இருட்கனி - 33
தூமவர்ணி அரைத்துயிலில் என விழிசொக்கி அமர்ந்திருந்த குட்டிக்குரங்குகளிடம் சொன்னது “சிதல்புற்றின் முன் அமர்ந்திருந்த கபீந்திரரிடம் வால்மீகி தன் கதையை சொன்னார். கபீந்திரர் அச்சொற்களை தன் விழிகளாலும் வாங்கி உள்ளமென ஆக்கிக்கொண்டார். ஆகவே இக்கதை இந்நாள் வரை இங்கே திகழ்கிறது. என்றும் திகழும்.”
உண்மையில் ஒவ்வொரு அடிக்கும் நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்தேன். அவ்வாறுதான் அது முடியுமென்றும் தோன்றியது. ஆனால் என் குடியின் எல்லை கடந்து நான் சென்றதும் என்னை நோக்கி களிக்கூச்சலிட்டபடி ஓடிவந்த மைந்தரைக் கண்டதும் நானே நூறு துண்டுகளாகச் சிதறி அங்கு நிற்பதை உணர்ந்தேன். எனது குருதி, எனது முகம், எனது விழிகள். எனது பழியும் கூடத்தான் என்று அப்போது உறுதியாக நம்பினேன். புற்றுகளிலிருந்து என் குடிமைந்தர்கள் ஈசல்போல எழுந்து வந்து என்னைச் சுற்றி கூச்சலிட்டனர். “தந்தையே! தந்தையே!” என்று கை நீட்டி எழுந்தனர். என் துணைவி மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்து “என்ன கொண்டு வந்தீர்கள்? நெடும்பொழுதாக காத்திருக்கிறோம்” என்றாள்.
“இம்முறை நான் கொண்டுவந்தது ஒரு வினாவை. உன் செயலின் விளைவென்ன என்று அறிவாயா என ஓர் இளம் முனிவர் என்னிடம் கேட்டார். அது மூதாதையரும் தெய்வங்களும் பொறுக்காத பழி என நிறுவினார். காலத்தில் ஒரு மலையளவுக்கு அது பெருகி நின்றிருக்கிறது என காட்டினார்” என்றேன். அவள் விழி சுருக்கி “என்ன செய்தீர்கள் அத்தகைய பெரும்பழியைக் கொள்ள?” என்றாள். “நான் உன் பொருட்டும் நம் குடியின் பொருட்டும் வழிப்போக்கர்களைக் கொன்று செல்வம் கொணர்ந்தேன்” என்றேன். அவள் “வழிப்போக்கர்களையா? நாம் அவர்களை கொல்லலாகாது அல்லவா?” என்றாள். “ஆம்” என்றேன்.
“நம் முன்னோர் உப்புதொட்டு ஆணையிட்ட பின்னரே இந்த வழியை வணிகர்கள் பயன்படுத்துகிறார்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்று நான் அவளை நோக்கியபடி சொன்னேன். அப்போது அவள் சொல்லப்போவதென்ன என்று மட்டுமே என் உள்ளம் எண்ணியது. “அவர்கள் அளித்த செல்வத்தால்தான் நாம் பெருகினோம். அவர்கள் நமக்கு அன்னமிட்டவர்கள்.” நான் “ஆம், ஆகவேதான் நான் செய்தது பெரும்பழியெனக் கொள்ளப்பட்ட்து” என்றேன். “நம் குழந்தைகளுக்காக நான் இப்பிழையை செய்தேன். அவர்கள் என்னால் பெருகவேண்டும் என எண்ணினேன்.”
அவள் விழிகளில் நீர்மை பரவ என்னை நோக்கி “விலகு, வீணனே! நீ மூதாதையர் சொல் திறம்பி, தெய்வங்களின் நெறி பிறழ்ந்து இப்பெரும் பழியை இயற்றினாய்! இப்போது அது எங்கள் பொருட்டென்று சொல்கிறாய்!” என்றாள். என் உடல் துடிக்கத் தொடங்கியது. நிலத்தில் கால் நிற்கவில்லை. “என்ன சொல்கிறாய் நீ? உன் நெஞ்சுதொட்டுச் சொல், உங்கள் பொருட்டே இதை இயற்றினேன் என்று உனக்கு மெய்யாகவே தெரியாதா?” என்றேன். அவளை நோக்கியபடி அருகணைந்து “நீ விழைவு கொள்ளவில்லையா? உன் விழைவல்லவா என்னை செலுத்தியது?” என்றேன்.
“ஆம், நான் விழைந்தேன். விழைவில்லாத பெண் இல்லை” என்றாள். அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “என்னை நோக்கி சொல், மெய்யாகவே இது பழிச்செல்வமென்று அறியாதவளா நீ? வேட்டை விலங்குகள் விண்ணிலிருந்து மழையென உதிர்ந்தால்கூட எவராவது இத்தனை செல்வத்தை ஈட்டிக்கொண்டு வந்திருக்க முடியுமா?” என்றேன். அவள் விழி விலக்கி “எனக்கென்ன தெரியும்?” என்றாள். “தெரியாதென்று சொல். என் விழிகளை நோக்கி சொல், தெரியாதென்று” என்று கூவினேன். “எந்த இல்லறத்தாளுக்கும் தெரியாமலிருக்காது.”
“ஆம், அறிவேன்” என அவள் கூவினாள். “நீ திருடியிருக்கக்கூடும் என எண்ணினேன். அல்லது ஏதோ புதையல் கிடைத்திருக்கும் என்று கருதினேன். படைக்கலம் ஏந்தாதவர்களைக் கொல்லும் கீழ்மகன் நீ என நான் அறியவில்லை. பெரும்பழியையா எங்களுக்கு இதுவரை அன்னமென்றும் அமுதென்றும் ஊட்டினாய்?” நான் மேலும் மேலும் கூர்கொண்டேன். “முதல் நாள் இதை கொண்டுவரும்போது உன் உள்ளம் துடித்திருக்கும். விலக்க எண்ணியிருப்பாய். விழைவு தடுத்திருக்கும். அதை கடந்துவந்து இதை நீ ஏற்றுக்கொண்டாய். இவ்வின்பத்தில் திளைத்து இதில் உழன்று இதுவென்றான பிறகு இதுவன்றி இருக்கவொண்ணாதவளானாய்.”
வஞ்சத்துடன் முகம் இளிப்புபோல ஆகி பற்கள் தெரிய அடிக்குரலில் “ஆம், அவ்வாறே. எனில் என்னை அவ்வண்ணம் ஆக்கியது நீ. நீ அளித்த பொருளால் நான் என் குலநெறியை கடந்தேன். பழிகொண்டவளானேன்” என்றாள். நான் அவளை மேலும் அணுகி அவள் மேல் பாய்வதுபோல் நின்று “இக்குருதிப்பழியில் இணைப்பங்கு உனக்குண்டு. கணவனின் அறத்தில் இணைப்பங்கு துணைவிக்கு உண்டு என்றால் பழியிலும் இணைப்பங்கு இருக்கவேண்டும்” என்றேன். “எந்த நெறி? எந்த நெறி சொல்கிறது அவ்வண்ணம்?” என்று அவள் கூவினாள். “தொல்நெறி… ஆம், தொல்நெறி சொல்கிறது” என்றேன்.
அவள் என் விழிகளை நோக்கி “இல்லை, இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அறத்தையோ பழியையோ மறுப்பதற்கு துணைவிக்கு ஒரு வழியுண்டு, அக்கணவனை மறுத்துவிடுவது” என்றாள். அந்த அடியால் துடித்து நான் பின்னடைந்தேன். தழைந்த குரலில் “நீ இப்படி சொல்வாய் என்று எண்ணவே இல்லை. உன்பொருட்டே இவையனைத்தையும் செய்தேன். உன் மைந்தரின் பொருட்டு” என்றேன். “என் மைந்தர் உங்கள் கொடையால் வளர்ந்தனர், ஈகையால் அல்ல. தந்தையின் கடன் நீங்கள் இயற்றியது. அதன் பொருட்டு அவர்கள் மூதாதையர் பழி கொள்ள இயலாது” என்று அவள் சொன்னாள்.
“அவர்களிடமே கேட்கிறேன். உன்னிடம் என்ன பேசுவது, அவர்களிடமே கேட்கிறேன்” என்று கூவியபடி என் மைந்தரை நோக்கி திரும்பினேன். குடிலை விட்டு வெளியே வந்து அவர்களை நோக்கினேன். நாங்கள் பூசலிடுவதைக் கண்டு திகைத்து நின்ற மைந்தர்கள் பின்னடைந்தனர். என் முதல் மைந்தனை நோக்கி “சொல், உன் பொருட்டும் உன் இளையோர் பொருட்டும் நான் பெரும்பழியொன்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். அவையனைத்தையும் உங்கள் பொருட்டே செய்தேன் என்பதனால் நீங்கள் பகிர்ந்துகொள்வதே முறையென்றாகும். என் பழியை நீ கொள்வாயா?” என்றேன்.
“தந்தையின் பழியை மைந்தர் கொள்ள வேண்டுமென்பதில்லை. என் பிறப்பில் நான் ஈட்டும் பழியை நீக்கவே என் பிறப்பு போதாதென்றிருக்க நீங்கள் திரட்டியதை நான் எவ்வாறு கொள்ள முடியும்?” என்று அவன் சொன்னான். “உங்கள் பொருட்டே, உங்களை ஊட்டி வளர்க்கும் பொருட்டே நான் அனைத்தையும் செய்தேன்” என்று குரல் உடைய கூவினேன். “எளிய ஊனுணவால், கிழங்குகளால் நாங்கள் வளர்ந்திருப்போம். சுவை மிக்க அன்னமும் அமுதும் நாங்கள் கோரி நீங்கள் அளித்ததல்ல” என்று அவன் சொன்னான்.
அவனை அடிப்பதுபோல அணுகியபடி குரல் உயர “நீ அவற்றை விழையவில்லையா? உண்கையில் உளம் களிக்கவில்லையா? உன் அகம் தொட்டு சொல், எங்கோ ஒரு துளிக்குருதி இதில் இருக்கிறதென்று உண்மையில் உனக்குத் தெரியாதா?” என்றேன். அவன் முகமும் அன்னை போலவே மாறுவதைக் கண்டேன். விழிகளைச் சரித்து “உணர்ந்திருக்கலாம், ஆனால் தந்தையை நெறியுசாவும் பொறுப்பு மைந்தனுக்கில்லை என்பதனால் நான் மேலும் எண்ணவில்லை” என்றான். “வளர்ந்த மகன் நீ. வில்லேந்தி கானேகவும், மலை கடந்து மீளவும் கையும் காலும் கொண்டிருக்கிறாய். இத்தனை நாள் இல்லத்திலிருந்து நீ உண்டது நான் சேர்த்துக்கொண்டு வந்திருந்த பழியை” என்றேன்.
“அல்ல, உங்கள் ஆணவத்தை” என அவன் கூவினான். என்னை தாக்கவருவதுபோல முன்னெழுந்து வந்தான். “உங்கள் கீழ்மை அது. குலம் புரக்கும் பெருந்தந்தை என்று நடிப்பதற்காக நீங்கள் இப்பழியை செய்தீர்கள். அந்த ஆணவத்தில் ஒரு துளியை நான் உண்டு வளர்ந்தேன். அவ்வளவுக்கு மட்டுமே நான் பழிகொள்ள முடியும். அதை ஈடுசெய்கிறேன்” என்று அவன் கூறினான். “மூதாதையரிடம் அதன்பொருட்டு பொறுத்தருள்கை கோருகிறேன். நோன்பிருக்கிறேன். என் குருதி வற்றும்வரை தவம் செய்கிறேன். ஆனால் உங்கள் ஆணவத்தின் விளைவை நீங்கள்தான் பெற்றுக்கொள்ளவேண்டும்.”
என்னால் அவன் முகத்தை நோக்க முடியவில்லை. முற்றாகத் தளர்ந்தவனாக மைந்தர்களை நோக்கினேன். “மைந்தர்களே, நீங்கள் எவரும் இப்பழியை கொள்ளப்போவதில்லையா? ஒருவரேனும் என் உடன் வந்து நிற்கப்போவதில்லையா?” என்றேன். இளைய மைந்தன் “நீங்கள் கொண்ட குருதிப்பழி உங்களாலேயே நிகர் செய்யப்படவேண்டியது. அதற்கு எவ்வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல” என்றான். பிற மைந்தரும் “ஆம்! ஆம்!” என்று கூவினர். நான் “மைந்தர்களே, நான் கெடுநரகுக்குச் செல்வேன். காலகாலமாக இழிவுறுவேன்” என்று கூவினேன். என் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. இரு கைகளையும் நீட்டி “உங்களை தூக்கி வளர்த்த கைகள் இவை” என்றேன். அவர்கள் என்னை அகற்றும் நோக்குடன் விலகினர். அகல்வு பகைமை என்றாவதைக் கண்டேன். பகைமை வெறுப்பென்று கூர்வதை உணர்ந்தேன்.
என் சுற்றத்தாரும் குருதியினரும் என்னை விலக்கி அகன்றனர். “ஆம், உங்கள் பழி அது. அதை நிகர்செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுடையதே” என்றனர். “மானுடர் முற்றிலும் தனியாகவே தங்கள் சுமையை சுமந்தாகவேண்டும்” என்றார் குலமூத்தார் ஒருவர். உளமுடைந்து விழி நீர் பெருக நான் அங்கிருந்த கல்லில் அமர்ந்தேன். தலையை கைகளால் தாங்கிக்கொண்டு விம்மி அழுதேன். ஒருகணத்தில் குலமிலியாக, மண்ணில் எவருமில்லா தனியனாக ஆனேன். பழி நிறைந்தவன், மீளா இருளொன்றில் நெடுந்தொலைவு சென்றுவிட்டவன். என்னை நானே தன்னிரக்கத்தில் தள்ளிக்கொண்டேன். என்னை கரைத்து கரைத்து அழுதேன்.
மெல்ல ஓய்ந்து நீள்மூச்சும் விம்மலுமாக மீண்டேன். பின்னர் ஒரு சொல்லும் உரைக்காமல் திரும்பி நடந்தேன். அவர்கள் எவரேனும் என்னை பின்னால் அழைக்கக் கூடும் என்று எண்ணினேன். ஒரு சொல்லையேனும் அவர்கள் எனக்கென அளித்து முற்றும் நம்பிக்கை இழப்பதிலிருந்து என்னை காக்கக் கூடும். என் செவிகளிலிருந்து ஊரின் ஓசை முற்றொழிவது வரை அப்படி ஒரு குரல் எழவே இல்லை. நெடுந்தொலைவு வந்தபின் திரும்பிப்பார்த்தேன். சிதல்புற்றுகளின் ஊர் செம்மண் அலையென அசைவிலாது நின்றது. பின்னர் நீள் காலெடுத்துவைத்து மீண்டும் சாலைக்கு வந்தேன்.
ஒவ்வொரு அடியிலும் என் உள்ளம் விடுதலை கொண்டபடியே இருந்தது. முற்றிலும் உளம் எடையிழந்து முகம் மலர்ந்த பின்னர்தான் அதை எண்ணமாக மாற்றிக்கொண்டேன். குருதியை, குடியை, சுற்றத்தை விட்டு எழுவதென்பது எவ்வளவு பெரிய பேறு. என் நினைவறிந்த நாள் முதல் நான் எண்ணி ஏங்கியது அதுதான். இதோ என் குடி, என் குருதி ஆயிரம் கரங்களால் என்னைத் தூக்கி அகற்றியிருக்கிறது. இத்தனை எளிதாகத் துறக்க பிறிதொரு வழியில்லை. தனிமைப்படுத்தப்படுவோர் பேறு பெற்றோர். பழி கொள்வோர் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டோர். துயருற்றோர் ஊழின் நற்சொல் அடைந்தவர். அவர்கள் துறப்பது எளிது. விடுதலை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அவர் முன் வந்து நின்றபோது என் முகம் தெளிந்திருந்தது. அவரை நோக்கி வணங்கி “இளமுனிவரே, உங்களால் தெளிவுற்றேன். கடமையைக் காட்டி எவரும் தீது செய்த பழியிலிருந்து தப்ப இயலாது. மைந்தருக்கோ தந்தைக்கோ நீத்தாருக்கோ குடிக்கோ இயற்றும் செயல்கள் ஆயினும் அவை எந்நிலையிலும் நெறி நின்றவையாகவே அமையவேண்டும்” என்றேன். அவர் முன் கால்மடித்து அமர்ந்து “இப்புவியில் இன்பத்தை பகிர முடியும், துயரத்தை எவராலும் பகிர இயலாது. நற்பேறுகளை பகிர இயலும், பழிகளை பகிர இயலாது. செல்வத்தை பகிர இயலும், தவத்தை பகிர இயலாது. இதை இன்று உணர்ந்தேன். இதை எனக்கு உரைக்கும்பொருட்டே இங்கு நீங்கள் வந்தீர்கள் போலும்” என்றேன்.
அவர் புன்னகைத்து “நீங்கள் இத்தெளிவை வந்தடைந்தது உங்களுக்கும் எனக்குமாகவே. நீங்கள் இங்கிருந்து கடந்து செல்வது வரை உங்கள் மேல் வஞ்சமும் கசப்பும் கொண்டிருந்தேன். நீங்கள் உறுதியாக திரும்பி வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். வந்ததும் வன்சொற்களால் உங்களை உடைத்து உயிருள்ளவரை ஆறாத புண்ணை அளித்து மீள வேண்டுமென்றே கருதியிருந்தேன். ஆனால் நீங்கள் தொலைவில் செல்வதை நோக்கி நின்றபோது ஒன்று தோன்றியது, நீங்கள் மானுடரில் அரிதிலும் அரியவர். ஆகவே அரிதரிதான மெய்மையை சென்று அடையக்கூடியவர்” என்றார்.
“வேடரே, உயிர்களில் இயற்கையும் சூழலும் அமைக்கும் எல்லைகளைக் கடப்பவை மிகச் சிலவே. அது உயிராற்றலால் இயல்வது அல்ல. அறியவொண்ணா ஊழின் ஆற்றலால், ஊழை ஆளும் பிரம்மத்தின் ஆணையால் இயல்வது. முனிவர்களில் அனைவருமே மானுட எல்லையை கடந்துசென்றவர்கள்தான். கடத்தலால் மெய்ஞானத்தை அடைந்தவர்கள். எல்லை கடத்தலென்பது எத்திசையிலும் ஆகலாம். விழைவால், காமத்தால், வஞ்சத்தால் கீழெல்லையைக் கடந்தோர் ஆயினும் எல்லை கடப்பவர் மெய்மையை சென்றடையும் வாய்ப்புகொண்டவர். ஏனென்றால் அவர்களில் சிலரே தெய்வங்கள் வகுத்த மேல் எல்லையையும் கடக்க இயலும்.”
“உங்களில் எழுந்த உயிர்கடந்த பேராற்றலே கொடிய வேடனாக சாலை ஓரத்தில் உங்களை நிறுத்தியது. அவ்வாற்றலை உங்களில் நிறுவிய தெய்வங்களின் விழைவு இவ்வாறு அமைந்தது. அந்த ஆற்றல் இன்னும் நெடுந்தொலைவு உங்களை கொண்டு செல்லக்கூடும்” என்றார் இளமுனிவர். “இல்லை, எனது வழி முடிந்துவிட்டது என்று உணர்கிறேன். உங்கள் சொல் பெற்றபின் இங்கிருந்து கிளம்பி காட்டின் ஆழத்திற்கு செல்வேன். உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவேன். என் பழி இருண்ட வெளியென சூழ்ந்திருக்கும் ஆழத்திற்குச் சென்று யுகங்களைக் கழிப்பேன். அதுவே நான் செய்யக்கூடுவது” என்றேன்.
“அல்ல. உங்கள் இலக்கு பிறிதொன்றென்று எனக்குத் தோன்றுகிறது. இங்கு நீங்கள் சொன்ன சொற்கள் எவையும் எளிய வேடனுக்குரியவை அல்ல. வேடர்கள் ஒருபோதும் விழிக்கோ செவிக்கோ சிக்காதவற்றை சொல்ல இயலாது. ஐம்புலன்களையும் வில்லெனக்கொண்டு அறிவை விண்தொலைவுக்குத் தொடுக்கும் ஆற்றல் பலகோடியினரில் ஒரு சிலருக்கே அமைகிறது. நீங்கள் செல்லும் தொலைவென்ன என்று எனக்குத் தெரியாது. அதை தெய்வங்களே கூற இயலும். ஆயினும் இவ்வண்ணம் இவை நிகழ்ந்தது ஊழின் பெருந்திட்டத்தின்படியே என்று எண்ணுகிறேன். எழுக! இங்கிருந்து செல்லும் தொலைவு உங்களுக்கு தெளிவடையட்டும்” என்றார்.
“நான் செய்யக்கூடுவதென்ன?” என்று நான் கேட்டேன். “எங்கு ஒருவர் தன் வாழ்வின் வழிகளனைத்தும் மூடிவிட்டன என்று உணர்கிறாரோ அப்போது செய்யக்கூடுவது ஒன்றே. தவம் செய்க! தவம் என்பது அதுவரை ஒருவன் கொண்டிருக்கும் அனைத்தையும் முற்றாக துறத்தல். ஒன்றும் எஞ்சாமல் வெட்ட வெளியில் நிற்றல். அதன் பின்னர் உருவாகி வருவனவற்றில் வாழ்தல். அடைந்து சென்றடையும் மெய்மையை அறிவென்பர். துறந்து சென்றடையும் மெய்மை ஞானமெனப்படும். அறிவைக் கடந்த ஒன்று உங்களில் நிகழ்வதாக!” என்று அவர் சொன்னார்.
“எனக்கு தவம் எதுவும் தெரியாது. தவத்தோர் எவரையும் நான் பார்த்ததில்லை” என்றேன். “தவம் என்பது ஒன்றே. இனியில்லை இனியில்லை என்று சென்று கொண்டே இருத்தல். அச்சொல் எங்கு முடிவடைகிறதோ அங்கிருக்கும் சொல்லை உங்கள் ஊழ்க நுண்சொல்லெனக் கொள்ளுங்கள். அதை உளம் சூடுங்கள். அதை வழிகாட்டியென அமையுங்கள். அது உங்களை இட்டுச்செல்லும். அறிக, எச்சொல்லும் ஊழ்க நுண்சொல்லே! ஏனென்றால் பிரம்மத்தின் துளியாக அன்றி ஒருபொருளும் இங்கில்லை. பிரம்மத்தின் பேராக அன்றி ஒரு சொல்லும் இங்கு எழவில்லை.”
நான் கைகூப்பினேன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவர் சொன்னார். “நான் உங்களை எனது முதல் ஆசிரியனாகக் கொள்ளலாமா?” என்று கேட்டேன். “ஆம், நான் கற்றவை அனைத்தும் இங்கு இவ்வண்ணம் தொகுத்துக் கூறும்பொருட்டே என்று உணர்கிறேன். இதுநாள் வரை கற்றவை வெறும் சொற்களென என்னில் இருந்தன. இத்தருணத்தில் அவை என்னில் ஞானமெனத் திரண்டுள்ளன. வணங்குக, என் வாழ்த்தை கொள்க!” என்றார். எட்டுறுப்பும் நிலம்தொட அவர் முன் விழுந்து அவர் கால்களில் என் தலை வைத்து “வாழ்த்துக, ஆசிரியரே!” என்றேன். குனிந்து என் தலை தொட்டு “நலம் சூழ்க! இறையருள் கூடுக! முழுத்தது பழுத்து மடியில் உதிர்க!” என்று சொல்லி அவர் வாழ்த்தினார்.
நான் எழுந்து என் ஆடையைக் களைந்து இடப்பக்கமாக வீசிவிட்டு வலப்பக்கம் திரும்பி நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு அடிக்கும் இனி இல்லை இனி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தேன். பல்லாயிரம் காலடிகள் அவ்வாறு சென்றேன். எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் இனி இல்லை எனும் சொல்லால் அறைந்து அப்பால் செலுத்தினேன். பின்னர் நெடுநேரம் சொல்லின்மையில் சென்று கொண்டிருந்தேன். விலக்க ஏதுமில்லாது அமைந்த வெறுமையில் எதிரில் ஒரு மரம் நின்றது. “அம்மரம்” எனும் சொல் உளத்திலெழுந்தது.
அருகணைந்து அதைப் பார்த்து அச்சொல் என்னுள்ளத்தில் ஏன் எழுகிறதென்று வியந்தேன். “அம்மரம்” என்று சொன்னபடியே நடந்தேன். இத்தனை தொலைவு இங்கணைந்து இந்த சிதல்புற்றைக் கண்டபோது தோன்றியது இதுவே என் இடம் என்று. இது எனக்காக ஒருங்கி இங்கே காத்திருக்கிறது என்று. அருகே கிடந்த இந்த பழைய அம்பும் எனக்கான கருவியென்று அறிந்தேன். இவ்விடத்தை தெரிவு செய்தேன். இங்கே அமர்ந்து சொன்னபோது அச்சொல் “இம்மரம்” என உருமாறிவிட்டிருந்தது. அம்மரம் இம்மரம் என்று என் நுண்சொல்லை நாவில் நிறுத்தினேன்.
“இங்கிருந்து தான் நான் செல்ல வேண்டியுள்ளது. இச்சொல்லில் இருந்தே என் வழிகள் நீளும்” என்றார் வால்மீகி. அதன் பின் அவர் கபீந்திரரிடம் எதுவும் பேசவில்லை. கபீந்திரர் ஒவ்வொரு நாளும் தனக்குகந்த காய்களையும் கனிகளையும் கிழங்குகளையும் கொண்டு அவர் முன் வைத்து வணங்கி மீண்டார். ஒவ்வொரு நாளும் விழித்தெழுந்து அக்கனிகளை உண்டு அருகிருக்கும் சரயுவில் நீராடி தன் புற்றுக்குள் புகுந்துகொண்டார் வால்மீகி. பல்லாண்டுகள் அங்ஙனம் சென்றன. கபீந்திரர் முதுமை எய்தி மண் புகுந்தார். அவர் மைந்தர்கள் அக்கடனை தொடர்ந்தனர்.
புற்றிலிருந்த வால்மீகி சடைமுடி நீண்டு விழுதாகி, தாடி சுருண்டு கொத்தாகி, உடல் மெலிந்து, கைநகங்கள் நீண்டு சுருண்டு முனிவர் என தோற்றம் கொண்டார். அவர் பெயர் எவருக்கும் தெரியவில்லை. அவ்வழி சென்ற வேடர்கள் அவரை வால்மீகி என்றனர். அங்கு வந்து வணங்கிச்செல்லும் வணிகர்கள் அவரை வால்மீகமுனிவர் என்றனர். அவர் எவரிடமும் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவரை அவர் நாவில் திகழ்ந்த சொல் உள்ளங்கையில் ஏந்தியிருந்தது.
ஒருமுறை நீண்ட தாடியும் தோள்களில் தொங்கும் புரிசடையுமாக முனிவர் ஒருவர் வந்தார். அவர் புற்றை அணுகி வெளியே வணங்கி நின்றார். விழி திறந்து அவரைப் பார்த்த வால்மீகி அவரை அடையாளம் காணவில்லை. “நான் புரந்தரன். என்னை வாழ்த்துக, ஆசிரியரே!” என்றபடி புரந்தரர் அவர் காலில் விழுந்து வணங்கினார். “உங்களை வாழ்த்தியபின் நானும் நெடுந்தொலைவு சென்றேன். அவ்வாறல்ல அவ்வாறல்ல என்று பல்லாயிரம் முறை கடந்து சென்ற பின்னரும் ஆம் எனும் ஒன்று எஞ்சியது. அதை கடப்பதெப்படி என்று தென்திசையில் நான் சென்ற காட்டில் அமர்ந்த துர்வாச முனிவரிடம் கேட்டேன். ஒன்றை ஒருவனுக்கு அளித்தாய். அவனிடமிருந்து நீ பெற்றுக்கொண்டதென்ன என்றார்.”
“அன்று தெரிந்துகொண்டேன், நீங்கள் என் காலடியை வணங்கியபோது நான் கொண்ட ஆணவத்தை. என்னை இங்கே கட்டியிட்ட அதை இங்கு வைத்து மீள வந்தேன்” என்றார் புரந்தரர். வால்மீகி “ராம! ராம!” எனும் சொல்லையன்றி பிறிதொன்றையும் உரைக்காதவராக மாறியிருந்தார். எட்டுறுப்பும் நிலம்தொட அவர் முன் விழுந்து புரந்தரர் வணங்கினார். அவர் கால்பொடி தன் தலையில் பட்டபோது அந்த இறுதிச் சொல்லும் நீங்கி உளம் தெளியலானார். வணங்கிய கைகளுடன் புறம் காட்டாது அங்கிருந்து அகன்றார்.
குருக்ஷேத்ரத்தின் காட்டின் விளிம்பில் கிளைகளில் சூழ்ந்தமர்ந்திருந்த குரங்குகளின் நடுவே அமர்ந்திருந்த தூமவர்ணி தன் மடிமீது அரைத்துயிலில் கிடந்த குரங்குக் குழவிகளின் மென்மயிர் தலையை வருடியபடி அக்கதையை சொல்லி முடித்தது. “அவரை வால்மீகி என்கின்றனர். அவர் சொல்லிலேயே மானுட குலத்தின் முதல் கதை பிறந்தது. பின்னர் நெடுங்காலம் கழித்து அவ்வழி சென்ற ராகவராமன் வந்து அவர் அடிகளை பணிந்தான். தன் அடிகளைப் பணிந்தது தான் வணங்க வேண்டிய தெய்வம் என்று அவர் கண்டுகொண்டார். தெய்வத்தால் வணங்கப்படுபவனே கவிஞன் என்று உணர்ந்தார். தெய்வத்தை தீச்சொல்லிடவும் உரிமை கொண்டவன் கவிஞன் என்று அறிந்தபோது அவர் பெருங்காவியம் ஒன்றை இயற்றலானார்.”
மிக அப்பால் முதிய குரங்கான கும்போதரன் மரத்தில் சாய்ந்தமர்ந்து குறட்டை விட்டு தூங்கிகொண்டிருந்தது. அதன் மெல்லிய மூச்சொலியைக் கேட்டு கதையின் அமைதியில் நிலைத்திருந்த குரங்குகள் திரும்பிப்பார்த்தன. துயின்று கொண்டிருந்த புஷ்பகர்ணி எழுந்தமர்ந்து “அதன் பின் அனுமன் என்ன செய்தார்?” என்றது. “அனுமன் மண்ணில் கிளைவிரித்த மரத்தின் உச்சியிலிருந்து விண் நோக்கி பாய்ந்தார். விண்ணில் காய்த்து கனிந்து சிவந்து ஒளிகொண்டிருந்த அழகிய கனியொன்றை தன் வாயால் கவ்வினார்” என்றது தூமவர்ணி.
“அது சூரியன்! அது சூரியன்! எனக்குத் தெரியும்” என்று மூர்த்தன் துள்ளி எழுந்தது. “சூரியனை கவ்வியது அனுமன்!” என்றது. “ஆம், நம் குலத்தில் ஒருவன் சூரியனை கவ்வினான்” என்று முதுகுரங்கு சொன்னது. “அதை எழுதியவர் தொல்கவிஞரான வால்மீகி.”