இருட்கனி - 43
குருக்ஷேத்ரத்திற்கு தென்கிழக்காக செறிந்த காட்டிற்குள் அமைந்த சிறு ஊற்றுக்கண் சூரியதாபினி என்று அழைக்கப்பட்டது. அங்கு அரிதாக சில நிமித்திகர்களும் விண்ணுலாவியை வழிபடும் யோகியரும் ஒழிய பிறர் எவரும் செல்வதில்லை. அவ்வாறொன்று அங்கிருப்பது நிமித்த நூல்களில் மட்டுமே இருந்தது. முள்செறிந்த காட்டுக்குள் வழி தேடி அங்கு செல்வது எளிதாக இருக்கவில்லை என்பதனால் அவ்வாறொன்று இருப்பதையே கற்பனை என்று பெரும்பாலானோர் எண்ணினர். அது கற்பனை என்பதனால் ஆழ்ந்த பொருளை அதற்கு அளித்து, உருவகமென வளர்த்து, பிறிதொன்று என்று ஆக்கி பிறிதொரு இடத்தில் அதை நிறுவிக்கொண்டனர்.
கிழக்கே மணிபூரக நாட்டிற்கு அப்பால் மேரு மலையின் அடியில் சூரியதாபினி இருப்பதாக பின்னாளில் நம்பலாயினர். தொல்நூல்களை உளமயக்கிலாது கற்கவும், அடையாளங்களை செவிச்சொல் மரபெனப் பேணவும் ஆசிரியநிரை இருந்த பூசகரும் யோகியரும் நிமித்திகரும் மட்டுமே அங்கு வந்தனர். அவர்கள் அந்தச் சிறிய ஊற்றைக் கண்டு ஏமாற்றம் அடையவும் இல்லை. ஏனெனில் மிகத் தொல்காலத்திலேயே அடையாளம் காணப்பட்ட எதுவும் மிகச் சிறிதாகவே இருக்குமென அவர்கள் அறிந்திருந்தார்கள். தொன்மையான ஆலயத்தின் சிலைகள் மிகச் சிறியவை. தொன்மையான மலைமுடிகள்கூட சிறியவை என்று அவர்களின் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சூரியதாபினியை அணுக முள்செறிந்த புதர்களினூடாக ஓடும் ஓர் ஓடை ஒன்றே பாதை. ஓடையின் வழுக்கும் பாறைகளினூடாக தொற்றி ஏறி, மேலும் மேலும் உள்ளே சென்று, காட்டிற்குள் புதைந்து அமர்ந்திருக்கும் ஒரு பிலத்தைக்கண்டு, அதன் இடைவெளியினூடாக அப்பால் சென்றால் சற்றே தாழ்ந்த வட்ட வடிவ நிலத்தை அடையலாம். அதன் நடுவே சூரியதாபினி ஒரு சிறு குமிழியாக மண்ணுக்குள் இருந்து எழுந்துகொண்டிருந்தது. தொலைவிலிருந்து நோக்குகையில் அது செந்நிற உடல் கொண்ட விலங்கின் விழிக்குமிழி என்றே தோன்றும். அக்குமிழி அசைய அது செல்பவர்களை நோக்கி விழி திருப்புவது போலிருக்கும். அணுகிய பின்னரே அது குன்றாது குறையாது கூடாது எழுந்துகொண்டிருக்கும் ஊற்றென்று தெரியும். அதனைச் சுற்றி செம்மண்ணாலான வரம்பு கட்டிய சுனைப்பெருக்கு இருந்தது. அதன் நான்கு பக்கமும் நீர் பெருகி கவிழ்ந்தொழுகும்படி கரைவிளிம்பு நிகராக வளைத்திருந்தது.
காலையில் கதிர் எழுகையில் நீர்ப்பெருக்கு கிழக்கு நோக்கி வழிந்து வளைந்தோடி ஓடையை அடையும். கதிர் செல்லும் திசை நோக்கியே அந்த நீர் பெருகி விழும். அந்தியில் மேற்கு திசைநோக்கி விழும் நீர் இரவில் எஞ்சிய அரைவட்டத்தை முடித்து புலரியில் சூரியன் எழும் திசைநோக்கி காத்திருக்கும். அந்த விந்தை அதை கதிரவனின் கோயிலாக ஆக்கியது. சுனைக்கு அப்பால் சிறிய கற்சிலையாக கதிரவன் உயரமில்லாத பீடத்தில் நிலை பொருத்தப்பட்டிருந்தான். நான்கு கைகளில் தாமரையும் அஞ்சலும் அருளலும் காட்டி, நிகர்நிலையில் உடல் கொண்டு அவன் நின்றிருந்தான். அப்பகுதியில் பறவைகளும் சிற்றுயிர்களும் செறிந்திருந்தன. பெரிய உயிர்கள் அச்சுனையில் நீரருந்த வருவதில்லை. எனவே அச்சமிலாது பல்லாயிரக்கணக்கில் சிற்றுயிர்கள் வந்து அந்த ஓடையிலும் சுனையிலும் நீரருந்தின. சூழ்ந்திருந்த புதர்களில் பறவைகள் இரவும் பகலும் கூடி குறுமொழி பேசி முழக்கமென திரண்டிருந்தன. அப்புதர்கள் அனைத்திலும் மலர்களும் விரிந்திருந்தமையால் அப்பகுதி வண்ணங்களாலும் நறுமணங்களாலும் நிறைந்திருந்தது.
முதலில் அச்சுனையைக் காண்பவர்கள் அதைச் சூழ்ந்திருக்கும் அந்த முழக்கத்தை காற்று எழுப்பும் ஓசையென உணர்வார்கள். அல்லது அருகே அருவி இருப்பதாக. மறுகணமே அந்த ஓசை பல்லாயிரம் தனிப்பறவைக்குரல்களாக விரியும்போது உள எழுச்சி அடைந்து கைகூப்பி வணங்குவார்கள். அவர்கள் காலடி எடுத்து வைத்து அணுகுந்தோறும் சிற்றுயிர்கள் அகன்று அவர்களுக்கு வழிவிடும். தங்கள் வாழ்நாளில் கண்டிராத உயிர்களை அவர்கள் அங்கு காண்பார்கள். இவை இங்கிருந்தனவா, விழிக்கு மறைந்து வாழும் கலை இத்தனை முழுமையானதா, நாம் வாழும் உலகு இத்தனை விரிந்ததா என உள்ளம் விம்மிதம் கொள்ளும். விழிச்சுனையின் நீர் மிக இனியது. அதில் இனிமை என எது அமைகிறதென்பது நெடுங்காலமாகவே உசாவப்பட்டு விடையறியாதது. அள்ளி வாயில் விடுகையில் குளிர் கொண்டதென்றே தோன்றும். பிற நீரை விட அது எடைமிக்கது என நா அறியும். விழுங்கிய பின்னர் நாவிலும் உடலெங்கும் உணரும் இனிமை என்பது சுவையல்ல, ஓர் மெல்லுணர்வு என்று கூறினர் அங்கு சென்றோர்.
மீள மீள அருந்தவேண்டுமென்று விடாய் எழுப்புவது அச்சுவை. அருந்தி உடல் நிறைத்ததும் இனிய களைப்பால் அங்கேயே அமரச் செய்துவிடும். அங்கிருந்து மீள உளம் கொளாமல் அங்கேயே இருந்து அம்மயக்கிலேயே உயிர்விட்டவர்கள் உண்டு. அங்கிருந்த மென்சேறு நத்தையின் நாவென வந்து அவர்களை மூடி மண்ணின் வயிற்றுக்குள் கொண்டு செல்லும். அவர்களின் உடலுக்கு மேல் ஓரிரு நாட்களிலேயே சிறு செம்மலர்கள் முளைத்து நிறையும். தேனீக்களும் வண்டுகளும் பொன்னீக்களும் அமர்ந்து எழுந்து ரீங்கரித்துச் சுழலும் யாழொலி சூழ அப்பகுதியை சென்றடைந்து, ஏழுமுறை அச்சுனையை வலம் வந்து, நீரள்ளி தலையில் விட்டு உடற்தூய்மை செய்து, அங்கிருக்கும் ஏழு வண்ண மலர்களைப் பறித்து கதிரவனின் முன் படைத்து சுடரேற்றி வணங்கி மீள்வது அங்கு வருபவரின் வழக்கம். கண்களை மூடிக்கொண்டு கைநீட்டி பறித்தாலே ஏழு வண்ண மலர்கள் கைநிறைய வந்து சேரும் என்று அந்த இடத்தைப் பற்றிய கதைகள் சொல்லின. ஏழு வண்ணப் பறவைகள், ஏழுவித கனிகள், ஏழு நிறத் தளிர்கள், ஏழு ஒளிகொண்ட கற்கள் அங்கே சூழ்ந்திருந்தன. அங்குள்ள மண்ணுமே ஏழு வண்ணக் கீற்றுகளாக விரித்த பட்டாடையின் அலைமடிப்புபோல தெரிவது.
விழிச்சுனைக்கு புலரிக்கு முன்னரே கர்ணன் விருஷசேனனும் திவிபதனும் தொடர வந்து சேர்ந்தான். சுனைக்கு அருகிலிருந்த சிறிய பாறை வரை வருவதற்கான குறுக்கு வழி அவர்களுக்கு தெரிந்திருந்தது. திவிபதனும் விருஷசேனனும் அங்கு முன்னர் வந்திருக்கவில்லை. தந்தை செல்லுமிடம் ஏதென்று அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. கர்ணன் பாறைகளினூடாக தொற்றி ஏற அவர்கள் உடன் சென்றனர். விழிச்சுனையை தொலைவிலிருந்து நோக்கியதுமே விருஷசேனன் அவன் முன்னரே நூல்களில் அறிந்த அதே இடம் என்பதை உணர்ந்தான். திவிபதனிடம் ஒலியில்லாமல் “விழிச்சுனை” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். கர்ணன் கைகூப்பியபடி விழிச்சுனையை நோக்கியபடி நீள்காலடிகளுடன் நடந்து சென்று அங்கே நோக்கு கொண்டு அசைந்துகொண்டிருந்த விழிமணியை அடைந்தான். அந்நீரை வலக்கையால் அள்ளி மும்முறை தன் தலையில் தெளித்து நீராடினான். மும்முறை அருந்தி உடல் நிறைத்தபின் கைகூப்பியபடி கதிரவனின் சிலை நோக்கி சென்றான். அங்கே கால் மடித்து விழிநாட்டி அமர்ந்தான்.
அவனைத் தொடர்ந்துசென்ற மைந்தர் விழிச்சுனையை வணங்கினர். திவிபதன் ஏழு வண்ண இலைகளையும் விருஷசேனன் ஏழு வண்ண மலர்களையும் கொய்து கொண்டுவந்தனர். இரு அகன்ற இலைகளைப் பறித்து அவற்றை தாலமெனக்கோட்டி அவற்றில் அவற்றை நிறைத்துக்கொண்டு வந்து கர்ணன் முன் வைத்தனர். கர்ணன் கதிரவனின் பெயர்களை ஒலியிலாது கூறியபடி அம்மலர்களை எடுத்து சிலையின் காலடிகளில் இட்டு வணங்கினான். அவன் உதடுகளின் அசைவுகளிலிருந்தே அப்பெயர்களை அறிந்துகொண்ட விருஷசேனனும் திவிபதனும் அச்சொற்களை தாங்களும் ஓசையின்றி சொல்லி உடன் உளம் சென்றனர். கருக்கிருள் முன்னரே வடியத் தொடங்கிவிட்டிருந்தது. சுனையை அவர்கள் காணும்போது விழிதுலங்கும் ஒளி இருந்தது. அவர்கள் மலர் கொய்யத் தொடங்கும்போதுதான் வண்ணங்கள் தெரியுமளவுக்கு ஒளி அங்கு பரவியிருப்பதை உணர்ந்தார்கள். வானிலிருந்து அங்கு மட்டும் ஒளி இறங்கியிருந்தது. கதிரவன் ஒரு கைப்பிடி ஒளியை அள்ளி அங்கே வீசியதுபோல.
ஊழ்கத்தில் அமர்ந்த பின்னர் ஒவ்வொரு உளச்சொல்லுக்குமென பொழுது விடிந்தபடியே வந்தது. இலைகள் மிளிர்வு கொண்டன. மலர்வண்ணங்கள் சுடர் ஏந்தின. பறவைக்குரல்கள் உருமாறிக்கொண்டே இருந்தன. தாழ்ந்த கிளையொன்றில் அமர்ந்திருந்த அனல்கொழுந்தென வளைந்த வால் எழுந்த நீள்கழுத்து மாந்தளிர்ப்பீலிச் சேவல் ஒன்று தலை சொடுக்கி நிமிர்ந்து இரு சிறகுகளையும் காற்றில் அசைத்து “உம்பர் குலக்கோவே இங்கெழுந்தருளாயே!” என்று கூவியது. “எங்கோ வாழ்! எங்கோ வாழ்!” என்றன நாகணவாய்கள். “இங்கெழுக! இங்கெழுக! இங்கெழுக!” என்றன ஆலாக்கள். “இனிதே! இனிதே!” என்றன உள்ளான்கள். “காவலா! காவலா” என்றன காகங்கள். பறவைக்குரல்கள் சொல்திரண்டு கதிரவனை வாழ்த்துவதை சூதர் பாடல்களிலும் காவியங்களின் அணிமுகப்பிலும் விருஷசேனன் பயின்றிருந்தான். அவை மிகைக்கற்பனைகள் என்று கருதியுமிருந்தான். மெய்யென அவை நிகழும் ஓரிடம் இப்புவியில் உண்டென்று அவன் அதற்கு முன்னால் அறிந்திருக்கவில்லை.
வானொளி முதலில் சுனை நீரின் ஒளியிலேயே தெரிந்தது. தண்ணென்ற சுடரென்று நீர்க்கொப்பளிப்பு மாறியது. விழிநிறைக்கும் குளிர்ந்த ஒளி எழுந்து வளைந்து சுழியாகியது. அவ்வளைவில் சூழ்ந்திருந்த காட்டின் பசுமையும் மலர்வண்ணங்களும் நெளியலையென தெளிந்தன. சுழிமையத்தில் விழிக்கூர் ஒன்று அசைவிலாது நின்றது. ஆணையிடுவதுபோல். அன்புகொண்டு கனிந்ததுபோல். கர்ணன் கைகூப்பி எழுந்தபோது பிறிதொரு காலடி ஓசை கேட்டது. வியப்புடன் விருஷசேனன் திரும்பிப்பார்க்க இளம் அந்தணன் ஒருவன் கைகூப்பியபடி சூரியமகள் உஷையைப் போற்றும் வேதச்சொல் உரைத்துக்கொண்டு நடந்து வருவதை கண்டான்.
“**திருமகள்**, இந்திரனுக்கு விருப்பமானவள்
உஷை இதோ பிறந்தாள்
உலகுவாழ அன்னத்தை பிறப்பிக்கிறாள்
விண்மகள்**,** சுடர்மகள்**,** அங்கிரிசர்களின் முதல்வி
நலம்செய்பவனுக்கு செல்வத்தை அருள்பவள்
உஷையே**,** உன்னை வணங்கினோர் பெற்ற
பெருஞ்செல்வங்களெல்லாம் எங்களுக்கும் அமைவதாக**!**
காளைகள் என முழங்கி உன்னை வரவேற்கிறோம்
கவரப்பட்ட பசுக்கள் அடைபட்ட
மலைவாயில்களை திறக்கிறாய்**!**
அவன் குரல் வெள்ளிக்கம்பிபோல் ஒளியுடன் மென்மையாக வளைந்தது. வேதச்சொற்கள் காலையொளியில் தளிர்கள் என எழுந்தன. பதினைந்து அகவைகூட நிறையாத இளைஞன். சிறுவர்களுக்குரிய உடலமைப்பும் மழலைகளுக்குரிய தோல் மினுப்பும் கொண்டிருந்தான். பொன்னிற உடலில் முப்புரி நூல் குறுக்காக ஓடியது. செவிகளில் சிறுமணிக் குண்டலங்கள் அணிந்திருந்தான். கழுத்தில் அவன் கொண்ட வேதநெறியைக் காட்டும் ஒற்றை விழிமணி மாலை புல்சரடில் தொங்கியது. இடையில் அணிந்திருந்த வெண்பட்டாடையும் இரு கைகளிலும் இருந்த மலர்க் குடலைகளும் அவன் அங்கு பூசனைக்கு வருபவன் என்று காட்டின. அவர்களை அவன் முன்னரே பார்த்துவிட்டிருந்தாலும்கூட எவ்வகையிலும் பொருட்படுத்தாதவன்போல் ஒருகணமும் ஓதிய வேதம் ஒலி நலுங்காமல் சீரடி எடுத்து வைத்து நடந்து வந்தான். ஆகவே துயிலிலோ பிற மயக்கிலோ நடந்து வருபவன்போல் தோன்றினான்.
கர்ணன் கைகூப்பி அவனை வணங்கினான். அந்தணன் அவனை விழி நோக்கினாலும் உளம் அறியவில்லை. வேதச்சொல் ஓதியபடி மும்முறை விழிச்சுனையை சுற்றிவந்து கிழக்கு நோக்கி அமர்ந்தான். தன் கையிலிருந்த மலர்த்தாலத்தை வலப்பக்கம் வைத்து இடப்பக்கம் அரிமணித்தாலத்தை வைத்து மலரையும் அரியையும் எடுத்து சுனை சுழிப்பில் இட்டு கதிர்மகளின் புகழ் பாடும் வேதத்தை பாடினான். ஏற்றம் இறக்கம் இல்லாமல் சிறு அலையென எழுந்து கொண்டிருந்த வேதச்சொல் எத்தனை நுட்பமாக அங்கிருந்த பறவைக்குரல்களுடன் முற்றிணைந்து பிரித்தறிய முடியாதபடி ஆகிறது என்பதை விருஷசேனன் வியப்புடன் அறிந்தான். அந்தப் பறவை ஒலிகளிலிருந்தே தொட்டெடுத்து கோத்த ஒலிகளாலானது அது. மீண்டும் அப்பெருக்கிலேயே சென்று சேர்ந்தது. அங்கிருந்த முடிவிலா நுண்பொருட்களிலொன்று மானுடனுக்கு தன்னை அறிவித்து மீண்டும் அந்த முழுப்பொருள் வெளிக்கு சென்றது.
பின்னர் அங்கிருந்து புதிய ஒலி ஒன்று வந்து அந்த வேதசொல்நிரையில் கலப்பதுபோல் தோன்றியது. வேதம் பறவைக்குரல்களுக்கு ஏற்ப உருமாறுவது போலிருந்தது. புதிய ஒலிகள் அதில் சேர இடம் உண்டா என்ன? ஒரு சொல் நுழையவோ ஒரு சொல் உதிரவோ இயலாதபடி ஏழு முறை பொன்னூலால் கோத்துக் கட்டப்பட்டது வேதம் என்பார்கள். ஆனால் கண்முன் அது உருமாறிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். நாகணவாய்கள், காகங்கள், சிட்டுக்குருவிகள், மரங்கொத்திகள், சேவல்கள், மயில்கள் தங்கள் சொற்களை அதில் கலந்துகொண்டிருந்தன. அவன் தன் திகைப்பு ஓய்ந்தபோது பிறிதொன்றை உணர்ந்தான். ஒழுகும் தெளிந்த நீர்ப்பரப்பில் கரைக் காட்சிகள் படிவது போலத்தான் அந்த ஓசை வேதச் சொல்லொழுக்கில் படிகிறது. அது விழிமயக்குபோல் செவிமயக்குதான்.
வேதம் ஓய்ந்து ஏழு முறை ஓங்கார ஒலியெழுப்பி வணங்கியபின் இளம் அந்தணன் எழுந்து மீண்டும் மும்முறை விழிச்சுனையை வலம் வந்து வணங்கினான். கதிர்த்திசை நோக்கி கைகூப்பி நின்றான். கர்ணன் அருகணைந்து குனிந்து அவன் கால்கள் அருகே நிலம் தொட்டு வணங்கி “இது என் நல்லூழ் என்று எண்ணுகிறேன், உத்தமரே. இந்தக் காலையில் தங்களை நோக்கி விழிமங்கலம் கொள்ளும் பேறு பெற்றேன்” என்றான். விழியசைந்து அப்போதுதான் அவனைப் பார்ப்பதுபோல் முகம் திகைத்து பின்னர் “நீ பொன்றாப் புகழ் பெறுவாய். உன் குலம் இங்கு அரியணை வீற்றிருக்கும். உன் கொடிவழியினர் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசவைகளிலும் முதலிடம் பெறுவார்கள். இந்நிலத்தில் இனியெழும் எந்தப் படைக்கலப்பயிற்சி நிலையிலும் வில் தொடுபவர் உன்னையும் வழுத்திவிட்டே கல்வி தொடங்குவர். இங்குள்ள சொற்களில் நீ அழியாமல் என்றுமிருப்பாய். இங்குள இளமைந்தர் தங்கள் வாழ்வில் ஒருகணமேனும் நீயென திகழ்ந்து மீள்வர். என்றுமிரு! ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்று அந்தணன் அவனை வாழ்த்தினான்.
கர்ணன் திரும்பி தன் மைந்தரைப் பார்த்து அந்தணரை வணங்கும்படி சொன்னான். விருஷசேனனும் திவிபதனும் சென்று அந்தணரை வணங்க “புகழ் பெறுக! என்றும் பெயர் நிலைகொள்க!” என்று அவன் வாழ்த்தினான். கர்ணன் திகைப்புடன் தன் உடலை தானே தொட்டுப் பார்த்து தேடி “உத்தமரே, தங்கள் வாழ்த்துச் சொல் பெற்றேன். இத்தருணத்தில் தங்களுக்குப் பரிசிலென அளிக்க என்னிடம் எதுவுமில்லை. இங்கு வரும்போது விழிகளன்றி அணியேதும் உடலிலிருக்கலாகாது என்று நெறியிருப்பதால் அவ்வண்ணம் வந்தேன். தாங்கள் என் குடிலுக்கு வருவீர்கள் என்றால் தாங்கள் விழைவது அனைத்தையும் அளிப்பேன்” என்றான். அந்தணன் அவனை கூர்ந்து நோக்கி “சற்று முன் ஒருகணம் நான் உன்னை இந்த நீரில் பார்த்தபோது நீ அணிகள் அணிந்திருப்பதை கண்டேன். பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் கொண்டிருந்தாய்” என்றான்.
“ஆம். என் உடலை பிறர் அவ்வாறு நோக்குவதை நான் அறிந்திருக்கிறேன். இன்றுவரை நான் அதை முழுமையாக கண்டதில்லை. அது கனவு அல்லது விழிமயக்கென்றே உணர்ந்துள்ளேன்” என்று கர்ணன் சொன்னான். “சென்று அச்சுனையில் நோக்குக! அவ்வாறு அணிகலன் தெரியுமெனில் அதை எனக்கு கொடையென அளி” என்று இளைய அந்தணன் சொன்னான். திகைத்து ஓர் அடி எடுத்துவைத்து திவிபதன் ஏதோ சொல்ல முயல விருஷசேனன் வலக்கை நீட்டி அவனை தடுத்தான். கர்ணன் விழிமாறுபாடு ஏதுமின்றி “அவ்வாறே” என்றபின் மூன்றடி எடுத்து வைத்து சுனையருகே குனிந்து தன்னை அதில் பார்த்தான். “ஆம், பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் தெரிகின்றன” என்றான்.
“அங்கநாட்டரசே, அந்தக் குண்டலங்களின், கவசத்தின் மதிப்பை நான் அறிவேன். எனக்கு அதை பரிசிலெனக் கொடு” என்றான் அந்தணன். “அந்தணனாகிய நான் நீ அளிக்கும் உலகியல் பரிசுகளால் உளநிறைவு கொள்பவன் அல்ல. அவை தேவை என்ற விழைவால் வேதம் கற்றவனும் அல்ல. அந்தணன் பரிசில் கொள்வதாக இருந்தால் என் வேதச்சொல்லுக்கு நிகரானதையே கொள்ளவேண்டும். அத்தருணத்தில் வேதச்சொல்லுக்கு எது நிகரோ அதைத்தான் கோரவேண்டும். சில தருணங்களில் எளிய கூழாங்கல்லோ ஒரு பருக்கை அன்னமோகூட வேதத்தை நிகர்செய்யும். சிலபொழுது பேரரசர்களின் கருவூலம் தேவையாகும். இத்தருணத்தில் இங்கு என் சொல்லுக்கு நிகரானது அதுவே, ஆகவேதான் உன்னிடம் அதை கோருகிறேன்” என்றான்.
திரும்பி விருஷசேனனை நோக்கிய பின் “உன் மைந்தரை எண்ணுவாய் என்றால் நீ பிறிதொன்றை அளிக்கலாம். அந்த மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் நீயே வைத்துக்கொள்ளும் வழி அது. உன்னை நான் வாழ்த்துகையில் சொன்ன அனைத்தும் உன்னை காத்திருக்கும் நல்லூழ். அதை என் நா சொன்னதே அதற்குச் சான்று. அவையனைத்தையும் எனக்கே கொடையென அளி. இங்கு நான் ஓதிய வேதத்திற்கு அதுவும் நிகரே” என்றான் அந்தணன். கர்ணன் சொல்லெடுப்பதற்கு முன் விருஷசேனன் “அந்தணரே, தந்தையின் புகழும் எழுகாலத்தில் அவர் கொள்ளவிருக்கும் அழிவின்மையும் எதன்பொருட்டும் விடப்படவேண்டியவை அல்ல” என்றான். திவிபதன் “ஆம், தந்தை இன்று எழுஞாயிறு. காவியங்களில் அவர் திசைக்கதிராக நிலைகொள்ளவேண்டும்” என்றான்.
கர்ணன் “அந்தணரே, வீரன் வில் தொட்டு எடுத்து முதலாசிரியரை வணங்கும்போது தலையில் கைவைத்து அவர் சொல்லும் முதல் வாழ்த்தொலியே புகழ் பெறுக என்றுதான். புகழ்தான் இங்கு வாழும் ஒவ்வொரு வீரனும் கனவிலும் கணந்தோறும் விழைவது. எதன் பொருட்டேனும் வீரர்கள் புகழை அளிப்பார்களா என்ன?” என்றான். அந்தணன் புன்னகைத்து “வெற்றியை அளிக்கும் வீரர்கள் உண்டா என்ன?” என்றான். கர்ணன் “ஆம், புகழின் பொருட்டெனில் வெற்றியையும் அளிப்பார்கள்” என்று சொன்னான். “உன் தெரிவு” என்று அந்தணன் சொன்னான். “உத்தமரே, நீங்கள் கோரியதை கொள்க! இத்தருணத்தில் அவ்வழியா வேதச்சொல்லுக்கு நிகரென என்னிடம் ஒன்று இருப்பது நிறைவளிக்கிறது. இதன்பொருட்டே தெய்வங்கள் இதை எனக்களித்தன போலும்” என்றான்.
“வேதச்சொல்லுக்கு நிகர் வைக்கும் ஒவ்வொரு பொருளும் வேதமென்றே ஆகிறது. வேதங்களின் விழுப்பொருளான பிரம்மத்திற்கு படைக்கப்படுகிறது அது. இவ்வாறு ஒரு இறுதிக்கொடையை விண்பெருவெளியென நின்ற பரத்திற்கு அளிக்கும் நல்லூழ் எனக்கமைந்தது இறையருள், என் மூதாதையர் சொல், ஆசிரியரின் வாழ்த்து” என்றபின் கர்ணன் தன் உருவை விழிச்சுனை நீரில் நோக்கி இரு காதிலிருந்த குண்டலங்களை கழற்றினான். விருஷசேனனும் திவிபதனும் அணுகி நீர்ப்பரப்பில் அவனை நோக்கினர். கர்ணனின் கைகளில் மணிக்குண்டலங்கள் இரு செந்தழல்துளிகள் என சுடர்விட்டன. அவற்றை அவன் நீட்ட அந்தணன் “நான் செல்வத்தை கையால் தொடுவதில்லை . அவற்றை அந்த நீரில் இடுக… நான் வேதக் கொடைச்சொல் உரைத்து அவற்றை விண்தேவர்களுக்கு ஆகுதியாக்குகிறேன். இந்தச் செவ்வொளிப்பொழுதில் அனலும் நீரும் ஒன்றே” என்று சொன்னான்.
“ஆம், அவ்வாறே” என்று சொல்லி கர்ணன் குண்டலங்களை நீரிலிட்டான். திவிபதன் கைநீட்டி விருஷசேனனைத் தொட்டு நோக்குக என்று சொல்லெழாது சொன்னான். விருஷசேனன் முன்னரே அதை நோக்கிக்கொண்டிருந்தான். நீருக்குள் தெரிந்த அந்தணனின் உரு பிறிதொன்றாக இருந்தது. இரு கைகளையும் நீட்டி அவன் அந்தக் குண்டலங்களை வாங்குவது தெரிந்தது. அவன் சூரியனுக்கு அவியளிக்கும் வேதச்சொல்லை உரைத்துக்கொண்டிருந்தான். தன் நெஞ்சிலிருந்து கவசத்தைக் கழற்றிய கர்ணன் நீரில் இட்டபோது மும்முறை “கொள்க! கொள்க! கொள்க!” என்றுரைத்து அந்தணன் இரு கைகளையும் மலர் முத்திரை காட்டி ஓதி முடித்தான். அளித்த கைகளைக் கூப்பியபடி கர்ணன் நின்றான். விழிச்சுனை ஒளிக் கொப்பளிப்பென தெரிந்தது.
கர்ணன் திரும்பும்பொருட்டு வணங்கியபோது அந்தணன் அவனை நோக்கி கனிந்த விழிகளுடன் “உன் கவசமும் குண்டலங்களும் உன் தந்தையான சூரியனுக்கே அளிக்கப்பட்டன. வேள்வியில் அளிக்கப்பட்டவற்றை தேவர்கள் மறுக்கவியலாது என்பதனால் அவன் அதை கொண்டான். கதிர்மைந்தனே, ஈன்று எழுந்த அன்னைப்பசு அதுவரை தன்னுள் அமைந்து அக்கன்றைக் காத்த கருப்பையையும் நச்சுக்கொடியையும் உண்பதுபோல இது இயல்பானது. நீ அளித்தவற்றை உரிய தேவனுக்கே அளித்து நான் மேலும் வேதப்பயன் கொண்டவன் ஆனேன். அதன்பொருட்டு மீண்டும் உன்னை வாழ்த்துகிறேன். என்றுமிருப்பாய்! ஒளி வளர பாரதவர்ஷம்மேல் நின்றிருப்பாய்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். கர்ணன் அவன் காலடியைத் தொட்டு வணங்கி மூன்றடி எடுத்து வைத்து பின்னடைந்தான்.
மைந்தரை அணுகி “செல்வோம்” என்று கர்ணன் சொன்னான். அவர்கள் மூவரும் திரும்பி புதர்களினூடாக நடந்தனர். காடு இருண்டிருந்தது. விழிதுலங்கும் அளவுக்குக்கூட பாதை தெரியவில்லை. திரும்பி நோக்கியபோது அந்த வட்ட தாழ்நிலத்தில் மட்டுமே ஒளியிருப்பது தெரிந்தது. வானில் கதிர் எழுந்திருக்கவில்லை. விருஷசேனன் நோக்குவதைப் பார்த்து “விடிய இன்னும் நெடும்பொழுது இருக்கிறது” என்றான் திவிபதன். அவர்கள் தங்கள் காலடியோசை சூழப்பெருகியிருந்த இருட்டில் முட்டி எதிரொலிக்க நடந்தனர். விருஷசேனன் “தந்தையே, நீரில் தெரிந்த தோற்றத்தில் வந்தது எவரென்று நான் கண்டேன்” என்றான். “ஆம், நானும் நீரில் அவரை பார்த்தேன்” என்று கர்ணன் சொன்னான்.