களிற்றியானை நிரை - 14
பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 5
மூன்று குடித்தலைவர்களுடன் ஏவற்பெண்டு சம்வகையின் அருகே வந்து நின்றாள். சம்வகை அவர்களிடம் “வருக!” என்று சொல்லிவிட்டு நடந்தாள். அவர்களில் ஒருவர் “நாங்கள் எப்பிழையும் ஆற்றவில்லை” என்றார். “பிழையால் அல்ல” என்று சம்வகை சொன்னாள். “அரசர் நகரின் நிலை குறித்து உங்களிடம் உசாவ விழைகிறார், அவ்வளவுதான்.” அவர் “நகரின் நிலையை எங்களிடம் ஏன் உசாவவேண்டும்? உப்பரிகையில் ஏறிநின்று ஒருமுறை நோக்கினால் போதுமே” என்றார். சம்வகை “அதை அவரிடம் கூறுக!” என்றாள். அவர் “நான் கூற அஞ்சப்போவதில்லை. இந்நகரில் இனி நாங்கள் எதையும் அஞ்சவேண்டியதில்லை” என்றார்.
அவர்கள் யுதிஷ்டிரனின் சிற்றறை வாயிலை அடைந்தனர். யுதிஷ்டிரன் அறைக்குள் நுழைந்து மஞ்சத்தில் அமர்ந்திருக்கவில்லை. ஏவலன் சென்று சொன்னதும் அவர்களை உள்ளே அழைத்தார். சம்வகையும் உடன் சென்றாள். அவர்கள் சென்று வாழ்த்துரைத்து வணங்கியதும் “அமர்க!” என்றார் யுதிஷ்டிரன். “இல்லை, முறைமைகள் தொடரட்டும். அவையிலன்றி வேறெங்கும் அரசர்முன் அமரும் வழக்கம் அஸ்தினபுரியில் இல்லை” என்றார் அவர்களில் மூத்தவரான குடித்தலைவர். யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் மஞ்சத்தில் அமர்ந்தார். அவருக்குப் பின்னால் இரு சிறு மஞ்சங்களில் நகுலனும் சகதேவனும் அமர்ந்தனர். யுயுத்ஸு சாளரத்தருகே நின்றான். சுரேசர் யுதிஷ்டிரனின் வலக்கைப்பக்கம் நின்றார். அறைக்குள் வேறு அமைச்சர்கள் எவரும் இருக்கவில்லை.
யுதிஷ்டிரன் மிகவும் களைத்திருந்தார். அவர் உடலில் வியர்வை பெருகி மஞ்சள்பொடியையும் அரிமலர்சிதர்களையும் நீண்ட கோடுகளாக வழியச் செய்தது. ஏவலன் ஒருவன் குளிர்ந்த மரவுரியுடன் வந்து அவர் உடலை துடைத்தான். அவர் சூடிவந்த மணிமுடி அப்பால் சிறிய பீடத்தில் அருகே உடைவாளுடன் வைக்கப்பட்டிருந்தது. யுதிஷ்டிரன் தலையை உலுக்கி கூந்தல்கற்றைகளை தோளுக்குமேல் தள்ளினார். வெளியே இருந்து இழுக்கப்பட்ட சரடு தலைக்குமேல் தொங்கிய பெரிய விசிறியை அலைபாயச் செய்தது. ஆயினும் அறைக்குள் வெம்மையுடன் நிறைந்திருந்த காற்றில் அசைவேதும் நிகழவில்லை. யுதிஷ்டிரன் வாயைக் குவித்து ஊதியபடி “கடும் வெப்பம்” என்றார். “மழை வரக்கூடும்” என்றார் சுரேசர். “ஆம், மழையைத்தான் செடிகளும் எதிர்பார்க்கின்றன” என்றார் யுதிஷ்டிரன்.
சொற்களினூடாக அவர்கள் தங்களை எளிதாக்கிக்கொண்டார்கள். யுதிஷ்டிரன் “நான் தங்களை அழைத்தது ஒன்று உசாவவே” என்று குடித்தலைவரிடம் சொன்னார். “நான் அறியவேண்டுவது ஒன்றே. இன்னும் எத்தனை குடிகள் நகரை விட்டுச்செல்வதாக உள்ளன?” அவர்கள் பேசாமல் நின்றனர். “சொல்க!” என்றார். இளையவரான ஆயர்குடித்தலைவர் சக்ரர் “பிறரைப்பற்றி எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நாளையோ மறுநாளோ கிளம்புவதாக உள்ளோம்” என்றார். யுதிஷ்டிரன் இமைக்காமல் அவரை நோக்கிய பின் “ஏன்?” என்றார். “கருவூலத்திலிருந்து கொடையளிப்பு நிகழக்கூடும் என்றனர். எங்கள் குடிகள் வழிச்செலவுக்குப் பொன் இல்லாமல்தான் இங்கே காத்திருந்தனர். அது கிடைத்தால் அதன்பின் இங்கே தங்கியிருக்க மாட்டோம்” என்றார்.
“ஏன் என்று என்னிடம் சொல்லலாமா?” என்றார் யுதிஷ்டிரன். “நான் என்ன பிழை செய்தேன்? நீங்கள் இந்நகரை உதறிவிட்டுச் செல்வது ஏன்?” சக்ரர் “உங்கள் பிழை அல்ல, எங்கள் ஊழ். எங்கள் குடிகளில் ஒருவரேனும் உயிர்விடாத எந்த வீடும் இங்கில்லை. இந்நகர் எங்கள் நினைவுகளால் நிறைந்தது. எங்கள் மைந்தர் ஓடிவிளையாடிய தெருக்கள். அவர்கள் களியாடிய நிலங்கள். இங்கே இனி நாங்கள் உளம்நிறைந்து வாழமுடியாது. இங்கிருந்து செல்வதொன்றே இந்நினைவுகளைத் துறப்பதற்கான வழி” என்றார். யுதிஷ்டிரன் “ஆம், அது மெய்” என்றார். “இந்நகரில் நுழைந்தபோதே என் நெஞ்சை அறுப்பதுபோல் உணர்ந்தேன். இந்நகரின் நினைவுகள் எழுந்து என்னை மண்ணோடு அழுத்தின.” சக்ரர் “நாங்கள் ஒவ்வொருவரும் கிளம்புவது அதன்பொருட்டே” என்றார். “செல்லும் நிலம் எதுவாயினும் அங்கே புதிய நினைவுகளை நாங்கள் உருவாக்கிக்கொள்ள முடியும். எங்கள் மகளிர் கருவறைகளில் புதிய மைந்தர் எழுவாராயின் சில ஆண்டுகளிலேயே அனைத்தையும் மறந்து புதிய வாழ்க்கையை நாங்கள் அடையவும்கூடும்.”
யுதிஷ்டிரன் “புதிய மைந்தர் பிறந்தால் இந்நகரம்கூட இனிதாகக்கூடும்” என்றார். முதியவரான வேளாண்குடித் தலைவர் பிருதர் சீற்றத்துடன் முன்னால் வந்து “எவரிடமிருந்து? இங்கே வந்து குழுமும் நாடோடிகளிடமிருந்தா?” என்றார். அந்த மதிப்பின்மை யுதிஷ்டிரனை திகைக்க வைத்தது. சகதேவன் ஏறிட்டு நோக்கினான். “எங்கள் குடி தொன்மையானது. இந்த அஸ்தினபுரியைவிடவும் தொன்மையானது. நாங்கள் இந்நகரை தூய குருதியால் நிறைத்தோம். அது சீர்கெட ஒருபோதும் ஒப்பமாட்டோம்” என்றார். “நாங்கள் இங்கிருந்து எங்கள் தொல்நிலத்திற்கே மீள்கிறோம். அங்கே கோபுர உச்சியின் விதைநெல் என எங்கள் தூய குருதி இன்னும் எஞ்சியிருக்கிறது. அதிலிருந்து மீண்டும் முளைத்தெழுவோம்.” யுதிஷ்டிரன் “ஆம், அதுவே முறை” என்று மெல்லிய குரலில் சொன்னார்.
மூன்றாமவரான வேளாண்குடித் தலைவர் பூர்வர் “ஒன்று மட்டும் நான் கேட்கிறேன். நாங்கள் எதை நம்பி இங்கே வாழமுடியும்? இந்நகர் முன்பு படைக்கலம் ஏந்தி கருவறை அமர்ந்த கொற்றவை போலிருந்தது. இன்று நகர்முகப்பில் கைவிடுபடையின் விற்கள் தளர்ந்து நின்றுள்ளன. இந்நகர் தன் அனைத்து ஆற்றல்களையும் இழந்திருக்கிறது. இனி இது வீரம்கொண்டு எழப்போவதில்லை. உங்கள் கோல்கீழ் இது ஒரு ஊட்டுபுரைபோலவே இருக்கப்போகிறது” என்றார். யுதிஷ்டிரன் “ஆம், இனிமேல் இந்நகரம் படைக்கலம் ஏந்தப்போவதில்லை” என்றார். “அன்னை சத்யவதியின் காலத்தில் பூட்டப்பட்ட விற்கள் அவை. அவைதான் இப்பேரழிவை நோக்கி நகரையும் குடிகளையும் செலுத்திக்கொண்டிருந்தன. எடுக்கப்பட்ட படைக்கலம் குருதியின்றி அமையாது.”
“அப்படைக்கலம் வெளிப்பகையிலிருந்து காப்பது மட்டும் அல்ல” என்றார் பூர்வர். “அது பெரும்பழி எனக் கண்டது குடிக்கலப்பை. குலச்சீர்குலைவுக்கே அது பெருந்தண்டனைகளை அளித்தது. இங்கு நிலைகொண்ட வேதத்தைக் காக்கும்பொருட்டு எழுந்த படைக்கலம் அது. அது அங்கில்லை என்றால் இங்கே என்ன நிகழும்? குருதிச்சீரழிவு. வேறொன்றுமில்லை.” அவர் உணர்வெழுச்சியால் மூச்சுத் திணறியபடி முன்னால் வந்தார். “புதிய வேதம் குலக்கலப்பை முன்வைக்கிறது என்கிறார்கள். மானுடர் அனைவரும் தங்கள் இயல்புகளாலும் செயல்களாலும் மட்டுமே வகுக்கப்படவேண்டும் என்று அது சொல்கிறது என்கிறார்கள்.” அவரால் பேசமுடியவில்லை. இருமி இருமி உடல் அதிர்ந்தார்.
சக்ரர் ஏதோ சொல்ல வாயெடுக்க கையமர்த்தி அவரைத் தடுத்து “இன்றுவரை எங்களை ஆளும் அரியணையாக, நெறிசொல்லும் செங்கோலாக, காக்கும் கோட்டையாக நின்றிருந்தது வேதம். அது அகன்றபின் இந்நிலத்தில் எங்களுக்கு என்ன இடம்? வேதம் திகழும் நிலம்தேடிச் செல்கிறோம்” என்றார். சக்ரர் ஊடே புகுந்து “இங்கே உங்கள் குடிகளென நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் வந்து குழுமுவார்கள். அவர்கள் முயங்கி புதிய குலங்களென ஆவார்கள். எங்களுக்கு இங்கே இடமில்லை. நாங்கள் செல்கிறோம்” என்றார். “எங்களுக்கு உங்கள் பொன் வேண்டியதில்லை… இன்றே இப்போதே கிளம்புகிறோம்” என்றார் பிருதர். சக்ரர் “எங்களுக்கு எவருடைய செல்வமும் தேவையில்லை. இக்கருவூலத்தில் உள்ளது எங்கள் முன்னோர் செலுத்திய வரிச்செல்வம்…” என்றார்.
யுதிஷ்டிரன் புன்னகையுடன் எழுந்துகொண்டு “உங்களுக்குரியதை அளிக்கும்படி ஆணையிடுகிறேன், குடித்தலைவர்களே. இங்கே வாழ்ந்து இந்நகரை செழிப்புறச் செய்தீர்கள். இதை உதறிச் செல்லுமிடமும் செழிப்புறுக! உங்கள் குடி பெருகி நிறைக!” என்றார். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். அவர்கள் செல்லலாம் என்று யுதிஷ்டிரன் தலையசைத்து கைகூப்பினார். சம்வகை அவர்கள் வெளியேறலாம் என்று கைகாட்ட அவர்கள் தலைவணங்கி மூச்சு இரைக்க உடல் வியர்வையில் நனைந்து வெக்கைவிட வெளியே சென்றனர். வெளியே வந்ததும் சக்ரர் “இனிய சொற்கள், கலியின் மைந்தன் இனிய சொற்கள் கொண்டவன் என்கிறார்கள்” என்றார்.
“யார்? யார் கலியின் மைந்தன்?” என்றாள் சம்வகை. “இவர்தான்… வேறெவர்? இதோ கலியுகம் பிறந்துவிட்டிருக்கிறது. இந்த யுகத்திற்கான வேதம். அதை நிறுவும் அரசர்…” சம்வகை புன்னகையுடன் “நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? இந்த யுகத்தைவிட்டு நீங்கி காலத்தில் பின்னால் செல்கிறீர்களா?” என்றாள். சக்ரர் திகைத்து பின் சீற்றத்துடன் “ஆம், காலத்தில்தான் பின்னால் செல்கிறோம். இந்த யுகத்தில் எங்கள் அறங்களுக்கு இடமில்லை. அறம்மீறி குருதிபெருக்கி முடிசூடிய இவருக்குக் கீழே குடிகளென அமைய எங்களுக்கு உளமில்லை” என்றார்.
“உங்கள் வழிதேர்க!” என்றாள் சம்வகை. “எந்த ஊழ் இவற்றை சமைக்கிறதோ அதுவே அடுத்ததையும் திட்டமிட்டிருக்கும். அவ்வாறே ஆகட்டும்” என்று சக்ரர் முனகினார். பிறர் தளர்ந்த நடையுடன் செல்ல சக்ரர் அவளை சீற்றத்துடன் திரும்பித் திரும்பி நோக்கியபடி சென்றார். இடைநாழியின் விளிம்பை அடைந்ததும் “இதோ நீயே அதற்குச் சான்று. மாவீரர்கள் அணிந்த கவசத்தையும் வாளையும் சூடி நாணிலாது நின்றிருக்கிறாய். கலியுகத்தில் பெண்கோழி பறக்கும் என்கின்றன பாடல்கள்” என்றார். தன்னை மீறி சம்வகை புன்னகைத்தாள். அவர் அவள் சிரிப்பைக் கண்டு மேலும் சீற்றம்கொண்டு பின்னர் சொல்லடக்கி வெளியே சென்றார்.
சம்வகை சுரேசரின் அறைக்குள் நுழைந்தபோது அங்கே சிற்றமைச்சர்கள் கூடியிருந்தனர். அவளைக் கண்டதும் அவர் புன்னகைத்து “அந்தக் கவச உடையை கழற்றிவிட்டாயா? மெய்யாகவே அது உனக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. நீ அதை நிறைத்துவிட்டிருந்தாய்” என்றார். அவள் புன்னகைத்து “இன்னும் முடிசூட்டுவிழா நிகழ்ச்சிகள் உள்ளன. அப்போது அணிகிறேன்” என்றாள். அவர் “என்ன நிகழ்கிறது? குடிகள் சென்றுகொண்டிருக்கின்றனவா?” என்றார். “ஆம், நாமே வழிப்பொருளை அளித்து அனுப்பிக்கொண்டிருக்கிறோம்” என்றாள். அவர் “அது அரசாணை. அவரால் அப்படித்தான் சொல்லமுடியும். செல்பவர்கள் செல்லட்டும் என்கிறார்” என்றார். அவளை நோக்கி குனிந்து புன்னகைத்து “குடிகளிடமிருந்து வசைச்சொற்களைப் பெற்றபோது அவருடைய ஆழம் நிறைவுற்றது என நினைக்கிறேன்” என்றார்.
“ஆனால் நகர் முற்றொழிந்துள்ளது” என்றாள் சம்வகை. “தெருக்களில் அசைவே இல்லை. இல்லங்கள் பாழடையத் தொடங்கிவிட்டன.” சுரேசர் “என்ன செய்யலாம் என்கிறாய்?” என்றார். “சில நாட்கள் இந்நகரை மூடிவிடலாம். இது ஒரு உடனடி உள எழுச்சி. இதை சில மாதங்கள் ஒத்திப்போட்டாலே போதும். அஸ்தினபுரியில் இவர்கள் இதுவரை வாழ்ந்தது இது அழகான நகர் என்பதனாலோ தெய்வங்கள் உறையும் இடம் என்பதனாலோ அல்ல. இது மாபெரும் அங்காடி என்பதனால்தான். இங்கே வணிகர்கள் வரட்டும். அங்காடிகளில் பொருட்கள் நிறையட்டும். இக்குடிகள் இங்கேயே உளம் அமைவார்கள்.”
சுரேசர் “நீ சொல்வது உண்மை. ஆனால் இம்முறை அது முழு உண்மை அல்ல” என்றார். “அவர்கள் குடித்தூய்மையை அஞ்சி செல்கிறார்கள் என்றால் எதுவும் அவர்களை தடுக்காது.” சம்வகை “அவர்கள் இங்கே குடித்தூய்மையைப் பேணி வாழ்ந்தார்களா என்ன? இந்திரவிழவில் குருதிக்கு என்ன கட்டுப்பாடு?” என்றாள். “எங்கே கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளனவோ அங்கேதான் அத்தகைய கரவுப்பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கும். அணைக்கட்டின் மிகைநீர் மதகு அது” என்றார் சுரேசர். “அவர்கள் தங்கள் தொல்குடி அடையாளத்தையே செல்வமென எண்ணிக்கொள்பவர்கள். முன்பொருமுறை இளிவரல்சூதன் ஒருவன் பாடினான். அஸ்தினபுரியில் தொல்குடிகள் அன்றி எவருமே இல்லை. உள்ளே நுழைகையிலேயே நாம் தொல்குடியினராக ஆகிவிடுவோம் என்று.”
சுரேசரின் உதவியாளர்கள் புன்னகைத்தனர். “நீ அறிந்திருக்கமாட்டாய், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மூதாதையர் இங்கு வந்தனர். மாமன்னர் ஹஸ்தி இந்நகரை அமைத்தபோது இந்நகரில் குடியேறுவதற்கு எட்டு திசைக்கும் மங்கலச்செய்தியாளர்களை அனுப்பி அனைத்து மக்களையும் அழைத்தார். பதியெழுதல் என்பது அன்று பெரும்பிழை என்றே கருதப்பட்டது. போராலோ பஞ்சத்தாலோ நெருப்பாலோ வாழுமிடம் முற்றழிந்தாலன்றி எவரும் கிளம்புவதில்லை. அவ்வாறு வேறு வழியின்றி கிளம்பி வருபவர்களைக் கொண்டு ஒரு நகர் அமைத்தால் அது ஆற்றல் மிக்கதாக அமைவதும் இல்லை. அத்துடன் இன்னொரு மன்னரின் நிலத்திற்குள் தூதனுப்பி குடிகளை அழைப்பதும் இயலாது. குடிகள் பெயர அவர்கள் விடுவதுமில்லை.”
“ஆகவே இங்கு மாமன்னர் ஹஸ்தி ஒரு பெருவேள்வி நடத்தினார். ராஜசூயவேள்வி என்று கேட்டிருப்பாய். கருவூலம் முற்றொழிவது வரை அள்ளி அனைவருக்கும் பகிர்வது அது. வேள்விச்செய்தியை எங்கும் அறிவிக்கலாம். வேள்விக்கெனச் செல்வது பிழையென கருதப்படுவதில்லை. அவர்களை அரசர்கள் தடுப்பது வேதப்பழி கொள்வது. வேள்வியழைப்பு எட்டுத் திசைகளுக்கும் சென்றபோது மக்கள் இங்கு வரத்தொடங்கினார்கள். தகுதியானவர்கள் பலர் வந்தனர். சிற்பிகள், கலைஞர்கள், கைக்கோளர்கள், ஆயர்கள், உழவர்கள் என வந்தபடியே இருந்தனர். படைத்திறன் கொண்டவர்களும் அவர்களில் நிறைந்திருந்தனர். ஒரு மாதத்தில் அஸ்தினபுரி தன் முதன்மைக்குடிகளை கண்டடைந்துவிட்டது.”
“உண்மையில் தாங்கள் வாழுமிடத்தில் தங்களுக்கு உரிய மதிப்பில்லை என்று உணர்பவர்கள்தான் இத்தகைய அறிவிப்பைக் கேட்டு முதலில் கிளம்புவார்கள். ஏனெனில் மெய்யாகவே அவர்கள் வாழுமிடத்தில் அவர்களுக்கு அத்தகைய மதிப்பு அளிக்கப்பட்டிருக்காது. ஒரு ஊர் அதன் தேவைக்கேற்பவே திறனாளர்களை உருவாக்கிக்கொள்கிறது. அது நிறைவுகொண்டு அங்கே அமைந்திருக்கிறது. மேலும் திறனாளர்கள் அங்கு உருவாகும்போது அத்தனை திறனாளர்களும் அவர்களின் மிகுதிறனும் அவ்வூருக்கு தேவையிருப்பதில்லை. ஆகவே என்ன செய்வதென்றறியாமல் அவ்வூரும் திணறிக்கொண்டிருக்கும். அது தனக்குத் தேவையான அளவுக்கு திறனுள்ளவர்களை நிறுத்திக்கொள்ளவே முயலும். ஆகவே அவர்கள் எப்போதும் பிறர் திறனை குறைத்துக் கூறுவார்கள். அந்த மிகைத்திறன் இளிவரலுக்கு உள்ளாக்கப்படும். அம்மிகைத்திறன் கொண்டவர்கள் அவ்வூரிலிருந்து கிளம்பியே ஆகவேண்டும்.”
“அவ்வாறு ஒவ்வொரு ஊரிலிருந்தும் கிளம்புபவர்களே அவ்வூரின் தலைசிறந்த திறன் கொண்டவர்கள். நிறை வயலிலிருந்து கதிர் மணிகள் எழுவதுபோல என்று ராஜ்ய சூத்திரம் அதைப்பற்றி கூறுகிறது. உருவாகி வரும் புதிய நகர்களுக்குத் தேவையானவர்கள் அவர்களே. ஒரு நகர் உருவாவதென்பது என்ன? அன்று வரை இருந்த ஊர்களும் நகர்களும் போதாமல் கூடுதலாக ஒன்று உருவாகிறதென்றுதானே பொருள்? ஆகவே அது அன்றுவரை இல்லாதிருந்த ஒன்றுதான். அன்று வரை இருந்த ஒன்றை ஒருபோதும் மானுடர் திரும்பப் படைப்பதில்லை. தன் நினைவிலிருந்து அல்ல, கனவிலிருந்தே புதியன படைக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாகி வந்த புதிய நகருக்கு புதிய திறனாளர்கள் தேவை. மேலும் கனவு கொண்டவர்கள் தேவை. அவர்கள் இவ்வாறு நாடெங்கிருந்தும் மிகையென எழுந்து வருபவர்களாகவே இருப்பார்கள். ராஜசூயம் என்பது அதன் பொருட்டு நிகழ்த்தப்படும் வேள்வி.”
“தன் அரசில் மிகுதிறன் கொண்டவர்கள் வரவேண்டும் என்று விழையும் அரசர்கள் ராஜசூயத்தை நிகழ்த்துகிறார்கள். அவ்வேள்வியில் அளிக்கப்படும் பொன்னென்பது கொடையல்ல, ஒரு பெரும் முதலீடு” என்றார் சுரேசர். “ராஜசூய வேள்வி மாமங்கல நிகழ்வு எனப்படுகிறது. மாமாங்கம் என்றும் அதை சொல்வதுண்டு. மண்ணில் மனிதர் புரியும் மங்கல நிகழ்வுகளில் அதுவே முதன்மையானது. அதில் அறுபத்துநான்கு கலைகளின் அரங்கமும் கூட்டப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் போட்டிகள் நிகழவேண்டும். ஒவ்வொன்றிலும் திறனாளர்கள் முன்பு எங்குமிராத அளவுக்கு பரிசளித்து மதிப்புறுத்தப்படவேண்டும். அதில் வெல்பவர்கள் அனைவரும் அந்நகரத்திலேயே தங்குவார்கள் என்று சொல்ல முடியாது. அதில் ஒரு சாரார் அங்கு தங்கினாலே அந்நகரம் செழிப்புறும்.”
அவர் உள்ளத்தை புரிந்துகொண்டு “இங்கு ராஜசூய அறிவிப்பு நிகழவிருக்கிறதா?” என்று சம்வகை கேட்டாள். “விரைவில்” என்று சுரேசர் புன்னகைத்தார். “அதை நான் யுயுத்ஸுவிடம் முன்னரே கூறிவிட்டேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் கருவூல நிலையை ஒருமுறை பார்த்துவிட்டு அறுதி முடிவெடுக்கலாம் என்றார். அறுதிப்பொன் வரை அளித்தாகவேண்டும் என்பது நெறி. ஆனால் பெரும்பாலான ராஜசூயங்களில் மேலும் தொடர்ந்து அரசு சூழ்வதற்கான பொருளை பிற இடங்களில் நோக்கி வைத்த பின்னரே அதை செய்வார்கள். நமக்கும் ஊற்று ஒழியாத ஆறுகள் பல உள்ளன” என்றார் சுரேசர். “அஸ்தினபுரியின் கருவூலம் ஆழம் மிக்கது. ஆயினும் ராஜசூயம் என்பது பெருவேள்வி. பாரதவர்ஷம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து கூடுவார்கள். அவர்கள் அனைவருக்கும் இல்லையெனாது அளிக்கவேண்டும். அதைச் செய்யும் ஆற்றல் அரசருக்குத் தேவை.”
“நாம் இங்கே குன்றும்பொருளை கொண்டுவந்தாகவேண்டும்” என்றார் சுரேசர். “ஆகவே ராஜசூயத்திற்கு முன் அஸ்வமேதம் செய்யப்படுகிறது. அஸ்தினபுரியிலிருந்து நான்கு திசைக்கும் வேள்விகுதிரைகளை அனுப்பலாம். இன்று அஸ்தினபுரியின் வேள்விப் புரவிகளை பிடித்துக் கட்டும் துணிவுள்ள எவரும் ஆரியவர்த்தத்தில் இல்லை. அனைவரும் ஆற்றலிழந்து உடைந்துகிடக்கிறார்கள். நம் போர்வெற்றி கண்டு அஞ்சியிருக்கிறார்கள். நம்முடைய படைக்கு நிஷாதரும் கிராதரும் அசுரரும் அரக்கரும் மேலும் வருவார்கள் என்றால் நம்மை எவரும் எதிர்க்கமுடியாது. ஐம்பத்தாறு நாடுகளும் கப்பம் கட்டுவார்கள் எனில் கருவூலத்தை ஒழிய ஒழிய நிறைக்கமுடியும்.” சம்வகை நீள்மூச்செறிந்தாள். “விரைவிலேயே அவ்வறிவிப்பு வெளிவரும், அஞ்சற்க!” என்றார் சுரேசர்.
சம்வகை புன்னகைத்தாள். “திறன் கொண்டோர் நாடி வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்” என்றாள். “அஸ்தினபுரி நிறைந்து கொப்பளிப்பதை காண்பாய்” என்றார் சுரேசர். “அஸ்தினபுரி தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. பழையன கழிய புதியன புக உயிர் அவ்வாறே இங்கு நீடிக்கிறது” என்றார். அவருடைய உள்ளம் மேலும் ஊக்கம் கொண்டது. “இங்கே வருபவர்கள் இந்நகரை மீண்டும் படைத்தெழுப்புவார்கள். ஹஸ்தியின் கைகளால் உருவான இந்நகரம் இப்படியே காலத்தில் மறையும். முற்றிலும் புதிய மாநகர் ஒன்று இங்கே எழும். இது ஒரு மறுபிறப்பு.” அவர் முகம் கூர்கொண்டது. “ஏனென்றால் இந்நகர் எரிபுகுந்து மீள்கிறது. உலைமீளும் பொன் ஒளிகொண்டிருக்கும்.” சம்வகை அவருடைய உணர்ச்சிகளை விந்தையாக நோக்கியபடி “வருபவர்களுக்கு அஸ்தினபுரியைப்பற்றி என்ன தெரியும்? இங்குள்ள நெறிமுறைகள் மாறிவிடும். இங்குள்ள வரலாறு மறக்கப்பட்டுவிடும். இங்கு பேசப்படும் மொழியே மறைந்துவிடக்கூடும். முற்றிலும் புதிய ஒரு நகராக இது ஆகிவிடலாம்” என்றாள்.
“அவ்வாறல்ல” என்று சுரேசர் புன்னகையுடன் சொன்னார். “இங்கு வரும் அனைவரும் அஸ்தினபுரியைப் பற்றிய பெரிய கனவுகளுடன் வருகிறார்கள். அக்கனவுகள் இங்கிருந்து எழுந்து சென்ற கதைகளிலிருந்து அவர்கள் பெற்றவை. அஸ்தினபுரி இங்கிருந்து கதைகளை உருவாக்கி நாற்புறமும் பெருக்கிக்கொண்டிருக்கிறது, அன்னை மரம் விதைகளை சிதறடிப்பதுபோல. இங்கு வருபவர்கள் அஸ்தினபுரி கொடுத்த புதிய எண்ணங்களுடன், திட்டங்களுடன் வருகிறார்கள். அவர்கள் இங்கு உருவாக்கும் அஸ்தினபுரி முன்பிருந்த அஸ்தினபுரியின் கனவிலிருந்து எழுந்த ஒன்றாகவே இருக்கும், அதன் இயல்பான நீட்சியாக, அதைவிட ஒளியும் விசையும் கொண்டதாக. ஒருபோதும் அதைவிட குறைவானதாக அமையாது.”
“இங்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் அஸ்தினபுரி அஸ்தினபுரி என்று தங்கள் உள்ளத்திற்குள் ஊழ்கநுண்சொல்போல் சொல்லிக்கொண்டுதான் வருவார்கள். இங்கு வந்து இந்நகரைக் கண்டதுமே ஏமாற்றம் கொள்வார்கள். இதுவல்ல அவர்கள் கண்ட கனவென்று உணர்ந்ததுமே அக்கனவென இதை ஆக்கும்பொருட்டு அவர்களின் உள்ளம் உறுதிகொள்ளும். நோக்குக இன்னும் ஓராண்டுக்குள் இந்நகர் முன்பொருபோதும் இருந்திராதபடி பொலிவுற்று எழும். பழைய அஸ்தினபுரியின் நினைவுகள் முற்றாக அகன்று அது கண்ட கனவே நனவென இங்கு எழுந்திருக்கும். பட்டுப்புழுவின் கனவிலிருந்து ஏழுவண்ணச் சிறகுகள் எழுவதுபோல!”
சம்வகை அவருடைய அந்த ஊக்கத்தை தானும் அடையவில்லை. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று அவளுக்கு புரிந்தது. புன்னகையுடன் எழுந்து தலைவணங்கி “ஆனால் ஒவ்வொன்றுக்கும் இங்கு ஒரு வழி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் முன்னரே நிகழ்ந்துவிட்டிருக்கிறது என்கிறார்கள்” என்றாள். ”மெய். போரால் நகரங்கள் முற்றழிவதென்பது பலமுறை முன்னரும் நிகழ்ந்ததே. முளைத்தெழுவதும் அவ்வாறே” என்றார் சுரேசர். அவள் கிளம்பும்போது சுரேசர் புன்னகையுடன் “சூத இளவரசர் உன்னைப் பற்றி கேட்டார்” என்றார். அவள் நின்று அவரை நேரில் நோக்கி “என்னைப் பற்றியா?” என்றாள்.
“ஆம், அவர் கோட்டைமுகப்புக்குச் சென்றபோது நீ அங்கே இல்லை என்றார். என்னிடம் நீ எங்கு சென்றாய் என்று கேட்டார். சற்று முன்னர் வரைக்கும் கோட்டை முகப்பில் இருந்தாள், இல்லம் மீண்டிருப்பாள் என்று சொன்னேன். அவள் இல்லத்தில் யார் இருக்கிறார்கள் என்றார். இல்லத்தில் உனக்கென எவருமில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே அவ்வினாவின் பொருளென்ன என்று எனக்குத் தெரிந்தது. அவளுக்குத் துணைவனென எவரும் இன்னும் அமையவில்லை என்றேன். அதை கேட்காதவர்போல் பேச்சை மாற்றி செய்தியுடன் வரும் ஒற்றர்களை என் அறைக்கு அனுப்புக என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அந்த வினா பொருள் உள்ளது” என்றார்.
சம்வகை அவரை நோக்கி “எவ்வகையில்?” என்றாள். சுரேசர் உரக்க நகைத்து ”அறியேன்” என்றார். அவள் தலைவணங்கி வெளியே சென்றாள்.