கார்கடல் - 54
ஏகாக்ஷர் சொன்னார்: போரில் ஒவ்வொருவரும் பிறிதொருவராக மாறிக்கொண்டிருப்பதை தொடக்கம் முதலே திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆடைகளை உதிர்த்து, தோல்கழற்றி, ஊன்அகற்றி உள்ளிருந்து எழுபவர்கள்போல தோன்றினர் அனைவரும். ஒவ்வொருநாளும் அறிந்தவர்கள் உடலுக்குள் மாறிக்கொண்டிருந்தனர். இறந்தவர்கள் அனைவரும் இருப்பவர்களுக்குள் முளைத்தெழுந்ததுபோல. துயில்கையில் அவர்கள் மண்ணுக்குள் இறங்கி இருளுலகுகளில் ஆடி மீண்டும் எழுந்து வருவதுபோல. ஒருநாள் உணர்ந்தவற்றுக்கு மறுநாள் எப்பொருளும் இல்லை என்பதே படைக்களத்தின் நெறி என அவன் உணர்ந்தான்.
“இது தூயநீர். தழுவி குளிரச்செய்து தூய்மை அளிக்கிறது. இது குருதி. நீர்மையின் அனல். ஒவ்வொருவரையும் எரித்து உருக்கி மீட்டு வார்க்கிறது” என்று துருபதர் அவனிடம் சொன்னார். முதல் நாள் குருக்ஷேத்ரத்தை வந்தடைந்து ஆங்காங்கே அமைந்த பின்னர் அந்தியில் குறுங்காட்டில் முள்சூடி நின்றிருந்த கருவேல மரத்தின் அடியில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். துருபதர் மடியில் வாளை வைத்து புழுதியில் கால்நீட்டி அமர்ந்திருந்தார். காற்றில் அவருடைய தாடியும் குழல்கற்றைகளும் பறந்துகொண்டிருந்தன. விழிகளை இருள் நிறைந்திருந்த குறுங்காட்டின்மேல் பதித்திருந்தார். “போர்க்களத்தை வந்தடைவது வரைதான் வஞ்சங்கள் விசையுடன் இருக்கும் என்று நூல்கள் சொல்கின்றன. போர்க்களத்தில் அங்குள்ள நெறிகளை நடத்தும் தெய்வங்கள் ஆள்கின்றன. அங்கு வந்தவர்களின் உள்ளங்களை ஆளும் தெய்வங்களும் படைக்கலங்களைக் கொண்டு விளையாடும் தெய்வங்களும் இணைந்துகொள்கின்றன. பின் அவையே அனைத்தையும் முடிவு செய்கின்றன. அவை வஞ்சங்களை அறிவதில்லை. அவற்றுக்கு நேற்றுகளும் நாளைகளும் இல்லை.”
“தன் வஞ்சத்தை நோன்பெனக்கொண்டவர், அதை முற்றவைத்து தவம் என்று ஆக்கிக்கொண்டவர் மட்டுமே பெருங்களத்தில் அதை ஈடேற்றுவர். மைந்தா, இப்பெரும்போர் இங்கு வந்த ஒவ்வொருவரையும் உருமாற்றிக்கொண்டிருக்கிறது, பழைய நகைகள் பொன்னுக்கு மீண்டு புது அச்சில் மறுவடிவு கொள்வதுபோல். இங்கு எவரும் நேற்றை நினைவுறுவதுபோல் தெரியவில்லை. விட்டுவந்த எதுவும் எவருடனும் இல்லை. எய்தும் கணக்குகளையும் நான் காணவில்லை. இங்கிருந்து மீள்வதைப் பற்றிய எண்ணம்கூட எவரிலும் இருப்பதாகத் தோன்றவில்லை” என்றார் துருபதர். அவன் அவருடைய நோக்கு பதிந்திருந்த குறுங்காட்டை தானும் நோக்கிக்கொண்டிருந்தான். அங்கிருந்து அஞ்சிய விலங்குகளின் ஓலங்களும் முரலல்களும் சருகுக்காலடிகளும் கேட்டுக்கொண்டிருந்தன. காற்று உடலில்லா விலங்கென இலைகளை உலைத்தபடி ஊடுருவி ஓடியது.
“எண்ணுக, நாம் இங்கு வந்தது மண்ணுக்காக அல்ல! பாஞ்சாலத்தின் ஐந்துநீர் பெருகும் களத்திற்கு அப்பால் நமக்கென்றொரு நிலம் இருக்க இயலாது. இருந்தாலும் அதை நம்மால் ஆள முடியாது. இப்போரால் நாம் வெற்றிச்சிறப்போ குடிப்பெருமிதமோ கொள்ள வேண்டியதில்லை. இப்பாரதவர்ஷத்தின் தொன்மையான ஐந்து ஷத்ரிய குடிகளில் ஒன்று நமது. நமது முன்னோர் ஆயிரம் நூல்களை சொற்களால் நிறைக்கும் வெற்றிகளையும் புகழையும் அடைந்துவிட்டிருக்கிறார்கள். நாம் இங்கு வந்தது வஞ்சத்தின் பொருட்டு மட்டுமே. என் குருதி கலந்த நஞ்சு நீ என உருவெடுத்து இக்களத்தில் நின்றுள்ளது. நான் உதிர்த்த விழிநீருக்கு நிகர்செய்யும் பொருட்டன்றி வேறு எதன்பொருட்டும் நீ நிலைகொள்ளவில்லை என்று உணர்க! ஒவ்வொரு காலையும் விழித்தெழுகையில் அவ்வஞ்சினத்தை இழுத்து உன் தலை மேல் முடி என சூடிக்கொள். உன் தெய்வம் என்று தலைமேல் கொள். உன் நிழலென்று உடனிறுத்திக்கொள்.”
“ஆம், ஒவ்வொரு நாளும் அது அகன்று அகன்று சென்றிருக்கும். ஒவ்வொரு முறையும் அறியாத முகம் கொண்டு நின்றிருக்கும். அனைத்துக்கும் அப்பால் அது கணந்தோறும் பொருளின்மை கொண்டிருக்கும். ஆயினும் நீ அதை இழந்தால் இப்போரை முற்றாக இழந்தவனாவாய். இங்கிருந்து நான் விண் நீங்குகையில் என் வஞ்சம் எஞ்சியிருக்குமெனில் எனக்கு பிறிதொரு பிறப்புண்டு. இவ்வஞ்சத்துடன் மறுபடியும் கருவுறைவேன் எனில் அது நீங்கா பெருந்துன்பம் சூடி எழும் வாழ்வென்றே அமையும்” என்று துருபதர் சொன்னார். “தந்தையென இப்புவியில் உனக்கு நான் ஆணையிடுவது இது ஒன்றே. மைந்தனென நீ எனக்கு அளிப்பதும் பிறிதொன்றுமில்லை. பழிகொள்க! குருதியால் என் வஞ்சத்தைக் கழுவி தூய்மைசெய்க!” அவர் கலைந்து எழுந்தமைந்து தன் ஆடையை சீரமைத்துக்கொண்டார். அவர் விழிகளின் செவ்வொளி அரையிருளில் தெரிந்தது.
திருஷ்டத்யும்னன் “ஆம், தந்தையே. நான் ஒவ்வொரு நாள் விடியும்போதும் நாளின் இறுதி அணைவின்போதும் அவ்வஞ்சத்தையே எண்ணிக்கொள்கிறேன். அதில் விழித்து அதில் துயில்கிறேன். இந்தக் களத்தில் நூறு திட்டங்களுடன், நூறாயிரம் சொற்களுடன் அவையாடுகையில்கூட அடியில் அவ்வஞ்சம் நின்றுகொண்டுதான் இருக்கிறது. அவ்வஞ்சம் நிறைவேறாமல் இப்புவியிலிருந்து நான் அகலப்போவதில்லை” என்றான். துருபதர் பெருமூச்சுவிட்டு மிக மெல்ல தளர்ந்து “எண்ணுகையில் மிகமிகச் சிறிதென்றுதான் தோன்றுகிறது. படைமுன் என் சிறுமையை நிகழ்த்தியவன் இன்று என் மகளின் கொழுநன். அவனும் அவன் உடன்பிறந்தாரும் வெற்றிகொண்டு வாகை சூடுவதற்காகவே இங்கு உயிர் அளித்து போரிட வந்துள்ளனர் என் மைந்தரும் படையினரும். என் செல்வமும் படையும் இங்கு வந்து குவிந்திருக்கிறது. ஆனால் என் வஞ்சம் முழுக்க அவரிலேயே குவிந்திருக்கிறது” என்றார்.
“ஒவ்வொரு நாளும் நான் கேட்டுக்கொள்வதுண்டு, அவ்வஞ்சத்தின் உச்சம் என்ன என்று. அதற்கு விடை ஒன்றே. நான் அவராக முயன்றவன். அவரல்ல நான் என்று கண்டு பின்திரும்பியவன். என் கீழ்மையின் விளைவாகவே அவர் என் மேல் சீற்றம்கொண்டார். அனைத்தும் தொடங்குவது என்னிடமே. நான் வெறுப்பது என்னில் அக்கீழ்மை நிகழ்ந்த கணத்தைத்தான்.” துருபதரை நோக்காமல் திருஷ்டத்யும்னன் சொன்னான் “ஆம், எப்போதுமே பெருவஞ்சங்கள் நம் கீழ்மையை நாம் நாணுவதிலிருந்தே தொடங்குகின்றன. மேலும் மேலும் வஞ்சம்கொண்டு நாம் மறைத்துக்கொள்வது நமது பிழைகளையே.” அவன் அவ்வாறே சொல்வான் என அறிந்திருந்தும் அவர் நடுக்கு கொண்டார். பின்னர் “நான் மறுக்கவில்லை” என்றார். “என் இயல்பென்று எழுந்த அச்சிறுமையைக் கண்டு இன்றும் உளம் குமட்டுகிறேன். ஆனாலும் என்னால் துரோணர் மீதான வஞ்சத்தை கடக்க இயலவில்லை.”
“ஏனெனில் நான் கொள்வதற்கு பிற இலக்கெதுவும் இப்புவியில் இல்லை” என அவர் சொன்னார். “நெடுங்காலமாக இவ்வஞ்சத்தை சுமந்தலைந்துவிட்டேன். என் உடனுறைத் தெய்வம்போல அது நின்றிருக்கிறது. அதற்கு என் ஊனுடலை, உயிரை, ஆத்மாவை அளிப்பேன் என்று சொல்லளித்துவிட்டேன். இனியொன்றும் செய்வதற்கில்லை.” துருபதரை நோக்கி திருஷ்டத்யும்னன் சொன்னான் “தந்தையே, தாங்கள் எனக்களித்த ஆணை இப்பிறவியின் என் இலக்கு. ஆயினும் ஒன்றுரைக்க விரும்புகிறேன், இந்த வஞ்சம் நிறைவேறும்போது நீங்கள் பிறவிநிறைந்து விண்ணுலகு ஏகப்போவதில்லை. அப்போது உங்கள் வஞ்சத்தால் மறைக்கப்பட்டிருக்கும் சிறுமை மேலெழுந்து வரும், உங்கள் கீழ்மையை நீங்கள் மேலும் கூர்வலியாக உணரவைக்கும் பிறிதொன்று இன்னும் ஆழத்திலிருந்து எழுந்து வரும்.”
துருபதர் தலை நடுங்கிக்கொண்டிருக்க அவனை நோக்கினார். “அது இப்புவியில் நீங்கள் பேரன்பு கொண்டிருப்பது துரோணரிடம் மட்டுமே எனும் உண்மை” என்றான் திருஷ்டத்யும்னன். துருபதர் வலக்கை இழுபட உடல் அதிர்ந்தார். “எக்கணம் துரோணர் களம்படுகிறாரோ அக்கணத்தில் நீங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவீர்கள். நெஞ்சுலைந்து விழிநீர் வார களத்தில் நின்றிருப்பீர்கள். இங்கு துரோணரன்றி பிறிதெவரும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று உணர்வீர்கள். பின்னர் அக்கடனை தீர்ப்பதற்காக மீண்டும் பிறந்தெழுவீர்கள். துரோணரின் உடன்குருதியினராக எங்கோ நீங்கள் மீண்டும் எழலாம். அல்லது துரோணரின் பிறவி எதிரியாக நிகழலாம்” என்றபின் அவரை நோக்காமல் “தெய்வங்கள் புன்னகைக்குமென்றால் ஒருவேளை அவரும் நீங்களும் தந்தை மைந்தன் என்றும் பிறப்பெடுக்கலாம்” என்றபடி எழுந்து குடில்களை நோக்கி நடந்தான்.
துருபதர் உடல் குறுக்கி கைகளைக் கோத்து தலை குனிந்து அமர்ந்திருந்தார். மரத்தடியிலிருந்து அகல்கையில் அவரிலிருந்து ஒரு மெல்லிய விம்மலோசை எழுந்தது என்று அவனுக்கு தோன்றியது. அல்லது மூச்சொலி. துயரமோ ஆறுதலோ நிலைமீளுதலோ எதுவோ ஒன்று.
அரவான் சொன்னான்: போர்மூண்ட பின்னர் துருபதர் ஒவ்வொரு நாளும் குறுகிக்கொண்டே சென்றார். ஒருகட்டத்தில் முன்பு துரோணரால் சிறுமையுற்று வஞ்சம்கொள்ள துடித்து கங்கைக்கரையினூடாக ஐந்துநீர்க்கூடல்களை நோக்கி சென்ற நோயாளியாகவே மாறினார். திருஷ்டத்யும்னன் அக்கதைகளை சூதர்கள் பாடி கேட்டிருந்தான். உடல் சிறுத்து, தசைகள் வற்றி, சிறு புழுவென மாறி, இரு விழிகள் மட்டும் அனலென்றெரிய, தூளியில் படுத்திருந்த துருபதரை ஏவலர்கள் தூக்கிக்கொண்டு சென்று ஐந்துநீர்க்கூடல்களிலும் முழுக்காட்டிக் கொண்டுவருவதன் சித்திரத்தை பலமுறை அருகென, மெய்யென கண்டிருந்தான். ஒருமுறை இரவில் குடிலை இயல்பாகத் திறந்து மஞ்சத்தில் படுத்துக்கொண்டிருந்த துருபதரை கண்டபோது ஒருகணம் எவர் எனத் துணுக்குற்று பின்னர் அவர் அந்த வடிவை மீண்டும் சென்றடைந்திருக்கிறார் என்று தெளிந்தான்.
துருபதர் கருக்குழவிபோல் உடலை வளைத்து சுருண்டு படுத்திருந்தார். மூச்சு எழுந்து அமைந்துகொண்டிருந்த சீர்துயிலிலும் முகம் வஞ்சத்தின் வெறிமுனையில் சுழித்து நெளிந்துகொண்டிருந்தது. அவர் உதடுகளில் ஏதோ சொல் நிகழ்ந்துகொண்டிருப்பதுபோல் தோன்ற ஓசையிலாக் காலடிகளில் அணுகி குனிந்து அவரை பார்த்தான். அச்சொல் துரோணர் என்றிருக்கும் என்று அவன் எண்ணினான். அல்ல என்று தெளிந்தபோது பிறிதெது என ஐயுற்று முழந்தாளிட்டு அமர்ந்து மேலும் அருகே செவி கொண்டுவைத்தான். செவியால் அதை அறியமுடியாதென்று உணர்ந்து விழிநட்டு அவ்வசைவை நோக்கினான். அவன் அறியாத ஏதோ சொல். அவரும் அறியாததாகவே அது இருக்கக்கூடும்.
பின்னர் எழுந்து சலிப்புடன் வெளிவந்தான். திரும்பிப்பார்த்தபோது உடல் வற்றி, விழி எரிய, வஞ்சம் உடலெடுத்ததுபோல் அவர் அங்கு கிடப்பதை கண்டான். இக்களத்தில் கொல்லப்படுவது ஒன்றே அவர் வாழ்வுக்கு நிறைவளிக்கும். தெய்வங்களே, அவ்வஞ்சம் நிறைவேறிய பின்னர் இவர் கொல்லப்படுவதாக என்று வேண்டிக்கொண்டான். அன்று மீண்டும் வானோக்கி விண்மீன்கள் மேல் விழிநிலைக்கவிட்டான். காற்று சூழப் பறந்துகொண்டிருந்தது. அவன் களம்பட்ட கௌரவ மைந்தர்களை எண்ணிக்கொண்டிருந்தான். அவர்கள் எங்கிருந்தோ அவனை நோக்கிக்கொண்டிருப்பது போலிருந்தது. அவர்களை ஏன் எண்ணினோம் என அவன் நிலைமீண்டபின் வியந்தான். திரும்பி தன் குடிலுக்குச் சென்றபோது வேறெதிலோ எண்ணம் தொட்டலைந்தபோது உணர்ந்தான், முற்றிலும் வஞ்சமற்ற அவர்களின் விழிகள் தனக்கு எவ்வகையில் பொருட்டு என்று.
துரோணர் மறுபக்கம் மாறிக்கொண்டிருப்பதை அவன் பார்த்தான். குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய பின்னர் பன்னிரண்டு முறை அவன் துரோணருடன் வில் கோத்தான். அவர் எதையும் அறியாதவர்போல, அங்கு நிகழும் அனைத்திற்கும் அப்பால் அமைந்திருப்பவர்போல தோன்றினார். எப்போதும் போர்க்களத்தில் அவரிடம் ஒரு புன்னகை இருந்தது. களச்சூழ்கைகளில் அவர் ஆணைகளை விடுப்பதில்லை. போரின்போது அவரிடமிருந்து வஞ்சினங்கள், சூளுரைகள் எழுவதுமில்லை. அவருடைய கைகளும் கண்களும் போரை நிகழ்த்த அதை அவர் அறியாதவர் போலிருந்தார். அவருடைய அந்த விலக்கமே அவருடன் பொருதுபவர்களை அஞ்சச் செய்தது. அவருடைய கண்களையும் முகக்குறிகளையும் நோக்கி கைகள் இயற்றப்போவதென்ன என்று எவராலும் உய்த்துணர இயலவில்லை. கைகளையும் அம்புமுனைகளையும் மட்டுமே நோக்கி அவருடன் போரிட வேண்டியிருந்தது. ஆனால் அப்போது மிக அருகே நின்று அவர் அப்போரை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதாக தோன்றி சித்தம் பிரிந்து நிலையழிந்தது.
எப்போரிலும் எவரும் துரோணரை அம்பால் அறைய இயலவில்லை. களமெழுந்த பிறர் அனைவருமே தலைக்கவசங்கள் அணிந்திருந்தனர். துரோணர் மட்டுமே சுருட்டி தலைமேல் கட்டிய வெண்கூந்தலும் நீண்டு மார்பில் தொங்கிய தாடியுமாக வெறும் தலையுடன் களத்திற்கு வந்தார். அது ஓர் அறைகூவலென்று தோன்ற அவருடன் போரிடும் ஒவ்வொருவரும் அவருடைய தலை நோக்கியே அம்புகளை எய்தனர். முதல் இரண்டு நாட்களிலேயே அவரது தலையை நோக்கி ஓர் அம்பு கூட சென்றடைய இயலாது என்பதை அர்ஜுனன் கண்டுகொண்டான். பிற அனைவருக்கும் வலை நடுவே வைத்த இரை என அத்தலை ஈர்ப்பு அளித்து அதை நோக்கியே அம்பு தூக்கச் செய்து உயிர் பலி கொண்டது.
திருஷ்டத்யும்னன் முதல் மூன்று முறை அவருடன் போர்புரிந்தபோது தன் அம்புகளால் அவர் கழுத்தை அறுக்க முயன்றான். அம்பு எடுப்பதற்குள், அவ்வெண்ணம் நெஞ்சில் எழுவதற்குள், அவர் அதை அறிந்துவிட்டிருந்தார். அவன் எடுத்த அம்பு நாணில் எழும்போது ஒருகணத்திற்கு முன்னரே அதை வெல்லும் அம்பு அவர் கையில் எழுந்து விண்ணில் பறந்துவிட்டிருந்தது. குழந்தைகளின் விளையாட்டில் ஈடுபடும் முதியவர் போலிருந்தார். அவனுடைய அம்புகளை அவருடைய அம்புகள் உடைத்து சிதறடித்தன. பலமுறை அவன் அம்பை உடைத்தபின் அவருடைய அம்பு வந்து அவன் வில்லையும் அம்பறாத்தூணியையும் சிதறடித்தது. அவனுடைய கவசங்களை அவர் பலமுறை உடைத்தெறிந்தார். பலமுறை அவன் பாகனை கொன்றார். தேர்ப்புரவிகளைக் கொன்று அவன் தேருடன் கவிழ்ந்துவிழச் செய்தார். வெற்று நிலத்தில் அவன் தப்பியோடியபோது அவன் காலடிபட்ட இடங்களிலெல்லாம் அவருடைய அம்புகள் வந்து தைத்து நின்று நடுங்கின.
தப்பி ஓடி தன் படையை அடைந்து பிறிதொரு தேரில் ஏறிக்கொண்டு திரும்பிப்பார்த்தபோது தான் வந்த வழியில் வரப்பில் நாணல்கள் செறிந்து நிற்பதுபோல் அவருடைய அம்புகளின் நிரையை கண்டான். அவர் தன்னுடன் விளையாடுகிறார் என்று எண்ணி சீற்றம்கொண்டான். பின்னர் அறிந்தான், அவர் தன்னை கொன்றிருக்கக்கூடுமெனில் முதல்நாள் முதல் போரில் அவருக்கு நேர்நின்றபோதே அது நிகழ்ந்திருக்கும் என்று. அவர் தன்னை மைந்தனென்றும் மாணவன் என்றும் மட்டுமே கொள்கிறார் என்று அவன் அறிந்தான். போர்க்களத்தில் அவனுடன் பேசுகையில் எல்லாம் “பாஞ்சாலனே” என்று அவர் அழைத்தார். ஏழாவது முறை அவருடன் போரிடுகையில் அவர் “துருபதனே!” என அழைத்தபோது அவன் நெஞ்சு நடுங்கியது. “துருபதனே, செல்க! இங்கு எதுவும் நாம் அளிக்கும் பொருள் கொண்டதல்ல” என்று அவர் சொன்னபோது உடைந்த வில்லும், சிதைந்த அம்புத்தூளியும், சரிந்து நின்ற தேருமாக அவன் அவர் முன் பணிந்து உயிர்கோரும் நிலையில் இருந்தான்.
புன்னகையுடன் அவனை நோக்கி “செல்க!” என்று மீண்டும் சொல்லி துரோணர் தேரை திருப்பிக்கொண்டார். அன்று அவன் உணர்ந்தான், அவன் தன் உடலில் கொண்டிருப்பது துரோணரால் கொடையளிக்கப்பட்ட உயிரை என. முன்னரும் பலமுறை அது அவ்வாறு அளிக்கப்பட்டிருந்தது என்பதை அவன் தனக்குத்தானே உணர்ந்தான். அன்றிரவு தன் பாடிவீட்டில் புரண்டு படுத்தபடி அவன் துரோணரை எண்ணிக்கொண்டான். துரோணரின் குருகுலத்தில் அவன் வில் பயின்றபோது ஒவ்வொரு முறையும் அவன் தோள்களையும் கைகளையும் பிடித்து இலக்கை நோக்கி நிறுத்தி தலைக்குப்பின் தன் முகத்தை கொண்டுவந்து அவனுக்குள் இருந்து எழும் குரல் என “ஒன்றென குவிக! இதை வென்றபின் அடைவதொன்றுமில்லை என்று கொள்க! வெல்லாவிடில் எவர் முன்னும் தோற்கவில்லை என்றுணர்க! இங்குள்ள அனைத்தையும் வெறும் விளையாட்டென மாற்றிக்கொள்பவனே வெல்கிறான்” என்று அவர் சொன்னார்.
அவன் ஒருமுறை அவரது கால்களைக் கழுவி பணிவிடை செய்துகொண்டிருக்கையில் “ஆனால் பெருவஞ்சங்களே பெருவீரர்களை உருவாக்குகின்றன என்கிறார்களே?” என்று கேட்டான். “அல்ல, பெருவஞ்சங்களை சுமந்தலைபவர்கள் வீரர்கள் அல்லர். அவை பாறைகள்போல் திரண்டு அவர்களின் ஐம்புலன்களையும் அடைத்துக்கொள்கின்றன. அறிக, வஞ்சத்தால் அல்ல, விலக்கத்தால் வீரர்கள் உருவாகிறார்கள்!” என்று துரோணர் சொன்னார். “ஆனால்…” என்று அவன் மீண்டும் சொல்ல “மைந்தா, பெருவீரர்களையும் யோகிகளையும் குறித்து சூதர்கள் பாடுகிறார்கள். பெருவீரர்களும் யோகிகளும் இவ்வுலகிலிருந்து துறந்து துறந்து சென்று அந்நிலையை அடைந்தவர்கள். சூதர்களோ இவ்வுலகிலிருந்து ஒருகணமும் அகல இயலாதவர்கள்” என்றார்.
சிரித்தபடி “பல்லாயிரம் ஆண்டுகளாக பாரதவர்ஷத்தில் இதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கிருந்து அகலாதோர் இங்கிருந்து அகன்றோரை பாடிப் பாடி இவ்வுலகச் சொற்களில் நிலைநிறுத்துகிறார்கள். உணர்க, இங்குள்ள அனைத்து நூல்களிலும் யோகியரையும் வீரரையும் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்துமே பிழையானவை! அவை அவர்களை இங்குள்ள வாழ்க்கையுடனும், இவையென நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்துடனும் தொடர்புபடுத்தும் பொருட்டு உருவானவை மட்டுமே. நாமறிந்தவற்றைக்கொண்டு அப்பாலுள்ளவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அன்னத்திலும் பொன்னிலும் காமத்திலும் நிலத்திலும் நிறைந்திருக்கும் சொற்களைக் கொண்டு வெட்டவெளியின் விடுதலையை விளங்கிக்கொள்வதற்கு மண்ணிலிருந்து எழுகின்றன தொல்பாடல்கள். பெரும்காவியங்கள் என்றாகி அவை அவைப்பீடம் கொள்கின்றன” என்றார்.
“அவை பயனற்றவையென்று கூறமாட்டேன். அவை இங்குள்ள மக்களுக்கு இவற்றுக்கெல்லாம் அப்பால் ஒன்று உள்ளதென்பதை ஒவ்வொரு கணமும் நினைவுறுத்திக்கொண்டிருக்கின்றன. இங்குள்ள அனைத்தும் அந்த அப்பால் உள்ள ஒன்றால்தான் மதிப்பிடப்படுகின்றன என்பதை கற்பிக்கின்றன. இப்பெருநிலம் இங்கு இவ்வாறு இவற்றில் ஆழ்ந்து உவந்து திளைத்தபடி அப்பால் அப்பால் என்று கனவுகொண்டிருக்கிறது. இவையனைத்திலிருந்தும் பிறந்துவிழும் இளமகவிடம் அக்கதைகள் சொல்கின்றன, இவையனைத்தினூடாக அறிக பிறிதொன்றை என. அப்பாலுள்ள ஒன்றே இவை என. ஒன்றொன்றாக தொட்டுச் சென்றடைக இவையெதுவும் அல்லாத அதை என. வெல்வது என்பது விடுதலையை சென்றடைவதே என. இயற்றியவன் இயற்றப்பட்டவற்றிலிருந்து முற்றாக விலகி நிறைவுகொள்கிறான் எனில் இங்கிருக்கும் எதிலும் இவற்றை இயற்றியோன் இல்லை. இவை அவனுடைய ஒரு தருணம் மட்டுமே. இவை அவனை நோக்கி சுட்டும் அடையாளம் மட்டுமே.”
துரோணருடன் இருக்கையில் திருஷ்டத்யும்னன் உணர்ந்த ஒவ்வாமை ஒன்று இருந்தது. கற்பிக்கையில் மயில் பீலிவிரிப்பதுபோல் பிறிதொருவராக மாறி அனைத்தும் அறிந்து, அறிந்த அனைத்தையும் அளிக்கும் பேரளி கொண்டு அவர் தோன்றினார். குறும்பலவின் நிழலில் அமர்ந்திருக்கும் தென்திசை முதல்வன் மானுட வடிவெடுத்ததுபோல. பின்னர் அங்கிருந்து இறங்கி எளிய தந்தையாக, உலகுநாடும் அந்தணனாக உருக்கொள்கையில் தன் சொற்களில் இருந்து தன்னை மேலும் மேலும் விலக்கி அகன்றார். ஆசிரியனாக அன்றி வேறெவ்வகையிலும் அவரை எண்ணிக்கொள்ளக்கூடாதென்று அவன் தனக்கே ஆணையிட்டான். “பறக்கையிலேயே பறவை, பாய்கையில் மட்டுமே புரவி. ஆசிரியன் கற்பிக்கையில் மட்டுமே அவன்” என்று அவனிடம் கிருபர் சொன்னார். “அவரது காலடிகளை மட்டுமே நெஞ்சில் நிறுத்திக்கொள்க! ஆசிரியர் தன் அடிகளால் உன் அகம் அளந்து அப்பால் செல்பவர். அடிகளுக்கு அப்பால் ஆசிரியரை நோக்குபவன் கல்விக்கு கரையிடவே முயல்கிறான்.”
துரோணர் ஆசிரியரென்று களத்திற்கு வந்தார். ஒவ்வொரு நாளும் உருமாறி எளிய போர்வீரனாக ஆகிக்கொண்டிருந்தார். அவரை அவ்வாறு சீற்றமும் சிறுமையும் கொள்ளச் செய்வதற்காகவே கௌரவப் படையினர் அவரைச் சூழ்ந்து மன்றாடுகிறார்கள் என்று திருஷ்டத்யும்னனுக்கு தோன்றியது. துரோணர் கொண்ட மாற்றம் அவரின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டது. அதை அந்தப் படைப்பெருக்கில் மிக அணுக்கமாக உணரக்கூடியவனாக அவனே இருந்தான். முதல் நாள் தேரில் தவத்தில் அமர்வதுபோல் அவர் களத்தில் தோன்றியபோதே காற்று படும் சுடரில் கருமை தோன்றி மறைவதுபோல் ஒரு சில அசைவுகளில் அவருள் இருந்த தந்தையும் அந்தணனும் தெரிந்து செல்வதை அவன் கண்டிருந்தான். பின்னர் போரின்போது ஆடி நோக்குகையில் நிழலும் அதிலெழுந்தாடுவதுபோல் அந்தப் பிறிதொரு துரோணர் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தார். பின்னர் அந்தப் பிறிதொருவரே நிலைத்து அவன் அறிந்த தென்திசை முதல்வன் ஆடியின் ஆழத்தொலைவில் சிறு துளிச்சுருள் என மாறி அகன்றார்.
யுதிஷ்டிரரை சிறைகொள்ள வந்த அன்று அவன் கண்ட துரோணர் அந்தணர் திரிந்த ஷத்ரியர். ஷத்ரியனாக விரும்பும் அந்தணனும், வணிகம் செய்யும் ஷத்ரியனும், ஏவல் இயற்றும் வைசியனும், கட்டற்றவனாக கான் விரும்பும் சூத்திரனும், விலங்குகளைபோல் மாற விழையும் நிஷாதனும், மண்ணில் அகழ்ந்து புழுவென்று சுருண்டு கொள்ளும் விலங்கும், முட்டையென்றாகிச் சுருளும் புழுவும் தங்கள் நிலையிலிருந்து கீழிறங்குபவை என்ற தொல்நூல் கூற்று துரோணரால் ஒருமுறை அவனுக்கு கற்பிக்கப்பட்டது. அதை சொல்கையில் அவன் உள்ளத்தில் எழுந்த ஐயத்தை உணர்ந்தவராக அவன் கண்களை நோக்கி புன்னகைத்து அவர் சொன்னார் “ஆனால் எந்த இசைக்கலமும் அதன் வடிவால் அதற்குள்ளிருக்கும் காற்றுக்குள் ஓர் இசையை நுண்வடிவில் வைத்திருக்கிறது. எவ்விரலானாலும், எந்தக் குரல் நுழைந்தாலும் அதனுள் இருக்கும் அவ்விசையை மீட்ட முடியும். வீணை முழவாவதில்லை, முழவில் யாழெழுவதும் இல்லை.”
போர்க்களத்தில் துரோணர் தவமொழிந்து வஞ்சமும் வீம்பும் கொள்ளுந்தோறும் அவரை எதிர்ப்பது எளிதாவதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். முகம் நோக்கி வஞ்சினம் உரைத்து அவரை தாக்க முடிந்தது. வெறிகொண்டு தாக்கிச் செல்கையில் ஒருகணத்திலேனும் அவர் விழிகளுக்குள் சினம் மின்னி அணைவதை அவன் கண்டான். நூறு முறை சினம் எழுந்தணையும்போது ஒருமுறை அச்சமும் தோன்றி மறைவதை அவன் உணர்ந்தான். ஒவ்வொரு அறிதலும் அவனை ஆற்றல் கொண்டவனாக்கியது. போர் தொடங்கிய நாள் முதல் அவன் துரோணரை தேடிச்சென்று தாக்கவில்லை. இயல்பாக இருவரின் விழைவும் ஒன்றையொன்று நாடியதுபோல் அவர்கள் களத்தில் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் வில்கோத்துக்கொண்ட மறுகணமே சூழ்ந்திருந்த அனைவரும் அவனை நோக்கலாயினர். இப்போது நிகழும் அது, இதோ இக்கணம் என எண்ணி காத்திருந்தனர்.
ஒவ்வொருமுறையும் அவன் அவரிடமிருந்து மீள்கையில் உடல் ஓயும் சலிப்பையும் விந்தையானதோர் நிறைவையும் அடைந்தான். மீண்டும் மீண்டும் என அவன் உள்ளிருந்து பிறிதொன்று நிமிர்ந்து எழுந்தது. ஆனால் விழைந்து திட்டமிட்டு அவன் அவரை நோக்கி செல்லவில்லை. அவரை அஞ்சுகிறேனா என்று தன்னுள் கேட்டுக்கொண்டான். இல்லை இல்லை என்று நூறு முறை மறுத்தாலும் ஆமென்று ஒரு ஒலியும் அவனுள் எழுந்துகொண்டேதான் இருந்தது. பின்னர்தான் அவன் அவரை எண்ணி, தேடிச் செல்லலானான். எட்டு முறை அவன் அவரை களத்தில் சந்தித்தான். ஒருமுறை அவரை விற்களால் அறைந்து பின்னடையவும் செய்தான். அன்று திரும்பி வருகையில் அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான் “ஆம், அது நிகழும்.” அச்சொற்கள் அவன் கொண்ட அனைத்து அக அலைச்சல்களையும் அணைத்து அவனை அமைதிப்படுத்தின. அம்பின் கூர்நுனியை கைவிரலால் வருடுவதுபோல் மெல்லிய கிளர்ச்சி ஒன்றை மட்டும் எஞ்சவைத்தன.