கார்கடல் - 36
புரவியில் பாய்ந்து வந்த துச்சகனின் உடலெங்கும் குருதி நனைந்திருந்தது. கால் சுழற்றி தாவி இறங்கி பறந்து வந்த அம்புகளுக்கு தலைகொடாமல் குனிந்து ஓடி கர்ணனின் தேருக்கு அருகே வந்து சகடத்தில் தொற்றி தேரில் ஏறி ஆவக்காவலனின் அருகே எழுந்து நின்று “மூத்தவரே, இதுவே தருணம் என்று அரசர் கருதுகிறார். களமெழுந்துள்ள அர்ஜுனன் நோயுற்றிருக்கிறான். அவனால் போர்புரிய இயலவில்லை. அம்புகள் இலக்கு பிழைக்கின்றன. இத்தருணத்தில் நீங்கள் அவனை வெல்வது எளிது” என்றான். “மாதுலர் சகுனி பலமுறை அர்ஜுனனை எதிர்கொள்ளும்படி ஆணையிட்டும்கூட தாங்கள் முன்னெழவில்லை என்று சினங்கொண்டார். அவர் என்னை தங்களிடம் ஆணையை நேரில் சொல்லும்படி கூறி அனுப்பினார்” என்றான். கர்ணன் “ஆம்” என்றபடி சுருதசேனனையும் சதானீகனையும் அம்புகளால் அறைந்து பின்செலுத்தினான். பாஞ்சாலத்தின் ஏழு வில்லவர்களை தொடர்ந்து தன் அம்புகளால் அடித்து வீழ்த்தினான்.
துச்சகன் மேலும் உரத்த குரலில் “இவர்களல்ல தங்கள் இலக்குகள். மூத்தவரே, தாங்கள் வென்றாகவேண்டியது அர்ஜுனனை. அவனை வெல்லாமல் இப்போரில் நாம் வெல்ல இயலாது. இன்றே அவனை கொல்லவேண்டும். இனி ஒரு தருணமில்லை. கிளம்புக என்று மூத்தவர் வேண்டிக்கொள்கிறார்” என்றான். “செல்க!” என்று கர்ணன் சொன்னான். கசப்பும் சீற்றமுமாக “மூத்தவரே!” என்று துச்சகன் கூவினான். “செல்க!” என்று கர்ணன் உரக்க கூவ அவன் மேலும் சொல்லுக்குத் தவித்து பின்னர் தேரிலிருந்து தாவி இறங்கி அம்பு நிரைகளுக்கு கீழே உடல் குனித்து தன் புரவியை நோக்கி ஓடினான்.
மேலும் சற்று கழித்து துரியோதனனே தன் தேரில் அங்கு வந்திறங்கினான். அப்போது அபிமன்யுவும் சுருதகீர்த்தியும் இருபுறமும் நின்று கர்ணனுடன் பொருதிக்கொண்டிருந்தனர். துரியோதனன் தன் தேரை கர்ணனின் தேருக்கு நிகராக கொண்டுவந்து தானும் அம்புகளை தொடுத்தபடி உரத்த குரலில் “அங்கரே, இதுவே உகந்த பொழுது. இப்பொழுது அவன் சம்சப்தர்களை கொன்றுவிட்டு பகதத்தரை எதிர்க்கும்பொருட்டு சென்றுகொண்டிருக்கிறான். பகதத்தருக்கும் பீமனுக்கும் கடும்போர் அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சுப்ரதீகத்தின் விரைவை எதிர்க்க இயலாமல் பீமன் தவிக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் பீமனை பகதத்தர் கொன்றுவிடக்கூடும்” என்றான்.
கர்ணன் அவனை நோக்கி திரும்பவில்லை. “நாம் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதோ மீண்டும் முரசுக்குரல் எழுகிறது. அர்ஜுனன் அங்கு செல்கிறான். அர்ஜுனனும் பீமனும் இணைந்தால் ஒருவேளை பகதத்தரை வீழ்த்திவிட முடியும். பகதத்தரின் உதவிக்கு நான் உடனே செல்லவேண்டும். அர்ஜுனனை தடுத்து நிறுத்துங்கள். அவன் அம்புகளை உடையுங்கள். இக்களத்திலேயே அவனை கொன்று வீழ்த்துங்கள். இன்று இல்லையேல் இனி என்றும் நிகழாது” என்றான் துரியோதனன் மீண்டும். கர்ணன் தன் வில் தாழ்த்தி சினத்துடன் திரும்பி “அவன் நோயுற்றிருக்கிறான்” என்றான். “ஆம், அதைத்தான் நல்வாய்ப்பென்று சொன்னேன்” என்றான் துரியோதனன். “நோயுற்றிருப்பவனை வெல்வது எனக்கு புகழ் சேர்ப்பதல்ல” என்று கர்ணன் சொன்னான்.
துரியோதனன் கண்களில் சினம் எழுந்தது. “இந்த அறங்கள் அனைத்தையும் கைவிடுவதாக எனக்கு சொல்லளித்தீர். என் வெற்றி ஒன்றே குறி என்று அவையில் என்னிடம் கூறினீர்” என்றான். கர்ணன் “ஆம், ஆனால் நோயுற்று நடுங்கிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் போர்புரிய என் உளம் ஒப்பவில்லை. அவ்வெற்றியைப் பற்றிய எண்ணமே எனக்கு குமட்டலை உருவாக்குகிறது” என்றான். “இது வஞ்சகம். அங்கரே, நீங்கள் என்னை கைவிடுகிறீர்கள். அவனிடம் போரிடுவதைவிட நூறுமடங்கு இழிவு சொன்ன சொல்லை பின்னெடுப்பது. எப்படி நீங்கள் என்னை இவ்வண்ணம் கையொழிய முடியும்? செஞ்சோற்றுக்கடன் என்ற சொல்லை மறந்துவிட்டீரா?”
கர்ணன் சினத்துடன் “அந்தக் கடன் அங்குதானிருக்கிறது. அஞ்ச வேண்டியதில்லை. அதை நிரப்பாமல் இம்மண்விட்டு நான் செல்லப்போவதுமில்லை” என்றான். “ஆனால் இன்று நான் அவனை எதிர்க்கப்போவதில்லை. இன்று அவனுக்கும் எனக்கும் இங்கு போர் நிகழவேண்டுமென்று நீங்கள் எனக்கு ஆணையிடவும் இயலாது. எந்நிலையிலும் எவரிடமிருந்தும் ஆணை பெறுபவனல்ல நான் என நீங்களும் அறிவீர்கள்.” துரியோதனன் “வேண்டியதில்லை. நானும் என் உடன்பிறந்தாரும் அவனுடன் போர்புரிகிறோம். அவனை இக்களத்திலேயே கொல்கிறோம். எங்களுக்கு இனி நெறிகளெதுவும் இல்லை” என்று கூவினான். நெஞ்சிலறைந்து கண்ணீருடன் “இறந்து தேர்த்தட்டில் விழுந்தவர்கள் என் உடன்பிறந்தார். என் கடன் அவர்களுடனே விண்ணுக்குச் செல்வது. அவர்களிடம் மட்டும்தான் நான் மறுமொழி சொல்ல வேண்டியிருக்கிறது” என்றான்.
தேரைத் திருப்பி கைவீசி “உங்கள் நெறிகள் உங்களை காக்கட்டும். நன்று!” என்று சொல்லி துரியோதனன் விரைந்து அகன்று சென்றான். கர்ணன் தன்னை எதிர்த்த பாஞ்சாலப் படைவீரர்களையும் திருஷ்டத்யும்னனையும் பின்னடையச் செய்தான். அவன் செல்லும் வழியெங்கும் இருபுறமும் ஒதுங்கி பாண்டவப்படை வழிவிட்டது. அவன் அம்புகளிலிருந்து தப்ப இயலாதென்று அறிந்து அம்பெல்லைக்கு வெளியிலேயே அவர்கள் நின்றிருந்தனர். கர்ணன் மேலும் மேலும் விசைகொண்ட அம்புகளை எடுத்து விஜயத்தில் பொருத்தி இழுத்து அவர்களை வீழ்த்தினான். அலறல்களும் கூச்சல்களும் நிறைந்து அவனிருக்கும் இடம் அப்படையினர் அனைவருக்கும் தெரிந்தது.
தொலைவில் போர்முரசின் ஒலி கேட்டது. அவனைச் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்கள் “பகதத்தர் வீழ்ந்தார்! சுப்ரதீகம் வீழ்ந்தது!” என்றனர். கர்ணன் அரைக்கணம் உளம் விலக்கி அச்செய்தியை கேட்டான். பகதத்தரின் முகம் அவன் முன் கடந்து செல்ல சீற்றம் கொண்டவன்போல தலையை அசைத்தான். “பகதத்தர் வாழ்க! பிரக்ஜ்யோதிஷத்தின் தலைவர் வாழ்க! கொலையானை சுப்ரதீகம் வாழ்க! விண்ணேகுக மாவீரர்!” என்று கௌரவப் படையினர் வாழ்த்தொலிக்க மறுபக்கம் பாண்டவப் படையினர் வில்களையும் வேல்களையும் தூக்கி வீசி நடனமிட்டனர்.
கர்ணன் தன் அம்புகளால் பாண்டவர்களை அறைந்து பின்தள்ளிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் உடலெங்கும் குருதியுடன் அர்ஜுனன் முன்வருவதை கண்டான். அர்ஜுனன் பகதத்தரை வீழ்த்திய சோர்வுடன், ஒழிந்த ஆவநாழியுடன், நாண் தளர்ந்த காண்டீபத்துடன் பாண்டவப் படைகளுக்கு பின்னால் சென்று சற்று ஓய்வெடுத்து புது நாண் மாற்றி மீண்டுகொண்டிருந்தான். அவன் தேர் மேலும் மேலும் பாண்டவப் படைகளுக்குள் உட்புகுந்து சென்றபோது எதிர்பாராத வகையில் ஏழு திரைகள் ஒன்றன் பின் ஒன்றாக விலகுவதுபோல் அவனைச் சூழ்ந்திருந்த பாஞ்சாலர்களின் விற்படைகளும் வேல்படைகளும் புரவிநிரைகளும் அகல எதிரில் கர்ணன் தன் தேரில் வருவதை கண்டான்.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதை அறிந்ததும் இருபுறத்திலிருந்தும் வீரர்கள் அஞ்சி கூச்சலிட்டனர். கர்ணன் அர்ஜுனனை பார்த்து மறுசொல் எடுப்பதற்குள் அவன் தேரை ஓட்டிய இளையவனாகிய சத்ருஞ்சயன் புரவிகளை மாறி மாறி சவுக்கால் அறைந்து தேரை அர்ஜுனனை நோக்கி செலுத்தினான். தேர் பற்றிஎரிந்துகொண்டு வருவதுபோல் அந்தி ஒளியில் சுடர் விரிந்தபடி அணுகுவதை அர்ஜுனன் கண்டான். அவன் கை இயல்பாக ஆவநாழியைத் தொட்டு செயலிழந்தது. “பின்னெடுக்கவா?” என்று இளைய யாதவர் கேட்டார். “வேண்டியதில்லை! வேண்டியதில்லை!” என்று நடுங்கும் குரலில் அர்ஜுனன் சொன்னான்.
மீண்டும் ஒருங்கிணைந்து அர்ஜுனனை மூடிவிட பாண்டவப் படைகள் முயன்றபோது கர்ணனின் இருபுறமும் வந்துகொண்டிருந்த அவன் மைந்தர்கள் பொழிந்த அம்புகள் அவர்களைத் தடுத்து அணையிட்டு அப்பால் நிறுத்தின. கர்ணன் எங்கோ உளம் அமைந்து நோக்கிழந்த விழிகள் இமைசரிந்திருக்க அம்புகளால் படைகளை அறைந்துகொண்டிருந்த அரைக்கணத்தில் திரும்பி அர்ஜுனனை பார்த்தான். காண்டீபத்தை அறியாது மேலே தூக்கிய அர்ஜுனன் அதன் நாண் தளர்ந்திருப்பதைக் கண்டு வெற்று நோக்குடன் முகம் உறைந்தான். கர்ணன் “தேர் விலக்குக!” என்றான். “அரசே!” என்றான் சத்ருஞ்சயன். “இளையோனே, தேரை விலக்கு” என்று அழுத்தமான குரலில் கர்ணன் சொல்ல சத்ருஞ்சயன் தேரை இழுத்து விலக்கி கௌரவப் படைகளை நோக்கி கொண்டுசென்றான்.
கர்ணனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மைந்தர்களும் அவ்வாறே தேர்களைத் திருப்பி கௌரவர்களின் மையப்படையை நோக்கி செல்ல அவ்விடைவெளியை நிரப்பியபடி பாஞ்சாலர்களின் விற்படைகளும் விராடரின் வேல்படையும் கிராதர்களின் காலாட்படையும் வந்து மூடி அர்ஜுனனை அப்பால் கொண்டுசென்றன. மிகத் தொலைவில் யானைச்சங்கிலி கொடி நுடங்க பொற்தேர் அகன்று செல்வதை அர்ஜுனன் பார்த்தான். தேர்த்தட்டில் ஓங்கி காலால் உதைத்து காண்டீபத்தை அறைந்து வீசிவிட்டு பீடத்தில் அமர்ந்து கைகளால் தலையை பற்றிக்கொண்டு அவன் விம்மி அழுதான்.
கடிவாளங்களைப் பற்றியபடி பின்னால் திரும்பிப்பார்த்த இளைய யாதவர் “ஏன் துயருறுகிறாய்? உனக்கு உயிர்க்கொடை அளிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அதற்கு மேல் இந்நிகழ்வுக்குப் பொருளேதுமில்லை” என்றார். “இத்தருணத்திற்குப் பின் நான் எதை அடைந்தாலும் அதற்கு பொருளேதுமில்லை, யாதவரே. இக்கணம் வரை என் முதன்மை எதிரியாக எண்ணியிருந்தவன் இவன். இவனை கொன்றாலொழிய நான் வீரனல்ல என்றும் இவனைக் கொல்லும் கணத்திலேயே விண்ணவனின் மைந்தனென்று ஆவேன் என்றும் எண்ணியிருந்தேன். தோற்றது நான் மட்டுமல்ல, விண்ணவர்க்கு இறைவனாகிய எந்தையும்தான். பிறந்து பிறந்து என்றும் நிகழும் இப்போரில் மீண்டும் எந்தை தோற்றிருக்கிறார்” என்றான்.
“என்றும் தேவர்களே இறுதியாக வெல்வார்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “அதற்கு என்ன பயன்? அவ்வெற்றி இழிவு கொண்டது. இன்று அவனிடமிருந்து உயிரை கொடை எனப் பெற்றதும் நான் இறந்தேன். இனி வில்லவனென்றும் விண்ணோன் மைந்தனென்றும் சொல்லிக்கொள்வதில் என்ன பொருள்?” என்று அர்ஜுனன் கூவினான். “போர்க்களத்தில் எதுவும் நிகழும். நன்று, தீது, மேன்மை, கீழ்மை அனைத்தும் இங்கு ஒன்றே. களத்தில் அனைத்து சொற்களும், அனைத்து உணர்வுகளும் நாம் கையாளும் படைக்கலங்கள் மட்டுமே” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் மறுமொழி கூறாது தலையை கைகளில் தாங்கி உடல் குறுக்கி அமர்ந்திருந்தான்.
அந்தி சரிவதை அறிவுறுத்தும் முரசுகள் முழங்கத் தொடங்கின. பாண்டவ வீரர்கள் உரக்க கூச்சலிட்டு விற்களையும் வேல்களையும் வானில் தூக்கியெறிந்து “வெற்றி கொள்வோம்! வில்விஜயனுக்கு வெற்றி! இந்திரன் மைந்தனுக்கு வெற்றி! காண்டீபத்துக்கு வெற்றி! மின்கொடிக்கு வெற்றி! இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி! யுதிஷ்டிரருக்கு வெற்றி!” என்று கூச்சலிட்டனர். அப்பால் கௌரவப் படையினர் சோர்ந்து தனித்து பிரிந்து செல்வதை காணமுடிந்தது.
கர்ணனின் தேர் சென்று நிற்க பாகன் பாய்ந்திறங்கி அவன் இறங்குவதற்குரிய படிப்பெட்டியை வைத்தான். கர்ணன் இறங்கி தன் வில்லை அருகே வந்த ஏவலனிடம் நீட்டி கையுறைகளை விரல்களால் கவ்வி உருவியபடி நடந்தான். தொலைவில் தனித்தேரில் துரியோதனன் செல்வதை பார்க்க முடிந்தது. கர்ணன் அவனை பார்த்தபின் அணுகிச்சென்றான். துரியோதனன் தேரிலிருந்து இறங்கி வெறுப்பும் துயரும் நிறைந்த முகத்துடன் அங்கேயே நின்றான். அருகணைந்ததும் “பகதத்தர் கொல்லப்பட்டார்!” என்றான். கர்ணன் மறுமொழி சொல்லவில்லை. “இது அவையில் அவர் உங்களை குலஇழிவு சொன்னமைக்கான மறுசெயல் என்று என்னிடம் சொன்னார்கள். நான் அதை நம்ப அஞ்சுகிறேன். அவ்வாறு ஒரு சிறுமையை உங்கள் மேல் இதுவரை நான் சுமத்தியதில்லை. ஆனால் இன்று அதை என்னால் சுமத்தாமலிருக்கவும் இயலாது” என்றான் துரியோதனன்.
“என் மேல் எப்பழியையும் எவரும் சுமத்தலாம்” என்று கர்ணன் சொன்னான். துரியோதனன் அச்சொல்லால் உளமழிந்து தன் இரு கைகளால் அவன் கைகளை பற்றிக்கொண்டு “பிறகேன் இந்த நிலை? ஏன் இப்படி செய்ய நேர்ந்தது?” என்று உடைந்த குரலில் கேட்டான். “அறமென்றும் அளியென்றும் என்னிடம் சொல்லவேண்டாம். என் மைந்தர், என் இளையோர் இந்தக் களத்தில் எப்படி தலையறைந்து வீழ்த்தப்பட்டனர் என்று உனக்கு தெரியும். இன்று நான் நின்றிருக்கும் நிலை என்னவென்றும் தெரியும். இத்தருணம் அறத்தையும் அளியையும் பேசிக்கொண்டிருப்பதற்கானதல்ல என்று பிற எவரையும்விட உனக்கே தெரியும். இருந்தும் ஏன் இதை செய்தாய்? நான் ஏதேனும் பிழை இழைத்தேனா? அன்றி என் தம்பியரோ குடியோ ஏதேனும் பிழையாற்றினோமா?”
“என் நிலையை சொற்களால் முழுமையாக உங்களிடம் சொல்லிவிட இயலாது, அரசே” என்று கர்ணன் சொன்னான். “ஒருவேளை என்றேனும் நீங்கள் அதை அறியவும் கூடும். அல்லது நாம் விண்ணில் சந்திக்கையில் அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். இன்று அதற்கு என்னிடம் விளக்கமில்லை.” சீற்றத்துடன் “ஒரு விளக்கமிருக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். “இதுவரை நாம் எவரும் சொற்களால் ஒருவரோடொருவர் சொல்லிக்கொள்ளாத விளக்கம் அது” என்றான். அவன் விழிகளை நேர்நோக்கி “அது உண்மை” என்று கர்ணன் சொன்னதும் துரியோதனனின் விழிகள் மாறுபட்டன. “அது முற்றிலும் உண்மை. அவன் என் இளையோன். அவர்கள் என் இளையோர்” என்று கர்ணன் சொன்னான்.
துரியோதனன் திகைப்புடன் “ஆனால்…” என்றான். “அது நாமனைவரும் அறிந்தது. நாம் எவரும் சொல்ல உகக்காதது. அவ்வாறே இருக்கட்டும்” என்றான் கர்ணன். துரியோதனன் உளம் தளர்ந்து “மெய்தான். நான் அவனை கொல்லும்படி உங்களிடம் சொல்லியிருக்கக் கூடாது. உங்களால் அது இயலாது. அப்பெரும்பழியைச்சூடி நீங்கள் நின்றிருக்க வேண்டுமென்று நான் கோரலாகாது” என்றான். அவன் தோளைத் தொட்டு உரத்த குரலில் “அப்பெரும்பழியை நான் சூடுவேன் என்று மீண்டும் சொல்லளிக்கிறேன். இன்று அவனை நான் கொல்லாது ஒழிந்தது ஒன்று கருதியே. என்முன் ஒரு முகம் நின்றிருந்தது. என் கை தளரச்செய்தது” என்றான் கர்ணன்.
“ஆனால் எந்நிலையிலும் அவன் தப்ப இயலாத பெரும்பாணம் ஒன்று என்னிடம் உள்ளது. நெடுநாள் வஞ்சம் கரந்த நஞ்சுகொண்ட நாகாஸ்திரம். அதை நாளை அவன் மேல் செலுத்துவேன். அவனை கொன்று மீள்வேன். ஐயம் வேண்டியதில்லை” என்றான். “அந்நஞ்சை இன்றிரவு என் குருதியில் செலுத்திக்கொள்கிறேன். இன்று என்னிலுள்ள அனைத்தும் அகலும். நான் அந்த நஞ்சால் மட்டுமே செலுத்தப்படுவேன்… ஆம், இவையனைத்திலும் இருந்து விடுபடுவேன்.” துரியோதனன் “ஆனால்” என்றபின் “வேண்டாம். அப்பெரும்பழிக்குப் பின் உன் உளநிலை எப்படி இருக்குமென்று என்னால் எண்ண முடிகிறது. என் பொருட்டு அதை செய்ய வேண்டியதில்லை. இது ஊழ் வழியே செல்க!” என்றான்.
“இல்லை. இது நான் மாறாது எடுத்த முடிவு. என்னை ஆளும் தெய்வத்திற்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன். பின் நான் மானுட உணர்வுகளால் ஆற்றல்குன்றியவனாக இருக்கமாட்டேன். என் நச்சம்புக்கு முன் அவனுடைய எந்த அம்பும் நில்லாது. அவனுடைய எந்த சொற்பேறும் அதை தடுக்காது. எண்ணுக! நாளை அவன் வாழ்வை முடிப்பேன்” என்றபின் கர்ணன் திரும்பிச் சென்றான். துரியோதனன் களத்தில் தனித்து நின்றான்.
தன் குடிலின்முன் அர்ஜுனன் சிறு பெட்டி மேல் அமர்ந்து கைகளை மடியில் கோத்து தலைகுனிந்திருந்தான். இரு ஏவலர் மென்மரவுரிச் செண்டால் அவன் உடலிலிருந்த பொடியை வீசி அகற்றினர். மணலால் அவன் கைகளிலிருந்த குருதியை உரசி துடைத்து ஈர மரவுரியால் தூய்மை செய்தனர். தேர் வந்து நின்ற ஒலிகேட்டு அவன் விழிதூக்கி நோக்கினான். இளைய யாதவர் அதிலிருந்து இறங்கி புன்னகையுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் எழுந்து தன் குடிலுக்குள் சென்றுவிட வேண்டுமென்று அவன் எண்ணினான்.
அவன் உடலில் அவ்வசைவு எழக்கண்டதும் மேலும் அகன்ற புன்னகையுடன் அருகணைந்து அப்பாலிருந்த சிறுபெட்டியை இழுத்திட்டு அதில் அமர்ந்து தன் முழங்காலில் கைவைத்து விரல்களைக் கோத்தபடி “இன்னும் துயர் கொண்டிருக்கிறாயா?” என்று இளைய யாதவர் கேட்டார். அர்ஜுனன் விழிதூக்கி “உயிரோடிருத்தலே இழிவென்று தோன்றும் சில தருணங்கள் உண்டு வாழ்வில்” என்றான். “உயிரோடிருத்தல் வீணென்று தோன்றுவதைவிட அது மேல்” என்று இளைய யாதவர் சிரித்தார். “யாதவரே, உங்களுக்கு மெய்யாகவே மானுட குலத்தை பார்த்தால் என்ன தோன்றுகிறது? பயனற்ற இழிபிறவிகள் என்றா? கடலில் பல நூறு காதம் அகலமுள்ள மீன் கூட்டங்களை ஒரே இழுப்பில் வாய்க்குள் இழுத்து விழுங்கிச்செல்லும் மலைபோன்ற மீன் ஒன்றுண்டு என்று மாலுமிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான்.
“மானுடர் பயனுள்ளவர்கள்தான். தெய்வங்கள் தாங்கள் எண்ணுவன அனைத்தையும் அவர்களைக் கொண்டே இங்கு நிகழ்த்தவேண்டியிருக்கிறது” என்று அதே சிரிப்புடன் இளைய யாதவர் சொன்னார். “எண்ணி நோக்குக! ஒரு சதுரங்கக் காயின் மெய்யான பொருள்தான் என்ன? அந்தக் களத்தில் அது சில மாறாத அடையாளங்களை கொண்டுள்ளது. ஆனால் ஆடலில் ஒவ்வொரு கணமும் அதன் பொருள் மாறிக்கொண்டிருக்கும். ஆடல் முடிவிலாதது எனில் முடிவிலாப் பொருள் கொண்டதல்லவா அதுவும்?” உதடுகளைச் சுழித்து “வெறும் சதுரங்கக் காய்!” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், அதுதான். பிறிதொன்றுமல்ல” என்று இளைய யாதவர் சொன்னார்.
தலைகுனிந்து சற்று நேரம் இருந்த பின் நிமிர்ந்து நோக்கி அர்ஜுனன் “சில தருணங்களில் உங்கள் மேல் தோன்றும் வெறுப்புக்கு எல்லையே இல்லை” என்றான். “எல்லையற்ற அன்பு கொண்டவர்மேல்தான் அத்தகைய வெறுப்பும் உருவாகும் என்பார்கள்” என்று சொல்லி தலையை தூக்கி உரக்க நகைத்து “மானுடரைப் பற்றி அழுத்தமாக எதைச் சொன்னாலும் அது சரியானதாகவும் தோன்றுவதன் விந்தைதான் என்ன! காவிய ஆசிரியர்கள் அதில்தான் திளைக்கிறார்கள் போலும்” என்றார். “யாதவரே, இன்று நிகழ்ந்ததற்கு என்ன பொருள்? அவ்விழிமகன் கையால் உயிர்பெற்று நான் வாழ வேண்டுமா? இதன் பின் அவனை களத்தில் கொன்றால் நான் அடையும் பெயருக்கு என்ன பொருள்? எப்படி இனி அவனை கைநடுங்காது என்னால் எதிர்கொள்ள முடியும?” என்றான்.
“அதற்கென தருணம் வரும்” என்று இளைய யாதவர் சொன்னார். “இல்லை, இனி அவனை களத்தில் எதிர்கொள்ள என்னால் முடியாது. அவன் முன் கை நடுங்காது காண்டீபம் எடுக்க மாட்டேன். அவ்வாறு இனியும் ஒருமுறை அவனிடம் சென்று நின்று தோற்றால் அது சிறுமை. மீண்டும் ஒருமுறை அவனால் உயிர்க்கொடை அளிக்கப்பட்டால் என் குடிக்கும் கொடிவழிக்குமே அது கீழ்மை” என்றான். “கைநடுங்காது முழுவிசையுடன் அவனை கொல்லும் ஆற்றலை உனக்களிக்கும் நிகழ்வுகள் ஒருங்கு கூடுக என்று மட்டுமே இத்தருணத்தில் என்னால் சொல்லக்கூடும்” என்றபின் அவன் தொடையில் கைவைத்து “எண்ணி நோக்குக! எவ்வாறு இது நிகழ்ந்தது?” என்றார்.
அர்ஜுனன் நிமிர்ந்து நோக்க “பாண்டவனே, இந்த மாபெரும் துலாவில் எந்தத் தட்டில் ஒன்றை நீ வைத்தாலும் பிறிதெங்கோ ஒரு தட்டு நிகர் செய்யப்படுகிறது. நீ காண்டவப் பெருங்காட்டை எரித்ததை நினைவுறுகிறாயல்லவா?” என்றார். “ஆம், இன்று களத்தில் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். உண்மையில் களத்தில் அங்கன் எழுந்த நாள் முதல் மற்றொன்றையும் எண்ணவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ஒரு தட்சன் எஞ்சினான். அவனையும் கொன்றொழிக்கும்படி உன்னிடம் கூறினேன். உன் அறம் அதை தடுத்தது. நீ அவனுக்கு உயிர்க்கொடை அளித்தாய்” என்றார். “ஆம்” என்று அர்ஜுனன் குழப்பத்துடன் சொன்னான். “அந்த உயிர்க்கொடையையே இன்று அங்கன் உனக்கு திருப்பியளித்திருக்கிறான். அளித்தது அவனல்ல, அவன் ஆவநாழியில் அம்பின் வடிவில் உறங்கும் அந்த இளம்தட்சனே” என்றார் இளைய யாதவர்.
திகைப்புடன் சற்று நேரம் பார்த்த அர்ஜுனன் “ஆனால் அதை நான் பேரளியுடன் அளித்தேன்” என்றான். யாதவர் உரக்க நகைத்து “அந்த அளிக்கு என்ன பொருள்? அவன் குலத்தை முற்றழித்து அவன் உடலை பாதி வேகச் செய்து உயிரளித்துவிடுவது எவ்வகையில் அளிகொண்ட செயல்? அதற்கு நிகரானது இன்று உன் ஆணவத்தை முற்றழித்து பல்லாயிரம் விழிகள் முன் உன்னை சிறு உயிரென்றாக்கி அந்த தட்சன் உனக்கு அளித்த உயிர்க்கொடை. நீங்கள் இருவரும் உளம்கனிந்து அதை செய்தீர்கள். ஆனால் விளைவுகள் ஒன்றே. அளித்ததை பெற்றுவிட்டாய். இனி களத்தில் உனக்கு கடன் ஏதுமில்லை” என்றார் இளைய யாதவர்.
அர்ஜுனன் “எனக்கு புரியவில்லை” என்றான். அவன் தொடையைத் தட்டியபின் எழுந்துகொண்ட யாதவர் “பாண்டவனே, நீ அவனுக்கு அளித்த உயிர்க்கொடையை இளந்தட்சன் இப்போது திருப்பி அளித்திருக்கிறான். ஏனெனில் இனி அவன் அதன்பொருட்டு உன்னிடம் கருணை காட்ட வேண்டியதில்லை. உன்னை துரத்தி திசையெல்லை வரை கொண்டு சென்று வஞ்சம் தீர்க்கலாம். உன் குலக்கொடியின் கருபுகுந்து கொடிவழியினரை அழிக்கலாம். உன் தலைமுறைகளில் நஞ்சென்றும் பழியென்றும் குடிகொள்ளலாம். அவனுக்கு இப்போது தடைகளில்லை” என்றார்.
அர்ஜுனன் திகைத்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தான். “அவ்வண்ணமே உனக்கும் இனி தடையில்லை என்றாகுக! அதற்கென தருணம் அமைக!” என்றபின் இளைய யாதவர் திரும்பிச்சென்று தன் தேரிலேறிக்கொண்டார்.