இருட்கனி - 47
சல்யர் தன்னை மிகையாக காட்டிக்கொள்வதை விருஷசேனன் நோக்கினான். கைகளை வீசி உரத்த குரலில் “யாரங்கே? பின்சகடத்தின் ஆரத்தை இன்னொருமுறை பார்க்கச் சொன்னேனே? அடேய் சம்புகா, நான் வந்தேனென்றால் குதிரைச்சவுக்கு உனக்காகத்தான்” என்று கூவினார். “அறிவிலிகள், பிறவியிலேயே மூடர்கள்” என்று முனகியபடி திரும்பி வந்து ஒவ்வொரு புரவியின் வாயாக பிடித்து பிளந்து நாக்கை பார்த்தார். அவற்றின் கழுத்தை தட்டியபடி “புரவிகள் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று மலைமது வரட்டும்” என்றார். அதைக் கேட்டு இரு ஏவலர் விரைந்ததைக் கண்டபின்னரும் “அடேய்! மலைமது என்று சொன்னேன். எங்கு பார்க்கிறாய்? விழிக்கிறான். உன்னையெல்லாம் படைக்குக் கொண்டுவந்தவன் எவன்?” என்றார்.
அந்தத் தருணத்தில் சல்யரின் கூச்சலும் வசைகளும் ஒவ்வாமையை உருவாக்கின. அவன் பார்வை சென்று தைக்க அவர் விருஷசேனனைப் பார்த்து, “என்ன செய்கிறாய்? உனது புரவிகளை பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை” என்று அவன் சொன்னான். “எங்கு போர்க்கலை கற்றாய் நீ? வில்லவன் தேரிலேறுவதற்கு முன் தன் தேரில் கட்டப்பட்டிருக்கும் புரவிகளை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். அவற்றுடன் பேச வேண்டும். அவை அவனை புரிந்துகொள்ள வேண்டும். யாருக்காக போர் புரியவேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை அவற்றுக்கு உண்டு. உனக்கும் புரவிக்குமிடையே ஒரு உரையாடல் நடந்தாலொழிய தேரில் நின்றிருக்கும் உன்னை அவை அறியப்போவதில்லை. அவை எண்ணப்போவதென்ன என்று உனக்கும் தெரியாது” என்றார்.
விருஷசேனன் முதல் கணம் தன்னுள்ளிருந்து எரிச்சல் பொங்கி வருவதை உணர்ந்தான். ஆனால் ஒரு சொல்லும் பேசாமல் தலை திருப்பிகொண்டு புரவிகளை அணுகி அவற்றின் கழுத்தையும் காதுகளையும் தொட்டு மெல்ல இழுத்தான். தந்தை எப்போதுமே சல்யரிடம் புரிந்துகொள்ள இயலாத பணிவு ஒன்றை கொண்டிருப்பதை அவன் அறிந்திருந்தான். அவருடைய அந்தச் சிறுமைகளை அவர் விரும்புவதுபோலக்கூடத் தோன்றும். மீண்டும் திரும்பியபோது சல்யர் என்ன செய்வதென்றறியாமல் சகடத்தின் பட்டையை கைகளால் நீவிப்பார்ப்பதை கண்டான். ஒருகணத்தில் அவனுக்கு அவருடைய உளநிலை புரிந்து புன்னகை வந்தது. அவர் தன் வாழ்வின் உச்சதருணமொன்றில் இருக்கிறார். உச்ச தருணங்களில் இளிவரல் கூத்தர்போல் நடிக்கத் தொடங்கிவிடுபவர்களே மிகுதி. அப்போது என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எவருக்கும் தெரிவதில்லை. அவர்கள் செய்வதெல்லாமே எண்ணிச்செய்பவை. செயற்கையாக இயற்றப்படும் அனைத்துமே ஒவ்வாமையை உருவாக்குகின்றன. மிகையாக, பொருத்தமற்றவையாக, பிழையானவையாக ஆகிவிடுகின்றன.
அத்தருணத்தில் தானும் அவ்வாறு மிகையாக நடந்துகொள்ளக்கூடுமோ என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவன் உள்ளம் முற்றாக சொல்லணைந்து படிந்துகிடந்தது. ஒரு வகையிலும் எழுச்சி கொள்ளவில்லை என்பதை நோக்கும்தோறும் உணர்ந்தான். என்ன ஆயிற்று எனக்கு? முதல் நாள் தந்தையுடன் போருக்கு வந்தபோதிருந்த கொந்தளிப்பில் துளிகூட இப்போதில்லை. தந்தையுடன் போருக்கு வந்தபோது அன்றே போர் முடியுமென்று அவன் நம்பினான். தந்தையின் அம்புகளுக்கு நிகராக எவரும் நின்றிருக்க இயலாது. அவரை வென்று கடந்து செல்வதென்பது பரசுராமர் ஒருவருக்கே இயல்வது. ஒருவேளை மறுபுறம் தேரோட்டி அமர்ந்திருக்கும் இளைய யாதவர் எண்ணினால் அவருக்கு நிகர் நிற்க இயல்வதாகும். வெல்லவும் கூடும். அவரோ படைக்கலம் எடுப்பதில்லை என நோன்பு கொண்டிருக்கிறார்.
ஆனால் களத்தில் ஒவ்வொன்றும் அவன் எண்ணியதற்கு மாறாகவே நிகழ்ந்தது. ஒவ்வொரு நிகழ்வும் வேறெங்கோ எவரோ முன்னரே முடிவு செய்து தன் வழியினூடாக கொண்டு செலுத்தி அமைப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உருவாகும் வெறுமையை, சலிப்பை, அதிலிருந்து உந்தி உந்தி நம்பிக்கையை மீட்டுக்கொள்ளும் தவிப்பை உணர்ந்த பின்னர் போர்க்களத்திற்கு எழுகையில் அவன் எந்த நம்பிக்கையையும் பேணிக்கொள்ளவில்லை. முதல்நாள் போரிலிருந்து மீள்கையில் அவன் ஏழுமுறை தேர் ஏறிச்சென்ற நாகம்போல மண்ணோடு மண்ணாக வெறும் தோல்சக்கைபோல தான் மாறிவிட்டிருப்பதாக உணர்ந்தான். இளையோரின் முகங்களை நோக்கிய பின்னர்தான் தன் கடனை உணர்ந்து “இன்று நாம் அவர்களை பெரும்பாலும் அழித்துள்ளோம். நாளை முழுவெற்றி, ஐயம் வேண்டாம்” என்றான்.
மறுநாள் “இன்று நாம் பாண்டவ மணிமுடியை வெல்வோம். தந்தை அதை அரசரின் தலையில் சூட்டுவார்” என்று தம்பியரிடம் சொன்னான். அவர்கள் அச்சொற்கள் முறைமைக்கென உரைக்கப்படுவன என அறிந்திருந்தார்கள். ஆயினும் அவர்களை அவை ஊக்கமூட்டி எழச்செய்தன. ஆனால் இருநாட்களில் அவன் அந்தச் சொற்களையும் இழந்தான். அடுத்தநாள் காலை களமெழுகையில் அவன் “இன்று களம் புகுகிறேன், இன்று என் உயிர் எஞ்சும் வரை தந்தையை காத்து நிற்பேன். இதற்கப்பால் எனக்கென்று இலக்குகளில்லை. இன்றுக்கு அப்பால் எனக்கு திட்டங்களுமில்லை” என்று திவிபதனிடம் சொன்னான். “நமது பணி அதுவே. இது ஒன்றே நம்மை காக்கும். இங்கு முரண்படும் அறங்கள் போரிடுகின்றன. நம்முடையதல்லா அரசுகள் முட்டிக்கொள்கின்றன. வெல்பவர்களும் வீழ்பவர்களும் நமக்கொரு பொருட்டு அல்ல. இந்த ஆடலில் நாம் இல்லை.”
திவிபதன் “அவ்வாறு நம்மை விலக்கிக்கொள்ள முடியுமா என்ன?” என்றான். “முடியும். ஆகவேதான் இதை சொல்கிறேன். இச்சொற்களை மீள மீள நமக்கே சொல்லிக்கொள்க! நம்மிடம் நாமே சொல்வதனைத்தையும் நாம் ஏற்று அறியாமலே அடிபணிகிறோம் என்பதை சொல்லிப்பார்ப்பவர்கள் உணர்வார்கள்” என்றான். திவிபதன் “ஆம் செய்து பார்க்கிறேன்” என்றபின் “இப்போர் என்னுடையதல்ல. இதன் வெற்றி தோல்விகள் எனக்கொரு பொருட்டல்ல. எந்தையைக் காத்து நிற்பதென்பதே எனது பணி” என்றான். பின்னர் “மூத்தவரே. இதை நாம் கிளம்பும்போது கூட்டு உறுதிப்பாடென சொல்லிக்கொண்டால் என்ன?” என்றான்.
விருஷசேனன் அவ்வெண்ணத்தை உடனே பெற்றுக்கொண்டு “ஆம், நன்று. அதை நாம் செய்வோம்” என்றான். படைகள கிளம்புவதற்கு முன்பு வாளை உருவி நீட்டி அவன் அவ்வரிகளை சொன்னான். இளையோர் அனைவரும் தங்கள் வாள்களை உருவி நீட்டி அவ்வரிகளை ஏற்றுச் சொன்னார்கள். வாளுடன் சொல்லப்படும் வரி வாளே நாவென்றாக எழுவது. வாளென உடனிருப்பது. வாள் போல் கூர்மை கொண்டு படைக்கலமாவது. பின்னர் நிகழ்ந்த போர்களில் அவ்வுறுதிப்பாடு அவர்களை காத்தது. அவர்கள் எதற்கும் தயங்க வேண்டாம் எனும் நிலை ஏற்பட்டது. திரும்பி வருகையில் தங்கள் குருதிச் சுற்றத்தின் இழப்பை அன்றி எதைப் பற்றியும் அவர்கள் எண்ணிக்கொள்ளவில்லை. அவ்விழப்புகளைக்கூட அந்தியின் கூடுகையில் ஓரிரு சொற்களினூடாக கடந்து சென்றார்கள்.
அன்று காலை தன் குடிலுக்கு இளையோர் வந்தபோது விருஷசேனன் கவசங்கள் அணிந்துகொண்டிருந்தான். திவிபதன் அவனிடம் வந்து தலைவணங்கி நின்றான். பிற இளையோருக்காக விருஷசேனன் விழி தூக்கினான். அவர்கள் ஒவ்வொருவராக புரவியில் வந்து அருகே நின்றனர். “கிளம்புவோம்” என்றபடி அவன் எழுந்தான். அவன் இடைக்கச்சையை ஏவலன் இறுக்கிக்கட்டினான். தன் உடைவாளை கையிலெடுத்தபின் அவன் அவர்கள் விழிகளை பார்த்தான். பின்னர் “இன்று அவ்வுறுதிமொழியை நாம் எடுக்கவேண்டியதில்லை” என்றான். “ஏன்?” என்று திவிபதன் கேட்டான். “தேவையில்லை என்று தோன்றுகிறது. அச்சொல் நம் உளம்சென்று அமைந்துவிட்டது” என்றபின் செல்வோம் என கைகாட்டி அவன் தன் தேரை நோக்கி சென்றான்.
தேரின் அருகில் சென்றதும் ஏன் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ளவில்லை என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அன்று காலை முதல் நெடுநேரம் அவன் உள்ளம் முற்றாக ஓய்ந்துகிடந்தது. துயிலெழுந்து நெடுநேரம் இருளை வெறித்துக்கொண்டிருந்தான். புலரியில் துயில் விழிப்பில் எந்த முகமும் நினைவிலெழவில்லை. முந்தைய நாள் துயிலில் எஞ்சிய எண்ணம் எழுந்து தொடர்வதும் நிகழவில்லை. வெளியிலிருக்கும் இருளே உள்ளும் நிறைந்திருந்தது. அப்போது அறிந்த பொருளின்மையை அவன் முன்பு எப்போதும் அறிந்ததில்லை. அப்பொருளின்மை அந்தக் காலையை நிறைத்திருந்தது. தெளிநீர்ப்பரப்பில் மலர் என அக்காலை அவ்வெறுமை மேலேயே விடிந்தது.
மிக அரிதாக ஏதோ ஒரு பொருளின்மையில் சென்று அவன் உளம் தொடுவதுண்டு. அது இப்புவியிலுள்ள எந்த நிகழ்வுகளுடனும் தொடர்புகள் அற்றது. கற்றோ எண்ணிச்சூழ்ந்தோ அடைவதல்ல. புரிந்துகொள்ள முடியாத ஒரு பொருள் விண்ணிலிருந்து விழுந்து முன் கிடப்பது போல் புலரி முதல் விழிப்பில் வந்து உள்ளம் நிறைப்பது. அகம் ஏங்கி விழிநீர் வடித்துக்கொண்டிருப்பான். கண்ணீர் காது மடல்களை நோக்கி வழியும். அதிலிருந்து அறுத்துக்கொண்டு எழுந்து முகம் துடைத்து கைகளை நீட்டி சோம்பல் முறிக்கையில் அவ்வெறுமை மெல்லிய தித்திப்பு கொண்டிருக்கும். இரும்பை மெல்ல நாவால் நக்கிக்கொண்டதுபோல பொருளற்ற தித்திப்பு.
ஆனால் அன்று அறிந்த வெறுமை விழிநீருக்கும் இடமற்றதாக இருந்தது. நீர்த்துளியை இழுத்து இன்மையென்றாக்கும் வான் பெருவெளி போல். ஏவலன் வந்து கதவு மடலை மெல்ல தட்டி ஓசையெழுப்பாவிடில் அவன் அந்த முடிவிலியில் சென்று மறைந்திருக்கவும் கூடும். அந்த வெறுமை அவனை அன்று சொல்லற்றவனாக்கியது. நாவால் சொற்களை உரைப்பதுகூட அகத்துடன் தொடர்பற்று வேறெங்கோ நிகழ்வதுபோல் தோன்றியது. அவ்வுறுதிமொழி உரைக்கப்பட்டால் அது நெடுந்தொலைவில் எங்கோ கேட்கும். அவ்வளவு தொலைவுக்கு அதை விலக்கிவிட்டால் ஒருவேளை அதன் மீதிருக்கும் நம்பிக்கையை அவன் இழக்கவும் கூடும்.
சல்யர் கர்ணனிடம் “பொழுதாகிறது. தாங்கள் தேரில் ஏறிக்கொள்ளும் நேரம் இது. படைகள் முகம் திரண்டுவிட்டன. நமது தேர் சென்று முன்னில் நிற்கையில்தான் அவர்கள் தலைமையை விழிகளால் காண்பார்கள். போருக்கு அது இன்றியமையாதது” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் கிழக்கு நோக்கி நிலம் தொட்டுத் தொழுது சென்னி சூடி வணங்கி தன் தேர் நோக்கி சென்றான். விருஷசேனன் சற்று அப்பால் சகட ஓசை எழுவதைக்கேட்டு திரும்பிப்பார்த்து துரியோதனனின் தேர் அணுகுவதை கண்டான். திரும்பி தந்தையிடம் “பேரரசர்!” என்றான். கர்ணன் திரும்பி நின்று துரியோதனனின் விரைவுத்தேர் சகடப்பாதையினூடாக விசையுடன் ஒலித்தபடி அணுகுவதை பார்த்தான். தேர் நின்றதும் அங்கு நின்றிருந்த படைவீரர்கள் “பேரரசர் வெல்க! அமுதகலக்கொடி வெல்க! கௌரவ குலம் வெல்க! அஸ்தினபுரி வெல்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர்.
தேருக்குள்ளிருந்து துரியோதனன் இறங்கி அவர்கள் அனைவரையும் நோக்கி வணங்கிவிட்டு கர்ணனை நோக்கி வந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது. விழிகள் சிறுவவர்களுடையவைபோல் ஒளிகொண்டிருந்தன. நேராக வந்து இருகைகளையும் விரித்தபடி ஒருசொல்லும் இன்றி கர்ணனின் தோள்களைப்பற்றி தன் நெஞ்சோடணைத்து தழுவிக்கொண்டான். கர்ணனும் தன் நீண்ட பெருங்கைகளால் அவன் உடலை தழுவினான். இருவரும் மிக அரிதாகவே அவ்வாறு தழுவிக்கொள்வார்கள் என்பதை விருஷசேனன் அறிவான். அவர்கள் தொடும்போதுகூட ஒரு ஒவ்வாமை இருப்பதுபோல் தோன்றும். தழுவிக்கொள்கையில் இரு வேழங்கள் கொம்புகளை மெல்ல உரசிக்கொண்டு விலகுவதுபோல் இருக்கும். தொடுவதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தது. என்றாவது நெஞ்சோடு நெஞ்சு இறுகத் தழுவிக்கொள்வார்களா என்று அவன் எண்ணியதுகூட உண்டு.
அத்தருணத்தில் அவர்களின் உடல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்துவிட்டதுபோல் தோன்றினார்கள். சூழ்ந்திருந்த படைப்பெருக்கை, திகைப்புடனும், மகிழ்வுடனும் சற்றே விலக்கத்துடனும் அவர்களை நோக்கிநின்ற பல நூறு விழிகளை, அத்தருணத்தில் எழவிருக்கும் போரை முற்றாக மறந்ததுபோல் தெரிந்தார்கள். விருஷசேனன் அவர்களின் தழுவல் நீண்டு செல்வதைக்கண்டு பொறுமையிழந்தான். அவர்களை எவ்வண்ணம் விலக்குவது என தயங்கினான். விலக்கியாகவேண்டும் என்று தோன்றியது. உச்சநிலைகளில் ஏன் அவற்றிலிருந்து விலகிவிடவேண்டும் என்ற தவிப்பு ஏற்படுகிறது? போதும் போதும் என ஏன் உள்ளம் தவிக்கிறது? ஏன் அஞ்சுகிறது? மானுட அகம் அன்றாடங்களில்தான் இயல்புநிலை கொள்ளக்கூடியதா என்ன? தன் உச்சநிலையில் காலம் மறந்துவிடக்கூடும். பிறர் கொள்ளும் உச்சநிலைகளில் காலம் இழுபட்டு நீண்டு விடுகிறது. சூழ்ந்திருப்பவர்களால் அங்கே நிற்கவே முடிவதில்லை. அங்கிருந்த அனைவரும் அப்படித்தான் தவித்துக்கொண்டிருந்தனர் என விழிகள் காட்டின.
தன்னிலை உணர்ந்து அவர்கள் ஒருவரிலிருந்து ஒருவர் விலகி, ஆடைகளையும் அணிகளையும் சீரமைத்தபடி, உடல்கள் நிறைவுடனும் பிரிவால் உணர்ந்த தனிமையுடனும் ததும்ப, சற்றே அகன்று, அல்லது அகல்வெனக் காட்டும் ஓர் அசைவை எழுப்பி, அருகிருப்பவர்களிடம் ஏதேனும் பொருளற்ற சொற்களைச் சொல்லி, ஏதேனும் ஆணைகளை இட்டு, அல்லது ஏதேனும் சிறு செயலினூடாக நிலை மீள்வார்கள் என்று அவன் எண்ணினான். அந்நிகழ்வை அவன் உள்ளத்தால் கண்டுவிட்டிருந்தமையால் அவர்களின் அத்தழுவல் நீண்டு நீண்டு நெடும்பொழுதாக சென்றுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. மேலும் மேலும் பொழுதாகிக் கொண்டிருந்தது. அவன் பெருமூச்சு எழ அதை நெஞ்சுக்குள் அடக்கினான்.
சல்யர் உரத்த குரலில் “பொழுதாகிறது! போர்முரசுகள் எக்கணமும் ஒலிக்கும். விண் வெளுக்கலாயிற்று” என்றார். விருஷசேனன் அவர் முகத்தை பார்த்தபோது அது சிவந்து, கண்கள் கலங்கி, கழுத்து நரம்புகள் இழுபட்டு, உச்சகட்ட சினத்துடன் தெரிவதை கண்டான். அவன் பார்ப்பதை அவருடைய விழிகள் வந்து சந்தித்ததும் நாணுவதற்கு மாறாக மேலும் அவர் சினம் கொண்டார். “நமது உணர்வுகளைக் காட்டும் இடமல்ல இது. ஆற்றலும் நம்பிக்கையும் வெளிப்பட்டாகவேண்டிய இடம்” என்று கூவினார். அத்தருணத்தின் அனைத்து உணர்வுகளையும் வாள் என வெட்டியது அவர் குரல்.
துரியோதனன் கர்ணனை தன் அணைப்பிலிருந்து விடுவித்து பின்னகர்ந்து தன் மேலாடையை சீரமைத்து திரும்பி விருஷசேனனிடம் “பார்த்துக்கொள்” என்றான். கர்ணன் விலகி தன் ஆடையை சீரமைத்து குழல்கற்றைகளை அள்ளி பின்னால் தள்ளி சல்யரிடம் “மெய்தான், மத்ரரே” என்றான். சல்யர் மேலும் சினம் கொண்டு “இப்போது எதற்காக இங்கு அரசர் வரவேண்டும்? இங்கிருந்த உணர்வுகள் அனைத்தையும் கீழிறக்கிவிட்டார். இன்றுடன் இப்போர் முடியவேண்டும். வில் விஜயனையும் அவன் உடன் பிறந்தோரையும் கொன்று மீளும் நாள் இது. அனல்தொட்டு வஞ்சினம் உரைத்து நீஙகள் வில்லெடுக்க வேண்டிய பொழுது இது” என்றார்.
துரியோதனன் “பொறுத்தருள்க மத்ரரே, நான் முழு நம்பிக்கையோடும் உவகை நிறைந்த உள்ளத்தோடும்தான் இங்கு வந்தேன்” என்றான். “இதற்கு முன் அங்கர் போருக்குச் செல்லும் நாளிலெல்லாம் வந்து தழுவிக்கொண்டிருக்கிறீர்களா என்ன?” என்றார் சல்யர். சல்யரின் உடல் முழுக்க இருந்த நடுக்கம் அவருடைய கழுத்தின் தசையில் அதிர்ந்துகொண்டிருந்தது. பேசும் போதே பற்களை இறுகக் கடித்திருந்ததும் விருஷசேனனுக்கும் இளையோருக்கும் விந்தையாக இருந்தது. அவர்கள் விழிளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டனர்.
துரியோதனன் சிறுவன் என விழிதாழ்த்தி “ இல்லை. ஆனால் இன்று புலரியில் நான் ஒரு கனவு கண்டேன். அது என்னை மீட்டது. நான் என் அரண்மனை அறைக்குள் நோயுற்று படுத்திருக்கிறேன். மிக இளமைந்தனாக இருக்கிறேன். இரவெல்லாம் என் அரண்மனை வாயிலுக்கு வெளியே அங்கர் எனக்காக காத்திருக்கிறார். அங்கரும் மிக இளமைந்தர். பின்னர் அங்கர் வந்து என் மஞ்சத்தறை கதவை தட்டினார். அந்த ஓசையைக் கேட்டு அக்கணமே என்னிலிருந்த அனைத்து வலிகளும் அகன்றன. நோய் நீங்கி பாய்ந்தெழுந்து கதவை நான் திறந்தேன். இருவரும் ஆரத்தழுவிக்கொண்டோம். இறுக முயங்கி நெடுநேரம் நின்றோம்” என்றான். அவன் முகம் நாணத்தால் சிவந்து அகல்கொண்டதுபோல் ஆகியது.
“பின்னர் கைகளைக் கோத்தபடி பாய்ந்து ஓடினோம். அது ஒரு அணிச்சோலை. பொற்கொன்றை மரங்கள் பூத்து நின்றிருந்தன. பொன்னிற ஒளி கொண்டிருந்தது அக்காற்று. பொன்மலர்களை அள்ளி விரித்த தரையில் நாங்கள் ஓடிச்சென்று ஒளிததும்பி பெருகி ஒழுகிக்கொண்டிருந்த ஆற்றில் குதித்தோம். கூச்சலிட்டு நீரை அள்ளி வீசி சிரித்து களியாடிக்கொண்டிருக்கையில் நான் விழித்துக்கொண்டேன். என் உள்ளம் மலர்ந்திருந்தது. முந்தைய நாள்வரை என்னைத் தொடர்ந்த எந்நினைவும் எத்துயரும் ஒரு துளியும் எஞ்சவில்லை. இந்தக்காலை இப்போது தொடங்கியதுபோலிருந்தது. இப்போது என்னிடமிருக்கும் நம்பிக்கையும் ஆற்றலும் அக்கனவிலிருந்து வந்தது. என் படைமுகத்துக்குச் செல்லும்போது கனவில் நான் அங்கரை தழுவிக்கொண்டதை நினைவு கூர்ந்தேன். ஆகவேதான் வந்து தழுவிக்கொள்ளவேண்டுமென்று தோன்றியது.”
சல்யர் “படைமுகப்பில் இவ்வாறு உணர்வுகளைக் காட்டுவதற்கு வேறு பொருள்கள் உண்டு” என்று தணிந்த குரலில் சொன்னார். “ஏதேதோ எண்ணிக்கொள்வார்கள் படைவீரர்கள். அறிக, தலைவர்களையும் அரசர்களையும் ஒவ்வொரு படைவீரனும் நோக்கிக்கொண்டிருக்கிறான். அவர்கள் உடலில் ஒரு தசை தளர்வதையும், ஓர் எண்ணம் அவர்களில் எழுந்தமைவதையும்கூட முழுப்படையும் அறியும்.” தலைதாழ்த்தி “ஆம்” என்றபின் துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “படைமுகம் கொள்க, அங்கரே! வெற்றியுடன் மீள்க!” என்றான். கர்ணன் “நன்று! படைமுகம் கொள்ளவிருந்தேன. நீங்கள் வந்தது மேலும் ஊக்கமளிக்கிறது” என்றபின் தலைவணங்கி தன் வில்லுக்காக கை நீட்டினான். அப்பால் நின்றிருந்த இரு ஏவலர்கள் விஜயத்தை கொண்டு வந்து அவன் கையில் அளித்தனர். அதை வாங்கிக்கொண்டு நடந்து தேரில் ஏறினான்.
தேரில் ஏறுகையில் படிகளில் கால் வைக்காது தட்டிலேயே நீண்டகாலை வைத்து ஏறிக்கொள்வது கர்ணனின் வழக்கம். அது நிலத்திலிருந்து ஒருகணத்தில் அவன் மேலெழுந்து தோன்றுவதுபோல் விழிமயக்களிக்கும். துரியோதனன் புன்னகையுடன் கர்ணன் தேரிலேறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். சல்யர் விருஷசேனனிடம் “பிறகென்ன? நீங்களும் தேரில் ஏறிக்கொள்ள வேண்டியதுதானே?” என்றபின் துரியோதனனை நோக்கி தலைவணங்கினார். துரியோதனன் “நன்று மத்ரரே, வெற்றியுடன் அந்தியில் பார்ப்போம்” என்றபின் தலைவணங்கி திரும்பிச்சென்று தன் தேரில் ஏறிக்கொண்டான்.
மத்ரர் அலுப்புடன் தலையசைத்து “நாடகங்கள்! எல்லோருக்குமே நாடகங்கள் பிடித்திருக்கின்றன” என்று பற்களைக் கடித்தபடி தலையசைத்து தனக்குத்தானே என சொன்னார். பின்னர் திரும்பி அப்பால் நின்ற சூதர்களிடம் “அங்கு என்ன செய்கிறீர்கள்? அறிவிலிகளே, விலகிச்செல்லுங்கள். தேர் கிளம்பவிருக்கிறதல்லவா?” என்று கூவினார். அவர்கள் தலைவணங்கி திரும்பிச் சென்றனர். புரவிகளை மீண்டும் தொட்டுத் தடவி செவி பற்றி இழுத்து ஓரிரு இன்சொற்கள் கூறிய பின்னர் கையூன்றி அமரத்தில் அமர்ந்து கடிவாளக் கற்றையை தன் கையிலெடுத்துக்கொண்டு சாய்ந்தமர்ந்தார் சல்யர்.
விருஷசேனன் தன் தேரிலேறி நின்றான். திவிபதனும் இளையவர்களும் தேரிலேறிக்கொண்டார்கள். அங்கிருந்து நோக்கியபோது கௌரவப்படை முற்றிலும் ஒருங்கமைந்துவிட்டிருப்பதை காண முடிந்தது. சகுனியின் முரசு பின்பக்கம் தணிந்த குரலில் “ஒருங்கிணைக! அணிமுழுமை கொள்க! ஒருங்கிணைக!” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தது. விருஷசேனன் பாண்டவத் தரப்பை பார்த்தான். இருபுறமும் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் பின்துணையென அமைய அர்ஜுனன் தேரில் நின்றிருந்தான். காற்று நின்றுவிட்டிருந்தமையால் குரங்குக்கொடி தளர்ந்துகிடந்தது. காண்டீபத்தை ஊன்றி வானத்தொலைவை நோக்குவதுபோல் விழிதூக்கி அசைவிலாது நின்றிருந்தான் அர்ஜுனன். அவன் தேரிலும் அசைவில்லை. புரவிகள்கூட அசைவிழந்தது செவிகளைக்கூட திருப்பாமல் நின்றிருப்பதுபோல் தோன்றின.
தேர்முகப்பில் தலையில் சூடிய மயிலிறகு விழிகொண்டிருக்க கால்களை மடித்து அமர்ந்து கைகளை மடியில் தளரவைத்து அரைவிழி மூடி ஊழ்கத்திலென இளைய யாதவர் இருந்தார்.
பாண்டவப்படையின் வலப்புறம் சாத்யகியும் இடப்புறம் திருஷ்டத்யும்னனும் அணிவகுத்திருந்தனர். வடக்கு எல்லையில் சுதசோமனும் சர்வதனும் இருபுறமும் துணையிருக்க பீமன் நின்றிருந்தான். இடது எல்லையில் நகுலனும் சகதேவனும் துணை நிற்க யுதிஷ்டிரன் படைமுகம் வந்திருந்தார். அவர்களின் முகங்களும் மண்பாவை என உறைந்த உணர்வுகளுடன் இருந்தன. பிற அனைத்தையும்விட அப்போது அவர்களை ஆள்வது துயிலே எனத் தோன்றியது. அவர்கள் நற்துயில்கொண்டு பதினேழு நாட்களாகிவிட்டிருந்தன. அமைதியான பொழுதில் குளிர் என துயில்வந்து உள்ளங்களை கவ்வி மூடியது. உளைசேற்றில் என எண்ணங்கள் சிக்கி அசைவிழந்தன.
படைகள் எழுபொழுதிற்காக காத்திருந்தன. ஒவ்வொரு படைவீரனும் முன்னும் பின்னுமின்றி அத்தருணத்தில் மட்டும் உளம் நட்டு நின்றிருக்கும் பொழுது. முன்னோர்களும் தெய்வங்களும் அவனை சூழ்ந்திருக்கவேண்டிய தருணம். தன் உளம் ஏன் அவ்வாறு முற்றிலும் ஓய்ந்துகிடக்கிறதென்று விருஷசேனன் வியந்தான். அதை எவ்வுணர்வால் எச்சொற்களால் உந்தி முன் செலுத்துவது? வானம் நன்கு வெளுத்துவிட்டிருந்தது. முகில் நிரைகள் வடமேற்கே மிக அப்பால் விலகிச்சென்றுவிட்டிருந்தன. தென்கிழக்கில் புதிய முகில்கள் எழுந்து வரவுமில்லை. கதிரொளி எத்தருணத்திலும் எழக்கூடும். எக்கணமும் முரசொலி எழும். இத்தனை ஆயிரம்பேரும் துயிலில் இருந்து விழித்தெழுவார்கள். அனைவருமே குறுங்கனவுகளுக்குள் இருப்பார்கள். அவை தனிக்கனவுகள். இந்த மாபெரும் பொதுக்கனவுக்குள் விழித்தெழுவார்கள்.
தன் புரவி தலை திருப்பி செருக்கடித்த கணத்தில் விருஷசேனனின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. துரியோதனன் சொன்ன சொல் என்ன? தன்னிடம் அவர் என்ன சொன்னார்? அச்சொல்லுக்காக அவன் உள்ளம் தவித்து அலைந்தது. என்ன சொன்னார்? என்ன சொன்னார்? பல்வேறு நினைவுமூலைகளில் முட்டிமோதியபின் அதை அவன் கண்டுகொண்டான். அவன் உள்ளம் அனைத்து விசைகளையும் இழந்து நிலைத்தது. பின்னர் எங்கிருந்தோ என விசை எழுந்து அவன் தோள்கள் இறுகின. கண்கள் அனல் கொள்ளும் அளவுக்கு உள்ளம் பொங்கி எழுந்தது.
அத்தருணத்தில் போர் முரசு முழங்கியது. “வெற்றிவேல்! வீரவேல்!” எனக்கூவியபடி கௌரவப்படை எழுந்து பாண்டவப்படையை தாக்கலாயிற்று. கர்ணன் ஒளி சுடர எழுந்து பாண்டவப்படையை நோக்கி அம்புகளைச் செலுத்தியபடி சென்றான். “வெற்றிவேல்! வீரவேல்!” என்று தன் அகமே பல்லாயிரம் நாவென்று மாறி அப்படைக்களத்தில் ஒலித்துக்கொண்டிருப்பதாக விருஷசேனன் உணர்ந்தான்.