இருட்கனி - 12

சல்யரின் குடிலுக்கு வெளியே துச்சாதனன் பொறுமையிழந்து காத்து நின்றிருந்தான். அவன் வந்ததுமே காவலன் உள்ளே சென்று அவரிடம் துச்சாதனனின் வரவை அறிவித்திருந்தான். உடனே உள்ளே செல்ல எண்ணியிருந்தமையால் சில கணங்களே நீளும் பொழுது எனத் தோன்றின. அவர் உடைமாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் பின்னர் அவர் துயில் எழுந்துகொண்டிருக்கிறார் போலும் என்றும் எண்ணி எண்ணி காத்திருந்தமையால் அவன் உணர்ந்த காலம் மிக நீண்டு சென்றது. எக்கணமும் கதவுக்கு அப்பாலிருந்து சல்யர் தன்னை அழைப்பாரென்று எதிர்பார்த்து அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதன் அசைவின்மையும் ஓசையின்மையும் நேரடியான சிறுமைப்படுத்தலாகத் தோன்ற முழு விசையுடன் அதை உடைத்து உள்ளே செல்வதாக கற்பனை செய்தான்.

பலமுறை அவ்வாறு நுழைந்தபின் சலிப்புற்று பெருமூச்சுவிட்டான். கைகளை ஒன்றுடன் ஒன்று இறுக்கிக்கொண்டு தன் பெரிய உடலை குட்டியானைபோல் அசைத்தபடி விழிகளை விலக்கி அப்பால் தெரிந்த பலகை நிரத்த படைப்பாதையையும் அந்திப் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்த படையணிகளையும் அடுமனையாளர்களின் விளக்குகள் அவற்றினூடாக ஒழுகிக்கொண்டிருந்ததையும் ஊடாக காவலர்களின் புரவிகள் சீரான குளம்படித்தாளத்துடன் சென்று கொண்டிருந்ததையும் நோக்கினான். காவல்மாடத்தில் நின்ற வீரன் தன்னை கூர்ந்து பார்ப்பதை நோக்கி விழிவிலக்கிக்கொண்டான். அவன் காத்திருப்பதை அவனும் உணர்கிறான். அது நாளை செய்தியாக ஆகும். அதன்பொருட்டே சல்யர் அதை செய்கிறார்.

அவனுக்குள் சீற்றம் எழுந்து பெருகத்தொடங்கியது. அந்த மதிப்பின்மையை அரசகுடியினர் எவரும் அவனிடம் காட்டுவதில்லை. அவனை துரியோதனனின் மாற்றுருவாகக் காண்பதே அனைவருக்கும் வழக்கம். அவன் தோன்றியதுமே துரோணர்கூட மெல்ல தலைவணங்குவதுபோல் ஓர் அசைவை காட்டுவார். பீஷ்மர் அரசரிடம் சொல்லவேண்டியதை அவனிடம் சொல்வதுண்டு. அவன் உடலசைவுகள் அனைத்தும் துரியோதனனுக்குரியவை. கர்ணன் ஒருமுறை “உன் நிழல் அரசரைப்போலவே இருக்கிறது, இளையோனே” என்றான். துச்சாதனன் சிரித்தபடி “நான் அவருடைய நிழல்” என்றான். கர்ணன் “நீங்கள் நிழலை பரிமாறிக்கொள்கிறீர்கள் போலும்” என்று உரக்கச் சிரித்தான்.

ஆனால் சல்யர் அத்தகைய நுண்ணுணர்வுகள் கொண்டவரல்ல என்பதையும், அவரது உள்ளம் செயல்படும் முறை முற்றிலும் பிறிதொன்று என்பதையும் அவன் அறிந்திருந்தான். சினம் எழுகையில் எவரிடமும் கடும் சொற்களை நேரடியாக முகம்நோக்கிச் சொல்வதும், சிறு செய்திகளுக்கே மிகையாக கொதித்தெழுவதும், ஒவ்வொருவரும் தன்னையும் தன் குலத்தையும் சிறுமைசெய்ய நுட்பமாக முயன்றுகொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்வதும், சொற்களை தனக்குகந்த முறையில் பொருள் கொண்டு அதிலிருந்து அத்தருணத்திற்குரிய மெய்ப்பாட்டை பயிரிட்டு எடுத்துக்கொள்வதும், அதன்பொருட்டு ஊடி பலநாட்கள் முகம் திருப்பிக்கொண்டு செல்வதும், ஒரு சிறு இடரையோ உளக்கசப்பையோ எதிர்ப்படும் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொள்வதும், தன் குரலுக்கு சற்று செவிசாய்க்காதவர்கூட தன்னை புறக்கணிப்பதாக எண்ணுவதும் அவரது இயல்பு.

துரியோதனனின் அரச அவையில் எப்போதும் தன் உடல்நிலை குறித்த உளக்குறையுடன் பேச்சை தொடங்குபவர் அவர் மட்டுமே. நிகர்நிலம் நோயும், ஒவ்வா காற்றுநிலையும் கொண்டது என அவர் சொன்னார். “இங்கே கதிரோன் மும்மடங்கு வெம்மைகொண்டிருக்கிறான். ஏனென்றால் இங்கு நோய் நிறைந்திருப்பதை அவன் அறிவான். புழுதி நிறைந்த இடத்தில் துடைப்பம் விசையுடன் விழுகிறது” என்பது அவர் அடிக்கடி சொல்வது. “என் மூட்டுகளில் வீக்கம் இருக்கிறது. இரவில் என்னால் துயில்கொள்ளவே முடியவில்லை. இங்கே புழுதியைப் போலவே ஓசையும் காற்றை நிறைத்துள்ளது. வெளிக்காற்று அனல் கொண்டிருக்கிறது. அறைகளுக்குள் ஆவி நிறைந்துள்ளது” என்று ஒவ்வொரு நாளும் சொல்வார். “எங்கள் முன்னோர் நிகர்நிலத்து மாந்தரை பழிக்காதே, அங்கு சென்றால் தெய்வங்களும் பொறுமையிழந்து சினம் சூடிக்கொள்ளும். சூதும் வஞ்சமும் கொண்டு உகிரும் பல்லும் பெருக்கி எழும் என்பார்” என்று சொல்லி வெடித்துச் சிரிப்பார். உடனிருப்பவரின் முகநிலை மாற்றங்களை அவர் கருத்தில் கொள்வதேயில்லை.

பொதுவாகவே அவர் தன்னிடம் பிறர் சொல்வதை செவிகொள்வதே இல்லை. பிறர் பேசத்தொடங்கியதுமே அவருடைய விழிகள் அலைபாயத் தொடங்கும். கைநகங்களை பார்ப்பார். அப்பால் இருக்கும் எதையேனும் நோக்குவதும் தலையசைப்பதும் பிறரிடம் கையோ முகமோ கொண்டு பேசத்தொடங்குவதும் வழக்கம். ஆனால் அவர் பிறரிடம் நெடுநேரம் பேசுவார். கேட்பவர் தான் சொல்வதை புரிந்துகொள்ள ஆற்றலற்றவர் என்னும் எண்ணம் கொண்டவராக “நான் சொல்வது புரிகிறதா?” என்றும் “நன்கு எண்ணிப்பார்க்கவேண்டும்” என்றும் “இது அத்தனை எளிதல்ல” என்றும் சொல்வார். சொல்லிவந்ததை வலியுறுத்த புதிய கோணம் பேச்சினூடாக அமையும் என்றால் அதை மீண்டும் சொல்லத்தொடங்குவார். ஒருவரிடம் நெடுநேரம் பேசவும் தன் உள்ளத்து மந்தணங்களையும் உணர்வுகளையும் விரித்துரைக்கவும் அவருடனான நெருக்கத்தையோ அவருக்கிருக்கும் தகுதியையோ சல்யர் கணக்கிடுவதில்லை.

அவர் எப்போதும் தனக்கெனவே பேசுவது தெரியும். ஒருவரிடம் பேசத் தொடங்கினால் அப்பேச்சினூடாகவே தன்னை கட்டமைத்து விரிவுபடுத்தி முழுமையாக்கி ஓர் ஆளுமையாக முன்னிறுத்திவிட்டு அதில் நிறைவடைந்து அந்நிறைவையே வெளிப்படையாகக் காட்டி புன்னகைத்து பெருமிதமும் செருக்கும் கொண்ட சொற்களால் அதுவரை உருவாக்கிய அந்த ஆளுமையை முற்றிலும் கலைத்து இளிவரலை உருவாக்கிவிட்டு அப்பால் செல்வது அவரது இயல்பு. அவரிடம் பேசுபவர்களில் முதலில் பொறுமையின்மையும் மெல்லமெல்ல ஒவ்வாமையும் அறுதியாக எள்ளலும் உருவாகும். அவர்கள் பேசும் சிறு சொற்களில் அது வெளிப்படும். அரசர்கள் நுண்சொற்களில் எள்ளிநகையாடும் பயிற்சி கொண்டவர்கள். அவரால் அவற்றை புரிந்துகொள்ள முடியாது. “அம்புக்கூர்களின் நடுவே பறந்தலையும் ஈபோல” என ஒருமுறை அவரைப்பற்றி சுபாகு சொன்னபோது துரியோதனன் வெடித்துச் சிரித்தான்.

சல்யரை முதுமகனென்றும், பயிலாத மலைமானுடன் என்றும் துரியோதனன் அவையில் அனைவரும் கருதியிருந்தனர். அவருடைய இயல்புகளில் எப்பொழுதும் புதுமையை நோக்கி உளம் விரியும் மலைச்சிறுவனின் ஆர்வம் இருந்தது. எதைக் கண்டாலும் ஆர்வத்துடன் எழுந்து வந்து கூர்ந்து நோக்குவதும் அடுக்கடுக்காக வினவுவதும் உண்டு. ஆனால் எதிலும் அந்த ஆர்வம் நீடிப்பதில்லை. அதன் முதல் விந்தை முடிவடைந்து உட்சிக்கல் தொடங்கியதுமே அவர் உள்ளம் அதிலிருந்து விலகிவிடும். சிக்கல்கள் அனைத்தையும் அவர் ஐயப்பட்டார். அவை தேவையில்லாமல் அறிவால் உருவாக்கப்படுபவை என்று எண்ணினார். அவை எவ்வகையிலோ தன்னை சிக்கவைக்கும்பொருட்டு தனக்குச் சுற்றும் விரிக்கப்படும் வலையோ என்று ஐயம் கொண்டார். “இதெல்லாம் நிகர்நிலத்து மானுடர் வெறும்பொழுது கழிப்பதற்காக சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொள்பவை. மெய்யான சிக்கல் என்னவென்று நான் அறிவேன். முடிச்சுகள் அனைத்தும் ஒரு வாளால் ஓங்கி வெட்டி அறுக்கப்படுபவையே என்று எங்கள் மலையில் சொல்வதுண்டு” என்று அவர் எச்சொல்லாடலிலும் அறுதியாகச் சொல்லிவிடுவார்.

தான் ஒரு மலைமகன் என்பதில் அவருக்குப் பெருமை எப்போதும் இருந்தது. அதை பிற அனைவருக்கும் மேலான தனது தகுதி என்று கருதினார். “ஏனெனில் தூய்மை மலையிலேயே உள்ளது. கங்கை பெரிதுதான் ஆயினும் கழிவும் சேறும் கலந்து மாசுபட்டிருக்கிறது. எங்கள் மலையுச்சி நதிகள் வானிலிருந்து சொட்டிய தூய்மை கொண்டவை. தெய்வங்களுக்கு உகந்தவை. எங்கள் மலையின் நீரை முனிவர்கள் ஏழுமலை ஏறிவந்து தங்கள் கமண்டலங்களில் அவற்றை அள்ளிச்செல்வதை நாங்கள் கண்டிருக்கிறோம். எங்கள் உள்ளங்களும் மலைச்சுனை நீர் போன்றவை” என்று அவர் ஒருமுறை சொன்னார். உடனே வெடித்துச் சிரித்து “நாங்கள் நீராடி கழுவிவிடும் நீரையே நிகர்நிலத்து முனிவரும் அருந்துகிறார்கள் என்று எங்கள் சிறுவர் சொல்வதுண்டு” என்றார். அவையிலிருந்தவர்கள் முகம்சுளித்ததைக் கண்டு மேலும் மகிழ்ந்து “பறவைக்குக் கீழேதான் ஆலயகோபுரமும் என்பார்கள் அல்லவா?” என்றார்.

கிருபர் ஒருமுறை அவர் பேச்சை மறித்து எரிச்சலுடன் “எந்த மலைச்சுனையும் தன்னை தூயது என்று சொல்லிக்கொள்வதில்லை. தூயவர் என்று உணர்கையிலேயே தூய்மை அல்லாத ஒன்றை அறிந்துவிட்டிருக்கிறீர்கள் என்பதே நாங்கள் புரிந்துகொள்வது” என்றார். அதிலிருந்த இடக்கை உள்வாங்கிக்கொள்ளாமல் சல்யர் “ஏனெனில் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் அவையில் இருக்கிறேன். நீங்கள் உங்கள் சொற்களால் சூதாடிக்கொள்வதை ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். ஒரு புது எண்ணம் எழுவதன் ஊக்கம் மீதூற கைதூக்கி “எனக்குத் தெரியும், இங்கு நீங்கள் அனைவரும் வாளேந்திப் போரிடவே விரும்புகிறீர்கள். வாளேந்தும் வாய்ப்பில்லாதபோது சொல்லேந்தி போரிடுகிறீர்கள். ஒருகணமும் நீங்கள் போரிடாதிருந்ததில்லை. ஒருவரோடொருவர் போரிடுகிறீர்கள், தங்களுக்கு தாங்களே போரிடுகிறீர்கள். ஒருகணமும் நீங்கள் போரிடாதிருந்ததில்லை. ஒவ்வொரு கணமும் போரிடுகிறீர்கள். தங்களுக்குத் தாங்களே போரிடுகிறீர்கள். மைந்தருடனும் மனைவியருடனும் போரிடுகிறீர்கள். ஏன் ஊழுடனும் தெய்வத்துடனும் போரிடுகிறீர்கள்” என்றார்.

“நாங்கள் போரிடுபவர்களல்ல, நாங்கள் வேட்டையாளர்கள். விரிந்த வெளியில் எங்களுக்குரிய விலங்கு எங்கு இருக்கிறதென்பதை நுண்ணுணர்வுடன் உய்த்து பின்தொடர்ந்து செல்பவர்கள். ஒவ்வொரு காலடித்தடத்தையும் ஒவ்வொரு மணத்தையும் கொண்டு அதை தேடிச்சென்று வேட்டையாடித் திரும்புகையில் நாங்கள் தெய்வத்திடமிருந்து எங்கள் தகுதிக்குரிய பரிசொன்றைப் பெற்றதாகவே உணர்கிறோம். வென்றதாக அல்ல, வாழ்ந்ததாக எண்ணுகிறோம். போரிட்டதாக அல்ல விளையாடி மீண்டதாக மகிழ்கிறோம். எங்கள் வேட்டை ஊழுடன் மட்டுமே. ஊழ்வடிவென இறங்கிய தெய்வத்துடன் மட்டுமே நாங்கள் விளையாடுகிறோம். மானுடருடன் எங்களுக்கு போட்டியே இல்லை. மலையைப்பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்? ஒவ்வொரு மனிதனும் பிறிதொருவனுடன் போட்டியிலாது வாழும் ஒரு நிலம் அது. அங்கிருந்து வந்திருக்கிறேன் நான்” என்று அவர் சொன்னார்.

அவர் சொல்லிச் சொல்லி உருவாக்கிக்கொண்ட கருத்து அது. ஒவ்வொரு முறை சொல்லும்போதும் சற்று சொல் மிகும். அதுவே அவருக்கு களிப்பை அளிக்கும். அவர் தான் கொண்ட அகச்சிறுமை ஒன்றை அச்சொற்களால் வென்று மறைத்துக்கொள்கிறார் என சுபாகு ஒருமுறை சொன்னான். “எனில் அந்தச் சொற்களைக் கீறி நோக்கலாகாது. ஒருவரின் உளநடிப்புகளை அகற்றுவது ஆடைஅகற்றி சிறுமைசெய்வதைவிட மும்மடங்கு கொடியது” என்றான் துரியோதனன். ஆனால் அவையில் அவருடைய சொற்கள் எழுகையில் அவரை நோக்கி நச்சுக்கூர்கள் எழாமல் தடுக்க இயல்வதில்லை. அமைதியானவரான கிருபரே சீற்றமும் எரிச்சலும் கொள்வதுண்டு. அரிதாக பீஷ்மர் கைநீட்டி சல்யரை சொல்லமர்த்துவதுண்டு. சகுனி மட்டுமே அவர் பேசட்டும் என்பதுபோல் தாடியை நீவியபடி விழிகளில் நகைப்புடன் நோக்கி அமர்ந்திருப்பார்.

“ஆனால் அங்கிருந்து நீங்கள் இறங்கி இங்கே வர வேண்டியிருக்கிறது, சல்யரே. எந்த எடை உங்களை கீழே இறக்கிக்கொண்டு வந்தது என்பதைப்பற்றி மட்டுமே இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் கிருபர். அதை புரிந்துகொள்ளாமல் சல்யர் “நாங்கள் இறக்கிக்கொண்டு வரப்படவில்லை. நாங்களே இறங்கி வந்திருக்கிறோம். ஏனெனில் எங்கள் தூய்மையால், நிகரின்மையால் உங்களை வெல்லவிருக்கிறோம். அறிக, இன்று நாங்கள் இந்த அவையில் நூற்றுவரில் ஒருவராக எளிய உருக்கொண்டு அமர்ந்திருக்கலாம்! எங்கள் சொற்கள் இந்த அவையில் ஓங்கி திகழாமலிருக்கலாம். ஆனால் ஒருநாள் உங்களை எங்கள் குடி வெல்லும். எங்கள் கொடி உங்கள் நிலங்களின் மேல் பறக்கும். எங்களால் நீங்கள் ஆளப்படுவீர்கள். அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் தெய்வத்தின் ஆணை பெற்ற தூய மக்கள் நாங்கள். நாங்கள் இவ்வுலகை ஆளவேண்டுமென்பதே தெய்வங்களின் விழைவாக இருக்கும்” என்றார். கைகளைத் தூக்கி அறைகூவும் குரலில் “எங்களுடன் போரிடுகையில் நீங்கள் எங்கள் மலைத்தெய்வங்களுடன் போரிடுகிறீர்கள். அதை மறக்க வேண்டியதில்லை” என்றார். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “இந்த வெறும் பேச்சை இங்கு நாம் நிகழ்த்தவேண்டியதில்லை. நாம் உசாவ வேண்டியவை பிற உள்ளன” என்று அப்பேச்சை அப்போது முடித்துவைத்தான்.

சல்யர் பொதுவாக அனைத்து அவைகளிலும் வேடிக்கைக்குரியவராக இருந்தாலும் அவ்வப்போது அரசர்களும் புண்பட்டு சீற்றம் கொண்டனர். அவர்கள் பேச்சுவழியில் தங்கள் குடிப்பெருமையை இயல்பாக சொல்லிவிட்டால் அக்கணமே அவர் அதை தனக்கெதிரான கூற்றாக எடுத்துக்கொண்டார். ஒருமுறை கோசலனிடம் “எவ்வண்ணம் உங்கள் நாடு பெருமையுற்றது என்று நாங்கள் அறியோமா என்ன? வீரத்தாலா? அல்ல, நூறுதேர் ஓட்டிய அயோத்தியின் அரசனுக்கு ஒரு மங்கையை மணம் புரிந்து கொடுத்ததனால்தான் நீங்கள் ஷத்ரியர்களும் குடிப்பெருமை கொண்டவர்களுமானீர்கள். இன்றும் அந்த அரசியின் பெயராலேயே உங்கள் நாடு அறியப்படுகிறது. பெண்கொடுத்து பெறும் பெருமை என்ன பெருமையென்று மலைமகனாகிய எனக்கு சற்றும் புரியவில்லை” என்றார். கோசலன் சீற்றத்துடன் எழுந்து “வாயை மூடுங்கள்! அல்லது இக்கணமே என் வாளுக்கு நிகர்நில்லுங்கள்” என்றான்.

“வாளுக்கெனில் வெளியே செல்வோம். அங்கு பூசலிடுவோம்! மலைமகனின் அம்பும் வில்லும் மும்மடங்கு இலக்கறிந்தவை என நீங்கள் அறிவீர்கள்” என்று சல்யரும் தன் வாளைத் தொட்டபடி எழுந்தார். பீஷ்மர் உரத்த குரலில் “அமர்க! அமர்க, சல்யரே! அமர்க, கோசலரே!” என்றதும் சல்யர் திரும்பி “இவர்தான் என்னை இப்போது பூசலுக்கு அழைத்தார். முதலில் பூசலுக்கு அழைத்தவரே படைக்கலம் தாழ்த்தி சொல் பின்னெடுத்து அமரவேண்டும். நான் அமரக்கூடாது” என்றார். கோசலன் “பிதாமகரே, என்னை பூசலுக்கு அழைத்தவர் இவர். என் குடியை இழிவு செய்தார். ராகவராமனின் கால்பொடிக்கு இணையாகமாட்டார் இந்த மலைவீணர். இங்கு வந்து அமர்ந்து ராகவராமனின் புகழைக் கெடுக்கும் ஒரு சொல்லை சொன்னமைக்காகவே இவர் தலையைக் கொய்ய நான் கடமைப்பட்டிருகிறேன்” என்றான்.

பீஷ்மர் “இது என் ஆணை! இருவரும் ஒரே தருணத்தில் அமரவேண்டும். என் ஆணையை மீறுவோர் இக்கணமே என் வாளை எதிர்கொள்ளவேண்டும்” என்றார். கோசலன் “நீங்கள் தந்தைநிலை கொண்டவர். உங்கள் ஆணைக்குக் கட்டுப்படுவது என் கடமை” என்றபடி தன் பீடத்தில் அமர சல்யர் உரக்க நகைத்து “எவ்வண்ணமேனும் நீர் அமர நேர்ந்துவிட்டது, கோசலரே” என்றபடி தானும் அமர்ந்தார். “பிறிதொருநாள் களத்தில் நீர் என் வில்லின் ஆற்றலைக் காண்பீர்” என்றார். “பேச்சு போதும்” என்றார் பீஷ்மர். “ஆம், நான் ஏதும் சொல்லவில்லை. ஆனால் என்னை போருக்கு அறைகூவவேண்டும் என்றால் அர்ஜுனன் எண்ணவேண்டும். யாதவகிருஷ்ணன் கருதவேண்டும்” என்றார் சல்யர்.

அரசுசூழ்தல்களில் சல்யரை எதிர்கொள்வது எப்போதும் அவையினருக்கு இடர் கொண்டதாகவே இருந்தது. அவையில் நிகழும் எதையும் முழுமையாக அவர் புரிந்துகொண்டதே இல்லை. ஒவ்வொரு முறையும் நெடுந்தொலைவிலிருந்து வந்து சேர்ந்து பிற எவருக்கும் எழாத ஐயங்களை அவர் எழுப்பினார். “இந்தப் படைசூழ்கையுடன் நாம் முன்செல்கையில் இதில் முன்னணியில் நிற்பவர்கள் வீழ்ந்தால் பின்னணியில் நிற்பவர்கள் சென்று அவ்விடத்தை நிரப்பவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு நிரப்பாவிடில் இச்சூழ்கை பயனற்றதாகிவிடும் அல்லவா?” என்று ஒருமுறை கேட்டார். “அவ்வாறு நிரப்பாதிருக்க வழியே இல்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அவர்கள் அவ்வாறு சென்று நிரப்புவார்கள் என்று எவ்வாறு உறுதி கூறுகிறீர்கள்?” என்று சல்யர் மீண்டும் கேட்டார். “ஏனெனில் அதன் பொருட்டே அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கடமை அது” என்றான். “அவர்கள் தங்கள் கடமையை செய்யாவிடில் என்ன செய்வது? அதையும் நாம் எண்ணிச் சூழ வேண்டுமல்லவா?” என்று சல்யர் கேட்டார்.

“அவ்வாறு எண்ணத்தொடங்கினால் போரிடவே இயலாது. போர்முனையில் நமது படைவீரர்கள் படைக்கலம் தாழ்த்தி ஓடிவிட்டார்கள் என்றால் என்ன செய்வது என்று எண்ணி ஒரு படைசூழ்கையை அமைக்க முடியுமா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “ஆம், அதையும் எண்ணித்தான் ஆகவேண்டும், ஏனெனில் எங்கள் போர்களில் போர்வீரர்களின் இலக்குகள் முதன்மையானவை, ஒவ்வொருவருக்கும் இப்போரினால் என்ன கிடைக்கும் என்பதை உணர்த்திய பின்னர்தான் அவர்களை கூட்டி வருவோம். ஒவ்வொரு முறையும் அதை நினைவுபடுத்திக்கொண்டும் இருப்போம். அது கிடைக்காதென்றால் எங்கள் படைவீரர்கள் களம் நிற்கமாட்டார்கள். வெளிப்படையாகவே இதனால் பயனில்லை என்று சொல்லி வாள் தாழ்த்தி திரும்பிவிடுவார்கள்” என்றார் சல்யர்.

அவை முழுக்க பரவிய சிரிப்பை புரிந்துகொள்ளாமல் திரும்பிப்பார்த்த பின்னர் அவர் தொடர்ந்தார். “இங்கு போர் நிகழும்போது ஒவ்வொரு படைவீரனுக்கும் அரசரிடம் எந்தவிதமான உளத்தொடர்பும் இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளிலிருந்து எழுந்து வந்து இந்த போரை நிகழ்த்துகிறார்கள். அக்கனவுகளுக்குள்ளேயே போர் முடிந்ததும் திரும்பிச் செல்கிறார்கள். இது போரே அல்ல. இது வேறேதோ தெய்வங்களால் ஆட்டி வைக்கப்படும் சூதென்று எனக்குத் தோன்றுகிறது.” எழுந்து கைநீட்டி “உங்கள் தெய்வங்களால் நீங்கள் ஆட்டிவைக்கப்படுக, சல்யரே! அமர்க இப்போது!” என்று உரத்த குரலில் துரோணர் சொன்னதும் சல்யர் திரும்பிப்பார்த்து “ஆம், எந்த தெய்வத்தால் நான் ஆட்டிவைக்கப்படுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு பெருவிழைவில்லை. எனக்கு இருப்பது என் குடிப்பெருமையை அவைகளில் நிலைநாட்டும் விழைவு மட்டும்தான். ஆனால் அது இங்கு ஒவ்வொரு நாளும் கீழிறங்கிக்கொண்டிருக்கிறதோ என்று ஐயுறுகிறேன்” என்றார்..

சல்யரின் இயல்புகளை ஒவ்வொரு முறையும் துரியோதனன் பொறுத்து, அவரை முறைச்சொற்கள் உரைத்து, பாராட்டியும் வாழ்த்தியும் முன்சென்றான். ஒவ்வொரு முறையும் சல்யருக்கு இறுதிச் சொல் கூறுவதற்கு இடம் கொடுத்தான். சல்யர் அதனாலேயே அந்த அவையில் தான் பீஷ்மருக்கும் துரோணருக்கும் கிருபருக்கும் நிகரான முதுதந்தையின் இடத்தை கொண்டிருப்பதாக எண்ணிக்கொள்ளலானார். ஒவ்வொருநாளும் அவையில் ஒருவர் உயர்குடியினர், இனியவர், பெருந்தன்மைகொண்டவர் என அவருக்குத் தோன்றியது. அவரிடம் மட்டும் நெடுநேரம் பேசினார். எஞ்சியவர்களிடம் முகம் கொடுக்காமல் மேட்டிமை நடித்து திரும்பிச்சென்றார். எப்போதும் அவையில் ஒருவர் பிறப்பால் கீழ்மைகொண்டவராகவும் நல்லியல்புகள் அற்றவராகவும் அவருக்குத் தோன்றினார். அவையில் அனைத்தையும் அவரை நோக்கியே சல்யர் சொன்னார்.

எப்போதுமே கர்ணன் அவருக்கு உகக்காதவனாகவே இருந்தான். கர்ணன் ஒவ்வொரு முறையும் அவரை வணங்கி முகமன் சொன்னான். ஒருமுறைகூட அவர் அவனை விழிநோக்கவோ வாழ்த்தேற்பும் மறுவாழ்த்தும் உரைக்கவோ முற்படவில்லை. அதை கர்ணன் எப்போதுமே பொருட்டெனக் கருதவுமில்லை. தன்னை முகம் நோக்கி வாழ்த்துபவரை நோக்கி மறுமொழி சொல்லவேண்டும் என்பதும் வாழ்த்துக்கு வாழ்த்தெடுக்காமை கீழ்மை என்றே அரசவையில் கருதப்படும் என்பதும் சல்யருக்கு எப்போதுமே புரிந்ததில்லை. கோசலன் அப்பூசலுக்கு மறுநாள் அவரைப் பார்த்து “வணங்குகிறேன், மத்ரரே” என்றபோது தலைதிருப்பி நடந்து சென்றார். கோசலன் அதனால் உளம் புண்படவில்லை. அருகிலிருந்த மகதரை நோக்கி புன்னகைத்து “மலைக்குடிகளின் இயல்பு அது” என்று தாழ்ந்த குரலில் சொன்னான்.

அச்சொல் சல்யரின் செவிகளை அடைந்தது. திரும்பி நின்று “ஆம், மலைக்குடிதான். அதன்பொருட்டு பெருமைகொள்கிறேன். இங்கிருக்கும் அனைவரும் கிராதர்களும் வேடர்களும் மூத்து ஷத்ரியர்களானவர்கள். மலைக்குடிகள் ஷத்ரியர்களாகவே மலையின் மடிப்புகளிலிருந்து எழுந்து வந்தவர்கள். எங்கள் பின்னால் ஒருபோதும் தெய்வங்கள் இல்லாமலிருந்ததில்லை” என்றார். “ஆம், அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்று கோசலன் விழிகளில் புன்னகையுடன் சொல்ல மகதர் “ஆம் மத்ரரே, மலைக்குடிமக்கள் பிறர் வாழ்த்துவதைக்கூட பொருட்படுத்தமாட்டார்கள். ஏனெனில் அது அரசர்களின் இயல்பு. அங்கே கன்றோட்டுபவரும் ஏர் உந்துபவர்களும்கூட அரசர்களே என்றுதான் அவர் சொன்னார்” என்றார்.

சல்யர் அவர்கள் இருவரையும் மாறி மாறி நோக்கியபின் மெல்லிய ஐயம் கொண்டு “ஆம், அவ்வாறே. எங்களிடம் பேசுவதற்கான தகுதியை நீங்கள்தான் ஈட்டிக்கொள்ளவேண்டும்” என்றபின் அவைக்குள் சென்றார். அருகே நின்றிருந்த துச்சாதனன் அப்போது சல்யர் மேல் இரக்கத்தையே அடைந்தான். அன்று அதை அவன் துரியோதனனிடம் சொன்னபோது அவையில் அமர்ந்திருந்த சகுனி “நீ அவரை இளமையில் பார்த்திருக்கவேண்டும். அன்று வீரன் என்னும் நிமிர்வும் அரசுசூழும் திறனும் விரிந்த உள்ளமும் கூர்நோக்கும் கொண்டவராக இருந்தார்” என்றார். துச்சாதனன் “ஆம், அதையே ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொள்கிறேன். நானறிந்த சல்யர் அல்ல இவர். முதுமையின் நலிவென்றே தோன்றுகிறது” என்றான்.

“முதுமை ஒருவரை முற்றிலும் பிறிதொருவராக ஆக்குமா?” என்று துச்சாதனன் கேட்டான். கிருபர் “முதுமை மானுடரின் உடலை மண்ணை நோக்கி இழுக்கிறது. எலும்புகள் வளைய தசைகள் தொய்கின்றன” என்றார். “மண்ணை நோக்கி உடலை ஈர்க்கும் அவ்விசையையே இறப்பு என்கிறோம். அது கருக்கொண்ட கணமே மானுட உடலுக்குள் குடிகொள்ளத் தொடங்குகிறது. ஒவ்வொரு கணமும் வளர்கிறது. மானுடரைக் கொல்லும் நோய் அவர்களில் தோன்றாத் துணை என உடனிருக்கிறது, அதை ரிபு என்கின்றன மருத்துவநூல்கள். இன்று சல்யரில் வெளிப்படும் இவை துளி என, அணு என அவரில் முன்னரே உறைந்தவை. அன்று அவருடைய உயிரின் ஆற்றலை அவர் எனக் கண்டோம். இன்று அவரை அழிக்கும் பிறப்புநோயை அவரெனக் காண்கிறோம்.”

சகுனி மெல்ல கனைத்து தன் கால்களை எடுத்து அப்பால் வைத்தார். அதுவரை அங்கில்லாதவன் போலிருந்த கர்ணன் திரும்பி நோக்கினான். “நான் எண்ணுவது பிறிதொன்று. அவரைப் பார்க்கையில் எல்லாம் தெய்வம் ஒழிந்த பாழ்கோயில் எனத் தோன்றுகிறது” என்றார் சகுனி. “அவரிலிருந்து அரிய ஒன்று பிறிதொன்றாகி எழுந்து அகன்றுவிட்டது.” துரியோதனன் சகுனியை சிலகணங்கள் நோக்கிவிட்டு “அவரைப் பற்றி பேசி என்ன பயன்? அவர் வில்லவர், பால்ஹிகக் கூட்டமைப்பை நமக்கென கொண்டுவந்தவர். களத்தில் நமக்கு உகந்தவர். நான் எண்ணுவது அதை மட்டுமே” என்றான்.

துச்சாதனன் மீண்டும் சல்யரின் கதவை நோக்கினான். அவன் வெளியே நின்றிருப்பதை செவிகூர்ந்தபடி அவர் உள்ளே அமர்ந்திருக்கிறார் என அவன் அறிந்தான். அவன் திரும்பிச்சென்றுவிட்டான் என்று தோன்றினால் அவர் எழுந்துவந்து கதவைத் திறந்து பார்ப்பார். அவரை பார்க்காமல் அவன் சென்றுவிட்டதை ஒரு பெருங்குறையாகவே துரியோதனனிடம் சொல்வார். அவன் தலையை அசைத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டான்.