கார்கடல் - 5
கங்கையின் கரையில் இடும்பவனத்தில் அமைந்த இடும்பபுரியின் அருகே காட்டுக்குள் எழுந்த சிறுகுன்றின்மேல் தொல்லிடும்பர்களின் இடுகாட்டில் கிளையிலா அடிமரம்போல் ஓங்கி நின்றிருந்த பெரிய நடுகற்களின் நிழல்களை நெளிந்தாடச் செய்யும் பந்தங்கள் எரிந்த ஒளிப்பரப்பிற்குள் எழுவர் அமர்ந்திருந்தனர். காவலர் மூவர் வேல்களுடன் அப்பால் நின்றனர். அவர்களில் நால்வர் முதியவர்கள். மூவர் முதிரா இளையோர். அவர்களில் ஒருவன் இடும்பவனத்தின் இளவரசனாகிய மேகவர்ணன். பேருடலனான அவன் அமர்ந்திருக்கையிலேயே நின்றிருந்த வேலவர்களின் தோளுயரம் இருந்தான்.
அருகே மூதாதையாகிய இறுதி இடும்பரின் பெருங்கல்லுக்கு முன்னால் விரிக்கப்பட்ட ஏழு தலைவாழை இலைகளில் குருதியூனும், சோற்றுருளைகளும் பரிமாறப்பட்டு அருகே செந்நிற மலர்கள் படைக்கப்பட்டிருந்தன. ஏழு மண்மொந்தைகளில் நுரைஎழுந்து நின்ற புதுக் கள் வைக்கப்பட்டிருந்தது. தரைதொட நீண்ட எருக்குமணி மாலை சூடி நின்றிருந்த இடும்பரின் பெருங்கல் மீது மஞ்சளும் சுண்ணமும் கலந்த செங்குருதிக் குழம்பு பூசப்பட்டிருந்தது. அப்பெருங்கல் மண்ணுக்குள்ளிருந்து எழுந்த பசி கொண்ட ஒரு நாக்குபோல நின்றிருந்தது. அதனருகே சற்று முன்புவரை பூசகர்கள் மீட்டிய குடமுழவும் கலவீணையும் நந்துனியும் வைக்கப்பட்டிருந்தன.
குலப்பூசகரான குடாரர் எரிபந்தத்தின் கீழ் பசுஞ்சாணி மெழுகிய தரையில் செங்களம் வரைந்துகொண்டிருந்தார். செந்நிற மண்பொடியும் சுண்ணப்பொடியும் கரிப்பொடியும் அவருடைய கையருகே கொப்பரைகளில் காத்திருந்தன. அவர் கைகளிலிருந்து பொழிந்து கோடுகளும் அலைகளுமாக களமாகி விரிந்தன வண்ணப்பொடிகள். மேகவர்ணன் அந்த நடுகல்லையே பார்த்துக்கொண்டிருந்தான். தழல் அசைவிழந்து கல்லென்றானது எவ்வண்ணம் என்று எண்ணிக்கொண்டான். அவனுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்பவர்கள் அல்ல அங்கிருந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய தனியுலகில் இருந்தனர். அவனுக்கு நேர்முன்னால் இருந்த முதிய இடும்பரான கன்மதர் அரைத்துயிலில் என ஆடிக்கொண்டிருந்தார். சற்றுமுன்புவரை அவர் மீட்டிய முழவின் தாளம் அவருடைய குருதியில் அப்போதும் எஞ்சியிருந்தது.
குடாரர் சற்று தள்ளி அதன் முழுவுருவை நோக்கினார். இரு முக்கோணங்கள் ஒன்றையொன்று வெட்டின. அந்த மையத்திலிருந்து எழுந்த கோடுகள் மடிந்து மடிந்து ஒன்றையொன்று வெட்டி நூற்றுக்கணக்கான முக்கோணங்களாக மாறிக்கொண்டிருந்தன. முக்கோணங்கள் இணைந்து ஒரு வட்டமாயின. மலர்போல் இதழ் கொண்டன. முழுமை நோக்கில் வட்டமாகவும் ஒவ்வொன்றாக பார்க்கையில் முக்கோணங்களின் தொகையாகவும் அந்தக் களம் நிறைவடைந்துகொண்டிருந்தது. அதை நோக்க நோக்க ஒவ்வொன்றும் பிறிதொன்றுடன் இசைவுகொள்ளத்தக்கதாகவே இங்கு அமைந்துள்ளன என்னும் எண்ணம் எழுந்தது. அந்த ஒழுங்கு இங்கே அனைத்தும் எளிதே என எண்ணச் செய்தது. ஆனால் நோக்க நோக்க அப்பின்னல்வெளியின் விரிவு உள்ளத்தை மலைக்கச் செய்தது.
இடும்பகுலத்து முதிய பூசகராகிய பூதர் கையில் உடும்புத்தோல் இழுத்துக்கட்டிய உடுக்குடன் அமர்ந்திருந்தார். அவருடைய சுட்டுவிரல் கற்பரப்புபோல கடினமாகத் தோன்றிய தோல்வட்டத்தை நிலையழிந்ததுபோல மெல்ல வருடிக்கொண்டிருந்தது. அவருடைய உள்ளத்தையே அவருடைய விரலாக பார்ப்பதுபோல் இருந்தது. இடும்பகுடியின் முதுபூசகராகிய ஊர்த்துவர் “ம்?” என்றார். களம் வரைந்துகொண்டிருந்த குடாரர் “ம்” என மறுமொழி சொல்லிய பின் களம் முடித்து ஒரு கூர்கல்லை அக்களத்தின் நடுவே அழுத்தி நிறுத்தினார்.
குடாரர் திரும்பிப்பார்த்து “உம்” எனும் ஒலியை எழுப்பினார். கனவிலிருந்து விழித்ததுபோல் உடலில் அசைவு தோன்ற எழுந்த பூதர் தன் இரு விரல்களாலும் மெல்ல உடும்புத்தோல் உடுக்கையை மீட்டத்தொடங்கினார். நன்கறிந்த ஆனால் உடலில்லாத விலங்கொன்றின் உறுமல்போல் அதன் ஓசை எழுந்து சூழ்ந்திருந்த இருளில் எதிரொலித்தது. ஊன்நெய் பூசிய துணி சுருட்டிக் கட்டிய பந்தம் ஒன்றை கொளுத்தி கொண்டுவந்து அக்களத்தின் தெற்கு மூலையில் நட்டார் குடாரர். பந்தத்தின் ஒளியும் உடுக்கின் ஓசையும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. ஓசைக்கேற்ப தழல் நடமிட்டது. தழல்நடனம் உள்ளத்தின் தாளமென விழிகளினூடாக நுழைந்தது.
மேகவர்ணன் மெல்ல மெல்ல தன் தசைகள் இறுகுவதை விரல்கள் சுருண்டு உள்ளங்கைக்குள் அழுந்துவதை உணர்ந்தான். கிட்டித்த பற்களின் ஓசை காதில் கேட்டது. குடாரர் களம் நடுவே நடப்பட்ட சிறு கல்லுக்கு மூன்று அன்னப்பருக்கைகளை எடுத்து படையலிட்டார். மூன்று சிறு தெச்சி மலர்களை வைத்து வணங்கினார். பின்னர் தன் சிறுகத்தியை எடுத்து சுட்டுவிரல் முனையை அறுத்து மூன்று சொட்டுக் குருதியை அந்தக் கல்லின் முன்னால் அமைக்கப்பட்ட சிறிய பலிபீடக் கல்மேல் விட்டார். கைகூப்பியபடி அச்சிறுகல்லையே பார்த்துக்கொண்டிருந்தார்.
மேகவர்ணன் திரும்பி அப்பால் நின்ற இடும்பரின் பெருஞ்சிலையை மீண்டும் பார்த்தான். அவனுடைய முதுமூதாதை அவர். அன்று இக்காடுகளில் அவன் குடி நிலம் தொடாது வானிலென வாழ்ந்துகொண்டிருந்தது. காடுகளுக்கு அப்பாலிருந்து வந்த பெருந்தோளராகிய பீமசேனரின் முன் தோற்று அம்மூதாதை நிலம்பதிந்தார். அவன் மூதன்னை பீமசேனருக்கு மனைவியாகி அவன் தந்தையை ஈன்றாள். நிலமைந்தரின் குருதி அவர்களின் குடியில் கலந்தது. அவர்களின் காட்டுச்சிற்றூர் நகராகியது. அவர்கள் நிலத்தில் நடமாடத் தொடங்கினர். அவர்களின் கால்கள் மண்ணுக்கு பழகியபோது கைகள் மரக்கிளைகளை மறக்கத் தொடங்கின.
அவன் குடியில் பலர் தங்கள் தந்தையர் காட்டு மரக்கிளைகளுக்குள் பறந்து செல்வதை பார்த்திருந்தார்கள். அவன் தந்தை மரங்களின்மேல் பறக்கும் ஆற்றல்கொண்டவர் என்றாலும் நிலத்தில் கால்வைத்து எடை கொண்ட உடலை அசைத்து நடந்தார். அவனுக்கு கால் சற்று தரையிலிருந்து மேலெழுந்தாலே கைகள் பதறத்தொடங்கின. உடலுக்குள் திரவம் ஒன்று அதிர்ந்தது. தந்தை கடோத்கஜர் மரங்களுக்கிடையே பாய்ந்துசெல்கையில் கீழே சரிந்த மரங்களில் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி அவன் அவரைத் தொடர்ந்தோடினான். மேலே பார்த்து “என்னை மேலே தூக்குங்கள்! என்னை மேலே தூக்குங்கள்!” என்று அவன் கூவினான். எதிர்பாராத கணம் மரக்கிளைகளினூடாக பாய்ந்திறங்கி வந்து அவன் இரு கைகளையும் பற்றி அவர் மேலே கொண்டு சென்றார். கிளைகளின் செறிவுக்குள் இலையடர்வுக்குள் ஊடுருவி மேலே சென்று நீர்பிளந்து மேலே துள்ளும் மீன்போல் ஒளி நிறைந்த வானில் தலைதூக்குவது அவன் இளமையின் பேருவகைகளில் ஒன்றாக இருந்தது.
அந்தப் பெருங்கல்லே இடும்ப குடியின் இறுதி நடுகல். அதை அவர்கள் தலைக்கல் என்றனர். அதன்பின் அத்தகைய பெருங்கல் எவருக்கும் நடவேண்டியதில்லை என்று குடி முடிவெடுத்தது. ஒரு முழம் உயரமுள்ள சிறிய நடுகற்களே பின்னர் களம் மாண்டவர்களுக்கு நடப்பட்டன. ஏழு ஆண்டுகள் அன்னமும் குருதியும் மலரும் அளித்த பின்னர் அவர்கள் மண்ணில் கலந்துவிட்டார்கள் என்று கொள்ளப்பட்டது. ஆனால் தலைக்கற்களுக்குரியவர்கள் மண்ணில் உருகலப்பதே இல்லை. அவர்கள் தங்கள் குடியினரை விழியிலா நோக்கால் கண்காணித்தபடி மலைக்குமேல் செறிந்து நின்றிருந்தனர். தளிர்க்காத, பூக்காத, காய்க்காத கல்மரக்காடு என்றனர் குலப்பாடகர்.
இடும்பகிரியின் உயரமற்ற சரிவுகளில் ஒன்றின் நிழல் ஒன்றின் மேல் விழ, நிழல் பின்னித் தைத்த நெடுவிரிப்பின் மேல் என நின்றிருந்த அனைத்து பெருங்கற்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அன்னமும் நீரும் அளிக்கப்பட்டது. அது இடும்பர் குலத்தின் பெருநிகழ்வு. அன்று சிவமூலிப் புகை இழுத்தும், மூக்கு வார கள்ளருந்தியும், துடிதாளம் கேட்டு உளம் நிறைந்தும் கூவி ஆர்த்து நடனமிடும் இடும்பர்கள் அங்கிருந்த மரவீடுகளை, தெருக்களை, சூழ்ந்திருந்த கோட்டையை, அங்காடியை, அவர்களை புற உலகுடன் இணைத்த பெருஞ்சாலைகளை, நீர்வழிகளை முற்றாக உதறி தங்கள் தொல்காடுகளின் ஆழங்களுக்குச் சென்றனர். இலைகளுக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து சென்று அவ்விருளுக்குள் பேருருவென நின்ற மூதாதையரை கண்டனர்.
பூசகர்களின் உடலில் தசைநடுக்குகொள்ள, கால்கள் துள்ளித்துள்ளி எழ, பற்கள் பெருகி முன்னெழ தோன்றிய தொல்லிடும்பர்கள் தங்கள் மைந்தர்களைக் கண்டு கைவிரித்து கூவி நகைத்தனர். விழிநீர் வார்த்து “மைந்தர்களே!” என்று கூவினர். “தந்தையரே!” என்று கூவி அழுதபடி அவர்களின் கால்களில் விழுந்தனர் இடும்பர். மண்ணில் புரண்டு கதறினர். நிலத்தில் கையாலும் தலையாலும் அறைந்தபடி அரற்றினர். அவர்களின் அழுகையை வெறித்த பொருளிலா விழிகளால் நோக்கிய மூதாதையர் மைந்தர்களை தலைதொட்டு வாழ்த்தினர். அவர்கள் அளித்த கள்ளையும் அன்னத்தையும் ஊனையும் உண்டு மீண்டும் மண் புகுந்தனர்.
இடும்பகுடியிலிருந்து ஏதோ ஒன்று விலகிச்சென்றுவிட்டிருப்பதை அனைவருமே உணர்ந்திருந்தனர். முதியவர்கள் அனைவரும் அதை சொன்னார்கள். ஆனால் அது என்ன என்று எவராலும் வகுத்துரைக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் அவ்வப்போது அவர்கள் இழந்தவை என உணர்வது எதையோ அதை சொன்னார்கள். ஆண்களின் அச்சமின்மை என்றனர் பெண்கள். இளையோரின் கவலையின்மை என்றனர் மூத்தோர். முதியோர் இல்லத்திண்ணையிலிருந்து முற்றத்திற்கு இறங்குவதுபோல் இறப்பை நோக்கிச் செல்லும் இயல்பை என்றனர். ஏதோ ஒரு கணத்தில் அதை உணர்ந்து நெஞ்சு நெகிழ விழிகசிந்து விம்மத் தொடங்கினர்.
“இந்நகரம், இந்த மாளிகைகள், இச்செல்வம், நாம் அவைகளில் கொண்டுள்ள முதன்மை அனைத்தும் அதை கொடுத்து நாம் பெற்றுக்கொண்டதே” என்று கள்மயக்கில் அழுதபடி பூதர் அவனிடம் சொன்னார். “விலைகொடுக்காமல் எதையும் தெய்வங்கள் அளிப்பதில்லை. சிறகுகளை கொடுத்த பின்னரே யானை துதிக்கையை பெற்றது என்பது நம் குலக்கதை. நாம் பெற்றது இவை என்றால் கொடுத்தது என்ன? தெய்வங்களின் ஆடலில் ஒரு நெறி உண்டு. தெய்வங்கள் அளித்ததில் நிறைவுகொள்ளாமலேயே நாம் புதியது கோருகிறோம். எனவே அரியதை கொடுத்தே சிறியதை பெறுவோம்.” அவன் அவர்கள் சொல்வதென்ன என்று நன்றாகவே உணர்ந்திருந்தான். அத்துயரில் இணைந்து அவன் பெருமூச்சுவிட்டான்.
பின்பொருநாள் அவனே அதை உணர்ந்தான். இடும்பபுரி உருவாகத் தொடங்கியதுமே ஊரிலிருந்து விலகி காட்டுக்குள் சென்று இடும்பர்களுடன் எவ்வுறவும் இன்றி வாழ்ந்திருந்த கண்டகர் என்னும் முதியவரை அவன் கண்டான். காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றபோது தலைக்குமேல் இலைச்சலசலப்பு எழ அவன் ஏறிட்டுப் பார்த்து வில்கூர்ந்தான். அங்கே எரியும் விழிகளுடன் அவனை நோக்கியபடி அவர் தெரிந்தார். அவன் வில்தாழ்த்தினான். அவர் இன்னொரு சலசலப்பில் இலைப்பரப்பில் கரைந்து மறைந்தார். அவன் அன்றிரவு தன் மூத்தவனிடம் அவரைப் பற்றி கேட்டான். “இங்கிருந்த ஒன்றை அவர் எஞ்சவைத்துக்கொண்டார். நாம் அடைந்த அனைத்தையும் துறந்தே அவரால் அதை தக்கவைக்க முடிகிறது” என்றான் பார்பாரிகன். “அவரில் நம் மூதாதையரில் ஒருவர் குடிகொள்கிறார் என்கிறார்கள்” என்று அவன் அன்னை சொன்னாள்.
அவ்விழிகளை அவன் மறக்கவில்லை. பித்தனின் விழிகள். “அது பித்துதான். ஆனால் அனைத்து பித்துக்களும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத பிற மட்டுமே” என்று கடோத்கஜர் சொன்னார். அவன் மீண்டுமொருமுறை அவரை பார்த்தான். உள்காட்டில் சென்றுகொண்டிருக்கையில் அவன் அரசநாகம் ஒன்றால் துரத்தப்பட்டான். அதன் கடியிலிருந்து தப்ப அவன் அருகிருந்த வாவியில் பாய்ந்தான். அது கரையில் ஓங்கிய கை என பத்தி விரித்து நின்றுவிட்டு ஒழுகிச்சென்றது. அவனால் கரைநோக்கி வரமுடியவில்லை. அச்சுனை ஆழ்ந்த சேறுநிறைந்ததாக இருந்தது. அவன் உடல் அதில் அமிழ்ந்துகொண்டிருந்தது. கைகளையும் கால்களையும் சேற்றின் கைகள் இறுகப் பற்றியிருந்தன. அவன் அலற எண்ணினான். ஆனால் தொண்டையிலிருந்தும் குரலெழவில்லை.
அப்போது அவர் தோன்றினார். கிளைகளின் வழியாக வந்து மேலிருந்தே கொடிவள்ளி ஒன்றை அவனை நோக்கி வீசினார். அவன் உடலை எம்பி அதை கடித்துப்பற்றிக்கொண்டான். அவர் அவனை இழுத்து கரைக்கு கொண்டுவந்தார். அவன் சேற்றில் புரண்டு எழுந்தபோது மரத்திலிருந்து இறங்கி வந்து நிலம் தொடாமல் தலைகீழாகத் தொங்கி சிவந்த விழிகளால் அவனை பார்த்தார். கைநீட்டி அவன் தலையை தொட்ட பின்னர் எழுந்து மறைந்தார். அந்தத் தொடுகை அவன் உடலில் நினைவென எஞ்சியிருந்தது. பின்னர் அவன் உணர்ந்தான் இடும்பர்களில் எவரிடமும் அந்தத் தொடுகை இல்லை என. தமையனும் தந்தையும் அந்தத் தொடுகையிலிருந்த ஒன்று இல்லாதவர்கள். அதை அவன் எவரிடமும் சொல்லவில்லை.
அவன் அதன்பின் உள்ளூரத் தனித்தவனானான். அவையில் அமர்ந்து அயலகத்து நிமித்திகர் அவன் குடி அடையப்போகும் பெருமையை சொல்லிக்கொண்டிருந்தார். மூராக்களின் குடி பெருகி பாரதவர்ஷத்தை ஆளும். தென்குமரி முதல் வடமலை வரை மௌரியர்களின் கொடிபறக்கும். அவன் சலிப்புடன் எழுந்து அகன்றான். அதை அவையே திரும்பி நோக்கியது. நிமித்திகரும் அதை பார்த்தார். பின்னர் புன்னகையுடன் “நீங்கள் அடைந்தவற்றுக்கு நிகராக எவரும் மூதாதையரிடமிருந்து அடையவில்லை, அரசே. மௌரியர்களின் பெயரின்றி இந்நிலத்தில் எவரும் இறந்தகாலத்தை எண்ணமுடியாதென்று உணர்க!” என்று தொடர்ந்தார்.
குடாரரின் ஓலம் கேட்டு மேகவர்ணன் திரும்பிப்பார்த்தான். அவர் தன் கையை நீட்டி சுட்டு விரலால் கள மையத்தில் அமைந்த சிறு தெய்வக்கல்லை காட்டிக்கொண்டிருந்தார். அவ்விரல் சிற்றுருக்கொண்ட தெய்வம் ஒன்று அதில் மட்டும் குடியேறியதுபோல துடித்தது. மெல்ல அந்த நடுக்கு பரவி அவர் உடல் துள்ளி அதிர்ந்தது. கழுத்துத் தசைகள் இழுபட்டிருக்க, பற்கள் நெரித்து உதடுகளை கடிக்க, விம்மலோசையும் உறுமலோசையும் அவரிடமிருந்து எழுந்தது. பூதர் “மூத்தவரே! மூதாதையே! தாங்கள் யார்?” என்றார். “உம்ம்ம் உம்ம்ம்” என காற்று கடந்துசெல்லும் பனைமுடி என உறுமினார் குடாரர். பூதர் “கூறுக, மூதாதையே! உங்கள் மைந்தருக்கு அளிகூர்க! தாங்கள் யார்?” என்றார்.
“நான் இடும்ப குலத்து மூதாதை ஹடன். என் மைந்தர் நீங்கள் கோரியதற்கேற்ப இங்கு வந்தேன்” என்றார் குடாரர். “என் மைந்தரின் சொல் கேட்டு வந்தேன். அவர்கள் விழைவென்னவோ அதை நிகழ்த்த வந்தேன்” என்றார் குடாரர். பூதரின் விரல்கள் உடுக்கின்மேல் வெறிகொண்டு நடனமிட்டன. ஓசை விசைகொண்டு மேலும் விசைகொண்டு செவிகளாலோ சிந்தையாலோ தொடரமுடியாத அளவுக்கு விரைவை அடைந்தது. முன்னும் பின்னும் ஊசலாடிய உடலுடன் பூதர் கேட்டார் “அங்கே என்ன நிகழ்கிறதென்று அறிய விரும்புகிறோம், தந்தையே. எங்கள் குடியினர் அங்கிருக்கிறார்கள். எங்கள் அரசர் அங்கிருக்கிறார். அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று அறிய விரும்புகிறோம்.”
“உம்ம்ம்ம் உம்ம்ம்” என குடாரர் உறுமியபடி உடல் துள்ள ஆடினார். அவர் விழிகள் மேலேறி கண்கள் வெண்ணிறமாகத் தெரிந்தன. நாக்கு உள்நோக்கி மடிந்துவிட்டிருந்தது. உடலெங்கும் தசைகள் தனித்தனியாக இழுபட்டு அதிர்ந்தன. “சொல்க! நாங்கள் அப்போரில் இங்கிருந்தே உளம் கலக்க விழைகிறோம்” என்றார் பூதர். “அந்தப் போரிலிருந்து எங்கள் குலம் எங்ஙனம் மீண்டெழும்? எந்தையே, நேற்றுவரை அதை பிறிதொரு போர் என்றே எண்ணியிருந்தோம். எங்கள் குடிவீரர் முற்றாக அழியக்கூடுமென இப்போது அறிகிறோம். அதிலிருந்து எஞ்சுபவர்களால்தான் நாங்கள் வாழவேண்டும்.”
மேகவர்ணன் “அந்தப் போரில் நான் கலந்துகொள்ளலாகாதென்பது எந்தையின் ஆணை. என் குடி அங்கே உயிர்துறந்துகொண்டிருக்கையில் இங்கே வாளாவிருக்கிறேன்” என்றான். “அங்கு நிகழ்வதென்ன என்றாவது நான் அறிந்தாகவேண்டும். எந்தையால் எனக்கு அனுப்பப்படுவன மெய்யான செய்திகள் அல்ல என்று தெரிந்துகொண்டேன். நான் அங்கு சென்றாகவேண்டும்.” குடாரர் “உம்ம்ம் உம்ம்ம்” என ஆடிக்கொண்டிருந்தார். அவருடைய நாவு மடிந்திருப்பதனால் பேச்சு எழவில்லை என்று மேகவர்ணன் எண்ணினான். அவரிடம் அவ்வினாக்களைக் கேட்பதில் என்ன பொருள் என உள்ளம் மயங்கியது. ஆனால் எண்ணியிராக் கணத்தில் அவர் குரல் எழுந்தது. “நான் காலத்தை கடந்துள்ளேன். இடத்தை அறியாதோன் ஆனேன். காலத்தில், இடத்தில் என்னை நிறுத்துவது பிழை என்று உணர்கிறேன்.”
அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என மேகவர்ணன் திகைத்தான். குடாரரின் வாய் திறந்திருக்க நாக்கு மடிந்தேயிருந்தது. தொண்டையின் தசைகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. “உங்கள் குலத்து இளவரசன் அங்கு அனைத்தையும் பார்த்தவனாக அமர்ந்திருக்கிறான். மேடையில் அமர்ந்து பகலிரவில், துயில்விழிப்பில், இன்றுநேற்றில் என்றிலாது நோக்கிக்கொண்டிருக்கிறான். எனக்கினியவன் என் குருதியாகிய பார்பாரிகன். அவனை இதோ அணுக்கமாக உணர்கிறேன். அவனருகே என் மூச்சு அவனைத் தொடும் அளவுக்கு சென்று அமர்ந்திருக்கிறேன். அவனது இனிய மென் தலைமயிரை என் கைகளால் வருடுகிறேன். பெருந்தோள்களை தொட்டு ஒழிகிறேன். விழிவிடாய் அடங்காது அவனை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
பூதர் “மூதாதையே, அவன் விழிகளை சூடுக! அவ்விழிகள் அறிந்தவற்றை இங்கு சொல்க! இங்கிருந்து நாங்கள் அக்களத்தை பார்க்க விழைகிறோம். அங்கு நிகழ்வன அனைத்தையும் நாங்கள் உணர்ந்தாக வேண்டும்” என்று சொன்னார். குடாரரின் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. “நான் இரு ஒளித்துளிகளாக மாறுகிறேன். அவன் முன் கணையாழியின் அருமணியிலிருந்து விழுந்த ஒளிப்பொட்டுபோல் நிலத்தில் கிடக்கிறேன். அவன் திரும்பி நோக்குகையில் என்னை கண்டான். இது என்ன என்று கூர்ந்து பார்க்கிறான். அக்கணம் எழுந்து அவன் கருமணிகளுக்குள் புகுந்துகொள்கிறேன். மைந்தரே, அங்கு நின்று அவன் நோக்கும் அனைத்தையும் நானும் நோக்குகிறேன். அவன் உணர்ந்தவற்றை அவனுள் நோக்கி நானும் அறிகிறேன். அங்கு அவனுடன் நானும் இருக்கிறேன்” என்றார்.
பூதர் “சொல்க, மூதாதையே! அவனாகி நின்று அங்கு நிகழ்வதென்ன என்று சொல்க! எங்கள் குடி அங்கு போரில் அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். ஆற்றல் மிக்கவர்களாகிய இடும்பர்கள் ஒவ்வொருவராக துரியோதனராலும் தோள்பெருத்த அவர் தம்பியராலும் வெல்லற்கரிய பகதத்தராலும் மூதாதை வடிவென எழுந்த பால்ஹிகரின் பெருங்கதையாலும் கொல்லப்படுகிறார்கள் என்கிறார்கள். சொல்க, எங்களுக்கு இனி எஞ்சுவதென்ன? நாங்கள் இனி எதிர்பார்க்க வேண்டியதென்ன?” என்றார். “அதை எவரும் அறியவியலாது. அங்கே திகைத்த விழிகள் சூடிய பல்லாயிரம் மூதாதையரும் தெய்வங்களும் காற்றில் நிறைந்துள்ளனர்” என்றார் குடாரர்.
மேகவர்ணன் “அவருடைய விழிகள் கண்டவை இங்கே திகழட்டும். நாங்கள் அங்குமிருக்கவேண்டும். எங்கள் அச்சத்தால், விழைவால் எங்கள் ஊழை அறிகிறோம்” என்றான். குடாரர் கைகள் நடுநடுங்க முன்னும் பின்னும் அசைந்தாடிக்கொண்டிருந்தார். நெடுநேரம் அவரிடமிருந்து சொற்களேதும் எழவில்லை. சூழ்ந்து நின்றவர்கள் அவர் உதடுகளை நோக்கிக்கொண்டிருந்தனர். பூதரின் விரல்கள் மெல்ல தணிந்து சீரான தாளத்தை எழுப்பத் தொடங்கின. குன்றுக்குக் கீழே இடும்பபுரியின் கோட்டையில் சங்கொலி எழுந்தது. முதற்சாமம் தொடங்குவதை மேகவர்ணன் உணர்ந்தான். காவலர்கள் அணி மாறும் ஓசைகள் கேட்டன. அங்காடியில் ஒரு நாய் விழித்துக்கொண்டு ஊளையிட்டது. மீன்கொழுப்பு விளக்குகள் எரிய இடும்பபுரியின் ஈரடுக்கு மரமாளிகைகள் துயில்கொண்டவைபோல் தெரிந்தன. அவன் பெருமூச்சுவிட்டு உடலை எளிதாக்கி அமர்ந்தான்.
குடாரர் இருமுறை தொண்டையை கனைத்தார். அவர்கள் ஓசையில் பறைத்தோல் என மெல்லதிர்வு கொண்டனர். “நான் இக்களத்தில் தனித்திருக்கிறேன்” என்றார் குடாரர். அவனுக்கு மெல்லிய மெய்ப்பு ஏற்பட்டது. அது அவன் மூத்தவனின் குரல். “போர்க்களத்தில் முற்றிலும் அசையாது ஒரு மேடையிலேயே அமர்ந்திருப்பதென்பது எளிதல்ல. அது கடுந்துயர். துயர் அளிப்பது எதுவும் தவமே. தவம் எதுவாயினும் விளைவது மெய்மை என்கிறார்கள்” என்றார் குடாரர். அறியாமல் மேகவர்ணன் கைகூப்பினான். அங்கிருந்தோர் அனைவரும் கைகூப்பிக்கொண்டிருப்பதை கண்டான்.
“தவம் எனது விழிகள்கொண்டது. இந்தப் போரை இங்கிருந்து ஒவ்வொரு கணமென காலத்தை பகுத்து, ஒவ்வொரு நிகழ்வென காட்சியை பகுத்து, ஒவ்வொரு பொருளென துணித்து நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல்லாயிரம் பலகோடி போர்கள். முடிவிலா இறப்புகள். முடிவிலாத சொற்கள். இங்கிருந்து நான் எண்ணத்தால் அள்ளிக்கொள்பவை அதில் ஒரு சில துளிகள். அக்கடலிலிருந்து என் மொழி சொற்களென திரட்டிக்கொள்பவை மேலும் சில துளிகள். என் நா உரைப்பவை மேலும் சிலவே. அப்பெருக்கில் பொருள்சூடியவையோ அரிதான சில மட்டுமே. அவை இங்கே திகழ்க! அவ்வாறே ஆகுக!” என்று பார்பாரிகன் சொன்னான்.