இருட்கனி - 39

யுதிஷ்டிரன் தளர்ந்த குரலில் “பிறகென்ன? உன் விருப்பப்படி நிகழட்டும். நீ எண்ணுமிடத்தை சென்று எய்துக அனைத்தும்!” என்றார். இளைய யாதவர் புன்னகை மாறாமுகத்துடன் “அதுவே நிகழும்” என்றார். மீண்டும் அவையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. அர்ஜுனன் திருஷ்டத்யும்னனிடம் “பாஞ்சாலரே, நாளைக்கான படைசூழ்கைகளை வகுத்துள்ளீர்களா?” என்றான். “நான் எதையும் இதுவரை எண்ணவில்லை. படைசூழ்கை என ஒன்று இனி பெரிதாக தேவைப்படும் என்றும் தோன்றவில்லை. நம் படைகள் நம் விழிவட்டத்திற்குள்ளேயே இப்போது திரண்டுள்ளன” என்றான்.

“ஆனால்…” என சாத்யகி சொல்ல திருஷ்டத்யும்னன் மறித்து “ஒரு படைசூழ்கை எப்படியேனும் தேவை. வெறும் திரளாக நாம் போருக்கெழ இயலாது. எனவே நாளை எது தேவையோ அதை இயற்றுவோம். எளிய படைசூழ்கை ஒன்றே போதும்” என்றான். “நாளை அவர்கள் படைக்கு எழுவார்களா?” என்று சிகண்டி கேட்டார்.  யுதிஷ்டிரன் “ஆம், நானும் அவ்வாறு ஐயம் கொள்கிறேன். இளையோனை இழந்த பின்னர் துரியோதனன் இவ்வுலகில் எதையும் வேண்டாதவனாக ஆகியிருக்கக்கூடும். இன்றிரவு அவனுக்கு தன்னினைவே இருக்க வாய்ப்பில்லை” என்றார்.

பீமன் “இன்று அவன் பொருட்டு அவன் இளையோன் முடிவெடுப்பான். நாளை அம்முடிவை அவனே எடுப்பான். ஐயம் வேண்டியதில்லை, நாளை புலரியில் மும்மடங்கு வஞ்சத்துடன் துரியோதனன் களத்திற்கு வருவான். பின்னடைவது அவன் இயல்பல்ல. எந்நிலையிலும் ஒருதுளியும் அவன் இயல்பு குறைபடாது” என்றான். யுதிஷ்டிரன் “எனில் உளம் தளர்வது நாம் மட்டும்தானா? நம்பிக்கையிழப்பதும் இங்கு மட்டும்தானா?” என்றார்.

திருஷ்டத்யும்னன் அப்பேச்சைத் தவிர்த்து “படைசூழ்கையை வகுத்து நாளை காலை அரசரின் அவைக்கு கொண்டு வருகிறேன். மற்றபடி இன்று நாம் முடிவெடுக்க வேண்டியது ஏதுமில்லை. நாளை போருக்கு எழுகிறோமெனில் அதற்கான ஆணையை மட்டும் அரசர் அளித்தால் போதும்” என்றான். “போருக்கெழுகிறோம். அம்முடிவை அவர் எடுத்துவிட்டார். மறுமுடிவை எடுக்குமிடத்தில் நானில்லை” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “எனில் இந்த அவை கலையட்டும். அனைவருமே உளம் சோர்ந்திருக்கிறோம். அதற்கு மேலாக உடல் சோர்ந்திருக்கிறோம்” என்றபடி பீமன் எழுந்தான்.

யுதிஷ்டிரன் கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து எதையோ கசக்குவதுபோல அசைத்துக்கொண்டிருந்தார். ஒருகணம் இருக்கையிலிருந்து ஒரு சொல்லுடன் எழப்போவதுபோல் தோன்றினார். அவர் உடலில் வந்த அந்த மெய்ப்பாட்டை அவையினர் அனைவரும் நோக்கினர். யுதிஷ்டிரனின் கண்கள் மாறுபட்டன. பகைமையும் சினமும் தெரிய “இளையோனே, நான் உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும். இன்று அக்களத்தில் சூதன் மகன் என்னை இழிவு செய்தபோது நீ எங்கிருந்தாய்?” என்றார். அர்ஜுனன் திடுக்கிட்டு திரும்பி நோக்கி “தாங்கள் அறிவீர்கள்” என்றான். வஞ்சம் எரியும் முகத்துடன் “நான் அறியேன், சொல்க!” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் முகத்தில் சினம் எழுந்தது. “நான் அவன் அம்புகளால் புண்பட்டேன். என் உடலை சீரமைத்து மீண்டு வருவதற்குள் தாங்கள் அவன்முன் சென்றீர்” என்றான்.

“எனில் நீ என்னை அறிவுறுத்தியிருக்கவேண்டும். அவன்முன் செல்ல வேண்டாம் என்று எனக்கும் இளையோருக்கும் மைந்தருக்கும் அறிவிப்பு அளித்திருக்கவேண்டும். உன்னால் எதிர்கொள்ள முடியாதவனை நான் எதிர்த்து நின்று போரிட இயலாதென்று நீ அறிவாய். உன்னிடமிருந்து அவ்வாறு அறிவிப்பு ஏதேனும் எழுந்ததா என்ன?” அர்ஜுனன் சிலகணங்கள் தன்னை தொகுத்துக்கொண்டு “நீங்கள் அவ்வாறு உங்கள் எல்லையைக் கடந்து சென்று அவனை எதிர்கொள்வீர்கள் என்று நான் எண்ணவில்லை” என்றான். யுதிஷ்டிரன் பற்களைக் கடித்தபடி தலையை முன் நீட்டி “என் எல்லை என்று எதை சொல்கிறாய்?” என்றார். அர்ஜுனன் தன் கட்டுப்பாட்டை இழப்பது தெரிந்தது. “உங்கள் ஆற்றலின் எல்லை. துணிவின் எல்லை” என்று ஒவ்வாமையுடன் சொன்னான்.

“என் கோழைத்தனத்தை என்கிறாயா? உயிரச்சத்தை என்கிறாயா?” என்றார் யுதிஷ்டிரன். “அது உங்கள் சொற்கள்” என்றான் அர்ஜுனன் வெறுப்புடன். “என்ன எண்ணினாய்? நான் அஞ்சி ஒடுங்கியிருப்பேன், ஆகவே எச்சரிக்கவேண்டாமென்று அல்லவா?” என்றபோது யுதிஷ்டிரன் குரல் எழுந்தது. “அத்தருணத்தில் எதை செய்ய இயலுமோ அது செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களை உணர்ந்து போரிடவேண்டும்” என்றான் அர்ஜுனன். “என்னை நான் உணரவில்லை. ஏனெனில் என்னை நான் மதிப்பிட்டதில்லை. உன்னையும் மந்தனையும் சேர்த்தே என்னை எப்போதும் மதிப்பிட்டிருக்கிறேன். அது பெரும்பிழையென்று இப்போது உணர்கிறேன். களத்தில் நான் அவனால் சிறுமை செய்யப்படவில்லை, உன்னால் சிறுமை செய்யப்பட்டேன். சொல், நீ அவன் முன் என்னை திட்டமிட்டே செலுத்தினாய் அல்லவா?” என்றார் யுதிஷ்டிரன்.

அர்ஜுனன் பதறி எழுந்து “ஏன் நான் அதை செய்ய வேண்டும்? என்ன சொல்கிறீர்?” என்று கேட்டான்.  “நான் அவன் முன் சென்று நிற்பேன் என்று நீ உணர்ந்திருந்தாய். என்னை தடுக்க வேண்டாமென்று எண்ணினாய். இந்தக் களத்தில் இத்தனை பேர் சூழ்ந்திருக்க உன்னால் பொய்யுரைக்க இயலுமெனில் சொல், நீ அறிந்திருந்தாய் அல்லவா?” என்றார் யுதிஷ்டிரன். என்ன செய்வதென்று அறியாமல் உடல் தவிக்க “எவர் முன்னும் என்னை நிறுவவேண்டிய தேவை எனக்கில்லை. உங்களை முகப்புக் களத்தில் நிறுத்தவேண்டும் என்றிருந்தால் அது முதல் நாள் பீஷ்மரின் முன்னாலேயே நிகழ்ந்திருக்கும்” என்றான். “அவர் என்னை சிறுமை செய்ய மாட்டார். துரோணரும் என்னை சிறுமை செய்ய மாட்டார்” என்றார் யுதிஷ்டிரன். “துரோணர் உங்களை பல முறை பிடித்து இழுத்துச் செல்லமுயன்றார். அவர் தேர்க்காலில் கட்டி களமெங்கும் அலைக்கழிக்கப்பட்டிருப்பீர்” என்றான் அர்ஜுனன்.

“ஒருபோதும் அவர் அதை செய்யமாட்டார். என்னை பணயம் கொண்டு இப்போரை நிறுத்த முயன்றிருப்பார். இந்தச் சூதன்மகனின் வஞ்சம் அவ்வாறல்ல. என்மேல் பொறாமை கொண்டவன். நாளெல்லாம் என் மேல் வஞ்சத்துடன் வாழ்பவன் அவன். அவ்வஞ்சத்தை அஞ்சி அஞ்சி நான் வாழ்ந்தேன். இங்குள்ள அனைவருக்கும் தெரியும், இப்போரென்பது அவன் என் மேல் கொண்ட வஞ்சத்திற்கும் நான் அவன் மேல் கொண்ட அச்சத்திற்குமான மோதல் என்று. அதை நீயும் அறிந்திருந்தாய். அவன் தருணம் பார்த்திருக்கிறான் என்று நன்குணர்ந்து அவன் முன் கொண்டு நிறுத்தினாய். நீயும் தருணம் பார்த்திருந்தாய். கீழ்மகனே, என் மணிமுடியை அவன் களத்தில் இட்டு எற்றி விளையாடினான் என்று அறிவாயா நீ?” என்றார் யுதிஷ்டிரன்.

அர்ஜுனன் தத்தளிப்புடன் “இதை நாம் இப்போது ஏன் பேசவேண்டும்?” என்றான். “இதை இப்போது பேசியாகவேண்டும். இந்தப் போர் என் மணிமுடிக்காக. என் மூதாதையர் மணிமுடி என நான் தலையில் சூடியதை காக்கும்பொருட்டே இந்தப்படை, இதை நடத்தும் நீங்கள். அந்த மணிமுடியை அவன் நெற்றென குப்பையென களத்தில் விளையாடினான். பல்லாயிரம் விழிகள் அதை பார்த்தன. அதன் மதிப்பென்ன என்று அவன் அவர்களுக்கு காட்டினான். அதன் மேல் காறி உமிழ்ந்துவிட்டுச் சென்றான். அல்ல, அது என்மேல் இக்குடியின் மேல், மூதாதையரின் மேல், என் தெய்வங்கள் மேல் விழுந்த எச்சில். ஒரு கணத்தில் அது வெறும் அணியாக ஆகியது. உலோகப்பொருளாக உருமாறியது. குப்பையாக நிலத்தில் கிடந்தது.”

“அதை எற்றி விளையாடியவை அவன் செலுத்திய அம்புகளெனினும் அதில் உன் விழைவும் இருந்தது. நீயும் அதை செய்தாய்” என யுதிஷ்டிரன் கூவினார். “அவை நின்று இல்லை என்று சொல்லாதே. உன் விழிகளை நான் நன்கறிவேன். நான் மணிமுடி சூடிக்கொண்ட ஒவ்வொரு முறையும் உன் விழிகளை நான் பார்ப்பதுண்டு. ஏனெனில் அங்கு ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். அது சிலபோது விழைவு, சிலபோது ஏளனம். சிலபோது வஞ்சம். ஏனென்றால் வில்திறனால் விழைவால் என் அரியணையில் அமரத் தகுதியானவன் நீ. நீ துறந்த அரியணையில் அமர்ந்திருப்பவன் நான் என்றே நீ எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறாய்.”

“ஆம், நீ ஒழிந்த மணிமுடியை சூடியவன் அல்லவா நான்? அந்த மணிமுடியை அவன் எற்றி விளையாடும்போது உன் அகம் மகிழ்ந்தது அதனால்தான். உன் காலாலும் அந்த மணிமுடியை நீ எற்றினாய். அது இப்போதல்ல, இந்தக்களத்திலல்ல, முன்பும் பலமுறை அதை செய்திருக்கிறாய்.  உபப்பிலாவ்யத்தில் நான் மணிமுடி சூடியபோதே!” என்றார் யுதிஷ்டிரன். அவர் விழிகள் கலங்கி முகம் இழுபட்டு பற்கள் வெறித்திருந்தன. இரு கைகளும் தொடையில் ஒட்டியிருந்தன. அர்ஜுனன் நடுங்கிக்கொண்டிருந்தான். “இங்கு எதை நிறுவ விரும்புகிறீர்? நான் உங்கள் அரியணையை விரும்பும் வீணன் என்று நிறுவி எதை அடையவிருக்கிறீர்?” என்று தன்னை முற்றிலும் திரட்டிக்கொண்டு இறுகிய குரலில் கேட்டான். ஆனால் அவன் இருகைகளும் விரல் சுருட்டி உடலோடு சேர்க்கப்பட்டிருந்தன. அவன் இடத்தொடை நடுங்கிக்கொண்டிருந்தது.

திருஷ்டத்யும்னன் எழுந்து யுதிஷ்டிரனை தடுக்க எண்ணினான். ஆனால் தன் சொற்களை யுதிஷ்டிரன் செவி கொள்ள மாட்டார் என்று அறிந்திருந்தான். அப்போது அவரிடம் சொல்லும் எதையும் அவர் வஞ்சமென்று இழிவுபடுத்தலென்றுமே புரிந்துகொள்வார். அத்தருணத்தில் அங்கு பேசுவதற்கு எழ வேண்டியவர் குந்திபோஜர் மட்டுமே. அவர் அங்கு நிகழ்வதென்ன என்று அறியாதவர்போல் மலைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். இளைய யாதவர் ஒரு சொல்லில் அத்தருணத்தை நிறுத்திருக்க முடியும். அவர் பேசியாக வேண்டும். தவிப்புடன் அவன் இளைய யாதவரை பார்த்தான். அவர் அங்கிலாதவர்போல் விழிசரித்து உதடுகளில் நிறைந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார். அது புன்னகைதானா? ஒருவேளை முக அமைப்பால் அந்தத் தோற்றம் எழுகிறதா? அல்லது தன்னைத்தானே ஓர் ஆலயச்சிலையாக ஆக்கிக்கொள்கிறாரா? தசையில் எழுந்த கற்சிலை. தொன்மையான தெய்வமொன்றின் சிலை.

திருஷ்டத்யும்னன் எழுந்து கைதூக்கி “நிறுத்துங்கள்! போதும் நிறுத்துங்கள்!” என்று கூச்சலிட விழைந்தான். “இங்கு போருக்குமுன் நம்மை நாம் கடித்து கிழித்துக்கொள்ள விரும்புகிறோமா? இவ்வளவு வஞ்சத்தை திரட்டியபின் எங்கு போய் எதிரியைத் தேடுவது? போர் நம்மை அறிவிலிகளாக்கிவிட்டது. போர் நம்மை வீணர்களாகவும் கீழ்மக்களாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறது. போதும்” என்று தன்னுள் குரலெழுப்பினான். உடல் தளர்ந்து விழி மட்டுமாக பீடத்தில் அமர்ந்திருந்தான். அவன் தொடையும் நடுங்கிக்கொண்டிருந்தது. யுதிஷ்டிரன் தன் கையால் தலையில் மும்முறை அறைந்தார். “இன்று இந்தப் பீடத்தில் அமர்ந்திருக்கையில் தெய்வங்களாலும் கைவிடப்பட்டவனாக உணர்கிறேன். என்னைவிடக் கீழானவன் எவனுமில்லை இவ்வுலகில்” என்று விம்மியழுதார். சீறலோசையுடன் அவர் மூச்சு ஒலித்தது. பின் கைகளைக் கூப்பியபடி முதுமகன்களுக்குரிய நடுங்கும் குரலில் சொன்னார்.

“அச்சூதனை அஞ்சாத ஒருநாளில்லை. அவனை ஏன் அஞ்சுகிறேன் என்று பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு. அவனை நான் அஞ்சியது அவன் வில்லாற்றலால் அல்ல. எனது மணிமுடியை அவன் பறித்துவிடுவான் என்றோ அரியணையில் அவன் அமர்வான் என்றோ அல்ல. எனது அரசமகள் அவன்மீது கொண்ட நுண்காமத்தை நான் அறிவேன். அதையும் நான் அஞ்சவில்லை. பெண்களின் உள்ளம் கட்டற்றது. அவர்களின் கருபீடம் விண்துழாவிக்கொண்டிருக்கிறதென்பதை அறிந்த பின்பே முதற்பெண்ணை அறிந்தேன். நான் அஞ்சியது பிறிதொன்று. அவனில் எழும் ஒரு பெருவஞ்சத்தை. அது இந்த மண்ணில் அவையமர்ந்து, கோல் கைகொண்டு, மணிமுடி அணிந்து, குலம்புரந்த அனைத்து அரசர்களுக்கும் எதிராக எழுந்த சூதர்களின் வஞ்சம். தொழும்பர்களின், உரிமைமாக்களின், அடியாளர்களின், நிஷாதர்களின், நாகர்களின், அசுரர்களின் அரக்கர்களின் வஞ்சம். அதன் முன் நிற்க அஞ்சினேன். அதைத்தான் ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி ஒழிந்தேன். அதன் முன் என்னை கொண்டு நிறுத்தினாய்.”

“ஏனெனில் நீ நாகர்களின் பெண்ணை மணந்தவன். அவனைப்போலவே நீயும் நாகர்களுக்கு கடன்பட்டவன். உன் குடிலுக்குள் நேற்றிரவு ஒரு நாகன் வந்து சென்றிருந்தான் என்றால் நான் வியப்படையமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் “மூத்தவரே, இந்த உணர்வுக் கொந்தளிப்புகளுக்கு எந்தப் பொருளுமில்லை. இன்று நிகழ்ந்தது போர்க்களத்தில் நிகழக்கூடியது. தங்களுக்கு முன்னரே மூத்தவர் பீமன் அவன் கையால் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார். இறப்புக்கு நிகரான சிறுமை கொண்டு இன்னும் உளம் தேறாதவராக வஞ்சம் திரட்டி இங்கு அமர்ந்திருக்கிறார். அவன் முன் பத்துமுறையேனும் நான் வில் தாழ்த்தி ஒழிந்தேன். புண்பட்டு தேரில் விழுந்தேன். நானும் இழிவுபடுத்தப்பட்டவனே. சொல்சொல்லென வஞ்சத்தை திரட்டிக்கொண்டிருப்பவனே” என்றான்.

யுதிஷ்டிரன் மீண்டும் உரத்தகுரலில் “எனில் ஏன் நீ என்னை அங்கு கொண்டு சென்று நிறுத்தினாய்? கீழ்மகனே, ஏன் அங்கு கொண்டு சென்று நிறுத்தினாய்?” என்றார். “நான் நிறுத்தவில்லை, உங்கள் எல்லை கடந்து நீங்கள் சென்றீர்கள்” என்றான் அர்ஜுனன். “எல்லை கடத்தல் எங்கும் இயல்வது. ஆனால் நான் எல்லை கடப்பவனல்ல. அங்கு நான் எல்லை கடக்கவுமில்லை. என் முன்னிருந்த கவசப்படைகள் அகன்றன. என் பின்னிருந்த படைகள் முன்னால் வந்தன. எனவே என்னால் நகர முடியாத நிலை ஏற்பட்டது. எனக்குக் காவலென நின்றிருந்தவர்கள் வில் பயிலாத என் இரு மைந்தர்கள். இதுபோல பாதுகாப்பற்றவனாக நான் எப்பொழுதுமே இருந்ததில்லை. எண்ணி நோக்குக! நீங்கள் எண்ணி நோக்குக!” என்று யுதிஷ்டிரன் எழுந்து அவை நோக்கி கைவீசினார். “நான் உந்தி முன்செலுத்தப்பட்டேன். காவலின்றி தள்ளிக்கொண்டு செல்லப்பட்டேன்.”

“இந்தப்போரில் முதன்மைப் பகை எவனோ அவன் முன் நின்றிருக்கிறேன். இந்தப் போர் தொடங்கிய பின்பு ஒரு போதுமில்லாத பாதுகாப்பின்மையுடன் நான் அங்கு செல்ல நேர்ந்தது. அது தற்செயலா? இல்லை. அது எவருடைய சூழ்ச்சி? நான் கேட்கிறேன், எவருடைய சூழ்ச்சி அது?” சீற்றத்துடன் “நான் சூழ்ச்சி செய்தேன் என்கிறீரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “நீ சூழ்ச்சி செய்யவில்லை. உன்னிலிருந்து எழும் ஒன்று சூழ்ச்சி செய்தது. உன்னில் உறங்கியிருக்கும் அந்த நஞ்சு. அந்த நஞ்சு ஏன் என்று சொல்லவா?” என்றபடி தலையை நாகமென நீட்டியபடி யுதிஷ்டிரன் முன்னால் வந்தார். “போதும்! இதை இங்கு நிறுத்திக்கொள்வோம்” என்று பீமன் சொன்னான். “நிறுத்த வேண்டாம். இங்கு இதை பேசியாகவேண்டும். ஒருவேளை நாளையோ நாளை மறுநாளோ நாம் எவருமே உயிருடன் எஞ்சாமலாகலாம். அதற்குள் இச்சொற்களை பேசியாகவேண்டும். பேசாச்சொல்லுடன் விண்புகும் இழிநிலை எனக்கு ஏற்படக்கூடாது” என்று யுதிஷ்டிரன் கூச்சலிட்டார்.

“ஏனென்றால் நீ ஒரு பேடி. பேடி! பேடி! ஆம் பேடி நீ! என்னை எண்ணி பொறாமை கொண்டவன். நான் அரசனாக இருப்பதனால் மட்டுமல்ல” என்றபோது யுதிஷ்டிரனின் உதடுகள் சுருங்கின. “கணவனாக! ஆம் கணவனாக!” என்றார். “நிறுத்துங்கள், மூத்தவரே. என்ன பேச்சு இது” என்று சகதேவன் கூவினான். யுதிஷ்டிரன் நிலையழிந்து பித்தன்போல் ஆகிவிட்டிருந்தார். “அனைவரும் கேட்கட்டும். இங்கு சூழ்ந்திருக்கும் அத்தனை தெய்வங்களும் கேட்கட்டும். நீ அறிவாய், அவள் என்னை முதன்மையில் வைத்தது என் மணிமுடியினால் அன்று என. என் மெய்மையினால். நெஞ்சிலும் உடலிலும் நான் கொண்டுள்ள ஆண்மையினால்.”

“இழிமகனே, பேடியே, நீ கொண்டிருக்கும் அந்த வெல்லமுடியாத அம்புகள் அச்சூதனின் முன்பு வெறும் விளையாட்டுப் பொருட்கள். ஆனால் எங்கும் அடங்காத மெய்மை என்னிடமிருந்தது. அதை இக்களத்தில் தோற்கடித்தாக வேண்டும் என நீ திட்டமிட்டாய். என்றோ ஒரு நாள் நீ அவள் முன்னிலையில் அவ்வெண்ணத்தை அடைந்தாய். என்னை சிறுமை செய்ய வஞ்சம் கொண்டாய். என் மணிமுடியை எற்றி விளையாட வேண்டுமென விழைவு கொண்டாய். இன்று அதை செய்தாய்” என்றார் யுதிஷ்டிரன். “பேடியின் வஞ்சம் அது. நேர் நின்று வெல்லும் துணிவு ஒருபோதும் பேடிக்கு வருவதில்லை.”

அந்த எல்லைவரை அவர் செல்வார் என்று எவரும் எதிர்பார்க்காமையால் அவை திகைத்து உறைந்து அமர்ந்திருந்தது. நடுங்கி கால் தளர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டிருந்த அர்ஜுனன் தன் வில்லை கீழிருந்து எடுத்து ஓங்கியபடி பாய்ந்து முன்னால் சென்றான். “கீழ்மகனே! கீழ்மகனே! இச்சொற்களுக்காக இந்த அவையிலேயே உன்னைக் கொன்று இடாவிட்டால நான் மானுடன் அல்ல! ஆம், உன்னைக் கொல்லாவிட்டால் நான் பேடியே!” என்று கூவினான். பீமன் குறுக்கே புகுந்து இருகைகளாலும் அர்ஜுனனைப் பற்றி பின்னால் இழுத்தான். “விடுங்கள் என்னை! இன்று என்னைத் தடுப்பவர் எவரும் எனது எதிரிகளே” என்று அர்ஜுனன் கூவினான். “இதோ அரியணை அமர்ந்திருப்பவன் பேடி. இப்பேடியின் அச்சத்தால் கீழ்மையால் நாம் சிறுமையடைந்தோம். இவனை கொன்றேயாகவேண்டும்.”

அவனே மெல்ல தளர்ந்து மூச்சிரைக்க குரல்தழைந்தான். “இவன்பொருட்டா நாம் போரிடுகிறோம்?. இப்போர் எவருக்காக? தன் விழைவையும் அச்சத்தையும் மறைத்துக்கொண்டு அறம் பேசி அமர்ந்திருக்கும் இந்தக் கீழ்மகன் நம்மீது சுமத்தியது இது. இன்று இவனைக் கொல்லாமல் அவைவிட்டுச் செல்லமாட்டேன்.” உறுதியான குரலில் “அதற்குமுன் என்னை நீ கொல்லலாம்” என்று பீமன் சொன்னான். “நான் படைக்கலம் ஏந்தவில்லை. என் உடல் உன் முன் நின்றிருக்கிறது. கொன்றுவிட்டு கடந்துசென்று அவரை கொல்.” பீமன் இருகைகளையும் விரித்து நிற்க அர்ஜுனனின் கை தளர்ந்தது. பின்னடைந்து தன் பீடத்தில் எடையுடன் விழுந்து ஓங்கி தரையில் அறைந்துகொண்டு “கீழ்மை! கீழ்மை! இதற்கப்பால் ஒரு கீழ்மையை என் மேல் எவரும் சுமத்துவதற்கில்லை” என்றான்.

யுதிஷ்டிரன் தளர்ந்து தானும் பீடத்தில் அமர்ந்தார். தான் சொன்னவை என்ன என்பதை அதன் பின்னரே அவர் உளம் கொள்வதுபோல் தோன்றியது. அந்த அவையில் நிகழ்ந்தவை மெய்தானா கொடுங்கனவா என்று அனைவரும் நோக்கி நின்றனர். அங்கிலாதவர்போல் இளைய யாதவர் இருந்தார். அர்ஜுனன் சட்டென்று அந்த அம்பை தன் கழுத்தை நோக்கி தூக்க பீமன் அக்கையை பிடித்துக்கொண்டான். முறுக்கி அந்த அம்பைப் பிடுங்கி அப்பால் வீசினான். மணியோசையுடன் அது தளத்தில் விழுந்தது. “அதற்கும் எனக்கு உரிமையில்லையா?” என அவன் உடைந்தகுரலில் கேட்டான். “இல்லை. இதேபோல நானும் அம்பை எடுத்தேன். என்னிடம் யுயுதானன் சொன்னான், அவ்வண்ணம் நான் இறந்தேன் எனில் அவ்விழிவைச் சூடியவனாக விண்புகுவேன் என்று. அவன் குருதி கண்டு நிகர் செய்து மீண்டாலொழிய எனக்கு மீட்பில்லை என்று. அதை இங்கு உனக்குச் சொல்கிறேன்” என்றான் பீமன்.

அர்ஜுனனின் தோளைத்தட்டி பீமன் சொன்னான் “இங்கு மூத்தவர் சொன்ன சொற்கள் அனைத்தையும் கடந்துபோகும் வழி ஒன்றே. நாளை கர்ணனை வெல்ல வேண்டும். களத்தில் அவன் குருதியை அள்ளி விண்ணுக்கு வீசவேண்டும். அங்கு வந்து நின்றிருக்கும் உன் தந்தை அறியட்டும், நீ வென்றுவிட்டாய் என்று. நீ வென்றாகவேண்டும். ஏனெனில் சென்றமுறை வென்றவன் கதிரோன் மைந்தன். நாளை கதிர் இருளட்டும், முற்றிருள் பரவட்டும்.” யுதிஷ்டிரன் “இச்சொற்கள் ஒவ்வொன்றும் பொருளற்றவையாக இருக்கின்றன. எது வெற்றி, எது தோல்வி, எவருக்காக என்று எனக்கு புரியவில்லை. யாதவனே, என்னை எங்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறாய்? சொல்க, என்னை எதுவாக ஆக்க நினைக்கிறாய்?” என்றார்.

திடுக்கிட்டவர்போல் விழித்த இளைய யாதவர் “ஒவ்வொருவரும் தங்கள் உணர்ச்சிகளை கொட்டிவிட்டீர்கள் என்றால் ஒழிந்த கலமென்றாவீர்கள். அதன் பின்னர் நான் சொல்வதை கோத்து முன்வைக்கலாம் என்று எண்ணினேன்” என்றார்.  “இதற்கப்பால் என்ன வெளிப்பட வேண்டியிருக்கிறது?” என்றான் அர்ஜுனன். சற்றே சிரித்தபடி “உமிழப்படும் நஞ்சு உடலுக்கு நன்று” என்று இளைய யாதவர் சொன்னார். “இன்னும் உங்கள் வஞ்சம் தீரவில்லையா? எங்களை கீழ்மக்களாக்கி விட்டீர்கள். எங்கள் கண்களிலேயே எங்களை பொருளற்றவர்களாக்கி நிறுத்திவிட்டீர்கள். இதற்கப்பால் நாங்கள் சென்றடையும் வெறுமை ஒன்றுண்டா என்ன?” என்று அர்ஜுனன் கேட்டான்.

“ஆம், இதற்கப்பாலும் பெருவெறுமை ஒன்றுண்டு. இன்று உங்கள் வெறுமையில் இத்தனை சொற்கள் எழுகின்றன. ஒரு சொல்லும் எழாத வெறுமையும் உண்டு. அவ்வெறுமையில் ஒற்றைச்சொல் போதும், உங்களைத் திறந்து பிறிதொன்றைக் காட்ட” என்றார் இளைய யாதவர். விம்மலோசை கேட்டு அனைவரும் திரும்பிப்பார்க்க யுதிஷ்டிரன் தலையை கையால் தாங்கி தோள்குறுக்கி அழுதுகொண்டிருந்தார். அவையெங்கும் அமைதி நிலவியது. அங்கிருந்து எழுந்து செல்ல ஒவ்வொருவரும் விழைந்தனர். ஆனால் எவராலும் இருக்கையைவிட்டு அசைய இயலவில்லை. பெருந்துயர்களுக்கே உரிய ஈர்ப்பு அவர்களை அங்கு நிறுத்தியிருந்தது. பெருந்துயர்களில் உள்ளம் அதற்கும் அப்பாலென ஒன்றை எதிர்பார்க்கிறது. மேலும் பெருந்துயரை. அல்லது மீட்பை. அதை காணாமல் அதிலிருந்து விலகியோட இயல்வதில்லை.

திருஷ்டத்யும்னன் தன் உள்ளமும் உடலும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். விரல்களால் மேலாடையை பற்றியிருந்தான். மேலாடை ஆடிக்கொண்டிருப்பதை உணர்ந்து கைகளை ஒன்றின் மேல் ஒன்று கோத்து மார்பின்மேல் வைத்துக்கொண்டான். குளிரில் நடுங்குவதுபோல் மார்பின் மேலிருந்த அவன் கை நடுங்கியது. அவன் எவர் முகத்தையும் பார்க்கவில்லை. ஆனால் அனைத்து முகங்களும் ஒன்றுபோல் தோன்றின. அனைவரும் ஒன்றையே எண்ணிக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஓர் உணர்வுநிலையில் இருந்தனர். ஆயினும் கண்களின் விரிப்பும் முகத்தின் வலிப்பும் வாய்கள் இறுகி இருந்தமையும் அனைத்து முகங்களையும் ஒன்றென்று ஆக்கின.

பின்னர் ஒருகணத்தில் அனைவரும் உடல் தளர்ந்தனர். அவர்கள் அனைவரையும் இணைத்திருந்த ஒற்றைச்சரடு அறுபட்டு விலகியது போல். யுதிஷ்டிரன் தளர்ந்து “தெய்வங்களே!” என்றார். பின்னர் எழுந்து பொதுவாக அவையை நோக்கி கைகூப்பிவிட்டு வெளியே நடந்தார். பிரதிவிந்தியனும் யௌதேயனும் அவருக்குப் பின்னால் சென்றனர். அர்ஜுனன் எழுந்து “பாஞ்சாலரே, அவை முடிவுப்படி ஆவன செய்யுங்கள். நாளை சந்திப்போம்” என்றபடி நடந்தான். மெல்ல அசைந்தெழுந்து ஒவ்வொருவராக விலகிச்செல்லச் தொடங்கினர். பீமன் கைகளைக்கட்டி தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

இளைய யாதவர் எழுந்து வெளியே செல்வதைக்கண்டு திருஷ்டத்யும்னன் தானும் எழுந்து வலியில் இழுபட்டு அதிர்ந்த உடற்தசைகளைத் திரட்டி நடக்கும் விசையென மாற்றி ஒவ்வொரு அடியாக உந்தி அவருக்குப் பின்னால் சென்றான். அவன் நிழல் அவருக்கு முன்னால் விழுந்து மறிக்க அவர் நின்று திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவரிடம் என்ன கேட்க விழைந்தோம் என்பதை அவன் மறந்து நின்றான். “புண்பட்டிருக்கிறீர், பாஞ்சாலரே” என்று இளைய யாதவர் சொன்னார். ”ஆம்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். இளைய யாதவர் மீண்டும் புன்னகைத்து “அதை எவ்வகையிலோ விழைகிறீர் அல்லவா?” என்றார்.

திடுக்கிட்டு, பின் புன்னகைத்து, சொல் பதறி “ஆம், நேற்று இரவு முழுக்க என்னிடமிருந்த பதற்றமும் துயரும் இன்றில்லை. நான் விடுதலைகொண்டிருக்கிறேன்” என்றான். ”உடல்வலியால் அவற்றை நிகர் செய்துகொண்டீர் போலும்” என்று சொன்னபின் இளைய யாதவர் முன்னால் சென்றார். பீமன் எழுந்து வெளியே நடந்தான். அவனைத் தாண்டிச் செல்கையில் பீமன் உடலிலிருந்து அனல் வெம்மை எழுந்து தன்னை தொட்டுச் செல்வதுபோல் திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். காய்ச்சல் கண்டவர்களின் உடலிலிருந்து எழும் வெம்மை அது. எதற்காக இங்கு நின்று இவ்வாறு தவிக்கிறோம் என்று அவன் குழம்பினான். சாத்யகியும் நகுலனும் சகதேவனும் வெளியேறினர். ஒழிந்த அவை அவனை நோக்கி சூழ்ந்திருந்தது.

அவன் மீண்டும் சற்று நேரம் அங்கிருக்க விரும்பினான். மெல்ல கைநீட்டி இருக்கையின் விளிம்பைப் பற்றி உடலைச் சாய்த்து அமர்ந்தான். பெருமூச்சுடன் தசைகளை இளக்கி உடலைத் தளர்த்தி கால்களை நீட்டிக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு அங்கு நிகழ்ந்த அனைத்தையும் தன் உள்ளத்தில் ஓட்டத்தொடங்கினான். திடுக்கிட்டு விழித்துக்கொண்டு சூழ நோக்கினான். அது அவன் அறிந்த அவைதானா என்ற ஐயமேற்பட்டது. சற்று முன் அங்கு நிகழ்ந்த உணர்வு நாடகத்தில் ஒவ்வொருவரும் பிறிதொருவராக மாறியிருந்தார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் சொல்லக்கூடும் என்று எண்ணவே இயலாத சொற்களை கூறினார்கள். அவர்கள் ஆற்றக்கூடும் என எண்ணுவதன் எல்லை வரை சென்றார்கள். மெய்யாகவே ஒவ்வொருவரும் உள்ளூர இப்படித்தான் இருக்கிறார்களா? ஒவ்வொருவரும் பிறிதொருவர் மேல் உண்மையான மதிப்பில்லாதவர்கள்தானா?

இல்லை, இது பிறிதொரு அழுத்தம். ஒவ்வொரு உலோகமும் உருகுவதற்கு ஒரு வெப்ப நிலை உள்ளது. இன்று இச்சூளை அவ்வெப்பத்தை அடைந்துவிட்டது. அவ்வாறுதான் எனில் உருமாறாத மானுடரென்று எவரும் இப்புவியில் இல்லையா? அவன் இளைய யாதவரின் புன்னகையை நினைவுகூர்ந்தான். ஒருகணம் பெரும் சினம் எழுந்து அவன் உடலை விதிர்க்கச் செய்தது. வயிற்றிலிருந்து அனலெழுந்து நாவை அடைந்தது. சில கணங்களுக்குப்பின் அது வடிந்து உடலெங்கும் வியர்வையும் மெல்லிய மயிர்ப்பும் எஞ்சியது. வெளியிலிருந்து வந்த குளிர்காற்று உடலைத்தொட மீண்டும் களைத்துச் சரிந்தான். “எந்தையே” என்று அவன் முனகிக்கொண்டான்.