கார்கடல் - 2
புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை சொன்னாள். “அழகிய விழிகள் கொண்டவளே, புவியைப் படைத்த பிரம்மன் விண்ணின் உயரத்திலிருந்து அதை நோக்கியபோது அது புல்நுனிப் பனித்துளி என நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தார். அது ஏன் என்று அறிந்துவர தன் மைந்தர்களான மரீசி, புலகர், புலஸ்தியர், அங்கிரஸ், அத்ரி ஆகிய ஐவரையும் மண்ணுக்கு அனுப்பினார். அவர்கள் மண்ணுலகில் அலைந்து திரிந்த பின்னர் திரும்பிவந்து வணங்கினர். ஒவ்வொருவரும் தாங்கள் கண்டதை சொன்னார்கள்.”
மரீசி சொன்னார். “தந்தையே, மண்ணுலகில் கடல்கள் பெருங்காற்றுகளால் கொந்தளித்துக்கொண்டே இருக்கின்றன. புயல்கள் காடுகளை அலையடிக்கச் செய்கின்றன. உச்சிமலைப் பாறைகள்கூட மழையால் அறைபட்டும் காற்றால் அரிக்கப்பட்டும் உருகிக்கொண்டிருக்கின்றன. பெரும்பசி கொண்டு அனைத்தையும் உண்கிறது தழல். நிலம் பிளந்தெழுகிறது அனல். இடி விழுந்து எரிகின்றன காடுகள். மழை பொழிந்து மீண்டும் அவை முளைத்தெழுகின்றன. ஐம்பெரும் பருக்களும் அங்கே அமைதியிழந்துள்ளன. அவை ஒன்றையொன்று அறைந்தும் தழுவியும் போரிட்டுக்கொண்டே இருக்கின்றன. அங்கே அமைதி என்பதே இல்லை.”
பிரம்மனை வணங்கி புலகர் சொன்னார். “அரசே, அங்கு வாழும் உயிர்களனைத்தையும் ஆட்டுவிக்கின்றது பெரும்பசி. தீப்பற்றிக்கொண்டவைபோல பசியால் அலறியபடி விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் அலைமோதுகின்றன. ஒன்றை ஒன்று கொன்று உண்கின்றன. ஒன்றை ஒன்று துரத்துகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று தப்பி ஓடுகின்றன. ஒன்றிடம் ஒன்று அடைக்கலம் புகுகின்றன. ஒன்றை ஒன்று காக்கின்றன. அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது ஒருகணமும் ஒழியாத பெரும்போர்.”
புலஸ்தியர் சொன்னார். “தந்தையே, நான் அங்கே கண்டது எந்த உயிராலும் இன்னொன்றை புரிந்துகொள்ள இயலவில்லை என்பதையே. ஏனென்றால் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு ஒலியே மொழியென்றுள்ளது. ஓர் உயிருக்குள்ளேயே மொழிகள் பல. மொழிகளுக்குள்ளேயே சொற்பொருட்கள் பல. சொற்பொருட்களை ஒவ்வொருவரும் அவரவர் பட்டறிவும் உய்த்தறிவும் கொண்டு உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆகவே எவரும் எவரையும் அங்கே புரிந்துகொள்வது இயல்வதுமல்ல. அதன் விளைவாக ஒவ்வொருவரும் பிற அனைவரையும் அஞ்சுகிறார்கள், ஐயம்கொள்கிறார்கள், அருவருக்கிறார்கள். அந்த அமைதியின்மையே எங்கும் கொந்தளிக்கிறது.”
அங்கிரஸ் சொன்னார். “மண்ணில் ஒவ்வொரு உயிரும் தன் மகிழ்ச்சியும் நிறைவும் வேறெங்கோ இருப்பதாக எண்ணுகிறது. ஆகவே எங்கிருந்தாலும் அது எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. எதையோ நாடிக்கொண்டிருக்கிறது. மானுடர் இடம்பெயர்கிறார்கள். விலங்குகளும் பறவைகளும் தடம்மாறுகின்றன. சின்னஞ்சிறு புழு ஒன்று உடலையே விரலென்றாக்கி உந்தி உந்தி நெளிவதை கண்டேன். நீ விழைவதென்ன என்றேன். நான் அங்கே செல்ல விழைகிறேன். எப்பாடுபட்டேனும் அங்கே சென்றால் மீண்டுவிடுவேன் என்றது. நான் அதை சுட்டுவிரலால் தூக்கி அது எண்ணிய இடத்தில் கொண்டுசென்று விட்டேன். ஒருகணம் அங்கே திளைத்துவிட்டு இங்கல்ல அங்கே என சுட்டி மீண்டும் நெளியத்தொடங்கியது. ஒவ்வொரு உயிரும் கொண்டிருக்கும் இந்த நிறைவின்மையிலிருந்தே அனைத்து அலைகளும் எழுகின்றன.”
அத்ரி இறுதியாகச் சொன்னார். “நான் ஒவ்வொரு உயிரின் விழிகளையும் அணுகி நோக்கினேன். தந்தையே, ஒவ்வொரு உயிரும் தான் எவ்வண்ணம் இருக்கிறோமோ அதுவல்ல தான் என்று எண்ணுகின்றது. அவை தங்களுக்குள் தங்களை வேவுபார்க்கின்றன. தங்களால் தங்களை உந்தி நகர்த்தவும் தூக்கி மேலெடுக்கவும் முயன்றுகொண்டே இருக்கின்றன. தங்களைத் தாங்களே நோக்கி ஏமாற்றம் அடைகின்றன. தங்களை தாங்களே நோக்கிச் சினம்கொள்கின்றன. தங்களை எண்ணி துயர்கொள்கின்றன. ஒருகணம்கூட தங்களுக்குள் அமைந்து அவை நிறைவுகொள்வதில்லை. அந்நிறைவின்மையே இப்புவியை அலைக்கழியச் செய்கிறது.”
பிரம்மன் ஐந்து மைந்தர்களையும் நோக்கி “நீங்கள் ஐவரும் சொன்னது ஒன்றே. ஆனால் முதல் விதையிலிருந்தே பெருங்காடு எழுகிறது” என்றார். தன் மைந்தனாகிய யமனை அழைத்து “செல்க, தன்னில் தான் நிறைந்து அகம் அசையாது அமைந்துள்ள ஓர் உயிரை கண்டுவருக!” என்று அனுப்பினார். புவியெங்கும் ஏழாயிரம் முறை சுற்றிவந்த யமன் இறுதியில் கிருஷ்ணை ஆற்றின் நீராழத்தில் பாசிபடிந்த பாறைகளுக்கு நடுவே பிறிதொரு குளிர்ந்த பாறையென அமைந்திருந்த ஆமை ஒன்றை கண்டான். அது தன்னைத்தான் சுற்றி இறுக்கிக்கொண்ட நாகம். தன் உடலனைத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு பல்லாயிரமாண்டுகளாக தவமிருந்தது. “நீ நிலைபேறு கொண்டது எங்ஙனம்?” என்று யமன் கேட்டான். “இந்த ஓட்டுக்குள் என் உடல் இடையின்றி நிறைந்து செறிவுகொண்டுள்ளது” என்றது ஆமை. “உள்ளே சிற்றசைவுக்கும் இடமில்லை.”
அந்த ஆமையின் பெயர் அகூபாரன். அகூபாரன் முன் ஒரு தாமரை மலராகத் தோன்றிய படைத்தோன் சொன்னான் “மைந்தா, சுழலும் கதவு நிலைபெற்றமைவது அசையாக் குடுமிக்குமிழியிலேயே. இப்புவியில் ஒருவன் நிலைபேறுகொண்டான் எனில் அவனில் ஊன்றி சீராக நிகழும் இச்சுழற்சி. நீ இப்புவியை தாங்குக!” அகூபாரன் பேருருக்கொண்டு வானிலெழுந்து சென்று புவியை தன் ஓட்டின்மேல் ஏந்திக்கொண்டது. யுகயுகங்களாக அதன் நிறைநிலைமேல் அமைந்துள்ளது புவிச்சுழற்சி.
நித்யை தன் சிறுமகள் மானசாதேவியிடம் சொன்னாள். “நாகர்களின் முதன்மைத்தெய்வமாகிய அகூபாரனை வணங்குக! சொற்களில் பொருள் நிலைப்பதும், பொருட்களில் சுவை நிலைப்பதும், நன்றுதீதுகள் உருமாறாதமைவதும், நிகழ்வனவும் எண்ணுவனவும் எல்லைகொள்வதும் அவனாலேயே. நிலைபேறுகள் அனைத்தும் அவனே. ஆகவே நிலையின்மைகள் அனைத்தும் அவனால்தான் அளவிடப்படுகின்றன. அவன் நம்மையும் நம் குடியையும் காத்தருள்க!”
கிருஷ்ணசிலை என்னும் சிற்றூரில் ஊஷரகுடியின் மூதன்னையாகிய யமி தன் சிறுமைந்தன் பகனிடம் சொன்னாள். “அழகிய தோள்கள் கொண்டவனே, என் நெஞ்சுக்கு இனியவனே, கேள்! இப்புவி அகூபாரன் என்னும் ஆமையின் வளைந்த முதுகின்மேல் அமைந்திருந்தது. ஆமை அசைவற்றதென்றாலும் அதன் முதுகின் வளைவின்மேல் புவிக்கோளம் பதிந்தமைய முடியவில்லை. அசைந்தாடும் புவியால் முதுகு சோர்ந்த ஆமை அவ்வப்போது தன் கால்களை எடுத்துவைத்து அலுப்பை தீர்த்துக்கொண்டது. அந்த அசைவில் புவி திடுக்கிட்டு அசைந்தது. அந்த அசைவு புவியின் ஒவ்வொன்றிலும் வெளிப்பட்டது. மலைஉச்சியின் பெரும்பாறைகள் இடம் மாறின. நதிகள் தடம் விலகி ஒழுகின. குளங்கள் ஆடும் கலத்து நீர் என கொந்தளித்தன. ஒவ்வொரு உயிரும் தன்னுள் நீர்மை நலுங்குவதை உணர்ந்தது. ஒவ்வொரு எண்ணமும் தத்தளித்தது. ஒவ்வொரு விழியும் அலைபாய்ந்தது.”
அப்போது சகூடம் என்னும் காட்டில் சதபாகம் என்னும் பேராலமரத்தின் கிளை ஒன்றில் காளகி என்னும் காகம் கூடுகட்டி ஆறு முட்டைகளை இட்டு அதன்மேல் அமர்ந்து அடைகாத்தது. தன் உடல்சூட்டில் ஒடுங்கிய முட்டைக்குள் கருநீர் நடுங்கி அதிர்ந்ததை காளகி உணர்ந்தாள். முதலில் அவள் முட்டைகளை மென்பஞ்சு படுக்கையமைத்து சீரமைத்தாள். பின்னர் தன் கூடு அசைகிறதோ என எண்ணி அதை கிளைமுடுக்கில் நன்கமைத்தாள். அக்கிளை அசைகிறதா என நோக்கினாள். அந்த மரமே அசைகிறது என்று கண்டு சீற்றத்துடன் “அசைவிலாத வேர்கொண்ட பெருமரம் என உன்னை நம்பிவந்தேன். என்னை ஏமாற்றிவிட்டாய். உன்மேல் தீச்சொல்லிடுவேன்” என்றாள்.
சதபாகம் துயருடன் “நான் என்ன செய்வேன்? மரங்களின் நிலைக்கோள் மலையிலிருந்து பெறப்படுவது. நோக்குக! இந்த மலையே நடுங்கிக்கொண்டிருக்கிறது” என்றது. காளகி அருகிருந்த மரங்களை பார்த்தாள். அப்பால் எழுந்து நின்றிருந்த மகாகூடம் என்னும் மலைமுடியை பார்த்தாள். அதுவும் நடுங்கிக்கொண்டிருந்தது. “அசலம் என்று உனக்குப் பெயர். நீ அசைவுறுவதனால் இனி உனக்கு அப்பெயரில்லை. அலைகொள்வதனால் நீ தரங்கம் என்றே அழைக்கப்படுக!” என்றாள். மகாகூடம் அவளை நோக்கி குனிந்து “மலைகளின் அசைவின்மை மண்ணுக்குரியது. மண் அசைவதை நீ அறிக!” என்றது.
மண்ணில் இறங்கி அதன் அசைவை உணர்ந்த காளகி “அனைத்துப் புவிநிகழ்வுகளும் மண்ணின் நிலைபெயராமையால்தான் ஒப்பப்படுகின்றன. அனைத்தையும் தாங்குவதனால் தரித்ரி என பெயர்பெற்றவள் நீ. அன்னையே, உன் பொறுமை எங்கு சென்றது?” என்றாள். புவிமகள் அவளை நோக்கி “நான் என்னைத் தாங்கும் பேராமை மீது நன்கமையவில்லை. அது இளைப்பாறும்பொருட்டு என்னை இடம் மாற்றிக்கொள்கிறது. என்ன செய்வதென்று நான் அறியேன். என்னைப் படைத்த பிரம்மனிடமே அதை நீ கேட்கவேண்டும்” என்றாள். மும்முறை நிலத்தைக் கொத்திய காளகி “படைத்தவனே, இங்கு வருக! எளிய கரியோளின் சொல்லுக்கு மறுமொழி தருக! நீ நிறுத்தியது நிலைபெயரும் என்றால் உன் சொல் பொருளிழக்கிறது என்றே பொருள்” என்றாள்.
அவள் முன் நான்முகம் கொண்டு, மின்படையும் தாமரையும் ஏடும் ஒருமைக்குறியுமென கைகள் திகழ தோன்றிய படைப்பிறை சொன்னார். “நான் இப்புவியை நிலைபெயரா ஆமைமேல் நிறுத்தினேன். ஆனால் இப்புவியில் ஒவ்வொரு கணமும் உயிர்கள் பிறந்து உயிர்கள் இறந்தாகவேண்டும். பொருள்கள் எழுந்து பொருள்கள் மறைந்தாகவேண்டும். மோதலும் முயக்கமும், வெல்லலும் வீழ்தலும், உண்ணலும் உண்ணப்படுதலும் நிகழ்ந்தாகவேண்டும். அந்த முடிவிலாக்கோடி நிகழ்வுகள் கொண்ட இப்புவி துள்ளித்திமிறிக்கொண்டுதான் இருக்கமுடியும். அசைவு அசைவின்மைமேல் அமர்வதெங்ஙனம் என்று நானும் அறியேன்.”
“அச்சொல்லை நான் ஏற்க மாட்டேன். படைப்பவனைவிட பெரியது படைப்பு. படைத்தல் முழுமையடைந்ததுமே அது ஆசிரியன் என அமர்ந்து படைத்தவனுக்கு கற்பிக்கத் தொடங்குகிறது. முழுமைகொண்ட படைப்பு என்பது எவ்வினாவுக்கும் எங்கோ விடையை வைத்திருக்கும்” என்றாள் காளகி. “ஆம், ஆனால் அது உன் வினா என்பதனால் விடைதேடவேண்டியவள் நீ. சென்று நோக்குக, மேலே அலைதிகழ்கையில் அடியில் அசைவின்மை கொண்ட ஒன்றை! அதன்மேல் நிறுத்துவேன் இப்புவியை” என்றார் பிரம்மன்.
காளகி தன் ஊழ்கத்தால் இமைக்கணத்தை ஏழாயிரம் ஆண்டுகளாக ஆக்கி ஏழுமுறை புவியை சுற்றிவந்தாள். அப்போது கண்டகவனம் என்னும் யானை ஒன்றை கண்டாள். அது மிதக்கும் படுமரம் ஒன்றின்மேல் நின்று மேலே படர்ந்திருந்த மூங்கில்தளிர்களை கொய்துகொண்டிருந்தது. நீர்த்துளிபோல் அதன் கரிய பேருடல் ததும்பியது. அதன் காதுகள் விசிறின. துதிக்கை சுழன்றது. ஆனால் அது நின்றிருந்த படுமரமோ உளைசேற்றில் மிதந்து கிடந்தது. அதன் உடலின் அலைகள் கால்களை சென்றடையவில்லை. அசைவிலாத கால்களினால் படுமரத்தை அது அழுந்த நிறுத்தியிருந்தது.
அதன்பின்னரே காளிகை உணர்ந்தாள் யானைகள் அனைத்துமே அவ்வியல்பு கொண்டவை என. காற்றிலாடும் கிளை என உடல் உலைய நின்றிருக்கையில் அவற்றின் கால்கள் அசைவற்று மண்ணில் நிலைகொண்டிருந்தன. “எந்தையே!” என அவள் பிரம்மனை அழைத்தாள். “யானைகளால் தாங்கப்படட்டும் இப்புவி. அசைவிலாத ஆமைமேல் நின்று இதை தாங்கும் ஆற்றல்கொண்டவை அவை.” பிரம்மன் புன்னகைத்து “ஆம், அந்த விடையை நானும் சென்றடைகிறேன். அவ்வாறே ஆகுக!” என்றார்.
பிரம்மனின் ஆணைப்படி எட்டு திசையானைகள் அகூபாரனின் மேல் நின்று தங்கள் தோள்களில் புவியை தாங்கலாயின. அவற்றின் உடல் அசைந்துகொண்டிருக்கும் புவியை ஏந்தியிருக்க அசைவில்லாத கால்கள் ஆழத்துப்பாறைபோல் தன்னில் நிறைவடைந்து அமைந்த ஆமையின்மேல் ஊன்றியிருந்தன. ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீகம் என்னும் எட்டு திசையானைகளை நம் குடியின் தெய்வங்களென்று வணங்கினர் மூத்தோர். புவிதாங்கும் முடிவிலாக் காலத்தின் தனிமையில் அவை துயருற்றன. அவற்றின் நிழல்கள் துணைவியராகுக என பிரம்மன் ஆணையிட்டார். குஞ்சரி, மாதங்கி, கஜை, கரிணி, சாமஜை, ஹஸ்தினி, பத்மை, விதந்தை என்னும் எட்டு பிடியானைகள் உருவாகின. அவை நமக்கு அருள்புரியும் அன்னையர் என்று வணங்குக!” என்று யமி சொன்னாள்.
அவளை விழியிமைக்காமல் நோக்கி அமர்ந்திருந்த பகனை இழுத்து தன் வறுமுலைகளோடு சேர்த்தணைத்து முத்தமிட்டு “இருளும் இருவகை என்று அறிக, மைந்தா! வெம்மைகொண்ட இருள் களிறு. குளிர்பரவிய இருள் பிடி. இருவகை இருள்களால் வாழ்த்தப்பட்டவர்கள் அரக்கர் குடியினர்” என்றாள்.
கௌதமவனத்தில் வேள்விச்சாலையில் இளமாணவர்களிடம் கௌதம ஏகபர்ணர் சொன்னார். “முதல் மைந்தனின் தீச்சொல்லால் வினதை தன் தமக்கையான கத்ருவின் அடிமையானாள். அவளும் தமக்கையும் வான்நோக்கி நின்று விண்ணிலூரும் அமரர்தலைவனை வாழ்த்துகையில் அவன் புரவியாகிய உச்சைசிரவஸின் வால் வெண்ணிறமானது என்று வினதை சொன்னாள். கரியதென்று கத்ரு சொன்னாள். தோற்பவர் வெல்பவருக்கு ஆயிரமாண்டுகாலம் அடிமையாகவேண்டும் என்று அவர்கள் பந்தயம் வைத்தனர். மறுநாள் இந்திரன் தன் பொற்புரவியில் விண்ணில் பறக்கையில் கத்ருவின் மைந்தர்களான ஆயிரம் கருநாகங்கள் எழுந்துசென்று அதன் வால் என கவ்வித்தொங்கிக்கிடந்தன. கீழிருந்து நோக்கியபோது குதிரையின் வால் கருமையாகத் தெரிந்ததைக் கண்டு வினதை கத்ருவிடம் தோற்றதாக ஒப்புக்கொண்டாள். ஆயிரம் ஆண்டுகள் தன் தமக்கையிடம் அடிமையாக இருப்பதாக அவள் சொல்லளித்தாள்.”
தன் அன்னையின் அடிமைவாழ்வை முடித்துவைப்பதற்காக கருடன் கத்ருவிடமும் அவள் மைந்தரிடமும் பேசினான். விண்ணவர் உண்ணும் அமுதை கொண்டுவந்து அளித்தால் வினதையை விடுவிப்பதாக கத்ரு சொன்னாள். அழிவின்மையை அளிக்கும் அமுதை உண்டால் தன் மைந்தரால் புவிநிறையும் என கத்ரு எண்ணினாள். கருடன் தன் அன்னையிடம் வந்து வணங்கி விண்ணுலகை நோக்கி பறக்கவிருப்பதாகச் சொல்லி வாழ்த்து கோரினான். அன்னை அவன் தலைதொட்டு வாழ்த்தினாள். “விண்ணை எட்டும்வரை பறப்பதற்குரிய ஆற்றலை எவ்வண்ணம் பெறுவாய்?” என்று வினதை கேட்டாள். கருடன் “ஆயிரம் உயிர்களை உண்டால் ஆயிரம்நாள் பசியற்றிருப்பேன்” என்றான்.
“கடல்நடுவே நிஷாதர்கள் வாழும் நிஷாதாலயம் என்னும் தீவுள்ளது. அங்கே சென்று பன்னிரண்டு லட்சம் நிஷாதர்களை உண்டு உன் சிறகுகளை வலுப்படுத்திவிட்டு மேலே எழுக! பன்னிரண்டு லட்சம் நாட்கள் நீ செல்லவேண்டியிருக்கும். காணும் நிஷாதர்களை எல்லாம் உண்க! ஆயின் ஒன்று கருதுக, அறியாமல்கூட அந்தணரை நீ உண்ணலாகாது!” என்றாள் வினதை. “அந்தணரை எவ்வண்ணம் அறிவது?” என்றான் கருடன். “உன் அலகால் அவர்களை கொத்தியதுமே அனலென அவர்கள் சுடுவதை உணர்வாய். அவர்களில் எரியும் வேதத்தின் வெம்மை அது” என்று அன்னை சொன்னாள். “அவ்வண்ணமே ஆகுக!” என்று சொல்லி விடைபெற்று கருடன் விண்ணுக்குக் கிளம்பினான்.
பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் விண்ணில் பறந்து சென்று இனியில்லை என சிறகுகள் ஓய்ந்து மண்ணுக்கு விழப்போகும்போது தொலைவில் ஒரு வாயிலை அவன் கண்டான். அது முனிவர்கள் வாழும் வானுலகின் நுழைவுமுகம். அங்கே சென்று நின்று “காசியப முனிவரின் குடிவழியில் வந்தவனாகிய பறவைக்கரசன் நான். என்னை உள்ளே வந்து இளைப்பாற ஒப்புக!” என்றான். நுழைவுக் காவலனாகிய கந்தர்வன் “அவர் உன்னை தன் மைந்தன் என்று ஒப்புவாரென்றால் உள்ளே நுழைக!” என்றான். கருடன் தன் சிறகிலிருந்து இறகொன்றை எடுத்து அவனிடம் அளித்து “இதை எந்தையிடம் காட்டுக!” என்றான்.
அந்தத் தூவலைப் பார்த்ததுமே “மைந்தா!” என அழைத்தபடி காசியபர் நுழைவாயிலுக்கே ஓடிவந்தார். அவனை அள்ளி நெஞ்சோடணைத்து தன் தவச்சாலைக்கு அழைத்துச்சென்றார். “உன்னை பார்ப்பதனால் நூறாண்டுகள் தவம் செய்து பயனீட்டிய உவகையை அடைந்தேன். மைந்தரே தந்தையருக்கு தெய்வவடிவம் என்பதை இன்று உணர்ந்தேன்” என்றார். “தந்தையே, நான் பசித்தும் களைத்தும் இருக்கிறேன். மண்ணில் பன்னிரண்டு லட்சம் நிஷாதர்களை உண்டு பசியடங்கியே விண்ணிலெழுந்தேன். ஆனால் என் ஆற்றல் தீர்ந்துவிட்டிருக்கிறது” என்றான் கருடன்.
காசியபர் புன்னகைத்து “மைந்தா, மண்ணிலிருந்து விண்ணிலெழுந்தோறும் நீ பேருருக்கொண்டபடியே இருக்கிறாய். இப்போது நீ அங்குள்ள இமையப்பெருமலைத் தொடரைவிட பெரிய சிறகுகள் கொண்டிருக்கிறாய். உன் இறகுகள் ஒவ்வொன்றும் தென்பெருங்கடலின் அலைகளைவிட நூறுமடங்கு பெரியவை என்று உணர்க! அங்கு உண்ட உணவு இங்கு ஒரு துளியென்றாகிவிட்டிருக்கிறது” என்றார். “இங்கு என் பசியை ஆற்ற நான் செய்யவேண்டியதென்ன?” என்றான் கருடன்.
“இங்கே குடிகளால் அன்னமும் நீரும் அளித்து விண்ணிலேற்றப்படும் மூதாதையர் வாழும் மூச்சுலகம் ஒன்றுள்ளது. மண்ணில் இருந்த உணர்வுகள் எஞ்சியிருப்பதனால் விண்ணில்நிறைந்து தெய்வங்களாக ஆகாது அமைபவர்கள் அவர்கள். அங்கே வியோமசரஸ் என்னும் வாவி ஒன்றுள்ளது. அதில் விஃபாவசு என்னும் ஆமையும் சுப்ரதீபன் என்னும் யானையும் வாழ்கின்றன. அவை இங்கும் தீராத பெரும்பூசலுடன் உள்ளன” என்றார் காசியபர்.
“அவர்களின் கதையை சொல்கிறேன் கேள்” என காசியபர் தொடர்ந்தார். “விஃபாவசு நாகர்களின் குடிமூதாதை. மண்ணைத்தாங்கும் அகூபாரன் என்னும் பேராமையின் கொடிவழி வந்தவன். அவன் முதுகின்மேல் கோட்டை ஒன்றைக் கட்டி வாழ்ந்தனர் நாகர். தன்னுள் அடங்கி இல்லையென்றே ஆகி வாழ்ந்தான் விஃபாவசு. சுப்ரதீபன் திசையானையாகிய சுப்ரதீகத்தின் மைந்தர்மரபில் வந்தவன். அரக்கர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுபவன்.”
நாகர்களுக்கும் அரக்கர்களுக்கும் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலம் அது. அரக்கர்கள் தங்கள் குலமூத்தவராகிய சுப்ரதீபனின் மேல் ஏறி விற்களையும் வேல்களையும் கொண்டு நாகர்கள்மேல் படைஎடுத்து வந்தனர். நாகர்கள் விஃபாவசுவின் மேல் ஏறி கோட்டைக்குள் ஒளிந்துகொண்டனர். அங்கிருந்து நச்சு அம்புகளை ஏவி அரக்கர்களை தாக்கினர். அரக்கர்கள் அவர்களைச் சூழ்ந்து தீயிட்டனர். அப்போதுதான் நாகர்களின் அந்த மலை என்பது ஒரு பெரும் ஆமை என அவர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சுப்ரதீபனை விஃபாவசுமேல் ஏற்றி அதை புரட்டிப்போட முயன்றனர்.
யானையும் ஆமையும் போரிட்டன. இரண்டு மலைகள் முட்டிக்கொள்வதுபோல அப்போர் நிகழ்ந்தது. ஆமையின் ஓடுகள் மேல் முட்டி யானையின் தந்தங்கள் முறிந்தன. இறுதியில் ஆமை யானையைக் கவ்வி கீழே போட்டு அதன்மேல் ஏறிக்கொண்டது. அந்த எடையால் யானை உடல்திறந்து இறந்தது. யானையின் தந்தங்களால் அடிவயிற்றில் குத்துபட்டு ஆமையும் உயிர்விட்டது. இரு உடல்களையும் புதைப்பதற்குரிய குழிகளை வெட்ட நாகர்களும் அரக்கர்களும் முயன்றனர். அத்தனை பெரிய குழியை வெட்ட அவர்களால் இயலவில்லை. ஆகவே அருகிருந்த ஒரு பிலத்தில் இரு உடல்களையும் போட்டு இறுதிக்கடன்களை முடித்தனர்.
“விண்ணுக்கு வந்த ஆமையும் யானையும் இங்கே வியோமசரஸில் வாழ்கின்றன. இங்கே அவை ஒன்றையொன்று கொல்லமுடியாது. அவற்றின் ஆற்றல் அங்கே மண்ணில் அவர்களின் குலங்கள் அளிக்கும் பலிக்கொடைகளால் ஆனது. ஆகவே முடிவில்லாமல் அவர்கள் இங்கே போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீ உண்பாயாக! உன் பெரும்பசி அடங்கும். இங்கிருந்து மீண்டும் பன்னிரண்டுலட்சம் ஆண்டுகள் பறந்துசென்றால்தான் நீ தேவருலகை அடைய முடியும். அதற்கான ஆற்றலை நீ அவ்வுணவால் அடைவாய்” என்றார் காசியபர்.
“எந்தையே, அவர்களும் பேருருவர்கள் அல்லவா? அவர்களை வென்று உண்ணும் ஆற்றலை நான் எவ்வாறு அடைவேன்?” என்று கருடன் கேட்டான். “நீ அந்தணருக்கும் ஷத்ரியர்களுக்கும் உகந்தவன். அவர்கள் செய்யும் வேள்விகள் அனைத்திலும் ஒரு பகுதி உனக்கு அவியென்றாகுக! நீ அதனால் ஆற்றல்பெற்றவன் ஆவாய்” என்றார் காசியபர். காசியபரின் ஆணைப்படி மண்ணில் ஆயிரம்கோடி அந்தணர் செய்துகொண்டிருந்த வேள்விகள் அனைத்திலிருந்தும் அவிப்பயன் கருடனை வந்தடைந்தது. செஞ்சிறகு காலைமுகில் என ஒளிவிட அவன் வானுருக்கொண்டு எழுந்து வியோமசரஸ் நோக்கி சென்றான்.
கருடன் பறந்துசென்று வியோமசரஸை அடைந்தான். அங்கே யானையும் ஆமையும் இரு கடல்கள் அலைகளால் அறைந்துகொள்வதுபோல் போரிட்டுக்கொண்டிருந்தன. கருடன் அவர்கள்மேல் பாய்ந்து தன் உகிர்களாலும் அலகாலும் தாக்கினான். நாகரும் அரக்கரும் அந்தணரும் அளிக்கும் அவிகள் நடுவே என அப்போர் நிகழ்ந்தது. ஒருகணம் ஒருவர் என அவர்கள் முன்னெழுந்தனர். மறுகணம் இன்னொருவர் வென்றுவந்தனர். பன்னிரண்டு ஆண்டுகள் அந்தப் போர் நிகழ்ந்தது. மண்ணில் அது பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாக நீண்டது. நாள் செல்லச்செல்ல நாகர்களின் அவி குறைந்தது. அரக்கர்களின் அவியும் குறைந்தது. குறையாத அந்தணரின் அவியால் ஆற்றல்பெற்ற கருடன் ஆமையையும் யானையையும் வென்றான்.
அவற்றை தன் இரு கால்களால் கவ்வி எடுத்துக்கொண்டு விண்ணிலெழுந்த கருடன் சேக்கேறி அமர்ந்து அவற்றை உண்ண ஓர் இடத்தைத் தேடி அலைந்தான். அப்போது அந்தணர் நாவிலெழுந்த வேதம் சுபத்ரம் என்னும் பேராலமரமாக விண்ணில் எழுந்து நின்றது. அதன் தெற்குக்கிளையில் அமர்ந்து அந்த ஆமையையும் யானையையும் கொன்று கிழித்துண்டு பசியடங்கினான். ஆமையின் பொறுமையையும் யானையின் விசையையும் ஒருங்கே அடைந்தான். மேலும் பன்னிரண்டாயிரம் மடங்கு பேருருக்கொண்டு விண்ணிலெழுந்து தேவருலகை அடைந்தான். அங்கே தேவர்தலைவனை வென்று அமுதைக் கவர்ந்துவந்து தன் அன்னையை விடுவித்தான்.
கௌதம ஏகபர்ணர் சொன்னார். “வேதச்சொல்லால் வாழ்த்தப்பட்டவனை, அனலை சிறகென்றும், மின்படையை அலகென்றும், எரிமீன்களை விழிகளென்றும் கொண்டவனை வணங்குக! நம் குலத்திற்கு மூதாதையை, நம் குடிகளுக்கு தெய்வத்தை, நம் சொற்களுக்குக் காவலை வழுத்துக! அவன் நமக்கு என்றும் அருள்க!” அவர்முன் அமர்ந்திருந்த மாணவர்கள் “ஆம்! ஆம்! ஆம்!” என்று உரைத்து கைகூப்பினர்.