இந்திரநீலம் - 64
பகுதி பத்து : கதிர்முகம் – 9
இளைய யாதவனின் வலதுகை அரவென நீண்டு தன் இடையை வளைத்துத் தூக்கி ஆடைபறக்கச் சுழற்றி புரவியின் முதுகில் அமரவைத்த கணம் ருக்மிணியின் நெஞ்சில் மீண்டும் மீண்டும் துளித்துளியாக நிகழ்ந்தது. புரவித் தொடைகளின் இறுகிய தசை அசைவுகளை, உலையிரும்பை அறையும் கூடங்களென தூக்கி புழுதியின் ஆவி பறக்க வைக்கப்பட்ட பெரிய குளம்புகளுக்கு அடியில் வேல்பட்ட வடுவென மின்னிய தேய்ந்த லாடங்களை, சுழன்ற கமுகுப்பூக்குலை வாலை, சற்றே திரும்பிய கழுத்தின் பிடரி மயிர் நலுங்கலை, விழிகளில் மின்னிச் சென்ற அறிதலை, அவள் உடல் சென்றமர அதன் முதுகுப் பீடம் சற்றே வளைந்து ஏற்றுக்கொண்ட குழைவை.
காதுக்குப் பின் தொட்ட அவன் மூச்சை, இடை வளைத்து மென் வயிற்றை அழுத்திப் பற்றிய விரல்களில் படையாழியும் அம்பும் பயின்று காய்த்த தடிப்பை, அவன் மார்பிலணிந்த இரும்புக்கவசத்தின் குளிரை, பின் தலையில் முட்டிய தோளெலும்பின் உறுதியை, கடிவாளத்தை சுண்டிய இடக்கையில் மடிந்த விரல் இருமுறை அவள் முலைகளை தொட்டுச் சென்றதை, விடைத்த சிறிய காதுகளுக்கு அப்பால் புரவியின் நரம்பு பின்னிய நீள் முகத்துக்கு முன் பறந்து மீண்ட படையாழியிலிருந்து சிதறித் தெறித்த குருதியை, அப்பால் தலை அறுந்து கைகள் விதிர்க்க மல்லாந்த வீரன் ஒருவனின் உடலை, துண்டுபட்டு விழுந்த தலை உறுத்த விழி ஒரு கணம் அதிர உதடு நடுங்க மண்ணில் புரண்டதை…
சூழ ஒலித்த அலறல்களும் புரவிக் குளம்பொலிகளும் படைக்கல உலோகங்கள் மோதும் குலுங்கலும் தொலைவிலெங்கும் ஒலித்த கொம்பின் அலறல்களும் ஒன்றாகி முழக்கமாகி விரிந்து உலகென்றாகியது அக்கணம். அதன் ஓர் எல்லையில் இருந்து மறு எல்லை நோக்கி உறைந்த ஒற்றைச் சொல்லுடன் அவள் சென்று கொண்டிருந்தாள். முன்னங்கால்களை மண்ணில் ஊன்றி அக்கணத்தில் இருந்து எழுந்து உடல் அதிர அடுத்த கணத்தில் விழுந்தது புரவி. அதிர்ந்த உடலை சூடிய அகம் அதிர்ந்து அக்கணத்தை அறிந்தபோது முந்தைய கணம் நீலம் என்ற சொல்லாக இருந்தது அறிந்து அவள் வியந்தாள்.
அவன் கைக்கு வந்த ஆழி விரல்தொட்டு சுழன்றெழுந்து மீண்டும் தெறித்து தலைகொண்டு எழுந்து பறந்து மீண்டது. ஒளிக்கதிரின் விரைவுகொண்டு வெள்ளிப்பறவையென சுழன்றபடி அவனுக்கு அது வழி சமைத்தது. உருளும் இரு கதைகளை சினம்கொண்ட கழுகுச்சிறகென தன்னைச்சூழ பறக்கவிட்டு புரவிமேல் அவனைக் காத்தபடி தொடர்ந்தார் பலராமர். அவரைத் தொடர்ந்து வந்த ருக்மி “நில், இளைய யாதவனே, நில்” என்று கூவியபடி தன் வாளை சுழற்றியபடி ஓடிவந்தான். இடக்கையால் அவன் வீசிய வேல் மூத்த யாதவரின் கதையில் பட்டு உலோக நகைப்புடன் சிதறித் தெறித்தது. நகைத்தபடி திரும்பி கடிவாளத்தை கவ்விப்பிடித்திருந்த தொடையை அசைத்து புரவியை நிறுத்தி அவனை எதிர் கொண்டார் பலராமர்.
இளைய யாதவனின் புரவி பன்னிரு கணங்களாக பன்னிரு காலடிகளாக பன்னிரு உடல் அதிர்வுகளாக காலத்தைக் கடந்து இளமணல் பரவிய வரதாவின் கரையை அணுகி கால்சிக்கி விரைவழிந்து தலைவளைத்து நிற்க அவள் இடைவளைத்து அள்ளிக்கொண்டு தாவி இறங்கி இருகைகளாலும் தூக்கி அவளை படகுக்குள் வீசினான். சுழன்று வந்த ஆழியை மீண்டும் செலுத்தி பாய்ந்து வில்லுடன் வந்த வீரன் ஒருவனை சீவி வீழ்த்திவிட்டு படகுக்குள் இளைய யாதவன் ஏற விம்மும் வண்டென அவன் கையை வந்து அடைந்து குருதியை உதறி அடங்கியது ஆழி.
பலராமரை நோக்கி வந்த ருக்மி தன் நீண்ட வாளால் கதை ஏந்திய அவர் கையை வெட்ட முயன்றான். கணுக்கையில் சுற்றிய இரும்புச் சங்கிலியால் கதையை நீட்டி சுழற்றி அவன் புரவியின் விலாவை அறைந்தார் பலராமர். நொறுங்கும் எலும்பு ஒலிக்க மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் குருதி சிதற அலறியபடி சரிந்து விழுந்து முதுகு உரச விரைந்து சென்று நான்கு குளம்புகளையும் மேலே காட்டி துடித்துப் புரண்டெழுந்தது புரவி. அதன் அடியில் விழுந்து எழுந்த ருக்மி குனிந்து தன் வாளை எடுத்தபடி ஓடி வருவதற்குள் அவன் தோளை எட்டி உதைத்து பின்னால் சரித்துவிட்டு சிரித்தபடி படகை நோக்கி பாய்ந்த பலராமர் திரும்பி உரத்த குரலில் “இளையோனே, நீ எதிர் கொள்ளும் போரல்ல இது. செல், துவாரகையின் பட்டத்தரசியின் தமையனென பெருமை கொள்” என்றார்.
பின்னால் ஓடி வந்தபடி ருக்மி நெஞ்சில் ஓங்கியறைந்து “குருதியால் இதற்கு மறுமொழி சொல்வேன். குருதிக்காக தேடி வருவேன்…” என்று கூவினான். “இந்த மண்ணிலிருந்து அவளுடன் நீங்கள் செல்ல விடமாட்டேன். சென்றால் ஒருமீசை எடுத்து பேடியென்றாகி நிற்பேன்… இது என் மூதாதையர் மேல் ஆணை!” கதையைச் சுழற்றி தன் கையில் எடுத்து தொடை மேல் வைத்தபடி ”இளையவனே, இக்கணம் கொன்று செல்வது எனக்கு அரிதல்ல. ஆனால் என்றேனும் உனை நெஞ்சுடன் தழுவ விழைகிறேன்” என்றார் பலராமர். “குருதி! குருதியால் என் மறுமொழி!” என்று ருக்மி கூவினான்.
இளைய யாதவன் ஏறிய படகு சுழலில் பாய்ந்தேறி வளைந்து சென்றது. அடுத்த படகில் பலராமர் ஏறிக் கொண்டதும் அதன் குகர்கள் நால்வர் பெருங்கழிகளால் கரையை உந்தி வரதாவின் சுழிக்குள் அதை செலுத்தினர். துவாரகையின் நான்கு படகுகளும் வரதாவின் சுழியில் விரைந்தேறி விலக ருக்மி “விடாதீர்கள்… தொடர்ந்து நமது படைகள் எழும் வரை அவர்களை ஆற்றின்மேல் தடுத்து நிறுத்துங்கள்” என்று கூவியபடி ஆற்றின் கரை ஓரமாக ஓடினான். கொம்போசை கேட்டு ஓடிவந்த விதர்ப்பத்தின் வீரர்கள் பாய்ந்து படகுகளில் ஏறிக்கொண்டனர். அவற்றின் குகர்கள் கழிகளை உந்தி படகுகளை சுழிவளையத்தில் ஏற்றி துவாரகையின் படகுகளை தொடர்ந்தனர்.
ருக்மி ஓடி வந்து ஒரு படகில் ஏறிக்கொண்டபடி “விரைந்து செல்க!” என்று கூவினான். திரும்பி கரைகளில் சிதைந்தும் அறுந்தும் குருதி வழியத்துடித்தும் கிடந்த உடல்களுக்கு நடுவே ஓடிவந்த தன் படைத்தலைவர்களை நோக்கி “செய்தி அனுப்புங்கள்! விதர்ப்பத்தின் படைகள் அனைத்தும் வரதாவில் எழட்டும்! இவர்கள் நெடுந்தொலைவு செல்ல முடியாது. நமது பெரும்பாய் படகுகள் அவர்களை ஒரு நாழிகைக்குள் எட்டிவிட வேண்டும். இது என் ஆணை!” என்று கூச்சலிட்டான்.
ருக்மியின் படகு சுழியைக் கலைத்து யாதவப்படகுகள் உருவாக்கிய அலைகளில் எழுந்து விரைந்தது. தொலைவில் இளைய யாதவனின் படகில் இருக்கும் ருக்மிணியை ஒரு சிறு பட்டாம்பூச்சியென அவன் கண்டான். இரு கைகளையும் விரித்து “விரைக! விரைக!” என்று கூவினான். அவன் கையில் இருந்து வளைந்து எழுந்த அம்புகள் வரதாவின் நீர்ப்படலத்தை சற்றே கிழித்து வெள்ளி மணிகளை எழுப்பி ஒளி சிதறவைத்து சிற்றலைகள் எழ, தன் நிழல் பிறிதொரு ஆழி எனத் தொடர, சுழன்று வந்த இளைய யாதவனின் படையாழி படகில் சென்ற அமரக்காரனை தோள் அறுத்து பிறிதொருவனின் தலை அறுத்து குருதித் துளிகளுடன் நீரில் விழுந்து கீற்றென சிற்றலை ஒன்றைக் கீறி மூழ்கி பறவைக் குளியலிட்டு புதிதாக மேலெழுந்து ஒளிச்சுழியென சென்று கூடணைவதுபோல் அவன் கையைத் தொட்டு அக்கணமே அங்கிருந்து மேல் எழுந்து கிளம்பி வந்து பிறிதொரு வீரனின் தலை கொய்தது.
அமரம் இழந்த அப்படகு சுழியின் பெருவளைவில் தத்தளித்து அலையொன்றில் ஏற முயன்று அவ்விரைவினாலேயே கவிழ்ந்தது. அதில் இருந்த வில்லேந்திய மூன்று வீரர்களும் நீருக்குள் விழுந்து துழாவி எழுந்து கை நீட்டி மூச்சுக்கென தவிக்கும் இறுதி முகம் காட்டி நீரில் மூழகினர். பசி எழுந்த அன்னைப்புலி போன்ற தன் கைகளால் அவர்களை அள்ளிச்சென்றாள் வரதா. திறந்து கிடந்த குகைச் சுழிக்குள் அவர்கள் சென்று புள்ளிகளாகி அழிந்தனர். ருக்மி பின்னால் வந்த படகில் தொற்றி ஏறிக்கொண்டான்.
யாதவர்களின் படகுகளிலிருந்து எழுந்த அம்புகளால் தொடர்ந்து தன் படகுகளில் இருந்து வீரர் அலறியபடி நீரில் விழுந்ததை ருக்மி கண்டான். அவன் தொடுத்த அம்பு பட்டு யாதவப் படையினர் அலறியபடி நீரில் விழுந்தனர். தன் மேல் தொட்ட ஒவ்வொன்றையும் நெருப்பென குமிழி எழுப்பி உள் வாங்கி அக்கணமே மாய்த்து யாதொன்றும் அறியாதது போல சுழன்று கொண்டிருந்தது வரதாவின் கொலை விழி.
ருக்மி குழல் பறக்க நனைந்த ஆடை உடல் ஒட்டித் துடிக்க கால் பரப்பி படகு மேல் நின்றான். நீண்ட கட்டைவிரல் மேல் ஊன்றி அம்பைத் தொடுத்தான். அவன் அம்புகள் நீண்டு எழுந்து வளைந்து வரதாவின் நீர்ப்பெருக்குள் விழுந்து மறைந்தன. இளைய யாதவனின் படகு தொலைவில் எழுந்து சுழியின் இறுதி விளிம்புக்கு அப்பால் பாய்ந்தது. தொடர்ந்து பலராமனின் படகு சுழியை மீறிச்சென்றது. “விரைவு! விரைவு!” என்று கூவிய ருக்மி அக்கணமே உணர்ந்தான், அவன் படகை ஓட்டிய குகர்களில் இருவர் கை சோர்ந்துவிட்டனர் என. அவர்களின் துடுப்பு ஒன்று வலுவிழக்க அவன் படகு சற்றே சரிந்து சுழிப்பெருக்கின் வளைவுக்குள்ளேயே சிக்கிக் கொண்டது.
வரதாவின் கண்காணா விசைச்சரடு அப்படகை சுழற்றி யாதவர்களின் படகில் இருந்து விலக்கிக் கொண்டு சென்றது. எதிர்த்திசையில் விரையும் தன் படகில் நின்றபடி நெடுந்தொலைவில் மறைந்த யாதவப் படகுகளை நோக்கி தொடையில் ஓங்கி அறைந்து கால்களை படகுப் பலகையில் இடித்து ருக்மி வெறி கொண்டு அலறினான்.
ருக்மியின் படகு வளைந்து விரைந்த நீர்ப்பாதையில் சிறகொடுக்கி மண்ணிலிறங்கும் வெண்கொக்கு போல விரைந்து சித்திதாத்ரியின் ஆலய முகப்பை நோக்கிச் சென்றது. ஒன்பதாவது துர்க்கையின் ஆலயம் அமர்ந்த கரிய குன்று அவனை நோக்கி வந்தது. அதன் மேல் அமர்ந்த ஆலயத்தின் உச்சியில் தழலென கொடி பறந்தது.
கால் தளர்ந்து படகில் அமர்ந்து தலையில் கை வைத்து ஒரு கணம் அவன் விம்மினான். படகு ஆலயத்தருகே மணல் கரையை நோக்கிச் சென்றதும் பொறுமையிழந்து பாய்ந்து இறங்கி இடுப்பளவு நீரில் கால் துழாவி தள்ளாடி மேலேறி அப்போதும் துடித்துக் கொண்டிருந்த குருதியுடல்களையும் குதிரைக் கால்களையும் கடந்து தாவி ஓடி கரைக்கு வந்தான். மண்சாலையின் மறு எல்லையில் வல்லூறுக் கொடி பறக்க நான்கு புரவிகள் இழுக்க விரைவுத் தேரில் சிசுபாலன் வருவதைக் கண்டான். “சேதி நாட்டு அரசே!” என்று இருகைகளையும் விரித்துக் கூவியபடி அத்தேரை நோக்கி ஓடினான். பின்னால் பன்றிக்கொடி பறக்க வராக நாட்டு சிற்றரசன் பிருஹத்சேனனும், எலிக் கொடி பறக்க மூஷிக நாட்டு சிற்றரசன் சசாங்கனும், கன்றுக்கொடி கொண்ட உபபோஜ நாட்டு சம்விரதனும் வருவதைக் கண்டான்.
அவர்களுக்குப் பின்னால் புரவிப்படையொன்று இடிந்திறங்கும் மலையென பேரொலியுடன் வந்து கொண்டிருந்தது. தேர் விரைவழியாத போதே பாய்ந்திறங்கி மண்வந்த பறவையென கால்வைத்து வந்து நின்ற சிசுபாலன் உரக்க ”என்ன நிகழ்ந்தது? விதர்ப்பரே, எங்கே இளவரசி?” என்றான். “துவாரகையின் திருடன் அவளை கவர்ந்து சென்று விட்டான், சேதி நாட்டரசே” என்றான் ருக்மி. உடைந்த குரலில் அழுதபடி “இனி இங்கு முகத்தில் மயிர் வைத்து வாழமுடியாதவனாக என்னை ஆக்கி விட்டான். என் நகர் புகுந்து என் குலக்கொடியை கொண்டு அவன் செல்வானென்றால் அதன் பின் நான் என்ன வீரன்?” என்றான்.
சிசுபாலன் திரும்பி ஓடி தன் தேரில் ஏறிக் கொண்டு “இன்னும் பிந்தி விடவில்லை விதர்ப்பரே. பாய் அற்ற படகுகளில் வரதாவில் நெடுந்தொலைவு சென்றிருக்க முடியாது. இச்சுழி கடந்து மறு எல்லை அடைந்ததும் காட்டுக்குள் புகுந்திருப்பான். அங்கு அவன் வந்த புரவிகள் நின்றிருக்கும். நம் எல்லை கடப்பதற்குள் அவனை கைப்பற்றி விடலாம். பிறிதொருவர் அறியாமல் வந்திருக்கிறான். எனவே, பெரும்படையுடன் வந்திருக்க வழியில்லை. அவனை சூழ்வோம். தலை கொண்டு மீள்வோம். அதற்கென தருணம் வாய்த்திருக்கிறதென எண்ணுவோம். எழுக!” என்றான். ருக்மி “ஆம், இறுதிக் கணம் வரை இலக்கு அது” என்று கூவியபடி தன் படைத் தலைவனை நோக்கி “விதர்ப்பத்தின் படைகள் அனைத்தும் மறுகரை செல்லட்டும்! இக்கணமே” என்று ஆணையிட்டான்.
புரவியில் ஏறிக்கொண்ட ருக்மி சிசுபாலனை முந்தி முன்னால் சென்றான். விதர்ப்பத்தின் புரவிகளும், பன்னிரு சிற்றரசர்களின் விரைவுத்தேர்களும் வரதாவின் கரையோரமாக விரைந்தன. மூதன்னையர் கோயில் கொண்ட சிற்றாலயங்களில் பூசனை செய்யவும், படுகள வீரர்களுக்கு அமைத்த பலி பீடங்களில் படையல் இடவும் நின்ற விதர்ப்பத்தின் குடி மக்கள் வியந்து நோக்க அப்படை சென்றது. அவர்களுக்கு அருகே நீரலையில் ஒளி எழுந்து வரதா விரைந்தது.
படகுத்துறையில் இருந்து பாய்விரித்த பன்னிரண்டு பெரும் படகுகள் வரதாவில் எழுந்து சுழியைக் கடந்து விரைந்து வந்தன. அவை அணுகும் இடத்தில் சிசுபாலன் தேர் நிறுத்தி இறங்கினான். மூச்சிரைக்க புரவியில் வந்திறங்கிய ருக்மி “இப்படகுகளில் வரதாவை கடப்போம். அவர்கள் காட்டை கடப்பதற்குள் பிடித்துவிட வேண்டும்” என்றான். சிசுபாலன் “நாம் செல்வதல்ல, நம் புரவிகள் செல்ல வேண்டும்” என்றான். “நமக்கு அங்கே விரைவே முதன்மை படைக்கலம்…”
விதர்ப்பத்தின் முதற்பெரும்படகு பாய்களை மண்ணிறங்கும் பறவையென பின்சரித்து அலைகளில் நுனி மூக்கு எழுந்து அமைந்து அணுகிவந்து அடிவயிறு மணலில் உரச நீர்விளிம்புவரை வந்து நின்றது. சிசுபாலன் “விதர்ப்பரே, கணங்களே உள்ளன நமக்கு” என்று கூவியபடி கையசைத்துக் கொண்டு பாய்ந்து படகில் ஏறினான். படகில் இருந்து நீட்டி கரைமேல் படிந்த பாலம் வழியாக அவன் விரைவுத் தேரை ஏற்றினான் பாகன். புரவிகள் குளம்புகள் ஒலிக்க தொடர்ந்து ஏறின.
இரண்டாவது படகு வந்து மணலில் உரசியது. அஞ்சிய எறும்புகள் புற்று புகுவதுபோல அங்கிருந்த புரவிகளும் வீரர்களும் படகுக்குள் ஏறிக் கொண்டதும் “கிளம்புக!” என கூவியபடி சிசுபாலன் அமரத்திற்கு ஓடி நின்று கை வீசினான். அமரக்காரன் கயிறுகள் பிணைக்கப்பட்ட பெருவளையத்தைச் சுழற்ற இறுகிநின்ற வடங்கள் திசைமாற்றி சுழலத்தொடங்கின. புடைத்த பாய்கள் எழு பறவையென விரிந்தன. படகு அலைகளில் மூக்கு வைத்து ஏறி முன்சென்றது.
குஞ்சுகளை உடலெங்கும் ஏந்தி ஒளி நூலில் தொற்றித் தாவி ஏறும் அன்னைச் சிலந்தியென புரவிகளைச் சுமந்து சென்றன படகுகள். “மறுஎல்லை, மறுஎல்லை” என்று சிசுபாலன் கூவினான். “நமது விற்கள் நாண் ஏறட்டும். ஒன்று பிழைக்காமல் நமது அம்புகள் உயிர்பருக வேண்டும்.” அவனது படைவீரர்கள் தலைக்கு மேல் குரங்கு வாலென வளைந்த இரும்பு விற்களை கால்கட்டைவிரல் பற்றி நிலம் நாட்டி எருமைத்தோல் நாண்களை இழுத்து இறுக்கி தோளிலிட்ட இறகுவிரித்த அம்புக் குவைகளுடன் மறுகணம் இதோ என சித்தமாக இருந்தனர்.
வரதாவின் பெருக்கைக் கடந்து கரையோர எதிர் ஒழுக்கை அடைந்தும்கூட யாதவப் படகுகள் விரைவழியாமல் சென்று குறுங்காட்டிலிருந்து நீர் அருந்தும் விலங்குகள் போல குனிந்து நீர்ப்பெருக்கை தொட்டு நின்ற மரங்களின் இலைத் தழைப்பை ஊடுருவின. படகின் அலைகளால் நீர்ப்பாவை அலையுற மேலே எழுந்த காற்றில் கிளைகள் அசைய அஞ்சி உடல் சிலிர்க்கும் பெரு விலங்கென குறுங்காடு அவர்களை எதிர்கொண்டது.
நிழல்காட்டுக்கும் தழைக்காட்டுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் யாதவப் படகுகள் தங்களை செருகிக் கொண்டன. பாய்ந்து கரையிறங்கி நாணல் செறிந்த சதுப்பின் ஊடாக நடந்து கரை ஏறிய இளைய யாதவன் திரும்பி ருக்மிணியிடம் “வருக!” என்றான். அவள் எழுந்து நீட்டி நின்ற சிறுகிளை ஒன்றை கையால் பற்றி தன் முகத்தில் உரசாமல் விலக்கியபடி இடக்கையால் ஆடை மடிப்புகளைப் பற்றி இறங்கி முழங்கால் அளவு சகதியில் நடந்து இளைய யாதவன் சென்றதனால் வகிடு கொண்டிருந்த நாணல் பரப்பின் ஊடாக அவனை அணுகினாள்.
பின்னர் வந்த படகில் இருந்து பாய்ந்திறங்கி சேற்றைக்கலக்கும் யானை போல் வந்த பலராமர் தன் இடையில் இருந்த சங்கை எடுத்து மும்முறை ஊதினார். யாதவர்களின் படகில் இருந்த வீரர்களில் நால்வர் மட்டுமே எஞ்சினர். பலராமரின் தோளில் ஓர் அம்பு குத்தியிருந்தது. அவர் அதை பிடுங்கி வீசியபோது அதன் இரும்பு அலகு அவர் தசைக்குள்ளேயே புதைந்திருந்தது. சங்கொலி கேட்டு தொலைவில் குறுங்காட்டின் ஆழத்தில் இருந்து கனைத்தபடி யாதவர்களின் குதிரைகள் கிளம்பி வந்தன.
காற்று கிளையுலைத்து வந்து சூழ்வதுபோல அவர்களை வளைத்துக் கொண்ட புரவிகளில் இருந்து இறங்கிய யாதவ வீரர்கள் ஓடிவந்து படகுகளை அணுகினர். அங்கே குருதி வழியக் கிடந்த உடல்களைக் கண்டதும் திகைத்தனர். “உயிருடன் எவரும் எஞ்சவில்லை” என்ற பலராமர் திரும்பி இளைய யாதவனை நோக்க அவன் அவர்களை நோக்காது ருக்மிணியின் கையை பற்றிக்கொண்டு ஓடிச்சென்று முன்னால் வந்த வெண்புரவியின் மேல் ஏறினான். ஒரு சொல்லும் ஆணையிடாது அதை குதிமுள்ளால் குத்தி கனைத்து பிடரி சிலிர்த்து முன்னங்கால் தூக்கி சீறி எழச்செய்து கிளையிலைப் பச்சைத்தழைப்பைக் கீறி குறுங்காட்டுக்குள் பாய்ந்தான்.
முள்செறிந்த குறும்புதர் அலையடித்த காட்டுக்குள் இறகு குவித்துச்செல்லும் செம்போத்து போல சென்றது அவனுடைய செம்புரவி. பலராமர் “தொடருங்கள். அவர்கள் தொடர்ந்து வருவது உறுதி” என்று கூவியபடி புரவி ஒன்றில் ஏறிக் கொண்டார். தன் கைகளில் கட்டப்பட்ட இரும்புக் காப்பை அவிழ்த்து வரும்போதே நீரில் கழுவி குருதி களைந்த கதைளைத் தூக்கி ஒரு வீரனிடம் வீசினார். அவன் அதைப் பற்றி ஒரு புரவியின் இரு பக்கமும் துலாக்களென கட்டினான். அப்புரவி பலராமருக்கு அருகே விரைந்தது. புரவிப்படை புதர்களை விலக்கி தாவி ஊடுருவி விரைந்தது.
ருக்மிணி அக்கணம்வரை தானிருந்த எண்ண அலைகளில் இருந்து இறங்கியவள்போல சூழலை உணர்ந்து “எங்கிருக்கிறோம் நாம்?” என்றாள். “மாளவத்தின் எல்லை நோக்கி செல்கிறோம். அது நம் நட்பு நாடு. அங்கு சென்றதும் விதர்ப்பத்தின் படைகள் நம்மை தொடர முடியாது” என்றான் இளைய யாதவன். “இன்னும் எத்தனை தொலைவு?” என்றாள். இளையவன் சிரித்து “என்னை நீ அறிவதற்குப் போதுமான தொலைவு” என்றான். என்ன சொல்கிறான் என்று திகைத்து அவள் தலை தூக்க சிரிக்கும் அவன் விழிகளை கண்டாள்.
அவன் கை அவள் வயிற்றைச் சுற்றி உந்திச்சுழியில் சுட்டு விரல் அழுந்தி சற்றே சுழிக்க அவள் கைகள் நடுக்கத்துடன் அதைப் பற்றி உடல் திமிறி “என்ன இது? வீரர்கள் சூழ்ந்திருக்கும் புரவியின் மேலே?” என்றாள். அவன் “புரவி முதுகும் உரிய முறையில் மஞ்சமாக முடியும்” என்றான். அவள் ”யாதவரே, இது முறையல்ல” என்று திமிறினாள். ”காமத்தில் முறையென்று ஒன்றுண்டா?” என்றான் இளைய யாதவன். “எதற்கும் முறையென்று ஒன்றுண்டு என்று பயின்ற அரசகுலத்தவள் நான்” என்றாள். “மீறுவதெப்படி என்று என்னிடம் கற்றுக்கொள்” என்றான் இளைய யாதவன்.
அவள் தன்னை வளைத்த அவன் கையை ஓங்கி அறைந்தபடி “என்னை இறக்கிவிடுங்கள்… இங்கு நான் இறங்கிக் கொள்கிறேன். எவருக்கும் காமக்கிழத்தியாக நான் வரவில்லை” என்றாள். “என் நெஞ்சமர்ந்த திருமகள் என்றே வந்தாய். பிறகென்ன?” என்றான் இளைய யாதவன். “நீ கொண்டுள்ள இவ்வுடலே என் நெஞ்சம் அல்லவா?”
“விதர்ப்பத்தின் பெரும் படகுகள் விரைவில் நம்மை எட்டிவிடும். நீங்கள் எண்ணுவதுபோல் எளிதில் தப்பி மாளவம் சென்று விட முடியாது” என்றாள் ருக்மிணி. “ஆம், அறிவேன். விதர்ப்பம் வஞ்சம் கொண்டுள்ளது. எனவே அதன் விரைவு முதிர்ந்துள்ளது” என்றான் இளைய யாதவன். “கூடிப்போனால் இன்னும் ஒரு நாழிகைக்குள் விதர்ப்பத்தின் படைகளும், சேதி நாட்டரசனின் துணைப்படைகளும், சிற்றரசர்களின் படைகளும் நம்மை சூழ்ந்து கொள்ளும்.”
ருக்மிணி முற்றிலும் திரும்பி அவன் தோள்களை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு “என்ன சொல்கிறாய் யாதவனே?” என்றாள். அவன் விழிகளும் உதடுகளும் சிரிப்பதற்கென்றே செதுக்கப்பட்டவை போல் இருந்தன. “நமக்கு இரு நாழிகை நேரம் இருக்கிறது. இப்புரவி மேல் ஓர் இனிய வாழ்க்கை நிகழ்ந்து கனவென்றாக போதிய காலம் உள்ளது” என்றான். “அய்யோ! என்ன இது? என்ன சொல்கிறாய் இளையோனே? நீ விளையாட்டு ஓயாத சிறுவன் என்று சூதர் சொல்லில் அறிந்தேன். சித்தம் பழகாத பேதை என்று அறிந்திருக்கவில்லை” என்றாள். “பேதை என்பவன் பெருங்களியாட்டில் இருப்பவன்” என்றான்.
அவள் செவிகூர்ந்து “இளையோனே, புரவிக்காலடிகளை கேட்கிறேன். நம்மைச் சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் வீரர்கள்” என்றாள். அவன் அவள் புறங்கழுத்தின் புன்மயிர்ப்பிசிறலை நாவால் சுழற்றி கடித்து இழுக்க அவள் “ஆ” என்றாள். ”நம்மைச்சூழ்ந்து விழிகள் இளையோனே. என்னை நாணிலியாக்காதே” என்றாள். “இவர்கள் அனைவரும் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே விழிகளனைத்தும் முதுகில் இருக்கும்” என்றான் இளைய யாதவன். “நீ அஞ்சவில்லையா?” என்றாள். “நான் அஞ்சக்கூடியதும் நானே” என்றான். அவள் இடைவளைத்து முலைகளை முழங்கைகளால் அழுத்தி திரும்பிய கன்னத்தில் முத்தமிட்டான்.
புரவி விரையும் அதிர்வில் உடல் நீர்த்துளி செறிந்த பூக்குலையென நலுங்க, காற்று முகத்தை வருடி குழலை அள்ளி பறக்கவிட, ஆடையெழுந்து எழுந்து சிறகடிக்க மண் விட்டு விண்ணில் எழுந்து திசை நோக்கி உதிர்பவள் போல் சென்றாள். மரக்கிளைகள் பாய்ந்து வந்து அவள் முன் வணங்கி விரிந்தன. கிளைகள் நடுவே விழித்த வானம் ஒளி வழிவதுபோல் கடந்து சென்றது. ஒவ்வொரு இலை நுனியும் பச்சைப் பெருக்கென காட்டைக் காணும் காட்சி கனவென்று ஒரு கணமும் விழிப்பென்று மறுகணமும் மாயம் காட்டின.
‘என்னுள் எழும் இவ்வச்சம் நான் அறிந்திலேன். அதைச் சுழித்து தன்னுள் ஆழ்த்தி கொப்பளித்ததும் இக்களிவெறி என்னுள் உள்ளதென்று எவ்வகையிலும் நான் அறியேன். இன்று என்னை கண்டுகொண்டிருக்கிறேன். என்னுடலில் என் விரைவில் என் துணிவில். இந்த வானும் இந்த மண்ணும் என் காலடியில் சுருண்டு மயங்கும். என்னை அணைத்து ஏந்தி விண்ணில் செல்லும் இந்த நீலமுகில் வண்ணன் மட்டுமே மெய். காலமழிய விழிமயங்க இங்கிருப்பேன் போலும். இனி என்பது இல்லை என்றாக இக்கணமே எப்போதுமென நீளும் போல.’
‘எண்ணியிராதது எல்லாம் அடிகலங்கி சுழித்து எழுந்து மேலே வந்து குமிழியிடும் இப்பரப்பே நானா? என்னுடையதென்று எண்ணுகையிலே நான் நாணும் இவையனைத்தும் நானா? எஞ்சியதென்று நான் விட்டுச் செல்லும் அங்கிலாத ஒன்று. இப்புவியில் இதுவரை பிறந்து மலர்ந்து மதமூறி மங்கையென்றான அனைவரும் கொண்ட கனவனைத்தும் குவிந்து இங்கிருக்கின்றன.’
‘உண்பதற்கென்று பிறந்த வாய் மட்டுமே கொண்ட நீர்வாழ் சிற்றுயிர் நான். இப்புவியையே சிறு கொப்புளம் என்றாக்கி செரித்த பின்னும் ஏங்கும் பேரிருள் நிலம். விண்மீன்கள் நிறைமிகுந்து வந்து விழுந்து மறையும் இருளின் பெரும் சுழி.’
‘என் உடலில் முளைக்கின்றன பல்லாயிரம் களங்கள். பலகோடி கொலைப் படைக்கலங்களை ஏந்தியுள்ளேன். விழிமணி ஆரம் கொண்டு காலம் சமைக்கிறேன். கருமணி ஆரம் கொண்டு இருள் சமைக்கிறேன். தழலென எழுந்த சிம்மம் ஏறியுள்ளேன். வெண் பகலென எழுந்த விடை ஏறியுள்ளேன். இரவென குளிர்ந்த எருமை மீது ஏறியுள்ளேன். எட்டு திசை வானுமென இங்கிருக்கிறேன்.’
அவன் இதழ் வந்து அவள் புறங்கழுத்தின் மயிர்ப்பிசிறை முத்தமிட்டது. அலை புரண்டது கடல். உயிர் கொண்டு நெகிழ்ந்தது மலைப்பாறை. தோள்களை இடையை தொட்டுச் சென்றது கனலென்றான கை. கைதொட்டு அவள் உடலில் இருந்து உடலென்றான தெய்வங்களை எழுப்பின. முகிழ்த்தெழுந்தன மலைகள். ஊறிப்பெருகின நதிகள். அலை புரண்டு விழித்தன பெருங்கடல்கள். பொன் பதக்கத்தில் பெயர்ந்த மணி மீண்டு வந்து அங்கு அமைவது போல அம்மார்பில் அமைந்தாள். புரவி மீது இருந்தவர் என்றென்றுமென ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைக்கும் அருவும் திருவும்.