கார்கடல் - 43
குடிலுக்குள் சிறு பெட்டியில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த ஜயத்ரதனுக்கு முன்னால் அவனை பார்த்தபடி கிருதவர்மன் அமர்ந்திருந்தான். பதுங்கி இருக்கும் குழிமுயல்போல் ஜயத்ரதன் தோன்றினான். கிருதவர்மன் எழுந்து சென்றுவிடவேண்டுமென்று எண்ணினான். அவ்வெண்ணம் பலமுறை உருவானபோதும்கூட அவனால் உடலை அசைத்து எழ முடியவில்லை. பெருந்துயரிலிருக்கும் ஒருவரை விட்டுச்செல்வது எளிதல்ல. உடனிருப்பது அதைவிட கடினம். அங்கே உரிய சொற்கள் என ஏதுமில்லை. அப்போது எச்சொல்லும் பொருத்தமற்றவையே. ஆனால் நா மீறி எழும் சொற்கள் இயல்பாகவே அத்தருணத்தில் அமைந்து உரிய பொருள் கொள்வதும் உண்டு.
அவன் எழுந்துவிடலாம் என்று எண்ணி தன் முழு உடல் ஆற்றலையும் கூட்டி கைகளை ஊன்றி உடலை அசைத்தான். அவ்வசைவு ஜயத்ரதன் உடலை விதிர்க்கச் செய்தது. கிருதவர்மன் சிறு கனைப்பொலி ஒன்றை எழுப்பியபோது அவன் நிமிர்ந்து பார்த்தான். “நான் கிளம்புகிறேன். தனிமையில் இருப்பதே உங்களுக்கு நன்றென்று தோன்றுகிறது” என்று கிருதவர்மன் சொன்னான். ஜயத்ரதன் எழுந்து அவன் கையை பற்றிக்கொண்டு “இல்லை, நீங்கள் உடனிருங்கள். யாதவரே, எவ்வகையிலோ நீங்கள் மட்டும் இப்போது உடனிருக்க இயலுமென்று தோன்றுகிறது” என்றான். கிருதவர்மன் மீண்டும் தன் உடலை தளர்த்தி அமர்ந்தான்.
ஜயத்ரதனின் விரல்கள் கடுங்குளிரில் என நடுங்கின. அவன் அவற்றை கோத்தும் பிரித்தும் ஒன்றோடொன்று நெரித்தும் நிலையழிந்துகொண்டிருந்தான். அவன் கைவிரல் என நாகக்குழவிகள் குடியேறிவிட்டன என்று பட்டது. அவை அவன் அறியாத பிறிதொரு நடனத்தை ஆடிக்கொண்டிருந்தன. “என் உணர்வுகள் என்ன என்று எனக்கே தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் இப்போது இறந்துவிடவேண்டுமென்ற பெருவிழைவன்றி வேறெதுவும் என் உள்ளத்தில் இல்லை. விதவிதமாக இறப்பதைப்பற்றி மட்டுமே என் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன” என்று அவன் சொன்னான். அவன் விரல்கள் பின்னி பின் விரிந்தன. கட்டைவிரலை இரு விரல்கள் பற்றி ஒடித்தன.
“மாறி மாறி எண்ணக் காட்சிகள். இந்த வாளை எடுத்து என் கழுத்தில் செலுத்திக் கொள்வதைப்பற்றி, இப்படியே இறங்கிச்சென்று அடர்காட்டில் நின்று சங்கறுத்து விழுவதைப்பற்றி, அங்கே தெற்கில் சிதைகளில் எரிபவருடன் பாய்ந்து சேர்ந்துவிடவேண்டும் என்று… ஒன்று சலிக்கையில் பிறிதொன்று. மாறி மாறி முடிவே இல்லாமல். சாவதைப் பற்றிய எண்ணம் இனிக்கிறது. ஆனால் முழுமையாக சாவை கற்பனையில் நிகழ்த்தி முடித்ததும் வெறுமையும் சலிப்பும் உருவாகிறது. ஆகவே இன்னொரு வகையில் சாவை கற்பனை செய்யத் தொடங்குகிறேன். நூறுநூறு முறை செத்துக்கொண்டே இருக்கும் இந்தத் தருணத்தில் எத்தனை பிறவிகள் எடுத்திருப்பேன்!”
கிருதவர்மன் “இறப்பைப்பற்றி மிகைவிழைவு கொள்வதும் உளச்சோர்வின் இயல்பே” என்றான். “சாவை கற்பனையில் நிகழ்த்தியதும் சலிப்பு உருவாவது சாவு தீர்வல்ல என்பதை காட்டுகிறது.” ஜயத்ரதன் “ஆம்” என்றான். “ஏன் நீங்கள் உடனிருப்பது எனக்கு இத்தனை உவப்பாக இருக்கிறது? சற்று முன் பிற மானுடருடன் இருக்கையில் அவர்களை ஏன் அவ்வளவு வெறுத்தேன்? வாளெடுத்து அவர்கள் ஒவ்வொருவரையும் கொன்று வீழ்த்திவிடவேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் என் அருகே வந்து தோளை தொட்டபோது அன்னையின் தொடுகைபோல் உணர்ந்தேன். யாதவரே, உங்களிடம் வருகையில் மிக பாதுகாப்பாக எண்ணினேன். இந்தச் சிறு குடிலுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதே இவ்வாழ்வுடன் எனக்கான ஒரே தொடர்பாக இருக்கிறது” என்றான்.
அந்த அணுக்கச் சொற்கள் கிருதவர்மனை கூச்சம் கொள்ளச் செய்தன. அவன் குனிந்து தன் நகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். ஜயத்ரதன் அந்த அண்மையை அச்சொற்களால் தனக்கே சொல்லிக்கொண்டமையால் மேலும் தெளிவாக உணர்ந்தவனாக “நாம் அதிகம் நெருங்கியதில்லை. நம்மிடையே உளம்பரிமாறும் உரையாடலும் நிகழ்ந்ததில்லை. உங்களைப் பற்றி நான் மிகுதியாக ஏதும் அறியேன். இந்தப் போர்க்களத்தில்தான் நாம் இத்தனை அணுக்கமாக சந்தித்துக்கொள்வதே நிகழ்கிறது. இருந்தும் ஏதோ ஒன்று உங்களுடன் என்னை கொண்டுவந்து சேர்க்கிறது” என்றான். அந்த அணுக்கத்தை ஒரு காவல் என, ஒளிவிடம் என அவன் உருவாக்கிக்கொள்கிறான் எனத் தோன்ற கிருதவர்மன் அதிலிருந்து எழுந்து விலக எண்ணினான். ஆனால் தன் நா பேசத் தொடங்கியபோதுதான் தான் எழவில்லை என்பதையே உணர்ந்தான்.
கிருதவர்மன் “நீங்கள் இப்போதிருக்கும் இந்த நிலையில் நான் இருந்திருக்கிறேன்” என்றான். ஜயத்ரதன் திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தான். “கைகள் பின்னால் கட்டப்பட்டு தேர்த்தூணில் என்னை நிறுத்தியிருந்தார்கள். துவாரகையின் தெருக்களினூடாக என்னை இழுத்துச்சென்றார்கள். இருபுறமும் கூடியிருந்த மக்கள் என்மேல் காறி உமிழ்ந்தார்கள். இழிசொல் கூவினார்கள். அச்சொற்களை மறந்துவிட்டேன். அவ்வுணர்வுகள் விழிகள் மட்டும் நஞ்சு பரவிய வேல்களென என்னைச் சூழ்ந்து செறிந்துள்ளன. எஞ்சிய இவ்வாழ்நாளில் ஒருநாளேனும் அவற்றை எண்ணாமல் நான் கடந்து வந்ததில்லை. ஒருகணமேனும் அவை இல்லாமல் வாழ்ந்திருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்று கிருதவர்மன் சொன்னான்.
“ஆம், அவ்வாறு ஒரு கதை கேட்டிருக்கிறேன். ஆனால் நிகழ்ந்ததென்ன என்று தெரியாது” என்று ஜயத்ரதன் சொன்னான். “அக்கதை இளைய யாதவர் உங்களுக்கு உயிர்க்கொடை அளித்த பெருஞ்செயல் என்று சூதர்களால் பாடப்படுகிறது.” கிருதவர்மன் “ஆம், உயிர்க்கொடை அளித்தான்” என்றான். நீள்மூச்சுடன் “ஆலகாலம்போல் கசக்கும் நெஞ்சுடன், அதை ஓயாது கடையும் மத்து என சித்தத்துடன் வாழ்வதற்கு உயிர் தேவை அல்லவா? சில தருணங்களில் கொலை பெருங்கொடையாக அமையக்கூடும். எனக்கு அதை அவன் மறுத்தான்” என்றான். வாயில் கசப்பு ஊற, அதை துப்ப விழைபவன்போல உதடுகுவித்து பின் இறுக்கிக்கொண்டான்.
“என்னை பின் கை கட்டி இழுத்துவந்த இளைய பாஞ்சாலனிடம் மன்றாடினேன். பொன் விழைவதும், பெண் விழைவதும், மண் விழைவதும், மணி விழைவதும் வீரர்க்கு உரியதுதான். ஆனால் வஞ்சகனாகவும் இழிமகனாகவும் என் நெஞ்சுறைந்த திருமகள் முன் சென்று நிற்பதென்பது இறப்பினும் கொடிது எனக்கு என்றேன். அவனிடம் அதை சொல்லியிருக்கலாகாது என இப்போது உணர்கிறேன். என் சொற்கள் வழியாக அவன் தன் தந்தைக்கு அர்ஜுனன் இழைத்த சிறுமையை நினைவுகூர்ந்திருப்பான். அதை நிகர் செய்ய என்மேல் அதை செலுத்தினான்.” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “அறிவின்மை எனத் தோன்றும். ஆனால் மானுடர் அவ்வாறுதான் செயல்படுகிறார்கள். எவரிடமோ அடைந்த புண்ணை வேறெவரையோ புண்படுத்தி தீர்த்துகொள்கிறார்கள்” என்றான் கிருதவர்மன்.
“அன்று என்னை இயக்கியது ஒரு சிறு விழைவு. அது என்னை கடந்த ஒரு விசை. அனைத்து மானுடரையும் ஆட்டுவிக்கும் பெருவிசைகளில் ஒரு சரடு” என கிருதவர்மன் தொடர்ந்தான். “அந்த அருமணி, ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள். எனக்கு அது என் உளம்கவர்ந்த திருமகளின் விழி. ஆனால் அதன் பொருட்டு நான் ஏற்றது என் ஏழு பிறவிகளுக்கும் கசக்கும் நஞ்சு… திருமகள் கொலைகாளியாகி நின்றிருக்கும் கருவறை என என் உள்ளம்.” மேலும் பேச முயன்று பின் கைவீசி விலக்கி “அதை ஏன் பேச வேண்டும்? விடுவோம்” என்றான்.
ஜயத்ரதன் கை நீட்டி கிருதவர்மனின் கால்களில் தன் கையை வைத்தான். “என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று நானிருக்கும் நிலை அதுவே. தற்சிறுமை கொண்டு, புழுவென அணுவெனச் சிறுத்து, இருத்தலென்பதே கணந்தோறும் வலிபெருகும் வதையென ஆதல்” என்றான். கிருதவர்மன் “ஆம்” என்றான். ஜயத்ரதன் “அவர்கள் இத்துயரை அறியமாட்டார்களா?” என்றான். “அவர்கள் இழப்பின் துயரை அறிந்திருப்பார்கள். இழப்பு நமது ஆளுமைக்கு அப்பாற்பட்டது. முழுப் பொறுப்பையும் நாம் தெய்வங்களிடம் அளித்துவிட இயலும். ஆனால் சிறுமை நம்மிலிருந்தே தொடங்குகிறது. ஆகவேதான் நாம் அவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்றான்.
“நம்மிடம் இல்லாத சிறுமையை எவரும் நம் மீது ஏற்றிவிட இயலாது” என கிருதவர்மன் தொடர்ந்தான். “நான் எண்ணிப் பார்த்ததுண்டு. அன்று துவாரகையில் ஒரு யோகியை அவ்வண்ணம் கைகள் கட்டி தெருவில் இழுத்துக்கொண்டு சென்றிருந்தால், அவர்மேல் அம்மக்கள் காறி உமிழ்ந்திருந்தால், அவர் சிறுமை கொண்டிருப்பாரா என. அவர்கள்மேல் அவர் ஏளனமோ இரக்கமோதான் கொண்டிருப்பார். சிறுமை இருந்தது என்னுள்ளேதான். அதை பல்லாயிரமென பெருக்கி எனக்கே காட்டும் ஆடியே அத்தருணம். சைந்தவரே, நான் வெறுப்பது என்னை இழிவு செய்தவர்களை அல்ல. என்னை இழிந்தோனாக ஆக்கிக்கொண்ட அத்தருணத்தைத்தான்.”
“அது ஓர் அணு சற்றே திரும்பும் அளவுக்கு சிறிய நிகழ்வு. ஆனால் அதன்பின் அனைத்தும் மாறிவிட்டது. அவன் மேல் எனக்குள்ள வெறுப்பென்பது அவன் அத்தருணத்தை தான் காணாமல் கடந்து சென்றிருக்கலாம் என்பதனால். அதை நான் காணாமல் ஆக்கியிருக்கலாம் என்பதனால். மானுடரை அவர்களுக்குள் உறையும் சிறுமையை காணச்செய்வதுபோல் பெரும் வன்முறை பிறிதில்லை. என்னை அறைந்து கூழாக்கி நிலத்திலிட்டு மிதித்து அரைப்பதற்கு நிகர் அது” என்றான் கிருதவர்மன். அத்தனை விரிவாக அதை பேசியதை எண்ணி அவன் அகம் வியந்தது. ஆகவே அத்தருணத்தை விலக்கி எழுந்து செல்ல விரும்பியது. அகம் எழுந்து அகல அவன் உடல் அங்கேயே இருந்தது. எத்தருணத்திலும் ஜயத்ரதன்மேல் கடும் காழ்ப்பென அவ்வுணர்வு உருமாறக்கூடும் என அவனுக்கே தெரிந்திருந்தது.
ஜயத்ரதன் “என் நிலையும் மற்றொன்றல்ல, யாதவரே” என்றான். “நான் பாண்டவ அரசியை சிறைபிடிக்க முயன்றேன். அது கௌரவ மூத்தவருக்கு ஓர் அரும்பரிசென அவளை அளிக்கவேண்டும் என்பதற்காகவே என்று நானே என்னிடமும் பிறரிடமும் நூறுநூறு முறை சொல்லி நிறுவிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது மெய்யல்ல என்று பிற எவரையும்விட எனக்குத் தெரியும். எவரும் பொய்யென்று ஒன்றைள சொல்லி தனக்குத்தானே நிறுவிக்கொள்ள முடியாது. நான் அவளை கவர்ந்துசெல்ல முயன்றது என் விழைவின் பொருட்டே” என்றான்.
“பாஞ்சால நாட்டில் அவளுடைய மணத்தன்னேற்புக்குச் செல்லும்போது பட்டுத்திரைச்சீலையில் அவளது உருவத்தை பார்த்தேன். அப்போது எழுந்த விழைவு அது. உண்மையில் அதை அப்போது எளிதில் கடந்து சென்றேன். ஆனால் அவள் என்னால் அடையப்பட முடியாதவள் என்று அந்த அவையில் நிறுவப்பட்டபோது அது ஆணவத்துடன் இணைந்து பலமடங்காகியது. அதை என்னிடமிருந்தே அழுத்தி எங்கோ மறைத்தேன். பிறகு ஒருபோதும் என்னுள்ளிலிருந்து அதை எடுத்து நோக்கியதே இல்லை” என ஜயத்ரதன் தொடர்ந்தான்.
“ஆனால் அழுத்தும்தோறும் அது ஆழத்தில் சென்று வளர்ந்தது. இப்புவியில் நாம் மண்ணுக்குள் அழுத்திச் செலுத்தும் அனைத்தும் ஏழாம் உலகத்து நாகங்களுக்கு சென்று சேர்கின்றன. இங்கு ஒரு துளியென இருப்பவை அங்கு கடலாகின்றன. நாகங்களின் நச்சு அனைத்தையும் பெருக வைப்பது. நீர்படுபவை ஊறி பெரிதாகின்றன, நெருப்புபடுபவை வானளாவ எழுகின்றன என்று தொல்லசுரர் வேதச்சொல் ஒன்று உண்டு.” ஜயத்ரதன் விழிகள் நிலைத்திருக்க உதடுகளால் புன்னகைத்து “ஏன் இவ்வாறு நம்மை நாமே கூறுபோட்டுக்கொள்கிறோம்? இது போர்க்களம் என்பதனாலா? இங்கே இறப்பு நிறைந்துள்ளது என்பதனாலா?” என்றான்.
கிருதவர்மன் நகைத்து “ஆம், இங்கே எளிய போர்வீரன் உட்பட அனைவருமே தங்களை வெட்டி கீறி கூறிட்டு ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். வெறுமையைள சென்றடைந்து திரும்பி வெற்றுக்களியாட்டுக்குச் செல்கிறார்கள்” என்றான். “நான் என் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே என் எண்ணங்களை நானே திரும்பி நோக்கியிருக்கிறேன். என் வாழ்க்கையை மதிப்பிட்டிருக்கிறேன். முதல்முறையாக என்னை அங்கநாட்டரசரின் முன்வைத்தபோது” என்றான் ஜயத்ரதன். “யாதவரே, நாம் ஏன் அந்தப் பெருவிழைவை அடைந்தோம்? வாழ்க்கையையே அதற்கு நிகராக வைத்து ஆடிக்கொண்டிருக்கிறோம்?” என்றான்.
கிருதவர்மன் திடுக்கிட்டான். பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு நீள்மூச்செறிந்து “மகிஷாசுரன் ஏன் தூவெண்ணிறப் பேரெழில்கொண்டவள் மேல் பித்துகொண்டான்?” என்றான். பின்னர் “இருள் ஏன் ஒளிக்காக தவம் செய்கிறது?” என்றான். ஜயத்ரதன் “ஆம்” என்றான். “நாம் நம்மிடமிருந்து மீள, நம்மிலிருந்து மேலெழ விழைகிறோம். ஆனால் அதையும் கைப்பற்றலாகவே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றான் கிருதவர்மன். “நாம் அன்றாடம் வாழ்வது வஞ்சத்தின்பொருட்டே என்றாலும் ஆழத்தில் அந்தப் பெருந்திருமேல் கொண்ட காதலை கரந்துறைச் செல்வமாக கொண்டிருக்கிறோம். அதை நாம் இழந்தால்தான் முற்றிலும் பொருளிழந்தவர்களாவோம்” என்றான்.
அவ்வெண்ணத்தை வந்தடைந்ததுமே இருவரும் நிறைவடைந்தனர். சொல்லமைந்து தங்களுக்குள் மூழ்கி அமர்ந்திருந்தனர். பின்னர் நீள்மூச்சுடன் மீண்ட ஜயத்ரதன் “எல்லாம் பழைய கதைகள். இத்தருணத்தில் எளிய சிறுமைகளை தோண்டி எடுத்து மீண்டும் நிறுவிக்கொள்ளவேண்டிய தேவையில்லை” என்றான். “போர்க்களம் என்றால் என்ன என்று இங்கு வந்தபோதுதான் அறிந்தேன். ஒவ்வொன்றையும் அடியாழம் வரை கலக்கி சேறும் குப்பையும் கிளர்ந்தெழச் செய்யும் கொந்தளிப்பு இது. இந்தப் பதின்மூன்று நாட்களில் இக்களத்தில் வாழும் அனைவருமே உளம் கலங்கி அனைத்தும் மேலெழுந்து மேலெழுந்தவை கீழமைந்து பிறிதொருவராக உருமாறியிருப்பார்கள். ஒவ்வொரு கணமும் இங்கு ஒருவர் உளமிறந்து பிறிதொரு உளம் கொண்டு எழுந்துகொண்டிருக்கிறார்கள்.”
கிருதவர்மன் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. அவன் உள்ளம் மேலெழுந்துகொண்டே இருக்க ஜயத்ரதன் எழுந்த உச்சத்திலிருந்து சரிந்துகொண்டே இருந்தான். கழிவிரக்கமும் தனிமையும் கொண்டு அவன் சொன்னான் “இந்தக் களத்திற்கு வந்த கணம் முதல் நான் எண்ணிக்கொண்டிருப்பது இதைத்தான். இப்போர் கௌரவர்கள் அவையில் பாண்டவ அரசியை இழிவு செய்ததன் பொருட்டு தொடுக்கப்பட்டது என்கிறார்கள். எனில் அதைவிடப் பெரிய இழிவை நான் அவளுக்கு இழைத்தேன். அவள் கூந்தலைப் பற்றி இழுத்துச்செல்ல முற்பட்டேன். அதன்பொருட்டு பிறிதொரு போர் தொடங்க வேண்டும். ஆனால் என் இழிசெயலைப் பொறுத்து என்னை வாழ்த்தி திரும்ப அனுப்பினார் பாண்டவ மூத்தவர். அன்று பிறிதொரு மானுடனாக, இணைவீரனாக நின்று என் பொருட்டு சொல்லெடுத்தவர் இளைய பாண்டவர்.”
“அன்று அவருக்கு நான் எந்தச் சொல்லையும் அளிக்கவில்லை. ஆனால் அத்தனை சொற்களையும் அளித்துவிட்டேன் என்றே பொருள். இப்புவியில் அவர்கள் இருவருக்கும் நிகராக பிறிதெவருக்கும் நான் கடன்பட்டிருக்கவில்லை” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “ஆனால் இன்று போர்க்களத்தில் நான் கீழ்மகனாக நடந்துகொண்டேன். கீழ்மையிலும் கீழ்மை நான் இயற்றியது.” தன் ஆழ்நிலை கலைந்தமையால் எரிச்சல்கொண்ட கிருதவர்மன் “நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும் என்கிறீர்கள்?” என்றான். மேலும் சீற்றம்கொண்டு “மைந்தனை காக்கவந்த இளைய பாண்டவரை செல்க என்று கௌரவப் படைகளுக்குள் செலுத்தியிருக்க வேண்டுமா? அவர் முன்னிருந்து வாள் தாழ்த்தி விலகியிருக்க வேண்டுமா? எனில் எதன் பொருட்டு இங்கே வாள் கொண்டு எழுந்திருக்கிறீர்கள்? உங்கள் முழுக் கடன் கௌரவ அரசரிடமே. கௌரவர்களின் வெற்றியே உங்கள் பொறுப்பு. எதன் பொருட்டும் அதை நீங்கள் துறந்தாகவேண்டும் என்பதில்லை” என்றான்.
“ஆம், நான் அவரை உள்ளே விட்டிருக்க வேண்டியதில்லை” என்றான் ஜயத்ரதன். “ஆனால் நான் உள்ளே சென்றிருக்கலாம். அனைவராலும் சூழப்பட்டு நிலத்தில் நின்றிருந்த அபிமன்யுவை நான் நினைத்திருந்தால் காத்திருக்கலாம்.” கிருதவர்மன் சினத்துடன் எழுந்து “என்ன செய்திருப்பீர்கள்? துரோணரும் கர்ணனும் அம்புகளால் சூழ்ந்து தாக்கிக்கொண்டிருக்கையில் ஊடு புகுந்து அவர்கள் அனைவரையும் வென்று இளவரசன் உயிரை பேணியிருப்பீர்களா? அல்லது கௌரவர்களின் அம்புகள் பட்டு அங்கு இறந்து விழுந்திருப்பீர்களா?” என்றான்.
“இவ்வண்ணம் சொல்லடுக்கி நான் என்னை காத்துக்கொள்ள முயன்றேன். ஆனால் உடனே என் அகம் அதற்கான மறுமொழியை சொல்லிவிட்டது” என்று ஜயத்ரதன் சொன்னான். “யாதவரே, அங்கே பாண்டவ மைந்தனைச் சூழ்ந்து தாக்கிய ஒவ்வொருவரும் கை நடுங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். மீறி எழுந்த சீற்றத்துடனோ அசையா உளஉறுதியுடனோ எவரும் அப்போது போரிட்டிருக்க மாட்டார்கள். நான் சென்று ஒரு சொல் உரைத்திருந்தால் ஒருவேளை அவர்களின் அம்புகள் தாழ்ந்திருக்கலாம். அவன் உயிர் மீண்டிருப்பானா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அனைவராலும் சூழ்ந்து கொல்லப்பட்டான் எனும் பழியிலிருந்து நாம் தப்பியிருக்கலாம். அத்தருணத்தில் எனக்கு அது தோன்றவில்லை.”
“போர் எழுந்த பின்னர் நம் ஒவ்வொருவரிலும் பிறிதொரு தெய்வம் குடியேறிவிட்டது. அது குருதி குருதி என்று கூவுகிறது. வெற்றிகூட அதற்கு ஒரு பொருட்டல்ல. நெறிகளையோ முறைகளையோ அது அறிவதேயில்லை” என்றான் ஜயத்ரதன். “இப்போதுகூட இளைய பாண்டவரின் இறைஞ்சும் விழிகளை காண்கிறேன். சைந்தவனே இது நம் நட்பின் பொருட்டு என அவர் கூவியது மலையடுக்குகள் சூழ்ந்து எதிரொலி எழுப்புவதுபோல நூறுநூறு முறை என் செவிகளில் ஒலிக்கிறது. ஆனால் நான் அவரை என் அம்புகளால் மேலும் மேலும் அறைந்து தடுத்து நிறுத்தினேன். ஒரு நாழிகை பொழுது அவரை தடுத்து நிறுத்த என்னால் இயலும் என்று அறிந்திருந்தேன். ஒரு நாழிகைப் பொழுதுக்குள் அபிமன்யு கொல்லப்படுவான் என்பதையும் அறிந்திருந்தேன். குலநெறியும், மூத்தாரும், தெய்வங்களும் வாழும் ஆழுள்ளத்திற்கு அந்த அறிதல் சென்றுசேராமல் நானே தடுத்துக்கொண்டேன்.”
கிருதவர்மன் “இவ்விரவில் இதை எண்ணி பொழுதை மீட்டிக்கொள்வதில் எப்பொருளுமில்லை. துயில்க! இது ஒவ்வொரு கணத்திலும் நம்மை மீறி சென்றுகொண்டிருக்கும் பெருநிகழ்வென்பதை உணர்ந்தால் இதில் எதன் பொருட்டும் நாம் துயருற மாட்டோம். எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளவும் மாட்டோம்” என்றான். பின்னர் “நான் வருகிறேன், இத்தருணத்தில் உங்களுடன் இருக்க விழையவில்லை” என்றான். “யாதவரே!” என்று கையை பற்றினான் ஜயத்ரதன். கிருதவர்மன் “இத்தருணத்தில் நான் உடனிருக்கலாகாது. அதை நீங்கள் இவ்வளவு சொற்களை பேசும்போது உணர்ந்தேன். நான் இங்கிருக்கையில் ஆடி போல உங்கள் துயரை உங்களுக்கே எதிரொளித்துக் காட்டுகிறேன். அதை நீங்கள் பெருக்கிக்கொள்ள கருவியாக அமைகிறேன்” என்றான்.
ஜயத்ரதனின் கையை விடுவித்துக்கொண்டு “தனிமையில் உங்கள் எண்ணப் பெருக்கு உங்களுக்கே ஒருகணத்தில் சலிக்கும். ஏனெனில் தனியனின் எண்ணங்கள் மிக விரைவில் அதன் உச்சத்தை அடைந்துவிடுகின்றன. அங்கிருந்து நேர் எதிர்த்திசையில் திரும்பியாகவேண்டும். அதற்கான சொல்முறைகளையும் உணர்வுகளையும் உருவாக்கிக்கொண்டாக வேண்டும். மிக விரைவில் நிகழ்ந்தவை அனைத்தையும் துறந்து பிறிதொரு இடத்திற்கு சென்று சேர்வீர்கள். அது ஓர் இனிய இளமைப்பொழுதாக இருக்கலாம். அன்றி காதலின் களிப்பாக இருக்கலாம். ஆனால் துயரழிந்த தூய தருணம் ஒன்றை உள்ளம் சென்று சேரும். துயரை உள்ளம் உதறிக்கொள்ளும் வழி அது ஒன்றே” என்றபின் கிருதவர்மன் அவன் தோளில் தட்டிவிட்டு குடில் வாயிலை நோக்கி சென்றான்.
ஜயத்ரதன் அவன் பின்னால் வந்து “என்னை கொல்வேன் என இளைய பாண்டவர் வஞ்சினம் உரைத்திருக்கிறார். நம் திட்டத்தை வைத்து நோக்கினால் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஒரே நாளில் அங்கர், துரோணர், கிருபர், சல்யர், பால்ஹிகர், அரசர் என அனைவரையும் வென்று நம் படையை முழுமையாக தோற்கடித்தாலொழிய அது நிகழாது. ஆனாலும் என் உள்ளம் அச்சம் கொள்கிறது. ஒருகணம்கூட நிலைகொள்ளவில்லை. இந்த நிலைகொள்ளாமையே என்னை அச்சுறுத்துகிறது. இது இறப்புக்கு முன் மானுடரிடம் எழும் நிலைகொள்ளாமையா என என் அகம் தவிக்கிறது” என்றான். கிருதவர்மன் பேசாமல் நோக்கி நின்றான். “சொல்க யாதவரே, என்ன நிகழும்? நான் கொல்லப்படுவேனா?”
“இப்போது நீங்கள் பேசிய அனைத்தும் காட்டுவது ஒன்றுதான். நீங்களே உங்கள் சாவை விரும்பி சென்றுகொண்டிருக்கிறீர்கள்” என்றான் கிருதவர்மன். “என்ன சொல்கிறீர்கள்?” என்றான் ஜயத்ரதன் சீற்றத்துடன். “நீங்கள் உங்கள் பிழைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதற்கான தண்டனையை விழைகிறீர்கள். அந்தக் களப்பலி உங்கள் வாழ்க்கையை எப்படி நிறைவுகொண்டதாக ஆக்கும் என உருவகித்துக் கொள்கிறீர்கள். அது பெருந்திருமேல் கொண்ட விழைவுக்கு அளிக்கும் பலிக்கொடை என விரித்துக்கொள்கிறீர்கள். சைந்தவரே, சாவு சாவு என உங்கள் அகம் தாவிக்கொண்டிருக்கிறது” என்றான் கிருதவர்மன். ஜயத்ரதன் தளர்ந்து “ஆம்” என்றான். பின்னர் கலங்கிய கண்களுடன் “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான்.
“அந்த உளத்தளர்வை உதறுக! உங்களை இறுக்கி கல்லென்றாக்கிக் கொள்க!” என்றான் கிருதவர்மன். “இந்நிலையில் அதற்கு ஒரே வழி வஞ்சம் கொள்வதே. இளைய பாண்டவர் மேல் கசப்பை திரட்டிக் கொள்க! வஞ்சத்தைப் பெருக்கி நிலைநிறுத்துக! அதன்பொருட்டு பொய்யை சமைத்து குவித்துக் கொண்டாலும் அது முறையே. வஞ்சமே நம்மை தலைதாழ்த்தாமல் களத்தில் நிற்கச்செய்யும் என்று உணர்க!” ஜயத்ரதன் “என்னால் இயலாது” என்றான். “நான் கண்ட வழி அதுவே. இந்தக் களத்தில் இறுதிவரை என் நஞ்சுடன் நான் நிலைகொள்வேன். மூன்று தெய்வங்களும் அமுதை கொண்டுவந்து பொழிந்தாலும் அதை கரைத்தழிக்க இயலாது” என்றான் கிருதவர்மன்.
“என்னால் இயலாது, யாதவரே” என்று ஜயத்ரதன் உடைந்த குரலில் சொன்னான். “எத்தனை சொல்லிக்கொண்டாலும் நான் செய்த கீழ்மையை என்னால் ஏற்க இயலாது.” கிருதவர்மன் “அது ஒன்றே வழி. வேறொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றபின் வெளியே சென்றான். ஜயத்ரதன் அவன் உருவம் மறைவதை, வெளியே புரவிக்குளம்போசை எழுவதை கேட்டுக்கொண்டு நின்றான். வெளியே ஓடி உரத்த குரலில் “அக்கீழ்மையை நான் ஏன் இயற்றினேன் என்று தெரியுமா?” என்று கூவினான். “எல்லா பெருங்கீழ்மைகளும் உளம்தாளா பேருணர்வு ஒன்றால்தான் இயற்றப்படுகின்றன!” ஆனால் அவன் குரல் ஒலிக்கவே இல்லை. அவன் உடல் உயிரற்றதுபோல் தளர்ந்தது. மெல்ல நகர்ந்து மீண்டும் தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.