கார்கடல் - 47
ஏகாக்ஷர் சொன்னார்: அன்றைய போர் தொடங்கும்போது கௌரவப் படையின் அத்தனை வீரர்களும் உள்ளூர சற்று அச்சம் கொண்டிருந்தார்கள் என்று அஸ்வத்தாமனுக்கு தெரிந்திருந்தது. அது அவர்கள் அனைவருமே உணர்ந்து ஒருவரோடொருவர் மறைத்துக்கொண்ட ஒன்று. அன்று புண்பட்டு எழும் அன்னைப் புலி போன்றிருப்பான் அர்ஜுனன் என்று அறிந்திருந்தனர். அவர்களின் உடலில் அசைவில் அது வெளிப்படவில்லை. ஆனால் அதை ஒரு சூழ்ந்திருக்கும் பேருணர்வாக உணரமுடிந்தது.
தன் இறுதிப்போர் அது என எண்ணி களத்தில் வரும் ஒருவனை எதிர்கொள்வது மிகக் கடினம். ஏனென்றால் போருக்கெழும் ஒவ்வொருவரும் தங்களை அறியாமலேயே அப்போரிலிருந்து வெற்றியுடன் திரும்பி வரும் தருணத்தை உளம் நடித்திருப்பார்கள். உயிர் கொடுக்கச் சித்தமே என்று அவர்கள் கூறினாலும், அவர்களின் உள்ளம் அதை நம்பினாலும் ஆழத்திலிருக்கும் பிறிதொன்று அவர்களை மீளச்செய்து கொண்டே இருக்கும். பின்னிழுக்கும் அந்த ஒரு சரடு உயிரின் விழைவு. மண்ணில் அத்தனை உயிர்க்குலங்களையும் இழுத்துக்கட்டியிருக்கும் வேர்த்தொடர்பு.
போர்களில் எடுக்கப்படும் அனைத்துப் படைக்கலங்களையும் அது எவ்வண்ணமோ சென்று தொடுகிறது. அனைத்து வஞ்சினங்களுடனும் கலந்துள்ளது. மாவீரர்களையும் அறியாது ஓர் அடி பின்னெடுக்கச் செய்கிறது. பெருவஞ்சம் சூடியவர்களையும் அச்சம் கொள்ள வைக்கிறது. தாங்கள் அஞ்சுவதை அவர்களே கண்டு திகைக்கையில் அச்சரடின் மேல் சென்று தொட்டுக்கொள்கிறார்கள். அதன் பொருட்டு நாணுகிறார்கள். அந்நாணத்திலிருந்து மேலும் வெறிகொண்டவர்களாகிறார்கள். ஒருகணமும் தங்கள் தலையறுத்திடத் தயங்காதவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அன்னை தெய்வங்களுக்கு முன் தன் தலையை தானே வெட்டி குருதி கொடுக்கும் நவகண்ட வீரன் அதற்கு முந்தைய கணம் வரை அச்சரடில்தான் அறியாக் கை ஒன்றால் பற்றிக்கொண்டிருக்கிறான். அவன் துணிந்தெழுந்து கடந்து சென்று கண்மூடித்தனமாக வெட்டுவது அச்சரடைத்தான்.
அஸ்வத்தாமன் போர்முரசு ஒலிக்கும் கணம் வரை தன்னுள் அச்சரடை உணர்ந்துகொண்டிருந்தான். கண்ணுக்குத் தெரியாத மென்பட்டுச் சரடு. பெரும் களிறுகளை இழுத்துக்கட்டி நிறுத்தும் ஆற்றல் கொண்டது. போர் தொடங்கிய கணம் அதை ஓங்கி வெட்டி அறுத்துக்கொண்டு பாய்ந்து பாண்டவப் படை நோக்கி சென்றான். “கொல்க! கொல்க!” என்று கூவியபடி அம்புகளை தொடுத்தான். “கொன்று மேற்செல்க! குருதிகொண்டு எழுக!”
போர் முழுவிசையில் தொடங்கி அங்கிருந்து உச்சம் கொண்டபடியே சென்றது. கௌரவப் படைவீரர்கள் பாண்டவப் படைவீரர்களை தாக்கியபோது விழிகளுக்குப் புலப்படாமலேயே இருசாராரின் உணர்வுநிலைகளில் இருந்த வேறுபாடு தென்பட்டது. கௌரவர்கள் ஒவ்வொருவரும் அர்ஜுனனின் உளவெறியை அஞ்சிக்கொண்டிருந்தனர். பின்னடைவதற்கான வழியொன்றை முன்னரே கண்டுவைத்திருந்தனர். பாண்டவ வீரர்கள் அர்ஜுனனின் எரிசினத்தின் ஒருதுளியை தாங்களும் ஏந்திக்கொண்டிருந்தனர். ஆகவே அரைநாழிகைக்குள்ளேயே கௌரவப் படைமுகப்பு எடைதாங்காமல் வளைவதுபோல் பாண்டவப் படையின் விசையேற்று பின்னடையலாயிற்று.
சகுனி “சூழ்ந்துகொள்க! இளைய பாண்டவரை சூழ்ந்துகொள்க!” என்று முரசறைந்து ஆணையிட்டுக்கொண்டே இருந்தார். வில்லவர் எழுவரும் அனைத்துத் திசைகளிலிருந்தும் தங்கள் துணைவிற்படையுடன் வந்து பாண்டவப் படையின் முகப்பிலிருந்த அர்ஜுனனைச் சூழ்ந்து வளைத்துக்கொண்டனர். பாண்டவர்களின் படைசூழ்கை என்ன என்று சில கணங்களில் புரிந்தது. அது கூர்மவியூகம். ஆனால் ஆமையின் ஓடு என அமைந்த கவசப்படை படைக்குப் பின்னால்தான் இருந்தது. கௌரவர்கள் தாக்கத் தொடங்கியதும் அது இரு நீட்சிகளாக இருபுறத்திலிருந்தும் வந்து இணைந்து அரண் ஆகியது. ஆமை தன் கால்களையும் தலையையும் உள்ளிழுத்துக்கொண்டது.
தரையில் சகடங்கள் மேல் உருண்ட பெரிய இரும்புக் கேடயங்களை பின்னின்று உந்திவந்த தேர்களால் ஆன கவசப்படையால் அர்ஜுனனுக்கு காவலமைத்தனர் பாண்டவப் படையினர். இரும்புக்கோட்டை என அது அர்ஜுனனை மூடி அவர்களிடமிருந்து அகற்றியது. அர்ஜுனன் எண்ணியிராக் கணத்தில் அந்தக் கேடயப்படையின் ஒரு பகுதியை திறந்து விசையுடன் வெளிவந்து அங்கு நின்றிருந்த கௌரவப் படையை எதிர்த்து, அதன் தலைவனை அம்புகளால் அறைந்து கவசங்களையும் தேர்த்தூண்களையும் உடைத்து புரவிகளை வீழ்த்தி பின்னடையச்செய்து அவனைத் துணைக்க பிற வில்லவர் அங்கு வரும்போது விசை குறையாமலேயே பின்னடைந்து தன் கவசப்படை சூழ்கைக்குள் மறைந்து எதிர்பாராத் தருணத்தில் பிறிதொரு இடத்தில் திறந்து வெளிவந்து தாக்கினான்.
அந்தப் போர்முறை கௌரவப் பெருவில்லவர் எழுவரையுமே திகைக்கச் செய்தது. எழுந்த அர்ஜுனனின் விசையை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. விசைமீண்டு அவர்கள் அவனைத் தொடர்ந்து சென்று தாக்கியபோது அம்புகள் பாண்டவர்களின் கேடயங்களை அறைந்து மணியோசையுடன் உதிர்ந்தன. எந்தத் தருணத்தில் எவருக்கெதிராக அர்ஜுனன் அக்கவசங்களைத் திறந்து வெளித்தோன்றுவான் என்று உய்த்துணர்வதே அவர்களின் போராக இருந்தது. அவன் அவ்வாறு கவசப்படையைப் பிளந்து கிளம்புவதில் எந்த ஒழுங்கும் இருக்கவில்லை. அர்ஜுனனின் உள்ளத்தை பல்வேறு கோணங்களில் கணித்துக்கொண்டிருந்தனர் கிருபரும் துரோணரும் சல்யரும். கணிக்க இயலாதென்று விட்டுவிட்டனர் அஸ்வத்தாமனும் பூரிசிரவஸும். அணுகிக் கணித்தவன் கர்ணன் ஒருவனே. அவனையும் திகைக்க வைத்தது அர்ஜுனனின் போர்.
கர்ணனுடன் போரிட்டு அறைந்து சிதறடித்த பின்னர் தன் படைகளுக்குள் மறைந்த அர்ஜுனன் மறுகணம் துரோணர் முன் தோன்றுவான் என்று அஸ்வத்தாமன் எதிர்பார்த்தபோது கேடயவாயில் பிளந்தெழுந்து அவன் முன் தோன்றினான் அர்ஜுனன். அந்த முதற்கணத் திகைப்பை அவன் அடையும்போதே அஸ்வத்தாமனின் வில்லும் மகுடமும் உடைந்து தெறித்தது. தேரில் குப்புற விழுந்து தன்மேல் கேடயத்தை கவிழ்த்துக்கொண்டு அர்ஜுனன் தொடர்ந்து வீசிய அம்புகளிலிருந்து அவன் தன்னை காத்துக்கொண்டான். பூரிசிரவஸும் சல்யரும் இருபுறத்திலிருந்து வந்து அர்ஜுனனை அறையத்தொடங்கியதும் அவன் எழுந்து அம்புகளால் அர்ஜுனனை அடித்தான். ஆனால் வெள்ளிமீன் நீருக்குள் மூழ்கி மறைவதுபோல் அர்ஜுனன் கேடயப்படைகளுக்குள் மறைந்தான். “கொல்க! கொல்க!” எனக் கூவியபடி அவனை துரத்திச் சென்ற மூவரும் இரும்புக்கேடயங்களின் நிரையால் தடுக்கப்பட்டனர். அம்புகள் வீணாகி உதிர அஸ்வத்தாமன் “கோழை! மூடன்!” என சினம்கொண்டு கூச்சலிட்டான்.
அர்ஜுனன் மீண்டும் கர்ணனையே நெருங்குவான் என்று நிலைகொள்ளாமல் உதைத்தும் வில்லை தேர்த்தூணில் அறைந்தும் நின்ற அஸ்வத்தாமன் எதிர்பார்த்தான். ஏனெனில் கர்ணன் பாண்டவர்களின் கவசப்படையை அறைந்து உள்நோக்கி வளைத்துக்கொண்டிருந்தான். உருகிய இரும்பு அறைபட்டு நெகிழ்வதுபோல் கவசப்படை பின்னடைந்துகொண்டிருந்தது. அங்கே எக்கணமும் அர்ஜுனன் தோன்றுவானென்று பிறரும் எதிர்பார்த்தார்கள். அத்திசை நோக்கி செல்ல சல்யர் தன் தேர்ப்பாகனுக்கு ஆணையிட்ட அதே கணம் மீண்டும் கவசநிரை திறந்து மீண்டும் அஸ்வத்தாமன் முன் அர்ஜுனன் தோன்றினான். அதை சல்யரும் பூரிசிரவஸும் எதிர்பார்க்கவில்லை. அவர்களிருவரும் இரு திசைகளிலாக திரும்பியிருந்தனர். ஒருகணத்தில் தன் அனைத்து உளத்திண்மையையும் இழந்த அஸ்வத்தாமன் கூச்சலிட்டபடி தேரிலிருந்து இறங்கி அதன் பின்பகுதியினூடாக ஓடி தன் படைகளுக்குள் புகுந்துகொண்டான்.
அர்ஜுனனின் அம்புகள் வெறிகொண்டு வந்து அறைந்து அவன் தேர்ப்பாகனை கொன்றன. ஆவக்காவலன் தலை சிதறி விழுந்தான். அவனுக்குத் துணையாக வந்த உத்தரபாஞ்சாலத்தின் இருபத்திநான்கு வில்லவர்களும் தங்கள் தேர்த்தட்டில் இறந்துவிழுந்தனர். குதிரைகளைக் கொன்று தேரைக் கவிழ்த்து குருதி தெறித்த காண்டீபத்தின் நாணை சுண்டி இழுத்தபின் தன்னை நோக்கி வந்த சல்யரையும் பூரிசிரவஸையும் நோக்கி முகத்தில் வழிந்த குருதியை உறிஞ்சிச் சேர்த்து ஓங்கி உமிழ்ந்துவிட்டு அர்ஜுனன் பின்னடைந்து தேர்க்கவச அணிகளுக்குள் மறைந்தான்.
கர்ணன் அங்கே நிகழ்ந்ததை அறிந்தும் உள்ளம் திசைமாறாமல், சற்றும் குறையாத விசையுடன் பாண்டவர்களின் கவசப்படையை அறைந்து உள்நுழைந்துகொண்டிருந்தான். மீண்டும் கர்ணனை நோக்கி அர்ஜுனன் எழுவான் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தபோது கவசட் சுவர்களைத் திறந்து அதே இடத்தில் எழுந்து அஸ்வத்தாமனின் படைகளின் வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருந்த பூரிசிரவஸை அவன் தாக்கினான். அதை முற்றிலும் எதிர்பாராத பூரிசிரவஸ் தேரில் திகைத்து நிற்க அம்புகளால் அறைந்து பால்ஹிக குலத்தின் அத்தனை தேர்வீரர்களையும் கொன்றொழித்தான் அர்ஜுனன். பூரிசிரவஸின் தோளிலும் தொடையிலும் அம்புகள் பாய அவன் கேடயங்களை தன்மீது போட்டுக்கொண்டு தேர்த்தட்டிலேயே விழுந்து மறைந்துகொண்டான். அவன் தேர்வீரர்களும் தேர்ப்பாகனும் புரவிகளும் இறந்தனர். தேர் நிலையழிந்து பாண்டவமுகப்பிலேயே சென்று கவிழ்ந்தது. கவிழ்ந்த தேருக்கு அடியில் சிக்கிக்கொண்டதனால் மேலும் மேலும் வந்தறைந்த அர்ஜுனனின் அம்புகளிலிருந்து பூரிசிரவஸ் உயிர் தப்பினான்.
பூரிசிரவஸின் உதவிக்கு எழுக என சகுனி ஆணையிட கௌரவப் படைகள் இருபுறத்திலிருந்தும் கூடிவந்து கேடயங்களால் மூடிக்கொண்டன. கொக்கியை வீசி இழுத்து பூரிசிரவஸின் உடலை தேருக்கடியிலிருந்து மீட்டபோது அவன் உயிருடன் இருப்பதாகவே கௌரவர்கள் எண்ணவில்லை. ஆனால் தொடையிலும் நெஞ்சிலும் பட்ட அம்புகளில் குருதி வழிய இடக்காலை இழுத்து ஓடிவந்து காக்க வந்த மருத்துவத் தேருக்குள் ஏறி படுத்துக்கொண்டான் பூரிசிரவஸ். அப்பகுதியிலிருந்த பேரழிவைப் பார்த்து திகைத்த பின் சல்யர் “விளையாடுகிறான்!” என்றார். துரோணர் குருதி வழிய தேருக்கு அடியில் அமர்ந்திருந்த அஸ்வத்தாமனை நோக்கியபின் சல்யரிடம் “செல்க! செல்க!” என்று கேடயப்படையை சுட்டிக்காட்டி கூவினார். “இன்றுடன் அவ்விழிமகன் அழியவேண்டும்… செல்க!”
சல்யரும் அவரும் பாண்டவ கவசப்படையின் முகவளைவைத் தாக்கியபோது அது மேலும் மேலும் உள்ளிருந்து செறிவுகொண்டது. மறுபக்கம் திறந்து பீறிட்டெழுந்து கர்ணனை எதிர்கொண்டான் அர்ஜுனன். கர்ணன் அர்ஜுனன் தன் முன் தோன்றுவான் என்பதை ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்தபோதும்கூட அத்தருணம் அவனை திகைக்க வைத்தது. அவர்களுக்கிடையே மீள மீள நடந்துகொண்டிருந்த அந்த ஒருகணமும் குறையாத போர் மீண்டும் தொடங்கி அவ்வுச்சத்திலேயே நடந்தது.
அத்தருணத்தில் அர்ஜுனனின் சீற்றம் மேலெழுந்திருந்தது. கர்ணனுக்குள் பிறிதொரு விசை தளர்ந்திருந்தது. தன் உளத்தளர்ச்சியை வெல்ல பல மடங்கு சினத்தையும் செயல்வீச்சையும் உருவாக்கிக்கொண்டிருந்தான் கர்ணன். அது முதல்சில பொழுதுகளில் அவனுக்கு துணை நின்றது. ஆனால் உள்ளீடற்ற அந்த விசையை குன்றாது பெருகி வந்துகொண்டிருந்த தன் சினமெனும் விசையால் அர்ஜுனன் வென்றான். கர்ணன் தன் மேல் அறைந்து அறைந்து பின் தள்ளிய அம்புகளில் எழுந்து மிகுந்த விசையை மேலும் மேலும் உணர்ந்தான். தன்னுள் அச்சமொன்று எழுவதை அறிந்தான். இத்தருணம் தன் இறுதியாகுமா என்று அவன் உள்ளே ஓர் எண்ணம் ஓடியது. இதுவா இவ்வாறா இங்கா என்று அவன் அகம் வியந்துகொண்டிருந்தது.
அர்ஜுனன் கைபெருகி நூறு காண்டீபங்களால் அவனை தாக்குவது போலிருந்தது. பொற்தேர் மகுடம் உடைந்தது. தூண்களின் கவசப்பரப்புகள் சிதறித்தெறித்தன. அர்ஜுனனின் அம்புகள் வந்து கர்ணனின் நெஞ்சக்கவசத்தை நெளியச்செய்தன. தோள்கவசங்களும் கைக்காப்புகளும் சிதறின. அவன் தோளில் பாய்ந்த அம்பு நிலைகுலைய வைத்த கணம் பிறிதொரு அம்பு வந்து விஜயத்தை அறைந்து நாணை உடைத்தது. அவன் முழந்தாளிட்டு தன் தலைக்கு வந்த அம்பை ஒழிந்தான். அடுத்த அம்பு வந்து தோளை அறைய தேர்த்தட்டிலேயே விழுந்தான். பாகன் தேரை திருப்பி கௌரவப் படைகளுக்குள் கொண்டு செல்ல அவ்விடைவெளியை இருபுறமும் வந்துகொண்டிருந்த அங்கநாட்டு வில்லவர்கள் வந்து நிரப்பி அர்ஜுனனை எதிர்கொண்டனர்.
அர்ஜுனன் அங்கநாட்டவர் ஒவ்வொருவரையாக அறைந்து வீழ்த்தினான். கர்ணனின் தேர் படைகளுக்குள் நுழைந்து மறைந்தபோது கௌரவ வீரர்கள் அஞ்சி கூச்சலிட்டுக்கொண்டே பின்னடைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் மேலும் விசைகொண்டு துரத்தி தேர்த்தட்டிலேயே கொன்று வீழ்த்தினான் அர்ஜுனன். படைவீரர் ஒவ்வொருவரும் உயிரச்சத்தை உணர்ந்துகொண்டிருந்தனர். எங்கோ ஓர் இடத்தில் “விலகிச் செல்க! இன்று இளைய பாண்டவரை எவரும் வெல்ல இயலாது!” என்று எவரோ குரலெழுப்ப பிறிதெவரும் ஏற்றுச்சொல்லவில்லையெனினும் எண்ணம்போல் அந்த அச்சம் அனைத்துப் படைவீரர்களிடமும் பரவியது.
அர்ஜுனன் கர்ணன் சென்ற வழியையே அறைந்து அறைந்து உடைத்து உள்நுழைந்துகொண்டிருந்தான். “ஒருங்கு கூடுங்கள்! படைகளை ஒன்றிணையுங்கள்! முதன்மை வில்லவர் எழுவரும் மீண்டும் படைமுகப்புக்கு செல்லுங்கள்!” என்று சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டிருந்தது. அஸ்வத்தாமன் குருதியை உதறியபின் எழுந்து அமர்ந்துகொள்ள மருத்துவ ஏவலர்கள் ஓடிவந்து அவன் கவசங்களை விரைவாகக் கழற்றி புண்களில் மருந்திட்டு மெழுகுத் துணிகளால் அழுத்தி கட்டுபோட்டனர். சற்று அப்பால் பூரிசிரவஸ் இரு மருத்துவ ஏவலர்களால் தூக்கி வரப்பட்டான்.
முதற்கணம் அவன் இறந்துவிட்டான் என்ற எண்ணத்தை அஸ்வத்தாமன் அடைந்தான். ஆனால் அவன் முனகியபடி தலையசைத்து பின் தன்னுணர்வு கொண்டு தன்னை தூக்கியவர்களை விடும்படி கையசைவால் சொல்லி காலூன்றி எழுந்து நின்றான். இருவர் அவனைப் பற்றி கொண்டுவந்து அஸ்வத்தாமன் அருகே அமரவைத்து கவசங்களை கழற்றினர். முரசுகளின் ஓசையைக் கேட்டபின் அஸ்வத்தாமன் பூரிசிரவஸிடம் “அங்கர் பின்னடைகிறார்! எண்ணிப்பார்க்கவே இயலவில்லை! அங்கர் பின்னடைகிறார்!” என்றான். பூரிசிரவஸ் “இளைய பாண்டவரின் வெறியை எவ்வகையிலோ உணர இயல்கிறது. அதற்கு முன் எவரும் நிற்க இயலாது!” என்றான். அஸ்வத்தாமன் “ஆம்! தந்தையின் வெறி” என்றான்.
பூரிசிரவஸ் “அங்கர் இன்று காலையிலிருந்தே நிலைகொள்ளாதவராக இருந்தார். படைகள் எழும்போது ஒருவேளை அவர் போர்முனைக்கே வராது பின்தங்கிவிடக்கூடுமோ என்று நான் எண்ணினேன். வழக்கமாக பிறரிடம் இன்சொல் உரைப்பவர் இன்று சினங்கொண்டவர் போலவும் அரிய நோயுற்றவர் போலவும் தனக்குத்தானே எழாச் சொல்லில் உரையாடியபடி தலையை அசைத்துக்கொண்டிருந்தார். வில்லால் தேர்த்தட்டில் அமைதியிழந்து தட்டிக்கொண்டிருப்பதை பார்த்தபின் நான் சல்யரிடம் சொன்னேன், அங்கர் மிக அமைதியிழந்திருக்கிறார் என. சல்யர் யார்தான் அமைதியிழக்கவில்லை என்று சிடுசிடுத்தார். அதன் பின் நான் எதுவும் பேசவில்லை” என்றான்.
பூரிசிரவஸின் புண்கள் சற்று பெரிதாகவே இருந்தன. அவற்றில் உருகிய மெழுகுத்துணியை வைத்துக் கட்டியபோது அவன் மெல்ல முனகினான். அஸ்வத்தாமன் “நானும் அதை பார்த்தேன்” என்றான். பூரிசிரவஸ் “ஆனால் போர் தொடங்குவதற்கென முரசுகள் ஒலித்தபோது அவர் முற்றிலும் உருமாறியிருந்தார். ஒருகணத்தில் வீங்கி பேருருக்கொள்ளும் தவளைகளைப்போல. வெறிகொண்டு பாண்டவப் படைகளை அவர் தாக்கும்போது இன்றே களத்தில் அர்ஜுனனை பலிகொள்வார் என்று தோன்றியது” என்றான். “நம் எழுவரில் பாண்டவப் படைகளை அறைந்து பின்னெடுத்தவரும் அவரே. அது அச்சோர்வுக்கெதிரான அவரது எழுச்சி” என்று அஸ்வத்தாமன் கூறினான்.
பூரிசிரவஸ் “எனக்கு மெய்யாகவே புரிந்துகொள்ள முடியவில்லை. பாஞ்சாலரே, இவர்கள் ஏன் இத்தனை துயர்கொள்கிறார்கள்? அச்சிறுவனைக் கொன்றதன் பொருட்டு துயர்கொள்வதென்றால் ஏன் போருக்கெழுந்தார்கள்?” என்றான். அஸ்வத்தாமன் “எவ்வகையிலோ அவர்கள் தங்களை தந்தையென்று உணர்கிறார்கள் போலும்” என்றான். பூரிசிரவஸ் “என் கண்முன் அவன் கௌரவ மைந்தர்களை கொன்று குவித்த ஒவ்வொரு காட்சியும் அலையலையென எழுந்து வருகிறது. அவனை இன்னும் பலமுறை கொல்லவேண்டுமென்று சினம் எழுகிறது” என்றான்.
“வில்லவர் எழுக! ஏழு வில்லவர்களும் சூழ்ந்துகொள்க! இளைய பாண்டவர் நம் படைசூழ்கையை உடைத்து உட்புகுகிறார்!” என சகுனியின் ஆணை கூவியது. அது பதறி அலறுவதுபோல் தோன்றியது. அஸ்வத்தாமன் “கிளம்புவோம். காந்தாரரின் அறைகூவல் விடாது ஒலிக்கிறது” என்றான். “அங்கர் விழுந்துவிட்டார்!” என்று முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. அஸ்வத்தாமன் எழுந்து “அங்கரா!” என்றான். பூரிசிரவஸ் “அவர் பின்னடைகிறார் என்றுதான் முரசுகள் சொல்கின்றன. தவறாக புரிந்துகொண்டீர்கள்” என்று சொன்னான். அஸ்வத்தாமன் “மெய்தான், ஆனால் புண்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எண்ணிநோக்கவே இயலவில்லை. நம் எழுவரையும் அவன் ஒருவனே வில்கொண்டு எதிர்நின்று பொருதுகிறான் என்றால்…” என்றான்.
“இக்களத்தில் எதுவும் விந்தை அல்ல” என்றான் பூரிசிரவஸ். அஸ்வத்தாமன் “அவர்களின் சூழ்கை மிகத் திறன்வாய்ந்தது. அந்தக் கேடயக்கோட்டை அரிய சூழ்ச்சி. அதற்குள்ளிருந்து வெளிவந்து தாக்கும் வழிமுறையை வகுத்தவன் எவனாயினும் போர்க்கலை அறிந்தவன்” என்றான். “வேறு எவர்? இளைய யாதவராகத்தான் இருக்க முடியும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அவர் களத்தில் இல்லை, ஆனால் களத்தில் அவரன்றி எவரும் இல்லை.”
“வில்லவர்கள் முன்னெழுக! வில்லவர்கள் முன்னெழுக!” என்று சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டே இருந்தது. “போர் தொடங்கி உச்சிப்பொழுதே நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் பாதிப் பொழுது எஞ்சியுள்ளது. அந்திமுரசு ஒலிக்கும்வரை பொழுதை கடத்துவதொன்றே நாம் செய்யக்கூடியது. வருக!” என்றபடி அஸ்வத்தாமன் தன் தேர் நோக்கி சென்றான். அதில் ஏறி அமர்ந்துகொண்டு “முன் செல்க!” என்றான். பூரிசிரவஸ் “ஊடுருவிய அர்ஜுனனை தடுத்துவிட்டார்கள். சல்யரும் கிருபரும் துரோணரும் சேர்ந்து அர்ஜுனனை எதிர்கொள்கிறார்கள். நாமும் களம் சென்றால் இன்னும் சில நாழிகைப்பொழுது அவரை அவ்வளையத்திற்குள்ளேயே வைத்திருக்க இயலும்” என்றான்.
அஸ்வத்தாமன் வில்லை எடுத்துக்கொள்ள பூரிசிரவஸ் “என்னதான் அவர் நம்மை வீழ்த்தினாலும் இன்னும் நமது படைகளின் முகப்பைக் கடந்து அவர் அம்புகள் சென்றடையவில்லை. அவரால் இன்று ஜயத்ரதனை சென்றடையவே இயலாது” என்றான். அஸ்வத்தாமன் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் படைமுகப்பை அடைந்தபோது அர்ஜுனன் கிருபரை அறைந்து தேர்த்தட்டில் வீழ்த்திவிட்டு மீண்டும் கவசநிரைக்குள் புகுந்தான். சினம் பற்றிக்கொள்ள துரோணர் “நில்! நில்! அறிவிலி!” என்று கூவியபடி அர்ஜுனனை தொடர்ந்து சென்றார். அர்ஜுனன் கவசப்படைகளுக்குள் மூழ்கும் கணத்தில் தன்னிடமிருந்த விசைமிக்க அம்புகளால் கவசப்படைகளின் இடைவெளியை அறைந்து உடைத்தார். அவ்விடைவெளி மூடுவதற்குள் தொடர்ந்து அம்புகளை செலுத்தியபடி அதற்குள் நுழைந்தார்.
துரோணரைத் தொடர்ந்து சென்ற உத்தரபாஞ்சாலத்தின் வில்லவர்களும் அந்த வாயிலுக்குள் நுழைந்து உள்ளே சென்றனர். “தனித்துச் செல்கிறார்! தொடர்க! தொடர்க!” என்று பூரிசிரவஸ் கூச்சலிட்டான். அஸ்வத்தாமனும் பூரிசிரவஸும் அம்புகளால் அறைந்தபடி அந்தக் கவச இடைவெளியினூடாக உள்ளே செல்ல முயன்றபோது இருபுறத்திலும் விசைகொண்டு அழுத்தி அது தன்னை மூடியது. “உள்ளே சென்று சிக்கிவிட்டார்!” என்று பூரிசிரவஸ் கூவினான். அஸ்வத்தாமன் “இந்தப் புள்ளியை அறைவோம். அவர்கள் அவரை கைப்பற்றாதபடி செய்வோம்” என்று கூவி மூடிய கவசப்படையின் இடைவெளியை மீண்டும் மீண்டும் அறைந்தான்.
அம்புகள் இரும்பை அறைந்து வீணாகி உதிரவே அஸ்வத்தாமன் திரும்பி “யானைகள் எழுக! தண்டேந்திய யானைகள் எழுக!” என்றான். முகப்பிலிருந்து நீள்தண்டேந்திய யானைகளின் நிரை வருவதை படையின் அசைவுகளின் அலைகளிலிருந்தே உணரமுடிந்தது. பூரிசிரவஸ் “உள்ளே ஆசிரியர் தனியாக சிக்கிக்கொண்டிருக்கிறார்!” என்றான். அஸ்வத்தாமன் “அவரே எண்ணாமல் அவரை யாரும் வெல்ல இயலாது!” என்றான். யானைகள் வந்து கவச நிரையை அறையத்தொடங்கின. தண்டுகளால் உடைந்து சிதறிய தேரிலிருந்து எடைமிக்க ஆளுயர கவசங்கள் கீழே விழுந்தன. கேடயத்தேர்வரி உடைந்தபோது கேடயங்களை ஏந்திய யானைகள் நிரை முன்னெழுந்து வந்தன. தண்டேந்திய யானைகளை யானைகளாலேயே எதிர்கொள்ளும்படி திருஷ்டத்யும்னனின் ஆணை எழ இருபுறத்திலிருந்தும் கவசங்களைத் தள்ளியபடி பாண்டவ யானைகள் வந்தன. அக்கவசங்கள் தரையில் உருண்டுவந்த சிறிய சகடங்கள் கொண்ட வண்டிகள் மேல் அமைக்கப்பட்டு இருபுறமும் யானைகளால் உந்தி நிறுத்தப்பட்டிருந்தன. கோட்டை ஒன்றின் கற்பலகைகள் உயிர்கொண்டு எழுந்துவருவதுபோல் தோன்றின. இரும்புச் சிப்பிகள்போன்ற வடிவுகொண்டிருந்த அவற்றின்மேல் அம்புகள் மணியோசைகள் எழ சென்று சென்று அறைந்தன.
மீண்டும் தண்டுகளால் ஒரே இடத்திலேயே கௌரவப் படைகள் அறைந்துகொண்டிருந்தன. “அங்கே பெரும்போரின் ஓசைகள்! என்ன ஆயிற்று தங்கள் தந்தைக்கு!” என்று பூரிசிரவஸ் அச்சத்துடன் கூவினான். “எந்த வில்லவனும் எண்ணி நோக்க இயலாத மிகைச்செயல் அது! ஏன் அதை செய்தார் ஆசிரியர்!” அஸ்வத்தாமன் “அவரும் தந்தை என்பதனால்! எங்கோ ஓரிடத்தில் அவர் ஜயத்ரதனாக என்னை எண்ணிக்கொண்டதனால்!” என்றான். திகைப்புடன் பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். அதற்குள் தண்டேந்திய கௌரவ யானைப்பபடை பாண்டவர்களின் கவசயானை நிரையை உடைத்து நிரையை விலக்கியது. அதனூடாக துரோணர் அப்பால் அர்ஜுனனுடன் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது.
பூரிசிரவஸும் அஸ்வத்தாமனும் இருபுறமும் கவசங்களை தள்ளியபடி வழிமூட வந்த தேர் வீரர்களை அறைந்து விலக்கி கொன்று அவர்களின் கேடயங்கள் ஓசையெழ நிலத்தில் விழவைத்தபடி அப்பிளவுக்குள் புகுந்து துரோணரை நோக்கி சென்று அவருக்கு இருபுறமும் துணை நின்றனர். துரோணர் அவர்கள் வந்திணைந்ததைக்கூட நோக்காமல் முகம் கோணலாகி வாயிலிருந்து ஒருபோதும் அவர்களிடமிருந்து எழாத வசைச்சொற்களை சொல்லியபடி அர்ஜுனனை அம்புகளால் அறைந்து கொண்டிருந்தார். அர்ஜுனன் அத்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மேலும் மேலும் பின்னடைந்து சென்றான். கேடயங்கள் ஏந்திய தேர்களையும் யானைகளையும் பின்னிழுத்து மீண்டும் நிரை வகுத்து இரு சரடுகளென்றாக்கி துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே புகவைத்து சுவரை உருவாக்கி அர்ஜுனனைக் காத்து உள்ளிழுத்துக்கொண்டு சென்றான் திருஷ்டத்யும்னன்.
கவசங்களால் முற்றிலும் அர்ஜுனன் மூடப்பட்டதும் “அறிவிலி! அறிவிலி! வீணன்!” என்று உரக்கக் கூவியபடி தேர்த்தட்டிலேயே காறித்துப்பினார் துரோணர். வில்லால் தேர்த்தட்டை ஓங்கிக் குத்தியபடி தலையசைத்து “கீழ்மகன்! இன்று அவனை கொல்லாமல் களம் திரும்புவதில்லை!” என்றார். அஸ்வத்தாமன் “தந்தையே! நமது சூழ்கைக்குள் செல்வோம். மீண்டும் ஒருமுறை நம்மை தொகுத்துக்கொள்வோம். அங்கரும் புண்களுக்கு கட்டுபோட்டு எழுந்துவிட்டார்” என்றான். அவர்கள் பின்னடைந்து தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டனர்.
கர்ணன் மீண்டும் படைமுகப்பிற்கு வந்தான். காந்தாரரின் ஆணை ஒலிக்க படைகள் அணிகொண்டன. வில்லவர் எழுவரும் முந்தைய வடிவையே மீண்டும் அடைந்து பாண்டவர்களின் படையை தாக்கினர். கவசநிரையின் வலப்பக்கத்திலிருந்து அர்ஜுனன் வில்லுடன் எழுந்து சல்யரை நோக்கி சென்றான். துரோணர் சீற்றத்துடன் “விடாதீர்கள்! அவனை பிடியுங்கள்!” என்றபடி அர்ஜுனனை நோக்கி சென்றார். அவர் அருகே வந்து அம்புகளால் அறைந்ததுமே மீண்டும் அர்ஜுனன் கவசநிரைக்குள் சென்றான். மறுபக்கம் கர்ணனை நோக்கி எழுந்து மீண்டும் போரிடத் தொடங்கினான். கர்ணன் உடல் தளர்ந்திருந்தமையால் மிக விரைவிலேயே பின்னடைந்தான்.
துரோணர் “இழிமகனே! இழிமகனே!” என்று கூவியபடி அர்ஜுனனை நோக்கி அம்புகளை தொடுத்தபடி சென்றார். நீளம்புகளால் அறைந்து அர்ஜுனனை தொடர்ந்து வந்த பாஞ்சால வில்லவர்களை ஒவ்வொருவராக வீழ்த்தினார். சுருதசேனனும் சுருதகீத்தியும் அவரது அம்புகளால் தேர்த்தட்டில் விழுந்தனர். சதானீகன் தேரிலிருந்து இறங்கி விலகி ஓட அவனைத் தொடர்ந்து அம்புகளால் அறைந்து நிலத்தில் விழசெய்தார். கொக்கிச்சரடால் அவன் உடலை கவ்வி இழுத்து அப்பால் எடுக்க அவன் பறந்ததுபோல் சென்று பாண்டவப் படைகளுக்குள் மறைந்தான்.
“தந்தையே, நாம் இளைய பாண்டவரை இந்தச் சூழ்கைக்குள் நிறுத்துவதற்கு மட்டுமே எண்ணம் கொண்டிருக்கிறோம்!” என்று அஸ்வத்தாமன் சொன்னான். துரோணர் மூச்சிரைக்க “இழிமகன்! இழிமகன்!” என்று சொல்லிக் கொண்டிருந்தார். “தந்தையே பின்னடைக! அந்தச் சூழ்கையை மட்டும் தக்க வைப்போம்! இந்த இடத்திலிருந்து இன்னும் இரு நாழிகைப்பொழுது அவர் விலகாமலிருந்தால் தன் அம்பினாலேயே தன் கழுத்தை அவர் அறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்!” என்று அஸ்வத்தாமன் சொல்ல “ஆம்! ஆம்!” என்றபடி துரோணர் பின்னடைந்தார்.