கார்கடல் - 75

ele1அம்முறை துரோணரை நேருக்குநேர் எதிர்கொண்ட தருணத்திலேயே துருபதர் உணர்ந்தார், அது தன் இறுதிப் போர் என. ஒவ்வொரு முறை துரோணரை களத்தில் எதிர்க்கையிலும் வஞ்சமும் அதற்கு அப்பாற்பட்ட பேருணர்வொன்றும் எழுந்து அவர் உடலை அதிரச்செய்யும். சொற்கள் கலைந்தெழுந்து உள்ளம் பெருங்கொந்தளிப்பாக ஆகி ஒவ்வொரு அம்பிலும் ஒவ்வொரு சொல்லும் குடியேறி அகன்று அகன்று செல்ல இறுதியில் முற்றடங்கி வெறுமையும் தனிமையும் கொண்டு களத்தில் நின்றிருப்பார். போரிலிருந்து துரோணரே எப்போதும் பின்னடைந்தார். மிக இயல்பாக அப்பால் எதையோ கண்டு அதை எதிர்க்கும்பொருட்டு எழுபவர்போல.

துரோணரின் தேர் அவரை ஒதுக்கித் திரும்பும் கணத்தில் துருபதர் ஓர் உளஅசைவை உணர்வார். “நில்லுங்கள், துரோணரே! இக்கதையை முடித்துவிட்டுச் செல்லுங்கள்!” என்று பின்னால் நின்று கூவ எண்ணுவார். மேலும் மேலும் அம்புகளுடன் துரோணரை பின்தொடர்ந்து சென்று அறைய வேண்டும் என்று உளம் பொங்கும். இயல்பாக கை சென்று ஆவநாழியை தொடுகையில் அங்கு அம்பென எதுவும் எஞ்சவில்லை என்றுணர்ந்து திடுக்கிடுவார். தன் ஆவநாழியின் அம்புகளை முற்றறிந்த ஒருவரிடம் ஒவ்வொரு முறையும் சென்று தலைகொடுத்து போரிடுகிறோம். அவருடைய இறுதி அம்பும் தீர்ந்துவிட்டதென்று உணர்ந்தபின் துரோணர் ஓர் அம்பையும் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அவருக்கு உயிர்க்கொடை அளித்து முற்றாக தோற்கடித்து திருப்பி அனுப்பினார்.

“என் முகத்தில் காறி உமிழ்கிறீர்கள்! என் நெஞ்சில் எட்டி உதைக்கிறீர்கள்! நீங்கள் எனக்கிழைத்த கீழ்மைகளின் உச்சம் இக்களத்தில் நீங்கள் எனக்களிக்கும் உயிர்க்கொடையே. ஆசிரியரே, என்னை கொல்க! உங்கள் அம்பொன்றால் என் நெஞ்சை பிளந்திடுக! இப்புவியில் நான் கொண்ட வஞ்சம் என் வாழ்க்கையை முற்றிலும் நிறைத்துவிட்டது. உங்கள் அம்பு வந்து என் நெஞ்சைப் பிளந்து உட்செல்லுமெனில் அங்கு கொதிக்கும் அனலை அறிந்து உருகி நீராகும் என்று அறிக!” அவருடைய சொற்களின் பொருளின்மை அவரை கண்ணீர் மல்கச் செய்யும். ஒவ்வொரு முறை துரோணரிடமிருந்து திரும்புகையிலும் உடல் சோர்ந்து, தலை தளர்ந்து, விழிநீர் வழிய தேர்த்தட்டில் அமர்ந்திருப்பார்.

மறுமுறை துரோணரை சந்திக்கும் கணத்தைப் பற்றிய மெல்லிய கற்பனை எழுகையில் உள்ளிருந்து உயிர்த்துளி ஒன்று தோன்றும். அது வளர்ந்து மீண்டும் வஞ்சம் என்றாகி அவர் உடலை காற்று திரைச்சீலையை என ஊதி எழுப்பி நிறுத்தும். மறுமுறை இன்னும் கூரம்புகளுடன் இன்னும் பழிச்சொற்களுடன் அவர் முன் நிற்பேன். இன்னொரு முறை வெல்வேன். தெய்வங்கள் அறியட்டும், இவ்வாழ்நாளே இதன்பொருட்டே என. என் உளம் எரிவதை அறிந்து அவை கனியும் என்றால் அவரிடமிருக்கும் அம்புகளைவிட ஓர் அம்பை எனக்கு மிகுதியாக அளிக்கட்டும். ஓர் அம்பு போதும், அவர் நெஞ்சை சென்று தொடும் ஒற்றை ஓர் அம்பே என் வாழ்நாளை முழுமை செய்யும். தெய்வங்களே, ஒற்றை அம்பு! இதுநாள் வரை நான் அளித்த பெருங்கொடைகள், வேள்விகள், தன்னந்தனிமையில் இருளில் வீழ்த்திய விழிநீர், இறைத்து இறைத்து என் வழியை நிரப்பிய பல்லாயிரம் கோடி சொற்கள் அனைத்திற்கும் ஈடென நான் கேட்பது ஒற்றை அம்பை மட்டுமே.

அன்று அவர் அம்பறாத்தூணியில் அம்புகள் நிறைந்திருந்தன. ஏழு முறை கௌரவப் படைகளுக்குள் சென்று போரிட்டு புண்களுடன் மீண்டு சற்றே ஓய்வெடுத்து ஆவநாழியை நிறைத்தபின் அவர் களத்திற்கு வந்தார். அலம்புஷரின் படைகளையும் அதன்பின் கேகயப் படைகளையும் எதிர்கொண்டு போரிட்டு பின்னடையச் செய்து திரும்பியபோது நேர்எதிரில் துரோணர் நின்றிருப்பதை கண்டார். எப்போதும் எத்தொலைவிலும் துரோணரின் அசைவை அவரால் முதற்கணத்திலேயே உணர முடியும். பெருந்திரளில் துரோணரன்றி பிற எவரையும் காணாதொழியும் நோக்கும் அவருக்குண்டு. அன்று துரோணர் இருளிலும் தனித்துத் தெரிந்தார். அவர் விழிகளின் சிறு மின்னை நோக்க இயன்றது. நாணொலி எழுப்பியபடி துருபதர் துரோணரை நோக்கி சென்றார்.

துரோணர் சலிப்புற்றவர்போல் தெரிந்தார். ஒவ்வொரு முறை துருபதரை நேரில் பார்க்கையிலும் நெடுநாள் பிரிவுக்குப் பின் அணுக்கமான ஒருவரை பார்க்கும் புன்னகை அவரிலெழ அதை அக்கணமே ஏளனமென மாற்றிக்கொள்வார். அவரை நகையாடும் சொற்கள் சிலவற்றை உதிர்ப்பார். எப்போதும் அவரை நோக்கி எழுப்பும் முதல் அம்பு துருபதரின் இடத்தோளை ஒரே புள்ளியில் வந்தறைந்து செல்லும். அவர்கள் குருகுலத்தில் சேர்ந்து பயிலும் காலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கையில் துரோணர் தன் வலக்கையால் அவர் இடத்தோளில் அறைவதுபோல் கைகாட்டுவார். அது ஒருவகை முகமன். அந்த அறையை மெய்யாகவே தோளில் உணர்ந்து துருபதர் சிரிப்பார். முதல் அம்பு தன் இடத்தோளில் கவசத்தில் மணியோசை என ஒலித்து உதிர்கையில் துருபதர் உளம்குன்றுவார். அதை உணர்ந்து அனைத்துச் சொற்களையும் திரட்டி தன்னை வஞ்ச விசை கொண்டவராக மாற்றிக்கொள்வார்.

போரிடுந்தோறும் பெருகுவது அவர்களின் சினம். மெல்லமெல்ல வெம்மைகொண்டு சிவக்கும் இரும்பென்று ஆவார் துருபதர். அவர் எழுந்து தாக்கத் தாக்க துரோணரின் புன்னகை மறையத் தொடங்கும். எங்கோ ஒருகணத்தில் ஓர் அம்பில் துரோணரின் விழிகளில் சீற்றம் எழுந்து உடனே அணையும். அதுவே தன் வெற்றி என்று துருபதர் உளமெழுவார். மீண்டும் மீண்டும் அந்தப் புள்ளியைத் தாக்கி சினமெழச்செய்ய முயல்வார். பலமுறை எழுந்து அணைந்த துரோணரின் சினம் மெல்லமெல்ல அனலாகும். அவர் தன் உதடுகளை உள்மடித்துக் கடிக்கும்போது அவர் எரியத் தொடங்கிவிட்டதை துருபதர் உணர்வார். பிறகு எழும் அனைத்து அம்புகளிலும் துரோணரின் சீற்றம் இருக்கும். ஆனால் அம்புகள் அவரை மெய்யான விசையுடன் வந்து அறையுந்தோறும் முகம் தளரத்தொடங்கும். விழிகள் அமைதிகொள்ளத் தொடங்கும். சில தருணங்களில் புன்னகைகூட அவர் உதடுகளில் எழும்.

அந்தப் புன்னகை தன்னை சீண்டுவதற்கே என துருபதர் எண்ணுவார். சீற்றம்கொண்டு தாக்கி மீண்டும் அவ்விழிகளில் சினம் எழுப்புவதற்கு முயல்வார். ஆனால் அவருடைய அம்புகள் பெருகுந்தோறும் துரோணரின் புன்னகை விரிந்துகொண்டே செல்லும். அவர் வாய்விட்டு நகைப்பதுகூட சில தருணங்களில் தெரியும். அது அவரை கொந்தளித்து எழச்செய்யும். அம்புகளால் துரோணரை அறைந்தபடி தாக்கு வளையத்தைக் கடந்து அருகணைவார். அவருடைய அம்புகளை மிக எளிதாக ஒழிந்தும் முறித்தும் களத்தில் நின்றிருக்கும் துரோணர் மிக இயல்பாக ஒரு தருணத்தில் திரும்பி பிறிதொரு இலக்கை நோக்கி அம்புவிட்டபடி செல்வார். உள்ளமும் ஆவநாழியும் ஒழிந்து துருபதர் நின்றிருப்பார்.

அம்முறை துருபதரின் நாணொலியைக் கேட்டதும் துரோணர் அதை எதிர்பாராததுபோல் திரும்பி நோக்கி எரிச்சலும் சீற்றமும் கொண்ட முகத்துடன் கைவீசி “விலகிச்செல், வீணனே. நான் அவ்வரக்கனை தேடிச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார். “நாம் மீண்டும் சந்திக்கப்போவதில்லை, துரோணரே. இம்முறை நம்மில் ஒருவரே மீளவிருக்கிறோம்” என்றபடி துருபதர் தொடர்ந்த அம்புகளால் துரோணரின் தேரை தாக்கினார். இயல்பாக எழுந்து அம்பு தொடுத்து துருபதரின் அம்புகளை முறித்து தெறிக்க வைக்கும் துரோணர் “விலகு! விலகிச்செல்! உன்னுடன் விளையாடுவதற்கு எனக்குப் பொழுதில்லை. என்னை களத்தில் வீழ்த்திய அவ்வரக்கனைக் கொன்று குருதிகொண்டே நான் மீள்வேன். வழி தடுக்காதே. உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. விலகு!” என்று கூவினார்.

அவர் கொண்ட அந்தப் பதற்றம் துருபதரை உவகைகொள்ளச் செய்தது. “ஆசிரியரே, என் கையால் இறந்தால் உங்களுக்கும் விடுதலை. இப்புவியில் உங்களைக் கட்டிவைக்கும் ஒரு சரடை அறுத்துவிடுகிறீர்கள். பிறப்பறுத்து விண்ணெழுவீர்கள்” என்றபடி உரக்க நகைத்து துரோணரை வில்லால் அறைந்தார். அந்த அம்புகளில் ஒன்று சென்று துரோணரின் நெஞ்சை அறைய சீற்றத்துடன் திரும்பி “அறிவிலி! அறிவிலிகளுக்கே உரிய நாணமின்மை கொண்டவன் நீ” என்று கூவியபடி அவர் தன் அம்புகளால் துருபதரை அறைந்தார். துரோணரின் அம்புகளில் இருந்த சினம் மேலும் மேலுமென துருபதரை கொந்தளிக்கச் செய்தது. ஆம்! ஆம்! ஆம்! என அவர் உள்ளம் பெருகி எழுந்தது. துரோணர் துருபதரின் கவசங்களை உடைத்தார். பிறிதொரு பேரம்பை எடுத்து “கடந்து செல்! இது என் இறுதிச்சொல்!” என்றார். “இறுதிக்கணத்தைக் கண்ட பின்னரே இனி கடந்து செல்லப் போகிறேன்” என்றபடி அந்த அம்பை தன் அம்பால் முறித்தார் துருபதர். “உன் ஊழ் இதுவெனில் ஆகுக!” என்று சினத்துடன் சிரித்தபடி துரோணர் துருபதரை அம்புகளால் அறைந்தார்.

அந்த அம்புகள் வந்து தன்னைச் சூழ்ந்து தேர்த்தூண்களிலும் தேர்த்தட்டிலும் பதிந்து நின்று சிறகதிர ஒரு கணத்தில் துருபதர் உளம் மலைத்தார். அதன் பின் அவரால் அம்புகளை தடுக்க இயலவில்லை. அனைத்து திசைகளிலுமிருந்து வந்து அவர் தேர்த்தட்டை உடைத்து சிதறவைத்து எங்கும் நாணல் எனப் பெருகி நின்றன. கவசங்கள் சிதைந்தன. இருபுறத்திலிருந்தும் பாஞ்சாலப் படைத்தலைவர்கள் சிம்ஹனும், கிரதனும், சம்புவும், கௌணபனும் வில்லேந்தி அம்பு பெய்தபடி வந்து அவருக்கு துணை நின்றனர். துரோணரின் அம்புகள் சம்புவையும் சிம்ஹனையும் கொன்றுவீழ்த்தின. அப்பாலிருந்து சத்யஜித் பாய்ந்து வருவதை அவர் கண்டார். “நீ துணைவர வேண்டியதில்லை… செல்க!” என்று கூவினார். ஆனால் சத்யஜித் அம்புகளைத் தொடுத்தபடியே விரைந்து வந்தார். “செல்க! விலகிச்செல்க!” என்று துருபதர் கூவிக்கொண்டே இருந்தார்.

துரோணர் மேலும் மேலும் உருகி உருவழிந்து பிறிதொருவராக ஆகிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவருடைய அம்புபட்டு கிரதன் தேர்த்தட்டில் விழுந்தான். அரைக்கணம் அவனை நோக்கி அவர் திரும்புவதற்குள் இடப்பக்கம் கௌணபன் அலறி விழுந்தான். துருபதர் செயலற்று நின்றார். சத்யஜித் அவரை நோக்கி வந்துகொண்டிருக்க அவரை நோக்கி துரோணரின் வில் எழுவதை, அம்பு சென்று அவர் நெஞ்சை துளைத்து தேரிலிருந்து தூக்கி வீசுவதை துருபதர் கண்டார். “இளையோனே” என்று அலறியபடி அவர் தன் வில்லை எடுத்து உடல் பற்றிஎரிவதுபோன்ற வெறியுடன் துரோணரை அம்புகளால் தாக்கினார். துரோணர் அந்த அம்புகளை தன் அம்புகளால் தடுத்து அவரை மெல்லமெல்ல பின்னடையச் செய்தார். துருபதர் தன் உடலெங்கும் தைத்து நின்றிருந்த அம்புகளுடன் தேரில் நின்று தள்ளாடினார். அவர் கவசத்திற்குள் வெம்மையுடன் ஊறிய குருதி வழிந்து கால்களை அடைந்து தேர்த்தட்டில் பரவி குளிர்ந்தது. அவர் கால் மாற்றியபோது குறடுகளில் வழுக்கியது.

துரோணரின் விழிகள் சுருங்கி கூர்கொண்டு துருபதர்மேல் நிலைத்திருந்தன. சினம்கொண்டு எழுந்து உச்சத்தில் இடமும்காலமும் மறந்து பின்னர் மெல்ல இறங்கி அச்சம்கொண்டு தனிமையை உணர்ந்து செயலற்றுக்கொண்டிருந்த துருபதரின் உள்ளம் அவ்விழிகளை அருகில் கண்டு எதிர்பாராதபடி களிப்படைந்தது. அவ்விழிகளில் இருந்த சினமும் வெறியும் அவர் ஒருபோதும் அறிந்ததல்ல. ஆசிரியரே, இதோ உங்களை பிறிதொருவராக்கிவிட்டேன். இனி உங்களை வெல்வது எளிது. என் அம்புகள் சென்றடையும் இலக்குகள் தெளிகின்றன. இந்தக் களத்தில் நான் உங்களை கொல்வேன். மெய், நீங்கள் நிகரற்ற வில்லவர். ஆனால் நீங்களும் கொல்லப்படக்கூடியவரே. ஏனென்றால் இதோ சினம்கொள்கிறீர்கள். இதோ எனது அம்புகள் உங்கள் ஆழத்தில் நீங்கள் கரந்து வைத்த அனைத்தையும் தேடி வருகின்றன.

அந்த உளஎழுச்சி மீண்டும் அவர் கைகளில் விசையை ஏற்றியது. துருபதர் அம்புகளால் அறைந்து துரோணரின் தோளிலைகளை உடைத்து தெறிக்கவிட்டார். நெஞ்சக்கவசத்தை உடைத்தார். துரோணரின் ஒவ்வொரு அம்பையும் விண்ணிலேயே முறித்தார். துரோணரின் விழிகளில் அச்சம் மின்னிச் சென்றதைக் கண்டு இரு கைகளையும் விரித்து வெறிகொண்டு கூச்சலிட்டார். துரோணரின் கொடி உடைந்து மண்ணில் விழுந்தது. துரோணரின் புரவிகளில் ஒன்று அம்புபட்டு கனைத்து தலையை உதறியபடி நிலையழிய அவருடைய பாகன் தன் முதுகுக்கவசம் தெரிய குப்புற விழுந்து அதை இழுத்து தேரை நிலைமீட்க முயன்றான். அத்தருணத்தில் துருபதர் துரோணரின் ஆவக்காவலன் நெஞ்சில் அம்பால் அறைந்து அலறி பின்னால் விழச்செய்தார். திகைப்புடன் திரும்பிப்பார்த்த துரோணர் எடுத்த பேரம்பை அவர் கையிலேயே உடைத்து துண்டாக்கினார். துரோணர் அவர் தொடுத்த அடுத்த அம்பை ஒழியும் பொருட்டு தேர்த்தட்டில் முழங்கால் மடித்து அமர அவர் தன்முன் மண்டியிட்டு வணங்குவதுபோல் உணர்ந்து தன் அம்பால் அவர் தலைமுடி கட்டியிருந்த கொண்டையை வெட்டியெறிந்தார்.

துரோணர் பற்களைக் கடித்து உறுமியபடி அம்புகளை எடுத்து அவர் மேல் அறைய ஒவ்வொரு அம்பையாக விண்ணில் முறித்தபடி “இன்று குருதிகொள்வேன்! இன்று உங்கள் குருதிகொள்வேன்!” என்று துருபதர் கூவினார். துரோணரின் கைகள் நடுங்கின. அவர் அம்புகளை எடுத்து அறைந்துகொண்டே இருந்தார். அவருடைய அம்புகள் இலக்கிழப்பது பெருகிவந்தது. துருபதரின் அம்புகள் விசைகொண்டு இலக்கை சென்றடைந்தன. துரோணரின் நெஞ்சக் கவசத்தை உடைத்து மீண்டுமொரு அம்பால் துரோணரை அடிக்க நாணிழுத்தபோது துரோணரின் விழிகளை அருகிலெனக் கண்டார். அதில் இருந்த அந்நோக்குக்குரியவனை அவர் மிக நன்கு அறிந்திருந்தார். அவர் கைகள் ஒருகணம் தளர்ந்தன.

அவரிடம் துர்வாசர் சொன்னார் “பகைமை ஒரு நோன்பு. வஞ்சம் ஒரு தவம். அதனூடாக நாம் தெய்வங்களை விரைந்து அணுக இயலும். அசுரர்கள் அத்தவத்தினூடாகவே தெய்வத்தை அணுகி முழுமை பெற்றார்கள் என்று தொல்கதைகள் சொல்கின்றன. துருபதனே, வாழ்நாளெலாம் நீ உன் முதன்மைப் பகைவனையே நோற்றிருக்கிறாய். ஒருநாள் ஒருகணத்தில் நீ அவனென்றாவாய். அன்று விடுபடுவாய்.” குடிலின் தரையில் ஓங்கி அறைந்தபடி துருபதர் எழுந்தார். “இல்லை, இது என்னை சிறுமைப்படுத்தும் சொல். நான் வெறுக்கும் ஒருவனாக ஆவதல்ல எனது நோன்பு” என்று கூவியபடி கைகளை விரித்து அசைத்தார். “நான் கொன்று அழிப்பதற்கு வஞ்சம் உரைத்தவன். அவரில் ஒருதுளியும் எஞ்சலாகாதென்று எழுந்தவன்.”

துர்வாசர் புலித்தோல் இருக்கையில் மலரமர்வில் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் எப்போதுமிருக்கும் அந்த கசப்பு கலந்த புன்னகை. அது கசப்பு அல்ல என்று துருபதர் அறிந்திருந்தார். அது ஏளனம். அவருடைய முகத்தசைகளின் தொய்வால் அது கசப்பெனத் தோற்றம் கொண்டது. எக்கணமும் பெருஞ்சினமாக வெடித்தெழும் ஒவ்வாமையிலிருந்து எழுவது அது. விடுபட்ட பின்னரும் மானுடர் நடுவே வாழ்வதன் வெளிப்பாடு. “நீங்கள் என்னை சினமூட்டும் சொல் அது என்று அறிந்திருக்கிறீர்கள். என்னை சிறுமை செய்கிறீர்கள்” என்றார் துருபதர். “எவரையும் சினமூட்டி நான் அடையவேண்டியதொன்றில்லை. எங்கும் உண்மையெதுவோ அதைக் கூற கடமைப்பட்டவன் நான். இங்கிருந்து செல்வது வரை…” என்று துர்வாசர் கூறினார். “நீ முதல் நாள் முதல் கணம் அவரைப் பார்த்ததும் பெருங்காதல் கொண்டாய். அவருக்கு அடிபணிந்து ஏவல் புரிந்தாய். அவரே என உன்னை எண்ணிக்கொண்டாய். அவரைச் சென்றடைய முடியும் என்று நம்பியதனால் அவருக்கு நிழலென்றானாய். அந்த ஒருமையுணர்வால் அவரிடமிருந்து அனைத்தையுமே பெற்றுக்கொள்ள உன்னால் இயன்றது.”

“பின்னர் விடைகொண்டு வந்து முடிசூட்டிக்கொண்ட பின்னர் நீ ஒன்றை அறிந்தாய், நீ அவரல்ல என்று. தன் கலையின் பொருட்டு விழைவுகளை ஒடுக்கி தவமிருந்தவர் அவர். உன் குருதியின் தேவைகளை வென்று உன்னைக் கடக்க உன்னால் இயலவில்லை. ஆகவே எஞ்சிய நாளில் ஒவ்வொரு செயல் வழியாகவும் நீ அவரை துறந்தாய். உன்னிலிருந்து குருதியும் கண்ணீருமாக அவரை பிடுங்கி அகற்றினாய். அகற்ற அகற்ற எஞ்சுவதைக் கண்டு சீற்றம்கொண்டாய். இறுதியாக அவர் உன் முன் வந்து நின்றபோது அவரை சிறுமைப்படுத்தி துரத்தி உன்னை விடுவித்துக்கொண்டாய். அத்துடன் நீ முற்றிலும் உன்னில் எஞ்சி உன் உடல் கூறுவதை இயற்றி உன் மூதாதையர்போல் உழன்று உங்களுக்கு மட்டுமே உரிய விண்ணுலகை அடைவாய் என்று எண்ணினாய்.”

துருபதர் கால்தளர்ந்து மீண்டும் அமர்ந்தார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளில் தலையை ஏந்திக்கொண்டார். எழாக் குரலில் “அது அரசருக்கு உகந்த வழியே. அப்பாதையில் சென்று வென்ற பலர் உண்டு. ஆனால் அரசே, நீ ஒரு அடி முன்னெடுத்து வைத்துவிட்டாய். ஒரு சொல் கூடுதலாக உரைத்துவிட்டாய். அந்த ஒரு துளி ஒரு விதையென எழுந்து பெருகி உன்னை எதிர்த்து வந்தது. நீ அவர்களுக்கிழைத்த வஞ்சம் அவர் உன்னை மறக்கலாகதென்பதற்காக அல்லவா? உன்னை ஒருபொருட்டென எண்ணாது எங்கோ தன் விற்தவத்துடன் அவர் தனித்திருந்தார் என்று உணர்ந்தமையால் அல்லவா? ஒரு குவளை பால் மட்டும்தானா நான் உனக்கு என்று நீ அவரிடம் கேட்டாய்” என்றார் துர்வாசர்.

துருபதர் உரத்த குரலில் “இல்லை. இவ்வண்ணம் எதையும் விளக்கிக்கொள்ள இயலும். இதுவல்ல உண்மை. உண்மையை நீங்கள் பொய்யினூடாக சமைத்துக்கொள்ள எண்ணுகிறீர்கள்” என்றார். துர்வாசரின் விழிகள் அவர் மீது அசையாது பதிந்திருந்தன. துருபதர் மட்டும் கேட்கும் குரலில் அவர் சொன்னார் “எங்கோ அவர் உன்னை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை நீ தனிமையில் உணர்ந்தாய். உன் படையெடுப்புகளில், அரசுசூழ்தல்களில், காமங்களில், சினங்களில் நாளெல்லாம் கழித்த பின்னர் உனக்கு மட்டுமென எஞ்சும் சிறு பொழுதில் முதலில் உன் எண்ணத்திலெழுவது அவர்தான். உன்னை எந்நிலையிலும் அவர் மறக்க இயலாதென்ற நிறைவை நீ ஒருதுளியேனும் உணர்ந்ததில்லையா? உன் வஞ்சம் பிறிதெங்கிருந்து எழுந்தது?”

மெல்ல நகைத்து துர்வாசர் சொன்னார் “அவர் பேருருக்கொண்டு எழுந்து உன்னை வென்று இழுத்து தன் காலடியில் இட்டார். நீ அளித்ததையே உனக்கு திருப்பி அளித்தார். எஞ்சிய வாழ்நாளெல்லாம் நீ தன்னை நினைக்கும்படி செய்தார். துருபதனே, நீ அர்ஜுனனால் அழைத்துச் செல்லப்பட்டு அவர் காலடியில் வீசப்பட்டாய். கையூன்றி நிமிர்ந்து அவர் விழிகளை பார்த்தபோது நீ அங்கு ஒருவனை கண்டாய். யார் அவன்? அவனுக்கெதிராகத்தான் நீ வஞ்சம் கொண்டாய். மைந்தரை ஈன்று வாழ்நாள் நோன்பொன்றை மேற்கொண்டாய். உன் படைக்கலப்புரையில் அத்தனை அம்புகளும் கூர்கொள்வது அவன் ஒருவனுக்காக அல்லவா?”

துரோணரின் அம்புகள் வந்துவந்து அறைந்து துருபதரை தேர்த்தட்டில் வீழ்த்தின. தொடையிலும் தோளிலும் இடையிலும் அம்புகள் தைக்க அவர் தேர்த்தட்டில் கால்மடித்து விழுந்து கையூன்றி எழமுயன்று குருதியில் வழுக்கி மீண்டும் எழுந்து அக்கண்களில் தெரிந்தவனை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். அவனா? அவன்தானா? இறுதிப் பேரம்பை எடுத்து நாணேற்றி இழுத்து அவரை நோக்கிய துரோணர் துருபதரின் விழிகளில் பிறிதொருவனை கண்டுகொண்டார். நீயா என்று அவர் உதடுகள் பிரிந்து சொல்லெழுவதை துருபதர் கண்டார். துரோணர் தன் முழு விசையாலும் உடலை இழுத்து கையின் ஆற்றலென்றாக்கி நாணிழுத்து அம்பை செலுத்தினார். சீறிவரும் அந்த அம்பின் பிறை வளைவின் ஒளியை துருபதர் கண்டார். அது தன் தலையை அறுத்து வீசுவதை உணர்ந்தார். தன் தலை தேர்த்தட்டில் வந்து அறைவதன் ஓசையை அவர் கேட்டார். தன் உடல் சற்று அசைந்து மறுபக்கமாக விழுந்ததை, இரு கைகளும் விதிர்த்து வில்லையும் அம்பையும் கைவிடுவதை பார்த்தார். ஒருகணம் தன்னுடலையும் தலையையும் மாறி மாறி நோக்கிய பின் உடல் தளர்ந்து வில் தாழ்த்தி துரோணர் தேர்த்தட்டில் அமர்வதையும் நோக்கினார்.

அத்தருணத்தில் மறுபக்கம் விராடர் நாணோசை எழுப்பியபடி வந்து துரோணரை எதிர்கொண்டார். “கீழ்மகனே, என்னோடு போரிடு… நில்… என்னுடன் போரிடு” என்று விராடர் கூவினார். “என்னை கொன்றேன் என எண்ணாதே… இறந்தாலும் அழியாதது என் வஞ்சம்… நான் மீண்டும் வருவேன்” என நகைத்தார். துரோணர் திகைப்புடன் திரும்பி வெட்டுண்டு கிடந்த துருபதரின் தலையில் திறந்திருந்த விழிகளை நோக்கினார். அவ்விழிகளை சந்தித்து துருபதர் புன்னகைத்தார். விராடர் “எடு உன் வில்லை… நான் உன் குருதிக்கென வந்தவன்… இதோ இங்கு கிடக்கும் அத்தனை உடல்களில் இருந்தும் நான் எழுவேன்… எடு வில்லை!” என்று கூவியபடி அம்புகளை தொடுத்தார். அவருடைய கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. மீதூறிப்போன மதுமயக்கும் துயில்நீப்பும் கலந்து அவரை பித்தன் என்றே ஆக்கியிருந்தன.

துரோணர் தன் ஆவநாழியிலிருந்து பிறையம்பு ஒன்றை எடுத்து குறிபார்க்காமலேயே தொடுத்து விராடரின் தலையை கொய்தெறிந்தார். தலை நிலத்தில் விழ விராடரின் உடல் நின்று அசைந்து பக்கவாட்டில் சரிந்தது. அதை திரும்பிப்பார்க்காமல் “செல்க! செல்க, அறிவிலி… விரைந்துசெல்க!” என்று துரோணர் பாகனை ஏவினார். பின்னர் வில்தாழ்த்தி கைகளில் தலையை வைத்து விழிமூடி அமர்ந்தார்.