கார்கடல் - 20
நோக்குமேடையில் கைகளை நெஞ்சோடு சேர்த்து, வலச்செவியை முன்கொண்டுவந்து, உடற்தசைகள் இழுபட்டு நிற்க தன்முன் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரிடம் சஞ்சயன் சொன்னான். “அரசே, நமது படைகளின் திட்டம் இங்கிருந்து நோக்குகையில் தெளிவாகவே தெரிகிறது. கௌரவப் படை முதல்வராகிய கர்ணன் தன் இரு போர்த்துணைவர்களுடன், தனக்குப் பின்னால் நீந்தும் படகின் பின்னால் விரியும் அலை எனத் தொடரும் கௌரவர்களின் தேர்ந்த விற்படையுடன் எதிரே பாண்டவர் படையின் முகப்பில் நாரையின் கூர் அலகு என எழுந்த அர்ஜுனரை நோக்கி செல்கிறார். நாரையின் தலை நாகபடச் சொடுக்கு என முன்னெழுந்துவர அதற்கேற்ப அதன் நீள்கழுத்து வீசப்படும் சவுக்கென வளைவு நீள்கிறது.”
முழு விசையுடன் அர்ஜுனரை ஏந்தி வந்த இந்திரப்பிரஸ்தத்தின் பயின்றுதேர்ந்த விற்படையை எதிர்கொண்டு அசைவிழக்கச்செய்து நிறுத்துவதே கர்ணனின் திட்டம். போர் தொடங்கிய சில கணங்களிலேயே ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் நடத்திய விற்படைகள் இரு சரடுகளென நீண்டுசென்று நாரையின் கழுத்தைச் சுற்றி இறுக்கி நிறுத்தின. நாணொலி எழுப்பியபடி தேரில் முன்னெழுந்து கர்ணன் அர்ஜுனரை எதிர்கொண்டார். விண்ணவர் வகுத்த ஊழ்க்கணத்தில் இருவரும் மோதிக்கொண்டனர். இடியை இடி எதிர்கொள்வதுபோல. மின்னல் மின்னலை புணர்வதுபோல. விசை எத்தனை இயல்பாக எதிர்விசையை கண்டடைந்துகொள்கிறது! விசை விசையை அன்றி வேறெதையும் விரும்புமா என்ன?
அர்ஜுனரின் தேரை ஓட்டுகிறார் இளைய யாதவர். கர்ணனின் தேர் அவருடைய அணுக்கச்சூதரான அருணரால் தெளிக்கப்படுகிறது. அர்ஜுனரின் தேர் தீட்டப்பட்ட இரும்பால் வெண்ணிற ஒளிகொண்டிருக்கிறது. கர்ணனின் தேர் பொற்தகடுகளின் செவ்வொளியை விரிக்கிறது. அர்ஜுனர் கவசங்களுக்குள் மின்னும் விழிகளுடன் கர்ணனை விழிநிலைக்க நோக்குகிறார். கர்ணனோ எவரையுமே நோக்காதவர் போலிருக்கிறார். காண்டீபம் கரிய நிறம் கொண்டது. இளஞ்சிவப்பு நாண் துடிப்பது. வெண்ணிற நாகமும் கருநிற நாகமும் புணர்ந்து ஊடி ஆடும் நடனம் கர்ணனின் விஜயம். குரங்குக்கொடி துள்ளி படபடக்கிறது. எதிரில் யானைச்சங்கிலிக்கொடி யானைக்காதென துவள்கிறது.
கர்ணனின் இருபுறமும் படைத்துணைவர் என நின்று ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் பாண்டவர்களுடன் பொருதினர். சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் அவர்களை தடுத்து நிறுத்தினர். சுருதகீர்த்தியை தன் அம்புகளால் அறைந்து நிலைக்கச் செய்தார் விருஷசேனர். அபிமன்யூவை எதிர்த்து நிறுத்தினார் விருஷகேது. நிஷாத இளவரசர்களான கும்பகனையும் கரபனையும் கரமண்டனையும் எதிர்த்து நின்றனர் திவிபதனும் சத்ருஞ்சயனும் சுதமனும். அப்போரில் ஒவ்வொருவரும் தங்களுக்கு நிகரானவர்களை கண்டுகொண்டமையால் காலம் இறுகி இறுகி விரிந்தது. கணம்கணமென ஒவ்வொன்றும் நிகழ்ந்தது.
அரசே, இங்கிருந்து நாம் காண்பது அங்கநாட்டரசராகிய கர்ணனும் இளைய பாண்டவராகிய அர்ஜுனரும் ஒருவரோடொருவர் களத்தில் எதிர்கொள்ளும் காட்சியை. விண்ணில் இந்திரனும் கதிரவனும் நுண்ணுருவிலென வந்து தங்கள் மைந்தர்களின் போர்களை பார்க்கிறார்கள். அவர்களின் மைந்தர்களான சுக்ரீவனும் வாலியும் வந்திருக்கிறார்கள். அரசே, யுகயுகமென அவ்விருவரும் வேறெவ்வகையிலோ இங்கு போரிட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள். இடிமின்னலின் வேந்தன் கதிர்முகத்தேவன் இருவரும் நிகழ்த்தும் இப்போரை ஆயிரம் பல்லாயிரம் சொற்களால் இங்கு நான் சொல்லவேண்டும். ஆனால் புதிய சொற்கள் பயனிழக்கின்றன. ஆகவே தொல்கவிகள் சொன்ன பழைய சொற்களை கைக்கொள்கிறேன். அங்கே இரு திசைகள் எழுந்து மடிந்து முட்டிக்கொள்கின்றன என்று தோன்றுகிறது.
அவர்கள் ஒருவரோடொருவர் ஏவிக்கொள்ளும் அம்புகள் விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருக்கும் முதன்மை விசைகளால் ஆனவை. மின்னல் என துடித்துக்கிழித்து செல்லும் வஜ்ரபாசத்தை அர்ஜுனர் கர்ணன் மேல் ஏவினார். அது செல்லும் வழியெங்கும் உலோகப்பரப்புகள் அனல்கொண்டு மின்னியணைந்தன. வீரர்களின் முகங்கள் கொழுந்துவிட்டமைந்தன. உறுமிவந்த அந்த அம்பை விண்வில் போன்ற ஏழு நிறம் கொண்ட வாசவாஸ்திரத்தால் கர்ணன் அறைந்து உடைத்துத் தெறிக்கவைத்தார். வண்ணங்கள் சாட்டைகள்போல் அவர்களைச் சூழ்ந்து வளைந்து சிதறின. மலர்த்தெறிப்புகளென பொங்கி நாற்புறமும் பரவின தீப்பொறிகள். அவர்களின் ஆவநாழிகளில் வாழ்கின்றன இங்கு இதற்கு முன் நிகழ்ந்த அத்தனை அம்புகளும். விருத்திரனை வென்ற அம்புகள். ஹிரண்யனை, ஹிரண்யகசிபுவை, வாலியை, ராவணனை கொன்ற அம்புகள். முப்புரம் எரித்தவை. வடமேருவை உடைத்தவை.
கர்ணன் வெற்புருக்கும் அக்னிபாசத்தால் அர்ஜுனரை தாக்கினார். அர்ஜுனர் தன் தேரைத் திருப்பி சற்றே ஒழிய அது பலநூறு இடியோசைகள் ஒருங்கிணைந்ததுபோல் செவி அதிரச் சென்று அப்பால் நெடுந்தொலைவில் நின்றிருந்த சுமேரு எனும் வெற்பை அறைந்து அதை ஆயிரம் துண்டுகளாக உடைந்து தெறிக்கச் செய்தது. கற்பாறைகள் உடைந்து தெறித்து கற்பாறைகள் மேல் அறைந்து அனல் பரப்பின. மலைச்சரிவுகளில் உருண்டு ஒன்றை ஒன்று கிளப்பி பொருதிக் கீழிறங்கின. நீர்ப்பரப்புகளில் விழுந்து அலைக்கொப்பளிப்பை எழுப்பின. அர்ஜுனர் ஏவிய கனகாஸ்திரம் உருகி வழியும் பொன் என ஒளிபீறிட வானிலெழுந்தது.
அரசே, இதோ நான் காண்கிறேன். அது செல்லுமிடமெல்லாம் உருகி வழிகின்றன உலோகங்கள். அதை நோக்கிய விழிகள் அனைத்தும் இருண்டு கரிய குழிகளாகின்றன. முகங்களில் தசை உருகி எலும்புரு புடைத்தெழுந்து சிரிக்கிறது. அதை ஒழியும்பொருட்டு கர்ணன் தன் தேரை இருமுறை திருப்பி பின்னடைந்தார். அவர் எய்த காளாஸ்திரம் சிம்மம்போல் உறுமியபடி எழுந்தது. அது செல்லும் வழியெங்கும் இருள் பரவியது. தேர்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு கவிழ, யானைகள் அஞ்சிப் பிளிற, குதிரைகள் நிலையழிந்து கனைத்தபடி சுற்றிவர அது சென்று அர்ஜுனரின் அம்பை அள்ளி தான் வாங்கிக்கொண்டது. கருங்குழம்பில் மூழ்கி மறைந்தது பொன்னுருளை.
அடுத்த அம்புக்காக அர்ஜுனர் தன் ஆவநாழியை நோக்கி கை கொண்டுசெல்ல நாணொலியுடன் கர்ணன் தேரை விலக்கினார். அர்ஜுனர் தன் தொடையிலறைந்து வெறுப்புடன் நகைத்தபடி “சூதன்மகனே! இன்றுடன் உன் ஆணவத்தை அழிப்பேன். இன்று இக்களத்தில் நீ குருதிப்பிண்டம் என விழுவாய்!” என்றார். கர்ணன் விழிகளில் நகைப்பின்றி எதிர்நகைப்பெடுத்து “என்றும் ஆணவம் கொள்ள எனக்கு வாய்த்ததில்லை, பாண்டவனே. இனி நீ அழிப்பதற்கு என்று இருப்பது என் ஆத்மா ஒன்றே. பேடியே, பெண்ணுருவே, அதை அழிக்க உன்னாலோ உனது தெய்வங்களாலோ இயலாது” என்று கூவினார்.
ஒருவரை ஒருவர் பழித்துரைத்து வஞ்சினமேற்கின்றனர். ஒருவர் உள்ளத்தை ஒருவர் அறைந்து சிதைக்க விழைகின்றனர். ஆனால் நஞ்சை உமிழ்ந்தபின் எஞ்சும் உள்ளத்தின் தூய்மையால் அவர்கள் ஒருவரை ஒருவர் அணுகிவருகின்றனர். சொற்கள் பொருளிழக்கின்றன அங்கே. “சூதன்மகனே, இதோ உனக்கு” என்று கர்ணனை நோக்கி அர்ஜுனர் கூவ “நாணிலாப் பேடியே, இவ்வம்புடன் நீ அழிவாய்!” என்று கர்ணன் மறுகூச்சலிட அம்புகள் அவற்றுக்குரிய பிறிதொரு மொழியில் உறுமியும் சீறியும் கூச்சலிட்டும் பேசிக்கொண்டன.
கர்ணன் எய்த உஷாஸ்திரம் என்னும் அம்பு போர்க்களத்தை குருதிச் செம்மையில் ஒளிரச்செய்தது. பின்னர் உருகும் பொன்னால் ஆனவர்களாக அங்கிருந்த அனைவரையும் மாற்றியது. பொற்குமிழிக் கொந்தளிப்பென குருக்ஷேத்ரம் ஒருகணம் தோன்றி மறைந்தது. அவ்வொளியில் புலரியெழுந்ததோ என மயங்கி சூழ்ந்திருந்த காட்டின் பறவைகள் அனைத்தும் எழுந்து கூச்சலிட்டன. யானைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிச்சுழன்று பிளிறின. புவியியற்கை ஒருகணம் நிலைதடுமாறி தன்னிலை மீண்டது. அர்ஜுனர் மேகாஸ்திரத்தால் அதை தடுத்தார். வானில் கருமுகில்கள் அலையலையாக எழுந்து கூரையிட்டதுபோல் போர்க்களம் ஒளியிழந்தது. நீர்த்துளிகள் சிதறி யானைமருப்பின் மயிர்முட்களில் மணிகளாயின. தேர்மகுட வளைவுகளில் ஈரம் வழிந்தது. எரிதுளியை ஈரமென்பஞ்சால் அழுத்தி அணைப்பதுபோல் அது கர்ணனின் அம்பை கவ்வி வீழ்த்தியது.
சீற்றம் கொண்டு உறுமியபடி அர்ஜுனர் தன் விண்தந்தையிடமிருந்து பெற்ற பத்மாஸ்திரத்தை கர்ணனின் மேல் ஏவினார். எழுகையில் தாமரை மலர் போன்றது. விசை கொள்கையில் சுழன்று இதழ் பெருகி பல்லாயிரம் தளம் கொண்ட மாமலர் என்றும் அணுகுகையில் அனலென்றாகி கொதித்தும் அது கர்ணனை தாக்க வந்தது. தன் தேரை சற்றே திருப்பி அதை கர்ணன் ஒழிந்தார். அவர் வில்லிலிருந்து கிளம்பிய சியாமாஸ்திரத்தில் குடியிருந்த பெருநாகமான காளகன் சுழல்காற்று என சீறியபடி அந்த மலரை துரத்திச்சென்றான். கலியன், கரிமுகன், ததிமுகன், காதரன், காமிகன், கசண்டன், கன்மதன், கல்மாஷன், கபாலன், குத்ஸிதன், குர்மிதன், குடிலன் எனும் பன்னிரண்டு ஆழ்நிலத்துப் பெருநாகங்கள் குடிகொண்ட அம்புகளை அதைத் தொடர்ந்து செல்லும்படி கர்ணன் அனுப்பினார். வானில் விரைந்த பத்மாஸ்திரத்தை துரத்திச்சென்று கவ்விச் சுழன்று மண்ணில் அறைந்து விழுந்தன அந்நாகங்கள்.
அவை விழுந்த இடத்தில் நூறு வாரை ஆழமுள்ள பெருங்குழியொன்று எழுந்தது. அங்கிருந்து புழுதி வெடித்துக் கிளம்பி அலையென்றாகி நாற்புறமும் விரிய நிலத்தில் ஒரு மாபெரும் மண்மலர் தோன்றியது. பன்னிரு நாகங்களும் அந்த மகாபத்மத்தை இழுத்து ஏழு ஆழங்களைக் கிழித்துக் கடந்து உள்ளே கொண்டுசென்றன. பாதாளத்தின் இருளுக்குள் செவ்வொளியைப் பரப்பியபடி பத்மம் புதைந்து சென்றது. நாகர்களின் ஆழுலகை காட்டிருளில் எரியெழுந்ததுபோல் ஒளிரச்செய்தது. பல்லாயிரங்கோடி நாகங்கள் அவ்வொளியில் செவ்வொளி பெற்று நெளிந்து பின் அணைந்தன. அங்கு முன்பு பாற்கடல் கடையப்பட்டபோது வாசுகி உமிழ்ந்த கருநஞ்சில் அரவக்கோன் கையில் இருந்து உதிர்ந்த ஒரு துளி விழுந்து உருவான குநீதம் எனும் பெருவாவியில் அந்த மலர் விழுந்தது. அதன் மேல் பேருடலர்களாகிய நாகங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றென விழுந்து அலையிளகிக்கொண்டிருந்தன.
அந்நஞ்சால் அனலவிந்து குளிர்ந்து மேலும் ஆழத்திற்குச் சென்றது அம்மலர். நாகங்கள் அந்த நஞ்சால் உடலுருகி வெள்ளெலும்புச் சங்கிலி என ஆகி அடித்தளத்தில் படிந்தன. எடையிலாதானதும் ஆயிரம் இதழ் கொண்ட பொன்னிறத் தாமரையாக அக்கரிய நச்சு நீருக்கு மேல் எழுந்தது பத்மம். நாக உடல்களால் ஆன வெண்ணிறத் தண்டுகள் கொண்டிருந்தது அந்த மலர். மண்ணில் அது விழுந்த இடத்தில் நீர் பெருகி அது ஒரு தடாகம் ஆகியது. அதை நாகபத்மவாவி என்றனர் மக்கள். நாகப்பழி நீங்க நீராடும் புனிதநீர் என அதை வகுத்தனர் அந்தணர்.
“சஞ்சயா, என்ன சொல்கிறாய்? எதை பார்க்கிறாய்? நீ சொல்வதென்னவென்று உணர்ந்திருக்கிறாயா?” என்று திருதராஷ்டிரர் கூவினார். தனது பெருங்கையால் நிலத்தை ஓங்கி அறைந்து “நீ யார்? சஞ்சயனா அவன் குரலில் பேசும் மாயகந்தர்வனா? சொல்! இக்கணமே சொல்!” என்றார். “நான் ஏகாக்ஷன்!” என்று சஞ்சயன் சொன்னான். “இருவிழி நோக்குள்ளவர் நோக்காதவற்றை நோக்குபவன். திருதராஷ்டிரா, என் சொற்களைக் கேள்! விழிகளால் பார்த்து எவர் எதை அறியமுடியும்?” என்று சஞ்சயன் சொன்னான். திகைத்துப்போனவராக மெல்ல பீடத்திலிருந்து எழுந்த திருதராஷ்டிரர் “யார்?” என்று மீண்டும் கேட்டார். “இரு விழியை ஆளும் மூன்றாம் விழிகொண்டோன். இரு விழியை அணைத்து அவ்விழி மட்டும் எஞ்சவைத்தோன். கடந்த நோக்குளோன். கணிப்புக்கு அப்பாற்பட்டதைக் கண்டு உனக்கு சொல்கிறேன். அமர்க!” என்று சஞ்சயன் சொன்னான்.
திகைப்புடன் அமர்ந்த திருதராஷ்டிரரை நோக்கி சஞ்சயன் சொன்னான். அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் போர் இங்கு எனக்கு முழுமையாகத் தெரிகிறது. இரு வில்லவர்களும் உச்ச விசையுடன் அங்கு போரிடுகிறார்கள். கிரௌஞ்சம் தலை கட்டப்பட்டு அசைவிலாது நிற்க அதன் சிறகுகள் பெருவிசையுடன் நிலத்தை அறைந்து பதைக்கின்றன. அதன் உகிர்கள் இரண்டும் வெறிகொண்டவைபோல் கௌரவப் படைகளை கிழித்துச் சிதைக்கின்றன. கிரௌஞ்சத்தால் தாக்கப்பட்ட வண்டி அலைமோதுகிறது. தன் சிறகுகளின் விசையால் நாரை வண்டியை மண்ணிலிருந்து மேலே தூக்கிவிடுமென்று தோன்றுகிறது. அறைந்து சிம்புகளாக தெறிக்கவிடும் போலும். ஆனால் வண்டி நீர்ப்பாவை என கலைந்து மீண்டு தன்னை ஒருங்கிணைத்துக்கொள்கிறது.
முதல் நாழிகையிலேயே இக்களத்தில் இதுவரை நிகழ்ந்ததிலேயே உச்சப் பெரும்போர் நிகழத் தொடங்கிவிட்டது. மானுட விழிகளால் நோக்குபவர்கள் இரு தேர்களிலும் அமர்ந்து விழிதொடமுடியா விசையுடன் கைகள் சுழல ஒழியாத் தூளியிலிருந்து மின்னும் அம்புகளை எடுத்து ஒருவருக்கொருவர் எய்து இடையே நின்றிருக்கும் வானை நிரப்பிக்கொண்டிருக்கும் பெருவில்லவர்களையே காண்கிறார்கள். அந்த வானம் கிழிந்து கிழிந்து மீன் துள்ளும் நீர்ப்பரப்பென கொந்தளித்தது. அவர்களுக்கு நடுவே ஒன்றைஒன்று முட்டி உராய்ந்து தெறிக்கும் விற்களாலான கொந்தளிக்கும் உலோகப்படலம்போல கணமாயிரம் என எழும் அம்புகள். அலகுடன் அலகு முட்டி அனல் கிளப்பும் பறவைகள். சிறகுகளில் சிறகு மோத, அலகுகளில் அலகு உரச, கூவிச் சுழன்று நிலம்பதிப்பவை. சீற்றம்கொண்ட சேவல்கள் என மண்ணில் விழுந்தபின்னரும் எழுந்து துடிப்பவை.
இருவரும் ஒருவரேதானோ எனும் உளமயக்கை அடைகிறார் அஸ்வத்தாமர். ஒருவர் பிறிதொருவராக இடம் மாறிக்கொண்டார்களோ என்று ஜயத்ரதர் மலைக்கிறார். அதுவரை அவர்கள் தங்கள் ஆழத்தில் நிழலசைவென தெரியக்கண்ட அனைத்தும் விழிக்கூடென துலங்கும் தருணம். அவர்கள் ஒருவரை ஒருவர் ஒருபோதும் வெல்ல முடியாதென்று ஜயத்ரதர் எண்ணினார். ஒருவரை ஒருவர் வென்றால் வென்றவரும் அழிந்தாகவேண்டுமென்று அஸ்வத்தாமர் நினைத்தார். “தந்தை!” அர்ஜுனனை நோக்கி உளமெழுந்தார் விருஷசேனர். அர்ஜுனர் அம்பெடுக்கக்கண்டு கர்ணனை நோக்கி “தந்தையே, கருதுக! அது நாகபாசன்!” என விருஷகேது கூவினார்.
கர்ணனின் அம்புகளில் எழுந்த பாதாள நாகங்கள் சீறி நெளிந்து சென்றன. அர்ஜுனரின் அம்புகளில் எழுந்தன செவ்விறகுப் பருந்துகள். அவர் எய்த கிரௌஞ்சபாசம் இரு சிறகுகளும் பின்னொடுங்கி நீள, கால்கள் உடலுடன் ஒடுங்க, வாளொடு வாளுரசும் பேரொலி எழுப்பியபடி கர்ணனை நோக்கி வந்தது. கர்ணன் தன் கையிலெழுந்த உரகபாசத்தால் அதை அடித்தார். நெளிந்து சென்ற அம்பு கிரௌஞ்சத்தின் கால்களைச்சுற்றி கழுத்தை வளைத்து இறுக்கியது. அலறியபடி பறந்து அப்பால் விழுந்த கிரௌஞ்சம் அவ்விசையிலேயே புரண்டு சென்று நூறு மரங்களை வேருடன் சாய்த்தது. அவையிரண்டும் துள்ளித் திமிறி விழுந்து சிறகறைந்து வால்சொடுக்கி கழுத்துக்கள் பின்னி போரிட்டன. ஒற்றை உடல் கொண்டவையாகி விண்ணிலிருந்து விழுந்த விந்தை உயிரென்று துள்ளின. உரகத்தின் தலையை கவ்விக் கொன்றது நாரை. தன் நஞ்சால் நாரையைக் கொன்றது உரகம். இரண்டும் செயலிழந்து அங்கே அமைந்தன.
கர்ணனின் அம்பறாத்தூணி பாதாளப் பேருலகம் நோக்கி திறக்கும் ஆழி என்றிருந்தது. அதனூடாக எழுந்து வந்தன மண்நடுங்கச் செய்யும் நாகப்பேருடல்கள். புயல்பட்ட கடலின் அலைகளென நிவர்ந்தன அவற்றின் முடிவிலாச் சுழிப்புகள். கார்முகில் என பெருகி அவை இருளை சமைத்தன. அர்ஜுனரின் ஆவநாழி விண்ணுக்குச் செல்லும் முகில்சுழியாக இருந்தது. அதனூடாக பறந்திறங்கி வந்தன விண்ணாளும் வெளியாளும் பறவைகள். வெண்ணிற யானைகள். விண்ணும் மண்ணும் அக்களத்தில் ஒன்றுடன் ஒன்று பொருதிக்கொண்டன. ஒன்றையொன்று கண்டுகொண்டன.
இருவர் ஆவநாழிகளிலிருந்தும் மானுடம் முன்பு கண்டிராத அம்புகள் எழுந்தபடி இருந்தன. இங்கே ஒவ்வொரு கூர்மேலும் வந்து தொட்ட கதிரொளி அவற்றிலிருந்து அம்பொன்றை கண்டெடுத்திருக்கிறது. முட்களில், பாறைஉடைவுகளில், பற்களில், உகிர்களில். மலரிதழ் விளிம்புகளும் பட்டாம்பூச்சி இறகுகளும் வாள்முனைகளென்றாயின. அல்லித்தண்டுகளும் மண்புழுக்களும் அம்புகளென்றாயின. விண்ணிலிருந்து மண்ணுக்குப் பொழியும் ஒவ்வொன்றும் கூர்மைகொள்கின்றன. அக்கூர்கள் அனைத்திலிருந்தும் மின்னோன் தன் அம்புகளை பெற்றிருக்கிறான். மழைநீர்த்துளிகள் வெற்புகளை உடைக்கும் விசைகொண்டன. விண்வில் இரும்புமுகடுகளை கூர்வாள் என அரிந்து சென்றது. முகில்விளிம்பு மலையுச்சிப் பாறைகளை சீவியது. கூர்களுடன் கூர்கள் மோதின. ஒவ்வொன்றும் தனக்கு நிகர் எது என கண்டுகொண்டது. மலர் முகிலை. மழைத்துளி நாகவிழியை.
மூன்று யுகங்களாக வேதங்கள் அவியிட்டு வளர்த்தன இந்திரனை. அவன் கையின் தாமரை ரிக். அவன் ஊரும் வெள்ளையானை யஜுர். அவனுடைய புரவி சாமம். அரசே, அவன் கையின் மின்படையே அதர்வம். நூறுநூறாயிரம் எரிகுளங்களில் அவனுக்கான அவி பொழியப்பட்டது. இந்த மண்ணில் ஐந்து புலன்களுக்கும் இனிதென அறிந்த அனைத்தாலும் அவனுக்கான வேள்விகள் இயற்றப்பட்டன. விழிமகிழும் மலர்களும் பட்டும். மூக்கு உகக்கும் நறுமணங்கள். நாக்கு திளைக்கும் இன்னுணவுகள். செவிக்கினிய சங்கு. உடல் குளிரும் இனிய நீரும் சாமரமும். ஐந்து பருக்களும் அவனுக்கு அவியாயின. பல்லாயிரம் வேர்களை ஊன்றி எழுந்த பெருமரம்போல் தேவர்களால் பொலிந்த தேவர்க்கிறைவன் அவன்.
அவனை எதிர்த்து நின்றிருக்கின்றனர் நாகர்கள். அரசே, மரம் எழுவதற்கு முன்னரே வேர் பரவிவிடுகிறது. இந்த பாரதவர்ஷத்தின் வேர்கள் அவர்கள். ஈரேழு உலகையும் தாங்குவது நாகருலகு. விண்ணளந்தோன் விழிமலரும் அணை. அமுதின் அடிக்கலங்கல். இங்கு எட்டு யுகங்கள் நாகர்கள் தங்கள் வேதங்களால் ஆழத்து தெய்வங்களை வளர்த்திருக்கிறார்கள். அவியென அவர்கள் அளித்தது தங்களையே. அனல்வளர்த்து அவ்வெரிதழலில் நிரைநிரையென வந்து படமெடுத்துச் சீறி எழுந்து வாலறைந்து பாய்ந்து சென்றமைந்து எரிந்தெழுவது அவர்களின் வழக்கம். ஒரு மைந்தனையும் ஒரு மகளையும் மட்டும் எஞ்சவிட்டு முழுக்குலமே எரிபுகுந்தழியும் சர்ப்பசத்ரவேள்விகளை அவர்கள் ஆயிரம் முறை இங்கே நிகழ்த்தியிருக்கிறார்கள். எஞ்சும் விதை ஆயிரம்மடங்கு உயிராற்றல்கொண்டு பெருகி எழுந்து புவிநிறைக்கும். அவ்வண்ணம் ஆயிரம் மடங்கென அவர்கள் பெருகுவார்கள்.
நாகர்கள் ஓம்பிய தெய்வங்கள் அனைத்தும் அதோ கர்ணனுக்குப் பின்னால் நிரைகொள்கின்றன. நால்வேதங்கள் வளர்த்த தேவர்பெருக்கால் பாண்டவர் பக்கம் விரிந்துள்ளது. மானுடர் அங்கே பளிங்குத்துண்டுகள் நடுவே வைக்கப்பட்ட வண்ணமணிபோல ஒருவர் முடிவிலாதோர் எனப்பெருகி நாகர்களும் தெய்வங்களுமாகிறார்கள். அவர்களின் படைக்கலங்கள் நிழல் பெருகுவதுபோல் பிறிதொருவகையில் விரிகிறார்கள். அங்கே நிகழும் போர் விழிகளால் தொட்டுவிட இயலாதது. எண்ணங்களால் தொடர ஒண்ணாதது. சொல்லிச்சொல்லிப் பெருக்கிச் சென்றடையவேண்டியது. என் சொற்கள் சூதர் செவிகளில் விழுந்து சித்தங்களில் முளைத்து சொற்களெனப் பெருகி நூறாயிரம் தலைமுறைகள் கடந்த பின்னர் ஒருவேளை இதன் ஒரு முகத்தை மானுடர் சென்றடையக்கூடும்.
திருதராஷ்டிரர் முனகலாக “சொல்க, சஞ்சயா! அங்கே நிகழ்வது என்ன? கர்ணன் அர்ஜுனனை வெல்வான் அல்லவா?” என்றார். “அரசே, அங்கு நிகழும் போர் வலக்கை இடக்கையுடன் போரிடுவதுபோல. வலதுவிழி இடதுவிழியை நோக்குவதுபோல் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிகிறார்கள். மெய், அவர்களால் ஒருவரை பிறர் அறியவே இயலவில்லை. அறியவொண்ணா பெருவெளியுடன் போரிடுவதாகவே இருவரும் உணர்கிறார்கள். அம்புகளை இடைவிடாது செலுத்தியபடி அவர்கள் போரிடுகையில் அவர்களுக்குள் தன்னுணர்வு திகைத்துச் சொல்லிழந்து அமைந்திருக்கிறது. உடலே செவியென்றாகி ஒவ்வொரு சிற்றொலியையும் கேட்கிறார்கள். உடலெங்கும் விழிகளென்றாகி ஒவ்வொரு அசைவையும் காண்கிறார்கள். எதையும் அறியாமல் உறைந்திருக்கிறார்கள்.
இருவரும் ஒருவருக்கொருவர் அம்புகளை கருதிவைத்திருக்கிறார்கள். அர்ஜுனரின் ஆவநாழியின் இருண்ட ஆழத்திலிருந்து சீற்றம்கொண்டு எழுந்துவரும் பறவைகளை காண்கிறேன். வலுத்த அலகுகொண்ட நாரைகள். நாகக் கழுத்துகொண்ட அன்னங்கள். கன்னங்கரிய காகங்கள். கூர்வளைந்த அலகுடன் பருந்துகள். கவ்வும் கால்களுடன் கழுகுகள். கொலைத்தொழில் வல்லூறுகள், அறைகூவும் கூகைகள். தாவும் பனந்தத்தைகள். மிதந்து நிற்கும் சிட்டுகள். இத்தனை பறவைகளால் ஆனதாக இருந்ததா அந்த ஆவநாழி? இவற்றின் முட்டைகளே மணல்பருக்களாக அமைந்த பாலை ஒன்றை அதற்குள் அவர் சுருட்டி வைத்திருந்தாரா என்ன?
கர்ணனின் ஆவநாழியிலிருந்து ஒன்று பிறிதொன்றை தொடுத்திழுத்துக்கொண்டு என எழும் நாகங்கள் முடிவற்றவை. மணிக்கல்செறிந்தமைந்த படம் எழுப்பிய அரசநாகங்கள். பொன்னிற நாகங்கள். கரிய தளிருடல் கொண்டவை. சீறித் தலையெடுப்பவை. சுருண்டு தன்னை தான் வளைத்தவை. சிலம்புவடிவ விரியன்கள். வேர்த்தளிர் போன்ற சுருட்டைகள். சிறுவிரல்போல் சிவந்த குழவிகள். தென்னைவேர்போல் கொத்துக்கொத்தென எழுபவை. மலையாறுபோல் பேருருக்கொண்டு வளைபவை.
நோக்கநோக்கப் பெருகி பெரும்பாறைகளை செதிலடுக்குகளாகக்கொண்டு விந்தியமலைத்தொடர்போல் சூழ்ந்து எழும் அந்த மாநாகத்தின் பெயர் சூரியகன். பெருமலையின் உச்சிப்பாறை என ஆயிரம் யுகங்கள் முட்டைக்குள் கிடந்த அவனை தொல்யுகமொன்றில் தொட்டு விரிய வைத்தவன் கதிரவன். அவனருகே புயல்சுருட்டிய கருமுகிலென எழுபவன் காரகன். அவன் கடலடியின் இருளில் மறக்கப்பட்ட புதையலென துயின்றவன். அங்கு சென்று தொட்டு அவனை அழைத்ததும் சூரியனின் கதிர்தான்.
அதோ எழுந்தெழுந்து வந்துகொண்டே இருக்கும் நாகங்களைக் கண்டு அஞ்சிக்கூச்சலிடுகிறார்கள் தேவர்கள். “வேந்தே, முதல்மூவரே, எங்களை காத்தருள்க!” என்று அலறுகிறார்கள். “என் மின்படையை அடிபணிக! என் வெண்களிறை வழுத்துக! நான் வெல்வேன்!” என்று இடியோசை எழுகிறது. அரசே, அவ்வோசை நூறாயிரம் புயல்களென ஒலிக்கும் நாகங்களின் ஒலியில் முற்றாகவே மறைந்துவிடுகிறது.