கார்கடல் - 50
ஏகாக்ஷர் சொன்னார்: கடலை அணுகும்தோறும் அகலும் ஆறுபோல் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் போர் விரிந்து கிளைபிரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. இன்று அது ஒரு போரல்ல, நூறு முனைகளில் நூறு நூறு விசைகளுடன் நிகழும் ஒரு கொந்தளிப்பு. அரசி கேள், இன்று ஜயத்ரதன் கொல்லப்பட்டான். அவனை கொல்லும்பொருட்டும் காக்கும்பொருட்டும் நிகழ்ந்தது இன்றைய பொழுதின் சூழ்கைகளும் மோதல்களும். ஆனால் பிறிதோரிடத்தில் பீமன் மதவேழத்தின்மேல் காட்டெரி பட்டது என வெறியும் விசையும் கொண்டிருந்தான். அங்கு நிகழ்ந்த போரை எவரும் காணவில்லை. சூதர் சொல்லில் அது மீண்டும் நிகழ வாய்ப்பில்லை.
அன்று காலை முதல் அவன் எரிச்சல் கொண்டிருந்தான். தன்மேல் கவசங்களை அணிவித்த வீரனிடம் வன்சொல் உரைத்தான். வாயில் புழுதிபட்டதுபோல் துப்பிக்கொண்டிருந்தான். மதுநிறைந்த குடுவையுடன் வந்த ஏவலனிடம் “எங்கு சென்றாய், அறிவிலி?” என்று கூச்சலிட்டான். அவன் மறுமொழி சொல்லாமல் நீட்ட வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு வெறுங்கையால் அக்குடுவையை நெரித்து உடைத்து வீசினான். அருகே நின்றிருந்த சர்வதனும் சுதசோமனும் தந்தையின் சீற்றத்தின் பொருள் உணர்ந்திருந்தனர். முந்தைய இரவே “அறிவிலி! எவரை நோக்கி வஞ்சினம் உரைக்கிறான்? வஞ்சினங்கள் தன் எதிரிக்கு உரைக்கவேண்டியவை. தன்னை நோக்கி அறைகூவிக்கொள்ள வேண்டியவை. படைத்த தெய்வங்களிடம் வஞ்சினம் உரைப்பவன் மலைமேல் தலையை முட்டிக்கொள்கிறான்” என்றான்.
சகதேவன் “அவர் வெல்வார்” என்றான். “பேசாதே, உன்னைப் போன்றவர்களின் சொற்கள் அவனை மண்ணிறங்கிய இந்திரன் என தன்னைப்பற்றி எண்ணச் செய்கின்றன. அவன் எளிய மானுடன். தென்கடல்களை பிளக்கவோ வடமலையை கவிழ்க்கவோ ஆற்றல்கொண்டவன் அல்ல…” என்றான் பீமன். மேலும் சீற்றத்துடன் தரையை காலால் அறைந்து மிதித்து “அவனை கொல்வேன் என்றதுகூட வஞ்சினச் சொல்லே. கொல்லாவிடில் உயிர்துறப்பேன் என்று சொல்ல இவன் யார்? இவன் உயிர் இவனுக்குரியதென்றால் ஏன் போருக்கெழுகிறான்? இங்கு ஒவ்வொருவர் உயிரும் பிறருக்குரியது. நம் மூத்தவருக்கு, நமது குடிக்கு, நம்மை ஆளும் இளைய யாதவருக்கு உரிமைப்பட்டவர்கள் நாம்” என்றான்.
“களம்நின்று கழுத்தறுந்து விழுக! அது அறம். போர்க்களத்தில் தானே தன் சங்கை அறுத்துவிழுந்தான் என்றால் இவனுக்குக் காத்திருப்பது எந்த நீரும் அன்னமும் சென்றடையாத ஆழிருள்…” என்று கைகளைத் தூக்கி கூவினான். “அறிவிலாக் கீழ்மகன்… அவன் வஞ்சினத்தைக் கேட்டு எழுந்து வந்த நம் மூத்தவரிடம் சொல்லவேண்டும் சில சொற்கள்.” சகதேவன் மறுமொழி சொல்லாமல் திரும்பிச்சென்றபின் இரவெல்லாம் நிலையழிந்தவனாக தன் குடில்முற்றத்தில் சுற்றிநடந்தான். அவ்வப்போது வெறிகொண்டு தரையை அல்லது அங்கு நின்ற மரத்தை ஓங்கி மிதித்தான். கைகளை ஓங்கி அறைந்துகொண்டான். அமர்ந்ததுமே உள்ளத்தின் விசையால் மீண்டும் எழுந்தான்.
சுதசோமன் வந்து வணங்கி “தந்தையே, நம் யானைகளில் ஒன்று அமைதியிழந்துள்ளது” என்றபோது என்ன இது இடம்பொருள் அறியாமல் என வியந்த சர்வதன் கைநீட்டி அவனை தடுக்க முயன்றான். ஆனால் “எந்த யானை?” என வினவியதுமே பீமன் அடங்கினான். சுதசோமனுடன் சென்று அந்த யானையை அமைதிப்படுத்தி உணவளித்துத் திரும்பியபோது மீண்டும் இயல்பான அமைதியை அடைந்துவிட்டிருந்தான். வெறும் மண்ணில் உடல்நீட்டிப் படுத்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே துயில்கொண்டான். சுதசோமன் சர்வதனை நோக்கி புன்னகை செய்தான். பின்னர் “நீயும் துயில்கொள்க, இளையோனே!” என்றான். பீமன் துயிலில் முகில்கள் திரண்டு யானைவடிவு கொள்வதை கண்டான். பின்னர் மிகமிக அருகே பேருடல்கொண்ட பெண்குரங்கு ஒன்று அமர்ந்திருப்பதை அவன் உணர்ந்தான்.
போர்க்களத்தில் பீமன் மீண்டும் அமைதியிழந்தவனாகவே இருந்தான். இருமுறை திரும்பி சுதசோமனிடம் “வில்லை நேராக நிறுத்துக, அறிவிலி!” என கசந்தான். “இந்த ஆவநாழியை எடுத்து வைத்தவன் எவன்? இன்று அவன் தலையை அறைந்து உடைப்பேன்” என ஆவக்காவலனிடம் சீறினான். போர்முரசு ஒலித்ததும் கூர்மவியூகம் ஒருங்கி கவசப்படைக்கு உள்ளிருந்து பீமன் முன்னெழுந்தபோது அங்காரகன்மேல் பெருங்கதையுடன் வந்த பால்ஹிகர் அவனை எதிர்கொண்டார். பறக்கும் யானை என சுழன்ற அவருடைய கதை மானுடரால் எதிர்க்கமுடியாத எடையும் விசையும் கொண்டிருந்தது. பீமன் அதை தடுக்கவோ எதிர்க்கவோ முயலவில்லை. பால்ஹிகப் பிதாமகர் கதை சுழற்றலின் எந்த நுட்பத்தையும் உளங்கொண்டவர் அல்ல என அவன் அறிந்திருந்தான்.
பால்ஹிகர் மனிதர்களால் சென்றடைய முடியாத பிறிதொரு உயரத்தில் இருந்தபடி தன் கதையின் சங்கிலியைப் பற்றி மீளமீள ஒரே வகையாக சுழற்றிக்கொண்டிருந்தார். அதில் அறைபட்டு தேர்கள் உடைந்து தெறித்தன. யானைகள் நீர்க்குமிழிகள்போல் உடைந்தன. பீமன் அதிலிருந்து ஒழிந்து நெளிந்து தப்பி அவருடைய கைகள் சோர்ந்து விசையழியச் செய்ய முயன்றான். ஒரு நாழிகைப் பொழுதுக்கு மேல் அப்போர் அங்கு நிகழ்ந்தது. அவர் சற்றும் சோர்வுறவில்லை என்பதை அவன் உணர்ந்தான். விசை தளர்வது ஓர் அறிகுறி எனில் விசை சற்று மிகுவது பிறிதொரு அறிகுறி. தளரும் விசையை உள்ளத்தால் உந்தி மேலெடுக்கிறார் என்பதற்கான சான்று அது. குன்றாது கூடாதிருக்கும் விசை அவர் எவ்வகையிலும் கையோ உள்ளமோ தளரவில்லை என்பதையே காட்டியது.
சலிப்புடன் அவன் தன்னிரு மைந்தருக்கும் கைகாட்டிவிட்டு பின்னடைந்து படைகளுக்குள் புகுந்துகொள்ள இருபுறத்திலிருந்தும் கவசப்படை எழுந்து வந்து அவனை மூடிக்கொண்டது. ஆனால் தன் யானையை ஊக்கி முன் வந்து அக்கவசப்படையை பெருங்கதையால் அறைந்துடைத்து சிதறடித்தார் பால்ஹிகர். “கவசப்படையை மடித்து மூன்றடுக்கு கொள்க! பால்ஹிகரின் கதையை எதிர்கொள்க!” என்று முரசொலி ஆணையிட்டது. பால்ஹிகரின் கதை இரும்பு மத்தகமென அறைய கவசங்களை ஏந்திய தேர்கள் அதிர்ந்து அதிர்ந்து பின்னுருண்டன. கவசப்பரப்புகள் பிளந்து சரிய அறைபட்டு தேர்கள் உடைந்து சிதறின. அந்த இடைவெளியை மடிந்துவந்த கவசப்படையின் ஒரு பகுதி உடனே மூடிக்கொண்டது. அவற்றை ஏந்திவந்த யானைகள் ஒன்றை ஒன்று உந்தி மும்மடங்கு விசைதிரட்டிக்கொண்டு கேடயங்களை இறுக்கி நிலைகொண்டன.
அர்ஜுனன் ஏழு பெருவில்லவர்களாலும் சூழப்பட்டிருக்கிறான் என்ற செய்தியை பீமன் முரசுகளினூடாக அறிந்தான். மைந்தர்களிடம் தன்னை தொடரச் சொல்லிவிட்டு அத்திசை நோக்கி செல்ல அவன் தன் தேரைத் திருப்பிய கணத்தில் அவனுக்குக் காப்பென அமைந்திருந்த கவசக்கோட்டையும் கேடயங்களும் உலோகப் பேரொலியுடன் தெறித்து அப்பால் விழ, அவற்றை ஏந்தி நின்றிருந்த வேழங்கள் கதையால் அறைபட்டு பேரோசையுடன் நிலத்தில் விழுந்து துதிக்கையும் வாலும் சுழல துடித்து அமைய அவற்றினூடாக கரிய நீர்ச்சுழியொன்று அணை உடைத்து எழுந்து வருவதுபோல் அங்காரகன் எழுந்து வருவதை அவன் கண்டான். அதன் மேல் கருமுகிலில் ஊர்பவர்போல் அமர்ந்திருந்த பால்ஹிகர் உரக்க நகைத்தபடி தன் கதையை சுழற்றினார்.
அவர் வஞ்சினம் உரைப்பதில்லை. கீழே பொருதிக்கொண்டிருக்கும் எவரையும் தனித்து அடையாளம் காண்பதும் இல்லை. மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் எளிய படைவீரர்களுக்கும் வேறுபாட்டை அறிவதுமில்லை. அந்த உணர்வின்மையே அவரை அச்சமூட்டுபவராக, வெல்லற்கரியவராக காட்டியது. மீண்டும் அவரை எதிர்கொண்ட பீமன் இருபுறத்திலிருந்தும் சர்வதனும் சுதசோமனும் அவரை தாக்கும்படி செய்தான். அவர் அவர்களில் ஒருவனை நோக்கி கதை சுழற்றியபடி செல்கையில் பீமன் தேரிலிருந்து பாய்ந்து எழுந்து அங்காரகனின் உடலில் அமைந்த கவசத்தை அறைந்தான். அங்காரகனின் இரும்புக்கவசம் இரு விரல்மடிப்பளவிற்கு தடிமன் கொண்டிருந்தது. அதில் அறைந்த அவனுடைய கதை மெல்லிய பள்ளமொன்றையே உருவாக்கியது. அச்சுழிப்பில் போர்க்களத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த அசைவுகள் வளைந்து வண்ண நெளிவென்றாயின.
மூன்றுமுறை பீமன் அங்காரகனின் கழுத்தருகே கவசத்தை அறைந்தான். சினம்கொண்ட யானை திரும்பி தன் நீள்பெரும் கோட்டால் அவனை குத்தும்பொருட்டு வந்தது. தன் கதையை அதன் இரு கொம்புகளுக்கு நடுவே ஊன்றி துள்ளி பின்னால் விலகி பீமன் தப்பினான். அருகில் விழுந்து கிடந்த பிறிதொரு சிறுயானையை கால் பற்றி சுழற்றித் தூக்கி அவனை நோக்கி விசிறியது அங்காரகன். பீமன் தன் கதையை சுழற்றிய விசையிலேயே தரையில் ஊன்றி உடல்சுழற்றி துள்ளி அப்பால் விலக யானையின் உடல் வந்து அவனருகே விழுந்து தோற்பை என வயிறு பெருகியதிர எஞ்சிய உயிர் அலறலாக வெளிப்பட துடித்தது. பீமன் திரும்பி பாய்ந்து அதன் மேல் மிதித்து கதையால் மீண்டும் அங்காரகனின் துதிக்கையை அறைந்தான். முதலைவால் என அடுக்கடுக்காக அமைந்த அதன் துதிக்கைக் கவசங்களின் மேல் அவனுடைய அடி பதிந்து வழுக்கியது.
“தந்தையே, இப்போர் இங்கு எவ்வகையிலும் முடியாது” என்று சர்வதன் கூவினான். “நம்மை இங்கு தளைத்திடவே இவர்கள் எண்ணியிருக்கிறார்கள். இன்று நாம் அவர்களின் படைசூழ்கையை உடைத்தாகவேண்டும்.” சுதசோமன் “தந்தையே, இங்கே நாங்கள் நின்றிருக்கிறோம். தாங்கள் அங்கு செல்க! இன்று அந்தி வரை பிதாமகரை போக்குகாட்டி இங்கு நிறுத்தி வைக்க நாங்கள் முயல்கிறோம்” என்று சொன்னான். பீமன் “முதியவர் பேரழிவை உருவாக்கிவிடுவார்!” என்றான். “ஆம், எவரும் அவரை தடுக்க இயலாது. ஆனால் இன்று மாலைக்குள் கௌரவப் படைசூழ்கையை நாம் உடைத்தாக வேண்டும். அதுவரை இவருக்கு உயிர்ப்பலி கொடுத்துக்கொண்டே இருப்போம். வேறு வழியில்லை. செல்க!” என்று சுதசோமன் கூவினான். பீமன் தயங்க “செல்க, தந்தையே… இளைய தந்தையை துணைசெய்க!” என்றான் சர்வதன்.
யானைகளை வீழ்த்தி அவர்கள் முன் எழுந்த பால்ஹிகரை அவர்கள் இருவரும் ஒரே தருணத்தில் கதை கொண்டு எதிர்த்தனர். அவருடைய பெருங்கதை இருவரையும் ஒரேதருணத்தில் மாறிமாறிச் சுழன்று தாக்கியது. பீமன் புரவிகளின் மேல் தாவி பின்நிரையில் இருந்த தன் தேரை சென்றடைந்து “செல்க! அர்ஜுனனுக்கு பின்துணையாகச் செல்க!” என ஆணையிட்டான். தேர் பாண்டவப் படைகளினூடாகச் சென்றது. பாண்டவ வீரர்கள் ஒழுகும் கலத்தின் நீர்ச்சுழிப்புகள்போல உள்ளே சுழன்று கவசக்கோட்டை திறந்த வாயில்களினூடாக எழுந்த பாண்டவ வில்லவருக்குப் பின்னால் நீண்டு ஒழுகி வெளியே சென்றனர். மீன்வலை இழுபட்டு குவிந்து படகுக்கு மீள்வதுபோல மீண்டும் கவசக்கோட்டைக்குள் வந்து அணிகொண்டனர். முரசுகளின் ஆணைக்கேற்ப புண்பட்டவர்கள் பிரிந்து பின்னடைய புதிய வீரர்கள் அந்த இடங்களை நிரப்ப முழுமைகொண்டு மீண்டும் படை முன்னெழுந்தது.
கவசப்படை திறந்து பிறிதொரு இடத்தில் எழுந்த பீமனை துரியோதனன் தன் தம்பியருடன் எதிர்கொண்டான். அவர்கள் கதையால் முட்டிக்கொண்ட இடியோசையை படைவீரர் அனைவரும் அதிர்வென உணர்ந்து உடல் மெய்ப்பு கொள்ள திரும்பி நோக்கினர். பீமன் “கீழ்மகனே, என் குலக்கொழுந்தின் குருதிக்காக இன்று பழி தீர்ப்போம். பசுங்குருதி அருந்தாமல் இன்று படைமுகத்திலிருந்து நீங்குவதில்லை!” என்று வஞ்சினம் உரைக்க துரியோதனன் உரக்க நகைத்து “இன்று உன் இளையோனின் பசுங்குருதியை அள்ளி அருந்தி விடாய் தீர்க்கப்போகிறாய். காட்டு விலங்கு நீ. குருதியில் உனக்கென்ன வேறுபாடு?” என்றான். ஒருவரையொருவர் சொற்களால் எரிய வைத்துக்கொண்டு அவர்கள் அங்கே போரிட்டனர். ஒருவரை ஒருவர் அறைந்து கவசங்களை தெறிக்க செய்தனர். நிலத்தில் விழுந்து புரண்டெழுந்தனர். கதையை தரையிலூன்றி அவ்விசையில் விண்ணிலெழுந்து இறங்கும் விசையில் கதையை சுழற்றி ஒருவரை ஒருவர் அறைந்தனர்.
அரசி, கதைப்போர் ஏழு வகையானதென்று அறிக! ஏழு வகை கதைப்போரும் ஏழு உயிர்களிலிருந்து மானுடர் கற்றுக்கொண்டவை. கொடுக்கு தூக்கி ஒன்றையொன்று தாக்கும் தேள்களின் முறையை முதன்மையானது என்கிறார்கள். அதை விருச்சைகம் என்கின்றன நூல்கள். நாகங்களென படம் தூக்கி எழுந்து அறைந்துகொள்வது சர்ப்பிகம். குதிரைகள்போல் விசைகொண்டு சுழன்று சுழன்று அறைந்துகொள்வது அஸ்வம். யானைகள்போல் மத்தகம் முட்டி துதிக்கை பின்னி போரிடுவது மாதங்கம். எருதுகள்போல் விசைகொண்டு முட்டி கொம்பு கோத்து திருப்பி போரிடுவது ரிஷபம். கலைமான்கள்போல் தொலைவிலிருந்து துள்ளிப் பாய்ந்து வந்து காற்றில் முட்டிக்கொள்வது ஹரிணம். நாரைகள்போல் எழுந்து வானிலேயே அறைந்துகொள்ளும் போர் உண்டு. அதற்கு கிரௌஞ்சம் என்று பெயர்.
அங்கு ஏழு வகை கதைப்போரும் நிகழ்ந்தது. ஒவ்வொரு போருக்குப் பின்னும் இருவரும் வென்றவர்களாக, இருவருமே தோற்றவர்களாக எழுந்தனர். துரியோதனனுடன் அவன் இளையோர் துச்சகனும் துச்சலனும் சமனும் சகனும் விந்தனும் அனுவிந்தனும் துர்தர்ஷனும் சுபாகுவும் இணைநின்று போரிட்டார்கள். அப்பால் துச்சாதனன் கடோத்கஜனுடன் கதைப்போர் புரிந்தான். அவனுக்குத் துணையாக விகர்ணனும் துர்மர்ஷணனும் துர்முகனும் உபசித்ரனும் கிருதனனும் போரிட்டார்கள். பீமனுக்குத் துணையாக அவனால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தத்தின் பதினெட்டு பெருமல்லர்கள் கதைசுழற்றி நின்றனர். கதைகள் வண்டுகள்போல் காற்றில் மூளலோசை எழுப்பிச் சுழன்று சுழன்று பறந்தன. அறைந்து அறைந்து தெறித்தன. மலையிடிந்து விழுந்த பெரும்பாறைகள் ஒன்றோடொன்று முட்டிச்சரிவதுபோல எழுந்தது அவ்வோசை.
துரியோதனனை ஓரணுவும் பின்னடி வைக்கச்செய்ய இயலாதென்று உணர்ந்து சீற்றம் கொண்ட பீமன் எதிர்பாரா தருணத்தில் பக்கவாட்டில் பாய்ந்து அங்கே பிற கதைவீரருடன் போரிட்டுக்கொண்டிருந்த துரியோதனனின் இளையோர் துர்கர்ணனையும் கர்ணனையும் கதையால் அறைந்து தலையை உடைத்துக் கொன்றான். சிதறித்தெறித்த அவர்களின் குருதியைக் கண்டு திகைத்து கை ஓய்ந்து நின்ற துரியோதனன் மறுகணம் உடல்துடிக்க “இழிவிலங்கே!” என்று கூவியபடி தன் கதையை வீசிக்கொண்டு பீமனை நோக்கி பாய்ந்து வந்தான். அவன் அறைந்த அடிகள் மண்ணில் பதிந்து குழியாயின. தேர்களில் விழுந்து சிதறடித்தன. வெட்டுக்கிளியென களமெங்கும் துள்ளி அகன்ற பீமன் பின்வாங்குவதுபோல் நடித்து மீண்டுமொரு எதிர்பாரா தருணத்தில் பாய்ந்து இளைய கௌரவர்களான உபசித்ரனையும் கிருதனனையும் கொன்றான்.
துரியோதனன் தொண்டை புடைக்க விழிநீர் கோக்க “மைந்தா! கிருதனா! உபசித்ரா!” என தம்பியரின் பெயர் சொல்லி கதறினான். பீமன் தன் கதையால் கிருதனனின் நெஞ்சை ஓங்கி அறைந்து திறந்து வெறுங்கையால் அவன் நெஞ்சக்குலையை பிழுது எடுத்து சுழற்றி துரியோதனனின் முகத்தில் எறிந்தான். தலைசுழன்று துரியோதனன் நிலத்தில் அமர அவனை கொல்லும்பொருட்டு பீமன் பாய்ந்து அருகணைந்தான். அவன் கதை சுழன்று துரியோதனன் தலையை தாக்கவிருக்கும் கணத்தில் துச்சாதனனின் கதை வந்து அவனை தடுத்தது. துச்சாதனனும் துர்முகனும் துச்சலனும் இணைந்து பீமனை தாக்க படைவீரர்கள் அணைந்து மயங்கிச் சரிந்த துரியோதனனை இழுத்து அப்பால் கொண்டுசென்றனர். துச்சாதனன் அடித்தொண்டையில் விலங்குபோல் ஊளையிட்டபடி பீமனை தாக்கினான். கௌரவர்கள் அனைவரும் கண்களில் நீர்வழிய கூச்சலிட்டபடி அவனை சூழ்ந்துகொண்டார்கள்.
பீமன் அவர்களின் துயரத்தின் விசையை தன் கதையில் உணர்ந்தான். துர்மதனை அவன் கதை அறைந்து தெறிக்கச் செய்தபோது வாயாலும் மூக்காலும் குருதியை மூச்சென ஊதித் தெறிக்கச் செய்தபடி அவன் மேலும் வெறிகொண்டு எழுந்து வந்தான். “கொல்லுங்கள் அவனை! மூத்தவரே, இன்று அவனை கொல்லுங்கள்!” என்று துர்மதன் கூச்சலிட்டான். பீமன் தன் குழல்கற்றைகளில் இருந்து உதிர்ந்து வழிந்து வாயை அடைந்த குருதியை அவன் முகத்தில் துப்பி “இதோ உனக்கு உடன்பிறந்தானின் கொழுங்குருதி” என்றான். அச்சொல்லால் நிலையழிந்த துர்மதன் அடிபிறழ்ந்து முன் பாய்ந்து ஓங்கி பீமனை அறைய கதை தூக்கினான். அப்பிழையால் அவன் தன் விலாவை பீமனுக்குக் காட்ட பீமனின் கதை வந்து அங்கே அறைந்து அவன் நெஞ்சை உடைத்து வாயினூடாக குருதி பீறிடச் செய்தது. ஓசையேதுமின்றி பேருடல் சரிந்து நிலத்தில் விழுந்து துர்மதன் இறந்தான்.
அவன் இறுதித்துடிப்பைக் கண்டு திகைத்து நின்றிருந்த துச்சாதனனை நோக்கி “இன்று இன்னும் குருதிபலி உள்ளது, கீழ்மகனே!” என்றபின் பீமன் இரு தாவல்களாகச் சென்று தன் படைகளுக்குள் புகுந்து கொண்டான். கௌரவ இளையோர் ஐவர் இறந்ததை அறிவிக்கும்பொருட்டு முரசு முழங்கத்தொடங்கியது. அச்செய்தி கௌரவப் படைவீரர்களிடம் சினத்தையே கிளப்பியது. அவர்கள் வெறிக்கூச்சல்களுடன் பாண்டவர்களை தாக்கினார்கள். பீமன் தேரிலிருந்து இறங்கி குருதியால் நனைந்து ஒட்டியிருந்த தன் தோல்கையுறைகளை கழற்றினான். இரு ஏவலர் அவன் கைகளை மரவுரியால் துடைத்து வேறு கையுறைகளை அணிவித்தனர். அத்தருணத்தில் மறு எல்லையிலிருந்து திரும்பி வளைந்து வந்த அர்ஜுனன் தன் படையினருடன் கவசக்கோட்டையைத் திறந்து அப்பால் சென்றான்.
பீமன் கையுறைகளை இழுத்துவிட்டுக்கொண்டு கதையை எடுத்தபடி ஓடிச்சென்று தேரிலேறிக்கொண்டு அர்ஜுனனைத் தொடர்ந்து சென்றான். “அவர்கள் உளம்தளர்ந்துள்ளனர், இளையோனே… இவ்வழியே நாம் உடைத்துச் செல்வோம். உச்சிப்பொழுது ஆகிவிட்டிருக்கிறது” என்று அவன் கூவ அர்ஜுனன் அச்சொற்களை கேட்டதாகத் தெரியவில்லை. கௌரவப் படையினர் அங்கே கவசக்கோட்டை திறப்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் படைகொண்டு எழுந்தது அவர்களின் சினத்திற்கு இலக்காக மாறியது. மூன்று திசைகளிலும் இருந்து கௌரவ இளையோர் படைகளுடன் வந்து சூழ்ந்துகொண்டார்கள். வலப்பக்கம் துச்சாதனனும் விகர்ணனும் இடப்பக்கம் துச்சலனும் துச்சகனும் தலைமை தாங்கிய படைகள் வந்தன. நேர் எதிரில் துரியோதனன் தன் வில்லை தேர்த்தட்டில் வெறியுடன் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டும் நெஞ்சில் அறைந்து கூவியபடியும் வந்தான்.
அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் விற்போர் மூண்டது. துரியோதனன் அர்ஜுனனை வில்லில் எதிர்த்து நின்றிருக்க முடியும் என்பதை பீமன் வியப்புடன் கண்டான். அர்ஜுனனின் கவசங்கள் உடைந்தன. இளைய யாதவரின் நெஞ்சக்கவசமும் உடைந்தது. இரண்டு அம்புகள் அர்ஜுனனின் இடைக்கவசங்களின் இடுக்கில் பாய்ந்திறங்கின. துரியோதனனின் வெறியும் விசையும் ஏறிக்கொண்டே இருந்தன. பீமன் துச்சலனையும் துச்சாதனனையும் மாறி மாறி எதிர்த்தான். அவர்கள் அவனை அறைந்து பின்னடையச் செய்தனர். துச்சாதனனின் கதைவீச்சு இடையில் பட்டுத்தெறிக்க முச்சுக்குமிழ் உடைய அலறியபடி பீமன் மல்லாந்து விழுந்தான். அவனை நோக்கி கதையுடன் பாய்ந்து வந்த துச்சலனை தன் கதையை வீசி எறிந்து கொன்றபின் குரங்குபோல் துள்ளி எழுந்து தேர்மகுடமொன்றைக் கடந்து அப்பால் சென்றான். துச்சாதனன் தன் கதையை அவனை நோக்கி எறிந்தான். பீமன் அதை ஒழிந்து பிறிதொரு கதையை எடுத்துக்கொண்டு தாவி வந்து சமனையும் சகனையும் கொன்றான்.
துச்சாதனன் கை ஓய்ந்து “இளையோனே!” என்று சகனை நோக்கி கூவினான். அவனைக் கொல்ல கதையுடன் பீமன் பாய்ந்தபோது விகர்ணன் தன் கதையுடன் வந்து தடுத்தான். எடைமிக்க கதையால் விகர்ணனை அறைந்து பின்னடையச் செய்தபடி “இளையோனே, செல்க! உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன் சொல்லுக்காக பாண்டவர் கடன்பட்டிருக்கிறோம்” என்றான் பீமன். வெறியுடன் எழுந்து அறைந்து காலூன்றித் திரும்பி மீண்டும் தாக்கியபடி மூச்சிரைக்க விகர்ணன் கூவினான் “நான் உயிர்கொடுக்க வந்தேன்… என் தமையனுக்காக உயிர்கொடுத்தே பிறவிக்கு பொருள்கொள்வேன்.” பீமன் அவன் கதையை அறைந்து தெறிக்கச் செய்தான். எழுந்து அவன் நெஞ்சில் மிதித்து அவனை மல்லாந்து விழச்செய்து “செல்க! என் கதை என்னைவிட வஞ்சம் கொண்டது. செல்க, என் கையால் உன்னை கொல்ல விழையவில்லை!” என்றான்.
அர்ஜுனன் “மூத்தவரே, அவன் குடியின் பழி அவனுக்கும் உரியதே. கொல்க அவனை! கொல்க! கொல்க அவனை!” என்று கூவியபடி துரியோதனனை அம்புகளால் அடித்து முன்சென்றான். அவனை எதிர்கொண்டபடி துரியோதனன் “இளையோனே, எழுந்து அகல்க! உயிர் காத்துக்கொள்க, இளையோனே!” என விகர்ணனை நோக்கி கூவினான். பீமன் “உன் குலத்தின் பழியை நீ சுமக்கவேண்டியதில்லை, இளையோனே. எழுந்து விலகுக!” என்றபின் தன்னை நோக்கி பாய்ந்து வந்த துச்சாதனனை கதையால் அறைந்தான். அவன் கதையை ஒழிய நிலமளாவ தழைந்து சுழன்று துச்சாதனன் எழுவதற்குள் சிறகடித்தெழும் நாரை என காற்றில் எழுந்து துச்சாதனனை துணைசெய்ய வந்த விந்தனையும் அனுவிந்தனையும் அறைந்துகொன்றான்.
உருண்டு எழுந்து அருகே கிடந்த கதையொன்றை எடுத்துக்கொண்டு பீமனை அடித்தான் விகர்ணன். விந்தனின் தலையுடைந்த குருதி அவன் முகத்தில் பீறிட்டு நோக்கை மறைத்தது. அவன் தள்ளாடி நிற்க அவன் தோளில் அறைந்து அப்பால் தெறிக்கச் செய்து “செல்க! விலகிச் செல்க! அறம் உன்னை காத்தது என்றமையட்டும். அறமின்மை எங்கள் மேல் அமையாதொழியட்டும்!” என்று பீமன் அடிக்குரலில் கூவினான். ஆனால் ஒரு கை உடைந்து நனைந்த துணி என துவள மறுகையால் கதையை எடுத்தபடி விகர்ணன் பீமனை நோக்கி பாய்ந்தான். பீமன் திரும்பி நோக்காமலேயே கதையைச் சுழற்றி அவன் தலையை அறைந்து உடைத்தான். விகர்ணனின் வெங்குருதி அவன்மேல் சாரலெனப் பொழிந்து வலத்தோளிலும் புறங்கழுத்திலும் வழிந்தது.
“மைந்தா! மைந்தா, விகர்ணா!” என துரியோதனன் கூவினான். “கீழ்பிறப்பே!” என்று கூவியபடி கதையுடன் தாக்க வந்த துச்சாதனனை ஓங்கி அறைந்து தெறிக்கச் செய்தபின் இருமுறை பின்னால் தாவி புரவிமேல் ஏறிக்கொண்டான் பீமன். முரசுகள் ஒலிக்க அர்ஜுனனும் படையினரும் பின்வாங்கி பறவைக்கூட்டம்போல் குவிந்து நீண்டு கவசக்கோட்டை வாயிலுக்குள் சென்று மறைந்தனர். கேடயங்கள் இணைந்துகொள்ள கோட்டை மீண்டும் சொல்லடங்கியது. தேரிலிருந்து இறங்கி ஓடிய துரியோதனன் மண்ணில் சிதைந்து கிடந்த விகர்ணனின் உடலை எடுத்து தன் நெஞ்சோடணைத்துக்கொண்டு “மைந்தா! இளையோனே!” என்று கூவியழுதான்.
விசும்பல் ஒலி கேட்டு ஒற்றைவிழி திருப்பி ஏகாக்ஷர் பார்த்தார். சத்யசேனை தளர்ந்து நிலத்தில் விழ சத்யவிரதை அவளை மெல்ல தாங்கி அப்பால் கொண்டு சென்றாள். சேடியர் ஓசையிலாது வந்து தூக்கி அவளை பிறிதொரு அறைக்கு கொண்டு சென்றனர். களத்தில் சுட்டு விரலை ஊன்றியபடி எகாக்ஷர் காந்தாரியை பார்த்துக்கொண்டிருந்தார். பானுமதி கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. சிறிய சிவந்த உதடுகளை பற்களால் அழுத்திக் கடித்தபடி அவள் போதுமென்பதுபோல் தலையசைத்தாள். அந்த மெல்லிய அசைவு எப்படி காந்தாரிக்குத் தெரிந்தது என்று எகாக்ஷர் வியக்கும்படி அவள் கை நீட்டி மேலே சொல்க என்று ஆணையிட்டாள்.
ஏகாக்ஷர் சொன்னார்: அந்தக் களத்தில் தன் இளையோனின் குருதியை இரு கைகளாலும் அள்ளி அள்ளி நெஞ்சிலும் முகத்திலும் பூசிக்கொண்டு துரியோதனன் கூவியழுதான். “இளையோனே, உன் சொல்லால் அல்லவா மானுடனாக வாழ்ந்தேன்! உன்னில் அல்லவா நான் உளம்திறந்து வெளிப்பட்டேன்!” என்று கதறினான். அரசி, அப்பால் கேடயக்கோட்டைக்குள் புரவியிலிருந்து இறங்கி பீமன் தரையில் அமர்ந்துகொண்டான். இரு கைகளாலும் நிலத்தை அறைந்தபின் தன் தலையை மண்ணில் பதித்து உடல்குறுக்கினான். அவன் தோள்களும் விலாக்களும் அதிர்ந்தன. கழுத்தில் தசைகள் இழுபட்டு தெறித்தன. சகதேவன் அருகணைந்து “மூத்தவரே!” என்று ஏதோ சொல்லப்போக பீமன் எழுந்து பேய்த்தெய்வமென முகம் வலிப்படைந்து விழி துறித்திருக்க “அகல்க! செல்க!” என்று கூவினான். கைநீட்டி “செல்க! இல்லையேல் உங்கள் நெஞ்சு பிளந்து குருதி குடிப்பேன். செல்க!” என்றான்.