கார்கடல் - 12
இருண்ட ஆழங்களில் நிழலுருவாக நெளியும் பல்லாயிரம்கோடி நாகங்களை நான் காண்கிறேன். மண்ணுக்கு மேலும் விண்ணின் அடுக்குகளிலும் செழித்து கிளைவிட்டு நிறைந்துள்ள அனைத்துக்கும் அவையே வேர்கள். அவற்றின் நெளிவுகளே பின்னி மாளிகைகளாகின்றன. சாலைகளும் தெருக்களும் கோட்டைகளும் ஆகின்றன. கொடிகளாகத் துவள்கின்றன. தேர்களும் புரவிகளும் ஊர்பவர்களும் ஆகின்றன. அந்நிழல் உலகின் மையமென அமைந்த வாசுகியின் அரண்மனையின் அவைக்கூடத்தில் அமர்ந்திருக்கிறேன்.
அந்த அவையில் தட்சன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்னும் மாநாகங்கள் அமர்ந்திருக்கின்றனர். திருதராஷ்டிரன், கௌரவ்யன், ஐராவதன் என்னும் நாகப்பிரஜாபதிகளை அங்கே கண்டேன். ஆரியகன், குணவான், சம்பிரீதன், சக்தன், காளியன், தனஞ்சயன், நகுஷன், அஸ்வதரன், வாக்யகுண்டன், அபூர்ணன், வாமனன், எலபத்ரன், குக்குரன், குக்குணன், நந்தகன், சங்கன், தடிமுகன், ஆப்தகன், மூஷிகாதன், திலீபன், புஷ்பன், புண்டாரகன், கரவீரன், குளிகன், சங்குபாலன், கேசன் போன்ற மூத்த நாகர்கள் வீற்றிருந்தனர்.
நாகப்பிரஜாபதிகளின் குலத்து மைந்தர்களாகிய பலநூறு மாநாகர்களை அங்கே கண்டேன். வாசுகியின் மைந்தர்களான கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், குணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாகு, சரன், கக்ஷகன், காலதந்தகன் ஆகியோர் முதல்நிரையில் அமர்ந்திருந்தார்கள். தட்சனின் மைந்தர்களான புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சோசிகன், சரபன், பங்கன், பில்வதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமன், சுரோமன், மஹாஹனு ஆகியோரை காண்கிறேன்.
ஐராவதனின் மைந்தர்களான பாராவதன், பாரிஜாதன், பாண்டரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மேதன், பிரமோதன், சம்ஹதாபனன். கௌரவ்ய குலத்தைச் சேர்ந்த ஏரகன், குண்டலன், வேணி, வேணிஸ்கந்தன், குமாரகன், பாகுகன், சிருங்கபேரன், துர்த்தகன், பிராதரன், ராதகன் ஆகியோரையும் திருதராஷ்டிர குலத்தைச் சேர்ந்த சங்குகர்ணன், பிடரகன், குடாரமுகன், சுகணன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், காமடகன், சுஷேணன், அவ்யயன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உத்ரபாரகன், ரிஷபன், வேகவத், பிண்டாரகன், ரக்தாங்கன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசகன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேதிகன், பராசரன், தருணகன், மணிஸ்கந்தன், ஆருணி ஆகியோரையும் காண்கிறேன்.
புயல்பட்ட கரிய கடலென கொந்தளித்துக் கொண்டிருந்தது அந்த அவை. அங்கே ஆரியகன் எழுந்து உரத்த குரலில் சொன்னார் “என் மைந்தன் பீமசேனன். அவனுக்கு எதிராக எழுகின்ற எவரும் எனக்கு எதிரானவர்களே. அரசே, என் மைந்தன் இளங்குழவியாக கங்கையின் நீர்ச்சுரங்கம் வழியாக இங்கே வந்ததை நினைவுறுக! அவனுக்கு நாம் அளித்த நஞ்சினால் அவன் அளவிறந்த தோள்வலி கொண்டவனாக எழுந்தான். புவியில் எவராலும் வெல்லப்படாதவனாக வாழ்கிறான். என் குடியினன் இன்று போர்க்களத்தில் நின்றிருக்கையில் அவனை கொல்வேன் என வஞ்சமுரைத்துள்ள அங்கநாட்டவனின் வில் என இங்குளோன் ஒருவன் எழுந்துள்ளான்…”
ஆரியகனை இடைமறித்து அவையில் இருந்த பல்லாயிரம் நாகங்கள் குரலெழுப்பின. இடித்தொடர் என எழுந்த அந்த ஓசையை கையால் நிறுத்தி வாசுகி சொன்னார் “உங்களில் ஒருவர் எழுந்து உரையுங்கள்…” தட்சனின் மைந்தனாகிய புச்சாண்டகன் எழுந்து “அரசே, இங்கே நாம் பேருருவில் வாழ்ந்தாலும் நம்மில் ஒரு துளி மண்ணுக்குமேல் மானுடர்களாகவும் வெளிப்பாடு கொண்டுள்ளது. இங்கு எஞ்சுவதை அங்கு நடிக்கிறோம். அங்கு எஞ்சுவதனைத்தும் இங்கு பெருகிவளர்கிறது. அங்குள்ள பலியால் இங்கு உயிர்கொள்கிறோம். இங்கிருந்து எழும் வாழ்த்தால் அங்கே ஆற்றல் பெறுகிறோம். நாகமூதாதையர் தெய்வங்களாகி படியும் அடித்தளம் இது. நாம் நாகர்களின் தெய்வங்கள். நாகர்கள் நம் குடிகள். நாம் ஆழியும் அலைகளும். அவர்கள் துளிகளும் துமிகளும்” என்றான்.
“அரசே, பாண்டவர்கள் நம்மை வணங்கி நம் வடிவென மண்ணில் வாழ்பவர்களாகிய நாகர்களின் எதிரிகள். காண்டவப் பெருங்காட்டை அழித்தவர்கள். பாண்டவர்களுக்கு எதிராக நாகர்குடியினர் கொண்டுள்ள வஞ்சம் நம்முடையது. இரண்டு தலைமுறைக்காலமாக அவர்கள் அங்கே பலிக்கொடை அளித்து நம்மை வணங்கியிருக்கின்றனர். அவர்களின் கண்ணீர் நம்மில் நஞ்செனப் பெருகியிருக்கிறது. இதுவே தருணம், நாம் அவர்களை முற்றழித்தாக வேண்டும்!” என்று புச்சாண்டகன் சொன்னான்.
அவையிலிருந்த தட்சன் எழுந்து “நன்று சொன்னாய், மைந்தா” என்றார். நாகங்கள் தலைகள் பெருகிய பெரிய கரிய படங்களைத் தூக்கி நாச்சுடர் பறக்க “ஆம்! ஆம்!” என்று கூச்சலிட்டன. “வஞ்சம் தீர்த்தாகவேண்டும்! பழிகொள்வோம்!” என்று வால்கள் சுழல ஆர்ப்பரித்தன. ஆரியகர் “மண்ணிலுள்ள அத்தனை வஞ்சங்களையும் இவ்வாழத்திற்கு இறக்கிக் கொண்டுவர வேண்டியதில்லை. அவைநாகர்களே, மண்ணுக்கும் நமக்கும் நடுவே உள்ள உலகங்கள் அங்கிருப்பவை அனைத்தும் இங்கு வந்தடையாமல் தடுக்கும் சல்லடைகள் என்று உணர்க! நாகர்கள் அங்கே மானுடரிடம் போரிடுகிறார்கள். வெல்வதும் வீழ்வதும் அவர்களின் ஊழ். ஊழுக்கு உட்புகுந்து விளையாடும் தெய்வங்களும் தோற்பார்கள் என்பதே தெய்வச்சொல்” என்றார்.
நாகங்கள் “வஞ்சம்! வஞ்சம்!” என்று கூச்சலிட்டன. வாசுகி “எவருடைய வஞ்சம்? அதை சொல்லுங்கள், எவருடைய வஞ்சம்?” என்றார். “அறத்தின் வஞ்சம்!” என்றபடி ஒரு சின்னஞ்சிறு நாகம் எழுந்து முன்வந்தது. அதன் உடலை நான் திகைப்புடன் கண்டேன். பாதிவெந்து உரிந்த செங்கிழங்கு போலிருந்தது. அதன் படம் வலியுடன் துவண்டு எழுந்து காளான்போல சுருண்டு குதிரைக்குழவியின் முகம்கொண்டது. “என் பெயர் அஸ்வசேனன். அங்கே மண்ணுலகில் நான் தட்சகுலத்து இளையோனாக எஞ்சியிருக்கிறேன். என்னை கமுகுப்பாளைப் படுக்கையில் கற்றாழைச்சாற்றில் இட்டு வைத்திருக்கிறார்கள். வளராத உடலுடன் புழுவென அங்கே நெளிந்துகொண்டிருக்கிறேன். என் உடல் சூம்பிச்சிறுக்கும்தோறும் ஒவ்வொரு கணமும் என என்னுள் வஞ்சம் எழுகிறது. அந்த வஞ்சத்தை நான் என்னுள் செறியவைக்கிறேன். இருண்ட ஆழங்களுக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கிறேன்.”
அது பெருகத் தொடங்கியது. நிழல் மேலெழுவதுபோல. ஆழிப்பேரலைபோல. மலையடுக்குகள் என. மழைக்கார் என. இருண்ட விசும்பென. அதன் விழிகள் இரு எரிவிண்மீன்கள். இடிமுழக்கென விண்ணை நிறைத்தது அதன் குரல். “போர் மண்ணின் மாறா இயல்பு. போரினூடாகவே அங்கே அனைத்தையும் நிகர்செய்கிறான் படைப்பிறைவன். போரினூடாகவே அனைத்தையும் நிகழ்த்திக்கொள்கிறது ஊழ். போரினூடாகவே அறங்களை நிலைநிறுத்துகின்றன தெய்வங்கள். போரினூடாகவே புரண்டு முன்செல்கிறது காலம். போர் தெய்வங்களுக்கு உகந்த வேள்வி.” ஒவ்வொருவரையும் நடுக்குறச் செய்தது அதன் பேரொலி.
“ஆனால் எதையும் முற்றழிக்கலாகாது என்பது நெறிகளில் முதல்நெறி. ஒன்றை முற்றழிக்க நினைப்பவன் தெய்வங்களுக்கு அறைகூவல் விடுப்பவன். எதுவும் முற்றழிவதில்லை. துளியினும் துளி ஒன்று எஞ்சும். அரசே, அணுவைக்கூட முற்றழிக்க இயலாதென்று அவனுக்கு கற்பிப்பதே அத்துளியின் அறமென்று ஆகும். அதன்பொருட்டே எழுந்துள்ளோம். அங்கே காண்டீபம் ஏந்தி நின்றிருக்கும் அறமிலியின் முன் பெருந்திரளென எழுவதே இனி இங்குளோர் செய்யக்கூடுவது.” அவன் திரும்பி நாகர்களை நோக்கி அறைகூவினான். “எழுக! நாகர்களே பெருகியெழுக! வஞ்சம் கொண்டு வீங்குக! நஞ்சுகொண்டு கூர்கொள்க! விழிமணிகளில் அனல் சூடுக!”
வாசுகி “நாகங்களே, அங்கே நிகழ்வது நாம் மட்டும் இயற்றி முடிக்கும் போர் அல்ல. அது விண்ணகத்தெய்வங்கள் அனைத்தும் வந்திறங்கி ஆடித்திமிர்க்கும் பேரரங்கு. அந்த ஆடுகளத்தின் காய்களாகச் சென்று நிற்பது அறிவின்மை. நமது ஆடல் அல்ல அது என்று உணர்க!” என்றார். ஆரியகர் “ஆம், அதையே நானும் சொல்கிறேன். என் மைந்தன் அங்கு நின்றிருப்பதுகூட தெய்வங்களின் எளிய நாற்களக்கரு என்றுதான். அவன் எதையும் ஈட்டப்போவதில்லை. இழந்த நெஞ்சும் ஒழிந்த கைகளுமாக அவன் விண்ணேகுவான். அவனுக்கு எதிராக களம்நிற்பவர் ஆழிவெண்சங்குடன் அங்கு எழுந்தருளியிருப்பவனையே அறைகூவுகின்றனர்” என்றார்.
“இல்லை, இப்போர் முன்னரே தொடங்கிவிட்டது” என்றபடி அப்பாலிருந்து இன்னொரு பெருநாகம் எழுந்தது. மலையடுக்குகள் என அதன் படங்கள் எழுந்துகொண்டே இருந்தன. எரிமலை தழல் என நாவுகள் பறந்தன. வான்முழக்கு என குரல் ஒலித்தது. அது “என் பெயர் மணிகர்ணன்” என்றது. “என்னை மண்ணுலகில் நாகபாசன் என்பார்கள். ஆணவம் கொண்டு குடியிலிருந்து விலகிச்சென்ற காளநாகினி என்னும் நாகர்குலப் பெண்ணில் அசுரன் ஒருவன் விதைத்த விதை நாகாசுரன் என்னும் கொடியோனாக எழுந்தது. விண்ணகத்தை வென்று இந்திரனென்றாவதற்காக அவன் ஆற்றிய பெருவேள்வியில் நாளொன்றுக்கு பன்னிரண்டாயிரம் நாகங்களை அவியாக்கினான். நாகங்களின் விழிநீருக்கு இரங்கிய பிரம்மன் அவனை அழிக்கும்பொருட்டு இயற்றிய வேள்வியில் நான் எழுந்தேன்.”
“பிரம்மனின் வில்லாகிய மகாபத்மத்திலிருந்து சீறிப்பாய்ந்தேன். நாகாசுரன் வாழ்ந்த நாகவதியை அழித்தேன். அங்கிருந்து நாகருலகாகிய சால்மலிக்குச் சென்று அங்கே அவர்களின் குடித்தெய்வமாக பலியும் கொடையும் பெற்று கோயில்கொண்டு அமைந்தேன். நூறு யுகங்கள் அவர்களின் கொடைபெற்றதனால் தெய்வமானேன். ஆற்றாது அழுத விழிநீர் கண்டு நீ எழுக. அதுவரை துயில்க என்று உரைத்து என்னை நாகருலகுக்கு அனுப்பினான் முப்புரம் எரித்த எந்தை. இங்கே மணிகர்ணி என்ற பெயர் கொண்டு ஒரு மலைத்தொடராக அமைந்தேன்.”
“நான் எழும் தருணத்திற்காக அங்கே அரசநாகவடிவெனக் காத்திருந்தது என் தவத்துள் எஞ்சிய ஒரு சொல். என்னை ஏந்துபவனை பிறந்த கணம்முதல் ஒழியாது பின்தொடர்ந்தது. நெடுநாட்களுக்குப் பின் என்னைத் தொட்டெழுப்பியது ஒரு சொல். விஸ்வகர்மன் ஒருவனின் தவம் முதிர்ந்து கூர்கொண்டு ஏழு ஆழங்களைக் கடந்து இங்கு வந்துசேர்ந்தது. நான் விழித்தெழுந்தேன். எழுக, எழுக என அது மன்றாடியது. உங்கள் பருவடிவொன்று மண்ணிலெழுக என்றது. அவனுக்கு அருளி அங்கே ஒரு வில்லென எழுந்தேன். அங்கநாட்டில் காவல்தெய்வமெனக் கோயில்கொண்டேன். ஆற்றாது எழும் விழிநீர் ஒன்றுக்கு நிகர்செய்யும்பொருட்டு அங்கே எழுவது என் ஊழ். இதோ இவனுக்காக அங்கே போரில் திகழ்வேன். அங்கனின் கைவில் நான்.”
“ஆம்! ஆம்! நாங்கள் அவன் வில்லில் அம்புகள். அவன் களத்தில் எழுக எங்கள் நஞ்சு! அவன் அம்புகளில் கூர்கொள்க எங்கள் பற்கள்!” என்று நாகங்கள் முழக்கமிட்டன. “இதோ நாங்கள் கிளம்புகிறோம்… எவர் தடுத்தாலும் ஒடுங்கமாட்டோம்.” ஆரியகர் சீறலோசை எழுப்பி “எனில் நானும் எழுகிறேன். என் மைந்தர்பொருட்டு அங்கே நானும் சென்று களம்நிற்கிறேன். நாம் போர்முனையில் சந்திப்போம்” என்றார். “ஆம், அங்கு சந்திப்போம்! அங்கு பொருதுவோம்!” என்று நாகங்கள் கூச்சலிட்டன. வாசுகி “பொறுங்கள். ஒருகணம் பொறுங்கள்” என்றார். “என் சொல்லை கேளுங்கள்” என்று மீண்டும் மீண்டும் கூவினார்.
தட்சனும் கார்க்கோடகனும் எழுந்து “அமைதி கொள்க! அமைதி! அமைதி!” என்றார்கள். அவை மெல்ல அடங்கியது. வாசுகி “என் சொல்லை இறுதியாக கூறிமுடிக்கிறேன். இந்தப் போர் நாம் அறியா அறங்களுக்கிடையே நிகழ்வது. என்றும் எந்நிலையிலும் பேரறமே வெல்லும் என்பது புடவிநெறி. இதில் எங்குள்ளது தெய்வங்கள் பேணும் அந்த அறம் என்று நம் குடிகளில் முதல்வராகிய அனந்தனை உசாவுவோம்” என்றார். நாகங்கள் “எவரிடமும் கேட்கவேண்டியதில்லை. எங்கள் வஞ்சமே வழிகாட்டுக!” என்று கூவின. “எனக்கு என் மூத்தவரின் வழிகாட்டுதல் தேவை” என்றார் வாசுகி. தன் முன் இருந்த சிறிய மேடையில் அருமணி ஒன்றை வைத்தார். அது ஒளிகொள்ளத் தொடங்கியது. “விண்வாழும் முடிவிலானே, சொல்க! வெல்லும் அறம் எது? சொல்க! நாங்கள் உடனமைய வேண்டிய நிலைகொள்ளும் அறம் எது?”
அருமணியிலிருந்து மெல்லிய ஒளிமின் எழுந்தமைந்தது. அங்கிருந்த அனைவரும் அக்கூற்றை தங்கள் அகத்தே ஒலிக்கக் கேட்டனர். “பெருநெறியை உசாவி அறியலாம், முற்றளித்தும் அறியலாம். உசாவுவோருக்கு தங்கள் ஆணவத்தின் எதிர்விசை என அமைவது அது என்று புரியும். ஆணவம் அழித்து முற்றளித்தோர் இயல்பாக அதை அறியலாம். ஏனென்றால் அனைவரும் அதில் ஒழுகிக்கொண்டிருப்பதை உணர்வார்கள்.” அவ்வொலி அமைவதற்குள்ளாகவே நாகங்கள் கூச்சலிடத் தொடங்கின. “வஞ்சம் கொள்வோம்! பழி தீர்ப்போம்!”
வாசுகி அவர்களை கையமர்த்தி “இங்குள அனைவரிலும் பேருடலன் நான். உங்கள் அனைவரின் நஞ்சையும் ஒருங்குசேர்த்தாலும் என் நஞ்சின் ஓர் அலைமட்டுமே அது. ஆனால் ஆலகாலம் உண்டவன் கால் விரலின் மணியாழியென்று என்னை உணர்ந்தவன். ஆகவே மெய்யறிந்தவன். என் வழி பிறிது. நீங்கள் உங்கள் வழி தேர்க! நான் இமையா விழி சூடி தேரோட்டியாக களம் நிற்பவனுக்கு உடனமைவேன்” என்றார். நாகங்கள் கொந்தளிப்புடன் எழுந்து வந்து அவரை சூழ்ந்துகொண்டன. வால்களால் நிலத்தை அறைந்தும் படங்களால் ஒன்றுடன் ஒன்று அடித்துக்கொண்டும் கூச்சலிட்டன. அவர்களின் ஓசைகளாலும் நெளிவுகளாலும் ஏழாமுலகம் கொந்தளித்தது.
கர்ணன் விஜயத்தை நிலைநிறுத்தி நாண்பூட்டி இழுத்தான். பெரும்பறைமேல் கோல் உரசிச் சென்றதுபோல் விம்மலோசை எழுந்தது. சிவதர் மெய்ப்பு கொண்டார். வேள்வி்யவையிலிருந்து திரும்பிவந்த பின்பும்கூட எப்படியும் அஸ்தினபுரியிலிருந்து அழைப்பு வரும் என கர்ணன் எண்ணிக்கொண்டிருந்தை அவர் அறிந்திருந்தார். வெறிகொண்டு வில்பயின்றுகொண்டிருந்ததன் வழியாக அரசி நாகினியுடன் சென்றமையால் அங்கநாட்டில் எழுந்த அலரை அவன் கடந்துசென்றான். அவனை உடனமையும் தோழன் என காத்தது அந்த வில்.
அவன் எய்த அம்புகள் முதலில் கைநடுக்கத்தாலும் விழிவிலக்கத்தாலும் இலக்கு பிழைத்தன. முதல்நாள் அவன் அம்புதொடுப்பதைக் கண்ட சிவதர் அவன் மீண்டும் வில்லவனாக எழமுடியுமா என்றே ஐயுற்றார். ஆனால் இரு நாட்களுக்குள்ளாகவே அவை முன்புபோல பிழையொழிந்தவை ஆயின. எய்பலகையில் அம்பை நட்டு அந்த அம்புமுனையை அம்புமுனையால் அடிக்கும் அவனுடைய கூர்மையை நான்கு நாளிலேயே அவர் கண்டார். வில் அவனை அனைத்திலுமிருந்து அழைத்துச்சென்றது. அவன் சொல்லடங்கினான், விழிகொடுத்து பிறரை நோக்காதவன் ஆனான். அலைபுரளும் ஏரிக்குள் அசையாமல் நின்றிருக்கும் பாறையெனத் தோன்றினான்.
அரசி மறைந்த செய்தி ஷத்ரியர்கள் நடுவே சினத்தையும் பின்பு எள்ளலையும் உருவாக்கியது. கலிங்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் சிற்றமைச்சர்கள் தூது வந்து அரசியைப் பற்றி உசாவினார்கள். அரசியை அங்கநாட்டார் கொன்றுவிட்டனர் என்று கலிங்கத்தில் செய்தி பரவியது. கலிங்கப்படை கிளம்பி வருகிறது என ஒரு செய்தி வந்தது. “கலிங்கமா? நம் மீதா? இங்கிருப்பவர் எவர் என அறிந்திருக்கிறார்களா?” என்றனர் சூதர். “இங்கிருந்தவர் பெருவில்லவர். இன்றிருப்பவர் கள்வீணர்” என்றனர் ஷத்ரியர். “கதிரவனை முகில் மூடலாம். நாள் விடிவது தவறுமா என்ன?” என்றனர் புலவர். அஸ்தினபுரியில் போர்சூழல் வலுக்குந்தோறும் அந்தச் சொற்கள் அனைத்தும் அதில் மூழ்கி மறைந்தன.
அஸ்தினபுரியின் படைகள் போருக்கெழுந்துவிட்டன என்ற செய்தி வந்த அன்றும் கர்ணன் விஜயத்தை கையிலேந்தி பயின்றுகொண்டிருந்தான். அவனிடம் சிவதர் அச்செய்தியை சொன்னபோது திரும்பி நோக்காமல் “ம்” என்றான். சற்றுநேரம் கழித்து விஜயத்தை அங்கேயே வைத்துவிட்டு தன் அறைக்கு மீண்டான். அவன் மீண்டும் மதுவிலாழ்ந்துவிடக்கூடும் என சிவதர் அஞ்சினார். ஆனால் அவன் கலைக்கவே முடியாத அமைதியில் மூழ்கினான். எச்செய்திக்கும் விழிதூக்காமல் மீசையை சுட்டுவிரலால் சுழற்றியபடி ஒற்றைச்சொல்லில் அல்லது ஒலியில் மறுமொழி சொன்னான்.
சிவதர் அந்த வில்லை மீண்டும் கொண்டுசென்று கோயிலில் வைக்க ஆணையிட்டார். அவன் அதன் பின்னர் வில்தொட்டு பயிற்சி எடுக்கவில்லை. அரண்மனையில் தன் அறையிலிருந்து வெளிவரவுமில்லை. படைகள் அங்கநாட்டிலிருந்து கிளம்பியபோது சிவதர் விஜயத்தை உடன் எடுத்துவரச் சொன்னார். அதை அரண்மனையின் படைக்கலப்புரையில் பூசெய்கைக்கு அமைத்தார். ஒவ்வொருநாளும் அவர் மட்டும் சென்று அதை வணங்கி மீண்டார். அதை நோக்கும்போதெல்லாம் ஓர் உளஅசைவை அவர் உணர்ந்தார். சுடரசைய நிழலாடும்போது நாகமென அது நெளிந்தெழுவதுபோல் விழிமயக்கடைந்து மெய்ப்புகொண்டார்.
இடைநாழிக்கு அப்பால் தூணருகே நின்றிருந்த படைத்தூதன் தலைவணங்கி அசைவால் அவருக்கு செய்தியறிவித்தான். சிவதர் முன்னால் சென்று அவனிடம் “சொல்” என்றார். “அரசரைப் பார்க்க ஒரு நாகன் வந்துள்ளான்” என்றான் தூதன். “நாகனா? அறிந்தவனா?” என்றார். “அவனை அரசர் அறிவார் என்றான்.” சிவதர் “அவன் எப்படி உள்ளே நுழைந்தான்?” என்றார். “அவர்களின் பாதைகள் நாமறியாதவை, அணுக்கரே. அவன் இருளில் இருந்து நம் மாளிகை முகப்பில் தோன்றினான். அவனை நான் முதலில் பார்த்தேன். எவரிடமும் உரைக்கவில்லை.” சிவதர் சில கணங்கள் எண்ணிய பின் “வரச்சொல்” என்றார். பின்னர் “எவரும் அறியவேண்டியதில்லை” என்றார்.
கர்ணன் விஜயத்தை தன் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு “செல்வோம்” என்றான். சிவதர் அவனுடன் நடந்தார். அவர்கள் இடைநாழியிலிருந்து கூடத்தை அடைந்தபோது வெளிவாயிலினூடாக அந்த நாகன் நிழலசைவென ஓசையில்லாமல் உள்ளே வந்தான். நாகர்களின் குறிய உடல் கொண்டவன் அல்ல. கரிய நிமிர்ந்த உடலும் விரிந்த தோள்களும் நீண்ட கைகளும் செறிந்த பெரிய பல்நிரையும் கொண்டிருந்தான். அவன் தோளில் ஒரு மூங்கில்கூடை இருந்தது. சிவதர் எச்சரிக்கையாக இருக்கும்படி நாகனைத் தொடர்ந்து வந்த படைத்தூதனிடம் விழிகாட்டினார். அவன் தன் உடைவாளில் கை வைத்தான். கர்ணன் அவனைக் கண்டதும் நின்று “தாங்களா?” என்றான். நாகன் “ஆம், இத்தருணத்தில்தான் உங்களைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது” என்றான்.
கர்ணன் “நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்” என்றான். நாகன் தன் கூடையை நிலத்தில் வைத்தான். அவன் அதை திறக்கையில் உள்ளிருந்து பெருநாகம் ஒன்று எழவிருக்கிறது என சிவதரின் உள்ளமும் விழிகளும் எதிர்பார்த்தமையால் அங்கிருந்த பிறிதொன்று என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் கீழ்கூடை பெரிய நீள்வட்ட வடிவக் கொப்பரையால் ஆனது. அதற்குள் செவ்வூன் நிறைந்திருப்பதுபோலத் தோன்றியது. நெடுக வெட்டிய கருப்பைபோல.
கர்ணன் மெல்லிய நடுக்கு கொள்வதை அவர் கண்டார். அவன் இரண்டு அடி முன்னெடுத்து வைத்து குனிந்து நோக்கினான். தூண்களில் எரிந்த பந்தங்களின் அரைவெளிச்சத்தில் அந்தக் கூடைக்குள் இருந்த மென்மெழுகாலான குழியில் கருக்குழவிபோல் ஓர் உடல் இருப்பதை சிவதர் கண்டார். கைகளைக் குவித்து வணங்குவதுபோல் நெஞ்சோடணைத்து மெல்லிய கால்களை வளைத்து வயிற்றுடன் சுருட்டிக்கொண்டு பெரிய தலையில் திறந்த விழிகளுடன் அது கனிக்குள் விதை எனத் தெரிந்தது.
சிவதர் தன் நெஞ்சத்துடிப்பை காதில் கேட்டார். கர்ணன் முழந்தாளிட்டு அமர்ந்து அந்தக் குழந்தையை நோக்கினான். அவன் தலை அதிர்ந்துகொண்டிருந்தது. “இளந்தட்சன், அன்றுகண்ட அவ்வண்ணமே இருக்கிறான்” என்றான். “அவன் வளர்வதில்லை. உண்மையில் அவன் தசைகள் நாளும் உருகி வற்றிக்கொண்டிருந்தன” என்றான் நாகன். அக்குழவியின் விழிகள் மட்டும் குழவிகளுக்குரியவையாக இருக்கவில்லை. மானுட விழிகளில் அத்தனை வஞ்சமும் சினமும் திரளமுடியுமா என சிவதர் வியந்தார். அவை கர்ணனை ஊன்றி நோக்கிக்கொண்டிருந்தன. இமைப்பற்ற நோக்கு. நாகவிழிகள்.
கர்ணன் அக்குழவியின் சிறிய கைகளை மெல்ல தொட்டான். மேல்தோல் வெந்து உரிந்ததுபோல் சிவந்த கதுப்பாலான கையில் விரல்கள் குருத்து போலிருந்தன. நகங்கள் வளர்ந்து சுருண்டிருந்தன. நாகன் கர்ணனை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். சூழ்ந்திருந்த தூண்களும் சுவர்களும் மெல்லிய நடுக்கத்துடன் இருப்பதாக சிவதர் உணர்ந்தார். ஒருகணம் மிக மெல்ல நீள கர்ணன் திடுக்கிட்டு நாகனை நோக்கி “என்ன? என்ன இது?” என்றான். “அவன் இன்று சற்றுமுன் இறந்தான்” என்று நாகன் சொன்னான். “நாகரே!” என்றபடி கர்ணன் எழுந்தான்.
சிவதர் உடல் நடுக்குகொண்டு கைகள் அதிர ஆடைநுனியை பற்றிக்கொண்டு அந்த விழிகளை நோக்கினார். அந்த விழிகள் இறந்துவிட்டிருப்பதை அப்போது உணரமுடிந்தது. ஆனால் அந்த நோக்கு உயிருடன் இருந்தது. அதிலிருந்த வஞ்சமும் சினமும் கற்சிலை விழிகளில் என அழிவின்மை கொண்டிருந்தன. நாகன் “அவனை நீங்கள் பார்க்கவேண்டும் என்று கொண்டுவந்தோம்…” என்றான். “அவன் கணந்தோறும் வலிகொண்டு வஞ்சமே உளமென்றாகி வாழ்ந்தது நிறைவுற்றது.”
கர்ணன் “ஆம், நான் பார்த்தது நன்று” என்றான். நாகன் அந்தக் கூடையிலிருந்து எடுத்து “அவனிடம் எஞ்சிய நஞ்சனைத்தும் குடிகொள்ளும் அம்புமுனை இது. இதை கொள்க” என்று சொல்லி ஒரு பொதியை கர்ணனை நோக்கி நீட்டினான். சிவதர் அதை வாங்கவேண்டாம் என கர்ணனை தடுக்க விழைந்தார். அவர் உடல் செயலற்றிருந்தது. கர்ணன் அதை வாங்கினான். கமுகுப்பாளையின் மெல்லிதழால் பொதியப்பட்டிருந்தது அந்த அம்பு. நாகன் அந்தக் குழவியை மீண்டும் மேல்கூடையால் மூடினான். அதைச் சுழற்றி தன் தோளிலேற்றிக்கொண்டு “நான் விடைகொள்கிறேன்” என்றான். கர்ணன் கையில் அந்த அம்புடன் சொல்லில்லாது நின்றான். நாகன் இரண்டு அடிகள் பின்னெடுத்து வைத்தான். விழிமயங்குவது போலிருந்தது. அவன் இருளில் மறைந்தான்.
அது வெறும் கனவா என திகைத்து கர்ணனின் கையிலிருந்த பொதியை பார்த்தார் சிவதர். அவன் மென்பாளை சுருள்களை அவிழ்த்தான். உள்ளே தேன்மெழுகில் செய்யப்பட்ட அம்புமுனையின் வடிவம்கொண்ட அச்சு ஒன்றிருந்தது. கர்ணன் அதை இரண்டாகப் பிளந்தான். அதற்குள் சுட்டுவிரல் நீளமுள்ள அம்புமுனை இருந்தது. கர்ணன் அதை விதைப்பருப்பை அகழ்வதுபோல் எடுத்தான். கரிய இரும்பின் மென்மையும் ஒளியும் கொண்டிருந்தது. அதை அவன் தன் விரல்களால் திருப்பியபோது அதன் கூர் இளநீலமாக மின்னியது. நெய்யெரியும் சுடர்போல.
சிவதர் அதை விழியசையாது நோக்கிக்கொண்டிருந்தார். மான்விழி என்ற சொல் நெஞ்சிலெழுந்தது. அந்தக் கூரின் அழகை மீண்டும் நோக்க அவர் உளம் விழைந்தது. அவ்விழைவை தானும் கொண்டவனாக கர்ணன் அதை மீண்டும் திருப்பினான். நீலமினுப்பு தோன்றி மறைந்தது. மயிற்பீலியில், முத்துச்சிப்பியில், நாகமணியில் என. நஞ்சின் ஒளி. ஆலமுண்டவனின் கழுத்துமணி. கர்ணன் அந்தத் தேன்மெழுகு அச்சில் அதை வைத்து மூடி தன் கையில் வைத்துக்கொண்டு நீள்மூச்சுடன் திரும்பி செல்வோம் என சிவதரை நோக்கி தலையசைத்தான். சிவதர் காய்ச்சல் படிந்த விழிகளுடன் உடன் நடந்தார்.