கார்கடல் - 51
அரவான் சொன்னான்: நாகர்களே, கேளுங்கள். இன்று கௌரவப் படையின் அணிகுலைத்து கௌரவர்கள் நால்வரின் குருதியை உடலெங்கும் அணிந்து பாதாளத்திலிருந்து எழுந்து வந்த கொடுந்தெய்வம்போல் வெறித்த விழிகளும் விரித்த வாயுமாக கைகளில் நிணம் வழுக்கும் பெருங்கதாயுதத்துடன் களத்தில் நின்றிருந்த பீமனை நான் கண்டேன். அவன் ஓடிச்சென்று தன் தேரிலேறுகையில் தன் கையின் நிழல் நீண்டதொரு நாகம்போல் வளைந்து தேர்கள் மேல், புரவிகள் மேல், நிலத்திலென இழைந்து தன்னை அணுகுவதை கண்டான்.
ஒரு கண விழிதிரும்பலில் அவன் திகைத்து பிறிதொரு காலத்தை சென்றடைந்தான். அங்கு அவன் முன் நீண்ட வெண்தாடியுடன் வெண்ணிறமான பெருந்தோள்களுடன் இடைக்குக்கீழ் நூறு சுருள்களாக நெளியும் நாக நீளுடலுடன் ஆரியகன் நின்றிருந்தார். “மைந்தா, இன்று உனது நாள். உன்னுடன் நாங்கள் இருக்கிறோம். உன்னுடலில் குடிகொள்கிறோம். செல்க, இன்று உன்னை கொல்லும் ஆற்றல்கொண்ட அங்கநாட்டு அரவம்பனை வெல்க! இன்றே தருணம். இன்று முழுக்க நாங்கள் உன்னுடன் இருப்போம். இன்று மட்டுமே உன்னால் அவனை வெல்லமுடியும் என்று உணர்க!” என்றார். அவர் நா பிளந்து பறந்தது. இமையா மணிக்கண்கள் ஒளிகொண்டிருந்தன. நூறுமுறை மண்ணை எரித்தழிக்கும் வஞ்சமும் சினமும் கொண்டவராக தெரிந்தார். பொறுமையிழந்து அவருடைய உடற்சுருட்கள் நெளிந்தமைந்தன.
பீமன் திகைப்புடன் “நீங்கள் யார்?” என்றான். “ஆழுலகத்து மாநாகமாகிய என் பெயர் ஆரியகன். உன்னை ஆற்றல்மிக்கவனாக ஆக்கிய நஞ்சை உனக்கு அளித்தவன்” என்றது மாநாகம். “ஆம், உங்கள் முகத்தை நினைவுறுகிறேன். ஆனால் அன்று அழகிய தோற்றமும் இனிய குரலும் கொண்டிருந்தீர்கள்” என்றான் பீமன். “அது நான் உனக்களித்த நாக அமுதத்தின் அழகும் இனிமையும். இங்கே புவிக்குமேல் நாங்கள் கொடுந்தோற்றம் கொள்கிறோம், எங்கள் அமுது இங்கே நஞ்சென்றாவதுபோல” என்றார் ஆரியகன். “செல்க, முழு விசையாலும் அங்கனை எதிர்த்துக் கொல்க! இல்லையேல் அவன் உன் இளையோனை இன்றே கொல்வான்.” பீமன் எரிச்சலுடன் “என் இளையோன் வெல்லப்பட இயலாதவன்” என்றான். “தெய்வத்தால் செலுத்தப்படும் தேரிலமர்ந்திருப்பவன் அவன். மண்ணிலிருந்து எந்த அம்பும் அவனை நெருங்க இயலாது.”
“ஆம். ஆயினும் தெய்வங்கள் விண்ணிலனுப்பிய கோள்களை அரவுகள் கவ்வுவது உண்டு என்று உணர்க! இன்றே அங்கனை கொன்று எழுக! இன்று உச்சிப்பொழுதுக்குப் பின் இரண்டு நாழிகைப் பொழுது கதிரோனின் ஆற்றல் குறையும். ராகுவும் கேதுவும் விடுக்கும் வான்நிழல் அவ்வெம்மையை சூழ்ந்து குளிர்விக்கும். அப்போது நாகங்களின் ஆற்றல் ஆயிரம் மடங்கு பெருகும். அந்தப் பொழுதில் அங்கனை எதிர்கொள்க! உன் தோள்கள் என நானும் என் உடன்பிறந்தானாகிய சுவீர்யவானும் அமைவோம். உன் அம்புகளில் எங்கள் குடியின் அனைத்து நாகங்களும் ஏறிக்கொள்வோம். அம்புகளில் விசைகூட்டுவோம். அவற்றின் கூர்களில் நஞ்சு நிறைப்போம். இன்று நீ அவனை வென்றால் இப்போர் முடிவுறுகிறதென்றே பொருள்.”
“அறிக, அவன் அம்புத்தூளியில் உறைகின்றது தக்ஷகுலத்து எஞ்சிய இளையோன் குடிகொள்ளும் தொல்லம்பு ஒன்று! எஞ்சும் துளி என்றும் பேராற்றல் கொண்டது என உணர்க! அழிந்தவை அனைத்தும் நுண்வடிவென அதில் உறைகின்றன. உன் இளையோன் அர்ஜுனனுக்காக வஞ்சத்தை தவமென இயற்றி மூத்து கூர்கொண்டு காத்திருக்கிறது அது. அதை இத்தருணத்தில் அவன் வெளியே எடுப்பான் எனில் அதன் நஞ்சு நலிவுற்றிருக்கும். அதை உன்னை நோக்கி அவன் தொடுப்பானெனில் நாங்கள் நூற்றெட்டு பேர் சேர்ந்து அதை சூழ்ந்து வென்று செயலற்றதாக்குவோம். அதன் பொருட்டே ஆழத்து நாகருலகிலிருந்து இங்கு எழுந்துள்ளோம். எழுக! இத்தருணத்தை வெல்க!” என்றார் ஆரியகன்.
பீமன் தன் கைகளை நீட்ட இரு மாநாகங்கள் எழுந்து அவன் கைகள் ஆயின. ஆனகன் என்னும் நாகம் அவன் கதை ஆகியது. கர்விதன் என்னும் நாகம் அவன் வில்லாகியது. அவன் அம்பறாத்தூணியெங்கும் நாகங்கள் செறிந்து எடைமிகுந்தது. அவன் திரும்பி “தொடர்க!” என்று ஆணையிட்டபோது பாஞ்சாலத்தின் ஆயிரம் கதைவீரர்கள் அவனைத் தொடர்ந்து எழுந்தனர். அவர்கள் அனைவர் கைகளிலும் படைக்கலங்களிலும் பாதாள நாகங்கள் குடிகொண்டன. அவர்கள் அணிதிரண்டு எழுந்தபோது குருக்ஷேத்ரப் படைக்களத்தில் அதுவரை இல்லாத குளிர் பரவியது. நாகங்களின் மூச்சுக்காற்றால் கொடிகள் அசைந்தன. புரவிகள் அஞ்சி உடல்மெய்ப்பு கொண்டு கால்மாற்றின. யானைகள் தங்கள் உடலுக்குள் உறுமிக்கொண்டன.
கவசப்படை திறந்து வெளியேறி அவர்கள் வெறிகொண்டு கௌரவப் படையை சிதைத்தபடி முன்னேறினர். ஒருபோதும் அத்தனை பேராற்றல் மானுடக் கைகளிலும் கதைகளிலும் குடியேறியதில்லை. கைநகங்களே விழிகளாக ஒற்றை அம்பும் இலக்கு பிழைக்கவில்லை. நாகங்களால் ஏந்தப்பட்ட அம்புகள் விந்தையான சீறலோசை கொண்டிருந்தன. கௌரவர்களின் படைநிரைகள் நீர்த்துகள்போல சிதறித்தெறித்தன. தங்கள் குருதிச்சேற்றிலேயே தாங்கள் வழுக்கி விழுந்தனர். கதைகள் அறைந்து சிதைத்த உடல்களின் நிணத்தில் யானைக்கால்கள் வழுக்கின. “பேயுருக்கள்! நாகங்கள்!” என்று கௌரவ வீரர்கள் சிலர் கூவினர். “நஞ்சு! அம்புகளில் நஞ்சுள்ளது!” என்று கூவியபடி விழுந்த ஒருவன் நரம்புகள் நீலநிறம் பெற்று உடல் நீரிலூறியதுபோல் உப்பிப் பெருக்க துடித்தமைந்தான். அமிலத்தால் முழுக்காட்டப்பட்டதுபோல தோல் வெந்து உரிய நெளிந்தணைந்தான்.
கர்ணன் தொலைவில் அவ்வலறல்களை கேட்டான். “வீரர் செல்க! சென்று இளைய பாண்டவர் பீமனை தடுத்து நிறுத்துக! அங்கர் எழுக! அங்கர் செல்க! இது ஆணை” என்று சகுனியின் முரசு ஒலித்தது. கர்ணன் தன் மைந்தர்களுடன் அங்கநாட்டு விற்படையினர் துணைவர வந்து பீமனை எதிர்கொண்டான். பீமன் கையில் இருந்த வில் காண்டீபத்திற்கு நிகரான விசைகொண்டிருப்பதை அவன் அன்று அறிந்தான். இருவரும் போர்புரிந்தபோது ஒவ்வொரு அம்பையும் ஏந்திக்கொண்டு வந்த நாகங்களை அவனால் காண முடிந்தது. அவை அவனை நோக்கி விழியுறுத்துச் சீறின. சிம்மம்போல் முழக்கமிட்டன. வாள்கள் என அவற்றின் வால்கள் வீசின. கர்ணன் தன் ஆவநாழியில் கைவிட்டபோது அதனூடாக அடியிலியில் நிறைந்திருந்த நாகருலகை சென்றடைந்தான். அவன் கையில் எழுவதற்காக நாகங்கள் முட்டி மோதி எழுந்தன. அவன் வில்லில் தங்களை தொடுத்துக்கொண்டு உறுமியபடி சென்று ஆரியகனின் நாகர்களை எதிர்கொண்டன.
விண்ணில் நாகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி போரிட்டன. முதலைபோல் செதில்கொண்ட, ஆயிரம் பற்கள்கொண்ட வியாஹ்ரனைத் தாக்கியது வௌவால்போல் விரியும் சிறகுகள் கொண்ட காளபக்ஷன். முகத்தில் கொம்புகள் கொண்டிருந்த உக்ரனை தடுத்துச் சுற்றிக்கொண்டது இரண்டு தலைகள் கொண்ட துவைதன். நாகங்கள் உடல் பிணைத்து விண்ணிலேயே நெளிந்து பேரோசையுடன் தரையில் விழுந்து அறைந்து எழுந்து துள்ளித் துள்ளித் துடித்தன. காளகனை கருணன் தாக்கியது. காஞ்சனனை மிருத்யுரூபன் அறைந்து அப்பால் வீழ்த்தியது. உக்ரனை உதானன் தாக்கியது. உதரனை சுகிர்தன் அறைந்தான். நாகங்களின் உடல்களே அம்புகளாகி நிகழ்ந்த அப்போர் தெய்வங்களை திகைக்க வைக்க விண்ணில் சூழ்ந்து அவர்கள் கீழே நோக்கி சொல்லடங்கி நின்றனர். நாகநெளிவுகளின் கரிய அலைகளால் கர்ணனும் பீமனும் சூழப்பட்டனர். புயலில் என களமெங்கும் தூக்கிச் சுழற்றப்பட்டார்கள்.
விண்ணில் சூரியன் உச்சிக்கோட்டை அடையுந்தோறும் ஆற்றல் குறைந்தவனானான். வானில் ஒளியிருந்தாலும் வெம்மை குறையலாயிற்று. தெற்குவானிலிருந்து நாகங்கள் ஒன்றுடன் ஒன்று உடல்பின்னியவையாக பெருகி வந்து ஒளியை மூடின. அவற்றை பிறர் முகில்திரள் என்று எண்ணினர். ஆனால் நாகங்களால் அறையப்பட்டு உடல்நஞ்சாகி விழுந்து உயிர்துறந்த வீரர்கள் இறுதிக்கணத்தில் அவை நாகப்பரப்பென அறிந்தனர். ஏரிக்கு அடியில் கிடந்து மேலே பரவியிருக்கும் நீர்ப்பாசிப்பரப்பின் நெளியும் வேர்ச்செறிவை நோக்குவதைப் போல. “நாகம்! நாகம்!” என்று நா தவிக்க அவர்கள் உயிர்விட்டனர். கதிரொளி குறையுந்தோறும் கர்ணன் ஆற்றல் குறைந்தவனானான். அவன் அம்புகளில் விசை குறைந்தது. அவன் கைநீட்டி எடுத்தபோது தயங்கியும் அஞ்சியும் நெளிந்த ஆற்றல்குறைந்த நாகங்களே ஆழுலகிலிருந்து எழுந்து வந்தன.
பீமன் தன் வெற்றிகளால் ஊக்கம் கொண்டான். களிவெறியுடன் “சூதன்மகனே, இன்று உன் குருதிகொண்டே திரும்புவேன்!” என வஞ்சினம் உரைத்தான். “என் குலமகளை சிறுமைசெய்ததன் பொருட்டு இன்று நீ மண்படிந்து விழுவாய்!” என்று கூவினான். கர்ணன் இகழ்ச்சியுடன் நகைத்து “நன்று! உன் குலமகளின் பெருமைக்காகப் பேசிய விகர்ணனைக் கொன்ற அதே கதையை எடு… அறியட்டும் தெய்வங்கள்” என்றான். பீமனின் கையிலிருந்த அம்பு தாழ்ந்தது. அக்கணம் அம்புகளை பெருக்கியபடி எழுந்தணைந்த கர்ணன் அவன் வில்லை உடைத்தான். அவன் தேர்ப்பாகனை அறைந்து வீழ்த்தினான். அவன் புரவிகளில் ஒன்று சரிந்தது. அவன் இடப்பக்க கவசங்கள் நொறுங்க அவன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி ஓடினான். அவனை அம்புகளை அடித்து அடித்து துரத்தி நகைத்த கர்ணன் “ஓடி உயிர்காத்துக்கொள், ஊன்குன்றே. இது வில்லறிந்தோரின் களம்… உனக்கு என வருவார்கள் வெற்றுத்தசை கொண்ட மல்லர். அங்கு சென்று விளையாடு” என்றான்.
பீமன் திரும்பி நோக்கியபோது கர்ணனின் நெஞ்சில் அனலென எரிந்த கவசத்தை, அவன் செவிகளில் இரு சுடர்கள் என கண்ணை வெட்டிய குண்டலங்களை கண்டான். திகைத்து கைகள் தளர நின்றான். அவன் சொல்லிக்கொண்டிருப்பதென்ன என்று அவன் செவிகள் கேட்கவில்லை. கர்ணனின் தேரை ஓட்டிய துர்ஜயன் கைசுட்டி ஏதோ சொன்னான். அவனும் செவ்வொளியில் மின்னிக்கொண்டிருந்தான். பீமனின் வலக்காலும் வலக்கையும் முற்றாகவே ஆற்றலிழந்து தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு கணத்தில் அவனுள் இருந்து உயிர் துடித்து எழுந்தது. ஓடு ஓடு ஓடு என ஆணையிட்டது. அவன் மூச்சு தெறிக்க ஓடிச்சென்று தேரிலேறிக்கொண்டான். “பின்னடையவா, பாண்டவரே?” என பாகன் கேட்டபோதுதான் நெஞ்சை அடைத்துக்கொண்டு ஒரு விம்மல் எழுந்தது. “செல்லவா?” என்று பாகன் கேட்டதற்கு அதுவே மறுமொழி என ஒலித்தது.
தேர்ப்பாகன் தேரை பின்னெடுத்த கணம் அவன் இருதோள்களிலும் நாகங்கள் விம்மிப்பருத்து பெருகியெழுந்தன. ஆரியகன் அவன் செவிகளில் “இதோ அணைகிறது கதிர்குன்றும் பொழுது. இன்றே கொல்க அவனை! அஞ்சாதே. மேலும் பெரிய அம்பை எடு! இதோ இவ்வம்பில் நான் குடிகொள்கிறேன்! இதோ இதை எடு!” என்று ஆணையிட்டார். பீமன் இன்னொரு வில்லை பெற்றுக்கொண்டு தேரில் முன்னெழுந்து சென்றான். கண்முன் ஒளியழிந்து வருவதை கண்டான். கர்ணனின் நெஞ்சில் எரிந்த கவசம் அணைந்து மஞ்சள் நெளிவெனத் தெரிந்தது. குண்டலங்களின் தழலைக் கண்டது விழிமயக்கோ என்று தோன்றியது.
அத்தருணத்தில் கர்ணனின் சொற்கள் அவன் எண்ணத்தை அறைந்தன. நெருப்பென அவனை எரியச் செய்தன. அம்புகளால் அறைந்தபடி அவன் கர்ணனை நோக்கி சென்றான். “ஆம், நான்தான் விகர்ணனை கொன்றேன். அத்தனை கௌரவர்களையும் கொல்வேன் என சொல்கொண்டவன் நான். அவனும் கௌரவனே. இன்னும் கொல்வேன். அனைவரையும் கொன்றபின் மீண்டும் பிறந்தெழுவேன். மீண்டும் மீண்டும் கொல்வேன். ஏழு பிறப்பில் அவர்களைக் கொன்று களியாடுவேன். அறிக தெய்வங்கள். நான் அறமிலி! நான் நெறியறியா விலங்கு. நான் கீழ்மகன். நான் எந்தத் தெய்வத்திற்கும் கடன்பட்டவன் அல்ல. இங்கே எதையும் எஞ்சவிட்டுச் செல்பவனும் அல்ல…”
ஆரியகனின் நாகங்களால் கர்ணன் சூழப்பட்டான். அவன் ஒளியை முற்றாக அவை மறைத்தன. அவன் அம்பில் எழுந்த நாகங்களை அவை சிதைத்தன. களத்தில் அவன் நின்றிருந்த பகுதியை மட்டும் இருள்போர்வை ஒன்று வந்து சூழ்ந்தது. அவனுடன் நின்றுபொருதிய மைந்தர்களால்கூட அவனை காணமுடியவில்லை. நாகபாசன் என்பதனாலேயே அவன்மேல் வஞ்சம் கொண்டிருந்த நாகங்கள் இருந்தன. அவன் அம்பில் எழுந்த நாகங்களின் பகைவர்கள் இருந்தனர். அவனால் வெல்லப்பட்ட நாகங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் அத்தருணத்தில் தங்கள் வஞ்சத்தை, பகைமையை, மீறிச்செல்வதன் களியாட்டை, பிழை இயற்றுவதிலுள்ள உவகையை கண்டுகொண்டன. அவன் கவசங்களின் மேல் முத்தமிட்டு முத்தமிட்டு உதிர்ந்தன நச்சுப்பற்கள். அவனைச் சூழ்ந்தன வசையென சீறல்கள்.
ஏகாக்ஷர் சொன்னார்: அரசி, களத்தில் கர்ணனுடன் பீமன் போரிட்டுக்கொண்டிருக்கையில் அவனுக்குப் பின்னாலிருந்து சகதேவனும் நகுலனும் அம்புகள் பெய்தபடி கிளம்பி வந்து இருபுறமும் நின்று வில்துணை செய்தனர். மூவரும் தொடுத்த அம்புகளால் அங்கநாட்டு விற்படையினர் தடுக்கப்பட்டார்கள். கர்ணன் கைவீசி ஆணையிட அவன் மைந்தர்களும் இளையோரும் சூழ்ந்து நின்று போரிட்டார்கள். கர்ணனின் மைந்தர் ஒவ்வொருவரும் கர்ணனே என பாண்டவர்கள் அறிந்தார்கள். விருஷசேனனும் விருஷகேதுவும் கர்ணனின் இரு கைகளென்றே திகழ்ந்தார்கள். அவர்களின் அம்புகளால் பாண்டவர்களின் விற்படையினர் இறந்து தேரிலிருந்து உதிர்ந்தபடியே இருந்தனர். கவசக்கோட்டைக்குள் இருந்து பாஞ்சால வில்லவர்கள் எறும்புகள் சிறகுகொண்டு எழுவதுபோல் வந்து வீழ்ந்தவர்களின் இடத்தை நிறைத்தனர்.
நகுலன் சித்ரசேனனின் அம்பால் வில் அறுபட தாவி தேரிலிருந்து இறங்கி தப்பினான். அவன் புரவியொன்றில் ஏறி வில்லவன் களம்பட திகைத்துச் சுழன்று நின்ற ஒரு தேரில் ஏறிக்கொள்வதற்குள் அவனை சத்யசேனனின் அம்புகள் வந்து அறைந்தன. அவன் வில்சூடி அம்பறாத்தூணியுடன் தேரை விசைகொண்டு முன்செலுத்தியபோது விந்தையான இருள் ஒன்று அப்பகுதியை மூடிக் கடந்துசென்றது. மண்ணிறங்கிய அந்த மழைமுகில் கடந்துசெல்வதற்குள் அதன் திரைமறைவில் விரைந்து அணுகிய நகுலன் சித்ரசேனனின் கழுத்தை பிறையம்பால் அறுத்தான். தேர்த்தட்டிலிருந்து அவன் உருண்டு விழுந்த ஓசைகேட்டு நிலையழிந்த சத்யசேனனின் நெஞ்சை நீளம்பு ஒன்றால் துளைத்தான். இருள்மயக்கம் விலகியபோது தன் இரு மைந்தரும் தேரிலிருந்து விழுந்துகிடப்பதைக் கண்டு கர்ணன் அலறினான். அவனுடைய பாகன் துர்ஜயன் தேரை பின்னெடுத்துச்செல்ல அலறியபடியே நீரில் மூழ்குபவன் என அவன் தோன்றினான்.
“செல்க, அவனைத் தொடர்ந்து செல்க… இச்சோர்விலிருந்து அவன் எழலாகாது!” என்று கூவியபடி பீமன் கர்ணனை அம்புகளால் அறைந்தபடி தொடர்ந்துசென்றான். கொக்கிகளால் சித்ரசேனனும் சத்யசேனனும் தூக்கி அகற்றப்பட்டனர். பீமனை விருஷசேனன் தாக்க சகதேவனை விருஷகேது தாக்கினான். நகுலனை சுஷேணனும் சத்ருஞ்சயனும் எதிர்த்தனர். கர்ணன் நாணொலி எழுப்பியபடி எழுந்துவந்து பீமனை அம்பால் அறைந்தான். பீமன் தன் தேரை கர்ணனை நோக்கி திருப்பி கொண்டுசெல்ல ஆணையிட்டான். பீமனால் கர்ணனை களத்தில் எதிர்கொள்ள முடியும் என்பதைக் கண்ட பாஞ்சால வீரர்கள் “விருகோதரர் வெல்க! வெற்றிகொள் பாண்டவர் வாழ்க!” என முழக்கமிட்டனர். ஒவ்வொரு அம்புக்கும் அம்பு செலுத்தி பீமன் கர்ணனை எதிர்த்தான். குருக்ஷேத்ரக் களத்திற்கு வந்தபிறகு முதல்முறையாக கர்ணன் ஏழுமுறை தேர்த்தட்டில் உடல் வளைத்துப் படுத்து தன் தலை கொய்ய வந்த அம்புகளிலிருந்து தப்பினான்.
இளையோரின் இறப்பால் விருஷசேனனும் விருஷகேதுவும் வெறிகொண்டிருந்தனர். கண்ணீர் வழியும் கண்களுடன் சகதேவனையும் நகுலனையும் அவர்கள் எதிர்த்தனர். நகுலன் “இன்று எங்கள் மைந்தனின் குருதிக்கு நூறுமேனி ஈடுசெய்ய களமெழுந்திருக்கிறோம்… சூதர்கூட்டங்களே, விலகிச்செல்க! உங்கள் குதிரைக்கொட்டில்களில் ஒடுங்கிக்கொண்டு உயிர்காத்துகொள்க!” என்று கூவினான். விருஷசேனன் மறுவஞ்சினம் உரைக்கவில்லை. பற்களால் உதடுகளை கடித்துக்கொண்டு தோள்தசைகள் விம்மி விம்மி நெகிழ அம்புகளால் சகதேவனை அறைந்தான். விருஷகேது நகுலனின் பாகனை கொன்றான். அவன் நெஞ்சிலும் தோளிலும் அம்புகளை செலுத்தினான்.
பீமனின் அம்புகள் பட்டு கர்ணனின் புரவிகளில் ஒன்று கழுத்து அறுந்து கால்பின்னி தேரை வலப்பக்கமாக இழுத்தது. அதை இழுத்து தேரை சீரமைக்க முயன்ற துர்ஜயன் தன் தவறான கோணத்தை பீமனுக்கு காட்டினான். அதை உணர்ந்து அவனைக் காக்க கர்ணன் அம்பு எடுப்பதற்குள் துர்ஜயன் தேரிலிருந்து தலைதுண்டாகி சரிந்துவிழுந்தான். எடுத்த அம்பை பீமனை நோக்கி கர்ணன் ஏவ அதை பீமன் அறைந்து சிதறடித்தான். என்ன நிகழ்ந்தது என்று கர்ணனுக்கு புரியவில்லை. தன் எண்ணமே அம்பென எழுவதை கண்டவன் அவன். எண்ணி செயலாற்றுவதற்கு நடுவே புகும் அந்த கணநேர இருளை அவன் அப்போதுதான் உணர்ந்தான். “கீழ்மகனே!” என்று கூவியபடி அம்புகளால் பீமனை மாறி மாறி அறைந்தான். அத்தனை அம்புகளும் செயலிழக்கக் கண்டு அறியா உளவிசை ஒன்று எழ தன் நாகபாசத்தின்மேல் கைவைத்தான். பின்னர் பற்களைக் கடித்தபடி தன்னை காத்துக்கொண்டான்.
பீமன் வெற்றியால் அனைத்து உளக்கொந்தளிப்பையும் கடந்து கைகளும் உள்ளமும் பெருகியவனானான். குருக்ஷேத்ரக் களத்தில் அவன் ஒருபோதும் அத்தகைய வீச்சுடன் போரிட்டதில்லை. “உன் ஆணவத்தால் என் குலமகளை இழிவுசெய்தாய்! இழிபிறப்போனே, உன்னை நம்பி எங்களை பகைத்தான் கௌரவன். நீ இயற்றிய ஒவ்வொன்றுக்கும் ஈடுசெய்யப்போகிறாய்” என்று கூவினான். “இதோ இக்களத்தில் வீழ்வார்கள் உன் மைந்தர். இங்கே நெஞ்சு உடைந்து கிடப்பார்கள் உன் உடன்பிறந்தார். அறிக, உன் குலம் இங்கே எஞ்சாது அழியும்!” என்றான். கர்ணன் “எஞ்சுவதை கணக்கிடத் தொடங்கிவிட்டாயா? உன்னில் எஞ்சுவதென்ன என்று பார்” என்றான். கர்ணனின் தேரில் ஏறிக்கொண்ட பிருஹத்ரதன் கடிவாளத்தை இழுத்து தேரை நிலைமீட்டு பீமனுக்கு எதிராக கொண்டுசென்றான்.
அவர்களின் அம்புகள் ஒன்றுக்கு ஒன்று எதிர்நின்றன. கர்ணனின் அம்புகளும் இலக்கு பிழைக்கும் என்பதை அங்கர் அன்று அறிந்தனர். ஓர் அம்பு பிழைத்தபோது கர்ணனே திகைத்தான். பிறிதொன்று பிழைக்க அத்திகைப்பே வழிவகுத்தது. சீற்றம் மேலும் அவனை தவறச்செய்தது. அத்தருணத்தில் பீமனின் வில்லிலிருந்து எழுந்த கரிய காளாஸ்திரம் அவன் நெஞ்சைத் தாக்கி தூக்கிச் சுழற்றி குருதியுடன் வீசியது. தேரிலிருந்து விழுந்த கர்ணன் பாய்ந்து புரவி ஒன்றிலேறிக்கொண்டு அம்புகளால் பீமனை அறைந்தபடி தன் தேர் நோக்கி பாய்ந்தான். பீமனின் அம்புகளால் அவன் கவசங்கள் உடைந்தன. குருதி வழியும் உடலுடன் தன் தேரில் மீண்டும் ஏறிக்கொண்டு அம்புத்தூளியை கையிலெடுத்தான். பீமன் பேரம்பு ஒன்றை எடுக்க சினக்கூச்சலுடன் கர்ணன் மீண்டும் தன் நாகபாசத்தை கையிலெடுத்தான். மேலும் சினம்பெருக “விலகிச்செல்! கீழ்மகனே, விலகிச்செல்… என்னிடம் உயிர் விளையாடாதே” என்று கூவியபடி அதை திரும்ப வைத்தான்.
அரவான் சொன்னான்: நாகர்கள் வென்ற களம் அது. ஆரியகனின் நாகங்களால் அரவம்பனின் நாக அம்புகள் செயலற்றன. அங்கர் படை மெல்லமெல்ல பின்னடைந்துகொண்டிருந்தது. “செல்க! செல்க!” என்று மாநாகமான ஆரியகன் பீமனை நோக்கி கூவினார். பீமன் கராளாஸ்திரத்தை எடுத்து வில்லில் தொடுத்தெடுக்க அதில் ஏறி அமர்ந்த ஆரியகன் கர்ணனை நோக்கி மதகளிறுபோல் துதிசுழற்றி செவிவீசியபடி பறந்து வந்தார். கர்ணனின் கையிலிருந்து நாகபாசம் தயங்கியது. ஒருகணத்தில் அவன் அதை கைவிட்டு பிறிதொரு அம்பை எடுப்பதற்குள் அவன் நெஞ்சை ஆரியகன் அறைந்தார்.
தேர்த்தட்டிலிருந்த கர்ணன் தெறித்து விழ அவனை அள்ளித்தூக்கி குதறி அப்பாலிட்ட ஆரியகன் நிலத்தில் வாலறைந்து எழுந்து பாய்ந்து அவனை கவ்வச்சென்றார். தன் அம்பறாத்தூணியிலிருந்து பரசுராமர் அளித்த திருணாஸ்திரத்தை எடுத்து ஆரியகன்மேல் தொடுத்தான் கர்ணன். குன்றாக்கூர் கொண்ட புல்லின் விசை ஆரியகனை இரு துண்டுகளாக்கியது. ஆரியகனின் நீண்ட கரிய உடல்துண்டுகள் வெண்ணிழலுடன் போர்க்களத்தில் விழுந்து துடித்தன. ஒன்றையொன்று நோக்கி வந்து இணைந்து கொள்ள முயன்று முட்டி முறுகி பின்னலாகி களத்தில் நின்று துள்ளின. நெஞ்சக்குருதி வார நினைவிழந்து மயங்கிய கர்ணனை நோக்கி ஹலாஸ்திரத்தை ஏவினான் பீமன். முழங்கி வந்த அதை தடுக்கும்பொருட்டு காலால் மண்ணை உதைத்துப் புரண்ட கர்ணன் கையை அறைந்து ஊன்றி எழுந்து குருதிவழிந்து நோக்கு மறைந்த கண்களால் பீமனை பார்த்தான். மூன்றாம் முறையாக அரவம்பைத் தொட்ட அவன் கை விலகி தொய்ந்து சரிந்து மண்ணில் படிந்தது.
அங்கநாட்டினர் வீசு கொக்கிகளால் கர்ணனை தூக்கி இழுத்து படைக்குள் கொண்டு சென்றனர். “வீழ்ந்தார் அங்கர்! வெற்றி! இளைய பாண்டவருக்கு வெற்றி! வெற்றி! விருகோதரருக்கு வெற்றி!” என்று பாண்டவர்களின் முரசுகள் ஓசையிட்டன. களத்தில் கவிழ்ந்து கிடந்த கர்ணனின் பொற்தேர் மேல் ஓங்கி உதைத்து பீமன் உரக்க நகைத்தான். “இன்றுடன் உன் ஆணவம் அழிக! இவ்வனைத்துக்கும் அடிகோலிய உன் ஆணவத்தின் மேல் இதோ காறித்துப்புகிறேன்! கீழ்பிறவியே, இனி நீ தலைதூக்கி களமெழலாகாது!” என்றான்.