசரின்பொருட்டு இதை செய்யவேண்டும்” என்றார். தௌம்யர் “என் கடமை அது…” என்று தயங்கி “ஆனால் அவ்வண்ணமொரு வேதப்பொருள் அவையில் இளைய யாதவரின் பொருட்டு சொல்லாடுவதற்கான பயிற்சி எனக்கு இல்லை என்று படுகிறது” என்றார். “சொல்லுசாவி நிறைவுசெய்து நாம் எதையும் தொடங்கவியலாது. அஸ்தினபுரியில் நிகழும் வேதக்கூடல்களில் பங்குகொள்ள வேதியரிடமிருந்து ஒப்புதல் பெற்றாலே போதும். அவர்கள் இங்கே வந்தால் எஞ்சியதை நாம் முன்வைக்கும் மெய்மையே நிறைவேற்றிக்கொள்ளும்” என்றார் சுரேசர்.
“மூத்தவர், தொன்மையான குருநிலைகளை நன்கறிந்தவர் என்னும் முறையில் தௌம்யர் இதை எளிதில் செய்ய முடியும்” என்று சகதேவன் சொன்னான். “ஆம், முயல்கிறேன்” என்றார் தௌம்யர். ஆனால் அவர் நம்பிக்கையிழந்துவிட்டது தெரிந்தது. “எனில் நாளையே தௌம்யர் கிளம்பட்டும். அவருடைய மாணவர்களும் உடன்செல்ல ஒருக்கங்கள் செய்க! அனைத்து வேதக்காடுகளுக்கும் உரிய முறையில் பரிசில்கள் செல்லட்டும்” என்றர் யுதிஷ்டிரன். தௌம்யர் “என் கடன்” என்றார். அவையில் அதற்கான ஆணையோலைகள் பொறிக்கப்பட்டன. “அவர்களின் ஒப்புதலுடன் அனைத்தையும் செய்வோம். இங்கே ராஜசூயம் நிகழ்கையில் அனைத்து வேதியர்குலங்களில் இருந்தும் ஒருவரேனும் வந்து பங்குகொண்டார்கள் என்றால் நாம் நிறைவுற்றோம். அஸ்தினபுரி மீண்டும் பொலிந்தெழும். தௌம்யரையே நம்பியிருக்கிறோம்” என்றார் சுரேசர்.
அன்று தன் அமைச்சுநிலையில் இருக்கையில் சுரேசரிடம் சம்வகை “அஸ்வமேதம் உடனே நிகழவில்லையா என்ன? படைகளைத் திரட்டவேண்டியிருக்கும் என எண்ணினேன்” என்றாள். “இல்லை, தௌம்யர் கிளம்பியதுமே அஸ்வமேதத்திற்கான ஒருக்கங்கள் தொடங்கப்படவேண்டும். இங்குள்ள அயல்நிலத்து அந்தணரைக்கொண்டே வேள்விச்சடங்குகளை செய்யவைப்போம். நமக்கு வேறுவழியில்லை. அவரை நகரைவிட்டு அகற்றவேண்டியே வேதியர்நிலைகளுக்கு அனுப்புகிறோம்” என்றார். சுதமன் “அவர் சினம்கொள்ளக்கூடும்” என்றார். “அரசியல் சூழ்ச்சிகளை புரிந்துகொள்பவர் அல்ல. அவருக்கு செய்தி தெரியும்போது நம் புரவிகள் நெடுந்தொலைவு சென்றிருக்கும்” என்றார்.
“இது அவரை சிறுமைசெய்வது ஆகாதா?” என்று அவள் மீண்டும் கேட்டாள். “அவர் சிறிதளவேனும் வெற்றிபெற்றால் நாம் ராஜசூயத்தில் வேதியர்களை அமரச்செய்யவும் முடியும்” என்றார் சுரேசர். “வெற்றிபெற்று ராஜசூயம் தொடங்கி அதில் தலைமை வேதியர் என தௌம்யரை அமரச்செய்தால் அவருடைய சினம் மறைந்துவிடும். அவர் அதற்கு அப்பால் எண்ணாதவர்.” அவளிடம் மட்டுமாக புன்னகைத்து “பொதுவாக சடங்குகளில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு அந்தந்த தருணங்களுக்கு அப்பால் எண்ண வாய்ப்பதில்லை. ஏனென்றால் சடங்குகள் என்பவையே நுண்ணியவையும் கடந்தவையுமான ஒவ்வொன்றையும் அந்தந்த தருணங்களில் கண்கூடான செயல்களில் நிலைநிறுத்துவதன் பொருட்டு செய்யப்படுவனதான்” என்றார். அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் அவள் பொதுவாக புன்னகைத்தாள்.
தௌம்யர் தன் பதினெட்டு மாணவர்களுடனும் அஸ்தினபுரியின் அரசர் யுதிஷ்டிரன் ஒவ்வொரு வேதநிலைக்கும் தனித்தனியாக அளித்த பொற்கொடை ஓலைகளுடனும் கிளம்பிச்சென்றார். அதற்கு மறுநாளே அஸ்தினபுரியிலிருந்து புரவிகள் கிளம்புவதற்கான ஒருக்கங்கள் தொடங்கின. நகரின் நான்கு வாயில்களிலும் நான்கு சிறுவேள்விகள் நிகழ்த்தப்பட்டன. வேசரநாட்டிலிருந்தும் காமரூபத்திற்கு அப்பாலிருந்தும் வந்திருந்த அயல்நிலத்து அந்தணர் அச்சடங்குகளை செய்தார்கள். அஸ்தினபுரியின் அரண்மனை முற்றத்தில் அமைந்த வேள்விப்பந்தலில் ஆகவனீயம், கார்கபத்யம், தட்சிணம் என்னும் மூவெரியும் எரிகுளங்களில் எழுந்தன. வேள்விக்காவலனாக யுதிஷ்டிரன் அமர்ந்தார். வேள்விக்குரிய தர்ப்பைக் கொடி பந்தல்மேல் எழுந்தது. இணையாக அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி ஓங்கியது.
அங்கிருந்து கொண்டுசென்ற அனலால் கோட்டையின் நான்கு வாயில்களிலும் நான்கு வேள்விப்பந்தல்களில் அமைக்கப்பட்ட எரிகுளங்கள் சுடர்கொண்டன. வடக்குவாயிலில் அமைக்கப்பட்ட வேள்விப்பந்தலின் நடுவே இரு பொற்குடங்களின் வடிவில் குபேரன் தன் இணையான பத்ரையுடன் நிறுவப்பட்டான். அங்கே வேள்விக்காவலனாக பீமன் அமர்ந்தான். ஐந்து அணியிலக்கணங்கள் கொண்ட வெண்ணிறப் புரவியான ரஜதை அங்கே வேள்விப்பரியாக நிலை கொண்டது. தெற்குவாயிலில் யமன் தன் இணையான யமியுடன் மயில்தோகையின் வடிவில் நிறுவப்பட்டான். அங்கே சாரதை என்னும் கரிய புரவி வேள்விப்பரியாக வந்தது. சகதேவன் அங்கே வேள்விக்காவலனாக அமர்ந்தான்.
கிழக்கே இந்திரன் தன் தோழியான சாசியுடன் வேள்வித்தெய்வமென அமைந்தான். பூத்த வேங்கைமரக்கிளையும் கொன்றைமரக்கிளையும் அவர்களின் வடிவாகியது. பொன்னிறப் புரவியான ஹிரண்யை அங்கே வேள்விப்பரியென வந்தது. அதைக் காக்கும் காவலனாக வில்லுடன் அர்ஜுனன் அமர்ந்தான். நகுலன் உருவிய வாளுடன் காவலனாக அமர மேற்கே வருணன் தன் தேவியான வாருணியுடன் எழுந்தான். வலம்புரிச் சங்குகள் அவர்களின் வடிவாக நிறுவப்பட்டன. கபிலை என்னும் மாந்தளிர்நிறப் புரவி அங்கே வேள்விப்பரியாகியது. அந்தணர் வேதம் ஓதி அவியளிக்க நெய்ப்புகை எழுந்து பந்தல்கள்மேல் மணிமுடிபோல் ஒளிசூடி நின்றது. நான்கு வாயில்களிலும் நான்குவகை படையினரும் படைக்கலங்கள் ஏந்தி காவல் நின்றனர்.
வேள்விநிறைவில் பதிட்டைகளில் தேவர்களின் வருகை நிகழ்ந்தது. பொற்குடங்களின் மேல் விண்ணொளி விழுந்தது. மயிற்பீலி காற்றில் உலைந்தது. மலர்க்கிளைகள் மலருதிர்த்தன. சங்குகளில் காற்று நுழைந்து ஓங்காரமெழுப்பியது. “தெய்வங்களின் ஆணை! எழுக புரவி!” என்று வேதியர்கள் ஆணையிட்டனர். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் வாளால் புரவியைக் கட்டியிருந்த தோல்வாரை வெட்டி அதை விடுவித்தனர். வேள்வித்தலைவர் வலம்புரிச்சங்கை ஊதி வேள்விப்பரி கிளம்புவதற்கு ஆணையிட்டார். பீமன் தன் கதையை தூக்கியதும் முரசுகளும் கொம்புகளும் மணிகளும் முழங்கின. “எழுக வேள்விப்பரி! எழுக அஸ்தினபுரியின் கொடி! அமுதகலக்கொடி எழுக! வெல்க வெற்றித்திருநகர்! வெல்க மாமன்னர் யுதிஷ்டிரன்! வெல்க பாரதவர்ஷத்தின் காவலன்!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன.
பீமனால் விடுவிக்கப்பட்ட ரஜதை நான்கு அகவை நிறைந்த கன்னிப்புரவி. வேள்விக்கென பல நாட்களாக அது பேணப்பட்டு வந்தது. மானுடர் ஒருமுறைகூட அதன் மேல் ஏறியிருக்கவில்லை. சேணத்திற்கு பழகியிருக்கவுமில்லை. கடிவாளத்தை மென்றபடி அது வேள்விப்பந்தலுக்கு வந்தபோதே பலமுறை மிரண்டு துள்ளி பக்கவாட்டில் குதித்து கால்களை உதறிக்கொண்டது. அதை இருபுறமும் இருவர் இழுக்க முன்பக்கம் இன்னொருவர் இழுக்க அடக்கி கொண்டுவந்தனர். பலமுறை அது அவர்களைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு திரும்பி ஓட முற்பட்டது.
வேள்விப்பந்தலை அணுகியபோது அஞ்சி கனைத்தபடி பாய்ந்து திரும்ப முயன்றபோது அங்கே நின்றிருந்த பீமன் தன் தொடையில் ஓங்கி அறைந்தான். அவ்வோசை கேட்டு அது திகைத்து நின்று உடல் விதிர்த்தது. அவன் அருகணைந்து அதன் பிடரியில் மெல்ல அறைந்து கடிவாளத்தைப்பற்றி இழுத்து உள்ளே கொண்டுசென்றான். அது வேள்விப்பந்தலில் தறியில் கட்டப்பட்டபோது அங்கிருந்த நெய்மணத்தையும் மலர்ப்பொடியையும் முகர்ந்து தும்மியது. மூக்குத்துளைகளை விரித்து தலைதூக்கி நாற்புறமும் நோக்கி நடுநடுங்கி சுழன்றுவந்தது.
வேள்விக்களங்களில் எரி எழுந்து வேதம் ஒலிக்கத் தொடங்கியபோது அதன் அச்சம் அடங்கியது. அந்த ஒலியொழுக்கில் கொண்டுசெல்லப்பட்டதுபோல விதிர்க்கும் தோல்பரப்புடன் அதிர்ந்து திரும்பும் செவிகளுடன் அவ்வப்போது நீள்மூச்செறிந்தும் வால்சுழற்றி கால்மாற்றிக்கொண்டும் நின்றது. வேள்வி அவிமிச்சத்தை அதற்கு வேதியர் கொண்டு வந்து அளித்தபோது தயங்கி பின் நா நீட்டி சுழற்றி எடுத்து உண்டது. அதன் தொங்கிய தாடை சுவையறிந்து மீண்டும் முன்னெழுந்தது. தன் பெரிய தலையை வேதியரின் தோள்மேல் வைத்து மூச்செறிந்தது.
பீமன் அதன் தோல்வாரை வெட்டியபோது அது திகைத்து பின்னடைந்து விழியுருட்டியது. அவன் அதன் கடிவாளத்தை அகற்றினான். உருவிவிட்ட மின்னும் உடலுடன் அது பஞ்சாலானதுபோல் தோன்றியது. பிடரி அதிர்ந்துகொண்டிருக்க அது அங்கேயே நின்றது. வாழ்த்தொலிகளும் முரசுகொம்புகோட்டோசைகளும் எழுந்ததும் திரும்பி அவர்களை நோக்கியது. வேறேதோ ஒலிக்குச் செவிகூர்வதுபோல தலைதூக்கிய பின் துள்ளிப் பாய்ந்து இரு வீரர்களின் தலைக்குமேல் எழுந்து வடக்குநோக்கி ஓடத்தொடங்கியது. பீமன் உரக்கக் கூச்சலிட்டபடி தன் புரவியிலேறிக்கொண்டு அதை தொடர்ந்து சென்றான். முரசொலியும் கொம்பொலியும் போர்க்கூச்சலுமாக படையினர் அதைத் தொடர்ந்து சென்றனர்.
கைவிடப்பட்ட காந்தாரப் படைவீடுகளின் நடுவிலூடாக அது புராணகங்கைக்குள் நுழைந்து மறைய படையினரும் பின்தொடர்ந்து சென்று பசுமைக்குள் மூழ்கினர். கோட்டைவாயிலிலும் காவல்மாடங்களிலும் நின்றிருந்தவர்கள் வாழ்த்தொலிகளை ஒலித்துக்கொண்டே இருந்தனர். கிழக்குவாயிலில் இருந்து அர்ஜுனன் ஹிரண்யையை தொடர்ந்து சென்றான் என சம்வகை அறிந்தாள். மேற்கிலிருந்து நகுலன் கபிலையை தொடர்ந்து சென்றான். அவள் தெற்கே செல்லும்போது கரிய புரவியான சாரதையை சகதேவன் கொண்டுவந்து வேள்விப்பந்தலுக்கு வெளியே நிறுத்தினான். அதன் கழுத்தை வருடி ஏதோ சொன்னான். கடிவாளத்தை அவன் அகற்றியதும் அது பிடரி மயிர் நலுங்க, புட்டத்தசைகள் திமிர்க்க, தோள்தசைகள் இறுகி நெகிழ, காலெடுத்துவைத்து நடந்து முன்சென்றது. முரசொலியும் போர்க்கூச்சலுமாக சகதேவனின் படை உடன் சென்றது.