கார்கடல் - 85
கிருபர் தனியாக தேரில் சென்று அஸ்வத்தாமன் போரிட்டுக்கொண்டிருந்த களத்தை அடைந்து இறங்கியபோது தொலைவில் அம்புகள் பறவைக்கூட்டங்கள்போல் சிறகோசையுடன் வானை நிறைத்திருப்பதை கண்டார். சகுனியும் அஸ்வத்தாமனும் இணைந்து மறுபுறம் முழு ஆற்றலுடன் போரிட்டுக்கொண்டிருந்த சிகண்டியை எதிர்கொண்டிருந்தனர். கிருபர் வருவதை சகுனிதான் முதலில் பார்த்தார். முன்னரே துரோணர் களம்பட்டிருந்த செய்தியை அவர் அறிந்திருந்தமையால் தன் பாகனுக்கு கையசைவால் ஆணையிட்டுப் பின்னடைந்து தேரிலிருந்து இறங்கிக்கொண்டு விழிகளை இமைத்தும் தலையை உலுக்கியும் தன்னிலையை மீட்டார். புண்பட்ட காலை நீட்டி வைத்து மெல்ல தேர்ச்சகடத்திலேயே அமர்ந்தார்.
கிருபர் தேரிலிருந்து இறங்கி சகுனியை நோக்கி சென்று “காந்தாரரே, நான் என் மருகன் அஸ்வத்தாமனிடம் சொல் உரைக்க வந்தேன், செய்தியை அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம், தாங்களே செய்தியை உரைக்கவேண்டுமென்று எனக்கும் தோன்றியது… என்னால் இங்கிருந்து அகலமுடியவில்லை” என்றார். “அவன் இன்னும் அறிந்திருக்கவில்லையா?” என்று கிருபர் கேட்டார். “இல்லை. சிகண்டி எத்துணை ஆற்றல் மிக்கவர் என்பதையே ஒவ்வொரு கணமாக உணர்ந்துகொண்டிருந்தோம் இருவரும். அவருடைய அம்புகள் எங்கள் உள்ளத்தில் ஒரு சொல்லும் எழாதபடி ஆக்கிவிட்டன. நாகத்தால் உற்று நோக்கப்படும் தவளைபோல் இத்தனை பொழுது மயங்கியிருந்தோம். உண்மையில் தங்கள் தேரொலியே என்னை மீட்டது” என்று சகுனி சொன்னார்.
கிருபர் “நான் சென்று எதிர்கொள்கிறேன். சிகண்டியை என்னால் தடுக்க இயலும்” என்றார். சகுனி “ஆசிரியரே, சிகண்டி தன் முதலெதிரியை நாளும் எண்ணி ஊழ்கம் செய்து பயின்றவர். பெரிய எதிரிகளைக் கொள்பவர் அவரளவுக்கே பெரிதாகிறார் என்பதற்கான சான்று அவர். சில தருணங்களில் எதிர்நின்று பொருதுபவர் பீஷ்ம பிதாமகரேதானோ என உளம் மயங்கினேன். அம்புகளின் விசையும் கோணமும் மட்டும் அல்ல. அந்த ஆணிலியுடலில் பேராண்மை மிக்க பீஷ்மரின் அசைவுகள் எழுவதை என் விழிகளால் கண்டேன்” என்றார். கிருபர் “ஆம், நானும் அவரில் பீஷ்மரை கண்டேன்” என்றார். சகுனி “பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டவர்களிடம் கேட்கவேண்டும், அவரில் சிகண்டி எழுந்த தருணங்கள் உண்டா என” என்றார் சகுனி. பின்னர் திரும்பி கண்களைச் சுருக்கி அஸ்வத்தாமனை நோக்கி “பீஷ்மரில் எழுபவள் அம்பையாகவும் இருக்கக்கூடும்…” என்றார்.
கிருபர் அப்பேச்சை கடக்க எண்ணினார். அதற்குள் அஸ்வத்தாமன் ஓர் அடித்தொலைவுக்கு தன் தேரை பின்னடையச் செய்து பேரம்பொன்றை எடுத்து தேர்ச்சகடத்தின் விசையுடன் தோல்பட்டையால் இணைக்கப்பட்டிருந்த பெருவில்லை வளைத்து நாண்பூட்டி அதை சிகண்டியை நோக்கி எய்தான். இடியோசையுடன் எழுந்து அனல் விரித்து சுழன்று சென்று சிகண்டியை தாக்கியது அந்த அம்பு. அது எழும் கணத்திலேயே தேரிலிருந்து பாய்ந்து அப்பால் விழுந்து எழுந்து ஓடி பிறிதொரு புரவி மேல் ஏறிக்கொண்டார் சிகண்டி. அவருடைய தேர் நிலத்திலிருந்து விண்ணுக்கு தூக்கிவீசப்பட்டு எரிந்து தழல்கொண்ட துண்டுகளாக தெறித்து நிலத்தில் விழுந்தது. புரவிகளின் உடல்கள் தசைச்செதில்களாக மாறி வானிலிருந்து பொழிந்தன. நாணொலி எழுப்பியபடி மேலும் மூன்று பேரம்புகளால் படைகளை சிதறடித்தான் அஸ்வத்தாமன்.
“இனி சிகண்டி எழ நெடும்பொழுதாகும். இதுவே தருணம்” என சகுனி சொன்னார். சிகண்டி படைகளுக்குள் ஓடி மறைய அஸ்வத்தாமன் பிறிதொரு பேரம்பை எடுத்து வில்லில் பொருத்த கிருபர் “அஸ்வத்தாமா” என்று கூவி அழைத்தபடி அஸ்வத்தாமனின் தேரை நோக்கி சென்றார். கையில் அம்பு நிலைக்க அஸ்வத்தாமன் திரும்பிப்பார்த்தான். பாண்டவப் படைகள் ஒருங்கு திரண்டு கோட்டையென மாறுவதை ஒருகணம் பார்த்தபின் “சொல்லுங்கள், மாதுலரே” என்றான். அதன் பின்னரே தொலைவில் முழங்கிக்கொண்டிருந்த முரசொலி அவன் காதில் பட்டது. முகம் இறுக “தந்தையா?” என்றான். “ஆம்” என்று கிருபர் சொன்னார். “யார்?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “அர்ஜுனன். அதன் பின் திருஷ்டத்யும்னன்” என்று கிருபர் சொன்னார்.
அஸ்வத்தாமன் “ஆம்” என்றபின் வில்லையும் அம்பையும் தேர்த்தட்டில் வைத்துவிட்டு தேரின் படிகளினூடாக இறங்கி கிருபரை நோக்கி வந்தான். “உன்னிடம் உண்மையை உரைக்கும்பொருட்டு அரசர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்” என்றார் கிருபர். அஸ்வத்தாமன் கண்கள் இடுங்க நோக்கினான். “அஸ்வத்தாமா, இறுதியாகப் போரிட்டபோது உன் தந்தை அனைத்து நெறிகளையும் மீறினார். பிறிதொருவராக மாறி களத்தில் நின்றார். மானுடருக்கு எதிராக ஒருபோதும் கைக்கொள்ளலாகாதென்று நூல்கள் விலக்கிய அனலம்புகளையும் இடியம்புகளையும் மின்னம்புகளையும் ஏவி பாண்டவப் பெருந்திரளை அழித்தார். வெந்த உடல்களின் கெடுநாற்றத்தாலேயே நமது படையினர் பின்னடைந்தனர் என்கிறார்கள்.”
“துருபதனை அவர் கொன்றார். அவர் மைந்தன் திருஷ்டத்யும்னனை தேர்க்காலில் கட்டி இழுத்தார்” என்று கிருபர் தொடர்ந்தார். “ஷத்ரியனை தேர்க்காலில் கட்டி இழுப்பதென்பது ஏழு தலைமுறைக்கு நீளும் பெரும்பழியை சேர்ப்பது. அரக்கர் அதை செய்ததுண்டு, அந்தணர் அதை இயற்றுவது இதுவே முதல்முறை. திருஷ்டத்யும்னனை சாத்யகி காப்பாற்றினான். அவன் உடல்வெந்து அமிலநீராடியவன்போல் கிடந்தான். எதிர்த்துவந்த அர்ஜுனனை அவர் அனலால் எரித்தார். பாண்டவ மைந்தர்களையும் உடல் வெந்து விலகியோடச் செய்தார்.” அஸ்வத்தாமன் “அறிந்தேன்” என்றான்.
“அஸ்வத்தாமா, பீஷ்ம பிதாமகரை வென்றது போலவே ஒரு வஞ்சத்தால்தான் உன் தந்தையும் வீழ்த்தப்பட்டிருக்கிறார். அவர்களுக்கும் வேறுவழியில்லை. உன் தந்தையை அரைநாழிகைக்குள் கொல்லவில்லை என்றால் படையுடன், குடியுடன் அவர்கள் வெந்து வெறும் தசைக்குழம்பென குருக்ஷேத்ரத்தில் பரவியிருப்பார்கள்” என்றார் கிருபர். “சொல்க!” என்று சொல்லி தலைகுனிந்து நிலம்நோக்கினான் அஸ்வத்தாமன். “மருகனே, உன் மேல் துரோணர் கொண்டிருந்த பேரன்பை அறிந்திருப்பாய். மாளவர்களின் படையிலிருந்த அஸ்வத்தாமன் எனும் யானை பீமனால் கொல்லப்பட்டது. அச்செய்தியை அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற சொற்களால் பாண்டவர்கள் உன் தந்தையிடம் சொன்னார்கள்.”
அஸ்வத்தாமன் கை நீட்டி கிருபரைத் தடுத்து “யார் சொன்னது? யுதிஷ்டிரர் சொன்னாரா?” என்று கேட்டான். “ஆம்” என்று கிருபர் சொன்னார். அஸ்வத்தாமனின் நீட்டிய கை அசைவிலாது நின்றது. “யுதிஷ்டிரன் சொல்லியிராவிட்டால் தந்தை நம்பியிருக்கமாட்டார்” என்று கிருபர் தொடர்ந்தார். “உன் தந்தை செயலிழந்து வில் தாழ்த்தி தேர்த்தட்டில் அமர்ந்தார். அர்ஜுனன் அரிய அம்பொன்றால் அவர் நெஞ்சை பிளந்தான். அவர் தேர்த்தட்டில் விழுந்த பின்னர் தேரில் பாய்ந்தேறிய திருஷ்டத்யும்னன் அவர் நெஞ்சில் உதைத்து முடி பற்றி தூக்கி வாளால் கழுத்தை வெட்டி தலையை துண்டாக்கி எடுத்தான். அதை பிறருக்கு காட்டி அமலையாடினான். இழிசொல்லுரைத்து தூக்கி களத்தில் வீசினான்.”
அஸ்வத்தாமனின் உடலில் மெல்லிய அசைவொன்று நிகழ்ந்தது. “அதைக் கண்டு பாண்டவர்களே களத்தில் சொல்லிழந்து நின்றனர். அர்ஜுனன் வேண்டாம் பாஞ்சாலரே என்று உளம் உடைந்து கூவினான். அங்கிருந்த மூத்த வீரர்கள் அனைவரும் உரக்க அழுது கண்ணீர்விட்டனர். பாண்டவ வீரர்களில் மூத்தவர் எழுவர் திருஷ்டத்யும்னன் மேல் தீச்சொல்லிட்டபடி வந்து தலைகொடுத்து வீழ்ந்தனர். பாண்டவப் படையிலிருந்து ஆசிரியர் வெல்க, பரத்வாஜரின் மைந்தர் சிறப்புறுக என்று வாழ்த்தொலி எழுந்த பின்னரே நமது படைகளும் வாழ்த்தொலிக்கத் தொடங்கின” என்றார் கிருபர்.
அஸ்வத்தாமன் இரு கைகளையும் முறுக்கி பற்களைக் கடித்து குனிந்து நின்றான். பின்னர் “ஆசிரியரே, அவன் தந்தையை நோக்கி எய்த அந்த அம்பின் பெயரென்ன?” என்றான். கிருபர் “நான் அதை அறிவேன். அது ஸ்வம் என்று அழைக்கப்படுகிறது. மிகச் சிறிய அம்பாக ஒரு வீரனுக்கு கிடைக்கும் என்கிறார்கள். ஒரு சிறு புழு வடிவில், அல்லது ஒரு துரும்பு அளவிற்கு. அதை முதலில் பார்க்கையில் பேரழகு கொண்டிருக்கும். காலையொளியில் வைரம்போல் சுடர்விடும். சுட்டுவிரலால் அதை தொட்டெடுத்தால் நறுமணம் கொண்டிருக்கும். அதை தன் ஆவநாழிக்குள் அவன் வைத்துக்கொள்ள வேண்டும். அது எப்போதும் அங்கிருக்கும், ஆனால் ஆவநாழியை வெளியே கொட்டி தேடினாலும் அதை கண்டடைய இயலாது. அது அங்கிருப்பதையே உணராமலும் போகக்கூடும், என்றோ ஒருநாள் கைபோனபோக்கில் துழாவுகையில், பிறிதொன்றுக்கெனத் தேடுகையில் அதைத் தொட்டு திடுக்கிட்டு கைவிலக்கிக் கொள்வான்.”
“அனைத்து அம்புகளும் ஒழிந்தபின் ஆவநாழியில் அது தோன்றும்” என கிருபர் தொடர்ந்தார். “ஒருமுறை அதற்கு இடமளித்துவிட்டால் பின்னர் அதை மீளக் கண்டடைந்து தன்னிலிருந்து விலக்குவது எளிதல்ல. அதற்கு நீடுநாள் தவம் தேவையாகும். முழுக்கக் கனிந்த தவத்தால்கூட ஒருவேளை அதைக் கடக்க இயலாமலும் ஆகும். அம்பறாத்தூணிக்குள் அறியாது வளர்கிறது. ஆவநாழியிலிருந்து எழும் ஒவ்வொரு அம்பையும் அது நோக்கிக்கொண்டிருக்கிறது. வெல்லும் அம்புகளில் துள்ளுகிறது. வீழும் அம்புகளில் துவள்கிறது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னரும் இருமடங்கு வளர்கிறது. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் மும்மடங்கு வளர்கிறது. தொடும்போது நூறு மடங்காகிறது. எடுக்கையில் ஆயிரம் மடங்கு. ஏவுகையில் பல்லாயிரம் மடங்கு. அது வெற்புகளை உடைத்தழிக்கும் ஆற்றல் கொண்டது. பெருங்கடல்களை அனலாக்கும் நஞ்சு கொண்டது. அத்தனை தெய்வங்களும் அஞ்சும் பேராற்றல் கொண்டது.”
அவர் விழிகளை நோக்காமல் “அத்தகைய ஒன்று என்னிலும் உள்ளது. நாளும் வளர்வது, இன்மையென்று இருப்புணர்த்தி உடனமைவது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அதன் பெயர் நாராயணாஸ்திரம். தந்தை எனக்கு அதை அளித்தார். ஒரு இளங்காலை வேளை. அர்ஜுனன் எங்கள் குருநிலையிலிருந்து கிளம்பி சௌவீரநாட்டுப் படையெடுப்புக்கு சென்றிருந்தான். நான் அவருடன் தனித்திருந்தபோது என் செவிகளில் அந்த அம்பை நுண்சொற்களாக உரைத்தார். தந்தையே இது என்னை இப்புவியில் எப்போதைக்குமென கட்டிப்போட்டுவிடுமல்லவா என்று கேட்டேன். ஒருபோதும் இதிலிருந்து மீண்டு நான் என் மூதாதையரிடமும் என்னை ஆளும் தெய்வங்களிடமும் சென்றுசேர முடியாதல்லவா என்றேன். ஆம், ஆனால் மண்ணில் உன்னை எவரும் வெல்லமுடியாதவனாக்கும், எந்நிலையிலும் அழிவற்றவனாக்கும் என்று தந்தை சொன்னார்.”
“மைந்தா, நான் என் விற்கலையின் முழுமையால் கற்றுக்கொண்டது. இது கடல் எனில் நான் பிறருக்கு அளித்த அனைத்தும் துளிகளே. இது உன்னிடமிருக்க எங்கும் நீ தலைவணங்க நேராது. எந்த அவையிலும் எவரும் உன்னை தனக்கு கீழென்றோ நிகரென்றோ கொண்டு கூட ஒரு சொல்லுரைக்க மாட்டார்கள் என்றார் தந்தை” என்றான் அஸ்வத்தாமன். “அவர் குரல் இடறியதை நினைவுறுகிறேன். அஸ்வத்தாமா, உன் தந்தை அவைகளில் அறிந்த சிறுமையை உன் வாழ்நாளில் ஒருபோதும் அடையமாட்டாய். ஆனால் நீ கூறியதுபோல் இது இப்புவியில் உன்னை என்றென்றுமெனத் தளைத்திடும் காப்பு. நீ விழையாவிடில் இதை இப்போதே உதறிவிடலாம். உன் விழைவின் பொருட்டு மட்டுமே இது உன்னுடன் வரவேண்டும் என்றார்.”
“அவர் என்னிடம் சொன்னபின் அதை என்னால் மறக்கவியலாது என உணர்ந்துகொண்டேன். ஆசிரியரே, நாட்கணக்கில் ஆண்டுக்கணக்கில் என் நெஞ்சினுள் மூச்சு ஓடுவதுபோல அச்சொல் ஓடிக்கொண்டிருந்தது. அவர் அதை நாராயணாஸ்திரம் என்று சொன்னார். ஆழம் அசைவிலாதிருக்க அலைகள் கொந்தளித்துக்கொண்டே இருப்பது. அகன்று எங்கோ இருக்க கணந்தோறும் வந்து அறைந்துகொண்டே இருப்பது. பேரமைதியின் ஓயாத ஓசை. நான் அதை அஞ்சினேன், ஆனால் அதற்கு முற்றாக அடிபணிந்தேன். பின்னர் அது என்னை ஆளத் தொடங்கியது” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.
“ஆம், அதை நான் அறிவேன்” என்று கிருபர் சொன்னார். “உன்னை நானே நேரில் வந்து சந்திப்பது அதை அஞ்சியே.” அஸ்வத்தாமன் “ஆசிரியரே, என்னிடம் உள்ள இந்த நாராயணாஸ்திரம் கடல். இப்புவி என்பது ஆழி தன் உள்ளங்கையில் ஏந்தியிருக்கும் ஒரு சிறு துளியே என்று அறிவீர். வைரத்தில் ஒளித்தொலைவு மடிந்து சுருண்டிருப்பதுபோல இதற்குள் முடிவிலா விசை அமைந்துள்ளது. இப்புவியையே அழிக்கும் ஆற்றல் கொண்டது. குருக்ஷேத்ரம் இதற்கு புயல்முன் புல்முனை நீர்த்துளி” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இது என்னை ஆளும் கொடுந்தெய்வம். என்னை பீடமாகக் கொண்டு எழுந்து பேருருக்கொண்டு இன்று என்னை தன் படைக்கலமாகச் சூடி நின்றுள்ளது.”
“ஒவ்வொருவரும் அவ்வாறு பிறிதொன்றால் ஆளப்படுகிறார்கள்” என்று கிருபர் சொன்னார். “கைவிட்டு எழுந்து சென்ற அம்புகளை நாம் ஆளவியலாது. ஆனால் அனைத்து அம்புகளுக்கும் நாம் பொறுப்பேற்றே ஆகவேண்டும். அர்ஜுனனின் செயல்பற்றி நான் உன்னிடம் சொல்லவந்ததும் இதுவே.” அஸ்வத்தாமன் தத்தளிப்புடன் “ஆசிரியரே, இக்களத்தில் பல்லாயிரம் முறை என் கையில் அந்த அம்பு தட்டுப்பட்டது. ஒவ்வொரு முறையும் அந்த அம்பைத் தவிர்த்தே பிறிதொன்றை எடுக்கிறேன். என்னிடமிருந்து எழும் ஒவ்வொரு அம்பிலும் அந்த அம்பின் துளி உள்ளது” என்றான். கிருபர் “நீ பழிநிகர் செய்தாகவேண்டும், அது மைந்தனின் கடன். ஆனால் நினைவுறுக, பழியை மாத்திரை குறையாமல் எண்ணி அமைத்துள்ளன தெய்வங்கள்! அதற்குப் பழிநிகர் செய்யும்போது வஞ்சத்திலோ விசையிலோ விளைவிலோ ஒரு மாத்திரை மிகுந்தால்கூட நீ அதை பழி எனக் கொள்வாய். அது உன்னை துரத்தத் தொடங்கிவிடும்” என்றார்.
அஸ்வத்தாமன் பெருமூச்சுவிட்டு “நான் என்ன செய்யவேண்டும், ஆசிரியரே?” என்றான். “திருஷ்டத்யும்னன் பழிநிகர் செய்தது சரியானதே. ஆனால் வில்தொட்டு தன்னிடம் அளித்த நல்லாசிரியனின் தலையை தூக்கி வீசியவன் தெய்வங்கள் வகுத்த எல்லையை மீறிவிட்டான். தன் ஆசிரியனைக் கொன்ற அர்ஜுனன் பழிசூடிவிட்டான். ஆசிரியருக்கு முன் பொய்யுரைத்த யுதிஷ்டிரனும் பீமனும் இளையோரும் பிழைசெய்தவர்கள். அவர்களை கொல்க! அவர்கள்பொருட்டு போருக்கெழுபவர்களை கொல்க! அப்பால்கடந்து செய்யும் ஒவ்வொரு செயலும் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் உன் பழிக்கணக்கில் அமையும் என்பதை கருத்தில் கொள்க!” என்றார் கிருபர்.
ஆனால் அஸ்வத்தாமன் பழிநிகர் என்னும் சொல் வேறெங்கோ சென்று தொட கொந்தளிப்படைந்தான். பற்களைக் கடித்து “இப்போது அறிகிறேன், எந்தை எனக்கு ஏன் அளித்தாரென்று. இவ்வாறு கீழ்மையுற்று களம்படுவோம் என்று அவர் அறிந்திருந்தார். அதன் பொருட்டு பழிநிகர் கொள்ளவே இதை அளித்திருக்கிறார்” என்றான். அவன் சிவந்து சினம் மிகுந்தபடியே சென்றான். “நான் அவராக நின்று எண்ணியதே இல்லை. ஏனென்றால் உடலுடன் அவர் இங்கிருந்தார். இன்று அவர் ஒழிந்த இந்நிலத்தில் அவரென எஞ்சியிருப்பவன் நானே. மாதுலரே, அவர் கொண்ட சிறுமைகளின் நிரையை தொட்டுத்தொட்டு எழுகிறது என் உள்ளம். பரத்வாஜரின் குருகுலத்திலிருந்து இதோ வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டு தலைவெட்டி வீசப்பட்டு களத்தில் கிடப்பது வரை. அவருடைய அனலுக்கு நான் பொறுப்பேற்கவேண்டும். முதன்மையாக இங்கு என் கடன் அதுவே.”
தன் ஆவநாழியை இயல்பாக நாடிய கை திடுக்கிட “இங்கிருக்கிறது… ஆசிரியரே, அது மட்டுமே என் ஆவநாழியில் எஞ்சியிருக்கிறது. நான் அதை நாணில் தொடுக்கும் பொழுது அணைந்துவிட்டது” என்றான். கிருபர் “மருகனே, நன்கு எண்ணி இயற்றவேண்டிய செயல் அது. செயல்முந்தினால் நீ அடைவது பெரும்பழி” என்றார். ஆனால் அஸ்வத்தாமனின் நெற்றியில் நீலநரம்புகள் புடைத்தன. “இல்லை ஆசிரியரே, எந்தையின் விழிகள் ஒவ்வொரு தருணமாக நினைவிலெழுகின்றன. ஷத்ரிய அவைகளில் அவர் தோள்குறுகி அமர்ந்திருப்பார். பீஷ்மரை ஒட்டியே இருக்கை அமைத்துக்கொள்வார். ஷத்ரியர் எவரேனும் சிறுமைசெய்து பேசிவிடக்கூடும் என்பதனாலேயே சொல்லடக்கிக் கொள்வார். மாதுலரே, எத்தனை அவைகளில் அனல்கொண்டு அமர்ந்திருந்தாரென்றால் தவம் பொலிந்து பிறந்த தன் மைந்தனை அந்தணனல்ல ஷத்ரியன் என்று அறிவிக்கக் துணிந்திருப்பார்! வஞ்சம் சூடி நிலம் வென்று என்னை அரியணை அமர்த்தியிருப்பார்!”
“அவர் இழந்தவை பல. என்னை ஷத்ரியன் என்று ஆக்கியதை ஏற்க முடியாமல் என் அன்னை அவரை பிரிந்தார். அவருடைய முகத்தையே மறந்து பிறிதொருவரென்றானார். அதன் பின்னரும் இதோ ஷத்ரியக் கீழ்மகன் ஒருவனால் வஞ்சத்தால் நெஞ்சுபிளக்கப்பட்டிருக்கிறார். பிறிதொருவனால் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.” சொல்லச்சொல்ல உணர்ச்சி மீதூற அவன் விழிநீர் பெருக்கினான். பற்களை இறுகக் கடித்து முகம் வலிப்புகொள்ள மூச்சு சீறும் ஒலியில் சொன்னான் “அவர்களை அவர் தன் நெஞ்சிலேற்றி வைத்திருந்தார். அர்ஜுனனை தன் முதல் மாணவனென்று அறிவித்தார். பாஞ்சாலனை தன் மைந்தனென்றே நடத்தினார். அம்புதொட்டு நிமித்தம் நோக்கக் கற்ற அவருக்குத் தெரியாதா இவர்கள் இயற்றப்போவது என்ன என்று? ஆசிரியர் என தன் மெய்மையனைத்தையும் அள்ளி அவர்களுக்கு அவர் ஏன் அளித்தார்?”
“இல்லை ஆசிரியரே, பழிநிகர் செய்யவில்லையென்றால் தந்தை என் மேல் நிறைவு கொள்ளமாட்டார். இவர்களை முற்றாக அழிக்கவேண்டும்… இதோ தன் ஆசிரியனை மாணவர்கள் கொன்றதை வெற்றிக்குரலெழுப்பிக் கொண்டாடும் ஒவ்வொருவரும் மண்ணிலிருந்து முற்றாக அழிக்கப்படவேண்டியவர்களே. இவர்களின் குடிகள், குருதிவழிகள், எழும்தலைமுறைகளும் அழிக்கப்படவேண்டியவர்களே.” அஸ்வத்தாமன் உடல் நடுக்கு கொள்ள தொடங்கியது. “இப்போது உணர்கிறேன், எந்தை விண்ணில் எரிவிண்மீன் என நின்றிருக்கிறார். இடியோசைகள் என அவருடைய வஞ்சக் குரல் கடுவெளியை நிறைத்துள்ளது. நான் எவருமல்ல, அவருடைய தொடர்ச்சி மட்டுமே. அவர் இங்கே விட்டுச்சென்றவற்றுக்காக மட்டுமே நான் இங்கு இருக்கிறேன்.”
“உன் சினத்தை ஆள்க… உன் நலன் கருதி தந்தையென நின்று இதை சொல்லவேண்டியவன் நான்” என்றார் கிருபர். “ஆழிவாளியின் விசை என்ன என்று இன்னமும் நீ அறிய மாட்டாய்… அது கௌரவர்களையும் முற்றழிக்கக்கூடும். இப்புவியையே அழிக்கக்கூடும்” என்று கிருபர் சொன்னார். “அழியட்டும்… நான் அந்த அம்பை எந்தையின் வஞ்சத்தின் படைக்கலம் ஆக்குகிறேன். அவர் விழைவது குருக்ஷேத்ரமே முற்றழிவதுதான் என்றால் அது நிகழட்டும். இப்புவியே வெந்தழிவதுதான் என்றால் அதுவே ஆகுக… இங்குளோர் அவருக்கு இழைத்தமைக்காக இப்புவியை அழிக்கும் உரிமையும் அவருக்குண்டு” என்றான் அஸ்வத்தாமன். கிருபர் “எஞ்சும் பழியும் மிஞ்சும் விழைவுமே இப்புவியில் மானுடரை கட்டிப்போடுவன. பெருவிழைவு சூடற்க! கொடும்பழி ஆற்றுதலும் ஒழிக…” என்றார்.
“இப்புவியில் எஞ்சுகிறேன்… என் பழி தீருமட்டும் இங்கே வாழ்கிறேன்” என்று அஸ்வத்தாமன் கூவினான். “எண்ணிச் சொல்… நீ சொல்வதை இங்கே ககனவெளியில் சூழ்ந்திருக்கும் எந்த ஒரு தெய்வம் கேட்டு விழியொளிர்ந்தாலும் அக்கணமே தீராத் தீயூழில் சிக்கியவனாகிறாய். மைந்தா, மானுடருக்கு தெய்வங்கள் அளிக்கும் தீச்சொற்களில் கொடியது உணர்வழியாமல் நீடுவாழியாவது மட்டுமே…” அஸ்வத்தாமன் “என் தந்தையின் வஞ்சம் இப்புவியினும், இங்கு சூழும் காலத்தினும் பெரிதென்றால் அவர்பொருட்டு இங்கே நீடுவாழி ஆகிறேன். அவ்வஞ்சம் சுமந்து வடமலைகளைப்போல் நின்றிருக்கிறேன்!” என்றான். கிருபர் அறியாது கைகூப்பிவிட்டார். “வேண்டாம்… எண்ணவும் திகைக்கச் செய்கிறது அது. பெரும்பழி ஈட்டி அதற்கு ஈடுசெய்ய ஒண்ணாமல் புவியில் நீடுவாழியாவது… வேண்டாம், மைந்தா” என்றார்.
அஸ்வத்தாமன் அவர் உணர்வுகளுக்கு மிக அப்பாலிருந்தான். “என் ஊழ் அதுவென்றால் ஆகுக! எந்தைக்கு நான் ஆற்றும் கடன் அதுவென்றால் அது எனக்கு உகந்ததே… மாதுலரே, இங்கு வாழ்ந்த மைந்தர்களில் தந்தைக்கு எண்ணித்தொடமுடியா பெருங்கொடை அளித்தவன் நான் என்றே ஆகுக!” என்றான். கிருபர் ஏனென்றறியாமல் மெய்ப்புகொண்டார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. பலமுறை பெருமூச்சுவிட்டு மெல்ல உளம்அடங்கி “இனி ஊழ் நடத்துக உன்னை!” என்றார். “உன் தந்தையை நான் நன்கறிவேன். இவையனைத்தையும் அறிந்தவராக அவர் இருக்கிறார் என்றும் அறிவேன். அஸ்வத்தாமா, நீர்வெளியம்பை நீ எடுப்பாய் எனில் உன் தந்தையிடமும் ஒரு சொல் கேட்டுக்கொள்.”
“அவர் எண்ணம் என்ன என்பதை நான் நன்கறிவேன்… அவர் சொல் ஒவ்வொருநாளும் செவியில் விழுந்தபடி இருக்கத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன்” என்றபின் அஸ்வத்தாமன் தலைவணங்கி கிருபரின் வாழ்த்துக்காக காத்திருக்காமல் தன் தேரை நோக்கி சென்றான். கிருபர் சொல்லணைந்தவராக அவனை நோக்கிக்கொண்டிருந்தார். “எழுக உத்தரபாஞ்சாலப் படைகள்! ஆசிரியர் களவீழ்ச்சிக்கு பழிநிகர் கொள்ள எழுகிறார் அஸ்வத்தாமர்!” என சகுனியின் முரசொலி அறைகூவிக்கொண்டிருந்ததை கேட்டார். திரும்பி தன்னைச் சூழ்ந்து அலையடிக்கும் படைகளை நோக்கினார். காற்றில் சுடர் அணைவதுபோல் அந்தக் களமே இல்லாமலாகிவிடக்கூடும் என அவர் நன்கறிந்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. துயரமோ எழுச்சியோ கொள்ளும் திறனை தன் உள்ளம் முற்றாக இழந்துவிட்டது என்று அவருக்குத் தோன்றியது.
பார்பாரிகன் சொன்னான்: அங்கு மெல்ல மெல்ல வஞ்சம் திரண்டெழுவதை நான் காண்கிறேன். ஒவ்வொருவரும் துரோணரின் களவீழ்ச்சியையும் அதிலிருந்த வஞ்சகத்தையும் உணர்ந்துகொண்டிருந்தனர். சொல்லிச் சொல்லி பெருக்கினர். எண்ணி எண்ணி பன்மடங்காக்கினர். அவர்களின் அச்சங்களை, ஐயங்களை, துயர்களை, வஞ்சங்களை அந்தச் சீற்றம் இழுத்து தானாக்கிக் கொண்டு வளர்ந்தது. அஸ்வத்தாமனிடமிருந்து அது அவர்களுக்கு பற்றிக்கொண்டதோ என்று ஒருகணம் தோன்றியது. அவர்களிடமிருந்து குவியம்கொண்டு அவனைச் சென்றடைகிறது என்று மறுகணம் தோன்றுகிறது.
தன் தேரிலேறிக்கொண்டு வில்லை நோக்கி விழிதிருப்பிய அஸ்வத்தாமன் திடுக்கிட்டான். அது உலையில் வைத்து பழுக்கக் காய்ச்சியதுபோல் ஒளிகொண்டிருந்தது. வெட்டியிட்ட தசைத்துண்டு என உயிர்கொண்டு துள்ளிக்கொண்டிருந்தது. அவன் குனிந்து அதை நோக்கி கைநீட்டுவதற்குள்ளாகவே பாய்ந்தெழுந்து அவன் கையை வந்தடைந்தது. சீறிப்பாய விழையும் புரவி என அவன் கையிலிருந்து அது துள்ளியது. கடிவாளம் பற்றி அதை நிறுத்துபவன்போல அவன் நாணை இழுத்தான். உடலை எழுப்பி நாணேற்றிக்கொண்டு “செல்க!” என அவன் ஆணையிட்டதும் பாகன் சாட்டையால் புரவிகளின்மேல் சொடுக்க அவை மூச்சொலி சீற முன்கால்களை அறைந்து துள்ளி பாய்ந்தெழுந்தன. தேர் சகட ஓசை விசைகொண்ட முழவுத்தாளமென ஒலிக்க முன்சென்றது.
தொலைவில் பாண்டவப் படையின் விரிவை அஸ்வத்தாமன் கண்டான். “எழுக! எழுக!” என அவன் கைவீச அந்த ஆணையை முழவுகளும் முரசுகளும் பெருக்கி அவன் தலைக்கு மேலிருந்த வானில் பேருருக் கொண்டு எழச்செய்தன. அஸ்வத்தாமன் அர்ஜுனனின் தேரை கண்டான். அதன் அமரமுனையில் அமர்ந்திருந்த இளைய யாதவரின் பீலியை நீலச்சுடர் என அறிந்தான். இருபுறமும் பீமனும் நகுலனும் நின்றிருந்தனர். அப்பால் சகதேவனால் காக்கப்பட்ட யுதிஷ்டிரரின் தேர் தெரிந்தது. அவன் தன் வில்நாணைச் சுண்டியபோது அதுவரை அவன் கேட்டிராத பேரொலி எழுந்தது. விண்ணளாவ உடல்கொண்டு எழுந்த புரவி ஒன்றின் கனைப்பு போலிருந்தது அது.
அவ்வோசை கேட்டு பாண்டவப் படையினர் அஞ்சி பின்னடைந்தனர். யானைகள் செவி நிலைத்து உடல் விதிர்க்க புரவிகள் திகைத்து நின்றன. அந்தப் புரவிக் கனைப்பொலி அஸ்வத்தாமனை மெய்ப்பு கொள்ளச்செய்தது. தன் தேர் மண்ணிலிருந்து எழுந்து விண்ணில் ஊரத்தொடங்கிவிட்டதுபோல் உணர்ந்தான். “எந்தையே, இதோ உங்கள் வஞ்சம்! எந்தையே, இதோ உங்களுக்கான பழிநிகர்!” என்று அவன் கூவினான். “எந்தையே, எழுக! எந்தையே, உங்கள் சொல் எழுக!” ஆனால் அவனைச் சூழ்ந்திருந்த வானம் சொல்லின்மைகொண்டு இறுகி புலப்படாப் பாறை போலிருந்தது. அவன் உள்ளம் இன்மையெனச் சுருங்கிவிட்டிருந்தது. “எந்தையே! எந்தையே! எழுக உங்கள் சொல்! எந்தையே!” என்று அஸ்வத்தாமன் கூவினான்.
வில்லின் புரவிக்கனைப்பொலி மேலும் மேலும் உரத்தது. வெறிகொண்ட புரவி. விண்ணுருவப் பெரும்புரவி. அவன் அந்த அறைதலோசையால் முன்னெடுத்துச் செல்லப்பட்டான்.