கார்கடல் - 77

ele1குருக்ஷேத்ரம் எங்கும் இடைவெளியே இல்லாமல் பரவி துயின்றுகொண்டிருந்த கௌரவப் படைவீரர்களின் நடுவே புரவியில் பெருநடையில் சென்றான் அஸ்வத்தாமன். புரவி குளம்புகளை எடுத்துவைத்துச் செல்வதற்கும் இடமில்லாதபடி மரப்பலகைப் பாதையின் மீதும் வீரர்கள் துயின்றுகொண்டிருந்தனர். சில இடங்களில் தயங்கி நின்று, உடலை கிளையிலிருந்து எழ விழையும் பறவைபோல் முன்பின் என உலைத்து பின் இடைவெளி கண்டு, தாவி எழுந்து முன்காலூன்றி பின்காலையும் அந்த இடத்திலேயே ஊன்றி நின்று மீண்டும் தாவிச் சென்றது அஸ்வத்தாமனின் பழகிய குதிரை. கீழே கிடந்த உடல்களில் பாதிக்கும் மேலானவை ஏற்கெனவே இறந்துவிட்டவை. எஞ்சியவை உயிர் மட்டும் தங்கியிருப்பவை. கூர்ந்து நோக்கியபோது அவற்றில் எந்த வேறுபாட்டையும் கண்டுபிடிக்க இயலவில்லை. இறந்த உடல்களும் விழி திறந்து பற்கள் தெரிய படைக்கலங்களை இறுகப் பற்றியபடி உணர்ச்சிக் குவியம் ஒன்றில் உறைந்திருந்தன. துயிலும் முகங்களிலும் அதேபோல உணர்வெழுச்சி சிலைகொண்டிருந்தது.

சில கணங்களுக்குப் பின்னரே துயிலும் முகங்கள் மெல்ல மாறிக்கொண்டிருப்பதை அவனால் உணரமுடிந்தது. பலர் முனகியபடி திரும்பிப் படுத்தனர். ஓரிரு சொற்களை சிலர் உரைத்தனர். மெல்லிய விதிர்ப்பொன்று சில உடல்களில் குடியேறியது. ஆயினும்கூட துயின்றுகொண்டிருக்கிறான் போலும் என்று எண்ணிய ஒரு முகத்திற்குக் கீழிருந்த உடலில் இரு கால்களும் வெட்டுண்டிருப்பதை, உடலென்று எண்ணிய ஒருவன் அசைந்து மெல்ல முனகி புரண்டுபடுப்பதைக் கண்டு உள்ளம் திடுக்கிட்டபடியே இருந்தது. இத்தனை உடல்கள்! ஒவ்வொரு உடலும் குருதிக்குமிழி என தோன்றி அன்னை உடலை உறிஞ்சி உண்டு உயிர்பெற்று வளர்ந்து உலகுக்கு வந்தது. விழிதிறந்து வானை நோக்கி மகிழ்ந்தது. ஆடியோடி மண்ணை அறிந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தால் ஊர்தி எனக் கொள்ளப்பட்டது. வெட்டிக்குவித்து அள்ளிக் கூட்டி கொண்டுசென்று அனலுக்கும் மண்ணுக்கும் அளித்தபின் அக்கணமே மறந்துவிடுகிறார்கள். அந்த தெய்வங்கள் காற்றில் நின்று துடிக்கின்றன. பின்னர் அவையும் மறந்து பிறிதொரு கரு புகுகின்றன.

அஸ்வத்தாமன் துரோணரின் குடிலை அடைந்ததும் அங்கு காத்து நின்ற ஏவலன் அருகே வந்து தலைவணங்கி “துயில்கிறார்” என்றான். அஸ்வத்தாமன் சற்று தயங்கினான். பின்னர் “நன்று, அவர் துயில் கொள்ளட்டும்” என்று புரவியை திருப்பினான். அதற்குள் குடிலுக்குள்ளிருந்து வெளிவந்த இன்னொரு காவலன் “ஆசிரியர் தங்களை அழைக்கிறார், அரசே” என்றான். “நான் வந்தது எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். “தங்கள் புரவியோசை கேட்டு விழித்துக்கொண்டார்” என்றான். அஸ்வத்தாமன் புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு இறங்கி கால்குறடுகளை அவிழ்த்துவிட்டு மெதுவாக நடந்தான். அந்தப் புரவியில் அவன் சற்று முன்னர்தான் முதல்முறையாக ஏறியிருந்தான். போர் முடிந்த பின்னர் தேரிலிருந்து இறங்கி அங்கு படைத்தலைவன் ஒருவன் கொல்லப்பட்டுவிட்டபின் களத்தில் நிலையழிந்து திரிந்துகொண்டிருந்த புரவியொன்றின் மேலேறி அவன் தந்தையை பார்க்க வந்தான். அவன் உள்ளத்தின் தாளத்தை தந்தை அறிந்திருக்கிறார். அந்தத் தாளம் எப்படி அவனிலிருந்து அப்புரவியின் குளம்புகளுக்கு செல்கிறது?

அவன் குடில் வாயிலில் நின்று “வணங்குகிறேன், தந்தையே” என்றான். அவர் “நீடுவாழ்க!” என எடைமிக்க குரலில் சொன்னார். அவன் குனிந்து உள்ளே சென்றபோது மரவுரி மெத்தைமேல் துரோணர் எழுந்து கால்மடித்து அமர்ந்திருந்தார். அவரது உடலில் கவசங்கள் கழற்றப்படாமல் இருந்தன. கையுறைகள் கூட உடலுடன் சேர்ந்து ஒட்டி பொருக்கடைந்து இருந்தன. அஸ்வத்தாமன் அவர் முன் பணிந்து வணங்கி சற்று அப்பால் அமர்ந்தான். அவர் எப்போதுமே அவனை நேர்விழி கொண்டு நோக்குவதில்லை. அவனிடம் பேசும்போது விழிதாழ்த்தி கைகளால் எதையேனும் செய்துகொண்டிருப்பார். அம்புகளை கூர்மைப்படுத்துவார். வில் திருத்துவார். அன்றி சுவடிகளை பொருளில்லாமல் அடுக்கியோ பிரித்தோ கட்டியோ விரல் உலாவிக்கொண்டிருப்பார். அவனிடமிருந்து எதையோ மறைக்க முயல்பவர்போல. பிழையோ இழிவோ ஆற்றிவிட்டவர்போல.

“சொல்” என்று துரோணர் சொன்னார். அஸ்வத்தாமன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள், முழுப் படையும் நின்ற இடத்திலேயே விழுந்து துயின்றுகொண்டிருக்கிறது. இன்று உடல்கள் எவையும் களத்திலிருந்து அகற்றப்படவில்லை. ஒவ்வொரு உடலாக நோக்கி அகற்றுவதும் எளிதல்ல. புண்பட்டவர்கள் கூட களத்திலிருந்து கொண்டு செல்லப்படவில்லை. களம் அலறல்களும் முனகல்களும் நிரம்பி ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்றான். “ஆம், இங்கு படுத்திருக்கையிலேயே அந்த முழக்கத்தை கேட்க இயல்கிறது” என்று துரோணர் சொன்னார். “இன்று இனிமேல் ஒரு போரை நிகழ்த்த இயலாது. இன்று பகல் இவர்கள் இவ்வண்ணமே துயிலட்டும் என்று விட்டுவிடுவதே உகந்தது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். துரோணர் “அந்த முடிவை நான் எடுக்க இயலாது” என்றார்.

“தாங்கள்தான் எடுக்கவேண்டும். இப்போது இப்படைகள் அனைத்திற்கும் தாங்களே தலைவர்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இவர்களை எழுப்பி பாடிவீட்டுக்கு சென்று துயிலச் சொல்லக்கூட இன்று நம்மிடம் செய்திமுறை இல்லை. இன்னும் சற்று நேரத்தில் பொழுது விடிந்துவிடும். வெயில் எழுகையில் அவர்கள் விழித்தெழக் கூடும். விழித்தெழுபவர்கள் ஒவ்வொருவராக பாடிவீட்டுக்கு திரும்பட்டும். மதுவருந்தி படுத்து துயில்கொள்ளட்டும். எழுந்து செல்லாமல் கிடப்பவர்கள் புண்பட்டவர்களா உயிர்நீத்தவர்களா என்று முடிவு செய்து அவர்களை அங்கிருந்து அகற்றலாம். பின் மாலையில் களம் ஒழுங்கு செய்யப்படும்.” அவன் அவர் முகம் என்ன உணர்வுகொண்டிருக்கிறது என்று உய்த்தறிய முயன்றான். அவர் விழிகள் அலைபாய்ந்தன. கைவிரல்கள் காற்றில் எதையோ இயற்றின. என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்? எவரிடம்? “நாம் இன்று பகல் முழுக்க போரிட இயலாது” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

துரோணர் எங்கோ நோக்கி “எனில் இன்னொரு இரவுப்போரா?” என்றார். “இரவுப்போரல்ல, இது பேரழிவு. இது போரே அல்ல, அருங்கொலை. நமது படைகளின் பெரும்பகுதி இன்றுடன் அழிந்தது. எஞ்சியவர்களைக்கொண்டு நாம் பாண்டவர்களுடன் போரிடவே இயலாது. இப்போது இருக்கும் கணக்குகள் என்ன என்று தெரியவில்லை. ஆனால் வெறும் விழிநோக்கிலேயே நம்மைவிட இருமடங்கு பெரியது பாண்டவர்களின் படை எனத் தெரிகிறது. அரக்கன் நேற்றிரவு நம்மை சூறையாடிவிட்டான்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். துரோணர் வேறெங்கோ நோக்கி தலையசைத்தார். போரைப்பற்றி அவனுடன் பேசுவதை அவர் விரும்பவில்லை என்று தோன்றியது. ஆனால் அவன் அருகிலிருக்கும்போது மட்டும் அவர் முகத்திலிருக்கும் விழிக்கனிவும் முகப்பொலிவும் தெரிந்தது. அவன் எழுந்து செல்ல எண்ணினான். ஆயினும் அவரிடமிருந்து ஒரு சொல் எழவேண்டும் என்றும் தோன்றியது.

“தந்தையே, இப்போரை இப்போது நம்மால் முடித்துவைக்க இயலாது. இன்று இப்போர் நிகழ்வது களத்தில் நிகழ்ந்த கொலைகளில் இருந்து எழுந்த வஞ்சத்திற்காகவே. இது முழுமையாக ஓடிச் சுழன்று பின்னரே நிற்கும். ஆனால் இங்கு விழுந்து கிடக்கும் வீரர்களிடம் நமக்கொரு பொறுப்புள்ளது. இவர்களை நாம் துயில அனுமதிப்பதொன்றே இன்று செய்யக்கூடுவது. அதற்கு தங்கள் ஒப்புதலை கோரியே நான் வந்தேன்” என்றான். “என் ஒப்புதல் உண்டு” என்று துரோணர் சொன்னார். “அதை தங்கள் ஆணை என்று நான் அரசரிடம் சொல்லிக்கொள்கிறேன்” என்றான். “நன்று” என்று துரோணர் சொன்னார். அஸ்வத்தாமன் எழுந்துகொண்டு “நேற்று அரக்கர் இளவரசன் விழுந்தான். பீமன் உளந்தளர்ந்திருக்கிறார் என்ற செய்தி வந்திருக்கிறது” என்றான். துரோணர் “அல்லது அவன் வஞ்சினம் பூண்டிருக்கலாம்” என்று சொன்னார். “ஆம், ஆனால் தன் மைந்தனைக் கொன்ற கர்ணனை ஒருபோதும் அவரால் வெல்லவோ பழியீடு செய்யவோ இயலாது. இன்று களத்தில் அவர் அதை உணர்ந்திருப்பார் எனில் மேலும் சோர்ந்து போர் மேல் நம்பிக்கை இழப்பார். அது நமக்கு வெற்றிதான்” என்றான் அஸ்வத்தாமன்.

துரோணர் “அவனும் கொன்றவனை விட்டுவிட்டு பிறிதெவரோ ஒருவன்மேல் பழிசுமத்தி அவனைக் கொன்று நிறைவடையலாம். அர்ஜுனனைப்போல” என்றார். அஸ்வத்தாமன் ஒருகணம் துரோணரின் விழிகளை சந்தித்து திரும்பிக்கொண்டான். அவன் உடல் நடுக்குகொள்ளத் தொடங்கியது. ஏன் என்று தெரியாமல் அங்கிருப்பதை ஒருகணமும் தன்னால் தாள இயலாது என்று அவனுக்குத் தோன்றியது. தலை வணங்கி அக்குடிலை விட்டு வெளியே வந்தான். குளிர்காற்று வந்து மூச்சை நிறைக்க ஆறுதலை உணர்ந்து நீள்மூச்செறிந்தான். இரு கைகளையும் விரித்து நெஞ்சை நிமிர்த்தி மேலும் மேலும் நன்மூச்சை இழுத்தபடி நடந்து புரவியிலேறிக்கொண்டான். காவலனிடம் “பிறிதெவரும் அவரை சந்திக்க வேண்டியதில்லை. ஒருநாழிகையேனும் அவர் துயில்கொள்ளட்டும்” என்ற பின் புரவியை கிளப்பிச்சென்றான்.

புரவியில் படைகளினூடாகச் சென்றுகொண்டிருக்கும்போது அஸ்வத்தாமன் தன் உள்ளம் நிலையழிந்து வெற்றுச்சொற்கள் பீறிட்டெழ பொருளிழந்த ஓலமாக இருப்பதை உணர்ந்தான். புரவி அவனை அறியாமலேயே விரைவுகொண்டது. உள்ளத்தின் விசையை புரவி எவ்வாறு அறிகிறது என்று உணர்ந்ததும் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தினான். தலையை சிலமுறை உதறிக்கொண்டு மெல்லிய ஒளி எழத்தொடங்கிய கீழ்வானை பார்த்தான். என்ன நிகழ்ந்தது? அங்கு செல்வது வரை இக்கொந்தளிப்பு எனக்கு இருக்கவில்லை. இவ்வுளமழிதல் இங்கு துஞ்சியும் துயின்றும் விழுந்துகிடக்கும் மானுட உடல்களைக் கண்டுமல்ல. பிறிதொன்றினால் துயருறுகிறேன். துயரல்ல, சீற்றமும் கொள்கிறேன். அல்ல, இது பிறிதொன்று. இது ஓர் ஏமாற்றம். அல்ல, அதுவும் அல்ல. வெறும் கசப்பு. எவர் மீதென்றிலாத கசப்பு.

அவன் மீண்டும் புரவியைத் தட்டி கிளப்பியபோது தன்னிடமென கூரிய வினாவொன்றை எழுப்பிக்கொண்டான். தெளிவாக கண்முன் தெரிவதொன்றை தவிர்க்கும்பொருட்டு ஏன் இத்தனை உள ஓட்டங்கள்? எதன்பொருட்டு நிலைகுலைந்திருக்கிறது என் உள்ளம்? அவர் விழிகளில் தெரிந்த சிறுமை கண்டு. ஆசிரியர் என்றிலாது, அந்தணர் என்றிலாது, தந்தையென்றும் இலாது வெறும் போரில் திளைக்கும் சிற்றுயிராக அவர் ஆகியிருந்தார். எதிரிமேல் வஞ்சத்தை ஏளனமாகவும் வெறுப்பாகவும் மாற்றிக்கொண்டு அதில் அமர்ந்திருக்கிறார். அங்கிருப்பவர் பிறிதொருவர். நினைவறிந்த நாள் முதல் தந்தையென்றும் ஆசிரியரென்றும் தெய்வமென்றும் வணங்கிய மானுடரல்ல. அவன் இருமுறை மூச்சை இழுத்து விட்டபோது உள்ளம் சற்று ஆறுதல் கொண்டது. புரவி நடை சீரடைந்தது. இந்தக் களத்தில் சிலர் மேலெழுகிறார்கள். சிலர் கீழிறங்குகிறார்கள். சிலர் அறிகிறார்கள். சிலர் அறிந்ததை கைவிடுகிறார்கள்.

இதை நான் முன்னரே அறிவேன். இவரை இவ்வண்ணம் முன்னரே பலமுறை சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இவரை உந்தி அகற்றி நான் உருவாக்கி என் குகையறையில் நிறுவியிருந்த பிறிதொருவரைக் கொண்டு அங்கு நிறுத்தியிருக்கிறேன். என்றும் இவர் இவ்வாறே இருந்தார். பாஞ்சால போர்க்களத்தில் துருபதனை இழுத்து வந்து தன் காலடியில் அர்ஜுனன் வீழ்த்தியபோது அங்கே நின்றார். திரௌபதி அவை நடுவே சிறுமைகொண்டு நின்றிருந்தபோது அங்கு அமர்ந்திருந்தார். எத்தனையோ முறை இவரை பார்த்திருக்கிறேன். நான் நன்கு அறிந்தவர். நான் அறிந்தவரிலேயே மிக அணுக்கமானவர். அர்ஜுனனைத் தவிர்த்து எனக்கு மட்டும் அரிய கலைகளை கற்பிக்க முனைந்தவர். நான் கொல்லப்படலாகாது என அர்ஜுனனிடம் சொல்பெறுகையில் அர்ஜுனனை கொல்லமாட்டேன் என்னும் சொல்லை என்னிடமிருந்து பெறாதவர்.

புரவி சீராக ஓட தன் உடல் மெல்லிய வியர்வை கொண்டு குளிர்ந்துவருவதை உணர்ந்தான். நான் அஞ்சுவது இவரைத்தானா? நான் அவ்வுடலிலிருந்து இவ்வுடலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். அவ்வுள்ளத்தின் ஒரு துளியையே என் அகமென வளர்த்து வைத்திருக்கிறேன். எனில் இவரும் என்னுள் வாழ்கிறார். ஒரு தருணத்தில் எழுவார், எளிய வஞ்சங்களால் ஆட்டுவிக்கப்படுவார். இவரில் இருக்கும் ஒரு துளி என்னில் அழியாமல் எஞ்சும். அறிவதனைத்தும் அறிந்த பின்னரும் இவ்வுலகை கவ்விக்கொண்டிருக்கும் ஒன்று. அரிய ஆசிரியர்களின் அடிசூடி அமர்ந்து மெய்யறிந்த பின்னரும் இவ்வுலக வஞ்சங்களிலேயே என்றென்றுமென சிக்கிக்கொண்டது. ஒருபோதும் இங்குள பின்னல்களிலிருந்து விடுபட்டு விண்ணிலெழ இயலாதவராக அவரை ஆக்குவது. அவ்வண்ணம் ஒருவன் என்னுள் வாழ்கிறான் எனில் நான் கொண்ட கல்வியும் ஆற்றிய தவமும் எதன் பொருட்டு?

இவ்வெண்ணங்கள் இத்தருணத்தில் என்னை மேலும் சோர்வுறச் செய்கின்றன. உள்ளம் சோர்வுற விரும்பும்போது அதற்குரிய எண்ணங்களை உருவாக்கிக்கொள்கிறது. இனி வெறுமைக்கும் அங்கிருந்து கழிவிரக்கத்திற்கும் அங்கிருந்து ஆழ்ந்த செயலின்மைக்கும்தான் இது செல்லும். எதிரியின் முன் தலை தாழ்த்தி கொடுக்கும். இக்கழிவிரக்கத்தை விரட்ட நான் செய்ய வேண்டுவது ஒன்றே. என்னை தருக்கி நிமிரச்செய்ய வேண்டும். வெறிகொண்டு எதிரியை வெறுக்க வேண்டும். அதைத்தான் தந்தையும் செய்துகொண்டிருக்கிறாரா? அல்ல, அவரில் எழுந்தது வெறி அல்ல. அது ஒரு வகை களிப்பு. மிக மென்மையானது, எவருமறியாதது என்பதனாலேயே உண்மையானது. வெறியும் சினமும் எந்நிலையிலும் சற்றேனும் நடிப்பு கொண்டவை. ஏனென்றால் அவை பிறருக்கானவை. பிறர் காணவியலா இடத்தில் முழுமையாக அவை வெளிப்படுவதே இல்லை. இக்களிப்பு தனித்திருக்கையில் பேருருக் கொள்வது. தன் தெய்வம் மட்டுமே அறிவது.

ele1அவன் துரியோதனனின் பாடி வீட்டை அடைந்ததை உணர்ந்தான். அங்கு துரியோதனன் துயின்றிருக்க மாட்டான் என்று எண்ணியிருந்தாலும் துச்சாதனனும் சகுனியும் கர்ணனும் அருகிருக்க குடில் முற்றத்தில் துரியோதனன் அமர்ந்திருக்கக் கண்டு திகைத்து கடிவாளத்தை பிடித்திழுத்தான். தொலைவிலேயே அவனை திரும்பிப் பார்த்துவிட்ட சகுனி புன்னகையுடன் கைசுட்டி ஏதோ சொன்னார். துரியோதனன் அவனை நோக்கி கைகாட்டி அருகே அழைத்தான். புரவி தயங்கி காலடி வைப்பதை உணர்ந்தான். எக்கணமும் அது திரும்பி விசைகொண்டு ஓடத்தொடங்கிவிடும் என்று தோன்றியது. அதை குதிமுள்ளால் குத்தியும் கழுத்தில் கைகளால் தட்டியும் அவன் முன்செல்ல ஊக்கினான். புரவி சென்று நின்றதும் இறங்கி நடந்து காவலனின் வணக்கத்தை ஏற்று துரியோதனன் அருகே சென்று சகுனிக்கும் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் தலை வணங்கிவிட்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்தான்.

சகுனி “இப்போர் எப்படி தொடரவேண்டும் என்பதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், பாஞ்சாலரே. உங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தோம்” என்றார். துரியோதனன் உரத்த குரலில் “இன்றைய பகல்போரை தவிர்த்துவிடுவோம் என்று அங்கர் எண்ணுகிறார். படைகள் துயின்றுகொண்டிருக்கின்றன, அவர்களை எழுப்பி போருக்கு செலுத்த இயலாதென்கிறார்” என்றான். “ஆம், நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். அது தந்தையின் ஆணையும்கூட” என்றான். ஆனால் துரியோதனனின் சொற்களிலேயே அவன் அந்த எண்ணம் கொண்டிருக்கவில்லை என உணர்ந்து உள்ளம் சலித்தான். “அவரிடம் நான் கூறுகிறேன். இப்போர் தொடர்ந்தாகவேண்டும். ஐயம் தேவையில்லை, இப்போர் இப்போதே தொடர்ந்தாக வேண்டும்” என்று துரியோதனன் சொன்னான். “அரசே” என்று தயக்கத்துடன் அஸ்வத்தாமன் கூற “அங்கு அவர்களின் படையில் நிஷாதரும் கிராதரும் முழுமையாக வீழ்ந்துவிட்டனர். நேற்று இரவு அங்கர் செலுத்திய நச்சுஅம்புகள் அவர்கள் அனைவரையும் மயங்கி விழவைத்திருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று உச்சிப்பொழுதுக்குள் எழுந்துவிடுவார்கள். மீண்டும் படைக்கலம் எடுத்து அவர்கள் போருக்கெழுவதற்கு முன்னர் நாம் அவர்களை முற்றழித்துவிடவேண்டும். ஆம், இன்று உச்சிப்பொழுதுக்குள் போர் முடிந்துவிடவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான்.

அஸ்வத்தாமன் அவன் விழிகளை பார்த்தான். அதிலிருந்த உறுதியும் நம்பிக்கையும் அவன் உள்ளத்தில் ஒரு நடுக்கை உருவாக்கின. திரும்பி அவன் கர்ணனை பார்த்தான். கர்ணன் “அவர் கூறுவது உண்மை. என் அம்புகளின் மயக்கு இன்னும் சில நாழிகைக்கே நீடிக்கும்” என்றான். “ஆனால்” என்று அஸ்வத்தாமன் சொல்லெடுக்க துரியோதனன் எழுந்து கைநீட்டி “எல்லாச் சொற்களுக்கும் ஆனால் என்பதை உடன் சேர்த்துக்கொள்ளலாம். ஆம், நமக்கு பல தடைகள் உள்ளன. நமது படைகளை எழவைக்க இயலாது. ஆனால் அவர்கள் எழுந்தாகவேண்டும், போர்புரிந்தாகவேண்டும். அவர்களிடம் சொல்வோம் நாம் வெற்றிகொள்ளப் போகிறோம் என்று” என்றான். அஸ்வத்தாமன் என்ன சொல்வதென்று அறியாமல் அவன் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அது களிப்பில் வெறிப்பு கொண்டிருந்தது. விழிகள் எதையும் நோக்காதவைபோல துறித்து நின்றன.

அருகே நின்றிருந்த துச்சாதனனை விழிதூக்கி நோக்கி அடையாளம் காணாமல் விழிவிலக்கி உடனே திடுக்கிட்டு மீண்டும் நோக்கினான். அது துச்சாதனனேதான். ஆனால் முற்றிலும் பிறிதொருவனாகத் தெரிந்தான். என்ன ஆயிற்று அவனுக்கு? முகத்தில் புண்ணோ நெருப்போ பட்டு தோற்றமே மாறிவிட்டதா? ஆனால் முகம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அவன் ஆழ்ந்து துயில்பவன் போலிருந்தான். அஸ்வத்தாமன் விழிகளை விலக்கிக்கொண்டான். அவன் முகம் கண்ணுக்குள் நின்றது. அவன் உள்ளம் திடுக்கிட்டது. இன்று துருமசேனன் களம்பட்டான். ஆம், மைந்தனை இழந்தவன். ஆனால் அந்த முகத்தில் துயரே இல்லை. முனிவர்களின் முகம். முலையூட்டும் அன்னையரின் முகம். அவன் மீண்டும் துச்சாதனனை நோக்கினான். மிகையாக அகிபீனா கொண்டுவிட்டானா? ஆனால் அது களிமயக்கு அல்ல. தெளிந்தவன் போலிருந்தான். தன்னுள் இருந்த பெருஞ்சுமை ஒன்றை அகற்றியவன்போல. நஞ்சை முழுக்க உமிழ்ந்துவிட்டவன்போல. அந்த மைந்தனிடம் அவன் அணுக்கம் காட்டியதை அஸ்வத்தாமன் கண்டதே இல்லை. அணுக்கம் காட்டக்கூட முடியாத அளவுக்கு அகம்குழைந்திருந்த உறவுபோலும் அது. எனில் அவன் இழந்ததுதான் என்ன?

“சற்று முன் நான் துயின்றுகொண்டிருந்தேன். அனைத்தையும் இழந்துவிட்டேன் என்று துயிலுக்குள் நான் ஓலமிட்டேன்” என்று துரியோதனன் சொன்னான். “யாரோ என்னைத் துரத்த வெறிகொண்டு தப்பியோடி கரிய சுவரொன்றில் முட்டி மல்லாந்து விழுந்தேன். அச்சுவர் பேருருக்கொண்டு எழுந்து என் முன்னால் நின்றது. அது கன்னங்கரிய கலிதேவனின் உருவம். நீ இன்று வெல்வாய் என் மைந்தா என்றது. இன்னும் ஒருபகல் உன் வெற்றிக்கு என்று எந்தை சொன்னார். அக்குரல் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஐயம் தேவையில்லை, இன்று உச்சிப்பொழுதுக்குள் கௌரவப் படை முழு வெற்றியை அடையும். இன்று களத்தில் பாண்டவர் ஐவரையும் கொன்று வீழ்த்துவோம்.” இரு கைகளையும் ஓங்கித்தட்டி வெறியுடன் நகைத்து “இன்று களத்தில் நான் முடிசூடுவேன். அவ்விழிமகன்களின் குருதியில் ஐந்துமுறை நீராட்டிய மணிமுடியை. ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சூடிய முடியை… ஆம்! இது எந்தையின் ஆணை!” என்றான்.

இயல்பாகத் திரும்பி அஸ்வத்தாமன் சகுனியை பார்க்க சகுனி அவன் கண்களை சந்தித்தபின் வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். அஸ்வத்தாமன் முடிவெடுத்து உரத்த குரலில் “அரசே, உங்கள் கனவும் நம்பிக்கையும் நீங்கள் கையறு நிலையிலிருப்பதால் உருவாவதாக இருக்கலாம். தெய்வங்கள் அவ்வாறு மானுடருடன் ஆடுவதுண்டு” என்றான். கர்ணனும் சகுனியும் அவன் நேர் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார்கள். ஆனால் துரியோதனன் மேலும் உரக்க நகைத்து கோணலாக இழுபட்ட உதடுகளுடன் “இதை நீங்கள் சொல்வீர்கள் என எனக்குத் தெரியும். என் கனவு எழுந்தபோதே நான் உணர்ந்தேன், என்னைச் சுற்றியுள்ள அனைவரும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்று. அனைத்தும் முடிந்துவிட்டதென்ற எதிர்நம்பிக்கையை பிற அனைவரும் அடைந்துவிட்டார்கள் என்று. இவ்வெற்றி எனது நம்பிக்கையால், எனது தளரா ஊக்கத்தால், என் தெய்வத்தின் அருளால் மட்டுமே அடையப்படுவது. இன்று வெற்றியை காண்பீர்கள். ஐயம் வேண்டாம்” என்றான்.

“உத்தர பாஞ்சாலரே, இன்று முழு வெற்றி நிகழும். இச்சோர்வும் பின்னடைவும் உளத்தளர்வும் நம்பிக்கையிழப்பும் அனைத்தும் இன்றைய வெற்றியை நோக்கி நாம் செல்வதற்காகவே. தெய்வங்கள் நமது இறுதி எல்லையை காட்டுகின்றன. இதிலிருந்து எழுவாயெனில் வெற்றி உனக்கல்லவா என்று என் தெய்வம் என்னிடம் சொல்கிறது. எழுந்து காட்டுகிறேன். இன்று என் தெய்வத்தின் முன் நின்று காட்டுகிறேன். இன்று போர் நிகழ்ந்தாகவேண்டும். இப்பொழுதே என் படைகள் எழுந்தாகவேண்டும்” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமன் பெருமூச்சுடன் தளர்ந்து தலையசைத்து “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நமது படைகளை இப்பொழுது எழுப்ப முடியாது என்றாவது புரிந்துகொள்ளுங்கள். இறந்தவர்களும் துயில்பவர்களும் வேறுபாடின்றி நிரம்பிக் கிடக்கிறார்கள்” என்றான்.

துரியோதனன் “அவ்வண்ணமே மறுபக்கமும் கிடக்கிறார்கள். நாம் நம்மவரை எழுப்பிவிட்டோமென்றால் விழுந்துகிடப்பவர்கள் மேல் சென்று வெற்றியை அடைவோம்” என்றான். “அந்த ஒரு சிறு வாய்ப்பை நானும் காண்கிறேன். அவர்களால் தங்கள் படையை எழுப்ப முடியவில்லை. நாம் நமது படையை எழுப்பிவிட்டோமெனில் அதுவே வெற்றிக்கான வழியாக அமையக்கூடும்” என்றான். அஸ்வத்தாமன் திகைப்புடன் திரும்பி சகுனியை பார்த்தான். சகுனியின் கண்களில் துரியோதனனின் கண்களில் தெரிந்த அதே வெறி மெல்ல தொடங்கிவிட்டிருப்பதை கண்டான். ஒருவரிலிருந்து ஒருவர் பற்ற வைத்துக்கொள்கிறார்கள் என்று தோன்றியது. சலிப்புடன் “எப்படி எழுப்புவோம்? நமது படையை இத்தருணத்தில் எழுப்ப நம்மால் இயலாது. முற்புலரி என்பது நித்ரா தேவியின் களம். மரங்களையும் மலைப்பாறைகளையும்கூட துயில வைக்கும் ஆற்றலை இப்பொழுதில் நித்ராதேவி பெறுகிறாள்” என்றான்.

“இன்னும் சற்று நேரத்தில் புலரும். கதிரொளி படுகையில் மட்டுமே நம் படைவீரர்கள் எழுவார்கள். அதற்குப் பின் அவர்களைத் தொகுத்தொரு அணிவகுப்பதற்கே இரண்டு நாழிகை ஆகிவிடும்” என்றான் கர்ணன். “அணிவகுக்க வேண்டியதில்லை. அவர்கள் எழுந்து அந்நிலையிலேயே போர் தொடங்கட்டும். அவர்கள் எழுந்து அவர்கள் விழுகையில் என்ன அணி இருந்ததோ அந்த அணியே இருக்கட்டும்” என்றான் துரியோதனன். “நேற்று அவர்கள் விழுகையில் நம்மிடம் எச்சூழ்கையும் இல்லை. அரக்கனால் மத்தென கடையப்பட்டு வெறும் குழுக்களாகவும் ஒற்றை வீரர்களாகவும் சிதறிப்பரந்து இக்களத்தில் நின்றோம். இன்று வரும்போது நிலம் நிறைத்துக்கிடக்கும் உடல்களைப் பார்த்தபடி வந்தேன். புயலுக்குப்பின் சருகுகள்போல கிடக்கிறார்கள். எந்த ஒழுங்கும் இல்லை” என்றான் அஸ்வத்தாமன்.

துரியோதனன் “இன்று ஒழுங்கை என் தெய்வம் அமைக்கட்டும். இப்பதினான்கு நாளும் நாம் படைசூழ்கை அமைத்தோம். இன்று அதை தெய்வத்திற்கே விட்டுவிடுவோம். எழுந்து போர்புரியுங்கள் என்ற ஆணையை மட்டுமே அனுப்புவோம். இவர்கள் அனைவர் உள்ளத்திற்குள்ளும் புகுந்து அவர்களை ஒருங்கிணைக்கவைக்கும் என் தெய்வத்தை இன்று காண்போம். இன்றைய போர் முழுமையாகவே அவருக்கு விட்டுவிடப்படட்டும்” என்றான். கைகளை விரித்து பெருங்குரலில் “இன்று கலி தெய்வம் வென்றாகவேண்டும். பெருயுகம் ஒன்று எழவிருக்கிறது. அது என் தேவனின் யுகம்” என்றான். துரியோதனனின் முகமும் உடலும் முற்றாக மாறிவிட்டிருப்பதை அஸ்வத்தாமன் கண்டான். “அங்கரே” என்றான்.

கர்ணன் “அவர் கூறுவது ஒரு வாய்ப்பு என்றே எனக்கும் படுகிறது. இல்லையேல் அத்தனை ஆழ்ந்த நம்பிக்கை எழுந்திருக்காது அவருக்கு” என்றான். “எப்படி எழுப்புவோம் அவர்களை?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். கர்ணன் “அது எனக்குத் தெரியவில்லை. அவர்களில் வாழும் தெய்வம் அவர்களை எழுப்பட்டும். அரசரின் தெய்வம் களத்திலெழட்டும்” என்றான். சகுனி “அவர்களை எழுப்புவதற்கு ஒரு வழி உண்டென்று எனக்குத் தோன்றுகிறது” என்றார். அஸ்வத்தாமன் வெறுமனே நோக்க “ஆம், தெய்வம் வழிகாட்டும் என்று எனக்குத் தெரியும். சொல்க!” என்று துரியோதனன் கூவினான். “இன்னும் சற்று நேரத்தில் புலரிக்காற்று வீசத்தொடங்கும்” என்று சகுனி சொன்னார். கர்ணன் உடனே அதை உணர்ந்துகொண்டு எழுந்து “ஆம், புலரிக்காற்று நம் படைகளை நோக்கியே வீசும். அது விசை மிக்கது. எப்போதும் அந்தி சரிவதற்கு முன்பும் கதிரெழுவதற்கு முன்பும் மண்ணை தெய்வமெழுவதற்காக தூய்மைப்படுத்த அக்காற்று எழுகிறதென்று சொல் உண்டு” என்றான்.

சகுனி “நமது படைகளின் தெற்கு எல்லையில் நாம் சென்று நிற்போம். அங்கிருந்து முரசொலியை எழுப்பினால் காற்று அதை நம் படைகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசென்று சேர்க்கும். எழுக எழுக என்று அதுவே ஒவ்வொருவரின் செவிகளிலும் முழக்கும்” என்றார். கர்ணன் “ஆனால் இப்போதிருக்கும் துயிலில் அவர்கள் அதை கேட்பதற்கு வாய்ப்பில்லை. துயிலரசி செவிகளில் விழும் அனைத்தையும் பிறிதொன்றென விளக்கி அவர்கள் அகத்திற்கு காட்டும் ஆற்றல் கொண்டவள்” என்றான். “துயிலரசி உள்ளத்தை மட்டுமே ஆளமுடியும். உடல்களை உலுக்கி எழுப்புவோம்” என்றபடி சகுனி எழுந்தார். காலின் வலி முகம் சுளிக்க வைக்க துரியோதனனின் தோளைப் பற்றியபடி நின்று “தென்கிழக்குக் காவல்மாடங்களின் அருகே மேலும் நான்கு காவல்மாடங்களை இழுத்து வைப்போம். காவல்மாடத்திலிருந்து எரியும் மிளகுத்தூளை அக்காற்றில் கலந்து வீசுவோம். ஒவ்வொருவரின் மூக்குக்குள்ளும் அது சென்று அவர்களை தும்ம வைக்கும். உடலை உலுக்கி எழுப்பும். அப்போது நமது போர்முரசு ஒலிக்கட்டும்” என்றார்.

“விளையாடுகிறீர்களா? அவ்வாறு எழுப்பப்படும் வீரர்கள் எவ்வாறு போர்புரிவார்கள்? அவர்கள் கண்களிலும் அந்த எரிபொடியே நிறைந்திருக்கும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம், சற்று நேரம் அவர்களின் விழிகளிலும் எரிச்சல் இருக்கும். அதுவும் நன்று. யானைகளும் புரவிகளும்கூட வெறி கொள்ளும். நமக்குத் தேவை முதல் எழுச்சியின் விசைதான். முழுப் படையையும் எழுப்பவேண்டியதில்லை. முதல் படை எழுந்துவிட்டதென்றால் அதை உடலால் உணர்ந்து எஞ்சிய படையும் எழுந்துவிடும்” என்றார் சகுனி. “கீழ்மை” என்றான் அஸ்வத்தாமன். “அவர்கள் விழிப்பதற்குள் நமது படை கடந்து உள்ளே சென்றிருக்கும். நமது சகடங்களால் அறைபட்டு பெரும்பாலான கிராதர்கள் இறந்திருப்பார்கள்” என்று சகுனி சொன்னார். “இதைத்தான் நானும் எண்ணினேன். இது என் ஆணை!” என்று துரியோதனன் கூவினான்.

“அரசே, தந்தையின் ஆணை பிறிதொன்று. இன்று படைகள் போருக்கெழ வேண்டாம் என்று அவர் ஆணையிட்டார். அவ்வாணையுடன் நான் இங்கு வந்தேன்” என்றான் அஸ்வத்தாமன். “அரசன் என்ற வகையில் அவ்வாணையை நான் மீறுகிறேன்” என்றான் துரியோதனன். “அவர் நமது படைத்தலைவர்” என்றான் அஸ்வத்தாமன். “எனில் அவர் படைத்தலைவர் அல்ல என்று அறிவிக்கிறேன்” என்று துரியோதனன் சொன்னான். அவன் விழிகள் விரிந்து பித்துகொண்டு அலைந்தன. துச்சாதனனிடம் திரும்பி “செல்க! சென்று படைமுகப்புக்கு வரும்படி ஆணையிடுக! அவர் மறுத்தாரெனில் அவரை படைத்தலைவர் பொறுப்பிலிருந்து நான் நீக்கியிருக்கிறேன் என்று கூறுக! நமது படைகள் எழட்டும். ஒருகணமும் பிந்த வேண்டியதில்லை” என்றான்.