இருட்கனி - 5

அஜர் சொன்னார்: சூதரே, தோழரே, கேளுங்கள் இக்கதையை. நெடுங்காலத்துக்கு முன் இது நடந்தது. அங்க நாட்டின் தெற்கெல்லையில் அளகம் என்னும் சிற்றூரில் அதிபலன் என்னும் வேளாண் பெருங்குடியினன் வாழ்ந்துவந்தான். விழி தொட இயலா வயல் விரிவும், இருளொழியாது பசுமை செறிந்த தோப்புகளும், கதிரொளி சென்று தொட இயலா ஆழம் கொண்ட களஞ்சியங்களும் அவனுக்கு உரிமையாக இருந்தன. அவன் நிலம் தேடி நீர் வந்தது. அவன் வயல்தேடி கிளிக்கூட்டம் வந்தது. அவன் இல்லம் தேடி ஒவ்வொரு நாளும் இரவலர் அணைந்தனர். அவன் இல்லக் கதவு இரவும் பகலும் திறந்தே இருந்தது. எண்ணம் கொள்ளாமலேயே அள்ளி வழங்கும் இயல்பு கொண்டிருந்தன அவன் கைகள். இன்மொழி மட்டுமே திகழ்வதாக இருந்தது அவன் நா. அவனைப் போன்றவர்களால் வாழ்கிறது சூதரின் சொல். அவன் பெயர் வாழ்க!

பசித்தவர், மறுவழி அறியாதவர் முதல் எண்ணங்கொள்ளும் பெயரென இருந்தது அவன் ஊர். அவனுடைய குடி அவ்வூரில் பெருகி நிறைந்திருந்தது. ஆயினும் யானை சரியும்போது அதனுடலில் வாழும் உண்ணிகளும் உயிர் இழப்பதுபோல் அரசன் லோமபாதனை அந்தணர் தீச்சொல்லிட்டு ஒழிய அங்க நாட்டில் வற்கடம் பரவியபோது அதிபலனும் வறுமையுற்றான். அவன் கருவூலங்களில் இருள் மண்டியது. களஞ்சியங்களில் காற்று நிறைந்தது. அடுமனைக் கலங்களும் ஒழிந்த பின்னரும் அதிபலன் கைகள் அள்ளிக்கொடுப்பதை நிறுத்தவில்லை. அவன் மனையாட்டியோ “கொள்க!” என்னும் சொல்லுக்கு பழகியிருந்தாள். விழுந்த விலங்கை பசித்த விலங்குகள் கிழித்து உண்பதைப்போல் அவனை தின்று அழித்தனர் இரவலர். தன் என்பும் பிறர்க்கென அவன் அங்கே திகழ்ந்தான்.

ஏழுநாள் உணவில்லாத் துயருக்குப் பின் அவன் மனையாட்டி முள்காய்ந்து மூங்கில்பூத்த காட்டுக்குள் ஏழு காதம் சென்று மூங்கில்மணிகளை பொறுக்கிக் கொண்டுவந்து துணியில் கட்டி நீரிலிட்டுக் கொதிக்கவைத்து கஞ்சியாக்கி அவனுக்கும் மைந்தருக்கும் அளித்தாள். மைந்தரும் மனையாட்டியும் அருந்தினரா என்று நோக்கிய பின் அவன் தன் முன் மண்தாலத்தில் அக்கஞ்சியை வைத்து உண்ண அமர்ந்தபோது வாயிலில் வயிறொட்டி எலும்பெழுந்து விழிகுழிந்து குரலும் எழாதபடி நொய்ந்திருந்த இரவலன் ஒருவன் வந்து தன் திருவோட்டை திண்ணைக்கல்லில் தட்டி இரந்தான். அவ்வொலியிலேயே அவன் பசியை உணர்ந்து எழுந்த அதிபலன் அக்கஞ்சியை கொண்டு வந்து அவ்விரவலனின் திருவோட்டிலிட்டு “உண்ணுக, உயிரோம்புக, நலம் சூழ்க!” என்று வாழ்த்தினான்.

இரவலனின் சொல்லில்லா புன்னகையையே வாழ்த்தெனப் பெற்று கைகூப்பி திரும்பி தன் மஞ்சத்திற்கு வந்து இடக்கை மடித்துப் படுத்து அவ்வண்ணமே உயிர் நீத்தான். ஒளிவடிவென விண்ணிலெழுந்து இப்புவியை மும்முறை வாழ்த்தி உம்பர் உலகுக்கு சென்றான். அங்கு விண் முதல்வனின் வலப்புறம் ஒளியுடல் கொண்டு அமர்ந்தான். அங்கே அவனுக்கு வலப்பக்கம் அமர்திருந்த மாமன்னர் சிபி எழுந்து வந்து அவனை தழுவிக்கொண்டார். ததீசி முனிவர் வந்து அவனை தலைதொட்டு வாழ்த்தினார். மண் தோன்றிய நாள் முதல் இங்கே பிறந்த வள்ளல்கள் அனைவரும் அவனைத் தேடி வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் வாழ்த்தி முடிப்பதற்கே மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின.

பசுமையே எஞ்சாது பாழ்நிலமென அளகம் மாறியபோது அதிபலனின் இல்லத்தாள் தன் ஊரை துறக்க முடிவுசெய்தாள். தன் ஏழு மைந்தரிடமும் “எழுக, இனி இவ்வூர் நமக்குரியதல்ல! எண்திசையும் தேர்க! ஆனால் என்றேனும் ஒருநாள் இவ்வூருக்கு திரும்பி வருக! எங்கு சென்றேனும் உயிர் ஓம்புக! எங்கு வாழ்ந்தாலும் எவரென்று நினைவில்கொள்க!” என்று வாழ்த்தி விடை கொடுத்தனுப்பினாள். அவள் கால்தொட்டு வணங்கி அவர்கள் ஏழு திசையிலாக பிரிந்து அகன்றனர். தன் கொழுநன் படுத்து உயிர் நீத்த அம்மஞ்சத்தின் அருகில் அமர்ந்து அவளும் உயிர் விடுத்தாள். விண்ணில் எழுந்து கணவனின் அருகில் அமர்ந்தாள்.

அளகத்தை கைவிட்டு அகன்ற அதிபலனின் மைந்தர்களில் இளையோனாகிய தீர்க்கபலன் அங்க நாட்டின் மேற்கெல்லையில் கங்கைக்கரையில் இருந்த சிறு துறைமுகமாகிய சுபத்ரத்திற்கு வந்து அங்கிருந்த உத்கலத்து வணிகனாகிய கஜமுகனுக்கு தன்னை அடிமையென விற்றுக்கொண்டான். அவனுடன் உத்கலம் சென்று அவனது கலத்தில் துழாவு பணியாளனாகவும், பண்டநிலையில் ஏவலனாகவும், வயல்களில் அடிமையாகவும் உழைத்தான். பிறிதொரு அடிமைப் பெண்ணை மணம் புரிந்துகொண்டான். கஜமுகனின் உளமறிந்த, அவன் சொல்பேணும் ஏவலனாகத் திகழ்ந்தான். அவன் மைந்தன் சுபலன் கஜமுகனின் மைந்தன் காமிகனுக்கு ஏவலனாக இருந்தான். சுபலனின் மைந்தன் உபலன் காமிகனின் மைந்தன் காரூஷனுக்கு ஏவலனானான். உபலனின் மைந்தன் மகாபலன் காரூஷனின் மைந்தன் ஊர்வரனுக்கு ஏவலனானான்.

ஊர்வரன் நோயுற்று இறப்புமஞ்சத்தில் இருக்கையில் தன் மைந்தருக்கு உடைமைகளை பகிர்ந்தளிக்க முடிவுசெய்தான். தன் அணுக்கனாகிய மகாபலனுக்கு விடுதலையை பரிசிலென அளித்து நூறுபொன் நாணயங்களை அவன் முன்னோரும் அவனும் ஈட்டிச் சேர்த்த செல்வமெனக் கொடுத்தான். “செல்க, எவராயினும் தன் நிலத்தில் வாழ்ந்து நிறைவதே வீடுபேறு! உன்னுள் குருதியிலேயே அங்கம் வாழ்கிறதென்று அறிவேன். அங்கு செல்க! உன் மைந்தர் நீர்க்கடன் அளிக்கையில் ஒரு பெயரென என் குடியும் ஒலிப்பதாக!” என்றான் ஊர்வரன். “ஆணை” என அவன் தாள்பணிந்து தன் மூன்று மைந்தருடன் நூறு பொற்காசுகளுடன் உத்கலத்திலிருந்து மகாபலன் அங்க நாடு நோக்கி சென்றான்.

லோமபாதனின் முயற்சியால் கசியபகுலத்து விபாண்டக முனிவரின் மைந்தர் ரிஷ்யசிருங்கர் அவைப்பரத்தையாகிய வைசாலியால் அழைத்துவரப்பட்டு விண்கனியச் செய்து வளம் பெருக வைக்கப்பட்டது. அரசரின் மகள் சாந்தையை மணம்கொண்ட ரிஷ்யசிருங்கர் ஒரு மைந்தனை பெற்றபின் காடுமீண்டார். முனிவரின் மைந்தனாகிய சதுரங்கரின் ஆட்சியில் அங்க நாடு மீண்டும் உயிர்கொண்டு செழித்தது. சதுரங்கரின் கொடிவழியினராகிய சத்யகாமர் அப்போது அங்கத்தை ஆட்சிசெய்தார். தந்தைவழிச் சொல்லினூடாக மகாபலன் அறிந்த நாடாகத் தெரியவில்லை அங்கம். அங்கே படித்துறைகளில் அயல்கலங்கள் நிறைந்திருந்தன. சாலைகளில் சகடங்கள் நிறைந்தோடின. வயல்களில் பசுமை அலையடித்தது. சிற்றூர்களுக்கு மேல் அடுமனைப்புகை நறுமணத்துடன் நிறைந்திருந்தது.

மரக்கலத்தில் வந்து ஷிப்ரம் எனும் சிறுபடித்துறையில் இறங்கிய மகாபலன் தன் துணைவியுடனும் மைந்தருடனும் அளகம் என்னும் சிற்றூரை வழி உசாவி தேடிச் சென்றான். உத்கலத்தில் அரசனின் அசையாக் கோல் நின்றமையால் களவும் சூதும் அவன் அறிந்ததாக இருக்கவில்லை. எனவே அனைத்துச் செலவுக்கும் மடிச்சீலையை அவிழ்த்து பலர் நோக்க நூறு பொற்காசுகளையும் எண்ணி நோக்கினான். அன்று அங்கத்தை ஆண்ட சத்யகாமர் தன் நலம் நோக்கி தொல்நெறிகளை மீறத் தயங்காதவராக இருந்தார். இவ்வுலக இன்பங்களை நாடி அரசப்பொறுப்பை தவிர்ப்பவராகவும் சொல்கேட்டு நினைவில்கொள்ளாதவராகவும் திகழ்ந்தார். சினத்தால் தண்டித்தார், விழைவால் வரியிட்டார், பற்றால் உறவுகொண்டார்.

முன்னேரின் பிழை நாடெங்கும் நூறு மேனி ஆயிரம் மேனியெனப் பெருகியிருந்தது. சிற்றூரில் திருடர்கள் கரந்துலவினர். நெடுஞ்சாலைகளில் கொள்ளையர் காத்திருந்தனர். கண் முன் வளம்பெருகி விரிந்திருந்த அங்க நாட்டைக் கண்டு களி உவகை கொண்ட மகாபலன் அங்கே கரந்திருந்த தீமையை உணரவில்லை. செல்லும் வழியில் ஓர் ஆலமரத்தடியில் அவர்கள் தங்கினார்கள். அவனிடம் பொன் இருப்பதை உணர்ந்த உடன்போக்கன் ஒருவன் உளவு சொல்ல பின்னிரவில் ஏழு கொள்ளையர் படைக்கலங்களுடன் அவனை வளைத்துக்கொண்டனர். அவர்களை வரவேற்று தன் உணவை பகிர முயன்ற மகாபலன் அவர்களால் தலை வெட்டுண்டு இறந்தான். அவன் மைந்தர்கள் இருவரும் அங்கேயே கொல்லப்பட்டனர்.

அவன் துணைவி கிருதை முலையருந்தும் நிலையிலிருந்த மைந்தனை நெஞ்சோடணைத்துக்கொண்டு இருளில் தப்பி ஓடி புதர்களுக்குள் சென்று மறைந்துகொண்டாள். மகாபலனின் ஆடையைக் களைந்து அவன் உடலில் சுற்றிக்கட்டி வைத்திருந்த பொன் நாணயங்களை எடுத்துக்கொண்டபின் அவன் குடலுக்குள் ஏதேனும் பொருள் கரந்துள்ளதா என்று அறிய வாளால் வயிற்றைப் போழ்ந்துகொண்டிருந்தமையால் கள்வர்கள் அவளை சற்று நேரம் விழியொழிந்தனர். பின்னர் அவர்கள் அவளைத் தேடியபோது குழவி மயங்கிவிட்டிருந்தமையால் அவள் தப்பினாள். குருதிமணம் கேட்டு குறுங்காட்டிலிருந்து வந்த நரிகளைக் கண்டு அஞ்சி கள்வர் அங்கிருந்து அகன்றனர்.

புலரி வரை புதர்களுக்குள் ஒளிந்திருந்த கிருதை ஒளியெழுந்ததும் கதறியபடி சாலையில் வந்து நின்று ஊராரை உதவிக்கழைத்தாள். அவள் குரலை கேட்டு அயல் சிற்றூர்களிலிருந்து வந்த மக்கள் அவள் பொருட்டு துயரம் கொண்டனர். அவ்வுடல்களை கொண்டு சென்று இடுகாட்டில் எரித்தனர். அவளுக்கு உணவும் உறைவிடமும் நற்சொல்லும் அளித்தனர். அவர்கள் அவளிடம் அவ்வூரிலேயே குடில் ஒன்று அமைத்து தங்கிவிடும்படி கோரினர். ஆனால் அவள் அரசனிடம் முறை கேட்கச் செல்வதாக சொன்னாள். “முறைமையைச் செவிகொள்ளும் அரசனல்ல இன்று அரியணை அமர்ந்திருப்பவன். உளவெறுமை கொண்டவன். தன்னிலிருந்து தொடங்குபவன். குடிகளின் குரல்களுக்கு அப்பால் விண்ணில் மிதப்பதுபோல் தன் அரண்மனையில் வாழ்கிறான்” என்றனர் ஊர்முதியோர்.

அவள் உளம் அடங்கவில்லை. “இந்நிலத்தை நாடி வந்தவர் என் கொழுநர். இந்நிலத்தில் அறம் வளர்த்த குலத்தைச் சார்ந்தவர். அறம் குடிகாக்கும் என்பது உண்மையாயின் அவர் பொருட்டு தெய்வங்கள் விண்ணிலிருந்து இறங்கி வந்தாகவேண்டும். என் சொல்லை அவர்கள் செவி கொண்டாகவேண்டும். அரசனுக்கு தெய்வங்களின் ஆணை எழுந்தாகவேண்டும்” என்றாள். தன் மைந்தனை ஆடையால் உடலுடன் சேர்த்துக்கட்டியபடி அங்க நாட்டின் தலைநகராகிய சம்பாபுரி நோக்கி தனித்து நடந்து சென்றாள். உலருணவு கட்டி அவளுக்கு அளித்து “நலம் நிகழ்க!” என வாழ்த்தி அனுப்பினர் ஊரார். “எங்கு நீ தனியள் என்று உணரினும் இங்கு வருக, அன்னையே! இங்கே உன் சுற்றம் உள்ளதென்றே கொள்க!” என்றார் ஊர்த்தலைவர்.

சம்பாபுரியின் கதிரோன் எழும் பெருவிழவு எழுந்த நாள் அது. கிருதை பன்னிரு நாட்கள் மலைப்பாதையினூடாக நடந்து பெரும்பாதையை அடைந்து அங்கு சம்பாபுரி நோக்கி சென்றுகொண்டிருந்த திரளுடன் தானும் கலந்து கொண்டாள். விழவுக்குச் சென்றவர்கள் இசையில் ஆடியும் கள்ளருந்தி கூச்சலிட்டும் கட்டில்லாமை கொண்டிருந்தனர். அவள் ஒருத்தி மட்டும் துயர் மிக்க முகத்துடன், நெஞ்சோடு அணைத்த மகவுடன், உறுதியான காலடிகளுடன் சென்றுகொண்டிருந்தாள். தனக்கு அளிக்கப்பட்ட கள்ளையும் மலர்மாலைகளையும் வண்ணப்பூச்சுகளையும் மறுத்தாள். தான் எவளென்றும் தன் இலக்கு எதுவென்றும் அவர்களிடம் அவள் சொல்லவில்லை. “கதிரோன் ஆற்றலின் அரசன். எழும் காமத்தின் இறைவன். அவன் முன் உன் முகம் மலரட்டும். உனக்கு மைந்தர்கள் மேலும் பிறப்பார்கள்” என்றாள் முதுமகள் ஒருத்தி.

சம்பாபுரியை அவர்கள் அடைந்தபோது மழைவெள்ளம் பெருகி வந்து நிறைந்த ஏரிபோல் அந்நகர் எல்லைகளை முட்டி அலையடித்து சுழித்துக்கொண்டிருந்தது. எங்கு நோக்கினும் மக்கள்திரள். கள்ளும் இன்னுணவும் தெருதோறும் மலிந்திருந்தன. சாலைகளில் மலர்மாலைகளைக் கொண்டு மாறி மாறி அறைந்தும் வண்ணப்பொடிகளை அள்ளி வீசியும் வண்ண ஆடைகளை வானில் சுழற்றி வீசியும் மக்கள் களிவெறி கொண்டு கொந்தளித்தனர். பரத்தையர் கள்வெறியும் காமமுமாகச் சிவந்த விழிகளுடன் சிரித்துக்கொண்டும் இளைஞர்களை எள்ளிநகையாடியபடியும் சிறு திரள்களாக சுற்றிக்கொண்டிருந்தனர். இருள்மயங்கும் இடங்களெங்கும் காமம் திகழ்ந்தது. வெறிமின்னும் விழிகள், சிரிப்பில் விரிந்த முகங்கள், களிக்கூச்சலில் நடுங்கும் உடல்கள் மட்டும் எங்கும் தெரிந்தன. சம்பாபுரியின் சூரியனார் கோயில் பெருவிழவே பாரதவர்ஷத்தின் விழவுகளில் தொன்மையானது என்றனர். சூரியவிழவைக் கண்டே இந்திரவிழவு எழுந்தது. இந்திரவிழவே காமன்விழவென்று உருமாறியது.

கிருதை அரசனை நெருங்குவது எப்படி என்று மட்டுமே பார்த்தாள். அங்கு எவரும் எண்ணிய எவ்விடத்திற்கும் செல்ல இயலவில்லை ஒவ்வொருவரும் ஒருவரோடொருவர் முட்டி மோதிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் பெருந்திரளே கொண்டுசென்றது. சுழித்து அலைக்கழித்து அவர்கள் எண்ணியிராத எங்கோ கொண்டு சேர்த்தது. அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. எங்கிருந்தாலும் ஒன்றே என எண்ணி களி கொண்டிருந்தனர். நகரெங்கும் தன் மைந்தனை நெஞ்சோடணைத்தபடி அவள் சுழன்று தடுமாறிக்கொண்டிருந்தாள். அரசன் அணிக்கோலத்தில் வெங்கதிரோன் ஆலயத்தின் படிகளில் தோன்றுவதை மிகத் தொலைவிலென அங்கு நின்று கண்டாள். அவன் அணித்தேரில் ஏறி நகர்த்தெருக்களினூடாக செல்லும்போது மிக அப்பால் பெரிய மாளிகையொன்றின் தூணுடன் சேர்த்து முழுத்திரளாலும் அழுத்தப்பட்டிருந்தாள்.

விபாண்டக முனிவரின் மைந்தர் ரிஷ்யசிருங்கரை கவர்ந்துவர இளம் பரத்தையை லோமபாதர் அனுப்பிய கதையை கூத்தர் நடித்த மேடையை வெறித்து நோக்கியபடி அப்பால் ஒரு மாளிகையின் திண்ணை முகப்பில் சுவரோடு ஒட்டி நின்றிருந்தாள். அரசன் தேர் நிலை சேர்ந்ததும் எவ்வண்ணமேனும் அவன் முன் சென்றுவிட வேண்டுமென்று எண்ணி உடல்களின் ஊடாக ஊசி என ஊடுருவிச் சென்றாள். மறுபுறத்திலிருந்து பேரலையென வந்தறைந்த திரளால் அள்ளி பின்னுக்கு கொண்டுசெல்லப்பட்டாள். அவர்கள் நடுவினூடாக அணிப்பரத்தையர் ஏறிய தேர்கள் சென்றன. அத்தேர்களை நோக்கி மக்கள் மலர்ப்பந்துகளையும் வண்ணப்பொடியுருளைகளையும் தூக்கி வீசி கூச்சலிட்டு நகைத்தனர்.

தேர் செலுத்திய இளைஞன் ஒருவனை அவள் அருகிலெனக் கண்டாள். கரிய பெருந்தோள்கள். நீள் உடலால் இளைஞனென்றும், முகத்தால் சிறுவன் என்றும் தோன்றினான். அவன் தேருக்கு முன் முதியவன் ஒருவன் நிலையழிந்து விழப்போக, தசை புடைத்து நரம்புகள் இறுகிய கைகளால் கடிவாளத்தை இழுத்து ஏழு புரவிகளையும் நிறுத்தி தேரை ஒதுக்கி அவன் உயிரைக் காத்தான். ஒருகணம் திகைத்து சொல்லழிந்த கூட்டம் வெடித்தெழுந்து வாழ்த்தொலி கூவியது. அவனை நோக்கி பெண்கள் தங்கள் மேலாடைகளை எடுத்துச் சுருட்டி வீசியெறிந்தனர். மலர் மாலைகளும் செண்டுகளும் அவன் மேல் பொழிந்தன. நாணி உடல் குறுக்கியவனாக அவன் அத்தேரில் அமர்ந்திருந்தான். வண்ணங்களில் புதைந்து அது விழிக்கு மறைந்தது.

கிருதை தன் இடத்திலிருந்து சற்றேனும் அசைய முய ன்றாள். மேலும் மேலும் மானுட உடல்கள் வந்து அவளை அசைவிலாது நிறுத்தியிருந்தன. குழவி பசித்து அழத்தொடங்கியதும் அவள் பின்னடையும் வழி நோக்கி நடந்தாள். கூட்டத்திலிருந்து விடுபட்டு சிறு சந்துகளுக்குள் செல்வது எளிதாக இருந்தது. அதற்கு திரளின் விசையே உதவி செய்தது. இரு கட்டடங்களின் இடைவெளியினூடாக அப்பால் சென்றாள். நிழலில் அமர்ந்து அங்கு ஒரு முதுமகள் அளித்த இன்கூழை வாங்கி தானும் அருந்தி குழவிக்கும் அளித்தாள். குழவியை மடியில் அமர்த்தியபடி உளம் ஏங்கி அமர்ந்திருந்தாள்.

அரசனை சென்று கண்டு ஒரு சொல்லேனும் அவன் செவியில் உரைப்பதற்கு தனக்கு வாய்ப்பில்லை என்று நன்கறிந்தாள். இயல்வது ஒன்றே, அங்கிருந்து மீண்டும் அங்க நாட்டின் வேளாண் சிற்றூர்களுக்கு மீள்வது. எங்கேனும் தன்னையும் தன் மைந்தனையும் வயல் பணியாளர்களாக அளித்துக்கொள்வது. வெயில் பொழியும் நிலத்தில் தோல்கறுக்க உழைப்பது. உண்டு உடல்வளர்த்து, மணந்து மைந்தர் பெருகி, அவன் குடிவளர்வதைக்கண்டு முதுமையேறி மறைவது. அவன் குடியில் மீண்டும் பெருமை வந்தமையக்கூடுமென்றும், ஈகையறத்தின் கொடை உறுத்து வந்து உறையுமென்றும் நம்பி உயிர்விடுவது. பிறிதொன்றும் செய்வதற்கில்லை என உணர உணர அவள் உளமழியலானாள்.

மைந்தனை நெஞ்சோடணைத்தபடி சம்பாபுரியின் சிறு வழிகளினூடாக மாளிகைகளின் இடுக்குகளினூடாக கிருதை நடந்தாள். அந்தியில் அவள் கங்கைக் கரையை சென்றடைந்தாள். அங்கு நீராட்டுப் படித்துறைகளிலும் படகுத்துறைகளிலும் மக்கள் குழுமி ஓசையிட்டுக்கொண்டிருந்தனர். அவள் புரவிகளை நீராட்டும் துறையருகே ஒரு கல்லில் தன் மைந்தனை மடியிலமர்த்தி ஒழுகும் ஆற்றுநீரைப் பார்த்தபடி அமர்ந்தாள். அவள் இயற்றுவதற்கு ஒன்றே எஞ்சியிருக்கிறதென்று தோன்றியது. எழுந்து மகவை உடலுடன் ஆடையால் கட்டியபடி கைகளையும் கால்களையும் மேலாடையால் சுற்றிக்கட்டிக்கொண்டு நீர்ப்பரப்பில் பாய்ந்து மூழ்குவது. அன்னையின் குளிர்ந்த அணைப்பின் ஆழத்திற்குள் சென்றுவிடுவது. அறியாக் கடற்பரப்பைச் சென்றடைந்து அதிலொரு துகளென கரைந்தழிவது.

உகந்த இறப்புதான் அது. உடல் நலிகையில் அவள் குடியினர் அவ்வாறு உயிர்நீப்பதுண்டு. அறம் நின்று வாழ இயலாதாகுகையில், ஆராச் சிறுமை வந்து கூடுமென்றால் அவ்வண்ணமே செய்யவேண்டுமென்று அவளுக்கு அன்னையர் அறிவுறுத்தியிருந்தனர். அவள் நீர்ப்பெருக்கையே நோக்கிக்கொண்டிருந்தாள். இக்கணம் எழுந்து நான் இந்நீர்ப்பெருக்கில் குதித்து மறைந்தால் என் கொழுநனும் அவன் மூதாதையரும் இயற்றிய பேரறம் எழுந்து வந்து என்னை காக்குமா? காக்காதொழியுமெனில் தலைகாக்கும் அறமென்று நூலோர் கூறியதனைத்தும் பொய்யென்றாகும். அறம் அறத்தைக் காக்கும், அறம் அறத்தைப் பெருக்கும் என்று மூதாதையர் சொல்லி மைந்தர் நம்பி வாழ்ந்த யுகம் முடிவுற்றதா என்ன?

துவாபரம் முடிகிறது கலி எழவிருக்கிறது என்று இளமையில் அவள் கற்றிருந்தாள். அறம் தெய்வமென எழுவது இனி நிகழப்போவதில்லையா? அவ்வண்ணம் ஒரு காலம் வந்துவிட்டதெனில் அதன் பின் இங்கு இவ்வண்ணம் உயிர் வாழ்ந்து என்ன பயன்? ஆம், இயற்றக்கூடுவது ஒன்றே. எழுந்து கங்கைக் குளிர்நீரில் பாய்ந்து உயிர்விட வேண்டும், அறம் எழுந்து காக்குமெனில் நான் வாழ்வதற்கு பொருளுண்டு. காக்காதெனில் நான் வாழத் தகுந்ததல்ல இந்த யுகம். அவள் மைந்தனை தட்டி எழுப்பினாள். அரைத்துயிலில் இருந்து அவன் விழி திறந்து அன்னையை நோக்கி நகைத்தான். “மைந்தா, இந்நீர்ப்பெருக்கில் நாம் இறங்குவோமா?” என்று அவள் கேட்டாள். “நீர்! நீர்!” என்று சொல்லி மேல் ஈறில் முளைத்த இரு சிறு பால்பற்களைக் காட்டி மைந்தன் துள்ளினான்.

அந்நிலையிலும் அச்சிரிப்பால் அவள் உளம்நெகிழ்ந்தாள். “அன்னை இதில் குதிக்கவிருக்கிறேன். அன்னையுடன் நீயும் வருகிறாயல்லவா?” என்றாள். “நீர்! நீர்!” என்று அவன் இரு கால்களையும் உதைத்து கைகளை வீசிக் குதித்தான். குழிவிழுந்த அவன் கன்னங்களில் தட்டி புன்மயிர்த் தலையை முத்தமிட்டு “அன்னையுடன் எழுக, என் இறையே!” என்று அவள் சொன்னாள். அவனை எடுத்து தன் உடலுடன் ஆடையால் கட்ட முற்பட்டபோது காலடி ஓசை எழக்கேட்டு திரும்பிப் பார்த்தாள். முன்பு பரத்தையரின் அணித்தேரை ஓட்டிய அந்தப் பேருடல் சிறுவன் எடைமிக்க காலடிகளை வைத்து நிமிர்ந்த உடலுடன் நீண்ட கைகளை வீசி நடந்துவருவதை கண்டாள். அவன் நீராட்டிய புரவிகள் களைத்து உடன் வந்தன.

அவன் அவள் அருகே வந்து புன்னகையுடன் குனிந்து மைந்தனை பார்த்தான். “இவன் பெயரென்ன?” என்றான். அஸ்வன் என்று அவள் சொன்னாள். “நீளாயுளுடன் இருப்பான்” என்று வாழ்த்தியபின் தன் இடையிலிருந்து கணையாழி ஒன்றை எடுத்து மைந்தனின் கையில் வைத்தான். அவள் திகைப்புடன் நோக்க புன்னகையுடன் மைந்தன் தலைதொட்டு வாழ்த்திவிட்டு நடந்துசென்றான். அவள் அவனை பின்பக்கம் நோக்கி நின்றாள். பின்னர் விம்மி அழுதபடி மைந்தனை நெஞ்சோடணைத்துக்கொண்டாள்.

சூதரே, தோழரே, அவள் மைந்தனை எடுத்துக்கொண்டு அக்கணையாழியை கையிலேந்தியபடி சம்பாபுரியிலிருந்து கிளம்பிச்சென்றாள். அவள் நடந்து செல்கையில் கலிங்க வணிகன் ஒருவன் அவளை கண்டான். “எங்கு செல்கிறாய்?” என்று கேட்டான். “என் மைந்தன் வாழ்வதற்கு உகந்த ஊர் ஒன்றை தேடிச்செல்கிறேன். இவன் என் மைந்தன். இக்கணையாழிக்கு உரியவன்” என்று அவள் அதை காட்டினாள். அந்த வண்டியிலிருந்த ஏழு வணிகர்களும் இறங்கி அவளுக்கு தலைவணங்கினர். “அன்னையே, உன் மைந்தன் எங்களுடன் இணைந்துகொள்ளட்டும். இக்கணையாழியையே அவன் தன் இடுசெல்வமாக அளிக்கட்டும்” என்றார் வணிகர்.

அவளை அவர்கள் தங்களுடன் அழைத்துச்சென்றனர். அக்கணையாழி அவ்வணிகர் குழுவிற்கு எங்கும் வழி தெளிப்பதாயிற்று. பிற வணிகர் குழுக்களிலிருந்து அவர்களை ஒருபடி மேலேற்றியது. அக்கணையாழியால் அஸ்வன் அவ்வணிகர் குழுவின் வழிகாட்டியும் தலைவனும் ஆனான். அவன் சென்றவிடமெல்லாம் பொற்குவைகள் காத்திருந்தன. ஈட்டிய பெருஞ்செல்வத்துடன் அளகத்திற்கே மீண்டுவந்தான். அங்கே விழிதொடும் எல்லைவரை நிலம் பெற்று பெருநிலக்கிழாரானான். அவன் குடி பெருகியது. தன் மைந்தன் கை பெருகி உணவளித்து இரவலரைப் போற்றுவதை, அவன் பெயர் எட்டுத் திசையிலும் துயருற்றோர் நாவுகளில் ஒலிப்பதைக் கேட்டு உளம் நிறைந்து கிருதை உயிர் நீத்தாள்.