இருட்கனி - 62

கிருதவர்மன் கைகளை ஊன்றி தரையிலிருந்து எழுந்து நின்றபோது உடலுக்குள் நீர் நலுங்க கால்கள் தள்ளாடின. இரு கைகளையும் சிறகுபோல் விரித்து, கால்களை நன்கு அகற்றி, கண்களை மூடி அசையாமல் நின்று அகத்தை நிலைநிறுத்திக்கொண்டான். செவி ரீங்கரிக்கும் அமைதி எங்கும் சூழ்ந்திருந்தது. கண்களைத் திறந்தபோது அவனை மெல்லிய சாம்பல் நிறத் துணியால் எவரோ மூடி சுழற்றிக் கட்டியிருந்ததுபோல் தோன்றியது. அவன் கண்களை மூடி தன் உளச் சொற்களைக் குவித்து மீண்டும் திறந்து அப்பகுதியை நோக்கினான். சூழ்ந்திருந்த புகை மூச்சிரைக்க வைத்தது.

விண்ணிலிருந்து புகை இறங்கி படிவதுபோல் தோன்றியது. விண்பரப்பு பாறையென உறைந்த புகையால் ஆனது போலிருந்தது. அதில் அவ்வப்போது விரிசல்கள்போல் மின்னல்கள். அதன் பாறைகள் உருண்டு உருண்டு அப்பால் சென்று பேரொலியுடன் விழுந்தன. காற்று முற்றாக நின்றுவிட்டிருக்க மூச்சு ஓட்டமே கடினமானதாக ஆகிவிட்டிருந்தது. சூழ்ந்திருந்த புகை சுருள்வளையங்களாக அன்றி மெல்லிய தோல்படலம் போலவே தோன்றியது. கைகளால் சிலந்தி வலையை என அதை அள்ளி கிழிக்க முடியும் என்பதுபோல. சரிந்து விழுந்தால் மெல்லிய சேற்றுப் பரப்பென அது தாங்கிக்கொள்ளும் என்பதுபோல.

எங்கிருக்கிறோம் என அவனால் உணர இயலவில்லை. நெடுநேரம் அது எந்தப் பொழுது என்றும் தெளிவு கூடவில்லை. அது குருக்ஷேத்ரம் என்னும் உணர்வு ஏற்பட்டதுமே சித்தம் சுருண்டு அதிர்ந்தது. போரின் முந்தைய கணம் நினைவிலெழுந்தது. அவன் தன் கைகளை நோக்கினான். அவை மட்கிய வாழைமட்டைபோல் வெண்ணிறமாகத் தெரிந்தன. வெண்சாம்பலா? கைவிரல்களை அசைக்கமுடியவில்லை. அவற்றை பிசினால் சேர்த்து ஒட்டியது போலிருந்தது. கையை உணர முடிந்தது. ஆனால் கையில் குளிரையோ வெம்மையையோ வலியையோ அறிய இயலவில்லை. போர் முடிந்துவிட்டிருக்கிறது. ஆனால் எரி அணையவில்லை. எஞ்சியவர்கள் எங்கே?

அவன் புகையினூடாக நடந்தான். தொலைவிலிருந்த களஞ்சியங்கள் மீண்டும் பற்றிக்கொண்டு அனலில் சிவந்து வண்டுகள்போல் ரீங்கரித்துக்கொண்டிருந்தன. கூரை எரிந்து விழுந்து அணைந்து கரி மூடி கூலம் நிறைத்த மூட்டைகளை எரி எழாமல் அணைத்தது. ஆனால் கூலம் உள்ளிருந்து புகைந்து அனல் கொண்டு கரிப்போர்வையைக் கிழித்து மேலெழுந்தது. கூலம் அவ்வாறானது. அதில் ஒரு பருவில் அனலிருந்தால் போதும் பிற அனைத்தையும் அதுவே பற்றவைக்கும். எழுந்து எரியாது, அணைந்து மறையவும் ஒப்பாது. களஞ்சியங்கள் இன்னும் நெடும்பொழுதுக்கு நின்றெரியும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

அது படையின் எப்பகுதி? அங்கே எங்கும் மானுட நடமாட்டம் இருப்பதுபோல் தெரியவில்லை. அவன் இருமி நெஞ்சிலிருந்து கோழையைத் துப்பியபடி நடந்தான். சிறு கரிக்குன்றுகள்போல் உடல் வெந்த யானைகள் ஆங்காங்கே கிடந்தன. அவற்றிலிருந்து உருகி வழிந்த கொழுப்பு எரியும் எதையேனும் தொட்டபோது பற்றிக்கொண்டு நீலச்சுடர் காற்றிலெழ புகைந்தது. அனல் நீரென ஓடிச்சென்று யானைக்குவையை அடைந்தது. யானையின் வயிற்றுக்குள் இருந்து எழுந்த வாயுவில் நீல இதழ்போல தொடாது நின்று எரிந்தது. புகை மண்டி அணைந்து காற்றில் சீறி மீண்டும் பற்றிக்கொண்டு கூடாரங்கள் எரிந்தன. நிலமெங்கும் கரி. அதன்மேல் காலடித் தடங்கள். எரிந்தணைந்த ஒரு பீடம் மென்கரிப்படலத்தால் ஏதோ பாதாள தெய்வங்கள் சமைத்ததுபோல காத்திருந்தது.

எங்கிருக்கிறார்கள்? போர் முடிந்து அனைவரும் விட்டுச்சென்றுவிட்டார்களா? அந்த ஐயம் எழுந்ததும் அதை நசுக்கி பெரும்பாறைபோல் அடுத்த ஐயம் எழுந்தது. உயிருடன்தான் இருக்கிறோமா? அவன் களத்திலிருந்து உடல் வெந்த குதிரைமேல் ஏறியதை நினைவுகூர்ந்தான். உடலை அங்கு உதிர்த்துவிட்டுத்தான் களத்திலிருந்து மீண்டேனா? இல்லையேல் செத்த குதிரைமேல் எப்படி ஊர்ந்தேன்? இப்பொழுது இங்கிருக்கிறேன். இந்தப் புகை மண்ணின் புகைதானா? விண்ணவரோ இருளரோ விழிக்கு தென்படவில்லை. மீண்டும் இருமி நெஞ்சடைக்க கால் மடித்து அவன் அமர்ந்தான். உடல் உலுக்கிக்கொண்டே இருந்தது. மூச்சிழுக்கும்தோறும் நெஞ்சு எடைகொள்ளும் விந்தையை உணர்ந்தான்.

உடலின்மேல் மெல்லிய ஈரமான பட்டுத்துணியை ஒட்டி வைத்ததுபோல் தோன்றியது. அமர்ந்தபோது முதுகும் தொடைகளும் விரிய உடலில் ஒட்டிய அப்பட்டுத்துணி கிழிவதை உணர்ந்தான். அங்கே சற்று எரிந்தது. அவன் தன் இரு கைகளையும் மீண்டும் கண்ணெதிரே தூக்கிப் பார்த்தான். நெடும்பொழுது நீராடி எழுந்தவைபோல் இருந்தன அவை. வெந்து வெளுத்த கிழங்குகள் என கால்கள். உடலெங்கும் தோல் வெந்து உரிந்துவிட்டிருக்கிறது. சிதையில் பாதியெரிந்த சடலம்போல. நான் உயிருடன் இல்லை. உயிருடனிருந்தால் வலியை அறிந்திருப்பேன். இப்போது வலியில்லை. உடலின் எடை இருக்கிறது. உள்ளேன் எனும் உணர்விருக்கிறது. அவையிரண்டும் மட்டும்தான் நான். நினைவுகள் சிதைந்து வெறும் துண்டுகளென அப்பாலெங்கோ சிதறித் தெரிகின்றன. இடஉணர்வும் வந்து வந்து மறைகிறது.

அவன் மீண்டும் தன்னை உந்தி எழுப்பிக்கொண்டு தள்ளாடும் கால்களுடன் நடந்தான். மேலிருந்து காற்று ஒன்று மழையென இறங்கி பக்கவாட்டில் எழுந்து வளைந்து அகல சூழ்ந்திருந்த புகை சற்று குறைந்தது. ஆனால் விண்பரப்பு பெரிய முகில்செறிவால் முற்றாக மூடப்பட்டிருந்தது. மிகத் தொலைவில் பந்தங்கள் எரிந்தன. களஞ்சியப் புகையை ஒழியும் பொருட்டு கௌரவப் படையினர் மிக அகன்று சென்றுவிட்டிருக்கிறார்கள். அவன் புகையினூடாக, ஆங்காங்கே வெடித்து நின்றாடிய எரியினூடாக பொத்திப் பொத்தி கால்வைத்து நடந்து அவர்களை நோக்கி சென்றான். படைகள் எங்கே? அங்கிருப்போர் சில நூறு பேர் கூட இல்லை என்று தெரிந்தது. எஞ்சிய படைகள் என்ன ஆயின? களம் விட்டு ஓடிச்சென்றுவிட்டார்கள் போலும். ஆனால் பதினேழு நாட்களாக போரில் ஓடாதவர்கள் இன்றிறுதியில் ஓடிச்செல்ல வாய்ப்பில்லை. மறைந்துவிட்டிருக்கிறார்கள். இன்றைய போரில் எவரும் எஞ்சியிருக்கப்போவதில்லை.

அப்போதுதான் அவன் முரசொலியை கேட்டான். “அங்கர் களம்பட்டார்! கதிர்மைந்தர் விண்ணெழுந்தார்! கர்ணன் புகழ் கொண்டார்! வெல்க அங்கம்! வெல்க கர்ணன்! வெல்க அஸ்தினபுரி! வெல்க அமுதகலக்கொடி!” அவன் அம்முரசொலியை பலமுறை கேட்டான். பின்னரே அவை சொற்களாயின. அச்செய்தி அவனுக்கு நிறைவை அளித்தது. அவன் இன்னும் சாகவில்லை, அங்கே நிகழ்வனவற்றுடன் உள்ளம் தொடர்புகொள்ளமுடிகிறது. நான் இன்னமும் இருக்கிறேன் என்றபடி அவன் நின்றான். அது நிகழ்ந்துவிட்டிருக்கிறது. இன்று காலை அதன்பொருட்டே புலர்ந்தது. அந்தி சரிகையில் அங்கர் களம்பட்டிருப்பார். இதை எவ்வாறோ இன்று காலையிலேயே உணர்ந்திருந்தேன். ஒவ்வொரு வாள் சுழற்றலாக, ஒவ்வொரு அம்பாக, ஒவ்வொரு காலடியாக, ஒவ்வொரு சொல்சொல்லாக அதை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தேன்.

கிருதவர்மன் தண்ணீர் எனும் எண்ணத்தை முதலில் அடைந்தான். பின்னர் விடாய் எழுந்தது. பின் உடலெங்கும் பற்றிக்கொண்ட வெம்மையை உணர்ந்தான். ஒருகணமும் பொறுக்காதென்று உடல் துடிக்கத்தொடங்கியது. நாக்கு பழைய தோற்கிழிசல் என வாய்க்குள் உலர்ந்து ஒட்டியிருந்தது. தொண்டை மணலிறங்கியதுபோல் வறண்டிருக்க நெஞ்சுக்குள் எரிந்தெரிந்து விடாய் சுழித்தது. விழியோட்டி நோக்கிய எத்தொலைவிலும் நீர் இருப்பதுபோல் தெரியவில்லை. முகில்கணங்கள் உடைத்து பொழிந்தால் நீர் வரக்கூடும். இக்களத்தில் நீர்மை என எஞ்சியிருப்பது குருதி மட்டுமே. குருதியை அருந்துவது அவனுக்கு சில நாட்களாகவே பழகிவிட்டிருந்தது. களத்தில் விடாய் தீர்க்க யானை துதிக்கையைக்கூட வெட்டி குருதி அருந்தியிருக்கிறான்.

ஆனால் இங்கு அனைத்து உடல்களையும் அனல் உண்டுவிட்டிருக்கிறது. உடல்களிலிருந்து நீரையே உறிஞ்சி குடித்து நின்றிருக்கிறது அனல். அனல். அனல் என்பது அழியா விடாயின் ஒளிவடிவு மட்டுமே. இந்தக் களத்தில் எழுந்த அனல் எது? இப்புவியிலுள்ள அனைத்து நீர்மைகளையும் உறிஞ்சி அழிப்பது. வடவை. ஏழ்பெருங்கடல்களை அது ஒரே மூச்சில் உறிஞ்சி உண்ணும் என்பார்கள். நீர் மறைகையில் புவி கருகி மெல்லிய சாம்பல் உருண்டையாகி சுழலும். வெறுமையின் விரல்பட்டு உடைந்து புழுதி என்றாகி கடுவெளியில் மறையும். நின்று சுழன்று நோக்கியபோது வடவை எழுந்த களம் புகைக்குள் வெடித்து வெடித்து எரிந்துகொண்டிருக்கும் தீக்கொழுந்துகளாக கண்ணில் பட்டது. ருத்ர தாண்டவ நிலம்.

களமெங்கும் பலநூறு அனலெரிவுகள் இருந்தமையால் எங்கும் விளக்குகள் கொளுத்தப்படவில்லை. பந்தங்கள்கூட இல்லை. காவல்மாடங்கள்கூட இருண்டிருந்தன. எஞ்சியவர்கள் ஆங்காங்கே விழுந்துவிட்டிருப்பார்கள். எந்தப் பணிக்கும் இங்கு எவரும் இருக்கவில்லை போலும். விடாய் அவனை துரத்த மீண்டும் தன் முழு விசையையும் திரட்டி உந்தி அவன் கௌரவப் படைத்திரளை நோக்கி சென்றான். அங்கர் வீழ்ந்ததை மீளமீள முரசு அறிவித்துக்கொண்டிருந்தது. ஒருவேளை துரியோதனனும் இறந்திருக்கக்கூடும். இல்லை. அவ்வாறெனில் முரசு அதையே முதலில் கூறும். அவன் அப்போது துரியோதனனை பார்க்க விழைந்தான். பின்னர் அனைத்து விழைவுகளையும் இழந்து நீர் நீர் என உளம் தவிக்கலானான்.

கிருதவர்மன் தொலைவில் புரவியில் சென்றுகொண்டிருந்த ஒரு படைவீரனை கண்டான். அனலெழுகையில் சிவந்து அவன் இருளுக்குள் எழுந்தணைந்தான். இரு கைகளையும் தூக்கி பெருங்குரலெடுத்து அவனை அழைத்தான். அவன் கடந்து சென்ற பின்னர்தான் தன் குரல் வெளியில் எழவில்லை என்று உணர்ந்தான். மீண்டும் தான் உயிருடன்தான் இருக்கிறோமா எனும் அச்சத்தை அடைந்தான். குனிந்து கீழே கிடந்த ஈட்டி ஒன்றை எடுத்து முழு விசையுடன் குதிரை வீரனை நோக்கி வீசினான். அது சென்று தைத்து நின்றதைக் கண்டபோது உள்ளம் உவகை கொண்டு எழுந்தது. உயிருடன் தான் இருக்கிறோம். அந்த ஈட்டி மண்ணிலிருந்து எழ இயல்கிறது. மண்ணில் மீண்டும் தைக்க இயல்கிறது.

அருகே ஈட்டி வந்து தைக்க புரவி திகைத்து திரும்பியது. வீரன் அவனைப் பார்த்து நடுங்குவது தெரிந்தது. “அருகே வா! யாரங்கே? அருகே வா!” என்று கிருதவர்மன் கூவினான். ஆனால் புரவிவீரன் குதிரையைத் தட்டி விரைந்து அகன்று சென்றான். கிருதவர்மன் காலடிகளை தூக்கி வைத்து கீழே கிடந்த பிறிதொரு வேலை எடுத்து ஊன்றுகோலாக்கி விரைந்து நடந்து தைத்து நின்ற தன் ஈட்டியை சென்று அடைந்தான். அதைப் பற்றியபடி நின்று மூச்சுவாங்கியபோது சென்று மறைந்த வீரன் திரும்பி வருவதைப் பார்த்தான். தொலைவில் எச்சரிக்கையுடன் நின்று அவன் புரவியிலிருந்து கீழிறங்கினான். உரத்த குரலில் “யார்?” என்றான்.

“அறிவிலி, நான் யாதவனாகிய கிருதவர்மன்” என்றான். அவன் குரலை அவன் அடையாளம் கண்டான். ஆனால் மேலும் குழம்பியபடி “யாதவரே, தாங்களா?” என்றான். “ஆம், நான் இங்கே விழுந்துவிட்டிருந்தேன்” என்றான் கிருதவர்மன். “ஆனால்…” என்றபடி அவன் மேலும் அருகே வந்தான். “இல்லை, தங்கள் குரல் அல்ல அது. உங்கள் உருவுமல்ல” என்றான். “நான்தான். என்னை நன்கு பார்… நான்தான்” என்று கிருதவர்மன் சொன்னான். “அனல்பட்டுவிட்டேன். ஆகவே உருமாறிவிட்டிருக்கிறது.” அவன் “தாங்கள் இறந்துவிட்டீர்கள் என்று முரசறிவிக்கப்பட்டது” என்றான். “அதை நான் கேட்கவில்லை. எரியில் சிக்கிக்கொண்டேன். உடல் வெந்திருக்கிறேன். உடனே எனக்கு நீர் வேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னான். வீரன் மேலும் ஐயத்துடன் அருகே வந்து “தாங்கள் முற்றாக மாறிவிட்டிருக்கிறீர்கள். கருகி தசையுருகி மானுடரா என ஐயமெழும்படி…” என்றான்.

கிருதவர்மன் “நீர் வேண்டும். குடிக்க நீர் வேண்டும்” என்றான். அவன் மீண்டும் “தாங்களேதானா?” என்றான். கிருதவர்மன் “ஏன், என் உருவில் இருள்தெய்வம் ஏதேனும் வந்துவிட்டதோ என்று ஐயம் கொள்கிறாயா?” என்று கேட்டான். அலைபோல் அச்சம் அப்படைவீரனின் விழிகளில் வந்து சென்றது. அவன் மீண்டும் அருகே வந்தான். சற்று அப்பால் எரிந்து எழுந்த கொழுப்பின் நீலச் சுவாலை நோக்கி தன் முகத்தை திருப்பிய கிருதவர்மன் “நோக்குக, நானேதான்!” என்றான். “அணுகி நோக்குகையில் முற்றிலும் வேறொருவராக இருக்கிறீர்கள், யாதவரே. உங்கள் உரு உருகி அழிந்துவிட்டது” என்றான் வீரன்.

“உன்னிடம் நீர் இருக்கிறதா?” என்று கிருதவர்மன் சீற்றத்துடன் உரக்க கேட்டான். “ஆம், உள்ளது” என்றான் வீரன். “கொடு” என்றான் கிருதவர்மன். அவன் புரவியிலிருந்து நீர்க்குடுவையைக் கொண்டுவந்து கொடுத்தான். “இது புளித்த நீர். நல்லுணவும் கூட…” என்றான். கிருதவர்மன் இரு கைகளாலும் அதைப்பற்றி அருந்த முற்பட்டபோது கைகள் நடுங்கின. தள்ளாடி தான் ஊன்றியிருந்த ஈட்டியிலேயே சாய்ந்தான். அவனைத் தொட்டு பிடிக்க வந்த வீரன் திகைத்து கைகளை பின்னிழுத்துக்கொண்டான். “உங்கள் உடலெங்கும் தோல் வெந்து உரிந்திருக்கிறது” என்றான். “ஆம்” என்றபின் கிருதவர்மன் முழுக் குடுவையையும் கவிழ்த்து நீரை இறுதிச்சொட்டுவரை அருந்தி முடித்தான்.

குளிர்ந்து உள்ளிறங்கிய புளித்த நீர் அனல்களை அணைத்தபடி செல்வதை உணரமுடிந்தது. உடலின் உள்வழிகளில் எங்கும் குமிழிகள் வெடித்து வெம்மை தணியத்தொடங்கியது. அவன் குடுவையைத் திரும்ப நீட்டியபடி “என் உடலில் இருக்கும் கொழுப்பு இந்த அனலில் பற்றிக்கொள்ளுமோ என்று ஐயம் எழுகிறது” என்றான். அந்தப் பகடி புரியாமல் “யாதவரே!” என்று வீரன் அழைத்தான். “என்னை அஸ்வத்தாமனிடம் அழைத்துச் செல்” என்றான் கிருதவர்மன். “தாங்கள் புரவியில் ஏறிக்கொள்ளுங்கள்” என்றான். “புரவியில் என்னால் அமர முடியாது. என் உடல் வெந்திருக்கிறது. தொடைத்தசை கிழிந்து விடும்” என்ற கிருதவர்மன் “புரவியை பற்றிக்கொண்டு நடந்து வருகிறேன்” என்றான்.

“ஆம், வருக!” என்று அவனை அழைத்துச்சென்றான் வீரன். புரவி உடல் விதிர்த்தபடி அவனை தாங்கிக்கொண்டது. மறுபக்கம் புரவியின் கடிவாளத்தை பற்றியபடி நடந்த வீரன் “பேரழிவு, யாதவரே! இதுவரை இப்புவியில் எங்கும் காணாத பேரழிவு! இருபுறத்திலிருந்தும் தெய்வங்களும் அஞ்சும் அம்புகளை எடுத்தனர். விண்ணையும் மண்ணையும் அனலால் நிறைத்தனர். இக்களத்திலுள்ள அனைத்து நீர்களையும் பற்றி உறிஞ்சி அழித்துவிட்டது எழுந்த நெருப்பு” என்றான். புரவி தயங்கி நின்று செருக்கடித்தது. “என்ன? என்ன?” என அவன் அதன் கழுத்தை தட்டினான். கிருதவர்மன் “அது என்னை ஐயுறுகிறது. என் உடலில் மானுட மணம் எழவில்லை என எண்ணுகிறது” என்றான். புன்னகைத்து “என்னை சடலமென கருதுகிறது… சடலத்தை ஏற்றிக்கொள்ள புரவிகள் விழைவதில்லை” என்றான்.

வீரன் “அதற்கு எப்படி தெரிய வைப்பது?” என்றான். “ஏன் தெரிய வைக்கவேண்டும்?” என்றான் கிருதவர்மன். “உனக்கே நான் சடலம் அல்ல என்று உறுதி இருக்கிறதா என்ன?” வீரன் திகைத்து நின்றுவிட்டான். கிருதவர்மன் மீண்டும் நகைத்து “அஞ்சாதே. சடலத்திற்குள் நான் உயிருடன் இருக்கிறேன்” என்றான். வீரன் நிலைமீண்டு “இங்கே அனைவருமே அரைச்சடலங்கள்தான். எல்லைக்கு அப்பாலிருந்தமையால் நான் உடலுடன் எஞ்சியிருக்கிறேன்” என்றான். “இன்று நிகழ்ந்தது போரே அல்ல. இருவருமே அனலம்புகளை எடுத்தனர். அனலுக்கு இருதரப்புமில்லை. ஒன்றையொன்று தழுவி ஒன்றையொன்று உண்டு மேலெழுந்தது பேரனல்… அனலை இனி என்னால் அடுப்பில்கூட அச்சமில்லாது நோக்கவியலாது” என்றான்.

“அரசர் என்ன செய்கிறார்?” என்றான் கிருதவர்மன். “அறியேன். நான் நெடுந்தொலைவில் இருந்தேன். கிருபரின் படையைச் சேர்ந்தவன்” என்று வீரன் சொன்னான். எதிரில் புரவியில் மூவர் வருவது தெரிந்தது. “உத்தரபாஞ்சாலர் வருகிறார்” என்று வீரன் சொன்னான். “என்னை அவருக்கு கூறுக!” என்று கிருதவர்மன் சொன்னான். “என்னை அவர் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பில்லை. என் குரலும் எழாது.” அதற்குள் புரவி மேலிருந்த அஸ்வத்தாமன் கிருதவர்மனை பார்த்தான். ஒருகணம் திகைத்தபின் புரவியை காலால் தூண்டி விரைந்து அருகில் அணைந்து “யாதவரே, தாங்களா?” என்றான். “நானேதான்” என்று கிருதவர்மன் சொன்னான். “தாங்கள் எரிபட்டீர்கள் என்று முரசுகள் அறைந்தன. உங்கள் உடலைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். “நான் இதோ இருக்கிறேன். என்னை அவர்கள் கொண்டுசென்று சிதையேற்றிவிடப்போகிறார்கள்” என்றான் கிருதவர்மன்.

“என்ன ஆயிற்று?” என்றான் அஸ்வத்தாமன். “ஆணிலியால் வெல்லப்பட்டேன். அவனிடமும் இருந்தது அனலம்பு. எரிபட்டு வெந்து நான் களமுகப்பிலிருந்து பின்னடைந்தேன்” என்று கிருதவர்மன் சொன்னான். அஸ்வத்தாமன் அவன் உடலை நோக்கியபின் “வெந்து கருகியிருக்கிறீர்கள். தாங்கள் படைப் பின்னணிக்குச் சென்று ஓய்வெடுங்கள். இங்கு மருத்துவர்கள் எவரும் இல்லை. மருத்துவநிலைகளும் ஒழிந்துவிட்டன. சில நூறு வீரர்களே இருதரப்பிலும் எஞ்சியிருக்கிறார்கள்” என்றான். கிருதவர்மன் “போர் முடிந்துவிட்டதா?” என்று கேட்டான். அஸ்வத்தாமன் “போரை நிறுத்திக்கொள்வதே சிறந்தது என்று பேசத்தான் சென்று கொண்டிருக்கிறேன். அரசரிடம் சொல்லியாகவேண்டும். இங்கே இனி படைகளே இல்லை. போரிட நினைத்தாலும் வழியில்லை” என்றான்.

“அரசரிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். இங்கே நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து அஞ்சி அலறுவதற்கேனும் சிலர் எஞ்சியிருக்கவேண்டும்” என்றான் கிருதவர்மன். அஸ்வத்தாமன் அந்த நகையாட்டை புரிந்துகொள்ளாமல் “அரசர் அங்கர் களம்பட்டார் எனும் செய்தி சென்றடைந்தபோது அக்கணமே வில் தாழ்த்தி தேரில் அமர்ந்தார். ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஒரு சொட்டு விழிநீராவது உதிருமென்று எதிர்பார்த்தார்கள். தேரில் கற்சிலையென அமர்ந்திருந்தார். நல்லூழாக உடனே அந்தி தெரிந்துவிட்டதென முரசுகள் எழுந்தன. படைகள் திரும்பத்தொடங்கின. தேரைத் திருப்பி ஓட்டிக்கொண்டு படைக்குப் பின் சென்றார்கள். தேரில் வெறுமனே நோக்கியபடி அமர்ந்திருந்தார்” என்றான்.

“அங்கே படை மிகச் சிறிதே எஞ்சியிருக்கிறது. சில கூடாரங்கள் எரியாமலுள்ளன. களஞ்சியங்களிலும் இரண்டு மிஞ்சிவிட்டன. யானைகள், குதிரைகள், அத்திரிகள் எல்லாமே ஒருசிலதான் உள்ளன. ஆனால் தன்னைச் சூழ்ந்து வழக்கமான பெரும்படை இருப்பதுபோல் அரசர் அங்கே அமர்ந்திருக்கிறார்” என்றான் அஸ்வத்தாமன். “நான் சென்று அவரிடம் பேச வேண்டும். இதற்குப் பின் செய்யவேண்டியதென்ன என்பதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.” கிருதவர்மன் “சல்யர் எங்கே?” என்றான். அஸ்வத்தாமன் அவனை கூர்ந்து நோக்கி ஒருகணம் நின்றபின் “ஏன்?” என்றான். “தோன்றியது” என்றான் கிருதவர்மன். “அவர் அங்கரை பாதியிலேயே கைவிட்டுவிட்டு களம்நீங்கினார். களத்திலிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டார். எல்லைக்காவலர் பார்த்திருக்கிறார்கள். இப்போது எங்குளார் என தெரியவில்லை.”

கிருதவர்மன் “நன்று, நானும் உங்களுடன் வருகிறேன்” என்றான். “அதற்குள் இன்னொரு பெரும்பணி வந்து சேர்ந்தது. இங்கு இருதரப்பிலும் களம்வீழ்ந்த உடல்களை எரிக்கவும் புதைக்கவும் எவருமில்லை. சிதைக்காவலர்கள் அனைவருமே போரிட வந்துவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் இறந்தும்விட்டார்கள். அரசகுடியினருக்குரிய இடுகாடுகளும் சுடுகாடுகளும் மட்டுமே இன்று இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் என்றுமிலாதபடி குருக்ஷேத்ரக் களம் மானுட உடல்களால் நிரம்பிக்கிடக்கிறது. புரவிகளும் யானைகளும் உடன் கலந்து வெந்து குவிந்த ஊன் பரப்பாக தெரிகிறது. உடல்களைப் பிரித்து எடுத்துக்கொண்டு செல்வதற்கு இன்று எவ்வழியும் இல்லை. முதல் நாள் இங்கு சுடலைக்காவல் என்று இருந்த பணியாளர்கள் அனைவரும் இருந்தால்கூட இப்பணியை செய்து முடிக்க இயலாது. என்னிடம் வந்து சொன்னார்கள்” என்றான்.

“என்ன செய்வது என்று தெரியவில்லை. மறுபுறமும் மொத்தப் படையினரையும் சுடலைப்பணிக்கு செல்லும்படி ஆணையிட்டிருக்கிறார்கள். பத்து பத்து பேராகத் திரண்டு அவர்களும் களம் சென்றுகொண்டிருக்கிறார்கள்.” அஸ்வத்தாமன் மறுபக்கம் பார்த்து “அவர்கள் களம் வந்துவிட்டார்கள். நமது படைகளும் களம் சென்றுகொண்டிருக்கின்றன. அங்கு நின்று ஆணையிட்டு நடத்த வேண்டியிருக்கிறது. அதற்கும் இங்கு தலைவர்கள் எவருமில்லை” என்றான்.

“நான் சென்று நடத்துகிறேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “தங்களால் நிற்கக்கூட இயலவில்லை” என்றான் அஸ்வத்தாமன். “நீங்கள் சென்று அரசரை பாருங்கள். நான் இப்பணியை முடிக்கிறேன்” என்று கிருதவர்மன் கூறினான். ஒருகணம் தயங்கியபின் “நீங்கள்…” என அஸ்வத்தாமன் சொல்ல “இத்தருணத்தில்தான் அரசரிடம் பேசவேண்டும். நாளை அவர் உள்ளம் பிறிதொன்றாகிவிடக்கூடும். செல்க, இக்களத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்று கிருதவர்மன் கூறினான்.