கார்கடல் - 23

ele1அரவான் சொன்னான். எவரும் எதிர்நிற்கவியலாத வெய்யோன் அங்கு செருகளத்தில் திகழ்வதை நான் காண்கிறேன். அவன் ஒளிமிக்க தேரை நேர்விழிகொண்டு நோக்கும் எவரும் அங்கில்லை. என் குடியினரே அறிக! அவன் அங்கே மாநாகன் என எழுந்து நின்றிருக்கிறான். இப்புவியில் இன்றுவரை வாழ்ந்த நாகர்கள் அனைவரும் நஞ்செனக் கொண்ட வஞ்சம் அனைத்தும் அவனில் திரள்கின்றது. அதன் முன் நின்றிருக்க இயலாமல் அனல்பட்ட தளிர்களெனச் சுருள்கின்றன அனைத்தும். அவர்களின் படைக்கலங்கள், அவற்றை ஏந்திய வஞ்சினங்கள், அவற்றை ஏந்திய மொழி, அம்மொழியை ஏந்திய நினைவுகள், அந்நினைவில் வாழும் வேள்விகள்.

ஆயிரம் யுகங்களின் அவிப்பயன் அவர்களை அங்கே காக்கவில்லை. என் குடியினரே, அந்த அவியுண்டு பெருகிய தேவர்கள் அவர்களை துணைக்கவில்லை. அந்த தேவர்களுக்குத் தலைவன் தன் மைந்தன் அம்பால் அறையுண்டு விழக்கண்டு விண்ணிலிருந்து பதைக்கிறான். அவன் ஊர்ந்த வெண்ணிற யானை துதிக்கை தூக்கி பிளிறுகிறது. அவனைச் சூழ்ந்து நின்று கூச்சலிடுகிறார்கள் தேவர்கள். விண்ணிலிருந்து அகம் துவள்கிறார்கள் முனிவர்கள். அவர்களின் தெய்வங்களெல்லாம் செயலிழந்து தங்கள் பீடங்களில் ஒட்டியிருக்கின்றன. நாகங்களின் நாளெழுந்தது. ஆழியனின் அரவு ஆயிரம்தலை சுருக்கி அங்கே மீள விழைந்தது. அனல்மேனியனின் அணி வழிந்திறங்கத் தலைப்பட்டது. அன்னையின் மேகலை தவழ்ந்திழிந்தது. இங்கு இங்கு என நெளிய, நான் நான் என தருக்க நாகங்களைப்போல் வடிவுகொண்டமைந்தவை எவை?

குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் மண்ணுக்கு அடியில் பல்லாயிரம் வளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பெருகி நிறைந்திருந்தன. அவற்றின் ஆழங்களில் நீண்ட குகைப்பாதைகள் இறங்கிச்சென்று பாதாள இருளில் முடிந்தன. கரிய நீர் ஊறிப்பெருகி எழுவதுபோல் அங்கிருந்து நாகங்கள் வந்தபடியே இருந்தன. அவை போர்க்களத்தில் ஓசையிடாது நெளிந்து மேலெழுந்தன. மின்னும் விழிகளுடன் படம் விரித்து நாபறக்க சீறிச் சொடுக்கி தலைதிருப்பி அங்கு நிகழ்வனவற்றை நோக்கின. வாலை ஓங்கி அறைந்து அவ்விசையால் எழுந்து பறந்து அக்காற்றை நிரப்பின. தங்களுக்கு உகந்த அம்புகளிலேறி அமர்ந்து சென்று எதிரிகளை தாக்கின. ஒன்றுடன் ஒன்று வாலறைந்து சுழன்று கவ்வி நிலத்தில் விழுந்து துள்ளித் துடித்துச் சுழன்றன. போர்க்களமெங்கும் நிகழ்ந்துகொண்டிருந்தது நாகங்களின் நெளிவுக்கொந்தளிப்பு.

ஆர்யகனின் குலத்திலமைந்த பல்லாயிரம் நாகங்கள் பாண்டவர் தரப்பிலும் இருந்தன. அவற்றுக்கு நூறுமடங்கு நாகங்கள் கௌரவத் தரப்பிலெழுந்தன. அவை ஒன்றையொன்று கடித்து ஒற்றைப் பந்தென ஆகி துள்ளியுருண்டன. வானிலிருந்து பார்த்த மூதாதையர் குருக்ஷேத்ரத்தில் கரிய நீரலைகளின் நெளிவு நிறைந்திருப்பதைக் கண்டு அங்கு பெருவெள்ளம் எழுந்ததோ என்று ஐயுற்றனர். பின்னர் மேலும் விழி கூர்ந்து அவை நாகங்களின் உடல்களாலான பெரும்பரப்பு என்று தெளிந்தனர். நாகங்களின் நச்சுத்துளிகள் சிதறி மண்ணில் விழுந்தன. அங்கே மண் வெந்து புகைந்து ஆழ்துளைகளாக குழிந்து இறங்கியது. மென்சேற்றில் கூழாங்கற்கள்போல் அவை புதைவுகொண்டன. அத்துளைகளால் குருக்ஷேத்ரக் குருதிநிலம் சல்லடை போலாயிற்று.

மேலும் மேலுமென மண்ணுக்கடியிலிருந்து நாகங்கள் எழுந்து வந்தன. கர்ணன் போரிடும்போது அவனைச் சூழ்ந்து அவை பெருகியெழுந்து முகில்படலம்போல் நின்றன. அவன் எய்த ஒவ்வொரு அம்புடனும் நூறு நாகங்கள் உடன் பறந்தன. உயிர்குடித்து விம்மி உடல் பெருத்து தங்களில் தாங்களே திளைத்து கொண்டாடின. அங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது நாகங்களின் பெரும்போர். அன்றி நாகங்களின் விழவுக் களியாட்டு. நாகங்களைப்போல் தங்களைத் தாங்களே உண்பவை வேறில்லை. தங்களைத் தாங்களே தழுவிக்கொள்பவையும் இல்லை. நாகங்கள் கொன்றன. வென்று நெளிந்தன. சீறித் தருக்கின. அஞ்சிப் பதுங்கின. சீற்றமே மொழியெனக் கொண்டவை. சினமே நோக்கெனக் கொண்டவை. அனலையே நாவெனக் கொண்டவை. நஞ்சென நெஞ்சம் கொண்டவை. நாகங்களை வெல்லவும் நாகங்களே எழவேண்டும். கூட்டரே, நாகங்கள் முழுதுற வெல்லவும் நாகங்களே தேவை.

ele1அந்தியில் போர்முடிவை அறிவித்து முரசுகளின் முழக்கு எழுந்தபோது நாகங்கள் மேலும் வெறிகொண்டு என்ன செய்வதென்றறியாமல் தங்களைத் தாங்களே முடிச்சிட்டு வால்சொடுக்கி தாங்களே எழுந்தமைந்து களம் நுரைத்து கொப்பளித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு படைவீரரும் சோர்ந்து வில்லும் வாளும் தாழ்த்தி தள்ளாடி நின்றபோது அவை அவர்களின் கால்களில் சுற்றிக்கொண்டு நிலையழியச் செய்தன. அவர்கள் பெருமூச்சுடன் விண் நோக்கி நிமிர்ந்தபோது சுழன்று உடலைச் சுற்றிக்கொண்டு இறுக்கி நெஞ்சுடையும் வலியை அளித்தன. அவர்கள் தனிமையும் துயரும் கொண்டு நிலம்பார்த்து தலைகுனிந்தபோது தரையெங்கும் நாகங்களை நிழலசைவெனக் கண்டனர். அஞ்சி மூடிய கண்களுக்குள் கரிய அலைகளென ஓடிய நாகங்களைக் கண்டு அவை என்னவென்றறியாது ஒருவரோடொருவர் தோள்பற்றிக்கொண்டனர். கால்களை இழுத்து வைத்து குருதி கொட்டும் புண்களை கைகளால் பொத்தியபடி அவர்கள் தங்கள் பாடிவீட்டுக்குத் திரும்பியபோது நிழல்கள் நீண்டு நாகங்களென அவர்களைத் தொடர்ந்தன.

நிலைமீண்டுகொண்டிருந்த தன் படைவிரிவின் நடுவே யானையின் மேல் பாய்ந்தேறி நின்ற கௌரவர் தலைவனாகிய துரியோதனன் இரு கைகளையும் விரித்து “வெற்றி! கௌரவர்களுக்கு வெற்றி! இப்போரில் நாம் வென்றோம்! நாம் மீண்டெழுந்துவிட்டோம்!” என்று கூவினான். “இதோ அர்ஜுனன் வீழ்ந்தான். பாண்டவர் மூவர் புண்பட்டுள்ளனர். அவர்களின் படைகள் சிதறி அழிந்துள்ளன. அவர்களிடம் எஞ்சுவது ஏதுமில்லை இனி” என அவன் கூவ அவன் படையினர் ஆர்ப்பரித்தனர். “இதுவரை நிகழ்ந்தது அல்ல இனி எழுவது. அவ்வீணர் மாநாகத்தின் உடலை மிதித்து அதை படமெடுக்க வைத்தனர். இன்று அதன் சீறலைக் கண்டனர். இனி அதன் நஞ்சை அவர்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள். அறிக, முற்றழியவிருக்கிறார்கள்!” அவன் சொற்களை முழவுகளும் கொம்புகளும் பெருக்கிப் பரப்பின. அங்கே பெருகியிருந்த கௌரவர்கள் வேல்களையும் வாள்களையும் விற்களையும் வானோக்கித் தூக்கி பெருங்குரலெழுப்பினர்.

கைகளையும் கேடயங்களையும் தட்டித் தாளமிட்டும் கூவி ஆர்ப்பரித்து சிறுநடனமிட்டும் கௌரவர் தங்கள் பாடிவீடுகளை நோக்கி நிரைவகுத்தனர். எங்கும் சிரிப்புகளும் வாழ்த்தொலிகளும் உளம்கிளர்ந்த வசைமொழிகளும் ஒலித்தன. “இன்றொடு முடிந்தது போர்! நாளை நிகழ்வது எரியாட்டு!” என ஒரு வீரன் தேர்க்கூரைமேல் ஏறிநின்று கூச்சலிட்டான். “முடிந்தது போர்! முடிந்தது போர்!” என்று கௌரவர்கள் ஏற்றொலித்தனர். “இனி சொல்லில்லை. இனி கள்மட்டுமே!” என ஒரு வீரன் கூவ “கள்! கள்!” என பல்லாயிரம் தொண்டைகள் கூச்சலிட்டன. அந்த உளநிலை மிக விரைவிலேயே சிரிப்பாகவும் கொண்டாட்டமாகவும் மாறியது. அது முதிர்ந்து தற்பகடியாக உருக்கொண்டது. “தலையை வெட்டிக் கொடுத்து காலை மீட்டிருக்கிறோம்! வெற்றி! கௌரவர்களுக்கு வெற்றி!” என்று ஒருவன் மொந்தையில் நிறைந்த கள்ளை தலைக்குமேல் தூக்கி கூச்சலிட அனைவரும் கைகளைத் தூக்கி கூவி நகைத்தனர்.

“கள் எழுக! கள்தெய்வம் கொலுக் கொள்க!” என்று படை முழங்கியது. “கள்! கள்! கள்!” என திரள் கொந்தளித்தது. வழக்கமாக படைகள் அமைந்த பின்னரே கள்வண்டிகள் கிளம்பும். அன்று படையினரில் ஒரு பிரிவினர் சென்று கள்வண்டிகளை கைப்பற்றி தாங்களே இழுத்துக்கொண்டு வந்தனர். அவர்களே கள்ளை அள்ளி அனைவருக்கும் ஊற்றினர். தங்கள் நிலைகளுக்குச் சென்று அமையாமையால் வீரர்கள் தலைக்கவசங்களில் கள்ளை வாங்கினர். அதை குடித்தபோது அவர்களின் உடலெங்கும் கள் வழிந்தது. கள்ளை மாறிமாறி ஊற்றிக்கொண்டார்கள். கள் வழியும் உடலுடன் ஒருவரை ஒருவர் தாக்கி களிப்போரிட்டனர். சற்றுநேரத்தில் கள்ளில் புழுத்தவை என அங்கே மானுட உடல்கள் கட்டிப்புரண்டு கொப்பளித்துக்கொண்டிருந்தன.

பாண்டவர்கள் களம் முழுக்க செத்துக் குவிந்திருந்த தங்கள் தோழர்களைப் பார்த்து சலிப்பும் துயரும் கொண்டவர்களாக தனித்தனியாக தங்கள் பாடிவீட்டை நோக்கி நடந்தனர். அர்ஜுனன் வீழ்ந்துவிட்டான் என்பதையே அவர்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் எவரும் அதை சொல்லாக்கவில்லை. அவர்கள் நடுவே சென்ற தேரில் யுதிஷ்டிரர் அர்ஜுனன் கிடந்த மருத்துவநிலை நோக்கி சென்றார். “அரசர் செல்கிறார். அவர் முகம் துயர்கொண்டிருக்கிறது” என்றான் ஒரு வீரன். “அவர் முகம் என்றும் துயருடன்தான் இருக்கிறது” என்றான் இன்னொருவன். “மருத்துவநிலையிலிருந்து என்ன செய்தி வந்துள்ளது?” என்று ஒருவன் கேட்டான். “நாம் எச்செய்தியையும் அறியவியலாது. முரசுகள் முழங்கும் வரை நம் அறிவுக்கு அவர் நலமுடன் இருப்பவரே” என்றார் முதிய வீரர் ஒருவர்.

யுதிஷ்டிரர் மருத்துவநிலையை அடைந்து தேரிலிருந்து இறங்கியதும் அங்கே நின்றிருந்த ஏவலர் இருவர் வந்து வணங்கினர். அவர் ஒன்றும் சொல்லாமல் தளர்ந்த கால்களும் தொய்ந்த தோள்களுமாக மருத்துவநிலை நோக்கி நடந்தார். அவர் வந்ததை அறிந்து உள்ளிருந்து வந்த முதிய மருத்துவரான கர்வடர் தலைவணங்கி “நெஞ்சிலும் இடையிலும் நிலையில் வலுவான தாக்குதல் பட்டுள்ளது, அரசே. குருதி ஒழிந்துள்ளமையால் இன்னும் தன்னினைவு மீளவில்லை. முயன்றுகொண்டிருக்கிறோம்” என்றார். யுதிஷ்டிரர் “அவன் உயிருக்கு…” என்று சொல்லெடுத்து அச்சொல் தன் செவியில் கேட்கவே தயங்கி நாவை நிறுத்தினார். “இப்போது எவராலும் எதுவும் சொல்ல இயலாது. உடல் உயிரை தக்கவைக்க போராடிக்கொண்டிருக்கிறது. நன்று நிகழுமென்றே எண்ணுவோம்” என்றார் கர்வடர்.

யுதிஷ்டிரர் மேலும் பேச எழுந்த நாவை அடக்கி தலையசைத்தார். கர்வடர் உள்ளே செல்ல அவர் தளர்ந்து மெல்ல பின்னடைந்து சுவரோரமாக போடப்பட்டிருந்த மரப்பெட்டிமேல் அமர்ந்தார். அவரை சூழ்ந்தவர்கள்போல ஏவலர் நின்றனர். மேலும் மேலும் புண்பட்ட உடல்கள் மருத்துவநிலை நோக்கி வந்துகொண்டிருந்தன. களம்பட்ட நிஷாத குல இளவரசர்களின் தந்தையர் விழிநீர் வழிய அவ்வண்டிகளுக்குப் பின்னால் வந்தனர். குருதிமணமும் கந்தகநீரின் மணமும் கலந்து காற்று அங்கேயே தங்கி நின்றது. அப்பால் பொதுவீரர்களுக்கான மருத்துவநிலையிலிருந்து முனகல்களும் அலறல்களும் கலந்த கூட்டோசை எழுந்து காற்றுச்சுழலுக்கேற்ப வலுத்தும் தணிந்தும் ஒலித்தது.

குளம்படியோசை கேட்டு யுதிஷ்டிரர் திரும்பி நோக்கினார். புரவியில் வந்து இறங்கிய திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரை அணுகி தலைவணங்கி “பேரழிவு! இப்போர் தொடங்கிய பின்னர் இன்றுபோல் அழிவு என்றுமில்லை. பீஷ்மர் உருவாக்கிய அழிவுக்கு ஒரு படி மேல்” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அதை எவரும் சொல்லவேண்டியதில்லை. விழிகளே காட்டின” என்றார். “அவர்களின் சூழ்கையை உடைத்துவிட்டோம். இன்று வெல்லும்பொருட்டு அவர்கள் இட்டிருந்த திட்டமும் தோல்வியடைந்தது. ஆனால் அங்கர் தனியொருவராக நின்று நம்மை அழித்தார்” என்றான் திருஷ்டத்யும்னன். “அவர் வெல்லற்கரியவர் என்று அறிவோம். ஆனாலும் நம்மில் எவரும் முன்னிற்கவியலாதென்பது…” யுதிஷ்டிரர் கைகாட்டி நிறுத்தி “அவன் புகழை பாடவேண்டியதில்லை” என்றார்.

திருஷ்டத்யும்னன் குரலைத் தாழ்த்தி “நான் சொல்வது அதுவல்ல. அவர் ஆற்றலைக் கருத்தில்கொண்டே நாம் இனி படைசூழ்கை அமைக்கவேண்டும் என்றுதான்” என்றான். சினத்துடன் முகம்தூக்கிய யுதிஷ்டிரர் “எந்தப் படைசூழ்கை? சொல்க! எந்தப் படைசூழ்கை? இன்று நாம் வகுத்த படைசூழ்கை என்ன? நம் வீரர்கள் அனைவருமே அவன் ஒருவனை மட்டும் சூழ்ந்து நின்று போரிட்டனர். நம்மில் எவராலும் அரைநாழிகைப் பொழுதுகூட அவன்முன் நிற்கவியலவில்லை” என்றார். திருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “நாம் செய்வதற்கொன்றே உள்ளது, அவன்முன் சென்று தலைகொடுப்பது. பிறிதொன்றுமில்லை. வீரர்கள் என சொல்லி நம்முடன் இருந்தவர்கள் அனைவரும் எத்தனை வீணர்கள் என இன்று அறிந்தேன். மாவீரன் என சூதர்களால் புகழப்பட்டவன் அதோ அம்புபட்டு உயிர்பிரியக் காத்திருக்கிறான். பிற மாவீரர் அவனைப்போலன்றி உயிருடன் எஞ்சியிருக்கிறீர்கள்.”

திருஷ்டத்யும்னன் சொல்லெடுக்காமல் கைகளை மார்பில் கட்டியபடி விலகி நின்றான். “நாம் தோற்றுவிட்டோம். இனி நம்மிடம் எஞ்சுவது ஏதுமில்லை” என்றார் யுதிஷ்டிரர். துயருடன் தலையை அசைத்தபடி “நாம் தருக்கியதெல்லாம் வீண். இந்தத் துயர் நமக்குத் தேவை. பீஷ்ம பிதாமகரை களத்தில் வீழ்த்தியமைக்கு நமக்கு முன்னோர் அளிக்கும் தண்டனை இது” என்றார். திருஷ்டத்யும்னன் முகத்தில் சினம் எழுந்தாலும் அவன் ஒன்றும் சொல்லவில்லை. “நாளை என்ன செய்யவிருக்கிறோம்? சொல்க! நாளை நம் திட்டம் என்ன?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். திருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லவில்லை. சலிப்புடன் கையை வீசி “நாம் செய்யக்கூடுவது ஒன்றுமில்லை. சொல்லாடலாம். சொல்லிச்சொல்லி எதையாவது மாற்றமுடியுமா என்று பார்க்கலாம்” என்றார். “சொல்லிச் சொல்லி அவனை எழுப்பி அமரச்செய்ய முடியுமா என்று பாருங்கள்” என உள்ளே கைசுட்டினார்.

திருஷ்டத்யும்னன் பொறுமையிழந்து பேச முற்பட்டபோது குளம்படிகள் ஒலித்தன. சாத்யகி புரவியில் வந்து இறங்கி அணுகிவந்து யுதிஷ்டிரரிடம் தலைவணங்கி “எப்படி இருக்கிறார்?” என்றான். யுதிஷ்டிரர் ஒன்றும் சொல்லாதது கண்டு புரிந்துகொண்டு திருஷ்டத்யும்னனிடம் என “எவராலும் அவரை தடுத்து நிறுத்த இயலவில்லை. இன்று நிகழ்ந்தது போரே அல்ல, வெறும் கொலையாட்டு” என்றான். பேச்சை மாற்றும்பொருட்டு “இளைய யாதவர் எங்கே?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “அவர் இளைய அரசர்கள் நகுலரையும் சகதேவரையும் பார்க்கச் சென்றிருக்கிறார்” என்று சாத்யகி சொன்னான். “அவர்கள் நலம்பெற்றுவிடுவார்கள். சிறிய புண்கள்தான்.” யுதிஷ்டிரர் உள்ளத்திலெழுந்த வினாவை இயல்பாகவே திருஷ்டத்யும்னன் சொல்லாக்கினான். “இங்கு அல்லவா அவர் வரவேண்டும்?”

அதை சொல்லெனக் கேட்டதும் யுதிஷ்டிரர் முகத்தில் சீற்றமெழுந்தது. அதைக் கண்ட சாத்யகி “ஆம், ஆனால் அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது போலும்” என்றான். “அவர்தான் தேர் தெளித்தவர். இளைய பாண்டவரைத் தூக்கி மருத்துவ வண்டியில் அவரே ஏற்றினார். அவர் அறிந்திருப்பார், பெரிதாக ஏதுமில்லை என்று எண்ணியிருக்கலாம்.” யுதிஷ்டிரர் “அதை சொல்லவேண்டியவர் மருத்துவர்” என்றார். சாத்யகி ஒன்றும் சொல்லாமல் சற்று கீழிறங்கி முற்றத்தில் நின்றான். இளம் மருத்துவன் ஒருவன் வெளியே வர யுதிஷ்டிரர் எழுந்து “என்ன செய்கிறார்கள்? விழிப்பு கண்டுள்ளதா?” என்றார். “இல்லை” என்றான் அவன். “நரம்புகளும் சிதைந்துள்ளன. உடலின் அனல் அணைந்துகொண்டே இருக்கிறது.”

யுதிஷ்டிரர் வெறித்து நோக்கி நிற்க “உடலை இயக்கும் ஏழு அனல்களில் மூன்று மட்டுமே வெம்மையுணர்த்துகிறது. மூலாதாரமும் சுவாதிட்டானமும் மணிபூரகமும் இயல்கையில் இருப்பும் பசியும் மூச்சும் எஞ்சியிருக்கிறது என்று பொருள். அதற்குமேல் நினைப்பும் சொல்லும் தன்னிலையும் மெய்யுணர்வும் மறைந்துள்ளது” என்றான். அரசரிடம் பேசக்கிடைத்த வாய்ப்பை அவன் மிகையாக பயன்படுத்துகிறான் என உணர்ந்த திருஷ்டத்யும்னன் “ம்” என்றான். அதிலிருந்த உட்குறிப்பை புரிந்துகொள்ளாமல் மருத்துவன் “உண்மையில் ஒரே அனல் என்பது சகஸ்ரத்தில் வாழும் மெய்யுணர்வே. அதிலிருந்தே ஆஞ்ஞையும் விசுத்தியும் அனாகதமும் பற்றிக்கொள்கின்றன. அவை எரியும் நெய்யென்றாவதே முதல் மூன்றின் பணி. மூன்று விறகும் நான்கு எரியும் என அதை நூல்கள் சொல்கின்றன” என்றான்.

“நாங்கள் இதற்குச் செய்யவேண்டிய ஏதேனும் உண்டா? வேள்விகள், பூசனைகள் எதை வேண்டுமென்றாலும் செய்கிறோம்… எவ்வண்ணமேனும் சகஸ்ரம் எழுந்தாகவேண்டும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “மானுடர் அதில் செய்வதற்கொன்றுமில்லை. அவ்வுடலில் தன்னை அமைத்துள்ள உடலிலி அதை எண்ண வேண்டும். அதற்கு ஊழின் நெறியும் தெய்வங்களின் ஆணையும் வேண்டும்” என்ற மருத்துவன் “நாம் வேண்டிக்கொள்ளலாம். எவ்வகையில் வேண்டிக்கொண்டாலும் அது நன்றே” என்றான். “நீர் செல்லலாம்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். அக்குரலில் இருந்த கடுமையால் திகைத்து பின் தலைவணங்கி அவன் சென்றான். “அவன் நெற்றியில் சகஸ்ரம் மலரவேண்டும். அவன் யோகி. அவன் உடலில் அது ஒருபோதும் அணையாது. அவன் மீள்வான். ஐயமே இல்லை, அவன் மீள்வான்” என்றார் யுதிஷ்டிரர்.

பீமனும் சுதசோமனும் இரு புரவிகளில் வந்திறங்கினர். பீமன் வந்தபடியே “எவ்வண்ணம் இருக்கிறான்?” என்றான். திருஷ்டத்யும்னன் “நலம்பெறக்கூடும் என்றனர்” என்றான். “ஆம், நலம்பெறுவான். அவன் வருகை நோக்கம் நிறைவேறாது செல்லமாட்டான். அவன் அவர்களை முற்றழிப்பான்” என்றான் பீமன். “மந்தா, வீண்சொற்கள் வேண்டாம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். சாத்யகி “சர்வதன் புண்பட்டுவிட்டான் என்றார்கள்” என்றான். பீமன் “நினைவு மீளவில்லை. ஆனால் நாளை விழித்தெழ வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர் சொன்னார்கள். அங்கிருந்துதான் இங்கு வருகிறேன்” என்றான்.

சுதசோமன் தன் தோளிலும் இடையிலும் பெரிய கட்டுகளை இட்டிருந்தான். திருஷ்டத்யும்னன் “இவனும் படுக்கையில் இருக்கவேண்டுமென்று தோன்றுகிறது” என்றான். “ஆம், இரு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்றுதான் மருத்துவர் சொன்னார்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் அவனிடம் “மைந்தா, நீ சென்று மருத்துவநிலையில் படுத்துக்கொள். இங்கு உன் இளைய தந்தை விரைவில் மீண்டெழுவான். நாளை களம் நிற்பான்” என்றார். தலையசைத்த பின் சுதசோமன் சற்றே விலகி தனித்து நின்றான்.

பீமன் திருஷ்டத்யும்னனிடம் “நாளைய போர்சூழ்கையை வகுக்கையில் அனைத்தும் அவனை மையம் கொண்டே அமையட்டும்” என்றான். சாத்யகி “இன்று இயல்பாகவே அவ்வாறு அமைந்துவிட்டது” என்றான். “ஒருவேளை நாளை இளையவன் களத்திற்கு எழாமலிருந்தால்…” என்று யுதிஷ்டிரர் சொல்ல தன் தொடையில் ஓங்கி அறைந்து வெடிப்போசை எழுப்பிய பீமன் “எழுவான்! அவன் எழுந்தாக வேண்டும்! அவன் எழுவான்!” என்றான். யுதிஷ்டிரர் நம்பிக்கை இழந்தவர்போல தோளை அசைத்து இன்னொரு பக்கம் திரும்பிக்கொண்டார்.

திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் வந்து நோக்கினால் நன்று. அவர் குரலை இளையவரின் உச்சித்தாமரை அறியும்” என்றான். பீமன் “அவர் இங்கிருப்பார் என்று நான் எண்ணினேன்” என்றான். சீற்றத்துடன் திரும்பிய யுதிஷ்டிரர் “ஏன் அவன் என்ன மருத்துவனா? இங்கிருந்து அவன் என்ன செய்யப்போகிறான்? அவன் தன் பணியை ஆற்றட்டும். இங்கு நாமே போதும்” என்றார். “இளையவரை எழ வைக்க அவரால் இயலும். அவர் அழைத்தால் போதும்” என்று சாத்யகி சொன்னான். பீமன் “அவர் ஆணையிட்டால் அவன் எழுந்துவிடக்கூடும்” என்றான். “பொருளற்ற பேச்சு! நம்மனைவருக்கும் தெரியும் என்ன நிலையிலிருக்கிறான் இளையோன் என்று” என்றார் யுதிஷ்டிரர்.

தேர் வந்துநிற்க அதிலிருந்து சிகண்டி இறங்கி அருகே வந்தார். “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். சிகண்டி தலைவணங்கி “நான் தெற்குக் காட்டிற்கு சென்றுகொண்டிருக்கிறேன். இன்றைய போரில் நம் படையினர் பெரும்பகுதியினர் அழிந்துவிட்டனர். பிணங்களை சிதைக்கும், மண்ணுக்கும் அனுப்பி முடிக்கும்போது பொழுது விடிந்திருக்கும்” என்றார். யுதிஷ்டிரர் வெறுமனே பேசுவதற்காகவே அவ்வினாவை கேட்டார். அந்த மறுமொழியால் சலிப்புற்று “அதையே மீளமீளச் சொல்லவேண்டியதில்லை” என்றார். “நான் வந்தது படைவீரர்களை விண்ணனுப்பும் சடங்குக்கு வழக்கம்போல் அரசர் இன்று வருவாரா என்று கேட்கத்தான்” என்றார் சிகண்டி. “இன்று நான் வரப்போவதில்லை. என்னால் இயலாது” என்றார் யுதிஷ்டிரர். சிகண்டி “அச்சடங்கை இங்கேயே நிகழ்த்தலாம்” என்றார். “என்னால் இயலாது. இப்போது என்னால் எதுவும் இயலாது” என யுதிஷ்டிரர் கூவினார்.

சிகண்டியின் விழிகளில் சினம் எழுந்து மறைந்தது. “அரசே, நீத்தோரை அரசச்சுடர் கொண்டு விண்ணுக்கு அனுப்புகிறோம். அவர்களின் பெற்றோரின் கைகள் என இங்கே இலங்குவது உங்கள் கைகளே” என்றார். யுதிஷ்டிரர் “என் உள்ளமே சிதையாக எரிகிறது. இத்தருணத்தில் நான் அச்சடங்கைச் செய்தால்…” என்றபின் “என் உள்ளம் கொள்ளும் கற்பனைகளை என்னால் தாளவியலாது, பாஞ்சாலரே” என்றார். சிகண்டி தணிந்து மென்குரலில் “எனில் நீங்கள் ஒரு சுளுந்தில் அனல் தொட்டு அளியுங்கள். அதையே அவர்களின் சிதைநெருப்பாக வைத்து விண்ணேற்றுவேன்” என்று சொல்லி சிறிய சுளுந்தொன்றை எடுத்து யுதிஷ்டிரரிடம் நீட்டினார். யுதிஷ்டிரர் அருகிலிருந்த பந்தத்தில் கொளுத்தி அதை அளிக்க தலைவணங்கி பெற்றுக்கொண்டு படியில் இறங்கினார்.

“இளைய யாதவரை வரும் வழியில் பார்த்தீர்களா?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். சிகண்டி திரும்பி நோக்கி “அவர் நகுல சகதேவரை பார்த்துவிட்டு தன் குடிலுக்கு திரும்புகிறார்” என்றார். “தன் குடிலுக்கா?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். சிகண்டி “ஆம், அங்கு உடற்பொடி நீக்கி ஓய்வெடுக்கப் போகிறார். ஏவலர் செல்வதைக் கண்டேன்” என்றார். யுதிஷ்டிரர் பீமனை பார்த்த பின் வெறுமனே தலையசைத்தார். சிகண்டி சுடருடன் இருண்ட முற்றத்தில் இறங்கியபோது யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். சுடர் ஒழுகிச்செல்வதை நோக்கி நின்ற திருஷ்டத்யும்னன் பெருமூச்சுவிட்டான்.

சாத்யகி “நான் வருகிறேன்” என்று யுதிஷ்டிரரை வணங்கினான். “இங்கே நிகழ்வனவற்றை அங்கு சென்று சொல்லவேண்டியதில்லை. அவரை அழைக்கவேண்டியதுமில்லை” என்று பீமன் சொன்னான். “அவர் அறியாதது ஏதுமில்லை. அவர் தன் வழியில் செல்லட்டும்.” சாத்யகி “ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்றான். யுதிஷ்டிரர் “அவன் இங்கு வந்தாகவேண்டும். இளையோனை அவனால் மீட்கமுடியும்” என்றார். “மூத்தவரே, நாம் முன்னரே முற்றடிபணிந்துவிட்டோம். இனி அவரிடம் நாம் எதை கோரினாலும் பிழையே” என்றான் பீமன்.