கார்கடல் - 55
பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள் இருவரும் களத்தில் மோதிக்கொண்டேதான் இருந்தனர். பாறை மேலிருந்து காட்டுயானைமேல் கல் வீசி சீண்டுவதுபோல துருபதர் எப்போதும் பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டே துரோணரிடம் மோதினார். எந்நிலையிலும் பின்வாங்க இடம் வைத்திருந்தார். ஒவ்வொருமுறையும் தன்னைக் காக்கும் துணைப்படைகளை எச்சரிக்கையுடன் இருபக்கமும் நிறுத்திக்கொண்டார். ஒவ்வொரு போருக்குப் பின்னும் அவர்களில் பாதிபேர் உயிரிழக்கத்தான் அவர் மீண்டுவந்தார். மீண்டும் புதிய வீரர்களுடன் புதிய வஞ்சினத்துடன் கிளம்பிச்சென்றார்.
முதல் நாள் போருக்குக் கிளம்புவதற்கு முன் அவர் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் பார்த்தான். அவரால் படைக்கலங்களை கையில் ஏந்தமுடியவில்லை. அவருடைய தனிக்குடிலில் அவருக்கு கால்களில் இரும்புக்குறடைக் கட்டிக்கொண்டிருந்த ஏவலன் “அரசே” என்றான். அவருடைய கால்கள் நடுங்கியதனால் அவனால் தோல்பட்டையை முடிச்சிட இயலவில்லை. துருபதர் “ஆம்” என்றார். அருகே நின்றிருந்த திருஷ்டத்யும்னன் “தாங்கள் இன்று ஆசிரியரை எதிர்கொள்ள வேண்டியிருக்காது, தந்தையே. இன்று அவர்களை நாம் மதிப்பிடவே போகிறோம்… நமது நாள் வரும்” என்றான். எப்போதும் அவன் தன் உள்ளத்தை அணுக்கமாகத் தொடர்பவன் என அவர் அறிந்திருந்தார். அவ்வாறு அவன் வெளிப்பாடு கொள்கையில் உவகையடைவதும் அவர் இயல்பு. அன்று அவர் சீற்றம்கொண்டார். “நான் அஞ்சவில்லை…” என்றார். “நான் உயிருக்கோ மைந்தர்துயருக்கோ தயங்கவில்லை. இனி நான் இழப்பதற்கொன்றுமில்லை என்றே இங்கு வந்துள்ளேன்.”
“இல்லை, நான் தாங்கள் அஞ்சுகிறீர்கள் என எண்ணவில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். அவர் தளர்ந்து நீள்மூச்செறிந்து “உண்மையில் நான் உளம்கொள்ளா உணர்வுகளால் தவிக்கிறேன். என் வாழ்நாளெல்லாம் காத்திருந்த தருணம் அணைந்துள்ளது. இதற்கப்பால் எனக்கு வாழ்வில்லை. தோற்று நான் அழியக்கூடும். வென்று தருக்கினேன் என்றாலும் என் வஞ்சம் இல்லாத வாழ்க்கையை நான் தொடர முடியாது. இங்கே அனைத்தையும் உதறிவிட்டு கானேகுவேன். வடக்கிருந்து உயிர்விடுவேன். ஆம், ஐயமே வேண்டாம். இந்தக் களத்திற்குப் பின் எனக்கு வாழ்க்கை இல்லை” என்றார். “ஆனால் இந்தத் தருணம் என்னைவிட மிகப் பெரியது என்று உணர்கிறேன். இதன் முன் நான் சிறுதூசுபோல் அதிர்வுகொள்கிறேன்.”
திருஷ்டத்யும்னன் “தந்தையே, நாம் நம் எதிரிகளை தெரிவுசெய்யவேண்டும் என்று ஆசிரியர் துரோணர் ஒருமுறை சொன்னார். எதிரியளவுக்கே நம்மை பெரிதாக்குகின்றன நாம் வணங்கும் தெய்வங்கள். அறத்தின் தெய்வங்கள், வஞ்சத்தின் தெய்வங்கள், சிறுமையின், கீழ்மையின் தெய்வங்கள்” என்றான். துருபதர் நிமிர்ந்துநோக்கி “நான் கொண்ட வஞ்சம் கீழானது என எண்ணுகிறாயா?” என்றார். “ஆம், அதில் ஐயமே இல்லை எனக்கு. அனைத்து வஞ்சங்களும் கீழ்மையானவையே” என்றான் திருஷ்டத்யும்னன். துருபதர் “ஏன்?” என்றார். “அறநெறிகளைப் பற்றி என்னிடம் சொல்லவேண்டியதில்லை. நான் அனைத்தையும் கற்றிருக்கிறேன். எனக்கான விடை அவை எவற்றிலும் இல்லை.” திருஷ்டத்யும்னன் “அறநெறியின்பாற்பட்டு சொல்லவில்லை. மானுடனை மேம்படுத்தும் எதுவும் அவன் வாழ்வு நிகழும் களத்திற்கு அப்பால்தான் இருக்க முடியும். தொடர்ந்து தன் எல்லைகளைக் கடந்தே அவன் அங்கே சென்றடையமுடியும். வஞ்சம் கொண்டவர்கள் இறந்தகாலத்தின் பிணையில் இருக்கிறார்கள்” என்றான்.
துருபதர் பெருமூச்சுவிட்டு “ஆம்” என்றார். “ஆம்” என மேலும் சொன்னார். “ஆனால் நான் மாற்றி எண்ணப்போவதில்லை. இதோ இப்போது என் உள்ளம் கொந்தளித்துக்கொண்டிருக்கையில்கூட இவ்வுணர்வுகளால் எப்படி எச்சமில்லாமல் நிறைக்கப்பட்டிருக்கிறேன் என்பதையே உணர்கிறேன். இது இல்லையேல் நான் எவ்வளவு வெறுமை கொண்டிருப்பேன் என்றே எண்ணிக்கொள்கிறேன்.” முதல் நாள் களத்தில் துருபதர் துரோணரைச் சந்திக்க எண்ணவே இல்லை. அவரை ஒழியவேண்டும் என்றும் எண்ணவில்லை. ஆனால் ஒழிவார் என படையினர் எண்ணியிருந்தனர். ஒழியவேண்டும் என திருஷ்டத்யும்னன் விழைந்தான். அவர்களின் படைசூழ்கையில் அவர் துரோணரை சந்திக்க எந்த வாய்ப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் அவர்கள் வில்லுடன் சந்தித்துக்கொண்டார்கள்.
போர்முனையில் துருபதரைக் கண்டதும் துரோணர் புன்னகைத்து “நலமாக இருக்கிறாயா, பாஞ்சாலனே?” என்றார். “நீங்கள் அளித்த புண் என்னை நலமாக வைத்திருக்கிறது, அந்தணரே” என்றார் துருபதர். “என் உடலை, உள்ளத்தை புண்படுத்தினீர்கள். என் நாட்டை வெட்டிப் பிளந்தீர்கள். என் வஞ்சத்திற்கு நிகர்செய்யும்பொருட்டே இங்கே வில்லுடன் களமெழுந்திருக்கிறீர்கள்.” துரோணர் சிரித்து “வில்லின்றி நான் வாழ்ந்த நாளே இல்லை” என்றார். “ஆம், ஆனால் போருக்கு வில்லுடன் எழுந்தமையாலேயே என் கையால் அல்லது என் மைந்தன் கையால் தலைவெட்டி வீழ்த்தப்படும் வாய்ப்பை அளிக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிகொண்டிருக்கிறேன்” என்றார் துருபதர். வெறுப்புடன் நகைத்து “பார்ப்புப்பழி என் குடியைத் தொடருமென நான் இனி அஞ்சவேண்டியதில்லை” என்றார்.
துரோணர் அந்தச் சொல்லால் சினமடைந்தாலும் சிரிப்பை விரித்து “சொல்லுக்கு நிகராக வில்லும் பேசவேண்டும்…” என்று அவரை அம்பால் அறைந்தார். அப்போர் மூண்ட சற்றுநேரத்திலேயே துருபதர் அறிந்தார், துரோணர் எவ்வகையிலும் அவரால் எதிர்க்கப்பட உகந்தவர் அல்ல என்று. துரோணரின் உடலில் அவருடைய அம்புகளில் ஒன்றுகூட படவில்லை. ஆனால் அவருடைய வில்லும் அம்பறாத்தூணியும் உடைந்து விழுந்தன. கொடியும் கொடித்தூணும் உடைந்தன. பாகன் அவரை பின்னெடுத்துக் கொண்டுசென்றான். அவரை தொடர்ந்து வந்து அறைந்து கவசங்களை உடைத்து பாய்ந்தன துரோணரின் அம்புகள். படைத்திரளுக்குள் வந்த துருபதர் தளர்ந்து தேர்த்தட்டில் விழுந்துகிடந்தார்.
திருஷ்டத்யும்னன் தன் தேரிலிருந்து புரவியில் பாய்ந்தேறி அவர் அருகே சென்று இறங்கி “தந்தையே” என அழைத்தான். அவருடைய கவசங்களை கழற்றிக்கொண்டிருந்த மருத்துவஏவலர் “புண் பெரிதல்ல, இளவரசே. ஆனால் குருதியிழப்பு உள்ளது” என்றார். திருஷ்டத்யும்னன் “தந்தையே, அவர் பாரதவர்ஷத்தின் பெருவீரர்களில் ஒருவர்” என்றான். “ஆம்” என்றபடி துருபதர் புரண்டார். “ஆனால் இப்போர் எனக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. மெய், அவரை நான் அரைநாழிகைப் பொழுதுகூட எதிர்க்க இயலாது. ஒற்றை அம்பையேனும் அவர் உடலில் தைக்க எந்நாளும் என்னால் இயலாது. அவரை சினம்கொள்ளச் செய்யக்கூட இயலுமா என்று அறியேன். ஆனால் நான் ஒன்று அறிந்தேன், அவர் முன் என்னால் தயங்காமல் நிற்க முடிகிறது. அவரை நேருக்குநேர் நோக்கிய பின்னரும் என் வஞ்சம் அவ்வண்ணமே இருக்கிறது.”
அவன் முகத்தில் வந்த மாற்றத்தை நோக்கிவிட்டு துருபதர் தொடர்ந்தார். “உண்மை, நான் அஞ்சிக்கொண்டிருந்தது இதையே. அவர்முன் நின்றால் என்னில் அந்தப் பழைய தோழன் எழக்கூடும் என. இவையனைத்தும் வெறும்பொருள் கொண்டவையே என நான் எண்ணக்கூடும் என. அவரைக் கொல்ல என் வில் எழுமா என்றே ஐயம் கொண்டிருந்தேன். அதை இன்று உறுதிசெய்தேன். அவரை நோக்கி எழுந்த ஒவ்வொரு அம்பிலும் என் வஞ்சச்சொல் இருந்தது. அவரை நோக்கி அம்பெய்கையிலேயே நான் மெய்யான உவகையை அடைகிறேன். மைந்தா, இந்தப் போரில் அவரைக் கொன்றாலொழிய நான் நிறைவடைய மாட்டேன். அதை இன்று உறுதிசெய்துகொண்டேன்.” திருஷ்டத்யும்னன் சலிப்புடன் பெருமூச்சுவிட்டான். “இந்தப் போர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளை அளிக்கிறது, இது எனக்கு அளிக்கும் மெய்மை ஒன்றே. நான் எவ்வண்ணம் உயிர்துறக்கவேண்டும் என முடிவெடுக்கும் நாற்களம் இது.”
அதன்பின் நாளும் அவர் தொடர்ந்து துரோணருடன் போரிட்டுக்கொண்டிருந்தார். இருவரும் முன்னரே உறுதிசெய்துகொண்டதுபோல அறியாத விசைகளால் சுழற்றியடிக்கப்படுகையிலும் அவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். எதிர்கொண்ட முதற்கணமே எங்கோ நிறுத்திவிட்டிருந்த போரை தொடங்கினார்கள். ஒருகணத்தில் முன்னரே முடிவெடுத்திருந்ததுபோல துருபதர் பின்னடைந்து விலக துரோணர் வஞ்சினமோ வசையோ உரைக்காமல் உறைந்த முகத்துடன் திரும்பிச்சென்றார். “உங்களை அவர் கொன்றிருக்க முடியும்” என்று ஒருமுறை திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆம், முதல்நாளே அவரால் என்னை கொல்லமுடிந்திருக்கும். ஆனால் அவர் கொல்லவில்லை. அன்று கொல்லாதொழிந்தமையால் இனி என்னை அவர் கொல்லப்போவதில்லை” என்றார் துருபதர். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அவர் அஞ்சுவது பழியை. அவர் என்னை கொன்றால் ஏதோ ஒன்று நிகர்செய்யப்படாதாகிறது. அவரைப்போன்ற ஒருவர் இப்பிறவியில் எக்கணக்கையும் எஞ்சவிட்டுச் செல்ல விரும்பமாட்டார்” என்றார் துருபதர்.
அதை திருஷ்டத்யும்னனால் புரிந்துகொள்ள முடியவில்லை. துருபதர் புன்னகைத்து “இப்புவியில் அவரை என்னளவு புரிந்துகொண்ட பிறர் இருக்கவியலாது…” என்றார். “பிறகு ஏன் போர்புரிகிறார்?” என்று திருஷ்டத்யும்னன் எரிச்சலுடன் கேட்டான். “அவர் அறிய விரும்புகிறார், அது யார் என. என் அம்பினாலா, அல்லது உன் அம்பினாலா?” துருபதர் கசப்புடன் புன்னகைத்து “அவர் சாகவிரும்புவது தன் மாணவனின் கையால். அதுவே அவருக்கு புகழ்சேர்ப்பது. அது தன்னாலன்றி தான் வெல்லப்படவில்லை என்று நிறுவும் என எண்ணுகிறார்” என்றார். திருஷ்டத்யும்னன் “அதுவே நிகழுமென எண்ணுகிறேன்” என்றான். “அவர் தன் முதல் மாணவனுக்கு ஏதோ நுண்சொல்லை அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. எங்ஙனம் அவரை அவன் கொல்லக்கூடும் என்னும் பொருள் அதில் ஒளிந்திருக்கிறதாம்” என்று துருபதர் சொன்னார். “அதை அவர் செய்யக்கூடுமென்றுதான் எண்ணுகிறேன்.”
ஆனால் ஒவ்வொருநாளும் துருபதர் தெளிந்துவந்தார். “ஒவ்வொரு போருக்குப் பின்னரும் நான் மேலும் ஆற்றல்கொண்ட வில்லவன் என்று உணர்கிறேன். மைந்தா, என் ஆசிரியர் அக்னிவேசர் அல்ல, துரோணரே. அவரிடம் நான் கற்றுக்கொண்ட அனைத்தும் இப்போரில் என்னுள் இருந்து உயிர்கொண்டு எழுகின்றன. இப்போர்கள் உண்மையில் என் பயிற்சிக்களங்கள்.” மெல்ல மெல்ல துரோணர் உருமாறி சீற்றமும் வஞ்சமும் கொண்டவராக ஆனபோது துருபதர் உவகை கொண்டார். “அவர் நெகிழ்கிறார். தனக்கெனக் கொண்டிருந்த கவசங்களை அவர் உதிர்த்துக்கொண்டிருக்கிறார். அது நன்று. எனக்கு மிக அணுக்கமானவராக ஆகிறார். அன்று குருகுலத்தில் இரு இளையோராக வில்லாடிய அகவையை நாங்கள் சென்றடையக்கூடும். அங்கு நின்று மீண்டும் சில அம்புகளை எய்துகொள்ளக்கூடும்” என்றார் துருபதர்.
யுதிஷ்டிரரை கைப்பற்றும்பொருட்டு துரோணர் வந்தபோது அவரை துருபதர் எதிர்த்து தடுத்தார். துரோணர் எய்த அம்புகளை தன் அம்புகளால் ஒடித்தெறிந்தார். முதல்முறையாக துரோணரின் நெஞ்சக்கவசத்தில் இடுக்கில் முதல் அம்பை தைத்து நிறுத்தினார். “அவருடைய குருதியை அறிந்தேன். மிகமிக இனியது. நாவில் எரிவது. அதை சுவைத்துக்கொண்டு இன்றிரவை கழிப்பேன். இப்போது தன் குடிலில் அந்தப் புண்ணில் மெல்ல விரலோட்டியபடி அவர் என்னைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்று துருபதர் நகைத்தார். கையில் மதுக்குடுவையுடன் “இன்று நான் நெஞ்சுகரைய குடிப்பேன். கீழ்மகன்போல் களியாடுவேன். இன்று வெற்றியென்றால் என்ன என்று சுவையறிந்துவிட்டேன்” என்றார்.
அவன் தோளைப்பற்றி உலுக்கி வெறிகொண்டு விழித்த கண்களுடன் “அவரை என் அம்பு தாக்கமுடியும். அவரே அதை எதிர்பார்க்கவில்லை. அவர் கண்களில் அரைக்கணம் வந்துசென்ற அந்தத் திகைப்பு… அது போதும். தெய்வங்களே, மூதாதையரே, அதை காணும்பொருட்டு எனக்கு வாழ்நாள் அளித்தீர்கள். ஒருகணமேனும் வென்றுதருக்க எனக்கு வாய்ப்பளித்தீர்கள்” என்றார். குரல் உடைய அவர் விம்மி அழுதார். நெஞ்சை பற்றிக்கொண்டு பீடத்தில் அமர்ந்தார். “மூடா, மது. எரியும் பீதர்நாட்டு மது” என ஏவலனை அழைத்தார். அன்று வெளியே நடந்தபோது திருஷ்டத்யும்னன் ஏனோ இரு கைகளையும் இறுகப்பற்றி நெரித்துக்கொண்டிருந்தான். விண்மீன்களை அண்ணாந்து நோக்கி அவன் நெடும்பொழுது நின்றிருந்தான்.
முந்தைய போரில் அவர் துரோணருக்கு நிகராக ஒரு நாழிகைப் பொழுது நின்றிருந்தார். துரோணர் எரிச்சல்கொண்டிருக்கிறார் என உணர்ந்து மேலும் மேலும் அவரை சினம்கொள்ளச் செய்தார். “இக்களத்தில் என் பழியை நீங்கள் உங்கள் குருதியால் நிகர்செய்வீர்கள், அந்தணரே” என்று கூவினார். “விண்ணுக்குச் செல்கையில் உங்கள் தந்தையின் தீச்சொல்லைப் பெற்று இழிவடைவீர்கள்” என்றார். அவரை சீற்றம்கொள்ளச் செய்யும் சொற்களுக்காக தேடிக்கொண்டே இருந்தார். “இக்களத்தில் உங்கள் மைந்தன் களம்படுவான். அவன் தலைமேல் என் காலால் உதைப்பேன்” என்றபோது “கீழ்பிறப்பே!” என்று கூவியபடி துரோணர் அம்புகளால் அவரை அறைந்தார். அவர் சிரித்தபடி அந்த அம்புகளை முறித்து அவர் நெஞ்சில் தன் அம்பை அறைந்து நாட்டினார்.
அன்றைய போரில் துரோணர் பாண்டவர்களின் படைக்கோட்டைக்குள் சிக்கிக்கொண்டபோது துருபதர் வீறுடன் எழுந்துசென்று துரோணரை தாக்கினார். தொலைவில் நின்று அவர்களின் போரைக் கண்டபோது இருவரும் ஒருவரே என்று ஒருகணத்தில் தோன்ற திருஷ்டத்யும்னன் வியந்து வில்தாழ்த்திவிட்டான். அது விழிமயக்கா என ஐயம்கொண்டு கூர்ந்து நோக்கினான். பின்னர் அது ஏன் என புரிந்துகொண்டான். துருபதரின் அசைவுகள் அனைத்தும் துரோணர் போலவே இருந்தன. வில்லெடுக்கும் கைசுழற்சி, நாணிழுத்துத் தொடுக்கும் நெளிவு, எய்தபின் மீளும் அசைவு அனைத்திலும் முற்றான ஒற்றுமை இருந்தது. அவர் துரோணரிடம் கற்றுக்கொண்டவை அவை. ஒவ்வொருநாளும் எண்ணத்தில் நிகழ்த்தி நிகழ்த்தி தீட்டிக்கொண்டவை. ஆனால் அங்கே களத்தில் ஒருவரோடொருவர் எதிர்கொண்டு நிற்கையில் அவர் விழிகளால் துரோணரை அணுவணுவாக உழிந்து உருமித் தொடர்ந்து ஒற்றி எடுத்து தன் உடலென்றாக்கிக் கொண்டிருந்தார்.
பின்னர் அவன் அறிந்தான் துரோணர் ஒரு படி பின்னடைந்துவிட்டிருப்பதை. நாளும் போரிட்டுப் போரிட்டு தன் வஞ்சத்தை உள்ளத்திலிருந்து எடுத்து வில்லிலும் அம்பிலும் மட்டுமென்றாக்க துருபதரால் இயன்றது. அவர் முகம் தெளிந்துவந்தது. சொற்களில் தெளிவு குடியேறியது. தனிமையிலிருக்கையில் அவர் இளங்காதலர்களுக்குரிய கனவுநிலை கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். மாறாக துரோணர் ஒவ்வொரு அம்புக்கும் வசைச்சொல் உதிர்த்தார். அம்புகள் தவறினால் காலால் தேர்த்தட்டை உதைத்தார். அம்புபட்டு ஒருவன் வீழக்கண்டால் இதழ்வளைய புன்னகைத்தார். அவருக்கும் துருபதருக்குமான தனிப்போர் ஒரு நாழிகைப் பொழுது நீடித்தபோது மெல்ல சூழ நின்றிருந்தவர்கள் வில்தாழ்த்தி நோக்கத்தொடங்கினர்.
திருஷ்டத்யும்னன் அருகணைந்து துரோணர் மெல்ல மெல்ல பின்னடைவதை கண்டான். பின்னர் தான் பின்னடைவதை உணர்ந்து சீற்றம்கொண்டு அவர் அரிய அம்புகளால் அறைந்து துருபதரை பின்னடையச் செய்தார். அக்கணத்தில் திருஷ்டத்யும்னன் உட்புகுந்து தந்தையை காத்தான். துருபதர் பின்னடைந்து பிளந்த படைச்சுவரினூடாக அப்பால் சென்றார். துருபதர் வில்லைத் தூக்கி “வென்றேன்… வென்றுவிட்டேன்!” என்றார். அவருடைய தோளிலும் விலாவிலும் தைத்த அம்புகளிலிருந்து குருதி வழிந்தது. “கட்டு போட்டுக்கொள்க, தந்தையே!” என்றான் திருஷ்டத்யும்னன். “அவரை கொல்வேன்… இந்தக் களத்தில் என் வஞ்சத்தை நிறைவடையச் செய்வேன்!” என்று துருபதர் சொன்னார். திருஷ்டத்யும்னன் “இறையருள் கூடுக!” என்றான். துருபதர் தேர்த்தட்டில் கால்தோய அமர்ந்து “ஆம், நான் அறிவேன். அவரை அறுதியாக வெல்ல என்னால் இயலாது. இவ்வெற்றிகளை என் தெய்வங்கள் எனக்கு பரிசளிப்பதே அவரால் கொல்லப்படவேண்டும் என்பதற்காகத்தான்” என்றார்.
ஏகாக்ஷர் சொன்னார்: கர்ணனும் பீமனும் நிகழ்த்திய போரை திருஷ்டத்யும்னன் நோக்கி நின்றான். படைத்துணைகள் தேவையில்லை என்னும் நிலையை அவர்கள் இருவருமே அடைந்துவிட்டிருந்தார்கள். இரு ஒலிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதுபோல என்னும் விந்தையான ஒப்புமை அவனுள் தோன்றியது. பீமன் வென்று வென்று முன்செல்வதை அவன் கண்டான். அது கர்ணன் அளிக்கும் இடம்தானோ என ஐயுற்றான். எக்கணமும் அரவு சீறி படமெடுக்கக் கூடும். ஆனால் கர்ணனின் விழிகளை ஒரு கணம் நோக்கியபோது அவன் அறிந்தான், கர்ணனின் கையால் பீமன் உயிர்துறக்க மாட்டான் என. அவன் உள்ளத்தின் எடை அகன்றது. கர்ணனைக் கொல்ல பீமனால் இயலாதென்றும் அறிந்திருந்தான். அப்போரில் ஆர்வமிழந்து பின்னடைந்து “இழப்புகள் இன்றி பொருதுக… கௌரவப் படையில் ஒரு விரிசல்… நாம் தேடுவது அதையே. அதனூடாக உள்நுழைந்து செல்க…” என்று ஆணையிட்டான்.
“ஆலமரத்து வேர் பாறையில் நுழைவதுபோல” என்று அந்த திட்டத்தை அன்று காலை அவன் சொன்னபோது அர்ஜுனன் எந்த உணர்ச்சியும் இன்றி கேட்டிருந்தான். “ஒரு படையை எந்தப் பிழையும் இல்லாது கட்டமுடியாது. போர்க்களத்தில் அதில் இடைவெளிகள் விழும். விரிசல்கள் தோன்றும். கல்லை உடைப்பதற்குரிய வழி அதன் பரப்பில் எடைமிக்க கூடத்தால் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டே இருப்பதுதான். அதில் விரிசல் விழுந்து உடைவு தோன்றுகையில் மட்டுமே அது அங்கே உடையக்கூடுமென நாம் அறிவோம். உடையத் தொடங்கியபின் அத்தனை அடிகளும் அவ்வுடைவை விரிவாக்குதலையே செய்யும். அறைக! விரிசல்களை உருவாக்கி உள்நுழைக! இன்று நம் வெற்றி அவர்களின் படைகளுக்குள் நுழைந்து மையத்தை சென்றடைவது மட்டுமே.”
யுதிஷ்டிரரின் அழைப்பு முழங்கக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன் தேரிலிருந்து புரவியில் பாய்ந்தேறி விரைந்தான். செல்லும் வழியிலேயே கையசைவால் படைநகர்வுக்குரிய ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் யுதிஷ்டிரர் “என்ன செய்கிறீர்கள்? எங்கிருக்கிறீர்கள்?” என்று சீறினார். “கூறுக, அரசே!” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் சாத்யகியை இளையவனிடம் அனுப்பினேன். அங்கே பாஞ்சஜன்யமோ தேவதத்தமோ ஒலிக்கவில்லை. என்ன ஆயிற்று என்று பார்த்துவரும்படி சொன்னேன்… அவனிடமிருந்தும் செய்தி இல்லை” என்றார் யுதிஷ்டிரர். எரிச்சலுடன் “அவருக்கு இங்கே உங்களைக் காக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், ஆனால் இந்தக் கவசக்கோட்டையே எனக்கு பாதுகாப்பு. கௌரவர் இன்று இளையவனை சூழ்ந்துகொள்ளக்கூடும். அவன் எடுத்துள்ள வஞ்சினம் அவர்களை அச்சுறுத்துகிறது என எண்ணுகிறேன்… செல்க, அவனுக்கு என்ன ஆயிற்று என்று நோக்குக!” என்றார். “அரசே, நானும் இங்கிருந்து சென்றால்…” என்று அவன் சொல்லத் தொடங்க “என்னுடன் என் மைந்தர் இருக்கிறார்கள். உடனே சென்று மீண்டு வருக… என் இளையோருக்குத் துணையாக நிலைகொள்க! இது என் ஆணை!” என்றார் யுதிஷ்டிரர்.
தலைவணங்கி திருஷ்டத்யும்னன் புரவியைக் கிளப்பி விரைந்துசென்றான். செல்லும் வழியெங்கும் சாத்யகி அவ்வழியே சென்ற தடயங்களை கண்டான். சாத்யகிக்கும் துச்சாதனனுக்கும் நடந்த போரைப்பற்றி ஒரு வீரன் ஓடிவந்து அவனிடம் சொன்னான். “யாதவரால் கதைவீச்சில் பெருந்தோளராகிய இளைய கௌரவரை வெல்ல இயலுமென எவருமே எதிர்பார்க்கவில்லை, இளவரசே. எட்டு சுற்றுகள் அப்போர் நிகழ்ந்தது. பொருதுவது பீமசேனரா என்றே நாங்கள் ஐயுற்றோம். இறுதியில் பாய்ந்தெழுந்து துச்சாதனரின் தலையை அறைந்தார். அவர் தலைசுழன்று விழ நெஞ்சை மிதித்து அறைந்து தலைபிளக்க முயல்கையில் துரியோதனர் தன் கதையை வீசி அவர் கதையை உடைந்து தெறிக்கவைத்தார். பாய்ந்து பின்னடைந்து கேடயநிரைக்குள் மீண்டார். தம்பியர் இருவரால் துச்சாதனர் தூக்கி எழுப்பப்படுவதைக் கண்டு நாங்கள் வெற்றிக்கூச்சலிட்டோம். வெற்றி அணுகிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீரரும் பீமசேனரும் பார்த்தருமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.”
அவன் சென்றுகொண்டிருந்தபோது மேலும் மேலும் சாத்யகியின் வெற்றிகள் பற்றிய செய்திகள் வந்தபடியே இருந்தன. அவனுடன் வந்தபடி பாஞ்சாலத்து வீரன் ஒருவன் “கிருதவர்மருக்கும் யுயுதானருக்கும் நிகழ்ந்த போரை நாங்கள் படைக்கலம் தாழ்த்தி நின்று நோக்கினோம். அதை போர் என்று சொல்லலாகாது, அது ஒரு நடனம். இளைய யாதவர் வில்லேந்தி களம்நின்றதை நாங்கள் கண்டதில்லை. அவருடைய கைகளிலும் தோள்களிலும் நுண்வடிவில் வாழும் வில்லவரை அறிந்துமிருக்கிறோம். இன்று கண்டோம் கிருதவர்மரில் அவர் எழுவதை. அவரை எதிர்த்து யுயுதானரில் தோன்றினார் இளைய பாண்டவர். உயிர்தோழர்கள் இருவரின் போரென்று தோன்றியது. விழிமூடித் திறக்கையில் அவர்களேதானோ என ஐயம் எழுந்தது. உடல் உயிருடன் போரிடுகிறது என்று ஒரு வீரன் கூவினான்” என்றான்.
“பாஞ்சாலரே, இறுதியில் யுயுதானர் வென்றார். கிருதவர்மர் அம்புகளால் அறையுண்டு தேரில் விழ அவரை அவர்கள் பின்னிழுத்துச் சென்றனர். அது ஏன் என்று இப்போதுதான் நான் உணர்கிறேன். போர் முறுகுந்தோறும் கிருதவர்மர் இளைய யாதவரிலிருந்து தன்னை நோக்கி சென்றார். யுயுதானர் தன்னிலிருந்து இளைய பாண்டவரை நோக்கி சென்றார். இறுதிக்கணத்தில் இளைய பாண்டவரால் கிருதவர்மர் வெல்லப்பட்டார்” என்றான் பாஞ்சாலத்து வீரன். “இங்கே ஒவ்வொரு படைக்கணுவிலும் நீங்கள் யாதவரின் போர்வெற்றியின் கதைகளையே கேட்பீர்கள். அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது அவருடைய பேருருத் தோற்றம். அவர் துரோணரை வென்று புறந்தள்ளினார். காமரூபத்து இளவரசன் ஜலசந்தனை நெஞ்சு பிளந்து கொன்றார். அவரை எதிர்கொள்ள அஞ்சி பின்னடைகின்றனர் கௌரவர்கள்.”
“அவர் சீற்றம்கொண்டிருக்கிறார், பாஞ்சாலரே” என திருஷ்டத்யும்னனுடன் குதிரையில் விரைந்து வந்தபடி இன்னொரு முதிய வீரர் சொன்னார். “இவர்கள் அச்சீற்றத்தை கொண்டாடுகிறார்கள். வஞ்சம் அத்தகைய சீற்றத்தை அளிக்கும். பெருந்துயரும் அதன் விளைவான வெறுமையும் மேலும் சீற்றத்தை அளிக்கும். சீற்றம்கொண்டவருக்குள் எரியும் அனல் அவர்களின் ஆற்றலை அழித்துவிடும். போர்க்களத்தில் சீற்றம்கொள்பவர்கள் சாவை நோக்கி செல்கிறார்கள்.” திருஷ்டத்யும்னன் “அவர் தன் மைந்தர்களை இழந்திருக்கிறார்” என்றான். “ஆம், ஆனால் இங்கே இழக்காதவர் எவருமில்லை. இழப்புக்கெனவே இங்கு வந்தோம். வஞ்சம் கொள்ளவேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தன்னிடமே வஞ்சம் கொள்ளட்டும்” என்றார் முதிய வீரர். “அவரை பின்னால் இழுத்துவருக! அவர் அங்கே போர்புரியலாகாது. அவர் உயிர்விடக்கூடும். அல்லது உளம்கடந்து பெரும்பழிகளை ஈட்டிக்கொள்ளலும் ஆகும். அவரை பின்னிழுத்துக் கொண்டுவருக!”
திருஷ்டத்யும்னன் “ஆம்” என தலையசைத்து முன்னால் சென்றான். படைச்சுவருக்கு அப்பால் கூச்சல்களும் அலறல்களும் எழுந்தன. “அங்குதான் இருக்கிறார் இளைய பாண்டவர். அவரை சூழ்ந்துகொள்ள துரியோதனரும் துரோணரும் சல்யரும் அஸ்வத்தாமரும் சேர்ந்து முயல்கிறார்கள். வலப்பக்கம் சிகண்டியும் பீமனும் அதை தடுத்து நிறுத்துகிறார்கள். இடப்பக்கம் சாத்யகியும் சுருதகீர்த்தியும் அச்சூழ்கையை செறுக்கிறார்கள். நடுவே அங்கர் நின்று இளைய பாண்டவருடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்” என்றான் படைத்தலைவன். “பொழுதணைந்துகொண்டிருக்கிறது… நாம் இன்னமும் செறுபோர் புரிந்தபடியே காலம் கடத்துகிறோம்” என்றான் திருஷ்டத்யும்னன். “இளைய பாண்டவர் பின்னடையட்டும். சூழ்ந்துகொள்பவர்களுடன் போரிடுவது பயனற்றது. பொழுது வீணாகும்… பொழுதே இன்று அவர் உயிர் ஈரும் வாளெனக் கொள்க!” என்றான் திருஷ்டத்யும்னன்.
கவசப்படைக் கதவைத் திறந்து அப்பால் கௌரவர்களுடன் அர்ஜுனன் பொருதிக்கொண்டிருந்த போர்முனை நோக்கி திருஷ்டத்யும்னன் எழுந்தான். அர்ஜுனன் கர்ணனை அம்புகளால் அறைந்து அறைந்து பின்னடையச் செய்தான். மறுபக்கம் சிகண்டி அம்புகளைத் தொடுத்தபடி கர்ணனை நோக்கி வர அவர்களுக்கிடையே போர் மூண்டது. சுருதகீர்த்தியை அம்புகளால் அடித்து பின்னடையச் செய்த அஸ்வத்தாமனை நோக்கி அர்ஜுனன் தன் அம்புகளை திருப்பியபோது பூரிசிரவஸ் நாணொலி எழுப்பியபடி களத்திலெழுந்தான். சதானீகனை அம்புகளால் அறைந்தபடி “என் தமையனின் குருதிக்கு நிகர்செய்ய வந்துள்ளேன். எடு உன் அம்புகளை…” என்று கூவினான். “உன் குருதியால் இன்று அவருக்கு நீர்க்கடன் கழிக்கிறேன்” என்று அம்புகளால் சதானீகனை அறைந்தான். அந்த அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் சதானீகன் பின்னடைந்தான். அவன் தேர்த்தூண்களில் பூரிசிரவஸின் அம்புகள் தைத்து செறிந்து நின்றன.
சுருதகீர்த்தியும் சுருதசேனனும் இரு பக்கமும் எழுந்து சதானீகனை காத்தனர். ஆனால் பூரிசிரவஸ் சீற்றம்கொண்டிருந்தான். அவனுடைய அம்புகள் அவர்கள் மூவரையுமே திகைக்கச் செய்தன. சுருதகீர்த்தி தோளில் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்தான். அர்ஜுனன் அவ்வோசை கேட்டு திரும்பிநோக்கி நாணொலி எழுப்பியபடி பூரிசிரவஸை நோக்கி சென்றான். “ஆம், நான் பழிகொள்ளவேண்டியது உங்களைத்தான்… இவர்கள் உங்களிடமிருந்து எழுந்தவர்கள்” என்றபடி பூரிசிரவஸ் அர்ஜுனனை நோக்கி பாய்ந்து அணுகினான். இருவரும் அம்புகளால் சந்தித்துக்கொண்டார்கள்.