இந்திரநீலம் - 70
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 5
மத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே “தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே. நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான். “உள்ளே வந்து முகமன் சொல்வதாயின் அதற்கு மேலும் பல அரசியல் உட்பொருட்கள் விளையும். துவாரகையில் ஒவ்வொரு சந்திப்பும் நாற்கள விளையாட்டின் காய்நீக்கங்கள்தான்.” திருஷ்டத்யும்னன் “இருந்தாலும்…” என்று தொடங்க “தங்கள் சந்திப்பு நெடுநேரம் தொடர வாய்ப்பில்லை” என்றான் சாத்யகி.
திருஷ்டத்யும்னன் “ஆம். என்னை எதற்கு அழைத்திருக்கிறார்கள் என்று உய்த்துணர முடியவில்லை. அது நான் பொருட்படுத்தும்படி பெரிதாக இருக்கும் என்றும் எண்ணவில்லை” என்றான். சாத்யகி புன்னகைத்தான். திருஷ்டத்யும்னனை லக்ஷ்மணையின் அமைச்சர் விஃபூதர் வணங்கி வரவேற்றார். காவல் வீரர்கள் அரசமுறைப்படி வாழ்த்தொலி எழுப்பினார்கள். வளைந்த பெருந்தூண்கள் தாங்கிய உயர்ந்த கூரைகொண்ட இடைநாழி வழியாக பளிங்குத்தரையில் நிழல் தொடர நடந்துசெல்லும்போது அத்தூண்களின் உச்சியில் இருந்த கவிழ்ந்த மலர்க்குவை அமைப்பை திருஷ்டத்யும்னன் அண்ணாந்து நோக்கினான். அவன் சென்ற அனைத்து அரசியர் மாளிகைகளும் ஒரே யவனச் சிற்பமுறைப்படி கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.
புன்னகையுடன் இடைநாழியின் மறுபக்கம் சென்று சிம்மமுகப்பு கொண்ட கைப்பிடி வளைந்தேறிய அகன்ற மரப்படிக்கட்டில் ஏறி உள்ளே சென்றான். அங்கு நின்றிருந்த அரசியின் அணுக்கச்சேடி வணங்கி அவனை அழைத்துச்சென்று அரசியின் சிற்றவைக்கூடத்தின் வாயிலுக்கு முன் நிறுத்தினாள். திருஷ்டத்யும்னன் அவள் உள்ளே சென்று ஆணை பெற்று வருவதுவரை அங்கே காத்து நின்றான். சற்று நேரமே அங்கு நின்றிருந்த போதும் உள்ளம் கொண்ட தொலைவை அவன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். கதவு மீண்டும் திறந்து அங்கே சேடி தோன்றி அவனிடம் உள்ளே செல்லும்படி சொன்னாள்.
அவன் அக்கணம் வரை எண்ணிக்கொண்டிருந்தது லக்ஷ்மணையின் தோற்றத்தைப்பற்றி மட்டுமே என உணர்ந்து திருஷ்டத்யும்னன் மீண்டும் புன்னகைத்துக் கொண்டான். இளைய யாதவரின் எட்டு துணைவியரையும் சொல் வடிவாக்கி நாடெங்கும் பரப்பிவிட்டிருந்தனர் சூதரும் கவிஞரும். அகத்தில் எழுந்த அப்பேரழகியரை நேரில் காண்கையில் மண்ணிலிறங்கும் சோர்வு எழும் என்றே எண்ணுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் அச்சொற்களுக்கு மேலாகவே அவர்கள் தோன்றினர். அச்சொற்களை அவர்களும் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மலரும் சுடரும் காட்டும்தோறும் கற்சிலையில் தெய்வம் எழுவதுபோல அவர்கள் மலர்ந்தெழுகிறார்கள்.
சூதர்களின் கவிச்சொற்கள் சமைத்த திருமகளை, சித்திரம் எழுதினாற் போலிருந்த லக்ஷ்மணையைக் கண்டதும் அவன் அதுவரை கண்டிருந்த அழகியரில் நிகரற்றவள் அவள் என எண்ணினான். அவ்வறை விட்டு வெளியே சென்றதும் நால்வரில் எவர் அழகி என குழம்பப்போகிறோம் என்று எண்ணி அப்புன்னகையுடன் தலைவணங்கி ”மத்ர நாட்டு அரசியை வணங்குகிறேன். தங்கள் சொல்லுக்கு என் வாள் பணிகிறது. பாஞ்சால நாட்டுக்குடிகளும் மூதாதையரும் தெய்வங்களும் தங்களை வணங்கும் வாய்ப்பை நான் பெற்றமைக்காக மகிழ்கிறார்கள். துருபதன் குலமும் பெருமை கொள்கிறது” என்றான்.
பீடத்தில் அரசணிக்கோலத்தில் அமர்ந்திருந்த லக்ஷ்மணை அவனை நோக்கி “தங்களை சந்திக்கவேண்டும் என விழைந்திருந்தேன். சியமந்தக மணிக்காக போர்புரிந்து தாங்கள் மீண்டபோது சூதர் உங்களைக் குறித்தே பாடிக்கொண்டிருந்தனர். அச்சொற்களுக்குப் பின் இருந்த இளையோனைக் காண ஆவல் கொண்டேன். இன்று இவ்வண்ணம் கண்டதில் மகிழ்கிறேன்” என்றாள். முகமன் ஏதும் இன்றி நேரடியாக அவள் பேசியது அவனை மீண்டும் புன்னகைக்க வைத்தது. ஒன்று அரசமுறைமைகள் அறியாத சிற்றரசின் இளவரசி அவள். அவ்வெளிமையே அவள் ஆற்றலாக இருக்கக் கூடும். அல்லது அவள் மிகத்தேர்ந்த அரசவை நடிப்பை பயின்றவள்.
அவ்வெண்ணத்தை அறிந்து தொடர்வது போலே லக்ஷ்மணை “எனக்கு அரசு சூழ்தல் எதுவும் தெரியாது பாஞ்சாலரே. என் சிற்றில்லத்தில் முதுவேளிர் மகள் போலவே நான் வளர்ந்தேன். நினைவறிந்த நாள் முதலே இசையன்றி வேறெதுவும் கற்கவில்லை” என்றாள். “ஆகவேதான் என் தோழியை இங்கு வரச்சொன்னேன். உங்களிடம் என் உள்ளத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது அவள் உடனிருப்பது நன்று என நினைத்தேன்” என்றாள். “யார்?” என்றான் திருஷ்டத்யும்னன். “கேகய நாட்டு அரசி பத்ரை” என்றாள் லஷ்மணை. “ஆம், அது நன்றே” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் “இளைய கைகேயியைப்பற்றி நற்சொற்களை கேட்டிருக்கிறேன். அவர் தந்தை திருஷ்டகேது அமைத்த அரச நிகழ்வொன்றுக்கு இளமையில் தந்தையுடன் சென்றிருக்கிறேன். அவரது அன்னை சுருதகீர்த்தி இளமையில் என்னை மடியில் அமர்த்தியிருக்கிறார்” என்றான்.
லக்ஷ்மணை முகம் மலர்ந்து “அணுக்கமாகிவிட்டோம் பாஞ்சாலரே” என்றாள். “தன் தந்தைக்கு உங்களைத் தெரியும் என்று முன்னரே பத்ரை சொல்லியிருந்தாள். இத்தனை அணுக்கம் என்று அறிந்திருக்கவில்லை.” முகமன் சொல்லை அப்படியே பொருள்கொண்டு அவள் பேசுவதை உணர்ந்து மீண்டும் புன்னகைத்து திருஷ்டத்யும்னன் “ஆம், நான் அவர்களுக்கு மைந்தனைப்போல” என்றான். “அந்நம்பிக்கையில்தான் உங்களை வரச்சொன்னேன்” என்றாள் லக்ஷ்மணை.
கதவு திறந்து சேடி வந்து வணங்கி “கேகய நாட்டு அரசி” என்றாள். “வரச்சொல்” என்றாள் லக்ஷ்மணை. கதவு திறந்து உள்ளே வந்த கைகேயி ஆண்மை நிறைந்த தோள்களும் விரிந்த கூர்விழிகளும் இடைவரை சரிந்த கரியகூந்தலும் கொண்ட ஷத்ரியப் பெண். அவள் நடந்தபோது இறுகிய இடையசைவிலும் சீரான கால்வைப்பிலும் படைக்கலப் பயிற்சி பெற்றிருக்கிறாள் என்பது புரிந்தது. கழுத்தும் புயங்களும் போர் வீரர்களுக்குரியவை என இறுகியிருந்தன. நீள்வட்ட முகம். காதோர மயிர் நன்கு இறங்கி மேலுதட்டில் நீலநிற பூமயிர்ப் பரவலுடன் பெரிய கூர்மூக்குடன் வெண்கலச்சிற்பம் போலிருந்தாள். சற்றே தடித்து வளைந்த கீழுதடுடன் பெரிய வாய் உறுதி தெரியும்படியாக அழுந்தி மூடியிருந்தது.
திருஷ்டத்யும்னன் எழுந்து “கேகய நாட்டு அரசியை வணங்குகிறேன். பாஞ்சாலத்தின் குடிகளும் மூதாதையரின் குலதெய்வங்களும் மகிழ்கின்றன” என்றான். அக்கணமே லக்ஷ்மணை வாய்பொத்தி வளையல் ஒலியும் சிரிப்பொலியும் கலக்க “இதைத்தான் எனக்கும் சொன்னார்” என்றாள். திருஷ்டத்யும்னன் ஒருகணம் அவளை திரும்பி நோக்கினான். பின்பு சற்றே திரும்பி பத்ரையின் விழிகளில் ஒளிகாட்டி மறைந்த இரு கூர்வேல் நுனிகளை பார்த்தான். பத்ரை “தங்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு கேகயமும் நானும் பெருமை கொள்கின்றோம்” என்றாள். “நானும் இப்படி சொல்லியிருக்க வேண்டுமோ?” என்றாள் லக்ஷ்மணை.
இம்முறை திருஷ்டத்யும்னன் சிரித்து விட்டான். “அரசி, முகமன்கள் என்பவை இரு காட்டு எருமைகள் சந்தித்துக் கொள்ளும்போது கொம்புகளை மெல்ல தட்டிக்கொள்வது போல என சூதர்கள் சொல்வதுண்டு” என்றான். உடல் அதிர நகைத்தபடி “கொம்பு இல்லாத எருமை என்ன செய்யும்?” என்றாள் லக்ஷ்மணை. திருஷ்டத்யும்னன் “கொம்பற்றவை முன்னரே தலைதாழ்த்தி தங்களுக்கு கொம்பு இல்லையென்பதை சொல்லிவிட வேண்டியதுதான்” என்று சொல்லி சிரித்தான்.
அவர்களின் சிரிப்பை சற்றும் பகிர்ந்து கொள்ளாமல் இறுக்கமான அசைவுகளுடன் தன் குழலை பின்னால் விலக்கிப்போட்டு ஆடை சீரமைத்து பீடத்தில் நிமிர்ந்து அமர்ந்து கால்மேல் கால் போட்டு கைகளை முழங்கால் மேல் வைத்த பத்ரை “இன்று மாலை யாதவ அரசியை சந்திக்கவிருக்கிறீர்கள் அல்லவா?” என்றாள். “ஆம் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன்.
லக்ஷ்மணை “பத்ரையின் ஒற்றர்களும் எங்குமுள்ளனர் இளவரசே” என்றாள். சினத்துடன் பத்ரை திரும்பி அவளை நோக்க பிழையாக ஏதோ சொல்லிவிட்டோம் என்றுணர்ந்த லக்ஷ்மணை “இவ்விளையாட்டு எதிலும் நான் இல்லை. என்ன நிகழ்கிறது என்பதே எனக்கு புரிவதில்லை. இசை மிக எளியது. அரசுசூழ்தலுக்கு அதில் இடமில்லை” என்றாள். பத்ரை அவள் விழிகளையே கூர்ந்துநோக்க அதில் வந்த ஆணையை பெற்றுக் கொண்ட லக்ஷ்மணை பொறுத்தருளக்கோரும் பூனை என சற்றே உடல் ஒசிந்து அமர்ந்தாள்.
பத்ரைக்கு முற்றிலும் மாறாக கொடிபோன்ற நீண்ட மெல்லிய உடலும், வட்டமான குழந்தை முகமும் கொண்டிருந்தாள் லக்ஷ்மணை. சிரிக்கும் சிறிய கண்களும், சிவந்த கொழுங்கன்னங்களும், குமிண்சிற்றிதழ்களும், தொட்டு வைத்தாற்போல் மூக்கும் அவளை சிறுமியென்றே காட்டின. சற்றே முன்வளைந்த தோள்களும், உருண்ட கைகளும், மலர்க்குடம் போன்ற நீண்ட விரல்களுமாக அவள் வீணைக்கெனப் பிறந்தவளெனத் தோன்றினாள். வெண்கலைதேவி என பொற்பின்னல்களிட்ட வெண்பட்டாடை அணிந்து வெண்முத்து மாலை முலைகள் மேல் தவழ, நுரையெனச் சுருண்ட குழலிலும் வெண்முத்தாரம் சூடி பனிபடிந்த மலர்மரம் போலிருந்தாள்.
லக்ஷ்மணை சொல்லாப் பொருளறியாதவள். பத்ரையோ கருவறைக்குள்ளிருந்தே படைக்கலம் கொண்டு பிறந்தவள் போல் இருந்தாள். செந்நிறப் பட்டும் செவ்வைர ஆரமும் செங்கனல் கற்கள் ஒளிவிட்ட குண்டலங்களும் அணிந்து கூரிய நிலைவிழிகளுடன் புதரில் இரைக்கெனக் காத்திருக்கும் வேங்கை போல நோக்கியிருந்தாள். திருஷ்டத்யும்னன் “இன்று தங்களை சந்திக்க நான் வந்தது எதற்காகவென்று அறிய விழைகிறேன் அரசி” என்றான். பத்ரை “இதற்கு முன் நீங்கள் விதர்ப்பினியை சந்தித்திருக்கிறீர்கள். அவள் யாதவ அரசியிடம் ஏன் உங்களை அனுப்பினாள் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
திருஷ்டத்யும்னன் ஆமென தலை அசைத்தான். “சியமந்தகத்தைப் பெற்று வரும்படி அவள் ஆணையிட்டிருக்கிறாள் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “சியமந்தகம் அவளுக்கு உரியது என்று எண்ணுகிறாள்” என்றாள் பத்ரை. “சிற்றிளமையிலேயே அவள் விழிகள் அதில் பதிந்துவிட்டன என என் தந்தை சொல்லி அறிந்துள்ளேன்” என்றாள். “விதர்ப்ப அரசி சியமந்தகத்தை எங்கு பார்த்தார்?” என்றான் திருஷ்டத்யும்னன் வியப்பை காட்டிக்கொள்ளாமல்.
“கேகய நாட்டில் முன்பொருமுறை என் தந்தை அரசர்கள் அனைவரையும் வரவழைத்து பெருவிருந்தொன்றினை நடத்தினார். நான் பிறந்து அரைமணி அணியும் இருபத்தி எட்டாவது நாள் விழவு அது. சூழ்ந்திருந்த அணுக்க நாட்டரசர்கள் அனைவரையும் என் தந்தை கேகயத்துக்கு அழைத்திருந்தார். புராணப்புகழ்பெற்ற இக்ஷுவாகு குலத்து அரசர் தசரதனின் இளைய துணைவி பத்ரையின் பெயரே எனக்கு இடப்பட்டுள்ளது. என்னையும் பிறந்த நாள் முதலே கைகேயி என்றே அழைத்தனர். என் பிறப்புத்தருணத்தைக் குறித்த நிமித்திகர்கள் கேயகத்தின் பொன்னாட்கள் மீண்டு வந்துவிட்டன என்றனர். அதை பாரதவர்ஷமெங்கும் அறிவிக்க விழைந்தார் எந்தை. அவ்விழவுக்கு பாரதவர்ஷத்தின் பத்தொன்பது ஷத்ரிய மன்னர்கள் வந்திருந்தனர். யாதவர்கள், மச்சர்கள், மதிநாரர்கள், ஆசுர குடியரசர்கள் என பெரும் அரசமன்று அன்று கூடியது.”
ஹரிணபதத்தின் சத்ராஜித்தும் அவர் இளவல் பிரசேனரும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்பெருமன்று கூடுவதற்கென்றே கலிங்கச் சிற்பிகளை வரவழைத்து பெருமாளிகை ஒன்றை அமைத்து அதன் நடுவே நீள்வட்ட வடிவில் ஓர் அவையரங்கும் அமைத்திருந்தார் எந்தை. ஷத்ரியர்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டு அவை அமர்த்தப்பட்டனர். சிற்றரசர்கள் தங்கள் குலவரிசைப்படி அமர்ந்தனர். பன்னிரண்டாவது நிரையில் வலதுஓரத்தில் ஹரிணபதத்தின் சிற்றரசருக்கான பீடம் போடப்பட்டிருந்தது. அன்று அங்கு வந்தவர்களில் மகதத்தின் அரசரும், கோசலத்தின் அரசரும், விதர்ப்பத்தின் அரசரும், வங்க மன்னரும், கலிங்க மன்னருமே அனைவராலும் நோக்கப்பட்டனர். மக்களின் வாழ்த்துக்கள் அவர்களை நோக்கியே சென்றன. அஸ்தினபுரியின் பீஷ்மப் பிதாமகர் வந்தபோது பிறர் எவரும் அடையாத வாழ்த்தைப் பெற்றார்.
அனைவரும் அவையமர்ந்து சற்று கழித்தே சத்ராஜித் வந்தார். அவர் தன் மார்பில் சியமந்தக மணியை அணிந்திருந்தார். அவையெங்கும் மூச்சும் சொல்லும் கலந்த முழக்கம் எழுந்தது. பீஷ்மர் அன்றி பிற அனைவருமே திரும்பி சத்ராஜித்தை நோக்கினர். சற்று நேரம் அந்த அவையில் சியமந்தகமன்றி பிறிது எதுவும் மையம் கொண்டிருக்கவில்லை. ஒளிமிக்க தாலம் என தன் மீது சத்ராஜித்தை சியமந்தகம் ஏந்தி வந்தது என அவைக் கவிஞர் பின்பு பாடினார். நெஞ்சில் திறந்த இளஞ்சூரிய விழியுடன் கைகளைக் கூப்பியபடி இதழ்களில் ஏறிய புன்னகையுடன் வந்த சத்ராஜித் தன் பீடத்தில் கால்மேல் கால் போட்டமர்ந்து எதையும் நோக்காத விழிகளுடன் இருந்தார்.
சற்று நேரம் கழித்தே அவையில் இருந்த அமைதியை உணர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் நிலை மீள அவை பெருமூச்சுகள் நாகக்கூட்டமென சீறும் ஒசையுடன் விழித்தெழுந்தது. அதன் பின் ஒருவரும் சியமந்தகத்தை நோக்கவில்லை. அந்த விழி அங்கு திறந்திருப்பதை அவர்களின் உடலில் ஒவ்வொருகணம் உணர்ந்தபோதும் முகங்கள் பிறிதொரு பாவனையை காட்டின. அங்கிருந்த எந்த மானுடரையும் விட பெரியதாக அந்த மணி திகழ்ந்தது.
முரசொலித்து கொம்பெழுந்ததும் அரசர் அரசியுடன் அவைபுகுந்தார். வைதிகமுறைமைகளும் அரசச்சடங்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தன. நான் பொற்தொட்டிலில் பட்டின்மேல் படுக்கச்செய்யப்பட்டு அவை நடுவே கொண்டுவைக்கப்பட்டேன். வைதிகர் தங்கள் முறைமைகளைச் செய்து மலரிதழ்களால் கங்கை நீரைத் தொட்டு என்மேல் தூவி தூய்மையாக்கி வேள்விச் சாம்பலை நெற்றியிலிட்டு அவியன்னம் ஊட்டி வாழ்த்தினர். பின்னர் அவைக்கொலுவமர்ந்த முடிமன்னர் ஒவ்வொருவரும் முறைப்படி வந்து என்னை வாழ்த்தி என் அன்னையின் கைகளில் மகவுப்பரிசில்களை அளித்தனர். வைரங்களும் மதிப்புறு மணிகளும் அரும்பொருள் பிறவும் வந்தன.
ஆயினும் எப்படியோ அதன் ஒருமையை இழந்துவிட்டிருந்த சொல்லப்படாத ஒன்றாக சியமந்தகமே அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தது. சத்ராஜித் தன் இளையோனுடன் அருகில் வந்து எந்தையையும் தாயையும் வணங்கி எனக்கு சிறு செம்மணிக் கணையாழியை அணிவித்தார். முகமன்களை அவருடன் எந்தை பரிமாறிக்கொண்டிருந்தபோது காலுதைத்து நான் எழமுயன்றேன். என் தொட்டில் நோக்கிக் குனிந்து என் கால்களை முத்தமிட முனைந்த சத்ராஜித்தின் கழுத்திலிருந்த சியமந்தகமணி தொங்கிய மணிமாலையை என் சிறுகைகளால் பற்றிக்கொண்டேன். சிரித்தபடி சத்ராஜித் அதைக் கழற்றி என் தோளில் வைத்து “திருவென எழுந்த இளவரசிக்கு இது வெறும் கூழாங்கல்லே. கொள்க!” என்றார்.
“செம்மலருள் சூரியன் எழுந்தருள்வது போல” என்று அருகே நின்ற அவைக்கவிஞர் அணிக்கூற்று சொன்னார். எந்தையும் பிறரும் மகிழ்ந்து இன்சொல் உரைக்க அருகே நின்றிருந்த விதர்ப்ப அரசி சுஷமையின் கையில் இருந்த இரண்டு வயதான இளவரசி ருக்மிணி கைநீட்டி அந்த மணி தனக்கும் வேண்டுமெனக் கோரி வீறிட்டு அழத் தொடங்கினாள். சுஷமை அவளை அடக்க முயன்று முடியாமல் முகம் சுளித்து அருகே நின்ற செவிலியன்னை அமிதையிடம் கொடுத்தார்.
அமிதை மென்சொல் கூறி ஆறுதல்படுத்தியும் திசைமாற்றி நோக்க வைத்தும் அவள் சித்தத்தை விலக்க முயன்றபோதும் உறுதியுடன் திரும்பி சியமந்தகத்தை நோக்கி கைசுட்டி கதறிக்கொண்டிருந்தாள். சத்ராஜித் அந்தச் சூழலின் இயல்பின்மையை ஆற்றும் சிரிப்புடன் “பெண்கள் அணிகளை கருவிலேயே கண்டடைகிறார்கள்” என்றார். அத்தருணத்திற்கென விழி ஒளிராமல் இதழ்மட்டும் வளைத்து எந்தை நகைத்தார். என் அன்னை என் கைகளால் பற்றப்பட்டிருந்த சியமந்தகமணியை மெல்ல விலக்கி எடுத்து “அழாதீர்கள் இளவரசி, இதோ நீங்களே வைத்து விளையாடுங்கள்” என்று ருக்மிணியிடம் கொடுத்தார்.
அமிதையின் இடையிலிருந்து தாவி இரு கைகளாலும் அதை வாங்கி வாயில் வைத்து கடித்த அவளை நோக்கி அவை நகைத்தது. ஓசைகேட்டு கண்ணீருடன் அனைவரையும் மாறி மாறி நோக்கி பகை கொண்டவள் போல திரும்பிக் கொண்டாள் விதர்ப்ப இளவரசி.
அன்று அவை பிரியும் வரை தன் கையிலேயே அந்த நீலமணியை அவள் வைத்திருந்தாள். அதை அன்றி பிறிது எதையும் அவள் நோக்கவில்லை என்று அமிதை சொன்னாள். அவளை அந்த மணி இமையா விழியால் நோக்கிக் கொண்டே இருந்தது. அரச நாகத்தின் விழிமணிகளால் மயக்கப்பட்டு அசைவின்றி நின்றிருக்கும் எளிய இரைபோல சொல்மறந்து இருப்பழிந்து அதன் நீலத்தை நோக்கி பித்தெழுந்த விழிகளுடன் ருக்மிணி கிடந்தாள். மாளிகையில் அவள் மஞ்சத்தில் அவளை இருத்தி கைகளில் அந்த மணியைக் கொடுத்து அன்று முழுக்க காத்திருந்தினர். இரவில் அவள் தன்னிலை அழிந்து மயங்கியபிறகு அதை எடுத்துச்சென்று சத்ராஜித்திடம் அளித்தனர்.
“சத்ராஜித் எண்ணி வந்த வினை முடிந்துவிட்டிருந்தது. பாரத நாட்டின் பேரரசர்கள் வந்த அவையில் அவரது வருகையையும் அவர் சூடியமணியையும் தவிர வேறெதையும் மக்கள் பேசவில்லை. இளைய விதர்ப்பினி சியமந்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டதைப் பற்றி சூதர் பாடினர்” என்றாள் பத்ரை. “அன்று அவள் உள்ளத்தில் பதிந்த சியமந்தக மணி அது. இதுநாள் வரை தன் ஆழத்தில் அவ்விழைவை சூடிக் கொண்டிருக்கிறாள். இன்று அவள் அம்மணியை கோருவது இயல்பானதொன்றல்ல. அவளிடம் சென்றபின் அது மீளப் போவதுமில்லை.”
திருஷ்டத்யும்னன் சொல்ல எண்ணியதை இதழ்களுக்குள் நிறுத்திக் கொண்டான். “உறுதியாக நான் அறிவேன், அரசவையில் ஏதோ ஒன்று நிகழும். அது உடனே புராணமாகும். எனவே எவராலும் மறுக்க முடியாது. அதன்பின் சியமந்தகம் ருக்மிணியுடையதாகவே என்றுமிருக்கும். பாஞ்சாலரே, அவள் வாழ்வின் முதன்மை இலக்கென்பது அந்த மணியை அடைவதுதான் என்பதில் எனக்கு ஐயமில்லை” என்றாள் பத்ரை. லக்ஷ்மணை “ஆம் நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றாள்.
திருஷ்டத்யும்னன் “என்னை நுண்ணிய இக்கட்டுகளில் சிக்க வைக்கிறீர்கள் அரசி” என்றான். “நான் விதர்ப்ப நாட்டு அரசிக்கு வாக்களித்துவிட்டேன். சியமந்தகத்தை யாதவ அரசியிடம் கோரிப்பெற்று அவர்கள் நாளை அரசர்மன்று அமரும் போது தோள் சூட அளிப்பதென்று. அதில் இருந்து பின் எட்டு எடுத்து வைக்க என்னால் ஆகாது.” பத்ரை “ஆம், அதை அறிவேன். தாங்கள் பின்வாங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்த மணியை முறைப்படி யாதவ அரசியிடம் தாங்கள் கோரிப் பெறலாம். விதர்ப்பினிக்கு அளிக்கவும் செய்யலாம். ஆனால் அது விதர்ப்பினிக்கு மட்டுமான மணியாக ஆகக் கூடாது. எனக்கும் அதில் உரிமை உண்டு. அந்த மணி அவள் கைகளில் அளிக்கப்படுவதற்கு முன்னால் என் தோளில் அணிவிக்கப்பட்டது” என்றாள். லக்ஷ்மணை “ஆம், அது முறைதானே” என்றாள்.
பத்ரை “இளைய யாதவரை மணந்த பிற மகளிரைப் போன்றவளல்ல நான். பாஞ்சாலரே, நான் முடியரசன் உவந்தளித்த மணமகளாக இந்நகருள் வந்தேன். நூறு யானைகள் என் மகள்செல்வத்தை சுமந்துவந்தன. உடன்வந்த என் தமையன்கள் முத்தாரம் சுற்றிய முடிசூடி பொற்தேரேறி இந்நகரின் பெருவீதிகளில் உலாவந்து என்னை அரண்மனை சேர்த்தனர்” என்றாள்.
“பாஞ்சாலரே, துவாரகைக்கு அரசரமரும் அவைகளில் இடமில்லாத ஒரு காலமிருந்தது. இளைய யாதவரை அரசர் என்று எவரும் ஒப்பாத நாட்கள் அவை. ஷத்ரியர்கள் அவரை பகடையில் முடிவென்ற எளிய சூத்திரன் என்று இழித்துரைத்தனர். அன்று விதர்ப்பினியை அவர் கவர்ந்து வந்ததை ஷத்ரியர்கள் பெருஞ்சினத்துடன் எதிர் கொண்டார்கள். பன்னிரு ஷத்ரிய நாடுகள் படைதிரட்டிச்சென்று துவாரகையை வென்று இளைய யாதவரைக் கொன்று ஷத்ரியப் பெண்ணை சிறைமீட்டு வரவேண்டுமென்று ஒரு திட்டம் பேசப்பட்டது. கங்காவர்த்தத்துக்கும் துவாரகைக்கும் நடுவே இருந்த பெரும் பாலைவனம் ஒன்றே அவர்களைத் தடுத்தது. இல்லையேல் இந்நிலம்காணா பெரும் போரொன்று அன்று நிகழ்ந்திருக்கும். வென்றாலும் வீழ்ந்தாலும் துவாரகை அழிந்திருக்கும்.”
“நீர் அறிந்திருக்கமாட்டீர். ஷத்ரியர்கள் அவையொன்று காசியில் கூடியது. ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளில் நாற்பத்தேழு நாடுகளின் மன்னர் அங்கே அமர்ந்திருந்தனர். அன்றுமுதல் எங்கும் எந்த அவையிலும் அரசர் என இளைய யாதவரை அமர வைக்கலாகாது என முடிவெடுத்தனர். அந்த அவையில் என் தந்தை அமர்ந்திருந்தார். ஷத்ரியர்களின் முழு முடிவுக்கு அவரும் ஒப்புக்கொண்டு கைச்சாத்திட்டார். திரும்பி கேகயத்துக்கு அவர் வந்தபோது என் தமையன்கள் ஐவரும் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் சொன்னதை நானும் திரைக்குப்பின் அமர்ந்து கேட்டேன்.”
“என் முதற் தமையன் சந்தர்த்தனர் ‘வல்லமையாலேயே ஷத்ரியன் உருவாகிறான், முறைமைகளால் அல்ல’ என்றார். ‘வருங்காலத்தில் துவாரகையே பாரதவர்ஷத்தின் பெரும் வணிக மையமாக இருக்கக் கூடும். ஏழு வகை அயல் நாட்டவரும் வந்திறங்கும் பெருந்துறைமுகம் அது. அதை ஆளும் இளைய யாதவர் நிகரற்றவர். செல்வம் குவியும் கருவூலம் கொண்டது அந்நகர். பாரதவர்ஷத்தின் முடிசூடிய முடியில் அமர்ந்த ஒளிரும் வைரம் என்றே சூதர் பாடுகின்றனர். உண்பதும் உறங்குவதும் அன்றி ஏதும் அறியாத அரண்மனைகளில் வளை எலி என கொழுத்து அலையும் இந்த ஷத்ரியர்களுக்காக அந்நாட்டை நாம் பகைத்துக் கொண்டோமென்றால் இழப்பு நமக்கே’ என்றார்.”
“இளையவர் கோவர்த்தனர் ‘தந்தையே, நாம் பெரும்புகழ் கொண்ட ராமனின் உறவு கொண்டவர்கள். பெருமையழிந்து இன்று இந்த ஷத்ரிய நாடுகளால் நெருக்கப்பட்டு நதிக்கரையில் நின்றிருக்கிறோம். நமது துறைமுகமோ நூறாண்டுகளாக நிழல்பட்ட செடிபோல தேங்கி நிற்கிறது. இங்கு பெருவணிகர் வருவதில்லை. நம் அரண்மனைகள்கூட நூறாண்டு பழமையானவை. நமக்கிருப்பது குலப்பெருமை ஒன்றே. வணிகம் என்பது என்ன? நம்மிடம் உள்ளதைக் கொடுத்து அதற்குரிய உச்சவிலை ஒன்றை பெறுவதல்லவா? இன்று இளைய யாதவர் விழைவது ஷத்ரிய குலப்பெருமை ஒன்றையே. அதை நாம் அவருக்கு அளிப்போம். பாரதவர்ஷத்தின் பெரும் செல்வ நாடொன்றின் உறவை அடைவோம்’ என்றார்.”
“மூன்றாவது தமையன் பிரவர்த்தனர் ‘துறைமுகத்தை மீட்டுக் கட்டுவோம். அரண்மனைகளை சீரமைப்போம். இன்று நம் கையில் வாளில்லை. ஆகவே மறுகையில் இருக்கும் துலாமுள் மேல் நமக்கு கட்டுப்பாடில்லை. இங்கு வரும் வணிகர்கள் சுங்கம் அளிக்கவில்லை, அளிக்கொடை செய்கிறார்கள். நாம் மன்னர்கள் அல்ல, சூதர்கள். துவாரகையின் படைபலம் இருக்குமென்றால் இங்கு நாம் விரும்பும் வணிகத்தை அமைக்க முடியும்’ என்றார். ஓர் இரவு முழுக்க அவையில் நிகழ்ந்த உரையாடலுக்குப் பிறகு எந்தை ‘நீங்கள் விழைவதே ஆகட்டும்’ என்று ஒப்புதல் அளித்தார்.”
“அதன்படி என் நான்காவது தமையன் ஹரிதவர்த்தனரும் ஐந்தாவது தமையன் ஸ்ரீவர்த்தனரும் துவாரகைக்கு வந்து இளைய யாதவரைப் பார்த்து என்னை மணம் கொள்ளும்படி கோரினர். அன்று துவாரகையின் அமைச்சர்கள் உவகை கொண்டு கண்ணீர் மல்கினர் என்றார் என் தமையன். தொல்புகழ் கொண்ட ஷத்ரிய இளவரசியை இளைய யாதவர் மணப்பது அவர் தேடிய நெடுங்கால அவையொப்புதலை பொற்தாலத்தில் வைத்து நீட்டுவதற்கு நிகர் என்றார் அக்ரூரர். பிறிதொரு சொல் இன்றி இதை ஏற்கிறோம் என்றார் பலராமர். அதன்படி கன்யாசுல்கமாக ஆயிரம் ஒளிர்வைரங்களை எந்தைக்கு அளித்து ஆயிரம் யானைகளின் மேல் வரிசையைக் கொண்டு வந்து கேகயத்தின் கோட்டை வாயிலில் நின்றார் இளைய யாதவர்.”
“அரசமுறைப்படி அவர் மணந்த முதல் பெண் நான். தொன்மையான ஷத்ரிய நெறிகளின்படி உண்மையில் அவருக்கு நான் மட்டுமே அரசி. சியமந்தகத்தை சூடும் உரிமை கொண்டவள் நான் மட்டுமே. எனது பெருந்தன்மையால் பிறருக்கு நான் அளிக்கலாம். ஆனால் பிறர் அதை உரிமை கொண்டாட நான் ஒப்ப முடியாது” என்றாள் பத்ரை. திருஷ்டத்யும்னன் “புரிகிறது அரசி” என்று மட்டும் சொன்னான். “செல்லுங்கள்! அவளிடம் அந்த மணியை பெறும்போதே அது பிற ஷத்ரிய அரசியருக்கும் உரியதே என்று சொல்லி பெறுங்கள். ருக்மிணியிடம் அளிக்கும்போதும் அதை சொல்லுங்கள். நாளைமறுநாள் கொற்றவை ஆலயத்துப் பூசனைக்கு நான் தலைமை ஏற்கிறேன். அன்று சியமந்தகம் என் மார்பில் அணி செய்ய வேண்டும்.”
திருஷ்டத்யும்னன் “அரசி, சியமந்தகத்தை அளிப்பதற்கு இன்னும் யாதவ அரசி ஒப்புக் கொள்ளவில்லை” என்றான். “அவளை ஒப்புக்கொள்ள வைக்க உம்மால் முடியும் என்று நான் அறிவேன். நீர் அரசுசூழ்தல் கலையறிந்தவர், துரோணரின் மாணவர். எவ்வண்ணமேனும் அதை பெறுவீர். ஒருபோதும் அது ருக்மிணிக்குரியதாகலாகாது. அதை முன்னரே உமக்கு உணர்த்த விரும்புகிறேன்” என்றாள் பத்ரை. “ஆணை” என்றான் திருஷ்டத்யும்னன்.
பத்ரை சற்றே எளிதாகி புன்னகை செய்து “இவ்வண்ணமொரு அரசுப் பணியாக தங்களை காண நேர்ந்தது சற்று வருத்தமாக உள்ளது பாஞ்சாலரே. எனினும் என் இளையோனாக இப்பணியை ஒப்படைப்பது நிறைவளிக்கிறது” என்றாள். “அது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு” என திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான்.
லக்ஷ்மணை “நான் உங்களை அழைத்தது மேலும் ஒரு செய்திக்காக” என்றாள். திருஷ்டத்யும்னன் திரும்பி “சொல்லுங்கள் அரசி” என்றான். “சல்யரின் மகளை உங்களுக்கு மணம் பேசியிருப்பதாக நான் அறிந்தேன்” என்றாள். “ஆம் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன். “சல்யர் இன்று அஸ்தினபுரிக்கு அணுக்கமானவர். அஸ்தினபுரியோ இளைய யாதவருக்கு அணுக்கமானது. எனினும் எந்தை சல்யரை ஏற்றுக் கொள்ளவில்லை என அறிந்திருப்பீர்” என்றாள்.
பத்ரை புன்னகையுடன் “சல்யர் இனியும் இவர் தந்தையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பது மேலும் உண்மை” என்றாள். சற்றே புண்பட்டு கண்களை சுருக்கிய லக்ஷ்மணை “ஆம்” என்றாள். “உங்களது மணநிகழ்வு பாஞ்சாலத்தின் அரசியல் முடிவு. ஆனால் எந்தை வரவேண்டும் என்றால் சல்யர் முறைப்படி உபமத்ர அரசவைக்குச் சென்று அழைப்பு விடுக்கவேண்டும். எந்தை வராவிட்டால் நானும் வரமாட்டேன். கேகயத்து அரசியும் வரப்போவதில்லை. எட்டு அரசியரும் அமராது இளைய யாதவர் மட்டும் வரக்கூடிய மண நிகழ்வுக்கு நீர் ஒப்புவீர் என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றாள்.
திருஷ்டத்யும்னன் “இளவரசி, அந்த மணம் நிகழும் என்று இன்னும் உறுதியாகவில்லை. நிகழும் என்றால் எட்டு அரசியரும் எழுந்தருளத்தான் அது நிகழும். இது உறுதி” என்றபின் எழுந்து தலைவணங்கி “விடை பெறுகிறேன்” என்றான்.