கார்கடல் - 88
சஞ்சயன் சொன்னான்: அரசே, குருக்ஷேத்ரக் களத்தில் பொடியும் புகையும் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். முகில்கள் பெய்தொழிந்து வான் வெளுப்பதுபோல் அங்கே ஒவ்வொரு வீரராக தோன்றுகிறார்கள். அதுவரை அங்கு படைகள் மோதிக்கொண்டிருந்தன. அப்படைகளுக்குள் ஒவ்வொரு வீரனும் பிறிதொரு வீரனை விழியால் நோக்காது தன்னந்தனிமையில் போரிட்டுக்கொண்டிருந்தான். சூழல்வெளிக்க தன்னைச் சூழ்ந்து ஒரு பெருங்களம் இருப்பதை, பல்லாயிரம் பேர் படைக்கலங்களுடன் முட்டிமோதுவதை, மேலும் பல்லாயிரம் பேர் உடல் சிதைந்தும் தலையறுந்தும் இறந்தும் உயிரெஞ்சியும் நிலம் நிறைத்து விழுந்துகிடப்பதை அப்போதுதான் பார்த்தவன்போல் ஒவ்வொரு படைவீரனும் திகைப்பதை பார்க்கிறேன். அத்தனை பொழுது எவரிடம் போரிட்டுக்கொண்டிருந்தோம் என்று அவன் அகம் மலைக்கிறது. தன்னந்தனியாக அப்பெருந்திரளுடன் மோதிக்கொண்டிருந்தேனா என அவன் வினவிக்கொள்கிறான். அத்தனை பொழுது தன்னிடம் போரிட்டுக்கொண்டிருந்த அந்த எதிரிவீரன் யார் என்று எண்ணி எண்ணி உளம் அழிகிறான். அவன் எங்கிருந்தெழுந்தான்? சூழ்ந்திருந்த அப்பெருந்திரளில் இருந்தானா? அன்றி தன்னுள்ளிருந்தே எழுந்தானா?
வாள் தாழ்த்தி, வில் நிலத்திலூன்றி, வேல்களை கைவிட்டு, சூழ விழியோட்டியபடி சொல்லழிந்த உதடுகளுடன் நின்றிருக்கிறார்கள் கௌரவர்களும் பாண்டவர்களும். அந்தப் படைக்களத்தில் முதல் சொல் எழுவதுபோல் முரசொலிகள் முழங்கத்தொடங்கின. துரோணர் களம் பட்டார் எனும் செய்தியை அப்போதுதான் அவர்களில் பலர் உணர்கிறார்கள். அன்று நிலம் சேர்ந்தவர்களின் நிரையை முரசுகள் இருதரப்பிலிருந்தும் அறிவிக்கின்றன. அவர்கள் முதலில் தாங்கள் எந்தத் தரப்பை சேர்ந்தவர்கள் என்பதையே உணரவில்லை. தன்னியல்பான எழுச்சியால் படைக்கலங்களைத் தூக்கி மாண்டவர்களுக்கு வாழ்த்தொலி எழுப்பினர். துரோணருக்கு பாண்டவர் தரப்பும் கௌரவர் தரப்பும் வாழ்த்தொலி எழுப்பின. ஒலிகள் கலங்க களம் பட்ட அனைவருக்கும் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். தாங்களே கொன்று தாங்களே வாழ்த்திக்கொண்டனர். அவ்வாழ்த்தொலிகளின் பொருளை உளம் உணராதவர்கள் போல. அவ்வாழ்த்தொலிகளை அவர்கள் தாங்கள் உயிருடன் எஞ்சியதன் பொருட்டே எழுப்பிக்கொள்பவர்கள் போல.
இருதரப்பிலும் படைகள் மிகவும் குறைந்துவிட்டிருந்தன. இருதரப்புப் படைவீரர்களும் நின்றிருக்க இடமில்லாது உடல்களின் நடுவே இடைவெளிகளில் கால் வைத்து தள்ளாடினார்கள். பின்னர் அந்தி முரசு ஒலிக்கத்தொடங்கியது. உண்மையில் இன்னும் கதிரவன் மேற்கே முற்றழியவில்லை. முழுவட்டமென புகைக்கும் முகில்களுக்கும் அப்பால் ததும்பிக்கொண்டிருந்தது கதிர்முகம். களம் புழுதியால் இருண்டும் பின்னர் காற்றால் வெளுத்தும் குருதியால் செம்மை பெருக்கியும் ஒளி கண்கூச விரிந்தும் திகழ்ந்துகொண்டிருந்தது. எவர் முடிவெடுத்ததென்றறியாமல் ஓர் அந்தி முரசு முழங்கத்தொடங்கியதும் பிற முரசுகளும் முழங்கின. கௌரவர்களும் பாண்டவர்களும் இருபக்கமும் பிரிந்து தளர்நடைகளில் தங்கள் பாடிவீடுகளுக்கு திரும்பத்தொடங்கினர். அவர்கள் இறந்த உடல்களின்மேல் தாவினர். உடல்களின் இடுக்குகளில் கால்களையும் வேல்களையும் ஊன்றினர். பின்னர் வேறுவழியில்லாமல் உடல்கள் மீது நடக்கலாயினர்.
மென்மையான உயிர் விதிர்க்கும் தசைகள். அவர்களின் உடலில் உறையும் ஒன்றை பதறச்செய்தன அக்கால்தொடுகைகள். அரசே, உயிருடல்மேல் தொட கால்கள் கொள்ளும் கூச்சம் எந்த தெய்வத்தின் ஆணை? வைத்த கால் அதிர எடுத்து மீண்டும் பிறிதொரு உடல்மேல் வைத்து தாவிச்சென்றுகொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் அரியதோர் கனவு நிலையை அடைந்தனர். நிலமென மாறி பரந்துகிடந்த மானுட உடல்களின் மீது என்றும் அவ்வாறே அவர்கள் நடந்துகொண்டிருப்பதுபோல் உணர்ந்தனர். சிற்றகவையில் மூதாதையரின் நெஞ்சிலும் வயிற்றிலும் நடந்தது போல். வான் மழை பெய்து நெகிழ்ந்த மண்ணில் பாய்ந்து களித்தது போல். உழுது புரட்டி நீர் சேர்த்து மரமோட்டி விரித்திட்ட சேற்றுவயல்கள் மேல் துழாவி நடந்தது போல். பெருவெள்ளம் வற்றியபின் கங்கைக்கரைச்சேற்றில் களியாடுவது போல். எவ்வகையிலும் எண்ணவியலாத உவகையொன்றை அவர்கள் அடைந்தனர். ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டபடி பொருளற்ற வார்த்தைகளை உரக்கக் கூவியபடி அவர்கள் விழுந்துகிடந்த உடல்களின் மேல் நடனமிட்டுச் சென்றனர்.
அக்களிப்பு எளிதில் பரவுவது. அரசே எண்ணம் அனலென பரவும். எண்ணமில்லா பித்து காற்றெனப் பரவும். சிலர் வெறியோலமிட்டனர். சிலர் ஈட்டிகளையும் வேல்களையும் வில்களையும் தலைக்குமேல் தூக்கி அமலையாடினர். அவர்கள் முகங்களில் வெறிப்பா இளிப்பா என்று வியக்கவைக்கும் நகைப்பொன்று தோன்றியது. எங்கும் பற்களும் துறித்த கண்களும் தெரிகின்றன. அவர்களின் சிரிப்புடன் கீழே மல்லாந்துகிடந்த பல்லாயிரம் துறித்த கண்களில், உயிர் பிரியும் கணத்து வலிப்பில் உறைந்த முகங்களில், இளித்துத் திறந்த வாய்களில் பதிந்திருந்த சிரிப்பும் இணைந்துகொண்டது. இங்கிருந்து பார்க்கையில் பல்லாயிரம் சிரிப்புகளுக்கு அவர்கள் நின்றாடுவதைப்போல் தோன்றுகிறது. அந்நிலமும் சிரிப்பது போல். அச்சிரிப்பை நான் இதற்கு முன்னரும் பலமுறை கண்டிருக்கிறேனா? எப்போதும் இவ்வண்ணமே இச்சிரிப்பு திகழ்ந்திருக்கிறதா? ஓசையற்ற சிரிப்பை போல் வந்தறைந்து நெஞ்சை நிறைப்பது பிறிதொன்றில்லை. ஆலயச் சிற்பங்களின் சிரிப்பு அது. கருவறையமர்ந்த கொடுந்தெய்வத்தின் பொருள்கடந்த சிரிப்பு.
சஞ்சயன் சொன்னான், அமலையாடி பாடிவீட்டுக்குத் திரும்பும் அவ்வீரர்களின் மீது மேலும் மேலுமென வானம் தெளிந்துவருகிறது. இன்றைய போர் முடிந்தது, அரசே. இது பதினைந்தாவது நாள் போர். பதினைந்து காலகட்டங்கள். பதினைந்து கொடுங்கனவுகள். அரசே, அறமும் மறமும் தங்கள் எல்லை கண்டு திகைத்த பதினைந்து நாடகங்கள். பதினைந்து யுகங்கள் அவை.
திருதராஷ்டிரர் இருகைகளையும் தலைக்குமேல் குவித்து தசைக்குமிழிகளென விழிகள் துடித்தலைய விழிநீர் பாய்ந்து மார்பில் வழிந்துகொண்டிருக்க விம்மல் ஓசை எழுப்பினார். அது நீள்மூச்சென மாற “தெய்வங்களே! மூதாதையரே!” என்றார்.
ஏகாக்ஷர் சொன்னார்: அரசி, இப்போது துரியோதனனின் பாடிவீட்டுக்கு முன்னால் சிறுமுற்றத்தில் இருண்டு வரும் அந்தியில் செவ்வொளி அலையும் பந்தங்களின் அருகே அங்கரும் துச்சாதனனும் சகுனியும் சல்யரும் மட்டும் அமர்ந்திருக்கிறார்கள். இருகைகளையும் விரல்கோத்து முழங்கால் மேல் வைத்து, தலை கவிழ்ந்து, முடிச்சுருள்கள் கலைந்து முகம் மீது அலைய துரியோதனன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு முன் கர்ணன் மார்பில் கைகளைக்கட்டி விழிகளைத்தழைத்து நிலம் நோக்கி அமர்ந்திருக்கிறான். சல்யரும் சகுனியும் தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கி ஏதோ சொற்களை உரைப்பவர்கள்போல உதடுகள் அசைய அமர்ந்திருக்கிறார்கள்.
தன் புண்பட்ட காலை மெல்ல அசைத்து நீக்கி வைத்து முனகலோசை எழுப்பிய சகுனி “இங்கு இன்னமும் போர் முடியவில்லை” என்றார். அவர் அதை தன்னிடமே சொல்லிக்கொண்டார். துரியோதனன் விழிதூக்கி அவரை பார்த்தான். “துரோணர் களம் படுவார் என்பதை நாம் முன்னரே அறிந்திருக்க வேண்டும்” என்று சகுனி சொன்னார். “தன் மாணவனை அவர் கொன்றிருந்தாரெனில் அது இதுநாள் வரை இங்கு வாழ்ந்து, சொல்தவமும் விரல்தவமும் இயற்றி, விற்கலை ஒன்றை இப்புவியில் நிறுவியதை அவரே அழித்துவிட்டுச் செல்வது போல. எந்த ஆசிரியனும் சென்று சேரும் இடர் அது. தன்னை வெல்ல வைப்பதா, தான் வளர்த்தெடுத்த கலையை நிலைநிறுத்துவதா என்பது. பெரும் ஆசிரியர்கள் தன் கலையை நிலைநிறுத்தி விடை கொள்ளவே விழைவார்கள். துரோணரும் அதையே செய்தார். அர்ஜுனன் வடிவில் அவரது விற்கலை இங்கு நிற்கும். அவர் வாழ்ந்தது முழுமையடையும். அர்ஜுனனை வெல்லக்கூடியவர் அவர், வஞ்சத்தாலேயே அவர் வீழ்ந்தார் என்பது களத்தில் நிறுவப்பட்டமையால் அவர் தோற்கவும் இல்லை” என்றார்.
துரியோதனன் தாழ்ந்த குரலில் “இவ்வண்ணம் எதையேனும் சொல்லி நிறுவி அதை நாமே ஏற்றுக்கொள்வதில் என்ன பயன் உள்ளது? நம் தரப்பில் பெருவில்லவர்களில் ஒருவர் இன்றில்லை. அது மட்டுமே உண்மை” என்றான். “அவர் நமது படைகளை வெல்ல வைத்தார். அரசே, பாண்டவர் தரப்பில் அவர் உருவாக்கிய அழிவென்ன என்று சற்று முன்னர்தான் காவல் மாடத்தில் ஏறி நின்று பார்த்தேன். அவர்களில் இன்று எஞ்சியிருப்பவர் மிகச்சிலரே. இன்னொரு நாள் போரில் நமது முழுவிசையையும் திரட்டி தாக்குவோமெனில் அவர்கள் எஞ்சப்போவதில்லை” என்றார் சகுனி. துரியோதனன் விழிதூக்கி நோக்க சகுனி சொன்னார். “நோக்குக, நம் தரப்பின் முதன்மை வீரர் இன்று நம்முடன் இருக்கிறார்! ஒருவேளை இவ்வெற்றி அவருக்குரியதென முன்னரே தெய்வங்கள் வகுத்திருக்கும் போலும். ஆகவேதான் பீஷ்மரும் துரோணரும் களம் பட்டார்கள். அங்கர் கையால் பாண்டவர்கள் கொல்லப்படவும் உனக்கு மணிமுடி சூட்டப்படுவும் ஊழ் பாதை வகுத்துள்ளது. நாம் இன்னும் போரிட இயலும்.”
“அரசே, சல்யரும் கிருபரும் உடனிருக்க அங்கர் படையெழுந்தாரெனில் உடல் வெந்து உளம் சிதறி நைந்துகிடக்கும் பாண்டவர்களை வெல்ல நமக்கு ஓர் புலரியும் அந்தியும் மட்டும் போதும். ஐயம் வேண்டாம், நாளை பொழுது நாம் போர் முடித்து வெற்றியுடன் பாடிவீடு திரும்புவோம்” என்றார் சகுனி. துரியோதனன் விழி திருப்பி கர்ணனை பார்த்தான். கர்ணன் “ஆம், நான் படைத்தலைமை கொள்கிறேன். என்னுடன் நீங்கள் இருந்தால் போதும். வெற்றியை ஈட்ட என்னால் இயலும்” என்றான். “அர்ஜுனன் இன்று புண்பட்டு திரும்பிச் சென்றிருக்கிறான். அவன் உடல் வெந்துவிட்டதென்கிறார்கள். அவன் உளம் நலிவுற்றிருக்கும். நாளை போருக்கு அவன் எவ்வண்ணம் எழுவான் என்று தெரியவில்லை என்று நமது உளவுச்செய்திகள் சொல்கின்றன. அங்கர் உளம் கொண்டாரெனில் நாளையே பாண்டவப் படைகளை முற்றழிக்க இயலும்” என்றார் சகுனி. “நாம் வெல்வோம். ஐயமே வேண்டாம், நாம் இக்களத்தில் வெல்வோம். அது எந்தையின் வெற்றி. இது இனிமேல் கதிர்விரித்தெழும் சூரியனின் போர்” என்று கர்ணன் சொன்னான்.
“பிறகென்ன? ஐயம் களைக! இந்தத் தெய்வம் நமக்கான வெற்றியை இறுதி எல்லைக்கோட்டுக்கு அப்பால் வைத்துள்ளது. அரசே எந்த்த் தெய்வமும் நற்கொடையை எளிதில் அளித்துவிடுவதில்லை என்று கொள்க! நீ கோருவதென்ன? பாரதவர்ஷத்தின் முதன்மை மணிமுடி. மும்முடி சூடி ஆள ஐம்பத்தாறு மன்னர்கள் கோலூன்றி அமர்ந்த விரிநிலத்தை கோருகிறாய். அதை அளிப்பதற்கு முன் தெய்வங்கள் கோருமல்லவா, நீ எதுவரை செல்வாய் என்று? இறுதிக்கணம் வரை நின்றிருப்பாயா என்று? ஆம் என்று அவர்களிடம் சொல்லி செயலில் காட்டுவோம். அரசே, நாளை பதினைந்து நாள் போரையும் மறந்து அன்றெழுந்ததுபோல் வில்லேந்தி முடி ஒளிர கவசங்கள் மின்ன சென்று களம் நிற்க! தெய்வங்கள் பார்க்கட்டும், துரியோதனன் ஒருபோதும் மானுடரிடம் தோற்பதில்லை என்று” என்றார் சகுனி. அவர் குரல் ஓங்கியது.
“தெய்வங்கள் தங்கள் அடியவனை நோக்கி அவனுக்கு முற்றிலும் நிகரான, அவன் தன் முழு ஆற்றலால் எழுந்தாலொழிய கடந்து செல்ல இயலாத மானுட எதிரிகளை அனுப்புகின்றன. வஞ்சத்துடன் பகைமையுடன் கீழ்மைகளுடன் அவன் போரிடும்படி செய்கின்றன. மானுடரால் வெல்லப்படக்கூடிய ஒருவனுக்கு தங்கள் அருங்கொடையை அளிப்பதில்லை என்று அவை முடிவு செய்துள்ளன. எந்த மானுடரும் எவ்வகையிலும் வெல்ல முடியாத ஒருவனைக் கண்டே விண்ணிழிந்து வந்து அவை கைவிரித்து நெஞ்சோடு தழுவிக்கொள்கின்றன. வேண்டும் வரம் அளித்து புவித்தலைமை என நிறுத்துகின்றன. நீ வெல்ல இயலாதவனென்றுணர்க! அரசே, இதோ இப்போரில் எத்தனை பேர் களம்பட்டனர்! பீஷ்மரும் துரோணரும் வீழ்ந்தனர். ஜயத்ரதரும் பகதத்தரும் விழுந்தார்கள். பிதாமகர் பால்ஹிகர் களம்பட்டார். இளையோன் பூரிசிரவஸ் மறைந்தான். நீ எஞ்சியிருக்கிறாய். இன்னமும் வெல்லப்படாதவனாக தலை தருக்கியிருக்கிறாய். இதுவே சான்றல்லவா, நாளை நாம் வெல்வோம். நாமே வெல்ல இயலுமென்று தெய்வங்களுக்கு நாளை காட்டுவோம்” என்றார் சகுனி.
துரியோதனன் எழுந்து இருகைகளையும் விரித்து “ஆம், அதுவே என் முடிவு. இன்று ஆசிரியர் களம் பட்ட செய்தியை நான் அறிந்த அக்கணம் என் உள்ளம் கொண்ட உணர்வென்ன என்று நானே கூர்ந்துநோக்கிக்கொண்டிருந்தேன். அடிவிழுந்தோறும் சீறி படமெடுக்கும் அரவுபோல் என்னை உணர்ந்தேன். என் கொடியில் ஆடும் அரவை நான் கண்முன்னிலெனக் கண்டேன். என் தன்முனைப்பும் சினமும் தணியவில்லை. இந்த இழப்பே இருமடங்கு சீற்றத்துடன் எழுவதற்கான ஆணை என்றுதான் என் அகம் சொல்கிறது. சோர்வூட்டும் சொற்கள் எனக்கு சுற்றும் ஒலித்துக்கொண்டிருந்தபோதுகூட என் அகத்தில் ஒருபகுதி கல்லென உறைந்தே இருந்தது. மாதுலரே, என் உணர்வுகளையே சொல்லாக்கியிருக்கிறீர். ஆயினும் உங்கள் சொற்களுக்கு அப்பால் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் வணங்கும் தெய்வங்களே என்னை கையொழிந்தாலும் சரி, உளம் சோரப்போவதில்லை. என் தெய்வமே வில்லெடுத்து எனக்கெதிராக வந்து நின்றாலும் சரி, களம் நில்லாதொழியப்போவதில்லை” என்றான்.
“இச்சொற்களையே மூதாதையர் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். உன் தெய்வங்கள் உன் நாவில் இவை எழக் காத்திருக்கின்றன. கூரிய சொற்கள் திகழும் நாவு வாயை வேள்விக்குளம் என்றாக்குகிறது, தெய்வங்கள் அங்கே அவி கொள்கின்றன என்று அசுர வேதம் சொல்லுண்டு” என்று சகுனி சொன்னார். “ஆம், மீண்டெழுவோம். நாளை புலரியில் அங்கர் தலைமை கொள்ள போர் தொடரட்டும்” என்று துரியோதனன் ஆணையிட்டான். “இளையோனே, உடனே இச்செய்தி நம் படைகளில் முரசறைவிக்கப்படட்டும்.” துச்சாதனன் தலைவணங்கினான். “நாம் பீஷ்ம பிதாமகரை வணங்கி சொல்கொள்வோம்” என்றார் கிருபர். “துரோணர் களம் பட்ட செய்தி அவருக்கு சென்று சேர்ந்திருக்க வாய்ப்பில்லை” என்றார் சல்யர். “ஆம், அரசர் ஆணையிடாது எச்செய்தியும் அவருக்கு செல்ல வேண்டியதில்லை என்று முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது” என்றார் சகுனி.
ஏகாக்ஷர் தன் காய்களை கலந்து மீண்டும் ஏழாகப் பகுத்து “அரசி நாளை போர் தொடரும். இதுவரை நிகழ்ந்த போர் அனைத்தும் இன்றிரவோடு முற்றாக மறக்கப்படும். ஏழு முறை மடித்து ஏழாயிரம் முறை இறுக்கி சுற்றிக் கட்டி இருண்ட ஆழத்திற்கு அனைத்து நினைவுகளும் தள்ளப்படும். நாளை கதிர்மைந்தனின் நாள்” என்றார். காந்தாரி இருகைகளையும் கூப்பி “ஆம்” என்றாள். பிற அரசியர் நீர்மின்னும் கண்களுடன் நோக்கி நின்றிருந்தார்கள்.
பார்பாரிகன் சொன்னான்: கூட்டரே, அந்தி எழுந்து படையெங்கும் பந்தங்கள் ஒளி பெற்றுவிட்டிருந்த பொழுதில் மூன்று தேர்களில் துரியோதனனும் கர்ணனும் சல்யரும் சகுனியும் கிருபரும் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்த படுகளத்தின் முகப்பிற்கு வந்து சேர்ந்தனர். அங்கு நெய்ப்பந்தங்கள் படபடத்து காற்றிற்கு ஆடும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. மிகத்தொலைவில் கௌரவப்படைப்பெருக்கு பாடிவீடுகளில் அமைந்துகொண்டிருக்கும் ஓசை முழக்கமெனச் சூழ்ந்திருந்தது. புண்பட்ட யானைகளும் புரவிகளும் பிளிறிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் இருந்தன. ஆனால் அச்சூழல் தன்னை போர்க்களத்திலிருந்து வெட்டி அகற்றிக்கொண்டிருந்தமையால் அவ்வொலிகளுக்கும் முற்றாக அகன்று அதை வெறும் பின்னணிக் கார்வையென மாற்றிக்கொண்டுவிட்டிருந்தது.
முதல் தேரிலிருந்து துரியோதனனும் கர்ணனும் இறங்கி நின்றனர். தேரிலிருந்து சகுனி தன் புண்பட்ட காலை மெல்ல நீட்டி வைத்து உடல் சரித்து நடந்துவந்தார். கிருபரும் சல்யரும் இன்னொரு தேரிலிருந்து இறங்கினர். அவர்கள் அணுகும் செய்தி சென்றதும் பீஷ்மரின் படுகளத்திற்கு காவல் நின்றிருந்த மருத்துவ ஏவலர்களான சாத்தனும் ஆதனும் வந்து துரியோதனனைப் பணிந்து முகமன் உரைத்தனர். பிறிதொரு மருத்துவ ஏவலன் உள்ளே சென்று முதிய மருத்துவர் வஜ்ரரை செய்தி அறிவித்து வெளியே கூட்டிவந்தான். துரியோதனன் வஜ்ரரிடம் “எவ்வண்ணம் இருக்கிறார்?’ என்றான். “அவ்வண்ணமே” என்று அவர் மறுமொழி சொன்னார். திரும்பி கர்ணனை நோக்கி “வருக!” என்றபின் துரியோதனன் உள்ளே சென்றான்.
அப்பாலிருந்த ஒளி கடந்து வந்தமையால் அம்புப் படுக்கையின் மீது பீஷ்மர் காற்றில் மிதந்தவர்போல் கிடப்பதாகத் தெரிந்தது. அம்புகளும் நிழல்களும் கலந்து பின்னி வலையாக மிதந்து வானில் நின்றிருக்கும் எண்கால் சிலந்தியென அவரை துரியோதனன் எண்ணினான். அருகணைந்து அவர் கால்களில் தலைவைத்து வணங்கினான். உரத்த குரலில் “பிதாமகரே, நாளை போரில் அங்கர் களமிறங்குகிறார். கௌரவப்படை முன்பினும் விசைகொண்டு பாண்டவரை தாக்கவிருக்கிறது. நாளை வெற்றியென என் நெஞ்சு கூறுகிறது. என்னையும் அங்கரையும் நம் படையினரையும் வாழ்த்துக!” என்றான். பின்னர் “பிதாமகரே, ஆசிரியர் துரோணர் இன்று களம்பட்டார். அர்ஜுனனால் அவர் வஞ்சக்கொலை செய்யப்பட்டார்” என்றான்.
பீஷ்மர் அதை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. இமைகள் அசைவற்றிருந்தன. சற்றே திறந்த உதடுகள் உலர்ந்து விரிசலிட்டிருந்தன. கிருபர் சென்று வணங்கியபின் பீஷ்மரின் காதருகே முழந்தாளிட்டு “பிதாமகரே, துரோணர் களம்பட்டார்” என்றார். பீஷ்மரின் முகத்தில் உயிரசைவு தென்படாமையால் மீண்டும் சற்று வாயை அணுக்கமாக்கி “பிதாமகரே, அறிக! ஆசிரியர் துரோணர் களம் பட்டார்! ஆசிரியர் துரோணர் பாண்டவ இளையவன் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்!” என்றார். பீஷ்மரின் இமைகள் அசைந்தன. “ஆம்” என்று உதடுகளிலிருந்து ஓசை எழுந்தது. மேலும் ஒரு சொல்லுக்காக அவர்கள் காத்து நின்றிருந்தனர். பின்னர் கிருபர் எழுந்து சென்று சொல்லின்றி பீஷ்மரை கால் தொட்டு வணங்கி பின்னடைந்தார். சல்யரும் சகுனியும் பீஷ்மரின் கால்தொட்டு வணங்கி மீண்டனர்.
கர்ணன் முன்னால் சென்று பீஷ்மரின் காலில் தலைவைத்து “வாழ்த்துக, பிதாமகரே! நான் களத்தலைமை கொள்ள உங்கள் ஒப்புதலை அளியுங்கள்” என்றான். பீஷ்மரின் உதடுகள் அசைந்தன. இருபுறங்களிலும் அம்புக்கூர்கள் மேல் அமைந்த கைகளில் விரல்கள் நடுக்குற்றன. உடலெங்கும் உயிர்ப்பின் மெல்லிய அசைவொன்று கடந்து சென்றது. கர்ணன் மீண்டும் இருமுறை அவர் கால்களில் தலைவத்து வணங்கினான். அவன் எழுந்த கணம் பீஷ்மரின் குரல் ஒலித்தது. “புகழ் சூடுக!” கர்ணன் முகம் மலர்ந்து மீண்டும் தலைவணங்கினான். அச்சொல் அவர் முகத்திலிருந்துதான் எழுந்ததா என்று திகைப்புடன் துரியோதனன் கூர்ந்து நோக்கினான். பின்னர் சகுனியை பார்த்தான். கர்ணன் “விழைந்த சொல்லை பெற்றுவிட்டேன். செல்வோம் “என்றான். மீண்டும் அவர்கள் பீஷ்மரை வணங்கி படுகளத்திலிருந்து வெளியே நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் பீஷ்மர் “ஆம், துரோணரே” என்றார். துணுக்குற்றுத் திரும்பிய துரியோதனன் அதை எவர் சொன்னதென்று அறியாமல் மாறி மாறி நோக்கியபின் நடந்தான்.
அரவான் சொன்னான்: துரியோதனனிடமிருந்து விடைகொண்டு தன் பாடிவீட்டுக்கு கர்ணன் திரும்பும்போது தனக்குப்பின்னால் ஆயிரம் இருண்ட சுருள்களாக நாகமொன்று நெளிந்தெழுவதைக் கண்டான். விழிதிருப்பி நோக்கினால் அது மறைந்துவிடும் என்றறிந்தவனாக அவ்விருக்கும் உணர்வையே அதுவெனக் கொண்டு தளர்நடையில் பாடிவிட்டுக்குச் சென்று நின்றான் .அங்கிருந்த இரு காவலர்களும் எழுந்து தலைவணங்கினர். “மஞ்சம் ஒருக்குக!” என்று அவன் சொன்னான். “உணவு ஒருங்கியுள்ளது” என்று ஏவலன் கூற “இன்று எதுவும் தேவையில்லை” என்றான். “போருக்குப்பின் உணவொழிவது நன்றல்ல, வழக்கமுமல்ல” என்று இன்னொரு ஏவலன் சொன்னான். கைவீசி அவனை தவிர்த்துவிட்டு கர்ணன் பாடிவீட்டுக்குள் நுழைந்தான்.
நார் மரவுரியை தூண்களில் இறுக்கிக் கட்டிய மஞ்சம் அவனுக்காக ஒருக்கப்பட்டிருந்தது. அவன் சிறிய மரப்பெட்டியில் அமர்ந்ததும் இரு ஏவலர் வந்து கால்குறடுகளைக் கழற்றி கவசங்களையும் ஆடைகளையும் அகற்றினர். அவன் எழுந்து நின்றபோது மென்மரவுரிக் குச்சத்தால் அவனுடலை வீசித்துடைத்து புதிய மரவுரி அணிவித்தனர். அவன் கையுறைகள் குருதியுடன் சேர்ந்து தோல் பொருக்கென ஒட்டியிருந்தன. அவற்றை வாளால் கிழித்து அகற்ற வேண்டியிருந்தது. கையுறை படிந்திருந்த இடத்தை அவன் கை நிறம் மாறி பிறிதொரு உடல் அவ்வுடலுக்குள் ஒளிந்திருப்பது போல் தோன்றச்செய்தது. அவர்கள் அவன் கைகளை நீரால் கழுவினர். மணலால் கால்களை தூய்மை செய்தனர்.
கர்ணன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டு அவர்கள் வெளியேறும்படி கையசைத்தான். அவர்கள் ஓசையில்லாது வெளியே சென்று குடிலின் படலை மெல்ல மூடினர். வெளியே இருந்து வந்த பந்த ஒளி மறைந்ததும் உள்ளே இருள் செறிந்தது. பின்னர் இருள் வெளிறலாயிற்று. இருளலைகள் உடலெனத் திரள ஒரு நாகம் அவன் கால்மாட்டிலிருந்து எழுந்து ஏழு தலைவிரித்து நின்றது. கர்ணன் வெறுமனே அதை பார்த்துக்கொண்டிருந்தான். அதன் கண்கள் மின் கொண்டன. நாக்கு சீறலோசையுடன் பறந்தது. “என் வஞ்சம் இலக்கு தவறியது” என்று அது கூறியது. “அறிக, இலக்கு தவறும் வஞ்சங்கள் ஏழு மடங்காகும்! எண்ணி எண்ணிப் பெருகி ஏழாயிரம் மடங்காகும். என் நஞ்சு நுரைகொள்கிறது…”
கர்ணன் அதன் இமையா விழிகளை பார்த்துக்கொண்டிருந்தான் “உன்னுடன் இங்கிருப்பேன். உன் ஆவநாழியை ஒழியாது நிறைப்பேன்” என்றது மணிகர்ணன். “உன்னை உணராத நாளில்லை” என்று கர்ணன் சொன்னான். “தட்சனது மைந்தனின் அவ்வஞ்சத்தை நான் விழுங்கினேன்” என்றபோது நாகத்தின் முகத்தில் ஒரு சிரிப்பை அவன் பார்த்தான். “தன் உற்றாரை தானே விழுங்கி செரித்து வளர்வது நாகங்களின் இயல்பென்று அறிந்திருப்பாய்.” அது சீறி நகைத்தது. “நான் பிற நாகங்களை மட்டுமே உணவாகக்கொள்ளும் அரசநாகம். நான் உண்டவர்கள் அனைவரும் என்னுள் விதையென்றாகி பெருகி நிறைந்துள்ளனர். என் தலையென நீ காண்பவை நான் உண்ட பெருநாகங்கள்.”
பின்னர் அது குனிந்து அவன் நெஞ்சின் மேல் தன் முழு எடையையும் வைத்து முகத்தருகே வந்தது. “துயில்க! இன்று இரவு உன் கலத்தில் என் நஞ்சு புளித்து நுரை கொண்டு நிறையும்.” பின்னர் பின்விலகி வளைந்து படம் சொடுக்கி அவன் உதடுகளில் ஓங்கி கொத்தியது. கர்ணனின் உடல் விதிர்ப்பு கொண்டது. நரம்புகள் உடைபட்டு புடைத்தெழ வலிப்பு எழுந்து வாயில் நுரை பெருகி ஒழுக அவன் துடித்துக்கொண்டிருந்தான். பின்னர் மெல்ல தசைகள் இளகி நரம்புகள் நெகிழ உடல் தளர்ந்து மஞ்சத்தில் படுத்தான். விழிகள் மூடி சீரான மூச்சு ஒலிக்கலாயிற்று. அவன் உடலிலிருந்து உள்ளம் மெல்ல நழுவி இருண்ட ஆழத்தில் கரிய துளியென சொட்டியது. அங்கே பல்லாயிரம் கோடி நாகங்கள் அலைகளென கொப்பளிப்பென கொந்தளிப்பென சுழிப்பென நிரம்பி பரந்திருந்தன.
[கார்கடல் நிறைவு]