இந்திரநீலம் - 73

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 8

திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சுநிலையின் அறைவாயில் கதவு திறப்பதற்காக காத்து நின்றான். மெல்லிய முனகலுடன் திறந்த வாயில் வழியாக அக்ரூரரே இரு கைகளையும் விரித்தபடி “வருக வருக இளவரசே! என் அலுவல் அறை நல்லூழ் கொண்டது. தங்கள் வருகை அதன் வரலாற்றில் என்றும் இருக்கும்” என்றபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “தங்களை சந்திக்கவேண்டுமென்று சொன்னபோது அங்கு வருவதற்கான ஒப்புதலையே கோரினேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “தாங்கள் மூத்தவர். நான் இங்கு வருவதுதான் முறை” என்றபடி அவர் கைகளை தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான். “இத்தருணத்துக்காக பெருமை கொள்கிறேன் மூத்த யாதவரே” என்று மறுமுகமன் உரைத்தான்.

“வருக!“ என்று அக்ரூரர் அவனை அழைத்துச் சென்றார். புலரி வெளிச்சம் எழுவதற்கு முன்பே அவரது அலுவல்கூடம் நிறைந்திருந்தது. துணையமைச்சர்களும் அலுவல்நாயகங்களும் தங்கள் பீடங்களில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் முன்பும் நெய்விளக்கு கொத்துச் சுடர்களுடன் நின்றிருந்தது. அக்ரூரரின் பீடத்தினருகே ஓலைகளுடனும் எழுத்தாணிகளுடனும் நின்றிருந்த மூன்று சிற்றமைச்சர்களும் திருஷ்டத்யும்னனை கண்டதும் தலைவணங்கி “பாஞ்சால இளவரசரை வணங்குகிறோம். எங்கள் நல்லூழால் தங்களை காணப்பெற்றோம்” என்று முகமன் உரைத்தனர். “இளவரசரிடம் சற்று உரையாடிவிட்டு வருகிறேன்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அருகே திறந்திருந்த சிறுவாயில் வழியாகச் சென்று “உள்ளே வருக” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் உள்ளே சென்றதும் கதவைச் சாற்றிவிட்டு வந்து குறுபீடத்தில் அமர்ந்தார். “அமருங்கள் பாஞ்சாலரே” என்று திருஷ்டத்யும்னனை அமரவைத்தார்.

“முதல் விடியலிலேயே அலுவல்நாயகங்களும் அமைச்சரும் கூடியிருப்பது விந்தையாக உள்ளது” என்றான் திருஷ்டத்யும்னன். “அமைச்சுப் பணிக்கு மிக உகந்த நேரமென்பது பிரம்மமுகூர்த்தமே” என்றார் அக்ரூரர். “உள்ளம் தெளிந்து புது எண்ணங்கள் வருவதற்கு தெய்வங்கள் அருளும் தருணம் இது.” திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். “ஒவ்வொரு எண்ணமும் சரியான சொல்லில் சென்று அமர கலைவாணி புன்னகைக்கும் நேரம். சித்தம் சார்ந்த எத்தொழிலும் முன்புலரியிலேயே நிகழவேண்டும் என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன.” திருஷ்டத்யும்னன் சிரித்து “ஆம். அனைத்து குருகுலங்களும் கல்வியை பிரம்ம தருணத்திலேயே நிகழ்த்துகின்றன. துரோணரின் குருகுலத்தில் விடியல் எழும்போது அன்றைய கல்வி முடிந்திருக்கும். ஆனால் எந்த அமைச்சுத்தொழிலும் வெயிலுக்கு முன் தொடங்கி நான் பார்த்ததில்லை” என்றான்.

அக்ரூரர் “அதற்கான சூழலும் இங்கில்லை. பெரும்பாலான அரசர்கள் மதுவருந்தி மகிழ்ந்து இரவு துயில நெடுநேரமாகும். எனவே அவர்கள் வெயில் பட்டே விழிக்கிறார்கள். அவர்கள் துயில்வதுவரை உடனிருக்கும் அமைச்சர்கள் விழிக்கையில் கண்முன் நின்றாக வேண்டியிருக்கிறது. ஆகவே அவர்களுக்கும் அந்தக் கால ஒழுங்கு அன்றி வேறு வழியில்லை” என்றார். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் இரவு விழிப்பதில்லையா?” என்றான். அக்ரூரர் சிரித்து “எட்டு துணைவிகளைக் கொண்டவர் எப்படி இரவில் அலுவல் நோக்குவார்? அந்தி சாய்வதற்கு முன்னரே அணி சூடி நறுமணம் பூசி மகளிரறைக்கு கிளம்புபவர் அவர் என்பது இங்கு அனைத்து சூதராலும் பாடப்பட்டதுதான்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அது நன்று” என்று சிரிக்க அக்ரூரர் “ஆனால் முதல் விடியல் என்றுமே அவருக்கு நகருக்கு வெளியே எங்கோதான். அவரும் அவரது படைத்துணைவரும் மட்டும் இருக்கும் ஓரிடம். குறுங்காடுகள் பாலை நிலங்கள் ஆழ்கடல்கள்…” என்றார். “அப்போது வானுடனும் மண்ணுடனும் தனித்து நின்று உரையாட விழைவார். அவர் கற்றுக்கொண்டதனைத்தும் அங்குதான்.” திருஷ்டத்யும்னன் “இளைய யாதவர் படைக்கலங்களையும் வேதாந்தத்தையும் எங்கு கற்றுக்கொண்டார் என்பது பாரதவர்ஷம் முழுக்க வகைவகையாக பேசப்படுகிறது” என்றான்.

அக்ரூரர் “அவருக்கு பதின்வயது முதல் அணுக்கமானவன் நான். எனக்கே அது இன்னமும் விடுகதைதான். பல்லாண்டுகள் எவருமறியாத வாழ்க்கையில் இருந்திருக்கிறார் என்றறிவேன். தவமுனிவர்களுடன் கானுறைந்திருக்கிறார். போர்த்தொழில் கற்றவரிடம் உடன் அமைந்திருக்கிறார். மலை வேடர்களுடனும் மச்சர்களுடனும் எங்கெங்கோ வாழ்ந்திருக்கிறார். என்ன கற்றார் என்பது அவரது கல்வி வெளிப்படும் தருணத்தில் மட்டுமே தெரியும். அவர் அறியாதது ஏதுமில்லை என்று ஒவ்வொரு தருணத்திலும் நம் சித்தம் மயங்கும். அந்த ஆடலில் என்றென்றுமென நம்மை வைத்திருப்பார்” என்றார்.

“பாஞ்சாலரே, அவர் ஒரு பெருமானுடர் என அவைச்சூதர்களால் சொல்லிச்சொல்லி உருவாக்கப்பட்டவர் என்றும் அதை அவரே திட்டமிட்டு நிகழ்த்துகிறார் என்றும் ஷத்ரியர் அவைகளில் நகையாட்டு எழுவதுண்டு என நான் அறிவேன்” என்று அக்ரூரர் தொடர்ந்தார். “ஆனால் நான் ஒன்றை சொல்லமுடியும். எந்தப் பெருவீரனும் அவனை அணுகித் தெரிந்தவர்க்கு அத்துணை வீரனல்ல. மானுடரை அணுகும்தோறும் அவர்களின் அச்சமும் அலைவுறுதலும்தான் அறியவரலாகும். கருவறை நோக்கி அமர்ந்திருக்கும் முகமண்டபத்து கருடன் சிலை என நான் ஒருகணமும் விழி கொட்டாது அவரை நோக்கிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கணமும் அவர் வளர்ந்து பேருரு பெறுவதையே நோக்கிக் கொண்டிருக்கிறேன். இன்று அப்பேருருவில் அக்கணத்தில் தெரியும் ஒரு சிறுபகுதியை மட்டும் காண்பவனாக ஆகிவிட்டிருக்கிறேன். இக்கடல் போல நம் கண் முன் விரிந்திருந்தும் ஒருபோதும் நம்மால் காணமுடியாத ஒன்றாக அவர் உருவெடுத்துவிட்டிருக்கிறார்.”

“அதிமானுடன்தான் என்கிறீர்களா?” என்றான் திருஷ்டத்யும்னன். அவன் விழிகளை நோக்கி “இல்லை” என்றார் அக்ரூரர். “மானுடரே அல்ல என்று எண்ணுகிறேன். மண்ணில் மானுடர் என்று தெரியவரும் உள்ளங்கள் கொண்டுள்ள எப்பண்பும் அற்றவர் அவர். இங்கு ஒரு மானுட உடலில் எதுவோ ஒன்று தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் விளிம்பில் அயலென நின்றிருக்கும் நாம் எப்போதும் உடலெனத் திறந்த இவ்வைந்து பொறிகளால் அவரை கண்டுகொண்டிருக்கிறோம். ஆகவே இவன் மானுடன் இவன் மானுடன் என்று ஒவ்வொரு கணமும் நம் சித்தத்தால் அறிவுறுத்தப்படுகிறோம். உள்ளம் என்பது உடலால் நிகழ்த்தப்படுவது. ஆனால் அவர் மானுடரல்ல என்று என்னுள் ஏதோ ஓர் புலன் சொல்கிறது. அது அறிவல்ல. மானுட உணர்வும் அல்ல. இரவில் மூதாதையர் நடமாட்டத்தை உணரும் நாய் கொண்டுள்ள நுண்புலன் என்று அதை சொல்வேன்.”

தன்னுள் எழுந்த அந்த மிகையுணர்வை வெல்வதற்காக அக்ரூரர் நகைத்து ”இது என் அச்சமாக இருக்கலாம். மூத்த யாதவனாக என் விழைவாகவும் இருக்கலாம். பிறிதொருவர் விழிகளுக்கு இது வெறும் உளமயக்கென்று தோன்றலாம். ஆனால் இந்த உணர்வறிதல் இதோ இந்த இரும்புத்தூண்போல் என் அருகில் என்றும் நின்றுள்ளது” என்றார்.

திருஷ்டத்யும்னன் சிலகணங்கள் அவரை நோக்கிவிட்டு “அக்ரூரரே, இத்தருணத்தை எளியதோர் நகையாட்டினூடாக கடந்து செல்லவே என் ஆணவமும் அறிவும் சொல்கின்றன. ஆனால் தாங்கள் உணர்ந்த இதை நானும் அடைந்திருக்கிறேன்” என்றான். அக்ரூரர் விழிகளை அவனை நோக்கி திருப்பி என்ன என்பதுபோல் பார்த்தார். “குறிப்பாக போர்க்களத்தில்… அங்கு அவர் மானுடராக இல்லை. தூயவடிவில் இறப்பே உருவென எழுந்தருளியது போல் இருக்கிறார். அங்கு அவர் உயிர்கொள்ளும்போது காற்றென ஒளியென ஊடாடி இப்புவியை சமைத்து நிற்கும் அடிப்படைகளில் ஒன்றே இறப்பும் என்று தோன்றுகிறது. நோக்கங்களும் இலக்குகளும் சூழலும் தருணங்களும் அனைத்தும் நாம் சமைத்துக்கொள்வதே என்று எண்ணினேன். இறப்பு என்பது அவ்வறிதல்களுக்கு அப்பாற்பட்டது. அது ஓர் உடல் கொண்டு வந்து தன்னை நிகழ்த்துகின்றது…”

“இப்பேரழகரை, அன்னைக்கு நிகரான உளக்கனிவு கொண்ட அரசரை, களத்தில் கொலையின் மானுட வடிவாகக் காண்பதென்பது எளிதல்ல. இது எனது இடரென்று நான் எண்ணவில்லை. களத்தில் யாதவ வீரர் ஒருவர்கூட திரும்பி அவரைப் பார்ப்பதில்லை என்று கண்டிருக்கிறேன். விழி திருப்பி அவரை நோக்கும் வல்லமை கொண்ட பிறிதொரு யாதவர் பலராமர் மட்டுமே. களத்தில் நெருப்பு போல, புயல் போல, கொடுநோய் போல பேரழிவு மட்டுமே என திரண்டு நின்றிருக்கும் அவரைப் பார்த்த பின்பு அரியணை அமர்ந்திருக்கும் அவர் புன்னகையை நோக்குகையில் பெருவினா ஒன்றின் முன் முட்டு மடங்கி வளைந்து மண்தொட்டு என் கல்வியும் ஆணவமும் வணங்குகின்றன” திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான்.

“பின்பொருமுறை எண்ணினேன். இப்பெருமுரண்பாட்டை என்றேனும் அவர் விளக்கக்கூடும். இனிய அழகிய நூல் ஒன்று அவர் குரலால் இந்த மண்ணில் எழக்கூடும். தலைமுறைகள் குமிழியிட்டு மறையும் முடிவற்ற மானுடப் பெருக்கு ஒவ்வொருநாளும் அதைக்கற்று அப்பெருவினாவின் முன் சித்தம் திகைத்து பின் அதைக் கடந்து இங்குள்ள யாவற்றையும் சமைக்கும் அங்குள்ள ஒன்றின் புன்னகையை அறியக்கூடும். இதுவரை இது என் உளமயக்கென்றே எண்ணியிருந்தேன். தாங்களும் அதை சொல்கையில் நான் பித்தனல்ல என்று சிறு தெளிவை அடைகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

“அதை முதலில் உணர்ந்த தருணமொன்றுண்டு” என்றார் அக்ரூரர். ”இன்று காலை முதல் விழிப்பில் அதை என் உள்ளம் அக்காலமே மீண்டது போல் அறிந்தது. அகஇருப்பில் அங்கு வாழ்ந்தேன். பின்பு விழித்துக்கொண்டு இன்று ஏன் அது மீண்டது என்று வியந்தேன். இளைய யாதவர் கோசல அரசி நக்னஜித்தியை வென்றெடுத்த நாள் அது. அன்று உடன் நானும் இருந்தேன். கோசலத்தின் புழுதி பறக்கும் கோடைகாலத் தெருக்களின் ஓசைகளை, வியர்வையும் வாடும் மலர்களும் நீராவி எழும் தளர்ந்த இலைகளும் சுவர்களின் கொதிக்கும் சுண்ணமும் கலந்த மணத்தை உணர்ந்தேன். ஒவ்வொரு முகங்களையும் தனித்தனியாக கண்டேன். எழுந்து நீராடிக் கொண்டிருந்தபோது கோசலத்து அரசியின் அழைப்பு வந்தது.”

“பிறிதொரு நேரமென்றால் அத்தற்செயலில் இருந்த ஒத்திசைவை எண்ணி வியந்திருப்பேன். இப்போது இவையனைத்தும் தொழில் தேர்ந்த கையொன்றால் தொட்டெடுத்து பின்னப்படும் பெருவலை ஒன்றின் கண்ணிகளே என்று அறிந்துள்ளேன்” என அக்ரூரர் தொடர்ந்தார். “தங்களைக் கண்டபோது இயல்பாக அவரைப்பற்றி அச்சொற்களை எடுப்பதற்கும் இன்று காலை எண்ணிய நிகழ்வே தொடக்கம்.” திருஷ்டத்யும்னன் மிக நுட்பமாக அவர் தான் பேச வருவதை நோக்கி தன்னை கொண்டு சென்றுவிட்டதை உணர்ந்தான். அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

“கோசலத்து அரசி தங்களை நான் கண்டு சியமந்தகத்தைப் பெற்று வரவேண்டுமென்று என்னை பணித்திருக்கிறார்” என்றார் அக்ரூரர். “காலையில் சந்தித்தீர்களா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம். எழுந்ததுமே மகளிர் அரண்மனைக்குச் சென்று கோசல அரசியையும் அவருடன் இருந்த அவந்தி நாட்டு அரசியையும் சந்தித்தேன். இருவரும் சினம் கிளர்ந்திருக்கிறார்கள்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் எங்கோ அதை எதிர்பார்த்திருந்தான்.

“சியமந்தக மணிக்கு எண்மரும் உரிமை கொள்ளவிருப்பதாக நேற்று யாதவ அரசியின் மாளிகைச் சேடியர் பேசிக்கொண்டது உளவுச் செய்தியாக இருவருக்கும் வந்தடைந்துள்ளது. எண்மரும் எப்படி அதை உரிமை கொண்டாட முடியும் என்று இருவரும் வினவுகிறார்கள். அருமணிகளை முடிகொண்ட ஷத்ரியர் அன்றி பிறர் சூடலாகாது என்று நெறி உள்ளது என்கிறார்கள். எனவே ஜாம்பவதியும் காளிந்தியும் அந்த மணியை சூடலாகாது என்கிறார்கள். மாத்ரியின் தந்தை முடிகொண்டவர் என்பதால் அவர் அதைச் சூடுவதில் பிழையில்லை. ஆனால் காளிந்தியும் ஜாம்பவதியும் அதைச் சூடினால் பிற ஷத்ரிய அரசியர் அதைச் சூடலாகாது என்கிறார்கள்.”

திருஷ்டத்யும்னன் வெறுமனே புன்னகைத்தான். “இந்தப் பார்ப்பனப்பழியை இதன் பீடத்திலிருந்து எழுப்பியவர் தாங்கள். எளிதில் அதிலிருந்து தப்பமுடியாது. இதை தாங்களே கையாள வேண்டுமென்று விரும்பினேன். அதைப்பற்றியே தங்களிடம் பேச விழைந்தேன்” என்றார் அக்ரூரர். “நான் கோசல அரசியை பார்க்க விழைகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “பார்க்கலாம். நீர் அவர்களிருவரையும் நேரில் சந்தித்து உரையாடுவதே தெளிவை அளிக்கும்” என்ற அக்ரூரர் உரக்க சிரித்து “அல்லது முழுக்குழப்பத்தை நோக்கி கொண்டுசெல்லும். குழப்பத்தின் உச்சியில் எங்கோ ஒரு தெளிவு முளைத்தாக வேண்டுமென்பது மானுட நெறி” என்றார்.

திருஷ்டத்யும்னனும் நகைத்தான். அக்ரூரர் “எண்மரும் அந்த மணியை சூடுகையில் எவர் சூடுவதும் ஒரு பொருட்டின்றி ஆகிறது என நீர் எண்ணுவது புரிகிறது. அதை உணருமளவுக்கு ஷத்ரிய அரசியர்கள் நுட்பம் கொண்டவரே. இன்னும் சியமந்தகம் எண்மருக்கும் உரியதென அறிவிக்கப்பட்டுள்ளதென்ற செய்தி விதர்ப்பினிக்கு செல்லவில்லை. அவர் எப்படி சினம் கொள்வாரென்று இனிமேல்தான் அறிய வேண்டும்” என்றார்.

திருஷ்டத்யும்னன் தன்னுடலை எளிதாக்கிக் கொண்டு கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தான். “நான் படைக்கலப் பயிற்சி எடுத்து நெடுநாள் ஆகிறது. என் மூட்டுப்பொருத்துகள் துருப்பிடித்து இறுகி உடல் இரும்புப்பாவை போல் காலையில் தோன்றுகின்றது” என்றான். அக்ரூரர் “உள்ளம் அதற்கேற்ப மிகைப் பணி புரிகிறதல்லவா?” என்று சிரித்தார். திருஷ்டத்யும்னனும் புன்னகைத்தபடி “ஆம், இங்கு இளைய யாதவர் ஆடவேண்டிய களம் ஒன்றில் நான் ஆடுவதாக உணர்கிறேன். இது எதுவரை செல்லும் என்று பார்க்கிறேன்” என்றான். பின்பு “தாங்கள் கோசல அரசியை இளைய யாதவர் வென்ற தருணத்தைப்பற்றி சொல்ல வந்தீர்கள்” என்றான். “ஆம்” என்றார் அக்ரூரர்.

“பாஞ்சாலரே, தாங்கள் அறிந்திருப்பீர். பெரும்புகழ் கொண்ட இக்ஷுவாகு குலத்து அரசர் ராமனின் தாய் கோசலத்து அரசி. தொல்வரலாறு கொண்ட ஷத்ரிய நாடுகள் ஒன்றாக இருந்தாலும் ராமனின் அன்னை பிறந்ததனாலேயே புராணத்தில் இடம் பெற்றது அது. இன்றும் அந்நகர் வாயிலில் பேரன்னையாக எழுந்தருளியிருப்பவள் கோசலையே. நகருள் அனைத்து தெருக்களிலும் அவளுக்கு ஆலயங்கள் உள்ளன. பெருங்கருணையரசி என்று குடிகளால் அவர் வணங்கப்படுகிறார். ஒரு வகையில் அது சுமை. கோசலை என்ற புராணப் பெருமிதத்திலிருந்து கோசலம் பின்னர் வெளியே வரவே இல்லை. அதன் தொழில் பெருகவில்லை. நகர் வளரவில்லை அங்காடிகள் சிறு கடைவீதிகள் போல சிறுத்துக் கிடக்கின்றன. அங்குள்ள ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த புராண காலகட்டத்தில் விழிமயங்கி உலவுகிறார்கள் என்று தோன்றும்.”

“சென்ற பலதலைமுறைகளாக கோசலத்து மன்னர்களும் ராமனின் குடிநீட்சி கொண்டவர்கள் என்று தங்களை எண்ணி அதன்பின் எச்சமருக்கும் வாளெடுக்காது அமர்ந்திருக்கிறார்கள். ராமனின் இளையோன் சத்ருக்னரால் கோசலம் ஆளப்பட்டது. அவர் லவணர்களை வென்று மதுராபுரியின் நகரத்தையும் துறைமுகத்தையும் அமைத்தார். வடக்கே இமயமடி வரை சென்று யமுனைக் கரையை முழுவதும் வென்றார். கங்காவர்த்தத்தின் பன்னிரு ஷத்ரிய நாடுகள் அவருக்கு கப்பம் கட்டின. அதன் பின் மெல்ல கோசலம் சரிவுற்றது, பின்னர் எழவேயில்லை.”

“காட்டில் மதயானை சென்ற தடம் தெரிவதுபோல இன்றைய கோசலம் என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்” என அக்ரூரர் சொன்னார். “ஆயினும் பாரதவர்ஷத்தின் ஷத்ரிய குலங்கள் அனைத்தும் கோசலத்துடன் மண உறவு கொள்ள விழைவு கொண்டிருந்தன. உருவாகி வரும் புதிய அரசுகளின் மன்னர்களுக்கு அது ஆரியவர்த்தத்தின் அவை ஒப்புதல். பழைய ஷத்ரிய மன்னர்களுக்கோ தங்கள் குலப்பெருமைக்கு மீண்டும் ஒரு சான்று. எனவேதான் கோசலத்தின் இளவரசியை வேட்க பாரதத்தின் அனைத்து அரசர்களும் முனைப்பு கொண்டிருந்தனர். சூதர்கள் சொல்வழி அவர் அழகும் அவர் பிறவிநூல் சொன்ன நல்லூழ்குறிகளும் அனைவரும் அறிந்தவையாக இருந்தன.”

அக்ரூரர் தொடர்ந்தார் “இங்கு துவாரகையின் மைந்தர்களும் இளைய யாதவர் இளைய கோசலையை மணம் கொண்டே ஆக வேண்டுமென்று தாங்களே முடிவு கொண்டுவிட்டனர். எப்போது அவர் செல்லப்போகிறாரென்று நகருலா செல்லும்போது முதுபெண்கள் அவரிடம் நேரடியாகவே கேட்கத் தொடங்கினர். மகதமும் கலிங்கமும் வங்கமும் கோசலைக்காக தங்கள் தூதர்களை அனுப்பிக்கொண்டிருந்தன. ஜயத்ரதனுக்கு அவர்மேல் பெருவிழைவு இருந்தது. எவருக்கு மணக்கொடை அளித்தாலும் பிறர் எதிரியாவார்கள் என்றறிந்த கோசல மன்னர் நக்னஜித்துக்கு அவரது அமைச்சர்கள் ஒரு வழி சொன்னார்கள்.”

திருஷ்டத்யும்னன் “மணத்தன்னேற்பு, வேறென்ன?” என்றான். “ஆம் அதுவே. ஆனால் அதை தங்களுக்குரிய முறையில் அவர்கள் நிகழ்த்திக் கொண்டனர்” என்றார். “ராமனின் கொடிவழிக் கதையை சொல்லும் ரகுகுலசரிதம் என்னும் காவியத்தை தாங்கள் அறிந்திருக்கலாம்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் “கற்றுள்ளேன்” என்றான். “அதில் ராமன் தன் விற்திறனை நிறுவ ஓர் அம்பில் ஏழு மரங்களை முறித்தான் என்றொரு கதை வருகிறது. அதற்கு நுண்ணிய வேதாந்தப் பொருள் கொள்வது வழக்கம்.”

“ஏழு மரங்களும் உடலில் சுழலும் ஏழு யோகத்தாமரைகளே என்பார்கள். மூலாதாரம் முதல் சகஸ்ரம் வரை மலர்ந்த ஏழு புள்ளிகள். அவற்றை தன்னிலை என்ற ஒற்றைப்பாம்பால் நேர்கோடென ஆக்கி ஊழ்கமெனும் அம்பால் முறித்து மெய் நிலையை அடைந்தான் ராமன் என்பதே அதன் பொருள் என்பார்கள்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “எளிய முறையில் ஏழு விண்ணுலகங்கள் என்பதுண்டு” என்றான்.

அக்ரூரர் “ஏழு கீழுலகங்கள் என்பவரும் உண்டு” என்றார். “ஏழு என்ற எண் ஊழ்கத்தளத்தில் நுண்பொருள் பல கொண்டது. எதுவாயினும் ஆகுக, இம்முறையும் அதற்கிணையான ஒன்றையே அமைக்கவேண்டுமென்று கோசலத்து அமைச்சர்கள் முடிவெடுத்தனர். அங்கே அவர்கள் பெருந்தொழுவத்தில் ஏழு களிற்றுக்காளைகள் இருந்தன. அவற்றுக்கு சூரியனின் ஏழு புரவிகளின் பெயர்கள் இடப்பட்டிருந்தன. காயத்ரி, பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்தி.” திருஷ்டத்யும்னன் “வேதங்களின் ஏழு சந்தங்கள்” என்றான். “ஆம், ஏழுநடை” என்றார் அக்ரூரர்.

அவை வெறும் காளைகள் அல்ல. இமயமலையில் வாழும் கருங்களிறுகளை அறிந்திருப்பீர்கள். அவை எந்நிலையிலும் மானுடரை ஏற்காதவை. இளமையிலேயே கன்றுகளை கைப்பற்றி கொண்டுவந்து பேணி தழுவி உணவிட்டு வளர்த்தாலும் அவை இணங்குவதில்லை. அவற்றுக்குள் மானுடர் நிறைந்து வாழும் நகரங்கள் உளம் பதிவதில்லை. எங்கிருந்தாலும் எப்புறமும் வெறுமை திறந்த இமயச்சரிவிலேயே அவை வாழ்கின்றன. அவற்றுக்கு ஒதுங்கி வழிவிடத்தெரியாது என்பார்கள். மக்கள் திரளோ இல்லங்களோ எதுவாக இருப்பினும் ஊடுருவிக் கடந்து அப்பால் செல்வதே அவற்றின் வழக்கம். கொடுங்காற்றென செல்லும் வழியை இடித்தழிப்பவை.

கோசலத்தின் ஏழு களிற்றுக்காளைகள் அவற்றைப் பேணிய ஏழு சூதர்களை அன்றி பிறரை அறியாதவையாகவே உடல்பெருகி வளர்ந்தன. அச்சூதரும்கூட அவற்றின் நாசி துளைத்து இழுத்துக்கட்டிய இருபக்க வடங்களை இருவர் இழுத்துப் பற்றியிருக்கையில் மட்டுமே அருகணைய முடியும். மூங்கில் சட்டங்களில் அசைவற்றுக் கட்டி நிறுத்திய பின்னரே நீராட்ட முடியும். மூக்குவடத்தை இறுகக்கட்டிவிட்டே அணி செய்ய முடியும். அவ்வேழு களிறுகளையும் வென்று அவை நிற்பவரே கோசலையைக் கொள்ளும் தகுதி கொண்டவர் என்று முறைப்படி அறிவித்தார் நக்னஜித்.

திருஷ்டத்யும்னன் “பாரதவர்ஷத்தில் எவர் அவற்றை வெல்ல முடியுமென அவர் அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அவ்வறிவிப்பைப் பெற்றதுமே அது இளைய யாதவரை நோக்கி விடுக்கப்பட்டது என்பதை ஜராசந்தரும் ஜயத்ரதனும் பிறரும் அறிந்து கொண்டனர். புராணப்புகழ் கொண்ட கோசலம் தன்னை யாதவச் சிறுகுடியென அறிவித்துக் கொண்டிருக்கிறது என்று தன் அவையில் ஜராசந்தர் எள்ளி நகையாடினார் என்று கூட அறிந்தேன்” என்றார் அக்ரூரர். “ஒற்றர்கள் வழியாக அக்காளைகளின் இயல்புகளை ஒவ்வொரு அரசரும் தெரிந்து கொண்டனர். எவரும் அவற்றை அணுகத் தலைப்படவில்லை. ஒரு காளை என்றால்கூட சிலர் துணிந்திருக்கக்கூடும். ஏழு காளைக்களிறுகளை ஒரே களத்தில் நேர்கொள்வதென்பது இளைய யாதவருக்கே இயல்வதாகுமா என்று நானும் ஐயப்பட்டேன்” என அக்ரூரர் தொடர்ந்தார்.

எனவேதான் இளவரசியை வெல்ல இளையவர் கிளம்பியபோது உடன் செல்ல விழைந்தேன். என் விழைவை அறிந்தவர் போல திரும்பி “காளைகளை நான் வெல்லும் முறையை காண விழைகிறீரா அக்ரூரரே?” என்றார். “ஆம்” என்றேன். அருகே நின்ற மூத்தவர் “இதில் என்ன முறை இருக்கிறது? காளைகளை வெல்ல ஒரே வழி கொம்புகளைப் பற்றி கீழே தாழ்த்துவது மட்டுமே” என்றார். “என் வரையில் மேலும் எளிய வழி ஒன்றுள்ளது” என்று மேலும் நகைத்தார். “காளை நம்மைநோக்கி கொம்பு தாழ்த்துவதற்குள் அதன் நெற்றிப்பொருத்தில் ஓங்கி அறைந்து மண்டை ஓட்டை உடைக்கவேண்டியதுதான். குருதி வழிய அங்கே விழுந்து அது இறக்கும். மாட்டைக் கொல்வது யாதவனுக்கு குலநெறி அல்ல. ஆனால் அவ்வூனை உண்டு முடிப்பதென்றால் செய்யலாம். ஏழு களிறுகளையும் உண்ண முடியாவிட்டாலும் ஒன்றை முழுமையாக நானே உண்ணமுடியுமென்று தோன்றுகிறது.” கூடி நின்றவர் நகைத்தனர். நான் விழிதாழ்த்திக்கொண்டேன்.

சற்று உள்ளப்பதைப்புடனேயே அவர்களுடன் கிளம்பினேன். கோசலத்தை நாங்கள் அடைந்தபோது சிறிய கோட்டை வாயிலில் அமைந்த கௌசல்யை அன்னையின் ஆலயம் கோடைகாலத்துத் தளிர்களாலும் மலர்த்தோரணங்களாலும் பட்டுப்பாவட்டாக்களாலும் வண்ணச்சிறுகுடைகளாலும் அணி செய்யப்பட்டிருந்தது. இளைய யாதவரின் அணி நூறு புரவிகளில் கோசலத்தின் முகப்பை அடைந்தபோது கோட்டைக்கு மேல் காவல்மாடத்திலிருந்து பெருமுரசு எழுந்து வாழ்த்தியது. வாயில்முற்றத்தில் காத்து நின்ற நக்னஜித்தும் அவரது அகம்படியினரும் அணுகி வந்து தலை வணங்கி முகமன் சொல்லி வரவேற்றனர்.

இளைய யாதவர் நக்னஜித்தை வணங்கி “ரகுகுலத்து ராமனின் அன்னை பிறந்த மண்ணில் கால்வைக்கும் நல்லூழுக்காக விண்ணளந்த பெருமானை வணங்குகிறேன் அரசே” என்று சொன்னார். அக்குறிப்பால் மகிழ்ந்த நக்னஜித் ”ஆம், எங்கள் குலம் ராமனின் கொடி வழி வந்தது. தம்பி சத்ருக்னர் இருந்து ஆண்ட அரியணையில் எந்தையரும் நானும் கோல்நாட்டி முடிசூடி குடை கொண்டிருக்கிறோம்” என்றபின் கைகூப்பி “நகர் புகுக துவாரகை தலைவரே” என்றார்.

கோசலத்தின் அரசத் தேரிலேறி மூத்தவரும் இளையவரும் நகர்வலம் சென்றனர். கோட்டைப் பெருவாயிலைக்கடந்து அரசச்சாலைக்குள் நுழைந்ததும் இருபுறமும் கூடியிருந்த கோசலத்து மக்களின் வாழ்த்தொலி வந்து சூழ்ந்துகொண்டது. அரிமலர் மழையில் கை வணங்கி இளையவர் சென்றார். அவர்களை நோக்கிய கோசலவிழிகள் ஒவ்வொன்றும் அடைந்த சிறு அதிர்வை நான் கண்டேன். முன்னரே அறிந்த ஒருவரை மீளக்காணும் உணர்வு அது என்று எனக்குத்தோன்றியது. அவரது தோள்களைத் தொட்டுத் தாவிய விழிகள் தாள்வரை வந்து மீண்டன. பெண்டிர் அவரை மேலும் காணும் பொருட்டு பிறரை உந்தி முன் வந்தனர். பல முதியவர்கள் வாழ்த்தும் சொல் எழாது சற்றே வாய் திறந்து திகைத்து நோக்கியிருப்பதைக் கண்டேன்.

அவர்கள் எண்ணுவதென்ன என்பது என் உள்ளத்தில் எழுவதற்கு முன்பே ஒரு முதியவள் இருகைகளையும் விரித்து தேரை நோக்கி ஓடிவந்து பெருங்குரலில் “மீண்டும் கோசலத்துக்கு எழுந்தருளினான் தசரத ராமன்! என்னவரே, குடியே, கேளீர்! இவன் ராமன்!” என்று கூவினாள். அக்கணம் என் உடல் மெய்ப்புற்றது. விழி உருகி கை கூப்பி தேர்த்தட்டில் நானும் அவரை வணங்கி நின்றேன். அனுமனோ அங்கதனோ வீடணனோ என அப்போது என்னை உணர்ந்தேன்.

குழற்பீலி சூடி, சக்கரம் இடை அமைத்து, நீலமணி மேனியுடன் நின்றவன் வில்லேந்தி தம்பியர் துணையுடன் எழுந்த கௌசல்யை மைந்தனே என்று அப்போது முழுதுணர்ந்தேன். என் முன் அலையடித்த கோசலத்து முகங்கள் அனைத்தும் ஒரு சேரக்கூவின. “தசரத ராமன் வாழ்க! ரகுகுலத்தோன்றல் வாழ்க! சீதை கொழுநன் வாழ்க! இலங்கை வென்று அயோத்தியை ஆண்ட எந்தை இங்கெழுக!” கண்முன் காலம் தன்னை அலையென சுருட்டி பின்னகர்வதை அறிந்தேன். அங்கிருந்தவன் ராமன். அங்கு நிகழ்ந்தது அவன் வாழ்ந்த திரேதாயுகம்.

நான் அதில் இருந்தேன், பாஞ்சாலரே. கோசலத்து அரண்மனைக்குச் சென்றால் கௌசல்யையை, கைகேயியை, சுமித்ரையைக் காண முடியும். இன்னும் சில அறைகளைக் கடந்து உட்சென்றால் கண் கனிந்து எழுந்து மைந்தனுக்காகக் காத்திருக்கும் தசரதச் சக்ரவர்த்தியை காணமுடியும். எங்கோ பத்து தலைகளும் பெருபுயங்களுமாக இலங்கை வேந்தனே இருக்கக்கூடும். என் உடல் அருவி விழும் மரக்கிளை போல அதிர்ந்து கொண்டிருந்தது.

கோசலத்தின் புழுதிபடிந்த தெருக்களினூடாக தேர் செல்லும்போது இளங்காலை ஒளியிலெழுந்த புழுதியின் முகில் பொன்னென ஆயிற்று. நீலம் பொன் மூடிப் பொலிந்தது. அரண்மனையின் உப்பரிகை எழுந்த தேர்வீதி வழியாகச் சென்றபோது அது கோசலமல்ல மிதிலை என்றே உணர்ந்தேன். அங்கு உப்பரிகை முகட்டில் விழிமலர்ந்து எழுந்தவள் ஜானகி. எத்தனை நூறு கவிஞர்களால் இயற்றப்பட்டது அத்தருணம்! இன்னும் எத்தனை கவிஞர் சொல்லில் மீண்டெழப்போவது! பாஞ்சாலரே, அத்தருணத்தின் அணிவிளிம்பில் அன்று நானும் நின்றிருந்தேன். வளைந்து சென்ற சாலையில் தேர் திரும்பியபோது இளையவர் விழி தூக்கினார். உப்பரிகையில் தன் இரு சேடியர் அருகே நிற்க அணிச்செதுக்கு மரத்தூணைப் பற்றி நின்ற அன்னை குனிந்து கீழே நோக்கினாள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.