இருட்கனி - 61
படைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த ஓசை தாளம்போல் ஒலித்தது. இளைய யாதவர் தேரை நிறுத்தியது ஏன் என அர்ஜுனனுக்கு புரியவில்லை. ஆனால் அவன் விழிதூக்கி நோக்கவில்லை. புரவிகளில் ஒன்று செருக்கடித்தது. அவர்களைச் சூழ்ந்து பாண்டவப் படையினர் ஆங்காங்கே அமரத்தொடங்கிவிட்டிருந்தனர். எரிசூழ்ந்த மண்ணில் அவர்கள் குந்தி அமர்ந்தனர். பின்னர் உடற்களைப்பு தாளாமல் படுத்துக்கொண்டனர்.
தேர் அணுகும் ஓசை கேட்டது. வலப்பக்கத்திலிருந்து யுதிஷ்டிரனின் தேர் தோன்றி அணுகி வந்தது. சற்று தொலைவிலேயே தேர் நின்றுவிட அதிலிருந்து யுதிஷ்டிரன் பாய்ந்திறங்கி அர்ஜுனனை நோக்கி வந்தார். அவருக்குப் பின்னால் இரு புரவிகளில் பிரதிவிந்தியனும் யௌதேயனும் வந்தனர். அவர்கள் தேர் அருகிலேயே நின்றுவிட்டனர். அர்ஜுனன் ஓசையாலே வந்தவர் யுதிஷ்டிரன் என உணர்ந்தும் தேர்த்தட்டிலேயே தலையை கையில் தாங்கி அமர்ந்திருந்தான். இளைய யாதவர் அரசரை வணங்கியபடி “அவர் அறுதியாக வென்றுவிட்டார் என்பதை அவருடைய உள்ளம் அறிந்துகொண்டுவிட்டிருக்கிறது. அது அவருடைய நடையிலேயே வெளிப்படுகிறது” என்றார். அர்ஜுனன் “ம்” என தலைதூக்காமலேயே முனகினான்.
யுதிஷ்டிரன் அருகில் வந்து “இளையோனே, அங்கன் வீழ்ந்தான் என்று முரசுகள் அறைகின்றன. முதல் எண்ணமாக உனக்கு ஒன்றும் இல்லையே என்றுதான் தோன்றியது. உன்னைக் காண வேண்டுமென்றுதான் விழைந்தேன்” என்றார். “எனக்கு ஒன்றுமில்லை” என்றபடி அர்ஜுனன் எழுந்து படிகளில் கால் வைத்து கீழிறங்கி தேரின் சகடத்தை பற்றியபடி நின்றான். “களைத்திருக்கிறாய். இன்றைய போர் இங்கு நிகழ்ந்ததிலேயே ஈடற்றது. செல்க! இன்று ஓய்வெடு. இனி அவர்களிடம் பெருந்தேரர்கள் எவருமில்லை. அஸ்வத்தாமன் ஒருவனைத் தவிர நாம் அஞ்சவேண்டியவர்கள் ஒருவருமில்லை. கிருதவர்மன் களம்பட்டுவிட்டான் என்கிறார்கள். கிருபர் உளம்தளர்ந்துவிட்டார். அஸ்வத்தாமன் ஒருவனை மட்டும் நம்பி துரியோதனன் நாளை களமிறங்கமாட்டான்.” முகம் மலர்ந்து “ஆம், இன்றுடன் போர் முடிந்துவிட்டது” என்றார்.
அதன் பின்னர் இளைய யாதவரை பார்த்து “என்ன சொல்கிறாய், யாதவனே? இவ்வழிவுகள் இன்றுடன் முடிகின்றன அல்லவா? திரும்பி இப்படைகளை பார்க்கையில் நெஞ்சு பதைக்கிறது. இங்கு வந்தவர்களில் ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒருவர்கூட எஞ்சவில்லை. இதோ குருக்ஷேத்ரம் முற்றொழிந்து கிடக்கிறது. இனி ஒருநாள் போர் நிகழ்ந்தால் இக்களத்திலிருந்து ஒருவரும் வெளியேறப் போவதில்லை. அதை எண்ணுகையில் அங்கன் வீழ்ந்ததுபோல் நற்குறி ஏதுமில்லை என்று தோன்றுகிறது” என்றார். அவர் நீள்மூச்செறிந்து இயல்படைந்தார். “அவன் ஒருவனால்தான் துரியோதனன் ஊக்கம் கொண்டான். அவனை எண்ணியே பாரதவர்ஷத்தை முழுதாளும் மிகைவிழைவை அவர்கள் வளர்த்துக்கொண்டார்கள். பிதாமகரும் துரோணரும் களம்பட்ட பின்னரும்கூட வென்றுவிடலாம் என்னும் எண்ணத்தையே அவனுக்கு அளித்தவன் அங்கன். நல்லூழ், இனி அவன் எழப்போவதில்லை.”
இளைய யாதவர் “ஆம், இன்றுடன் காண்டீபத்தின் பணி பெரும்பாலும் முடிந்தது” என்றார். யுதிஷ்டிரன் “ஆம்” என்றபின் தனக்குத்தானே தலையசைத்து “இன்று மாலை வேண்டுமெனில் ஒரு தூதனை அவனிடம் அனுப்பிப் பார்ப்போம். இனி போரிட அவன் ஒருங்கமாட்டான் என தோன்றுகிறது. உடன்பிறந்தார் அனைவரையும் இழந்து தனித்து நின்றிருக்கிறான். எஞ்சிய நம்பிக்கையான உயிர்த்தோழனும் இல்லை” என்றார். இளைய யாதவரின் புன்னகையைக் கண்டு “நீ செல்லவேண்டியதில்லை. உன் பொருட்டு சாத்யகி செல்லட்டும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். இளைய யாதவர் “வேண்டியதில்லை” என்றார். “ஏன்?” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் “இப்போதும் தூதனுப்பும் தருணம் அமையவில்லை” என்றார்.
“இன்னமும் போர் நடந்தால்…” என யுதிஷ்டிரன் சொல்லெடுக்க “போர் இன்னமும் நிகழத்தான் செய்யும்” என்று இளைய யாதவர் சொன்னார். “எந்த விசை அவனை இக்களம் வரை கொண்டுவந்ததோ அது அவ்வண்ணமே துளிக்குறையாமல் எஞ்சும். ஏனெனில் இப்புவியில் இதுவரையும் அவ்வண்ணமே நிகழ்ந்துள்ளது. இனியும் அவ்வாறே நிகழும்.” யுதிஷ்டிரன் ஒவ்வாமையுடன் முகம் சுளித்து “என்ன சொல்கிறாய்? இதற்குப் பின்னரும்…” என்று மீண்டும் பேசத்தொடங்க இளைய யாதவர் “இதற்குப் பின்னரும் துரியோதனர்கள் இங்கு எழுவார்கள். மீண்டும் மீண்டும், வெவ்வேறு முகங்களில், வெவ்வேறு நிலங்களில்…” என்றார்.
“யுதிஷ்டிரரே, ஒற்றை உணர்வும் ஒரே விசையும் ஒன்றென ஒலிக்கும் சொற்களும் கொண்டு அவர்கள் வந்தபடியேதான் இருப்பார்கள். இப்புவியில் விழைவுகள் அனைத்துக்கும் அடியிலிருப்பது காமம். காமத்திற்கு அடியிலிருப்பவள் அன்னை. புவியே பேரன்னை” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரன் “இப்பேரழிவு… இன்னும் ஒருமுறை இது நிகழ்ந்தால் இங்கே மானுடரே எஞ்சமாட்டார்கள்…” என்றார். “ஒட்டுமொத்தமாக எண்ணி நோக்கினால் இங்கே நிகழ்ந்தது என்ன? மானுடர் தங்களைத்தாங்களே கொன்றுகுவித்தனர். அவர்களில் சிலநூறுபேருக்கு ஒழிய பிறருக்கு இங்கே என்ன நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என்றே தெரியாது.”
“அது தெய்வங்களின் ஆணை. இயற்கையின் விசை. மானுடர் அதற்கு ஒரு பொருட்டல்ல” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் தளர்ந்து “இனிமேலும் ஒரு போரெனில்…” என்றபின் இரு கைகளையும் விரித்து “அம்பு தொடுக்கவும் அவற்றை நெஞ்சிலேற்றி வீழவும் படைகள் வேண்டுமல்லவா? நோக்கினாய் அல்லவா, எண்ணினால் இரண்டாயிரம் பேர் எஞ்சமாட்டார்கள். இவர்கள் அனைவருமே ஏவலர்கள், புரவிச்சூதர்கள், அடுமனையாளர்கள், களஞ்சியக் காவலர்கள். மறுபக்கமும் அவ்வாறே. அணையா சிதைகளுக்கு அன்னமூட்டுவதற்குக் கூட ஏவலர்கள் இன்றில்லை என்று சொன்னார்கள். இங்கிருக்கும் படையினர் அனைவரும் சென்று அள்ளி சிதைகூட்ட வேண்டியிருக்கிறது” என்றார்.
“ஆம்” என்றபின் இளைய யாதவர் திரும்பிப் பார்த்தார். “இருதரப்புப் படையினரும் இணைந்து பிணங்களை அகற்றவில்லை எனில் நாளை குருக்ஷேத்ரம் ஒருங்காது. இவ்வுடல்களுக்கு எரியோ மண்ணோ அமையாது” என்றார். யுதிஷ்டிரன் தளர்ந்து தள்ளாடி பின்னடைந்து அருகே வந்து நின்ற தன் மைந்தர்களின் தோள்களை இரு கைகளாலும் பற்றிக்கொண்டார். “விடாய் கொண்டிருக்கிறேன், மைந்தா. எங்கேனும் சற்று படுத்தால் போதும் என்று எண்ணுகிறேன்” என்றார். “அவன் முகம் என் விழிகளிலிருந்து மாறவில்லை. பேரழகன்! தெய்வங்களே, இத்தனை பேரழகை எதற்கு மானுடர்க்கு அளிக்கிறீர்கள்?” என்றார். யௌதேயன் நீருக்கென சென்றான்.
யுதிஷ்டிரன் இளைய யாதவரைப் பார்த்து “யாதவனே, அவனை அஞ்சாத ஒரு நாள் என் வாழ்வில் இருந்ததில்லை. இன்றல்ல, துரோணரின் குருகுலத்திற்கு அவன் வந்த அன்றே அவனை அஞ்சத்தொடங்கினேன், என் இரு இளையோரின் பொருட்டு. அவன் அவர்களை கொல்லக்கூடும் என எண்ணினேன். ஆனால் அன்று ஏன் அவ்வண்ணம் அஞ்சினேன் என்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்றும் அவ்வச்சத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். இளைய யாதவர் “ஏனென்றால் அவன் அவர்களை கொல்வதே முறையென உங்கள் அகம் எண்ணியது” என்றார். யுதிஷ்டிரன் திகைப்புடன் அவரை நோக்கினார். அச்சொற்கள் அவர் உள்ளத்துள் நுழையவில்லை. யௌதேயன் அப்பால் செல்வதை நோக்கிவிட்டு “இன்றிரவு அவ்வச்சமின்றி நான் துயிலக்கூடும். அவ்வண்ணம் ஒரு இரவு எனக்கு அமையுமா என்றே ஏங்கியிருந்தேன். ஆனால் இத்தருணத்தில் உடலெங்கும் எரி பற்றிக்கொண்டதுபோல் ஒரு வலியை உணர்கிறேன்” என்றார்.
அப்பாலிருந்து சகதேவன் புரவியில் அணுகி வருவதை யுதிஷ்டிரன் கண்டார். சகதேவன் புரவியிலிருந்து இறங்கி அவர்களின் பார்வையை உணர்ந்து அவ்வுணர்வால் நடை சற்று மாற தலைகுனிந்து அணுகி வந்து “அரசருக்கு இரவு தங்க பாடிவீடொன்று அமைக்கச் சொல்லியிருக்கிறேன். இங்கிருந்த பலகைகளும் தட்டிகளும் தோல்களும் முற்றாக எரிந்து மறைந்துவிட்டிருக்கின்றன. காட்டுக்குள்ளிருந்து பச்சை ஈச்சை இலைகளை வெட்டி வரும்படி சொல்லி சிலரை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் வந்தபிறகு ஒரு இலைக்குடில் அமைக்க வேண்டும்” என்றான். யுதிஷ்டிரன் “ஆம், இன்றிரவேனும் நான் துயிலக்கூடும்” என்றார். பின்னர் “முரசுகள் ஒலிப்பதை கேட்டேன். நமது படையின் முரசுகளும் வாழ்த்து ஒலிப்பது முறையானதே” என்றார்.
“இக்களத்தில் நிகரற்ற வீரத்தை காட்டியவன் அங்கன். குலக்குறை உடையவனாயினும் ஷத்ரியர்களுக்கு படைத்தலைமைகொண்டு எழுந்திருக்கிறான். விண்ணூரும் தெய்வத்தின் மைந்தனென்று அவனை சொல்கிறார்கள். நமது மைந்தர்களை அவன் நினைத்தால் கொன்றிருக்கக்கூடும். தன் பேரளியால் அவர்களை நமக்கு உயிருடன் அளித்திருக்கிறான். விண் நிறைக அங்கன்! அங்கே மூதாதையருடன் நிறைவுறுக!” என்று யுதிஷ்டிரன் தொடர்ந்து சொன்னார். சகதேவன் “மூத்தவரே, இந்த வீண்சொற்களை நாம் எதற்காக சொல்கிறோம்? இங்கு வரும்போது சூழ்ந்திருந்த நமது படைகளின் கண்களுக்கு நடுவே ஊர்ந்தேன். ஒவ்வொரு நோக்கும் நச்சுமுள்ளென என்னை குத்தியது. என் முதுகுக்குப் பின்னால் பலர் வசைச் சொற்களை கூவுவதையும் காறி உமிழ்வதையும் அறிந்தேன்” என்றான்.
யுதிஷ்டிரன் “என்னையா?” என்றார். “இல்லை, அதற்கும் நீங்கள் பொருட்டல்ல அவர்களுக்கு” என்ற சகதேவன் சீற்றத்துடன் திரும்பி இளைய யாதவரிடம் “யாதவரே, பலநூறு பேர் அங்கு தங்களை கீழ்மை நிறைந்த சொற்களால் வசைகூவுகிறார்கள். அறிவீர்களா?” என்றான். “ஒவ்வொரு சொல்லையும் கேட்கிறேன்” என்று இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார். “உங்கள் குலம் அழியவேண்டுமென தீச்சொல்லிட்டு நவகண்டம் புகுந்தனர் எழுவர்” என்றான் சகதேவன். “அத்தீச்சொற்களும் என்னுடையவையே” என்றார் இளைய யாதவர். சகதேவன் உடைந்து “யாதவரே, முன்பு இங்கு களம்பட்ட பல்லாயிரவர் உங்களை வாழ்த்தியபடி உயிர்துறந்தனர். இன்று ஏன் இத்தனை பழிச்சொற்கள் எழுகின்றன?” என்றான். “உங்களுக்கே தெரியும், இன்றைய மீறலைப்பற்றி. இனி எழும் சொற்களின் காலத்தில் இப்பழி பெருகும். இப்பழியை எண்ணாமல் உங்கள் பெயரை இனி புவியில் ஒருவரும் கூறப்போவதில்லை.”
“ஆம், இப்பழியும் எனக்கே” என புன்னகை மாறாமல் இளைய யாதவர் சொன்னார். “குருக்ஷேத்ரமே நான் கொண்ட பெரும்பழிதான். அது எனக்கொரு மணிமுடி.” அவருடைய புன்னகை விரிந்தது. “அதில் ஓர் அருமணி அங்கனைக் கொன்ற பழி.” சகதேவன் “நீங்கள் விளையாடுகிறீர்கள். எங்கள் அனைவரையும் வெறும் புழுக்களென்றும் பூச்சிகளென்றும் எண்ணி தலைக்குமேல் காலெடுத்து நடந்து செல்கிறீர்கள்” என்றான். “ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். சகதேவன் ஒருகணம் உடல் விதிர்த்தான். இரு கைகளையும் ஏதோ சொல்வதுபோல் விரித்து பின்னர் தளர்ந்தான். திரும்பிச்செல்வதுபோல் அவன் உடல் திரும்ப யுதிஷ்டிரன் சினத்துடன் அவன் தோளை பற்றினார்.
“என்ன சொல்கிறாய்? களத்தில் அங்கனை வீழ்த்தியதில் என்ன பழி உள்ளது? படைநின்று நம்மை எதிர்த்தவன் அவன். நம் இளமைந்தனை முற்றுகையிட்டுக் கொன்றவர்களில் ஒருவன். நம் குலக்கொடி அவைச்சிறுமை செய்யப்பட்டபோது அமர்ந்து நோக்கி மகிழ்ந்தவன். நம் நிலத்தைக் கவர்ந்து படை நடத்தியவன். நம்மை கானகத்திற்கு ஓட்ட அவனுக்கு ஊக்கமளித்தவன். அவனை நம்பியே இப்போரை எடுத்தான் துரியோதனன். இத்தனை அழிவுக்கும் அவனே பொறுப்பு. அவனைக் கொல்லாமல் இப்போர் முடியாது என எவருக்கும் தெரியும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.
சகதேவன் அவரை நேர்நோக்கி “களம்நின்று அவரை எதிர்த்து வென்றிருந்தால் அது வெற்றி. இங்கிருக்கும் அத்தனை படைவீரர்களும் மூத்தவரின் பெயர் சொல்லி வாழ்த்துரைகளை ஒலித்துக்கொண்டிருப்பார்கள். உங்கள் தேர்வலரிடம் கேளுங்கள் அங்கனை அவர் எவ்வாறு வென்றார் என்று” என்றான். யுதிஷ்டிரன் “எவ்வாறு?” என்றபின் இளைய யாதவரைப் பார்த்து “யார்? தாங்கள் படைக்கலம் எடுத்தீர்களா?” என்றார். சகதேவன் “தன் படைக்கலம் என பார்த்தரை ஏந்தியவர் அவர்” என்று சொன்னான். “நான் சொல்கிறேன்” என்று அர்ஜுனன் முன்வந்தான். “மூத்தவரே, அங்கநாட்டரசர் கர்ணனை நான் போர்நெறிகள் அனைத்தையும் மீறியே கொன்றேன். மானுடப் பொதுநெறியையே மீறினேன்.”
“என்ன சொல்கிறாய்?” என்றார் யுதிஷ்டிரன். “அவரது தேர்ச்சகடம் பிலத்தில் இறங்கியது. தேரிலிருந்து இறங்கி சகடத்தை மீட்க அவர் முயல்வதற்குள் அவரை கொன்றேன்.” யுதிஷ்டிரன் அக்காட்சியை உள்ளத்தில் விரிக்கமுடியாமல் விழிகள் தத்தளிக்க “சகடத்தை மீட்க பொழுதளிக்கும் வழக்கம் உண்டு” என்று சொன்னார். “ஆம், உண்டு. அளித்தாகவேண்டும் என்பதே முறை. அப்போது அவரிடம் அம்புகளும் வில்லும் இருக்கவில்லை. வெறும்கையுடன் அவர் போர் அறைகூவவும் இல்லை” என்றான் அர்ஜுனன். “அப்பொழுதை அவன் உன்னிடம் கோரினானா?” அர்ஜுனன் “இல்லை, அவர் எதையும் எவரிடமும் கோருபவர் அல்ல” என்றான். “அவர் கோரியிருந்தாலும் நான் அதை அளிக்க விரும்பவில்லை.”
யுதிஷ்டிரன் “உன்னிடம் விசைமிக்க அம்புகள் இருந்தன. நீ வெல்வாய் என்று நிமித்திகரின் கூற்று இருந்தது. விண்ணில் உன் தந்தை உனக்கு துணைநின்றார். நீ பொறுத்திருக்கலாம். அப்பொழுதை அவனுக்கு அளித்திருக்கலாம். பழியிலாத வெற்றியை அடைந்திருக்கலாம்” என்றார். அர்ஜுனன் “ஆம், அளித்திருக்கலாம். அவ்வண்ணம் நான் செய்திருக்கக்கூடிய பலநூறு அறங்கள் இக்களத்தில் தவறிச்சென்றன. அதில் தலையாயது இது” என்றான். யுதிஷ்டிரன் வெறித்து நோக்கிக்கொண்டு மெல்லிய நடுக்குடன் நின்றார். இளைய யாதவர் “அரசே, அவர் கதிர்மைந்தர். அளிப்பதற்காகவே எழுந்தவர்” என்றார். “இவ்வெற்றியும்கூட அவரால் அளிக்கப்பட்ட கொடைதான்.”
“என்ன சொல்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அர்ஜுனனிடம் “அறுதிக்கணத்தில் ஓர் அறப்பிழையினூடாகவா வென்றாய்? இவ்வொரு வெற்றியையாவது நெஞ்சு நிமிர்த்து மூதாதையர் முன்பும் தெய்வங்கள் முன்பும் நிற்கும்படி ஈட்டவில்லையா நீ?” என்றார். அச்சொற்களால் அவரே சீற்றம்கொண்டார். “இளையோனே, இக்களத்தில் நேர்நின்று நீ வென்ற ஒருவரேனும் உண்டா?” என்றார். “இல்லை, இக்களத்தில் நீங்களோ நானோ பெருமை கொள்ளும்படி ஒன்றும் நிகழவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “பிதாமகரைக் கொன்ற பழியும் ஆசிரியரைக் கொன்ற பழியும் என் நெஞ்சிலும் தோள்களிலும் அமைந்துள்ளன. இப்பழியை நான் தலையில் சூடியிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் இருவரும் அறப்பிழை இயற்றியவர்கள். அங்கரோ பழுதற்றவர், முழுமை கொண்டவர்.”
“இவ்வொரு வெற்றியையாவது நீ ஈட்டி எனக்களிப்பாய் என்று எண்ணினேன்” என்றார் யுதிஷ்டிரன். “இவ்வறப்பிழையின் பழி உன்னைச் சூழ்க! படைக்கலமின்றி நின்றவன் மீது அம்பு தொடுத்து அவனைக் கொன்ற உனக்கு வீரனென்ற தகுதியில்லை. எனக்கும், நீ ஈட்டி எனக்களிக்கும் இந்த மண்ணுக்கும் இப்பழியில் பங்குண்டு. இங்கிருந்து சென்று என் மூதாதையர் முன் நின்று பொறுத்தருளக் கோருகிறேன். இச்சிறுமை என்னை ஒரு நாளும் நீங்காதொழிக!” என்று யுதிஷ்டிரன் கூவினார். அத்தருணத்தில் விந்தையானதோர் இளநகை அர்ஜுனனின் முகத்தில் எழுந்தது. “இவையனைத்தும் உங்கள் பொருட்டே, மூத்தவரே. நீங்கள் முடி சூடுவதற்காகவே இவையனைத்தையும் இயற்றினேன்” என்றான்.
பிரதிவிந்தியனின் தோளை உதறி பெருஞ்சினத்துடன் முன்னெழுந்து யுதிஷ்டிரன் “கீழ்மகனே, நிகர்ப்போரில் நின்று பொருத ஆற்றலின்றி வெறுங்கையுடன் நின்ற அவனை வஞ்சத்தில் வீழ்த்திய கோழை நீ. இதோ என் தீச்சொல். இனி ஒரு நாளும் ஒருமுறை படுத்த மஞ்சத்தில் பிறிதொரு முறை படுக்க இயலாது உன்னால். வாணாளெல்லாம் நீ முடிவிலாது அலைவாய். இறுதித் துயிலில் மட்டுமே உன்னை மறந்து ஓய்வு கொள்வாய்… செல்க! என் விழி முன்னிருந்து அகல்க!” என்றார். உடல்நடுங்க கால் தளர்ந்து அமர்ந்தார். பிரதிவிந்தியன் அவரைத் தொட்டு ஆறுதல்படுத்தினான்.
அர்ஜுனன் தலைவணங்கி “இங்கு இத்தனை பொழுது பொறுத்திருந்தது இதன் பொருட்டே. மூத்தவரே, இப்போது என் உளம் நிறைவு கொள்கிறது. எஞ்சும் வாழ்நாள் முழுக்க இப்பிழையீடை இயற்றுகிறேன். இதுவே ஒரு தவமென்றாகுக!” என்றபின் திரும்பி நடந்தான். அவன் செல்வதை நோக்கி அமர்ந்திருந்த பின் யுதிஷ்டிரன் திரும்பி “இதற்கப்பால் நாங்கள் இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதேனும் உண்டா, யாதவனே?” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் தேரை ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு தானும் நடந்து அகன்றார்.
முரசு கதி மாறி ஆணைகளை ஒலிக்கத்தொடங்கியது. திருஷ்டத்யும்னன் எஞ்சிய பாண்டவப் படைவீரர்கள் அனைவரும் பத்து பேர் கொண்ட சிறு குழுக்களென்று ஆகி ஒரு தலைமையை தாங்களே தெரிவு செய்து அணிவகுத்து மீண்டும் குருக்ஷேத்ரக் களத்திற்கு செல்லும்படி ஆணையிட்டான். அங்கு குவிந்து பரந்துகிடந்த உடல்களை எரிகாட்டுக்கு அகற்றிய பின்னரே அவர்கள் உணவருந்த இயலும். அன்றைய நாளின் அனல் அனைத்தையும் எரித்தபின் தானும் மறைந்துவிட்டிருந்தது. களத்தில் விழுந்த உடல்கள் கருகி நிணமுருகி, வெந்த ஊன்சேறென்று மாறி, மிதிபட்டு சகதிக் குழம்பென்று பரந்து, மானுடரேது விலங்கு ஏதென்றறியாமல் ஆகிவிட்டிருந்தன. அங்கிருந்து கெடுமணம் ஒன்று காற்றிலெழுந்தது. ஒரே தருணத்தில் குமட்டும் ஊன்வாடையாகவும் கொதிக்கும் அடுகலத்திலெழும் உணவின் ஆவியென்றும் மாயம் காட்டியது அது.
களத்திலிருந்து புண்பட்ட புரவிகளை மட்டும் இழுத்து வரும்படி திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். அவையே அன்று படைவீரர்கள் உணவென்று ஆகவேண்டும். அதன் பின்னரே குருக்ஷேத்ரம் உடல்களை அகற்றி தூய்மை செய்யப்படும். படைவீரர்கள் முதலில் அந்த ஆணையை புரிந்துகொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து “மீண்டும் போரா? போருக்கு எழுகிறார்களா அவர்கள்?” என்று வினவிக்கொண்டனர். மீண்டும் மீண்டும் அவ்வாணை ஒலிக்க முதியவர்கள் “நம்மை பிணங்களை அகற்றும்படி ஆணையிடுகிறார்கள்” என்று விளக்கினர்.
“இல்லை, உண்ணத் தகுந்த ஊன்விலங்குகளை மட்டும் அங்கிருந்து தெரிவு செய்து அடுநிலைகளுக்கு கொண்டு செல்லச் சொல்கிறார்கள். அதன் பின்னரே குருக்ஷேத்ரம் தூய்மை செய்யப்பட வேண்டும்” என்றார் இன்னொருவர். “இன்று களத்திற்கு மிகக் குறைவான புரவிகளே சென்றன. அத்திரிகளும் மாடுகளும் பெரும்பாலும் இல்லை. எண்ணிச் சொல்லதக்க யானைகளே இருந்தன” என்று இன்னொருவன் சொன்னான். “எனில் மானுடரை உண்போம். இனி இக்களத்தில் நாம் இயற்றத்தகாத எதுவுமில்லை” என்றான் ஒற்றை கைகொண்ட ஒருவன். “கையிழந்தவர் கையை உண்ணலாம். நிகர்செய்யலாகும்” என்று ஒருவன் சொல்ல கையிழந்தவன் புன்னகைத்தான்.
“எழுக! நிரைகொள்க!” என்று மீண்டும் மீண்டும் முரசு ஆணையிட்டுக்கொண்டிருந்தது. படைவீரர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டு சிறு சிறு குழுக்களாக கூடினார்கள். யுதிஷ்டிரன் அவர்கள் நடுவே செல்வதை ஒருவன் கண்டான். “இதோ அரசர் செல்கிறார்!” என்று ஒருவன் கூவினான். “மும்முடி வேந்தர். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி!” பலர் நகைத்தனர். “களவெற்றியால் எடைமிகுந்திருக்கிறார். ஆகவே மைந்தர்கள் சுமந்து செல்கிறார்கள்” என்று ஒரு முதியவன் சொல்ல பலர் நகைத்தனர். பிரதிவிந்தியன் சீற்றத்துடன் அவர்களை நோக்கி திரும்ப “வேண்டாம், அவர்களின் அச்சொற்களுக்கு தகுதியானவர்களே நாம்” என்று யுதிஷ்டிரன் கூறினார்.
“இன்று அரசருக்கு நாம் கொழுப்புள்ள ஊனை அளிப்போம். அவரது படைவீரர்களின் நிணம்” என்றான் ஒருவன். “அவருக்கு அது புதியதல்ல. பல்லாண்டுகளாக அவர்கள் அதையே உண்டு வருகிறார்கள். ஊன் உண்ணாத அரசன் எவன்?” என்று ஒருவன் கூவினான். அவர்கள் இறுதியாக விடுபட்ட தளை அது என்பதனால் மிக விரைவிலேயே அதை கொண்டாடத் தொடங்கினர். யுதிஷ்டிரனை நோக்கி வசைச்சொற்களைக் கூவியும் கீழ்மை நிறைந்த கையசைவுகளைக் காட்டியும் ஏளனம் உரைத்தனர். “அவன் துணைவியை சமைத்து அவனுக்கு அளியுங்கள். அவளால்தான் எழுந்தது இக்களம்” என்றார் ஒருவர். “நெறிப்படி அவர்கள் ஐவரும் பகிர்ந்து அதை உண்பார்கள். இவன் காமம் கொண்டவன், அவளுடைய நன்கு வெந்த கருவாயிலை அள்ளி உண்பான்” என்றான் ஒருவன். “இவன் பேரறத்தான். எனவே அவளுடைய நெஞ்சக்குலையே இவனுக்குரியது” என்று ஒருவன் சொல்ல பலர் கூச்சலிட்டு நகைத்தனர்.
சொற்கள் யுதிஷ்டிரரை நோயுறச் செய்தன. உடல் நடுங்க, தலைதாழ்ந்து கொதிக்கும் நீர் நிறைந்த கலம்போல் தொங்க அவர் தேரில் அமர்ந்திருந்தார். தேரை நிறுத்திவிட்டு பிரதிவிந்தியன் நோக்கினான். யௌதேயன் எங்கும் தென்படவில்லை. விழிதொடும் தொலைவில் எங்கும் மரங்களோ நிழலோ இல்லை. அமர்ந்திருக்க ஒரு தடம்கூட தென்படவில்லை. அடுகலம் ஒன்று புரண்டு கிடப்பதைக் கண்டு பிரதிவிந்தியன் ஓடிச்சென்று அதை கொண்டுவந்து புரட்டி பீடமென்று அமைத்து “அமர்க, தந்தையே” என்றான். யுதிஷ்டிரன் அதில் கால்தளர்ந்து அமர்ந்தார். “நீர்! குடிப்பதற்கு சற்று நீர்!” என்றார். பிரதிவிந்தியன் யௌதேயன் வருவதைக் கண்டான்.
யௌதேயன் அணுகி “எங்கும் எவரிடமும் ஒருதுளி நீர்கூட இல்லை. அனைவருமே குருதியைத்தான் குடிக்கிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் “பொறுங்கள், தந்தையே” என்று சொல்லி ஓடிச்சென்று அங்கு நின்றிருந்த படைவீரனிடம் “பேரரசருக்கு குடிக்க நீர் வேண்டும். உடனே கொண்டுவா” என்றான்.
“குடிநீரா? இங்கு எங்கும் நீரில்லை. அவரை குருதி குடிக்கச் சொல்க!” என்று அவன் ஆணவத்துடன் சொன்னான். பிரதிவிந்தியன் அவனை சினத்துடன் பார்த்துவிட்டு திரும்பி வந்தான். யௌதேயன் “அனைத்து நீரும் அனலால் வற்றிவிட்டிருக்கிறது” என்றான். “செல்க! எங்கேனும் சென்று நீர் கொண்டு வருக!” என்று பிரதிவிந்தியன் கூவினான். யுதிஷ்டிரன் பக்கவாட்டில் மயங்கி விழுந்தார். உலர்ந்த உதடுகளால் “நீர்! சற்றேனும் நீர்! சற்று நீர்!” என்று முனகினார்.