இந்திரநீலம் - 74
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 9
”கோசலத்தின் அரண்மனை மிகத் தொன்மையானது” என்றார் அக்ரூரர். ”அன்றெல்லாம் கங்கை வழியாக கொண்டு வரப்படும் இமயத்துப் பெருமரங்களே மாளிகை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன. பெரும்படகுகள் எனத் தோன்றிய மரத்தடிகளை அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளம் மீது உருண்டு எழுந்த தூண்களின்மேல் கூரைஉத்தரங்கள் எடையுடன் அமர்ந்திருக்கும். மரப்பட்டைக் கூரை கூம்பு என உயர்ந்து கருகி மலைப்பாறைகுவைகள் போல நின்றிருக்கும். பண்படாத தூண்களும் மழைநீர் வழிந்து கரைந்து கறுத்த பலகைப் பரப்புகளுமாக அவை பெருங்களிறுகள் என்று தோன்றும். அதற்கேற்ப காற்றில் அவற்றின் மர இணைப்புகள் சற்றே முனகுவதையும் கேட்கமுடியும். ஏழு மாளிகைகள் அரை வட்டமாக சூழ்ந்த களமுற்றத்தில் தென்மேற்கு எல்லையில் தென்னிலத்துக் கொற்றவையின் கற்சிலை அமைந்த சிற்றாலயம் இருந்தது. கொற்றவைமுன் உறுதிகோள் சடங்கு நிகழ்ந்தபின் களமாடல்.”
விடியலில் முதற்கதிர் எழுந்தபோது இளைய யாதவரும் மூத்தவரும் நீராடி அரைத்தோலாடை அணிந்து அணிகளின்றி ஆடுகளம் சேர்ந்தனர். கோசலத்தின் பேரமைச்சர் ருத்ரசன்மர் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் அரண்மனைக்கு நேரில் வந்து முறைமை சொல்லி வணங்கி இருவரையும் அழைத்துச் சென்றார், கோசலத்தின் வேலேந்திய காவலர் முப்பதுபேர் எங்களுக்கு அகம்படி அமைத்தனர். விருந்தினர் அரண்மனையிலிருந்து களமுற்றம்வரை செல்லும் பாதையின் இருபக்கமும் எங்களை பார்ப்பதற்காக கோசலத்துப் படைவீரர்கள் செறிந்த முகங்களென வெளிநிறைத்தனர்
அன்று இளைய யாதவர் வெல்வாரென்பது முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்நகரும் களிற்றுக் காளைகளும் இளவரசியும் அவருக்காகவே காத்திருந்தது போல, நூற்றாண்டுகளுக்கு முன் எப்போதோ இறுதியாக அந்நகரிலிருந்து விடைபெற்றுச் சென்ற ரகுராமன் இளைய உடல் கொண்டு மாறாப் புன்னகையுடன் திரும்பி வந்தது போல அவர்கள் உணர்ந்தனர், பாஞ்சாலரே, இன்று எண்ணினாலும் என் உடல் சிலிர்க்கும் நினைவு அது. ஒருவர்கூட துவாரகையின் அரசரை வாழ்த்தி குரல் எழுப்பவில்லை. அத்தனை நாவுகளும் அவரை ராமன் என்றே அழைத்தன. அவர் கால் வைத்துச் சென்ற இடங்களை நோக்கி கோசலத்து மக்கள் இடிந்து சரியும் மணற்கரையென விழுந்து புழுதி தொட்டு சென்னி சூடி வணங்கினர்.
கொற்றவை ஆலயத்துக்கு அருகே போடப்பட்டிருந்த அரச மேடையில் அரசர் நக்னஜித்தும் அவரது துணைவி சுபையும் அரியணை வீற்றிருந்தனர். சிற்றமைச்சர்களும் தளபதிகளும் படைத்தலைவர்களும் இரு பக்கமும் நின்றிருந்தனர். இருள்பிரியா நேரத்திலேயே நகரெங்கும் இருந்து ஊறித் திரண்டு சூழ்ந்த மக்களால் ஆனதாக இருந்தது அவ்வெளி. அவர்களின் குரல் முழக்கம் நாங்கள் சென்ற அரண்மனை இடைநாழியின் சுவர்கள் தோறும் ஒலித்துக் கொண்டிருந்தது. காலையின் நிழலெழா மென்வெளிச்சத்தில் தொலைவில் தெரிந்த அவர்களின் முகங்கள் ஒவ்வொன்றும் விழிப் புள்ளிகள் துலங்கும் அளவுக்கு தெளிந்திருந்தன.
யாதவர் வெளி முற்றத்தை அடைந்ததும் அங்கு கூடிநின்ற பெருந்திரள் ஒற்றைக்குரலாக இளைய ரகுராமனை வாழ்த்தி எழுந்தது. மூத்தவர் என்னை நோக்கித் திரும்பி “இவனை தொல்புகழ் ராமன் என்கிறார்கள் அக்ரூரரே” என்றார், ”யாரறிவார்?” என்றேன். அவர் என் தோளில் தன் பெருங்கையால் ஓங்கி அறைந்து ”அவ்வண்ணமெனில் நான் யார்? அகலாது அவனை துணைத்த இலக்குவனா என்ன?” என்றார். நான் புன்னகைத்தேன். பலராமர் விழிதிருப்பி அங்கு அலையடித்த மானுட உணர்ச்சிகளை சற்றுநேரம் நோக்கிவிட்டு என்னை நோக்கி திரும்பினார்.
கையை என் தோளைச் சுற்றி வளைத்து எலும்புகள் முனக தன்விலாவுடன் இறுக்கிக் கொண்டு குனிந்து என் காதில் ”ஆமெனில் நான் நிறைவுறுவேன் அக்ரூரரே. பேருடலும் மூப்பும் கொண்டிருந்தாலும் இவனருகே என் உள்ளம் இளையவனாகவே எப்போதும் உணர்கிறது. இன்றெனக்கு இவன் அணுக்கப்பணி பல செய்கிறான். ஆடை எடுத்து வைக்கிறான். படைக்கலம் தீட்டுகிறான். என் பாத அணிகளை இவன் துலக்கி வைப்பதும் உண்டு. முன்பொருமுறை இளையவனாக அமர்ந்து இப்பணிகளனைத்தையும் இவனுக்கு நான் செய்திருப்பேனோ என்று எண்ணியுள்ளேன். பிறிதொரு பிறவியில் இவனுக்கு அணுக்கனாகப் பிறந்து இவ்வனைத்தையும் மாற்ற வேண்டுமென்று விழைந்திருக்கிறேன்” என்றார்.
களமுரசு முழங்கியது. கொம்புகள் அறைகூவின. கூட்டம் முந்தி வட்டம் சுருங்கியது. இரு கைகளையும் கூப்பியபடி முற்றத்தில் நுழைந்து, தன்னை சூழ்ந்து கொந்தளித்த வாழ்த்துக்களை உடலில் ஒவ்வொரு மயிர்க்காலாலும் ஏற்றுக்கொண்டு, களத்திலமைந்த செம்புழுதியில் கால்கள் படிந்த தடம் மலரிதழ்களென உதிர்ந்து உதிர்ந்து தொடர நடந்து மேடையை அடைந்தார் இளைய யாதவர். கோசலர் தலைவணங்கி ”கோசலத்தின் பெருங்களம் தங்களை வரவேற்கிறது இளைய யாதவரே. தாங்கள் வெல்ல வேண்டுமென்று எனது முன்னோர் விழைக! தெய்வங்கள் அருள் செய்க!” என்றார். இளைய யாதவர் அவ்வாழ்த்தை ஏற்று தலைவணங்கி ”இத்தருணத்தில் என் குலம் அருளிய வாழ்த்தனைத்தும் என் தோள்களில் ஆற்றலாகுக!” என்றார்.
யாதவர் இருவருக்கும் கொற்றவை ஆலயத்தில் இருந்து மலராட்டு முடிந்த மலரிதழ்கள் கொண்டுவந்து தரப்பட்டன. அவற்றில் ஒரு செண்பகத்தை எடுத்து தன் சுரிகுழல் கட்டில் செருகிக் கொண்டார் இளைய யாதவர். மூத்தவர் தன் கைகளை விரித்து தசைகளை நெகிழ்த்தி இறுக்கி பின் அமைந்து என்னை நோக்கி ”அக்காளைகளை முன்னரே ஒரு முறை பார்த்துவிடலாம் என்று இவனிடம் சொன்னேன். வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டான். நேற்று வந்தது முதல் இந்நகரில் வீணே சுற்றி வந்து கொண்டிருந்தான். இரவெல்லாம் சோலைநடுவே அமர்ந்து குழலிசைத்தான். இவன் எண்ணுவதென்ன என்றறியேன்” என்றார்.
”குழலிசையை நானும் கேட்டேன்” என்றேன். ”இப்போது அப்பெரும் களிறுகள் அவை புகுகையில் தன் குழலெடுத்து இசைத்தாரென்றால் அவை கொம்பு தாழ்த்தி மண்டியிடுமென்பதில் ஐயமில்லை.” பலராமர் “ஆம். சினம் கொண்ட மதகளிறு அவன் இசைகேட்டு கொம்பு தாழ்த்தி செவி கோட்டி சிலைப்பதை பல முறை நான் கண்டிருக்கிறேன். இவை என்ன இருந்தாலும் ஆயருக்குகந்த காளைகள். ஆனால் அது முறையல்ல. இங்கு களம்நின்று அவற்றை வெல்லவே அறைகூவல் விடப்பட்டுள்ளது” என்றார். “வெல்வதொன்றே வாழ்வெனக் கொண்டவர் அவர் மூத்தவரே” என்றேன்.
கொற்றவை ஆலயத்திலும் அருகமைந்த ஏழன்னையர் பதிட்டைகளிலும் காவல்பூதங்களுக்கும் கருங்கண் இயக்கியருக்கும் பூசனைகளும் கொடைகளும் முடிந்தபின்பு அரசநிமித்திகன் மேடையேறி வெள்ளிக்கோல் சுழற்றி நின்றான். பெருமுரசம் மும்முறை முழங்க கொம்புகள் பீறிட்டு அடங்கின. கூட்டம் அரவம் அவிந்து வண்ணச்சூழலென மாறியது. மின்னி நின்ற விழிகள் ஒவ்வொன்றும் இளைய யாதவரின் தோள்களையும் கைகளையும் இடையையும் நோக்கின. நிமித்திகன் கோசலத்தின் குலமரபையும் குடிமுறையையும் கொடிச்சிறப்பையும் சொல்லி குடை விரிய கோல் நிலைக்க வாழ்த்தினான். குலதெய்வங்களை வழுத்தியபின் கோசலத்து இளவரசி நக்னஜித்தியின் பிறவிநாள் சிறப்பையும் பேரழகையும் உரிய சொல்லெடுத்து உரைத்தான்.
அங்கு ஆன்றோர் முறைப்படியும் ஷத்ரிய நெறிப்படியும் மணக்கோளுக்கென களம் அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தான். ஏழு களிற்றுக் காளைகள் களம்கொணரப்படும். அவற்றை தன் தோள்வல்லமையால் அடக்கி வெல்பவர் இளவரசியைக் கொள்ளும் தகுதி படைத்தவர். அவரைக் கொள்ளவேண்டுமா என்று முடிவெடுக்கும் உரிமை இளவரசிக்கு உண்டு. ”இளவரசி அவரது தோளில் மாலையிடும்போது பாரத வர்ஷத்தின் ஐம்பத்தியாறு ஷத்ரிய நாடுகளும் அக்கடிமணத்தை ஏற்றுக் கொண்டன என்று பொருள். மூதாதையரும் முனிவரும் குல தெய்வங்களும் அவ்விணையை வாழ்த்துகின்றன. மங்கலம் பொலியட்டும்!” என்று சொல்லி நிமித்திகன் வெள்ளிக் கோல் தூக்கி மும்முறை ஆட்டினான். மீண்டும் பெரு முரசங்கள் முழங்கின. கொம்புகள் மும்முறை அறைகூவலென ஒலித்து அடங்கின.
என் விழிகளை அந்தக் களமுற்றத்தின் மறு எல்லையில் நாட்டப்பட்ட இரு மரத்தூண்களுக்கு நடுவே இருந்த வாடிவாயிலின்மேல் நாட்டி இருந்தேன். அங்கு எக்கணமும் தோன்றவிருக்கும் களிற்றுக் காளைகளை அதற்கு முன் என் கற்பனையால் ஆயிரம் முறை தீட்டி எழுப்பி இருந்தேன். இமய மலைமுடிகளை நான் கண்டதில்லை. அவற்றை பெருங்களிறுகளின் புள்ளிருக்கைகள் என்று கவிஞர் நிகர்மொழி கூறியிருப்பதை கற்றிருக்கிறேன். பனிப்படலங்கள் ஒளிர வெண்காளைகளென சிலிர்க்கும் இமயமுடிகள். காலை ஒளியில் அவை பொற்கவசம் அணிந்து ஊழ்கத்தில் ஆழ்ந்து நின்றிருக்கும். மலையென புறமெழுந்த ஓராயிரம் களிற்று நிரைகளாகவே இமயத்தை நான் அன்று அகம் கண்டிருந்தேன். எனவே பேரமைச்சர் தன் கையை அசைத்ததும் மறு எல்லையில் முரசு முழங்க தூண்களுக்கு இரு பக்கமும் நின்றிருந்த வீரர்கள் கை வீச ஒருவன் கொம்பு ஊதி ஆணையிட வாடிவாயிலை மறைத்திருந்த மூங்கில் படல் விலக்கப்பட்டு முதல் களிறு முகம் காட்டியபோது இமயத்தைக் கண்டதாகவே உணர்ந்தேன்.
பொன்னிறக் களிறு அது. பெருநாரை அலகு போல சிறிய பொன்னிறக்கொம்புகள் பிறையென வளைந்து ஒன்றையொன்று சுட்டி நின்றன. பரந்த நெற்றியில் சங்கு மணி அணிந்திருந்தது. கரிய மூக்கு மூச்சுக் காற்றில் விரிந்து சுருங்குவதை அத்தொலைவிலிருந்தே அண்மையிலென கண்டேன். வாடிவாயில் முகப்பின் இரு பெருமரங்களும் இரு விலாக்களை உரசும் அளவுக்கு பேருடல் கொண்டிருந்தது. அவ்வுடலை தாங்குமோ என ஐயுறுமளவுக்கு சிறிய முன்னங்கால்கள். உடலெடையால் சற்றே பிளவுண்டு புழுதி மண்ணில் ஆழ்ந்த பெரிய குளம்புகள். மரவுரித் திரைச்சீலையின் அடிநெளிவுகளென கழுத்துச் சதை உலைந்தது. மரக்கலத் துடுப்புகள் போல செவிகள் காற்றைத் துழாவின. பாஞ்சாலரே, அதற்கு நிகரென இன்னொரு காளையை நான் பின்னரும் கண்டதில்லை. வாடிவாயில் முகப்பில் தலை தூக்கி நின்று தன் அச்சமற்ற விழிகளால் அங்கிருந்த பெருங்கூட்டத்தை அது நோக்கியது. பின்னால் இருந்த வீரன் அதை கோலால் தட்டி வெளிச்செல்லும்படி ஊக்கினான். ஐயுற்று தலை தாழ்த்தி புழுதியை முகர்ந்தது. அதன் தோல் சிலிர்ப்பதை தொலைவிலேயே கண்டேன்.
பின் அது எண்ணி முன் வலது காலைத் தூக்கி புழுதி மேல் வைத்துவிட்டு திரும்ப எடுத்துக் கொண்டது. மீண்டும் வீரன் அதைத் தட்டி ஊக்க அக்காலைத் தூக்கி வைத்து மண்ணை இருமுறை தோண்டி பின்னால் பறக்கவிட்டது. தலை தாழ்த்தி குன்றென எழுந்த புள்ளிருக்கை சிலிர்க்க தலையை அசைத்தது. அதன் காதுகள் அடிபடும் ஒலி கேட்குமளவுக்கு அமைதி அங்கே நிறைந்திருந்தது. மீண்டும் வீரன் அதை பின் தொடையில் கழியால் தட்டி ஊக்க மெல்ல காலெடுத்து வைத்து களம் புகுந்தது. அதன் உடலில் தசைகள் குலுங்கி அதிர்வதைக் கண்டேன். புள்ளிருக்கை வலப்பக்கமாக சற்றே தழைந்து ஆடியது. வயிற்றிலும் விலாவிலும் தோல் சிலிர்த்தது. தலையைக் குடைந்து காதுகளை அடித்தொலி எழுப்பியது. மூச்சு சீற குனிந்து மீண்டும் புழுதியை முகர்ந்து தலை தூக்கி மதம் பரவிய விழிகளால் இரு பக்கமும் நின்றவர்களை நோக்கியது.
களம்சூழ்ந்து நின்ற மக்கள் அறியாத அச்சத்தால் பின்னடைய நோக்கியிருக்கவே களம் பெரிதாகிக் கொண்டே சென்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது வெண்ணிறக் காளை உள்ளே வந்தது. சற்றே ஐயுற்றது போல சூழ்ந்திருந்தவர்களை நோக்கியபின் முதற்காளையை அணுகி அதன் விலாவை முகர்ந்து உடல் சிலிர்த்து பெருமூச்சுவிட்டது. மூன்றாவது காளை உள்ளே வந்ததும் அப்பெருங்களம் நிறையத்தொடங்கிவிட்டது என்ற உணர்வை அடைந்தேன். நான்காவது ஐந்தாவது காளைகள் வந்தன. அவையனைத்தும் ஒரே உடலளவு கொண்டவை. முற்றிலும் ஒன்றே போன்ற கொம்புகள். ஒரு காளை பிறிதொன்றைப்போல் அமைவது அரிதென்பது எந்த யாதவனும் அறிந்ததே. ஒன்றின் நிழல் போல் பிறிதொரு காளை இருந்தது. அங்கு நிகழ்வது உண்மையல்ல, ஏதோ காவியத்தின் விவரணை என்று எண்ணச்செய்தது.
ஆறாவது காளை வந்து பிறகாளைகளை நோக்காது நடந்து களமுற்றத்தை அடைந்து நின்றது. அது தன்னை வெல்லப்போகிறவன் இளைய யாதவரென்று அறிந்து கொண்டதுபோல அவரை நோக்கி ஓரடி வைத்து சற்றே தலை தாழ்த்தி மூச்சு சீறியது. இடது முன்னங்காலால் புழுதி மண்ணைக் கிளறி தலைதாழ்த்தி பிறைக்கொம்புகளை முன்சரித்து பிடரியை சிலிர்த்துக் கொண்டது. ஏழாவது காளை வாடிவாயிலிலேயே பாதி உடல் மட்டும் வெளித்தெரிய சிலை என அசைவிழந்து நின்றது. சூழ்ந்திருந்த அனைவரும் அப்போது காளைகளை நோக்கிக் கொண்டிருந்தனர். நோக்குகளையே தொடுகைகளாக உணர்ந்து அவற்றின் உடல்கள் சிலிர்த்துக் கொண்டிருந்தன. பாறையில் படிந்த பாசியின் மென்மை கொண்ட தோல். காலையொளியில் அவற்றின் தசை வளைவுகள் எண்ணெய் பூசப்பட்டவை போல மின்னின. சுழலும் வால்களின் அசைவுகள். ஒரு காளையில் சிறுநீர் சொட்டத் தொடங்கியதும் இன்னொன்று அருகே சென்று குனிந்து அச்சிறுநீரை முகர்ந்து மெல்ல முக்காரியிட்டது. போர் முதிர்ந்த கணத்தில் பெருவீரனின் வில்லொன்று நாணொலி எழுப்பியது போல அவ்வொலி கேட்டு அங்கிருந்த அனைவர் உள்ளமும் அச்சம் கொண்டு உடல் சிலிர்ப்பதை உணரமுடிந்தது.
அக்கணம் நான் அச்சம் கொண்டேன். அக்களிறுகளை வெல்வது மானுடர் எவருக்கும் ஆகாதென்று எண்ணினேன். இளைய யாதவர் அவற்றால் கொல்லப்படவும் கூடுமென்று எண்ணியதை இப்போது நினைவுகூர்ந்தால் புன்னகையே அடைகிறேன். ஆனால் அத்தருணத்தில் அந்த ஏழு கொலைவிழிகளுக்கு முன் அவ்வச்சம் கற்பாறை போல் பரு வடிவம் கொண்டு முன்னால் நின்றது. ஒன்றே போல் அமைந்த பேருடல் கொண்டிருந்தவை ஆயினும் அக்களிறுகள் ஏழும் ஏழு உளஇயல்புகள் கொண்டிருந்தன. அவ்வியல்புகள் அவற்றின் உடல் சிலிர்ப்பில், செவியசைவில், நோக்கில், காலூன்றலில் தெரிய அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நின்றன. நான்காவது காளையின் முகம் ஒருமுறைகூட தெரியவில்லை அதன் வால் சுழலல் மட்டுமே அங்கிருந்து பார்க்கையில் தெரிந்தது. திரும்பிய காளை ஒன்றின் பின்னங்காலைக் கண்டபோது காளைகளின் விசை அனைத்தும் அந்தப் பெருந்தொடைகளிலேயே அசைவின்மையென இறுகி நின்றிருப்பதாக உணர்ந்தேன். புள்ளிருக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக கொழுத்து சரிந்து சிறு அசைவிலேயே பொதி என குலுங்கின.
ஆறாவது காளை நடன அரங்குக்கு வரும் தலைக்கோலி என உடல் குலுங்க மெல்லடி எடுத்து வைத்து மேலும் முன்னால் வந்தது. பேருடல் நலுங்க அது அணுகும்போது குளம்புகள் ஒன்றன்பின் ஒன்றென விழுந்த நேர்கோட்டை கண்டேன். புழுதியில் ஒரு செம்மலர் மாலை விழுந்தது போல் அந்தத் தடம். இளைய யாதவரை நோக்கி வந்து தனக்குரிய இடத்தை வகுத்துக் கொண்டது போல் ஒரு புள்ளியில் நின்று தலை தூக்கி அவர் மணத்தை பெற்றுக் கொண்டு துருத்தி என மூச்சுவிட்டு தலையை சற்றே அசைத்தது. அதன் நோக்கைக் கண்டு திரும்பி நான் இளைய யாதவரை பார்த்தேன். களம் இறங்கும் வீரனின் உடலிறுக்கமும் விழிக்கூர்மையும் கொண்டு அம்பேற்றபட்ட வில்லென அவர் நின்றிருப்பார் என எண்ணினேன். அவரோ மரக்கிளையில் நின்று தொலை தூரத்துப் புல்வெளியை நோக்கி இதழ்களுக்குள் பாடிக் கொண்டிருக்கும் யாதவன் போல எளிதாக அமைந்த உடலுடன் இளமைந்தனுக்குரிய தளர்ந்த தோள்களுடன் இடையில் கை வைத்து நின்றார்.
கனவென மயங்கிய கண்களும் புன்னகை துளிர்த்த சிற்றிதழ்களும் ஏதோ இனிய நினைவைக் காட்டிய அழகிய முகமும் அவர் அங்கு போர் புரிய வந்தவர் என்பதை மறந்துவிட்டாரா என மயங்கச்செய்தன.பாஞ்சாலரே, இவ்விளையவர் என்னிடம் ஆடத் தொடங்கி அப்போதே நெடுநாளாகிவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்திலும் மீண்டும் மீண்டும் இனிய முறையில் நான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தேன். தோற்பதன் பேரின்பத்தை தந்தையருக்கு அளிக்கின்றனர் மைந்தர்.
களநிகழ்வு தொடங்குவதற்கான அறைகூவலுக்காக நிமித்திகன் தன் இடைச்சங்கை எடுத்து ஒலித்து ஓய்ந்ததும் களம் சூழ்ந்திருந்த மக்கள் அறியாது ஒருவரோடொருவர் நெருங்க சுவர் உடல்செறிந்து சுருங்கி வந்தது. மூத்தவர் “இளையோனே, உன் தருணம்” என்றார். இளைய யாதவர் குனிந்து தமையன் கால்களைத் தொட்டு சென்னி சூடியபின் ஒரு கைப்பிடி புழுதியை அள்ளி தன் இருகைகளையும் அதில் உரசிக் கொண்டு கூர்ந்த நோக்கும் எண்ணி வைத்த வேங்கைச்சிற்றடிகளுமாக முன்னகர்ந்தார். அவரது ஒவ்வொரு அடியையும் தன் உடல் சிலிர்ப்பால் அறிந்தபடி ஆறாவது களிற்றுக்காளை அசையாது நின்றது. இங்கிருந்து பார்க்கையில் அதன் இரு விழிகளும் பக்கவாட்டில் இருந்தமையால் நோக்கற்ற பாறைப்பரப்பென முகம் தெரிந்தது.
அதை அணுக அணுக இளைய யாதவரின் அடிவைப்பு விரைவழிந்தது. அதன் முகத்திற்கு நேராக பத்தடி தொலைவில் நின்று தன் இரு கைகளையும் தேள்கொடுக்குகள் போல முன்னால் நீட்டியபடி அவர் அசைவிழந்தார். பின்னால் நின்ற ஐந்து களிறுகளும் திரும்பி அவரை நோக்கின. நான்காவது களிறு தலைதாழ்த்தி மெல்ல உறுமியது. ஏழாவது களிறு களம் புகுமென எண்ணி நான் நோக்கினேன். அது களிறா அங்கு அமைக்கப்பட்ட பாவையா என்று ஐயம் எழும்படி அது செவியைக் கூட அசைக்காது நின்றிருந்தது.
இளைய யாதவரும் ஆறாவது காளையும் ஒருவரையொருவர் நோக்கி காலமின்மையில் அவ்வாறே என்றும் இருப்பவர்கள் போல தெரிந்தனர். இருவர் உடலிலும் மூச்சு ஓடுகிறதா என்றே ஐயம் எழுந்தது. அக்கணம் ஒன்றுணர்ந்தேன். அவர்களில் எவர் முதலில் அசைகிறார்களோ அவர் தோற்பது உறுதி. போர் முடிவாவது அங்குதான். இரு உடல்களையும் ஒரே நோக்கில் அறிந்தபடி நானும் அசைவற்று நின்றேன். காளையின் விலாவும் முதுகும் சிலிர்த்தன. புள்ளிருக்கை விதிர்த்தது. அதன் செவியோ மடிந்த கழுத்துச் சதையோ கால்களோ அசையவில்லை. அதன் உடலுடன் தொடர்பற்றதுபோல கருங்குச்சம் கொண்ட குறிய வால் சுழன்றுகொண்டிருந்தது.
இளைய யாதவர் எழுதிய பாவையென நின்றார். பிளவறு பெருங்காலம் கணங்களாகி, கணமொன்றே எஞ்சி, அதுவே விரிந்து நிகழ்காலமென்றாகும் அசைவின்மை. முதல் அசைவு எவரில் எழும் என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை. எவ்வண்ணம் எழும் என்று மட்டுமே எண்ணி நெஞ்சு எடைகொண்டு கால்கள் தெறிக்க நின்றிருந்தேன். எண்ணியிருந்த கணம் மிக அண்மையில் அணுகி விலகி மீண்டும் மிக அண்மையில் என தன்னை காட்டிக்கொண்டிருந்தது. அத்தனை எண்ணியிருந்தும் சித்தம் தவறவிட்ட சிறுகணம் ஒன்றில் காளை தலைதாழ்த்தி உறுமியது. முன்வலக்காலால் மண்ணை உதைத்து புழுதி கிளப்பியது. அப்போதும் அசையாதவராக இளைய யாதவர் நின்றிருந்தார். மும்முறை தலையசைத்து செவிகளை உடுக்கென அடித்து காலால் புழுதியை அள்ளி பின்னால் செலுத்திய காளையின் உடல் காற்றேற்ற பாய்மரமென புடைத்து சற்றே பின்னால் செல்வதைக் கண்டேன். மறுகணம் அது விசையுண்ட பந்தென எழுந்து இளைய யாதவரை நோக்கி பாய்ந்தது.
யாதவரின் உடல் ஊதப்பட்ட தழல்சுடரென வளைந்து அதன் கொம்புகளை முழுமையாக தவிர்த்தது. மறுகணம் அவரது வலக்கை நீலச்சவுக்குபோல பறந்து காளையின் கழுத்தை சுற்றிக் கொண்டது. இடது கை அதன் கொம்பைப் பற்றியது. கால்கள் நிலம் தொடாமல் காற்றிலாட காளையின் கழுத்தில் உடல் தொங்க அரைவட்டமென களத்தை சுற்றி வந்தார் யாதவர். அவரைத் தூக்கி வீசிவிட முயன்று உடல் விதிர்க்க கால் ஊன்றிச் சுழன்றது காளை. நான்கு கால்களையும் மண்ணில் உதைத்து காற்றில் எழுந்து பேரெடையுடன் விழுந்து தசை அதிர நின்று திமிறி முதுகுச்சிலுப்பலால் அவரை வீசிவிட முயன்றது. முறுக்கிய வாலுடன் தன் உடலை வளைத்து சுழன்று சுழன்று கொம்பைச் சரித்து அவரை குத்த முயன்றது. இறுகிய தசைகள் அதிர அதன் கொம்பை வலக்கையாலும் புள்ளிருக்கையை இடக்கையாலும் பற்றியபடி மண்ணில் கால்கள் உரசிக்கோடிழுத்து வட்டமிட அவர் சுழன்றார்.
காளையின் சினம் கூடக்கூட அதன் உடலெங்கும் அசைவுகளில் கட்டற்ற விரைவெழுவதைக் கண்டேன் அவரைத் தூக்கியபடி அது குளம்புகள் மிதிபட்டு நிலமதிர துள்ளிக் குதித்து களத்தை சுற்றி வந்தது. இளைய யாதவரின் கால்கள் ஊன்றவேயில்லை. அவர் காற்றில் நடந்தார். வெறும்வெளியில் நீச்சலிட்டார். பின்பொரு அறியாக்கணத்தில் அவரது வலதுகால் நீண்டு துள்ளி விழுந்து மண்ணைத் தொட்ட காளையின் முன்கால்களுக்குள் புகுந்தது. நிலை தடுமாறி சரிந்து விலாவறைந்து பேரொலியுடன் புழுதியில் விழுந்தது காளை. அதன் மேல் விழுந்த இளைய யாதவர் அப்போதும் பிடிவிடாத கொம்பை நன்கு சரித்து காளைக்கழுத்தை வளைத்து மண்ணுடன் இறுக்கினார். அதன் பெருங்குளம்புகள் இரண்டு காற்றை உதைத்தன. கீழிருந்த இருகால்களின் குளம்புகள் மண்ணை மிதித்துத் தள்ளின. வால் புழுதியில் அளைந்தது. விழிகள் உருண்டு சரிய மூச்சு புழுதியை பறக்க வைக்க கோல்பட்ட முரசு போல வயிறதிர்ந்து அது உறுமியது.
அதன் ஆற்றலுக்கு நிகராக அவரது மெல்லிய கைகளின் விசை நின்ற விந்தையை விழியன்றி பிறிது எது சொல்லியிருந்தாலும் வீண்கதை என்றே எண்ணியிருப்பேன். அதன் கொம்பை முழுவிசையாலும் வளைத்து தலையை புழுதியுடன் அழுத்தி பற்றிக்கொண்டார். முழு விசையுடன் அனைத்து எடையுடன் அவரை செறுத்த காளை காற்று முற்றடங்கியபின் பாய் அமைவது போல தளர்ந்து அசைவழிந்தது. அங்கிருந்த அனைவரும் ஒரே தருணத்தில் அதை உணர்ந்தவர்கள் போல ”தசரத ராமன் வென்றான்! கோசலத்து மைந்தன் வென்றான்! வாழ்க ரகுகுலம்! வாழ்க கோசலம்!” என்று குரலெழுப்பினர்.
அக்குரலால் சீண்டப்பட்டதுபோல சற்று உடல் திருப்பி பின்கால் காட்டி நின்றிருந்த நான்காவது காளை உறுமலுடன் குளம்புகளால் நிலத்தை அறைந்தபடி தலை தாழ்த்தி பாய்ந்தது. அதன் கொம்புகள் ஈட்டிகள் போல் இளைய யாதவரை நோக்கி வந்தன. என்னுள் வாழ்ந்த தந்தை அலறி எழுந்த அக்கணத்தில் விழுந்த களிற்றின் கொம்பிலிருந்த பிடிவிட்டு துள்ளி எழுந்தார் இளைய யாதவர். புழுதியில் கால் அளைய பின்னால் சரிந்து கொண்டார். பிடி விலகிய ஆறாவது காளை முன்னங்காலுதைத்து எழுந்து கொம்பு திருப்பியது. இரு காளைகளின் கொம்புகளும் ஒன்றுடனொன்று பிணைந்து கொண்டன. அக்கணத்தில் பாய்ந்து அக்கொம்புகளை ஒன்றுடனொன்று சேர்த்து இறுகப் பற்றிக் கொண்டார் இளைய யாதவர். என்ன நிகழ்கிறது என்றறியாது இரு காளைகளும் ஒன்றையொன்று முட்டி ஒன்றின் விரைவை இன்னொன்று அழித்து தசைகள் புடைக்க அசைவிழந்தன. இரு காளைகளின் கொம்புகளையும் சேர்த்துப் பற்றியபடி நடுவே இளைய யாதவர் சுழல மலைவெள்ளம் இறங்கிய பெருஞ்சுழிபோல இரு காளைகளும் வட்டமாக சுற்றி வந்தன.
மூன்றாவது காளை அதைக் கண்டு முன்னங்காலை நிலத்தில் தட்டி தலைதாழ்த்தி உறுமியது. பின்னர் பாய்ந்து அருகே வந்தது. மிக இயல்பாக துள்ளி ஆறாவது காளையின் முதுகின் மேல் படுத்துப் புரண்டு மறுபக்கம் வந்த இளைய யாதவர் அவ்விருகாளைகளின் பூட்டிய கொம்புகளால் மூன்றாவது காளையின் கொம்பை தடுத்தார். மூன்று இணைகொம்புகளும் விந்தையான முறையில் ஒன்றுடனொன்று சிக்கிக் கொண்டன. என்ன செய்யவிருக்கிறார் என்று சூழ்ந்திருந்த கோசலத்து மைந்தர் அனைவரும் அதற்குள் உணர்ந்து கொண்டனர். வாழ்த்தொலிகள் முரசொலி என எழுந்து சூழ்ந்தன. சுற்றிவரும் காளைகளின் குளம்புகளால் செம்புழுதி எழுந்து முகிலென காட்சியை மறைத்தது. செம்பட்டுத் திரையில் வரைந்த சித்திரம் அசைவதுபோல் தெரிந்தது. அங்கு நிகழ்ந்த அச்சுழியை பிற இரு காளைகளாலும் தவிர்க்க முடியவில்லை. முதல் காளை எச்சரிக்கையுடன் காலெடுத்து அருகே வந்தது. சுழன்று கொண்டிருந்த மூன்று காளைகளின் கொம்பு மையத்தை நோக்கி அதுவே வந்து கொம்பு கோர்த்துக் கொண்டது. சற்று நேரத்தில் இரண்டாவது காளையும் ஐந்தாவதும் வந்து அச்சுழியில் இணைந்து கொண்டன.
ஆறு காளைகளின் கொம்புகள் ஒன்றுடனொன்று பிணைந்து உருவான மையம் பிரம்புக் கூடையின் மையப் பொருத்து போலவே தோன்றியது. அதைச் சூழ்ந்து காளைகளின் உடல்கள் உச்சகட்ட விசையில் தசைகள் இறுகி நின்றிருக்க, பக்கவாட்டில் கால்கள் நடக்க சுழன்றன. ஒன்றுடனொன்று முற்றிலும் சமன் செய்த விசையால் பேரெடையை தூக்கும் சக்கரம் ஒன்றின் சுழற்சி போல மெதுவாக இயங்கியது. ஏழாவது காளை அப்போதும் அதை நோக்கியபடி அங்கு நின்றிருந்தது. இளைய யாதவர் காளைக்கொம்புகளின் பின்னலை தன் கைகளால் இணைத்து ஒன்றாக்கி பற்றியிருந்தார். ஆறாவது காளையின் மேல் தன் உடல் பதித்து படுத்தபடி அவரும் அச்சுழியில் வட்டமிட்டார். கண்முன் சுழன்று கொண்டிருந்த அந்த உயிர்ப்பொறியை நோக்கி நின்றேன்.
அது நிகழ்ந்தபோது அக்காட்சியின் எழுச்சி என்னை ஆட்கொண்டிருந்தது. பின்னர் அதன் விந்தை என்னை சொல்லறச்செய்தது. ஒவ்வொரு காளையின் உடலும் ஒன்றுடனொன்று முற்றிலும் நிகர் செய்திருந்தன. அப்போதுணர்ந்தேன். அதிலொருகாளை சற்று பெரிதென்றால்கூட அப்பொறியின் முழுமை அழிந்து அச்சுழற்சி உடைந்திருக்கும். ஒன்றை ஒன்று முழுமையாக நிரப்பி அவ்வண்ணம் ஒரு சக்கரமாக ஆகும் பொருட்டே உடல் கொண்டவை போல அவை சுழன்று கொண்டிருந்தன. இளைய யாதவர் தன் வலக்கையால் இடைக்கச்சையை அவிழ்த்து உருவி எடுத்தார். அதை அக்கொம்புகளுக்குள் செலுத்தி மிக விரைவாக ஒன்றுடனொன்று சேர்த்து பின்னிக் கட்டி இறுக்கினார். பின்பு அதிலொரு கொம்பைப் பற்றி நுட்பமான முறையில் திருப்ப காளைகள் கழுத்துத்தசைகள் இறுகித்தெறிக்க விழியுருட்டி மூச்சிரைத்து தலை சரித்தன. ஒரு காளை வலியுடன் முனக மறுகணம் இடிந்து சரியும் மாளிகை போல ஒன்றின் மேல் ஒன்றாக நிலத்தில் விழுந்தன.
குளம்புகள் மண்ணையும் காற்றையும் உதைத்தன. பேருடல்கள் ஒன்றையொன்று பிதுக்கி நெரிப்பதை கண்டேன். கொம்புகளில் சிக்கி நிலம் விழுந்த அவை கால்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கி அசைவிழக்க செயலற்று மண்ணில் கிடந்தன. அக்கொம்புகள் மேல் கால் வைத்து ஏறி நின்று இரு கைகளையும் விரித்தார் இளைய யாதவர். மேடை அமர்ந்திருந்த நக்னஜித் தன்னிலை மறந்து எழுந்து இரு கைகளையும் விரித்து ”கோசல ராமன் வென்றான்! கோசலம் வென்றது!” என்று கூவினார். சூழ்ந்திருந்த பெருந்திரள் களிவெறியின் உச்சத்தில் எழுந்து கை வீசி ஆடைகளை அள்ளி வீசி பறக்கவிட்டு ஆர்ப்பரித்தது.
இளைய யாதவர் பாய்ந்து மறுபக்கம் சென்றார் வாடி வாயிலில் அப்போதும் பாதி உடல் காட்டி நின்றிருந்த ஏழாவது காளை முதல் முறையாக தலை தாழ்த்தி கொம்பை முன்நீட்டி அவரை எதிர்கொண்டது. அவர் அதை நோக்கி எளிய காலடிகளுடன் நடக்க காதுகளை அடித்துக் கொண்டு கொம்பைக் குலுக்கி முன்னங்காலால் புழுதியை உதைத்து பின்னர் நீர்ப்பெருக்கில் வரும் படகு போல முகம் தாழ்த்தி அவரை நோக்கி பாய்ந்து வந்தது. என்ன நிகழ்கிறதென்று எவரும் அறிவதற்கு முன்னரே அப்போர் நடந்து முடிந்தது. தரையில் இடக்கால் மடித்து அமர்ந்த இளைய யாதவர் வலக்காலை நீட்டி , நிலத்தை அறைந்து பாய்ந்து வந்த முன்னங்கால்களில் ஒன்றை ஓங்கி உதைத்தார். நிலைதடுமாறிய ஏழாவது பெருங்காளை பேரோசையுடன் மண்ணை அறைந்து விரைவழியாமலேயே உரசி நெடுந்தூரம் பாய்ந்து சென்றது. எழுந்து அதன் மேல் பாய்ந்து விழுந்து அதே விரைவில் அதன் கொம்பையும் புள்ளிருக்கையையும் பற்றிக்கொண்டு வலக்காலால் அதன் குளம்பை மண்ணோடு சேர்த்து அழுத்திக் கொண்டார். காளையின் வால் புழுதியை அளைய பின்னங்கால்களிரண்டும் காற்றில் குளம்பு துழாவ சில கணங்களிலேயே அது அடங்கியது.
இளைய யாதவர் எழுந்து வாடி வாயிலை நோக்கி சென்று அதன் இரு மரத்தடிகள் மேலும் கால் வைத்து எழுந்து நின்று கை தூக்கினார். திகைத்து எழுந்த ஏழாவது காளை அவரை நோக்கி ஏதும் விளங்காதது போல் நின்றது. காலை தரையில் உரசியபடி தலைதாழ்த்தி அவருக்கென எதையோ சொன்னது. கச்சைத்துணியின் கட்டிலிருந்து கொம்புகளை உருவிக்கொண்ட நான்காவது காளையும் ஆறாவது காளையும் சற்றே நொண்டியபடி விலகி எழுந்து நின்றன. தளர்ந்த கட்டிலிருந்து கொம்புகளை உருவி எழுந்த காளைகள் கால்களை உதைத்தபடி தலையை குலுக்கிக்கொண்டு முற்றத்தில் சிதறிப்பரந்து ஒன்றை ஒன்று நோக்கி நீள் மூச்செறிந்தன. அவற்றைச் சுற்றி கோசலத்து மக்கள் குரலெழுப்பி கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.
நிமித்திகன் அவையில் ஏறி ”கோசலத்துப் பெருங்குடிகளே! காற்றிலெனச் சூழ்ந்திருக்கும் குல மூதாதையர்களே ! அவிகொள்ளும் தேவர்களே! தெய்வங்களே! இதோ அறிக! துவாரகையின் இளைய யாதவர் இங்கு அமைந்த களநிகழ்வில் வென்றிருக்கிறார். கோசலத்து இளவரசியை மணக்கும் தகுதி கொண்டிருக்கிறார். அவ்வண்ணமே ஆகுக!” என்று அறிவித்தான். ”வென்றவன் கோசலத்து ராமன்!” என்று கூடி நின்ற அவையினர் கூச்சலிட்டனர். இளைய யாதவர் களத்தில் இறங்கி அங்கு நின்ற காளைகளைக் கடந்து மேடை நோக்கி வந்தார். அவரைக் கண்ட காளைகள் ஒவ்வொன்றும் தலை தாழ்த்தி உடல் சிலிர்த்து விழியுருட்டி விலகிக் கொண்டன.