கார்கடல் - 27
குந்தி நிழல் என ஓசையின்றி அணுகிவந்தாள். கர்ணன் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசிக்கு நல்வரவு. இப்பொழுதில் இவ்வெளியேனின் தனிக்குடிலுக்கு தாங்கள் வந்தது முறையல்ல எனினும் என் குடிக்கும் எனக்கும் நற்பெயர் என்று உணர்கிறேன். தங்கள் வரவின் அருள் எனக்கு அமையட்டும்” என்றான். குந்தி தன் வலக்கையைத் தூக்கி அவனை வாழ்த்தி “நலம் சூழ்க!” என்றாள். தணிந்த குரலில் “நான் உன்னை பார்க்கவேண்டுமென்று வந்தேன்” என்று சொன்னாள்.
அந்தப் பொருளிலாச் சொல் அவள் உளம் குழம்பியிருப்பதை காட்டியது. கர்ணன் “அது என் நல்லூழ். வருக, அரசி!” என்று உள்ளே அழைத்துச் சென்றான். விழிகளால் ஏவலனிடம் பிற எவரும் நுழையலாகாது என்று ஆணையிட்ட பின் கதவை மூடி “அமர்க, பேரரசி!” என்று சிறுபீடத்தை காட்டினான். “இது பாடி வீடு. இங்கு பீடங்கள் ஏதுமில்லை, பலபயனுக்குரிய இந்தப் பெட்டியே பீடமென்றாகிறது” என்றான். குந்தி மறுமொழி சொல்லாமல் பெட்டி மேல் அமர்ந்தாள். கர்ணன் சற்று அப்பால் ஒரு சிறிய பெட்டியை இழுத்து அதன் மேல் அமர்ந்து முழங்கால்களில் கையூன்றி விரல்களைக் கோத்த பின் “நான் அஸ்தினபுரியில் பலமுறை தங்களை பார்த்துளேன். இப்போது அகவை முதிர்ந்து மெலிந்து உடல் சிறுத்திருக்கிறீர்கள். ஆயினும் அன்றுணர்ந்த அதே சொல் ஒன்றை இப்போதும் என் உள்ளத்தில் உணர்கிறேன்” என்றான்.
குந்தி புன்னகைத்தாள். கர்ணன் “அரசகுடியினர் பெருங்கவிஞன் ஒருவனின் கவிதைச்சொல்போல சொல்லில் செறிவுகொண்டவர்கள் என்று ஒரு சூதர்சொல் உண்டு. தாங்களோ ஓர் ஊழ்கநுண்சொல்லின் ஆழம் கொண்டவர்கள். இப்போது அச்சொல் மேலும் ஒலியின்மை நோக்கி சென்றுள்ளது” என்றான். குந்தி பெருமூச்சுவிட்டு “நான் உன்னிடம் சிலவற்றை தனியாக பேசவேண்டுமென்று வந்தேன்” என்றாள்.
கர்ணன் குந்தியை மீண்டும் வணங்கி “சொல்லுங்கள், அரசி. அடியவனால் தங்களுக்கு ஆகவேண்டியது என்ன? எதுவாயினும் தலைகொடுக்கிறேன்” என்றான். “நான் உன்னிடம் சிலவற்றை பேச விழைந்தேன்” என்று மீண்டும் சொன்ன குந்தி அவ்வுணர்விலிருந்து மெல்ல வழுவி தயங்கி பின்னடைந்தாள். நேரடியாக தான் எண்ணியதை சொல்ல இயலாதென்று உணர்ந்து “நான் என் மைந்தன் அர்ஜுனனின் மருத்துவநிலையிலிருந்து வருகிறேன்” என்றாள். தற்செயலாக என சரியான இடத்தில் தொடங்கிவிட்டதை உணர்ந்து அவள் உளம் கூர்கொண்டது.
கர்ணன் அச்சொற்களால் உளம் அணைந்து, தயங்கிய குரலில் “எவ்வண்ணம் இருக்கிறார்? அவர் உடல்நிலை…” என்று சொல்ல குந்தி “மீண்டுவிடுவான். நாளை காலையில் எழுவான். ஒருவேளை நாளை மறுநாள் களம் வரவும் கூடும்” என்றாள். கர்ணன் முகம் மலர்ந்து “நன்று” என்றான். “நான் நிலைகுலைந்திருந்தேன், அரசி. இன்று சற்று மிகையாகவே மதுவருந்தியிருக்கிறேன். என் நிலைகுலைவு எதனால் என்று இப்போதுதான் அறிகிறேன். என் கணை பட்டு இளைய பாண்டவர் களத்தில் விழுந்தார். வீரனாக அது என் வெற்றி. ஆனால் ஆழத்திலிருந்து அதை நான் விரும்பவில்லை.”
“அது ஏன் என்று தெரியுமா?” என்று குந்தி நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். கர்ணன் தன் அனைத்து எண்ணங்களையும் அசைவறச் செய்து வெற்றுவிழிகளால் அவளை நோக்கியபடி “அறியேன். எவ்வண்ணமோ அவரே நான் என்று உணர்கிறேன். என் தோற்றமும் அவர் தோற்றமும் ஒன்றுபோல் இருப்பதாக சூதர் சொல்வதுண்டு. தசைச்சிற்பத்தால் அல்ல, அசைவாலோ நோக்காலோ, அப்பாலுள்ள பிறிதொன்றினாலோ நான் அவரே என்று நானும் உணர்ந்துள்ளேன். அதனாலாக இருக்கலாம்” என்றான். குந்தி “ஆம், உன் தோற்றமும் அவன் தோற்றமும் ஒன்றே” என்றாள். மீண்டும் குரல் தாழ்த்தி “அது ஏன் என்று தெரியுமா?” என்று கேட்டாள்.
கர்ணன் “அதை தாங்கள் அறிந்திருக்கக்கூடும்” என்றான். “நீயும் அறிவாய். உள்ளாழத்தில் அதை அறியாத யாரும் அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இருக்க வாய்ப்பில்லை” என்றாள் குந்தி. கர்ணன் “பேரரசி, மெய்மையை சற்றே அறியாதோரும் இல்லை. வாழ்வில் அதை முழுதுணர்ந்தோரும் இல்லை என்பார்கள்” என்று சொன்னான். அதிலிருந்த மெல்லிய நகையாட்டு அத்தருணத்தின் கூர்மையை தவிர்க்கும்பொருட்டு அவனிடம் எழுந்தது என்று உணர்ந்த குந்தி “உன்னிடம் மெய்மை பற்றிச் சொல்லாட நான் இங்கு வரவில்லை” என கடுமையாகச் சொன்னாள். “நாமிருவருமே நன்கறிந்த ஒன்றை மீண்டும் உன்னிடம் அழுத்திச் சொல்லவே வந்தேன். அவன் உன் இளையோன். நீ என் மைந்தன். என் வயிற்றில் என் குருதியில் ஊறி பிறந்தவன்” என்றாள்.
கர்ணன் சிலகணங்கள் அசைவற்று விழிநட்டு அவளை நோக்கியபின் இமைதாழ்த்தி விரல்களை மாற்றி கோத்துக்கொண்டான். அவன் இரு தோள்களிலும் தசைகள் இறுகி அசைந்து நெகிழ்ந்தன. நீள்மூச்சுடன் அவன் “ஆம்” என்றான். அவள் அவன் மேலும் ஏதேனும் சொல்லக்கூடும் என காத்தாள். அவன் விழிகள் சரிந்தே இருந்தன. முகம் சிலையென அமைந்திருந்தது. அவள் அவன் தலையை கைநீட்டி தொட விழைந்தாள். ஆனால் கைகள் எழவில்லை. தொண்டையைச் செருமி குரலை எழுப்பி “நான் உன்னை ஈன்றேன்” என்றாள். அதை ஒட்டி மேலும் சொல்லெடுக்க முடியாமல் பின்னடைந்து “உன் அன்னை உன்னை யமுனையில் கண்டெடுத்தாள் என அறிந்திருப்பாய்” என்றாள்.
“ஆம்” என்று கர்ணன் சொன்னான். “கன்னிச்சோலையில் நான் வாழ்ந்த நாளில் கருவுற்று உன்னை பெற்றேன். பழிக்கு அஞ்சி உன்னை கைவிட்டேன்.” அவன் விழிதூக்கி அவளை நோக்க “ஆம், என் குடியில் அது பழி சேர்ப்பதல்ல. ஆனால் நான் ஷத்ரியக்குடி ஒன்றுக்கு மணம்முடித்துச் செல்ல விழைவுகொண்டிருந்தேன். பாரதவர்ஷத்தை ஆள திட்டமிட்டிருந்தேன்” என்று குந்தி சொன்னாள். “என் விழைவால் உன்னைத் துறந்தேன். அதை என்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒளித்ததில்லை. ஆகவே உன்னிடமும் மறைக்கவேண்டியதில்லை. நான் பிறப்பால் யாதவப்பெண் எனினும் அகத்தால் ஷத்ரியக்குடியினள். விழைவே ஷத்ரியர்களை உருவாக்கும் விசை.”
“பின்னரும் மும்முறை உன்னை என்னிடமிருந்து நான் விலக்கினேன். சதசிருங்கத்திலிருந்து மீள்கையில் உன்னை என் மைந்தன் என நான் அறிவித்திருக்கலாம். உன்னை அங்கநாட்டிலிருந்து கொண்டுவந்து துரோணரின் மாணவனாக ஆக்கியபோது அதை செய்திருக்கலாம். நீ வில்லுடன் பயிற்சிக்களத்தில் எழுந்தபோது கூறியிருக்கலாம். ஒவ்வொருமுறையும் என்னைத் தடுத்தது என் விழைவே. நான் முடிசூடவேண்டும் என்னும் பெருவிழைவு. என் மைந்தர் அரசாளவேண்டும் என்னும் இயல்பான எண்ணம்…” என்றாள் குந்தி.
“நீ என் மைந்தன் என நான் முன்னரே அறிவித்திருந்தால் விரும்பாதன நிகழ்ந்திருக்கலாம். ஏற்கெனவே என் யாதவகுடிப் பிறப்பை அஸ்தினபுரியின் ஷத்ரியர் விரும்பவில்லை. உன்னை முதல் மைந்தன் என்று சொல்லியிருந்தால் அதன்பொருட்டே நானும் என் மைந்தரும் விலக்கப்பட்டிருப்போம். பாண்டுவின் மைந்தன் என்பதே யுதிஷ்டிரனின் தகுதியாக இன்றும் உள்ளது” என்றாள் குந்தி. “அத்துடன் நான் பீஷ்மரை அஞ்சிக்கொண்டிருந்தேன். அவர் உள்ளம் குருதித்தூய்மையில், குடிச்சிறப்பில் ஊன்றியது. அவர் ஒருபோதும் உன்னை ஏற்கமாட்டார் என அறிந்திருந்தேன்.”
கர்ணன் திகைப்புடன் விழிதூக்கி “அவரா?” என்றான். “ஆம், அவரே. அவரை நான் நன்கறிவேன். அவருக்கு என்மேல் ஒருபோதும் மதிப்பு இருந்ததில்லை. அவர் உன்னையும் குடி சொல்லிப் பழித்தார்” என்றாள் குந்தி. கர்ணன் சில கணங்கள் அவளை உற்று நோக்கியபின் புன்னகை செய்தான். “ஏன் புன்னகைக்கிறாய்?” என்று குந்தி கேட்டாள். “இல்லை” என்றான். “சொல்” என அவள் சுருங்கிய விழிகளுடன் சொன்னாள். “ஒன்றுமில்லை, அரசி…” என்றான் கர்ணன்.
குந்தி சற்றுநேரம் அவனை நோக்கிக்கொண்டிருந்துவிட்டு “நீ என் மைந்தன் என எப்போதேனும் அகத்தால் உணர்ந்திருக்கிறாயா?” என்றாள். கர்ணன் வலிகொண்டவன்போல் முகம் சுளித்து ஏறிட்டு நோக்கி “ஆம்” என்றான். “என்னை பார்க்க விழைந்துள்ளாயா? என்னை உள்ளத்தால் அணுகியிருக்கிறாயா?” என்று அவள் ஆவலுடன் சற்றே முன்நகர்ந்து கேட்டாள். “ஆம்” என்று அவன் சொன்னான். அவன் விழிகள் சரிந்தன. அவள் அவன் துயில்கொள்வதாகவே எண்ணினாள். “பலமுறை நான் உங்களை கனவில் கண்டிருக்கிறேன்.”
குந்தி பரபரப்புடன் “எத்தகைய கனவுகள்? சொல்க, எப்படிப்பட்டவை அவை?” என்றாள். கர்ணன் துயிலில் என உடல் மெல்ல ஆட, தாழ்ந்த குரலில் “பல கனவுகள். இறுதியாக வந்த கனவில் நீங்கள் ஒரு சிறிய உப்பரிகையில் இருளுக்குள் நின்று விடிவெள்ளியை நோக்கிக்கொண்டிருக்கிறீர்கள். கையில் மயிலிறகு விசிறியை வைத்திருக்கிறீர்கள். விடிவெள்ளியை ஒரு முகில் மறைத்தபோது நீங்கள் விம்மி அழுதீர்கள். நான் அந்த ஒலியைக் கேட்டு உளம் அதிர்ந்தேன். மிகமிக அமைதியில் கேட்கும் விம்மலோசைபோல உளமுலைப்பது பிறிதொன்றில்லை. எந்தப் பேரோலத்தைவிடவும் விண்ணைச் சென்றடைவது அது. நான் நடந்து அருகே வந்து உங்கள் தோளை தொட்டேன்” என்றான்.
“ஆம்! ஆம்!” என சொல்லி குந்தி எழுந்துகொண்டாள். “இது நிகழ்ந்தது. உபப்பிலாவ்யத்தின் உப்பரிகையில் நான் அவ்வாறு நின்றிருந்தேன். விடிவெள்ளி நோக்கி ஏங்கினேன். எனக்குப் பின்னால் காலடியோசை கேட்பதுபோலத் தோன்றி திரும்பி நோக்கினேன்.” அவள் கைநீட்டி அவன் முழங்காலை தொட்டாள். “மைந்தா, நீ என் அருகே நின்றிருக்கிறாய். எப்போதும் எனக்கு மிக அணுக்கமாக இருந்திருக்கிறாய்.” கர்ணன் “அஸ்தினபுரியில் நான் பெரும்பாலும் உங்கள் கால்களையே நோக்கியிருக்கிறேன். அவை என் கனவில் எப்போதும் வந்துகொண்டிருக்கும்” என்றான். “தென்னகக் காட்டில் அலைகையில் நான் இறையுரு என எந்தையை எண்ணுவேன். அன்னை என உங்கள் கால்களையே எண்ணுவேன். இரு வெண்கற்களை எடுத்துவைத்து உங்கள் கால்கள் என எண்ணி மலரிட்டு வணங்குவேன்.”
குந்தி உதடுகளை அழுத்திக்கொண்டு மெல்ல அமர்ந்தாள். அவள் கழுத்துத் தசைகள் அதிர்ந்தன. மெல்லிய விசும்பலோசையுடன் அவள் அழுதாள். அதை அறியாதவனாக கர்ணன் தொடர்ந்தான். “மீளமீள வரும் கனவுகள் சில உண்டு. பிறிதொரு உப்பரிகையில் நின்று நீங்கள் உங்கள் முலைப்பாலைப் பிழிந்து வெளியே ஊற்றுகிறீர்கள். கீழே ஒரு நாய் என நின்று நான் அந்த இனிய அமுதை நா நீட்டிச் சுவைத்து உண்கிறேன். அக்கனவின் பொருள் என்ன என்று எனக்கு புரிந்ததே இல்லை. அச்சமூட்டும் பிறிதொரு கனவில் நான் ஒரு சுனைக்கு அடியில் மூழ்கி விளையாடிக்கொண்டிருக்கிறேன். குழவியாக இருக்கிறது என் உடல். நீங்கள் நீருக்குமேல் வாளுடன் வருவதைக் கண்டு அன்னையே, வேண்டாம் வேண்டாம் என கூச்சலிடுகிறேன். என் அலறல்கள் குமிழிகளாக எழுந்து வெடிக்கின்றன.”
“போதும்” என்று குந்தி சொன்னாள். அதை கேளாதவனாக கர்ணன் தொடர்ந்தான். “நீங்கள் கொடுஞ்சிரிப்புடன் வாளால் என்னை வெட்டினீர்கள். துண்டுதுண்டாக மாறி அந்தச் சுனையின் வெய்யநீரில் நான் மிதக்கிறேன். குருதிக்குமிழிகளுடன் அந்தச் சுனை கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.” குந்தி “போதும்” என உரக்கச் சொன்னாள். கர்ணன் திடுக்கிட்டவன்போல் அவளை நோக்கினான். அவள் மூச்சிரைக்க தலைகுனிந்தாள். தலையாடை சரிந்து முகத்தை மூடியது. அவன் “உங்களைப்பற்றிய கனவுகள், அரசி” என்றான். “பிறிதொருமுறை நீங்கள் ஒரு குடிலில் எவருடனோ பேசிக்கொண்டிருந்தீர்கள். நான் சோலையில் நடந்து அங்கே வந்தேன். குடிலுக்குள் இருந்து நீங்கள் என் காலடியோசை கேட்டு வெளிவந்தபோது முகம் வெளிறி அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தீர்கள். குடிலுக்குள்…”
குந்தி சீற்றத்துடன் “நிறுத்து, மூடா!” என்றாள். அவன் தன் சொற்களை தானே உணர்ந்தவனாக திகைத்து விழிமலைத்து நோக்கினான். அவளுடைய மூச்சிளைப்பின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. நெடுநேரம் என காலம் நீண்டது. அவள் மெல்ல மீண்டு “ஆம், நான் அஞ்சிக்கொண்டிருந்தேன்” என்றாள். “எல்லா அன்னையரும் மூத்த மகனை அஞ்சுகிறார்கள்” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொல்லிக்கொண்டாள். எழுந்து சென்றுவிட விழைபவள்போல் ஓர் அசைவு அவளில் உருவாகியது. அதை உள்ளத்தால் வென்று அமர்ந்து “நான் உன்னிடம் அரசியல் பேச வந்தேன்” என்றாள். அச்சொல்லால் அவனும் நிலைமீண்டு “சொல்க, அரசி!” என்றான்.
“நீ என் மைந்தன் என என்னால் எளிதில் நிறுவ முடியும். அச்சேடியின் மகள் மார்த்திகாவதியில் இன்னும் உயிருடன் இருக்கிறாள். உன்னை இளமையிலேயே அறிந்த என் மூத்தவர் வசுதேவர் மதுராவில் இருக்கிறார். நான் எந்த அவையிலும் நீ என் மகன் எனச் சொல்வேன். அதற்கான உளத்துணிவை அடைந்துவிட்டேன்” என்றாள் குந்தி. கர்ணன் விழிதூக்கி “சான்றுகள் தேவைப்படுமா என்ன?” என்றான். “ஆம், தேவையில்லை. எந்த அவையிலும் நீ வந்து நின்றாலே போதும். அவைதோறும் உன்னை சூதன்மகனென்றும் இழிபிறப்பாளனென்றும் சொன்ன அத்தனை பேரும் அதை உணர்ந்ததனால்தான் அவ்வாறு சொன்னார்கள். ஷத்ரியனென நீ அவை நின்றால் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களும் உனக்கு முடிதாழ்த்த வேண்டியிருக்குமென்று அறியாத எவரும் இங்கில்லை” என்றாள் குந்தி.
கர்ணன் கைவீசி விலக்கி “அதை இனி நாம் பேசவேண்டியதில்லை, அரசி” என்றான். “அன்னை என்று அழைக்கமாட்டாயா?” என்று அவள் கேட்டாள். “அறைக்குள் அவ்வாறு அழைத்தென்ன பயன்? இருளுக்குள், ஆழத்திற்குள் அவ்வாறு நூறு முறை அழைத்திருக்கிறேன். அதை நா ஒலிக்க வேண்டுமெனில் உலகு அதை ஏற்க வேண்டும்” என்றான் கர்ணன். “ஏற்க வைக்கிறேன், பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் கூடிய அவையில் எழுந்து சொல்கிறேன் நீ என் மைந்தன் என்று. நீ என் மைந்தனாவது என் ஒரு சொல்லில்தான் உள்ளது. நான் அச்சொல்லை உரைப்பேனா என்று இத்தனை ஆண்டுகள் அவர்கள் அஞ்சியிருந்தார்கள். அதை நான் உரைத்துவிட்டால் தெய்வங்களும் அதை மறுக்க இயலாது” என்றாள் குந்தி.
அவளை கூர்ந்து நோக்கியபடி “என் தந்தை எவரென கேட்பார்கள்” என்றான் கர்ணன். அவள் அவன் முகத்தில் இருந்த மெல்லிய விலக்கத்தை, அதன் விளைவான ஏளனத்தை கண்டுகொள்ளவில்லை. அவள் வேறெங்கோ உணர்ச்சிக் கொந்தளிப்புடன் இருந்தாள். “சூரியன்! விண்ணிலிருந்து கதிர்பெருக்கென இறங்கி சுனையொன்றில் எழுந்தவன். நான் நியோகமுறைப்படி உன்னை பெற்றேன். ஷத்ரிய நெறிப்படி அதற்கு அப்பால் எதுவும் கேட்கப்படலாகாது. யாதவப் பெண்ணிடம் அதையும் கேட்கலாகாது” என்று உரக்கச் சொன்னாள்.
கர்ணன் சட்டென்று சலிப்புகொண்டவன் ஆனான். கைவீசி அப்பேச்சை விலக்கி “இப்போது இந்தக் களத்தில் இதை நாம் ஏன் பேசுகிறோம்? நீங்கள் என்னை உங்கள் மைந்தன் என்று அறிவிக்கவேண்டிய பல அவைகள் கடந்துசென்றுவிட்டன, அரசி” என்றான். அவள் அவன் உணர்ச்சிகளையே அறியவில்லை. உள எழுச்சியுடன் “ஆம், நான் அறிவேன். ஒவ்வொரு அவையிலும் இவன் என் மைந்தன், இவன் பாண்டவர்களில் மூத்தோன் என்று எழுந்து கூச்சலிடும் கணத்திற்கு முந்தைய கணத்தில் என்னை அனைத்துச் சரடுகளாலும் கட்டி நிறுத்தி இக்கணம் வரை வந்துள்ளேன். அது என் விழைவால். அச்சத்தால். அதைத்தான் உன்னிடம் இப்போது சொன்னேன். அதைக் கடந்து என்னால் எழ இயலவில்லை. அது ஊழென்றோ தெய்வங்களின் விழைவென்றோ எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்” என்றாள்.
“ஆனால் இத்தருணத்தில் அதை நான் உரைக்காவிடில் ஒவ்வொன்றும் என் கைகளிலிருந்து அகலும். தீராப் பழி கொண்டு நான் இருளில் அணைவேன். அன்னையென இனி நான் இப்புவியில் ஏதேனும் செய்வதற்கு எஞ்சியிருக்கிறதென்றால் அது இது மட்டுமே. அதை உணர்ந்துதான் இங்கு வந்தேன்” என்று குந்தி சொன்னாள். கர்ணன் புன்னகையுடன் நோக்கி “சொல்லவந்ததை அடைந்துவிட்டீர்கள், அரசி” என்றான். குந்தியும் தன் உணர்வலைகளிலிருந்து மீண்டாள். அவன் விழிகளிலிருந்த நகைப்பின் ஒளியைக் கண்டு உள்ளம் நிலையழிந்தாலும் சொற்களை திரட்டிக்கொண்டாள். “கர்ணா, உன் கையால் என் மைந்தர் களத்தில் உயிர் துறப்பார்கள். நாளை புலர்ந்து போர் எழுகையில் என் மைந்தர் உன் முன் வெறும்பலியாடுகளென நிற்க வேண்டியிருக்கும். இந்த ஒரு நாள் போரிலேயே இதை அனைவரும் உணர்ந்துகொண்டிருப்பார்கள்” என்றாள்.
“ஆம், அதை உணர்ந்துகொண்ட ஒருவரால் நீங்கள் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்” என்று கர்ணன் சொன்னான். அவள் தயங்காமல் “உண்மை. சற்று முன் இளைய யாதவன் என்னை பார்க்க வந்தான். அர்ஜுனனின் நிலையை அறியும்பொருட்டு துயிலாமல் செய்திக்காக காத்திருந்தேன். நாழிகைக்கு ஒருமுறை புறா வந்து அவன் நிலை அவ்வண்ணமே தொடர்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவனே வந்திருப்பதை ஏவலன் வந்து சொன்னான். அவனே வந்துள்ளான் என்று கேட்டதும் முதல் எண்ணமாக என்னுள் எழுந்தது அமங்கலக் கணிப்பு ஒன்றுதான். என் உடல் நடுங்கியது. விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. இளைய யாதவன் துயர்கொண்டுள்ளானா என்றுதான் ஏவலனிடம் கேட்டேன். இல்லை அரசி, வழக்கம்போல்தான் இருக்கிறார் என்றான். எப்போதும் அவன் வழக்கம்போலத்தான் இருப்பான் என்னும் எண்ணம் வந்தது. என் மைந்தனின் பொருட்டு அவன் ஒருகணம்கூட துயர்கொள்ளமாட்டான் என எண்ணியதும் அவன்மேல் கடும் காழ்ப்பை அடைந்தேன். அவனைக் கண்டு நஞ்சு கக்க வேண்டுமென உள்ளம் எழுந்தது” என்றாள்.
“அரண்மனைக்குள் வர இளைய யாதவன் விழையவில்லை. அரண்மனைக்குள் இருந்து செய்தி வெளியேறிவிடும் என அஞ்சினான். அரண்மனைக்குப் பின்னாலிருந்த புரவிச்சாலையில் என்னை அழைத்து அங்கே நின்று என்னிடம் உரையாடினான். என் மைந்தரைக் காக்க எனக்கிருக்கும் இறுதி வழி இது ஒன்றே என்றான். ஆற்றவேண்டிய அனைத்தையும் வகுத்தளித்தான். இங்கு என்னுருவில் வந்திருப்பது அவன்தான் என்றே கொள்க! அவன் எதற்கும் அஞ்சாதவன் என அறிவேன். அவனே என்னைத் தேடிவந்து அதை சொன்னபோதுதான் என் மைந்தர் இருக்கும் நிலைமையை நான் நன்குணர்ந்தேன்” என்றாள் குந்தி.
மெல்லிய கசப்புடன் “அவருடைய சூழ்ச்சிக்கு அளவே இல்லை” என்றான் கர்ணன். குந்தி “எனக்கு நிகராகவே என் மைந்தர் மேல் பற்றுகொண்டவன் அவன். நேரில் அவனைப் பார்த்து பேசியபோது குரலும் விழிகளும் இயல்பாகவே இருப்பதைத்தான் உணர்ந்தேன். ஆனால் அவனிடமிருந்து ஆழ்ந்த துயர் ஒன்று எழுந்ததை என் அகம் உணர்ந்தது. அது என் உள்ளத்தை உருக்கியது. அவனை தந்தை என்றல்ல அன்னை என்றே எண்ணினேன். தன் திறனையும் அறிவையும் நம்பும் தருக்கை முற்றிலும் இழந்து வெறும் பேதை என்று அவன் நின்றிருப்பதாக உணர்ந்தேன்” என்றாள்.
எங்களுக்குள் ஒருபோதும் சொல்லென எடுத்திராத ஒன்று இது. உன் பெயரை அவன் என்னிடம் ஒருபோதும் சொன்னதில்லை. நானும் நாமறந்தும் உன்னைப்பற்றி அவனிடம் பேசியதில்லை. ஆனால் அவன் அறிவான் என நான் அறிந்திருந்தேன். அவன் தந்தைக்குத் தெரியும் என்பதனால் அல்ல. அவன் அறியாத ஒன்று இப்புவியில் இருக்காது என்பதனால். மைந்தன் என்றும் தெய்வமென்றும் ஓருருவே முன் நின்று விளையாடுகையில் அதனுடன் இணையாக விளையாட காதல்கொண்ட கன்னியரால்தான் இயலும். அன்னையர் உள்ளம் பேதலித்துவிடும். நானோ தேவகியோ யசோதையோ அவனுடன் அணுகியும் அகன்றும் நிலைக்காத ஊசலொன்றில்தான் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறோம்.
அவன் அப்போதுகூட என்னை விழிதொட்டுப் பேச நாணினான். இருளை நோக்கிக்கொண்டு என்னிடம் சொன்னான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி, இத்தருணத்தில் பாண்டவர்களைக் காக்க உங்களால்தான் இயலும். அவர்களை அழிக்கும் பேராற்றல் கொண்டவன் உங்கள் முதல் மைந்தன். அவனிடம் செல்க! அவன் தம்பியரின் உயிரை இரந்து பெறுக! அவன் கடமை அவர்களைக் காப்பது என்று உணர்த்துக! இத்தருணத்தில் வேறு வழியே இல்லை.” நான் அவன் சொற்களை அப்போது முழுமையாக உள்வாங்கவில்லை. “அவன் அளிக்காமல் உங்கள் மைந்தருக்கு வாழ்க்கையில்லை என்று சொல்லுங்கள், அத்தை” என்று அவன் சொன்னான்.
கால் தளர்ந்து நான் கொட்டடியின் சட்டத்தின்மேல் அமர்ந்துவிட்டேன். எங்கள் நடுவே காற்று குளிராக சுழன்றடித்துக்கொண்டிருந்தது. பலமுறை சொல்லெடுக்க நெஞ்சுகூட்டினேன் என்றாலும் என்னால் இயலவில்லை. பின்னர் ஒருகணத்தில் என் உள்ளத்தில் மிகப் பெரிய எடையின்மையை உணர்ந்தேன். அனைத்து வாயில்களையும் திறந்திட்டு வெட்டவெளியில் நின்றிருப்பதுபோல. எவரிடமேனும் அவ்வாறு எல்லையழிந்து நின்றிருப்பேன் எனில் அது அவனிடம் அல்லவா? இப்புவியில் என்னை அணுக்கமாக அறிந்த பிறன் யார்?
அவனை நானறியேன். அவனை எவரும் அறியமாட்டார். ஆனால் அவன் அனைவரையும் அறிவான். அனைவரையும் அறிந்த ஒருவனால் எவர்மேலும் சினமோ ஏளனமோ கொள்ள இயலாது. எவரையும் அவர்களின் பிழைகளின் பொருட்டோ தீமைகளின் பொருட்டோ பழிக்க இயலாது. அவன் காலடியில் விழுந்துவிடவேண்டும் என எண்ணினேன். அவனைத் தழுவி கண்ணீர்விடவேண்டுமென உளமெழுந்தேன். ஆனால் நான் அன்னை. அவன் என் முன் மழலை பேசிய மைந்தன். நெஞ்சைப் பற்றியபடி உடல்குறுக்கி அமர்ந்திருப்பதொன்றே என்னால் இயன்றது.
அவன் என்னை நோக்காமல் இருளில் விழி செலுத்தியபடி “அரசி, வருநாள் போரில் பாண்டவர் இறப்பாரெனில் இப்புவியில் எனக்கும் இயற்றுவதற்கு ஒன்றும் எஞ்சியிருக்காது” என்றான். “இவ்விரவில் நான் உணர்ந்தேன், என் தோழனின் உயிரன்றி இப்புவியில் என்னை நிறுத்தும் விசை பிறிதொன்றில்லை என்று. அது உங்கள் கையில் உள்ளது. இதற்கு மேலும் ஆணவம் கொண்டு ஒழிந்தீர்கள் எனில் உங்களை நீங்களே நீரும் அன்னமும் வந்து சேரா காரிருளில் செலுத்துகிறீர்கள். உங்கள் மைந்தரை நிறைவுறாத உயிர்களென மூச்சுவெளியில் அலைய வைக்கிறீர்கள்” என்றான்.
உணர்வுகளில்லாத குரல். ஆனால் நான் கதறி அழுதபடி அங்கேயே அமர்ந்துவிட்டேன். “இல்லை மைந்தா, இதோ செல்கிறேன். சென்று அவன் கால்களில் விழுகிறேன் என் மைந்தனின் உயிரை அளிக்கும்படி கோருகிறேன்” என்றேன். அங்கிருந்தே கிளம்பி நேரடியாகவே இங்கே வந்தேன். உன்னைக் கண்டு என் கோரிக்கையை முன்வைக்க. இதில் எந்தக் கரவும் நுணுக்கமும் இல்லை. இது ஓர் அன்னையின் எளிய விண்ணப்பம் மட்டுமே.
“கோர உங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது, அரசி. அங்கன் என்றோ, அரசன் என்றோ அல்ல, உங்கள் மைந்தனென்று சொல்லி அதை சொல்லுங்கள்” என்றான் கர்ணன்.