இருட்கனி - 26
குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் கர்ணனின் அணிநிறை முழுதுடலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த சூதர்களில் ஐந்தாமவரான மடங்கர் தன் சிறுபறையை மீட்டி ஓங்கிய குரலில் களநிகழ்வுகளை புனைந்து உரைக்கத் தொடங்கினார். அவருடன் பிற சூதர்களும் இணைக்குரல் எடுத்து சேர்ந்துகொண்டனர். வண்டு முரல்வதுபோல் எழுந்த ஓசையை மிக அப்பால் நின்று சுப்ரதர் நோக்கிக்கொண்டிருந்தார். விழுந்து மடிந்த காட்டு யானைக்கு மேல் மணியீக்கள் பறந்து எழுப்பும் முரலலென அது அவருக்கு கேட்டது. விழிதிருப்பிக்கொண்டு அப்பால் இருளில் பந்தங்கள் எரிய விரிந்துகிடந்த கௌரவப் படையை பார்த்தபோது அவர் உள்ளம் கசப்பால் நிறைந்திருந்தது.
நெஞ்சில் பொருளிலா விம்மலொன்று எழ நடந்து மேலும் அகன்று பாதையின் விளிம்பை அடைந்து அங்கிருந்த ஏவலனிடம் “அங்கநாட்டு அரசியும் மைந்தனும் எதுவரை வந்துள்ளனர்?” என்றார். “இறுதிச்செய்தி அவர்கள் முதற்காவல்மாடத்தை அடைந்துவிட்டதை சொன்னது” என்றான் காவலர்தலைவன். சுப்ரதர் கைகளைக் கட்டியபடி விண்ணில் ஒவ்வொன்றாக முழுத்து எழத்தொடங்கியிருந்த விண்மீன்களைப் பார்த்தபடி நின்றார். அங்கே இருந்து மீளும்போது தவச்சாலையிலிருந்து வரும் முனிவர்போல் பிறிதொருவராக ஆகியிருப்போம் என்று தோன்றியது. அங்கநாட்டின் தெருக்களும் அந்தணர்மையங்களும் அயன்மை கொண்டிருக்கும். மனையாட்டியும் மைந்தரும்கூட எவரோ என்று ஆகியிருக்கக் கூடும்.
மடங்கர் சொன்னார்: இடியோசை மின்துடிப்புடன் நிறைந்திருந்த வானின் கீழே போரிட்ட படையின் உடல்வெப்பத்திலிருந்து மழையீரம் நீராவியென எழுந்து பரவியது. வியர்வையின் உப்புமணம் அதில் நிறைந்திருந்தது. மானுட உடலின் மணம் அது. காமத்தில் இனிதாவது. விழவுகளில் உளம் கிளரச் செய்வது. ஒவ்வாதவரிடம் உமட்டல் வரவழைப்பது. அக்கணத்தில் ஒருகணம் அது உளவிலக்கை ஏற்படுத்தி கொல்லத்தூண்டியது. மறுகணமே ஆரத்தழுவி உடல் சேர்க்க உந்தியது. குருதியின் மணம் ஆயினும் குருதியில் இருக்கும் எரிவீச்சம் அதிலில்லை. அதிலிருந்தது ஒரு கனிவு. குருதி அசைவிலாது நின்று மெல்லத் தெளிந்து மேலே ஊறி வந்தது போன்ற தூய்மை.
ஒவ்வொரு படைவீரரும் அங்கே கொல்வதனூடாக பிறிதொருவருடன் உறவாடினர். வீழ்வதனூடாக பிறருடன் கலந்தனர். வீழ்ந்தவர்கள் அக்கணம் வரை கொண்டிருந்த அனைத்து அடையாளங்களையும் துறந்து ஒருவரோடொருவர் தழுவி மண்பற்றிக் கிடந்தனர். அவர்கள் மேல் கால்களும் சகடங்களும் ஓடின. அவர்களது இறுதி மூச்சுக்கு மீதாக படைக்களத்தின் பூசலோசை நிறைந்திருந்தது. அதற்குமேல் மழை நின்று அசைந்தது. அதற்குள் அம்புகள் சீறிச்சென்றன. அப்பால் விண்ணிலிருந்து இமையா விழியர் அதை நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு சொல் உரைத்தபோது அது கீழிருப்போரில் ஓர் எண்ணமென எழுந்தது. அதற்கேற்ப போரின் நிலை மாறியது. முகில்நிரைகளின்மேல் அமர்ந்தபடி கந்தர்வர்கள் போரை நோக்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பூசலோசையை இசையெனக் கேட்டனர். அறிக, உரிய தொலைவு இருந்தால் எந்த ஓசையும் இனியதே!
தோழர்களே, கர்ணனின் அம்புகள் பட்டு விழுந்த பீமனையும் களத்தில் உளமுடைந்து நின்ற யுதிஷ்டிரனையும் படைவீரர்கள் பற்றி இழுத்து படைப்பின்னணிக்கு கொண்டுசென்றனர். சர்வதனும் சுதசோமனும் வந்து இரு கைகளையும் பற்றி இழுத்தபோது “விடுங்கள் என்னை! அகலுங்கள். அறிவிலிகளே! விலகுக!” என்று நரம்புகள் புடைக்கக் கூவி கை சுழற்றி இருவரையும் தூக்கி அப்பாலிட்டபின் ஓங்கி நிலத்தில் உமிழ்ந்து எடை மிக்க காலடிகளை வைத்து பின்னணிக்குச் சென்றான் பீமன். செல்லும் ஒவ்வொரு அடிக்கும் உள்ளத்தின் ஆற்றல் வார்ந்து ஒழிய தள்ளாடி முழந்தாள் மடிந்து நிலத்தில் விழுந்தான்.
சற்று அப்பால் யுதிஷ்டிரன் தன் இரு மைந்தர்களாலும் இழுத்து பின்னுக்கு கொண்டுசெல்லப்பட்டார். பிரதிவிந்தியன் கையசைவால் பாண்டவ மணிமுடியை எடுத்துவர ஆணையிட அதை கண்டுவிட்ட யுதிஷ்டிரன் சீற்றத்துடன் திரும்பி “தொடாதே அதை! அது அங்கு கிடக்கட்டும். ஆம், அங்கேயே கிடக்கும் அது. அவ்விழிமகன் அதை எடுத்துச் சென்று தன் தோழனின் தலையில் சூட்டட்டும். இரு பேடிகளின் தமையன் ஆனேன் என உலகு அறியட்டும். அப்பேடிகள் வேண்டுமென்றால் அதை எடுத்து சூடிக்கொள்ளட்டும்” என்று கூவினார். மூச்சிரைக்க “இனி அதை நான் சூட வேண்டுமென்றால் அவன் குருதியால் அதை கழுவவேண்டும். அவன் குருதி நனையாமல் அதை இனி நான் தொடமாட்டேன். தெய்வங்கள் மேல் ஆணை! மூதாதையர் மேல் ஆணை! இனி அவன் குருதி நனையாது பாண்டவர்களுக்கு மணிமுடி இல்லை. இது என்னுள் உறையும் இருள் தெய்வங்கள்மேல் தொட்டு நான் இடும் ஆணை!” என்று குழறியபின் தளர்ந்து நிலத்தில் அமர்ந்தார்.
அவரை பிரதிவிந்தியனும் யௌதேயனும் தூக்கி கொண்டுசென்றார்கள். அவர் விம்மியபடி அதிர்ந்து பின்னர் மெல்ல தளர்ந்தார். அவருடைய கைகள் தரையில் இழுபட்டபடியே சென்றன. அவர் உடலில் ஓர் வலிப்பு உருவானது. மருத்துவர் அவரை நோக்கி ஓடிவந்து சூழ்ந்தனர். ஒருவர் மரவுரியை விரிக்க அதில் அவரை கிடத்தினர். அவரை தூக்கிக்கொண்டு செல்ல யௌதேயன் “தெய்வங்களே!” என முனகியபடி அமர்ந்தான். பிரதிவிந்தியன் அந்த மணிமுடியை எடுத்துக்கொண்டுவரும்படி ஏவலருக்கு கையசைவால் ஆணையிட்டான். ஓர் ஏவலன் சென்று அதை எடுத்துவந்தான். அது அம்புகள் பட்டு உருக்குலைந்திருந்தது. ஓர் ஊன்துண்டுபோல அவ்வீரனின் கையில் இருந்தது. பிரதிவிந்தியன் அதை வாங்கி நோக்கியபின் தன் கையில் வைத்துக்கொண்டான்.
பீமனின் அருகே வந்து குனிந்த சுதசோமன் “தந்தையே” என்றான். தலைதூக்காமலேயே ஓங்கி அவனை அறைந்தான் பீமன். வெடிப்போசை எழ நிலை தடுமாறிச் சரிந்து மண்ணில் விழுந்து எழுந்து அகன்றான் சுதசோமன். மறுபக்கம் நின்ற சர்வதன் உறுதியான காலடிகளுடன் பீமனை அணுகி “தந்தையே, எழுக!” என்றான். குருதியென சிவந்த விழிகளால் நிமிர்ந்து நோக்கி “என்ன சொல்லப்போகிறாய்? ஆறுதல் உரைகளா? ஊக்கச்சொற்களா? யாதவரின் அந்நூலை திரும்பக்கூறு. இவையனைத்தையும் முன்கண்டு யாக்கப்பட்டது அது…” என்றான் பீமன். “ஆம், ஆறுதல்சொற்கள்தான்” என்றான் சர்வதன். “தாங்கள் வேண்டுமானால் என்னையும் அறையலாம். நான் தடுக்கப்போவதில்லை.”
அந்தத் துணிவு பீமனை மெல்ல தளரச்செய்தது. “சொல்” என்றான். “அவரிடம் தாங்கள் தோற்றதைப்பற்றி வருந்துகிறீர்கள் என்றால் மிதமிஞ்சிய ஆணவம் கொண்டிருக்கிறீர்கள் என்றே பொருள். வில்லுடன் மண்ணுக்கு வந்த இந்திரனின் மைந்தனே அஞ்சும் மாவீரனை இத்தனை பொழுது களத்தில் எதிர்த்து நின்றிருக்கிறீர்கள். இதற்கப்பால் இக்களத்தில் நீங்கள் அடைய விரும்புவதுதான் என்ன? அவ்வாறு விரும்பும் அளவுக்கு வீங்கிய வெற்று ஆணவம் கொண்டவரா நீங்கள்?” என்றான் சர்வதன். பீமன் விழிதழைத்து தாழ்ந்த குரலில் “நான் தோல்விக்காக துயருறவில்லை” என்றான். “பிறகு எதற்காக?” என்று சர்வதன் கேட்டான். “நான் தோல்விக்காக துயருறவில்லை” என்று மேலும் உரத்த குரலில் பீமன் சொன்னான். “நான் துயருறுவது பிறிதொன்றுக்காக.”
சுதசோமன் எழுந்து அருகே வந்து “அதை என்னால் உணரமுடிகிறது, தந்தையே” என்றான். “ஏனெனில் நானும் நீங்கள்தான்.” பீமன் அவனை நிமிர்ந்து நோக்க சுதசோமன் “அங்கர் உங்களுக்கு அளித்த கொடை உங்கள் உள்ளத்தை சிறுமைகொள்ளச் செய்கிறது. இதுநாள் வரை நீங்கள் எதையும் எவரிடமும் பெற்றிருக்கவில்லை. இன்று விழியிழந்த இரவலனுக்கு ஒற்றை நாணயத்தை சுண்டி எறிவதுபோல் உங்களுக்கு உயிரை அளித்திருக்கிறார் அவர். அவ்வுயிரை உடலில் சூடி நின்றிருக்க கூசுகிறீர்கள் அல்லவா?” என்றான். இரு மைந்தரையும் மாறி மாறி நோக்கியபின் பீமன் தாடை இறுகி அசைய பற்களை கடித்தான். சர்வதன் “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன். அக்களத்தில் தாங்கள் அடைந்த சிறுமையை ஒவ்வொரு தசையசைவிலும் கண்டேன். அது பெற்றுக்கொள்கையில் கைதாழ்பவனின் தன்னிழிவு” என்றான்.
“ஆம்” என்றபின் பீமன் தன் தலையை கைகளில் தாங்கி உடல் வளைத்து குனிந்தான். “புழுவினும் கீழானவனாக என்னை ஆக்கினான். என் தலைமேல் நடந்து சென்றான். இனி ஆணென இங்கு நிமிர்ந்து நின்றிருப்பதில் என்ன பொருள்?” சர்வதன் “எனில் உங்கள் கடமையை துறக்கவிருக்கிறீர்களா? போர்முகம் நின்று இறுதித்துளிக் குருதி வரை சமராடுவதல்லவா உங்கள் தன்னறம்?” என்றான். “என்னால் இனி படைக்கலம் எடுக்க முடியாதென்று தோன்றுகிறது. ஓர் உயிரை இனி என்னால் கொல்ல இயலுமா என்றே ஐயம்கொள்கிறேன்” என்றான் பீமன். “இல்லை, என்னால் இயலாது. நான் முற்றாக பின்னடைந்துவிட்டேன். நான் தொடங்கிய இடத்திற்கே மீண்டுவிட்டேன்.”
“நான் வீரன் எனும் ஆணவத்தால் கொல்பவனல்ல. வெற்றிக்காக கொல்பவனுமல்ல. இப்புவியிலிருந்து எதையும் எடுத்துக்கொள்வதற்காக இங்கு போரிட வரவில்லை. இது என் கடன் என்பதற்காக மட்டுமே வந்தேன். எனை ஆளும் விசைகளுக்கு என்னை முற்றளித்து இங்கு சமராடுகிறேன்” என்று பீமன் சொன்னான். தன் எண்ணங்களை உரிய சொற்களாக மாற்றியதும் அவன் மெல்ல தளரத்தொடங்கினான். “ஒவ்வொரு முறை கதை சுழற்றி ஒரு தலையை அறைந்து உடைக்கையிலும் ஒருகணம்கூட நான் அச்செயலை திரும்பி எண்ணி நோக்குவதில்லை. எந்நிலையிலும் என் கையால் கொல்லப்பட்டவர்களுக்காக இரங்குவதுமில்லை. ஏனெனில் அவர்களால் கொல்லப்படுவதற்கு என் உயிரையும் கொண்டு வைத்திருக்கிறேன். என் உயிரை காத்துக்கொள்வதற்கும் இங்கிருந்து மீள்வதற்கும் ஒருகணமேனும் விழைந்தேனெனில் மட்டுமே நான் அவர்களுக்காக இரங்கவும் பிழையுணர்வு கொள்ளவும் வேண்டும்.”
“என்னை ஊழின் துளியென உணர்கிறேன், அவர்களையும் அவ்வாறே” என்றான் பீமன். “தந்தையே, இன்று களத்தில் அங்கர் முன் நின்றிருக்கையில் உங்கள் உயிருக்காக அஞ்சினீர்களா?” என்று சர்வதன் கேட்டான். பீமன் விழி தூக்கி அவனை ஓரிரு கணங்கள் நோக்கியபின் “நீயே கூறுக, உன் தந்தையை நீ எவ்வாறு அறிவாய் என்று நானும் உணர்கிறேன்” என்றான். “நீங்கள் ஒரு கணமும் அஞ்சவில்லை” என்று சர்வதன் சொன்னான். “உண்மையில் நீங்கள் அக்கணத்தில் சற்று அஞ்சக்கூடும் என்றுதான் உள்ளாழத்தில் நீங்களே எதிர்பார்த்தீர்கள். ஏன் ஒரு துளியும் அச்சம் எழவில்லை என்று எண்ணி வியந்தீர்கள்” என்றான் சர்வதன். பீமன் “ஆம்” என்றான்.
“ஏனெனில் அவர் உங்களை கொல்லமாட்டார் என்று அறிந்திருந்தீர்கள். அதை உங்கள் ஆழம் எப்போதும் உறுதியுடன் உணர்ந்திருந்தது என்று அறிந்திருந்தீர்கள். அது ஏன் என்றுதான் அப்போது வியந்தீர்கள். அந்த ஓரிரு கணங்களுக்குள் நீங்களே அஞ்சும் நெடுந்தொலைவுக்கு சென்று மீண்டீர்கள்” என்று சர்வதன் சொன்னான். தலைதாழ்த்தி “ஆம்” என்றான் பீமன். பின்னர் மீண்டும் விழி தூக்கி “இப்போது கூறுக. ஏன் அவன் என்னை கொல்லவில்லை? அவன் என்னை கொல்லமாட்டான் என்று ஏன் அறிந்திருந்தேன்?” என்றான். தன் இடக்கையை நீட்டி சர்வதனின் கையை பற்றிக்கொண்டு “நீ இக்கணம் என் மைந்தன் என்று நின்று அங்கிருந்து பேசவில்லை. என் ஆழம் என்று இங்கு என் உடலுக்குள்ளிருந்து பேசுகிறாய்” என்றான்.
சர்வதன் குனிந்து நோக்கி “தந்தையே, அவ்வாறு அங்கரை அறிந்திருந்தமையால்தான் நீங்கள் ஆசிரியர் முன்னிலையிலும் ஆடுகளத்திலும் அவைநிறைவிலும் அவரை சிறுமை செய்தீர்கள். அல்ல எனில் உங்களிடமிருந்து அச்சொற்கள் எழுந்திருக்காது. நீங்கள் எந்நிலையிலும் பிறப்பு சொல்லி எவரையும் இழிவு செய்ததாக நான் அறிந்ததில்லை. உங்களை ஷத்ரியர் என நீங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை. அரக்கனின் தந்தையாக, வால்மானுடரின் குருதிகொண்டவராகவே கருதுகிறீர்கள்” என்றான். விழிசுருக்கி பீமன் அவனை நோக்கினான். சர்வதன் “நீங்கள் அறிந்திருந்தீர்கள், உங்கள் சொற்கள் அவரை எவ்வகையிலும் ஆழ்துயருக்கு கொண்டுசெல்லாதென்று. அவைச்சிறுமையை அவர் அடைவார், அதன் பொருட்டு கூசி தலைகுனிந்து நிற்பார், ஆழுள்ளத்தில் சினம் கொள்வார், பழிநிகர்க் குருதிக்கென எழுவார். ஆனால் உங்கள் சொற்களிலிருந்து ஒருபோதும் துயரோ வஞ்சமோ கொள்ளமாட்டார். முதல் நாள் முதற்சொல் எடுத்த கணம் முதல் அதை நீங்கள் அறிவீர்கள்” என்றான்.
பீமனின் உடல் நடுங்கத்தொடங்கியது. “ஆகவேதான் நீங்கள் அது குறித்து குற்றவுணர்வை அடையவேயில்லை. தந்தையே, முதல் இழிசொல்லை எடுத்த கணமே நீங்கள் அவர் விழிகளை சந்தித்திருப்பீர்கள். அவற்றிலிருந்து நீங்கள் உணர்ந்ததென்ன? அந்த உறுதிதான் இக்களத்தில் நீங்கள் அறிந்தது” என்றான் சர்வதன். பீமன் மேலும் நடுங்கிக்கொண்டிருந்தான். சர்வதன் “தந்தையே, அவர் தங்களுக்கு அளித்த கொடை இவ்வுயிர். அதை இனி தங்களால் மறுக்க இயலாது” என்றான். பீமன் நோக்கு தழைத்தான். அவன் தசைகள் விம்மி அசைந்தன. “ஆயின், இந்த உயிர்க்கொடை அவர் அளித்த சிறிய கொடையென்று உணர்க! அதை விடப் பெரிய கொடை உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.”
பீமன் நிமிர்ந்து நோக்கினான். “உங்களுள் உறைந்த நுண்ணிய ஆணவம் ஒன்றை உடைத்துச் சென்றிருக்கிறார் அங்கர்” என்றான் சர்வதன். பீமன் சர்வதனை பார்த்தபோது ஒரு கணத்தில் முதுமைகொண்டவன் போலிருந்தான். “தந்தையே, நினைவுறுகிறீர்களா, முன்பு முதிரா இளமையில் நீங்கள் அஸ்தினபுரியின் அரசருக்கு அளித்த உயிர்க்கொடையை? நாங்கள் அதை கதையில்தான் கேட்டிருக்கிறோம். உங்கள் வேட்டைக்குடிலுக்கு வந்து அவரை கவ்விக்கொண்ட கரடியிடமிருந்து அவர் உயிரை காத்தீர்கள்.” பீமன் “ஆம்” என்றான். சர்வதன் கூற வருவதை முன்னரே அவன் உணர்ந்துவிட்டிருந்தான்.
“நாங்களிருவரும் உங்கள் வாழ்க்கையை மீளமீள நடித்துக்கொண்டிருப்பவர்கள். உங்கள் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். நீங்கள் ஒருகணம் வாழ்ந்த அனைத்து இடங்களிலும் நூறு வருடம் வாழ்ந்தவர்கள்” என்று சுதசோமன் சொன்னான். “அன்று நீங்கள் உணர்ந்ததென்ன என்று கண்முன் மலையை கதிரொளியில் பார்ப்பதுபோல் அறிகிறேன். நீங்கள் அகத்துள் தருக்கினீர்கள். இதோ என் கொடை என்று எண்ணினீர்கள்.” பீமன் அமைதியிழந்து அசைய “அவரை நீங்கள் வெல்ல விழைந்தீர்கள். அத்தருணத்தில் வென்றுவிட்டதாகக் கருதினீர்கள்” என்று சுதசோமன் சொன்னான். “இன்று நாம் எதை சொல்லமுடியும்?” என பீமன் முனகினான்.
“நீங்கள் அறிவீர்கள், உங்களுக்கு நிகரான தோள்வல்லமையும் உங்களுக்கு மேலான பேரளியும் கொண்டவர் அவர் என்று. மும்முடி சூடி பாரதவர்ஷத்தை ஆளும் பிறவித்தகுதி கொண்டவர் இப்புவியில் இன்று இருவரே. அங்கர் இல்லையெனில் அஸ்தினபுரியின் அரசர்” என்றான் சுதசோமன்.
பீமன் சற்று சினம்கொண்டு “என்ன சொல்கிறாய்?” என்றான். “இங்கு படைக்கலம் ஏந்தி பாண்டவர் தரப்பிலிருந்து போரிடும் ஒவ்வொருவரும் அறிந்த ஒன்றையே” என்று சுதசோமன் சொன்னான். “பொய்ச்சினம் காட்டி சொற்களை திருப்பவேண்டாம், தந்தையே. நீங்கள் அஸ்தினபுரியின் அரசரின் அகவிரிவை ஒவ்வொரு கணமும் உணர்ந்துகொண்டிருந்தீர்கள். அவர் உங்கள் மேல் காட்டிய பேரன்பினால் உங்களையே மீண்டும் மீண்டும் வென்று செல்வதைக் கண்டு உளம் உலைந்தீர்கள். அவரைக் கடந்து செல்ல உங்களுக்கிருந்த வழி உங்கள் தோள்வல்லமை ஒன்றே. அதற்கென தருணம் வந்தபோது அவ்வாறு வெளிப்பட்டீர்கள்.”
“உங்கள் உடலில் சொற்களில் விழிகளில் வெளிப்படவில்லையெனினும் தெய்வங்கள் அறியும் பாதை ஒன்றினூடாக உங்கள் எண்ணம் அவரை சென்றடைந்தது. இன்று நீங்கள் அடையும் இதே சிறுமையை ஏழுமடங்கு அன்று அவர் அடைந்தார். அங்கு தொடங்கியது இந்தப் போர்” என்றான் சுதசோமன். பீமன் “இத்தனை கடந்துசென்று நான் எண்ணுவதில்லை. இத்தனை எண்ணினால் ஒவ்வொன்றும் நாம் எண்ணியிராப் பொருள் கொள்கின்றன. பொருளின்மை வரை சென்று நின்றுவிடுகின்றன” என்றான். “இதை நீங்கள் உணரவேண்டும். இத்தருணத்தில் நீங்கள் அதை முழுதுணர்வதன் மெய்மையே உங்களுக்கு அங்கர் அளித்த கொடை” என்று சுதசோமன் சொன்னான். “பெற்றுக்கொள்வதின் சிறுமை என்ன என்று அவர் காட்டினார். பிறரைவிட விரிந்தெழுவதனூடாக அடையும் ஆணவத்தால் அல்லவா நீங்கள் இத்தனை நாள் இங்கு வாழ்ந்தீர்கள்?”
“ஆம்” என்று பெருமூச்சின் ஒலியுடன் சொன்ன பீமன் மீண்டும் ஏதோ சொல்ல முயன்று கையசைத்து தலை தாழ்த்தி அதை ஒழிந்தான். சர்வதன் “தந்தையே, மூத்தவர் கூறியதற்கப்பால் ஒன்றும் நான் சொல்வதற்கில்லை. இக்களத்தில் உங்களுக்கு உங்கள் குடிமூத்தோர் ஒரு பேரறிவை வழங்கிச்சென்றிருக்கிறார் என்று உணருங்கள். இதில் சிறுமைகொள்ள ஏதுமில்லை. பொன்னோ நிலமோ பெறுவதில் சிறுமையுண்டு. அறிவைப் பெறுவது எந்நிலையிலும் பெருமையளிப்பதே” என்றான். பீமன் பெருமூச்சுகளுடன் மீண்டு வந்துகொண்டிருந்தான். இருவரும் அவனை நோக்கியபடி நின்றனர்.
பீமன் “ஆம்” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டபோது “உங்களை களத்தில் வெற்றுக் கையுடன் நிறுத்தி மீள்கையில் நீங்கள் இறுதியாக அவர் விழிகளை பார்த்தீர்களல்லவா?” என்றான் சர்வதன். “ஆம்” என்றான் பீமன். “அவ்வாறு நோக்காதொழிய எவராலும் இயலாது” என்றான் சர்வதன். “கூறுக, அவ்விழிகளில் இருந்தது வெற்றியின் மிதப்பா? உங்களுக்கு மேலாக தான் விரிந்தெழுந்ததன் ஆணவமா?” பீமன் “தெரியவில்லை. அவ்விழிகளை இதோ இந்தக் கூழாங்கல்போல் இத்தனை பருவடிவாக, இத்தனை அருகே என காண்கிறேன். அவற்றின் பொருள் எனக்கு புரியவில்லை” என்றான். “உங்களால் அவற்றை மதிப்பிட இயலாது. வைரங்களை மதிப்பிடுவது பெருவணிகர்களால் மட்டுமே இயலும். அவர்கள் வைரங்களன்றி பிறிதெதையும் காணாத கண் கொண்டிருப்பார்கள்” என்று சர்வதன் சொன்னான். “ஒப்பிட்டு நோக்குங்கள். அந்த விழிகளை இதற்கு முன் எவ்வாறு எங்ஙனம் பார்த்திருக்கிறீர்கள்? எவரிடம்?”
பீமன் “அறியேன் ஆனால் நான் களத்தில் தளர்ந்து விழுகையில் ஒருகணம் மூத்த தந்தை திருதராஷ்டிரரின் நோக்கு அது என்று உணர்ந்தேன்” என்றான். சர்வதன் புன்னகைத்து “அவர் உங்கள் கனவுகளில் எப்போதும் நோக்கும் விழிகளுடன்தான் வருகிறார்” என்றான். “ஆம், இனிய கனிந்த நோக்குடன் மட்டுமே அவரை நான் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் அதனூடாக அவருள் நோக்கியே உரையாடியிருக்கிறேன்” என்றான் பீமன். “எங்கள் கனவுகளிலும் அவர் விழிகளுடன்தான் வருகிறார்” என்றான் சர்வதன். “எண்ணுக, பிறிதெங்கும் அவ்விழிகளை நீங்கள் கண்டதில்லையா?”
“பிறிது ஓரிடத்தில்” என்று பீமன் சொன்னான். “இப்போது நீ இதை கேட்கையில் நான் உணர்கிறேன். நான் இளமையிலேயே பெருந்தோள் கொண்டவனாக இருந்தேன். என் தோள் குறித்து பெருமிதம் கொண்டிருந்தேன். முன்பு சதசிருங்கத்தின் ஏரிக்கரையில் பாறைகளைத் தூக்கி எறிந்து பிடித்து உடல் பயின்றுகொண்டிருக்கையில் சேற்றுப் பரப்பினூடாக ஒருவர் ஏறிவருவதை கண்டேன். மேலெழுந்த பாறை என் தோளில் விழுந்து என் உடலை அதிரச்செய்தது. அத்தனை தொலைவிலேயே அச்சமூட்டும் பேருருக்கொண்டவராக இருந்தார். அருகணைந்து விழிமலைத்து நின்ற என் கைகளைப்பற்றி சற்றே முறுக்கி தூக்கி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டார். நான் அவர் அருகே குழவி எனத் தோன்றினேன்.”
“என்னை இரு தோள்களிலும் பற்றி மேலே தூக்கி குழவிபோல வீசிப்பிடித்து உரக்க நகைத்து இங்கு காட்டில் நல்லுணவில்லையா உனக்கு, உடல் மெலிந்திருக்கிறாயே என்றார். என்னை ஒருவர் உடல் மெலிந்திருக்கிறாய் என்று சொல்லக்கூடுமென்று அன்றுதான் உணர்ந்தேன். என்னுடன் அவர் முனிவர்களைக்காணவந்தார். அவர் யாரென்று அன்று அன்னையிடம் கேட்டேன். அவர்தான் பலாஹாஸ்வ மாமுனிவர் என்று அன்னை சொன்னார். ஒருநாள் எங்களுடன் சதசிருங்கத்தில் இருந்தபின் அவர் மேலும் வடக்காக கிளம்பிச்சென்றார். அந்த முதல் தொடுகைக்குப்பின் அவர் என்னை தொடவில்லை. கிளம்புவதற்குமுன் என்னை நோக்காமல் வேறெங்கோ நோக்கி தோளின் ஆற்றல் பிறிதொரு ஆற்றலின் வெளிப்பாடு மட்டுமே. இதை ஒவ்வொரு கணமும் சொல்லிக்கொண்டிரு என்றார்.”
“நான் அன்று அச்சொற்களை செவிகொள்ளவில்லை. அவர் என்னை பார்ப்பார் என்றும் இனிய சொல் எதையேனும் உரைப்பார் என்றும் எதிர்பார்த்தேன். அவர் திரும்பாமல் நடந்து அப்பால் சென்று மறைந்தார். பிறிதொரு முறையும் அவரை நான் பார்த்ததில்லை. ஆனால் அந்த நோக்கை இன்றும் நினைவுகூர்கிறேன். அச்சொற்கள் என்னுள் இருந்துகொண்டே இருக்கின்றன. பலநூறு முறை அவர் விழிகள் என் கனவில் வந்திருக்கின்றன. இன்று அங்கனிடம் நான் கண்டது அவ்விழிகளை எனத் தோன்றுகிறது” என்றான் பீமன்.
“பிறகென்ன? இக்கொடை உங்களை இப்போது சிறுமை செய்கிறதா என்ன? முலைப்பால் குழவியை என அது உங்களை வந்தடைந்திருக்கிறது. பெறற்கரிய ஒன்றை பெற்று பொலிவுற்றிருக்கிறீர்கள், தந்தையே. எண்ணுக, பிறிதொரு நாள் நீங்கள் தனிமையில் உங்கள் உடலை நிறைத்திருக்கும் அமுதென அவர் அளித்த இவ்வுயிரை உணர்வீர்கள்! அன்று நெஞ்சில் கைசேர்த்து விழிநீர்விட்டு அவருக்கென ஏங்குவீர்கள். இந்நாள் உங்கள் வாழ்வு நிறைவுற்ற தருணங்களில் ஒன்றென்று அறிக!” என்றான் சர்வதன்.
உடல் நடுக்குற மூச்சு திணற பீமன் நோக்கிக்கொண்டிருந்தான். சுதசோமன் “போருக்கென எழுக… இந்நாளில் நாம் இயற்றவேண்டியவை பல” என்றான். “ஆம், போர்புரிந்தாக வேண்டும். அது என் கடன்” என்று பீமன் சொன்னான். “உங்களுக்காக மட்டுமல்ல. இப்போர் நீங்கள் அறியாத வேறு பலவற்றுக்காக” என்று சர்வதன் சொன்னான். “மீண்டும் ஒருவேளை இக்களத்திலேயே நீங்கள் அவரை சந்திக்கக்கூடும். அப்போதும் ஒருகணம் உங்கள் வில் தாழ வேண்டியதில்லை. தாழ்வதை அவர் விரும்பப்போவதும் இல்லை. இந்தப் பொற்கணத்திலிருந்து மேலும் ஒளியும் ஆற்றலும் கொண்டவராக எழுவதை அவர் விரும்புவார். எழுக!” என்றான் சர்வதன்.
பீமன் எழுந்து தன் இரு கைகளையும் விரித்தான். விழி கனிந்து நகைத்தபடி “வருக!” என்றான். சர்வதன் புன்னகைத்தபடி அருகணைந்தான். அவனை எட்டிப்பற்றி தன் தோளுடன் சேர்த்துக்கொண்டு “இத்தகைய தருணங்களில்தான் தந்தையர் தெய்வங்களால் வாழ்த்தப்படுவதாக உணர்கிறார்கள். மைந்தரால் முற்றிலும் புரிந்துகொள்ளப்படும் தந்தையர்போல் நல்லூழ் கொண்டவர் எவருமில்லை. மானுடருக்கு தெய்வங்கள் அளிக்கும் மிகப்பெரும் கொடை என்பது அதுவே. என்னை உங்கள் உடல்களில் முற்றிலும் பகிர்ந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றபின் உரக்க நகைத்து “விந்தையானதோர் எண்ணம்தான் இது. உயிர் வாழ்க்கை போதுமென்று தோன்றும் தருணங்களில்தான் நாம் வாழ்வை பொருள்கொண்டதாக உணர்கிறோம்” என்றான்.
“தங்கள் மொழியில் இத்தகைய சொற்கள் எழுவது மகிழ்வளிக்கிறது. இன்னும் இதைப்போன்ற சில சொற்களினூடாக தாங்கள் தங்கள் மூத்தவரை நெருங்கிவிடக்கூடும்” என்று சர்வதன் சொன்னான். சிரிக்காமல் அவன் சொன்னதனால் திகைத்துப்பார்த்த பீமன் அவன் விழிகளிலிருந்த சிரிப்பைக் கண்டு “அறிவிலி!” என்று சொல்லி நகைத்தபடி அவன் தோளை ஓங்கி அறைந்தான். எளிதாக அதை ஒழிந்து கையால் மறு அடியைத் தடுத்து சர்வதன் நகைக்க சுதசோமன் உடன் இணைந்துகொண்டான்.