இருட்கனி - 35
பீமன் விசையுடன் நடந்து பாய்ந்து புரவியிலேறி அதை நாற்குளம்போசையுடன் விரையச்செய்தான். அவன் உளமறிந்ததுபோல் புரவி புதர்கள் மண்டிய பாதையில் தாவிச் சென்றது. சிறு ஓடைகளை தாவிக் கடந்தது. அதன் குளம்புகளில் பட்டு கூழாங்கற்கள் பறந்தன. பீமன் கடிவாளத்தை ஒரு கையால் பற்றியபடி பற்களைக் கடித்து உடற்தசைகளை இறுக்கி அமர்ந்திருந்தான். அங்கிருந்து விலகி செல்லச் செல்ல அவன் மெல்ல ஆறுதல் அடைந்தான்.
தன் அகம் அத்தனை அஞ்சியிருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். எதன் பொருட்டு அஞ்சினேன் என தன்னையே கேட்டுக்கொண்டான். உடனே அவன் உடல் மெய்ப்புகொண்ட்து. அறியாது கடிவாளத்தை இழுத்தமையால் புரவி நின்று சுழன்று கனைத்தது. நெஞ்சத்துடிப்பை உணர்ந்து மெல்ல தன்னை மீட்டுக்கொண்டான். ஒவ்வொரு உடற்தசையாக தளர்த்தினான். புரவியை தட்டித்தட்டி ஆறுதலடையச் செய்தான். புரவி சீர்நடையில் செல்லத் தொடங்கியதும் அவனும் ஆறுதலடைந்தான்.
அவன் அஞ்சிய அத்தருணத்தை நினைவிலிருந்து மிகமிக மெல்ல தொட்டு எடுத்தான். திரௌபதியில் மாயை எழுந்த தருணம். அப்போது அவன் அஞ்சியதாக நினைவுக்கு வரவில்லை. அத்தருணத்தை குந்தியும் பகிர்ந்துகொண்டாள். அவன் உள்ளம் இருவரிலாக ஊசலாடியது. அப்போது தான் செய்யவேண்டியதைப் பற்றி வேறொரு பகுதி எண்ணிக்கொண்டிருந்தது. அக்குருதியை இருவரும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்னும் தத்தளிப்பு இருந்துகொண்டிருந்தது. மாயையாகி அவள் அதை பெற்றுக்கொண்டதும் அத்தருணம் நிறைவுற்றது என்னும் விடுதலை உணர்வே எஞ்சியது.
ஆனால் அகத்தில் ஒரு பகுதி ஆழமான நடுக்கு கொண்டுவிட்டிருந்தது. அவளில் மாயை எழுந்ததை அஸ்தினபுரியின் அவையிலேயே அவன் உணர்ந்துவிட்டிருந்தான். பின்னர் உபப்பிலாவ்யத்தில். அதன்பின் அவளை அவன் நேர்விழிகொண்டு நோக்கி சொல்லாடுவதே அரிதென்று ஆகிவிட்டிருந்தது. அவளை நோக்கும் முதற்கணம் அவனுள் ஏற்படும் அச்சத்தை மறுகணமே அத்தருணமும் அப்போது எழும் சொற்களும் வென்று கடந்துவிடும். ஆனால் மிக ஆழத்தில் இருண்ட நீர் நலுங்கிக்கொண்டிருக்கும்.
அவளுடைய நிழல் எப்போதும் அவனை திடுக்கிடச் செய்தது. பேய்த்தேவொன்றை கண்டதுபோல. அவன் ஒருகணம் நடுங்கிச் செயலற்று நின்று உடல் நடுங்க மீண்டு வருவான். அது ஏதோ உளமயக்கு என எண்ணி மீண்டும் அந்நிழலை நோக்குவான். அப்போதும் அது அச்சுறுத்தும். கண் நட்டு, உளம் நாட்டி, அது திரௌபதிதான் என நிறுவிக்கொண்டு நோக்குகையிலும் அந்த நடுக்கம் நீடிக்கும். அது ஏன் என அவன் தனக்குத்தானே எண்ணிக்கொண்டதுண்டு. அவள் நடை மாறிவிட்டிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் நேராக நோக்குகையில் அவள் நடையில் எந்த மாறுதலும் இல்லை. நிழலில் என்ன வேறுபாடு தெரிகிறது என எண்ணி எண்ணி நோக்கி சலித்திருக்கிறான்.
அதை ஒருமுறை நிமித்திகர் ஒருவரிடம் கேட்டான். “நிழல் என்பது என்ன? மானுடரின் உடலால் மறைக்கப்படும் ஒளியை நிழல் என்பர். அல்ல, நிழல்நோக்கு என்று ஒரு நிமித்திக முறை உண்டு. நிழல்போல மானுட இயல்பை தெளிவாகக் காட்டும் ஒன்று பிறிதில்லை. அரசே, நீங்கள் நிழலோவியங்களை கண்டுள்ளீர்களா?” என்றார். பீமன் கலிங்கத்தில் பீதர்நாட்டு ஓவியர்கள் வரையும் நிழலோவியங்களை கண்டதுண்டு. அவர்கள் தங்கள் ஓவியநிலைகளில் வணிகர்களை பக்கவாட்டில் நிற்கவைப்பார்கள். அப்பால் ஓர் ஒளிர்விளக்கு வெண்பட்டு வளையத்தால் சூழப்பட்டு வெயில்போல் வெள்ளி ஒளி பரப்பும். வணிகனின் நிழல் வெண்பலகை ஒன்றில் படியும். அந்த நிழலின் எல்லை விளிம்பை கரிக்கோட்டால் வரைவார்கள். அதை கருமையால் நிறைக்கையில் அவருடைய நிழல் அந்த வெண்பலகையில் படிந்தது போலிருக்கும் அந்த ஓவியம்.
முதல்முறை அதைப்பற்றி கேட்டபோது அதில் என்ன நுட்பம் தெரியக்கூடும் என பீமன் வியந்தான். ஆனால் அவனை அழைத்துச்சென்ற இளம்வணிகன் “நோக்குக!” என்று சுட்டிக்காட்டியபோது அந்த ஓவியம் உயிர்கொண்டது என நின்றது. நோக்க நோக்க வரையப்பட்டவனின் முகத்தை அருகிலெனக் காட்டியது. அவன் முகத்தின் நுண்செதுக்குகள் துலங்கின. அவன் உணர்வுகள் வெளிப்பட்டன. அவன் அகம்கூட தெளிந்தெழுந்தது. “ஆம், கலிங்கத்தில் அவற்றை பீதர்நாட்டு ஓவியர் வரையக் கண்டிருக்கிறேன்” என்றான் பீமன். “வெறும் நிழலில் எவ்வண்ணம் தெரிகிறது உணர்வு?” என்றார் நிமித்திகர்.
பீமன் வெறுமனே நோக்கினான். “மானுடரில் நாம் எப்போதும் நாம் விழையும் உருவை, நாம் கண்டுபழகிய உருவை, நாம் அஞ்சும் உருவை விழிகளால் தொட்டுச்சேர்த்து உள்ளத்தால் தொகுத்து கற்பனையால் வரைந்து அடைந்துகொள்கிறோம். நமக்கு இனியோர் அழகுகொள்கிறார்கள். நமக்கு ஒவ்வாதோரின் அழகு மறைந்துவிடுகிறது. நிழல் நம் விழியும் உள்ளமும் கற்பனையும் சென்று தொடாத பிறிதொரு வடிவம்” என்றார் நிமித்திகர். மானுடரில் குடியிருக்கும் இருளும் ஒளியுமான தெய்வங்களை நம்மால் நேர்நோக்கில் அறிய முடிவதில்லை. நிழலில் அவை வெளிப்பாடு கொள்கின்றன.”
அவன் திரௌபதியை தன் உளத்திலிருந்து அழிக்க விழைந்தான். அங்கிருந்து விலகும்தோறும் அவள் அகன்றுவிடுவாள் என எதிர்பார்த்தான். எப்போதும் அவன் செய்வது அது. உள்ளம் இடருறும்போது அங்கிருந்து அகன்றுவிடுவது. முலையூட்டிய குரங்கில் இருந்து பெற்ற இயல்பு போலும் அது. அந்த நிகழ்வுகள் அனைத்திலிருந்தும் அறுத்துக்கொள்ள, முற்றிலும் பிறனாக மீண்டெழ விழைந்தான். ஆனால் அவன் அங்கிருந்து அகலும்தோறும் ஆடிப்பாவை என அந்தத் தருணம் சுருங்கி ஆடிக்குள்ளேயே சென்றது. அங்கே துளியாக அணுவாக அது இருந்துகொண்டேதான் இருக்குமென உணர்ந்தான்.
அத்தருணத்தில் தன் மைந்தர்களுடன் இருக்க விழைந்தான். அவர்களின் சொற்களால் கர்ணனிடம் அடைந்த சிறுமையிலிருந்து எப்படி மீண்டு வந்தோம் என நினைவுகூர்ந்தான். அவன் உளம் நிறைவுகொள்ளும்படி பேச அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கிறது. அவர்கள் சொலல்வல்லர்கள் அல்ல. அவ்வாறு எங்கும் அவர்கள் வெடிப்புறப் பேசி அவன் கேட்டதேயில்லை. ஆனால் அவனிடம் பேசும்போது அவர்களின் சொற்கள் அவனுக்குள்ளிருந்தே எழுவன போலிருந்தன. ஒருவேளை மெய்யாகவே அவனுள் இருந்துதான் அச்சொற்கள் எழுகின்றனவா என்ன?
அவ்வெண்ணம் அவனை மலரச் செய்தது. ஆம் ஆம் ஆம் என அவன் உள்ளம் கொப்பளித்தது. அவர்கள் வேறல்ல. அவன் உடல் பிரிந்து உருவானவர்கள். அவன் உள்ளம் ஊற்றி நிறைக்கப்பட்டவர்கள். அவனுடைய இளமைத்தோற்றம் கொண்டவர்கள். அவர்கள் அவனாக நின்று வாழ்வை நடிப்பவர்கள். அவனைவிட கூர்கொண்டவர்கள். ஆகவே அவனை அவனைவிட அறிந்தவர்கள். அவர்கள் என எழுந்து அச்சொற்களைக் கூறுவது அவனில் கூர்கொண்ட அவனேதான். பிற எவரும் அச்சொற்களை சொல்லிவிடமுடியாது.
அவன் புரவியை மேலும் மேலும் விரையச்செய்தான். ஒருகணம் பிந்தவும் விரும்பாதவன்போல. புவியில் வேறு எந்த முகத்தையும் நோக்க விழையாதவன்போல. புரவி மூச்சிரைக்க நின்றது. அவன் அதன் மேல் மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். புரவி நடந்து சென்று ஒரு சிறு ஓடையை அடைந்து நீர் அருந்தியது. அது ஓய்வெடுக்க விழைந்தது. அவன் “செல்க!” என அதை ஊக்கினான். “செல்க, செல்க!” என குதிமுள்ளால் அழுத்தினான். மீண்டும் அது விசைகொண்டபோது அவர்களை நோக்கி செல்லும் உணர்வு பெருக உளம் எழுந்தான்.
சர்வதனும் சுதசோமனும் நிலம் என விரிந்திருக்க அவர்களை நோக்கி அவன் விழுந்துகொண்டே இருந்தான். இத்தனை இனிய மைந்தர்களை எப்படி நான் பெற்றேன்? என்னில் இத்தனை இனிமை எப்போதும் நிறைந்ததில்லை. குன்றா நல்லியல்பு கொண்டவர்கள். மாசற்ற படிகமென சுடர்விடும் உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் சொல்லில் எழுவது அந்தத் தூய்மை. என்னில் எழுந்தவர்கள் அவர்கள் எனில் என்னிலும் எஞ்சியிருக்கிறது அந்த நன்மையும் தூய்மையும். எங்கோ ஆழத்தில். நானறியா வெளி ஒன்றில். நான் இன்னமும் தெய்வங்களுக்கு உகந்தவனே.
அவன் இயல்பாக கடோத்கஜனை நினைவுகூர்ந்தான். கடோத்கஜனை ராமனுக்கு எதிர்நின்ற கும்பகர்ணனுடன் ஒப்பிட்டு ஒரு சூதன் பாடினான். கடோத்கஜன் மறைந்ததற்கு மறுநாள். அவன் படைகளினூடாக சென்றுகொண்டிருந்தான். இருளுக்குள் படைவீரர்கள் சூழ்ந்திருக்க நடுவே அமர்ந்த சூதன் பாடுவதைக் கேட்டு இருட்டுக்குள் நின்றான். “தீதிலா அரக்கன். படிகப்பரப்பில் நீர் நிலைகொள்ளாததுபோல் தீமை நிலைகொள்ளா நெஞ்சு கொண்டவன். தென்னிலங்கை ஆண்ட ராவண மகாப்பிரபுவின் பேருருவ இளையோன்போல” என்று சூதன் பாடினான்.
ஒரு வீரன் “விபீஷணன் அல்லவா அறத்தின்பால் வந்தான்?” என்று கேட்டான். மற்ற வீரர்கள் அவ்வினாவால் எரிச்சலுற்றனர். அவன் இளம்வீரனாக இருக்கக்கூடும். சூதன் அவ்வினாவை பொருட்படுத்தவில்லை. ஆனால் அவன் மேலும் பாடியபோது அவ்வினாவுக்கான மறுமொழி இருந்தது. “தான் கொள்ளா அறத்தின் பொருட்டு களம் நின்றவன். குருதிப்பற்றே மேலறம் என்று கொண்டவன். கொள்ளத் தெரியாதவன், கொடுப்பதொன்றையே இயற்றி விண்மீண்டவன், அரக்கர்கோன் கடோத்கஜன். ஆம், அவன் இலங்கையின் இளையகோனுக்கு நிகர்.”
ஒருகணத்தில் துயரின் அலை ஒன்று வந்து அறைய பீமன் செயலிழந்தான். நெஞ்சு அழுத்தம் கொண்டு எடை மிக, அறியாது விம்மலோசை எழ கண்ணீர் மல்கினான். புரவி பெருமூச்சுடன் நின்றது. அவன் சூழ் மறந்து அழத்தொடங்கினான். நெஞ்சை பற்றிக்கொண்டு, உள்ளே சிக்கிக்கொண்ட ஒன்றை அவ்வழுகையினூடாக வெளித்தள்ள விழைபவன்போல அங்கு இருளில் நின்று கேவல்களும் விம்மல்களும் விசும்பல்களுமாக அழுதான். அவனுடைய அழுகையோசை அவன் செவிகளில் விழ மேலும் மேலும் விடுதலைகொண்டு உரக்கக் கதறினான். நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தான்.
பின்னர் விழிப்புகொண்டபோது அவன் புரவியின் கழுத்தின்மேல் குப்புறச் சாய்ந்திருந்தான். கையூன்றி எழுந்து கன்னங்களைத் துடைத்தபடி சூழ நோக்கினான். எவரும் நோக்கவில்லை என எண்ணி நீள்மூச்செறிந்து கடிவாளத்தை இழுத்தான். புரவி காலெடுத்து வைத்த அசைவில் அவன் உள்ளம் உலைவு கொண்டு எதிலோ சென்று முட்டி மெய்ப்புகொண்டது. கடும் அச்சம் என. மிகப் பெரும் துயர் ஒன்றை கண்டுகொண்டது என. அவன் எண்ணமுனை தவித்துத் தவித்து தேடிச்சென்று அதை தொட்டது. அத்தவிப்பு நின்றதனால் அவ்வறிதலின் தொடுகை மெல்லிய ஆறுதலையே அளித்தது. அவன் கண்முன் ஒரு கரிய பாறையை என அந்த அறிதலை நோக்கிக்கொண்டிருந்தான்.
அவன் சர்வதனும் சுதசோமனும் கொண்ட இறுதி விழியுணர்வை முன்னில் எனக் கண்டான். அவர்கள் நினைவழிந்து விழுந்தார்கள் என பின்னர் கேள்விப்பட்டபோது ஒருகணம் அந்த விழித்தோற்றம் மீண்டும் அவன் உள்ளத்தில் தோன்றி மறைந்தது. அவன் நீள்மூச்சுடன் புரவியை மெல்ல நடத்தினான். பின்னர் அதை முற்றாக மறந்தான். இருளுக்குள் மெல்லிய காற்றென சென்றுகொண்டிருந்தான். உடலே அற்றவன்போல. அவனே அறியாத வேறொரு இருப்புபோல.
புரவி உரத்த பெருமூச்சுடன் நிற்க விழித்து அது எவ்விடம் என்று பார்த்தான். குருக்ஷேத்ரத்தின் முகப்புக்காடு. அவன் நீள்மூச்சுவிட்டு தளர மேலிருந்து அன்னைக் குரங்கொன்று இறங்கி தாழ்ந்த கிளையில் அமர்ந்து அவனை துயர் மிகுந்த கண்களால் பார்த்தது. அதன் விழிகளின் மின்னை நோக்கியபடி அவன் அசையாமல் அமர்ந்திருந்தான். இலைத்தழைப்புகளிலிருந்து ஏராளமான குரங்குகள் அவனை பார்த்தன. இரு சிறுகுரங்குகள் கொடிகளினூடாக வந்திறங்கி அக்குரங்கின் இருபுறமும் பதுங்கி அமர்ந்து சிறிய மணிக்கண்கள் துடித்து அசைய அவனை நோக்கின. அவன் அக்கணம் வரை கொண்டிருந்த இன்மையுணர்வை முற்றாக இழந்தான். அங்கே அவற்றின் நடுவே நிறைவுணர்வுடன் நின்றான்.
அன்னைக் குரங்கு “மைந்தா, நீ செல்கையிலேயே இதை எண்ணித்தான் தடுத்தேன்” என்றது. “நீ அங்கே முற்றாக கைவிடப்படுவாய், முழுமையாக அழிவாய். அது உன் சாவு.” விழிதாழ்த்தி “ஆம், உங்கள் குரலை நான் கேட்டேன்” என்று பீமன் சொன்னான். “நீ சென்று அடையவிருக்கும் மெய்மையின் வெறுமை என்னவென்று அறிந்திருந்தேன். நீ செல்லலாகாதென்று விழைந்தேன். இப்போது நீ சென்று மீள்வதைக் காண்கையில் அது இயல்பே என்று தோன்றுகிறது” என்றது அன்னைக் குரங்கு. “ஏனென்றால் நீ சென்றுதான் ஆகவேண்டும். இப்போரில் நீ பெறும் விடுதலையில் ஒன்று இது.”
“ஆம்” என்று பீமன் சொன்னான். குட்டிக் குரங்கு அன்னைக் குரங்கின் விலாவை பற்றிக்கொண்டபடி ஒண்டிக்கொண்டு கைகளால் அன்னையின் விலாமுடியை பற்றி உலுக்கி “இவர்தான் அனுமனா?” என்றது. “பேசாமலிரு” என்று அதன் தலையில் தட்டியது இன்னொரு குரங்கு. இன்னொரு குட்டிக் குரங்கு அதன் வாலைப் பிடித்து இழுத்து “எனக்குத் தெரியும், இவர்தான் வால்மீகி” என்றது. “சத்தம் போடாதீர்கள்” என்றது அன்னை. “சத்தம் போடவில்லை” என்று குட்டிக் குரங்கு சொல்லி “அனுமன் ஏன் குதிரையில் செல்கிறார்?” என்றது.
இரு குரங்குகளையும் மாறி மாறி நோக்கியபோது பீமனின் முகம் மலர்ந்தது. “நன்று, கதைகள் கேட்டு வளர்கின்றனர்” என்றான். “ஆம், சற்று முன்னர் முதற்கவிஞனின் கதையை அவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றது அன்னை. “நீண்ட கதை!” என்று குட்டிக் குரங்கு இரு கைகளையும் மேலே தூக்கி செவிதுளைக்கும் குரலில் சொன்னது. “எனக்குத் தெரியும்… முழுக் கதையும் எனக்குத் தெரியும். நான் வேண்டுமானால் அதை சொல்கிறேன்.” “எனக்கும் தெரியும்” என்றது இன்னொரு குட்டிக் குரங்கு. “போடா போடா போடா” என அக்குரங்கை கடிக்கப்போனது குட்டி.
பீமன் காலை அசைத்து புரவியை நகர்த்தி அவர்கள் அருகே சென்றான். “சொல்க!” என்றான். குட்டிக் குரங்கு “வால்மீகி! வால்மீகி! வால்மீகி!” என்று சொல்லி விழிதிறந்து கைகளை அசைத்து உள்ளத்தின் விசை தாளமுடியாமல் ஒருமுறை தலைகீழாகக் குதித்து வால்நுனி நெளிய “அவர் மிகப் பெரிய புற்றுக்குள் அமர்ந்திருந்தபோது… அமர்ந்திருந்தபோது… அமர்ந்திருந்தபோது…” என்று திக்கியது. “நான் சொல்கிறேன்! நான் சொல்கிறேன்” என்று இன்னொரு குரங்கு அதை மடக்கியபடி முண்டியடித்தது. “நான் சொல்வேன்! போடா” என்று முதற்குட்டி அதன் வாலைப் பிடித்து இழுத்தது. அவை இரண்டும் பற்களைக் காட்டி சீறின.
“என்ன கதை சொன்னீர்கள்?” என்றான் பீமன். இரு குட்டிக் குரங்குகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு மரத்திலேறிச் செல்ல அன்னைக் குரங்கு “நமது மூதாதையான கபீந்திரர் முதற்கவிஞரை கண்ட தருணம். அவர் கபீந்திரருக்கு சொன்ன தன்னுடைய கதை” என்றது. “ஆம், நானும் கேட்டிருக்கிறேன்” என்று பீமன் சொன்னான். “தொல்கதைகள் நினைவுக்கு வரும் தருணங்கள் எப்போதும் அரியவை. அவை தங்கள் எடையால் மேலும் மேலும் ஆழத்திற்கு சென்றுவிடுகின்றன. அவற்றில் உள்ளுறைந்திருக்கும் விசையால் எண்ணியிராக் கணத்தில் வெளித்தோன்றுகின்றன” என்று அன்னைக் குரங்கு சொன்னது.
“அன்னையே, நான் துயருற்றிருக்கிறேன். இனி என்னால் ஒரு தசையைக்கூட அசைக்க முடியும் என்று தோன்றவில்லை” என்று பீமன் சொன்னான். குரங்கு கை நீட்ட அவன் அருகே சென்றான். அவன் கையைப்பற்றி இழுத்து தோளை தடவியபடி “நீ துயருறுவாய் என்று தெரியும். எதன்பொருட்டும் என் குடியின் மைந்தனாகிய நீ துயருறலாகாது” என்றது. “நீ காற்றின் மைந்தன். அனுமனின் இளையோன். நீ துயருறுவதற்குரியது என எதுவும் இங்கில்லை.” பீமன் பெருமூச்சுவிட்டான். “உனக்காக வான்மீகியின் கதையின் இறுதியை எச்சம் வைத்திருந்தேன்” என்றது அன்னைக் குரங்கு.
“கூறுக, அன்னையே!” என்று பீமன் சொன்னான். அன்னைக் குரங்கு சொன்னது. “கங்கைக்கரையில் தன் இலைக்குடிலில் மாணவர்களுடன் முனிவரான வால்மீகி தங்கியிருந்தார். ஒருநாள் நீராடும்பொருட்டு சரயுவுக்கு சென்றார். சான்றோரின் உள்ளம்போல் தெளிந்திருந்த அந்நதியில் தன் உரு நோக்க குனிந்தபோது பின்னால் மரக்கிளையொன்றில் இரு அன்றில் பறவைகள் ஒன்றையொன்று தழுவி அலகுரசி காதலின் உவகையில் உலகு மறந்திருப்பதை பார்த்தார். எத்தனை இனியது காதல், மானுடர் பெறும் அளவுக்கே திரும்ப அளிப்பதற்கு வாய்ப்புள்ள ஒன்று காதல் மட்டுமே என எண்ணினார். அளிக்க அளிக்க பெருகுவதும் கொள்ளுந்தோறும் விழைவு மிகச் செய்வதுமான பெருஞ்செல்வம் பிறிதொன்றுண்டா என்று புன்னகைத்தார். ஆகவேதான் உலகின் உயிர்களெல்லாம் காமத்தை விழைகின்றன. காமமோகிதம் என்னும் சொல் அவர் நாவிலெழுந்தது. காமமோகிதம், காமமோகிதம் என்று நெஞ்சும் வாயும் சுவையுறச் சொன்னபடி நீர் அள்ளி முகம் கழுவிக்கொண்டார்.”
அப்போது ஒரு நீளம்பு வந்து அந்த ஆண் அன்றிலின் உடலை அறைந்து அதை வீழ்த்தியது. திகைப்புடன் திரும்பிப் பார்த்தபோது பெண் அன்றிலை நோக்கி அம்புவிடும் வேடனொருவனைக் கண்டார். “கூடாது, நிஷாதனே!” என்று கூவினார். தன் கொழுநனின் உடலுக்கு அருகே இறங்கி அமர்ந்து சிறகு சரித்து துயர் மிகுந்து கூவிக்கொண்டிருந்த பறவையைக் கண்டு உளமுடைந்து அங்கே அமர்ந்து விழிநீர்விட்டு அழுதார். அழுந்தோறும் துயர் பெருகியது. அவருடைய மாணவர்களால் அவரை தேற்ற இயலவில்லை. நூற்றெட்டு நாள் அப்பெருந்துயரில் அவர் மூழ்கிக் கிடந்தார். பின்னர் தான் அத்தருணத்தில் அறியாது சொன்ன முதற்சொல்லை மின்படையும் தாமரையும் அருளும் அடைக்கலமும் கொண்ட கைகளுடன் தோன்றிய சொல்மகள் என கண்முன் கண்டார். தன் மாணவனிடம் எழுதிக்கொள்க என்று சொல்லி முதல் காவியத்தின் முதல் வரியை உரைக்கலானார்.
“மைந்தா, துறந்து துறந்து சென்றவர், உறவின் பொருளின்மையை உணர்ந்தவர் மட்டுமே பெண் துயரைக் கண்டார். என்றென்றுமென மானுட குலத்திற்கென அதை சொல்லி வைத்துச் சென்றார். முதல் கவிதையின் முதற்செய்யுளே தீது கண்டு வெகுண்டு உரைத்த பழிச்சொல் என்று அறிக! நீ பழி கொள்ளப்போவதில்லை. எழும் தலைமுறைகள் உன்னை பெண்துயர் கண்ட முதற்கவிஞனுக்கு இணையானவன் என்றே எண்ணுவார்கள். இவ்வுலகையே முற்றழித்தாலும் நிகராகாத பெரும்பழி பெண்ணின் விழிநீரால் அமைவது, அவளே ஒழிந்தாலும் தெய்வங்கள் அதை ஒழியாது என்பதைக் காட்டுவதாகவே உன் செயல் நின்றிருக்கும்.”
“அன்னையே, ஆயினும் நான் குருதி உண்டது பழிசேர்ப்பதல்லவா?” என்றான் பீமன். “மானுடருக்கு அது பழிசேர்ப்பதே. மானுடர் அதை அஞ்சுவதும் இயல்பே. ஆனால் நீ எங்களில் ஒருவன். எதிரியைக் கொன்றபின் குருதியுண்டு குரலெழுப்புவது குரங்குகளின் வழக்கம். அதனால்தான் அச்சொல் உன் நாவில் எழுந்தது. நீ செய்தது உன் குருதிக்குரியதே” என்றது அன்னைக் குரங்கு. “அன்னையே, மண்மறைந்த மூதாதையர் நம் செயலை ஏற்கிறார்களா என்று அறிய ஒரே வழி மைந்தர் நம் செயலை ஏற்கிறார்களா என்று நோக்குவதே என்பார்கள் நிமித்திகர். என் மூதாதையர் என் செயலை ஏற்கிறார்கள் என்பதை நான் எப்படி அறிவேன்?” என்றான் பீமன்.
மேலிருந்து ஒரு குட்டிக் குரங்கு “மூதாதை கீழே விழுந்துவிட்டார்” என்று கூவியது. குரங்குகள் கிளைகளினூடாக தாவிச் செல்ல துயின்ற மரத்திலிருந்து நழுவி தரையில் விழுந்து ஒருக்களித்துக் கிடந்த முதிய குரங்கை கண்டன. பாய்ந்து அதன் அருகே அமர்ந்த அன்னைக் குரங்கு அதைப் புரட்டி தலையையும் காலையும் பற்றி நோக்கிய பின் “இறந்துகொண்டிருக்கிறார்” என்றது. முதுகுரங்கு வாயைத் திறந்து மூட பீமன் அப்பால் சென்று இலைகோட்டி ஓடையிலிருந்து தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்தான். குனிந்து முதுகுரங்கின் வாயை சற்றே திறந்து அந்த நீரை அதற்கு ஊட்டினான். மும்முறை விழுங்கியபின் விழிகளைத் திறந்து பீமனைப் பார்த்த முதிய குரங்கு கை நீட்டியது. பீமன் தலைகுனிக்க அவன் தலையில் கை வைத்தது.
அந்த மெல்லிய கை நடுக்கம் கொண்டிருந்தது. சருகுபோல அது தோளிலிருந்து சரிய மீண்டும் விழிகளை மூடியது. அதன் கழுத்துத் தசைகள் இழுப்பட்டன. உதடு சுருங்கி அதிர்ந்தது. இறுதி உலுக்கலொன்று நிகழ பின்னர் ஒவ்வொரு தசையாக தளரத் தொடங்கியது. அன்னைக் குரங்கு பீமனின் தோளைத் தொட்டு “நீ மூதாதையரால் வாழ்த்தப்பட்டாய்” என்றது.