இருட்கனி - 4
சகுனியின் தேர் குறுங்காட்டின் புதர்களுக்கு அப்பால் வந்து நின்றதும் ஏவலர் அதை நோக்கி ஓடினர். துரியோதனன் விழியுணராமல் திரும்பி நோக்கியபின் முன்பெனவே கர்ணனை பார்த்துக்கொண்டிருந்தான். சகுனி தேரிலிருந்து இறங்க கைகூப்பாமல் சுப்ரதர் அவரை அணுகினார். சகுனி “வணங்குகிறேன், உத்தமரே” என்றார். சுப்ரதர் அவரை வாழ்த்தும்முகமாக இடக்கை குவித்துக் காட்டி “அங்க நாட்டு அரசருக்குரிய சிதை ஒருங்கிக்கொண்டிருக்கிறது. அவரை அணிசெய்து முடித்துவிட்டார்கள். அரசியும் இளவரசரும் வருவதற்காக காத்திருக்கிறோம்” என்றார். சகுனி “ஆம், அறிவேன்” என்றபடி புண்பட்ட காலை தூக்கி வைத்து மூச்சிரைக்க மெல்ல நடந்தார். அவர் களைத்திருந்தார். குருதியிழந்தவர்போல் வெளிறிய உடலும் தசைகருகி வளையங்களாகத் தொங்கிய கண்களும் கலைந்த தலையுமாக பித்தன் போலிருந்தார். ஒவ்வொரு அடிக்கும் சற்று நேரம் நின்றார்.
“அரசர் இங்குதான் இருக்கிறார்” என்று சுப்ரதர் சொன்னார். “சொன்னார்கள், அவரைப் பார்க்கவே வந்தேன்” என்றார் சகுனி. “அவர் இங்கிருப்பது உகந்தது அல்ல. இடுகாட்டில் எவரும் நெடும்பொழுது நின்றிருக்கலாகாது. இடுகாடு இறந்தவர்கள் விட்டுச்செல்லும் இறுதி எண்ணங்களால் நிறைந்தது. அதில் ஆற்றாமையும் வஞ்சினமும் வெறுமையுமே மிகுதி. அவை நம்மில் வந்து படியக்கூடும். நம்மை ஊர்தியெனக் கொள்ளவும் கூடும். சிதையேற்ற ஒரு நாழிகை, சித்தத்தில் மூன்று நாழிகை என்று நூல்கள் சொல்கின்றன” என்றார் சுப்ரதர். சகுனி தலையசைத்தபடி நடந்தார். சுப்ரதர் “திரும்பிநோக்காது செல்க, எஞ்சாது நீராடி இல்புகுக! மங்கலப்பொருட்களை நோக்குக! குலதெய்வங்களையும் குடிமூத்தாரையும் பணிந்து மீண்டு மைந்தரையும் மனையாட்டியையும் அருகழைத்து மகிழ்க என ஈமக்கடன் முடித்துத் திரும்பும் முறை பற்றி சொல்கின்றனர்.”
சகுனி கசப்புடன் புன்னகைத்து “இங்கே நாம் மீண்டுசெல்வதும் ஒரு பெரும் சுடலைக்காட்டுக்கே. அங்கு மங்கலங்கள் என்பவை கொல்லும் படைக்கலங்களே” என்றார். சுப்ரதர் புன்னகை செய்து “ஆம், ஆனால் வெற்றிமகள் அங்கு தான் தோன்றும் அனைத்தையும் மங்கலமாக ஆக்கிவிடுகிறாள்” என்றார். சகுனி “அவளைத்தான் வணங்கி எழுப்ப முயல்கிறோம்” என்றார். சுப்ரதர் நின்றுவிட சகுனி மெல்ல சென்று துரியோதனன் அருகே நின்றார். காலடியோசை கேட்டும் துரியோதனன் திரும்பி நோக்கவில்லை. “அங்கே அனைவரும் காத்திருக்கிறார்கள்” என்றார் சகுனி. அக்குரலை எதிர்பாராமல் கேட்டதுபோல துரியோதனன் திடுக்கிட்டு திரும்பி நோக்கினான். “அங்கே நாளைய போர்சூழ்கை என்ன என்று கேட்டு படைத்தலைவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். சல்யரும் அஸ்வத்தாமனும் உன் வருகையை எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றார் சகுனி.
துரியோதனன் “ஆம்” என்றான். பின்னர் “அங்கன்” என கீழே கிடந்த கர்ணனை சுட்டிக்காட்டினான். சகுனி திரும்பி கர்ணனின் உடலை நோக்கினார். அங்கு வரும்போதே அவர் அவன் உடலை பார்த்திருந்தார். அது வெற்றுச் சடலமென்றே தோன்றியது. முதல்கணத்திற்குப் பின் அவரால் நோக்க முடியவில்லை. துரியோதனன் சுட்ட மீண்டும் நோக்கியபோதுதான் அவ்வுடல் கர்ணன் என்றாகியது. அஞ்சியவர்போல முகம் சுளித்து விழிகளை விலக்கிக்கொண்டார். “அழகர்…” என்றான் துரியோதனன். பின்னர் புன்னகைத்து “அவரை தயங்காது நேர்கொண்டு நோக்க இப்போது எந்தத் தடையும் இல்லை” என்றான். சகுனி அந்தப் புன்னகையால் மேலும் அச்சம் கொண்டார். கர்ணனை நோக்கி திரும்பிய விழிகளை உள்ளத்தால் பற்றி நிறுத்திக்கொண்டார். “தெய்வமாகிவிட்டார். தெய்வத்தின் அழகை மானுடர் எத்தடையும் இன்றி விழிநிறுத்தி நோக்கலாம்” என்றான் துரியோதனன்.
சகுனி அப்பேச்சை விலக்க விழைந்தார். “நான் போர்குறித்து பேசவே வந்தேன்” என்றார். “நாளை நாம் மீண்டும் போருக்குச் செல்லவேண்டும்.” “அங்கரின் கரிய நிறம் ஒளிவிடுகிறது. அனைத்து ஒளியையும் தன்னில் சூடி நின்றிருக்க கருமையால் மட்டுமே முடியும்” என்றான் துரியோதனன். “நாம் நாளை போருக்குச் செல்கிறோமா?” என்று சகுனி கேட்டார். அச்சொல் அவனை சீண்டுமென்றும் உளம்திருப்புமென்றும் எண்ணினார். “போர்முடிந்துவிட்டது, இனி படைத்தலைமைகொள்ள எவருமில்லை என்று நம் படைவீரர்கள் எண்ணுகிறார்கள்… சல்யரும் அஸ்வத்தாமனும்கூட அந்த ஐயம் கொண்டிருக்கிறார்கள்.” துரியோதனன் திரும்பாமல் விழிநட்டு நிற்கக்கண்டு “நீயும் அந்த எண்ணம் கொண்டிருக்கிறாயோ என்று…” என்றார். துரியோதனன் “அவரை நான் இவ்வண்ணம் நோக்கியதே இல்லை, மாதுலரே” என்றான்.
சகுனி எரிச்சலுற்று குரல் எழுப்பி “நாம் இங்கே நின்றிருப்பதில் பொருளில்லை” என்றார். “அங்கரின் அரசியும் மைந்தனும் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இங்கே வந்துசேர எப்பொழுதாகும் என இப்போது சொல்ல இயலாது. அவர்கள் வந்தபின்னரே எரியூட்டல் நிகழும். இங்கே உடல்நோக்கி நின்றிருப்பது வீண்பொழுது கழித்தல் மட்டுமே.” துரியோதனன் அச்செய்தியை உளம் வாங்கவில்லை. “அங்கரை நான் முதன்முதலில் கண்டதை நினைவுறுகிறேன். யாரிவன், கரிய முத்து போலிருக்கிறான் என்று எண்ணினேன். அதன் பின்னர் உணர்ந்தேன், அவரை தொலைவிலேயே கண்டிருந்தேன். அப்போது அர்ஜுனன் என அவரை மயங்கினேன்.” அவன் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. புன்னகை விரிய சகுனியை நோக்கி “அதை எண்ணியிருக்கிறீர்களா? அங்கரை எது அர்ஜுனனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது என்று? உடல் பெரும்பாலும் ஒன்றே. ஆனால் எவரும் உணரும் ஒன்று மாறுபட்டிருந்தது” என்றான்.
சகுனி ஒன்றும் சொல்லவில்லை. “நான் ஒருமுறை அதை பூரிசிரவஸிடம் கேட்டேன். அவன் கூர்நோக்கு கொண்டவன். மலைமகன் ஆகையால் இங்குள்ள ஒவ்வொன்றையும் புதிதாக அளந்து மதிப்பிட்டாகவேண்டிய நிலையிலிருந்தது அவன் உள்ளம்.” துரியோதனனிடம் நுரைகொண்டு எழுந்த உவகையைக் கண்டு சகுனி மேலும் உளப்பின்னடைவு கொண்டார். “அவன் சொன்னான், அர்ஜுனனிடம் நீங்காது ஒரு பெண்கூறு உள்ளது, கர்ணனோ ஆண்மை முழுத்தவர் என்று. அது உண்மை என உணர்ந்தேன். நான் அதை முன்னரே அறிந்திருந்தேன் என்றும். ஆனால் இன்று அதற்கப்பால் செல்ல முடிகிறது. மாதுலரே, அர்ஜுனன் பிறிதொருவரால் அன்றி நிரப்பமுடியாத ஆளுமை கொண்டவன். அதையே பெண்ணியல்பு என நாம் உணர்கிறோம். அங்கர் பிறர் ஒருதுளிகூடத் தேவையற்றபடி முழுமையடைந்தவர்… அதை ஆண்மை என எண்ணிக்கொள்கிறோம்.”
சகுனி திரும்பி சுப்ரதரை பார்த்தார். மிக அப்பால் அவர் ஏவலருக்கு ஆணைகளிட்டுக்கொண்டிருந்தார். “அந்த முழுமையால்தான் அவரை பெண்கள் நெருங்க முடியவில்லை. கற்பாறைக்குள் நுழைய வாயில் தேடி முட்டிமுட்டித் தவிப்பவர்கள் போலிருந்தனர் அவர்கள். அவர் இரு துணைவியரும்… கலிங்கத்து அரசி நாகர்களுடன் சென்றபோது நான் வியப்படையவில்லை. அவளை மிக அணுக்கமாக நான் புரிந்துகொண்டிருந்தேன். மாதுலரே, அங்கரின் மனைவியரை நான் அறிந்த அளவுக்கு எவரும் அறிந்திருக்கமாட்டார்கள். அவர்கூட.” துரியோதனன் உரக்க நகைத்து “நானும் அங்கரைப்போல் நிமிர்வுகொண்டவன் என்பார்கள் சூதர். என் நிமிர்வு எந்தையைப்போல பெருந்தந்தையென்றாகி நான் அடைந்தது. பல்லாயிரம் பறவைகளை ஏந்தி நின்றிருக்கும் காட்டுமரம்போல…” என்றான்.
துரியோதனனின் குரல் உடைந்தது. உதடுகளை அழுத்தி சிலகணங்கள் தன்னை நிறுத்திக்கொண்டு திணறும் மூச்சுடன் தொடர்ந்தான். “தம்பியர் நூற்றுவர், மைந்தர் ஆயிரத்தவர், குடிகள், நண்பர், அணுக்கர்… நான் பல்லாயிரம் வாயில்கள் கொண்ட மாளிகை… அங்கரைப்போல அல்ல.” மீண்டும் கர்ணனை நோக்கி “எனினும் எனக்கு அங்கர் தேவைப்பட்டார். ஏன் என்று இங்கே நின்று எண்ணிக்கொள்கிறேன். இதுவரை இதை எண்ணிக்கொண்டதே இல்லை. உண்மையில் நீங்கள் வந்து இவ்வண்ணம் என்னருகே நின்றிருக்கையில் உங்களிடம் நான் பேசத்தொடங்கிய பின்னரே இதை கேட்டுக்கொள்கிறேன். அங்கர் எனக்கு ஏன் தேவைப்பட்டார்? நீங்கள் எண்ணுவதென்ன?” என்றான்.
சகுனி “நாம் சென்று பாடிவீட்டில் அமர்ந்து பேசுவோம்… உனக்கு நல்ல மது தேவையாகிறது இப்போது” என்றார். “ஆம், மது தேவை. நெஞ்சு தவித்தபடியே இருக்கிறது” என துரியோதனன் திரும்பினான். ஆனால் அவன் மெய்யாக திரும்பவில்லை. எனில் அந்த உடலில் இருந்து அத்தகைய தோற்றம் எப்படி எழுந்தது என சகுனி வியந்தார். அவன் மீண்டும் கர்ணனை நோக்கினான். “மிகவும் தேவைப்பட்டிருக்கிறார் அங்கர். அவரை எண்ணாது ஒருநாள் சென்றதில்லை. ஒருநாள் என்ன ஒரு நாழிகை கடந்ததில்லை. என் அரசியும் இளையோரும் எள்ளிநகையாடுவதுண்டு… ஏன் தேவைப்பட்டார்?” மீண்டும் அவன் முகம் விரிந்தது. கண்களில் பித்தின் ஒளியெழுந்தது.
“எனக்கு அனைவருமே தேவைப்பட்டார்கள். ஒருவரைக்கூட என்னால் இழக்க முடியவில்லை. மாதுலரே, எனக்கு பாண்டவர்கள்கூட தேவைப்பட்டார்கள். அனைத்தையும் உதறிவிட்டு எழுந்து சென்று அவர்கள் ஐவரையும் தழுவி என்னுடன் இருங்கள் என்று கோரவேண்டுமென நூறுமுறையேனும் உளமெழுந்திருக்கிறேன். அவர்களின் சிறுவடிவாக அவர்களின் மைந்தர்களை கண்டேன். ஆகவேதான் அவர்களை என் தோள்களில் ஏற்றி வளர்த்தேன். அவர்கள் எவரும் களம்படவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் எண்ணி உவகை கொண்டேன். அபிமன்யு விழுந்த அன்றுதான் இப்போரை கைவிட்டுவிட்டு ஓடிவிடவேண்டுமென்று உளம்சோர்ந்தேன்.”
“எனக்கு எல்லாமே வேண்டியிருக்கிறது… நாடு, செல்வம், புகழ், சுற்றம். நாடும் செல்வமும் புகழும் தேடும் ஒருவனால் சுற்றமின்றி அமைய இயலாது…” என்றபோது துரியோதனன் மீண்டும் குரல் உடைந்தான். “அனைத்தையும் இழந்துகொண்டிருக்கிறேன், மாதுலரே. தன்மதிப்பு ஒன்றை மட்டுமேனும் தக்கவைத்துக்கொள்ளவே களம்நிற்கிறேன்.” சகுனி “இங்கு நின்று இவற்றைப் பேசுவதில் பொருளில்லை. இங்கு நின்று பேசும் எதுவும் பொய்யுணர்ச்சிகளால் ஆனதே. நாம் பாடிவீட்டுக்கு செல்வோம். அங்கே அமர்ந்து உளம் அமைந்து பேசுவோம்” என்றார். “ஆம், செல்லவேண்டியதுதான்” என்று துரியோதனன் சொன்னான். “இங்கே செய்வதற்கொன்றுமில்லை. அங்கர் இங்கில்லை. இது வெறும் உடல்…”
துரியோதனன் திரும்பியபோது கால் தளர்ந்ததுபோல சகுனியின் தோளை பற்றினான். அப்பால் நின்றிருந்த ஏவலன் அருகணைய முற்பட்டு துரியோதனன் நிகர்நிலைகொண்டதைக் கண்டு நின்றான். சகுனி “நீ நன்னிலையில் இல்லை, அரசே” என்றார். “ஆம், என் உள்ளத்தில் துயரே இல்லை. எவ்வகையிலும் இழப்பை உணரவில்லை. அப்படியே என் அகம் முழுக்க உலர்ந்துவிட்டது போலிருக்கிறது. கல்லென்றாகிவிட்டதுபோல. எதையேனும் எண்ணி என்னை நெகிழச்செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். பழையனவற்றை எல்லாம் தொட்டுத் தொட்டு எடுக்கிறேன். நினைவுகள் என்னை மகிழத்தான் வைக்கின்றன” என்றான் துரியோதனன்.
முகம் மலர்ந்து “ஆம், இப்படி சொல்வேன். எனக்கு ஏன் அங்கர் தேவைப்பட்டார்? மாதுலரே, நான் எனைச் சார்ந்தவர் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தேன். அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டுமிருந்தேன். மூச்சோட்டம்போல் அது நிகழ்ந்துகொண்டிருந்தது. எதையும் கொடுக்கவோ பெறவோ செய்யாமல் நிகழ்ந்த உறவு எனக்கும் அங்கருக்குமானது” என்றான். அவன் கைதூக்கி “ஆம், இதை தெய்வங்கள் அறியச் சொல்வேன். எதையும் நான் கொடுக்கவில்லை. எதையும் பெற்றுக்கொள்ளவுமில்லை. அவரும் அவ்வாறே. ஏனென்றால் எங்களுக்கு நடுவே அனைத்தும் பொதுவாகவே இருந்தன…” என்றான். அவன் திரும்பி கர்ணனை நோக்கி “ஆகவேதான் நானும் அவருக்கு தேவைப்பட்டேன் போலும்” என்றான். பற்கள் தெரிய நகைத்து “அங்கர் மாபெரும் வள்ளல். இங்கே அனைவரும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவர்கள்தான். நான் அல்ல. வள்ளல் என்னும் அந்த மணிமுடியையும் கழற்றிவிட்டு இருக்கும் ஒரே இடம் என்னுடைய அருகமைவுதான் போலும்” என்றான்.
சகுனி அச்சொற்களின் முன்பின் தொடர்பற்ற அலைபாய்தலை தொடர முடியாமல் உளம்சலித்திருந்தார். “நாம் இங்கே நின்றிருப்பது உகந்தது அல்ல. அரசர்கள் இடுகாட்டில் நின்றிருக்கலாகாது” என்றார். “ஏன்?” என்றான் துரியோதனன். “மங்கலப்பொருட்களையும் தெய்வ உருக்களையும் இங்கு கொண்டுவருவதில்லை. அதைப்போன்றதே எனக் கொள்க!” என்றார் சகுனி. “இது மிருத்யூதேவியின் ஆலயம். இங்கே அவளுக்கு உகந்தவை மட்டுமே விளங்க முடியும். அவள் மட்டுமே தெய்வமென நின்றிருக்கவேண்டும்.” துரியோதனன் பெருமூச்சுடன் “ஆம், பதினேழு நாட்களாக இந்நிலத்தில் அவளே முழுமுதல்தெய்வம். மூவரும் அவள் ஏவலர்கள்” என்றான். சகுனி “நாம் கிளம்புவோம். இங்கு நாம் நின்றிருப்பதனால் ஆகவேண்டியது ஏதுமில்லை” என்றார். “ஆம், கிளம்பவேண்டியதுதான்…” என்ற துரியோதனன் “ஆனால் அங்கர் இங்கே தனிமையில் கிடப்பார்” என்றான்.
“அவர் தெய்வமாகிவிட்டார்” என்று சகுனி சொன்னார். “தெய்வங்கள் தனிமையில் இருக்கின்றன.” துரியோதனன் “ஆம்” என்றான். சகுனி திரும்பிப்பார்க்க சுப்ரதர் அருகே வந்து நின்றார். “சிதையேற்றம் எப்போது நிகழும் என்றனர்?” என்று சகுனி கேட்டார். “சற்று முன்புதான் நிமித்திகரிடம் பேசினேன். கதிர்மைந்தரை இரவில் எரியூட்டக்கூடாது என்றனர். அரசியும் மைந்தரும் இருளிலேயே வரக்கூடும். அவர் தந்தை விடிந்த பின்னரே எழுவார். தன் மைந்தனை நோக்கவும் தொடவும் அவர் விழையக்கூடும். முதற்கதிர் வந்து அங்கரைத் தொட்டபின்னர்தான் சிதையேற்றவேண்டும்” என்றார். “ஆம், அவர் கதிரொளியிலேயே விண்ணுக்கு எழவேண்டும்” என்றான் துரியோதனன். சகுனி “எனில் இந்த முழு இரவும் இங்குதான் அங்கரின் உடல் இருக்கும் அல்லவா?” என்றார். “ஆம், இரவு கடந்தாகவேண்டும்” என்றார் சுப்ரதர்.
“நாம் புலரியில் இங்கு வருவோம். அவர் விண்ணேகுகையில் வணங்குவோம்” என்றார் சகுனி. “ஆம்” என்று நீள்மூச்செறிந்த துரியோதனன் மீண்டும் திரும்பி கர்ணனை நோக்கி “அணிகளால் பொலிந்திருக்கிறார். அங்கரை நான் முதல்முறையாக முழுதணிக்கோலத்தில் பார்த்தது அவர் அங்கநாட்டு மணிமுடியைச் சூடி அரியணை அமர்ந்த பெருவிழவின்போது. நான் சம்பாபுரிக்குச் சென்றிருந்தேன். தம்பியர் அனைவரும் உடனிருந்தனர்” என்றான். சகுனி “ஆம், நானும் உடனிருந்தேன்” என்றார். “நம் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அன்று பொறாமைகொண்டு உளம்குமுறிவிட்டனர். அஸ்தினபுரியில் நாமே அணியாத அருமணிகளை அணிந்திருக்கிறார். அணிநூல்கள் வகுத்த நகைகள் அனைத்தையுமே சூடியிருக்கிறார். மும்முடி கொண்ட பேரரசர் போலிருக்கிறார் என்றார் கனகர். இளையோன் துச்சாதனன் சொன்னான், அவர் புலித்தோலும் கல்மணிமாலையும் அணிந்து காட்டுப்பாறையில் அமர்ந்திருந்தால்கூட அவ்வண்ணமே தோன்றுவார் என.” துரியோதனன் நகைத்து “எப்போதுமே அங்கரைப்பற்றி மிக உகந்த சொற்களை இளையோன்தான் சொல்லியிருக்கிறான். மூடனாக தன்னை காட்டிக்கொண்டு அதைச் சொல்பவன் அவன்” என்றான்.
“நாம் கிளம்புவோம்” என்றார் சகுனி. கர்ணனை மீண்டும் உற்று நோக்கி நீள்மூச்சுடன் “என்றேனும் நாங்கள் மீண்டும் காண்போம்” என்று துரியோதனன் சொன்னான். “ஆம், எவரும் எப்போதுமென பிரிவதில்லை. நீத்தோர் உலகென்பது இங்கே அகன்ற சரடுகள் அனைத்தும் இணைந்துகொள்ளும் முடிச்சு என்பார்கள்” என்றார் சுப்ரதர். துரியோதனன் “நீத்தோர் விண்ணில் என்ன பேசிக்கொள்வார்கள் என நான் சூதன் ஒருவனிடம் முன்னர் கேட்டேன். இப்புவியில் மானுடர் நூறு சொல்லெடுத்து ஒன்றையே பேசிக்கொள்கிறார்கள். எஞ்சிய அனைத்தையும் விண்ணிலேயே பகிர்ந்துகொள்வார்கள் என்றான்” என்றான். பின்னர் மீண்டும் உதடுவளையச் சிரித்து “நான் அங்கரிடம் ஆயிரம் சொல்லுக்கு ஒன்றையே பேசியிருக்கிறேன், மாதுலரே” என்றான். சகுனி “அனைவரும் அமர்ந்து சொல்லாடும் வெளி ஒன்று உண்டு அங்கே” என்றார். துரியோதனனின் கையைப் பற்றி “செல்வோம்” என்றார்.
அவர்கள் குறுங்காட்டின் விளிம்பை அடைந்தபோது அங்கே சூதர்கள் கூடி நிற்பதை கண்டனர். “சூதர்கள் இங்கே வருவதுண்டா?” என்று துரியோதனன் கேட்டான். சுப்ரதர் “சிதை காத்துக் கிடக்கும் உடல் ஒருகணமும் ஒழியாமல் புகழ்மொழிகளையும் துயர்மொழிகளையும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது முறை. இரவெல்லாம் அங்கரின் புகழைப்பாட இவர்களை வரச்சொன்னேன்” என்றார். துரியோதனன் அவர்களை சிலகணங்கள் நோக்கி நின்றான். பின்னர் மீண்டும் நகைத்து “ஓரிரவில் பாடி முடிக்கக் கூடுவதா என்ன அவர் புகழ்?” என்றான். முதிய சூதர் “நாங்கள் இவ்விரவில் பாடத்தொடங்குகிறோம், அரசே” என்றார்.
துரியோதனன் இகழ்ச்சி எனத் தோன்றிய புன்னகையுடன் “எத்தனை காலம் பாடுவீர்கள்?” என்றான். “முடிவிலி வரை. நாங்கள் பிறந்து பிறந்து எழுந்து பல்லாயிரம் நாவுகளெனப் பெருகி சொல்கூட்டுவோம்” என்றார் இன்னொரு சூதர். “ஏனென்றால் அவர் புகழ் வளரும். மேலும் மேலுமெனப் பெருகும். இனி இந்த பாரதவர்ஷத்தில் உளம்கனிந்து கொடுத்தவர், கனிந்ததை எண்ணி மேலும் கனிந்தவர் அனைவரின் வாழ்வும் அவர் வாழ்வென்று வந்து இணையும். சினம்கொண்ட களிறென எதிர்வரும் ஊழ்முன் ஒருகணமும் அஞ்சாமல் தருக்கி நின்ற பெரியோரின் கதையெல்லாம் அவருடையதென்றாகும். ஒருபோதும் சொல்லிமுடியாது அக்கதை” என்றார். துரியோதனன் அவரை சிவந்த நீர்பரவிய விழிகளால் நோக்கியபடி நின்றான். பின்னர் கைகூப்பி “உடனிருக்கட்டும் என் பெயரும். நான் அங்கரின் தோழன். அவரை உளம்சூழ்ந்து இப்புவியில் வாழ்ந்த எளியோன்” என்றான்.
சூதர்கள் ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கினர். சகுனி “பாடுக…” என்று சூதர்களிடம் சொல்லி “நம் தேர்கள் காத்து நின்றிருக்கின்றன” என்றார். துரியோதனன் எடைமிக்கக் காலடிகளைத் தூக்கி வைத்து மெல்ல நடந்தான். சூதர்கள் அவன் செல்வதை ஒற்றைநோக்காக விழிகள் உறுத்து நோக்கிநின்றனர். அவர்கள் நடந்துசென்று தேர்களை அடைந்து ஏறிக்கொண்டனர். துரியோதனன் இறுதியாகத் திரும்பி நோக்கி கைசுட்டி ஏதோ சொன்னான். சகுனி அவன் தோளைத் தொட்டு தேரில் ஏற்றினார். சகட ஓசையுடன் தேர்கள் கடந்துசென்றன.
சுப்ரதர் அருகணைந்து “அங்கர் ஒருங்கி காத்திருக்கிறார். வருக சூதர்களே, வெய்யோன் புகழ் சொல்லில் எழட்டும்!” என்றார். முதிய சூதர் “வாழ்வோரைப் புகழ்வது எங்கள் வாழ்வு. நீத்தோரைப் புகழ்வது எங்களுக்கு தெய்வங்கள் இட்ட ஆணை” என்றார். “ஆயின் இது தெய்வங்கள் மட்டுமே செவிகொள்ளவேண்டிய பாடல். மானுடர் எவரும் உடனிருக்கலாகாது. எவர் செவியிலும் ஒரு சொல்லும் சென்றடையலாகாது.” சுப்ரதர் “ஆம், அதை ஆணை எனக் கொள்வோம்” என்றார். அவர் கைகாட்ட ஏவலரும் காவலர்களும் விலகினர். அவரும் தலைவணங்கி அப்பால் சென்று மறைந்தார்.
சூதர்கள் நிரையாகச் சென்று கர்ணன் கிடந்த பட்டுவிரிப்பை அடைந்தனர். கர்ணனின் உடலை நோக்கி கைகூப்பியபடி விழிதிகைத்து நின்றனர். “சுடரோன் மைந்தர்…” என்று முதுசூதர் சொன்னார். அவர்கள் பெருமூச்சுவிட்டனர். முதுசூதர் சென்று குனிந்து கர்ணனின் கால்களைத் தொட்டு சென்னிசூடினார். பிறரும் கர்ணனை கால்தொட்டு வணங்கி வட்டமிட்டு நின்றனர். இளைய சூதன் ஒருவன் தன்னிடமிருந்த பாளைப்பொதியில் இருந்து வெண்சுண்ணப்பொடியை எடுத்து வீசி வீசி கர்ணனைச் சுற்றி பெரிய வட்டம் ஒன்றை வரைந்தான்.
முதுசூதர் தன் கையிலிருந்த ராசிவட்டத்தை மண்ணில் வைத்து அதன்மேல் திசைதேர்மானியை வைத்தார். கிழக்கை வகுத்து மறுநாள் கதிரெழும் இடத்தை கணக்கிட்டார். பின்னர் பன்னிரு ராசிகளுக்குரிய இடங்கள் ஒவ்வொன்றையும் வகுத்து அதில் வெண்சுண்ணக் கட்டியால் அடையாளப்படுத்தி இளைய சூதனிடம் அளித்தார். அவன் அதை நோக்கி அந்த வட்டத்தை பன்னிரு பகுதிகளாக பகுத்தான். ஒவ்வொரு சூதரும் தங்கள் பிறவிமீனுக்குரிய ராசிக்களத்தை நோக்கி சென்றனர். தங்கள் இசைக்கலங்களுடன் அவர்கள் அமர்ந்துகொள்ள அவர்களின் மாணவர் இடப்பக்கம் துணை இசைக்கலங்களுடன் அமர்ந்துகொண்டனர்.
ஆடுஅமைகளத்தின் வலது மூலையில் செந்நிறக் கூழாங்கல்லாக செவ்வாயையும் மறுமூலையில் செம்மாணிக்கமாக முதல்தெய்வமாகிய முருகனையும் நிறுவினார். காளைக் களத்தில் நீலநிறக் கூழாங்கல்லாக சுக்கிரனையும் செந்தாமரை வடிவில் திருமகளையும் அமைத்தார் சூதர். இணையரின் களத்தில் வெண்கல்லாக புதனும் வெண்சங்கு வடிவில் திருமாலும் அமைந்தனர். நண்டுக்குரிய களத்தில் தாழம்பூ வடிவில் நிலவனும் குங்குமச்சிமிழ் வடிவில் அம்பிகையும் நிலைகொண்டனர். சிம்மக்களத்தில் வெண்கல்லாக சூரியனும் உருத்திரவிழி மணியாக சிவனும் நிறுத்தப்பட்டனர்.
கன்னி நிலையில் வெண்கல்லாக புதனும் பொற்கலத்தில் நீர் வடிவில் நாராயணனும் அமர்ந்தனர். துலா நிலையில் நீலக்கல்லாக சுக்கிரனும் கரிய உருளைக்கல்லாக கரித்திருவும் நிறுவப்பட்டனர். தேள் களத்தில் செம்மணிக்கல்லாக செவ்வாயும் மயிலிறகாக அறுமுகனும் நிலைகொண்டனர். வில் களத்தில் எழுத்தாணி வடிவில் குருவும் வெண்தாமரையாக பிரம்மனும் நிறுத்தப்பட்டனர். முதலைக் களத்தில் கரிய கல்லாக சனியும் சாணியுருளைமேல் அருகம்புல் என யானைமுகனும் பதிட்டை செய்யப்பட்டனர். குட நிலையில் கரிய கல்லென சனியும் செந்நிறக் கல் என அனுமனும் இருந்தனர். மீன் களத்தில் கரிய கல்லாக குருவும் வெண்மலர் என பிரம்மனும் அமர்ந்தருளினர்.
சூதர்கள் தங்கள் இசைக்கலங்களை அமைத்ததும் ஒவ்வொருவரும் அச்சடங்கில் தங்களுக்குரிய பெயர்களை அக்களங்களுக்கு பொருந்துமாறு சூடிக்கொண்டனர். முதுசூதர் அஜர் தன் ஒற்றைக்கம்பி யாழை சுட்டுவிரலால் மீட்டினார். அந்த இசை வண்டு முரல்வதுபோல அப்பகுதியை நிறைத்தது. அதனுடன் இணைந்து அவருடைய குரல் சுழன்று பறப்பதுபோல் ஒலித்தது. பிற சூதர்களும் தங்கள் இசைக்கலங்களை மீட்டத்தொடங்கினர். யாழும் குடமுழவும் நந்துனியும் இணைந்த மெல்லிய இசை சுழன்று சுழன்று அங்கேயே நின்றது. அவர்களின் குரல்கள் அதில் கலந்து உடன் சுழன்றன.
அஜரின் குரல் எழுந்த்து. “வெய்யோனை வணங்குக! காலத்தின் விழியென்றானவன். கடுவெளி தன் மார்பில் சூடிய அருமணி. கோடி இதழ்கொண்டு ஓயாது மலரும் மாமலர். அதை விழைந்து பெண்ணென்று உருக்கொண்டு பெருவெளியின் இருளை குழலென்றாக்கி சூடிக் களிக்கிறது பிரம்மம். அது வாழ்க!” சூழ்ந்திருந்த சூதர்கள் “வெய்யோனை வணங்குக! வெயிலருள்வோனை வணங்குக! சுடரோனை வணங்குக! சூரியனை வணங்குக!” என ஏற்றிசை எழுப்பினர். “கதிரோன் மைந்தனை வணங்குக! கரிய பேரழகனை வணங்குக! அவன் புகழ் விண்மீன்கள் எனப் பெருகுக! அவன் பெயர் மலைகளைப்போல் நிலைகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் சூதர். “ஆம்! ஆம்! ஆம்!” என உடனிருந்த சூதர் உடன்குரலெழுப்பினர்.
அஜர் தன் யாழை மீட்டியபடி உரையிடைப்பட்ட பாட்டில் சொல்லத் தொடங்கினார். சூதரே, தோழரே, கேளுங்கள். இது முன்பொருநாள் மண்மேல் வளைந்து தெய்வங்களின் பாதை எனக் கிடக்கும் விண்ணில் நிகழ்ந்தது. திசை சமைக்கும் கதிரவன் அன்று விண்ணிலூர்கையில் கீழே துயர்கொண்டு நின்றிருக்கும் ஒரு நீலத்தாமரை மலரை கண்டான். முகம்விரிந்து மகிழ்வுகொள்ளாத மலரை அவன் கண்டதே இல்லை. திகைப்புடன் குனிந்து நோக்கி மென்கதிரால் அவள் மலர்ப்பரப்பை வருடி கேட்டான். “இனியவளே, சொல்க! நீ துயர்கொள்வது எதற்காக?”
நீலமலர் சொன்னாள். “என் விழிநீர்மணிகளைத் தொட்டு மறையச் செய்கிறீர்கள். என் இதழ்களுக்கு ஒளியாகிறீர்கள். என் பூம்பொடியில் நறுமணம் நிறைக்கிறீர்கள். என் அகக்குமிழில் தேன் என கனிகிறீர்கள். என் அரசே, நான் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறேன். இங்குள்ள மலர்களனைத்தும், செடிகளும் கொடிகளும் மரங்களும் எல்லாம். இப்புவியின் உயிர்கள் முழுக்க உங்கள் அருளை பெற்றுக் களிக்கின்றன. உங்களிடமிருந்தே தங்கள் உயிரை அடைகின்றன. ஆனால் இங்கிருந்து எதையும் நீங்கள் பெற்றுக்கொள்வதில்லை. என் வண்ணமும் மணமும் இனிமையும் உங்களை வந்தடைவதில்லை. இறைவனே, இங்கிருந்து வேதச்சொல்லில் உறையும் நாதமன்றி எதுவுமே உங்களை எட்டுவதில்லை. அதை எண்ணியே துயருறுகிறேன்.”
“ஆம், நான் உருளும் இப்பாதை காலமற்றது. முதல்முடிவிலாதது. சொல்லுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டது” என்று விண்சுடரோன் சொன்னான். “அறிக, காலத்தில் திகழ்வது புவி! தோன்றி மறைவன அங்குள்ள அனைத்தும். வடிவுகொண்டவை, சொல்லும் உணர்வும் சென்று தொடுபவை அனைத்தும் முதல்முடிவு கொண்டவை என்று அறிக! அவை இக்கடுவெளிக்கு வந்துசேரவியலாது. விண்ணாக மாறாத எதுவும் விண்ணை அடையமுடியாது.” நீலமலர் துயருற்று விழிநீர் கோத்தாள். “ஆம், அதை அறிவேன். ஆனால் அத்துயரால் ஒளியிழக்கிறேன். எடைமிகுந்து நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அத்துயருடன் மீண்டும் மீண்டும் மலர்ந்தெழுவேன்.”
அவளுடைய துயர்கண்டு கதிரோன் உளமழிந்தான். அவளுக்கு இரங்கி குரல்கனிந்து சொன்னான். “உன் துயர்நீக்க நான் என்னில் ஒரு துளியை மண்ணுக்கு அனுப்புகிறேன். மானுட வடிவுகொண்டவன். என் உருவும் ஆனவன். அங்கு வந்து இதுவரை புவியிலுள்ளோர் அனைவரும் எனக்கு அளிக்க விழைந்த அனைத்தையும் கொள்வான். அவர்களின் துயரனைத்தையும் அகற்றி மீள்வான்.” அவள் முகம் மலர்ந்து “தொழுகிறேன், அரசே. விண்ணின் விரிவு மண்ணுக்கு முடிவிலாது கனியும்பொருட்டே என்று நானும் அறிந்திருந்தேன்” என்றாள்.
தோழரே, சூதரே, அறிக! இக்கதையை நான் கேட்டேன். அவ்வண்ணம் இப்புவியில் பிறந்தவர் கதிர்மைந்தன் கர்ணன். கருநீர் யமுனையில் நீலத்தாமரை ஒன்றின் மைந்தன் எனத் தோன்றினான். விண்ணூர்வோனின் குதிரைகளால் கண்டெடுக்கப்பட்டான். தேரோட்டியின் மைந்தன் என்றானான். விரிதோளும் சுடர்விழியும் கொண்டு இளைஞனென்றானான். வில்தேர்ந்து நிகரிலாதவனாக களம்நின்றான். அங்கநாட்டுக்கு அரசனென்றானான். புகழ்சேர்த்துக் களம்பட்டான். விழிநீர் வார வீரர்கள் வாழ்த்தி நிற்க, சூதர்கள் புகழ்பாடி நிற்க விண்புகுந்தான்.
அவனை வான்வீதியில் எதிர்கொண்டான் தந்தை. “மைந்தா, மானுடர் அளித்த அனைத்தையும் பெற்றுக்கொண்டாய் அல்லவா? அவற்றை காட்டுக!” என்றான். இரு வெறுங்கைகளையும் விரித்து அவன் சொன்னான் “இல்லை, தந்தையே. எதையும் பெற்றுக்கொள்ளத் தோன்றவில்லை எனக்கு. அப்புவியில் நான் ஏற்குமளவுக்கு ஏதுமில்லை. நான் அளித்துக்கொண்டிருந்தேன். அனைத்துமளித்து மீண்டேன்.” புன்னகையுடன் செஞ்சுடரோன் தன் மைந்தனை அள்ளி நெஞ்சோடணைத்தான். “ஆம், நீ என் மைந்தன். பிறிதொன்று உன்னில் எழாது” என்றான்.
அஜர் இரு விரல்களால் கிணையை மீட்டி குரலோங்கி பாடினார். “பாடுக பெரியோனை! அவன் அளித்த பெருங்கொடைகளை. ஈட்டியோர் இழந்துவிட்டு மீள்வர் என்று பாடுக! தோழரே, அளித்தோர் அடைந்து எழுவர் என்று பாடுக! வள்ளல்களால் வாழ்கிறது இப்புவி என்று பாடுக! இது என்றும் அவ்வண்ணமே வாழ்க என்று பாடுக! ஆம், பாடுக! ஆம், பாடுக!”