இருட்கனி - 30

குருக்ஷேத்ரத்திலிருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் காட்டுப்பாதையில் புதர்களை ஊடுருவியபடி பீமன் புரவியில் சென்றான். அவனது தலைக்குமேல் அன்னைக் குரங்கு ஒன்று “நில்! நில்!” என்று கூவியபடி கிளைகளிலிருந்து கிளைகளுக்கு வால் விடைத்துத் தாவி, ஊசலாடி அமர்ந்து, மீண்டும் துள்ளி கிளை நுனி பற்றி ஊசலாடி அமர்ந்தெழுந்து கூவியபடி உடன் வந்தது. “நில், மைந்தா! நில்!” என்று மீண்டும் அது கூவியது. பீமன் அதன் குரலைக் கேட்டாலும் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. தன்னுள் ஆழ்ந்து தோள்கள் தளர்ந்து உடல் முன்னால் சாய்ந்து ஊசலாட புரவியில் அமர்ந்திருந்தான். அவன் உடலிலிருந்து எந்த ஆணையையும் பெறாவிட்டாலும்கூட அவன் உள்ளத்தை அறிந்ததுபோல் புரவி பாய்ந்தோடியது.

அதன் குரல் கேட்டு மேலும் மேலும் குரங்குகள் வந்து சேர்ந்துகொள்ள தலைக்கு மேல் சுழல்காற்று ஒன்று கிளையுலைத்து இலைஉதிர்த்துச் சுழன்று உடன்வருவதுபோல் தோன்றியது. “நிறுத்துங்கள் அவனை! மைந்தா, நில்!” என்று அன்னைக் குரங்கு கூவிக்கொண்டிருந்தது. பீமன் நடுவே வந்த பிலம் ஒன்றை புரவியில் தாவிக்கடந்தான். கூழாங்கற்கள் புரவியின் குளம்பில் பட்டு உதிர்ந்து பிலத்தின் ஆழத்திற்குள் இறங்கின. அங்கே முட்டையிட்டு குழவிகளை ஈன்று நிறைந்து நெளிந்துகொண்டிருந்த நாகங்கள் சீறி தலை தூக்கின. அவற்றின் குழவிகள் அஞ்சி உடல் நெளித்து தளிர்பத்தி விரித்தன.

பீமனின் புரவி சூழ்ந்திருந்த எதையும் உணராததுபோல், இலக்கொன்றையே அறிந்ததுபோல் சென்றது. பிறிதொரு குரங்கு தூமவர்ணி என்னும் அந்த அன்னைக் குரங்குடன் இணைவந்தபடி “அவர் எங்கு செல்கிறார் என்று தெரியுமா?” என்று கேட்டது. அன்னைக் குரங்கு “எங்கெனினும் இப்போது அவன் செல்வது தீய இலக்கிற்கே” என்றது. “ஏன்?” என்றது இன்னொரு குரங்கு. தூமவர்ணி பல்காட்டிச் சீறி “அறிவிலி, அவன் கைகளை பார். அந்தக் கலம் நிறைய குருதி இருக்கிறது. அது மானுடக் குருதி… உன் மூக்குமா அடைந்துவிட்டது?” என்றது. இன்னொரு குரங்கு தாவியபடி “ஆம். அது மானுடக் குருதி. அது உறையத்தொடங்கியிருக்கிறது. அதன் மேற்பரப்பில் கரிய படலம் உருவாகி அசைவில் நலுங்கிக்கொண்டிருக்கிறது” என்றது. “ஆம், வாடிய செம்மலரிதழ்போல சுருக்கம் கொண்டிருக்கிறது” என்றது இன்னொரு குரங்கு.

“அக்குருதியின் அனல் அணையத்தொடங்கியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் அது கரியென்றாகும்” என்றது ஒரு குரங்கு. பீதகர்ணி என்னும் தாட்டான் குரங்கு ஆழ்ந்த குரலில் “அவன் அக்குருதியுடன் எங்கு செல்கிறான் என்று எனக்கு தெரியும்” என்றது. “ஏதேனும் கொடுந்தெய்வத்திற்கு அதை பலியென அளிக்கப்போகிறான். கற்சிலை ஒன்றின் மேல் அதை ஊற்றி முழுக்காட்டு நிகழ்த்துவதே அவன் எண்ணம்.” தூமவர்ணி பெருமூச்சுடன் நின்று “இனி அவனை தொடர்வதில் பயனில்லை” என்றது. பீதகர்ணி “நாம் அவன் மேல் குதிப்போம். அவனை கைகால் பற்றி நிறுத்துவோம்” என்றது. சௌவர்ணன் என்னும் ஆண்குரங்கு “நம்மினும் பன்மடங்கு ஆற்றல் கொண்டவன் அவன். நம் போர்முறைகளை நம்மைவிட அறிந்தவன். அவனிடம் நாம் போரிட இயலாது” என்றது.

குரங்குகள் ஒவ்வொன்றாக கிளைகளில் நின்றுவிட பீமன் ஒற்றையடிப் பாதையில் குறையா விரைவில் சென்றுகொண்டிருந்தான். குரங்குகள் மரங்களின் எல்லை வரை வந்து கிளை நுனியில் எழுந்தமர்ந்து உரக்க கூச்சலிட்டன. தூமவர்ணி “மைந்தா, பேருருவம் கொண்டவனாயினும் இதுவரை வாழ்வின் பொருளறியாதவன் நீ” என்று கூவியது. “நில், அன்னை சொல் கேள்! நில்!” பின்னர் துயருடன் “அவன் செவிகள் மூடியிருக்கின்றன. தன்னை வெறுப்பவனும் தன்னை வழிபடுபவனும் செவிகளை மூடிக்கொள்கிறான்” என்றது.

பிற குரங்குகள் அதைச் சுற்றி அமர்ந்தன. “அவன் பெருந்துயர் நோக்கி செல்கிறான்” என்று தூமவர்ணி சொன்னது. “இறப்பா? சிறுமையா?” என்றது சௌவர்ணன். “மீள முடியாத உண்மையைப்போல் பெருந்துயர் அளிப்பது வேறு ஏது?” என்று தூமவர்ணி சொன்னது. “அது அவனை சிறைப்படுத்துமா?” என்றது பீதகர்ணி. “இல்லை, எல்லா உண்மைகளும் விடுதலை அளிப்பவையே” என்று அன்னை சொன்னது. “எனில் அதை அவன் அறிந்துகொள்வதல்லவா நன்று?” என்றது சௌவர்ணன்.

தூமவர்ணி சீற்றத்துடன் பற்களைக் காட்டி “எந்த அன்னையாவது தன் மைந்தன் பட்டு உலகறிந்து முதிரவேண்டுமென்று எண்ணுவாளா? தன் மைந்தனின் அலைக்கழிப்பும் துயரும் வாழ்வை அறியாததனால் அமைவதே என்று அறிந்தாலும் மைந்தர் முதிர்ந்து வாழ்வறியவேண்டுமென்று பெற்றோர் விரும்புவார்களா?” என்றது. பீதகர்ணி “ஆம், என்றும் உலகறியா சிறுமைந்தராக அவர்கள் இருக்கவேண்டும், இவ்வுலகே குவிந்து அவர்களை காக்கவேண்டும் என்றுதான் இவ்வுலகெங்கும் அன்னையர் எண்ணுகிறார்கள்” என்றது.

“ஏன்?” என்றது அப்பால் வந்து கிளையில் அமர்ந்த சிறுகுரங்கான மூர்த்தன். தூமவர்ணி சலிப்புடன் தலையசைத்து “அறியேன். மானுடர் எவ்வண்ணம் உணர்கிறார்கள் என்பதை அவர்கள்தான் கூறவேண்டும். மைந்தர் முதிர்கையில் தந்தையர் தங்கள் இறப்பை உணர்கிறார்கள். அன்னையர் பொருளின்மையை சென்றடைகிறார்கள். அதனாலாக இருக்கலாம். அன்றி முதிர்வென்பதே இறப்பை நோக்கிய செலவு என்று உணர்ந்ததனாலாக இருக்கலாம்” என்றது.

அனைத்துக் குரங்குகளுக்கும் பின்னால் மூச்சிரைக்க வந்த மிக முதிர்ந்த பெருங்குரங்கான கும்போதரன் கிளைக்கவரில் அமர்ந்து வாலை தொங்கவிட்டு சாய்ந்துகொண்டு “அவ்வாறல்ல. இளமையில் அறியாமையே களிப்பும் துயரும். வளர்தல் என்பது அறிதல். பின்னர் அறிதலே களிப்பும் துயரும். அறியாமையும் அறிவும் அறிபவனுடன் விளையாடுகின்றன. அறிதலும், அறியாமையை கண்டடைதலும், மீண்டும் அறிதலும், அறிதொறும் அறியாமை காண்டலும் என நிகழும் அந்த விளையாட்டே வாழ்வின் கொண்டாட்டம். வலியும் துயரும் கொண்டாட்டமே என்று அறிக! ஊசல் பின்னகராவிடில் முன்னெழ இயலாது” என்றது.

இளம்குரங்குகள் அதை நோக்கின. கும்போதரன் “முதிர்ந்தபின் அறிபவை அனைத்தும் மலைகளைப்போல் மாறாது நிலைகொள்ளும் மெய்மைகள். பெருமெய்மைகள் அனைத்தும் அறிபவனுக்கு வெறுமையை மட்டும் அளிக்கின்றன” என்றது. “ஏன்?” என்று சிறுவனாகிய புஷ்பகர்ணி அதை நோக்கி தாவிச் சென்று அருகே நின்று தலைசரித்து இமைமூடி விழிமின்னி கேட்டது. “ஏனெனில் இங்கு மகிழ்ச்சியென்று நாம் அறிவது அனைத்தும் ஆணவத்தின் பிறிதொரு வடிவையே. வெல்வது, நுகர்வது, ஈவது என நாம் இங்கு கொண்டாடும் அனைத்தும் ஆணவத்தின் தோற்றங்களைத்தான். மெய்யறிவு ஆணவத்தை அழிக்கிறது. மகிழ்வை மறைத்துவிடுகிறது” என்று கும்போதரன் சொன்னது.

“ஆணவ அழிவு என்பது பேருவகை என்றல்லவா கேட்டிருக்கிறேன்?” என்று மரங்களுக்கிடையிலிருந்து ஒரு பெண்குரங்கு சொன்னது. கும்போதரன் திரும்பி அந்த இளம் பெண்குரங்கை சற்று நேரம் பார்த்தது. அதுவரை பேசிய அனைத்தையும் மறந்து அரைத்துயிலில் ஆழ்ந்தது. புஷ்பகர்ணி பாய்ந்து அதன் அருகே வந்து அதன் காலைப்பற்றி அசைத்து “சொல்லுங்கள், தாதையே” என்றது. சற்றே இழுபட்ட வாயிலிருந்து எச்சில் கோழை வழிய அதை கையால் துடைத்துக்கொண்டு “என்ன? என்ன?” என்றது கும்போதரன். “சற்று முன் சொல்லிக்கொண்டிருந்தீர்களே…” என்றது இன்னொரு இளமைந்தனாகிய மூர்த்தன். “என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றது கும்போதரன்.

புஷ்பகர்ணி கிளைபற்றி மேலேறி அதன் தலையருகே வந்து சிறு கிளையில் அமர்ந்து “மெய்மையை அறிவது துயரென்றீர்கள். அது மகிழ்வென்றல்லவா சொல்லப்பட்டுள்ளது என்று அவர் கேட்டார்” என்றது. “ஆம், மெய்யறிந்து அதை சென்றடைந்தவர்கள் கூறிய சொற்கள் அவை. அது மகிழ்வென்றே உரைக்கின்றன நம் உடலில் எழும் மூதாதையர் குரல்களும். மானுடரின் நூல்களில் பதிந்துள்ள சொற்களும் மற்றொன்று கூறவில்லை. ஆயினும் நாம் அறியும் மெய்மையின் கணத்தோற்றங்கள் அனைத்தும் நாம் கொண்டுள்ள அனைத்தையும் பொருளற்றவையாக்கி சோர்வையும் சலிப்பையும் வெறுமையையும் மட்டுமே அளிக்கின்றன” என்றது கும்போதரன்.

சற்று நேரங்கழிந்து பீதகர்ணி “ஆம், நான் இவ்வாழ்வில் பொருட்படுத்தக்கூடிய எதையேனும் அறிந்திருக்கிறேன் என்றால் அதன்பின் நெடுநாட்கள் வெறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். அவ்வெறுமையிலிருந்து என்னை பிடுங்கி அகற்றிக்கொண்டு பொருளற்றவை என்று நன்கறிந்த சிறு செயல்களில் ஈடுபட்டு, சிறு பூசல்களில் ஊடாடி, சிறு விழைவுகளை துரத்திச்சென்று, அவ்வெறுமையிலிருந்து மீண்டு வந்தேன். இங்கு நான் வைத்திருப்பவை அனைத்தும் அதன் பின்னர் நான் திரட்டி என் மேல் அணிந்துகொண்டிருப்பவைதான்” என்றது.

மற்ற குரங்குகள் ஒன்றும் சொல்லவில்லை. சில குரங்குகள் எண்ணம்கூர சலிப்புற்றவை என தலையை சொறிந்துகொண்டன. பீதகர்ணி தொடர்ந்தது “அவ்வப்போது தனிமையில் அவ்வெறுமையை சென்று தொடுகையில் என் உள்ளம் திடுக்கிட்டு குளிர்ந்து உறைகிறது. அக்கணமே அதை உதறி மீண்டு வந்து இவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன்” என்றது. சௌவர்ணன் “ஏன் நீ அறிந்தவற்றில் சென்று நிலைகொள்ள முடியவில்லை?” என்றது. “அங்கு செல்ல நான் இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிடவேண்டும். நான் அறிந்து திளைத்து அறிதல்களாகவும் நினைவுகளாகவும் சேர்த்துக்கொண்டுள்ள ஒவ்வொன்றையும். எண்ணவே அச்சம் கொள்கிறேன்” என்றது பீதகர்ணி.

“ஒவ்வொரு அறிதலும் ஒரு சிறு இறப்பு” என்றது கும்போதரன் எங்கிருந்தோ என. அக்குரல் அதன் வாயிலிருந்துதான் எழுந்ததா என்னும் ஐயம் பிற குரங்குகளுக்கு ஏற்பட அவை மெய்ப்பு கொண்டன. “ஆனால் மெய்மை விடுதலை செய்கிறது என்கிறார்கள். நீ இப்போது கையில் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் உன்னை இங்கு கட்டிப்போடுவன. இவை உன்னால் தாள முடியாத துயரை எப்போதுமே அளிக்குமெனில் அக்கணமே அவற்றை உதறிவிட்டு நீ உள்ளே வைத்திருக்கும் அந்த மெய்மையை சென்று தொட்டுவிடுவாய். அதை பற்றிக்கொண்டு இவையனைத்தையும் துறக்க முயல்வாய்” என்றது தூமவர்ணி.

கும்போதரன் “மெய்மை விடுதலை செய்கிறது” என்று தானிருந்த மாற்றுலகிலிருந்து தனக்கே என சொன்னது. “விடுதலை என்பது இழப்பும் கூடத்தான். இழப்பவற்றின் ஏக்கம் விடுதலை கொண்ட எவருக்கும் சற்று நாள் இருக்கும். பெருநோய் கொண்டு வலி சூடித் துடிப்பவர்கள்கூட அதிலிருந்து விடுதலை கொண்டதும் அவ்வலியை நினைத்து சற்று ஏங்குவதை பார்த்திருக்கிறேன். தன்னிடம் இருந்த நன்றோ தீதோ விலகிச்சென்றால் மானுடன் ஏக்கம் கொள்கிறான். ஏனெனில் அதை தன்னுடையதென்றே அவன் உணர்கிறான். எதுவாயினும் அது தன் ஆணவத்தின் ஒரு பகுதியே என ஆழத்தில் அறிந்திருக்கிறான்.”

“அந்த ஏக்கத்தையும் கடந்துவிட்டால்தான் மெய்மை அளிக்கும் விடுதலை உவகையை அளிக்கத்தொடங்கும். அது பிறிதொன்றால் மறுநிகர் செய்யப்படாத உவகை என்பதனால் கணந்தோறும் பெருகும். பெருகுந்தோறும் பெறுபவனையும் பெருகவைப்பதனால் திகட்டுவதில்லை. மூதாதையர் சொல்லைக்கொண்டு நோக்கினால் பெறுபவன் பெறுபொருளாகவே மாறுவதனால் பெறுவதென்பதே நிகழாமலாகி பெருவெளியென்று விரிந்து இருப்பும் இன்மையும் அகன்று பரம் என நின்றிருக்கும் நிலை அது.”

சீற்றத்துடன் பெண்குரங்கான விருக்ஷநந்தினி கேட்டது “பிரம்மம் மானுடனுடன் ஏன் அவ்வாறு விளையாட வேண்டும்?” பீதகர்ணி “எனக்கு புரியவில்லை. என்ன விளையாட்டு?” என்று கேட்டது. “இங்கு இத்தனை இனிய காட்டை, இன்கனிகளை, அழகிய சுனைகளை, காற்றை, ஒளியைப் படைத்து நம்மை சூழ வைத்திருக்கிறது. நாம் அதில் ஆடிக் களிக்கிறோம். உடன் நோயையும் இறப்பையும் பின்னி அனைத்தையும் மறுநிகர் செய்திருக்கிறது. மகிழ்கையில் துயரையும் நலம்கொள்கையில் நோயையும் வாழ்வில் சாவையும் எண்ணி எண்ணி நாம் நிலையழிகிறோம்.”

அதன் குரல் ஓங்கியது. “இவையனைத்திற்கும் அப்பால் இவையனைத்தும் பொருளற்றவை என்று காட்டும் ஒன்றை நிறுவி அதன் ஒரு துளி சுவை அனைவருக்கும் ஒருகணமேனும் அமையும்படி வகுத்துள்ளது. இங்கிருக்கும் நன்மை தீமைகளில் ஊசலாடி எங்கோ இருக்கும் இவைகடந்த ஒன்றை சற்றே அறிந்து முழுதடைய ஏங்கி எத்திசையும் தேடி இங்கிருந்து அங்கென முடிவிலா ஊசலாட்டத்தை அடைந்து ஒருகணமும் நிலைபெறாமல் அழியும் பொருட்டே உலகிலுள்ள உயிர்களனைத்தும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.”

“அறிவென்பது பிரம்மம் அளித்துள்ள ஒரு கொடை. அதனூடாக அறிவுகொண்டோர் தன்னை வந்தடையவேண்டுமென்று அது எண்ணுகிறது” என்றது கும்போதரன். “நீ அறியமாட்டாய், இங்குள உயிர்கள் ஒவ்வொன்றும் முற்பிறவியில் நன்மை செய்தவை. நலம் பேணி, வீரம் விளைவித்து, அறம் நின்று, தவமியற்றி, மேலும் மேலும் பிறவியெடுத்து அறிவடைந்து அகம் கூர்கொண்டு மெய்மையை சென்றடைகின்றன. பிரம்மம் பல்லாயிரம்கோடித் துளிகளாக தன்னை சிதறடித்து ஒவ்வொரு துளியையும் தன்னை நோக்கி ஈர்த்து தானென இணைத்து முடிவிலாது தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.”

“இச்சொற்கள் இங்கு நின்றுவிடுவதே நல்லது. இவற்றை நாம் மீளமீளப் பேசுவதனால் பொருளொன்றுமில்லை. முதியோர் எப்போதும் இவற்றை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இளையோர் அவற்றை முற்றறியக் கூடுவதுமில்லை. எங்கேனும் ஒரு தலைமுறையில் முதியோர் இவற்றைக் கூறுவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றால் நம்மைப்போன்ற மரமானுடர்களும் அவர்களைப் போன்ற நிலமானுடர்களும் விடுதலைபெறுவோம்” என்றது பீதகர்ணி.

கும்போதரன் “ஆம், நானும் அதை எண்ணுவதுண்டு. துள்ளித் திரியும் என் சிறார்களிடம் ஒருபோதும் இவற்றை கூறலாகாதென்று. ஆயினும் இங்கிருக்கும் ஒவ்வொன்றும் நான் உணர்ந்த ஒன்றுக்கு சான்று கூறுவனவாக தன்னை மாற்றிகொள்கையில், ஒவ்வொரு நிகழ்விலும் கூறுவதற்கு ஒன்று என்னிடம் எழுந்து நாகொண்டு துடிக்கையில் உளம் அடக்கி அமர்வது அத்தனை எளிதாக இல்லை” என்றது. நீள்மூச்சுடன் “நன்று. கூடுமானவரை கூறிவிட்டோம். இங்கு நிறுத்திகொள்வோம்” என்று சொல்லி விழிகளை மூடிக்கொண்டது.

எப்போதும் அச்சொற்கள் அவ்வண்ணம் திசைமுடிவில் முட்டி அறுபட்டு நிலைகொள்வதை அறிந்திருந்த குரங்குகள் ஆங்காங்கே சென்று அமர்ந்தன. சிறிய குரங்குகள் ஒன்றையொன்று துரத்தி கிளைகளில் தாவி விளையாடத் தொடங்கின. முலையருந்தும் மகவுகளை வயிற்றுடன் அணைத்தபடி அன்னைக் குரங்குகள் கவர்கிளையில் அமர்ந்து விழி மூடின. பெண்குரங்குகள் ஒன்றையொன்று பேன் துழாவத்தொடங்க நான்கைந்து முதிய ஆண் குரங்குகள் அப்பால் சென்று ஒரு கிளையில் அமர்ந்து விசைகொண்ட கையசைவுகளுடனும் உறுமல்களுடனும் தங்களுக்குள் பேசிக்கொண்டன.

கும்போதரன் கால்களை நீட்டி அமர்ந்தது. அதன் விழிகள் சரிந்தன. இளங்குரங்கான மூர்த்தன் அருகே வந்து அதன் தொடை மேல் கைவைத்து “தாதையே, எனக்கொரு கதை சொல்லுங்கள்” என்றது. “உன் நண்பர்கள் அங்கே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே சென்று விளையாடு” என்றது கும்போதரன். “நீங்கள் கதை சொன்னால் நான் அந்தக் கதைகளை அவர்களிடம் சொல்வேன்” என்றது மூர்த்தன். “அவர்களிடம் எல்லா கதைகளையும் சொல்லிவிட்டேன்.” கும்போதரன் சிரித்து “அவர்கள் உன் கதைகளை விரும்புகிறார்களா?” என்றது. “அவர்கள் நான் கதை சொன்னால் கேட்பார்கள். சற்று நேரத்திலேயே கதையிலிருந்து விலகிவிடுகிறார்கள்” என்றது மூர்த்தன்.

“ஏன் உனக்கு மட்டும் உள்ளம் விலகவில்லையா?” என்று கும்போதரன் கேட்டது. மூர்த்தன் மேலும் அதன் உடலுடன் ஒட்டிக்கொண்டு “இல்லை, எனக்கு இவர்களின் இந்த விளையாட்டுகளைவிட கதைகேட்பதுதான் உகந்ததாக உள்ளது. இங்கிருக்கும் இந்தக் காடு, காற்று, ஒளி அனைத்தையும்விட கதைகளில் உள்ள காடும் இருளும் ஒளியும்தான் என்னை கவர்கின்றன. கதைகளை கற்பனை செய்துகொள்ளும் பொருட்டே இவற்றையெல்லாம் பிரம்மம் படைத்திருக்கிறதென்று தோன்றுகிறது” என்றது. கும்போதரன் புன்னகையுடன் அச்சிறுகுரங்கின் புன்மயிர் பிசிறி நின்ற தலையைத்தொட்டு “ஆம், நீ பிறிதொருவன். இளமையில் உன்னைப்போலவே நானும் இருந்தேன்” என்றது.

“என்னுடன் பிறந்தவர்கள் கிளையிலிருந்து கிளை தாவி மகிழ்ந்துகொண்டிருக்கையில் உச்சிக்கிளை நோக்கி சென்று நுனியில் அமர்ந்து விரிந்த வானை நோக்கி எதையென்று தெரியாமல் எண்ணி ஏங்கி விழிநீர் விடுபவனாக இருந்தேன். கனிந்த பழத்தை பார்க்கையில் அச்செம்மையும் மணமும் நான் அறியாத எவரோ எனக்களிக்கும் பரிசென்று கருதினேன். நோயுற்று மறைந்துகொண்டிருக்கும் முதியவர்களைப் பார்க்கையில் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத நீர்ப்பரப்பொன்றில் மூழ்கிக்கொண்டிருப்பவர்களாக, அடியிலிருந்து ஒரு கை அவர்களை இழுத்து எடுத்து தங்கள் மடியில் வைத்துக்கொள்வதாக கற்பனை செய்தேன்” என தொடர்ந்தது.

“பிறருடைய உடலுரமும் கிளைதாவும் விசையும் எனக்கு கூடவில்லை. என்னை அவர்கள் ஏளனம் செய்தார்கள். ஆனால் உள்ளூர என் மேல் மதிப்பும் கொண்டிருந்தார்கள். என் தோழன் என்னைவிட மும்மடங்கு ஆற்றல் கொண்டவன். இருமடங்கு பெரிய உடல் கொண்டவன். என்னை எப்போதும் கேலிச்சொற்களால்தான் அழைத்து வந்தான். ஆனால் இவர்கள் அனைவரிடமிருந்தும் என்னை பாதுகாத்தான். இக்குடியின் தலைவன் என்று அவன் ஆனபோது அவனுடைய தோழனாக நானும் குடித்தலைமைக்கு பொறுப்பேற்றேன். சென்ற மழைக்காலத்தில் அவன் உயிர்துறப்பதுவரை நானும் இணைந்தே இக்குடியை நடத்தினேன்.”

“இதை இவ்வளவு பெருக வைத்தது அவன் தோள்வல்லமை. அவனுடைய கொடிவழியில் வந்தவன் நீ. நீ கதைவிழைவு கொண்டிருக்கிறாய். என் மைந்தர் தோளாற்றல் கொண்டுள்ளனர். எப்போதும் ஒருவர் நம் குடியில் இப்படி இருந்துகொண்டிருப்பார்கள்” என்றது கும்போதரன். உடனே சற்று உளம் சோர்ந்து “இவ்வாறு இருப்பது நன்றோ தீதோ என்று எனக்கு தெரியவில்லை. நான் கொண்ட அலைக்கழிப்புகள் எதையும் என் தோழன் அடையவில்லை. இங்கு உள்ள இன்பங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அடைந்தான். ஆற்றல் மிக்க அரசன் என்று மலைமானுடக்குடிகள் அனைவரும் அவனை புகழ்ந்து நினைவில் கொண்டிருக்கிறார்கள். இங்கு எதையும் அவன் இழக்கவில்லை. விண்புகுந்து அங்கும் எதுவும் அவனுக்கு குறையப்போவதில்லை” என்றது.

“ஆனால் நான் ஐயமின்றி இங்குள்ள எதையும் தொட்டதில்லை. அடைந்த எதிலும் நிறைவு கொண்டதில்லை. இங்கிருந்து அகன்றால் அங்கும் எனக்கு நிறைவுண்டா என்று தெரியவில்லை. நான் அறிவுள்ளவன் என இளமையில் தருக்கினேன். ஆனால் அவ்வப்போது அவனைப் போலிருந்தால் நன்றோ என்று நான் எண்ணுவதுண்டு. ஒருபோதும் அவனென்று நான் ஆகக்கூடும் என்று எண்ணியதில்லை. ஆக விழையாமலும் இருந்ததில்லை. ஆனால் ஒருகணமேனும் நானென்று இருக்க அவன் விழைந்திருப்பானா? அவ்வாறு உணர்ந்ததே இல்லை” என்றபின் “கதை சொல்லும் உளநிலையில் நான் இல்லை. உன் அன்னையிடம் சென்று கேள். அவள் சொல்வாள்” என்றது. மீண்டும் உடல் தளர்த்தி விழிமூடி கும்போதரன் துயிலத்தொடங்க மூர்த்தன் கிளைநுனிகளில் தொங்கி ஊசலாடி தன் அன்னையை நோக்கி சென்றது.

மூர்த்தன் தூமவர்ணியை அணுகி அதன் மென்மயிர்த் தோளைப் பிடித்து இழுத்து உலுக்கி சிட்டுக்குருவியின் கூர்குரலில் “அன்னையே, கதை சொல்” என்றது. தூமவர்ணி எரிச்சலுடன் “போ, கதை சொல்லும் நிலையில் நான் இல்லை. நான் கடந்து சென்ற அவனைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றது. “அன்னையே! கதை சொல்லுங்கள், அன்னையே!” என்று அதன் கைகளைப் பிடித்து உலுக்கியது மூர்த்தன். “நான் அவனைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன், மைந்தா” என்றது தூமவர்ணி. “கதை சொல்… கதை சொல்… கதை சொல்” என வெறிகொண்டு உலுக்கியது மூர்த்தன். “சரி சரி, உயிரை எடுக்காதே… அடங்கு… நிறுத்து… சொல்கிறேன்” என்று அன்னை சொல்ல “சரி” என அன்னையின் கைகளை விலக்கி மடியில் ஏறி அமர்ந்துகொண்டது மூர்த்தன்.

“நான் ஒரு மூதாதையின் கதையை சொல்கிறேன்” என்றது தூமவர்ணி. “நிறைய குரங்குகளின் கதையை சொல்லியிருக்கிறீர்கள்” என்று மூர்த்தன் சொல்லியது. அந்நினைவினால் ஊக்கம் கொண்டு அன்னையின் கைகளை விலக்கி பாய்ந்து குருவி போலவே துள்ளி கிளையிலிருந்து கிளை பாய்ந்து சுழன்று அமர்ந்து வால் நெளிய “நிறைய குரங்குகள்! ஒரு குரங்கு அங்கே கடலிலிருந்து கடல் தாவியது. அதன் வாலில் பத்துதலையுள்ள அரக்கன் ஒருவன் பற்றிக்கொண்டான். தன் வாலால் அந்த அரக்கனை சுற்றி எடுத்துக்கொண்டு தாவிச்சென்றது. எட்டுக் கடல்களும் தாவிய பின்னரே அந்த அரக்கனை பார்த்தது. புன்னகைத்து அடடா நீ இங்கிருக்கிறாயா, எனக்குத் தெரியவில்லையே நண்பா என்று சொன்னது.”

அதன் சிறு உடலால் உள்ளிருந்து எழுந்த துடிப்பை தாளமுடியவில்லை. துள்ளித்துள்ளித் தாவியபடி “அரக்கன் பத்து தலையிலும் புண்பட்டு இருபது கைகளும் தளர்ந்து மெய்யாகவே நீ என்னை பார்க்கவில்லையா என்று கேட்டான். பேருருவம் கொண்டெழுகையில் சிறியவை என் பார்வையிலிருந்து மறைந்துவிடுகின்றன. அந்த வடமலையே எனக்கு சிறு கூழாங்கல்லெனத் தெரிகையில் உன்னை நான் எவ்வண்ணம் உணரமுடியும் நண்பா என்று அக்குரங்கு கேட்டது” என்றது. உரக்க நகைத்து துள்ளிக்குதித்து அமர்ந்து கைகளை தலைக்குமேல் விரித்து “அவ்வளவு பேருருவம்… வான் வரை பெரிய உருவம்!” என்றது. மகிழ்ந்து சிரித்து “பெரியது… மிகப் பெரியது!” என்றது.

அன்னை தன் மைந்தனின் தலையிலிருந்த சிறிய சுழியில் சுட்டுவிரலை வைத்து சுழற்றிச் சிரித்து “ஆம், அது பாலியின் கதை. அவன் இந்திரனின் மைந்தன்” என்றது. மூர்த்தன் “அங்கே மரக்கிளைகளின் மேல் அமர்ந்து நாம் தொலைவில் இந்திரனின் மைந்தனை பார்த்தோமே! வில்லேந்தி பொருதிக்கொண்டிருந்தான்… வில்… பெரிய வில்!” என்றது. “ஆம், அவனும் இந்திரனின் மைந்தன் என்றுதான் சொல்கிறார்கள்” என்றது அன்னை. மூர்த்தன் “ஆனால் இவன் இவ்வளவு சிறியதாக இருக்கிறான். ஆற்றலற்றவனாக இருக்கிறான். நாமேகூட அவனை வென்றுவிடலாமென்று தோன்றுகிறது” என்றது.

தூமவர்ணி அன்புடன் நகைத்து “உன் அகவையில் அவ்வாறுதான் தோன்றும்” என்றது. மூர்த்தன் நினைவுகூர்ந்து “இன்னொரு குரங்கின் கதை! இது இன்னொரு குரங்கு!” என்று சொல்லி சிறிய சுட்டுவிரலை தலைக்குமேல் தூக்கி, பாசிமணி விழிகளை விரித்து உதடைக் குவித்தது. “முன்பொருநாள் தன் தமையனை ஒரு பெருங்குகைக்குள் பெரும்பாறையைப் புரட்டி வைத்து மூடியது. மிகப் பெரிய பாறை!” தூமவர்ணி “ஆம், அவன் தமையன் அரக்கன் ஒருவனுடன் பொருதியபடி அந்த குகைக்குள் நுழைந்தான். அரக்கன் தமையனை கொன்றிருப்பான் என்று எண்ணி அவ்வரக்கன் வெளியே வந்துவிடக்கூடாது என்று அக்குகையை மூடினான் இளையோன்” என்றது.

“ஒருவேளை தமையன் உயிரோடிருந்திருந்தால்?” என்று குட்டிக் குரங்கு கேட்டது. “அறிவிலி, தமையன் உயிரோடிருந்தால் ஒற்றைக்கையால் அந்தப் பாறையைத் தள்ளி வெளிவந்து விடமாட்டானா?” என்றது தூமவர்ணி. “அந்தப் பாறையை அரக்கன் தள்ளி விலக்க முடியாதா?” என்றது மூர்த்தன். “அரக்கனால் எப்படி அவ்வளவு பெரிய பாறையை தள்ளி விலக்க முடியும்?” என்றது அன்னை. “அன்னையே, அப்படியானால் அந்த அரக்கன் எப்படி தமையனை வெல்ல முடியும்?” என்று மூர்த்தன் கேட்டது. தூமவர்ணி உரக்க நகைத்து “நன்று, நீயே இனிமேல் கதைகளை புனையலாம்” என்றது.

குட்டிக் குரங்கு அருகே வந்து குரல் தாழ்த்தி “வேண்டுமென்றேதான் அந்தக் குகையை மூடினார் அல்லவா?” என்றது. “இருக்கலாம்” என்றது தூமவர்ணி. “வேண்டுமென்றேதான்” என்றது மூர்த்தன். “ஏன்?” என அன்னை கேட்டது. “அந்தக் குரங்கு தன் தமையனின் மனைவிமேல் மையல் கொண்டிருந்தது. அவள் பெயர் தாரை.” தூமவர்ணி திகைத்து “இதை யார் சொன்னது?” என்றது. “யாரும் சொல்லவில்லை, நானே எண்ணிச்சூழ்ந்தேன்.” அன்னை மைந்தனை சற்று நேரம் நோக்கிக்கொண்டிருந்தபின் “உனக்கு எப்படி தோன்றியது?” என்றது. “அன்னையே, நான் அந்தப் பாறையை மூடிய குரங்காக நின்று அதை பார்த்தேன்” என்றது மூர்த்தன். தூமவர்ணி “நீ மாபெரும் கதையாளன். உன் சொல் வாழும்” என்றது.

மூர்த்தன் சிணுங்கலாக “கதை சொல், அன்னையே” என்றது. தூமவர்ணி “தமையன் வெளியே வந்தாரல்லவா?” என்றது. “ஆம், வந்தார்” என்றது மூர்த்தன். “தமையனும் இளையோனும் போரிட்டுக்கொண்டார்கள்” என்றது தூமவர்ணி. “ஆம், பெரும்போர்! அது பெரும்போர்!” என்று சொல்லி மீண்டும் கிளைகளில் எம்பிக் குதிக்கத்தொடங்கியது மூர்த்தன். “அந்தப் பெரிய போரை நான் பார்த்தேன். அப்போது நான் மிக அருகே ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தேன். அவர்கள் பாறைகளை எடுத்து வீசிக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அறைந்துகொண்ட ஒலியில் அருகிலிருந்த மரங்களெல்லாம் நடுங்கின.”

தூமவர்ணி உடல் வலிப்புபோல விதிர்க்க அதன் ஒரு விழி இழுத்துக்கொண்டது. “அதன்பின் இளையவனை மூத்தோன் அறைந்து கொல்லப்போகும்போது… கொல்லப்போகும்போது…” மூர்த்தன் கதையை அப்படியே விட்டுவிட்டு பாய்ந்து தாயின் அருகே வந்து அதன் தோளிலேறிச் சுழன்று மடியிலமர்ந்து “அன்னையே, நான் பிறிதொருவனை கண்டேன். செவ்வண்ணக் குரங்கு. அவன் ஒரு மலை மேல் ஏறி நின்றான். நான் நான் என எண்ணி எண்ணி எண்ணி வீங்கி பேருருக்கொண்டான். அவன் தலை கதிரவனை முட்டுவதுபோல் எழுந்தது. அவன் எழுந்து பறந்து சென்றபோது நின்றிருந்த மலை சற்றே பின்னடைந்தது” என்றது.

“ஆம், அவன் பெயர் அனுமன். அஞ்சனையின் மைந்தன். நம் குடிக்கு முதல் தெய்வம்” என்றது தூமவர்ணி. “ஆம், அனுமன்” என்றபோது குட்டிக் குரங்கு மிகவும் மலர்ந்தது. திரும்பி அப்பால் நின்ற தன் தோழனை நோக்கி “அனுமனின் கதை! அனுமனின் கதை!” என்று கூச்சலிட்டது. அங்கிருந்த அத்தனை குட்டிக் குரங்குகளும் பாய்ந்து ஓடி அருகணைந்தன. “அனுமனின் கதை! அனுமனின் கதை!” என்று எல்லாக் குரங்குகளும் கூச்சலிட்டன. “சொல்லுங்கள்! அனுமனின் கதை! அனுமனின் கதை சொல்லுங்கள்” என்று அவை கூவின.

“அனுமனின் கதையை பலமுறை சொல்லியிருக்கிறேன்” என்று தூமவர்ணி சொன்னது. “அனுமனின் கதையை அறியாத குரங்குகள் எவரும் இந்தக் காட்டில் இல்லை.” புஷ்பகர்ணி “மறுபடியும் சொல்லுங்கள். இன்னும் பெரிய அனுமனின் கதையாக சொல்லுங்கள்” என்றது. குட்டிப் பெண்குரங்கான சம்விதை “அந்த அனுமனின் கதையை எழுதிய மானுடர் ஒருவர் இருந்தார்” என்றது. “ஏன் எழுதினார்?” என்றது புஷ்பகர்ணி. “எழுதினால்தான் மானுடர் அதை மறக்காமல் இருப்பார்கள்.” புஷ்பகர்ணி ஐயத்துடன் தலையசைத்து “எழுதிய அந்தச் சுவடி தொலைந்துவிட்டால்?” என்றது. “தொலையாமல் இருக்க அதை மீண்டும் மீண்டும் எழுதி வைப்பார்கள். ஆயிரம்முறை எழுதி வைப்பார்கள்.” “ஆயிரம் முறை எழுதினாலும் அதை மறந்துவிடுவார்களா?” என்று மூர்த்தன் கேட்டது.

தூமவர்ணி நகைத்து “அந்த அளவுக்கெல்லாம் நாம் மானுடரை புரிந்துகொள்ள முடியாது” என்றது. “சரி, அஞ்சனை மைந்தனின் கதையை எழுதியவரின் கதையை சொல்லுங்கள்” என்றது மூர்த்தன்.