இருட்கனி - 7

குருக்ஷேத்ரத்தின் சூரியகளத்தில் அமர்ந்து அஜர் சொன்னார். அழிவில்லாதனவற்றை பாடுக! அழிவுள்ளவற்றை பாடலினூடாக அழிவற்றவை என்றாக்குக! அறியவொண்ணாமையை பாடுக! பாட்டினூடாக அவற்றை அறிபடுபொருளென்றாக்குக! தோழரே, பாடல் வாழ்வின் பொருள்மட்டுமே பிரிந்து நின்றிருப்பது. வேரில் கசந்து தண்டில் இறுகி இலையில் விரிந்து மலரில் ஒளிர்ந்து கனியில் இனிப்பது மட்டுமே திரண்டு நின்றிருப்பதையே பாடல் என்கின்றனர். இங்குள்ள ஒவ்வொன்றும் மறையும், அவை உருமாற்றி பாடலில் சென்றமையும். இங்குள்ள ஒவ்வொன்றும் மீண்டும் இவ்வண்ணமே பாடலில் இருந்து எழும். அவை தங்கள் சுவையாலேயே அறியப்படும். பாடல்களில் வாழ்கின்றன தெய்வங்கள். அறிக, பாடலுக்கு வெளியே தெய்வங்களே இல்லை!

துரோணரின் படைக்கலப் பயிற்சி நிலையிலிருந்து இழுத்த நாண் என உடல் அதிர்ந்துகொண்டிருக்க வெதும்பும் விழிகளும் விம்மும் நெஞ்சுமாக கர்ணன் தென்திசை நோக்கி சென்றபோது வழிகாட்டியவர்கள் ஏழு சூதர்கள். பிருஹத்சிலை என்னும் சிற்றூருக்கு வெளியே ஓர் ஆலமரத்தடியில் துயின்றுகொண்டிருந்த முதுசூதரான ஆவகர் தன்னருகே வந்தமர்ந்த இளைஞனின் உடலில் இருந்து அதிர்வு அக்கல்பாறையில் பரவுவதை உணர்ந்தார். எழுந்தமர்ந்து அவனை நோக்கினார். “ஓம் என்று உரை” என்றார். அவன் திகைப்புடன் அவரை பார்த்தான். அவன் விழிகளிலிருந்து நீர் வழியுமென்று தோன்றியது. அது நீரல்ல குருதி என்றும் தோன்றியது. “ஓம் என்று உரை” என்றார் ஆவகர்.

அவன் பெருமூச்சுவிட்டான். “இளையவனே, ஓம் என்று சொல்லாவிடில் உன் நரம்புகள் அறுந்துவிடக்கூடும்” என்றார். அவன் “ஓம்” என்றான். “ஏழுமுறை சொல்” என்றார் ஆவகர். அவன் ஏழுமுறை ஓங்காரம் கூறியபின் முகம் தெளிந்து “ஆம், என் தசைகளும் நரம்புகளும் நெகிழ்கின்றன. என் மூச்சு சீரடைகிறது” என்றான். “ஓம் என்பது ஆம் எனும் சொல்லே. நமக்கே உரைக்கையில் ஆம். விண்ணுக்கும் மண்ணுக்கும் என உரைக்கையில் ஓம்” என்று ஆவகர் சொன்னார். “நீ ஆமென சொல்லியிருக்கிறாய். அனைத்தையும்.” அவன் “என்னுள் திகழ்வன அனைத்தையுமா?” என்றான். “நதியில் ஓடும் கலங்கலும் சேறும் குப்பையும் அனைத்தும் விண்ணளித்தவையே” என்றார் ஆவகர்.

“முதுசூதரே, நான் சூதர்குலத்தான், என் ஆசிரியரின் குருநிலையிலிருந்து குலம் பழிக்கப்பட்டு துரத்தப்பட்டேன்” என்று கர்ணன் சொன்னான். “நீ சூதனல்ல” என்று அவர் சொன்னார். “எஞ்சுவதை நான் சொல்லவிழையவில்லை. நீயே அதை சென்றடைவாய்.” அவன் பெருமூச்சுடன் விழிதாழ்த்தினான். “சொல்க!” என்றார் ஆவகர். “என் உள்ளம் எரிந்துகொண்டிருக்கிறது. ஒருகணமேனும் துயில இயலவில்லை. சுவையறிந்து உண்ணவோ விடாயறிந்து அருந்தவோ கூடவில்லை. இவ்வுலகமென ஆனவை அனைத்தும் சுருங்கி இறுகி என்னை நெரிக்கின்றன. ஒற்றை எண்ணமன்றி எதையும் மீட்ட இயலாத உள்ளம் கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அதுவே கொடுந்துயர்” என அவர் சொன்னார். “அதைத்தான் நான் ஆம் என்று சொல்லி ஏற்றிருக்கிறேனா?” என்றான் கர்ணன்.

“ஆம், அதைத்தான்” என்றார் ஆவகர். “ஆம் என ஏற்பதே முதல்படி. ஆம், இது நோய். ஆம், இது இறப்பு. ஆம், இது சிறுமை. ஆம், இது பிழையுணர்வு. ஆம், இது அச்சம். இளையவனே, ஆம் என்னும் சொல் கணம்கோடி என வளர்ந்துகொண்டிருக்கும் அனைத்தையும் அவ்வண்ணமே உறையச்செய்துவிடுகிறது. அதன்பின் நாம் ஒவ்வொன்றையும் நோக்க இயலும். ஒவ்வொரு அடுக்காகப் பிரித்து ஆராய முடியும். விடையென ஒன்று உண்டென்றால் சென்று சேரவும் இயலும். ஆம் என ஏற்றுக்கொள்க! ஆம் என நிலைகொள்க! ஆம் என விண்ணுக்குச் சொல்க! ஆமென்று வாழ்த்துவர் தேவர். ஆமென்று ஊழ் ஒலிக்கும். ஆம் என்று அறிவு எதிரொலிக்கும்.”

“ஓம் ஓம் ஓம்” என்று கர்ணன் சொன்னான். சொல்லச்சொல்ல தெளிந்துவந்தான். “என் உள்ளம் நிலைகொள்வதை உணர்கிறேன்” என்றான். பின்னர் மெல்ல அந்தப் பாறையில் படுத்தான். “இன்கனி ஒன்றும் சுட்ட இன்கிழங்கும் உள்ளது. உண்க!” என்றார் ஆவகர். அவன் நோக்க “உளம் சோர்கையில் இன்சுவை உணவை உண்க! அது ஒரு செய்தியென்றாவதை உணரமுடியும். விண்ணிலும் மண்ணிலும் தேவர்களும் பருப்பொருட்களும் நம் மீது கனிந்திருக்கிறார்கள். ஆகவேதான் இன்சுவை என ஒன்றை படைத்திருக்கிறார்கள். எத்துயரிலும் எவ்வெறுமையிலும் நாக்கு இனிமையை உணரத்தான் செய்கிறது. அது ஒரு சொல்லுறுதி. இங்கிருந்து எவ்வண்ணமும் மீண்டுவிடமுடியும் என்னும் நம்பிக்கை. உண்க!” என்றார்.

அவன் அந்த இனிய கனியையும் கிழங்கையும் சுவைத்து உண்டான். நீர் அருந்திவிட்டு படுத்து அக்கணமே விழிமூடி துயில்கொள்ளத் தொடங்கினான். மறுநாள் வெயிலொளி விழிமேல் பட விழித்தெழுந்தபோது அவன் உள்ளம் தெளிந்திருந்தது. தலைக்குமேல் ஆலமரத்தின் இலைத்தகடுகள் ஒளிகொண்டு அசைந்தன. வெயில் விழிகளை நிறைத்து உள்ளத்தையும் ஒளிரச்செய்தது. அருகே சூதர் அமர்ந்திருப்பதை உணர்ந்து எழுந்தமர்ந்தான். “நான் விடைகொள்கிறேன்” என்றார் முதியவர். “சூதரே, எனக்கென சொல் எதையேனும் விட்டுச்செல்க!” என்றான் கர்ணன். “எத்துயரும் அதைக் கடந்து நாம் வளர்கையிலேயே அகலும். வளர்க!” என்றார் சூதர். அவன் அவரை வணங்க, வாழ்த்துரைத்த பின் அவர் கிளம்பிச்சென்றார்.

மேலும் இரு நாட்கள் தான் வளர்வதெப்படி என்று எண்ணியபடி வழிநடந்தான் கர்ணன். கற்பதனூடாக மட்டுமே வளரலாகும் என்று கண்டடைந்தான். தனக்குக் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை கண்டடைய வேண்டும் என்று உறுதிகொண்டான். தென்திசை நோக்கி சென்றுகொண்டே இருக்கையில் இரண்டாவது சூதரான சம்வகரை கண்டடைந்தான். அவர் சுனைக்கரையில் அமர்ந்து தூண்டிலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அவன் அவர் அருகே சென்று வணங்கிவிட்டு சுனையை கலக்கலாகாது என அகன்று சென்று நீரை அள்ளி அருந்தினான். தூண்டிலை இழுத்து மீனை எடுத்த சம்வகர் மீனுடன் காட்டுக்குள் செல்வதை கண்டான். ஆர்வம் தோன்ற அவரைத் தொடர்ந்து சென்றான். அந்த மீனை அவர் அங்கே சிறிய மரப்பொந்து ஒன்றுக்குள் இறகுகள் உதிர்ந்து இறக்கும் நிலையிலிருந்த கொக்குக்கு கொடுத்தார். அது அந்த மீனை வாங்கி உண்டது.

அவனை நோக்கி திரும்பிய சம்வகர் “அதன் இறுதி விழைவு. அதை கடக்காவிடில் அது மீன் எனப் பிறக்கலாகும்” என்றார். அவரை வணங்கிய கர்ணன் “நான் என் ஆசிரியரை தேடிச்செல்கிறேன். எனக்குரிய ஆசிரியர் எவர்?” என்றான். “உன் முந்தைய ஆசிரியர் எவர் என்பதே வினா. அவரை வென்றவரோ வெல்லக்கூடுபவரோதான் உன் ஆசிரியர்” என்றார் சம்வகர். “நான் துரோணரின் மாணவன்” என்றான் கர்ணன். “எனில் உன் ஆசிரியர்கள் மூவர். பீஷ்மர், சரத்வான், பரசுராமர்” என்றார் சம்வகர். “சூதரே, நான் பரசுராமரை எங்கே சந்திப்பேன்?” என்றான் கர்ணன். “ஆசிரியரும் உன்னை சந்திக்க விழையவேண்டும். நீ சென்றுகொண்டே இரு. அவரை சென்றடையாமல் நிலைகொள்ளாதே” என்றார் சம்வகர்.

மூன்றாமவரான பிரவாகர் ஒரு சாலையோர விடுதியில் அந்தியிருளில் அனல்மூட்டி அருகமர்ந்து கள்மயக்கில் கிணைமீட்டி இளிவரல் பாடிக்கொண்டிருந்தார். வணிகர்கள் சூழ்ந்தமர்ந்து அவரை கேட்டுச் சிரித்து ஊக்கிக்கொண்டிருந்தனர். அவன் அருகமர்ந்து அப்பாடலை கேட்டான். பின்னிரவில் அவர்கள் ஒவ்வொருவராக விழுந்து துயில்கொண்டனர். அவர் அவனிடம் “நீ துயில்கொள்ளவில்லையா?” என்றார். “நான் மது அருந்தவில்லை” என்று அவன் சொன்னான். “சொல், நீ விழைவது என்ன?” என்றார். “நான் பரசுராமரை காணச்செல்கிறேன்” என்றான். அவர் நகைத்து “எந்தப் பரசுராமர்?” என்றார். அவன் “அறியேன், பெயரை அன்றி பிறிதெதையும் கேள்விப்பட்டதில்லை” என்றான்.

பிரவாகர் பரசுராமரின் கதையை பாடினார். பிருகுகுலத்து ஜமதக்னியின் துணைவி ரேணுகையின் மைந்தன் எனப் பிறந்து அன்னை தலையறுத்து தந்தையிடம் வரம்பெற்று அவர் இறப்பற்றவரானார். கார்த்தவீரியனின் ஆயிரம் கைகளை அறுத்துக் கொன்றார். ஷத்ரியகுலத்தை ஏழுமுறை கருவறுத்து ஐந்து ஏரிகளை குருதியால் நிரப்பி தந்தைக்கு நீர்க்கடன் முடித்தார். “அவர் வாழும் அந்நிலம் தென்னகத்தில் அமைந்துள்ளது. திருவிடத்தின் முனையில் பார்க்கவராமனின் அன்னை ரேணுகையின் நாடு அது. அதை ரேணுபுரி என்பார்கள். பரசுராமர் அன்னையை அணுகியதுமில்லை. அன்னையை விட்டு நீங்கியதுமில்லை என்கின்றன நூல்கள்.” அவரை வணங்கி கர்ணன் ரேணுபுரி நோக்கி சென்றான்.

தண்டகாரண்யத்தில் கர்ணன் சந்தித்த சூதரான உத்வகர் அவனுடன் ஒருநாள் வழித்துணைவராக வந்தார். பரசுராமரின் கதையை அவர் அவனுக்கு மேலும் விரித்துரைத்தார். “பார்க்கவ குருமரபின் பதிநான்காவது பரசுராமர் இப்போது இருப்பவர். பதின்மூன்றாவது பரசுராமர் தண்டகாரண்யத்தில் பஞ்சாப்ஸரஸ் என்ற இடத்தில் தவம் செய்தார். முதல் பரசுராமர் பாரதவர்ஷத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து ஷத்ரிய குலங்களை அமைத்தார். அந்நிலங்களின் பழங்குடிகளில் வேதமும் தர்ப்பையும் அளிக்கப்பட்டவர்கள் பிருகு குலத்து பிராமணர்களானார்கள். செங்கோலும் மணிமுடியும் அளிக்கப்பட்டவர்கள் அக்னிகுல ஷத்ரியர்களானார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரசுராமர் அமைந்தார். கிழக்கு திசையை அத்துவரிய ராமனும் வடக்கை உதகாத ராமனும் மத்திய தேசத்தை ஆசியப ராமனும் ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்ட ராமனும் அதற்கு அப்பால் உள்ள திருவிடத்தை சதசிய ராமனும் வழிநடத்தினர்.”

“சதசியகுலத்தைச் சேர்ந்தவர் இன்றிருக்கும் பரசுராமர். படைக்கலத்திறனும் படைத்திறனும் நூல்திறனும் அரசுசூழ்திறனும் அமைந்தவர். அவரை நாடிச் செல்க! காடுகள் எழுந்த மலைகளையும் நீர் பெருகிய பேராறுகளையும் வெயிலில் வெந்துகிடந்த பாழ்நிலங்களையும் கடந்து அங்கே சென்றடைய உன் உள்ளத்து உறுதியே வழிகாட்டியாக அமைக!” என்றார் உத்வகர். விவகர் அவனை கோதையின் கரைவரை அழைத்துச்சென்றார். ரேணுநாட்டின் பிரதீபம் என்னும் காட்டுக்குள் பரசுராமரின் குருகுலம் இருப்பதாக அவர் சொன்னார். பரசுராமரிடமிருந்து மட்டும் விற்கலை பயிலும் நிலையில் இருக்கும் பெருவில்லவர்களே அங்கு சென்றடையமுடியும் என்றார். கர்ணன் ரேணுநாட்டை சென்றடைந்தபோது அவன் தாடி மார்பை எட்டியிருந்தது. நீள்குழல் சடைபிடித்து தோளில் விரிந்திருந்தது. அவன் விழிகள் மட்டும் தவமுனிவர்களுக்குரிய ஒளி கொண்டிருந்தன.

ரேணுநாட்டில் அவன் சந்தித்த பரிவகர் அவனை அடர்காட்டின் நடுவே கோதாவரி நதிக்கரை ஓரத்தில் அமைந்த பரசுராமரின் குருநிலையை காண அழைத்துச்சென்றார். “அவரிடம் நீர் ஷத்ரியர் என சொல்லவேண்டியதில்லை” என்றார். “நான் ஷத்ரியன் அல்ல, சூதன்” என்று அவன் சொன்னான். “ஷத்ரிய இயல்பு உம்மிடம் கூடவேண்டியதில்லை என்றேன்” என்றார் பரிவகர். “ஷத்ரிய ஆற்றலை அழித்து அனல்குலத்து அரசர்களை நிறுவும் வேள்வியில் தொடர்கிறது பரசுராமர்களின் பெருமரபு. நீர் சூதர் என்பதே தகுதி என்று உணர்க! எது உம்மை தகுதியற்றவராக்கியதோ அதனாலேயே இங்கு தகுதி பெறுகிறீர்.” கர்ணன் அவரை வணங்கி “அவ்வாறே ஆகுக!” என்றான்.

கர்ணனை பராவகர் என்னும் முதிய சூதரிடம் அழைத்துச்சென்றார் பரிவகர். “இவர் பரசுராமரின் குருநிலையின் பாடகர். பிருகுகுடியின் கொடிவழியை பாடுபவர். இவர் அடிபணிக, ஆணைபெற்று காட்டுக்குள் நுழைக!” என்றார். அடிபணிந்தபோது பராவகர் சொன்னார். “ஒவ்வொருவரும் தங்கள் உச்சமொன்றைச் சென்றடைந்து அதில் ஏறிநின்றிருக்கும் ஒரு தருணம் உண்டு. அத்தருணத்தால் அவர்கள் மண்ணில் தோல்வியடைவார்கள், விண்ணவர்க்கு இனியவரும் ஆவார்கள். உன் வெற்றி எங்கு என நீயே முடிவுசெய்க!” கர்ணன் “ஆம்” என்றான். “உன் தந்தை உன்னால் பெருமைகொள்க!” என்றார் பராவகர். பராவகரின் குடிலில் கர்ணன் ஏழு நாட்கள் தங்கினான். அவர் அவனை பரசுராமரின் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களுடன் காட்டுக்குள் அனுப்பினார்.

கர்ணன் பரசுராமரின் யானைத்தோல் கூடாரத்தின் முன் மாணவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டான். அதிகாலையில் வேள்வியின் நெய்ப்புகை மரக்கிளைகளின் இலையடர்வுகளில் தங்கி மெல்ல பிரிந்துகொண்டிருந்த அவ்வேளையில் அவன் அதுவே தன் இடமென்னும் நிறைவை அடைந்தான். கூடாரத்திற்குள் புலித்தோல் விரிக்கப்பட்ட யோகபீடத்தில் நீண்ட வெண்ணிறத் தாடியுடன் அமர்ந்திருந்த பரசுராமர் வலக்கையில் இருந்த எழுத்தாணியையும் இடக்கையில் இருந்த சுவடியையும் விலக்கி ஏறிட்டு நோக்கி “நீ ஷத்ரியனா?” என்றார். “இல்லை ஆசிரியரே, நான் சூதன்” என்றான் கர்ணன். அவனை கூர்ந்து நோக்கி “ஷத்ரியனுக்குரிய தோற்றத்துடன் இருக்கிறாய்” என்றார் பரசுராமர். “அங்கநாட்டுச் சூதனாகிய அதிரதனுக்கும் ராதைக்கும் மைந்தன் நான். அஸ்தினபுரியின் இளவரசராகிய துரியோதனரின் அணுக்கத்தவன்” என்று கர்ணன் சொன்னான்.

அவனை மேலும் கூர்ந்து நோக்கியபடி “அந்த அனலைத் தொட்டு ஆணையிடு. நீ ஷத்ரியன் அல்ல என்று” என்றார். அவன் அந்த அனல்மேல் கையை வைத்து “நான் சூதன். அறிக, அனல்!” என்றான். அவர் “நீ கோருவதென்ன?” என்றார். “நான் இயல்பிலேயே போரியல்பு கொண்டிருக்கிறேன். ஆகவே என்னால் சவுக்கேந்தி குதிரைக்காரனாக வாழ முடியவில்லை. துரோணரிடம் விற்கலை கற்றேன். குலத்தின் பொருட்டு அவரால் சிறுமையுண்டேன். என் தன்மதிப்பைக் காக்கும் விற்கலை எனக்குத் தேவை” என்றான். அவர் அவன் விழிகளை நோக்கி “மண்ணாள விழைகிறாயா?” என்றார். அவன் வெறுமனே நிற்க “விற்கலையில் இனி நீ அறிய ஏதுமில்லை என உன் விழிகளும் விரல்களும் சொல்கின்றன” என்றார்.

கர்ணன் “ஆம், ஆசிரியரே. என் ஆணவம் அரியணையின்றி அமையாது” என்றான். புன்னகையுடன் “பாரதவர்ஷம் முழுக்க புதிய ஷத்ரியர்களை உருவாக்குவதே என் முதலாசிரியரின் ஆணை. நீ இங்கிருக்கலாம். போர்க்கலை பயிலலாம். என்னிடமே அனல்சான்று பெற்று ஷத்ரியனாகுக! மண்ணை வென்று புனல்சான்று பெற்று முடிசூடு. உனக்கு பார்க்கவர்களின் வாழ்த்துரை துணையிருக்கும்” என்றார். அவர் பாதங்களை வணங்கி அருகமர்ந்தான் கர்ணன். அவன் தலைமேல் கைவைத்து “பொன்றாப் புகழ்பெறுக, அனைத்து நலன்களையும் கொள்க! விண்ணவரருள் இலங்குக!” என பரசுராமர் வாழ்த்தினார். கர்ணன் “என் நல்லூழ்” என்றான்.

பதினெட்டுமாத காலம் கர்ணன் பரசுராமருடன் இருந்தான். அவர் காலடிகளில் பணிவிடை செய்தான். அவர் உளம்மகிழும் மைந்தனும் ஆனான். அவர் பெருமதிப்பு கொள்ளும் மாணவனாகவும் உயர்ந்தான். அவன் அணுகுந்தோறும் அவனை பரசுராமர் அறியலானார். அவனிடம் ஒரு குறையை அவர் உணர்ந்தார். “உன்னில் ஓர் அணுவிடை பிழை உள்ளது. அது என்னவென்று அறிய விழைகிறேன்” என்று அவனிடம் சொன்னார். “உங்கள் அருளால் அதை வென்று கடப்பேன், ஆசிரியரே” என்று அவன் சொன்னான். கோதையின் கரையில் ஒருநாள் அந்தியில் அவர்கள் இருவரும் மட்டும் ஆலமரத்து அடியில் அமர்ந்திருக்கையில் பரசுராமர் அவன் விழிகளை நோக்கினார். “உன்னில் பிறழ்வது என்ன என கண்டுகொண்டேன்” என்றார்.

கர்ணன் திகைப்புடன் நோக்கி நின்றான். “சற்றுமுன் ஒரு மான் வழியில் நின்றது. என்னைக் கண்டு அது பிறிதொரு விலங்கு என்றே எண்ணியது. உன்னை நோக்கியபோது அதன் விழிகளில் அச்சத்தை கண்டேன். அது பார்ப்பது பிறிதொருவனை. இங்கு நீ வருவதற்கு முன்னரே இருந்தவன் அவன்” என்றார் பரசுராமர். “நீ இங்கே அமையவேண்டுமென்றால் உன்னிடம் இருப்பன அனைத்தையும் விட்டுவிடவேண்டும்” என்றார். “வரும் வழியிலேயே ஒவ்வொன்றாக உதறிவிட்டேன், ஆசிரியரே. என் நிலமும் குடியும் அப்பால் பிறவி முன்நினைவுகள் என மறைந்துவிட்டன” என்று கர்ணன் சொன்னான். “உன் விழிகளில் வஞ்சம் தெரிகிறது” என்று பரசுராமர் சொன்னார். “வஞ்சம் ஊசிமுனையால் தொட்டு எடுக்குமளவுக்குச் சிறிதாயினும் வளரும் நஞ்சு அது. அதை உதறுக!”

கர்ணன் விழிதழைத்து “உதற முயல்கிறேன்” என்றான். “வஞ்சத்தை உதறுவது எளிதல்ல. வஞ்சத்தின்மேல் கடமையை, கல்வியை, ஞானத்தை போட்டாலும் அது அவற்றை மீறியே எழும். கனிவு ஒன்றே வஞ்சத்தை அழிப்பது, அனலை நீர் என.” கர்ணன் பேசாமலிருந்தான். “அவ்வஞ்சத்துடன் நீ எதை கற்க இயலும்? நீ கற்பவை ஒவ்வொன்றின் ஓரத்திலும் அவ்வஞ்சம் வந்தமையும். நீ பெறுபவை அனைத்தும் திரிபடைந்தவையென்றாகும்” என்றார் பரசுராமர். “நான் என்ன செய்யவேண்டும், ஆசிரியரே?” என்று கர்ணன் கேட்டான். “வஞ்சத்தைக் கடப்பதற்கு எளிய வழி கனிவது. அது நெடுந்தொலைவு சென்று சிலரால் எய்தப்படுகிறது. ஒருகணத்தில் திரும்பி சிலரால் ஈட்டப்படுகிறது. ஆனால் வஞ்சத்தை நிறைவேற்றுவது மேலும் எளிய வழி. போர்வீரனுக்கு அது ஒப்பப்படுவதும் கூட.”

அவன் தலைமேல் கைவைத்து “உன் வஞ்சம் எவருடன் என்று சொல். உன் வஞ்சத்தை எவ்வண்ணம் நிகழ்த்தப்போகிறாய் எனக் கூறு. என் வில்லை உனக்களிக்கிறேன். அதை ஏந்தியபடி சென்று உன் வஞ்சத்தை முடித்து திரும்பி என்னிடம் வா” என்றார். கர்ணன் திகைப்புடன் கைகூப்பி நோக்கி நின்றான். “இப்புவியில் எவரும் என் வில்முன் நின்று பொருத இயலாது. அதன் நாணோசையே அனைவரையும் பணியச் செய்யும். உன் எதிரி எவராயினும் என் எதிரியே. செல்க, கொன்றோ வென்றோ பழிநிகர் செய்து மீள்க!” கர்ணன் கூப்பிய கைகள் நடுங்க அவரை நோக்கிக்கொண்டிருந்தான்.

“செல், இப்போதே கிளம்பு. பழிநிகர் செய்தபின் உன் உள்ளம் முற்றடங்கும். அதன் பிறகும் உனக்குக் கற்பதற்கு ஏதேனும் உண்டென்று தோன்றினால், அக்கல்வியால் ஆற்றுவதுண்டென்று தோன்றினால் திரும்பி வா. இல்லையேல் என் வில் உன்னை பலிகொண்டு என்னிடமே திரும்பும்” என்றார் பரசுராமர். கர்ணன் நீள்மூச்செறிந்தான். பின்னர் விழிதாழ்த்தி நிலம் நோக்கியபடி “என்னிடம் வஞ்சம் உள்ளது, ஆசிரியரே. அது ஆறாப் புண் என எனக்கு நோய் அளிக்கிறது. என் வஞ்சம் எவரிடம் என்பதும் தெரிகிறது. இந்த வில்லுடன் எழுந்தால் என் வஞ்சத்தை முழுமையாக நான் தீர்த்துவிடவும் முடியும். ஆனால்…” என்றான். “சொல்க!” என்றார்.

கர்ணன் சிலகணங்களுக்குப் பின் “என்னால் இயலவில்லை” என்றான். “ஏன்?” என்றார் பரசுராமர். “இந்த வில்லை நான் அறிவேன். இது வஞ்சங்களை எச்சமில்லாது துடைத்து அழித்த வரலாறு கொண்டது.” பரசுராமர் புன்னகைத்தார். “நான் அவ்வண்ணம் அழிக்க விழையவில்லை. என்னால் அது இயலாது” என்றான் கர்ணன். “நீ கொடையளிப்பவர்களுக்கு அதற்கான தகுதி உண்டா?” என்று பரசுராமர் கேட்டார். “நான் ஒருபோதும் அதை எண்ணுவதில்லை” என்றான் கர்ணன். பரசுராமர் அவனை சற்றுநேரம் நோக்கிய பின் புன்னகை செய்தார். “நீ எவர் என நான் அறிகிறேன், இவ்வாறே என முன்னுணர்ந்துமிருந்தேன்” என்றார்.

“ஆனால் நஞ்சென உடலில் எழுந்தவையும் நுழைந்தவையும் முற்றாகவே வெளியேறிவிடவேண்டும். ஒரு துளி எஞ்சினாலும்கூட அது நோயென்றாகி அழிவை கொண்டுவரும்” என்று பரசுராமர் தொடர்ந்து சொன்னார். கர்ணன் “நான் பிறிதொன்றும் இயற்றுவதற்கில்லை” என்றான். அவர் புன்னகைத்து “இம்முடிவால் ஒருநாள் நீ உன் இறப்பை ஈட்டிக்கொள்வாய்” என்றார். “அறிவேன்” என்று அவன் சொன்னான். அவர் கைநீட்டி அவன் தலையைத் தொட்டு “உங்களைப் போன்றவர்கள் இம்மண்ணில் பிறந்துகொண்டே இருக்கிறீர்கள். பிற அனைத்தையும் சிறியவை என்றும் பொருளற்றவை என்றும் காட்டிவிட்டு விண்மீள்கிறீர்கள்” என்றார்.

கர்ணன் அவருடன் உறைந்து அவருடைய வில் அவரென்று அவனை எண்ணுமளவுக்கு விற்கலை பயின்றுதேர்ந்தான். அவன் வில்தேர்ந்து எழுந்தோறும் விண்ணில் இந்திரன் அமைதியிழக்கலானான். மண்ணளக்கும் தேவர்கள் வந்து அவனிடம் கர்ணன் அடைந்த ஆற்றல்களைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தனர். பரசுராமர் அவனுக்கு தானறிந்த அனைத்தையும் கற்பித்தார். கற்றவை அவனில் எவ்வண்ணம் சென்றமைகின்றன என்று நோக்கி மேலும் கற்பித்தார். எந்த ஆசிரியரையும்போல சிலவற்றை கரந்தார். ஆனால் அவன் தன்னைப் போலாகி தன்னை விஞ்சும்படி எழக்கண்டு உளமகிழ்ந்தார். ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோற்கிறார்கள், ஏனென்றால் மாணவனாக தான் அழிவின்மைகொள்வதை உணர்கிறார்கள். அறுதிவெற்றி என்பது தம்மின் பெருமைகொண்ட தன் மாணவனை அடைதலே என அவர்கள் அறிகிறார்கள். எஞ்சிய இறுதி அம்பையும் பரசுராமர் கர்ணனுக்கு அளித்தார். அவன் இயல்பாக அந்த இடத்தை வந்தடைந்து அவரை வென்று வணங்கினான்.

விண்ணுக்கு எழுந்து அமராவதியில் இந்திரனின் அவையை அடைந்த சுரதன் என்னும் தேவன் “இன்று காலை கர்ணன் தன் அம்பு ஒன்றினூடாக விற்கலையில் நிறைவுகொண்டு பரசுராமருக்கு நிகர் என்றானான். கலைநிறைவு நிகழுமிடத்தில் தோன்றும் விண்வில் வானில் எழுந்தது. பொன்னொளி காற்றில் நிறைந்திருந்தது. அதைக் கண்டு அங்கே சென்று நோக்கினோம். அந்த அம்பு இலக்கடைந்தபோது விண்குவையில் இருந்து ஆம் ஆம் ஆம் என்னும் ஓசை எழக் கேட்டோம். இப்புவியில் பிறிதொரு வில்லவன் அவன் முன் நின்றிருக்க இயலாதென்று நிறுவிக்கொண்டோம். அதை உரைக்கும்பொருட்டே இங்கு வந்தோம்” என்றான்.

அரியணையிலிருந்து எழுந்த இந்திரன் “என் மைந்தன் அர்ஜுனன் அவனுடன் போரிட்டு நின்றிருக்க முடியாதா? அவன் அடைந்த அரிய அம்புகளை நான் அறிவேன்” என்றான். சுரதன் “இன்றிருக்கும் நிலையில் அரைநாழிகைப்பொழுதில் அர்ஜுனனை கர்ணன் கொல்வான்” என்றான். அவையிலிருந்த பிருஹஸ்பதி முனிவர் “அவர்கள் இருவரும் களத்தில் எதிரெதிர் நின்றே ஆகவேண்டும். கதிரோனும் விண்முதல்வனும் மண்ணில் மைந்தர்களைப் பெறுவது அதன்பொருட்டே” என்றார். இந்திரன் நிலையழிந்தவனாக அவையில் சுற்றிவந்தான். “அவனை எப்படி என் மைந்தன் வெல்வான்? அவன் ஆற்றலை எப்படி நாம் மட்டுப்படுத்த இயலும்? அமைச்சர்களே, கூறுக!” என்றான் இந்திரன்.

பிருஹஸ்பதி “அதற்குரிய வழி ஒன்றே. அவன் கற்கும் கலை முழுமையுறலாகாது” என்றார். “எவ்வண்ணம்?” என்றான் இந்திரன். “அவன் கலை நிறைவுற்று ஆசிரியரிடம் நற்சொல் பெறக்கூடாது” என்றார். “ஆனால் அவர் உளம்நிறைந்திருக்கிறார். இப்புவியில் எதுவும் இனி தனக்கு எஞ்சவில்லை என்று உணர்ந்து உளம் நெகிழ்ந்திருக்கிறார். மாணவனை மைந்தன் எனத் தழுவிக்கொண்டு கோதையின் கரைக்குச் சென்று துயில்கொள்ளவிருக்கிறார். நாளை அவர் அவனை வாழ்த்தி வழியனுப்பி வைப்பார்” என்று சுரதன் சொன்னான். “ஆம், எனில் இன்றொருநாள் பொழுதிருக்கிறது என்றே பொருள். அரசே, அவன் அவரிடம் மறைத்த ஒன்றுள்ளது. அவன் ஷத்ரியன். சூதனென்று சொல்லி அவர் அளியை பெற்றிருக்கிறான். அவனுடைய ஷத்ரியத்தன்மை வெளிப்படுமென்றால் ஆசிரியர் முனிவார்” என்றார் பிருஹஸ்பதி.

“அதை நான் நிகழ்த்துகிறேன்” என்ற இந்திரன் ஒரு கருவண்டென வடிவுகொண்டு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தான். பரசுராமர் தலையை தன் தொடைமேல் வைத்துப் படுத்திருக்க, கர்ணன் தொடையின் அடியில் ஏதோ கடிப்பதை உணர்ந்தான். தொடை துடித்து விலக ஆசிரியர் “ம்ம்” என்றார். கர்ணன் தொடையை அசைக்கவில்லை. வலி தசைகளில் இருந்து நரம்புகள் வழியாக உடலெங்கும் பரவுவதை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் கிளம்பி பதினைந்தாண்டு காலம் ஆகியிருந்தது. அப்பதினைந்தாண்டு காலத்தின் ஒவ்வொரு கணமும் வலியாக மாறி அவன்முன் விரிந்து கிடந்தது. வலியில் திளைத்த அந்த அரைநாழிகை நேரம் அப்பதினைந்தாண்டுகளுக்கு நிகராக நீண்டிருப்பதை அறிந்தான். உள்ளே ஏதோ நரம்பில் அந்த வண்டின் கொடுக்கு மெல்ல தொட்டது.

பரசுராமர் விழித்தெழுந்தபோது அவர் உடல் குருதியால் நனைந்திருப்பதை உணர்ந்தார். அக்கணமே அவனை அடையாளம் கண்டுகொண்டு வில்லுடன் எழுந்தார். “சொல்க, நீ யார்?” என்றார். அவன் வணங்கி தான் சூதனே என்றாலும் தன் உள்ளம் தன்னை ஷத்ரியன் என்றே உணர்கிறது என்றான். அவர் தன் வில்லின் நாணைத் தொட்டபடி உளம்கூர்ந்து அவனை அறிந்தார். “ஆம், நீ ஷத்ரியனே. உன் அகமும் அதை அறியும். அறிந்தே என்னை பொய்சொல்லி ஏமாற்றினாய்” என்று அவனை நோக்கி சீறினார். “நீ கற்றவை அனைத்தும் உரிய தருணத்தில் உன்னைவிட்டு அகல்வதாக!” என்று தீச்சொல்லிட்டார். பின்னர் உளம்நெகிழ்ந்து அவனை தோளுறத் தழுவி வாழ்த்தும் அளித்தார். அவரை வணங்கி விடைபெற்று அவன் காட்டிலிருந்து வெளியேறினான்.

கர்ணன் காட்டின் விளிம்பிலமைந்த பராவகரின் குடிலுக்குச் சென்று அவரை வணங்கி கல்விநிறைந்து விடைகொள்வதாகச் சொன்னான். அவர் முதுமையில் நோக்கு மங்கலாகி உடல் நைந்து திண்ணையில் தன் சிப்பியாழுடன் அமர்ந்திருந்தார். “குருதிமணம் வருகிறதே?” என்றார். “என் குருதி அது” என்று அவன் சொன்னான். “என் உடலில் ஒரு சிறுபுண் உள்ளது.” அவர் பற்களைக் காட்டி புன்னகைத்து “குருதிமணக்கும் கல்வி” என்றார். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “வீரனே, அது நீயே ஈட்டிக்கொண்ட புண் என அறிவாயா?” கர்ணன் “ஆம்” என்றான். “நீ அளித்த கொடை. அதன் விளைவாக உன்னில் எஞ்சிய வஞ்சம். அந்தப் புண் என்றும் உன்னில் வலிகொண்டிருக்கும்.” கர்ணன் “ஆம், அதை அப்போதே ஆசிரியர் சொன்னார்” என்றான்.

பராவகர் “வலி நன்று. அதைப்போல் உற்றதோழன் பிறிதில்லை. அது உடனுறைகையில் உனக்கு ஒருபோதும் ஐயம் எழாது. உன் ஊழும் உனது கொடையால் அமைவதே” என்றார். கர்ணன் அவரை மீண்டும் வணங்கி அங்கிருந்து வடக்கு நோக்கி கிளம்பினான்.