இந்திரநீலம் - 58

பகுதி பத்து : கதிர்முகம் – 3

கௌண்டின்யபுரியின் அரண்மனை உப்பரிகையில் தனிமையில் ருக்மிணி வரதாவை நோக்கிக் கொண்டிருந்தாள். நதியின் தனிமை பற்றியே மீள மீள எண்ணிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். அதன் இரு கரைகளிலும் மக்கள் செறிந்து வாழ்ந்த போதிலும் நாளும் பல்லாயிரம் உயிர்கள் அதை அள்ளி அருந்திய போதிலும், பறவைக் குலங்களால் முத்தமிடப்பட்ட போதிலும் அனைத்துக்கும் அப்பால் அது முழுமையான தனிமையில்தான் வழிந்து கொண்டிருந்தது. முகிலில் இருந்து மலை வழியாக கடல் நோக்கிய ஒரு கோடு மட்டுமே அது என. துயிலும் அன்னையிடம் பால் குடிக்கும் பன்றிக்குட்டிகள் போல படித்துறையில் படகுகள் முட்டிக் கொண்டிருந்தன.

வரதா காலையில் ஒளிகொண்டு எழுந்து, சுடர் பெருக்கென மாறி, குருதிபடிந்த வாள் முனையென மெல்ல அணைந்து, மான் விழி என இருளுக்குள் ஒளிர்ந்து கரிய தோலில் வாள்வடு என எஞ்சி மறைவது வரை அவள் நோக்கிக் கொண்டிருந்தாள். அதன் முதல் ஒலி என்பது மரக்கிளைகளில் இருந்து எழுந்து நிழல்களில் ஏறிக்கொண்டு அதன் மேல் பரவும் பறவைகளின் குரல். இறுதி ஒலி என்பது கூடணையப் பிந்தி தனித்த நிழலை நீரின் மேல் மிதக்கவிட்டு சிறகுகளால் உந்தி வந்து சென்று கொண்டிருக்கும் இறுதிப் பறவை. விழியறியா இருளிலும் அங்கு அமர்ந்து அவள் வரதாவை நோக்கிக் கொண்டிருந்தாள். உண்பதும் உறங்குவதும் உப்பரிகையிலே என்றாயிற்று.

பீடத்திலேயே உறங்கிச் சரிபவளை அமிதைதான் வந்து தொட்டு “இளவரசி, மஞ்சத்தில் இளைப்பாறுங்கள்” என்று சொல்லி மெல்ல தூக்கிக் கொண்டு வந்து படுக்கவைப்பாள். துயிலின்றி ஊணின்றி அவள் துயர் கொள்வாள் என்று எண்ணியவள் போல அமிதை எப்போதும் உடனிருந்தாள். ஆனால் ருக்மிணி மையல் கொண்ட கன்னியின் கனவு விழிகளை மட்டுமே கொண்டிருந்தாள். விழித்தெழுகையில் எங்கிருக்கிறோம் என்றறியாதவள் போல விழியலைந்தாள். பின் எதையோ எண்ணி இதழ் மலர்ந்தாள். படுக்கையில் கையூன்றி எழுந்து நின்று கனவிலிருந்து உதிர்ந்து நனவுக்கு வந்து கிடந்த சொற்களை நோக்கி திகைத்தாள். இரவு தன் அறைக்குள் சுழன்று சென்ற பறவை ஒன்று விட்டுச் சென்ற பொன் முட்டைகளைப் போல வியப்பும் திகைப்பும் அளித்தன அவை.

ஒடிச் சென்று கதவைத் திறந்து அன்று புதியதாய் பார்ப்பவளைப் போல, அங்குள்ளதா என்று உறுதி செய்பவளைப் போல வரதாவை பார்ப்பாள். அமிதை பின்னால் வந்து “இளவரசி, முகத்தூய்மை செய்து கொள்ளுங்கள் ” என்று அழைப்பதுவரை விழி எல்லை முதல் விழி எல்லை வரை மாறி மாறி வரதாவை நோக்கியபடி நின்றிருப்பாள். நடுவே ஒரு நகரம் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை என்று தோன்றும்.

நீரின் மென்மையான ஒளி மட்டுமே அவள் முகத்தில் சிற்றலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும். உலுக்கி அழைத்த அமிதையை திரும்பி நோக்கி நீள் மூச்சுடன் “செல்வோம்” என்பாள். ஒவ்வொரு நாளும் உவகையுடன் நீராடி அணி செய்து கொண்டாள். தன் ஆடைகளை அவளே தொட்டுத் துழாவி தேர்வு செய்தாள். அணிகலன்கள் ஒவ்வொன்றையும் விழிமலர எடுத்து நோக்கி காதிலும் கழுத்திலும் வைத்து பொருத்தம் தேர்ந்து சூடினாள். முழுதணிக்கோலத்தில் எழுந்து ஆடியில் தன் உடலை சுழற்றிச் சுழற்றி நோக்கினாள். பொன்னூல் பின்னிய பட்டாடையின் மடிப்புவரிகளை மீண்டும் மீண்டும் சீரமைத்தாள். தளும்பும் தேன்குடம் ஒன்றை கொண்டு செல்பவள் போல மெல்லடி வைத்து நடந்து மீண்டும் உப்பரிகையை அடைந்து கைப்பிடிகளைப் பற்றி நோக்கி நின்றாள். பல்லாயிரம் குடிகள் முன் அரியணையில் அமர்பவள் போல் அந்தப் பீடத்தில் அமர்ந்து வரதாவை நோக்கினாள்.

கீழே மகள்மாட வாயிலில் ருக்மியின் வேளக்காரப் படையினர் வந்து காவல் சூழ்ந்திருப்பதை அமிதை அறிந்தாள். முன்பு நின்றிருந்த முகங்கள் ஒன்று கூட இல்லை. அரண்மனையில் அணுக்கச் சேடியரும் காவல் பெண்டுகளும் ஏவல் மகளிரும் முழுமையாகவே மாற்றப்பட்டனர். புதியவர்களோ எந்நிலையிலும் விழியளிக்காதவர்களாக, சொல் எண்ணி வைப்பவர்களாக, ஓசையற்று நடப்பவர்களாக, இரவிலும் விழித்திருப்பவர்களாக இருந்தனர். ஒரே நாளில் அந்த இனிய கன்னி மாடம் கொடும் சிறையென மாறியது.

அதை ருக்மிணி உணர்ந்திருக்கிறாளா என்று அமிதை ஐயம் கொண்டாள். அருகே சென்று “இளவரசி, இம்மாளிகையின் காவல் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. வேளக்காரப் படைத் தலைவன் இதன் காவல்மாடத்து அறையில் இரவும் பகலும் அமர்ந்திருக்கிறான்” என்று சொன்னபோது அச்சொற்களை உணராதவள் போல விழி தூக்கி “அது அரசரின் ஆணையா?” என்றாள் ருக்மிணி. “ஆம், அது அரசாணைதான். ஆனால் இளையவர் சொல் என எண்ணுகிறேன்” என்றாள் அமிதை. புரிந்துகொள்ளாதவள் போல விழிதிருப்பி வரதாவை நோக்கிபடி தனக்குள் ஏதோ சொல்லி புன்னகைத்த அவளை நோக்கி “முறைமை சார்ந்த ஆலயச் சடங்குகளுக்கு அன்றி பிறிது எதற்கும் நாம் இனி அரண்மனையை விட்டு வெளியே செல்ல முடியாது என எண்ணுகிறேன்” என்றாள் அமிதை.

இயல்பாக “ஆம்“ என்று தலையசைத்து மீண்டும் தன்னுள்ளேயே எழுந்த அச்சொல்லையே புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள். என்ன சொல்கிறாள் என்று அசையும் அச்சிறு உதடுகளை அமிதை விழி கூர்ந்தாள். “இந்திர நீலம்” என்று அவள் சொல்வதை சித்தத்தால் கேட்டாள். மீண்டும் பலமுறை கேட்டு அதுவே என உறுதிசெய்துகொண்டாள். ஒரு சொல்லில் சித்தம் தளைக்கப்பட்டு வாழ்நாளெலாம் அதில் சிறையுண்டிருப்பதைப்பற்றி அவள் அறிந்திருக்கிறாள். ஒரு சொல் காலடிமண் பிளந்து என மானுடரை இருண்ட ஏழுலகங்களுக்கு கொண்டு செல்லமுடியும் என்று சொல்லுண்டு. இவளை உண்ணும் இருளின் கரிய வாயா இச்சொல் என மருண்டாள். இந்திர நீலம் என்று தன்னுள்ளமே அச்சொல்லை மீள மீளச் சொல்வதை அறிந்து பலமுறை திடுக்கிட்டாள்.

ஆனால் அணிநகை பதித்த இந்திரநீலத்தை ருக்மிணி அணியவில்லை. பிற கற்களைப் போலவே அதையும் கையில் எடுத்து நோக்கி உடலில் பொருத்தி நோக்கினாள். நிறைவின்றி பேழையில் வைத்து பிறிதொன்றை எடுத்தாள். அவள் உள்ளம் உவக்கும் இந்திரநீலம் வெறும் ஒரு கல்லல்ல என்பது போல. அவள் விழிநோக்கவில்லை என்பதை அவள் சொல்லியனுப்பியதும் அரண்மனை மருத்துவச்சி இருமுறை வந்து ருக்மிணியை நோக்கிச் சென்றாள். “இளவரசி நலமாக இருக்கிறாள் செவிலியன்னையே. அவள் நெஞ்சு மகிழ்ந்திருக்கிறது. அதை அவள் பிறருடன் பகிர விழையவில்லை” என்றாள் மருத்துவச்சி.

தன்னை மட்டும் அரண்மனையிலிருந்து ஏன் ருக்மி விலக்கவில்லை என அமிதை அறிந்திருந்தாள். ருக்மிணியிடம் பேச அவளால் மட்டுமே முடிந்தது. அவளை தன் அரண்மனைக்கு அழைத்த ருக்மி சினத்துடன் “என்ன செய்கிறாள் உன் இளவரசி?” என்றான். தலைகுனிந்து அமிதை நிற்க “அவளிடம் சொல், இந்நகர் இன்று அவள் சொல்லை காத்திருக்கிறது. இது வாழ்வதா அழிவதா என்பதை முடிவு செய்ய வேண்டியவள் அவளே. சிசுபாலரிடம் நான் சொல்லளிக்க வேண்டிய நாட்கள் ஒவ்வொன்றாக சென்று கொண்டிருக்கின்றன” என்றான்.

“அனைத்து சொற்களையும் சொல்லிவிட்டேன் இளவரசே” என்றாள் அமிதை விழி தூக்காமல். ருக்மி உரக்க “மீண்டும் சொல். அவள் உள்ளம் எழுந்த பித்துக்கு அப்பால் தன்னிலை ஒன்று இருக்கும் என்றால் அதுவரை செல்லட்டும் அச்சொற்கள். இவள் சொல் யாதவன்வரை சென்று சேரப்போவதில்லை. அவன் இவளை கைபற்றுவது என்பது இப்பிறவியில் நிகழப்போவதும் இல்லை. அவள் கொழுநன் என அமையவிருப்பவர் சிசுபாலர் மட்டுமே. இன்று அவள் கொண்ட உளமயக்கென்பது சேதிநாட்டு மன்னரை விலகி அறியும் பொருட்டு என்றே எண்ணுகிறேன். அவரை அறிந்த பெண் எவளும் விழைவுகொள்ளாதிருக்கமாட்டாள்” என்றான்.

அமிதை “ஆணை இளவரசே” என்று மெல்லிய குரலில் சொன்னாள். ருக்மி அவள் செல்லலாம் என்று கையசைத்து தலைவணங்கித் திரும்பிய அவளை நோக்கி பின்னால் வந்து “அமிதை” என்று இளஞ்சிறுவனாக அவள் அந்நாளில் அறிந்த குரலில் அழைத்தான். அவள் நின்று விழி தூக்க “என்ன நிகழ்கிறதென்று நீ அறிந்துளாயா? நான் சேதி நாட்டு அரசரின் கை தொட்டு வாக்களித்திருக்கிறேன். இவள் அவரை விரும்புகிறாள் என்றெண்ணி என் சொல்லை அளித்தேன். இனி அது பிழைத்து நான் வாழமுடியாது. அவரோ அச்சொல்லை இறுகப்பற்றி என்னை தன் காலடியில் அமர வைக்கிறார்” என்றான்.

“இங்கிருந்து செல்லும்போதே இளவரசி ஒப்பவில்லை என்று ஒற்றர்களினூடாக அறிந்திருந்தார்” என்று ருக்மி தொடர்ந்தான். “கிளம்பும்போது என் தோள்களில் கை வைத்து விழிநோக்கி உங்கள் அரசமுறை மணஓலை வருவதற்காக நாளும் என் நாடு காத்திருக்கும் விதர்ப்பரே என்று சொன்னபின் மேலும் தாழ்ந்த குரலில் அவ்வோலை விரைவில் எழுதப்படுமென எண்ணுகிறேன் என்றார். நான் விலக முடியாது. அனைத்தும் முடிவாகிவிட்டன. அதை அவளிடம் சொல்.”

“ஆம் இளவரசே. சொல்கிறேன்” என்றாள் அமிதை. ருக்மி அவள் பணிவில் இருந்த விலகலை மீண்டும் மீண்டும் உணர்ந்தவனாக “என் ஒற்றர்கள் நீயே அவள் நெஞ்சை திசைமாற்றியவள் என்கிறார்கள். சேதிநாட்டு அரசர் அவள் கொழுநன் அல்ல என்று எண்ணச் செய்தது உன் சொல் என சமையப்பெண்ணாக அங்கிருந்த சேடியும் உளவு சொன்னாள். ஆயினும் இந்நகரின் தொல்குடிகளின் கொடி வழி வந்தவள் என்று உன்னை அறிவேன். உன் சித்தம் இவ்வரியணைக்கும் இதில் அமர்ந்த எனக்கும் கட்டுப்பட்டது. என் ஆணை இது“ என்றான்.

“ஆம் இளவரசே. முற்றிலும் இதற்குரியவள் நான். இச்சொற்களையே இளவரசியின் காதுகளில் விழச்செய்வேன்” என்று சொல்லி தலைவணங்கி அமிதை மீண்டாள். ‘என்ன செய்வேன் மூதன்னையரே? இம்மண்ணுக்கு நீங்கள் அளித்த அனைத்தும் உப்பென்றும் உயிரென்றுமாகி நிறைந்துள்ளன. நானோ உங்கள் சொல் சென்று தொட்டு மீளும் சிற்றுயிர். தானே நகரும் உரிமையற்றது நிழல். ஆயினும் என் உள்ளம் எப்படிச் சுழன்றாலும் அங்கேயே சென்றமர்கிறது. இவள் அவனுக்குரியவள். எங்கோ கடல் விளிம்பில் பெருநகர் ஒன்றில் கதையோ என சொல்லில் ஊறி குழல்விழித்த பீலியுடன் அமர்ந்திருக்கும் அவனே இவளுக்குரியவன். இவையனைத்தும் மானுடர் அறியும் நெறிகள். அது விண் வகுத்த வழி.’

சிற்றரசி கீர்த்திதான் பீஷ்மகரின் திட்டத்தை அவளிடம் சொன்னாள். அரசியை சந்திக்கும்படி ஆணையுடன் வந்த சேடி “தங்களை உடன் அழைத்துவர ஆணையிட்டார் அரசி” என்றாள். “இளவரசி இப்போது உணவருந்தும் நேரம். நான் மாலை வருகிறேன்” என்ற அமிதையை நோக்கி “என்னுடன் அன்றி இவ்வரண்மனை விட்டு நீங்கள் வெளிவரவோ அரசியர் அரண்மனைக்குள் புகவோ இன்று இயலாது முதியவளே. அரசியின் முத்திரைக் கணையாழி என் கையில் உள்ளது. இதுவே நாம் செல்லும் வழியை அமைக்கும்” என்றாள். நீள்மூச்சுடன் “ஆம் வருகிறேன்” என்றாள் அமிதை.

இடைநாழியில் நான்கு இடங்களில் காவலர்கள் அவர்களை நிறுத்தி எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு முத்திரைக் கணையாழியை நோக்கி சற்று ஐயத்துடன் ஒப்புதல் அளித்தார்கள். அரண்மனை முகப்பிற்கு வந்து பெருமுற்றத்தைக் கடந்து மறுபக்கம் துணைப் பாதை வழியாக சிற்றரசிகளுக்கான மாளிகைகளை அடைந்தனர். அங்கு காவல் நின்ற வீரர்களிடம் கணையாழியைக் காட்டி ஒப்புதல் பெற்று அரண்மனைக்குள் சென்றனர். சிற்றரசியின் அரண்மனைக் கூடத்தை அடைந்ததும் சேடி “இங்கு நில்லுங்கள். நான் சென்று எவரை எப்போது சந்திக்கிறீர்கள் என்று வினவி வருகிறேன்” என்றாள்.  “எவரை?” என்று அமிதை கேட்டாள். “சிற்றரசியர் இருவரும் இங்குதான் உள்ளனர்” என்றாள் சேடி. சற்று நேரத்தில் திரும்பி வந்து “இருவரும் மந்தணச்சிற்றறையில் காத்திருக்கிறார்கள். அங்கு சென்று அவர்களுடன் அமர தங்களை அழைக்கிறார்கள்” என்றாள்.

அமிதை மந்தணச் சிற்றறைக்குள் நுழைந்தபோது இரு அணுக்கச் சேடியர் நின்றிருக்க பீடங்களில் அமர்ந்திருந்த கீர்த்தியையும், விருஷ்டியையும் கண்டாள். அமிதை தலைவணங்கி “விதர்ப்ப நாட்டின் சிற்றரசியரை வணங்குகிறேன். தங்கள் சொல்லேற்று பணிய வந்துள்ளேன்” என்றாள். அமரும்படி கீர்த்தி கைகாட்டினாள். “இல்லை சிற்றரசி. இணையமரும் வழக்கம்…” என சொல்லத் தொடங்கிய அமிதையை கையசைத்து “அமர்க!” என்றாள் கீர்த்தி. அவள் மீண்டும் வணங்கியபின் அமர்ந்துகொண்டாள். “உன்னை வரவழைத்தது அரசாணையை அறிவிப்பதற்காக” என்றாள் விருஷ்டி. “அரசர் கவலை கொண்டிருக்கிறார். இளவரசி மகளிர்மாடத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதை அவர் அறிவார். இளவரசரின் திட்டங்களையும் நாள் தோறும் அறிந்து கொண்டிருக்கிறார்.”

அமிதையின் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தை உய்த்தறிந்து “பட்டத்தரசி இன்று தன் மைந்தனை ஆதரிக்கவில்லை. இன்று அரசரின் எண்ணத்துக்கு அப்பால் ஒரு சொல்லும் அவளால் எண்ணமுடியாது” என்றாள் கீர்த்தி. விருஷ்டி “முன்னரே ஆணையிட்டபடி யாதவர் வந்து நம் இளவரசியை வென்று கொண்டு செல்வதே எஞ்சியுள்ள ஒரே வழியாகும். அவர்களுக்கு அச்செய்தி அளிக்கப்படட்டும்” என்றாள் . அமிதை தன்னிடம் என்ன கூறப்படுகிறது என்று புரியாமல் ஏறிட்டு நோக்கினாள். கீர்த்தி “இவள் இங்கு காதல் கொண்டு காத்திருப்பதை அவன் அறிய வேண்டாமா? இங்கிருந்து அங்கு செல்லும் அனைத்து சூதரும் தூதரும் தடை செய்யப்பட்டுவிட்டனர். இளவரசி எண்ணியிருப்பதை இவ்வரண்மனையின் வீரரும் அறியார். அவள் உள்ளம் அங்கு செல்ல வேண்டும், அவன் அறிய வேண்டும். தனக்கென நோற்றிருப்பவளை கொள்ள அவன் எழ வேண்டும்” என்றாள்.

அமிதை “அரசர் முறைப்படி ஒரு செய்தியை எழுதி அனுப்பலாமே?” என்றாள். வினாவுடன் இணைந்தே அதிலுள்ள பொருளின்மையை அறிந்து மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க விருஷ்டி “இளவரசி காதல் கொண்டுள்ளதும் யாதவர் தன்னை கவர்ந்து செல்ல அவள் விழைவதும் அரசர் அறிந்தே நிகழ வேண்டியவையல்ல. நானும் மூத்த அரசியரும் அதை எங்கள் உள்ளத்தாலும் எண்ணாலாகாது. அது உன்னால் நிகழ வேண்டும். நாங்களும் அறியாமல்” என்றாள் கீர்த்தி. “என்னாலா?” என்று அமிதை திகைப்புடன் கேட்டாள். கீர்த்தி “ஆம். இளவரசியின் வேண்டுதல் உரிய சொற்களால் அவனை சென்று சேரவேண்டும். இச்சேடி உன்னை பார்க்க வருவாள். ருக்மிணியின் சொல்கேட்டு ஓர் ஓலை எழுதி அவள் முத்திரையிட்டு இவளிடம் கொடு. அது பறவைத் தூதாக அவனை சென்றடையட்டும்” என்றாள்.

அமிதை தன் உடலில் கூடிய மெல்லிய நடுக்கத்துடன் நோக்கியிருந்தாள். “அஞ்ச வேண்டியதில்லை. இளவரசி இப்படி தூது அனுப்புவது என்பது முற்றிலும் ஒரு நூல்முறையே ஆகும்” என்றாள் விருஷ்டி. அமிதை “அரசி, இளவரசி இன்றிருக்கும் நிலையில் இவ்வண்ணம் முறைசார் திருமுகத்தை அவளால் எழுதமுடியும் என்று நான் எண்ணவில்லை. நான் ஒருத்தி மட்டுமே அவளுடன் இன்று உரையாடுகிறேன். ஆனால் என் சொற்கள் அவளை சென்றடையவில்லை. அவளிடமிருந்து ஒரு சொல்லும் என்னை வந்து சேருவதுமில்லை. அவளை உண்ணவைத்து உறங்க வைத்து பேணுவதன்றி அவள் உள்ளம் கொள்ளும் எவ்வுணர்வையும் அறியாதவளாகவே இருக்கிறேன்” என்றாள்.

“செவிலியர் கன்னியரின் கனிவடிவென்பார்கள். நீ அறியாத அவள் உள்ளம் உண்டா? அவள் சொல்லென சில எழுத இயலாதா உன்னால்?” என்றாள் கீர்த்தி. “நானா?” என்றாள் அமிதை. “ஆம், அவளுடைய முத்திரைக் கணையாழி அவ்வோலையில் பதிந்திருக்க வேண்டும். அவ்வோலை அவள் பெயரால் அனுப்பப்படுவதை அவள் அறிந்திருக்கவும் வேண்டும். சொற்களை நீயே அமைக்கலாம்” என்றாள் கீர்த்தி. ஏதோ சொல்வதற்காக அமிதை உதடை அசைக்க “இது அரசரின் ஆணை” என்றாள். “ஆணை” என்று அமிதை தலைவணங்கினாள்.

அவள் திரும்பும்போது பின்னால் மெல்லிய குரலில் “அமிதை” என அழைத்த கீர்த்தி “இளவரசி உடல்நிலை எவ்வண்ணம் உள்ளது?” என்றாள். “உடல்நிலையில் பிழையேதும் இல்லை. நாளுக்கு மூன்று முறை மருத்துவச்சியர் வந்து பார்க்கிறார்கள்.” விழிகளை கூர்ந்து நோக்கியபடி “நன்று” என்று சொன்ன கீர்த்தி “மருத்துவர் பத்மரை வந்து பார்க்கும்படி ஆணையிட்டிருக்கிறேன். அவர் அந்தணர். அவருக்குத்தெரியும்” என்று மேலும் சொன்னபோது அவள் விழி சற்றே அசைவதை அமிதை கண்டாள். திடுக்கிட்டு விழிதூக்கியதுமே அதன் பொருளென்ன என்று உணர்ந்து கொண்டாள். “ஆணை” என மீண்டும் தலைவணங்கினாள்.

அரண்மனைக்கு வந்ததுமே அமிதை துவாரகைக்கான திருமுகத்தை எழுதலாமென கன்றுத்தோல் சுருளை எடுத்து பலகையில் நீட்டி வெண்கல முள் அறைந்து நிறுத்தி கடுக்காய் கலந்த கடுஞ்செந்நிற மையில் இறகுமுனையை முக்கி “நலம் சூழ்க!” என முதல் வரியை எழுதியபின் எழுதுவது என்ன என்று ஏங்கி சற்றுநேரம் அமர்ந்திருந்தாள். “பாரதவர்ஷம் அணிந்த நுதல்குறி என ஒளிரும் துவாரகை நகரை ஆளும் யாதவருக்கு” என்று எழுதியபின் அத்தோல்சுருளை கிழித்து எறிந்தாள். எழுந்து சாளரத்தினூடாக வரதாவை பார்த்தாள். மீண்டும் அமர்ந்து “என் உள்ளம் கொண்ட இளைய யாதவருக்கு” என்று எழுதி அதையும் கிழித்தாள். நிலை கொள்ளாது எழுந்து சென்று உப்பரிகையில் அமர்ந்து வரதாவை நோக்கிக் கொண்டிருந்த ருக்மிணியை அறியாமல் பார்த்தபடி நெடுநேரம் நின்றிருந்தாள். ஆற்றின் உச்சிநேரத்து ஒளி அவளின் கரிய கன்னங்களை பளபளக்கச் செய்தது. குழல் கற்றைகள் பொன்னூல் என சுழன்று நிற்க அவற்றின் நிழல் கன்னத்தின் மென்மை மீது அசைந்தது. மூச்சு அன்றி அவள்மேல் அசைவென்பதே இருக்கவில்லை.

நீள்மூச்சுடன் திரும்பி அமர்ந்து கன்றுத்தோல் மீது கைகளால் நெருடிக் கொண்டிருந்தாள். அங்கிருந்து விழிதூக்கி அவளை நோக்குகையில் ஒருகணம் உளஎழுச்சியால் தான் அங்கிருந்து அவ்வண்ணம் நோக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். உடல் விதிர்க்க நெஞ்சறியாது கையில் எழுந்து வந்த முதற்சொல்லை எழுதினாள். “நீலம்!” அதில் உடல் உயிர்த்துக் கொள்ள தான் என பெயர் என உடலென கொண்ட அனைத்தையும் களைந்து ருக்மிணியாக அமர்ந்து தன் நெஞ்சை எழுதினாள்.

‘இங்கிருக்கிறேன். இவ்வண்ணம் இப்புவியில் ஏன் எழுந்தேன் என்று அறிந்திருக்கிறேன். இனி நான்கொள்ள பிறிதொன்றுமில்லை. நான் விழைய விண்ணும் மண்ணும் இல்லை. சொல்லி அறிவிக்கும் உணர்வல்ல இது. எச்சொல்லிலும் அமராது சிறகடித்து விண்ணில் தவிப்பது. எங்குள்ளேன் என்று அறியேன். விதர்ப்பத்தில் என் அரண்மனையில் தனிமையில். எவ்வண்ணம் உள்ளேன் என்று அறியேன். உள்ளும் புறமும் இனித்திருக்கிறேன். இதற்கப்பால் நான் உரைக்கும் சொல் என்று ஏதுமில்லை, என விதர்ப்பினி”

எழுதி முடித்ததும் சன்னதம் விலகிச் சென்ற பேய்மகளென உடல் தளர்ந்து பீடம் மீதே தலை வைத்தாள். தன்னிலை உணர்ந்தபோது தன் சுருங்கிய கன்னங்களின் மீது விழிநீர் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். ஏவரேனும் அறிந்தனரா என திகைத்து அறையை விழிசூழ்ந்து நோக்கிவிட்டு மேலாடையால் முகத்தை துடைத்தாள். அச்சொல்நிரையை பிறிதொருமுறை நோக்க அவள் உளம் கொள்ளவில்லை. அதை கையில் எடுத்தபடி சென்று ருக்மிணியின் பின்னால் நின்றாள். அவளிடம் இதை அளிப்பது எப்படி என்று திகைத்தாள். இச்சொல்லில் எழுந்த சூழ்ச்சி அனைத்தையும், அவளிடம் எப்படிச் சொல்லி புரிய வைக்க முடியும் என்று அறியாது நின்றாள்.

“இளையவளே, அமுதுண்ணும் நேரம்” என்றாள். “ஆம். இன்று இன்சுவையை நாடுகிறேன்” என்றபடி ருக்மிணி துள்ளி உணவறைக்குள் சென்றாள். தன் மூச்சுக்குள் மெல்ல முனகியபடி, ஆடை நுனியை விரல் சுற்றி அசைத்துக்கொண்டு, காற்றில் பறக்கும் திரைச் சீலையென வளைந்து சென்றாள். கையில் சுருட்டிய திருமுகத்துடன் அமிதை அவளை தொடர்ந்தாள். “இளவரசி” என்றாள். ருக்மிணி திரும்பியதும் மறுசொல் எடுக்க ஒண்ணாது நின்றாள்.

ருக்மிணி உணவுமேடைமுன் நிலத்தில் கால் மடித்து அமர்ந்தாள். உணவு பரிமாறுவதற்காக காத்திருந்த சேடியர் இன்னமுதையும் பழஅமுதையும் பாலமுதையும் அன்னத்தையும் அப்பங்களையும் அவள் முன் பரப்பினர். அவள் விழிகள் சிறுமகவுக்குரிய ஆவலுடன் ஒவ்வொரு உணவாக தொட்டுச் சென்றன. இரு கைகளையும் நீட்டி இன்னமுதை எடுத்தாள். “இளவரசி, என்ன செய்கிறீர்கள்? அன்னத்தை முதலில் உண்ணுங்கள்” என்றாள் அமிதை. “எனக்கு இன்னுணவு மட்டும் போதும்” என்றாள் ருக்மிணி. “இன்னுணவை பிறகு அருந்தலாம். முதலில் அன்னம் உண்ணுங்கள்” என்றாள் அமிதை. “இன்னுணவு அன்றி எதுவும் என் நாவுக்கு உவக்கவில்லை அன்னையே” என்றாள் ருக்மிணி.

அமிதை ஏதோ சொல்வதற்குள் சேடி “இன்னுணவையே முழுதுணவாக உண்ணுகிறார்கள். அதுவே போதுமென உரிய பாலையும் அன்னத்தையும் கலந்துள்ளோம்” என்றாள். “ஆம். அது எனக்கு போதும். இனிமேல் இனிப்பு அல்லாத உணவன்றி எதையும் நாக்கு உவக்காது.” இன்னுணவுக் கலத்தை அருகிழுத்து பொற்கரண்டியால் அள்ளி உண்ணத் தொடங்கினாள். அமிதை அவள் உண்ணுவதை அருகிருந்து விழிபரிந்து நோக்கினாள். ஒளிவண்ணங்களை மட்டுமே விழைகிறாள். இசை மட்டுமே செவி நாடுகிறாள். இன்னுணவுச் சுவை மட்டுமே கொள்கிறாள். எங்கிருக்கிறாள்? இவளைச் சூழ்ந்துள்ள தெய்வங்கள்தான் எவை? ஒரு போதும் மண் வந்து மரம் அமராத விண் பறவை. முகில் மேல் கூடு கட்டுவது. ஒளியே சிறகென கொள்வது.

நீள்மூச்சு விட்டு அமிதை நெகிழ்ந்து அமர்ந்தாள். ஒவ்வொரு துளி இன்னுணவையும் உடலெங்கும் எழுந்த உவகையுடன் ருக்மிணி உண்டாள். சேடியர் நறுமண நீரால் அவள் கைகளை கழுவினர். எழுந்ததும் நறுமண தாலத்தை அவள் முன் நீட்டினர். ஒவ்வொன்றாக எடுத்து முகர்ந்தாள். கிராம்பையும் சுக்கையும் எடுத்து வாயிலிட்டு மென்றபடி “அன்னையே, நம் அரண்மனை அறைகளெங்கும் மலர்மணமே நிறைந்துள்ளது. நேற்றிரவு எழுந்தது பாரிஜாதம். பின்னிரவில் இனிய தாழம்பூ. புலரியில் முல்லை. இரவெல்லாம் அந்த மணங்கள் இவ்வறைகளெங்கும் உலவின” என்றாள்.

ஒரு கணம் சேடியரை நோக்கி செல்லும்படி கைகாட்டிவிட்டு “ஆம். நம்மைச் சூழ மலர்த்தோட்டம் இருக்கிறதல்லவா?” என்றாள் அமிதை. ருக்மிணியை அந்தத் திருமுகத்தை நோக்கி எப்படி கொண்டு செல்வது என்று தெரியவில்லை. ருக்மிணி மீண்டும் உப்பரிகையை நோக்கி செல்ல “முகம் கழுவி வருக இளவரசி” என்றாள் அமிதை. “ஆம். என் கண்கள் களைத்துள்ளன” என்றபடி அவள் முகம்கழுவச் சென்றபோது அச்சுருளை உப்பரிகையில் அவள் அமர்ந்திருக்கும் பீடத்தருகே குறுமேடையில் வைத்து பறக்காமலிருக்க அதன் மேல் நீலமணி பதித்த கணையாழியை வைத்தபின் நெஞ்சு படபடக்க விலகி சாளரத்தருகே நின்றாள்.

நதியில் இருந்து வந்த காற்றில் சாளரத்தின் வெண்பட்டுத்திரை உலைந்தாடிக் கொண்டிருந்தது. முகம் கழுவி துடைத்து நெற்றிப்பொட்டு திருத்தி ருக்மிணி விரைந்தோடி வந்தாள். உப்பரிகையில் மறந்துவிட்ட எதையோ எடுக்க விழைபவள் போல, காத்திருக்கும் எவருக்கோ செய்தி சொல்ல வருபவள் போல. சிரித்த முகத்துடன் அவளை நோக்கி புன்னகைத்து ஏதோ சொல்ல வந்தபின் அச்சொல்லை கணமே இழந்து விழிதிருப்பி ஓடிச்சென்று பீடத்தில் அமர்ந்து ஆடையை செம்மை செய்த பின் வரதாவை நோக்கினாள். அவள் இயல்பாக நீட்டிய கையில் குறு மேடையில் இருந்த கணையாழி பட்டதும் திரும்பி அச்சுருளை நோக்கினாள். அது எதுவோ என ஆர்வமில்லாமல் விழி விலக்கி நதியை சற்று நோக்கிய பின்புதான் அவள் சித்தத்தில் அவ்வோலை பதிந்தது. திரும்பி அதை நோக்கிய பின்பு கையில் எடுத்து விழியோட்டினாள்.

அங்கிருந்து விலகி ஓடிவிட வேண்டும் என்று அமிதை எண்ணினாள். வியர்த்த இரு கரங்களை ஒன்றுடன் ஒன்று பற்றிக் கொண்டு கழுத்துத் தசைகள் இறுக பற்களை கிட்டித்து காத்திருந்தாள். சொற்களில் ஓடிச்சென்ற ருக்மிணியின் கண்களில் தெரிந்த வியப்பை, பின் எழுந்த பதற்றத்தை கண்டவள் ஏதேனும் சொல் உரைக்க எண்ணி உன்னி உளம் ஒழிந்து கிடக்க வெறுமனே “மகளே” என்றாள். முகம் மலரே “அன்னையே” என்று கூவியபடி அவளை நோக்கி ஓடிவந்த ருக்மிணி “இதை நான் எழுதியதையே மறந்து விட்டேன்” என்றாள். “நூறு நூறு முறை என் நெஞ்சில் எழுதிய சொற்கள் இவை. எப்போது திருமுகத்தில் பதித்தேன் என்று அறியேன். இச்சொற்களுக்கு அப்பால் என் உளம் என ஏதுமில்லை. ஒரு மணி குன்றாது கூடாது நான் என அமைந்த இவ்வோலையை என் உளம் கொண்ட துவாரகை அரசருக்கு அனுப்புங்கள், இக்கணமே அனுப்புங்கள்” என்றாள். விம்மியழுதபடி அவளை அணைத்துக் கொண்டாள் அமிதை.