களிற்றியானை நிரை - 13
பகுதி இரண்டு : பதியெழு பழங்குடி – 4
சம்வகை கவசங்கள் அணிந்துகொண்டு அறையைவிட்டு வெளிவந்தபோது எதிர்ப்பட்ட முதற்காவல்பெண்டு திகைத்து உடனே தலைவணங்கினாள். அவளில் நிகழ்ந்த அந்த அதிர்வை ஒரு கணத்தில் மிக அணுக்கமாக சம்வகை கண்டாள். அந்தக் கவசங்களை அவளுக்கு அணிவித்த ஏவல்பெண்டு “எடைமிக்கது” என்றாள். அவள் “உம்” என்றதும் மேற்கொண்டு பேசாமல் அவளுக்கு அதை அணிவித்தாள். முதலில் நெஞ்சக்கவசம். அது இரும்பாலானது. இரு இரும்புத் தகடுகளுக்கு நடுவே நுரைபோல கம்பிகள் பின்னி அமைக்கப்பட்டது. அதை ஏவற்பெண்டு தோளில் பொருத்தும்போது அவ்வெடையால் இழுக்கப்பட்டு அவள் கால்கள் தள்ளாடினாள். முழு விசையாலும் உடலை இழுத்து நிலைகொள்ளவேண்டியிருந்தது.
முதுகுக்கவசத்தை அணிவித்தபோது நெஞ்சக்கவசத்தின் எடையை அது ஈடுசெய்தது. அவள் அக்கவசங்களின் அமைப்பை புரிந்துகொண்டாள். அவை ஒன்றோடொன்று நிகர்செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை அணிந்தவரின் உடலுக்கேற்ப அவை வடிக்கப்பட்டிருந்தமையால் அவருக்கு அவற்றை நிகர்செய்வது எளிதாக இருந்திருக்கும். அவள் விழிகளை மூடி தன் உடல்மேல் கவசங்கள் அளித்த எடையை உணர்ந்தாள். தோளிலைகள், புயக்காப்புகள், தொடைக்குவளைகள் என ஒவ்வொன்றும் இன்னொன்றை நிகர்செய்தன. அனைத்துக் கவசங்களையும் அணிந்த பின்னர் அவள் இடப்பக்கமாக இழுக்கப்பட்டவள்போல் உணர்ந்தாள். விழிகளை மூடியபோது புவிப்பரப்பே இடப்பக்கமாகச் சரிந்திருப்பதுபோல தோன்றியது. காலெடுத்து வைத்தபோது வலத்தோளில் உதைவிழுந்ததுபோல் அவள் இடப்பக்கமாக சரிந்து விழப்போனாள்.
காலூன்றி நிலத்தில் தன்னை உறுதிசெய்துகொண்டபோது ஓர் எண்ணம் எழுந்தது. அந்த வாளின் எடையையும் சேர்த்தே கவசம் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும். வலக்கைக்கு உகந்த முறையில் இடப்பக்கம் வாளை தொங்கவிட்டிருக்கக்கூடும். அவள் தன் கச்சையை திருப்பி அதிலிருந்த இரும்புக்கொக்கியை வலக்கை அருகே கொண்டுவந்தாள். வாளுக்காக கைநீட்டினாள். ஏவற்பெண்டு அளித்த வாளை வலக்கையருகே கச்சையில் கட்டிக்கொண்டு நின்றபோது உடல் நிலைகொண்டதுபோலத் தோன்றியது. நன்றாக உளம்கணித்து மெல்ல காலடி எடுத்து வைத்தாள். அலைகொள்ளும் நீர்க்கலத்தை உடலெங்கும் ஏந்தியிருப்பதுபோல தள்ளாடினாள். இருமுறை அறைச்சுவர் வரை நடந்து வந்தபோது அவளுக்கு அந்த எடைகளின் இசைவு புரிந்துவிட்டது. அவள் புரிந்துகொள்வதற்கு முன்னரே உடல் அறிந்துகொண்டது.
சம்வகை புரவியை அணுகினாள். அவளுடைய மணத்தை அறிந்த அது கனைப்பொலி எழுப்பியது. அவளுக்கு கடிவாளத்தை நீட்டிய ஏவற்பெண்டின் முகம் மாறியிருந்தது. அவள் புரவிமேல் ஏறியபோது தன் உடலும் மாறிவிட்டிருப்பதை கண்டாள். புரவியின் நடையின் அசைவும் ஓசைகளும் மாறியிருந்தன. அது அந்த எடையால் உருவானதாக இருக்கலாம். ஆனால் அப்போது புரவியில் சென்றுகொண்டிருப்பவர் பிறிதொருவர் என்று அவளுக்கு பட்டது. வஜ்ரதந்தரே எழுந்துவந்துவிட்டார் போலும். கவசங்களிலும் வாளிலும் அவர் வாழ்கிறார். அவள் சாலையில் சென்றபோது இரு மருங்கும் செறிந்து நிரைகொண்ட யானைமருப்புகள் அவளை அடையாளம் கண்டவை என அசைந்தன. சாலையில் திரண்டுநின்ற மக்கள் திகைத்த விழிகளுடன் அவளை பார்த்தனர்.
கோட்டைமுகப்பை அவள் அடைந்தபோது காவலர்கள் ஓடிவந்து சிறு நிரையாக நின்றுவிட்டிருந்தனர். அவர்களின் விழிகளில் அவளை முன்பு அறிந்த உணர்வே தெரியவில்லை. அவள் இறங்கி அவர்களை நோக்கி சென்றாள். சந்திரிகை அவளை அணுகி “தலைவி, அரசரும் படையினரும் அணுகிவிட்டனர். இன்னும் சற்றுநேரத்தில் அவர்கள் கோட்டைக்குள் நுழைவார்கள்” என்றாள். அவள் “ஆணைகளைப் பரப்புபவர்கள் அனைவரும் ஒருங்கிணைவு கொண்டிருக்கவேண்டும்…” என்றபடி கற்படிகளில் ஏறி மேலே சென்றாள். அவள் உடல் எடையை ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்துகொண்டிருந்தது. எடைமிக்க காவடி ஒன்றை கொண்டுசெல்வதுபோல. ஆனால் உடலின் நிகர்நிலை மிகுந்துவிட்டிருப்பதாகவும் தோன்றியது. காலில் அணிந்திருந்த இரும்புக்குறடு ஒரு கல்லில் உரசியபோது அனற்பொறி எழுந்தது. மேலே சென்று காவல்மாடத்தில் நின்று தொலைவை நோக்கினாள். காட்டிலிருந்து பறவைகள் சிறகடித்து எழுந்து காற்றில் சுழல்வது தெரிந்தது. மெல்லிய புகைச்சுருள்போல. அங்கே யுதிஷ்டிரனின் படையினர் வந்துகொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.
முகப்பு முற்றத்தில் அகவை முதிர்ந்த யானையான சங்குலன் முகபடாம் அணிந்து அசைந்தபடி நின்றிருந்தது. அதன் கால்களில் இருந்த புண்ணால் அது கொட்டிலைவிட்டே வெளியே கொண்டுசெல்லப்படாமலிருந்தது. அந்தப் புண்மேல் கட்டுபோட்டு அதன்மேல் பட்டுத்துணி சுற்றி கொண்டுவந்து நிறுத்தியிருந்தனர். அதன் முதுகின்மேல் செம்பட்டுச்சால்வை கிடந்தது. அதன் செவிகள் வீசி அவ்வப்போது ஒலிக்காக நின்று மீண்டும் அசைந்தன. நிலையற்று அதன் துதிக்கை மண்ணை துழாவியது. யானைக்கு இருபுறமும் மங்கலத்தாலங்களுடன் சேடியர் நூற்றெண்மர் நின்றனர். அவர்கள் அரண்மனையிலிருந்து அளிக்கப்பட்ட அணியாடைகளை பூண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் இசைச்சூதர்கள் தங்கள் ஐங்கலங்களுடன் நின்றனர். அவர்களிலும் பல முகங்கள் அயல்நாட்டவர் என்று காட்டின. தலைமைதாங்கிய முதுசூதரான காஞ்சனர் துயில்நீத்தவர்போல தொய்ந்த தலையுடன் வளைந்த உடலுடன் எழுவெயிலில் வியர்வை வழிய நின்றிருந்தார்.
யானைக்கு முன் வலப்பக்கம் பதினெட்டு அந்தணர்கள் நிறைகுடங்களுடன் நின்றனர். அவர்கள் வேசரநாட்டிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரிக்கு வந்தவர்கள். அஸ்தினபுரியின் அந்தணர்குலமே நகரை ஒழிந்துவிட்டிருந்தது. அவர்கள் கைவிட்டுச்சென்ற இல்லங்களில் அயல்நிலத்து அந்தணர் குடியேற்றப்பட்டனர். அவர்கள் அறிந்த சடங்குமுறைகள் அனைத்தும் மாறுபட்டன. சுரேசர் பழைய அந்தணர்குலத்தின் இளையோனாகிய ஊர்மிளனை அழைத்துச்சென்று அவர்களுக்கு சடங்குகளுக்கு பயிற்சி அளிக்கச் சொன்னார். ஏழு நாட்களாக நிறைகுடம் காட்டி வேதம் ஓதுவதற்கான பயிற்சியை அவர்களுக்கு அளித்த ஊர்மிளன் “அவர்கள் அதர்வவேதத்தில் மட்டுமே சொல்லுரிமை கொண்டவர்கள். அதை பாடினால் போதும் என்றேன். அதிலும் அனைத்துச் சடங்குகளுக்கும் உரிய பாடல்கள் உள்ளன” என்றான்.
கோட்டைக்குள் முகமுற்றத்தில் இரண்டு நிரைகளாக தொல்குடியினர் நின்றனர். குடிமூத்தோர் முன்னால் நிற்க குடிகள் என ஆக்கப்பட்டவர்கள் பின்னால் நின்றனர். அவர்கள் அனைவருமே வெயிலில் களைத்திருந்தனர். வியர்வை வழிந்துகொண்டே இருந்தது. வெயிலின் எடை மிகுந்துவிட்டிருப்பதாகப் பட்டது. மரக்கிளைகளில் அமர்ந்திருந்த காகங்கள் அலகு திறந்து உள்நா தெரிய மூச்சிளைத்தன. புரவிகளும் அத்திரிகளும் தலைதாழ்த்தி எச்சில் ஒழுக்கின. அத்தனை வெப்பம் வெயிலுக்கு எப்படி வந்தது என்று சம்வகை எண்ணிக்கொண்டாள். மழை நின்று ஒரு மாதம் ஆகிவிட்டிருந்தது. மண் உலர்ந்துவிட்டது. புற்கதிர்களும் பசுமையை இழந்துவிட்டிருந்தன. அவளுக்கு விடாய் எழுந்தது. நீர் கொண்டுவரும்படி சொல்ல அவள் எண்ணியபோது முரசொலியை கேட்டாள்.
தொலைவில் அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி எழுந்து தெரிந்தது. வெண்ணிறமான ஒற்றைப்பறவைபோல அது காட்டின் பசுந்தழைப்பின் நடுவே சிறகுலைத்து மிதந்து வந்தது. அவள் கையை தூக்க அவ்வாணையை ஏற்று பின்னணியில் கொம்பு முழங்கியது. தொடர்ந்து நகரெங்கும் முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. அலையலையாக எழுந்த ஓசை செவிகளை நிறைத்து உடலை பதறச்செய்தது. புறங்கழுத்தில் ஓசையின் அதிர்வை காற்றென உணர முடிந்தது. அவள் படியிறங்கி கீழே வந்தபோது அணிவகுத்து நின்றிருந்த காவலர்களும் காவற்பெண்டிரும் வாள்களை உருவி நீட்டினர். அவள் அவர்களின் முகப்பில் வந்து நின்றாள். காவலர்களின் நிரை நீண்டு சென்று கோட்டைமுகப்பில் நிலைகொண்டது.
தொலைவில் வெண்புரவி அணுகுவதை சம்வகை கண்டாள். அதன்மேல் இருந்த முழுக் கவசஉடை அணிந்த வீரன் உயர்ந்த மெல்லிய மூங்கிலில் வெண்பட்டாலான கொடியை பிடித்திருந்தான். அஸ்தினபுரியின் அமுதகலம் அதில் நெளிந்தது. தொடர்ந்து வந்த புரவிவீரன் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படை பொறித்த இளஞ்செந்நிறக் கொடியை பிடித்திருந்தான். கவச உடையணிந்த புரவிவீரர்கள் வேல்களுடன் நான்கு நிரைகளாக வந்தனர். வேல்முனைகள் வெயிலில் சுடரலைவு கொண்டன. அதைத் தொடர்ந்து வந்த திறந்த தேரில் இசைச்சூதர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் எழுப்பிய இசை கோட்டைக்குள் கொந்தளித்த முரசுமுழக்கத்தில் மறைய அவர்களின் உடலசைவுகளும் முகங்களின் உணர்வுகளும் மட்டுமே தெரிந்தன. அவர்கள் வலிப்புகொண்டவர்கள்போல, அலைபாயும் திரைச்சீலையின் ஓவியங்கள்போலத் தோன்றினர்.
இரண்டு காவல்தேர்கள் தொடர்ந்து வந்தன. அவற்றில் வில்லேந்திய வீரர்கள் நின்றிருந்தனர். தொடர்ந்து யுதிஷ்டிரனின் பொன்முகடுகொண்ட அணித்தேர் வந்தது. அது துரியோதனனின் தேர். அஸ்தினபுரியிலிருந்து அந்தத் தேர் முன்னரே கங்கைக்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டு காத்திருந்தது. அதற்கென அங்கே ஒரு கொட்டகை அமைக்கப்பட்டது. அதன் பழுதற்ற வில்தாங்கிகளால் சாலையிலிருந்து சகடம் கொண்ட அதிர்வுகள் வாங்கப்பட்டமையால் நீரில் ஒழுகுவதுபோல அது மிதந்து அணுகியது. அதன் விரைவே விழிகளுக்கு தென்படவில்லை.
கொடியேந்தியவர்கள் அருகே வந்ததும் காத்துநின்றிருந்த சூதர்கள் இசைமுழக்கினர். கவசப்படையினரும் சூதர்தேரும் வந்து இடப்பக்கமாகத் திரும்பின. யுதிஷ்டிரனின் தேர் அணுகியதும் அந்தணர்நிரை வேதம் ஓதியபடி சென்று கங்கைநீர் தெளித்து வாழ்த்தியது. கைகூப்பியபடி தேரிலிருந்து யுதிஷ்டிரன் இறங்கினார். அவருடன் நகுலனும் சகதேவனும் தேரிலிருந்து இறங்கி கைகூப்பியபடி பின்னால் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் தனித்தேரில் பீமன் வந்தான். யுதிஷ்டிரன் அந்தணரை அணுகி தலைவணங்கினார். அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் அவர்களை எதிர்கொண்டார்கள். பின்னணியில் கூடிநின்றிருந்தவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அனைத்து ஒலிகளுக்கும் மேல் முரசொலி எழுந்துகொண்டிருதது. அது நீர்ப்பரப்பென அலைகொள்ள அதில் மூழ்கி வாயசைத்து நீந்தும் மீன்கள் போலிருந்தனர் அனைவரும்.
யுதிஷ்டிரன் குடிகளை வாழ்த்தியபடி நடந்துவர சம்வகை தன் சிறு காவல்படையுடன் அவரை அணுகினாள். அவர் அவர்களை இயல்பான பார்வையுடன் நோக்கினார். அவள் அருகணைந்து தன் உடைவாளை உருவி முறைப்படி மும்முறை சுழற்றி நிலம்நோக்கி சரித்து தலைவணங்கி வாழ்த்துரைத்தாள். அப்போதுதான் யுதிஷ்டிரன் அவள் பெண் என்பதை உணர்ந்தார். திகைப்புடன் “நீ யார்?” என்றார். “நான் கோட்டைக்காவலர்தலைவி. என் பெயர் சம்வகை” என்று அவள் சொன்னாள். அவருடைய புருவங்கள் சுழித்தன. “கேள்விப்பட்டேன்” என்றார். “எவரோ உன்னைப்பற்றி சொன்னார்கள். யுயுத்ஸு என எண்ணுகிறேன்.” அவருடைய விழிகள் மாறுபட்டன. அவர் மேலே சொல்வதற்குள் சகதேவன் ஊடே புகுந்து முகமலர்ச்சியுடன் “நன்று, புதிய முறைமை எழுந்துள்ளதை அஸ்தினபுரியின் குடிகள் அறியட்டும். ஷத்ரிய நாடுகளெங்கும் செய்தி செல்லட்டும்” என்றான். யுதிஷ்டிரன் சிறுதடுமாற்றத்துடன் “ஆம், இந்த மாற்றம் உலகறியவேண்டிய ஒன்று” என்றார். படைகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து வாள் தாழ்த்தியபடி நிற்க அவர் கைகூப்பியபடி நடுவே சென்றார்.
அவர்கள் கடந்துசென்றதும் சம்வகை கைகாட்டி தன் படையினரை பிரிந்து கோட்டைக்காவலுக்குச் செல்லும்படி ஆணையிட்ட பின் அவருக்குப் பின்னால் சென்றாள். கோட்டைக்குள் யுதிஷ்டிரன் நுழைந்ததும் பேரொலியுடன் வாழ்த்துக் கூச்சல்கள் எழுந்தன. மஞ்சளரிசியும் மலர்களும் பொழிந்தன. மஞ்சள்பொடி செம்முகிலென எழுந்து அப்பகுதியை மூடியது. யுதிஷ்டிரன் அவளை நோக்கி திரும்பி “நகரில் போதிய மக்கள் இருக்கிறார்களா?” என்றார். “வந்துகொண்டும் இருக்கிறார்கள்” என்று அவள் சொன்னாள். அவர் சிறு துணுக்குறலுடன் அவளை நோக்கியபின் “நல்ல மறுமொழி. நீ தேர்ந்தவள்” என்றார். “யுயுத்ஸு எங்கே?” என்று நகுலன் கேட்டான். “அவருக்கு சற்று உடல்நலமில்லை. அரண்மனையில் இருக்கிறார்” என்றாள் சம்வகை. அவர்கள் தேரில் ஏறிக்கொண்டார்கள்.
மையத்தேர்ச்சாலையில் அவர்களின் அணிவலம் சென்றபோது அந்தத் தெருவே விழவுக்கோலம் கொண்டு வாழ்த்தொலி எழுப்பி ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதுபோலத்தான் தோன்றியது. சம்வகைக்கே அது பெருங்களியாட்டுதான் என உளமயக்கு எழுந்தது. விழிகளை நிறைத்து ஆடிநின்றன களிற்றுப்பட்டங்கள். மேலிருந்து அரிமலர்மழையும் செம்பொடியும் பெய்திறங்கி காற்றை நிறைத்த திரைக்கு அப்பாலிருந்து வாழ்த்தொலிகள் எழுந்தன. தேர்கள் சற்று விரைவாகவே சாலையை கடந்தன. திரும்பும் முனைகளிலெல்லாம் கூடியிருந்தவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். யுதிஷ்டிரன் மகிழ்ந்துவிட்டார் என்பதை சம்வகை கண்டாள். அவர் கைகூப்பியபடி தேர்மேடையில் எழுந்து நின்றார்.
அரண்மனைக்குச் செல்லும் திருப்பத்தில்தான் நகரின் தொல்குடிகளை சம்வகை நிற்க வைத்திருந்தாள். அரண்மனைக் களமுற்றம் வரை இடைவெளியில்லாமல் நிற்கும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை இருந்தது. அவர்களைக் கண்டதும் யுதிஷ்டிரன் தேரை நிறுத்தச்சொல்லி இறங்கினார். தன் பட்டுச்சால்வையை இழுத்துச் சுற்றியபடி மலர்ந்த முகத்துடன் கைகூப்பியபடி அவர்கள் நடுவே சென்றார். அவர்கள் வாழ்த்தொலியை எழுப்பிக்கொண்டே இருந்தார்கள். சம்வகை அவர்களின் முகங்களை மாறிமாறி நோக்கியபடி நடந்தாள். இன்னும் சற்று தொலைவுதான். அரண்மனை முகப்பில் பட்டம் கட்டிய யானையும் கவசப்படைவீரர்களும் அணிப்பரத்தையரும் இசைச்சூதர்களும் காத்துநிற்பது தெரிந்தது. தேரில் என்றால் கால்நாழிகைக்குள் செல்லும் தொலைவு. நடந்தால் அரைநாழிகை. இன்னும் சற்றுபொழுது. சில காலடிகள்…
அவள் “இன்னும் சில காலடிகள்… இன்னும் சில காலடிகள்…” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவள் எண்ணம் கூருந்தோறும் அவர் செல்லும் விரைவு குறைந்தது. அடிமேல் அடிவைத்து. ஒவ்வொருவரையாக நலம் உசாவி… செல்க! செல்க! செல்க! அவர் ஒவ்வொரு முகத்தையாக பார்க்கிறார். சிரிக்கிறார். என்ன எதிர்பார்க்கிறார்? ஒரு வசையையா? நச்சுச்சொல்லையா? அது இல்லையேல் அவருடைய உள்ளம் நிறைவடையாதா? அவருக்கு இன்று தேவைதான் என்ன? தன்னை உலகமே வெறுக்கிறது என எண்ணிக்கொள்ள விழைகிறாரா? உலகால் வெறுக்கப்படும் அறத்தான். அவள் ஒவ்வொரு முகத்தையும் ஒரு திடுக்கிடலுடன் நோக்கினாள். அவற்றிலுள்ளது என்ன வகையான உணர்வு என கணிக்க முடியவில்லை. சில முகங்கள் விழி சுருங்கி வாய் இறுகி சொல்லை கரந்திருந்தன. சில முகங்களில் அனைத்துத் தசைகளும் நெகிழ நகையாட்டு நிறைந்திருந்தது. சிலர் வெறுமனே மலர்ந்திருந்தனர். சிலர் அவர்களை அரசர் அடையாளம் கண்டதனால் பெருமிதம்கொண்டு மற்றவர்களை பார்த்தனர். அத்தருணத்தில் சொல்லவேண்டியது என்ன என்று எவருக்கும் தெரியவில்லை.
அவள் அவனை அடையாளம் கண்டு உள்ளம் குளிர்ந்து உறைய நின்றாள். அக்கணமே அவன் “யுதிஷ்டிரரே! நன்று! நீங்கள் ஆள்வதற்குரிய நகர்தான் இது!” என்றான். யுதிஷ்டிரன் திகைத்து நின்றார். “நல்ல நகரம்… இன்று இதன் குடிகள் முழுக்க நாடோடிகள். நானும் நாடோடியே. பதினான்காண்டுகாலம் காட்டிலுழன்ற நாடோடியால் ஆளப்படுவது உவகை அளிக்கிறது!” என்றான். சம்வகை காவலர்கள் எவரேனும் அங்கே இருக்கிறார்களா என்று பார்த்தாள். “நான் நாடோடி… என்னை இங்கே இழுத்து வந்தார்கள். அரசரை வாழ்த்த இங்கே நகரில் மக்கள் எவருமில்லை என்றார்கள். நாடோடியை நாடோடியன்றி எவர் வாழ்த்துவார் என்று நானும் வந்துவிட்டேன்” என்றான். “ஆனால் நாடோடிகள் நெடுங்காலம் ஒரே இடத்தில் வாழலாகாது. ஒரே இடத்தில் வாழ்ந்த காலத்தை நீங்களும் மறந்துவிட்டிருப்பீர்கள்…” என்று அவன் தன் கறைபடிந்த பற்களைக் காட்டினான்.
சம்வகை அறியாமல் அவனை நோக்கி செல்ல அவளை யுதிஷ்டிரன் கைகாட்டி நிறுத்தினார். “நமக்கென்ன? ஊரே நம் நிலம். நாடோடிக்கு அடையாளங்களைப்போல சுமை வேறில்லை. இந்நகரை நீங்களும் துறப்பீர்கள். நானும் இன்றே துறந்துசென்றுவிடுவேன்” என்றான் நாடோடி. “ஆனால் நான் எதையும் கொண்டுசெல்லப் போவதில்லை. நீங்கள் இங்குள்ள கருவூலத்தை பிற நாடோடிகளுக்கு திறந்துவிட்டுவிட்டு செல்லவிருக்கிறீர்கள்.” சம்வகை தன் வாளில் கைவைத்து அவனை நோக்கி செல்ல யுதிஷ்டிரன் “உம்” என உறுமினார். அவன் “இவள் காவலர்தலைவியா? நன்று! பெண்கள் கோட்டைமேல் ஏறிவிட்டனர். சத்யவதியின் விழைவு நிறைவேறிவிட்டது… இவள் மச்சர்குலம் என்று வேறு சொன்னார்கள். மிக நன்று!” என்றபின் “செல்க, உணவுண்டு ஓய்வுகொள்க! நானும் ஊட்டுபுரைக்குத்தான் செல்லவேண்டும்” என்றான்.
யுதிஷ்டிரன் “அவ்வாறே” என கைகூப்பியபடி சொல்லி சம்வகையிடம் “நற்சொல் உரைத்த இவர் நலமாக இந்நகரிலிருந்து மீள்வது உன் பொறுப்பு” என்றார். “ஆணை” என்று சம்வகை தலைவணங்கினாள். யுதிஷ்டிரன் கைகூப்பியபடி முன்னால் சென்றார். நாடோடி “ஒன்றை சொல்ல விட்டுவிட்டேன், அரசே. நகர் ஒழிந்திருப்பதாக எண்ணவேண்டியதில்லை. உண்மையில் இந்நகர் நிறைந்து வழிகிறது. செத்தவர்கள் வாழும் பெருநகர் இதுபோல புவியில் பிறிதில்லை. செத்த வீரர்கள் மட்டுமல்ல. செத்த யானைகள்கூட. பார்த்திருப்பீர்கள், செத்த பின்னரும் அவை அணிகொண்டு நிரைவகுத்து நின்று அசைகின்றன. செத்தவர்களுக்குமேல் உங்கள் ஆணை செல்லுபடியாகின்றது என்றுதானே அதற்குப் பொருள்!” என்றான். யுதிஷ்டிரன் “ஆம்” என கைகூப்பியபடியே தலையசைத்து முன்னால் சென்றார். சம்வகை திரும்பி அங்கே நின்றிருந்த ஒற்றனை தன்னை தொடரச்சொல்லிவிட்டு நடந்தாள்.
யுதிஷ்டிரன் அரண்மனை முற்றத்தை அடைந்ததும் மெல்ல தளர்ந்து கைகளை கீழிறக்கினார். பெருமூச்சுவிட்டபடி தலைகுனிந்து நடந்தார். நகுலனும் சகதேவனும் அவர் அருகே சென்று மெல்லிய குரலில் பேசினர். அரண்மனை முகப்பிலிருந்து சுரேசர் வாழ்த்துரைத்தபடி யுதிஷ்டிரனை நோக்கி வந்தார். அவர் அருகே யுயுத்ஸு அரசணிக்கோலத்தில் நின்றிருந்தான். சம்வகை தன்னருகே வந்த ஒற்றனிடம் “அந்த நாடோடி யார்?” என்றாள். அவன் “நோக்குகிறேன்” என்றான். “அவன் இந்நகர் நீங்குவதுவரை நலமாக இருக்கவேண்டும்” என்றாள். “ஆம், நகர் எல்லையை கடந்ததும் நிறைவேற்றிவிடுகிறேன்” என்றான். சம்வகை பெருமுச்சுடன் “எது வகுக்கப்பட்டுள்ளதோ அது நிகழும். நம்மால் தடுக்க முடியாது. ஆனால் ஒரு மீறல் ஒருபோதும் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது” என்றாள். அதை அவள் தனக்காக சொல்லிக்கொண்டாள். நாடோடி அவளை நோக்கி “காவல்பெண்டே, கேள்! எனக்கு சாவில் அச்சமில்லை” என்றான். அவனைச் சூழ்ந்து நின்றவர்கள் என்ன நிகழவிருக்கிறது என உணர்ந்தவர்களாக அமைதியடைந்து இறுகிய முகத்துடன் நின்றார்கள். சம்வகை அவனை நோக்கி புன்னகைத்துவிட்டு முன்னால் சென்றாள்.
முகமன்களும் முறைமைகளும் நிகழ்கையில் யுதிஷ்டிரன் இறுக்கமாகவே இருந்தார். சம்வகை அவரை ஒவ்வாமையுடன் நோக்கியபடி நின்றாள். இது அவர் கேட்டுப் பெற்றது. இது நிகழுமென அவர் அறிவார். நானும் அறிவேன். இப்பேரழிவை நிகழ்த்திய பின் ஒரு சொல்லும் பெறாது மணிமுடிசூட இயலாது என அறியாதவர் எவர்? இவர் இக்குற்றவுணர்வை என் மேல் சுமத்துவார். ஒரு கணம்கூட அதை நான் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. அவள் கைகள் உடைவாளின் பிடியில் உழற்றிக்கொண்டிருந்தன. வியர்வை வழிந்து கவசத்திற்குள் வெம்மையை நிறைத்தது. யுயுத்ஸு அவளை பலமுறை திரும்பி நோக்குவதை அவள் கண்டாள். அவன் விழிகளை சந்தித்தபோது யுயுத்ஸு நோக்கை மாற்றிக்கொண்டான்.
அரண்மனைக்குள் நுழைந்ததும் யுதிஷ்டிரன் திரும்பி நோக்கி “எங்கே அந்தப் பெண்?” என்றார். சம்வகை அருகே சென்று தலைவணங்கினாள். “உன் ஒருக்கங்கள் நன்று” என்று சற்றே கோணலாக இழுபட்ட உதடுகளுடன் யுதிஷ்டிரன் சொன்னார். “நானே நெடுநேரம் நகர் வாழ்த்தொலிகளாலும் களியாட்டாலும் நிறைந்திருக்கிறது என எண்ணிக்கொண்டேன். அந்த நாடோடி சொன்னதை பொருட்படுத்தவேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு சொல்லும் உள்ளத்தை பேணிக்கொள்பவர்கள்… இங்குள்ள அனைத்தின் மேலும் கசப்புகொண்டவர்கள்” என்றார். உடனே நகைத்து “வழக்கமாக அணிமங்கலங்களில் நாடோடிகளையும் இளிவரல் சூதர்களையும் இரவலர்களையும் வெளியேற்றுவார்கள். இம்முறை அவர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு நிகழவேண்டும் என இருந்திருக்கிறது” என்றார்.
அவருக்குள் சினம் நிறைந்திருப்பதை அச்சொற்கள் வழியாக சம்வகை உணர்ந்தாள். “இத்தருணத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். அவர் பேசும்போது நான் அங்குள்ள குடித்தலைவர்களைத்தான் நோக்கினேன். அச்சொற்கள் அவர்களுக்கு திகைப்பையும் சினத்தையும் உருவாக்குகின்றனவா என்று… இல்லை. அதுதான் எனக்கு சற்றே உறுத்துகிறது. அவர்களில் சிலரை உடனே என் சிற்றறைக்கு அழைத்துவர ஆணையிடு!” சம்வகை தலைவணங்கி திரும்ப “நீ செல்லவேண்டாம். நீ சொல்பயிற்றி அனுப்புபவர் எனக்குத் தேவையில்லை. அவர்களில் மூவர் இயல்பாக தெரிவுசெய்யப்படவேண்டும். எவரேனும் மூவர். உன் ஏவலர் எவரையேனும் அனுப்பு. ஓர் ஏவலன் வெளியே சென்று இங்கே வரும் பொழுது மட்டுமே அளிக்கப்படுகிறது” என்றார்.
சம்வகை தலைவணங்கினாள். யுதிஷ்டிரன் சகதேவனின் தோளை தொட்ட பின் உள்ளே செல்ல நகுலன் சுரேசரிடம் மெல்லிய குரலில் ஏதோ சொன்னபடி தொடர்ந்தான். யுயுத்ஸு நின்று அவளிடம் விரைவான குரலில் “நீ செய்த ஏற்பாடுகள் அவருக்கு சினத்தையே அளிக்கும் என நான் அறிந்திருந்தேன். அதை சொல்ல நீ எனக்கு இடமளிக்கவில்லை. ஆனால் அவருக்கு உன்மேல் சினமேதுமில்லை. அவ்வகையில் நன்று” என்றான். சம்வகை “அவருக்கு சினமிருந்தாலும் எனக்கு ஒன்றுமில்லை. நான் செய்யக்கூடுவதை செய்தேன்… அவச்சொற்கள் அவர் விரும்பிப் பெற்றவை” என்றாள். யுயுத்ஸு “உன் ஆணவத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான். பின்னர் “ஆனால் இக்கவசஉடைக்குள் நீ இயல்பாக இருக்கிறாய். வஜ்ரதந்தரை எனக்கு நன்றாகவே தெரியும். நீ நடந்து வரும்போது அவருடைய அசைவு புலப்படவில்லை. நீயென்றே தோன்றுகிறாய்” என்றான். அவள் புன்னகைத்தாள்.