கார்கடல் - 7

eleகுருக்ஷேத்ரத்திற்குத் தென்கிழக்கே அமைந்திருந்த சிறிய எல்லைக்காவல் கோட்டையாகிய சிபிரம் அங்கநாட்டுப் படைகளின் தலைமையிடமாக மாறியிருந்தது. மண்குழைத்து கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டில் படைகள் பாடிவீடுகளை அமைத்து பதினேழு நாட்களாக தங்கியிருந்தன. அவ்விரவில் படையினர் எவருமே துயில்கொண்டிருக்கவில்லை. பீஷ்ம பிதாமகர் களம்பட்ட செய்தி முந்தைய நாள் உச்சிப்பொழுதிலேயே அவர்களை வந்தடைந்துவிட்டிருந்தது. அஸ்தினபுரியின் அரசரிடமிருந்து போருக்கான அழைப்பு வரக்கூடுமென்று படையெங்கும் பேச்சு பரவியது. படைவீரர்கள் சிறு குழுக்களாக அமர்ந்து உளஎழுச்சியுடன் அதையே பேசிக்கொண்டிருந்தார்கள்.

பதினேழு நாட்களாக ஒவ்வொரு நாளுமென போருக்கெழுவதை எதிர்பார்த்து அவர்கள் அங்கே தங்கியிருந்தார்கள். அங்கநாட்டிலிருந்து கிளம்புகையில் குருக்ஷேத்ரத்தில் அவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்ற எண்ணமே இருந்தது. ஒருவேளை கௌரவ அரசர் படைத்துணை கோரினார் என்றால் மூன்று நாழிகை பொழுதுக்குள் களத்திற்குள் சென்றுநின்றிருக்கும் பொருட்டு அவ்வூர் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு படைநிலை அமைக்கப்பட்டது. சம்பாபுரியிலிருந்து கிளம்பி படகுப்பாலம் வழியாக கங்கையைக் கடந்து அங்கே வந்து சேர்ந்து நிலைகொண்டார்கள். அருகே குருக்ஷேத்ரம் இருக்கும் உணர்வே அவர்களை போரையன்றி வேறெதையும் எண்ணமுடியாதவர்களாக ஆக்கியது.

போருக்குச் செல்ல வாய்ப்பில்லை என ஆழம் நம்ப போருக்கெழவேண்டும் என உள்ளம் பொங்க அவர்கள் இரு நிலையில் தவித்தனர். ஆணை கிடைத்ததுமே போருக்குக் கிளம்பிவிடப்போவதாக அவர்கள் ஒருவரோடு ஒருவர் சொல்லிக்கொண்டார்கள். சொல்லச்சொல்ல அதை உள்ளம் நம்பியது. ஆழம் மேலும் அழுந்தியது. ஒவ்வொருநாளும் போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. அவை மிகக் குறைவாகவே படைகளை வந்தடைந்தன. ஆகவே அவர்கள் அதை பெருக்கிக்கொண்டார்கள். படைகளில் கதைசொல்லிகள் மிக விரும்பப்பட்டார்கள். இரவுகளில் இருண்ட வானின் விண்மீன்களை நோக்கி படுத்தபடி அவர்கள் சொற்களில் வாழ்ந்தார்கள்.

“படை என்பது ஒரு குழியாடிபோல. அண்மிக்கும் அனைத்தையும் ஆயிரம் மடங்காக்குகிறது” என்று படைத்தலைவன் வஜ்ரசீர்ஷன் சொன்னான். “படையில் சென்றுவிழும் செய்தி பாற்கடலில் உறைமோர் விழுந்ததுபோல” என்றார் அருகிருந்த அமைச்சர் சுமார்க்கர். பெருகிப்பெருகி நுரைத்த கதைகளில் அவர்கள் வாழ்ந்தனர். அங்கே அருஞ்செயலாற்றினர். ஆயிரம் முறை இறந்தனர். நடுகற்களென நின்று படையல் கொண்டனர். அதனூடாக வாழ்ந்து நிறைந்த சலிப்பை அடைந்தனர். அச்சமும் தயக்கமும் அழிய போரை விழைந்தனர். “நமது விற்களிலும் வேல்களிலும் குடியேறிய தெய்வங்கள் குருதி நாடுகின்றன” என்றார் முதிய வீரர் ஒருவர். “என் கனவில் நேற்று புலியின் நாவெனச் சிவந்த உடல்கொண்ட போர்த்தெய்வத்தை கண்டேன். அதன் விழிகள் அனல்கொண்டிருந்தன.”

ஆனால் பத்து நாட்களாகியும் அழைப்பு வரவில்லை. அது அவர்களை முதலில் பொறுமையிழக்கச் செய்தது. பின்னர் சிறுமையென உணரச்செய்தது. “அங்கர்கள் இன்றி இப்போர் வெல்லப்படுமென்றால் அதற்குப்பின் நாம் மலைநிஷாதர்களாகவே அறியப்படுவோம்” என்றான் ஒரு வீரன். இன்னொருவன் தாழ்ந்த குரலில் “சூதர்களாக” என்றான். அனைவரும் அமைதியடைந்தனர். மூத்த வீரர் ஒருவர் “அழைப்பு வரும். நம் அரசரின் வில்லே போரை முடித்துவைக்கும். ஐயமே வேண்டியதில்லை” என்றார். “இங்கே போரிடுவது வில் அல்ல, குலம்” என்றார் இன்னொருவர். “ஆம், ஆனால் குலங்களை உருவாக்குவது வில்லே. நோக்குக, அங்கம் பாரதவர்ஷத்தை ஆளும் நாள் வரும்!” என்றார் முதிய வீரர்.

சம்பாபுரிக்கு அஸ்தினபுரியின் படைநகர்வின் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. கௌரவ அரசர் எந்தப் பொழுதிலும் உதவி கோரி செய்தியை அனுப்பக்கூடும் என்று அங்கநாட்டுப் படைத்தலைவர்கள் எண்ணினார்கள். சம்பாபுரியின் சொல்சூழ்அவையில் மூத்த அமைச்சரான ஹரிதர் “களம்எழுவது வரைக்கும் மட்டுமே எளிய தயக்கங்களும் ஆணவங்களும் நீடிக்கும். இழப்புகளும் வஞ்சங்களும் பேருருக்கொண்டெழுந்து முன்நிற்கையில், விஞ்சியிருப்பதொன்றே. முதல்தேவை என்றாகுகையில் எரியும் இல்லத்தின் மீது எதை எடுத்து வீசுவதென்று தவிக்கும் நிலை ஏற்படுகிறது” என்றார். “அஸ்தினபுரியின் அரசர் உறுதியாக தங்களை அழைப்பார், அரசே. ஏனென்றால் மறுபக்கம் நின்றிருப்பவர் பார்த்தர். பீஷ்மர் ஒருபோதும் பார்த்தரை கொல்லமாட்டார். பார்த்தர் களம்படாமல் இப்போர் முடியாது” என்று படைத்தலைவன் உக்ரகண்டன் கர்ணனிடம் சொன்னான்.

கர்ணன் அவர்கள் சொல்வன அனைத்திற்கும் செவிகொடுத்தான். ஆனால் அவனில் ஓடுவதென்ன என்று அவர்கள் உணரமுடியவில்லை. தன் நீண்ட உடலை அரியணையில் சற்றே சரித்தமைத்து, கைகளை கைப்பிடிமேல் தொய்ந்து அமையவிட்டு, விழிகளைத் தாழ்த்தி, சற்றே தலைகுனிந்தவன்போல் அவன் அமர்ந்திருந்தான். ஏதேனும் எண்ணம் எழுகையில் அவன் இடக்கை எழுந்து மீசையை நீவி சுழற்றுவது வழக்கம். அவன் முகத்தை நோக்கிக்கொண்டிருந்த படைத்தலைவர்கள் பொறுமையிழந்தனர். பேருடலர்களுக்கே உரிய தயங்கிய அசைவுகள் கர்ணனிடம் இருந்தன. அவை அவன் உளம்தயங்குகிறான் என எண்ணச்செய்தன. படைத்தலைவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். வெளியே கேட்டுக்கொண்டிருந்த படைகளின் முழக்கம் ஓர் அறைகூவலாகவே அவர்களுக்கு கேட்டது.

“நாம் அஸ்தினபுரியின் அணுக்கர். எவ்வகையிலும் நாம் ஒதுங்கியிருக்க இயலாது. அவர்கள் அழைக்காமலேயே நாம் படைமுகம் கொள்ளலாம்” என்றார் சிற்றமைச்சரான சாலர். “ஆம், அதுவே நாங்கள் சொல்வது” என்று வஜ்ரசீர்ஷன் சொன்னான். படைத்தலைவர்கள் “ஆம், அதை நாங்களும் ஒப்புகிறோம்” என்றனர். ஒவ்வாமையை முகத்தில் காட்டியபடி எழுந்த ஹரிதர் “அரசே, அங்கம் அஸ்தினபுரியின் தோழமை நாடு. நாம் இன்றுவரை அவர்களுக்கு கப்பம் கட்டியதில்லை. சென்ற இருபதாண்டுகளில் அங்கநாட்டில் நிகழ்ந்த ஒவ்வொரு மணிமுடி விழாவிலும் தீர்க்கதமஸின் குருதிவழியில் எழுந்து அங்கத்தின் அரியணையில் அமர்ந்த தொல்லரசர் நிரையையும், அங்கத்தின் மணிமுடியையும் செங்கோலையும் வாழ்த்தி மட்டுமே விழா எடுத்திருக்கிறோம்” என்றார்.

அவர் பேசுவது அங்கிருந்த படைத்தலைவர்களிடம் என்றாலும் கர்ணனை நோக்கியே சொல்லெடுத்தார். “கப்பம் கட்டும் நாடு ஒவ்வொரு மணிமுடிபெருக்கும் விழாவிலும் கப்பம் பெறும் அரசனின் மணிமுடியையும் கோலையும் குலநிரையையும் வாழ்த்தி வணங்கிய பின்னரே தனது அரசநிரையையும் முடியையும் கோலையும் வாழ்த்த வேண்டும் என்று நெறி உள்ளது. அஸ்தினபுரியின் மணிமுடியை வாழ்த்தி, அங்கிருந்து அனுப்பப்படும் உடைவாளை அரியணையில் வைத்து வணங்கி, ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பணிவுறுதியை மீள அறிவித்த பின்னரே கப்பம் கட்டும் பிற நாடுகள் தங்கள் குடிநிரையையும் முடிகோலையும் வாழ்த்துகின்றன என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒருமுறை கூட நாம் அதை செய்ததில்லை. நாம் என்ன செய்கிறோம் என்பதை சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு அரசும் ஒற்றர்களின் கண்கள் வழியாக நோக்கிக்கொண்டிருந்தன. அங்கம் ஒருமுறையும் தலைவணங்கியதில்லை.”

“ஆகவே இந்தப் போர்முனையில் அதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது” என்றார் ஹரிதர். “அஸ்தினபுரியிலிருந்து அரசரின் முறையான ஓலை வந்த பின்னரே நாம் போருக்கெழ வேண்டும். அந்த ஓலையில் நாம் உதவிக்கென அழைக்கப்பட்டிருக்கிறோம் எனும் வரி இருக்கவேண்டும். தோழமை நாட்டின் தோள்கொடை என்றே அமையவேண்டும் நமது படையெழுச்சி. அஸ்தினபுரி நமக்கு ஆணையிடலாகாது. அழைக்கப்படாமல் நாம் செல்வதும் தகாது.” கர்ணன் மீசையைச் சுழற்றியபடி இமைசரிந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தான். சாலர் ஏதோ சொல்ல நாவெடுக்க “அங்கம் அடைந்த சிறுமை போதும். இனியில்லை!” என்றார் ஹரிதர்.

படைத்தலைவர்கள் கலைந்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அமைச்சர் திரும்பி கைதூக்கியபோது ஓசை அடங்கியது. “இதை நான் சொல்வதற்கான பிறிதொரு சூழலும் உள்ளது. நாம் இந்தப் போரில் தவிர்க்கப்பட்டிருக்கிறோம். அங்கநாட்டின் அரசர் அஸ்தினபுரி அரசரின் தோள்தோழர் என்பதை எவரும் அறிவார். இன்று அங்கு அரியணை இருந்து ஆளும் அரசியை கவர்ந்து வந்தவரே நம் அரசர் என்பதை கதைகள் பாரதவர்ஷம் முழுக்க சொல்லி நிலைநிறுத்தியிருக்கின்றன. இப்போரில் நாம் விலகி நின்றிருக்கவில்லை, விலக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாத எவரும் பாரதவர்ஷத்தில் இல்லை. அது நம் அரசரின் குடிப்பிறப்பினால்தான் என்பதை ஒவ்வொரு அவையிலும் அடுமனையிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த உண்மையை நாம் விழிமூடி மறைத்துவிடமுடியாது.”

“அவர்கள் வந்து வணங்கி நம்மிடம் உதவி கோருவதொன்றே அந்த அலரை நாம் வென்று செல்வதற்கான வழியாகும். நமது அரசர் களமெழுந்து, ஷத்ரியர்களுக்கு தலைமைதாங்கி, படைமுகப்பில் நின்று, இப்போரை வென்று அவர்களுக்கு அளிக்கவேண்டும். மும்முடி சூடி அமரும் அஸ்தினபுரியின் அரசருக்கு வலப்பக்கம் வாளுடன் நின்று புகழ் கொள்ளவேண்டும். அது ஒன்றே அங்கம் இன்று கொண்டுள்ள இப்பழியை வென்று கடப்பதற்கான வழி” என்றார் ஹரிதர். அவையிலிருந்த படைத்தலைவர்கள் “ஆம்! மெய்!” என்றனர். குடித்தலைவர் சம்பூகர் “அவர்கள் அழைக்கட்டும். அஸ்தினபுரி அழைக்கட்டும்… நாம் கொடுப்பவர்கள். பெறுபவர் கைநீட்டாமல் கொடுக்க இயலாது” என்றார். “ஆம்! ஆம்!” என அவை முழக்கமிட்டது.

ஹரிதர் “நிமித்திகர்களிடம் கேட்டேன், அங்கநாட்டு அரசர் இப்போரில் பங்கெடுப்பது உறுதி என்றனர். ஆகவே நாம் எப்படியும் படைத்துணைக்கு எழவேண்டும். அங்கநாட்டிலிருந்து குருக்ஷேத்ரம்வரை செல்வது நெடுந்தொலைவு. ஆகவே குருக்ஷேத்ரத்தின் அருகிலேயே நாம் பாடிகொள்ளவேண்டும். ஆனால் நாம் போருக்கெழுவதென்று அது அமையலாகாது. அஸ்தினபுரியின் எல்லையில் அமைந்த சிபிரம் என்னும் சிறு காவல்கோட்டை நாம் பாடிவீடு அமைக்க உகந்தது. அங்கே செல்வோம். அங்கு அரசர் தங்குவதற்கு காவலர்தலைவரின் மாளிகையும் உள்ளது. நாம் படைகொண்டு செல்கிறோம், ஆனால் படைநகர்வாக அல்ல. அரசர் அங்கே இறைவழிபாட்டுக்கும் வேட்டைக்குமே செல்கிறார்” என்றார்.

“சிபிரத்தின் அருகே கதிரவனுக்கான தொன்மையான ஆலயம் ஒன்றுள்ளது. பாரதவர்ஷத்தின் முதல் கதிரவன் ஆலயம் அது என்று சொல்வார்கள். தொல்காலத்தில் நிமித்தநூலைப் படைத்த சூரியதேவர் நிறுவியது. பன்னிரண்டு கோள்நிலைகளும் பன்னிரண்டு கருவறைகளாக பிறைவடிவில் அமைந்தது. அங்கே சென்று வழிபட அங்கநாட்டரசர் இங்கொரு நோன்புறுதி கொண்டு கையில் நூல் கட்டிக்கொள்ளட்டும். அங்கு வழிபடச் செல்லும் செய்தியை அங்கநாட்டுக் குடிகளுக்கு தெரிவித்து இங்கு ஒரு பூசை நிகழட்டும். குடித்தலைவர்கள் வாழ்த்த, நோன்பிருந்து, எளிய ஆடை அணிந்து, அரசர் சிபிரத்திற்கு செல்லட்டும். சூரியதேவரின் ஆலயத்தில் பன்னிரண்டு நாட்கள் அரசர் பூசை செய்து நோன்பு அறுத்து திரும்புவதாக திட்டமிடுவோம். ஒன்று உறுதி, அந்நோன்பு முடிவதற்குள் குருக்ஷேத்ரக் களத்திலிருந்து அரசருக்கு அழைப்பு வரும்” என்றார் ஹரிதர்.

அனைவரும் கர்ணன் சொல்லப்போவதென்ன என்பதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் விழிகள் தாழ்ந்திருக்க கைகள் மீசையை சுருட்டிக்கொண்டிருந்தன. அவையில் எவரோ இருமினார்கள். எவருடைய அணிகளோ ஒலித்தன. வெளிக்காற்று வந்து திரைச்சீலைகளை படபடக்கச் செய்தது. அமைச்சர் நெஞ்சில் கைகளைக் கட்டியபடி அரசரின் ஆணைக்காக கூர்ந்திருந்தார். கர்ணன் அவர்கள் அங்கிருப்பதையே முற்றாக மறந்துவிட்டவன் போலிருந்தான். அவனை மீட்கும் பொருட்டென ஹரிதர் சற்று ஓசையெழுப்பி இருமினார். திடுக்கிட்டதுபோல் விழிப்பு கொண்ட கர்ணன் வேறெங்கோ நோக்கு சென்றுவிட்டிருந்த ஒளிமங்கிய விழிகளால் அவையை நோக்கினான்.

“அரசர் தன் முடிவை அறிவிக்க வேண்டும்” என்று ஹரிதர் சொன்னார். கர்ணன் தன் இரு கைகளாலும் அரியணையின் பிடியை மெல்லத் தட்டிவிட்டு எழுந்து “ஆம், அமைச்சர் உரைத்தபடியே ஆகுக!” என்று கூறி கைகூப்பினான்.

eleகர்ணன் அரசவையிலிருந்து வெளியே செல்கையில் அவனுடன் நடந்த சிவதர் தாழ்ந்த குரலில் “அமைச்சர் கூறுவது நன்று. நோன்புக்கு என நாம் அங்கே செல்வோம். அங்கு காத்திருப்போம். இத்தருணத்தில் நாம் அவ்வாறு செல்வதை பெரிதாக எவரும் நோக்கப் போவதில்லை. அனைத்து விழிகளும் இந்திரப்பிரஸ்தத்தையும் அஸ்தினபுரியையுமே நோக்கிக்கொண்டிருக்கின்றன” என்றார். கர்ணன் தலையசைத்தபடி மெல்ல நடந்தான். சிவதர் அவனுடைய நீள் காலடிகளுடன் இணைசெல்வதற்காக மூச்சு சற்றே இரைக்க சிற்றோட்டமாகச் சென்றபடி “ஆனால் முற்றாக நாம் ஒதுங்கியிருப்பதும் முறையானதல்ல. நமது மைந்தர்களில் ஒருவர் இங்கிருக்கட்டும். பிறர் அஸ்தினபுரிக்கு படையுடன் செல்லட்டும். அவர்களுக்கு உங்களுக்கிருக்கும் விலக்குகள் ஏதுமில்லை” என்றார்.

கர்ணன் நின்று இயல்பாக திரும்பிப்பார்த்தான். இடக்கை எழுந்து மீசையை நாடிச் சென்றது. சிவதர் சற்றே தலைவணங்கி “அதுவே முறை. அவர்களின் மைந்தர் போரில் இறங்குகையில் நமது மைந்தர் இங்கிருப்பது எவ்வகையிலும் சரியானதல்ல” என்றார். “ஏன்?” என்று அவன் கேட்டான். சிவதர் அசையாமல் நின்றார். மீண்டும் “ஏன்?” என்றான் கர்ணன். “ஒருவேளை அவர்கள் உளம்திரிபடையக்கூடும்” என்று சிவதர் சொன்னார். புரியாமல் விழிகள் இடுங்க கர்ணன் பார்த்தான். “அரசே, போரில் கௌரவ மைந்தர்கள் களம்படக்கூடும்” என்று சிவதர் சொன்னார். “அதனால் என்ன?” என்று கர்ணன் கேட்டான். சிவதர் “அதைக் கண்டபின் நமது மைந்தர் களம் செல்வதைத் தவிர்க்க நாம் எண்ணக்கூடும்” என்றார்.

மெல்லிய சினம் எழுந்த விழிகளுடன் கர்ணன் பார்த்தான். சிவதர் அஞ்சாமல் அவன் விழிகளை எதிர்கொண்டு “ஆம், அவ்வாறுதான் நிகழும். நாம் அரசர்கள், வீரர்கள், அறமறிந்தோர் என்பது உண்மை. அனைத்திற்கும் அடியில் தந்தையர் என்பதும் உண்மையே. இறுதிக்கணத்தில் எழுந்து நிற்பவர் தந்தையாகவே இருப்பார்” என்றார். கர்ணன் பெருமூச்சுவிட்டான். “ஆகவே முன்னரே நம் மைந்தரை குருக்ஷேத்ரத்திற்கு அனுப்புவதொன்றே வழி. இல்லையேல் நாமே வெறுக்கும் ஒரு பழி நம்மீது படிய நேரும்” என்றார் சிவதர். கர்ணனின் கை மீசையிலிருந்து விழ தலைதிருப்பி சாளரத்தினூடாக வந்த ஒளியை சற்று நேரம் நோக்கி திரும்பாமலேயே “ஆம், மெய்தான். மைந்தர் செல்லட்டும்” என்றான். சிவதர் “இன்றே ஆவன செய்கிறேன்” என்றபடி உடன் நடந்தார்.

அன்று மாலை கர்ணனின் மைந்தர்களான விருஷசேனனும் விருஷகேதுவும் சத்ருஞ்சயனும், சுதமனும், சத்யசேனனும் சித்ரசேனனும் சுஷேணனும் திவிபதனும் பாணசேனனும் அஸ்தினபுரிக்கு தங்கள் வில்லவர் துணைவர்களுடன் கிளம்பிச்சென்றனர். இறுதிமைந்தனாகிய பிரசேனன் மட்டும் சம்பாபுரியில் இருந்தான். மேலும் ஏழு நாட்களுக்குப் பின்னர் கர்ணன் அங்கநாட்டுக் காவல்படையுடன் சிபிரம் நோக்கி சென்றான். சூரியதேவன் ஆலயத்தில் நோன்பு முடி கட்டி வணங்கி, வெண்ணிற ஆடை மட்டும் அணிந்து, அணிகள் ஏதுமின்றி கைகூப்பியபடி அவன் சம்பாபுரியிலிருந்து கிளம்பியபோது கோட்டைவாயிலில் கூடி நின்றிருந்த மக்கள் அரிமலர் தூவி வாழ்த்து கூவினர்.

அரசன் நோன்பிருந்து இறைவழிபாட்டுக்குச் செல்வதாக பலமுறை முரசறையப்பட்டிருந்தமையால் “இறையருள் எழுக! கதிரருள் பெருகுக! குலம் சிறக்கட்டும்! கோல் வெல்லட்டும்! அங்கம் வெல்க! சம்பாபுரி வெல்க!” என்றே வாழ்த்துரைகள் எழுந்தன. ஆனால் கர்ணன் கோட்டைக்கு வெளியே சென்று அங்கு நின்றிருந்த பயணத்தேரை அடைந்ததும் எவர் முடிவு செய்ததென்று அறியவொண்ணாது அங்கநாட்டின் குடிகள் அனைவரும் ஒற்றைக்குரலில் வெடித்தெழுந்து “வெற்றி கொள்க! பெருந்திறல் வீரர் புகழ் கொள்க! அங்கநாட்டரசர் வசுசேஷணர் வெல்க! வெற்றிவேல்! வீரவேல்!” என்று குரலெழுப்பினர். சம்பாபுரியிலிருந்த அனைத்துப் படைவீரர்களும் வில்களையும் வாள்களையும் வேல்களையும் தலைக்கு மேல் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று போர்க்குரல் எழுப்பினார்கள்.

திகைத்ததுபோல் திரும்பிப்பார்த்த கர்ணன் தன் அருகே நின்றிருந்த படைத்தலைவனிடம் திரும்பி “என்ன?” என்றான். வஜ்ரசீர்ஷன் “அரசே, அவர்கள் உண்மை அறிவார்கள். அதை எவரும் மறைக்க முடியாது” என்று சொன்னான். தலையசைத்துவிட்டு கர்ணன் தேரிலேறிக்கொண்டான். அவனுடன் சென்ற சிறிய வில்லவர் படை முற்றாக விழிமுன்னிருந்து மறைந்து புழுதி அடங்குவது வரை சம்பாபுரியில் போர்க்குரல் எழுந்துகொண்டிருந்தது. அந்தப் படை அங்கநாட்டின் எல்லை கடப்பது வரை சாலையின் இருமருங்கும் கூடிய குடிகள் இரு கைகளையும் தூக்கி எம்பிக்குதித்தும் நெஞ்சில் ஓங்கி அறைந்தும் வெறிகொண்டு போர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

அங்கநாட்டின் படை ஒவ்வொரு நாளும் ஒரு படைப்பிரிவென சிறுகச் சிறுக சிபிரத்திற்கு வந்தடைந்தது. அச்சிற்றூரின் படைத்தலைவன் தங்கியிருந்த மாளிகையில் கர்ணன் தங்கினான். அங்கு சுற்றிலுமிருந்த இல்லங்கள் அனைத்தும் படைத்தலைவர்களுக்கு உரியதாயின. வந்துகொண்டிருந்த அங்கநாட்டுப் படைகளால் கோட்டையைச் சூழ்ந்திருந்த குறுங்காடும் அதற்கு அப்பால் இருண்டிருந்த செறிகாடும் நிறைந்தன. ஈச்சை ஓலைகளும் மரப்பட்டைகளும் கொண்டு கட்டப்பட்ட பாடிவீடுகளில் படைவீரர்கள் தங்கினர். யானைகளும் புரவிகளும் வந்து நிறைந்தன. அவற்றிற்கு தழையும் புல்லும் கொண்டுவரும் நிஷாதர்கள் காடுகளுக்குள்ளிருந்து நிரை நிரையாக எழுந்து வரத்தொடங்கினர். அவர்கள் உலர்ந்த கிழங்குகளையும் காய்களையும் புல்லையும் தழையையும் கொண்டுவந்து விற்கும் சந்தைகள் இரண்டு இருபக்கமும் உருவாகி வந்தன.

அஸ்தினபுரியின் படை குருக்ஷேத்ரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் செய்திகளை அங்கிருந்து கர்ணன் கேட்டுக்கொண்டிருந்தான். “மிக மெல்ல நகர்கிறது படை. பெரிதாகும்தோறும் விரைவழிகிறது” என்றார் சிவதர். சம்பாபுரியிலிருந்து ஹரிதரின் செய்திகள் வந்தன. “இளையவர் விரைவாக ஆட்சிப்பணியை கற்றுக்கொள்கிறார்.” கர்ணன் முதல்நாள் ஆலயவழிபாடு முடிந்தபின் பெரும்பாலும் அறையிலேயே முடங்கிக்கிடந்தான். குருக்ஷேத்ரத்தை அஸ்தினபுரியின் படைகள் சென்று அடைந்தபோது சோர்வூட்டும் செய்தி ஒன்று வந்தது. அங்கநாட்டு இளவரசர்களை படைக்கலமேந்தி போர்முகப்பில் நிற்கலாகாது என்று பீஷ்மர் ஆணையிட்டிருந்தார். ஆகவே அவர்கள் புரவிகளுக்குப் பொறுப்பாக பின்னணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

சிவதர் கொதிப்புடன் கர்ணன் முன்வந்து “இது இழிவு! தங்களுக்கு மட்டுமல்ல அங்க நாட்டுக்கும் சிறுமை. குதிரைச்சூதர் என அங்கநாட்டு இளவரசர்களை வகுப்பதற்கு அஸ்தினபுரிக்கு என்றல்ல விண்ணாளும் தெய்வங்களுக்கும் உரிமையில்லை” என்றார். “படையில் சேர்ந்த பின்னர் அவர்கள் ஆணையிடப்படுவதை செய்ய வேண்டியவர்கள்” என்று மட்டும் கர்ணன் சொன்னான். “எவர் ஆணையிட்டவர்? ஆணையிடுபவர்களின் வஞ்சத்திற்கு வீரர் பலியாக வேண்டுமா?” என்றார் சிவதர். “அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?” என்றான் கர்ணன். சிவதர் செயலற்று நின்றார். “ஆணையை மீறுவதற்கு படைவீரனுக்கு உரிமையில்லை. அவன் செய்யக்கூடுவது ஒன்றுதான். தன் கழுத்தை தானே வெட்டி களம் விழவேண்டும்” என்று கர்ணன் சொன்னான்.

சிவதர் தளர்ந்து “இப்பெரிய இழிவை சுமத்தும் அளவுக்கு நாம் என்ன பிழை செய்தோம்? நம்மிடமிருந்து ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்ளவே பிறர் அணுகுகிறார்கள். அளிப்பதில் ஒருகணமும் பிந்தியதில்லை. பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் பழியையும் நஞ்சையுமே திருப்பி அளிப்பார்கள் எனில் இக்கொடைகளுக்கு என்னதான் பொருள்?” என்றார். கர்ணன் புன்னகைத்தான். “உங்கள் புன்னகை என்னை கொல்கிறது. நான் அஸ்தினபுரியின் அரசருக்கு என் சார்பில் ஒரு ஓலையை அனுப்பலாம் என்று எண்ணுகிறேன். நான் என் இளவரசர்களின் தந்தையின் இடத்தில் இருப்பவன்” என்றார் சிவதர். “அவரால் எதுவும் செய்ய இயலாது” என்று கர்ணன் சொன்னான்.

சிவதர் நிலையழிந்தவராக சிற்றறைக்குள் அலைந்தார். பின்னர் “குலத்தலைவர்கள் இணைந்து ஓர் ஓலை அனுப்பட்டும் பீஷ்மருக்கு. இது அவர் அங்கநாட்டுக்குச் செய்த பெரும்பிழை என்று அவர் உணரட்டும்” என்றார். பற்களைக் கடித்தபடி “இதற்கு நாம் பழிசூழ்ந்தால் அவருடைய குருதிவழியை அரசநாகம் என அது தொடரும் என அவர் அறிக!” என்றார். கர்ணன் வெற்றுநகைப்புடன் “அவர் அதையும் உணர்வதற்கு வாய்ப்பில்லை” என்று சொன்னான். “ஆம்!” என்று பெருமூச்சுடன் சொன்னபடி சிவதர் பீடத்தில் அமர்ந்தார். பின்னர் உளம் பொங்கி சிறிய விம்மலுடன் எழுந்த கண்ணீரை இரு விரல்களால் அழுத்தியபடி தலைகுனிந்தார்.

“அனைத்து வகையான இறப்புகளினூடாகவும் கடந்து செல்வது வீரனுக்கு நன்று என்பார்கள். அவர்கள் என் மைந்தர். அவர்கள் உணர்வார்கள் இதுவும் கல்வியே என” என்று கர்ணன் சொன்னான். சிவதர் விழிநீர் பிசிர்கள் இருந்த இமைகளுடன் நிமிர்ந்து கர்ணனை பார்த்தார். “நாம் காத்திருப்போம். நமக்கு உரிய நாள் வரும். நம்முடைய தெய்வங்கள் அதை நமக்கென அமைக்கும்” என்று கர்ணன் சொன்னான்.

சிவதர் சீற்றத்துடன் எழுந்து “இதற்கு நாம் செய்ய வேண்டிய பழியீடு ஒன்றே. நாம் வெல்லவேண்டும். பாண்டவர்களை அழித்து அஸ்தினபுரியின் மணிமுடியை உங்கள் கையால் எடுத்து துரியோதனர் தலையில் சூட்டவேண்டும். அஸ்தினபுரியின் கொடிவழியினர் அதை சூடும்போதெல்லாம் அந்த மணிமுடி உங்களால் அளிக்கப்பட்ட கொடை என்பதை உணரவேண்டும். கொடைகொண்டவரின் சிறுமை அஸ்தினபுரியில் என்றென்றும் நிலைகொள்ளவேண்டும். கொடுத்தவனின் பெருமையுடன் அங்கநாடு ஓங்கி நிற்கவேண்டும். அது நிகழவேண்டும்!” என்றார். கர்ணன் எங்கோ நோக்கி அமர்ந்திருந்தான்.

சிவதர் பீஷ்மர் களம்பட்ட செய்தியுடன் கர்ணனின் அறைக்குள் நுழைந்தபோது முகம் மலர்ந்து பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தார். கர்ணன் அச்செய்தியை முன்னரே அறிந்திருந்தான். ஆகவே சற்றே சினத்துடன் அவரை திரும்பிப்பார்த்தான். “இதோ தங்களுக்குரிய நாளை தெய்வங்கள் வகுத்துள்ளன, அரசே. பிதாமகர் பீஷ்மர் களம்பட்டார். அங்கே அம்புமுனையில் படுத்திருக்கிறார். இனி அஸ்தினபுரிக்கு வேறு வழியில்லை. உங்களை போருக்கு அழைத்தே தீரவேண்டும்” என்றார் சிவதர். சலிப்பு தோன்ற “ஆம்!” என்று கர்ணன் சொன்னான்.

“பத்து நாட்கள் தனி ஒருவராக போரை அவரே நிகழ்த்தியிருக்கிறார். இன்று களம்பட்டாலும்கூட பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரர் என்று நிறுவியிருக்கிறார். இப்போது அவரை புரிந்துகொள்ள முடிகிறது. அவர் தங்களை விலக்கியது இந்தப் புகழுக்கு நீங்கள் தடையாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே. நீங்கள் களம் சென்றிருந்தால் அவருக்கு நிகராகவோ மேலாகவோ நின்றிருப்பீர்கள். இந்தப் பத்து நாள் போரின் முதற்தலைவன் எனும் பெருமையை அவர் அடைந்திருக்க மாட்டார். உங்களை நன்கறிந்தவர் அவர்” என்றார் சிவதர்.

கர்ணன் பெருமூச்சுடன் “ஆம்” என்றபின் “என்னை மெய்யாகவே நன்கறிந்திருந்தார் என்று தெரிகிறது. அவர் அறிந்திருந்ததென்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை” என்றான். சிவதர் அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்தார். சில கணங்கள் அமைதிக்குப் பின் “தாங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை” என்றார். கர்ணன் “என்னைக் கடந்து பிறிதொன்றை அவர் பார்த்திருக்கிறார். என்னை விலக்கியது அதன் பொருட்டே போலும். நன்று! எதுவாயினும் நன்று!” என்று சொன்னான்.

“இன்றே அஸ்தினபுரியின் தூதர் அங்கிருந்து கிளம்பக்கூடும். அவர்கள் மன்று கூடியிருக்கிறார்கள். முடிவெடுத்தபின் சற்றுநேரத்திலேயே இங்கு தூதுப்புறா வரும். அதைத் தொடர்ந்து அரசரின் நேர்தூதர்கள் வருவார்கள். பெரும்பாலும் கௌரவர்களில் ஒருவர் தானே வருவார். தங்களிடம் போர்த்துணைக்கு அழைப்புவிடுப்பார். ஹரிதர் கூறியபடி அது அரசன் அரசனிடம் கோரும் முறையான அழைப்பாக இருக்கவேண்டும். வென்றபின் அங்கம் படைக்கூட்டில் எந்நிலையிலிருக்குமென்று ஒரு சொல் அவர்களால் உரைக்கப்படவேண்டும்” என்றார் சிவதர்.

“நான் அதை விழையவில்லை” என்று கர்ணன் சொன்னான். சிவதர் சீற்றத்துடன் “அங்கநாட்டின் பொருட்டு நான் விழைகிறேன்” என்று உரக்கச் சொன்னார். “அங்கநாடு இனி வெறும் பார்வையாளாக இருக்காது. வருபவர் எவராயினும் அவர்களிடம் நான் அதை கேட்பேன். இதில் மாற்றமில்லை” என மூச்சிரைத்தார். “சிவதரே!” என்று துயருடன் கர்ணன் சொல்ல “இதில் நீங்கள் மாற்றுச்சொல் உரைக்கலாகாது, அரசே. இது அங்கநாட்டின் உரிமை” என்றபின் சிவதர் தலைவணங்கி வெளியே சென்றார்.

கர்ணன் பெருமூச்சுடன் பீடத்தில் உடல் தளர்த்தி கால் நீட்டி அமர்ந்தான். பின் தலையை அண்ணாந்து பீடத்தின் சாய்வில் வைத்துக்கொண்டு கண்களை மூடினான். அவன் தசைகள் ஒவ்வொன்றாக தொய்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்லிய விம்மல் போலொன்று எழ அவன் நெஞ்சு அசைந்தது. விழிகளில் இருந்து ஊறிய நீர் இருபுறமும் கன்னங்களில் வழிந்தது. நாகரே, கேளுங்கள்! பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை.

அரவான் சொன்னான் “அவ்வறையில் பீடக்காலின் நிழல் நீண்டு சுவர்மடிப்பில் விழுந்து நாகத்தின் பத்தியென வளைந்து நின்றது. அதில் குடியேறி விழிகள் ஒளிர நா பறக்க மெல்ல படமசைத்தாடியபடி நான் அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.”